Saturday, April 30, 2011

சிரியாவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்குமா?


சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் இருந்து சுமார் நூறு கி.மீ. தூரத்தில் இருக்கிறது டேரா. விவசாயத் தொழில் செய்யும் மூன்று லட்சம் மக்கள் வாழும் குடியிருப்புகள், ஜோர்டான் எல்லையோரமாக உள்ளன. ஜோர்டான் எல்லை கடந்து வருபவர்கள், டேராவில் இருந்து தான் டமாஸ்கஸ் செல்ல வேண்டும். 

தலைநகரை இணைக்கும் சாலை டேராவில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. இங்கே தான் 15 மார்ச் அன்று, முதல் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. "பஷார் அரசு ஒழிக" கோஷம் முதன் முதலாக அங்கே தான் கேட்டது. துனிசியா, எகித்திய புரட்சிகளால் உந்தப்பட்ட சிலரின் வேலையாக இருக்கலாம். மதிலில் அரச எதிர்ப்பு சுலோகம் எழுதிய மாணவர்கள் சிலரை, போலிஸ் கைது செய்து கொண்டு சென்றது. போலிஸ் நடவடிக்கை ஆர்ப்பாட்டத்தை அதிகரிக்கச் செய்தது. குறிப்பாக உழவர்களின் பிரச்சினைக்கு அரசு செவி சாய்க்காமல், அடக்குமுறையை கையாண்டது ஆத்திரத்தை கிளப்பை விட்டது.

டேரா உழவர்கள், தமது பிரதேச ஆளுநர் பைசல் கல்தூமுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். டேரா நகரையும், மாகாணத்தையும் 2006 ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்து வந்த புதிய ஆளுநர் ஊழல்களுக்கு பேர் போனவர். விவசாய நிலங்களை விற்பது, பங்கிடுவது சம்பந்தமான முறைகேடுகள் உழவர்களை அதிருப்திக்கு ஆளாக்கின. டேரா பிரதேசத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடும் பிரச்சினைக்கு மூலகாரணம். டேராவாசிகளே தண்ணீருக்கு அல்லல் படும் வேளை, அதிகரித்து வரும் குடியேறிகளும் பிரச்சினையை தீவிரப் படுத்துகின்றனர். ஒரு காலத்தில் தானியக் களஞ்சியமாக இருந்து, இன்று வறண்ட பாலைவனமாக மாறி விட்ட, சிரியாவின் வட-கிழக்கு பகுதியை சேர்ந்த மக்களே அதிகளவில் வந்து குடியேறினர். அது போதாதென்று, ஈராக் அகதிகளும் பெருமளவில் தஞ்சமடைந்திருந்தனர்.

வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, நலிவடையும் விவசாய உற்பத்தி, உணவுப் பொருட்களின் விலையேற்றம். இவ்வாறு ஒன்றுகொன்று தொடர்பான பிரச்சினைகள் சிரியாவில் நீண்ட காலமாகவே உணரப்பட்டு வந்துள்ளன. டேரா பிரதேசத்தில் புதிய விவசாய நிலங்களை உருவாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு அந்த நிலங்களை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்க வேண்டும். ஐ.நா., மற்றும் சில மேற்கத்திய நாடுகள் அந்த திட்டத்திற்கு ஆதரவளித்தன. 


திட்டத்தை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்ட ஆளுநர், தனது உறவினர்களின் பெயரில் ஒரு தனியார் நிறுவனம் அமைத்துக் கொண்டார். அரசு நிதியை கையாண்ட நிறுவனம், விவசாயிகளை நட்டாற்றில் விட்டது. விவசாயிகள் தாமாகவே புதிய கிணறுகளை தோண்டுவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. இந்த நேரத்தில் தான் துனிசியா புரட்சி இடம்பெற்றது. டேராவில் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். டமாஸ்கஸ்ஸில் ஆளும் வர்க்கம் அலாவி (ஷியா) முஸ்லிம் பிரிவை சேர்ந்தது. இதனால், சுன்னி முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக இனவாத கண்ணோட்டமும் சேர்ந்து கொண்டது. டேரா மக்களின் எழுச்சிக்கு இந்தக் காரணங்கள் போதும்.

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், இன/மத முரண்பாடுகளே கோஷங்களாக முன் வைக்கப்பட்டன. "ஈரான் ஒழிக!", "ஹிஸ்புல்லா ஒழிக!" போன்ற கோஷங்கள் ஷியா மதப் பிரிவினருக்கு எதிரானவை. "உண்மையான முஸ்லிம்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்!" என்ற கோஷம், சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகளை கொண்ட அரசை நோக்கமாக கொண்டது. 


மறு பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் "சவூதி அரேபியாவின் கைக்கூலிகள்" என்று சிரிய அரசு முத்திரை குத்தவும் அதுவே காரணமாக அமைந்து விட்டது. வாஹபிச சவூதி அரேபியா, பிற நாடுகளில் சுன்னி முஸ்லிம் தீவிரவாதத்தை தூண்டி விடுவது புதிய செய்தியல்ல. முன்னர் ஒரு தடவை, "முஸ்லிம் சகோதரத்துவம்" என்ற ஆயுதமேந்திய இயக்கம் சிரியாவில் அரசைக் கவிழ்க்க முயன்றது. எழுபதுகளில், எண்பதுகளில் முஸ்லிம் சகோதரத்துவ செயற்பாட்டாளர்கள் நாடு முழுவதும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

வட- சிரிய நகரமான ஹாமா, நீண்ட காலமாக இஸ்லாமியக் கிளர்ச்சியின் தலைமையகமாக திகழ்ந்தது. இன்றைய சிரிய அதிபர் பஷாரின் தந்தை ஆசாத், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். 1982 ம் ஆண்டு, ஹாமா நகரம் விமானக் குண்டுவீச்சுகளால் தரைமட்டமாக்கப் பட்டது. மொத்தம் நாற்பதாயிரம் மக்கள், சிரிய பாதுகாப்புப் படையினரால் கொன்று குவிக்க்கப் பட்டனர். 


அத்துடன் சிரியாவில் இஸ்லாமிய மத- அடிப்படைவாத அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டது. டேராவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, "ஹாமாவை நினைவுகூறுவோம்" என்ற கோஷமும் முன்வைக்கப் பட்டது. ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு மாற்றத்தை கோரவில்லை. பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட மக்கள் அதனை அரசியல் ஊர்வலமாக்கினார்கள். பெரும்பாலும் அன்புக்குரியவர்களை இழந்ததால் ஏற்பட்ட துயரமே, அந்த மக்களை அரசியலுக்கு தள்ளியது.

"சவூதி கைக்கூலிகள்" ஆயுதங்களுடன் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் மறைந்திருந்து போலீசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும், அரசு தெரிவிக்கின்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களும், மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவித்தனர். போலிஸ் திருப்பிச் சுட்டதனாலும், பொது மக்கள் இறந்துள்ளனர். ஆனால், எப்போதும் அப்படி நடக்கின்றன என்று கூற முடியாது. சில இடங்களில் ஊர்வலங்களில் சென்றோர் மீது போலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளது. 


டெராவில் கலகத்தை அடக்குவதற்கு இராணுவம் அனுப்பப் பட்டது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை சுட்டுத் தள்ளியாவது கலகத்தை அடக்கும் பணியில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், "சர்வதேச சமூகம்" பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து மட்டுமே பேசி வருகின்றது. லிபியாவில் நடந்ததைப் போல, நேட்டோப் படைகளின் விமானக் குண்டுவீச்சு நடத்துவது குறித்து பேசவில்லை. எதிர்காலத்திலும் இராணுவத் தலையீடு நடைபெறுவதற்கான வாய்ப்புக் குறைவு. "சர்வதேச சமூகம்" சிரிய பிரச்சினையில் பின்வாங்குவதற்கு என்ன காரணம்?

சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுத்தால், அது அயல்நாடான இஸ்ரேலை பாதிக்கும் என்ற அச்சமே காரணம். கடந்த இரு தசாப்தங்களாக போரில் ஈடுபடாத சிரியா, ஈரானிடம் இருந்து நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளது. சிரிய அரசு ஆட்டம் கண்டால், இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கும் அபாயம் நிலவுகின்றது. அந்தப் பிராந்தியந்தில் உள்ள பிற நாடுகளையும் போருக்குள் இழுத்து விட்டது போலாகி விடும். சிரியாவுடன் நெருக்கமான நட்பு பாராட்டும் ஈரான் உதவிக்கு வரலாம். அதே நேரம், லெபனானின் கெரில்லா அமைப்பான ஹிஸ்புல்லாவும், பாலஸ்தீன ஹமாசும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம். இந்த இயக்கங்களுக்கு சிரியா ஆதரவு வழங்கி வருவது இரகசியமல்ல. மேலும், ஷியா முஸ்லிம்களின் நாடான ஈரான், சிரியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்க்கவே செய்யும். ஹிஸ்புல்லாவும் ஷியா முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்விடத்தில் சிரியாவின் ஆளும் வர்க்கத்தின் பின்னணியை அலசுவது முக்கியமானது. ஏனெனில் அதிபர் பஷார் அல் ஆசாத் உட்பட, அரசாங்கத்தை அலங்கரிக்கும் முக்கிய புள்ளிகள் சிறுபான்மை அலாவி சமூகத்தை சேர்ந்தவர்கள். சிரியாவில் ஒரு மில்லியன் அலாவிக்கள் (மொத்த சனத்தொகையில் 12%) வாழ்கின்றனர். இஸ்லாமிய மதத்தில் ஷியா பிரிவை சேர்ந்தவர்களாக அலாவி கூறிக் கொள்கின்றனர். 


வரலாற்றில் ஷியா இஸ்லாமில், மேலும் பல கிளைகள் பிரிந்து சென்றன. இமாம் நுசாயிரியின் போதனைகளை பின்பற்றும் அலாவி(அலியை பின்பற்றுபவர்கள்)அவற்றில் ஒன்று. ஆயினும், பிற முஸ்லிம்கள் அலாவிக்களை இஸ்லாமியராக கருதுவதில்லை. அலாவிக்கள் இஸ்லாமியரின் மதக் கடமைகளை பின்பற்றுவதில்லை. ஷரியா சட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அலாவிக்களின் வழிபாட்டு முறைகள், மதச் சடங்குகள், புனித நூல் ஆகியன வித்தியாசமானவை. அவர்கள் கிறிஸ்தவர்களின் பண்டிகை நாட்களையும் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவ புனிதர்களையும் போற்றுகின்றனர். சுருக்கமாக, இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையிலான மதத்தை சேர்ந்தவர்கள் போன்று காணப்படுகினறனர்.

பல நூறாண்டுகளாக, சிரியாவில் அலாவிக்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வந்தனர். அதாவது, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதிகளைப் போன்று நடத்தப்பட்டனர். ஆசாத் ஆட்சிக் காலத்தில் தான், பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த, வறுமைக்குள் வாடிய அலாவி சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டது. இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆசாத் ஆட்சியைப் பிடித்தது, சிரியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் பிரதமரானால், அரசை நடத்துவதும் அந்த சாதியினராக இருந்தால், பிற சாதியினர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள்? அன்று சிரியாவில் ஏற்பட்ட சமூக மாற்றமும் அது போன்றது. 


ஆசாத் ஆட்சியில் தான் அலாவிக்கள் உயர் பதவிகளைப் பெற்று பணக்காரரானார்கள். இன்றைய குழப்பகரமான சூழ்நிலையில், சிரியாவின் மேற்குக் கரையோர லடாக்கியா பகுதியில் செறிந்து வாழும் அலாவி சமூகம், அரசு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. சிரியாவில் தற்போதைய அரசு கவிழுமானால், பெரும்பான்மை சுன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களே ஆட்சியைப் பிடிப்பார்கள். அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றினால், அலாவி சமூகத்தினரை பழிவாங்குவதற்காக இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடலாம். எதிர்காலம் குறித்த அச்சம் எல்லோர் மனதிலும் குடி கொண்டுள்ளது.

Thursday, April 28, 2011

மக்கள் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படும்

[ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்]
(பகுதி : மூன்று)


ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு இலங்கை செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட அரசு, அவர்களுடன் ஒத்துழைத்தது. நிபுணர் குழு தயாரித்தளித்த அறிக்கையை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்தது. பகுதி பகுதியாக ஊடகங்களுக்கு கசிய விட்டது. ஒரு வாரத்திற்குப் பின்னர் முழுமையான அறிக்கையை வெளியிட்டது. எல்லாமே ஒரு நாடகமாகத் தெரிகின்றது. போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை இலங்கை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை எதிர்பார்க்கின்றது. அதற்கப்பால், எந்தத் திட்டமும் அதனிடம் இல்லை. நிபுணர் குழு சமர்ப்பித்த போர்க்குற்ற அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று கூறிய இலங்கை அரசு, அதனை விசாரிக்க முன்வரப் போவதில்லை.

தமிழ் ஊடகங்களில் அதிகம் பேசப்படாத இன்னொரு நாட்டின் போர்க்குற்ற அறிக்கையும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. காஸாவில் இஸ்ரேல் புரிந்த போர்க்குற்றங்களை ஆவணப்படுத்திய அறிக்கையை குப்பைக் கூடையில் போடுமாறு, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு கூறியிருக்கிறார். இஸ்ரேலிய விசுவாசிகளான தமிழ் தேசியவாதிகள் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காததையிட்டு ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆனால், பாலஸ்தீனர்களும், தமிழர்களும் ஒரே தலைவிதியை பங்கு போடும் சகோதர இனங்கள் என்ற உண்மையை அடிக்கடி மறப்பது தான் துரதிர்ஷ்டமானது. இஸ்ரேலும், இலங்கையும், பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை, காலனிய எஜமானின் அடிச்சுவட்டை பின்பற்றி வருகின்றன. இலங்கையில் எத்தனை பிரச்சினை வந்தாலும், பிரிட்டிஷ் காரன் கற்றுக் கொடுத்த பாராளுமன்ற ஜனநாயகம் ஒழுங்காக செயற்படுகின்றது. அந்நிய கடனுதவியையும் முகம் கோணாமல் வாங்கிக் கொள்கிறது. தகப்பன் சொல் கேட்கும் சமர்த்துப் பிள்ளையாக நடந்து கொள்கிறது. அப்படியான நாட்டின் மீது போர்க்குற்ற விசாரணை செய்வதும், பொருளாதாரத் தடை விதிப்பதும் அவர்களுக்கு தேவையற்ற ஒன்று. அதனால் தான் போர்க்குற்ற நிபுணர் குழு அறிக்கையையும், பான் கி மூன் தனது நண்பனான ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்து கருத்துக் கேட்டார்.

யூகோஸ்லேவியா, ஈராக் போன்ற நாடுகளில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தான், ஆயுத விநியோகத் தடை, பொருளாதாரத் தடை எல்லாம் கொண்டு வந்தார்கள். சர்வதேச சமூகம் நினைத்திருந்தால், இலங்கையின் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, தடைகளை போட்டிருப்பார்கள். ஆனால் நடந்ததோ வேறு. சீனா, ரஷ்யா மட்டுமல்ல, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல்,செக், இந்தியா உட்பட பல உலக நாடுகள் ஆயுத விநியோகம் செய்தன. ஆயுத விநியோகம் செய்த நாடுகளுக்கு போர்க்குற்றத்தில் பங்கில்லையா? இலங்கையில் செயற்பட்ட ஐ.நா. பிரதிநிதிகள், மனித பேரழிவை குறைவாக மதிப்பிட்டிருந்தனர். உயிரிழப்புகளை குறைத்துக் கூறி கொண்டிருந்தனர். நிபுணர் குழு அறிக்கையே ஐ.நா. வின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளது. ஐ.நா. உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட "வெள்ளைக் கொடி" விவகாரம், எல்லாம் பகிரங்கப் படுத்தப் படுமானால், குற்றவாளிக் கூண்டில் ஐ.நா.வும் நிறுத்தப் படும். ஒருவேளை, ராஜபக்ஷ சகோதரர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினால், ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தின் வண்டவாளங்களை ஊரறியச் செய்ய மாட்டார்களா? ஏற்கனவே மிலோசொவிச், சதாம் ஹுசைன் வழக்கில் முக்காடு போட்டுக் கொண்டு ஒளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

போர் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து வந்துள்ள போர்க்குற்ற நிபுணர் குழு அறிக்கை, IMF பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் நேரம் பார்த்து வந்துள்ளது. இதனால் இந்த அறிக்கையின் நோக்கம் குறித்த சந்தேகம் கிளம்புவது இயல்பானது. "ஜனாதிபதி ராஜபக்ஸ IMF உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால், போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்," என்ற மிரட்டலாகவே பார்க்க வேண்டியுள்ளது. 2007 ம் ஆண்டு, இலங்கையில் இருந்த IMF அலுவலகத்தை மூடி விடுமாறு, ராஜபக்ஷ அரசு உத்தரவு போட்டது. IMF அதிகாரிகள், பல்வேறு தொண்டு நிறுவன பிரதிநிதிகளை அழைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரினார்கள். ஆனால் அழுத்தம் பலிக்காமல் வெளியேறி விட்டார்கள். IMF இட்ட நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருந்தன. IMF கடன்களுக்கான வட்டியும் மிக அதிகம். அவர்கள் சொல்வது போல பட்ஜெட் போட வேண்டும். அரசு நிதித்துறையின் கணக்கு வழக்குகளை காட்ட வேண்டும். அவர்கள் சொல்வது போலத் தான் அரசாங்கம் நடத்த வேண்டும். IMF போட்ட நிபந்தனைகளின் தொல்லை தாங்காமல் தான், இலங்கை அரசு மேற்குலக நாடுகளை விட்டு விலகத் தொடங்கியது. சீனா, ஈரான் ஆகிய நாடுகளிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அவர்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இதைத் தான், "இலங்கை சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டது." என்று சிலர் எமக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சீனாப் பூச்சாண்டி எல்லாம், எம்மைப் போன்ற அரசியல் அறிவற்ற தற்குறிகளை ஏமாற்ற மட்டுமே பயன்படும். சக்தி வாய்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். போர்க்குற்ற மிரட்டல் நன்றாகவே வேலை செய்கின்றது. கடந்த வருடம், இலங்கை அரசு மீண்டும் IMF இடம் கடன் வாங்க ஒப்புக் கொண்டது. அவர்கள் வந்தவுடனேயே நாட்டாமை செய்யக் கிளம்பி விட்டார்கள். கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது முதலாவது கட்டளை. இன்றைக்கும் இலங்கையில் பல்கலைக்கழகம் வரை அனைவருக்கும் கல்வி இலவசம் என்ற விபரம், வெளியில் அதிகமானோருக்கு தெரியாது. அதிலும், ஆங்கில வழிப் பாடசாலைகள் அரிது என்பதும், மாணவர்கள் தாய்மொழியிலேயே (சிங்களம் அல்லது தமிழ்) கல்வி கற்கின்றனர் என்பதும், IMF க்கு பிடிக்காத விஷயம். சிறிது காலம் பொறுங்கள், ஐயா. IMF காலால் இட்ட பணியை ராஜபக்ஷ தலையால் செய்து முடிப்பார். பணக்காரத் தமிழரின் பிள்ளைகள் மட்டுமே ஆங்கில வழிக் கல்வி கற்கும் காலம் வரும். ஏழைத்தமிழர்கள் ஈழம் கேட்க வலுவான காரணம் ஒன்று கிடைத்து விடும். இப்போதும் தமிழ்ப் பகுதிகளில் காலூன்றி வரும் அரச, தனியார் நிறுவனங்களில் ஆங்கிலம்/சிங்களம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைக்கு எடுக்கிறார்கள். இதனால் அந்தப் பிரதேச மக்கள் தொழில் வாய்ப்பின்றி வருந்துகையில், தெற்கில் இருந்து வந்து வேலை செய்கின்றனர். மேலைத்தேய பொருளாதார நிபுணர்கள் கட்டமைத்த உலகமயமாக்கல் திட்டத்தில் இதெல்லாம் சகஜம், ஐயா.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் உருவான ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வை செய்த முதலாவது போர்க்குற்ற விசாரணை ஜெர்மனியில் இடம்பெற்றது. போரில் வெற்றி பெற்ற நேசநாடுகள், தோல்வியடைந்த ஜெர்மனியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்தன. போரில் ஈடுபட்ட நேசநாடுகளின் போர்க்குற்றங்கள் அன்று கவனத்தில் எடுக்கப் படவில்லை. பனிப்போர் காலத்தில், உலக நாடுகள் ஒன்றில் அமெரிக்க முகாமில், அல்லது சோவியத் முகாமில் சேர்ந்திருந்தன. அதனால், நீதி விசாரணையை விட, அவரவர் முகாமை காப்பாற்றிக் கொள்வதே முக்கியமாக கருதப் பட்டது. இன்றைக்கும் பனிப்போர் கால சிந்தனை, பலர் மனதை விட்டு அகலவில்லை. சிலவேளை, தமது சொந்த குறைபாடுகளை மறைப்பதற்காக, அவ்வாறான மாயை உருவாக்கப் படுகின்றது. இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்க்கும் என்பதால், பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் பெறச் சாத்தியமில்லை. இதனை ஐ.நா. செயலாளர் பான் கி மூன் தெரிவிக்கிறார். அந்த நாடுகள், இலங்கையைக் காப்பாற்றுவதை விட, மேற்குலக நாடுகளின் வியூகங்களை தடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன. ஏனெனில், ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக கையை உயர்த்தும் நாடுகள் எல்லாம், தமது நாடுகளிலும் அது போன்ற பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. "உள்நாட்டுக் குழப்பம் இல்லாத, அமைதியான" மேற்குலக நாடுகள் மட்டுமே நல்லவர்கள் போல காட்டிக் கொள்ள இது வழி வகுக்கின்றது.

உலக நாடுகள் அனைத்தும் பங்கெடுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை அமைக்கும் திட்டம் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள், அந்த யோசனையை எதிர்த்து வருகின்றன. பொதுவாக வெற்றி பெற்றவர்களும், வல்லரசுகளும் தண்டனையில் இருந்து தப்பிக் கொள்கின்றனர். இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். அதன் அர்த்தம், போர்க்குற்றம் புரிந்தவர்களை தப்பிக்க விட வேண்டும் என்பதா? நிச்சயமாக இல்லை. குற்றம் புரிந்தவர் யாராகவிருப்பினும் தண்டனையில் இருந்து தப்பக் கூடாது. ஆனால், இன முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள இன்றைய சூழலில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியாது. ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தையும், விடுதலைப் புலிகளையும் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரச தரப்பு, தனது இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், தவறான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் கூறுகின்றது. மறு பக்கத்தில் தமிழ் தேசியவாதிகள், மிகத் தீவிரமாக சிறிலங்கா அரசை அம்பலப் படுத்திக் கொண்டே, புலிகளின் குற்றங்களை மூடி மறைக்கின்றனர். சிறிலங்கா அரசும், தமிழ் தேசியவாதிகளும் ஐ.நா. நிபுணர்களின் அறிக்கையை குறை கூறுகின்றனர். இரண்டு தரப்புமே, தாங்கள் கூறுவது போலத் தான் அந்த அறிக்கை எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். தமது தரப்பு நியாயத்தை நிலைநாட்ட பல்வேறு விளக்கங்களை முன்வைக்கின்றனர். "எமது இனத்தை சேர்ந்தவர்கள் எந்தத் தவறையும் செய்யாத நல்லவர்கள். ஆனால் எதிரி இனத்தை சேர்ந்தவர்கள் கொடுமைக்காரர்கள்." என்ற புராதன கால தத்துவமே இன்றைக்கும் கோலோச்சுகின்றது. இலங்கையில் மட்டுமல்ல, யூகோஸ்லேவியா, ருவாண்டா என்று இனப்பிரச்சினை கூர்மையடைந்த நாடுகளில் எல்லாம் இது தான் நிலைமை.

உண்மையிலேயே ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் நிறுவப்படுமானால் அது பிரச்சினையை தீர்க்கும் என்று கருதவில்லை. "ஐ.நா. தமிழ் தேசியவாதிகளின் விளக்கத்தை சரி என்று ஏற்றுக் கொள்கின்றது," என்று வைத்துக் கொள்வோம். போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா படையினரையும், பாதுகாப்பு அமைச்சரையும், ஜனாதிபதியையும் விசாரித்து தண்டனை வழங்குகின்றது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினைகளை தோற்றுவிக்கும்? தண்டனை வழங்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு "தேசத்தின் வீர புருஷர்கள்" அந்தஸ்து கிடைத்து விடும். அவர்களின் பெயரை வைத்தே சிங்கள இனவெறி அரசியல் தீவிரமடையும். யார் அதிக இனவாதம் பேசுகின்றனரோ, அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும்.

நிச்சயமாக, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், "சிங்கள எழுச்சி" கண்டு கலக்கமடையவே செய்வர். சிங்கள மக்கள் மத்தியில், தமது "தேசிய நாயகர்களை" காட்டிக் கொடுத்த, "தமிழ்த் தேசத் துரோகிகள்" மீது வன்மம் அதிகரிக்கும். அது மீண்டும் ஒரு இனப்படுகொலைக்கு இட்டுச் சென்றாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. அமெரிக்க தூதரகம் இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுடன் பேசிய பொழுது, அவர்கள் தெரிவித்த கருத்துகளே இவை. (விக்கிலீக்ஸ் கசிய விட்ட கேபிளில் குறிப்பிடப்பட்டது.) "அப்படி எல்லாம் நடக்கும் என்று நம்பவில்லை," என்று புறக்கணிப்பவர்கள், செர்பியா சென்று பார்ப்பது விட்டு வருவது நன்று. அங்கே செர்பிய இனவெறியை பரப்பும் கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது. போர்க்குற்ற நீதிமன்றம் தண்டனை வழங்கிய மிலோசொவிச், கராசிச் ஆகியோரின் உருவப்படங்களை தங்கிய பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு குறைவில்லை. எவ்வளவு தான் மேற்குலக நாடுகளின் ஆதரவு இருந்த போதிலும், பிற கட்சிகளால் மக்களின் மனதை மாற்ற முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்கு பிந்தி வந்துள்ள போர்க்குற்ற அறிக்கையானது, இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் பழைய ரணங்களை கிளறி விட்டுள்ளது. இழந்த வாழ்க்கையை மீளக் கட்டமைத்துக் கொண்டு, எதிர்காலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் தம்மை இறந்த காலத்தில் தள்ளுவதாக உணருகின்றனர். தமிழகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் "தமிழ் உணர்வாளர்கள்" இந்த உண்மையை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, அவர்களது பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் தான் கண்டித்துள்ளது. (வழமை போல தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து விட்டன.) "சிங்களவர்கள் எல்லோரும் இனவெறியர்கள். சிங்களவனோடு சேர்ந்து வாழ முடியுமா?" என்று பழைய பல்லவியைத் தான், அவர்கள் இப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கைக்கு வெளியே, சிங்களவனையே கண்ணால் காணாத இடத்தில் இருந்து கொண்டு, அதைக் கூறுவது எளிது. இன முரண்பாடுகள் வளர்வதை தடுத்து நிறுத்துவது, அவசரமாக செய்யப்பட வேண்டிய கடமை. "நீ தான் இனவெறியன்... நீ தான் கெட்டவன்... நீ தான் கொலைகாரன்..." சிறு பிள்ளைகள் போல சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே பேசிக் கொண்டிருந்தால், போர்க்குற்றங்களை யார் விசாரிப்பது? குற்றவாளிகள் மன்னிக்கப் பட வேண்டுமா? ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த வழிமுறையை பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமானது. போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும், பொது மக்கள் முன்னிலையில் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டார்கள். இதனால் மேலாதிக்கம் செய்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட, தமது ஆட்கள் செய்த குற்றங்களுக்காக வெட்கித் தலை குனிந்தனர். மற்ற சமூகத்தை அரவணைத்துக் கொண்டனர். ஆனால், அங்கெல்லாம் அத்தகைய தீர்வை எட்ட வேண்டிய தேவை ஏகாதிபத்தியத்திற்கு இருந்தது. தென் ஆப்பிரிக்காவில், வெள்ளையினம் மேலாதிக்க சமூகமாக இருந்து பெரும்பாலான போர்க்குற்றங்களை புரிந்தது. குவாத்தமாலாவில் மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள், ஏழை உழைக்கும் வர்க்கத்தை அடக்குவதற்காக போர்க்குற்றம் புரிந்தனர். அந்த சமூகங்களை சேர்ந்தோர் போர்க்குற்றத்தில் தண்டிக்கப் பட்டால், அது ஏகாதிபத்தியத்தின் அத்திவாரத்தை ஆட்டம் காணச் செய்து விடும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில், பல்லின மக்களின் ஆதிக்கப் போட்டிக்குள் சிக்கித் தவித்த யூகோஸ்லேவியா உதாரணத்தை பின்பற்றலாம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் செர்பிய பாசிஸ்டுகளும் (Chetnics), குரோவாசிய பாசிஸ்டுகளும் (Ustashe) பிற இனங்களை அடக்கி கொடுங்கோன்மை புரிந்தனர். அப்போது நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் எல்லாவற்றிற்கும் அவர்கள் காரணமாக இருந்தனர். யூகோஸ்லேவியாவின் அனைத்து தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், இனப்படுகொலையாளர்களும், போர்க்குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். போர்க்குற்றவாளிகள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு தண்டனை வழங்கப் பட்டது. யூகோஸ்லேவியா சோஷலிச நாடாக திகழ்ந்த நாற்பதாண்டு காலத்தில் இனப்பிரச்சினை எந்த வடிவத்திலும் தலை தூக்கவில்லை. இலங்கையை சேர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் யூகோஸ்லேவியாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இது. இனக்குரோதத்தை வளர்க்கும் சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் மக்களுக்கு மீட்சியைத் தரப்போவதில்லை. உழைக்கும் மக்களின் புரட்சியும், மக்கள் நீதிமன்றங்களுமே போர்க்குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்க முடியும்.

(முற்றும்)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
2.
சிறிலங்கா அரசவைக் கோமாளி, "சிங்கள வைகோ"!
1.
ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்

Wednesday, April 27, 2011

யுத்தம் செய்! ஆயுத விற்பனை அதிகரிக்கும்!!

பிரான்ஸ் TF1 தொலைக்காட்சி செய்தியை தற்செயலாக பார்த்தவர்கள், அந்த மாபெரும் உண்மையை அறிந்து திகைத்திருப்பார்கள். லிபியாவில் நடக்கும் போர் குறித்த செய்தி அறிக்கை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பிரெஞ்சு இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதல் விபரங்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். "லிபியாவில் நடக்கும் போரினால் எமது ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது. சந்தையில் புதிதாக வாங்கிய விமானங்களின் தாக்குதிறனை பரீட்சிப்பதற்கு இது அரிய சந்தர்ப்பம். எமது விமானிகளுக்கும் போர்க்களத்தில் நேரடிப் பயிற்சி கொடுக்க முடிகிறது." தற்செயலாக, ஒரு தடவை மட்டுமே அந்த அதிகாரியின் நேர்காணல் ஒளிபரப்பானது. விழித்துக் கொண்ட பிரெஞ்சு அரசு, அவசரமாக விடுத்த வேண்டுகோளின் பின்னர் அந்தப் பகுதி நீக்கப்பட்டு விட்டது. மேலைத்தேய "மனிதாபிமான" அரசுகள், கடாபி என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மையில் இருந்து, லிபிய மக்களை காப்பாற்றுவதற்காகவே, குண்டு போடுவதாக மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புதிதாக உற்பத்தி செய்யப் பட்ட நவீன ஆயுதங்களை சந்தையில் விற்பதற்காகத் தான், லிபியா மீது போர் தொடுக்கப் பட்டது. இந்த உண்மையை மக்கள் அறிந்துகொண்டால், கற்பிக்கப்பட்ட நியாயம் அடிபட்டுப் போகாதா? மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமான முகமூடி கிழிவதை பொறுத்துக் கொள்ளலாமா? ஆயிரம் காரணம் சொல்லுங்கள். உலகில் தயாரிக்கப்படும் முக்கால்வாசி ஆயுதங்கள் மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற உண்மையை எவராவது மறுக்க முடியுமா?

சாதாரணமாக எவரும் விக்கிபீடியா, கூகிளில் தேடிப் பெறக் கூடிய தகவல் இது. ரஷ்யாவை தவிர்த்தால், அதிக ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிக்கும் முதல் ஐந்து நாடுகள் மேற்குலகில் இருக்கின்றன. உலகில் ஆயுத உற்பத்தியில் முன்னணியில் நிற்பது, வேறு யார்? அமெரிக்கா தான். உலகில் 30 சதவீத ஆயுதங்கள் அமெரிக்க தயாரிப்புகள் தான். அவை தான் அதிகளவில் விற்பனையாகின்றன. பனிப்போர் முடிந்து இருபதாண்டுகளுக்கு மேலானாலும், இன்றைக்கும் ரஷ்யா தான் அமெரிக்காவுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களை தயாரிக்கிறது. (23 %) அதற்கு அடுத்ததாக ஜெர்மனி (11 %), பிரான்ஸ் (7 %), பிரிட்டன் (4 %), நெதர்லாந்து (3 %). இவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் மனித உரிமைகள், போர்க்குற்றம் பற்றி விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம், ஆயுதங்களை விற்று கொலைகாரர்களை ஊக்குவிக்கிறார்கள். எல்லாமே பணத்துக்காகத் தான். எங்கேயோ ஒரு மூன்றாம் உலக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் தானே, முதலாம் உலக மக்கள் செல்வந்த வாழ்வு வாழலாம்? இனப்படுகொலை, போர்க்குற்றம், எது நடந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. ஆயுதங்களை விற்றோமா, இலாபம் சம்பாதித்தோமா, அது தான் முக்கியம். இல்லாவிட்டால் தொடர்ந்தும் பணக்கார நாடுகளாக அவர்களால் நிலைத்து நிற்க முடியுமா? ஒருவனின் மரணம், இன்னொருவனுக்கு உணவு. ஆதலினால் போர் செய்வீர்.

எங்களால் நம்ப முடியாது. ஆனால் இது தான் உலக யதார்த்தம். புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்து காட்சிக்கு வைத்தால் மட்டும் போதாது. அவற்றின் செயல்பாட்டை நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். எங்காவது ஒரு நாட்டில் போர் நடந்ததால் தானே, புதிய ஆயுதங்களை பரீட்சித்துப் பார்க்க முடியும்? அவை எத்தனை மக்களின் உயிரைக் குடிக்கும், எத்தனை சொத்துகளை நாசமாக்கும், என்றெல்லாம் நிரூபித்துக் காட்ட வேண்டாமா? உதாரணத்திற்கு ஐரோப்பியரின் புதிய தயாரிப்பான Eurofighter Typhoon விமானத்தை எடுத்துக் கொள்வோம். அதன் இணையத்தளத்தில் பின்வருமாறு விளம்பரம் செய்கிறார்கள். "The world's most advanced new generation multi-role/swing-role combat aircraft available on the market." சும்மா விளம்பரம் செய்து விட்டால் போதுமா? இதுவரை எந்த ஒரு யுத்தத்திலும் பாவிக்கப்படாத போர்விமானத்தை எவன் வாங்குவான்? தற்போது லிபியா மீது நேட்டோ படைகள் நடத்தும் தாக்குதல்களில், அந்த விமானங்கள் ஈடுபடுத்தப் படுகின்றன. Eurofighter விமானங்களின் தாக்குதிறன் குறித்த விபரங்களை தொலைக்காட்சி செய்தியில் பார்த்து மகிழலாம். சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாம் இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சில முக்கிய வாடிக்கையாளர்கள் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா, பிரேசில், குரோவாசியா... இன்னும் பல நாடுகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளன.

அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவதற்காக ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளது. தொலைதூர இலக்குகளைத் தாக்குவதற்கு அணுகுண்டு பொருத்தப்பட்ட ஆயுதங்களை பாவிக்க வேண்டிய தேவை இருந்தது. புதிதாக கண்டுபிடித்த Prompt Global Strike, அதே அளவு தாக்குதிறனைக் கொண்ட, மரபு வழிப் போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதம். அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்ட ஒரு மணி நேரத்தில், உலகின் எந்தப் பாகத்திலும் சென்று வெடிக்கக் கூடியது. செய்மதி அந்த ஆயுதத்தை இலக்கு நோக்கி வழிநடத்தும். ஆனால், அந்த ஆயுதம் சந்தைக்கு வர இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் அமெரிக்காவின் Prompt Global Strike நிகழ்த்தப் போகும் அற்புதங்களைக் காண தயாராகுங்கள். ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்தது இதற்காகத் தானா?

இன்று நேற்றல்ல, கடந்த எழுபதாண்டுகளாக போர்க்காலத்தில் தான் ஆயுத வியாபாரம் சூடு பிடிக்கின்றது. 1937 ம் ஆண்டு, ஸ்பானியாவில் குவேர்னிகா நகரம் ஜெர்மன் விமானங்களின் குண்டுவீச்சில் அழிக்கப் பட்டது. பிரான்கோவின் பாஸிச படைகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்பட்ட குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முதல் நடந்த போர் அது. பிற்காலத்தில் போர்க்குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நாஸி அரசின் மந்திரி கேரிங் இவ்வாறு கூறினார்:"புதிதாக அமைக்கப்பட்ட எங்களது விமானப்படையினதும், விமானிகளினதும் முதலாவது போர்க்கள அனுபவம்." நாஸி ஜெர்மனி சொல்லிக் கொடுத்த பாடத்தை அமெரிக்கர்கள் வியட்னாம் போரில் பின்பற்றினார்கள். BLU -82B /C -130 என்ற உற்பத்திப் பெயரைக் கொண்ட, "Daisy Cutter " என்று செல்லமாக அழைக்கப்பட்ட நாசகார ஆயுதத்தை வியட்னாம் காடுகளில் போட்டார்கள். அந்தக் குண்டு, வனாந்தரக் காட்டின் மத்தியில் 600 மீட்டர் சுற்றளவுக்கு மரங்களை அழித்து விடும். மரங்கள் அழிக்கப்பட்ட இடத்தில், ஒரு ஹெலிகாப்டர் இறங்குமளவிற்கு இடம் கிடைத்து விடுமாம். டெய்சி கட்டர் குண்டுவீச்சினால் பரவிய காட்டுத்தீயில், அங்கு வாழ்ந்த வியட்நாமிய மக்களும் மரணமடைந்தனர். சீறிப் பாய்ந்த தீச் சுவாலைகள் மிரண்ட மக்களை எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தவிக்க வைத்தது. அதைப் பற்றி யாருக்கு கவலை? ஹெலிகாப்டர் தரையிரங்குமளவு இடம் கிடைத்ததல்லவா? அது அல்லவா வியாபாரத்திற்கு அவசியமான விளம்பரம்?

குவைத் மீட்பதற்கு நடந்த முதலாவது வளைகுடா போரில், "Bunker Buster " குண்டுகள் பிரயோகிக்கப் பட்டன. சதாம் ஹுசைனின் நிலக்கீழ் மறைவிடங்களை தாக்கி அழிக்கும் நோக்கில் ஏவப்பட்டன. பின்னர் ஆப்கான் போரில், அல்கைதா/தாலிபான் தலைவர்கள் பதுங்கியிருந்த குகைகளை தகர்க்க பயன்படுத்தப் பட்டன. ஆனால் இத்தகைய நவீன ஆயுதங்களால் தாலிபானை அழிக்க முடியவில்லை. அதனால் தற்போது ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளார்கள். Thermobaric (வெப்ப அமுக்க) குண்டுகள், விழுந்த இடத்தில் பிராணவாயுவை உறிஞ்சி எடுத்து விடும். இதனால் உள் உடல் உறுப்புகள் யாவும் பாதிக்கப்படும். பிரித்தானியா கண்டுபிடித்துள்ள Light weight anti -structure missiles சுவரை துளைத்துச் சென்று உள்ளே சென்று வெடிக்கும் தன்மை கொண்டது. XM25 Individual Airburst Weapon System (IAWS), இதுவும் சந்தையில் புதிதாக வந்துள்ள அமெரிக்க ஆயுதம் தான். இது ஒரு சாதாரணமான கிரனேட் வீசு கருவி. ஆயினும் லேசரால் தூரத்தை அளந்து, கிரனேட் குறிப்பிட்ட இலக்கின் மீது விழுந்து வெடிக்க வைக்கலாம். இந்த புதிய ஆயுதங்களை வாங்கி பாவிக்க விரும்புகிறீர்களா? உடனடியாக ஒபாமாவை தொடர்பு கொள்ளவும். வாங்குபவர் ஏதாவது ஒரு அரசாங்க சார்பாக தொடர்பு கொள்வது விரும்பத் தக்கது. அரசுகளுடன் மட்டும் தான் அவர்கள் வியாபாரம் பேசுவார்களாம். கறுப்புச் சந்தையில் ஆயுதம் விற்கும் சில்லறை வியாபாரிகளும் இருக்கிறார்கள். பெரும்பாலும் சிறிய ரக ஆயுதங்களை அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். அவ்வப்போது பெரிய முதலாளிகள், சில்லறை முதலாளிகளை பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள்.

Tuesday, April 26, 2011

சிறிலங்கா அரசவைக் கோமாளி, "சிங்கள வைகோ"!


[ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்]

(பகுதி : இரண்டு)


2008 ம் ஆண்டின் தொடக்கம், மன்னார் மாவட்டத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படைகள் போரிட்டுக் கொண்டிருந்த நேரம். இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த, நெதர்லாந்தை சேர்ந்த தொண்டு நிறுவன முகாமையாளரை சந்தித்த போது, பல தகவல்களைக் கூறினார். தசாப்த காலமாக மேற்கத்திய நிதியுதவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள் ராஜபக்ச அரசினால் அவமானப் படுத்தப் பட்டனர். புலிகள் அமைப்பிற்கு நிதியளித்ததாக, ஆயுதங்களைக் கூட கடத்தி வந்ததாக, அந்த நிறுவனங்கள் மேல் குற்றம் சாட்டப்பட்டது. அரசின் விஷமத்தனமான பிரச்சாரம் காரணமாக, சிங்கள மக்கள் தொண்டு நிறுவனங்களை தேசத் துரோகிகளாக கருதினார்கள். இதனால் அவற்றில் வேலை செய்து வந்த பல வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

அரசு புரியும் மனித உரிமை மீறல்களை, இந்த நிறுவனங்களை சேர்ந்தோரே ஆவணப் படுத்திகின்றனர் என்று, ராஜபக்ச அரசு சந்தேகப் பட்டது. இதனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வன்னி பெரு நிலப்பரப்பை விடுவிக்கும் போரின் தொடக்கத்திலேயே வெளியாருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, ஐ.நா. நிறுவனங்களைக் கூட போர்ப் பிரதேசத்தில் இயங்க அனுமதிக்கவில்லை. தவிர்க்கவியலாது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் இயங்க அனுமதி வழங்கப் பட்டது. பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப் படுத்துவதற்காக செஞ்சிலுவைச் சங்கம் மிக அவதானமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. சிறிலங்கா அரசு நடத்தும் ஊடகத் துறையை சேர்ந்தவர்களை மட்டுமே, போர்ச் செய்திகளை வெளியிட அனுமதித்தார்கள். இறுதி யுத்தத்தில், போர்க்குற்றங்கள் நடைபெறப் போகின்றன என்பதை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். சிறிலங்கா அரசானது, தனது இராணுவத்தின் குற்றங்களுக்கான தடயங்கள் யாருக்கும் போகாத வண்ணம் பார்த்துக் கொண்டது. ஆனால், அதையும் மீறி பல குற்றங்கள் குறித்த விபரங்கள் வெளியுலகை சென்றடைந்தன.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர், அன்று ஒரு விடயத்தை உறுதியாகச் சொன்னார். "ராஜபக்ச அரசை, இதற்கு முந்திய இலங்கை அரசுகள் போன்று குறைத்து மதிப்பிட முடியாது. ராஜபக்ச சகோதரர்கள், சொன்னதைச் செய்பவர்கள். முல்லைத்தீவில் சிங்கக்கொடி ஏற்றுவோம் என்று சொல்கிறார்கள். வெகுவிரைவில் அது நடக்கலாம்." ஆனால், இன்னொரு எதிர்வுகூறல் பிழைத்துப் போனது. கடந்த காலத்தைப் போன்று, புலிகள் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லா யுத்தத்தை தொடர்வாகள், என்று அவர் எதிர்பார்த்தார். அதற்கு மாறாக, புலிகள் மூன்று லட்சம் போது மக்களையும் வைத்துக் கொண்டு, போர் நிறுத்தத்தை கோரினார்கள். வெற்றி நிச்சயம் என்று உறுதியாக இருந்த, சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை. நாற்பதாயிரம் தமிழர்களை கொன்றாவது, புலிகளை அழித்து விட வேண்டும் என்று திடமான மனதுடன் இருந்தது.

இந்திய மத்திய அரசும் புலிகளின் அழிவை விரும்பியிருந்ததை, முன்னாள் ஐ.நா. அதிகாரி கோர்டன் வைஸ் தெரிவித்தார். சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், புலிகள் மட்டுமே தீர்வுக்கு தடையாக இருக்கின்றனர் என்று, சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தை நம்ப வைத்திருந்தது. (ஸ்கண்டிநேவிய கண்காணிப்பாளர்கள் பதிவு செய்த யுத்த நிறுத்த மீறல்களில் அதிகமானவை புலிகளுடையவை.) சமாதானப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் உடன்படிக்கையின் பிரகாரம், புலிகளும், அரசும் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. புலிகள் மீண்டும் போருக்கு தயாரானால், தாங்கள் சிறிலங்கா அரசுக்கு வேண்டிய உதவிகளை செய்யப் போவதாக அமெரிக்க தூதுவர் அறிவித்திருந்தார். "எத்தனை ஆயிரம் மக்கள் மடிந்தாலும் பரவாயில்லை. ஈழப்போர் இனிமேல் தொடரக் கூடாது." என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதனை எதிர்பார்த்தன. உலகில் தீராத போர் நடக்கும் நாடுகளில் இருந்து அகதிகள் வந்து குவிவதை தடுப்பது, அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது. ஏற்கனவே அதிக அகதிகளை உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்த பொஸ்னியா, ஈராக், ஆப்கானிஸ்தான், சியாரா லியோன் போன்ற நாடுகளில் நடந்த போர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டிருந்தமை, மேற்கத்திய நாடுகளை எரிச்சலூட்டியது எனலாம். புலிகள் அமைப்பை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட வேண்டும் என்று, அவை முடிவெடுத்தன. உலகில் எந்தவொரு நாடும் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால், அந்த அமைப்பின் உயிர்நாடியான நிதி சேகரிப்பு முதலாளித்துவ நாடுகளிலேயே இடம்பெற்றது. சர்வதேச மூலதனத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுக்கு அதனை தடுப்பது மிகவும் இலகுவானது. மேற்குலக நாடுகள் எடுத்த புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் , சிங்கள பேரினவாத சக்திகளை உற்சாகப் படுத்தின. அதே சர்வதேச மூலதனத்துடன் பின்னிப் பிணைந்துள்ள சிறிலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வருவதும் இலகுவானது என்பதை அவர்கள் அன்று உணரவில்லை. ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த போர்க்குற்ற அறிக்கை, அந்த சூட்டைக் கிளப்பியுள்ளது.

ராஜபக்சவின் அரசவைக் கோமாளியான, "சிங்கள வைகோ"விமல் வீரவன்ச: "ஐ.நா. நிபுணர் குழுவுக்கு புலி ஆதரவு அமைப்புகள் லஞ்சம் கொடுத்திருப்பதாக..." வாய்க்கு வந்த படி உளறுகிறார். பணக்கார நாடுகளே ஐ.நா.வுக்கு நிதியுதவியளிக்கின்றன என்பது ஆரம்ப பாடசாலை மாணவனுக்கே தெரிந்த விடயம். மேற்குலகை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சிங்களப் பேரினவாதிகளின் வாய்ச் சவடால்களுக்கு ஐ.நா. மிரண்டு விடப் போவதில்லை. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் உண்மையான பிரச்சினையை மக்களுக்கு அறிய விடாமற் செய்வதில் வல்லவர்கள். "ஐ.நா. சபை தமிழர்கள் மீது இரக்கப்பட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தப் போவதாக", தமிழ் இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். "ஐ.நா. விசாரணை, தேசத்திற்காக போராடி மரித்த இராணுவவீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாக", சிங்கள இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். "அமெரிக்காவினால் கூட வெல்ல முடியாத பயங்கரவாதத்தை நாங்கள் அழித்து விட்டதால் பொறாமை கொண்ட நாடுகளின் செயல்", என்று இலங்கை அரசு விளக்கம் கொடுக்கின்றது. எல்லோருக்கும் அவரவர் நியாயம் மட்டுமே முக்கியமாகப் படுகின்றது.

உள்நாட்டுப் பிரச்சினையில் அந்நிய நாடுகளோ, ஐ.நா.வோ தலையிடுவதை விரும்பா விட்டால், முன் கூட்டியே அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அரசு ஏற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழுவின் மெத்தனப் போக்கையும், இயலாமையையும் ஐ.நா. சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது. தனது படையை சேர்ந்தவர்கள் ஆயினும், குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றிருக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், அரச படைகளால் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் மீது கூட போர்க்குற்ற வழக்குகள் போடப்படவில்லை. ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் அத்தகைய வழக்குகள் நடந்துள்ளன. அந்த நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரிய முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் சிலரும், சிங்கள இராணுவவீரர்கள் சிலரும், போர்க்குற்றவாளிகளாக இனங்காணப் பட்டுள்ளனர். அவர்களை குற்றவாளிகளாக கருதி, பிற அகதிகளிடமிருந்து வேறு படுத்தி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இலங்கையில் இன்னும் தோன்றவில்லை. சிறிலங்கா படையினரின் குற்றங்களை ஒப்புக் கொண்டால் அது புலி ஆதரவுப் பிரச்சாரமாக கருதப்படும். புலிகளின் குற்றங்களை ஒப்புக் கொண்டால் அது சிறிலங்கா அரசு ஆதரவுப் பிரச்சாரமாக கருதப்படும். இரண்டு தரப்பினரும் எதிரும் புதிருமாக நிற்கும் நிலையில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.

ஐ.நா. அத்தகைய நல்லெண்ணத்துடன் நடவடிக்கை எடுத்து வருகின்றதா? தற்போது சமர்ப்பிக்கப் பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கை ஒரு ஆலோசனை மட்டுமே. போர்க்குற்ற விசாரணை குறித்த முடிவு இனிமேல் தான் எடுக்கப் பட வேண்டும். ஆனால் தன்னிடம் அதற்கான அதிகாரம் இல்லை என்கிறார், ஐ.நா. செயலாளர் பான் கி மூன். இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையோ, குற்றவாளிகளுக்கான தண்டனையோ இன்னும் பல வருடங்கள் போனாலும் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி தான். அநேகமாக, அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச பதவி விலகும் வரையில் காத்திருக்கிறார்கள் போலும். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அரை மனதுடன் சமர்ப்பிக்கப் படும் விசாரணைக்கான திட்டத்தை, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் எதிர்க்கலாம். அந்த எதிர்ப்பைக் காட்டியே, விசாரணை நடத்தப் படாமல் இழுத்தடிக்கப் பட்டு, இறுதியில் யோசனையை குப்பைக் கூடையில் வீசி விடலாம். யாராவது கேட்டால், ரஷ்யா, சீனா எதிர்த்தன என்று சாட்டுச் சொல்லலாம். ஐ.நா. இலங்கை போர்க்குற்றம் பற்றிய அறிக்கை தயாரிக்க வேண்டுமென, பிரிட்டனும், அமெரிக்காவும் வலியுறுத்தி வந்தன. உலகில் பலம் வாய்ந்த நாடுகளான, தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடிய பிரிட்டனும், அமெரிக்காவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையை மதிப்பதில்லை. ரஷ்யாவோ, சீனாவோ வீட்டோ அதிகாரம் பாவித்து தடுத்தாலும், திட்டத்தை நடைமுறைப் படுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளன.

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை தமிழ் மக்கள் மன்னித்து விடலாம், ஆனால் மறக்கப் போவதில்லை. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதால், தங்களுக்கு கிடைக்கப்போகும் நீதியை விட, இனப்பிரச்சினை தீர்க்கப் படுவதையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க அரசும், பிரிட்டனும் தமது நாடுகளில் வதியும் தமிழர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளது. புலிகளின் கொள்கைகளை புலத்தில் முன்னெடுக்கும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை காட்டும் ஆதாரங்களை வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு நடந்து கொண்டுள்ளது. போர் நடந்த காலத்தில் சிறிலங்கா அரசுக்கு துணை நின்று புலிகளை அழித்த நாடுகளுக்கு, தமிழர்கள் மேல் திடீர் கரிசனை வந்து விட்டது, என்று சிலர் நினைக்கலாம். முன்னாள் ஆங்கிலேயக் காலனியான இலங்கையில், சிங்களத் தேசியத்தையும், தமிழ்த் தேசியத்தையும் அவர்களே வளர்த்து விட்டார்கள். இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கொதிநிலைக்கு வந்து, யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஆயுதம் விற்று இலாபம் சம்பாதித்தார்கள். அமெரிக்காவும், பிரிட்டனும் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர். போர்க்குற்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா அரசை சிக்க வைப்பது கூட, தமிழர் நலன் சார்ந்தல்ல. நாம் எப்போதும் இனத்தை மையப் படுத்தியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், பொருளாதாரப் பிரச்சினைகளை புறக்கணிக்கின்றோம்.
(தொடரும்...)தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்

Monday, April 25, 2011

ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்

பொஸ்னியாவில் செர்பிய மொழி பேசும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மூர்க்கமாக மோதிக் கொண்டிருந்த காலத்தில் நடந்த கதை இது. செர்பியப் படைகளால் முற்றுகையிடப் பட்ட சிரபெனிச்சா நகரம். சிரபெனிச்சா நகரினுள் அகப்பட்டுக் கொண்டவர்கள் பொஸ்னிய முஸ்லிம்களும், அவர்களை பிரதிநிதித்துவப் படுத்திய இராணுவமும். நகரை விட்டு வெளியேறுவதற்கு ஒரேயொரு சுரங்கப் பாதை மட்டுமே இருந்தது. ஆனால் அந்தப் பாதையை கட்டுப்படுத்திய முஸ்லிம் படைகள், தமது மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. மாதக்கணக்காக உணவும், மருந்தும் இன்றி துன்பப் பட்ட மக்கள் மீது, கிறிஸ்தவப் படைகள் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தன.

இந்தச் சம்பவங்கள், தமிழ் மக்களுக்கு வன்னிப்போரை நினைவு படுத்தலாம். நந்திக் கடலுக்கும், இந்து சமுத்திரத்திற்கும் இடையில் இருந்த சிறு நிலப்பகுதி, சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகைக்குள்ளாகி இருந்தது. சிரபெனிச்சாவில் நடந்ததைப் போன்றே, பல லட்சம் தமிழ் மக்கள் உணவின்றி, மருந்தின்றி, ஷெல் வீச்சுகளால் மரணித்துக் கொண்டிருந்தனர். சிரபெனிச்சாவுக்கும், முள்ளிவாய்க்காலுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருந்தது. முன்னையதில் ஐ.நா. அமைதிப் படை நிலை கொண்டிருந்தது. பின்னையதில் "சர்வதேச சமூகம் தலையிடும்" என்ற வாக்குறுதி மட்டுமே வழங்கப் பட்டிருந்தது. ஆனால் முடிவு என்னவோ இரண்டுக்கும் ஒரே மாதிரி தான் அமைந்திருந்தது. வரலாறு எங்காவது ஒரு இடத்தில் திரும்பிக் கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தான் வரலாற்றுப் பாடம் என்றால் வேப்பங்காயாக கசக்கிறது.

"சர்வதேச சமூகம் தலையிட்டு, அன்னியப் படைகள் பாதுகாப்பு வழங்கியிருந்தால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்திருக்காது..." என்று பலர் வாதித்துக் கொண்டிருக்கின்றனர். சிரபெனிச்சாவில் சர்வதேச சமூகம் நேரடியாக தலையிட்டது. நெதர்லாந்து இராணுவம், ஐ.நா. அமைதிப்படை என்ற பெயரில் பாதுகாப்பு வழங்கியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்குலக ஊடகங்கள், அரசாங்கங்கள், நிலைமையை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன. இத்தனை "பாதுகாப்புகளுக்கு" மத்தியிலும், சிரபெனிச்சாவில் நடந்த இனப்படுகொலையை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஐ.நா. அமைதிப்படை, முன்னேறிய கிறிஸ்தவப் படைகளை எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக, அவர்கள் தான் முதலில் மிரண்டு ஓடினார்கள். தப்பியோடிக் கொண்டிருந்த மக்களையும் ஐ.நா. அமைதிப்படை தாங்கிகள் மிதித்து கொன்றுள்ளன. அந்தளவு பயந்தாங்கொள்ளிப் படையினரை தான், ஐ.நா. முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க அனுப்பி வைத்திருந்தது. இந்த லட்சணத்தில், ஐ.நா. அமைதிப்படை முள்ளிவாய்க்கால் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?, என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

ஈழப்போரின் இறுதியில் வன்னி மண்ணில் நடந்த அதே போன்ற அவலம், 1995 ம் ஆண்டு சிரபெனிச்சா நகரில் அரங்கேறியது. 24000 மக்களைக் கொண்ட சிரபெனிச்சா நகரில், பிற இடங்களை சேர்ந்த அகதிகளும் வந்து சேர்ந்து விட்டதால், மக்கட்தொகை 60000 த்தை தாண்டியது. குறைந்தது 8000 (செர்பிய) முஸ்லிம்கள், மிலாடிச் தலைமையிலான (செர்பிய) கிறிஸ்தவப் படைகளால் படுகொலை செய்யப் பட்டனர். இனப்படுகொலை நடந்து சில வருடங்களுக்குப் பின்னர், பல இரகசியங்கள் வெளியாகின. சிரபெனிச்சாவின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த நெதர்லாந்து ஜெனரல் கரெமென்ஸ், இனப்படுகொலையாளனான மிலாடிச்சுடன் விருந்துண்டு மகிழ்வதைக் காட்டும் வீடியோ வெளியாகியது. சிரபெனிச்சாவை கைப்பற்ற உதவியதற்காக ஐ.நா.படையினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மிலாடிச் பரிசளித்து கௌரவித்தார். ஏற்கனவே சிரபெனிச்சாவில் நிலை கொண்டிருந்த முஸ்லிம் படையினர், ஐ.நா. அமைதிப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களை அறிந்து கொள்ளும் போது, சர்வதேச சமூகம் செர்பிய பேரினவாதிகளை ஆதரித்துள்ளமை புலனாகும். ஆனால் அந்த ஆதரவு போர் முடியும் வரையில் தான். யூகோஸ்லேவியா போர்கள் எல்லாம் முடிந்து சில வருடங்களின் பின்னர், ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆதரவுடன் போர்குற்ற விசாரணை ஆரம்பமாகியது. அப்போது போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப் பட்டவர்களில் பெரும்பான்மையானோர் (கிறிஸ்தவ) செர்பியர்கள்.
பொஸ்னிய ஜெனரல் மிலாடிச், யூகோஸ்லேவியாவின் கடைசி ஜனாதிபதி மிலோசொவிச் எல்லோரும் போர்க்குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டனை வழங்கப் பட்டது. போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட, 400 சிப்பாய்களை சிரபெனிச்சாவுக்கு அனுப்பிய நெதர்லாந்து நாட்டில் தான் போர்க்குற்ற விசாரணைகள் நடைபெற்றன. யூகோஸ்லேவிய ஜனாதிபதி வரையிலான பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்ட வழக்கில், ஐ.நா.அமைதிப்படையை சேர்ந்த எவரும் போர்க்குற்றவாளிகளாக கருதப் படவில்லை. இருந்த போதிலும், முதலாவது விசாரணையிலேயே ஐ.நா., மற்றும் மேற்குலக நாடுகளும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரிய வந்தது. யூகோஸ்லேவிய இனப்படுகொலைகளில், போர்க்குற்றங்களில், மேற்குலக நாடுகள் வகித்த பங்கு குறித்த தகவல்கள் ஓரளவுக்கேனும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. ஆயினும் என்ன? நீங்கள் யாராவது அவர்களை குற்றவாளிகளாக பார்க்கிறீர்களா?

"பொஸ்னியாவில் நடந்த போர்க்குற்றத்திற்கும், இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கும் இடையில் என்ன தொடர்பு?" என்று சிலர் மேதாவித்தனமாக கேட்கலாம். மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, "சிறுபான்மை இனத்தை அழிக்க முயன்ற பேரினவாதத்தின் கோரத்தாண்டவம்," என்று ஒரே வரியில் பதில் சொல்லி விட்டுப் போகலாம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, இன முரண்பாடுகள் எனும் நெருப்பில் குளிர் காயும் மேலைத்தேய கூத்தாடிகள் எமது கண்களுக்கு தெரிவதில்லை. பொம்மலாட்டம் பார்க்கும் பார்வையாளரின் நிலையில் தான் எமது அரசியல் அறிவு இருக்கின்றது. யூகோஸ்லேவிய உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். அங்கே நடந்தது மதப்போர், அல்லது இனப்போர், என்று தான் ஊடகங்கள் கதை பரப்பின. "தென் ஸ்லாவிய மக்களின் சமஷ்டிக் குடியரசு", கம்யூனிச நாடாக இருந்த காலத்தில் இந்தப் பிரச்சினை எதுவும் தலைகாட்டவில்லை. மேற்கத்திய முகவரான மிலோசொவிச் ஆட்சிக்கு வந்த பின்னர் தான், மறைந்திருந்த தேசியவாதிகள் (அல்லது இனவெறியர்கள்) ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆயுதம் ஏந்தினார்கள். மிலோசொவிச் அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில், ஸ்லோவேனியா, குரோவாசியா, பொஸ்னியா ஆகிய நாடுகளை அங்கீகரித்தார். கடைசியாக கொசோவோ பிரிவினையுடன், மிலோசொவிச் தேவையற்ற ஒருவராக தூக்கியெறியப் பட்டார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ ஒரு கடும்போக்காளராக தன்னைக் காட்டிக் கொண்டார். ராஜபக்ஷ மிகத் தீவிரமான சிங்கள பேரினவாதி, அதனால் மேற்குலகம் தமிழருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் என்று, தமிழ் தேசியவாதிகள் கணக்குப் போட்டனர். ஆனால், "தான் ஆட்சிக்கு வந்தால் புலிகளை அழித்து போரை நிறுத்துவதாக," சூளுரைத்த ஒருவரே தமக்கேற்றவர் என்று, இந்தியாவும், மேற்குலகமும் கணக்குப் போட்டன. "புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும். மீறினால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்...." என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே எச்சரிக்கை விடுத்தார். மீண்டும் போர் தொடங்கினால், அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்று, இலங்கை அரசு கணித்து வைத்திருந்தது. சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வழங்கிய நேர்காணல் இங்கே குறிப்பிடத் தக்கது.
Professor G.L.Peiries said that “The US told the LTTE very clearly that she had been following developments in this country and that she had credible reports the LTTE were recruiting child soldiers and bring in arms. The US explained to the LTTE that if they broke the cease-fire, the consequences would be extreme against the backdrop of an international thrust against terrorism. This shows that we have powerful friends. It is an enormous source of strength to the government and the people." (http://www.island.lk/2002/03/15/news12.html)

இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்திருந்தது. அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க முயன்றவரை FBI கைது செய்தது. இந்தோனேசியாவிலும் ஒரு ஆயுத விநியோகஸ்தர் கைதானார். வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை அமெரிக்க செய்மதிகள் கண்காணித்தன. செய்மதிப் படங்களை பெற்றுக் கொண்ட இலங்கை கடற்படை, சில கப்பல்களை சர்வதேச கடற்பரப்பில் வைத்தே தாக்கி அழித்தது. அமெரிக்கா எதற்காக புலிகளை அழிக்க நினைக்க வேண்டும்? அதற்கான பதிலையும் தூதுவரே கூறுகின்றார். "ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டம் உலக நாடுகளால் நிராகரிக்கப் பட்டு வரும் காலத்தில், புலிகள் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் காண முனைய வேண்டும்."
(The US statement further said: “The US understands that both sides, not just the LTTE, have responsibilities under the terms of the ceasefire accord. In the current international context, however, in which terrorism is being condemned in more and more countries, the LTTE should be especially vigilant about observing the terms of the ceasefire accord. If it does not, it will increase its international isolation and do harm to the group it claims to represent, Sri Lanka’s Tamils, who earnestly want an end to the war.”)

"புலிகளின் தாக்குதல் முறைகளை அல்கைதா பின்பற்றி வருகின்றது." என்று தமிழ்ச் செல்வன் ஒரு முறை பெருமையாக தெரிவித்தார். ஏடன் துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலை குறிப்பிட்டிருக்கலாம். முரண்நகையாக, "புலிகள் அமைப்பினர் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு முன்மாதிரியாக திகழக் கூடாது." என்பது தான் அமெரிக்காவின் கவலையும். எப்போதும் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக் கொள்வது உலகின் வழமை. "இலங்கையில் ஒரு இயக்கம் முப்பதாண்டுகளாக வெற்றிகளைக் குவித்த வண்ணம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது." என்ற செய்தி பிற ஆயுதபாணி அமைப்புகளை உற்சாகப் படுத்த போதுமானது.

(தொடரும்)

Sunday, April 24, 2011

அமெரிக்கர்கள் கைவிட்ட ஹ்மொங் விடுதலைப் போராட்டம்


"உலகில் பல நாடுகளின் இன முரண்பாடுகள், ஏகாதிபத்திய பொருளாதார ஆதிக்கப் போட்டியின் வெளிப்பாடு." இந்த உண்மையை இன்றைக்கும் பலர் உணர மறுக்கின்றனர். பல மூன்றாம் உலக நாடுகளில் நடந்த, "இன விடுதலைப் போர்களை" அதற்கு உதாரணமாகக் காட்டலாம். லாவோ நாட்டில் ஹ்மொங் இன மக்கள் நடத்திய முப்பதாண்டு கால விடுதலைப் போர், ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டிய ஒன்று. அமெரிக்காவினதும், சி.ஐ.ஏ. யினதும் அளவுக்கதிகமான ஆதரவைப் பெற்ற விடுதலைப் போராட்டங்களில் அதுவும் ஒன்று. அதிலும் குறிப்பாக, அமெரிக்கர்கள் வெறுக்கும் "கம்யூனிசப் பூதத்திற்கு" எதிராக போராடியவர்கள், ஹ்மொங் மக்கள். இன்றைக்கு ஹ்மொங் சிறுபான்மை இனத்தவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை, லாவோ நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட்களின் கையில் விடப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த "ஹ்மொங் தேசியத் தலைவரையும்" கைது செய்து சிறையில் போடுமளவிற்கு அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை தலைகீழாக மாறியது. அண்மையில் கசிய விடப்பட்ட ராஜாங்க திணைக்கள அறிக்கை ஒரு உண்மையை வெளிப்படுத்தியது. "கம்யூனிச" லாவோ அரசுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. எல்லாமே பணத்துக்காகத் தான். பொருளாதாரம் முக்கியம், அமைச்சரே!

சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த, அமெரிக்க-வியட்னாம் போரின் இறுதியில், வியட்நாமிலும், லாவோசிலும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைப் பிடித்தனர். அன்றிலிருந்து லாவோஸ் நாட்டில் ஹ்மொங் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகியது. அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்காக, ஹ்மொங் போராளிகள் கம்யூனிச எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொண்டனர். ஆனால், பெரும்பான்மை லாவோ இனத்திற்கும், சிறுபான்மை ஹ்மொங் இனத்திற்கும் இடையிலான இன முரண்பாடுகளே யுத்தத்திற்கு காரணம். மலைவாழ் ஹ்மொங் மக்கள் மொழியால், கலாச்சாரத்தால் லாவோ மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வளமற்ற மலைப்பிரதேசம் என்பதாலும், அவர்களின் வாழிடங்கள் அபிவிருத்தியின்றி பின்தங்கியிருந்தன. வியட்னாம் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஹ்மொங் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் பெற்று விளங்கியது.

வியட்னாம் யுத்தம் தொடங்கிய அறுபதுகளில், சி.ஐ.ஏ. லாவோசில் ஒரு இரகசிய நகரம் கட்டியிருந்தது. (The Most Secret Place On Earth) உலக வரை படத்தில் இல்லாத அந்த இரகசிய நகரம் குறித்து, அமெரிக்க ஊடகங்களும் அறிந்திருக்கவில்லை. அன்று வட வியட்நாமில் மட்டும் கம்யூனிச ஆட்சி நடந்தது. அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த தென் வியட்னாமினுள், கம்யூனிசப் போராளிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். வியட்னாமின் அயல்நாடான லாவோஸ் ஊடாகத் தான் அந்த ஊடுருவல் இடம்பெற்றது. லாவோசில் ஹ்மொங் மக்களின் பிரதேசம் வட வியட்னாம் எல்லையோரம் அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அங்கே தான் சி.ஐ.ஏ. இரகசிய நகரம் கட்டியது. அமெரிக்கர்களைத் தவிர, அமெரிக்காவுக்கு விசுவாசமான ஹ்மொங் மக்கள் மட்டுமே அந்த நகரத்தில் வாழ்ந்தனர். வியட்னாம் கம்யூனிஸ்ட் போராளிகளை எதிர்த்துப் போராடுவதற்காக 60 % ஹ்மொங் ஆண்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டது. ஜெனரல் வங் பாவோ தலைமையிலான ஹ்மொங் கெரில்லா படையணி, வியட்நாமிய கம்யூனிஸ்ட் போராளிகளை விரட்டியடிக்க பயன்படுத்தப் பட்டது. அமெரிக்கா ஹ்மொங் போராளிகளுக்கு தேவையான ஆயுதங்கள், நிதி வழங்கியது மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களையும் கவனித்துக் கொண்டது. வியட்னாம் யுத்தம் முடிந்த அதே நேரத்தில், லாவோசிலும் Pathet Lao என்ற கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. அமெரிக்கர்கள் வியட்னாம், லாவோசை விட்டு விலகி விட்டாலும், தாய்லாந்து ஊடாக ஹ்மொங் போராளிகளுக்கு உதவினார்கள்.

லாவோ சுதந்திரத்தின் பின்னர், வங் பாவோ தலைமையிலான ஹ்மொங் போராளிகள் லாவோ பேரினவாதத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். அமெரிக்காவிலும் சில கிறிஸ்தவ நிறுவனங்கள் லாவோ மக்களுக்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். சி.ஐ.ஏ. குறிப்பிட்ட காலம், ஹ்மொங் போராளிகளுக்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கிய போதிலும், பின்னர் நிறுத்தி விட்டது. தற்போது "கம்யூனிசம் இறந்து விட்டதால்", கடந்த இரு தசாப்தங்களாக ஹ்மொங் போராளிகளுக்கு எந்த வெளி உதவியும் கிடைக்கவில்லை. கரடுமுரடான மலைகளில், வனாந்தரங்களில் பதுங்கியிருந்த ஹ்மொங் கெரில்லாக் குழுக்கள், லாவோ படையினரைத் தவிர வேறு எந்த வெளியாரையும் காணவில்லை. வியட்னாம் போர்க் கால ஆயுதங்களைக் கொண்டு லாவோ இராணுவத்தை எதிர்த்து போராட முடியவில்லை. உணவின்றி பட்டினியால் வாடிய ஹ்மொங் போராளிகள், இறுதியில் லாவோ படையினரிடம் சரணடைந்தனர். இதற்கிடையே அயல்நாடான தாய்லாந்தில் தஞ்சம் கோரிய ஆயிரக்ககணக்கான ஹ்மொங் அகதிகளை, அந்த நாடு திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஆயிரக்கணக்கான ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். ஹ்மொங் கெரில்லா இராணுவத்தின் தலைவர் வங் பாவோ கூட அமெரிக்காவில் தான், தனது இறுதிக் காலத்தை கழித்தார். அமெரிக்காவில் வாழும் முதலாம் தலைமுறையை சேர்ந்த ஹ்மொங் அகதிகள் மட்டுமே இன்றும் கூட ஹ்மொங் தேசிய விடுதலை குறித்து பேசி வருகின்றனர். தாயகத்துடன் தொடர்பற்ற இரண்டாம் தலைமுறையினருக்கு அது குறித்து அதிக அக்கறை இல்லை. 2007 ம் ஆண்டு, வங் பாவோ அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருந்து கொண்டு லாவோ அரசைக் கவிழ்க்க சூழ்ச்சி செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. இவ்வருடம் மாரடைப்பால் மரணமடைந்த வங் பாவோ கைதுக்கு, அமெரிக்க - லாவோ இராஜ தந்திர நகர்வே காரணம். கசிய விடப்பட்ட விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று அதனை உறுதி செய்துள்ளது. லாவோ அரசு சோஷலிச பொருளாதாரத்தை கைவிட்டு, முதலாளித்துவத்தை தழுவிக் கொண்டுள்ளது. அமெரிக்காவுடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பெரு மூலதனத்துடன் சேர விரும்பும் லாவோ ஆட்சியாளர்களின் முடிவை அமெரிக்காவும் வரவேற்கின்றது. "லாவோ அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஊழலில் திளைப்பதாகவும், மாதம் 75 டாலர் சம்பளத்தில், ஆடம்பர பங்களா, கார் என்று பணக்கார வாழ்க்கை வாழ்வதாகவும்..." அமெரிக்க அரசு குறை கூறியிருந்தது. "ஆயினும் கம்யூனிஸ்ட்களை விட, ஊழல் பெருச்சாளிகள் சிறந்தவர்கள்!" என்ற முதலாளித்துவ தத்துவமே அமெரிக்காவின் நண்பர்களை தீர்மானிக்கின்றது.மேலதிக விபரங்களுக்கு:

WikiLeaks cables bare secrets of U.S.-Laotian relations
Settled after 35 years, Hmong must decide: What's next?
லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

Tuesday, April 19, 2011

ஈழப் பிரகடனமும், இந்தியாவின் குத்துக் கரணமும்


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]
(பகுதி - 17)


ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், இந்தியா பொதுத் தேர்தல்களும் தான் விரும்பிய படியே நடக்க வேண்டுமென எதிர்பார்த்தது. தமிழ் ஆயுதக் குழுக்களை விட, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற மிதவாத தலைமையே தனக்கு என்றென்றும் விசுவாசமாக இருக்கும் என்று இந்தியா கருதியது. அதனால், ஈபிஆர்எல்எப் போன்ற புதிய விசுவாசிகளை, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பழைய விசுவாசிகளின் சின்னத்தின் கீழ் போட்டியிடுமாறு வற்புறுத்தியது. அதற்கு மாற்றாக சுயேச்சையாக தேர்தலில் நின்ற ஈரோஸ் அமைப்பினரை, புலிகள் ஆதரித்தனர். பொதுவாகவே ஈரோஸ் அமைப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இருந்ததால், தேர்தலில் அதிகப் படியான வாக்குகளில் வெற்றி பெற்றனர். வட-கிழக்கு மாகாணங்களில் அனைத்து தொகுதிகளிலும் வென்ற ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தை பகிஷ்கரித்தார்கள். பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் ஒருவர், "பிரிவினைக்கு எதிராக" சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும். ஈரோஸ் உறுப்பினர்கள் அத்தகைய சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்ததால், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள். மட்டக்களப்பை சேர்ந்த ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கோரினார். சில வருடங்களின் பின்னர் ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்த நான், பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பொழுதே அவரின் அறிமுகம் கிடைத்தது.

கொழும்புக்கும், யாழ் நகருக்கும் இடையிலான போக்குவரத்து சீராக நடந்து கொண்டிருந்தது. இந்திய இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்கு திரும்ப போராடிக் கொண்டிருந்தது. மக்கள் வழமை போல அன்றாட அலுவல்களில் ஈடுபட்டனர். இது தான் சந்தர்ப்பம் என்று, இந்தியா மாகாண சபை நிர்வாகத்தை கொண்டு வர விரும்பியது. அதற்கான தேர்தல் தினமும் அறிவிக்கப் பட்டது. யாழ் கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. தலைமறைவாக இயங்கிய புலிகள் விடுத்த அச்சுறுத்தல் காரணமாக போட்டியிட முன் வந்த கட்சிகளும் ஒதுங்கிக் கொண்டன. இறுதியாக ஈபிஆர்எல்எப் வேட்பாளர்கள் மட்டும் இந்திய இராணுவ பாதுகாப்புடன் மனுப் போட்டனர். கிழக்கு மாகாணத்தில் வேறு சில கட்சிகளும் போட்டிக்கு வந்ததால், அங்கே மட்டும் தேர்தல் நடத்தப் பட்டது. வட மாகாண வேட்பாளர்கள் போட்டியின்றி தெரிவானார்கள். யாழ்ப்பாணத்தில் தெரிவான மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் இந்திய இராணுவ பாதுகாப்பில் இருந்தனர். ஊரில் இருந்த அவர்களின் குடும்பங்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று புலிகள் உத்தரவு போட்டனர்.இணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணங்களின் தலைநகராக கருதப்பட்ட திருகோணமலையில் மாகாண சபை கூடியது. மாகாண சபை வந்த பின்னர், யாழ்ப்பாணம் எந்த மாற்றத்தையும் காணவில்லை. மாகாண சபையின் செலவுகளுக்கும், அபிவிருத்தி திட்டங்களுக்கும் இலங்கை அரசு நிதி ஒதுக்கி இருந்தது. இவை சரியான முறையில் பயன்படுத்தப் பட்டனவா?, என்று யாருக்கும் தெரியவில்லை. மாகாண சபை உறுப்பினர்கள், கொழும்புக்கும், திருகோணமலைக்கும் இடையில் அரசு வழங்கிய 'பஜெரோ' ஜீப்களில் ஓடித் திரிந்தனர். "நாங்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறோம், என்று தெரிய வேண்டுமானால், திருகோணமலைக்கு வந்து பாருங்கள்..." என்றார் பஜெரோவில் கொழும்பு வந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவர். தங்களது சாதனைகளையும் பட்டியல் இட்டார். யாழ்ப்பாணத்தில் தான் சிறிது குழப்பம்...திருகோணமலை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது..." என்றார். அவரது இடுப்பில் செருகி வைத்திருந்த பிஸ்டல், "அமைதியான திருகோணமலை" பற்றிய கூற்றை மறுப்பது போலத் தோன்றியது.

இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் மாகாண சபை ஒரு நாள் கூட நிலைத்து நிற்குமா, என தமிழ் மக்கள் சந்தேகித்தனர். ஜேவிபியை அடக்கி விட்ட பெருமிதத்தில் இருந்த பிரேமதாச அரசு, இந்தியப் படைகளை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று இந்திய இராணுவம் படிப்படியாக வாபஸ் வாங்கப் பட்டது. மாகாண சபையின் முதலமைச்சரான வரதராஜப் பெருமாள், "ஈழம்" பிரகடனம் செய்தார். எமக்குத் தெரிந்த வரையில், ஈழ மண்ணில் இடம்பெற்ற முதலாவது ஈழப் பிரகடனம் அது தான். குறிப்பிட்ட சில காலம், வட-கிழக்கு மாகாணம் ஈபிஆர்எல்ப் ஆட்சியின் கீழ் இருந்தது எனலாம். "தமிழ் தேசிய இராணுவம்" (TNA) என்ற பெயரில் புதிய ஆயுதக் குழு தோன்றியது. இந்திய இராணுவம் வெளியேறிய இடங்கள், தமிழ் தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. "புதிய தமிழ் இராணுவம்" ஈபிஆர்எல்ப் பின் தலைமையின் கீழ் செயற்பட்டது. தமிழ் இராணுவத்திற்கு ஆட்களை சேர்த்த முறை கொடூரமாக இருந்தது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தவர்களை, சோதனைச் சாவடிகளில் மறித்து சோதிப்பது வழக்கம். அவ்வாறு சோதனை செய்யும் பொழுது, குறிப்பிட்ட பராயத்தை சேர்ந்த வாலிபர்களை தடுத்து வைத்தனர். ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்எப் உறுப்பினர்கள், தடுத்து வைத்த இளைஞர்களை தம்முடன் கூட்டிச் சென்றனர். முதலில் அவர்களுக்கு மொட்டை அடிக்கப்படும். தப்பி ஓடினால் பிடிப்பதற்காக அந்த ஏற்பாடு. அதன் பின்னர் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கி, தம்முடன் சேர்த்துக் கொண்டனர். சோதனைச் சாவடியில் நின்ற இந்திய இராணுவத்தின் முன்னிலையில் தான் இவ்வளவும் நடந்தது. தமிழ் இளைஞர்கள் கட்டாய இராணுவப் பயிற்சிக்காக பிடித்துச் செல்லப்படும் செய்தி காட்டுத்தீயாக பரவியது. பல இளைஞர்கள் வெளியில் செல்ல அஞ்சினார்கள். பேரூந்து வண்டிகளில் தனியாக பயணம் செய்த இளைஞர்களை தான் பிடித்தார்கள். திருமணமானவர்களை விட்டார்கள். சில இளம் பெண்கள், தடுத்து வைக்கப்படும் இனந்தெரியாத இளைஞர்களுக்கு உதவ முன் வந்தார்கள். தனது கணவன் என்று பொய் கூறி விடுவித்தார்கள். இப்படியே பலரும் செய்ததால் சந்தேகம் எழுந்தது. அதனால் உண்மையிலேயே கணவன் என்றால் வாயில் முத்தமிடச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

தமிழ் தேசிய இராணுவத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பை தோற்றுவித்தது. ஈபிஆர்எல்எப், ஈஎன்டிஎல்ப் ஆகியன முன்னரை விட அதிகமாக மக்களின் வெறுப்பை சம்பாதித்தன. அன்று சாமானியர்கள் போரில் எந்தப் பக்கமும் சார விரும்பவில்லை. அதை விட, கட்டாயமாக பிடித்துச் சென்ற இளைஞர்களின் பரிதாப நிலை, அனைத்து தமிழ் மக்களையும் உளவியல் ரீதியாக பாதித்தது. அந்த இளைஞர்கள் சுயவிருப்பின்றி கட்டாயமாக பிடித்துச் செல்லப் பட்டவர்கள். ஒரு தடவை அகப்பட்டுக் கொண்டால் தப்பிச் செல்வது முடியாத காரியம். தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப் பட்ட கடுமையான தண்டனை மட்டும் காரணமல்ல, வெளியில் காத்திருந்த புலிகளும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கவில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில், ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்ப், தமிழ் தேசிய இராணுவம் எல்லாமே ஒன்று தான்.

இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், வட-கிழக்கு மாகாணம் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டுமென புலிகள் விரும்பினார்கள். இலங்கை அரசும், இந்திய அரசும் கூட அவ்வாறு விரும்பியிருக்கலாம். ஈபிஆர்எல்ப் கேட்டுக் கொண்டும், இந்தியா தமிழ் தேசிய இராணுவத்திற்கு மேலதிக ஆயுத உதவி செய்யவில்லை. அப்படியே இந்தியா உதவியிருந்தாலும், வரதராஜப் பெருமாளின் ஈழமும், தமிழ் தேசிய இராணுவமும் நிலைத்து நின்றிருக்கும் என்று கூற முடியாது. புலிகளில் இருந்தளவு பயிற்சி பெற்ற, அர்ப்பணிப்பு உணர்வுள்ள வீரர்கள் தமிழ் தேசிய இராணுவத்தில் இருக்கவில்லை. ஈழத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவம் ஒரு நாள் கூட, இலங்கை இராணுவத்தை எதிர்த்து சண்டையிடவில்லை. கிழக்கு மாகாணத்தில், தமிழ்-முஸ்லிம் கலவரத்தில் தமிழ் தேசிய இராணுவத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பு இருந்ததாக, சில முஸ்லிம் நண்பர்கள் தெரிவித்தனர். தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்ட தமிழ் இராணுவத்தின் பிரதான எதிரி புலிகளாக இருந்தனர். புலிகள் தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அவர்கள் சரணடைந்து விட்டனர். வட-கிழக்கு மாகாணம் முழுவதும், தமிழ் தேசிய இராணுவத்தை சேர்ந்தவர்கள் புலிகளினால் கொல்லப் பட்டனர்.

வியட்நாமை விட்டு அமெரிக்க இராணுவம் வெளியேறிய பொழுது, அவர்களுடன் ஒத்துழைத்த தென் வியட்நாமிய ஆதரவாளர்களும் வெளியேறினார்கள். அதே போன்று, ஈழத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறியதும் நடந்தது. ஈபிஆர்எல்ப், ஈஎன்டிஎல்ப் உறுப்பினர்களும், அவர்களது உறவினர்களும் படகுகளில் தப்பியோடினார்கள். திருகோணமலைக்கு அண்மையான கடலில், புலிகள் சில படகுகளை வழிமறித்து சுட்டதில் பலர் பலியானார்கள். எஞ்சியோர் இந்தியா சென்று அங்கேயே தங்கி விட்டார்கள். தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரிசாவில் சில ஆயிரம் குடும்பங்கள் இந்திய மத்திய அரசினால் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இவர்களது எதிர்காலம் குறித்து எந்த தெளிவும் இல்லை. அரசியல் நோக்கங்கள் காலத்துக்கு காலம் மாறுபட்டு வந்தாலும், ஈழம் இந்தியாவின் சூழ்நிலைக் கைதியாக தொடரும். அதனால் இந்தியாவுக்கு விசுவாசமான குழு ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருப்பது அவசியமானது.

உலகின் நான்காவது பெரிய இராணுவத்துடன் யுத்தம் செய்து விரட்டியடித்தோம் என்று புலிகள் கூறினார்கள். ஈழப் பிரச்சினையில் அரை குறைத் தீர்வைத் திணித்து, இந்திய இராணுவத்தை அனுப்பிய தவறை இந்தியா உணர்ந்து விட்டதாக மக்கள் நினைத்தார்கள். ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில், அதன் வெளிவிவகார கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டனர். இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரையில், ஈழத்தமிழரை மையமாக வைத்தே இந்தியாவின் கொள்கை வகுக்கப் பட்டது. தமிழ்நாட்டுடன் பாரம்பரிய தொடர்புகளை பேணிய ஈழ மேட்டுக்குடி, தொன்று தொட்டு இந்திய அரசுக்கு விசுவாசமாக இருந்து வந்துள்ளது. தென்னிலங்கையில் குடியேறிய இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்த முதலாளிகள், இலங்கையில் வாழ்ந்தாலும் இந்தியர்களாகவே இருந்தனர். இவர்களை விட, சிங்களவர்களை இந்தியாவுக்கு சார்பாக வென்றெடுப்பதன் அவசியத்தை இந்தியா பின்னர் உணர்ந்து கொண்டது.

ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த இரண்டு, மூன்று வருடங்களில் கசப்பான பாடங்களை கற்றுக் கொண்டது. அடுத்து வந்த காலங்களில் இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கை, எப்போதும் இலங்கை அரசை திருப்திப் படுத்துவதாக மாறி விட்டது. இதனால் இந்தியாவுக்கு அதிக ஆதாயம் கிடைத்தது. சிங்களவர்கள் இந்திப் பட இரசிகர்களானார்கள். இலங்கையில் இந்திப் படத்தை திரையிட்டு வந்த இலாபம், தமிழ் படத்தினால் வரும் வருவாயை விட அதிகம். ஈழத்தமிழர்கள் மட்டுமே விரும்பியணிந்த தென்னிந்திய கலாச்சார உடைகள், சிங்களவர்கள் மத்தியில் பிரபலமாகியது. தாராள பொருளாதாரக் கொள்கை, இந்திய நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கியது. ஒரு காலத்தில் ஏகபோக உரிமை வைத்திருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பெரும்பாலான பங்குகள், இந்திய நிறுவனத்திற்கு விற்கப் பட்டன. கடந்த இருபதாண்டுகளில் இடம்பெற்ற பொருளாதார மாற்றங்கள், இந்தியாவின் அரசியல் போக்கையும் மாற்றியமைத்தன.

(முற்றும்)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
16.தென்னிலங்கையில் கொலையுதிர் காலம்
15.சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்
14. இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Monday, April 18, 2011

தென்னிலங்கையில் கொலையுதிர் காலம்


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 16)


"நாடே சுடுகாடாகியது!" 1988, 1989 ஆண்டுகளில் தென்னிலங்கையில் வாழும் பாக்கியம் பெற்றவர்கள், அதனை நேரில் அனுபவித்திருப்பார்கள். பெருந்தெருக்களில் வாகனங்களில் பயணம் செய்வோர், எங்காவது ஒரு இடத்தில், பிணத்தை எரித்து எஞ்சிய சாம்பலை காணாமல் போக முடியாது. நாட்டில் சுடலைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டது போலும். அதனால் தெருக்கள் எல்லாம் தற்காலிக சுடலைகளாகிக் கொண்டிருந்தன.

ஜேவிபி இயக்க உறுப்பினர்கள், அல்லது ஆதரவாளர்கள் ஆகியோர், பாதுகாப்புப் படையினரால் வேள்வித்தீயில் பலி கொடுக்கப்பட்டனர். வேள்விக்கடாவின் கழுத்தில் 'டயர்' போட்டு எரிப்பது, அரச கொலைப் படைகளுக்கு பிடித்தமான விளையாட்டு. ஜேவிபியினர் அழிந்த பின்னரும், அந்தக் கதைகள் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இராணுவ அதிகாரி ஒருவர்; "கழுத்தில் டயர் மாலை போடுவோம், ஜாக்கிரதை." என்று பயமுறுத்தினார்.

கொழும்புக்கு அருகில் ஓடும் களனி ஆற்றில், மக்கள் இறங்கிக் குளிக்க அஞ்சினார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. ஜேவிபி சந்தேகநபர்களாக பிடிக்கப்படும் பெண்களை சித்திரவதை செய்து, அவர்களின் உயிரற்ற நிர்வாண உடல்களை நகர மத்தியில் போடுவார்கள். அன்றைய நாட்களில், இவற்றைக் காண நேரும் பொது மக்கள் பீதியுற்றனர்.

சில வருடங்களுக்குப் பின்னர், அந்த அட்டூழியங்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப் பட்டன. யுஎன்பி அரசை தேர்தலில் தோற்கடிப்பதற்காக, சந்திரிகாவின் ஐக்கிய முன்னணி கட்சியினர் அந்தக் காட்சிகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டினார்கள். (மலினமான தேர்தல் பிரச்சார உத்தியை பெண்கள் அமைப்புகள் கண்டித்திருந்தன.) அது போன்றே சூரியகந்த எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியும், ஐக்கிய முன்னணி வெற்றியை உறுதி செய்திருந்தது.

சூரிய கந்த புதைகுழியில் கொன்று புதைக்கப் பட்டவர்கள், விடலைப் பருவத்து பாடசாலை மாணவர்கள். ஜேவிபி ஆதரவுத் தளமாக திகழ்ந்த பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் என்பதால் அந்த கொடூரமான தண்டனை. பல வருடங்களாக அவர்கள் "காணாமல் போனோர்" பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தனர். தென்னிலங்கையில் அந்த இரண்டு வருடங்களில் மட்டும் குறைந்தது இருபதாயிரம் பேராவது காணாமல் போயுள்ளனர். அவர்களும் எங்காவது இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம். இலங்கையின் வட பகுதியிலும் இளைஞர்கள் காணாமல் போவதும், மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் படுவதும் நடந்துள்ளன. ஆரம்பத்தில் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தனித்தனியாக இயங்கி வந்த காணாமல் போனோர் அமைப்புகள், தற்போது ஐக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றாக செயற்படுகின்றன. "காணாமல் போவதற்கு எதிரான சர்வதேச கமிட்டி" யின் ஆதரவும் கிட்டியுள்ளது.

அன்றைய காலம், காணாமல் போகச் செய்வதிலும், கொலை செய்வதிலும் தேர்ச்சி பெற்ற கொலைப் படை ஒன்று இயங்கியது. அது தன்னை "பச்சைப் புலிகள்" என்று அழைத்துக் கொண்டது. அன்றைய ஆளும் கட்சியான யுன்பியின் வர்ணம் பச்சை என்பது குறிப்பிடத் தக்கது. அரச பாதுகாப்புப் படைகளை சேர்ந்தவர்களே, "பச்சைப் புலிகள்" என்ற பெயரில் அவதாரம் எடுத்திருந்தனர். அது ஒரு சட்டத்திற்கு புறம்பான, ஜனாதிபதியையும், பாதுகாப்பு அமைச்சரையும் தவிர வேறு யாருக்கும் பதில் கூற கடமைப் பட்டிராத அமைப்பு. சீருடை அணியாமல் சிவில் உடையுடன், இலக்கத் தகடு இல்லாத வாகனங்களில் திரிவார்கள். அவர்கள் யாரைக் கடத்திச் சென்றாலும், அல்லது கொலை செய்தாலும், பழி முழுவதும் "இனந்தெரியாதோர்" தலையில் விழுந்தது. அரச பாதுகாப்புப் படைகள் பொறுப்பில் இருந்து தப்பிக் கொண்டன.

ஜேவிபி ஒன்றும் புனிதமான இயக்கமல்ல. போலீஸ்காரர்களை இலக்கு வைத்து தாக்கி அழித்ததை விட, கொல்லப்பட்ட "துரோகிகளே" அதிகம். ஜேவிபி அகராதி படி, யாரும் துரோகி ஆகலாம். ஆளும் கட்சியான யுஎன்பி உறுப்பினர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்த ஆதரவாளர்கள், போலிசுக்கு காட்டிக் கொடுப்பவர்கள், மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரும் துரோகிகளாக அடையாளம் காணப்பட்டனர். ஜேவிபி ஆதரவாளர்கள், துரோகிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை நியாயம் என்று வாதாடினார்கள்.

இயக்கத்தை விட்டு பிரிந்து சென்றவர்களும் துரோகிகளாக கருதப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதனால் ஜேவிபியுடன் முரண்பட்ட குழுவொன்று, அரசுடன் கூட்டுச் சேர்ந்தது. ஜேவிபி உறுப்பினர்களையும், மறைவிடங்களையும், போலிசுக்கு காட்டிக் கொடுத்தார்கள். "ஜேவிபி தான் எமது முதலாவது எதிரி. அரசு இரண்டாவது எதிரி. ஜேவிபி பாசிசத்தை அழிப்பது அவசரக் கடமை." என்று தமது செயலுக்கு நியாயம் கற்பித்தனர். ஜேவிபியில் இருந்த பிரிந்த எல்லோரும் அரசுடன் கூட்டுச் சேரவில்லை. சில ஆளுமையுள்ள நபர்கள் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டனர். இலங்கை அரசையும், ஜேவிபியையும் விமர்சித்து எழுதி வந்தனர்.

ஜேவிபி பிரகடனம் செய்த "துரோகிகள் பட்டியல்" நீண்டு கொண்டே சென்றது, அதன் அஸ்தமனத்திற்கு காரணமாயிற்று. அரசை விட ஜேவிபி தான், நாடளாவிய கொலைக் கலாச்சாரத்தால் அதிகம் பாதிக்கப் பட்டது. இறுதியில் ஜேவிபி உறுப்பினர்களும், அவர்களின் உறவினர்களையும் தவிர மற்றவர்களின் ஆதரவை இழக்க வேண்டியேற்பட்டது. குறிப்பாக இராணுவத்தை பகைத்துக் கொண்டமை, மனிதப் பேரழிவுக்கான பாதையை திறந்து விட்டது. சிறிலங்கா அரசு, பாதுகாப்புப் படைகள் முழுவதையும் ஜேவிபியுடன் போரிட பயன்படுத்தியது. இதனால், முன்னர் இராணுவத்தில் சேர்ந்திருந்த ஜேவிபி உறுப்பினர்களும் எதிரிகளானார்கள்.

"சேவையில் உள்ள ஜேவிபி உறுப்பினர்கள், உடனடியாக இராணுவத்தை விட்டு விலகி எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்," என்று ஜேவிபி அறிவித்ததாக அன்று கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. "இராணுவத்தை விட்டு விலகாதவர்கள், எதிரிகளாக கருதப் படுவார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப் படுவார்கள்." இவ்வாறு ஜேவிபி அறிவித்திருந்தது. அப்படியான வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள், "தேசப்பக்த விடுதலை முன்னணி" பெயரில் ஒட்டப் பட்டிருந்தன.

உண்மையிலேயே பல இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப் பட்டனர். அதற்கு பழி வாங்கும் முகமாக, ஜேவிபி யை சேர்ந்தோரின் குடும்பத்தவர்கள் கொல்லப் பட்டனர். அரச படைகளால் படுகொலைக்கு ஆளாவோர் ஜேவிபி உறுப்பினர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. துரதிர்ஷ்டவசமாக ஜேவிபி காரர்களை நண்பர்களாக கொண்டிருந்தவர்களும் கொல்லப்பட்டனர். சிலநேரம் தனது நண்பன் ஒரு ஜேவிபி உறுப்பினர் என்று அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் நடந்த கொடூரங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. அப்படியான சம்பவங்கள் நடந்ததாக நிரூபிக்கவும் முடியாது.

எனக்குத் தெரிந்த கதை ஒன்று இரத்தத்தை உறைய வைத்தது. தமது பிள்ளை காணாமல் போனதால் கவலையுடன் தேடிக் களைத்த குடும்பத்தினரிடம், ஒரு குழு ஆயுதபாணி இளைஞர்கள் தொடர்பு கொண்டனர். காணாமல்போன நபர் தம்மிடம் பத்திரமாக இருப்பதாகவும், கூட்டி வருவதாகவும் தெரிவித்தனர். அதனை கொண்டாடுவதற்காக இறைச்சி கொண்டு வந்து சமைக்க கொடுத்தனர். எல்லோரும் அமர்ந்து விருந்து சாப்பிட்ட முடிந்த பின்னர், அந்த அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர். "நீங்கள் இப்போது சாப்பிட்டது உங்கள் மகனது இறைச்சி!" அந்தக் கதை வதந்தியாகவும் இருக்கலாம். ஆனால் மக்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்தனர் என்பதற்கு வேறு உதாரணம் தேவையில்லை.

ஜேவிபி, "இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்யப் போவதாக" அறிவித்தது, அரசின் சூழ்ச்சி என்று சிலர் கூறுகிறார்கள். எது உண்மை, எது பொய் என்பது தெரியாமலே போகலாம். ஜேவிபியின் தலைவர்கள், உறுப்பினர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். மேலும் ஜேவிபியுடன் தொடர்புடைய குடும்பங்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் என்று பல நிராயுதபாணிகளும் கொல்லப்பட்டனர். இறுதிப் போரில் கொல்லப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எழுபதாயிரமாக இருக்கலாம். ஜேவிபி பிற்போக்குவாத தலைமையின் தவறுகள் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதை மறுக்க முடியாது. அதே நேரம், இடது-தேசியவாத எழுச்சி கூட தனது நலன்களுக்கு விரோதமானது என்று சர்வதேச சமூகம் கருதியது. உழைக்கும் மக்களின் மனக்குறைகளை கணக்கில் எடுக்காததால், மக்கள் மீண்டும் மீண்டும் பிற்போக்கு சக்திகளையே நாடிச் செல்கின்றனர்.

யுஎன்பி ஆட்சியில் நடந்த படுகொலைகளுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும், அடுத்து வந்த பொதுத் தேர்தல்களில் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்ததால் யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. யுஎன்பி அரசின் கொலைக் குழுக்கள் செய்த படுகொலைகளை பிரச்சாரம் செய்து, ஆட்சியைப் பிடித்த ஐக்கிய முன்னணி அரசு, எந்த விசாரணையும் செய்யவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், பாராளுமன்ற பாதைக்கு திரும்பிய மிதவாத ஜேவிபி கூட எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. தேர்தலில் கட்சிகள் மாறினாலும், அரசு இயந்திரம் ஒன்று தான். அரசுக்கு எதிராக கிளம்பும் சக்திகள், சிறுபான்மை இனமாக இருந்தாலும், சொந்த இனமாக இருந்தாலும், ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டு வந்துள்ளது. இதிலிருந்து பாடம் படிக்காதவர்கள், வரலாற்றை மறுபடியும் உற்பத்தி செய்கின்றனர்.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
15.சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்
14. இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Saturday, April 16, 2011

சிங்கள- தலித் ஜனாதிபதியின் திகில் ராஜாங்கம்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 15)

இன்றைக்கும், ஒரு தலித் இந்தியாவின் பிரதமராக வருவதை நினைத்துப் பார்க்க முடியாது. இந்தியா மட்டுமல்ல, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளின் ஆளும் வர்க்கம் எப்போதும் உயர்சாதியினராகவே இருந்து வந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் சர்வ வல்லமை படைத்த ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆதிக்க சாதியினருக்கு சலவைத் தொழில் செய்து வந்த சாதியை சேர்ந்த பிரேமதாச, ஆளும் கட்சியான யு.என்.பி.யில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தார். மேட்டுக்குடியை சேர்ந்த வெள்ளாள உயர்சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்த கட்சிக்குள், பிரேமதாசவின் தெரிவு பலரை ஆச்சரியப்பட வைத்தது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கொழும்பு மாநகரின் சேரிகளில் வாழ்ந்த,உதிரிப் பாட்டாளி வர்க்க, தலித் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு. கொழும்பு நகரை கலக்கிக் மொண்டிருந்த தாதாக்கள், ரவுடிகள், பொறுக்கிகள் எல்லோரும் பிரேமதாசவின் சொல்லுக்கு கட்டுப்பட்டனர். யுஎன்பி கட்சியினுள்ளேயே பிற அரசியல் பிரமுகர்கள் கூட, ரவுடிகளின் பின்புலத்தைக் கண்டு அஞ்சியிருந்தனர். கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கு முன்னர், பிரேமதாசவின் தமிழர் விரோத இனவெறிப் பேச்சுகள் பெருமளவு சிங்கள மக்களை கவர்ந்துள்ளன. (ஜனாதிபதியான பிறகு முந்திய உரைகளுக்கு சம்பந்தமற்ற மனிதராக காட்டிக் கொண்டார்.)

இவற்றை விட, திரை மறைவில் செயற்பட்ட அதிகார வர்க்கம், பிரேமதாச என்ற இரும்பு மனிதர் ஆட்சிக்கு வருவதை விரும்பியிருக்கலாம். முன்னைய ஜனாதிபதி ஜெயவர்த்தனேயின் இறுதி முடிவு, பிரேமதாசவுக்கு முடி சூட்டுவதாக அமைந்திருந்தது. அவருக்கு அடுத்ததாக செல்வாக்குப் பெற்றிருந்த, ஒக்ஸ்போர்ட் பட்டதாரி லலித் அத்துலத்முதலி போன்றோர் ஓரம் கட்டப்பட்டனர். இதற்குள் பல இராஜதந்திர நகர்வுகள், காய் நகர்த்தல்கள், சூழ்ச்சிகள் எல்லாம் அடங்கியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் முழு மனதுடன் கையெழுத்திட்டிருக்க வாய்ப்பில்லை. அந்த நேரம் இந்திய மேலாண்மைக்கு கட்டுப்பட வேண்டியிருந்தது. தீவிர இந்திய எதிர்ப்பாளரான பிரேமதாச தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் எடுக்கும் அன்றே, இந்திய படைகளை வெளியேற்றுவதாக அறிவித்தார். இந்தியா ஜேவிபி குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பிரேமதாசவின் தெரிவை கண்டு அஞ்சியது. ஏனெனில் இலங்கை ஜனாதிபதி விரும்பாவிட்டால், இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எழுதப் பட்டிருந்தது.

ஜேவிபி உண்மையிலேயே இந்திய இராணுவத்தை வெளியேற்ற விரும்பியதா? என்பது கேள்விக்குறி தான். ஜேவிபி இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததே தவிர, நடைமுறையில் அவர்களின் இலக்கு இலங்கை அரசாகவே இருந்தது. வடக்கு-கிழக்கில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருப்பதை, ஜேவிபி தனக்கு சாதகமான நிலவரமாக கருதியிருக்கலாம். ஜேவிபியின் தோற்றமான, 1971 கிளர்ச்சிக் காலகட்டத்தில் "இலங்கையை விழுங்கத் துடிக்கும் இந்திய ஏகாதிபத்தியம்" குறித்து மக்கள் மத்தியில் பரப்புரை செய்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தமும், இந்திய இராணுவத்தின் வருகையும், அவர்களது தீர்க்கதரிசனத்தை மெய்ப்பித்திருந்தது. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் ஜேவிபிக்கு ஆதரவு அதிகரித்தது. அந்த ஆதரவுத் தளத்தை தக்க வைப்பது முக்கியம் என்று ஜேவிபி கருதியிருக்கலாம். மேலும் இந்திய தூதுவராலயம் மீது குண்டு வீசியதாகவோ, ஒரு இந்திய படைவீரனை கொன்றதாகவோ, எந்தத் தகவலும் இல்லை. இந்திய பொருட்கள் மீதான பகிஷ்கரிப்பு போராட்டத்தில் கூட, இலங்கை வியாபாரிகள் தான் பாதிக்கப்பட்டனர். "பம்பாய் வெங்காயம்" இறக்குமதி செய்த காரணத்திற்காக எல்லாம் இலங்கை வியாபாரிகளே கொலை செய்யப்பட்டனர்.

இந்திய இராணுவத்தை வெளியேற்றும் பொருட்டு, ஜேவிபிக்கு ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்ற யோசனையை, ரவி ஜெயவர்த்தனே முன்வைத்திருந்தார். சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கியவரும், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வருமான ரவி ஜெயவர்த்தனே, அரசில் செல்வாக்கு மிக்க நபர். இருப்பினும் அந்த யோசனை கைவிடப் பட்டதற்கு, பல காரணங்கள் இருக்கலாம். உண்மையில் ஜேவிபி இலங்கை அரசு அதிகாரத்தை கைப்பற்ற விரும்புகிறது, என்று அரசாங்கத்தில் பலர் சரியாகவே கணித்திருந்தனர். ஜேவிபி அழித்தொழிக்கப் பட வேண்டிய சக்தி என்று அப்போதே தீர்மானித்திருக்கலாம். பிற்காலத்தில், இந்திய இராணுவத்தை வெளியேற்றும் பணியை புலிகளும், பிரேமதாசவும் சேர்ந்து செய்தனர். பிரேமதாச அரசு புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய விபரங்களை, பின்னர் நடந்த விசாரணை ஒன்றில், ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ தெரிவித்திருந்தார். இராணுவ நீதிமன்ற விசாரணை நடந்து சில மாதங்களுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தை அண்மித்த தீவுப் பகுதியொன்றில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் கொப்பேகடுவ கொல்லப்பட்டார்.

1988 ம் ஆண்டு, பிரேமதாச ஜனாதிபதியான போதிலும், வாக்களித்த படி இந்திய இராணுவத்தை வெளியேறச் சொல்லவில்லை. அதற்கு முன்னர், உள்நாட்டில் கணக்குத் தீர்க்க வேண்டிய விஷயங்கள் இருந்தன. வடக்கு-கிழக்கில் இருந்து சிறிலங்கா இராணுவம் வாபஸ் வாங்கப்பட்டதால், தென்னிலங்கை முழுவதும் இராணுவமயப் படுத்தப் பட்டது. அந்தக் காலத்தில், கொழும்பு நகரில் நடமாடும் ஒருவர், இராணுவ ஆட்சி நடப்பதாக உணர்ந்திருப்பார். எங்கு திரும்பினும், சீருடை அணிந்து துப்பாக்கி தரித்த இராணுவ வீரர்கள் காணப்பட்டனர். அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இராணுவத்தினர் நிலை நிறுத்தப் பட்டனர்.

பொதுப் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று, ஜேவிபி அறிவித்தது. அதனால் அரச பேரூந்து வண்டிகள் எதுவும் ஓடவில்லை. மக்கள் தனியார் "மினிபஸ்"களில் கால்நடைகள் போல அடைபட்டுச் சென்றனர். சாரதிகள் யாரும் வேலைக்கு வராததால், இராணுவ வீரர்களே பேரூந்து வண்டிகளை ஓட்டிச் சென்றனர். அவற்றில் ஏறுபவர்கள் டிக்கட் எடுக்காமல், இலவச பயணம் செய்யலாம். அரச பேரூந்து வண்டிகளில் இலவச சவாரி செய்ய பொது மக்கள் முன்வரவில்லை! அன்றைய நாட்களில், வண்டியில் அதிக பட்சம் இருபது பயணிகள் இருப்பதே அபூர்வம். இராணுவத்தினர் இயக்கும் பேரூந்து வண்டிகளில், குண்டு வைத்து விடுவார்கள் என்று எல்லோரும் பயந்தார்கள்.

சிவில் சமூகத்தில் இராணுவத்தின் கட்டுப்பாடு அதிகரித்ததால், ஜனாதிபதியை விமர்சிக்க எல்லோரும் அஞ்சினார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று, ஜேவிபி ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிரான அலையை தோற்றுவிக்க முனைந்தது. வதந்திகளைப் பரப்பும் உளவியல் யுத்தம் முன்னெடுக்கப் பட்டது. (சிறிலங்கா அரசு உளவியல் யுத்தத்தின் துணையுடன் ஜேவிபியை அடக்கியது பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.) ஜேவிபி பரப்பிய வதந்திகளில் சில இரசிக்கத் தக்கன. ஜனாதிபதியையே ஆட்டிப் படைக்கும், பிரேமதாசவின் மனைவி ஹேமா பற்றி "அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்ஸ்" பல உலாவின. பிரேமதாசவின் புதல்வன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தார். அவரை தற்போதைக்கு இலங்கை வர வேண்டாம் என்று பிரேமதாச கூறினாராம். அதற்கான காரணம்: "நீ வீட்டுக்கு திரும்பி வந்தால் எய்ட்ஸ் நோயை காவிக் கொண்டு வந்து விடுவாய். அது பின்னர் வேலைக்காரிக்கு தொற்றி, எனக்கு தொற்றி, என்னிடமிருந்து அம்மாவுக்கு தொற்றி விடும். அப்புறம், நாடு முழுவதும் எய்ட்ஸ் பரவி விடும்."

ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு பரிச்சயமான எம்ஜிஆரின் பாசிச-வெகுஜன அரசியல், இலங்கையில் பிரேமதாச காலத்தில் தான் அரங்கேறியது. அடித்தட்டு மக்களின் பிரதிநிதியான பிரேமதாச தன்னை ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்ள விரும்பினார். ஒரு பக்கம், பெரிய முதலாளிகளை நண்பர்களாக கொண்டிருந்தாலும்; மறுபக்கம், வணிகத் துறையின் இலாபத்தில் ஒரு பகுதி ஏழை மக்களையும் சென்றடைய வேண்டும் என்று எதிர்பார்த்தார். இதற்காக "ஜனசவிய திட்டம்" மூலம், பின்தங்கிய பிரதேசங்களில் ஏழைகளுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தார். இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி திட்டங்களும் வந்தன. அரசின் மீது அதிருப்தியுற்ற, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழை இளைஞர்களே ஜேவிபியில் போராளிகளாக சேர்ந்திருந்தனர். உலகவங்கி போன்ற கடன் வழங்கும் நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில், "இளைஞர்களின் விரக்தியைத் தணிக்கும்" திட்டங்களை அரசு செயற்படுத்தி வந்தது.

பிரேமதாசா தற்பெருமை அடித்துக் கொள்ளவும், பாசிசத்தை நிறுவனமயப் படுத்தவும் இந்த திட்டங்கள் பயன்பட்டன. அவரது மனைவியின் பிறந்தநாளுக்கும், தனது பிறந்தநாளுக்கும் இடையிலான ஒரு வார காலத்தை இதற்காக தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு வருடமும், எங்காவது ஒரு மாவட்டத்தில் "ஏழைகளுக்கு வீடு வழங்கும் விழா" விமரிசையாக நடத்தப்படும். ஜேவிபியின் ஆதரவுத் தளமான வறிய மக்களின் மனங்களை வெல்வதும் அந்தத் திட்டங்களின் நோக்கம். 1990 ல், நான் வேலை செய்த நிறுவனம் மாத்தறையில் நடந்த ஜனசவிய கண்காட்சியில் பங்குபற்றியிருந்தது. கொழும்பை மையப்படுத்திய தனியார் நிறுவனங்களை, பின்தங்கிய பிரதேசங்களில் முதலீடு செய்யத் தூண்டுவதே அரசின் நோக்கமாக இருந்தது. ஜேவிபியின் கோட்டையாக கருதப்பட்ட மாத்தறையில், அப்போது தான் போர் ஓய்ந்திருந்தது. சில மாதங்களுக்கு முன்னர், இது போன்ற நிகழ்வுகள், அங்கே நினைத்துப் பார்க்க முடியாதவை.

ஜெயவர்த்தன காலத்தில் நவ- தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப் படுத்தப் பட்டாலும், பிரேமதாச காலத்தில் தான் அவை பெரும் முனைப்புடன் நடைமுறைப் படுத்தப் பட்டன. பல பெரிய முதலாளிகள், பிரேமதாச காலத்தில் கோடீஸ்வரர்களானார்கள். அவர்களில் சில தமிழ் முதலாளிகளும், நிபுணர்களும் அடங்குவர். இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஊடகமான "சக்தி TV", இன்றைக்கும் யுஎன்பி ஆதரவுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி உரிமையாளரான மஹாராஜா நிறுவனத்தை ஸ்தாபித்த தமிழரான ராஜேந்திரம், பிரேமதாசாவுக்கு மிக நெருக்கமானவர். அன்று நவ-தாராளவாத திட்டங்களை அமுல் படுத்திய பொருளாதார நிபுணர் பாஸ்கரலிங்கம், பிரேமதாசவின் அந்தரங்க ஆலோசகர். பிரேமதாச ஒரு பக்கம் ஜேவிபியுடன் யுத்தம் செய்து கொண்டிருந்தார். மறு பக்கம் மக்கள் மீது முதலாளித்துவ வன்முறையை ஏவி விட்டுக் கொண்டிருந்தார். ஆயினும், பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை, இலங்கையின் ஆட்சியாளர்கள் வைத்திருக்க வேண்டுமென எதிர்பார்த்தார். இந்த நிலைப்பாடு பிற்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் முரண்பாட்டை தோற்றுவித்திருக்கலாம் என கருதப் படுகின்றது.

எனக்குத் தெரிந்த வரையில், கொழும்பில் வாழ்ந்த ஏராளமான தமிழர்கள் பிரேமதாச காலத்தில் ஆதாயம் அடைந்தனர். கொழும்பு வாழ் தமிழர்கள் இன்றைக்கும் அந்த "பொற்காலத்தை" நினைவுகூருகின்றனர். எந்தத் தேர்தல் வந்தாலும், பெரும்பான்மை கொழும்புத் தமிழர்கள், கண்ணை மூடிக் கொண்டு யுஎன்பிக்கு வாக்களிப்பார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினரின் கட்சிகளையும் பிரேமதாச அரவணைத்துச் சென்றார். அன்று தென்னிலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்ட பிரேமதாச அதிக நண்பர்களை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், ஜேவிபி பகைவர்களை கூட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் சிங்கள மக்களுக்கு யுஎன்பி யை, கொடூரமான எதிரியாக காட்டிக் கொண்டிருந்தார்கள். அதன் அர்த்தம், மற்றைய எதிர்க்கட்சிகள் ஜேவிபியின் நட்பு சக்திகள் என்பதல்ல. வலதுசாரி யுஎன்பிக்கு மாற்றாக அமையக் கூடிய கட்சிகளை இல்லாதொழிப்பதே ஜேவிபியின் நோக்கமாக இருந்தது. இதனால் பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆளும் யுஎன்பி யும், அதனை எதிர்க்கும் ஜேவிபியும் மட்டுமே அரசியல் களத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள். சிறிலங்கா அரசுக்கு எதிரான எதிர்ப்பியக்கத்தில், ஜேவிபி மட்டுமே ஏக பிரதிநிதிகளாக மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
14. இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Thursday, April 14, 2011

இலங்கையை உலுக்கிய "சேகுவேரா போராட்டம்"

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 14)

"1971 கிளர்ச்சியை நடத்தியவர்கள் ஒரு பெரு முதலாளியைக் கூட கொல்லவில்லை..." - மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சண்முகதாசன். 1987 ல் தொடங்கிய இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சியின் போது, பல பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் கொல்லப் பட்டனர். (ஜேவிபியின் மொழியில், வர்க்க எதிரியை ஒழித்துக் கட்டுதல்.) அன்று வந்த தினசரிகளில் முதல் பக்கத்தில் எப்போதும் ஏதாவது அரசியல் படுகொலை பற்றிய செய்தி வந்து கொண்டேயிருக்கும். பெரு முதலாளிகளின் கொலைகள் நிச்சயமாக முழு இலங்கையையும் உலுக்கியது. "சிறிலங்காவின் பெரிய வர்த்தக நிறுவனங்களின் முதலாளிகள் யாரும் நாட்டில் இல்லை. எல்லோரும் வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரி விட்டார்கள் போலும்..." என்று நாங்கள் நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசிக் கொள்வோம். உண்மையிலேயே எமக்குத் தெரிந்த "லலிதா ஜுவலறி" போன்ற பெரிய நகைக் கடைகளின் முதலாளிகள் இந்தியா சென்று தங்கி விட்டனர். அங்கிருந்த படியே வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது கிளர்ச்சிக்கு, ஜேவிபி இயக்கம், தன்னை முழுமையாக தயார் படுத்தி இருந்தது. ஆயுதங்கள் சேகரிப்பது தொடக்கம், இலக்குகளை தீர்மானிப்பது வரை ஏற்கனவே ஒழுங்கு படுத்தியிருந்தனர். 1971 கிளர்ச்சி சிறுபிள்ளைத் தனமானது என்று எழுந்தமானமாக முடிவு செய்து விட முடியாது. அன்றைய நிலையில், அரசுடன் மோதுவதற்கு போதுமான தயாரிப்பு வேலைகள் முடிய முன்னரே போர் தொடங்கி விட்டது. முன்னாள் ஜேவிபி மத்திய குழு உறுப்பினரும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான லயனல் போபகே கூறுகிறார்: "இலங்கை அரசு, பிரேதப் பரிசோதனை இன்றி உடல்களை தகனம் செய்யும் சட்டம் கொண்டு வந்தது. எம்மை அழித்தொழிப்பதற்காகவே அந்த சட்டம் கொண்டு வரப் பட்டது. கிராமங்களில் ஜேவிபி உறுப்பினர்களை போலிஸ் வேட்டையாடியது. எதிரி எம்மைத் தாக்குவதற்கு முன்னர், நாம் எதிரியைத் தாக்க வேண்டும், என்ற சேகுவேராவின் கொள்கையின் படி விரைந்து செயற்பட வேண்டியிருந்தது." அன்று கியூபா புரட்சியின் புகழ் இலங்கையிலும் பரவியிருந்தது. ஜேவிபி இயக்கமானது சேகுவேராவின் ஆயுதப்புரட்சிக் கோட்பாடுகளை பின்பற்றி வந்தது. அன்று மக்கள் அவர்களை "சேகுவேராக் காரர்கள்" என்று அழைத்ததும் காரணத்தோடு தான். ஜேவிபி கிளர்ச்சியினால் சேகுவேராவின் பெயர் கிராமங்களிலும் பரவியிருந்தது. ரோகன விஜேவீர தான் சேகுவேரா என்று பாமர மக்கள் நம்பிய காலம் ஒன்று இருந்தது.

ஜேவிபி தலைவர் ரோகன விஜேவீர, (சீன சார்பு) கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர். இரகசிய வேலைத்திட்டங்கள் காரணமாக, சதியில் ஈடுபட்ட சந்தேகத்தில் வெளியேற்றப் பட்டார். கட்சித் தலைவர் சண்முகதாசன் ஒரு தமிழர் என்பதால், ஆழ்மனதில் குடிகொண்டிருந்த இனவாதம் காரணமாக ரோகன தானே வெளியேறியதாகவும் இன்னொரு காரணம் கூறப் படுகின்றது. ரோகன ஒரு கேஜிபி ஏஜென்ட் என்ற சந்தேகமும் கட்சிக்குள் நிலவியது. மொஸ்கோ லுமும்பா பலகலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற ரோகன, படிப்பை விட அரசியலில் அதிக ஈடுபாடு காட்டினார். லுமும்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற வெளிநாட்டு மாணவர்கள் பலரை, கேஜிபி பயன்படுத்தி வந்தமை இரகசியமல்ல. ஆயினும், ரோகன பற்றிய குற்றச்சாட்டு நிரூபிக்கப் படவில்லை. ரோகனவும், ஜேவிபியும் மாவோயிஸ்ட்கள் என்று சோவியத் யூனியன் குற்றம் சாட்டி வந்தது. அதே நேரம், வட கொரியாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்ததாக இலங்கை அரசு குற்றம் சாட்டியது. எது எப்படி இருந்த போதிலும், சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய வல்லரசுகள், 1971கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவி செய்துள்ளன.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் மாவோவின் வழியை ஏற்றுக் கொண்டவர்கள் பிரிந்து சென்றனர். இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக, ஒரு தமிழரான சண்முகதாசன் தலைமையில் ஒரு அகில இலங்கைக் கட்சி உருவானது.
சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியினர், யாழ் குடாநாட்டில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். அடுத்ததாக வடக்கில் ஒரு வர்க்கப் புரட்சிக்கு அடித்தளமிட்ட தருணத்தில் விழித்துக் கொண்ட ஆதிக்க சாதியினர், தமிழ்த் தேசியம் பேசத் தொடங்கினார்கள்.
ஜேவிபி யின் தோற்றுப் போன
ஆயுதப்புரட்சி, பிற இடதுசாரி கட்சிகளையும் கடுமையாக பாதித்தது. ஜேவிபி சந்தேகத்தின் பேரில், கம்யூனிஸ்ட்டாக அடையாளம் காணப்பட்ட அனைவரையும் அரசு கைது செய்து துன்புறுத்தியது. சிங்கள பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்திருந்த யாழ் தமிழ் முதலாளிகள், தமக்கு எதிரான தொழிற்சங்கவாதிகளை காட்டிக் கொடுத்தனர். இதனால், யாழ்ப்பாணத்தில் பல தமிழ் கம்யூனிஸ்ட்கள், ஜேவிபி என்று குற்றம் சாட்டப் பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இன்றைக்கும் தமிழ் முதலாளித்துவ சக்திகள், தமிழ் மக்களுக்கு ஜேவிபி எனும் இனவாதப் பூதத்தைக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதை கண்கூடாக காணலாம். தமிழகத்தை சேர்ந்த இடதுசாரி அறிவுஜீவிகள் சிலரும், ஈழத் தமிழர்களின் வர்க்கப் போராட்டத்தை நசுக்கும் முதலாளித்துவ சதிக்கு துணை போகின்றனர்.

சண்முகதாசன் 1971 கிளர்ச்சி பற்றிய குறிப்புகளில் பின்வருமாறு எழுதியுள்ளார்: "பிரிட்டிஷ்காரர்கள் கற்பித்த பாராளுமன்ற ஜனநாயகத்துடன் மக்கள் பிணைக்கப் பட்டுள்ளனர். கொந்தளிப்பான உலகில், இலங்கை வன்முறையற்ற அமைதிப் பூங்கா என்ற மாயையை உருவாக்கியுள்ளனர். அந்த நம்பிக்கைகள் தற்போது நொறுங்கிப் போயுள்ளன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒரு பிற்போக்குவாத தலைமையின் தவறான வழிநடத்தலின் கீழ் தமது உயிரைத் துச்சமாக மதித்து போராடினார்கள். எமது மக்கள் புரட்சிக்கு தயாரானவர்கள் அல்ல என்ற கருத்து தவறென நிரூபிக்கப் பட்டுள்ளது...." (Chapter 6: An Analysis of the April 1971 Events in Ceylon [pp.82-96])
பிற்காலத்தில் வெகுஜன அரசியலில் ஈடுபட்டு இனவாதம் பேசும் இன்றைய ஜேவிபி தலைவர்கள், வர்க்கப் போராட்டத்தின் எதிரிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வலதுசாரி தமிழ் ஊடகங்கள், ஜேவிபியின் இனவாதப் பேச்சுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. 71 கிளர்ச்சியை "சிங்கள பேரினவாதிகளின் வன்முறைப் போராட்டம்" என்று, தமிழ் இனவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர். உண்மையில் இலங்கையின் சிங்கள, தமிழ் மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேருவதைத் தடுப்பதே அவர்களது குறிக்கோளாக உள்ளது. ஒரு சரியான பாட்டாளி வர்க்கக் கட்சி, மக்களை புரட்சிக்கு வழிநடாத்திச் செல்லத் தவறியதன் விளைவை இலங்கை இன்றைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தெற்கில் ஜேவிபியும், வடக்கில் ஈழ தேசிய இயக்கங்களும் வர்க்கப் புரட்சிக்கு எதிர்த் திசையில் மக்களை வழிநடாத்திச் சென்றனர்.

1971 ல், முதலாவது கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட ஜேவிபி தலைவர்கள், யாழ் கோட்டை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப் பட்டனர். அப்போது அவர்கள் சார்பில் பல மனித உரிமை மீறல் வழக்குகள் போடப்பட்டன. பிரபல தமிழ் வழக்கறிஞர் குமார் பொன்னம்பலம் கூட ஜேவிபி தலைவர்களை விடுவிக்க வழக்காடினார். அப்போது ரோகன, "வக்கீல் பீஸ் எவ்வளவு?" என்று வினவிய பொழுது, "நான் கேட்கும் தொகையை உங்களால் கட்ட முடியாது," என்று குமார் பதிலளித்தார். அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்கென்பதால், அதை சவாலாக எடுத்து இலவசமாக வாதாட முன் வந்தார். (குமாருடன் கூடச் சென்ற நண்பர் ஒருவர் வழங்கிய தகவல்.) இதே நேரம், தென்னிலங்கையில் இருந்து ஜேவிபி தாக்குதல் குழு ஒன்று யாழ்ப்பாணம் சென்றது. யாழ் கோட்டை சிறையுடைத்து தலைவர்களை மீட்பது அவர்கள் திட்டம். தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே, திட்டம் அம்பலமாகி, பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். சிங்கள தெற்கிற்கும், தமிழ் வடக்கிற்கும் இடையிலான மொழி என்ற தடைச் சுவரை, சிறிலங்கா அரசு சாதுர்யாமாகப் பயன்படுத்தி வந்துள்ளது. தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களை, வடக்கே தமிழர்கள் வாழும்
யாழ்ப்பாணத்தில் சிறை வைத்தது. அதே போன்று, வடக்கே ஈழ விடுதலை போராட்டத்தில் கைது செய்த தமிழ் இளைஞர்களை, தெற்கே சிங்களவர்கள் வாழும் காலியில் சிறை வைத்தது.

ஜேவிபிக்கு வடக்கில் உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ இருக்கவில்லை. தாக்குதல் அணியில் வந்த சிங்கள இளைஞர்களுக்கு, தமிழ் பேசத் தெரிந்திருக்கவில்லை. இது போன்ற குறைகளே தாக்குதல் திட்டம் தோல்வியுற்றதற்கு காரணம், என்று கூறப் படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் அன்று ஜேவிபி உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்துள்ளனர். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், கொழும்பில் வசித்தவர்கள், இவர்கள் மத்தியில் ஆதரவு இருந்துள்ளது. சுன்னாகம் ஜேவிபி கோட்டையாக திகழ்ந்ததாக அந்தப் பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார். அன்று சுன்னாகத்தில் கணிசமான உழைக்கும் வர்க்க சிங்களவர்கள் வாழ்ந்ததும், அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சுன்னாகத்தின் இடதுசாரிப் பாரம்பரியம் காரணமாக, பலர் பிற்காலத்தில் தோன்றிய மார்க்சிய "ஈழப் புரட்சி அமைப்பில்" சேர்ந்திருந்தனர். 71 கிளர்ச்சியின் போது, சுன்னாகம் அனல் மின் நிலையத்தை தாக்குவதற்கு ஒரு ஜேவிபி அணி வந்து மறைந்திருந்தது. அந்தத் திட்டமும் தோல்வியுற்றதால், தப்பியோடிய ஜேவிபி உறுப்பினர்கள் ஆனையிறவு தடைமுகாமில் பிடிபட்டனர். அன்று பொறுப்பில் இருந்த இன்ஸ்பெக்டர் நாதன், பிடிபட்ட இளைஞர்களை விசாரணை இன்றி கொலை செய்தமைக்காக, அரசினால் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

தெற்கில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வகை தொகையின்றி கொல்லப் படுவதற்கு சாதி வேற்றுமை காரணமாக இருந்தது. வடக்கிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. வட இலங்கையில், ஜேவிபியின் கொள்கைகளால் கவரப்பட்ட தமிழ் மக்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். 1982 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோகன விஜேவீர, யாழ் குடாநாட்டில் பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். முன்னர் சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட தலித் கிராமங்களில், ரோகன விஜேவீரவுக்கு வரவேற்பிருந்தது. அன்று நடந்த தேர்தலில் யாழ் குடாநாட்டில் ரோகனவிற்கு சில ஆயிரம் ஓட்டுகள் விழுந்தன. கணிசமான அளவு மலையகத் தமிழர்களும் ஜேவிபியில் இணைந்திருந்தனர். மலையகத் தமிழர்களில் பெரும்பான்மையாக உள்ள தோட்டத் தொழிலாளர்கள், தலித் மக்கள். அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள், ஆதிக்க சாதிகளை சேர்ந்த பிற்போக்காளர்கள். பிற்போக்குத் தலைமையால் விரக்தியுற்ற மலையக இளைஞர்கள், ஜேவிபியை புரட்சிகர சக்தியாக பார்த்ததில் வியப்பில்லை. அதே நேரம், யாழ் மையவாத சிந்தனை கொண்ட தமிழ் தேசியவாதிகளும், அவர்களை தமிழீழப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. (சில இடதுசாரி இயக்கங்கள் விதிவிலக்கு)

ஜேவிபி மலையகத் தமிழர்களை "இந்தியர்களாக" கருதியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப் படுகின்றது. முன்னாள் மத்திய குழு உறுப்பினரான லயனல் போபகே, கட்சி சார்பாக தமிழர்களின் இனப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்திருந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில் பல முற்போக்கான அம்சங்கள் காணப்பட்டன. இருப்பினும், ரோகன விஜேவீர அந்த அறிக்கையை நிராகரித்து விட்டதாக கூறப்படுகின்றது. மத்திய குழுவில், ரோகனவுடன் நடந்த விவாதத்தின் பொழுது, மற்ற உறுப்பினர்கள் தலையாட்டிப் பொம்மைகளாக இருந்ததாக போபகே நினைவு கூறுகிறார். அதாவது ரோகன விஜேவீர தனக்கு விசுவாசமானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு கட்சியை நிர்வகித்து வந்தார். மேலும் இந்திய விஸ்தரிப்புவாதம், இந்திய வம்சாவளித் தமிழர்கள், இவை தொடர்பான தவறான கொள்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்பது குற்றச்சாட்டு. தாம் சீனா சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த சமயம், சீன-இந்திய யுத்தம் நடந்து கொண்டிருந்ததாகவும், அதிலிருந்தே "இந்திய விஸ்தரிப்புவாதக் கொள்கை" எழுந்ததாக முன்னாள் ஜேவிபி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஈழ விடுதலை இயக்கங்களின் உள்ளே நடந்ததைப் போன்று, ஜேவிபி அமைப்பினுள்ளும், தலைமையுடன் முரண்படுவது துரோகமாகக் கருதப்பட்டது. தனிநபர்கள் கருத்து முரண்பாடு கொண்டு அமைப்பை விட்டு வெளியேறினால், இலகுவாக "மரண தண்டனை" நிறைவேற்றினார்கள். ஒரு குழுவாக பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாமல் இருந்தது. ஜேவிபி இரண்டாவது கிளர்ச்சியை தொடங்குவதற்கு, சில வருடங்களுக்கு முன்னதாக, பாரிய பிளவு ஏற்பட்டது. முக்கிய மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட பலர், ஜேவிபியை விட்டு பிரிந்து சென்றார்கள். என்பதுகளின் தொடக்கத்திலும், ஜேவிபி தலைமறைவாக இயங்கி வந்தது. அதனால் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள், ஒரு புறம் அரச படைகளுக்கு அஞ்ச வேண்டியிருந்தது. மறு புறம், தம்மைத் தேடி கொலைவெறியுடன் அலையும் முன்னாள் தோழர்களிடம் இருந்தும் பாதுகாப்பு தேட வேண்டியிருந்தது.

முன்னாள், இந்நாள் ஜேவிபி உறுப்பினர்கள் பல தடவைகள் மோதிக் கொண்டனர். சகோதர சண்டையில் இரண்டு பக்கமும் பலர் மரணமுற்றனர். அன்று ஜேவிபியை விட்டு வெளியேறியவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டார்கள். ஆனால், தென்னிலங்கையில் யுத்தம் நடந்த 1987 -1989 காலப் பகுதியில், இன்னும் சில குழுக்கள் ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்றன. அவர்கள், அரசுடன் சேர்ந்து துணைப்படையாக இயங்கினார்கள். இதனால், அரச படைகள், ஜேவிபி தவிர்த்து, வேறு பல ஆயுதக் குழுக்களும் மக்கள் மேல் அதிகாரம் செலுத்தினார்கள். முப்பதாண்டு கால ஈழப்போரில் தமிழ் மக்கள் எந்தெந்த கொடுமைகளை அனுபவித்தார்களோ, அவற்றை சிங்கள மக்கள் அந்த இரண்டாண்டுகளில் அனுபவித்தார்கள். கொலை செய்வது தேசிய விளையாட்டாகியது. கொலை செய்வதற்கென்றே, அரசினால் ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. நாடு முழுவதும் கொலையுதிர்காலம் ஆரம்பமாகியது.


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
13.தென்னிலங்கை கிளர்ச்சியில் சிங்கள தலித்- படுகொலை
12.ஈழ அகதிகளுக்கு தஞ்சம் அளித்த சிங்கள அரசு!
11.யாழ் குடாநாடெங்கும் ஆயுதப் புதையல்கள்
10.ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள்
9.அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்