Wednesday, October 30, 2013

ரஷ்ய சக்கரவர்த்தியின் ஆப்பிரிக்க இளவரசன் - அறியாத வரலாறு

ஆப்பிரிக்காவில் இருந்து, அடிமைகளாக கொண்டு செல்லப் பட்டு, அமெரிக்க கண்டத்தில் குடியமர்த்தப் பட்ட கறுப்பின மக்கள், இருபதாம் நூற்றாண்டிலும் சம உரிமைக்காக போராட வேண்டி இருந்தது. அதே நேரம், பதினெட்டாம் நூற்றாண்டில், ஒரு ஆப்பிரிக்க -கறுப்பின அடிமை, ரஷ்யப் பேரரசில் ஒரு இளவரசனாக வர முடிந்துள்ளது! அவர் அன்று ஐரோப்பாவிலேயே சிறந்த கல்விமானாக போற்றப் பட்டார். ரஷ்ய சாம்ராஜ்யத்தின் புத்திசாதுர்யம் மிக்க இராணுவ நிபுணராக மதிக்கப் பட்டார். இது ஒன்றும் கற்பனைக் கதை அல்ல. உண்மை வரலாறு.

முதலில் நாம், பதினெட்டாம் நூற்றாண்டு ரஷ்யாவின் சமூக-அரசியல் பின்புலத்தை ஆராய வேண்டும்.ரஷ்ய சாம்ராஜ்யம் தெற்கு நோக்கி விஸ்தரிக்கப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், துருக்கி ஓட்டோமான்களின் ஆட்சிக்குள் இருந்த பகுதிகளையும் கைப்பற்றியது. அனேகமாக, தெற்கு ரஷ்ய பகுதிகள் எல்லாம், ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்தவை. ஆயிரம் வருட காலத்திற்கு முன்பிருந்தே, அரபு வணிகர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு சில கறுப்பின அடிமைகள், துருக்கியரின் சாம்ராஜ்யத்தினுள், பல பகுதிகளிலும் இருந்துள்ளனர். அங்கிருந்து, ரஷ்ய தலைநகரான சென். பீட்டர்ஸ்பெர்க் வரையில், ஆப்பிரிக்க அடிமைகள் விற்பனை செய்யப் பட்டனர். மிக மிகக் குறைந்தளவு என்றாலும், ரஷ்யாவில் ஏற்கனவே சில கறுப்பின அடிமைகள் இருந்துள்ளனர்.

அமெரிக்க கண்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளுக்கும், அரேபிய வணிகர்கள் கொண்டு சென்ற அடிமைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முதலில், அரேபியர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை நடத்திய விதமும், மேற்கு ஐரோப்பியர்கள் நடத்திய விதமும் நேர் எதிரானவை.  மேற்கு ஐரோப்பியர்கள், அடிமைகளை பெருந்தோட்ட பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தும் நோக்குடன் கொண்டு சென்றனர். அதனால், மிகக் கொடூரமாக நடத்தினார்கள். பொருளாதார காரணங்களுக்காக நிறவாதம் ஒரு கொள்கையாக வளர்க்கப் பட்டது. கறுப்பின அடிமைகளையும், வெள்ளையின குடியேறிகளையும் ஒன்று சேர விடாமல் பிரித்து வைத்தார்கள்.

அரேபியர்கள், ஆப்பிரிக்க அடிமைகளை, வீட்டு வேலைக்காரர்கள் போன்று வைத்திருந்தார்கள். அரண்மனைகளில், மாளிகைகளில் சேவகர்களாக வைத்திருந்தார்கள். அரேபியர்கள், தாம் தேர்ந்தெடுத்த சிறந்த அடிமைகளை, துருக்கி சுல்த்தானின் அரண்மனைக்கு பரிசாக கொடுத்தார்கள். சுல்த்தானின் அடிமைகளில் சிலர்  அதிர்ஷ்டசாலிகள். திறமைசாலிகள் படித்து முன்னேற முடிந்தது. அரேபியர்கள் வைத்திருந்த அடிமைகள், குறிப்பிட்ட கால கடின உழைப்பிற்குப் பின்னர், "சுதந்திரம் வாங்கி" சமுதாயத்தில் ஒன்று கலக்க முடிந்தது. இது பண்டைய கிரேக்க, ரோமர் காலத்தில் இருந்த அடிமை முறையின் தொடர்ச்சி ஆகும். ஆகவே, ரஷ்யர்களும் அரேபியர்கள் போன்று தான், தமது அடிமைகளையும் நடத்தி வந்தனர். அவர்களை ஒரு தனியான சமுதாயமாக, இனவாத நோக்கில் பார்க்கப் படாததால் தான், இன்றைக்கும் அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கிடைப்பதில்லை. மேலும், ரோமர்கள் ஆண்ட காலத்திலும், அதற்குப் பின்னரும், பல்வேறு வெள்ளையின மக்களும் அடிமைகளாக விற்கப் பட்டனர். அதனால், கறுப்பினத்தவர்களை மட்டுமே அடிமைகளாக கருதும் எண்ணம் தோன்றவில்லை.

கறுப்பினத்தவரை கீழ்த்தரமாக பேசுவதற்காக, மேற்கு ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் "நீக்ரோ" என்ற சொல், ரஷ்ய மொழியில் இருக்கவில்லை. அது பிற்காலத்தில், மேற்குலக கலாச்சார தாக்கத்தால் உள்வாங்கப் பட்டது. ரஷ்யர்கள் "மூர்கள்" என்று வட ஆப்பிரிக்க இஸ்லாமியர் எல்லோரையும் அழைத்தனர். அது ஒரு மதவாத அர்த்தம் கொண்ட சொல் ஆகும். அதைவிட, கிரேக்க மொழியில் இருந்து கடன்வாங்கிய "மவுர்" என்ற சொல் கருப்பர்களை குறிப்பிட பயன்படுத்தினார்கள். இலக்கியவாதிகள் "அரப்"(Arap)என்ற சொல்லையும் பயன்படுத்தினார்கள். எது எப்படி இருப்பினும், அன்றைய அமெரிக்காவில் நிலவிய இனவெறிக் கொள்கை எதுவும் ரஷ்யாவில் பரவி இருக்கவில்லை. சிலர் தனிப்பட்ட முறையில், கருப்பர்கள் மீது வெறுப்பைக் காட்டியிருக்க வாய்ப்புண்டு.

ரஷ்யாவில் பிறந்த உலகப் புகழ் பெற்ற கவிஞர் புஷ்கின் (Alexander Sergeyevich Pushkin) பற்றி அறியாதவர் எவருமில்லை. ஆனால், புஷ்கினின் கொள்ளுப் பாட்டன் ஒரு கறுப்பின அடிமை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் பெயர்: ஆப்ராம் பெட்ரோவிச் கன்னிபல் (Abram Petrovich Gannibal). அது ஆப்ராம் பெட்ரோவிச் ஞானஸ்நானம் எடுத்த பின்னர் சூட்டப்பட்ட பெயர். இயற்பெயர் தெரியவில்லை. கன்னிபல் என்பது, ஹனிபல் என்ற பெயரின் திரிபு. பண்டைய காலத்தில், ரோமர்களை எதிர்த்துப் போராடிய, வட ஆப்பிரிக்க மன்னன் ஒருவனின் பெயரை விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தார்.

புஷ்கினால் எழுதி, முடிக்கப் படாத Peter the Great's Negro என்ற நாவலில் இருந்தே, அவரைப் பற்றிய தகவல் கிடைத்தது. சென். பீட்டர்ஸ்பெர்க் அரண்மனையில், இன்றைக்கும் அவரது ஓவியம் ஒன்றுள்ளது. ஆப்ராம் பெட்ரோவிச் பிறந்த வருடம் 1781. அவர் பிறந்த இடம் எதுவென  ஆய்வாளர்களிடையே நீண்ட காலமாக இருந்து வந்த சர்ச்சை அண்மையில் தான் தீர்க்கப் பட்டது. புஷ்கின் தனது நாவலில் "லகோன்" என்று குறிப்பிட்டார். அந்த இடம் சாட் ஏரிக்கு அருகில் உள்ளது. தற்போது கமெரூன் நாட்டுக்கு சொந்தமானது. இந்த தகவல் வெளிவந்த பின்னர், கமெரூன் நாட்டில், புஷ்கினும், கன்னிபலும் தேசிய நாயகர்களாக போற்றப் படுகின்றனர்.

கன்னிபல் சார் மன்னனின் அரசவையில் அதிகாரம் படைத்த இளவரசராக வீற்றிருந்தவர். அதனால் அவருக்கென்று ஒரு அரச இலச்சினை இருந்தது. அதில் யானையின் படமும், யானையின் முதுகுக்கு மேலே கிரீடமும் காணப் பட்டது. கன்னிபலின் பூர்வீகத்தை நினைவுபடுத்தும் இலச்சினை அது. கன்னிபல் ஒரு ஆப்பிரிக்க அரச வம்சத்தில் பிறந்த இளவரசர் ஆவார். அவரது முன்னோர்கள் ஆண்ட ஆப்பிரிக்க தேசம் எதுவென தெரியவில்லை. எத்தியோப்பியாவில் இருந்த தேசம் என்று கருதப் பட்டது. (ஏனெனில், அன்று எத்தியோப்பியா தான், ஐரோப்பாவுக்கு வெளியில் இருந்த ஒரேயொரு கிறிஸ்தவ நாடு.)

அந்நிய தேச மன்னர் ஒருவருக்கு, யானை ஒன்றில் அனுப்பப்பட்ட பரிசுப் பொதிகளுடன், சிறுவனாக இருந்த கன்னிபல் பயணம் செய்து கொண்டிருந்தார். இடையில் தொடரணியை வழிமறித்த அரேபியர்கள், பரிசுப் பொருட்களை கொள்ளையடித்து, பயணம் செய்தவர்களை சிறைப் பிடித்தார்கள். அப்போது ஏழு வயது சிறுவனாக இருந்த கன்னிபல், அரேபிய கொள்ளையர்களினால் அடிமையாக்கப் பட்டான். அரேபியர்கள் அந்த சிறுவனை, துருக்கி சுல்த்தானுக்கு பரிசளித்தார்கள். (அந்தக் காலத்தில், பெரியவர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதற்காக, பிள்ளைகளை துருக்கி சுல்த்தான் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கும் வழக்கம் இருந்தது.)

இஸ்தான்புல் நகரில் உள்ள சுல்த்தானின் அரண்மனையில் அடிமையாக வைத்திருந்த ஏழு வயதுச் சிறுவனை, ரஷ்ய தூதுவர் ஒருவர் கண்டார். அவர் அந்த அடிமைச் சிறுவனை வாங்கி, ரஷ்ய சக்கரவர்த்தி பீட்டருக்கு பரிசாக கொடுத்தார். ரஷ்ய சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய மாபெரும் பீட்டர் சக்கரவர்த்தி, ஆப்பிரிக்க சிறுவனின் புத்திக் கூர்மையை கண்டு வியந்தார். அவனை தனது வளர்ப்பு மகனாக தத்தெடுத்துக் கொண்டார்.

ரஷ்யப் பேரரசில், ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக மட்டும் கொண்டு வரப் படவில்லை. ஆப்பிரிக்க குழந்தைகளை, ரஷ்ய பிரபுக்கள் தத்தெடுக்கும் வழக்கம் ஏற்கனவே இருந்தது. அதனால், "ஒரு ஆப்பிரிக்க கருப்பன் ரஷ்ய இளவரசனாக தத்தெடுக்கப்பட்டமை, யார் கண்ணையும் உறுத்தவில்லை. சிறுவனான கன்னிபல், வளர்ப்புத் தந்தையான சக்கரவர்த்தியின் விருப்பத்திற்குரிய பிள்ளையானார். பீட்டர் சக்கரவர்த்தி, அவரை சிறுவயதிலேயே போர் முனைக்கு கொண்டு சென்றதனால், பிற்காலத்தில் சிறந்த இராணுவ நிபுணராக வந்தார். முன்னரங்க நிலைகளில், எண்கோண கணித முறைப்படி கோட்டைகள் கட்டுவது பற்றிய வரைபடங்கள், இன்றைக்கும் கன்னிபலின் நிபுணத்துவத்திற்கு சான்று பகர்கின்றன.

இன்று நமது நாட்டு மேட்டுக்குடியினர், வீட்டிலும் ஆங்கிலம் பேசி, அமெரிக்கா சென்று படித்து விட்டு வருவார்கள். அது போன்று, ரஷ்யப் பேரரசின் மேட்டுக் குடியினருக்கு, பிரான்ஸ் இருந்தது. அவர்கள் உயர்கல்வி கற்பதற்காக, பாரிஸ் சென்று படித்து விட்டு வருவார்கள். ரஷ்ய மேட்டுக்குடியினர், வீட்டிலும் பிரெஞ்சு மொழியில் தான் உரையாடுவார்கள். அது அன்று கௌரமாகக் கருதப் பட்டது. ஆதலினால், கன்னிபல் சில வருட காலம் பிரான்ஸ் நாட்டில் கல்வி கற்றார். கணிதம், விஞ்ஞானம், தத்துவ இயல், போன்ற பல பாடங்களில் திறமை பெற்று விளங்கினார். பிரெஞ்சு தத்துவஞானி வோல்தேயர் சம காலத்தவர் தான். வோல்தேயர் கன்னிபலின் நண்பனாக இருந்தவர். கன்னிபலின் புத்திக் கூர்மையை பாராட்டி எழுதி உள்ளார். வோல்தேயர், ஆப்பிரிக்கர்களை காலனிய அடிமைகளாக வைத்திருந்த பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர. அவர் சந்தித்த கன்னிபல் என்ற அறிவாளி, ஒரு கறுப்பர் என்பது ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கும்.

வளர்ப்புத் தந்தையான மாபெரும் பீட்டரின் மரணத்தின் பின்னர், கன்னிபலின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. புதிய சார் மன்னனாக முடி சூட்டிக் கொண்ட இளவரசன் மென்ஷிகோவ், கன்னிபலின் பதவியை பறித்து, சைபீரியாவுக்கு நாடு கடத்தினார். ஆயினும், அன்று சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்காக இடையறாது யுத்தம் செய்து கொண்டிருந்த ரஷ்யாவில்,கன்னிபலின் இராணுவ நிபுணத்துவம் பெரிதும் தேவைப் பட்டது. அதற்காக மன்னித்து விடுதலை செய்யப் பட்டார்.

சில வருடங்களின் பின்னர், மறைந்த பீட்டரின் புதல்வி எலிசபெத் மகா ராணியானார். அவரது ஆணையின் பேரில், கன்னிபல் ரஷ்ய இராணுவத்தில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப் பட்டார். அத்துடன், தலினின் (இன்று எஸ்தோனியாவின் தலைநகரம்) நகரின் தலைமை நிர்வாகியாக பதவி வகித்தார். இன்றும் கன்னிபல் வாழ்ந்த அரண்மனையும், அவர் கைப்பட எழுதிய ஆவணங்களும் தலினின் நகரில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு: 
Gannibal, The Moor of Petersburg by Hugh Barnes

Tuesday, October 29, 2013

"தமிழரை சுரண்டும் தமிழ் முதலாளிகள்" - நோர்வே தமிழ் வானொலி

நோர்வேயில் தமிழ் ஊழியர்கள் சிறு தமிழ் முதலாளிகளால் மோசமாக 
சுரண்டப்படும் நிலைமை பற்றிய வானொலி நிகழ்ச்சி:
நோர்வே, ஒஸ்லோ நகரில், "தமிழ் முதலாளிகள், தமிழ் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும், சில நேரம் கூலி கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும்," ஒரு வானொலி நிகழ்ச்சியில் அறிவித்திருந்தனர். ஒஸ்லோ "தமிழ் 3" வானொலியில் ஒலிபரப்பான ஒலிப்பதிவின் வீடியோவினை, நானும் முகநூலில் பகிர்ந்திருந்தேன். எதிர்பார்த்த மாதிரி, அது தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை உருவாக்கி உள்ளது. "தமிழ் முதலாளிகளை விமர்சிக்கும் தகவல்களை எதற்கு பகிர்ந்தீர்கள்?" என்று சிலர் என்னிடம் நேரடியாகவே கேட்டார்கள். உலகில் யாரையும் விமர்சிக்கலாம். அடித்தட்டு தமிழர்களை பற்றி குறை சொல்லி திட்டலாம். ஆனால், தமிழ் முதலாளிகள் "விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதர்கள்" எனக் கட்டமைக்கப் படும் விம்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு முதலாளி தமிழ் பேசினாலும், சிங்களம் பேசினாலும், முதலாளிக்கு உரிய சுரண்டும் தன்மை மாறப் போவதில்லை. அவர்களால் சுரண்டப் படுபவர்கள், தமிழ் தொழிலாளர்களாக இருந்தாலும் இரக்கம் காட்டப் படுவதிலை. அப்படி இருக்கையில், "தமிழ் முதலாளிகளை விமர்சிக்காதீர்கள்" என்பவர்களின் வர்க்க குணம், அப்போது தான் வெளிப்படுகின்றது. 
இதனைப் புரிந்து கொள்வதற்கு, ஒருவர் மார்க்சியம் மண்ணாங்கட்டி எதுவும் படிக்கக் தேவையில்லை. சுயமாக சிந்திக்கும் பகுத்தறிவு இருந்தால் போதும்.

அந்த ஒலிப்பதிவில், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலாளர்களை மட்டும் பேட்டி எடுத்திருந்தார்கள். ஒஸ்லோவில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரும்பாலான முதலாளிகள், ஈழத் தமிழ் பூர்வீகத்தை கொண்டிருந்த போதிலும், நூற்றுக் கணக்கான ஈழத் தமிழ் தொழிலாளர்களும் அதே மாதிரியான சுரண்டலுக்கு ஆளாகின்றனர். பலர் இந்த நாட்டில் விசா இன்றி தங்கி இருப்பவர்கள் தான். சட்டப் படி வேலை செய்வதற்கு அனுமதி இன்மை, கூடவே மொழிப் பிரச்சினையும் இருப்பதால், தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை உருவாகின்றது. அதை மட்டுமே சுட்டிக் காட்டி, "இதனை தமிழர்களுக்கு உதவும் செயலாக பார்க்க வேண்டும்" என்று முதலாளிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை. ஆனால் அந்த "சமூக சேவை செய்யும் முதலாளிகள்" கோடி கோடியாக சொத்துக் குவிப்பது மட்டும் எங்ஙனம்? அவர்கள் ஆடம்பர கார்கள், மாளிகை போன்ற வீடுகளை வைத்திருப்பதுடன், வெளிநாடுகளுக்கு "வர்த்தக சுற்றுலா" போவதையும், காசினோக்களில் பணத்தை இறைப்பதையும் செய்யாமல் இருந்தாலே போதும். அப்படி மித மிஞ்சி சேர்ந்த பணத்தை, தொழிலாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக்கலாம். அப்போது, நாங்கள் அவர்களது சமூக சேவையை மெச்சலாம்.

உண்மையில் என்ன நடக்கிறது? தொழிலாளர்களை சுரண்டி, அரசுக்கு வரி ஏய்ப்புச் செய்து, சேர்க்கப் பட்ட செல்வம், இறுதியில் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப் படுகின்றது. அதன் பின்னர், அந்த தமிழ் முதலாளிகளுக்கு கிரிமினல் முத்திரை குத்தப் படுகின்றது. அவர்களது கிரிமினல் நடவடிக்கைகள் பற்றிய செய்திகள், நோர்வே ஊடகங்களில் வெளியாகி சந்தி சிரிக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில், இந்த வருடத்தில் மாத்திரம், பத்துக்கும் குறையாத தமிழ் முதலாளிகளின் வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. அவர்கள் இருபது, முப்பது வருடங்களாக நோர்வேயில் வாழ்ந்த போதிலும், அவர்களது குடியுரிமை பறிக்கப் பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டுள்ளனர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோ, "ஏழைகளின் பகுதிகள், பணக்காரர்களின் பகுதிகள்" என்று இரண்டாக பிரிந்துள்ளதாக, Aftenposten பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகிறார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்." என்ற தலைப்பிட்டு, பல புள்ளிவிபரங்களை ஆதாரமாக கொண்டு கட்டுரை எழுதியுள்ளது. இங்குள்ள படத்தில் சிவப்பு மையால் காட்டப் பட்டுள்ள பகுதி "ஏழைகளின் ஒஸ்லோ", நீல மையினால் காட்டப்படுள்ளது "பணக்காரர்களின் ஒஸ்லோ". (Aftenposten Osloby, 24 oktober 2013)

இதிலே சுவராஸ்யமான விடயம், நமது தமிழர்களைப் பற்றியது. நோர்வேயில் வாழும் தமிழர்களில் முக்கால்வாசிப் பேர், ஒஸ்லோவில் தான் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர், ஒஸ்லோ நகரின் ஒரு பிரிவான Stovner என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அது தான் ஒஸ்லோ முழுவதிலும், மிகவும் வறுமையான பகுதி என்று Aftenposten பத்திரிகை குறிப்பிடுகின்றது. அதாவது, பெரும்பான்மையான நோர்வே வாழ் தமிழர்கள், ஏழைகள் என்ற தரத்திற்குள் அடங்குகின்றனர்.

Stovner தேர்தல் தொகுதியில் பல தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றுள்ளனர். அவர்கள் அனேகமாக, இடதுசாரிக் கட்சியான Arbeiderpartiet சார்பாக நிறுத்தப் பட்ட வேட்பாளர்கள். ஒஸ்லோ தமிழர்கள் மத்தியில், "தீவிர வலதுசாரி தமிழ் தேசியக் கருத்தியல்" செல்வாக்கு செலுத்துகின்றது. இருப்பினும், தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு தான் ஓட்டுப் போடுவார்கள். வர்க்கப் பிரச்சினை போன்ற சமூக விஞ்ஞான ஆய்வுகளுக்கு நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. நமது தமிழ்ச் சமூகத்திலேயே அதற்கான தரவுகள் நிறைய கிடைக்கின்றன.

Monday, October 28, 2013

பனங்கள்ளில் பிறக்கும் தமிழ் தேசிய பாட்டாளிகளின் நாட்டுப் பற்று


யாழ்ப்பாணத்தில் பரவும் மதுக் கலாச்சாரம், மது பான விற்பனை நிலையங்கள் பற்றி, அனேகமாக எல்லா எல்லா ஊடகங்களும் எமக்கு எச்சரித்துள்ளன. அதிலும் தீவிர தமிழ் தேசிய ஊடகம் என்றால், "சிங்களவன் யாழ்ப்பாணத்தில் மது பாவனையை ஊக்குவித்து, தமிழரின் பணத்தை சுரண்டுவதுடன், நுணுக்கமாக இனவழிப்புச் செய்கிறான்." என்று எழுதும்.
ஆனால், சிங்களவன் கொண்டு வந்து விற்கும் மது பானங்கள் எல்லாம், பெரும் வணிக நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப் படுபவை. ஒன்றில் அது யாராவது ஒரு மேலைத்தேய முதலாளியின், அல்லது தென்னிலங்கை முதலாளியின் நிறுவனமாக இருக்கும். அந்த உயர் வகை சாராயங்களை விரும்பிக் குடிப்பவர்கள், தமிழ் நடுத்தர வர்க்கத்தினர் ஆவர். ஏனெனில், அவர்களிடம் தான் அவற்றை வாங்குவதற்கு தேவையான பணம் இருக்கிறது. 


ஒரு பக்கத்தில், யாழ்ப்பாண படித்த மத்தியதர வர்க்கம், சிங்களவன் விற்கும் மதுவை வாங்கிக் குடித்து விட்டு, சிங்களவனுக்கு அடிமையாக விழுந்து கிடக்கின்றனர். இன்னொரு பக்கத்தில், தமிழ் பாட்டாளி வர்க்கத்தினர், சிங்களவன் காலில் மண்டியிடாமல் சுயமரியாதையுடன் வாழ்கின்றனர். 

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மது பானமான, தென்னங் கள் அல்லது பனங் கள் விற்கும் தவறணைகள், இன்றைக்கும் அங்கே காணப் படுகின்றன. தவறணைகளில் விற்கப்படும் கள்ளின் விலையும் மலிவு. அத்தோடு, இயற்கையில் கிடைக்கும், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காத சத்துள்ள பானம். யாழ்ப்பாண கள்ளிறக்கும் தொழிலாளர்களினால், உள்ளூரில் உற்பத்தி செய்யப் படுவதால், அதனால் கிடைக்கும் வருமானமும், யாழ்ப்பாண தமிழ் மக்களிடமே திரும்பிச் செல்கின்றது. 

இன்றைக்கும், பகலில் உழைத்துக் களைத்த கூலித் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் தான் கள்ளுத் தவறணைக்கு செல்கின்றனர். போலிக் கெளரவம் குறைந்து விடுமென்று நினைக்கும் தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், அந்தப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. அவர்களுக்காகத் தான் சிங்களவன் மதுக் கடைகளை திறந்து வைத்திருக்கிறான். 

தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், சிங்களவன் விற்கும் விஸ்கியையும், சாராயத்தையும் வாங்கிக் குடித்து விட்டு, தமிழ் தேசியம் பேசி, தமிழீழக் கனவு காண்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் பொழுது, தமிழ் பாட்டாளி வர்க்கத்தினர், உண்மையான தமிழ் தேசியவாதிகள். 


என்ன இருந்தாலும், பாட்டாளி வர்க்கத்திற்கு, எப்போதும் நாட்டுப் பற்று அதிகமாக இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~

Thursday, October 24, 2013

பொருளாதார நெருக்கடியால் தோற்றுப் போனவர்களின் குமுறல்கள்

நெதர்லாந்தில் நீடிக்கும் பொருளாதார மந்த நிலை காரணமாக, அடிக்கடி பலருக்கு வேலை பறிபோகின்றது. அதனால் மீண்டும் வேலையிழந்தவர் எண்ணிக்கை (கவனிக்க: "வேலையில்லாதவர்" என்ற சொல் எல்லா சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமானது அல்ல.) அதிகரித்து வருகின்றது. அப்படியான "தோற்றுப் போனவர்கள்" பட்டியலில் எனது பெயரும் இடம்பெற்றுள்ளது. "தோற்றுப் போனவர்களை" பொறுப்பேற்றுள்ள நகரசபை, வேலையிழந்தவர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்றை ஒழுங்கு படுத்தியிருந்தது. கடந்த வருடம், அதில் நானும் கலந்து கொண்டிருந்தேன். அங்கு எனக்குக் கிடைத்த அனுபவத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

"வேலை தேடும் பயிற்சிக்கு" சமூகமளித்தவர்களில், 90% மானோர் மூன்றாமுலக நாடுகளில் இருந்து வந்த, வந்தேறிகுடிகள் சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்தினார்கள். மிகுதியாக உள்ள டச்சு பூர்வீக வெள்ளையினத்தவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் 10 - 30 வருடங்கள் வேலை செய்த பின்னர் பணிநீக்கம் செய்யப் பட்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

மேற்கத்திய நாடுகளில் பொருளாதார பிரச்சினை ஏற்படும் போது, வந்தேறுகுடிகளும், வயதானவர்களும், அங்கவீனர்களும் அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். முதலாளிகளால் பாகுபாடு காட்டப் படுகின்றனர். (இந்த உண்மையை பயிற்சியளிக்க வந்த அதிகாரிகளே ஒத்துக் கொள்கின்றனர்.) சில வருடங்களுக்கு முன்னர், இப்படியான பலவீனமான சமூகப் பிரிவினரை பணியில் அமர்த்தும் நிறுவனத்திற்கு, அரசு மானியம் அளித்தது. அதனால், முதலாளிகளும் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். தற்போது அந்த அரசு மானியங்கள் நிறுத்தப் பட்டு விட்டன. அதனால், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் மத்தியில் வேலையற்றவர் எண்ணிக்கை அதிகம். 

ஒரு முதலாளித்துவ சமூகத்தில் வேலையிழந்தவர்கள், தம்மை   "தோற்றுப்போனவர்கள்" என்று நினைத்துக் கொண்டிருக்கும், "வெற்றி பெற்றவர்களின்" மமதையை வெறுக்கின்றனர்.  அரசு, முதலாளிகள் மீதான தார்மீக கோபம் பல தருணங்களில் வெளிப்படுகின்றது. அப்போதெல்லாம், "மரியாதையாக பேசுமாறு" அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். உண்மையில் தம்மிடமும் அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்த, பயிற்சியளிக்கும் அதிகாரிகள், சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுகின்றனர்.

வேலையிழந்த மக்களுக்கு அரசு கொடுக்கும் உதவித் தொகையும், அவர்களின் கோபாவேச உணர்வுகளை ஆற்றுப் படுத்த உதவுகின்றது. இல்லாவிட்டால், இந்த நாடுகளில் எப்போதோ வர்க்கப் புரட்சி வெடித்திருக்கும். மேலும் அந்த உதவித் தொகை, வேலை செய்யும் காலத்தில் நாங்கள் சேமிக்கும் காப்புறுதி பணமாகும். இதனை பெறுவதற்கு, ஒருவர் குறிப்பிட்ட காலம் வேலை செய்திருப்பது அவசியம். உதாரணத்திற்கு, 18 வயதான நபர் படித்து முடித்த பின்னர் வேலையில்லாமல் இருந்தால், அவருக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது. அப்படியானவர்கள் பெற்றோருடன் தங்கிக் கொள்கின்றனர். 

மேற்கத்திய நாடுகளில் பாலும், தேனும் ஆறாக ஓடுவதாக, தெற்காசிய நாடுகளில் வசிப்போர் நினைத்துக் கொள்கின்றனர். மேற்கத்திய நாடுகளில், உழைக்கும் வர்க்கம் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கும் விலை பற்றிய அறிவு பூஜ்ஜியமாக உள்ளது. வணிக நோக்கம் கொண்ட தமிழ் ஊடகங்களும் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. அதனால், மேலைத்தேய நாடுகளில் வாழும் உழைக்கும் வர்க்க மக்கள், சமூக வலைத் தளங்களில் மட்டுமே, தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடிகின்றது.

இந்த வருடம் நெதர்லாந்து நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் மந்த நிலையில் உள்ளதாக அறிவிக்கப் படுகின்றது. சாதாரண பொது மக்களும் அதனை உணர்கின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரி ஏதாவது ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. மறுபக்கத்தில் அரசு வழங்கி வந்த மானியங்கள் வெட்டப் படுகின்றன. இதனால் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்றது.

சாதாரண மக்கள் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, முதலாளிகளின் வருமானம் உயர்ந்து கொண்டு செல்கின்றது. இன்றைய காலங்களில், பெரிய நிறுவனங்களை தலைமை நிர்வாகிகளை கொண்ட சிறு குழுக்களே நிர்வகிக்கின்றன. இந்த தலைமை நிர்வாகிகளின் சம்பளம் (?), அந்த நிறுவனத்தில் பிற ஊழியர்களுக்கு கிடைப்பதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. சில இடங்களில், இருபது மடங்கு, அல்லது முப்பது மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறார்கள்.

தலைமை நிர்வாகிகளின் வருமானம், வெறும் சம்பளத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. அதே நிறுவனத்தில் அவர்களும் பங்குதாரராக இருக்கின்றனர். பங்குகளின் பெறுமதி உயர்வதால் கிடைக்கும் இலாபத் தொகை தனியானது. சாதாரண ஊழியர்களுக்கு அப்படியான வருமானம் எதுவும் கிடையாது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பிற ஊழியர்கள், வேலை போய் விடும் என்ற பயத்தில், குறைந்த சம்பளம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள்.

"ஐயா, நாம் வேலை செய்யும் நிறுவனம் அதிக இலாபம் சம்பாதிப்பதால், எங்களுடைய சம்பளத்தை கூட்டித் தாருங்கள். அல்லது பெரிய மனது வைத்து, உங்களுடைய சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள்." இவ்வாறு தலைமை நிர்வாகிகளை பார்த்து கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. அதனால், இந்த அநியாயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நெதர்லாந்து பொருளாதாரம் பற்றி, அந்த நாட்டு பிரஜைகள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பொன்று அண்மையில் எடுக்கப் பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.

  • 52% பொருளாதாரம் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். 
  • 45% தற்போதுள்ள இதே நிலைமை தொடரும் என்று எதிர்பார்க்கிறார்கள். 
  •  3% மட்டுமே, பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறார்கள். 

கடந்த பல வருடங்களாக ஆட்சியில் அமர்ந்துள்ள, சமூக ஜனநாயக, லிபரல் கட்சிகளின் கூட்டணி, பொருளாதாரத்தை மிகவும் மோசமாக கையாள்வதாக மக்கள் நம்புகின்றனர். மிகப் பெரும்பான்மையான 74% மானோர், இந்த அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது, பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட ஒரு அரசாங்கம் ஆட்சி நடத்துகின்றது. இதற்குப் பெயர் ஜனநாயகமாம்!

வெளிநாட்டு ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தா விட்டாலும், நெதர்லாந்து நாட்டின் பொருளாதாரம், மோசமடைந்து வருகின்ற உண்மையை யாரும் மறைத்து விட முடியாது. 2008 ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் இருந்து, நெதர்லாந்து இன்னமும் மீளவில்லை. இந்த வருடம், வேலையற்றோர் எண்ணிக்கை 8 சத வீதமாக அதிகரித்துள்ளது.

நெதர்லாந்து போன்ற "பணக்கார நாட்டை" பொறுத்தவரையில் இது ஒரு பெரிய தொகை தான். இன்னொருவரில் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களும், வாரத்திற்கு குறிப்பிட்டளவு மணிநேரம், பகுதிநேர வேலை செய்பவர்களும் வேலையற்றோர் பதிவேட்டில் பதிவு செய்யப் படுவதில்லை. இதனால், உண்மையான வேலையற்றோர் எண்ணிக்கை இரு மடங்காக இருக்கலாம்.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

Monday, October 21, 2013

டென் மார்க்கை அதிர வைத்த "கம்யூனிச சிறப்புப் படையணி"!


" டென் மார்க் நாட்டில், 
இப்படி எல்லாம் நடந்தது என்று சொன்னால், 
இன்றைக்கும் யாரும் நம்ப மாட்டார்கள்!"

எழுபதுகளில், கம்யூனிச ஆயுதக் குழுக்கள் இயங்காத மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதுவும் இல்லையெனலாம். வியட்நாம் போரின் எதிர்விளைவாக தோன்றிய மாணவர் போராட்டங்களின் விளைவாக, அந்த ஆயுதக் குழுக்கள் தோன்றி இருந்தன. பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தன. டென்மார்க்கும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

அன்றிருந்த ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் யாவும், "டென்மார்க் கம்யூனிஸ்ட் கட்சி" க்கும் ஏற்பட்டன. டென்மார்க் கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், குருஷேவின் நிலைப்பாட்டை ஆதரித்து வந்தது. அது கட்சிக்குள் பிளவை உண்டாக்கியது.

குறிப்பாக கட்சியின் இளைஞர் அணியினர், குருஷேவின் திருத்தல்வாதப் போக்கிற்கு எதிராக கடுமையாக வாதிட்டு வந்தனர். இதனால் அவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. Gotfred Appel தலைமையில் பிரிந்து சென்ற அணியினர், அன்று ஸ்டாலின் பக்க நியாயங்களை பேசிக் கொண்டிருந்த மாவோ வினை தமது ஆதர்ச நாயகனாக கருதினார்கள். அந்தக் குழுவினர், "கம்யூனிச சிறப்புப் படையணி" (டேனிஷ் மொழியில்: Kommunistisk ArbejdsKreds) என்ற பெயரில் இயங்கினார்கள்.

அப்போது வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்ததால், "வியட்நாம் கமிட்டி" என்ற பெயரில் பகிரங்கமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டனர். பெரும்பாலான டேனிஷ் மக்கள், அமெரிக்காவின் வியட்நாம் போரினை எதிர்த்து வந்ததால், அமைப்பிற்கு மக்கள் ஆதரவை திரட்ட முடிந்தது. ஆயினும், எழுபதுகளின் தொடக்கத்தில் வியட்நாம் போர் முடிவடைந்த பின்னர், ஆர்வலர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இதற்கிடையே, மாவோவின் செஞ்சீனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட டேனிஷ் கம்யூனிஸ்டுகள், முதன்முதலாக "மாவோவின் மேற்கோள்கள்" நூலை டேனிஷ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தனர். இவ்வாறு, மெல்ல மெல்ல மூன்றாமுலக அரசியலுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். ஆனால், ஒரு கட்டத்தில், சீனாவுக்கும், டேனிஷ் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான தொடர்பு அறுந்தது. அன்றைய காலங்களில், மேற்கத்திய நாடுகளில் இடம்பெற்ற மாணவர் போராட்டம், "ஒரு குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சி" என்ற நிலைப்பாட்டை டேனிஷ் மாவோயிஸ்டுகள் எடுத்திருந்தமையே பிளவுக்கு காரணம்.

கம்யூனிச சிறப்புப் படையணி (KAK) ஸ்தாபகர், Gotfred Appel தெரிவித்த கருத்துக்கள், அன்றைய மேற்கு ஐரோப்பிய கம்யூனிச ஆயுதக் குழுக்கள், தமது போராட்டத்தை நியாயப் படுத்திய கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. "மூன்றாமுலக வறிய நாடுகளில் சுரண்டப்படும் மூலதனமானது, டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பயன்படுகின்றது. அதனால், டென்மார்க்கின் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ வேண்டிய பிரிவினர் கூட, மத்தியதர வர்க்கத்தின் தகுதிக்கு உயர்த்தப் படுகின்றனர். அந்தப் பிரிவினர், முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்காக கொடுக்கப்படும் இலஞ்சம், டென்மார்க் போன்ற நாடுகளில் கம்யூனிசப் புரட்சியை பின்போடுகின்றது. அதனால், தனது நாட்டில் கம்யூனிச அரசமைக்க விரும்பும் மேற்கத்திய கம்யூனிஸ்ட் ஒருவர், முதலில் மூன்றாமுலக நாடுகளின் விடுதலைக்காக போராட வேண்டும்."

கட்சியின் சார்பில், ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு உடைகளை அனுப்பும் தொண்டு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. டேனிஷ் மொழியில் Tøj til Afrika (TTA) என்ற பெயரிலான அமைப்பின் பெயரில், டென்மார்க் முழுவதும் பிரச்சாரம் செய்து, தொன் கணக்கில் பாவித்த உடைகளை சேகரித்து, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அனேகமாக, மொசாம்பிக், அங்கோலா, கினே பிசாவு போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆண்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கே ஆடைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. அந்த தொண்டு நிறுவனம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தாலும், பிற்காலத்தில் இடம்பெறப் போகும் இரகசிய வேலைத் திட்டங்களுக்கு முன்னேற்பாடாக பயன்பட்டது. TTA அமைப்பின் ஊடாக தெரிவான சிலர், இன்னொரு இரகசிய கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை உணர்ந்தனர்.

அந்தக் காலத்தில், லெபனானில் தளம் அமைத்து இயங்கிய பாலஸ்தீன மார்க்சிய இயக்கமான PFLP, சர்வதேசப் புரட்சி ஒன்றை உருவாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வந்தது. பல உலக நாடுகளை சேர்ந்த புரட்சியாளர்களுக்கு லெபனானில் ஆயுதப் பயிற்சி வழங்கியது. (அன்றிருந்த லெபனானில் உள்நாட்டுப் போர் காரணமாக, அரசு இயந்திரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.பாலஸ்தீன கெரில்லா இயக்கங்கள் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.) அதற்காக, மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் தெரிவு செய்யப் பட்டு அனுப்பி வைக்கப் பட்டனர்.

டென்மார்க்கில் இருந்து, Niels Jørgensen என்பவரும், இன்னொருவரும் பயிற்சிக்காக லெபனான் சென்றனர். PFLP வெளிநாட்டு இளைஞர்களுக்கு இலவச பயிற்சி கொடுத்தாலும், சில நேரம் அவர்களையும் ஏதாவதொரு தாக்குதல் நடவடிக்கைக்கு அனுப்புவது வழக்கம். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில், மற்றைய டேனிஷ் உறுப்பினர் இயக்கத்தில் இருந்து விலகி விட்டார்.  பல வருடங்களுக்குப் பின்னர், டேனிஷ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த Niels Jørgensen, தனது லெபனான் முகாம் வாழ்க்கை பற்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Niels Jørgensen கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து: " லெபனானில் PFLP நடத்திய பயிற்சி முகாமில், பன்னாட்டு போராளிகள் தங்கி இருந்தார்கள். வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அனைவரிடமும் ஒரே குறிக்கோளுக்காக போரிடும் தோழமை உணர்வு காணப்பட்டது. இராணுவப்  பயிற்சியுடன் நில்லாது, பாலஸ்தீன போராளிகளுடன் இணைந்து, இஸ்ரேலிய படையினருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டோம். எமது முகாமில் சிறிலங்காவை சேர்ந்த சிலரும் தங்கி இருந்தனர்."

அவர் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா நாட்டவர்கள், ஈழ விடுதலைப் போராளிகள் ஆவர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அன்றைய காலகட்டத்தில், ஈரோஸ் இயக்கமே லெபனான் பயிற்சிக்காக போராளிகளை அனுப்பி வந்தது. ஆயினும், ஈரோஸ் ஊடாக புலிகள் இயக்கப் உறுப்பினர்களும் சென்றுள்ளனர். பிற்காலத்தில் புலிகள் அமைப்பபில் இருந்து பிரிந்த புளொட் இயக்கமும், லெபனான் பயிற்சிக்கு போராளிகளை அனுப்பி வந்தது.

இதற்கிடையே, பாரிஸ் நகரில் இயங்கிய PFLP தொடர்பாளர் மிஷேல் முக்காபல், ஐரோப்பிய புரட்சியாளர்களுடன் தொடர்புகளை பேணி வந்தார். மிஷேலின் நடமாட்டத்தை பின்தொடர்ந்து அவதானித்த பிரெஞ்சு உளவுத்துறை, ஒரு நாள் அவரை திடீரென கைது செய்தது. ஆயினும், அந்த செய்தியை வெளியே கசிய விடாமல், மிஷேல் முக்காபலிடம் இருந்து பல தகவல்களை திரட்டியது. இறுதியில், பிரெஞ்சுப் போலிசுக்கு ஆட்களை காட்டிக் கொடுக்க சம்மதித்த முக்காபல், கார்லோஸ் என்ற வெனிசுவேலா தீவிரவாதியின் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், "துரோகி" முக்காபலையும், பிரெஞ்சு அதிகாரிகளையும் சுட்டுக் கொலை செய்த கார்லோஸ் தப்பி ஓடி விட்டார். 

இருப்பினும், முக்காபல் கொடுத்த பட்டியலில் இருந்த ஐரோப்பிய ஆயுதக் குழுக்கள் பற்றிய விபரங்கள், அந்தந்த நாடுகளை சேர்ந்த பொலிஸ் புலனாய்வாளர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டன. அதிர்ஷ்டவசமாக, டேனிஷ் இயக்கத்தின் பெயரை பிரெஞ்சுக்காரர்கள் தவறாக எழுதி விட்டனர். அதனால் KAK உறுப்பினர்கள், இன்னும் சில காலத்திற்கு போலிசின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இயங்க முடிந்தது.

KAK பிற்காலத்தில், "கம்யூனிச செயற்குழு" (டேனிஷ் மொழியில்: Kommunistisk Arbejdsgruppe) என்ற பெயரில் இயங்கியது. அதன் உறுப்பினர்கள் தலைமறைவாக இயங்கினாலும், சாதாரண மக்களைப் போல வேலைக்கு போய் வந்து கொண்டிருந்தனர். வேலை செய்யும் இடத்தில், தமது அரசியல் கொள்கைகளை பற்றி யாருடனும் பேச மாட்டார்கள். தமது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்புகளை குறைத்து வந்தனர். 

பல பெயர்களில் அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுகளை வைத்திருந்தார்கள். தமது இயக்கத் தோழர்களுடன் மட்டுமே நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தனர். இயக்க உறுப்பினர்கள் ஒன்று கூடி விவாதிப்பதற்கு, தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். இது போன்ற முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் காரணமாக, டேனிஷ் பொலிஸ் அவர்களைப் பற்றி துப்புத் துலக்க முடியவில்லை. சுருக்கமாக, அந்தக் குழுவினர் ஒரு இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

டேனிஷ் கம்யூனிச ஆயுதக் குழுவுக்கு, ஒரு காலத்தில் PFLP நிதியும், சிறு ஆயுதங்களும் வழங்கியது. ஒரு தடவை, புதுவருட கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பதை போர்வையாக பயன்படுத்தி, டேனிஷ் குழுவினர் ஒரு காட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி எடுத்துள்ளனர். ஆயினும், அவர்கள் டென்மார்க்கில் எந்தவொரு தாக்குதலிலும் ஈடுபடவில்லை. டென்மார்க்கில் KAK, KA அமைப்பினரின் முக்கியமான நடவடிக்கை, கொள்ளையடிப்பது. பொலிஸ் அதனை கிரிமினல் செயலாக கருதியது, ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் அது ஒரு புரட்சிகர போராட்டம். டேனிஷ் பணக்காரர்களின் செல்வத்தை கொள்ளையடித்து, ஏழை நாட்டு மக்களின் போராட்டத்திற்கு கொடுப்பது நியாயமானதாக நம்பினார்கள். இன்னொரு விதமாக சொன்னால், "நவீன கால ரொபின்ஹூட் போராட்டம்."

டென்மார்க் கம்யூனிஸ்டுகள், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு நிதி சேகரிப்பதற்காக, பல கிரிமினல் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். டென்மார்க்கின் பல இடங்களில், தபால் நிலையத்திற்கு பணத்தை எடுத்துச் செல்லும் வண்டிகள், வழியில் மறித்து, ஆயுதமேந்திய நபர்களினால் கொள்ளையடிக்கப் பட்டன. இரண்டு, மூன்று தடவைகள் நடந்த தபால் நிலைய கொள்ளையில், ஒவ்வொரு தடவையும் பல இலட்சம் டேனிஷ் குரோணர்கள் கிடைத்தன. தபால் வங்கிகள் தவிர, சில பல்பொருள் அங்காடிகளும் கொள்ளையடிக்கப் பட்டன.

அதைத் தவிர, போலியான வரிப் பத்திரங்கள் அனுப்புதல், போலியான சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்தல், மணி ஓடர் திருட்டு போன்றவற்றால் பல இலட்சம் குரோணர்கள் வருமானம் கிடைத்தது. கொள்ளையடிக்கப் பட்ட பணத்தில் பெரும்பகுதி, PFLP க்கு அனுப்பி வைக்கப் பட்டது. டென்மார்க்கில் இருந்து பணம் அனுப்புவது இலகுவாக இருந்தது. ஆனால், ஆயுதங்கள் அனுப்புவது கடினமான காரியமாக இருந்தது. அப்படியும் சில ஆயுதங்கள் பாலஸ்தீனத்திற்கு (லெபனானுக்கு) கடத்தப் பட்டுள்ளன.

பணம், ஆயுதம் தவிர, தொலைத்தொடர்பு கருவிகள், மருந்துகள், கமெராக்கள், போன்றனவும் வாங்கி அனுப்பப் பட்டன. இந்த உதவிகள் எல்லாவற்றையும், பாலஸ்தீன போராளிக் குழுக்களுடன் தொடர்பில் இருந்த, ஐரோப்பிய தோழர்கள் செய்து கொடுத்தனர் என்பதை, இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டும். புலிகள் இயக்கத்திற்கு தேவையான நிதி, ஆயுதங்கள், கருவிகள் என்பன வெளிநாட்டுத் தொடர்பாளர்களால் அனுப்பப் பட்டன. ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். ஒரு தேசியவாத அமைப்பிற்கும், கம்யூனிச அமைப்பிற்கும் இடையிலான வித்தியாசம் அது தான். அதாவது, தேசியவாதிகளை குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே ஆதரிப்பார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் இருப்பார்கள்.

1982 ம் ஆண்டு, டேனிஷ் குழுவினர், சுவீடனுக்குள்ளும் தமது கரங்களை நீட்டினார்கள். சுவீடிஷ் இராணுவத்தின், ஆயுதக் களஞ்சிய நிலையம் உடைக்கப் பட்டது. அங்கிருந்து பல நவீன சுவீடிஷ் ஆயுதங்கள் கொள்ளையடிக்கப் பட்டன. தானியங்கி துப்பாக்கிகள், குண்டுகள், கண்ணிவெடிகள், இவற்றுடன் பசூகா மோட்டார் ஆயுதங்கள் களவாடப் பட்டு, டென்மார்க்கில் ஒரு மறைவிடத்தில் பதுக்கி வைக்கப் பட்டன. ஆனால், அந்த ஆயுதங்களை பாலஸ்தீனம் வரையில் கடத்திக் கொண்டு செல்ல முடியவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக இருந்தது. அதனால், சுவீடனில் செய்ததைப் போன்று, நோர்வே இராணுவத்தின் களஞ்சிய அறையை உடைக்கும் திட்டம் ஒன்று பின்போடப் பட்டது.

டேனிஷ் புரட்சிக் குழுவினர் கொள்ளையடிக்க செல்லும் பொழுது, முகமூடி அணிந்து இருப்பார்கள். ஆயுதந் தரித்திருப்பார்கள். ஆனால், முடிந்த அளவுக்கு யாரையும் சுட்டுக் காயப் படுத்தாமல் கச்சிதமாக வேலையை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தார்கள். 1988 ம் ஆண்டு, கோப்பென்ஹேகன் மத்திய தபால் நிலையம் கொள்ளையடிக்கப் பட்டது. அதுவே கடைசிக் கொள்ளையும், முதலாவது பொலிசாருடனான மோதல் சம்பவமுமாகும். அன்று மில்லியன் கணக்கான குரோணர்கள் கொள்ளையடிக்கப் பட்டது. ஆயினும், எதிர்பாராவிதமாக கொள்ளையடிக்கப் பட்ட உடனேயே பொலிஸ் ஸ்தலத்திற்கு வந்து விட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு பொலிஸ்காரர் கொல்லப் பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் அதிகரித்தன.

பொலிசாரின் தேடுதல் வேட்டையில், சில KAK உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். ஆனால், இயக்கத் தலைமயைகம் எங்கே இருக்கின்றது என்பதையும், முக்கிய உறுப்பினர்களையும், சாட்சியங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 1989 ம் ஆண்டு, முற்றிலும் எதிர்பாராத ஓர் இடத்தில் இருந்து, பொலிசாருக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்தது. கோபென்ஹெகன் நகரில், ஒரு கார் விபத்து நடந்ததாக பொலிசாருக்கு தகவல் வந்தது. விபத்தில் சிக்கி, மயக்கமுற்ற நிலையில் இருந்த நபரை மருத்துவமனையில் சேர்ப்பித்த போலீசார், காரை சோதனை இட்டார்கள். பணம் கட்டிய சீட்டு ஒன்றை கண்டெடுத்த பொலிசார், அதிலிருந்த முகவரிக்கு சென்றார்கள். அந்த முகவரியின் பெயர்: Blekinge gade (பிளெக்கிங்கே வீதி).

விபத்தில் சிக்கிய நபரின் பெயர் Carsten Nielsen. பிளெக்கிங்கே வீதியில் இருந்த வீடு, இரகசிய கூட்டங்களுக்கும், ஆயுதங்களை பதுக்கி வைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப் பட்டது. அந்த வீட்டின் செலவுகளை, வங்கி மூலம் கட்டுவதில்லை. நேரடியாக பணத் தாள்களை எண்ணிக் கொடுப்பார்கள். அந்தளவு முன்னெச்சரிக்கையாக நடந்தும், ஒரு விபத்து காட்டிக் கொடுத்து விட்டது.

பிளெக்கிங்கே வீதி வீட்டிற்குள், இரகசிய அறைக்குள் இருந்து பல ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டன. அவை யாவும் பாலஸ்த்தீனத்திற்கு அனுப்பப்பட இருந்தவை. 2 மே 1989, நடந்த அந்த சம்பவம், டென்மார்க் ஊடகங்களின் தகவல் பசிக்கு தீனி போட்டது. அந்த நாளில் இருந்து, இரகசிய புரட்சிக் குழுவினர், ஊடகங்களின் பார்வையில் "Blekingegadebanden" (பிளெக்கிங்கே வீதி கோஷ்டி) என்று அழைக்கப் பட்டனர்.

பொலிசிடம் அகப்பட்ட KAK உறுப்பினர்கள் பலர், நீதிமன்றத்தினால் பத்து வருடத்திற்கும் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டனர். எப்போதும் அமைதியாக இருக்கும் டென்மார்க் நாட்டில், Blekingegadebanden பற்றிய கிளர்ச்சியூட்டும் பரபரப்பு செய்திகள், மக்கள் மத்தியில் வருடக் கணக்காக பேசப் பட்டன. டென்மார்க்கிற்கு வெளியே, ஸ்கன்டிநேவிய நாடுகளில் மட்டுமே அதைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். பிற உலக நாடுகளில், டென்மார்க்கில் இப்படி ஒரு ஆயுதக்குழு இயங்கியதை பற்றிக் கேள்விப் பட்டிருப்பார்கள் என்பது சந்தேகமே. 

டென்மார்க்கில் இயங்கிய இரகசியமான கம்யூனிஸ்ட் ஆயுதக்குழு பற்றி, தமிழ் மொழியில் எழுதப்பட்ட முதலாவது கட்டுரை இதுவாகத் தான் இருக்கும். இன்றைக்கும், Blekingegadebanden பற்றிய நூல்கள், ஆவணப் படங்கள் யாவும் ஸ்கன்டிநேவிய மொழிகளில் மட்டுமே உள்ளன. டேனிஷ் எழுத்தாளரான Peter Øvig Knudsen இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். 1.Blekingegadebanden – Den danske celle 2."Blekingegadebanden - Den hårde kerne" ஆகிய நூல்கள், இந்தக் கட்டுரை எழுதுவதற்கு பெரிதும் உதவியுள்ளது. நான் அவற்றை நோர்வீஜிய மொழிபெயர்ப்பில் வாசித்தறிந்தேன். எங்காவது ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்திருக்கிறதா என்ற தேடலை, வாசகர்களான உங்களிடமே விட்டு விடுகிறேன்.

*******************

டென்மார்க் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.டென்மார்க்கினுள் ஒரு பொதுவுடைமை சமுதாயம்
2.டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது
3.அகதிகளை அடித்து வதைக்கும் டென்மார்க் போலிஸ் குண்டர்கள்

Saturday, October 19, 2013

கிரனடா புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் நினைவாக...


இன்று (19 October), மொரிஸ் பிஷப்பின் (Maurice Bishop) முப்பதாவது நினைவு தினம். யார் அவர்?

மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பது குறைவு. மக்கள் நலன் பேசி பதவிக்கு வந்த பின்னர், தன்னலம் கருதி பணத்தை பதுக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில், மொரிஸ் பிஷப் வித்தியாசமானவர். முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடான கிரனடாவில், மக்களின் தேவை உணர்ந்து செயலாற்றிய முதலாவதும், கடைசியுமான பிரதமர் அவர் தான். மூன்றாமுலக ஏழை நாட்டை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம். சின்னஞ்சிறு தீவின் முக்கிய பொருளாதாரமான சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள்.... அடடா! இதெல்லாம் கம்யூனிசம் ஆச்சே! 

உலகில் எங்காவது கம்யூனிசம் துளிர் விட்டால், அதனை நசுக்குவதை தனது நோக்கமாக கொண்ட அமெரிக்கா, ஒரு குட்டி நாடான கிரனடா மீது படையெடுத்தது. என்ன காரணம்? இதற்கெல்லாம் யாராவது காரணம் கேட்பார்களா? நமக்குத் தான் அது ஒரு படையெடுப்பு. அமெரிக்கர்களுக்கு இராணுவப் பயிற்சி. எத்தனை காலம் தான் கண்ணால் காணாத எதிரியுடன் போலியான மோதல் நடத்திக் கொண்டிருப்பது? நிஜமாகவே ஒரு நாட்டைப் பிடித்து, நிஜமான மனிதர்களைக் கொல்லும், நிஜமான இராணுவப் பயிற்சி. 

கிரிக்கட் இரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான, மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்று கிரனடா. வெனிசுவேலா நாட்டுக்கு மேலே, சுமார் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறு தீவு. முன்னூறு சதுர கிலோமீட்டரே அளவான குட்டி நாடு. பிரிட்டனின் காலனியாக இருந்ததால், இன்றைக்கும் அங்கே ஆங்கிலமே உத்தியோகபூர்வ மொழி. பெரும்பான்மையான மக்கள் ஆப்பிரிக்க கறுப்பின வம்சாவளியினர். பொதுநலவாய நாடுகளில் உறுப்புரிமை பெற்ற கிரனடா இன்றைக்கும், பிரிட்டிஷ் மகாராணியின் தலைமையை ஏற்றுக் கொண்ட, பாராளுமன்ற அமைப்பை கொண்டுள்ளது. 

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், பாராளுமன்றத்தில் மார்க்சிய எதிர்க் கட்சியாக வீற்றிருந்த New Jewel Movement (NJM), 1979 ஆம் ஆண்டு ஒரு சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது. சோஷலிசப் புரட்சியில் நம்பிக்கை கொண்ட அந்தக் கட்சி, ஏற்கனவே ஒரு இரகசியமான மக்கள் இராணுவத்தை உருவாக்கி இருந்தது. சதிப்புரட்சியின் பின்னர், காலனிய கால சட்டங்கள் அனைத்தும் உடனடியாக இரத்து செய்யப் பட்டன. புதியதொரு அரசமைப்பு சட்டம் இயற்றப் பட்டது. "புரட்சிகர மக்கள் அரசு" ஸ்தாபிக்கப் பட்டது. அதன் பிரதமராக மொரிஸ் பிஷப் என்ற வழக்கறிஞர் தெரிவு செய்யப் பட்டார். 

பிரிட்டிஷ் காலனிய மேற்கிந்தியத் தீவுகளில் உருவான, முதலாவது சோஷலிச நாடு அதுவாகத் தானிருக்கும். NJM மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை வழிகாட்டியாக கொண்டியங்கியது. உலகின் பிற சோஷலிச நாடுகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பாக, அயலில் இருந்த கியூபாவுடன் நெருங்கிய தொடர்பை பேணியது. கியூபாவின் உதவியுடன், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம் என்பன இலவசமாக வழங்கப் பட்டன. 

கரீபியன் கடல் பிரதேசத்தில் அமைந்துள்ள கிரனடா தீவு, உல்லாசப் பயணிகள் சொர்க்கமாக கருதுமளவிற்கு இயற்கை வளம் நிறைந்தது. அதற்கு அயலில் இருக்கும் தீவுகளுக்கு, வருடந்தோறும் உல்லாசப் பயணிகள் தமது விடுமுறையைக் கழிக்க சென்று வருகின்றனர். கிரனடாவுக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர வேண்டுமென்றால், ஒரு சிறந்த சர்வதேச விமான நிலையம் அவசியம். அதற்கான திட்டம், பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்திலேயே தொடங்கப் பட்டது. ஆனால், மொரிஸ் பிஷப் அரசில் தான் அது நடைமுறைக்கு வந்தது. 

சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு கியூபா உதவி செய்தது. கியூப பொறியியலாளர்களும், பணியாளர்களும் வந்திறங்கினார்கள். விமான நிலையம் கட்டப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அமெரிக்காவில் அன்றிருந்த ரீகன் அரசு, தனது கண்டனத்தை தெரிவித்து வந்தது. அப்போது பணிப்போர் காலகட்டம். அதனால், "சோவியத் யூனியனும், கியூபாவும் சேர்ந்து, கிரனடாவில் ஒரு இராணுவ விமானத் தளம் கட்டுவதாக" பிரச்சாரம் செய்தது. அமெரிக்காவில் இருந்து சென்ற உண்மை அறியும் குழுவினர், "அது இராணுவத் தளம் அல்ல. வணிக நோக்கத்திற்காக கட்டப்படும் பயணிகள் விமான நிலையம்." என்று அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால், அந்த அறிக்கையை வாங்கி குப்பைத் தொட்டிக்குள் போட்ட ரீகன் அரசு, தொடர்ந்தும் கிரனடா பற்றிய கட்டுக்கதைகளை பரப்பி வந்தது. 

இதற்கிடையே கிரனடாவில், ஆளும் கட்சிக்குள் பிளவு தோன்றியது. மொரிஸ் பிஷப்புடன் முரண்பட்ட, Bernard Coard தலைமையிலான குழுவொன்று அதிகாரத்தை கைப்பற்றியது. மொரிஸ் பிஷப் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். ஆனால், எதிர்ப்புரட்சியாளர்களின் எண்ணம் ஈடேறவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த மொரிஸ் பிஷப் கைது செய்யப்பட்ட சம்பவம், கிரனடா முழுவதும் மக்கள் எழுச்சியை தூண்டி விட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த மொரிஸ் பிஷப், மகத்தான மக்கள் போராட்டத்தினால் விடுதலை செய்யப் பட்டார். உண்மையாகவே மக்களின் நலன் கருதி கடமையாற்றும் தலைவர்களை, மக்கள் என்ன விலை கொடுத்தும் பாதுகாப்பார்கள் என்பதற்கு, மொரிஸ் பிஷப்பின் வரலாறு ஒரு உதாரணம். 

விதி வலியது என்பார்கள். நிலைமையை கட்டுப்படுத்தும் வழி தெரியாத எதிர்ப்புரட்சிக் கும்பல், மொரிஸ் பிஷப்பையும், அவரது ஆதரவாளர்கள் சிலரையும் சுட்டுக் கொன்றனர். 19 ஒக்டோபர் 1983, கிரனடா மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத துயர நாள். அன்று தான் மொரிஸ் பிஷப் படுகொலை செய்யப் பட்டார். மொரிஸ் பிஷப் படுகொலை செய்யப் பட்ட பின்னர், எதிர்ப்புரட்சி அரசு நீண்ட காலம் நிலைக்கவில்லை. அந்த சம்பவம் நடந்து சில நாடகளில், அமெரிக்க மரைன் படைகள் கிரனடா தீவை சுற்றி வளைத்தன. 

25 October 1983, அமெரிக்கப் படையெடுப்பு ஆரம்பமாகியது. அப்போது நடந்த சண்டையில் சில நூறு பேர் கொல்லப் பட்டனர். அமெரிக்கப் படையினரின் இலக்கு, கியூப பொறியியலாளர்களாக இருந்தது. குறைந்தது ஐம்பது கியூபர்கள் ஆக்கிரமிப்பாளர்களினால் கொல்லப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்பை எதிர்த்து, ஐ.நா.சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனாலும் என்ன நடந்தது? ஏழு வருடங்களுக்குப் பின்னர், குவைத் மீது படையெடுத்த ஈராக், ஐ,நா, வினால் கடுமையாக தண்டிக்கப் பட்டது. பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் பட்டன. 

அமெரிக்காவுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச கண்டனம் குறித்து அந்த நாடு எள்ளளவும் கவலைப் படவில்லை. "அமெரிக்காவைக் கண்டால் ஐ.நா.வும் நடுங்கும்," என்பது ஒரு புதுமொழி. மொரிஸ் பிஷப் படுகொலைக்கு பழிவாங்க காத்திருந்த சிலர், அமெரிக்கப் படையெடுப்பை வரவேற்றதில் வியப்பில்லை. ஆனால், அமெரிக்கா படையெடுத்த நோக்கம் வேறு. "கிரனடாவில் கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்தி விட்டதாக," அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்தது. உண்மை அதுவல்ல. அது உலகிற்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. அமெரிக்காவின் கூட்டாளியான, பிரிட்டன் கூட படையெடுப்பை வன்மையாகக் கண்டித்ததில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம்.

கிரனடா படையெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர், லெபனான் போரில் அமெரிக்கப் படைகள் கடுமையான அடி வாங்கி இருந்தன. வியட்நாம் போருக்குப் பின்னர், அது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருந்தது. அந்தத் தோல்வியை மறப்பதற்காக, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வல்லமையற்ற குட்டி நாடான கிரனடா மீது படையெடுத்து, தனது "வீரத்தை" காட்டி இருக்கலாம். புதிதாக உற்பத்தி செய்த, நவீன அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி பார்ப்பதற்கு ஒரு பயிற்சிக் களம் தேவைப் பட்டிருக்கலாம். இல்லாவிட்டால், அப்படி எந்தக் காரணமும் தேவையில்லை. அமெரிக்கப் படையினர், இதையும் "ஒரு வீடியோ கேம் விளையாட்டு" என்று கருதி இருக்கலாம். 

எது எப்படி இருப்பினும், எந்த விமான நிலையக் கட்டுமானப் பணிகளை காரணமாகக் காட்டி, அமெரிக்கா படையெடுப்பை நடத்தியதோ, அந்த விமான நிலையம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சர்வதேச விமான நிலையத்திற்கு, 2009 ம் ஆண்டு, கிரனடா கம்யூனிஸ்ட் தலைவர் மொரிஸ் பிஷப்பின் பெயர் சூட்டப் பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கம்யூனிசம் அழிந்து விட்டதாக, பனிப்போரில் வென்றவர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். கிரனடா தீவைப் பொறுத்த வரையில், கம்யூனிசம் இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.The Grenada Revolution Documentary - Part 1 from gov.gd on Vimeo.

The Grenada Revolution Documentary - Part 2 from gov.gd on Vimeo.

Monday, October 14, 2013

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு திறந்த மடல்


மேன்மை தங்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு,

தாங்கள் முதலமைச்சராக பதவியேற்ற தருணம் பார்த்து, வட மாகாண தமிழ்ப் பெண்களின் அவல நிலை குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. (Turning to sex work in Sri Lanka’s north; http://www.irinnews.org/report/98919/turning-to-sex-work-in-sri-lanka-s-north) அதனை தொகுத்து வெளியிட்ட அரசு சாரா தொண்டு நிறுவனம், முதலமைச்சரான தங்கள் கடமையை உணர்த்துவதற்காகவே, தக்க தருணம் பார்த்து வெளியிட்டிருப்பதாகத் தெரிகின்றது. இன்று வட மாகாணத்தில் வாழும் ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், குடும்ப வறுமை காரணமாக பாலியல் தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

"சமூகத்தில் இழிவாக கருதப் படும்", பாலியல் தொழில் செய்வோரின் எண்ணிக்கை பெருகுவதற்காக, அந்த சமூகம் தான் வெட்கப் பட வேண்டும். மாறாக, அபலைப் பெண்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. ஈழத்தில் கடந்த முப்பதாண்டு காலமாக நடந்த போரின் விளைவாக, பல்லாயிரக் கணக்கான பெண்கள் விதவைகளாகி உள்ளனர். அதனால், பல சமூகப் பிரச்சினைகள் எழுவது இயல்பு. உள்நாட்டுப் போர் நடந்த அனைத்து உலக நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினை அது. ஈழப்போர் முடிந்த பின்னர் நடைபெறும் வட மாகாண சபைத் தேர்தலில், தங்களையும், தங்கள் கட்சியையும் வாக்காளப் பெருமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவு செய்துள்ளனர். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தாங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்களது மாகாண சபையில், ஆனந்தி சசிதரன் என்ற பெண் உறுப்பினரும் இடம்பெற்றுள்ளார். போரினால் பாதிக்கப் பட்ட பெண்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, "பெண்கள் நலத்துறை அமைச்சு" ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு ஆனந்தியை அமைச்சராக்கலாம். ஆனந்தி கூட போரினால் பாதிக்கப் பட்ட ஒருவர் என்பது கூடுதல் தகுதியாக கொள்ளப்படும். அதன் மூலம், வட மாகாணப் பெண்களை பாலியல் தொழில் என்ற நரகத்தில் இருந்து மீட்டெடுக்கும் வழி வகைகளை ஆராயலாம். கொடூரமான போர் காரணமாக, கணவரை, அல்லது தகப்பனை இழந்த பெண்களே, குடும்பச் சுமையை தாங்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு செல்கின்றனர்.

யாழ்ப்பாண பழைமைவாத சமூகத்தில், பொதுவாக ஒரு ஆண் தான் வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமப்பது வழக்கம் என்பது தாங்கள் அறிந்ததே. குடும்பத்திற்காக உழைத்து வருமானத்தை ஈட்டித் தந்த, ஆண் துணையை இழந்த பெண்கள், குழந்தைகளை பராமரிக்க வசதியின்றி, பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். கணவன் போரில் மரணமடைந்ததால், அல்லது கானாமல்போனதால் பல பெண்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். வறுமையும், குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பும், அவர்கள் பாலியல் தொழிலை தெரிவு செய்யத் தூண்டிய காரணிகளாக உள்ளன.

வட மாகாணத்தில் நிலவும், அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளிய சமுதாயம், ஆண்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முனைப்புக் காட்டுகின்றது. அது சமூகத்தில் அரைவாசிப் பங்கினரான பெண்களை அடுப்படிக்குள் தள்ளுகின்றது. பெண்கள் வேலைக்கு போவதை தடுத்து, அவர்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை பராமரிப்பதற்காக படைக்கப் பட்டவர்களென போதிக்கின்றது. பெண்ணை வேலைக்கு அனுப்பாத மரபு, இன்றைக்கும் ஒரு சிறந்த சமூக விழுமியமாக பின்பற்றப் படுகின்றது. ஆகவே, தாங்கள் அமைக்கப் போகும் பெண்கள் நலத்துறை அமைச்சு இது போன்ற தடைகளை தகர்த்தெறியும் என்று நம்புகிறேன்.

மேலும், ஊருக்கு ஊர் முகாம்களை போட்டு தங்கியுள்ள சிங்கள படையினர், வட மாகாணத்தில் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளனர். அதனை அம்பலப் படுத்துவதன் மூலம், படை முகாம்களை அகற்றுமாறு அரசை நிர்ப்பந்திக்க முடியும். வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தை அகற்றுவது, உங்களது குறிக்கோளாக இருந்ததை தேர்தல் கால பிரச்சாரங்களின் போது அறிய முடிந்தது. கூடவே, "இராஜதந்திர போர்" பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். நல்லது. உலகில் பிற நாடுகளில், அன்னிய நாட்டுப் படைகள் முகாமிட்டிருப்பதால், பாதிக்கப் பட்டிருக்கும் மக்களுடன் ஒன்று சேர்ந்து, தங்களது இராஜதந்திரப் போரை முன்னெடுக்கலாம். அதனால் தமிழர்களின் உரிமைப் போர் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப் படும் வாய்ப்புண்டு.

உதாரணத்திற்கு, ஜப்பானில் ஒகினாவா தீவில் இருக்கும் அமெரிக்க படையினரின் முகாம், அந்தத் தீவின் கலாச்சார-பொருளாதார சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாக, ஈழத்திற்கும், ஜப்பானுக்கும் இடையிலான தொடர்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜப்பானில், இரண்டாம் உலகப் போர் முடிந்து அறுபதாண்டுகள் ஆகியும், அந்த நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள், இன்னமும் அங்கு நிலை கொண்டுள்ளன. குறிப்பாக, ஒக்கினாவா தீவு அமெரிக்க படைகளின் மேலாண்மையின் கீழ் உள்ளது. அங்கிருக்கும் அமெரிக்கப் படை முகாமை அகற்ற வேண்டுமென்று கோரி, ஒக்கினாவா தீவு மக்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். ஜப்பான், இலங்கைக்கு கொடை வழங்கும் முக்கிய நாடென்பதால், தங்களது இராஜதந்திரப் போரை ஜப்பானில் இருந்து ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே பல தடவைகள், ஜப்பான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமையும், தங்களுக்கு நினைவிருக்கலாம்.

வட மாகாணத்தில், முன்னொருபோதும் இல்லாத அளவு கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. அதற்காக தென்னிலங்கையில் இருந்து பெருமளவு சிங்களத் தொழிலாளர்கள் அழைத்து வரப் படுகின்றனர். இந்தத் தொழிலாளர்களும், பாலியல் தொழில் சந்தையில் நுகர்வோராக இருப்பதாக, தொண்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றியவுடன், தொழில் முனைவோரை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரலாம். அந்நிய அல்லது தென்னிலங்கை நிறுவனங்கள், குறிப்பிட்டளவு வட மாகாணத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றலாம். இதன் மூலம், வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், பாலியல் தொழிலும் நலிவடையும்.

வட மாகாணத்தில் நிலை கொண்டுள்ள படையினரும், கட்டுமானத் தொழிலாளர்களும் சிங்களவர்கள் தான். அதை சுட்டிக் காட்டி,  "சிங்களவர்கள் எமது மண்ணை சுரண்டி, எமது மக்களை நாசமாக்குகிறார்கள்..." என்று இனவாதம் பேசலாம். ஆனால், பிரச்சினை அத்தோடு முடியப் போவதில்லை. கருப்பு-வெள்ளை அரசியல் தேர்தலில் வாக்குகளை பெற்றுக் கொடுக்கலாம். ஆனால், மக்களுக்கு எந்தத் தீர்வையும் கொண்டு வராது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து விடுமுறையை கழிக்க வரும் தமிழர்களும், வட மாகாணத்தில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கு காரணம் என்று சொல்லப் படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, எமது இனவாத கோஷங்களை அவர்களுக்கு எதிராக திருப்பி விட முடியாது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் தமிழ் தேசியத்தில் தளராத பற்றுக் கொண்டவர்கள். தாங்கள் உறுப்பினராக உள்ள தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள். ஆகவே, "வழிதவறிய ஆடுகளை வழிக்கு கொண்டு வருவது" கடினமான காரியமல்ல. புலம்பெயர் தமிழர்களின் பணம் பாலியல் தொழிலை வளர்ப்பதற்குப் பதிலாக, ஆக்கபூர்வமான முயற்சிகளில் செலவிட வைக்கலாம். அவர்கள் தமது பணத்தை, வட மாகாணத்தில் பல்வேறு தொழிற்துறைகளில் முதலிட வேண்டும் என்று ஊக்குவிக்கலாம். புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டுக்கு, குறிப்பாக பெண்களை பணிக்கமர்த்தும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கலாம். மாகாண சபையால் இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம். இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளின் மூலம், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும்.

வட மாகாண சபையில், கல்விக்கென ஒரு அமைச்சு உருவாக்கப் பட்டுள்ளதாக அறிகிறேன். யாழ்ப்பாணத்தில் புரையோடிப் போயுள்ள பழமைவாத சிந்தனைகளை, கல்வி அறிவு புகட்டுவதன் மூலம் களைய முடியும். "தமிழர் கலாச்சாரம்" என்ற பெயரில், பழைமைவாத பெருச்சாளிகளின் "தாலிபான் கலாச்சாரம்" கோலோச்சுவதை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

பெண் கல்வி ஊக்குவிக்கப் பட வேண்டும். விசேடமாக பெண்களுக்கென தொழிற்கல்வி வழங்கும் நிறுவனங்களை மாகாண சபையே உருவாக்கலாம். அதைத் தவிர, விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் ஊக்குவிக்கப் பட வேண்டும். அதற்காக பொருளாதார கட்டமைப்பிலும், பண்பாட்டுத் தளத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரம் என்று, கிடைக்காத உரிமைகளுக்காக ஏங்குவதை விட, கையில் இருக்கும் அதிகாரங்களை சரிவர பயன்படுத்துவது சாலச் சிறந்தது. அந்த சாதனையை விக்னேஸ்வரன் தலைமை தாங்கும் வட மாகாண சபை நிகழ்த்திக் காட்டும் என்று நம்புவோமாக.

இப்படிக்கு, 
- ஒரு வட மாகாண வாக்காளர்

*****************************

வட மாகாண சபை, முதலைமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பான முன்னைய பதிவுகள்:
5."தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை
4.விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி
3.தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு
2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Saturday, October 12, 2013

தமிழரிடம் உள்ள ஒற்றுமை உணர்வு, தமிழ் தேசியவாதிகளிடம் கிடையாது!


"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தின் கீழ் ஒற்றுமையாக அணி திரள வேண்டும். ஒற்றுமையின்மையே தமிழர்களின் வீழ்ச்சிக்கு காரணம்...." 


தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைக்கும், தமிழ் இன ஒற்றுமையே தீர்வு என்று வலியுறுத்தும் தமிழ் தேசியவாதிகள், தமக்குள் ஒற்றுமையாக இருக்கின்றனரா? தமிழ் மக்கள், தமிழ் தேசியத்தை தவிர, வேறெந்த அரசியல் கொள்கையையும் பின்பற்றி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். தமிழர்களில் சிலர் இடதுசாரிகளாக இருப்பது கூட அவர்களுக்கு பிடிப்பதில்லை. (இதன் மூலம், தமிழ் தேசியவாதிகள் தம்மை வலதுசாரிகளாக காட்டிக் கொள்கின்றனர்.) கம்யூனிசம், சோஷலிசம், தலித்தியம், பெண்ணியம் என்பன எல்லாம் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து விடும் என்று பதறித் துடிப்பார்கள். உண்மையில் ஒற்றுமையாக ஒன்று சேர வேண்டியவர்கள் தமிழ் தேசியவாதிகள் தான். அவர்கள் தமது தவறை மறைப்பதற்காகவே, தமிழ் மக்கள் மேல் பழியைப் போடுகின்றனர்.

தமிழ் தேசியம் என்றைக்காவது தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்திருக்கிறதா? உண்மையில், தமிழ் மக்கள் ஒற்றுமையாக சேர்ந்து நின்ற சந்தர்ப்பங்கள் வரலாற்றில் நிறைய உண்டு. ஆனால், அப்போதெல்லாம் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் மோதிக் கொண்டதன் மூலம், எதிரிக்கு தமது ஒற்றுமையின்மையை பறைசாற்றிக் கொண்டார்கள். ஈழப்போர் தொடங்கிய காலத்தில், நகைச்சுவைத் துணுக்கு ஒன்று ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. "ஸ்ரீலங்கா அரசு போராளிக் குழுக்களை அழிப்பதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. அவர்கள் கையில் தமிழீழத்தை கொடுத்து விட்டால் போதும். அதற்குப் பின்னர் தமக்குள் அடிபட்டு அழிந்து, தமிழீழத்தை மீண்டும் சிங்களவனிடம் கொடுத்து விடுவார்கள்."

தமிழ் நாட்டில், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகமே தமிழ் தேசியக் கொள்கையை முதன் முதலாக வெகுஜன மயப்படுத்தியது. அவர்கள் தான் முதன்முதலாக தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பினார்கள். ஆனால், திமுக கூட, திராவிடர் கழகத்தின் ஒற்றுமையை சீர்குலைத்து வெளியே வந்த கட்சி தான். அதற்கு அவர்கள் பல கொள்கை முரண்பாடுகளை கூறிக் கொண்டார்கள். பிற்காலத்தில், கருணாநிதி, எம்ஜிஆருக்கு இடையிலான பிணக்கு காரணமாக, அதிமுக உருவானது. தமிழர்களின் ஒற்றுமை மேலும் சிதைந்தது. அதற்குப் பின்னர், வைகோ பிரிந்து சென்றார். இந்தப் பிரிவினைகளுக்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல.

ஈழத்திலும் அது தான் நிலைமை. ஆரம்பத்தில் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. அன்றைய தமிழ்க் காங்கிரசின் அரசியலுக்கும், இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலுக்கும் இடையில் எந்த ஒற்றுமையும் கிடையாது. அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக் கொள்வதும், தமிழ் மேட்டுக்குடி வர்க்க நலன்களை பராமரிப்பதுமே அன்றைய தமிழ்க் காங்கிரசின் பிரதானமான செயற்பாடுகளாக இருந்துள்ளன.

செல்வநாயகம் தலைமையில் ஒரு குழுவினர், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தமிழரசுக் கட்சி உருவாக்கினார்கள். அப்போது சில கொள்கை முரண்பாடுகள் பற்றி பேசிக் கொண்டார்கள். செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியே, இன்றைய தமிழ் தேசியக் கோட்பாட்டுக்கு அஸ்திவாரம் போட்டது எனலாம். அந்தக் கட்சியே, முதன் முதலாக தமிழ் மொழி பேசும் மக்கள் எல்லோரையும் ஒரே அரசியலின் கீழ் ஒன்று சேர்த்தது. சாதிய முரண்பாடுகள் கூர்மை அடைந்திருந்த அந்தக் காலங்களில், தாழ்த்தப்பட சாதியினர் பெருமளவில் இடதுசாரிக் கட்சிகளையே ஆதரித்து வந்தனர். இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்வதை தடுப்பதும், தமிழரசுக் கட்சியின் முக்கியமான நோக்கமாக இருந்துள்ளது.

குறைந்தது ஒரு தசாப்த காலமாகவேனும், தமிழ்க் காங்கிரசும், தமிழரசுக் கட்சியும் ஒற்றுமை இல்லாமல், ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டார்கள். தேர்தல் காலங்களில் ஒருவரை மற்றவர் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், காலப்போக்கில் ஒருமையின் அவசியத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். எழுபதுகளில் இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள். அப்போது ஈழத் தமிழ் மக்கள் ஒற்றுமையாக கூட்டணியை ஆதரித்தார்கள். 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பெரும்பான்மை தமிழ் வாக்காளர்களின் பலத்தில் வென்றார்கள். சிங்களவர்களே பொறாமைப் படும் அளவிற்கு, வடக்கு கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றி, பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக அமர்ந்தார்கள்.

அந்த ஒற்றுமை நீண்ட காலம் நிலைக்கவில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த சக்திகளினால், தமிழ் தேசியத்தின் ஒற்றுமை குலைக்கப் பட்டது. கொள்கை முரண்பாடு காரணமாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியினர் தீவிரவாதிகளாக மாறினார்கள். தமிழ் மாணவர் பேரவை, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை விரும்பின. மிதவாத தமிழ் தேசியவாதிகளுக்கும், தீவிரவாத தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றி, இரண்டு தரப்பினரும் பகைவர்கள் ஆனார்கள். இரண்டு தரப்பினரும், தாமே உண்மையான தமிழ் தேசியவாதிகள் என்று அறிவித்துக் கொண்டனர்.

தீவிர தமிழ் தேசியவாதிகள் கைகளில் ஆயுதங்கள் இருந்ததால், மிதவாத தமிழ் தேசிய தலைவர்களை துரோகிகள் என்றழைத்து சுட்டுக் கொன்றனர். அதனால், மிதவாத தமிழ் தேசியவாதிகள் தமது பாதுகாப்பிற்காக சிங்கள அரசை சார்ந்து வாழ நிர்ப்பந்திக்க்கப் பட்டனர். சில இடங்களில், கூட்டணித் தலைவர்கள், பிரமுகர்கள், தீவிரவாத இளைஞர்களை பொலிசிற்கு காட்டிக் கொடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன. மெல்ல மெல்ல ஆயுதமேந்திய குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியதால், தமிழ் மக்களும் கூட்டணியை விட்டு விலகி, ஆயுதபாணிக் குழுக்களை ஆதரித்தனர்.

தமிழ் தேசிய ஆயுதபாணிக் குழுக்களுக்கு இடையில் கூட ஒற்றுமை இருக்கவில்லை. பிரபாகரன் சில வருட காலம் டெலோ வில் இருந்தார். பின்னர் பிரிந்து சென்று புலிகள் அமைப்பை ஸ்தாபித்தார். பதினைந்து வருடங்களுக்குப் பின்னர், பிரபாகரன் தலைமையிலான புலிகள், டெலோ இயக்கத்தை அழித்து விட்டனர். ஆரம்ப காலத்தில், புலிகள் இயக்க தலைவராக பதவி வகித்த உமா மகேஸ்வரன், பின்னர் பிரிந்து சென்று புளொட் என்ற இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு எந்தக் கொள்கை முரண்பாடும் காரணம் அல்ல. ஊர்மிளா என்ற பெண் போராளியின் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையின் காரணமாகவே, உமா மகேஸ்வரன் தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது.

புளொட் இயக்கமும் ஒற்றுமையாக இயங்கவில்லை. உமா மகேஸ்வரனின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்த தீப்பொறி குழுவினர் பிரிந்து சென்றனர். இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட காலத்தில், புளொட்டில் இருந்து இன்னொரு குழுவினர் பிரிந்து சென்று, ஈ.என்.டி.எல்.எப். என்ற பெயரில், இந்திய இராணுவத்தின் கூலிப் படையாக இயங்கினார்கள். நீண்ட காலமாக, புலிகள் கட்டுக்கோப்பான அமைப்பாக, ஒற்றுமைக்கு பெயர் பெற்று விளங்கியது. ஆனால், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர், புலிகளின் இரண்டாம் மட்ட தலைவர் மாத்தையா, RAW உளவாளி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டார். அது ஒரு தனி மனிதனுக்கு எதிரான நடவடிக்கையாக இருக்கவில்லை. மாத்தையாவுக்கு விசுவாசமான போராளிகளும் கைது செய்யப் பட்டனர். சில நூறு பேரைக் கொண்ட மாத்தையா குழுவினர் தப்பிச் சென்று, சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள்.

நோர்வே அனுசரணையாளராக செயற்பட்ட சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், கிழக்கு மாகாண தளபதியான கருணா தலைமையில் ஒரு குழு பிரிந்து சென்றது. இரண்டு பிரிவுகளுக்கு இடையில் நடந்த ஆயுத மோதல்கள் காரணமாக, தோல்வியடைந்து பின்வாங்கிய கருணா குழுவினர் சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டனர். தீவிர தமிழ் தேசியவாதிகள் அரசாங்கத்துடன் சேர்வது என்பதுகளிலேயே தொடங்கி விட்டது. வடக்கு, கிழக்கில் புலிகளினால் தடை செய்யப் பட்ட, டெலோ, புளொட், ஈபிஆர்எல்ப் ஆகிய இயக்கங்கள், தமது பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவத்தின் தயவில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஸ்ரீலங்கா இராணுவம், புலிகளுக்கு எதிரான போரில் அவர்களை கூலிப் படைகளாக பயன்படுத்தியது.

ஈழத் தமிழ் தேசியவாதிகள் தமக்குள் ஒற்றுமை இல்லாமல், ஒருவரை ஒருவர் கொன்று குவித்த காலத்தில், தமிழ் தேசிய ஆதரவாளர்கள் "தமிழ் மக்களின் ஒற்றுமையின்மை" பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், அவர்களை ஒற்றுமையாக ஆதரித்த தமிழ் மக்கள் தான், பின்னர் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் ஆதரித்தார்கள். 1995 ஆம் ஆண்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டை சிறிலங்காப் படைகள் கைப்பற்றின. "யாழ்ப்பாண தமிழரின் சனத்தொகையில் மிகக் குறைந்த சதவீதமானோரே புலி இயக்கப் போராளிகளாக இருந்ததாகவும், எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடி இருந்தால், சிங்களப் படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்றும்" புலிகளின் பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.

2009 ல் நடந்த இறுதிப்போரில் வன்னியில் இருந்த அனைத்து தமிழ் மக்களும், ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து போராடினார்கள். இறுதி யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே, வீட்டுக்கொரு பிள்ளை போராளியாக வேண்டும் என்று உத்தரவிட்ட புலிகள், கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். பல குடும்பங்களில், பிள்ளைகள் பலவந்தமாக பிடித்துச் சென்று போராளிகளாக்கப் பட்டதை, இன்றைக்கும் புலி ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். "வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்கள், உணர்வுபூர்வமாக, தாமாகவே விரும்பிச் சென்றனர்." என்றே சொல்லி வருகினறனர். அப்படியானால், தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து தான் போராடி இருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து போராடிய போதிலும், போரில் ஏற்பட்ட தோல்வி எங்கிருந்து வந்தது? அதற்கு, கருணா குழு, ஈபிடிபி போன்ற அரச அடிவருடிகளான தமிழ் கூலிப் படையினரை குற்றஞ் சாட்டுகின்றனர். அவர்கள் எல்லோரும், முன்னொரு காலத்தில் தமிழ் தேசியவாதிகளாக இருந்தவர்கள். அதாவது, தமிழ் மக்கள் என்றைக்கும் ஒற்றுமையாகத் தான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவினைகள் இருக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்கு இடையில் தான் ஒற்றுமை இல்லை. அது தான் முக்கியமான பிரச்சினை.

புலிகளுக்குப் பின்னர், தமிழ் தேசியவாதிகளின் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை இல்லை என்பதை, இங்கே சொல்லத் தேவை இல்லை. கூட்டமைப்பு என்பது பல கட்சிகளின் சேர்க்கை. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழர் ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றி பேசி வாக்குக் கேட்டார்கள். அறுதிப் பெரும்பான்மை தருமாறு கெஞ்சினார்கள். தமிழ் மக்களும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து கூட்டமைப்புக்கு தமது ஓட்டுக்களை அள்ளிக் கொடுத்தார்கள். அனால், தேர்தல் முடிந்த பின்னர், மாகாண சபை அரசாங்கம் அமைப்பது தொடர்பாக இழுபறிப் படுகிறார்கள். அமைச்சர் பதவிக்காக சண்டை போடுகிறார்கள். உண்மையில், தமிழ் தேசியவாதிகள் எமக்கு போதிப்பதற்கு மாறாகவே யதார்த்த நிலைமை உள்ளது. தமிழ் மக்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றனர். ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்குள் தான் ஒற்றுமை இல்லை.

புலிகளின் அழிவுக்குப் பின்னர், அதே அரசியலை வேறொரு தளத்தில் முன்னெடுத்து வரும் தமிழ்நாட்டு தமிழ் தேசியவாதிகளும் ஒற்றுமை இல்லாமல் பிரிந்து நிற்கின்றனர். ஈழப்போர் நடந்த காலத்தில், தமிழ் தேசியம் தமது உயிர்மூச்சு என்று பேசிக் கொண்டிருந்த, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் ஆகியோர், ஆளுக்கொரு கட்சிகளாக பிரிந்து நிற்கின்றனர். "அவர்கள் ஏன் இன்று வரையில் ஒரே கட்சிக் கொடியின் கீழ் ஒன்று சேரக் கூடாது?" என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை.

தேர்தலில் போட்டியிடாத, தீவிர தமிழ் தேசிய அமைப்புக்களான, நாம் தமிழர், மே 17 போன்றன கூட, ஒரே பெயரில், ஒரே அமைப்பாக இயங்குவது பற்றி இன்று வரையில் ஆலோசிக்கவில்லை. ஆனால், எல்லோரும் ஒரே குரலில், ஒரே கோஷத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். "தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அதுவே பிரச்சினைகளுக்கு காரணம்." தமிழ் மக்களை குற்றம், குறை கூறுபவர்கள், ஒரு தடவை தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்வது நல்லது. 

Friday, October 11, 2013

"தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை

இணையத்தில் இதுவரை வெளிவராத, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் உரை. (வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.) சாவகச்சேரி நகர சபையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், "கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். 

விக்னேஸ்வரனின் உரையின் சுருக்கம்: 
"இலங்கையில் முதலாவது கல்வி நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகின. யாழ்ப்பாணத் தமிழர்கள் படிப்பில் சிறந்து விளங்கினார்கள். பொதுநலவாய நாடுகளில் சிறந்த கல்விமான்கள், யாழ்ப்பாண தமிழர்கள்.  சேர் பொன் இராமநாதன், முதன் முதலில் படித்த இலங்கையர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றும் சிறந்த கல்விமான்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (யாழ்ப்பாணத்) தமிழரின் கல்வி அறிவு கண்டு பொறாமை கொண்ட சிங்களவர்கள், தரப்படுத்தல் (விக்னேஸ்வரன் "சமப்படுத்தல்" என்ற சொல்லைப் பாவிக்கின்றார்.) மூலம் தமிழர்களின் கல்வி உரிமையை பறித்தார்கள். 

தற்போது போதைவஸ்து, மதுப் பழக்கத்தை அறிமுகப் படுத்தி யாழ் மாணவர்களை பாழாக்குகிறார்கள். அரச ஆதரவு கட்சிகளே இந்தக் கலாச்சார சீரழிவுக்கு காரணமாகும். மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதன் மூலம், யாழ்ப்பாண தமிழரின் கல்விச் சீரழிவை தடுத்து நிறுத்த முடியும்." 

 "ஈழத் தமிழ் தேசிய அரசியலில், வர்க்கம் எங்கே வந்தது? வர்க்கம், முதலாளியம் போன்ற மார்க்சிய சொல்லாடல்கள், அந்த இடத்திற்கு எப்படிப் பொருத்தமாகும்?" என்று சிலர் கேட்கின்றனர். 

இலங்கையில் வாழாத, தமிழரல்லாத ஒருவர், விக்னேஸ்வரனின் உரையை கேட்க நேர்ந்தால், அவர்  "யாழ்ப்பாணத் தமிழர்கள் எல்லோரும் (அல்லது பெரும்பான்மை) உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள்." என்றே நினைத்துக் கொள்வார். உலகில் வளர்ச்சியடைந்த நாட்டில் கூட, உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாக இருக்கும். ஒட்டு மொத்த யாழ் மக்கட் தொகையில், உயர்கல்வி கற்றவர்கள் எண்ணிக்கை ஐந்து சதவீதம் கூட இருக்க முடியாது. ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்த காலமும் முதல், சிங்களவனுக்கு அடிமையான காலம் வரையில் அந்த நிலைமை மாறவில்லை. 

ஆகவே,  "அந்த ஐந்து சதவீத சிறுபான்மைத் தமிழர்களைப்" பற்றித் தான், விக்னேஸ்வரன் கவலைப் படுகின்றார். மிகுதி  உழைக்கும் வர்க்கத் தமிழர்களைப் பற்றி, அவர்களது பிரச்சினைகள் பற்றி, அவருக்கு எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால், அவர் பிறந்து வளர்ந்த வர்க்கம் வேறு.  உயர்கல்வி கற்ற சிறுபான்மை சமூகத்தை, சமூக விஞ்ஞானம் "மத்திய தர வர்க்கம்" என்று பெயரிட்டு அழைக்கிறது. மார்க்சியம் அந்தப் பிரிவுக்கு "குட்டி முதலாளிய அல்லது குட்டி பூர்ஷுவா வர்க்கம்" என்று பெயரிட்டது.

ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், யாழ்ப்பாணத்தில் கல்வி நிலையங்களை கட்டினார்கள் என்று விக்னேஸ்வரனே கூறுகின்றார். "வெள்ளையர்கள்" வந்து பத்து, பதினைந்து வருடங்களில் கல்லூரிகளை கட்டியதாக விக்னேஸ்வரன் கூறுகின்றார்.ஆங்கிலேயர்கள் மட்டுமே வெள்ளையர்கள் அல்ல, அவர்களுக்கு முன்னர் இலங்கையை காலனிப் படுத்திய டச்சுக் காரர்கள், போர்த்துக்கேயர்களும் வெள்ளையர்கள் தான்.

கல்வி கற்பது அனைத்துப் பிரஜைகளின் பிறப்புரிமை என்பதால், ஆங்கிலேயர்கள் இலங்கையின் எல்லா பிரதேசங்களிலும் கல்வி நிலையங்களை கட்டி இருந்திருந்தால், போற்றுதலுக்கு உரியவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் மட்டும் கற்றவர்களை உருவாக்க நினைத்த செயலானது, ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியாக கருதப்படும். அதுவே பிற்காலத்தில், இன முரண்பாடுகளை தோற்றுவித்திருக்கும் என்பதை விக்னேஸ்வரன் இங்கே குறிப்பிட மறந்து விட்டார். 

மேலும், ஆங்கிலேய காலனியாதிக்க வாதிகள், கல்வி நிலையங்களை கட்டியதன் நோக்கம், தமிழரை முன்னேற்றுவதற்காக அல்ல. அன்று, காலனிய நிர்வாகத்தை திறம்பட நடத்தும் தேர்ச்சி பெற்ற மத்தியதர வர்க்கம் ஒன்று தேவைப் பட்டது. அதிலும், உயர்சாதியினரில் வசதி படைத்த ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஐம்பதுகளில் கூட, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழர்களுக்கு, கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது.

விக்னேஸ்வரன், தரப்படுத்தலுக்கு, சமப்படுத்தல் என்ற சொல்லை பிரயோகிக்கக் காரணம் என்ன? கல்வியில் சிறந்த தமிழர்களுக்கு சமமாக, சிங்களவர்களை முன்னேற்றுவதா? தரப்படுத்தல் மாவட்ட வாரியாக கொண்டு வரப் பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள் என்ற ரீதியில், மறைமுகமாக சிங்களப் பிரதேசங்களுக்கு சலுகைகள் வழங்கப் பட்டன. ஆனால், (ஆங்கிலேயர் காலத்தில்) கல்வி நிலையங்கள் கட்டப்படாத தமிழ்ப் பிரதேசங்களும் இருந்தன. வன்னி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருந்தன. 

யாழ்ப்பாண மாணவர்களிடையே பரவும் மது, போதைவஸ்து பழக்கம், சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப் படுகின்றது என்ற குற்றச்சாட்டில், ஓரளவு உண்மை இருக்கிறது. விக்னேஸ்வரன் இந்த உரையில் "கண்ணுக்குத் தெரியாத சக்தி" ஒன்று இயங்குவதாக தெரிவிக்கிறார். ஆனால், முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்திய பூதமே அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தி என்பதை, மக்களுக்கு கூறாமல் மறைக்கிறார். மேலைத்தேய ஏகாதிபத்தியம் என்ற "கண்ணுக்குத் தெரியாத சக்தி" தான் ஸ்ரீலங்கா அரசின் எஜமான் என்பது, விக்னேஸ்வரனுக்கு தெரியாமல் இருக்காது.

கட்டற்ற முதலாளித்துவம், உலகமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றங்களும், மாணவர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன. இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் அந்தப் பிரச்சினை உள்ளது. முதலாளித்துவம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டமே அதனை தடுத்து நிறுத்தும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் யாரும் அந்தச் சொற்களையே உச்சரிப்பதில்லை. எந்த ஒரு கட்டத்திலும், தங்களது கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் முன் வைக்கவில்லை. ஆகவே, விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபை ஆட்சியில் இருந்தாலும், யாழ் மாணவர்களின் கல்வி சீரழிவதை தடுத்து நிறுத்த முடியாது. 

விக்னேஸ்வரனின் முழுமையான உரை:


வட மாகாண சபை தொடர்பான முன்னைய பதிவுகள்:
1. விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி
2. தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு

Tuesday, October 08, 2013

விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி


வட மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த வாக்காளப் பெருமக்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன். அவர்களில் பலர் தெரிவித்த பொதுவான கருத்துகளை, அப்படியே இங்கே தருகிறேன்:
"இந்தத் தேர்தல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், போட்டியிடும் வேட்பாளர்களும், தேர்தல் காலங்களில் மட்டும் தான் மக்களை சந்திக்க வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் யாருமே இந்தப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. நாமாக தேடிச் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியாது. ஆனாலும், வாக்களிக்க வேண்டிய கடமை எமக்குண்டு. நாங்கள் ஓட்டுப் போடா விட்டால், எமது வாக்குகளை வேறு யாராவது போட்டு விடுவார்கள். அதற்காகத் தான் நாம் வாக்களிக்கச் செல்கிறோம்."
வீட்டுக்கு வீடு வாசல் படி. எல்லா நாடுகளிலும், தேர்தல் காலங்களில் மக்களின் மனநிலை ஒன்றாகத் தான் இருக்கின்றது.

இந்த தடவை நடந்த வட மாகாண சபைத் தேர்தலிலும், தமிழ் மக்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். வழமை போல சிங்கள முதலாளித்துவத்தின் பிரதிநிதியான ராஜபக்சவும், தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே முதலாளித்துவ வர்க்கத்தின், இரண்டு வேறு மொழிகளைப் பேசும் இரு பிரிவினர், தமக்குள் முரண்பாடுகள் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு தேர்தல் எனும் நாடகம் உதவுகின்றது. அதிலே சிங்கள வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு சிங்கள தேசியமும், தமிழ் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு தமிழ் தேசியமும் பயன்படும்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் இரண்டு தரப்பினரும் எதிரிகளாக காட்டிக் கொள்வார்கள். தேர்தல் முடிந்தவுடன் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இலங்கை பிரிட்டிஷ் காலனியாகவிருந்து, சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இந்த நாடகம் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப் படுகின்றது. இதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் ஜனங்கள், ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இனப்பகை கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள். இறுதியில் அதனால் இலாபமடையும் முதலாளித்துவத்திற்கு, தேசியவாத முகமூடி தேவைப் படுகின்றது. ஈழப்போரில் தோற்கடிக்கப் பட்ட தமிழ் மக்கள், மீண்டும் வட மாகாண சபைத் தேர்தலிலும் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். எப்போதும் இறுதி வெற்றி சிங்கள-தமிழ் தரகு முதலாளிகளுக்கானது, என்ற விதியை மட்டும் யாராலும் மாற்ற முடியவில்லை.

இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் உண்மையில் தோற்றவர்கள் அல்ல, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உண்மையில் வென்றவர்களும் அல்ல. அவரவருக்கு ஏற்ற இடங்களில் இருக்கின்றனர். தேர்தல் தோல்வியால் டக்ளஸ், அங்கஜனின் வர்த்தகத் துறைக்கு, அரசியல் அதிகாரத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எல்லாமே வழமை போல நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏற்கனவே நிறைய வருமானம் தரும் வேலை பார்த்தவர்கள். அதற்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இப்போது மேலதிகமாக அரசாங்க ஊதியம், சலுகைகள் வேறு கிடைத்து வருகின்றது. தமிழ் மக்கள் தான் பாவம், அவர்களுக்குத் தான் ஒன்றுமேயில்லை.

விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச முன்னியிலையில் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் எடுத்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல. கடைசியில் விக்னேஸ்வரனும் தனது "வர்க்கப் புத்தியை" காட்டி விட்டார், என்று வேண்டுமானால் திட்டலாம். விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், கொழும்பு மேட்டுக்குடி சமூகத்தின் அங்கத்தவர். கூட்டமைப்பு, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யும் பொழுதே, அவரது வர்க்கப் பின்னணியும் பகிரங்கமாகியது. அதற்குப் பிறகு, "அவரை நோவானேன், கவலைப் படுவானேன்?" இனம் இனத்தோடு தானே சேரும்?

கொழும்பில் வாழும் மேட்டுக்குடித் தமிழர்கள், எல்லாக் காலங்களிலும் தமிழ் இன உணர்வு அற்று வாழ்ந்தவர்கள். (தனிப்பட முறையில் எனக்கு சிலரைத் தெரியும். அவர்கள் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள்.) அவர்களுக்கு, தமது வர்க்க அடையாளம் மட்டுமே முக்கியமாகப் படுவதுண்டு. அதனால் தான், தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் வெறுக்கப்படும், "சிங்களவரும், இடதுசாரியும், அமைச்சருமான" வாசுதேவ நாணயக்கார குடும்பத்துடன் விக்னேஸ்வரன் சொந்தம் கொண்டாட முடிந்தது. ஏனெனில், இருவரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அது தான் முக்கியம்.

இதெல்லாம் சாதாரண தமிழ் மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விடயங்கள். அதற்குக் காரணம் இன முரண்பாடல்ல, வர்க்க முரண்பாடு. "சிங்களவர்களோடு சொந்தம் கொண்டாடுவதில், விக்னேஸ்வரன் குடும்பம் மட்டும் விதிவிலக்கல்ல. சந்திரிகா குமாரதுங்கவின் மகளும் ஒரு தமிழரை மணந்து கொண்டார். பண்டாரநாயக்க குடும்பத்தில் பல தமிழர்கள் சம்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் எல்லாம் சாதாரண தமிழர்கள் அல்ல. வசதி படைத்த, உயர்சாதியில் பிறந்த, மேட்டுக்குடித் தமிழர்கள். அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

தென்னிலங்கையில் உள்ள சிங்கள சுதந்திரக் கட்சியின் மறு வார்ப்புத் தான், வட இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அது சிங்கள இனவாதம் பேசி வாக்கு சேகரித்தால், இது தமிழ் இனவாதம் பேசி வாக்குச் சேகரிக்கின்றது. அதனை சிங்கள முதலாளிகள் ஆதரித்தால், இதனை தமிழ் முதலாளிகள் ஆதரிக்கின்றனர். இரண்டுமே அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் தான். அதனால் தான் எப்போதும் மக்கள் ஏமாற்றப் படுகின்றனர். அதனால் தான் எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் தோற்றுப் போகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறப் போவதில்லை. "எத்தனை தவறுகள் விட்டாலும், கூட்டமைப்புக்கு மாற்று கிடையாது" என்ற கருத்து, அடுத்த தேர்தலிலும் முன் வைக்கப் படும். உண்மையில் அது மக்களின் கருத்தல்ல. தமிழ் முதலாளிய வர்க்கத்தினால் திட்டமிட்டு நடத்தப் படும் பிரச்சாரம். ஏனென்றால், பாமர மக்களால் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது. அவர்களிடம் அந்தளவு பணபலம் கிடையாது.

கடந்த முப்பதாண்டு காலம் நடந்த ஈழப்போரில் மட்டுமே, அந்த நிலைமை தலைகீழாக மாறியது. அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தில், அதுவோர் புரட்சிகர மாற்றம். அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட, அரசியலில் தலைமைப் பதவிகளுக்கு வந்தார்கள். உதாரணத்திற்கு, தமிழ்ச் செல்வனை குறிப்பிடலாம். ஆனால், புலிகளின் அழிவுடன், தமிழ் உழைக்கும் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளும் பறிக்கப் பட்டு விட்டன. இன்று மாகாண சபையில் மெத்தப் படித்தவர்களையே அமைச்சர்களாக்குவேன் என்று விக்னேஸ்வரன் அடம்பிடிக்கிறார். இது பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வி.

(தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டமைப்பு வெளியிட்ட துண்டுப்பிரசுரம்.  தென்மராட்சிப் பகுதியில் இதனை விநியோகித்துக் கொண்டிருந்த நான்கு கட்சித் தொண்டர்களை இராணுவம் கைது செய்து அடைத்து வைத்துள்ளது.)
"பிரபாகரன் ஒரு மாவீரன். மகிந்தவுக்கும் அது தெரியும்." என்று வல்வெட்டித்துறையில் நடந்த கூட்டம் ஒன்றில் விக்னேஸ்வரன் பேசினார். அந்த உரையை துண்டுப்பிரசுரமாக அடித்து விநியோகித்த கூட்டமைப்பு தொண்டர்களை கைது செய்த இராணுவம், விக்னேஸ்வரனுக்கு கிட்டவும் நெருங்கவில்லை. அந்த உரையை, முதன் முதலாக வெளியிட்ட உதயன் பத்திரிகை நிறுவன முதலாளி கைது செய்யப் படவில்லை. இதனை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டி எழுதி இருந்தேன். அந்தளவுக்கு, இலங்கையில் இன்றைக்கும், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினருக்கு இடையிலான வர்க்க ஒற்றுமை, இறுக்கமாக உள்ளது.

விக்னேஸ்வரனின் "புலி ஆதரவு உரை", அடித்தட்டு மக்களையும், குறிப்பாக வல்வெட்டித்துறை வாசிகளையும் கவர்வதற்காக நிகழ்த்தப் பட்டது. உண்மையில், உயிரோடு இருக்கும் புலிகளை விட, இறந்த புலிகள் தனக்குப் பயனுள்ளதாக இருப்பார்கள் என்பது விக்னேஸ்வரனுக்கும் தெரியும். ஆனால், இனி வருங்காலத்தில் புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கம் தோன்றுவதை, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மேட்டுக்குடிக் கும்பல் அனுமதிக்கப் போவதில்லை.

தமது வர்க்க நலன்களுக்கு ஆபத்து வருமென்றால், ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, "தீவிரவாதிகளை" ஒடுக்கவும் தயங்க மாட்டார்கள். இதெல்லாம் ஈழ வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளன. ஈழத் தமிழர்களின் அரசியல் மீண்டும் எழுபதுகளை நோக்கிப் பயணிக்கின்றது.

__________________________

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முன்னைய பதிவுகள்:

3.தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு
2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Sunday, October 06, 2013

போர்க்குற்றவாளிகளை காப்பாற்றும் "சர்வதேச சமூகம்" பற்றிய திரைப்படம்


அண்மையில், தொலைக்காட்சியில் "The Hunting Party" என்ற திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. போர்க்குற்றவாளிகளை பிடிப்பதில் மேற்கத்திய நாடுகள் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களை தோலுரித்துக் காட்டும் படம். பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து, கற்பனையான திரைக்கதை எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் சொல்ல வரும் செய்தி தான் முக்கியமானது. "போர்குற்ற விசாரணைகள் என்பன எல்லாம் மேற்கத்திய நாடுகளின் நாடகங்கள். உண்மையில், ஐ.நா., சர்வதேச நீதிமன்றம், அமெரிக்கா போன்றவற்றிற்கு, போர்க்குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கும் எந்த நோக்கமும் கிடையாது. சில நேரங்களில், இந்த "மரியாதைக்குரியவர்கள்" போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் கடமையையும் செய்து வருகின்றனர்." 

Simon Hunt, Duck இருவரும் நண்பர்கள். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்காக, போர் நடக்கும் நாடுகளுக்கு சென்று செய்தி சேகரிப்பது அவர்களது பணி. எல் சல்வடோர், பொஸ்னியா என்று கடுமையான யுத்தம் நடக்கும் பிரதேசங்களில் உயிரை துச்சமாக மதித்து வேலை செய்கின்றனர். பொஸ்னிய யுத்த களத்தில் இருந்து அமெரிக்க தொலைக்காட்சிக்கு நேர்முக வர்ணனை செய்யும் சைமன், ஐ.நா. மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார். இதனால் சங்கடத்திற்குள்ளாகும் தொலைக்காட்சி நிலையம் தொடர்பை துண்டித்து விடுகின்றது. அதற்குப் பிறகு, பிரபல செய்தியாளர் சைமனுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அவர் போர்க்களத்தில் கொல்லப் பட்டிருக்கலாம் என்றே எல்லோரும் நினைக்கின்றனர்.  

ஐந்து வருடங்களுக்குப் பின்னர், டக் இன்னொரு இளம் ஊடகவியலாளருடன் பொஸ்னியா திரும்புகின்றார். தற்போது பொஸ்னியாவில் யுத்தம் முடிந்து, சமாதானம் நிலவுகின்றது. ஆனால், "போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதே தனது கடமை" என்று, சர்வதேச சமூகம் புளுகிக் கொண்டு திரிகின்றது. பொஸ்னியா திரும்பும் ஊடகவியலாளர்கள், நேட்டோப் படைகளால் தேடப்படும் "நரி" என்ற பட்டப் பெயர் கொண்ட, Radoslav Bogdanović என்ற செர்பிய போர்க்குற்றவாளியை கண்டு பேட்டி எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். எதிர்பாராத விதமாக, காணாமல்போன பழைய நண்பன் சைமனை சந்திக்கின்றனர். நரி இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று கூறும் சைமன், அவர்களை தன்னுடன் வருமாறு கூறுகின்றான். சைமன் போகும் வழியில், அந்தப் போர்க்குற்றவாளியை பிடித்துக் கொடுத்து சன்மானம் பெற விரும்புவதாக நண்பர்களிடம் தெரிவிக்கின்றான். இதனால் வழியில் பல ஆபத்துக்களை சந்திக்கின்றனர். 

Radoslav Bogdanović  போர் நடந்த காலத்தில், பல்லாயிரம் பொஸ்னிய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த, பெண்களை வல்லுறவு செய்த குற்றங்களுக்கு காரணமானவன். (கராச்சிச் என்ற செர்பிய படைத் தலைவனை மனதில் வைத்து பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.) சைமன் "நரி" யை கண்டுபிடிப்பதற்கு, ஒரு தனிப்பட்ட காரணம் உள்ளது. அவனது பொஸ்னிய முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த காதலி, அவளது ஊருக்கு சென்றிருந்த நேரம், நரியின் படையினரால் சுட்டுக் கொல்லப் படுகின்றாள். அப்போது அவள் நிறைமாதக் கர்ப்பிணி. அந்தத் தருணத்தில் கோபத்தை அடக்கும் சைமன், தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நரியை பிடித்துக் கொடுக்க நினைக்கிறான். 

பொஸ்னியாவில் நிலை கொண்டுள்ள சர்வதேச பொலிஸ், நேட்டோ படையணி போன்றவற்றிடம், போர்க்குற்றவாளிகள் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, சர்வதேச படைகளிடம் போர்க்குற்றவாளிகள் சம்பந்தமான எந்த ஆவணமும் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர். அது மட்டுமல்ல, போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை. பொஸ்னிய போரின் பின்னர் சமாதானத்தை நிலைநாட்டும் கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச படையினர், ஊடகவியலாளருடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

சைமனும் நண்பர்களும், தமக்குத் தெரிந்த வழியில் போர்க் குற்றவாளிகளை பிடிக்கக் கிளம்புகின்றனர். வழியில் அவர்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன. செர்பிய பொதுமக்கள் தமது நாயகனை காட்டிக் கொடுக்க மறுக்கின்றனர். இறுதியில், இரகசியமாக தகவல் கொடுப்போரிடம், சி.ஐ.ஏ. என்று பொய் சொல்லி, "நரி" யின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆனால், சி.ஐ.ஏ. என்ற அடையாளம், அவர்களை ஆபத்தில் மாட்டி விடுகின்றது. அதற்காகவே, நரியின் ஆட்கள் அவர்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்கின்றனர்.  

 "நரி" யின் மறைவிடத்தில் கட்டி வைக்கப் பட்டிருந்த, ஊடகவியலாளர்களின் உயிர் ஊசலாடும் தருணத்தில், அங்கு திடீரென வந்திறங்கும் அமெரிக்க-நேட்டோப் படையினர், அவர்களை விடுவித்து அழைத்துச் செல்கின்றனர். நேட்டோ கமாண்டோக்களின் அதிகாரி, அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகின்றனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், அந்தச் சந்தர்ப்பத்தில் கைக்கெட்டிய தூரத்தில் நின்ற போர்க்குற்றவாளியை, படையினர் (வேண்டுமென்றே) பிடிக்காமல் வாயைப் பிளந்து கொண்டு நிற்கின்றனர். அதை சைமன் நேரடியாகவே கேட்டு விடுகின்றான். "நீங்கள் ஐந்து வருடங்களாக தேடியும் கிடைக்காத போர்க்குற்றவாளியை, நாங்கள் இரண்டே நாட்களில் கண்டுபிடித்தது எப்படி? எதற்காக இத்தனை படைபலம் இருந்தும் போர்க்குற்றவாளியை தப்ப விட்டீர்கள்?"  ஆனால், அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல், "சி.ஐ.ஏ. போன்று நடித்ததற்காக உங்கள் மேல் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவேன்" என்று மிரட்டும் அமெரிக்க படையதிகாரி, அவர்கள் உடனடியாக ஊர் திரும்புவதே புத்திசாலித்தனம் என்று எச்சரிக்கிறான். 

மூன்று ஊடகவியலாளர்களும், நேட்டோ படை அதிகாரியின் உத்தரவுக்கிணங்க நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. தாங்கள் மூவரும் நினைத்தால், போர்க்குற்றவாளியை சுலபமாக பிடித்து விடலாம் என்று எண்ணுகின்றனர். "நரி" காட்டுக்குள் வேட்டையாடச் செல்லும் பொழுது, கூடவே நிறைய மெய்ப்பாதுகாவலர்களை அழைத்துச் செல்ல வாய்ப்பில்லை. அதனால் தனியாக நிற்கும் போர்க்குற்றவாளியை பிடிப்பது இலகு என்று திட்டம் போடுகின்றனர். போட்ட திட்டம் நிறைவேறி, மூன்று நண்பர்களும் சேர்ந்து போர்க்குற்றவாளியை பிடிக்கின்றனர். அந்தத் தருணத்திலும் கலங்காமல், "சர்வதேச சமூகம்" தன்னை காப்பாற்றும் என்று நரி கூறுகின்றான். "என்னை பிடித்துக் கொடுத்ததற்காக, உங்களுக்கு சன்மானம் கிடைக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு சர்வதேச சமூகம் எப்படி நடந்து கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால், அவர்கள் தான் எனக்காக அஞ்சுகின்றார்கள்." ஏற்கனவே அந்தப் பதிலை எதிர்பார்த்த சைமன் கூறுகின்றான்: "அது தெரிந்து தான் நாங்கள் சட்டத்தை மாற்றி விட்டோம்..." 

அதாவது, ஒரு போர்க்குற்றவாளியை ஐ.நா.விடமோ, அமெரிக்காவிடமோ ஒப்படைப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதற்குப் பதிலாக, "நரி" யின் கொலைவெறியாட்டத்திற்கு பலியான பொஸ்னிய முஸ்லிம்கள், அவனுக்கு தகுந்த தண்டனை கொடுப்பார்கள் என்று முடிவெடுக்கின்றனர். கைகள் கட்டப்பட்ட "நரி"யை, சைமனின் காதலியின் ஊருக்குள் கொண்டு சென்று இறக்கி விடுகின்றனர். இனி, ஒரு போர்க்குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது, அவனால் பாதிக்கப்பட்ட பொஸ்னிய முஸ்லிம்களின் பொறுப்பு. 

படத்தின் முடிவில், பார்வையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி தெரிவிக்கப் படுகின்றது. "ஒருநாளும், மேற்கத்திய நாடுகள் போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதில்லை. அந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களே அந்தக் கடமையை செய்ய வேண்டும்," என்ற உண்மையை திரைப்படம் வலியுறுத்துகின்றது. இதையே நாங்கள் "மேற்கத்திய நாடுகளிடம் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும்" தமிழ் மக்களுக்கும் கூறி வருகின்றோம். 

அமெரிக்கா, மற்றும் ஐ.நா. பொஸ்னிய போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய காரணம் என்ன? பொஸ்னிய யுத்தம் நடந்த காலங்களில், கிறிஸ்தவ செர்பிய படைகள், பெருமளவு பொஸ்னிய முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்தன. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் முஸ்லிம்கள் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ஐரோப்பிய, அதாவது பொஸ்னிய முஸ்லிகள் இனவழிப்பு செய்யப்படுவது அவர்களுக்கு உவப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால், ஊடகங்களில் பொஸ்னிய முஸ்லிம் மக்களை எண்ணி இரக்கப் படுவதாக முதலைக் கண்ணீர் வடித்தார்கள். அமெரிக்கா, செர்பிய படைத் தலைவர்களுடன் எட்டப் பட்ட உடன்பாட்டின் பின்னர் தான், பொஸ்னிய போர் முடிவுக்கு வந்தது. செர்பிய போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட மாட்டார்கள் என்பதும், உடன்படிக்கையில் இருந்திருக்கலாம்.  

அமெரிக்கா "செர்பிய போர்க்குற்றவாளிகளை தேடுவதாக", ஒரு முழுப் பக்க விளம்பரம் செர்பிய பத்திரிகைகள் எல்லாவற்றிலும் பிரசுரமானது. அமெரிக்கா அதனை படமெடுத்து ஊடகங்களுக்கு கொடுத்தது. அதாவது, அமெரிக்கர்கள் மிகத் தீவிரமாக போர்க் குற்றவாளிகளை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அதனை உலகம் நம்ப வேண்டுமாம். அன்றைய வருடத்தின் சிறந்த நகைச்சுவை அதுவாகத் தான் இருக்கும். பொஸ்னிய பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தில், போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான தகவல் தெரிந்தோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த தொலைபேசி இலக்கம் அமெரிக்க நாட்டு எல்லைக்குள் மட்டுமே செயற்படும்!

பொஸ்னியா தொடர்பான முன்னைய பதிவு:
பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்