Showing posts with label இனப் பிரச்சினை. Show all posts
Showing posts with label இனப் பிரச்சினை. Show all posts

Sunday, September 30, 2018

மசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது?

மசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை இன்றுடன் (30-9-18) முடிவுக்கு வருகிறது. பொது வாக்கெடுப்பில் பெருமளவு மக்கள் ஆம் என்று வாக்களிப்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது. 

இவ்வளவு காலமும் "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான மசிடோனியா" (FYROM) என்ற பெயர் நீக்கப் பட்டு, "வடக்கு மசிடோனியா" என்ற புதிய பெயர் சூட்டப் படும். இது தொடர்பாக மசிடோனியா, கிரேக்க வெளிவிவகார அமைச்சர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஐரோப்பாவில், கடந்த 27 வருடங்களாக, தேசியவாதிகளால் (அல்லது பேரினவாதிகளால்) தீர்க்க முடியாத இனப்பிரச்சினையை இடதுசாரிகள் தீர்த்து வைத்திருக்கிறார்கள். யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த மசிடோனியா (அல்லது மக்கெதோனியா) என்ற புதிய நாட்டிற்கு பெயரிடுவது பற்றிய பிரச்சினை தற்போது தான் (பெருமளவு) ஓய்ந்துள்ளது.

உலகப் பேரரரசை கட்டி ஆண்ட மகா அலெக்சாண்டர் பிறந்த இடம் மசிடோனியா என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எங்கே இருக்கிறது என்பதிலும், அலெக்சாண்டர் காலத்தில் என்ன மொழி பேசினார்கள் என்பதிலும் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. இது குறித்து, ஒரு பக்கம் கிரேக்க தேசியவாதிகளும், மறு பக்கம் மசிடோனியா தேசியவாதிகளும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் மயிர்பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.

இலங்கையில் தமிழரும், சிங்களவரும் (குறிப்பாக தேசியவாதிகள்) இராவணன் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருவார்கள். அதே மாதிரித் தான், கிரேக்கர்களும், மசிடோனியர்களும் (குறிப்பாக தேசியவாதிகள்) அலெக்சாண்டர் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருகிறார்கள். பழம் பெருமை பேசி மகிழ்வதும் ஒரு தேசியவாத கருத்தியல் தான்.

பண்டைய காலத்து மசிடோனியர்கள் கிரேக்க மொழி பேசியதாக கிரேக்க தேசியவாதிகள் நம்புகின்றனர். அதற்கு மாறாக அவர்கள் தனியான மசிடோனிய மொழி பேசியதாக மசிடோனியா தேசியவாதிகள் நம்புகிறார்கள். இருப்பினும், இன்றைய மசிடோனிய மொழி கிரேக்க மொழியுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.

சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர், அதாவது அலெக்சாண்டர் காலத்திற்கு பின்னர் தான், தென் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்லாவிய மொழி பேசும் மக்களின் இனப் பரம்பலும், ராஜ்ஜியங்களும் தோன்றின. பல நாடுகளில் மொழிக்கும் இனத்திற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மசிடோனியாவில் வாழ்ந்த பண்டைய இன மக்களில் ஒரு பகுதியினர் கிரேக்கர்களாகவும், இன்னொரு பகுதியினர் ஸ்லாவியர்களாகவும் மாறி இருக்கலாம்.

இன்றைய மசிடோனியா மொழியும், பல்கேரிய மொழியும் ஒன்று தான். வித்தியாசம் மிகக் குறைவு. தமிழ்நாட்டுத் தமிழும், ஈழத் தமிழும் போன்றது. இருப்பினும் மசிடோனியர்கள் தாம் தனித்துவமான மொழி பேசுவதாக உரிமை கோருகிறார்கள். பல்கேரியர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், வல்லரசுகளின் தலையீடு காரணமாக, மசிடோனியாவின் அரைவாசிப் பகுதி கிரேக்க நாட்டிற்கு சொந்தமானது. மிகுதிப் பகுதி யூகோஸ்லாவியாவுடன் இணைக்கப் பட்டது. இன்று கிரேக்க மாகாணமாக உள்ள மசிடோனிய பகுதிகளில் வாழ்ந்த, மசிடோனிய மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப் பட்டனர். அவர்கள் யூகோஸ்லேவிய மாசிடோனியாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டனர்.

1991 ம் ஆண்டு யூகோஸ்லேவியாவில் இருந்து மசிடோனியா தனியாக பிரிந்து சென்றது. ஆனால் அது ஐ.நா. சபையில் சேர்வதற்கு கிரீஸ் தடைபோட்டது. பின்னர், "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசு" என்ற அடைமொழியுடன் சேர்த்துக் கொள்ள சம்மதித்தது. இருப்பினும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளில் சேர விடாமல், கிரீஸ் தொடர்ந்தும் வீட்டோ உரிமையை பயன்படுத்தி தடுத்து வந்தது. 

மசிடோனியாவுக்கு உரிமை கோரும் கிரேக்க தேசிய (பேரின)வாதிகளின் சுவரொட்டி 

கடந்த கால் நூற்றாண்டு காலமாக, மசிடோனியா தேசியவாதிகளும், கிரேக்க தேசியவாதிகளும் விட்டுக்கொடாமல் எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தனர். அதனால் பெயர் தொடர்பான சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. அண்மையில், கிரேக்க நாட்டில் ஆட்சி பீடம் ஏறிய பிரதமர் சிப்ராசின் இடதுசாரி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது. உலகில் எந்த நாடாக இருந்தாலும், பொதுவாக இடதுசாரிகள்  கடும்போக்கு தேசியவாதிகளின்  விதண்டாவாதங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

கிரீசில் ஆளும் சீரிஸா இடதுசாரி அரசு, "வடக்கு மசிடோனியா" என்ற பெயரை ஏற்றுக் கொள்வதாகவும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு சம்மதிப்பதாகவும் அறிவித்தது. இது தொடர்பாக மசிடோனியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் விளைவாகத் தான் பொது வாக்கெடுப்பு நடக்கிறது. இருப்பினும் தேசியவாதிகள் இன்று வரைக்கும் எதிர்ப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் தேசியவாதிகளின் பேச்சைக் கேட்டால் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது. பிரச்சினை தீர்ந்தால் அவர்களது இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் தீவிரமாக எதிர்ப்பு அரசியல் செய்வார்கள். அதனால், தேசியவாதிகளை புறக்கணித்து ஒதுக்கி விட்டுத் தான் தீர்வு ஒன்றைக் காண முடியும். மசிடோனியா பிரச்சினையும் அதைத் தான் நிரூபிக்கின்றது.

Sunday, September 09, 2018

ஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்


ஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் பொது மக்களால் முற்றுகையிடப் பட்டு தீக்கிரையாக்கப் பட்டன.


கடந்த ஐந்து நாட்களாக, ஈராக்கின் எண்ணை வளம் நிறைந்த பஸ்ரா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகள், வேலை வாய்ப்புகள் கோரியும் துறைமுகத் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் குதித்தனர். 

இரண்டு மில்லியன் மக்கட்தொகை கொண்ட பஸ்ரா நகருக்கு அருகில் உள்ள, அல்கசார் துறைமுகத்திற்கு செல்லும் பாதையில் தொழிலாளர் நடத்திய மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத அரசு, ஏவல் நாய்களான காவல்துறையை  ஏவி போராட்டத்தை அடக்கப் பார்த்தது. 

ஆரம்பத்தில், பொலிசார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டு, போராட்டக்காரரை கலைந்து செல்ல வைத்தனர். ஆனால், பொலிஸ் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஆர்ப்பாட்டக் காரர்கள் இடத்தை விட்டு நகரவில்லை. பல இடங்களில் மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இதேநேரம், பஸ்ரா நகர விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்த படியால் விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டது. விமான நிலையத்தின் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் ஐந்து கதூஷ்யா ஏவுகணைகள் வந்து விழுந்து வெடித்துள்ளன. இந்தத் தாக்குதலின் போது யாரும் பலியாகவில்லை, காயமடையவுமில்லை.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பொது மக்களின் ஆதரவைப் பெற்றதும் வன்முறைப் போராட்டமாக மாறியது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பஸ்ரா நகரும், அதை அண்டிய பகுதிகளிலும் குழாயில் வரும் தண்ணீர் மாசடைந்து காணப்படுவதாக பொது மக்கள் புகார் கூறி வந்தனர். 

அது மட்டுமல்லாது மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதால், கோடை காலத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினார்கள். அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத படியால், பொங்கி எழுந்த மக்கள் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தெருவுக்கு வந்து போராடினார்கள்.

அமைதியான வழியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் முடிந்தன. அரசின் பல வருட கால புறக்கணிப்பால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ரா நகரில் உள்ள அரச அலுவலகங்களை தாக்கி எரித்துள்ளனர். இதனால் அரச நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பதினாறு பேர் மரணமடைந்தனர். பலர் கைது செய்யப் பட்டு, தெருவில் இழுத்துச் செல்லப் பட்டனர்.

இதே நேரம், ஈராக் அரசுக்கு முண்டு கொடுக்கும் ஈரானின் தூதுவராலய கட்டிடமும் தாக்கி கொளுத்தப் பட்டது. இலங்கையில் இந்தியாவின் தலையீடு மாதிரி, ஈராக்கில் ஈரானின் தலையீடு அமைந்துள்ளது. ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஈராக் ஆட்சியாளர்களை விலைக்கு வாங்கி இருந்தது. 

இதனால் தமது ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு ஈரானும் பொறுப்பு என்று பொது மக்கள் கருதுகின்றனர். தமது தாய்நாடு ஈரானின் காலனியாவதை ஈராக்கிய மக்கள் விரும்பவில்லை. அதன் எதிரொலி தான் ஈரானிய தூதுவராலயம் கொளுத்தப் பட்ட சம்பவமும். 

ஈராக்கில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில், ஈராக்கி கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளன. அதனுடன் கூட்டுச் சேர்ந்த பிற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி, தேர்தல் காலத்தில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளன. அதாவது, ஈரானின் தலையீடு, ஊழலுக்கு எதிரான இயக்கமாக தமது தேர்தல் பரப்புரைகளில் கூறி வந்துள்ளனர். அதனால் தான் பெருமளவு வாக்காளர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு தெரிவு செய்துள்ளனர். 

மேலும் ஒரு பொதுவுடைமைக் கட்சியானது, அடிப்படையில் மதப் பிரிவுகளுக்கும், இன வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்ட கட்சியாகும். அதனால் தான் ஈராக்கி உழைக்கும் மக்களை இனம், மதம் கடந்து ஒன்றிணைக்க முடிந்துள்ளது. பிற இடதுசாரிக் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை பின்பற்றியதால் தேர்தலில் வெற்றி பெற்றன.

"சதாம் ஹுசைனின் சர்வாதிகாரத்தில் இருந்து ஈராக் மக்களை மீட்க வந்த" அமெரிக்கர்கள், எண்ணை வளம் நிறைந்த ஈராக்கை ஊழல் மலிந்த ஏழை நாடாக்கி விட்டுச் சென்றனர். கடந்த தசாப்த காலமாக, இஸ்லாமிய மத அடிப்படைவாதம், ஷியா- முஸ்லிம் தேசியவாதம் போன்ற கோட்பாடுகள் ஈராக் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரும் அந்த மதவாத சக்திகளை மறைமுகமாக ஊக்குவித்து வந்தனர்.

எதிரும் புதிருமான சுன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் ஒருவர் மற்றவரைக் கண்டால் கொன்று இரத்தம் குடிக்கும் அளவிற்கு வன்மம் பாராட்டினார்கள். இதன் விளைவுகளில் ஒன்று தான் பிற்காலத்தில் "டேஷ்" அல்லது "இஸ்லாமிய தேசம்(IS)" என அறியப் பட்ட ISIS இயக்கத்தின் தோற்றமும், அதைத் தொடர்ந்த யுத்தங்களும். 

இலங்கையில் "சிங்களவர்- தமிழர் இனப்பகை" மாதிரி, ஈராக்கில் "சுன்னி - ஷியா இனப்பகையை" உயிர்ப்புடன் வைத்திருப்பதே அமெரிக்கா மற்றும் ஈராக் அரசின் நோக்கமாக இருந்துள்ளது. "மக்களை பிரித்து வைத்தால் இலகுவாக ஆள்வது இலகு" என்பதே, உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலேயர் முதல் அமெரிக்கர் வரையில் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் மத்தியில் மத அடிப்படையிலான தேசியவாதமும் இருந்து வந்தது. ஷியாக்களின் தலைமையகமாக கருதப்படும் ஈரானும் பின்புலத்தில் இருந்து ஊக்குவித்து வந்தது. அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேறியதும், அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட ஈரானின் நேரடித் தலையீடு சகல துறைகளிலும் பல மடங்கு அதிகரித்தது.

அரசியலில் மட்டுமல்லாது, பொருளாதாரத்திலும் ஈரானிய தலையீட்டை நேரடியாக உணரக் கூடியதாக இருந்தது. ஈராக் கடைகளில் பெருமளவு ஈரானிய உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும்.  

இது போன்ற காரணங்களினால், ஈராக்கிய பொது மக்கள் ஈரான் மீது வெறுப்புற்று இருந்ததில் வியப்பில்லை. ஆனால், ஷியா சகோதர இனத்தின் மனமாற்றத்தை ஏற்க மறுக்கும் ஈரானிய அரசு, "அந்நிய சக்திகள் (ஷியா) இன ஒற்றுமையை குலைக்கின்றன" என்று அலறுகின்றது. 

அதாவது, ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை பின்பற்றும், ஈராக்கிய மக்களை "ஷியா - சுன்னி" என்று இன அடிப்படையில் பிரித்து வைப்பதில் தவறில்லையாம். ஆனால், அவர்கள் வர்க்க உணர்வு கொண்டு விட்டால், "ஐயகோ, இன ஒற்றுமையை குலைக்க சதி நடக்கிறது" என்று ஓலமிடுவார்கள். ஈரானிய அரசின் அரசியல் நிலைப்பாட்டைத் தான், நம்மூர் தமிழ்த் தேசியவாதிகளும் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் உழைக்கும் மக்களே! 
ஈராக்கிய சகோதரர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். மதவாதம், தேசியவாதம் பேசி, எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதற்கு, ஈராக் பொது வேலைநிறுத்த போராட்டம் ஒரு சிறந்த உதாரணம். மதம், தேசியத்திற்கு அப்பால், வர்க்க உணர்வு தான் மக்களை தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராட வைக்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவர்கள் மனதில் மதவாத, இனவாதக் கருத்துக்கள் விதைக்கப் படுகின்றன.  மக்கள் எப்போதும் மத அல்லது இன உணர்வு கொண்ட முட்டாள்களாக இருக்க மாட்டார்கள்.

- கலையரசன் -
  9-9-2018


மேலதிக தகவல்களுக்கு:
Curfew in Iraq's Basra lifted as calm returns 
 

Thursday, August 11, 2016

கொழும்புத் தமிழர்கள், ஐரோப்பிய முஸ்லிம்கள் : இனப்பிரச்சினையின் இரண்டு பரிமாணங்கள்


அறியாமையும் ஒரு ஒடுக்குமுறை ஆயுதம் தான். இன்றைக்கு ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் குண்டுவெடிப்புகளும், அதன் விளைவான முஸ்லிம் மக்களுக்கெதிரான அரச அடக்குமுறையும் அனைவரும் அறிந்ததே. 

ஐரோப்பிய வெள்ளையின இனவெறியர்கள், ஐரோப்பிய முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் வெறுப்புப் பிரச்சாரம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இலங்கையில் அதே மாதிரியான இனவெறியர்களினால் ஒடுக்குமுறைக்குள்ளான ஈழத் தமிழர்களில் சிலரும், அதே கருத்துக்களை எதிரொலிப்பதை எப்படிப் புரிந்து கொள்வது? இதை அறியாமை என்பதா? முட்டாள்தனம் என்பதா?

பிரான்ஸில் நடந்த தாக்குதல் ஒன்றின் பின்னர், ஈழத் தமிழ் அரசியல் ஆர்வலர் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு எழுதினார்: "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து முஸ்லிகள் ஒருவர் விடாமல் அடித்து விரட்டி விடுவார்கள்." அதே மாதிரி, அவுஸ்திரேலியாவில் நடந்த தாக்குதலின் பின்னர், இன்னொருவர் எழுதினார்: "நிலைமை இப்படியே தொடர்ந்தால், உலகம் முழுவதும் இஸ்லாம் என்ற மதத்தையே தடைசெய்து விடுவார்கள்." இப்படி எழுதும் பலர் "தீவிர தமிழ் தேசியவாதிகள்"(?), அல்லது "தீவிர புலி ஆதரவாளர்கள்"(?)

இப்படியானவர்கள் கொழும்பு நகரில் தாக்குதல்கள் நடந்த நேரம் என்ன சொல்லி இருப்பார்கள்? "இப்படியே தாக்குதல்கள் தொடர்ந்தால், இலங்கையில் தமிழ் மொழியை தடை செய்து, அங்கு வாழும் தமிழர் ஒருவர் விடாமல் அடித்து விரட்டி விடுவார்கள்." என்று சொல்வார்களா? இன்றைக்கு ஐரோப்பாவில் நடக்கும் தாக்குதல்களை சாட்டாக வைத்து அங்கு வாழும் முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகிறவர்கள், இலங்கையில் தமிழர்கள் விடயத்தில் மட்டும் "நடுநிலைமை" வகிக்கப் போகிறார்களா?

1998 ம் ஆண்டு, இலங்கைக்கு ஒரு சுற்றுலாப் பயணியாக சென்றிருந்த டச்சுப் பெண்மணி ஒருவர், நெதர்லாந்தில் வெளியான Sri lanka veslaggever என்ற சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன். Cornelie Quist எனும் அந்தப் பெண்மணி, தான் நேரில் கண்ட உண்மைகளை கட்டுரையில் எழுதி இருக்கிறார். அந்தத் தகவல்கள், ஏற்கனவே அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் பலருக்கு பரிச்சயமான விடயங்கள்.

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு சென்ற அவர், நகரில் செல்வந்தர்கள் வாழும் பகுதி ஒன்றில் வாழ்ந்து வந்த தமிழ் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது கொழும்பில் தமிழர்கள் வீடு வாடகைக்கு எடுப்பது எவ்வளவு சிரமமானது என்பதை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுக்காரரின் பெயர் ராஜசிங்கம். அவர்கள் வீடு தேடிய பொழுது, சிங்கள வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு சொல்லி மறுப்பார்கள்: "உங்கள் பெயர் ராஜசிங்கவா, ராஜசிங்கமா?" "மன்னிக்கவும், நாங்கள் சிங்களவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு கொடுப்போம்."

வாடகைக்கு வீடு எடுப்பது தொடர்பாக, தற்போது ஐரோப்பிய நகரங்களில் உள்ள நிலைமையும் அது தான். ஐரோப்பிய வீட்டு உரிமையாளர்கள் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கிறார்கள். வீடு தேடும் முஸ்லிம் நபர், அந்நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, உத்தியோகம் பார்த்தாலும், வீடு வாடகைக்கு கிடைப்பதில்லை.

கொழும்பில் வாழும் படித்த, மத்தியதர வர்க்க நண்பர்கள் கூட, தற்போது தமிழர், சிங்களவர் என்று முரண்பாடுகளுடன் பிரிந்து வாழ்வதை காணலாம். இந்தக் கட்டுரையை எழுதிய டச்சுப் பெண்மணி, இருபது வருடங்களுக்கு முன்னர் (எழுபதுகளில்) இலங்கையில் தங்கியிருந்து வேலை செய்துள்ளார். அதனால் நிறைய சிங்கள, தமிழ் நண்பர்கள் இருந்தனர். இந்த தடவை கொழும்பில் தமிழர் வீட்டில் தங்கியிருந்து, சிங்கள நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களது உரையாடல்களில் தவிர்க்கவியலாது இன முரண்பாடு அரசியலும் இடம்பெற்றுள்ளது. இவரது சிங்கள, தமிழ் நண்பர்கள் கடந்த பல வருடங்களாக ஒருவரையொருவர் சந்திக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தளவுக்கு இன முரண்பாடு அவர்களது நட்பில் விரிசலை உண்டாக்கி இருந்தது. அந்தளவுக்கு இருதரப்பு பதற்றம், நம்பிக்கையின்மை, முரண்பட்ட கருத்து மோதல்கள். இது தொடர்பாக, தங்களது சிங்கள நண்பர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று இவருடன் பேசிய தமிழ் நண்பர்கள் விளங்கப் படுத்தினார்கள்.

பெரும்பாலான சிங்கள நண்பர்களின் எதிர்வினைகள் ஒரே மாதிரி இருந்தாலும், ஒரு சிலர் கடுமையாக நடந்து கொள்வார்கள்: "நீங்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்றால், ஏன் அதை வெளியே காட்டிக் கொள்வதில்லை?" என்று கேட்பார்கள். அது குறித்து பதிலளித்த தமிழ் நண்பர்கள் சொன்னார்கள்: "பாருங்கள்! இது தான் பிரச்சினை. தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கு நிபந்தனையாக, தமிழர்களான நாங்கள் எல்லோரும் புலிகளை வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதாவது எல்லாத் தமிழர்களும் புலிகளை ஆதரிப்பதாக நினைக்கிறார்கள்."

எந்த வித்தியாசமும் இல்லாமல், அதே கதை தான் ஐரோப்பாவிலும் நடக்கிறது. கொழும்பில் நடந்த ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்திற்கு பிறகும், அங்கு வாழும் தமிழர்கள் புலிகளை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று சிங்களத் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப் படுகின்றது. அதே மாதிரியான அழுத்தம் தான் ஐரோப்பிய முஸ்லிம்கள் மீதும் பிரயோகிக்கப் படுகின்றது. 

ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னரும், அனைத்து முஸ்லிம்களும் ஐ.எஸ். (அல்லது அல்கைதா) தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்போது தான் முஸ்லிம்கள் தாமும் இந்நாட்டு பிரஜைகள் என்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளலாம். ஐரோப்பிய முஸ்லிம்கள் எல்லோரும் ஐ.எஸ். போன்ற தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்பதில்லை. ஐரோப்பியர்களுக்கு அதைப் பற்றி கவலையும் இல்லை.

கட்டுரையாசிரியர் கொழும்பு நகரில் தங்கியிருந்த நேரம், மருதானையில் புலிகள் வைத்த குண்டு வெடித்து நிறையப் பேர் பலியானார்கள். அப்போது அந்தத் தாக்குதலை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சில குழுக்கள் சிங்கள பேரினவாதிகளையும், வேறு சில குழுக்கள் சிங்கள முற்போக்குவாதிகளையும் கொண்டிருந்தன. ஆனால், ஆர்ப்பாட்டங்கள் முழுவதும் புலிகளுக்கு எதிராக இருந்தன. ஒரு சில தமிழர்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இருப்பினும், பெரும்பாலான தமிழர்கள் அச்சத்தில் தமது வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். இவ்வாறு அன்று கொழும்பில் நடந்த சம்பவங்களை பதிவு செய்துள்ளார். 

அதே நிலைமை தான் ஐரோப்பாவிலும். ஐரோப்பிய நகரம் ஒன்றில் குண்டு வெடித்தால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். ஒரு சில முஸ்லிம்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இருப்பினும், பெரும்பாலான முஸ்லிம்கள் அச்சத்தில் தமது வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். ஒடுக்குமுறையின் வீரியம், ஐரோப்பாவை விட இலங்கையில் அதிகமாக உள்ளதை யாரும் மறுக்கவில்லை.

இலங்கையில் நடந்தது மாதிரி, ஐரோப்பாவிலும் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் சிலநேரம் அப்பாவிகளும் கைது செய்யப் படுவதுண்டு. ஆனால், இலங்கையில் நடந்தது போன்ற சித்திரவதைகள், சட்டத்திற்கு முரணான படுகொலைகள், காணாமல்போதல்கள், ஐரோப்பாவில் நடப்பதில்லை. ஆனால் அந்த வித்தியாசத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, ஐரோப்பாவில் உள்ள பேரினவாதிகளை குறைவாக எடைபோட முடியாது. ஏற்கனவே நாஸிகளின் காலத்தில், ஐரோப்பா பெருமளவு மனித உரிமை மீறல்களையும், இனப் படுகொலைகளையும் கண்டிருந்தது. அப்படியான நிலைமை இனிமேலும் வராது என்று யாரும் உறுதியிட்டுக் கூற முடியாது.


Monday, January 26, 2015

பாரிஸ் சேரிகளில் வாழும் தமிழர்களும், பிரான்ஸின் இனப் பிரச்சினையும்


பிரான்ஸ் நாட்டில், சேரிகள் இல்லையென்று அங்கு வாழும் தமிழ் பேசும் அரச அடிவருடிகள் கூறுகின்றனர். ஆனால், உண்மை நிலையோ வேறு. பாரிஸ் நகரில் வாழும், பெரும்பான்மையான தமிழர்கள் அடித்தட்டு பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்.
பிரெஞ்சு மொழியில் "banlieue" என்று அழைக்கப் படும், நகருக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிறார்கள். அங்கிருந்து, தினசரி 30- 50 கி.மி. தூரம் பிரயாணம் செய்து, வேலை செய்து விட்டு வருவோரும் உண்டு.

தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தினர், பிரெஞ்சு வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலைகளைத் தான் செய்கின்றனர். பெரும்பாலானோர் துப்பரவுப் பணியாளர்களாக, அல்லது உணவகங்களில் வேலை செய்கின்றனர். அவர்களின் சக பணியாளர்களும், பிற நாடுகளில் இருந்து வந்த குடியேறிகள் தான்.

குறிப்பாக, அல்ஜீரியா, மொரோக்கோ, மாலி, செனகல் போன்ற முன்னாள் பிரெஞ்சு காலனிகளில் இருந்து வந்தவர்கள். பிரான்சில் இவர்களைத் தான், பொதுவாக "முஸ்லிம்கள்" என்று அழைக்கிறார்கள். தமிழர்களை விட எண்ணிக்கையில் அதிகமானவர்கள். காலனிய தொடர்பு காரணமாக, பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருப்பதால், வேலை வாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதாக, சில தமிழர்கள் சொல்லிக் குறைப் படுவதுண்டு.

இங்கே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், தமிழர்களும், பிரெஞ்சு பேசத் தெரிந்த "முஸ்லிம்களும்", ஒரே இடத்தில் வேலை செய்வது மட்டுமல்ல, ஒரே இடத்தில் தான் வசிக்கிறார்கள். மிக உயரமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தாலும், பலரால் வாடகையை செலுத்த முடிவதில்லை. வேலை செய்யும் இடங்களில், பிரெஞ்சு முதலாளிகள் அனைவரையும் ஒன்றாகத் தான் சுரண்டுகின்றனர்.

தொழிலாளர்களை சுரண்டுவதில், வெளிநாட்டு முதலாளிகளும் சளைத்தவர்கள் அல்ல.   தமிழ் முதலாளிகள் தங்களது சொந்த இனத்தை சேர்ந்த தொழிலாளர்களையே சுரண்டிக் கொழுக்கின்றனர். மிகக் குறைந்த கூலி கொடுப்பது மாத்திரமல்ல, தினசரி 12 மணிநேரம் வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றும் முதலாளிகளும் உண்டு. 

பாரிஸ் தமிழர்கள் அல்ஜீரியர்களுக்கு வைத்துள்ள பட்டப் பெயர்: "அடையார்"! அதன் அர்த்தம், அல்ஜீரியர்களின் கடைகள் எந்த நேரமும் திறந்திருக்கும் என்பதாலாம். எந்த நேரமும் திறந்திருக்கும் அல்ஜீரிய முதலாளிகளின் கடைகளில், தினசரி 16 மணித்தியாலம் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப் படும் தொழிலாளர்களும் அல்ஜீரியர்கள் அல்லது முஸ்லிம்கள் தான்.

பாரிஸ் நகரில் வாழும் தமிழர்களுக்கு காலமெல்லாம் பொருளாதார நெருக்கடி தான். தனியொரு உழைப்பாளி தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்திற்கு ஏற்றவாறு வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கிறார். பாரிஸ் நகரில் வீட்டுப் பற்றாக்குறை, வாடகைப் பிரச்சினை பற்றி, அங்கு வாழும் தமிழர்களை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். பல தமிழ்க் குடும்பங்கள் பிரமச்சாரி இளைஞர்களுக்கு அறைகளை வாடைக்கு விடுவதும், பின்னர் அதனாலேயே குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவதும் வழமையானவை.

பாரிஸ் நகரை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகள் தான், இன்று சேரிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. கிளிஷி சூ புவா (Clichy sous Bois) பிரான்சின் பிரபலமான banlieue சேரிப் பகுதி. அங்கே தான், அண்மைய பாரிஸ் தாக்குதலில் யூத கோஷர் மார்க்கெட்டில் நான்கு பேரை கொன்ற "பயங்கரவாதி" Amedy Coulibaly வாழ்ந்து வந்தான். அவன் முன்பு ஒரு சாதாரண கிரிமினல். அவனைப் போன்ற பல கிரிமினல்கள், ஜிகாதி தீவிரவாத அரசியலுக்குள் நுளைந்து பெருமை தேடிக் கொள்கின்றனர்.

Clichy sous Bois, பாதுகாப்பற்ற, வெளியார் நுளைய முடியாத பிரதேசம் என்று, அமெரிக்க Fox சேனல் அறிவித்திருந்தது. உண்மையில், அந்தளவு மோசமான நிலைமை இல்லையென்றாலும், வசதி இருப்பவர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை. பிரெஞ்சு வெள்ளையர்கள் மட்டும் அந்தப் பிரதேசத்தில் வாழ்வதை தவிர்க்கவில்லை. அதிகம் சம்பாதிக்கும், வசதியான வெளிநாட்டு குடியேறிகள், முஸ்லிம்கள், தமிழர்கள் யாரும் அங்கே வசிக்க விரும்புவதில்லை.

கைவிடப் பட்ட கட்டிடங்கள், பராமரிக்கப் படாத சுற்றுச் சூழல், பெருகி வரும் குற்றச் செயல்கள், போதைவஸ்து பாவனை என்பன, அந்த இடத்தை வசிக்க முடியாத ஆபத்தான பிரதேசம் ஆக்கியுள்ளன. நகர மத்தியில், பட்டப் பகலில் போதை வஸ்து விற்பனையாளர்கள் தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருப்பார்கள். இரவில் அவர்களே திருட்டுக்களிலும் ஈடுபடுவார்கள்.

Clichy sous Bois, பாரிசுக்கு வெளியே உள்ள தனியான நகரசபைக்கு சொந்தமான பகுதி. அங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் "முஸ்லிம்கள்" தான். அதாவது, அல்ஜீரியர் மற்றும் ஆப்பிரிக்கர்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் "முஸ்லிம்கள்" தான். ஆனால், அந்தக் கிரிமினல்களினால் அதிகமாகப் பாதிக்கப் படுவோரும் "முஸ்லிம்கள்" தான் என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. 

பத்து வருடங்களுக்கு முன்னர், இதே Clichy sous Bois புறநகர்ப் பகுதி, உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. அங்கே நடந்த கலவரம் தான் அதற்கு காரணம். "பணக்காரர்களின் சொத்துக்களான" கார்களை, இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் எரித்து நாசமாக்கினார்கள். அப்போது நடந்த கலவரத்தில், சில வசதியான "முஸ்லிம்களின்" கார்களும் எரிக்கப் பட்டன.

பாரிஸ் கலவரம் தொடர்பாக, நான் முன்பு பிரான்சில் இருந்து வெளியான உயிர்நிழல் சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதி: 
//"இனி இது பாரிஸ் அல்ல. பாக்தாத்!" என்ற கோஷம் 2005ம் ஆண்டு ஒக்டோபர் 27 அன்று பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியான கிளிஷி சூ புவாவின் தெருக்களில் கேட்டது. தெருக்களின் அந்தப் பக்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், குண்டாந்தடிகள் சகிதம் பாரிஸ் நகரப் பொலிஸ். இந்தப் பக்கம் பெட்ரோல் குண்டுகளுடன் 18 வயதையும் தாண்டாத இளைஞர்கள் கூட்டம். அமைதியான தெருக்கள் போர்க்களமாகின. தன்னிச்சையாக திரிந்த இளைஞர்கள் வாகனங்களுக்கு தீவைத்தனர். பாடசாலைகள், தபால் அலுவலகங்கள், கடைகள் எதுவும் தப்பவில்லை. அனைத்தும் எரிந்து சாம்பலாகின. தீயணைப்புப் படையினருக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்தக் கலவரம் ஒரு நாளோடு அடங்கி விடவில்லை. அடுத்து வந்த ஒவ்வொரு இரவும் தொடர்ந்தது. கலவரத்தீ பாரிஸின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தொடர்ந்து பிரான்சின் பல நகரங்கள் ஒரே மாதிரியான தீவைப்புக் காட்சிகளை கண்டன .// (Uyirnizhal, January - March 2006)

வீடுடைத்து திருடுபவன், பாரிஸ் நகரில் பணக்காரர்கள் வசிக்கும் பிரதேசத்தில் அதைச் செய்வதில்லை. ஏழைகள் வசிக்கும் புறநகர்ப் பகுதியில், வசதியானவர்களின் வீடுகளைத் தான் உடைப்பார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களும் அப்படித் தான். இதனால் பாட்டாளிவர்க்க தமிழர்களும் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால், அவர்கள் இதனை உலகம் முழுவதும் உள்ள சேரிகளின் சமூகப் பிரச்சினையாக பார்க்காமல், குறிப்பிட்ட இனத்தை குற்றவாளிப் பரம்பரை ஆக்கும் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர்.

பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் பதற்றம் நிலவியது. பாடசாலைகள் எல்லாவற்றையும் அரசாங்கமே நிர்வகிப்பதால், சார்லி எப்டோ தாக்குதலில் இறந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது. குறைந்தது, 200 பாடசாலைகளில் மௌன அஞ்சலி மாணவர்களினால் இடையூறு செய்யப் பட்டது. ஏன் சிரியாவில் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப் படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சார்லி எப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை யாரும் நியாயப் படுத்தவில்லை. "அந்தப் பத்திரிகை முஸ்லிம்களை அவமதித்து இருந்த போதிலும், மதத்தின் பெயரில் கொல்வது தவறு. கொலை செய்யப் படுமளவிற்கு கேலிச் சித்திரம் வரைந்தவர்கள் அந்தளவு பெரிய குற்றத்தை செய்யவில்லை." என்று கூறுகின்றனர். மேலும், இதனை "யூதர்களின் சதி" என்று கூறுகின்றனர். பிரான்சில் முஸ்லிம்களை ஒடுக்குவது யூத ஆளும் வர்க்கம் என்றும், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலந்த் ஒரு யூதர் என்றும் இளைய தலைமுறையினர் பலர் நம்புகிறார்கள்.

இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டுமானால், இலங்கையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கொழும்பில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப் பட்ட சிங்களவர்களுக்காக, யாழ்ப்பாண பாடசாலைகளில் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று, சிறிலங்கா அரசு உத்தரவிடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது தமிழ் மாணவர்கள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைப்பார்கள்? பிரான்சில் இருப்பதும் இனப் பிரச்சினை தான். பலர் தவறாக நினைப்பதைப் போல, மதப் பிரச்சினை அல்ல.

கிளிஷி சூ புவா, முன்னொரு காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாதிருந்த அமைதிப் பூங்காவாக இருந்தது. குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்து குடியேறியோர் வசதியாகத் தான் வாழ்ந்து வந்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிட்ரோன் கார் தொழிற்சாலை பலருக்கு வேலை கொடுத்தது. அதனால், உழைக்கும் வர்க்க மக்களின் விருப்பத்திற்குரிய குடியிருப்பாக அது மாறியிருந்தது. பல புதிய அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுந்தன. லிப்ட், வெப்பமூட்டும் வசதிகளுடன் கட்டப் பட்டன.

எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், கிளிஷி சூ புவாவில் நிலைமைகள் மாறத் தொடங்கின. சிட்ரோன் கார் தொழிற்சாலை மூடப் பட்டது. அதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்த படியால், வறுமையும் அதிகரித்தது. இன்று வரையில், அங்குள்ள நிலைமையில் பெரிய முன்னேற்றமில்லை. கிளிஷி சூ புவாவில் வாழும் மொத்த சனத்தொகையில் 20% வேலையில்லாதவர்கள். இளைய தலைமுறையினர் மத்தியில், இன்னும் அதிகம்.

வட ஆபிரிக்க குடியேறிகளில் பெரும்பான்மையானோர், பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள். அதாவது மத நம்பிக்கையை விட, பொருள் சேர்ப்பதில் அதிக நாட்டம் கொண்டவர்கள். ஆயினும், கடந்த இருபது வருட கால பொருளாதார நெருக்கடி காரணமாக, பலர் மதத்திற்குள் தஞ்சம் புகுகின்றனர். அது இந்தியா, இலங்கையில் வாழும் மத நம்பிக்கை கொண்ட மக்களின் நிலைமையை விட வித்தியாசமானது அல்ல. தமது பொருளாதார பிரச்சினைகளுக்கு மதம் தீர்வைத் தரும் என்று, உலகம் முழுவதும் உள்ள ஏழைகள் நம்புகிறார்கள்.

நான் "பிரான்சைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளை புனைகிறேன்" என்று சிலர் என் மேல் குற்றஞ்சாட்டலாம். "நான் எழுதுவதெல்லாம் பொய்" என்று, பிரெஞ்சு அரசை ஆதரிக்கும் தமிழ் அடிவருடிகள் சீறிப் பாயலாம். ஆனால், பிரான்ஸ் பிரதமர் Valls கூட, பிரான்சில் அப்பார்ட்ஹைட் (Apartheid) எனும் இனப் பாகுபாடு நிலவுவதை ஏற்றுக் கொண்டுள்ளார். (Apartheid : Valls taille Sarkozy http://www.liberation.fr/politiques/2015/01/22/apartheid-valls-taille-sarkozy_1186459 ) அதாவது, பிரான்ஸ் நாட்டில், இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகின்றது.

பெரும்பான்மையான பிரெஞ்சு வெள்ளையர்கள் வசதி, வாய்ப்புகளை அதிகமாக கொண்டவர்களாக உள்ளனர். அதற்கு மாறாக, பெரும்பான்மையான "முஸ்லிம்கள்" (வட ஆப்பிரிக்கர்கள்) வருமானம் குறைந்த ஏழைகளாக இருக்கின்றனர். அதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு அதிக சிரமப் படத் தேவையில்லை. ஒரு தடவை, பாரிஸ் நகரில் இருந்து கிளிஷி சூ புவாவுக்கு பயணம் செய்து பாருங்கள். ஒரு மணிநேரத்திற்குள், முதலாம் உலகில் இருந்து, மூன்றாம் உலகிற்கு சென்று விட்டதாக உணர்வீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு: 

2005 பாரிஸ் கலவரம் தொடர்பாக, உயிர்நிழல் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:

Thursday, December 18, 2014

"யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்


இது முற்போக்கு டச்சு இணையத் தளம் ஒன்றில் (http://onsfundament.nl/het-komt-allemaal-door-de-buitenlanders/) பிரசுரமான, மிகவும் அருமையான கட்டுரை.

ஐரோப்பாவில், குறிப்பாக நெதர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பரவிவருகின்றது. பூர்வீக வெள்ளையின மக்கள், தங்களது பொருளாதார பிரச்சினைகளுக்கு, வெளிநாட்டவர்களை குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான பிரச்சினை என்னவென்பதை ஆய்வு செய்யும் கட்டுரை இது.

நாம் எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கியது. இதை வாசிக்கும் தமிழர்கள், நெதர்லாந்து அல்லது ஐரோப்பாவின் யதார்த்த நிலைமையை புரிந்து கொள்வார்கள். அங்கு வாழும் மக்களின் மனோநிலையை உணர்ந்து கொள்வார்கள்.

இந்தக் கட்டுரை பூர்வீக டச்சுக்காரர்களை நோக்கி எழுதப் பட்டாலும், வர்க்க உணர்வற்ற தமிழர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. ஆகையினால், தமிழ் பேசும் மக்களுக்காக அதனை மொழிபெயர்த்து தருகிறேன்:
________________________________________________________________________________


 எல்லாவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் தான் காரணம்! 

அடிக்கடி என்ன கேள்விப் படுகின்றீர்கள்? நெதர்லாந்தில் எல்லாமே பிழையாக நடக்கிறது. அதற்குக் காரணம் வெளிநாட்டவர்கள்.


  • அகதிகள்: "சொந்த மக்களுக்கு" உதவி செய்ய வேண்டிய அரசாங்கம், அகதிகளுக்காக பணத்தை செலவளிக்கின்றது. 
  • முஸ்லிம்கள் : அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள். எங்கள் மேல் இஸ்லாத்தை திணிக்கப் பார்க்கிறார்கள். 
  •  மொரோக்கோ குடியேறிகள்: திருட மட்டுமே தெரிந்த வேலை செய்யாத சோம்பேறிகள். 
  • கிழக்கு ஐரோப்பியர்கள்: எங்களது தொழில் வாய்ப்புகளை பறிக்கிறார்கள்.


சிலநேரம், இதை வாசிக்கும் நீங்களும் இப்படி எல்லாம் நினைத்திருப்பீர்கள். மிகவும் நன்றி. இப்படியான கதைகளை பரப்புவதன் மூலம், மக்களை ஒடுக்கி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களுக்கு உதவுகின்றீர்கள்.

அகதிகளின் வருகையினால் தான், சுகாதாரப் பணியகங்கள் மூடப் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை இழுத்து மூடி விட்டால், சுகாதார சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப் படுமா? எதற்காக மக்கள் தங்கள் வீடு, வாசல்களை துறந்து வெளியேறுகின்றார்கள் என்று ஒரு நிமிடமேனும் நினைத்துப் பார்த்தீர்களா? சிலநேரம், அவர்கள் சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம், குண்டு வீச்சினால் பாதிக்கப் பட்டிருக்கலாம், அல்லது கைது செய்வதற்காக தேடப் படலாம். எமது அரசாங்கம் அந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்வதை விரும்புகின்றது.

நெதர்லாந்து கலாச்சாரத்திற்கு முஸ்லிம்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக நினைக்கிறீர்களா?  மக்டொனால்ட்ஸ் முதல் சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வரை. ஏன் எங்கள் தேசத்தின் மேலான அமெரிக்க ஆக்கிரமிப்பு குறித்து எந்தக் கவலையுமற்று இருக்கிறீர்கள்? அமெரிக்கா ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டான நாடு என்ற பிரச்சாரத்தை இன்னமும் நம்புகிறீர்களா? அந்த நாடு பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது மட்டுமல்லாது, நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக அதே பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்கின்றது.

எங்களது நாட்டில் குறைந்தளவு மொரோக்கோ குடியேறிகள் இருந்திருந்தால், வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்புகள், இவை எல்லாம் மறைந்து விடுமா? தொழிலகங்களில் வழமைக்கு மாறாக அதிக வேலை வாங்கப் படுவதற்கும், அரசு கொடுக்கும் சமூகநல உதவித்தொகை போதாமல் இருப்பதற்கும், "அந்த" மொரோக்கோ காரர்கள் தான் காரணமா? உண்மையில் யார் யாரிடம் இருந்து திருடுகிறார்கள்? உங்களிடம் இருந்து திருடும் அதே மேட்டுக்குடி வர்க்கம் தான், மொரோக்கோ காரர்களிடமும் இருந்து திருடுகின்றது.

"அந்த" கிழக்கு ஐரோப்பியர்களினால் தான், உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை மூடி விட்டால், உங்களுக்கு ஒரு நிரந்தர வேலைக்கான ஒப்பந்தம் கிடைக்குமா? பார ஊர்திகளின் (லொறி) முதலாளிகளும், ஷெல் போன்ற நிறுவனங்களும், ஐரோப்பாவில் மலிவு விலை கூலிகளை தேடிப் போவது, கிழக்கு ஐரோப்பிய மக்களின் குற்றமா? ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் இயற்றுவதற்கு கிழக்கு ஐரோப்பியர்கள் தான் காரணமா? நீங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருந்தால், பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க வழியில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

சிலநேரம், இந்த நாட்டில் எல்லாமே பிழையாக நடப்பதற்கு எங்கள் மேல் தவறு இருக்கலாம். எங்களது தவறு? ஆமாம், எங்களது தவறு தான். ஏனென்றால், இந்த நாட்டில் வாழும் நாங்கள் தெளிவாக சிந்திப்பதில்லை. இங்கே என்ன நடக்கிறது, அது ஏன் நடக்கிறது என்று அறிந்து வைத்திருக்கவில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே வர்க்கத்தை, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை அறியாமல் இருக்கிறோம்.

உலகம் முழுவதும் தங்கள் இருப்பிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள், பணத்திற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதை மறந்து விடுகிறோம். ஏனென்றால், தோல்நிறம், பூர்வீகம், மதம் போன்ற வித்தியாசங்களை பெரிதென எண்ணி, எங்களை நாங்களே பிரித்துக் கொள்கிறோம். எங்களுடைய பணம் எந்த வர்க்கத்திடம் போய்ச் சேருகின்றது என்ற உண்மையை அறியாதிருக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை பற்றி அறியாதிருக்கிறோம்.

எங்களை விட வித்தியாசமாக தோன்றும் மனிதர்கள் மேல் சீறிப் பாய்வது மிகவும் இலகுவானது. ஏனென்றால், முதலாளிகளுக்கு எதிராக எழுச்சி கொள்வதும், அவர்களது அரசியல் அமைப்பை எதிர்ப்பதும், "நெதர்லாந்து பண்பாடு" அல்ல! அப்படித் தானே? முன்னாள் லிபரல் கட்சிக்காரரும், இந்நாள் "கார்ப்பரேட்களுக்கான கட்சி"(PVV) நடத்துபவருமான ஒருவர், அமெரிக்க, இஸ்ரேலிய கோடீஸ்வரர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு நெதர்லாந்தை நாசமாக்குவதற்கு உதவுகிறார். அவர் சொல்லும் கதைகளை கேட்டு ஏமாறுகிறோம். 

இந்த பொம்மைகள், தொழிலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் பக்கம் நிற்பதாக நினைக்கிறீர்களா? அவர்கள் தான் (பூர்வீக) நெதர்லாந்து மக்களின் நன்மைக்காக பாடுபடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இனிப்பாகப் பேசுகிறவர்களை நம்புகிறீர்களா? வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்பு போன்ற திட்டங்களுக்கு, பாராளுமன்றத்தில் அவர்களும் தான் சம்மதிக்கிறார்கள். (உழைக்கும் வர்க்கம்) பிரிந்திருப்பதால் பலவீனமாகப் போகிறோம் என்பதை நீங்கள் உணரவில்லையா?

இன்னும் உணரவே இல்லை? அப்படியானால், தங்களது நிதி வழங்குநர்கள் முன்னேற வேண்டுமென்பதற்காக, இந்த சமூகத்தை இன்னும் விரைவாக உடைக்கும் நபர்களை பற்றியும் முறைப்பாடு செய்ய வராதீர்கள். ஏனென்றால், அவர்கள் அகதிகள், மொரோக்கோ காரர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள் ஆகியோரை மட்டுமல்ல, வேலை செய்யும் எல்லோரையும் பிடித்து அடக்குவார்கள். அதனை நீங்கள் பொறுத்திருந்து பார்ப்பீர்கள். 

தொழிற்சங்கம் ஒன்றின் மூலம் நிறுவனமயமாகும் ஒவ்வொருவரும், நல்லதொரு எதிர்காலத்திற்காக கிளர்ந்து எழும் ஒவ்வொருவரும் அடக்கப் படுவார்கள். ஒன்றில் வன்முறை மூலம், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை மூலம் இது நடக்கும். அதனால், அந்த நேரம் உங்களைப் பிடிக்க வந்தால், சிலநேரம் நீங்களும் தப்பி ஓட வேண்டி இருக்கும். அந்த நேரம், உங்களை ஒரு நாட்டில் அகதியாக வரவேற்பார்கள் என்று நம்புவோமாக...


(இது ஒரு மொழிபெயர்ப்பு. மூலக் கட்டுரையை வாசிப்பதற்கு: ‘Het komt allemaal door de buitenlanders’)

Friday, November 14, 2014

வட அயர்லாந்தில் விழுத்த முடியாத "பெல்பாஸ்ட் மதில்"!


பெர்லின் மதில் விழுந்த பின்னரான, 25 வருட காலத்தில், உலகில் இன்னமும் பல மதில்கள் விழாமல் அப்படியே உள்ளன. வட அயர்லாந்தில், பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்ட மதில் சுவர் பற்றிய ஆவணப் படம் ஒன்று பார்த்தேன். நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான De Muur (சுவர்) என்ற படம் பல அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

சிங்கள-தமிழ் பிரச்சினை, இஸ்ரேலிய - பாலஸ்தீன பிரச்சினை, எல்லாம் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டவை. அதே போன்றது தான், வட அயர்லாந்துப் பிரச்சினையும். எந்த வித்தியாசமும் கிடையாது. இனப்பிரச்சினை எந்தளவு தூரம் மக்களை பிளவு படுத்தியுள்ளது என்பது, அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

வட அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து ஆங்கிலேயர்களும், கத்தோலிக்க ஐரிஷ் காரர்களும், இன்னமும் இரண்டு தனிதனி சமூகங்களாக பிரிந்து வாழ்வதை, De Muur ஆவணப்படம் எடுத்துக் காட்டுகின்றது. பெல்பாஸ்ட் மதிலை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுடன் படம் தொடங்குகிறது. வழிகாட்டி அதை சுட்டிக் காட்டி, "சமாதான மதில்" என்று கூறுகின்றார்.

பெர்லின் மதிலை "அவமானத்தின் சின்னம்" என்று நையாண்டி செய்தவர்கள், பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிய "சமாதான(?)" மதிலை கண்டுகொள்வதில்லை. பெல்பாஸ்ட் "சமாதான மதில்" ஒரு பக்கம் ஆங்கிலேயர்களையும், மறு பக்கம் ஐரிஷ்காரர்களையும் இன, மத அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கின்றது.

அறுபதுகளில் நடந்த புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க சமூகங்களுக்கு இடையிலான கலவரங்களுக்கு பின்னர், பிரிட்டிஷ் இராணுவம் அங்கே நிலை கொண்டது. அதற்குப் பிறகு தான் "சமாதானத்தை நிலைநாட்டும் மதில்" கட்டப் பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக வேலை செய்யும், லியாம் எனும் ஐரிஷ்காரர், ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, பல வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். "இங்கே யாரும் தன்னை IRA உறுப்பினர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்" என்று கூறுகின்றார். ஏனென்றால், இன்றைக்கும் அதற்காக கைது செய்யப் படும் அபாயம் உள்ளது!

மதில் சுவரை சுற்றிப் பார்க்க வரும் கத்தோலிக்க சிறுவர்கள், மதிலுக்கு அப்பால் உள்ள புரட்டஸ்தாந்து பகுதிக்குள் செல்ல அஞ்சுகிறார்கள். அதே மாதிரி, புரட்டஸ்தாந்து காரர்கள் கத்தோலிக்க பகுதிக்குள் செல்வதில்லை. இரு பகுதி மக்கள் மனதிலும் அச்சம் குடிகொண்டுள்ளது. ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதில்லை. அங்கே சமாதானம் பெயரளவில் மட்டுமே உள்ளது.

மதிலுக்கு அருகே வாழும் ஆங்கிலேய குடும்பம் ஒன்று, வீட்டு முற்றத்திற்கு மேலே கண்ணாடிக் கூண்டு அமைத்துள்ளது. அதைத் தவிர மதிலுக்கு மேலே கம்பி வலை கட்டப் பட்டுள்ளது. ஏனென்றால், மறு பக்கத்தில் இருந்து கற்கள் வீசப் படுகின்றனவாம். "ஒரு நாள், அந்த மதில் இடிக்கப் பட்டால் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்விக்கு, "இடம்பெயர்ந்து சென்று விடுவோம்" என்று வீட்டுக்கார பெண்மணி பதில் கூறுகின்றார்.

புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க சமூகங்களை சேர்ந்த பிள்ளைகள், இன்னமும் தனித்தனி பாடசாலைகளில் படிக்கின்றன. அதனால், மற்ற சமூகத்தின் மீதான வெறுப்புணர்வுடன் வளர்க்கப் படுகின்றன. நண்பர்களாக்கிக் கொள்வதும் அரிதாகவே நடக்கிறது. மதிலுக்கு இரண்டு பக்கமும் சுமார் 50 மீட்டர் தூரத்தில் பிரிந்து வாழும் இரண்டு நண்பிகள், அமெரிக்காவில் தான் சந்தித்துக் கொண்டார்கள்.

டச்சு புரட்டஸ்தாந்து மன்னனின் உதவியுடன், ஆங்கிலேயர்கள் வட அயர்லாந்தை ஆக்கிரமித்தனர். தமது மேலாதிக்க வெறியை ஒவ்வொரு வருடமும் "ஒரேஞ்ச் அணிவகுப்பு" என்ற பெயரில் காட்டுகின்றனர். வேண்டுமென்றே கத்தோலிக்க தெருக்களுக்கு ஊடாக அணி நடையாக செல்லும் பொழுது தான் கலவரங்கள் நடக்கின்றன. கத்தோலிக்க மக்களை ஆத்திரமூட்டி தூண்டி விடும் நோக்கிலேயே, புரட்டஸ்தாந்துகாரர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். இந்தியாவில் இந்துத்துவாவாதிகள், முஸ்லிம்களின் தெருக்களின் ஊடாக, விநாயகர் ஊர்வலம் செல்வதை, வட அயர்லாந்தின் ஒரேஞ்ச் அணிவகுப்பு நினைவுபடுத்துகின்றது. வீட்டுக்குவீடு வாசல்படி இருக்கிறது.

புரட்டஸ்தாந்து காரர்கள், "கலாச்சாரம் பேணுதல் என்ற பெயரில் தமது மேலாதிக்கத் திமிரை வெளிப்படுத்துகிறார்கள்." என்று ஒரேஞ்ச் அணிவகுப்பு குறித்து ஒரு கத்தோலிக்கர் கூறுகின்றார். இன்றைக்கும், வட அயர்லாந்தின் வசதி வாய்ப்புகளை புரட்டஸ்தாந்து காரர்களே அனுபவிக்கிறார்கள். கத்தோலிக்கர்கள், வேலை வாய்ப்பு உட்பட, எல்லா இடங்களிலும் பாகுபாடு காட்டப் படுகின்றனர். அதனால் ஒரு பின்தங்கிய சமூகமாகவே வாழ்ந்து வருகின்றனர். பெருமளவு கத்தோலிக்க ஐரிஷ்காரர்கள், பாலஸ்தீனம் போன்ற உலக விடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பதை புரிந்து கொள்வது கடினமானதல்ல.

ஆவணப் படத்தை இதிலுள்ள இணைப்பில் பார்வையிடலாம்: 
http://www.npo.nl/de-muur/07-11-2014/VARA_101369841


Monday, August 04, 2014

உலக நாடுகளை சேர்ந்த பல்லின மக்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பது ஏன்?


பாலஸ்தீனர்களின் பிரச்சினையை, இன்றைக்கும் பலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். யானை பார்த்த குருடர்கள் போன்று, தாம் தவறாக புரிந்து கொள்வது மட்டுமல்லாது, அதையே உண்மை என்றும் நம்புகிறார்கள். பாலஸ்தீன இனப் பிரச்சினை, பல உலக நாடுகளில் உள்ள ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடிந்தாலும், அதற்கும் அப்பால் ஏதோ ஒரு முக்கியமான காரணம் இருக்க வேண்டும். அதனால் தான், ஒருவருக்கொருவர் தொடர்பற்ற பல்வேறு இன மக்களும் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றனர்.

உலக முஸ்லிம்கள், பாலஸ்தீனர்களை ஆதரிப்பது, இந்திய இந்துக்கள் ஈழத் தமிழர்களை ஆதரிப்பது போன்றது. அரபு நாடுகளை சேர்ந்த அரேபியர்களின் ஆதரவை, இந்தியா மற்றும் பல உலக நாடுகளை சேர்ந்த தமிழர்களின் ஈழ ஆதரவுடன் ஒப்பிடலாம். ஆனால், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், லத்தீன் அமெரிக்கர்கள்.... இவர்களும் எதற்காக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டும்? அவர்கள் எல்லோரும் அரேபியர்களா? அல்லது முஸ்லிம்களா? அந்த மக்களின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை, நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்?

பாலஸ்தீனப் பிரச்சினை, ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது பாலஸ்தீனர்களோடு தொடங்கவுமில்லை, அவர்களோடு முடியப் போவதும் இல்லை. 

பாலஸ்தீனர்களை இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றி விட்டு, அவர்களது நாட்டை அபகரித்தது மட்டும் இஸ்ரேலின் குற்றம் அல்ல. எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய அண்டை நாடுகளுடன் போருக்கு சென்று, அவற்றின் சில பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிப்பதில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. 

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளை கண்டித்து, ஐ.நா. சபை நூற்றுக் கணக்கான தீர்மானங்களை போட்டு விட்டது. ஆனால், இஸ்ரேல் அவற்றை தூக்கி குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டது. ஐந்து வல்லரசுகளை தவிர, உலகில் வேறெந்த நாடாவது இஸ்ரேல் அளவுக்கு தைரியமாக ஐ.நா. வை எதிர்த்து நிற்க முடியுமா?

மேற்கத்திய நாடுகளில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்துவோரும், அவற்றில் பங்குபற்றுவோரும், அந்தந்த நாடுகளில் வாழும் அரபு அல்லது முஸ்லிம் இளைஞர்கள் "மட்டுமே" என்று நினைப்பது மிகவும் தவறான கருத்து. ஐம்பதுகளில் இருந்தே பாலஸ்தீன பிரச்சினைக்காக, மேற்குலகில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. 

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, அமைதி வழி ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்ல, ஆயுதமேந்திய போராட்டங்கள் கூட நடந்துள்ளன என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன். பாலஸ்தீன விடுதலைக்காக, ஐரோப்பிய நகரங்களில் தமது உயிரைக் கொடுத்து போராடியவர்களில் பலர் ஐரோப்பிய வெள்ளையர்கள். அதை விட, ஜப்பானியர்களின் தியாகத்தையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் யாரும் மதத்தால் முஸ்லிமும் அல்ல, யாருக்கும் அரபு மொழியில் ஒரு சொல் கூடத் தெரியாது.

ஐரோப்பாவில், பாலஸ்தீன ஆதரவு ஆயுதப் போராட்டம் நடந்த காலங்களில், இன்று ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும், அரபு - முஸ்லிம் இளைஞர்கள் பலர் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த இளைஞர்கள், ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினர் தான். ஆனால், அவர்களின் பெற்றோரான முதலாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம்கள், அந்தக் காலங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களுக்கும் அரசியலுக்கும் வெகு தூரம். தனது நாட்டு அரசியலில் அக்கறை இல்லாதவர்களிடம், பாலஸ்தீன பிரச்சினை பற்றிய அறிவு இருந்திருக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், ஆரம்ப காலங்களில் இருந்து, இடதுசாரிகள் மட்டுமே பாலஸ்தீன சுதந்திரத்திற்காக போராடினார்கள். அதற்குக் காரணம், பாலஸ்தீனர்கள் தனி நாடு கேட்கிறார்கள் என்பதற்காக அல்ல. செவ்விந்தியர்களின் நாடுகளில் ஐரோப்பிய வெள்ளையர்கள் குடியேறி விட்டு, அதற்கு அமெரிக்கா, கனடா என்று பெயர் சூட்டியதைப் போன்றது தான், இஸ்ரேலிய - பாலஸ்தீன பிரச்சினையும்.

அமெரிக்க காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக செவ்விந்தியர்கள் மட்டுமே போராட வேண்டுமென்பதில்லை. உலகில் உள்ள மனிதநேயவாதிகள் யாரென்றாலும், செவ்விந்தியரின் மண் உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுக்கலாம். அந்த அடிப்படையில் தான், பாலஸ்தீன பிரச்சினை சர்வதேசத்தில் பலரது கவனத்தை ஈர்க்கின்றது. அதனை வெறுமனே அரேபியரின் அல்லது முஸ்லிம்களின் பிரச்சினையாக குறுக்கிப் பார்ப்பது அறியாமை.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த அரபு - முஸ்லிம் இளைஞர்கள், பெருமளவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு, வெறுமனே அரபு இன உணர்வோ அல்லது முஸ்லிம் மத உணர்வோ காரணம் அல்ல. இரண்டாம் உலகப் போருடன் ஐரோப்பிய காலனிய காலகட்டம் முடிவடைந்தாலும், நவ காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 

"அது என்ன நவ காலனியம்?" என்று அப்பாவித் தனமாக கேட்பவர்களுக்கு, பாலஸ்தீன பிரச்சினை கண் முன்னே தெரியும் உதாரணமாக உள்ளது. அதைப் புரிந்து கொள்வதற்கு, அவர்களுக்கு பெரிய அரசியல் அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேற்கத்திய செய்தி ஊடகங்களில், இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் கற்பிக்கப் படும் சரித்திர பாட நூல்களில், குறைந்தது ஓர் அத்தியாயமாவது இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பற்றியதாக இருக்கும். 

ஆனால்... கொஞ்சம் பொறுங்கள். அந்தத் தகவல்கள் எதற்காக இஸ்ரேல் சார்புடையதாக இருக்கின்றன? அரபு மொழி பேசும் சமூகத்தினர் மத்தியில் வாய் வழியாக உலாவும் கதைகளுக்கும், பாடப் புத்தகங்கள், ஊடகங்கள் கூறும் கதைகளுக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றதே? ஒரு சாதாரண அறிவுள்ள பிள்ளை அது குறித்து கேள்வி எழுப்ப மாட்டாதா? அவர்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்காத படியால் தான், தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். 

அத்துடன், மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளும், அரசுக்களின் இன ரீதியிலான பாரபட்சமும், அவர்கள் மனதில் போராட்டக் குணாம்சத்தை உண்டாக்குகின்றன. சாதாரண மக்களுக்கு தமது பிரச்சனைகளை நேரடியாக வெளிப்படுத்த தெரியாது. பாலஸ்தீன ஆதரவு, அவர்களது அதிருப்தியை தெரிவிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதனால் தான், பாரிஸ் நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டதன் எதிரொலியாக கலவரங்கள் ஏற்பட்டன.

அரேபியர்கள் ஒற்றுமையான இனம் என்று கருதுவதும், இஸ்லாமியர்கள் ஒற்றுமையான மதத்தவர்கள் என்று நம்புவதும் பேதைமை. ஐரோப்பாவில் வாழும் மொரோக்கோ, அல்ஜீரிய முஸ்லிம்களுக்கும், துருக்கியருக்கும் இடையில் மதத்தை தவிர வேறெந்த ஒற்றுமையும் கிடையாது. ஈராக், ஈரான், சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் கொளுந்து விட்டு எரியும், இஸ்லாமிய மதத்தில் உள்ள சன்னி - ஷியா மார்க்க வேறுபாடு, இன்று வெளியுலகில் ஓரளவு தெரிய வந்துள்ளது. ஆயினும், இன்னும் சில இஸ்லாமிய மதப் பிரிவினரின் பிரச்சினைகள் வெளியே தெரிய வருவதில்லை. 

மொரோக்கோ, அல்ஜீரியாவில் பெர்பெர் எனும் இன்னொரு மொழி பேசும் இனம் வாழ்வது எத்தனை பேருக்குத் தெரியும்? லிபியாவில் இனக் குழுக்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகள் இன்று மிகப் பெரிய இரத்தக் களரியை உண்டாக்கும் ஆயுத மோதல்களாக பரிணமித்துள்ளன. லெபனானில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று இரத்தம் குடித்துக் கொண்டிருந்தார்கள். 

இதைத் தவிர அரேபியருக்கு இடையிலான வர்க்க முரண்பாடுகள், கலாச்சார முரண்பாடுகள், யேமன், மொரிட்டானியா ஆகிய நாடுகளில் உள்ள சாதி முரண்பாடுகள்..... இப்படி எல்லாவற்றையும் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தால், ஒரு புத்தகமே எழுதி விடலாம். இத்தனை முரண்பாடுகளை கொண்ட அரேபியர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கக் கூடியது, பாலஸ்தீன பிரச்சினை மட்டுமே.

Saturday, July 12, 2014

சன்னி - ஷியா இனப் பிரச்சினையில் தோன்றிய ISIS எனும் மதவாதப் பூதம்

சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்த செனட்டர் மக் கெய்ன்
ISIS இனுடைய நதிமூலம் என்னவென்று ஆராய்வதற்கு, நாங்கள் சிரியா உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்திற்கு செல்ல வேண்டும். குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னராவது, ISIS பற்றிய பலரது கணிப்பீடு மிகவும் மாறுபட்டிருந்தது. அப்போது இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் கூட அந்த இயக்கத்தை ஆதரித்தார்கள். அவர்கள் எல்லோரும் அமெரிக்க/மேற்கத்திய ஆதரவு தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னாள் "ISIS ஆதரவு தமிழர்களில்" பலர், புலிகளையும் தீவிரமாக ஆதரிப்பவர்கள். அப்படியான சிலருடன் வாதாடி இருக்கிறேன். ISIS ஒரு மதவாத அமைப்பு என்று கூறினேன். அப்போது யாரும் நான் சொன்னதை கேட்கும் நிலையில் இருக்கவில்லை. ஆதாரம் கொண்டு வந்து காட்டுமாறு அடம் பிடித்தார்கள். ஆதாரத்தை காட்டினாலும் நம்ப மறுத்தார்கள். "ISIS ஒரு மதவாத இயக்கம் அல்ல, சிரியாவில் ஆசாத் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடும் விடுதலை இயக்கம்" என்று வாதாடினார்கள். அதற்குக் காரணம், அன்று மேற்கத்திய ஊடகங்கள் செய்து வந்த பிரச்சாரம். அவர்களது அரசியல் கொள்கைகள் ஏற்கனவே நாம் அறிந்தவை தான். அமெரிக்கா எதை ஆதரிக்க சொன்னாலும் ஆதரிப்பார்கள், எதை எதிர்க்க சொன்னாலும் எதிர்ப்பார்கள்.

அன்றைக்கு ISIS பலரின் கண்களுக்கு விடுதலைப் போராளிகளாக தெரிந்தார்கள். இன்னும் சொல்லப் போனால், புலிகளுக்கு கூட அந்தளவுக்கு மேலைத்தேய ஆதரவு இருக்கவில்லை. அமெரிக்கா வெறும் அரசியல் பிரச்சாரத்துடன் நின்று விடாது, ஆயுதங்கள், நிதி கொடுத்து ஆதரித்து வந்தது. முன்பொரு தடவை, தமிழ்நாட்டில் இருந்து வைகோ வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து விட்டு திரும்பியது போன்று, செனட்டர் மக்கெய்ன் அமெரிக்காவில் இருந்து துருக்கி ஊடாக சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்து விட்டு திரும்பி இருந்தார்.

ISIS ஆசாத் அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதால் மட்டும், அதற்கு சிரிய மக்கள் ஆதரவளித்தனர் என்று, அங்குள்ள நிலைமையை கறுப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ISIS மட்டுமல்லாது, FSA, அல் நுஸ்ரா என்று பத்துக்கும் குறையாத ஆயுதபாணி இயக்கங்கள் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு இடையில் ஒரு கொள்கை ஒற்றுமை இருந்தது. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் எல்லோருக்கும் பொதுவான கோட்பாடாக இருந்தது. 

FSA, வெளிநாட்டு உதவி பெறுவதற்காக தன்னை ஒரு மதச் சார்பற்ற மிதவாத இயக்கமாக காட்டிக் கொண்டது. ஆனால், உண்மையில் அதுவும் ஒரு மதவாத இயக்கம் தான். ஆசாத் அரசு, தீவிரமான மதச் சார்பற்ற அரசாக இருந்தது. ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு போன்று சுதந்திரமான கலாச்சாரத்தை பின்பற்றியது. கிளர்ச்சியாளர்களின் மதவாத நிலைப்பாட்டிற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

சிரியாவில் ஆசாத் அரசை எதிர்த்துப் போராடிய இயக்கங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் மட்டும் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தன. சிரியாவில் வாழும் பெரும்பான்மை சமூகமான, சன்னி முஸ்லிம்கள் மட்டுமே, அந்த இயக்கங்களின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தனர். ஆசாத் அரசும், இராணுவமும் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தின. (கிறிஸ்தவ சமூகமும் அரசை ஆதரிக்கின்றது.) உண்மையில், சிரிய ஆளும் வர்க்கத்தினர், ஷியா முஸ்லிம்களில் இன்னொரு உப பிரிவான அலாவி சமூகத்தை சேர்ந்தவர்கள். 

யார் இந்த அலாவி முஸ்லிம்கள்? இந்தியாவில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்ட சாதி போன்றது தான் அலாவி சமூகம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, பெரும்பான்மை சன்னி முஸ்லிம்களால் ஒடுக்கப் பட்டு வந்த சமூகம் அது. இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய, அலாவி சமூகத்தை சேர்ந்த ஆசாத் ஆட்சியில் தான், அவர்கள் மேன் நிலைக்கு வந்தனர். அதற்கு முன்னர், உயர்த்தப் பட்ட சமூகமாக இருந்த சன்னி முஸ்லிம்கள், தாம் அனுபவித்து வந்த சலுகைகளை இழந்தனர். அவர்கள் இப்போது சிரியாவில் ஒடுக்கப்பட்ட சமூகமாக உள்ளனர். பொருளாதாரப் பிரச்சினை அவர்களைத் தான் முதலில் பாதித்தது. 

சிரியாவில் அண்மைய உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்னர், சன்னி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வகாபிச முஸ்லிம் சகோதரத்துவ கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. ஹோல்ம்ஸ் நகரத்தில், சன்னி முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்றது. அதனால் ஹோம்ஸ் அன்றும், இன்றும் இஸ்லாமியவாதிகளின் கோட்டையாக கருதப் படுகின்றது. எண்பதுகளில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் தூண்டி விட்ட எழுச்சியை, அரச படையினர் அடக்கிய போது சுமார் இருபதாயிரம் மக்கள் பலியானார்கள். கொல்லப் பட்டவர்கள் : சன்னி முஸ்லிம்கள். கொன்றவர்கள் : ஷியா முஸ்லிம் படையினர். தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரிலும் அந்த நிலைமை மாறவில்லை. 

சிரியாவில், சன்னி முஸ்லிம்களை பொருத்தவரையில், ISIS போன்ற இயக்கங்கள், அந்த சமூகத்தை பாதுகாப்பதற்காக, அதாவது "இன விடுதலைக்காக" போராடுகின்றன. (அதனால் தான் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், சன்னி முஸ்லிம் கிளர்ச்சிப் படைகளை "விடுதலைப் போராளிகள்" என்று அழைத்தனர்.) FSA க்கும், ISIS க்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. 

ISIS இல் நிறைய வெளிநாட்டு ஜிகாதிகள் உள்ளனர். அந்த ஜிகாதி போராளிகள் அனைவரும் சன்னி முஸ்லிம்கள். சிரியா சன்னி முஸ்லிம்களும், "ஷியா ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை செய்ய வந்த சகோதரர்களை" வரவேற்றார்கள். புலிகள் அமைப்பில் தமிழ்நாட்டு தமிழர்கள் போராளிகளாக சேர்ந்திருந்தால், ஈழத் தமிழர்கள் வேண்டாம் என்று மறுக்கப் போகிறார்களா? அதே மாதிரியான நிலைமை தான் சிரியாவிலும் உள்ளது. 

FSA உறுப்பினர்கள் பெரும்பாலும், முன்னாள் சிரிய இராணுவ வீரர்கள். முன்பு சிரிய இராணுவத்தில் கடமையில் இருந்த சன்னி முஸ்லிம் அதிகாரிகள், போர்வீரர்கள். யுத்தம் தொடங்கியவுடன் இராணுவத்தை விட்டோடி விட்டார்கள். தங்களது சொந்த இன மக்களை (அதாவது, சன்னி முஸ்லிம் சமூகம்) கொல்ல விரும்பவில்லை என்பது ஒரு காரணம்.  அதை இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னொரு காலத்தில், சிறிலங்கா இராணுவத்தில் தமிழர்களும் இருந்தனர். ஆனால், ஈழப்போர் ஆரம்பித்தவுடன், ஒன்றில் அவர்கள் ஒதுக்கப் பட்டனர், அல்லது தாமாகவே விலகிச் சென்று விட்டனர்.

சன்னி-ஷியா பிரச்சினையை, வெறுமனே மதப் பிரச்சினையாக பார்ப்பது தவறு. அவை இரண்டு வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அதுவும் ஒரு இனப் பிரச்சினை தான். சன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டவை. ஒருவரது கலாச்சாரத்தை மற்றவர் மதிக்காத போக்கும் காணப் படுகின்றது. சன்னி - ஷியா சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு, சிங்கள - தமிழ் வெறுப்புணர்வுக்கு சற்றிலும் குறைந்தது அல்ல. 

இனம் என்னும் பொழுது, நாங்கள் எப்போதும் மொழியை புரிந்து கொள்கிறோம். அது தவறு. ஈராக், சிரியாவில் வாழும், சன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒரே மொழி பேசலாம், ஒரே மதத்தை பின்பற்றலாம். ஆனால், ஆயிரக் கணக்கான வருடங்களாக இரண்டு வேறு இனங்களாக பிரிந்து வாழ்கின்றன. அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு முன்னர் ஈராக்கில் வாழ்ந்த வேற்றின மக்கள், ஷியா சமூகமாக மாறியிருக்க வாய்ப்புண்டு. (அதன் அர்த்தம் இனக் கலப்பு நடக்கவில்லை என்பதல்ல. ஆனால், கலாச்சார வேறுபாட்டுக்கு அது காரணமாக இருக்கலாம்.)  அதற்கு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். பஸ்ரா நகருக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழும், "சதுப்பு நில அரேபியர்கள்" இஸ்லாத்திற்கு முந்திய புராதன கலாச்சாரத்தை, இன்றைக்கும் பின்பற்றுகின்றனர்.

சிரியா அல்லது ஈராக்கில், யார் சன்னி, யார் ஷியா என்று பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கலாம். உதாரணத்திற்கு, "அலி" என்று பெயர் வைத்துக் கொள்ளும் எல்லோரும் ஷியாக்கள் என்று இலகுவாக கண்டுபிடிக்கலாம். இரண்டு சமூகங்களும், தனித் தனியாக வெவ்வேறு பிரதேசங்களில் பிரிந்து வாழ்கின்றன. நகரங்கள் மட்டும் விதிவிலக்கு. இருப்பினும், பாக்தாத் நகரில் தனியே ஷியா முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதி ஒன்றுள்ளது. அது ஒரு சேரிப் புறம் போன்றது. பாக்தாத் நகரில் பின் தங்கிய பகுதி. மும்பையில் தாராவி பகுதியுடன் அதனை ஒப்பிடலாம்.

சன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. கலப்பு மணம் செய்து கொள்பவர்கள், முரண்பாடுகள் தீவிரமடையும் காலங்களில், சமூகத்தால் ஒதுக்கப் படும் ஆபத்து உள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்தில், ஈராக்கில் பல தடவைகள் இனக் கலவரங்கள் வெடித்துள்ளன. ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பிழையான சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப் பட்டார்கள். பரஸ்பரம் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடந்தன. ஆயுதமேந்திய குண்டர்கள், வழியில் செல்லும் வாகனங்களை மறித்து, பயணிகளை சன்னி - ஷியா என்று பிரித்தறிந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இரண்டு தரப்பிலும் இது போன்ற படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

வரலாறு முழுவதும் ஒரு சமூகம், மற்ற சமூகத்தை அடக்கி ஆண்டு வந்துள்ளது. ஈராக்கில் சதாம் ஹுசைன் காலம் வரையில், சன்னி முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றிருந்தனர். ஷியா முஸ்லிம்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்புக்கு பின்னர், நிலைமை தலை கீழாக மாறியது. புதிய ஈராக் அரசில், ஷியா முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றனர். பிரதமர் மாலிக் கூட ஒரு ஷியா தான். இம்முறை சன்னி முஸ்லிம்கள் அடக்கப் பட்டனர். இரண்டாந் தரப் பிரஜைகள் ஆக்கப் பட்டனர்.

சிரியாவில் நிலைமை நேரெதிராக உள்ளது. அங்கே ஆசாத் அரசை ஆதரிப்பது ஷியா முஸ்லிம்கள். கடந்த நாற்பது வருடங்களாக, அவர்கள் அங்கு மேலாண்மை பெற்றுள்ளனர். இன்று நடக்கும் உள்நாட்டுப் போரில், ஷியா அரச படைகளினால் கொல்லப் படுபவர்கள் சன்னி முஸ்லிம்கள் மட்டும் தான். அதனால் தான் சன்னி முஸ்லிம்கள் ISIS போன்ற இயக்கங்களை, அவற்றின் மத அடிப்படைவாதம் தெரிந்திருந்தும் ஆதரித்தார்கள். அரச படைகள் புரிந்த படுகொலைகளுக்கு பழிவாங்குவதற்காக, கிளர்ச்சியாளர்கள் ஷியா கிராமங்களில் தாக்குதல் நடத்தி ஷியா முஸ்லிம்களை கொன்றுள்ளனர்.

ஈராக்கில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS, அங்கிருந்த ஷியா மசூதிகளை இடித்தது உண்மை தான். அதையும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வாக தான் புரிந்து கொள்ள வேண்டும். அது ஈராக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இனக் குரோத போரின் தொடர்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர், சமரா நகரில் ஷியாக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அது இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வுடன் ஒப்பிடத் தக்கது.

ISIS அமைப்பினர், ஒரு பக்கத்தில் சன்னி முஸ்லிம் சமூகத்தின் விடுதலை இயக்கமாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களது அரசியல் நிலைப்பாடு, பெருமளவு இனவாதம், மதவாதம் கொண்டதாக உள்ளது. சன்னி முஸ்லிம்கள் எல்லோரும் ISIS இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஈராக்கில் அல்லது சிரியாவில் வாழும் மதச் சார்பற்ற சன்னி முஸ்லிம் மக்கள், இது போன்ற மதவாத இயக்கங்களை ஆதரிக்கப் போவதில்லை. ஈராக்கில் உள்ளூர் நிலப்பிரபுக்களின் விசுவாசிகள், அல்லது சதாம் ஹுசைனின் பாத் கட்சி அனுதாபிகள்,  சன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்திருந்த போதிலும், ISIS இனை நிபந்தனை இன்றி ஆதரிக்கப் போவதில்லை. 

வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய மத உணர்வாளர்கள் பலர் ISIS இயக்கத்தை ஆதரிக்கின்றனர். அந்த ஆதரவாளர்கள் எல்லோரும் சன்னி முஸ்லிம்கள். கிலிபாத் என்ற  "இஸ்லாமியத் தாயகக் கோட்பாடு" அந்த ஆதரவுக்கு ஒரு முக்கிய காரணம். அது ஒரு இழந்த சொர்க்கம் பற்றிய கனவு. "ஒரு காலத்தில், ஸ்பெயின் முதல் இந்தோனேசியா வரை, முஸ்லிம்கள் ஆண்டார்கள். இன்று ஐரோப்பியருக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள்" என்று கூறி, இதை ஒரு வகை மத விடுதலைப் போராட்டமாக கருதுகிறார்கள்.

ISIS உரிமை கோரும் அகண்ட இஸ்லாமியத் தாயகம் 

இஸ்லாமியத் தாயகம் உருவாக்கும் நோக்கத்தோடு உலகில் பல ஆயுதமேந்திய இயக்கங்கள் தோன்றின. ஆனால், ISIS அவற்றை எல்லாம் ஓரங் கட்டி விட்டு, பெரிதாக வளர்ந்து வந்து விட்டது. சிலநேரம் சகோதர யுத்தங்களை நடத்தியும், ISIS அதிகாரத்தை கைப்பற்றியது. ஒரே கொள்கைக்காக போராடிய பிற இயக்க போராளிகளை கொன்றுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் ஆதரவாளர்களுக்கு, ISIS போர்களில் குவித்த வெற்றிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. அது ISIS ஐ யாராலும் வெல்ல முடியாது என்ற உணர்வை அவர்கள் மனதில் உண்டாக்கி உள்ளது.


ISIS தொடர்பான முன்னைய பதிவுகள்:

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Thursday, June 26, 2014

லாசிஸ்தான் : துருக்கியில் அழிந்து வரும் மொழிச் சிறுபான்மை இனம்

லாசிஸ்தான் தேசியக் கொடி 
உலகில் பல சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைக்கான போராட்டம் வெளியில் தெரிய வருவதில்லை. அழிந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின்  ஒடுக்குமுறைக்கு அப்பால், வெளியுலகில் பலருக்கு ஆர்வம் இருப்பதில்லை. அப்படிப் பட்ட இனங்களில் ஒன்று : லாஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே லாசிஸ்தான்  என்ற ராஜ்ஜியத்தை சொந்தமாக வைத்திருந்த மக்கள், இன்று துருக்கி பெரும்பான்மை சமூகத்திற்குள் உள்வாங்கப் பட்டு விட்டனர். 


துருக்கியின் வட கிழக்கு பகுதியில், கருங்கடல் கரையோரமாக ஒரு தனித்துவமான மொழிச் சிறுபான்மை இனமான லாஸ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்று குறைந்தது இருபதாயிரம் பேர் மட்டுமே லாஸ் மொழி பேசத் தெரிந்து வைத்திருக்கின்றனர். கடந்த கால வரலாறு முழுவதும், லாஸ் இன மக்கள், துருக்கியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு, துருக்கியராக மாறி வந்துள்ளனர். 

அண்மைக் காலமாகத் தான், லாஸ் மொழி மீள் உயிர்ப்பு பெற்று வருகின்றது. இளந் தலைமுறையினர் லாஸ் மொழி கற்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கூட, அங்கிருந்த நிலைமை வேறு விதமாக இருந்தது. லாஸ் மக்கள், தமது தாய்மொழியை பேசுவதற்கு வெட்கப் பட்டார்கள். தனிப்பட்ட பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, தமது தாய்மொழி உதவாது என நினைத்து, அதனை புறக்கணித்து வந்தனர். 

துருக்கியின் பிற சிறுபான்மை மொழி பேசும் மக்களைப் போன்று, லாஸ் மக்களும் வேலை வாய்ப்புகளுக்காக, துருக்கி மொழி கற்பதில் ஆர்வம் காட்டினார்கள். இன்னொரு அந்நிய மொழியாக ஆங்கிலம் அல்லது ரஷ்யன் படிப்பதற்கு காட்டிய அக்கறை காட்டி வந்தனர். அரசாங்கத்தின் திட்டமிட்ட மொழி அடக்குமுறைக் கொள்கை மட்டுமல்லாது, அந்த மக்களின் அக்கறையின்மையும் லாஸ் மொழி அழிந்து வருவதற்கு காரணமாக அமைந்தது.

துருக்கியில் வாழும் மக்கள் அனைவரும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாக வெளியுலகில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். துருக்கியின் மிகப் பெரிய மொழிச் சிறுபான்மையினரான குர்து மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக, குர்து மொழி பற்றி பலர் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், துருக்கியில் பேசப் படும் பத்துக்கும் குறையாத பிற மொழிகள் பற்றி அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 

துருக்கி மொழி, 1300 வருடங்களுக்கு முன்னர் தான் துருக்கியில் காலடி எடுத்து வைத்தது. அதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் கிரேக்க, ஆர்மேனிய மொழிகள் பெரும்பான்மையாக பேசப் பட்டன. அது முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கிரேக்க மொழி உத்தியோகபூர்வ அந்தஸ்து பெற்றிருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், முன்னாள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகளில் நிரந்தரமாக தங்கி விட்டனர். (ஓட்டோமான் சக்கரவர்த்திகளின் காலத்தில் கூட ரோமாபுரி என்ற அர்த்தம் வரும் "ரூம்" என்ற சொல் சில இடங்களில் புழக்கத்தில் இருந்தது.)

துருக்கி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், முன்பு கிரேக்க மொழி பேசிய மக்களில் ஒரு பகுதியினர், துருக்கி மொழியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டனர்.  இருப்பினும், இருபதாம் நூற்றாண்டு வரையில் கூட, கிரேக்க மொழியை தாய்மொழியாக பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். நவீன கிரேக்க குடியரசு எல்லையோரம் உள்ள மேற்கு துருக்கிப் பகுதிகளில் மட்டுமல்லாது, கருங்கடல் பகுதிகளிலும் கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர். 

முதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாக் கண்டம் முழுவதும் தேசியவாத சித்தாந்தம் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் ஒரு தேசிய அரசாகியது. துருக்கியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி தேசியவாதிகள், தமது நாட்டில் துருக்கி மட்டுமே பேசப் பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு தான் சிறுபான்மை மொழிகளின் அழிவு ஆரம்பமாகியது. 

நவீன மயமாக்கல் கூட, சிறுபான்மை மொழிகளுக்கு எதிராகவே அமைந்திருந்தது. உலகமயமாக்கலை தோற்றுவித்த தொழிற்புரட்சி அல்லது தொழில்நுட்ப புரட்சி காரணமாக, கல்வி, ஊடகத் துறை வளர்ச்சி அடைந்ததாலும், பெரும்பான்மை மொழி ஆதிக்கம் பெறத் தொடங்கியது. நிலப்பிரபுத்துவ காலத்தில் சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த சுதந்திரம் யாவும், முதலாளித்துவ காலத்தில் பறிக்கப் பட்டன. இந்த சமூக மாற்றம் துருக்கிக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவானது.

துருக்கி, கிரேக்க எல்லைகள் வரையறுக்கப் பட்ட போதும், அதற்குப் பின்னரும் துருக்கியில் வாழ்ந்த இலட்சக் கணக்கான கிரேக்கர்கள் வெளியேற்றப் பட்டனர். ஒரு பகுதியினர் கிரேக்க குடியரசுக்கும், இன்னொரு பகுதியினர் ரஷ்யாவுக்கும் நாடு கடத்தப் பட்டனர். லாஸ் இன மக்கள், அது போன்ற அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கவில்லை. அதற்குக் காரணம், லாஸ் மக்கள் இஸ்லாமியர் என்பது மட்டுமல்ல, மிகச் சிறுபான்மை இனமான அவர்கள், துருக்கி மொழி கற்பதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டார்கள். 

லாஸ் மக்களின் லாசிஸ்தான் நாடு, முன்னாள் ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. ஆனால், 19 நூற்றாண்டின் இறுதியில் நடந்த ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, ஒரு பகுதி ஜோர்ஜியாவுடன் இணைக்கப் பட்டது. மறுபகுதி இன்றைக்கும் துருக்கி குடியரசின் பகுதியாக உள்ளது. 

லாஸ் மொழிக்கும், துருக்கி மொழிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ஒரே மாதிரி தோன்றினாலும், ஜோர்ஜிய மொழியும், லாஸ் மொழியும் வேறுபட்டவை. ஜோர்ஜியர்கள் அந்த வேறுபாட்டை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் லாஸ் மொழி என்ற தனியான மொழி இல்லை என்றும், அது ஜோர்ஜிய மொழியின் வட்டார வழக்கு மொழி என்று வாதிட்டு வருகின்றனர்.

மேற்கு ஜோர்ஜியாவில், கருங்கடலோர பிரதேசத்தில் பேசப்படும் மிங்கிரெலிய மொழிக்கும், லாஸ் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. லாஸ், மிங்கிரெலியா மட்டுமல்லாது, சில வருடங்களுக்கு முன்னர், ஜோர்ஜியாவுடன் முரண்பட்டு, தனி நாடு கோரிப் பிரிந்து சென்ற, அப்காசியா மொழியும் ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த வேறுபட்ட மொழிகள் ஆகும். 

லாஸ் மொழி, உலகில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு கூட, லாஸ் மொழி பேசும் மக்கள் கருங்கடல் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள் அவர்களது நாட்டை "கொள்கிஸ்" என்று அழைத்தனர். (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, லாஸ் மக்களின் வாழ்விடத்திற்கு அருகாமையில், குறிப்பாக Trabzon நகர்ப் பகுதியில், கிரேக்கர்கள் வாழ்ந்து வந்தனர்.) மெடியா என்ற கிரேக்க புராணக் கதையில், கொள்கிஸ் நாடு பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. 

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், லாஸ் மக்கள் தமது பூர்வீகத்தை மறந்து விட்டார்கள். தங்களது மொழி உலகிலேயே பழமையான மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை கூட அறிந்திருக்கவில்லை. பொயர்ஸ்டைன் (Feurstein) என்ற ஜெர்மானியர், துருக்கிக்கு சுற்றுலா பயணியாக சென்ற காலத்தில் லாஸ் மொழிச் சிறுபான்மையினர் பற்றி அறிந்து கொண்டார். லாஸ் மொழி பேசும் மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நாட்டார் பாடல்களை சேகரித்தார். 

பொயர்ஸ்டைன் அடிக்கடி லாஸ் பிரதேசத்திற்கு சென்று வருவதைக் கண்டு சந்தேகப் பட்ட துருக்கி அரசு அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பின்னர், இனிமேல் எந்தக் காலத்திலும் துருக்கிக்கு வரக் கூடாது என்று எச்சரித்து விட்டு, ஜெர்மனிக்கு நாடுகடத்தினார்கள்.

பொயர்ஸ்டைன் ஜெர்மனியில் இருந்து கொண்டே, புலம்பெயர்ந்த லாஸ் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, லாஸ் மொழிக்கு எழுத்து வடிவத்தை உருவாக்கினார். அழிந்து வரும் மொழி ஒன்றுக்கு எழுத்தை உருவாக்கினால், அந்த மக்களே தமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பார்கள் என்பது அந்த ஜெர்மனியரின் நம்பிக்கை. அது பலித்தது. இரகசியமாக துருக்கிக்கு அனுப்பப் பட்ட லாஸ் மொழியின் எழுத்து வடிவத்தை, லாஸ் மக்கள் ஆர்வமெடுத்து படித்தார்கள். தற்போது அவர்கள் தமது தாய்மொழியை தாமாகவே வளர்க்கின்றனர். பொயர்ஸ்டைனின் அயராத முயற்சியால், லாஸ்-ஜெர்மன் அகராதி ஒன்றும் உருவாக்கப் பட்டது.

லாஸ் மொழியின் மறுமலர்ச்சிக்கு இன்னொரு அரசியல் சக்தியும் உதவியுள்ளது. சோவியத் கம்யூனிஸ்ட் புரட்சியின் பின்னர், துருக்கியின் கருங்கடல் பிரதேசத்தில் மார்க்சிய அமைப்புகள் தோன்றின. லாஸ் மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் மத்தியில் தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான கம்யூனிச கொள்கை பிரபலமடைந்தது. அவர்களது பிரதேசத்திற்கு அருகில், லாஸ் மொழி பேசும் சகோதரர்கள் வாழும் ஜோர்ஜியா ஒரு சோஷலிச நாடாக மாறியிருந்தது. அதுவும் லாஸ் மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பரப்புவதற்கு இலகுவாக இருந்தது எனலாம்.


கம்யூனிச கொள்கைகளினால் ஈர்க்கப் பட்ட, லாஸ் புத்திஜீவிகள் சிலர், Mç'ita Murutsxi  (சிவப்பு நட்சத்திரம்) எனும் பத்திரிகையை லாஸ் மொழியில் வெளியிட்டு வந்தனர். அந்தப் பத்திரிகை லாஸ் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பலர் சந்தா கட்டி பெற்றுக் கொண்டார்கள். Mç'ita Murutsxi பத்திரிகையின் முதலாவது பிரதி வெளிவந்தவுடனேயே, துருக்கி அரசு பத்திரிகை ஆசிரியர்களை பிடித்து சிறையில் அடைத்தது. ஆயினும், பத்திரிகையின் இரண்டாவது பிரதியும் வெளிவந்து விட்டது. காலப்போக்கில், அடக்குமுறை காரணமாக லாஸ் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கண்ட துருக்கி அரசு பின்வாங்கியது.

தற்போது லாஸ் மொழி கற்பிக்கும் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. துருக்கி அரசு இன்னமும் லாஸ் மொழியை அங்கீகரிக்காத படியால், அரசு மானியம் எதுவும் கிடைப்பதில்லை. அதனால் தனியார் நிதி உதவியுடன் தான் லாஸ் மொழி கற்பிக்கப் படுகின்றது. லாஸ் மொழியில் பத்திரிகை, சஞ்சிகைகள், நூல்கள் வெளிவருவதற்கு துருக்கி அரசு சுதந்திரம் வழங்கி உள்ளது. (அதுவும் நீண்ட கால போராட்டத்தின் பின்னர் தான்.) ஆனால், இன்னமும் லாஸ் மொழி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உரிமம் வழங்க மறுத்து வருகின்றது. 


மேலதிக தகவல்களுக்கு:
அல்ஜசீரா ஆவணப் படம் 

Thursday, April 10, 2014

உக்ரைன் இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வை எதிர்க்கும் மேற்குலகம்


மேற்குலக நாடுகள், "உலகம் முழுவதும் ஜனநாயகம், சுயநிர்ணயம் போன்ற உயரிய இலட்சியங்களுக்காக பாடுபடுவதாக," இன்னமும் வெகுளித் தனமாக நம்பிக் கொண்டிருக்கும், அப்பாவிகள் யாராவது இருந்தால் கையை உயர்த்துங்கள். உக்ரைன் பிரச்சினையில், மேற்குலக நாடுகள், ஜனநாயகம் என்ற சொல்லையே வெறுக்கும் வகையில் நடந்து கொள்கின்றன. ஏற்கனவே, கொங்கோ, சிலி, ஈரான், போன்ற பல நாடுகளில், அமெரிக்கா ஜனநாயக அரசுகளை கவிழ்ப்பதற்கு சதி செய்துள்ள பல சம்பவங்கள், வரலாற்றில் பதியப் பட்டுள்ளன.  

உக்ரைன் நாட்டில், பெரும்பான்மை மக்களால், ஒரு ஜனநாயகத் தேர்தலில் தெரிவு செய்யப் பட்ட ஜனாதிபதியை, ஒரு சதிப்புரட்சி மூலம் பதவியை விட்டு அகற்றிய வன்முறைக் கும்பலுக்கு மேற்குலகம் உதவியது. கிரீமிய மக்கள், ஒரு பொது வாக்கெடுப்பு மூலம், தமது சுயநிர்ணய உரிமையை தீர்மானித்த பொழுது, அமெரிக்கா அந்த முடிவை எதிர்த்தது. தற்போது, உக்ரைனில் ஒற்றையாட்சி முறையை ஒழித்து, அந்த இடத்தில் சமஷ்டி தீர்வின் மூலம் அதிகாரப் பரவலாக்கல் கொண்டு வரும் திட்டத்தையும், அமெரிக்கா எதிர்த்து வருகின்றது. அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு, மற்றைய "ஜனநாயகத் தூய்மைவாதிகளான" மேற்கு ஐரோப்பிய நாடுகளும் எதிர்க்கின்றன. 

பல மேற்கத்திய ஆதரவாளர்கள், உக்ரைனிய தேசியவாதிகளின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றனர். அதே நேரம், ரஷ்ய சிறுபான்மையினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்கின்றனர். உக்ரைனில் ரஷ்யர்கள் பிற்காலத்தில் குடியேற்றப் பட்டதாக, உக்ரைனிய பேரினவாதிகளின் பிரச்சாரங்களை கேட்டு விட்டு, வரலாற்றை திரிப்பவர்கள் பலர் உள்ளனர். உண்மையில், இன்று ரஷ்ய மொழி பேசும் மக்கள், பெரும்பான்மையாக வாழும் தென்- கிழக்கு உக்ரைனிய பகுதிகள், பல நூறாண்டுகளாக ரஷ்ய சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்து வந்துள்ளன. 

17 - 19 நூற்றாண்டுகளில் கூட, உக்ரைன் என்றொரு நாடு இருக்கவில்லை.
அது போலந்து, ரஷ்யா, துருக்கி ஆகிய மூன்று
பேரரசுகளின் அங்கமாக இருந்தது.
இன்று, உக்ரைனிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும், மத்திய, மேற்கு உக்ரைனிய பகுதிகள், போலந்து-லிதுவேனியா சாம்ராஜ்யத்தின் பகுதிகளாக இருந்து வந்துள்ளன. 1917 ல் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் புரட்சி நடக்கும் வரையில், அந்த வரைபடத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ரஷ்யர்கள் உக்ரைனிய பிரதேசங்களை "குட்டி ரஷ்யா" என்று அழைத்தனர். அங்கே உக்ரைனிய மொழி என்ற, தனியான மொழி பேசும், மக்கள் இனம் எதுவும் அடையாளம் காணப் படவில்லை. 

நீண்ட காலமாக, உக்ரைனிய மொழி என்ற ஒன்றிருப்பதாக ரஷ்யர்கள் நம்ப மறுத்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில், அது ஒரு ரஷ்ய மொழியின் வட்டார வழக்கு மொழி மட்டுமே. "எது தனித்துவமான மொழி? எது வட்டார வழக்கு மொழி?" என்பதை வரையறுப்பது, இன்றும் கூட மொழியியலாளர்களினால் முடியாமல் உள்ளது.  "இந்தியத் தமிழும், ஈழத் தமிழும், இரண்டு வேறு மொழிகளா?" இந்தக் கேள்வியைக் கேட்டால், (தமிழர்கள்) எல்லோரும், கேட்டவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். ஆனால், ஈழத் தமிழானது ஒரு தனித்துவமான மொழியாக பரிணமிக்கக் கூடிய, அனைத்து அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. 

இப்படி ஒரு வரலாற்றை கற்பனை செய்து பாருங்கள். "நாம் பேசுவது தமிழ் அல்ல, அது தனித்துவமான ஈழ மொழி" என்றொரு அரசியல் இயக்கத்தை, ஈழத் தமிழர்கள் முன்னெடுக்கின்றனர். அப்போது, தமிழகத் தமிழ் தேசியவாதிகளின் எதிர்வினை எப்படி இருக்கும்? அவர்கள், ஈழத் தமிழ் தேசியவாதிகளின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பார்களா? நிச்சயமாக இல்லை. "ஈழ மொழி என்ற ஒன்று உலகில் இல்லை. அது பொதுவான தமிழ் மொழியின் வட்டார வழக்கு மொழி" என்று வாதாடுவார்கள். இந்த தர்க்கம் தான், உக்ரைனில் ரஷ்ய- உக்ரைனிய இனப் பிரச்சினையின் அடிப்படை. 

ரஷ்ய மொழியும், போலிஷ் மொழியும் ஒரே மாதிரி ஒலிக்கும், ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த சகோதர மொழிகள். ரஷ்யா, போலந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் வாழும் மக்கள், இரண்டுக்கும் இடைப்பட்ட மொழிகளைப் பேசுவதில் வியப்பில்லை. பெலாரஸ், மற்றும் உக்ரைனிய மொழிகள் குறிப்பிடத் தக்கவை. அவை சில நேரம் ரஷ்ய மொழி போன்றிருக்கும், சில நேரம் போலிஷ் மொழி போன்றிருக்கும். பெலாரஸ், உக்ரைனிய மொழிகளைப் பேசும் மக்கள், ரஷ்ய மொழியினை படிக்காமலே, ரஷ்யர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ரஷ்யர்கள் அந்த மொழிகளைப் புரிந்து கொள்ள சிரமப் படுவார்கள். அதற்கு காரணம், நவீன காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி. 

ரஷ்ய திரைப்படத் துறை, பதிப்பகங்கள் என்பன, வணிக ரீதியாக மிகவும் பலமானவை.  அவர்கள் தயாரித்து விநியோகம் செய்யும் திரைப்படங்கள், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளின் தாக்கம் மிகவும் அதிகம். உதாரணத்திற்கு, தமிழகத்தின் திரைப்படத் துறை, வணிக ரீதியாக பலமாக இருப்பதால், ஈழத்திலும் இந்தியத் தமிழ் படங்களைத் தான் பார்க்கிறார்கள். அதனால், ஈழத் தமிழர்களுக்கு, இந்தியத் தமிழ் நன்றாகப் புரியும். அதே நேரம், இந்தியத் தமிழர்கள், ஈழத் தமிழைப் புரிந்து கொள்ள சிரமப் படுவார்கள். 

போலந்து, பின்னர் ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த சக்கரவர்த்திகளினால் ஆளப் பட்ட உக்ரைனின் மேற்குப் பகுதிகள், தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டிருந்தன. 1917 ம் ஆண்டு, சோவியத் ஒன்றியம் உருவானது. உக்ரைனியர்களின் தனித்துவமான கலாச்சாரத்தை அங்கீகரித்த கம்யூனிஸ்டுகள், அதனை தனியான குடியரசாக்கினார்கள். ஆயினும், ரஷ்ய, உக்ரைனிய மொழித் தூய்மைவாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்ந்தும் நிலவி வந்தன. ஒரு புறம், உக்ரைனிய தேசியவாதிகள், தமது மொழி தனித்துவமானது என்று நிரூபிப்பதற்காக, தங்களது சக்தியை செலவிட்டார்கள். மறு புறம், ரஷ்ய தேசியவாதிகள், உக்ரைன் ஒரு தனியான மொழி என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். 

மேற்கில் வாழ்ந்தவர்கள், அதி  தீவிர உக்ரைனிய தேசியவாதிகளாகவும், கிழக்கே வாழ்ந்தவர்கள், அதி தீவிர ரஷ்ய தேசியவாதிகளாகவும் இருந்தனர். இப்போதும் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், மத்திய பிரதேசங்களில், குறிப்பாக தலைநகரான கீவில் வாழ்ந்தவர்கள், மிக இலகுவாக தமது தாய்மொழியை மாற்றிக் கொண்டனர். உக்ரைனிய மொழி பேசும் நாட்டுப்புறங்களில் இருந்து வந்து கீவில் குடியேறியோர், பொருளாதார நலன்களுக்காக தம்மை ரஷ்யர்கள் என்று அழைத்துக் கொண்டனர். ரஷ்யர்களாக மாறிய உக்ரைனியர்களைப் போன்று, உக்ரைனியர்களாக மாறிய ரஷ்யர்களும் இருக்கின்றனர். அவர்கள் வாழும் பிரதேசம், எந்த அரசியல் சக்தியின் மேலாதிக்கத்தின் கீழ் இருக்கின்றது என்பதைப் பொறுத்து, அவர்களது "தாய்மொழி"யும் மாறுபட்டது.     

உக்ரைன், உலகிலேயே மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. அதனால், பொருளாதார வேறுபாடும் தெளிவாகத் தெரியக் கூடியதாக உள்ளது. வழமையாக, மக்கள் அடர்த்தி நிறைந்த தலைநகர் கீவ், பொருளாதாரத்தில் முன்னனியில் நிற்கிறது. அங்கே ஒருவரின் வருடாந்த தனி நபர் வருமானம்(bnp):7500 யூரோக்கள். உக்ரைனிய மொழி பேசும் மக்கள் வாழும் மேற்குப் பகுதி, பயிர் செய்கைக்கு ஏற்ற வளமான மண்ணைக் கொண்டது. அதனால், பெரும்பாலும் விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பியுள்ளது. ஆயினும், உக்ரைனில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, வறுமையான பகுதியும் அது தான். அங்கே ஒருவரின் வருடாந்த தனி நபர் வருமானம் சராசரி 1500 யூரோக்கள். 

உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும், தென் கிழக்கு பிராந்தியம், தொழில்துறை வளர்ச்சி கண்ட பகுதியாகும். சுரங்கத் தொழிலும், பல்வேறு தொழிற்சாலைகளும் நிறைந்து காணப் படுகின்றன. அதனால், பொருளாதார வளர்ச்சியும் அதிகம். அங்கே ஒருவரின் வருடாந்த தனிநபர் வருமானம் 3000 யூரோக்கள். ஆகவே, உக்ரைன் மொழி பேசும் மேற்குப் பகுதிக்கும், ரஷ்ய மொழி பேசும் கிழக்குப் பகுதிக்கும் இடையில், பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு இருப்பதைக் காணலாம். உலகம் முழுவதும், தேசியவாத இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பின்னால், பொருளாதாரக் காரணிகள் உள்ளன. பலர் இதனை கவனத்தில் எடுக்கத் தவறி விடுகின்றனர். 

உக்ரைனின் இனப் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
அமெரிக்கா, ,அற்றும் மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரையில், உக்ரைன் ஒற்றையாட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. சில சோவியத் கால சட்டங்களை தவிர்த்துப் பார்த்தால், உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து, சுதந்திர தேசமான காலத்தில் இருந்து, அங்கே ஒற்றையாட்சி முறைமை நிலவுகின்றது. உக்ரைனிய மாகாணங்களுக்கான அதிகாரம், இலங்கையில் உள்ள மாகாண சபை முறையை போன்றது. கீவ் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரம் வாய்ந்தது. விதிவிலக்காக, கிரீமியா, பிராந்திய முக்கியத்துவம் காரணமாக, தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்து. 

கிரீமியா பொது வாக்கெடுப்பு நடந்த பொழுது, மேற்கத்திய ஜனநாயக நாடுகள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தன. ரஷ்ய இராணுவம் நிலை கொண்டிருந்ததால், அது செல்லுபடியாகாது என்று வாதிட்டன. ஆனால், இங்கே தான் மேற்குலகின் இரட்டை வேடம் அம்பலமாகின்றது. கொசோவோ தனி நாடாவதற்கான பொது வாக்கெடுப்பு நடந்த பொழுது, அங்கே நேட்டோ படைகள் நிலை கொண்டிருந்தன. அதற்கு முதலே, செர்பியர்கள், மற்றும் பல சிறுபான்மை இன மக்கள், இனச் சுத்திகரிப்பு செய்து விரட்டப் பட்டிருந்தனர். கொசோவோவில் நடந்த பொது வாக்கெடுப்பை அங்கீகரித்த மேற்குலக நாடுகள், கிரீமியா வாக்கெடுப்பை நிராகரித்தன. மேற்குலகம் இந்த இரட்டை அளவுகோலை எல்லா இடங்களிலும் பிரயோகித்து வந்துள்ளது. உண்மையில், இந்த மேற்குலக நாடுகள், ஜனநாயகத்தை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்க்கின்றனவா?

தற்போது நடக்கும் உக்ரைனிய பிரச்சினைக்கு, போரைத் தவிர்த்து, இராஜதந்திர ரீதியான முடிவு காணப்பட வேண்டும் என்றே பலரும் விரும்புவார்கள். "உலக மக்களே! மிகப் பெரிய ஆபத்து வரப் போன்றது... ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கப் போகின்றது..." என்று பயமுறுத்தி, நேட்டோவின் இராணுவ செலவினத்தை அதிகரிக்கும் மேற்குலக நாடுகள், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் குறித்து சிறிதளவேனும் அக்கறை காட்டவில்லை. "ரஷ்யா 19 ம் நூற்றாண்டு மனோபாவத்தோடு நடந்து கொள்கிறது. நாம் அதற்கு 21 ம் நூற்றாண்டின் கருவிகளைக் கொண்டு பதிலடி கொடுப்போம்...."(- அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி) இது போன்ற வாய்ச் சவடால்களுக்கு மட்டும் குறைவில்லை. 

உக்ரைன் பிரச்சினை தொடர்பான உண்மை நிலவரமோ, மேற்குலகின் பரப்புரைகளுக்கு மாறாக உள்ளது. உக்ரைன் பிரச்சினைக்கு, "21 ம் நூற்றாண்டுத் தீர்வு" ஒன்றை ரஷ்யா முன்மொழிந்தது. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மறுக்கின்றன. அந்த தீர்வு என்ன? உக்ரைன் ஒரு சமஷ்டிக் குடியரசாக மாற வேண்டும் என்று ரஷ்யா கூறி வருகின்றது. 

அதாவது, இன்றுள்ள உக்ரைனிய மாகாணங்கள் ஒவ்வொன்றிலும், சமஷ்டி அமைப்பு கொண்ட மாநில அரசுக்கள் ஸ்தாபிக்கப் பட  வேண்டும். அதற்கான அதிகாரங்களை, கீவில் உள்ள மத்திய அரசு பகிர்ந்தளிக்க வேண்டும். மாநில அரசுகள், கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம் போன்றவற்றில் முடிவெடுக்கும் அதிகாரங்களை மட்டும் கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கும் அப்பால், வரி அறவிடவும், வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணவும் அதிகாரம் கொண்டிருக்கும். 

சமஷ்டி மாநிலங்களைக் கொண்ட உக்ரைன், மேற்குலக சார்பாகவும் இருக்காது, அதே நேரம் ரஷ்யா சார்பாகவும் இருக்காது. ஏனென்றால், எதிரெதிர் அரசியல் முரண்பாடுகளை கொண்ட மாநில அரசுகள், அந்தளவு இலகுவாக ஒத்துழைக்க மாட்டா. அதனால், உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில், அல்லது நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் அங்கத்தவராக சேர முடியாது. அதே நேரம், ரஷ்யா தலைமையிலான கூட்டமைப்பிலும் சேர முடியாது. 

உண்மையில் இந்த சமஷ்டித் தீர்வுத் திட்டம், ஜனநாயகத் தன்மை வாய்ந்த அதிகாரப் பரவலாக்கல் மட்டுமல்ல. வல்லரசுப் போட்டிக்குள் சிக்கி சீரழியாமல், உக்ரைன் தனது சுதந்திரத்தை பாதுகாத்து நிமிர்ந்து நிற்க உதவும். ஆனாலும், மேற்குலக நாடுகள் சமஷ்டித் திட்டத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து வருகின்றன. உக்ரைனில் தொடர்ந்தும் ஒற்றையாட்சி நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. மேற்குலக நாடுகள், "ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், சுயநிர்ணய உரிமை..." என்றெல்லாம் வாய் கிழியப் பேசுவது வெறும் போலி வேஷம். இந்த ஜனநாயக வேடதாரிகளை கண்டு ஏமாந்து போகும், அப்பாவிகள் பலர் இன்றைக்கும் இருப்பது தான் அவர்களது பலம்.


உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்: