Sunday, April 28, 2019

இலங்கையில் நடந்த ஈஸ்டர் படுகொலைகளும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஊடுருவலும்

ஈஸ்டர் நாளான 21-4-2019 அன்று, இல‌ங்கையில் ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்புக‌ளில் 250 அப்பாவி மக்கள் கொல்ல‌ப் பட்டனர். ஆயிர‌க்க‌ண‌க்கில் காய‌ம‌டைந்தோர் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் அனும‌திக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். ஏராள‌மானோர் இன‌, ம‌த‌ பேத‌ம் க‌ட‌ந்து குருதிக் கொடை வ‌ழ‌ங்க‌ முன்வந்தனர்.

ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை வைத்துப் பார்க்கும் பொழுது, இது ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து. தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், இத‌னால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பின் விளைவுக‌ளை ஆராய்ந்து, த‌ம‌து இல‌க்குக‌ளை தெரிவு செய்துள்ள‌ன‌ர்.

இலங்கையில் ஏற்கனவே பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியிருந்தன. திட்டமிட்ட கலவரங்களும் நடந்துள்ளன. அப்படி இருந்தும் தாக்குதல் நடத்தியவர்கள் பௌத்த வழிபாட்டு ஸ்தலங்களை குறி வைக்காமல், கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கியுள்ளனர். இலங்கையின் வரலாற்றில், இதுவரை காலத்தில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் எந்த வன்முறையும் நடக்கவில்லை. இரண்டு சமூகங்களும் இலங்கையில் சிறுபான்மை மதங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.

1) குண்டுவெடிப்பில் ப‌லியான‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் க‌த்தோலிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்கள். த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது பெருமளவு சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் இதில் அட‌ங்குவார்க‌ள். ஈஸ்ட‌ர் நாள் விசேட‌ பூஜை என்ப‌தால் பெருந்தொகையின‌ர் ப‌லியாகியுள்ள‌ன‌ர்.

2) கொழும்பு, நீர்கொழும்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று ஒரே நேர‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டுக‌ள் வெடித்துள்ள‌ன‌. ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல், ஆட்ப‌ல‌ம், ஆயுத‌ ப‌ல‌ம், நிதி போன்ற‌ வ‌ள‌ங்க‌ள் இல்லாம‌ல் இது சாத்திய‌மில்லை.

3) மேற்க‌த்திய‌ ப‌ண‌க்கார‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து த‌ங்கும் ஐந்து ந‌ட்ச‌த்திர‌ ஹொட்டேல்க‌ளில் குண்டுக‌ள் வெடித்து 30 க்கும் மேற்பட்ட  வெளிநாட்ட‌வ‌ரும் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அத‌னால் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தின், குறிப்பாக‌ மேற்க‌த்திய‌ நாட்ட‌வ‌ரின் க‌வ‌ன‌த்தை இல‌ங்கையின் ப‌க்க‌ம் ஈர்த்துள்ள‌து.

இந்த‌ குண்டுவெடிப்புக‌ளின் நேர‌டி விளைவுக‌ளை பார்த்தால், இத‌னால் ஆதாய‌ம‌டைவோர் யார் என அறிய‌லாம்.

- இல‌ங்கையில் போர் முடிந்து, க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ஒரு துப்பாக்கிச் சூடு கூட‌ ந‌ட‌க்காம‌ல் அமைதியாக‌ இருந்த‌ கால‌த்தில் மீண்டும் இந்த‌ப் ப‌டுகொலைக‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌. அண்மைக் கால‌த்தில் அர‌சு கொண்டு வ‌ந்த‌ புதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்பு ச‌ட்ட‌த்திற்கு க‌டும் எதிர்ப்பு கிள‌ம்பி இருந்த‌து. இனிமேல் அதை ந‌டைமுறைப் ப‌டுத்த எந்த‌த் த‌டையும் இல்லை.

- இல‌ங்கையில் மீண்டும் ஒரு போர்ச் சூழ‌ல் தோன்றினால், அது இந்தியாவையும் பாதிக்கும். டொமினோ க‌ட்டைக‌ள் விழுவ‌து மாதிரி தெற்காசிய‌ நாடுக‌ள் நீண்ட‌ நெடும் போர்க‌ளுக்குள் த‌ள்ள‌ப் ப‌ட‌லாம். ம‌த்திய‌ கிழ‌க்கிலும் அமைதியாக‌ இருந்த‌ நாடுக‌ளில் திடீர் போர்க‌ள் உருவான‌ வ‌ர‌லாற்றை நாம் ஏற்க‌ன‌வே க‌ண்டுள்ளோம்.

- குண்டுவெடிப்புக‌ளுக்கு பின்ன‌ர் இல‌ங்கை மீதான‌ இஸ்ரேலின் க‌ரிச‌னை அதிக‌ரிக்க‌ கார‌ண‌ம் என்ன‌? இல‌ங்கை அர‌சுக்கு வேண்டிய‌ உத‌விக‌ள் செய்ய‌த் த‌யாராக‌ இருப்ப‌தாக‌ பிர‌த‌ம‌ர் நெத்த‌ன்யாகு அறிவித்துள்ளார். டெல் அவிவ் நகர சபைக் க‌ட்டிட‌ம் சிறில‌ங்கா தேசிய‌க் கொடியால் அல‌ங்க‌ரிக்க‌ப் பட்டது. இத‌ன் மூல‌ம் இஸ்ரேல் ஒரே நாளில் சிங்க‌ள‌ தேசிய‌வாதிக‌ளின் ம‌ன‌ங்க‌ளை வென்றுள்ள‌து.

- இலங்கை அரசுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க FBI ம‌ற்றும் இராணுவ‌ ஆய்வாள‌ர்க‌ள் இல‌ங்கையில் வ‌ந்திற‌ங்கி உள்ள‌ன‌ர். இந்த நேரத்தில் தாம் இலங்கையின் பக்கம் நிற்க வேண்டும் என்று டிரம்ப் அரசு அறிவித்திருந்தது. அதே நேரம், இவ்வளவு காலமும் பேசப்பட்டு வந்த சிறிலங்கா இராணுவம் மீதான போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப் பட்டுள்ளன.

- வடக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை எடுக்க வேண்டாம் என்று, முன்பு அதே இராணுவத்தை எதிர்த்துப் போரிட்ட புலிகள் இயக்கத் தளபதி ஒருவரின் மனைவியான ஆனந்தி சசிதரன் கூறியுள்ளார். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவுசெய்யப் பட்ட வட மாகாண சபை அமைச்சர். தமிழ்த் தேசியவாதிகளை, அதிலும் தமிழீழத்திற்காக போராடியவர்களையே இவ்வாறு பேச வைத்துள்ளமை ஒரு சிங்களப் பேரினவாத அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

இல‌ங்கையில் ந‌ட‌ந்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளுக்கு, ISIS இயக்கத் தகவல்களை தெரிவிக்கும் இணையத்தளத்தில் உரிமை கோரப் பட்டுள்ளது. இவ‌ர்க‌ள் தான் த‌ற்கொலைத் தாக்குத‌ல்தாரிக‌ள் என்று மூன்று பேரின் ப‌ட‌ங்க‌ளும், அவ‌ர்க‌ள‌து இயக்கப் பெய‌ர்க‌ளும் வெளியிட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. குண்டுவெடிப்புகள் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த உரிமை கோரல் வந்துள்ளது. இது வழமையான ஐ.எஸ். பாணி அல்ல. பொதுவாக சம்பவம் நடந்த அன்றே உரிமை கோரப்படும்.

நிற்க‌, சிரியாவில் ந‌ட‌ந்த‌ இறுதிப் போரில் த‌ன் வ‌ச‌ம் இருந்த‌ சிறு துண்டு நில‌ப் ப‌குதியையும் இழ‌ந்து விட்ட‌ ஐ.எஸ். இய‌க்க‌ம் இன்னும் தோற்க‌டிக்க‌ப் ப‌ட‌வில்லை என்று ப‌ய‌ங்க‌ர‌வாத‌ ஆய்வாள‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

அண்மையில் நெத‌ர்லாந்து தொலைக்காட்சியில் பேட்டிய‌ளித்த‌ ஒரு ட‌ச்சு ஆய்வாள‌ர், "விரைவில் இந்தியா போன்ற‌ இன்னொரு ஆசிய‌ நாட்டில் ஐ.எஸ். புதிய‌ போர் முனையை ஆர‌ம்பிக்க‌லாம்" என்று கூறியிருந்தார்.

சிரியா விட‌ய‌த்தில் கூட‌ ஐ.எஸ். இடையில் வ‌ந்து குட்டையை குழ‌ப்பிய‌து. அப்போது அந்த‌ இய‌க்க‌த்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ச‌வூதி அரேபியா, க‌ட்டார், ஆகிய‌ நாடுக‌ள் நேர‌டியாக‌வோ அல்ல‌து ம‌றைமுக‌மாக‌வோ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கி இருந்த‌ன‌.

அதே நிலைமை இல‌ங்கையில் அல்ல‌து இந்தியாவில் ஏற்ப‌டாது என்ப‌த‌ற்கு என்ன‌ நிச்ச‌ய‌ம்? பெரும்பான்மை ம‌க்க‌ள் உண‌ர்ச்சிவ‌ச‌ப் ப‌டும் முட்டாள்க‌ள். அவ‌ர்க‌ளை ம‌த‌வெறிய‌ர்க‌ளாக‌ மூளைச்ச‌ல‌வை செய்வ‌து இல‌கு. அதே நேர‌ம் எதிர்த் த‌ர‌ப்பில் உள்ள‌வ‌ர்க‌ளை அதே ம‌த‌த்தின் எதிரிக‌ளாக‌ மாற்றுவ‌தும் இல‌கு.

இல‌ங்கையில் 290 பேர் ப‌லியாக‌க் கார‌ண‌மான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌ல்க‌ள் நாட்டு ம‌க்க‌ளை இர‌ண்டாக‌ பிள‌வுப‌டுத்துமானால், அத‌னால் ஆதாய‌ம‌டைவோர் ப‌ல‌ருண்டு. இல‌ங்கையில் இர‌த்த‌ம் குடிப்ப‌த‌ற்கு ஐ.எஸ். ம‌ட்டும‌ல்ல‌, அத‌ற்குப் பின்னால் அமெரிக்கா, ச‌வூதி அரேபியா, இஸ்ரேல் போன்ற‌ வ‌ல்ல‌ர‌சுக‌ளும் காத்திருக்கின்ற‌ன‌.

இந்தப் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ குண்டுவெடிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் தொட‌ர்பாக‌ எல்லோரும் ஒரு முக்கிய‌ குற்ற‌வாளியை ப‌ற்றிப் பேச‌த் த‌ய‌ங்குகிறார்க‌ள். அது தான் ச‌வூதி அரேபியா.

இல‌ங்கையில் இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் வ‌ள‌ர்வ‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் ச‌வூதி அரேபியா. பார‌ம்ப‌ரிய‌மாக‌ மித‌வாத‌த் த‌ன்மை கொண்ட‌ ஸூபி முஸ்லிம்க‌ளை, க‌டும்போக்கு வ‌ஹாபிய‌ர்க‌ளாக‌ மாற்றிய‌து ச‌வூதிப் ப‌ண‌ம் தான்.

கிழ‌க்கில‌ங்கையில் மாத்திர‌ம் ப‌ல‌ நூற்றுக் க‌ண‌க்கான‌ ப‌ள்ளிவாச‌ல்க‌ள், குரான் பாட‌சாலைக‌ள் ச‌வூதி நிதியில் க‌ட்ட‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கெல்லாம் ச‌வூதி பாணியிலான‌ வ‌ஹாபிச‌ இஸ்லாம் போதிக்க‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் யாராலும் த‌டுக்க‌ முடிய‌வில்லை.

இல‌ங்கைக்கு ச‌வூதி க‌லாச்சார‌ம் இற‌க்கும‌தி செய்ய‌ப் ப‌ட்ட‌ நேர‌ம் மித‌வாத‌ முஸ்லிம்க‌ள் அதை எதிர்க்காத‌ கார‌ண‌ம் என்ன‌? ஒரு கால‌த்தில் அபாயா அணிவ‌தை விசித்திர‌மாக‌க் க‌ருதிய‌, சேலை அணியும் இல‌ங்கை முஸ்லிம் பெண்க‌ள், எந்த‌ த‌ய‌க்க‌மும் இல்லாம‌ல் அபாயாவை ஏற்றுக் கொள்ளும் நிலைமை எப்ப‌டி உருவான‌து?

இந்த‌க் கேள்விக‌ளுக்கான ஒரே விடை ச‌வூதி அள்ளிக் கொடுத்த‌ ரியால்க‌ள் ப‌ல‌ர‌து வாய்க‌ளை அடைக்க‌ வைத்துள்ள‌ன‌. ச‌வூதியின் த‌லையீட்டை ச‌மூக‌ அபிவிருத்திக்கான‌ ப‌ங்க‌ளிப்பாக‌ க‌ருதிய‌ கால‌ம் ஒன்றிருந்த‌து. குறிப்பிட்ட‌ சில‌ முஸ்லிம் அமைச்ச‌ர்க‌ள் ச‌வூதி நிதியில் தான் த‌ம‌து தொகுதிக‌ளை அபிவிருத்தி செய்த‌ன‌ர் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரிந்த‌ விட‌ய‌ம்.

சோழிய‌ன் குடுமி சும்மா ஆடாது என்ப‌து போல‌ ச‌வூதி நிதியுத‌வியும் தான‌மாக‌ கிடைக்க‌வில்லை. அத‌ற்குப் பின்னால் ஒரு ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ வ‌ல்ல‌ர‌சின் மேலாதிக்க‌க் க‌ன‌வு இருந்த‌து. அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌த்தின் ஆசீர்வாத‌ம் இருந்த‌து.

இதைப் ப‌ற்றி எல்லாம் பேசாம‌ல் ந‌க‌ர்ந்து செல்லும் போக்கான‌து, எந்த‌க் கால‌த்திலும் பிர‌ச்சினையை தீர்க்க‌ உத‌வ‌ப் போவ‌தில்லை. மித‌வாத‌ முஸ்லிம்க‌ளுக்கும், இட‌துசாரிக‌ளுக்கும் சேர்த்து வ‌குப்பெடுக்கும் சில‌ முஸ்லிம் முற்போக்காள‌ர்க‌ள் கூட‌ இந்த‌ விட‌ய‌த்தை ப‌ற்றிப் பேசாம‌ல் க‌ட‌ந்து செல்கின்ற‌ன‌ர்.