Thursday, December 09, 2021

தேசியவாதம், பேரினவாதம், இனவாதம்: நியாயப்படுத்தல்களின் அரசியல்

//சிங்கள "பேரினவாதத்தையும்", தமிழ் "இனவாதத்தையும்" சமப் படுத்தலாமா?// இப்படியான ஒரு கேள்வியின் மூலம் நியாயப்படுத்தலை செய்ய முனைபவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கேள்வியை நான் கேட்கவுமில்லை, தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. பொதுவாக இப்படியான கேள்விக்கு பின்னால் உள்ள அபத்தங்களை மட்டுமே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பேரினவாதம், இனவாதம் இரண்டுமே அடிப்படையில் தேசியவாதக் கருத்தியலில் இருந்து பிறந்தவை தான். ஆனால், நடைமுறையில் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள். இரண்டையும் சமப்படுத்த நினைப்பது, ஆப்பிளும், தக்காளியும் ஒன்றென நிறுவ முயல்வது போன்று அபத்தமானது. பேரினவாதம், இனவாதம் இரண்டும் குறிப்பிட்ட சிலர் நம்பிக் கொண்டிருக்கும் அரசியல் கொள்கைகள். அதை சிறிது, பெரிது என்று அளந்து பார்க்க முடியாது.

- பேரினவாதம் என்பது பெரிய இனவாதம் அல்ல. அது பெரும்பான்மை இனத்தின் இனவாதமும் அல்ல.

- பேரினவாத சிந்தனை சிங்களவர்களிடம் மட்டுமல்ல, தமிழர்களிடமும் காணப்படலாம். ஏன் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர், அரேபியர், ரஷ்யர், சீனர் என்று உலகம் முழுவதும் பல்லின மக்களிடம் பேரினவாத சிந்தனை உள்ளது.

- அதி தீவிர தேசப் பற்று, சுத்த இராணுவவாதம், எல்லா விடயங்களிலும் தேசம், தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்பன பேரினவாதத்தின் அறிகுறிகள். அது தனது தேசிய எல்லைக்குள் அடங்கும் சிறுபான்மை இனங்களை கீழ்ப்படிய வைக்கும். இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தும். ஆனால், அழித்தொழிக்கும் அளவிற்கு போகாது.

- இன்றைக்கும் உலகில் பெரும்பாலான தேசங்களில் பேரினவாத அரசுகள் ஆட்சி செய்கின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை கொண்டுள்ள ஸ்கண்டிநேவிய நாடுகளும் மிக மோசமான இன ஒடுக்குமுறை வரலாற்றைக் கொண்டுள்ளன. அண்மையில் டென்மார்க்கில் கொண்டுவரப்பட்ட "கெட்டோ" சட்டம் நாசிகளின் காலத்தை நினைவுபடுத்துகிறது. அதாவது, பெரும் நகரங்களில் வாழும் வெளிநாட்டு குடியேறிகள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் முடக்கப் பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் அவர்களது எண்ணிக்கை அதிகரிக்க விடாமல் தடுக்கப்படுகின்றது. முன்பு நாஸி ஜெர்மனியில் இவ்வாறு தான் யூதர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தனியான பிரதேசங்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

பேரினவாதம் என்றால் என்ன?

- பேரினவாதம் என்பது பலர் தவறாக நினைப்பது போன்று பெரிய இனவாதம் அல்ல. அது தேசியவாதத்தின் அதி உச்சகட்ட வடிவம். எந்தவொரு தேசியவாதியும் எல்லை மீறும் பட்சத்தில் பேரினவாதியாக இனங்காணப்படலாம்.

- பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸில் பேரினவாத கருத்தியல் தோற்றம் பெற்றது. அதே காலகட்டத்தில் இங்கிலாந்திலும் அந்தக் கருத்தியல் பரவி இருந்தது. அப்போது அது ஒரு தேசியப் பெருமிதமாக கருதப்பட்டது. பலர் தம்மைப் பேரினவாதி என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள்.

- முதலாம் உலகப்போருக்கு முன்பு, மேற்கு ஐரோப்பாவில் தேசியவாதம் என்பது கூட பேரினவாதமாக இருந்தது. சொந்த இனத்தின் மீதான இனப்பற்று, அல்லது சொந்த தேசத்தின் மீதான கண்மூடித்தனமான நாட்டுப்பற்று என்பன பேரினவாதத்திற்கு இட்டுச் சென்றன.

- ஆங்கிலேயர்கள் தமது பேரினவாதத்தை ஜிங்கோயிசம் எனச் சொல்லிக் கொண்டனர். அதன் வேர்ச் சொல் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரர்களின் பாடலில் இருந்து உருவானது. ஜிங்கோயிச கொள்கை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிலும் பரவி இருந்தது. அகண்ட அமெரிக்கா உருவான காலத்தில் ஜிங்கோயிசம் பிரபலமாக இருந்தது.

- பிரெஞ்சுக்காரர்கள் தமது பேரினவாதக் கொள்கையை ஷோவினிசம் என்று அழைத்தனர். நெப்போலியனின் இராணுவத்தில் சேர்ந்து போரிட்ட ஷோவின் என்ற போர்வீரனின் பெயரால் அவ்வாறு அழைக்கப் படுகின்றது. அதற்குக் காரணம், அந்த வீரனின் அதி தீவிர நாட்டுப்பற்று, மற்றும் தலைவன் மீதான விசுவாசம் ஆகும். அப்போது நடந்த போரில் நெப்போலியன் தோற்கடிக்கப் பட்டு, புதிதாக பதவியேற்ற பிரெஞ்சு அரசாலேயே சிறைப்பிடிக்கப் பட்டிருந்தார். பிரான்ஸில் நெப்போலியன் புகழ் மங்கிக் கொண்டிருந்த நேரம், ஷோவின் தனது தலைவனின் பெருமைகளை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். தனது தலைவர் நெப்போலியன் மட்டுமே உண்மையான தேசப் பற்றாளர் என்றும், தேசத்தை பாதுகாத்தவர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த முன்னாள் போர்வீரனை பின்பற்றி, பிரெஞ்சு தேசியவாதம் பேசிய பலரும் தம்மை "ஷோவினிஸ்ட்" என்று சொல்லிக் கொண்டனர்.

- சுருக்கமாக, தேசியவாதத்தின் அதி தீவிர வளர்ச்சிக் கட்டம் தான் பேரினவாதம். அதீத தேசப் பற்று, சொந்த இனத்தின் நலன்களை பற்றி மட்டுமே சிந்திப்பது, கண்மூடித்தனமான தலைமை வழிபாடு, இவை யாவும் பேரினவாதத்தின் குணவியல்புகள் தான். பேரினவாதிகள் எப்போதும் பெரும்பான்மை இனத்தை சார்ந்திருக்க தேவையில்லை. அத்துடன் அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பேரினவாத சிந்தனைப் போக்கு கொண்ட அனைவரும் பேரினவாதிகள் தான்.

- இனவாதம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விடயம். அது தனது இனம் மட்டுமே உலகிற் சிறந்தது, முன்தோன்றிய மூத்தகுடி தாமே என பெருமை பாராட்டுவது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இனத்தூய்மை பேணப் பட்டு வருவதாக நம்புவது. இனவாதிகளுக்கு எப்போதும் ஏதோவொரு எதிரி இனம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களாக உருவாக்கிக் கொள்வார்கள். எதிரி இனம் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பரப்புவதுடன், வெறுப்புப் பிரச்சாரம் செய்வார்கள்.

- இனவாதிகள், தமது தேச எல்லைகளுக்குள் ஒரே மொழி பேசும் தமது இனம் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். இனத்தால், மொழியால், மதத்தால் மாறுபட்டவர்கள் வாழும் உரிமையை மறுப்பார்கள். இப்படியானவர்களும் அரசியல் அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறு குழுவினரிடமிருந்து தலைதூக்கும் மதவெறியை கண்டிப்பது போன்று, இனவெறியும் கண்டிக்கப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட கேள்வி, ஒருவேளை இவ்வாறு கேட்கப் பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்: //ஒடுக்கும் பெரும்பான்மை இனத்தின் இனவாதத்தையும், ஒடுக்கப்படும் இனத்தின் இனவாதத்தையும் ஒன்றாக சமப்படுத்த முடியுமா?// ஆனால், இதிலும் பிழை இருக்கிறது.

இது முன்கூட்டியே பதிலை மனதில் நினைத்துக் கொண்டு கேட்கப்படும் கேள்வி. இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது:

1. நீங்கள் ஒடுக்கப்படும் இனத்தின் பக்கம் நிற்பவர் என்றால், அது கொண்டிருக்கும் இனவாதக் கூறுகளையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.

2. ஒடுக்கப்படும் சிறுபான்மை இனம் கொண்டிருக்கும் இனவாதம் அளவிற் சிறியது. அதை பெரும்பான்மை இனம் கொண்டிருக்கும் பெரிய இனவாதத்துடன் ஒப்பிட முடியாது. ஆகவே சமப்படுத்த முடியாது.

இது சரியா?

உலகில் எப்போதும் பெரும்பான்மை இனம் மட்டுமே ஒடுக்குவோராக இருப்பதில்லை. இலங்கை, இந்தியா காலனிய நாடுகளாக இருந்த காலத்தில் மிகச் சிறுபான்மையினமான வெள்ளையின ஐரோப்பியர்கள் ஒடுக்கும் இனமாக இருந்தார்கள். அந்த ஆட்சியாளர்களும் பேரினவாதிகளாக மட்டுமல்லாது, இனவாதிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.

தொண்ணூறுகள் வரையில் தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே ஆகிய நாடுகளில் சிறுபான்மையின ஐரோப்பியர்கள் ஆட்சியாளர்களாக மட்டுமல்லலாமல், பூரண குடியுரிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். அந்த மொழி/இனச் சிறுபான்மையினர் தான் மிக மோசமான இனவாதம் கொண்ட அபார்ட்ஹைட் கட்டமைப்பை வைத்திருந்தார்கள்.

ஈராக்கில் சதாம் ஹுசைன் காலம் வரையில் சிறுபான்மை சன்னி முஸ்லிம் சமூகம், பெரும்பான்மை ஷியா முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஆண்டு வந்தது. சிரியாவில் சிறுபான்மை அலாவி முஸ்லிம் சமூகம், இன்னொரு சிறுபான்மையான கிறிஸ்தவ சமூகத்துடன் கூட்டுச் சேர்ந்து பெரும்பான்மை ஷியா முஸ்லிம் சமூகத்தினரை அடக்கி ஆண்டு வருகின்றனர். பெரும்பான்மையோ, சிறுபான்மையோ ஆட்சியதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதே முக்கியம்.

ஆகவே ஒரு குறிப்பிட்ட இனம் சிறுபான்மை இனமாக இருப்பதால், அதில் இனவாதிகள் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணமே தவறு. ஒப்பீட்டளவில் "வீரியம் குறைந்த இனவாதம்" என்பதும் தவறான கருதுகோள் தான்.

இந்த விடயத்தில் சமப்படுத்துவது என்ற சொல்லே பொருத்தமற்றது. அர்த்தமற்றது. இங்கே எதையும் எதனோடும் சமப்படுத்தவில்லை. உள்ளதை உள்ளபடியே பேசுகிறோம். அவ்வளவு தான். திருடனை திருடன் என்றோ, அயோக்கியனை அயோக்கியன் என்றோ அழைப்பதில் என்ன தவறிருக்கிறது? ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால், அவர்கள் திருடர்களோ, அயோக்கியர்களோ இல்லை என்று அர்த்தமா?

"ஒடுக்கப்படும் இனத்தின் வன்முறையை/இனவாதத்தை ஒடுக்கும் இனத்துடன் சமப்படுத்தக் கூடாது" என்றும் கோட்பாடு, இனவெறி, மதவெறி சக்திகளால் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தப் படுகின்றது என்ற உண்மையையும் உணர வேண்டும். அதற்கு அனைவருக்கும் தெரிந்த இரண்டு உதாரணங்களை காட்டலாம்:

1. இஸ்ரேலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கு உரிமை கொரிய ஹமாஸ் இதே நியாயத்தை முன்வைத்து வந்தது. பிற்காலத்தில் அது பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பின்னடைவை உண்டாக்குகிறது என்பதை புரிந்து கொண்டு கைவிட்டு விட்டனர்.

2. ஐரோப்பாவில் நடந்த ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்களை நியாயப் படுத்தியவர்களும் அதே வாதத்தை தான் வைத்தார்கள். அதாவது ஒடுக்கும் பெரும்பான்மை இனமான கிறிஸ்தவ- ஐரோப்பியர்களின் பேரினவாத வன்முறைக்கு எதிராக, ஒடுக்கப்படும் முஸ்லிம்- அரபி சிறுபான்மை இனம் பிரயோகிக்கும் வன்முறையை சமப்படுத்தக் கூடாது என்றனர். இதே வாதத்தின் அடிப்படையில் ஐரோப்பியரை வெறுக்கும் இஸ்லாமியர் தரப்பு இனவாதத்தையும் நியாயப் படுத்தினார்கள். "ஒடுக்கும் ஐரோப்பியரின் பேரினவாதத்துடன், ஒடுக்கப்படும் முஸ்லிம்களின் இனவாதத்தை சமப்படுத்தலாமா?" என்று கேட்டனர்.

நிச்சயமாக, அப்படியான நியாயப்படுத்தல்களை செய்தவர்கள் ஐரோப்பிய முஸ்லிம்களில் மிகச் சிறிய எண்ணிக்கையினரான மத அடிப்படைவாதிகள் தான். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அந்தக் காரணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை யார் செய்தாலும் அது தவறு தான். ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் மதவாதம், இனவாதம் இல்லாத சாதாரண மக்கள்.

மேற்கத்திய நாடுகளில் வாழும் வந்தேறுகுடிகளையும், இலங்கையில் வாழும் பூர்வகுடிகளையும் ஒப்பிடலாமா என்று இப்போது ஒரு கூட்டம் கிளம்பி வரும். உலகில் இன்றிருப்பவை எல்லாம் இருபதாம் நூற்றாண்டில் உருவான நவீன தேசங்கள் தான். அனேகமாக எல்லா நாடுகளிலும் வந்தேறுகுடிகளும், பூர்வகுடிகளும் கலந்து தான் வாழ்கிறார்கள். பெரும்பாலான நாடுகளில் குடியுரிமை மரபின வழிப் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப் படுவதில்லை. இந்த உரிமைகள் மீறப்படும் பொழுது தான் தேசியவாதம் பேரினவாதமாக அல்லது இனவாதமாக வெளிப்படுத்திக் கொள்கின்றது.

****

Wednesday, December 08, 2021

திருமுருகன் காந்தியின் திருகோணமலை கோளாறு பதிகம்

திருகோணமலையின் முக்கியத்துவம் குறித்து திருமுருகன் காந்தி சில மாணவர்களுக்கு பாடம் நடத்தும் காணொளி பார்க்கக் கிடைத்தது. (https://twitter.com/i/status/1466347425136791561) அதில் அவர் பல தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாறு, புவியியல், சமூகக் கட்டமைப்பு குறித்து அரைகுறை அறிவுடன் பகிரப் படும் இது போன்ற தகவல்களால் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை. அத்துடன் ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கும்.


முதலில் திருகோணமலை இனப்பரம்பல் தொடர்பாக சில சுருக்கமான குறிப்புகள்:

- திருமுருகன் காந்தி குறிப்பிடும் தமிழீழம் அல்லது தமிழர் பிரதேசம் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை குறிக்கும். குறிப்பாக திருகோணமலை பட்டினமும், அதை அண்டிய பகுதிகளும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தனித் தன்மை கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது. குறிப்பாக திருகோணமலைத் தமிழர்கள், யாழ்ப்பாண, மட்டக்களப்பு தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாகவும் மாறுபட்டவர்கள். உதாரணத்திற்கு, அங்கே சாதிப் பாகுபாடுகள் பார்ப்பது மிக மிகக் குறைவு. அதற்கு பல நூறாண்டுகளாக திருகோணமலையில் வசித்து வந்த ஐரோப்பிய குடியேறிகளின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம்.

- கிழக்கு மாகாணத்திற்குள் அடங்கும் திருகோணமலை "தமிழர் பிரதேசம்" என்று சொன்னாலும், அந்த மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் பகுதிகளில் முஸ்லிம்கள் (அல்லது இலங்கைச் சோனகர்கள்) எண்ணிக்கை மிக அதிகம். அந்தப் பகுதிகள் நேரடியாக துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ளன.

- தொண்ணூறுகளில் வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம் போன்ற, இன முரண்பாடுகளில் விரிசலை உண்டாக்கிய புலிகளின் விவேகமற்ற நடவடிக்கைகள் காரணமாக, கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்கத் தலைப்பட்டனர். ஒரு தனியான தேசிய இனமாக பிரிந்து நின்றனர்.

- அது போதாதென்று, ஆகஸ்ட் 2006ம் ஆண்டு நடந்த யுத்தத்தில் மூதூரை கைப்பற்றிய புலிகள் அங்கிருந்த முஸ்லிம் மக்களை வெளியேற்றினார்கள். ஆகவே, 1991 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, 2006 ஆம் ஆண்டு மூதூரிலுமாக, இரண்டு தடவைகள் முஸ்லிகள் புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். இன்னொருவிதமாக சொன்னால், புலிகளின் பார்வையில் தமிழீழம் என்பது "தூய" தமிழர்களின் பிரதேசம். அங்கிருந்து சிங்களவர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் இனச்சுத்திகரிப்பு செய்யப்படுவார்கள். இதுபோன்ற புலிகளின் இனவாத நடவடிக்கைகள், முஸ்லிம் மக்களுக்கு தமிழீழப் போராட்டத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. திருமுருகன் காந்தி இதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், திருகோணமலையை சேர்த்து ஈழம் அமைத்து விடுவோம் என்று கனவு காண்கிறார்.

- திருகோணமலை மாவட்டத்தை, வடக்கில் உள்ள முல்லைத்தீவுடன் இணைக்கும் பதவியா பகுதியில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதைத் தவிர துறைமுகத்தை அண்டிய கந்தளாய், சேருவில பகுதிகளிலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக குடியேறியவர்கள் என்பது உண்மை தான். ஆனால், மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சிங்களவர்களை ஈழம் கிடைத்த பின்னர் இனச்சுத்திகரிப்பு செய்ய முடியாது.

இனி திருமுருகன் காந்தி கூறிய வரலாற்றுத் திரிபுகளுக்கு வருவோம்: 

- இரண்டாம் உலகப்போர் காலத்தில் மலேசியா, பர்மா வரை வந்து விட்ட ஜப்பானியப் படைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக திருகோணமலையில் இருந்து தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்கள் புறப்பட்டு சென்றதாக திருமுருகன் காந்தி கூறுகின்றார்.

- உண்மையில் அன்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சுருங்கிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் படைகள் தோற்றுப் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தன. திருகோணமலை துறைமுகமும், அங்கிருந்த படைத்தளமும் ஜப்பானிய வான்படை விமானங்களால் தாக்கப்பட்டது. அப்போது நடந்த தாக்குதல்களில் பிரிட்டிஷ் இராணுவத்திற்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டன. பல விமானங்கள், கப்பல்கள் அழிக்கப் பட்டன.

- இந்தியாவை இந்திரா காந்தி ஆண்ட காலத்தில், திருகோணமலைக்கு அமெரிக்க இராணுவம் வந்திறங்கவிருந்ததாகவும் அதனால் தான் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்கப் படதாகவும் திருமுருகன் காந்தி கூறுகின்றார். இது எந்த ஆதாரமும் இல்லாத பொய்யான தகவல்.

- அந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்க இராணுவம் வருவதற்கான எந்தவொரு முகாந்திரமும் இருக்கவில்லை. ஆனால், புத்தளத்தில் வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலிச் சேவைக்கான ஒலிபரப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. புத்தளம் இந்தியாவுக்கு அருகில் இருப்பதால் அங்கிருந்து அமெரிக்கா உளவறிய முயற்சிக்கலாம் என்று இந்திய அரசு விசனம் தெரிவித்திருந்தது.

- ஆனால், இந்தியா ஈழப் போராட்டத்திற்கு உதவியதன் காரணம் அதுவல்ல. பனிப்போர் காலத்தில் ஒரு நாடு எந்த முகாமில் இருக்கிறது என்பதைப் பொறுத்து, எதிரி முகாமின் பதிலிப் போராக உள்நாட்டு குழப்பங்கள் தூண்டி விடப்பட்டன. 1977 ம் ஆண்டிலிருந்து இலங்கை அமெரிக்காவுக்கு நெருக்கமாக சென்று கொண்டிருந்தது. அதற்கு முன்னர் இலங்கையும் சோவியத் முகாமில் இருந்த படியால், இந்திரா காலத்து இந்தியாவுடன் நெருக்கமாக இருந்தது. பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் இது ஒரு மிகப்பெரிய பண்பியல் மாற்றம். ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு, சோவியத் யூனியன் விழுந்த பின்னர் எல்லா நாடுகளும் ஒரே அமெரிக்க குடையின் கீழ் வந்து விட்டன.

- மேலதிகமாக திருமுருகன் காந்தி சொல்லாத ஒரு தகவலையும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன். (நிச்சயமாக அவர் இதை உங்களுக்கு சொல்ல மாட்டார்.) திருகோணமலையில் 1956 ம் ஆண்டு வரையில் பிரிட்டிஷ் இராணுவம் நிலைகொண்டிருந்தது. அந்த வருடம் தான் தன்னை ஒரு இடதுசாரி சமூக ஜனநாயகவாதியாக காட்டிக் கொண்ட பண்டாரநாயக்க பிரதமரானார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை, மிகப்பெரிய பிரிட்டிஷ் கம்பனிகளை அரசுடமையாக்கியது. அத்துடன் திருகோணமலையில் இருந்த பிரிட்டிஷ் இராணுவ முகாமையும் விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிரகாரம் "முடிக்குரிய" பிரிட்டிஷ் படைகள் வெளியேற, அந்த இடத்தில் "முடிக்குரிய" சிலோன் படைகள் நிலைகொண்டன.

- இலங்கையின் வரலாற்றில் நடந்த மிக முக்கியமான அரசியல், இராணுவ, பொருளாதார மாற்றங்களின் பின்னர், 1958 ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது. அதைத் தூண்டி விட்டவர்கள், அன்று எதிர்க்கட்சியாக இருந்த, பிரிட்டிஷ் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சி. அன்றிலிருந்து வளர்ந்து வந்த சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினை முள்ளிவாய்க்காலில் ஒரு துயர முடிவை சந்தித்தது. ஈழப்போர் முடிந்து பத்து வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியா மீண்டும் திருகோணமலையில் படைத்தளம் அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசும் அதற்கு சம்மதித்துள்ளது. 

திருகோணமலை கோளாறு பதிகம் முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.


Wednesday, December 01, 2021

ஈழத்தமிழரை கேவலப்படுத்தும் மே 17 இயக்க அயோக்கியர்கள்

மே 17 இயக்கத்தினர், தங்களை எப்போதும் நாம் தமிழர் கட்சியிடம் இருந்து பிரித்துப் பார்ப்பார்கள். தங்களை "நாலும் தெரிந்த அறிவுஜீவிகள்"(?) மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆனால் புலிகளுக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்றால் மட்டும் எந்தளவு பொறுக்கித்தனத்திற்கும் கீழிறங்கி செல்வார்கள். அவர்கள் பக்க தவறுகளை சுட்டிக் காட்டி விட்டால் "ராஜபக்சே கைக்கூலி" என்று நாம் தமிழர் பாணியில் இவர்களும் திட்டுவார்கள். கடைசியில் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நிரூபித்து விடுவார்கள்.


ஆதாரம் ஒன்று: 

பேஸ்புக்கில் ஒரு தடவை அன்பே செல்வா என்பவர் டெலோ அழிப்பை நியாயப் படுத்தும் காணொளிப் பதிவை பகிர்ந்திருந்தார். அதில் நிறைய தவறான, கற்பனையான தகவல்கள் சொல்லப் பட்டிருந்தன. நான் இதை சுட்டிக் காட்டியும் அன்பே செல்வா நம்ப மறுத்தார். நான் நேரில் கண்ட சாட்சி சொல்கிறேன் என்று கூறியும் ஒத்துக் கொள்ள மறுத்தார். அன்பே செல்வா திரும்பத் திரும்ப தான் சொல்வதையே நானும் திருப்பிச் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி மாதிரி சித்திரவதை செய்து பொய்யை உண்மை என சொல்ல வைக்கும் அடக்குமுறையை பிரயோகித்துக் கொண்டிருந்தார். 

யாழ்ப்பாணத்தில் டெலோ அழித்தொழிக்க பட்ட பின்னர் தமிழ்நாட்டில் பிறந்த ஒருவர், இன்று வரையில் யாழ்ப்பாணம் எப்படி இருக்கும் என்பதை கண்டு கேட்டிராத ஒருவர், அங்குள்ளவர்களுக்கு வரலாற்றுப் பாடம் எடுப்பது எத்தனை பெரிய அபத்தம்? அதுவும் நேரடியாக கண்ணால் கண்ட சாட்சியத்தையும் ஏற்றுக் கொள்ள மறுப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? இது தானா இவர்கள் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு கொடுக்கும் மரியாதை?

இன்று வரையில் மகிந்த ராஜபக்சே கூட அன்பே செல்வா அளவிற்கு நடந்து கொள்ளவில்லை. இன்று யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படையினர் கூட இந்தளவு மோசமாக தமது கருத்தை எம் மீது திணிக்கவில்லை. அண்மையில் மாவீரர் தினத்தன்று காரைநகரில் முன்பு மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் தமது பக்க நியாயங்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருப்பினும், அவர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர், நீங்கள் இப்படித் தான் பேச வேண்டும் என்று அன்பே செல்வா மாதிரி பாடம் எடுக்கவில்லை.ஆதாரம் இரண்டு: 

கிளப் ஹவுசில் மே 17 காரர்கள் நடத்திய கூட்டத்தில் கார்த்தினி ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு ஆதரவாக பேசுவது என்ற பெயரில் அவர்களை கேவலப் படுத்திக் கொண்டிருந்தார். அதாவது தற்போதும் இலங்கையின் வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படையினர் அங்குள்ள தமிழர்களின் வீடுகளுக்கு சென்று பெண்களை இழுத்து வன்புணர்வு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பொய்யான தகவலை சொன்னார். இவர் என்ன சொல்ல வருகிறார்? "ஈழத்தில் வாழும் எந்தவொரு தமிழ்ப் பெண்ணுக்கும் கற்பு கிடையாது... எல்லோரும் சிங்கள இராணுவத்தினரால் பலாத்காரமாக உறவு கொள்ளப் பட்டவர்கள்..." என்று கொச்சையாக பேசுவது தானா தமிழ்த் தேசியம்? இத்தனைக்கும் கார்த்தினியும் ஒரு பெண். அதையும் விட தன்னை ஒரு பெண்ணியவாதி என்று சொல்லிக் கொள்பவர்.

இதற்குப் பிறகு நடந்த கிளப் ஹவுஸ் கூட்டங்களில் கார்த்தினியிடம் அது குறித்து விளக்கம் கேட்க முயன்ற போதெல்லாம் அவர் அகப்படவில்லை. வேண்டுமென்றே கேள்வி கேட்க வந்தவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்தார். நேற்று கிசாமி கூட்டிய "நீங்கள் பேசும் அரசியலுக்காக பெண்களை கொச்சைப் படுத்தாதீர்கள்" என்ற தலைப்பிலான கூட்டத்தில் கார்த்தினியும் மொடறேட்டராக இருந்தார். நீண்ட நேரம் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருந்தவர், அவரிடம் ஒரு கேள்வி என்று தொடங்கியதும் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப் பிறகு அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.

மே 17 நண்பர்களே, நீங்கள் புலிகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிப்பது உங்களது தனிப்பட்ட பிரச்சினை. அதற்காக ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கேவலப் படுத்துவீர்களா? இதுவரையில் மகிந்த ராஜபக்சவோ, சிங்கள இராணுவமோ ஈழத்தமிழர் மீது செய்திராத கருத்து வன்முறைகளை, நீங்கள் "தமிழர்கள்" என்ற பெயரில் செய்வது எந்த வகையில் நியாயம்? இதற்குப் பிறகும் உங்களை நீங்களே தமிழ்த் தேசியவாதிகள் என்று அழைத்துக் கொண்டால், உங்களைப் போன்ற அயோக்கியர்கள் உலகில் இருக்க முடியாது.

பிற்குறிப்பு: 
இதற்கு அவர்களிடமிருந்து எந்தவொரு தர்க்கரீதியான பதிலும் வராது. வழமை போல "சிறிலங்கா அரச கைக்கூலி" என்பன போன்ற வசைச் சொற்களை வீசி விட்டு செல்வார்கள். வாதத்தில் தோற்றவன் அவதூறை ஒரு ஆயுதமாக கையில் எடுப்பான்.