Saturday, March 30, 2019

"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்" - இது ஒரு ஜெர்மன் கதை!

இது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: 
  • அரசியல் படுகொலைகள். 
  • இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். 
  • ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். 
  • ஏக‌ பிர‌திநிதி உரிமை கோர‌ல். 
  • தேசியவாத கொள்கை உட‌ன்பாடு கொண்ட‌ பிற‌ இய‌க்க‌ங்க‌ள் மீதான‌ த‌டை. 
  • ஏக பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாத மாற்று இயக்கத்தவர் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை. 

இவை இருப‌துக‌ளில், முப்ப‌துக‌ளில் ஜேர்ம‌ன் வ‌ர‌லாற்றில் இட‌ம்பெற்ற‌ அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ள் அல்ல‌து ச‌ம்ப‌வ‌ங்க‌ள். ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இன்றைய உலக நடப்புகளை நினைவுபடுத்துகின்றன. இந்தத் தகவல்கள் வெளியுலகில் அதிகமாக அறியப் படவில்லை.

முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி தனது ஜென்ம விரோதியான பிரான்சிடம் தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், நட்பு நாடுகளுடன் சேர்ந்து சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு ஜெர்மனியை அழைத்தது. பிரான்சில் வெர்சேய் எனும் இடத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு சென்ற ஜெர்மன் அரசுப் பிரதிநிதிகள், புகையிரதம் மூலம் அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்கள் போகும் வழியில் இருந்த பிரெஞ்சுக் கிராமங்களில் ஜெர்மன் படைகள் நடத்திய பேரழிவுகளை பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

சமாதான ஒப்பந்தம் கூட வெற்றி பெற்ற நாடுகளின் உத்தரவுகளுக்கு அடிபணிவதாகத் தான் எழுதப் பட்டிருந்தது. உதாரணத்திற்கு சில: ஜெர்மனி பில்லியன் டாலர் கணக்கான பணத்தை வெற்றி பெற்ற நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். ஜெர்மனி தனக்கென இராணுவம், விமானப்படை எதுவும் வைத்திருக்க முடியாது. அல்சாஸ், லொரேன் ஆகிய மாகாணங்களை பிரான்ஸிற்கு கொடுக்க வேண்டும். அதைவிட ஜெர்மனிக்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தந்த நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப்படும். ஜெர்மனிக்கு சொந்தமான ஆப்பிரிக்க காலனிகளை பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மேற்படி சமாதான ஒப்பந்தம் அந்நியருக்கு தேசத்தை அடமானம் வைக்கும்செயல் என்பது தெரிந்த போதிலும், ஜெர்மன் அரசுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திட மறுத்தால் மீண்டும் போர் மூண்டு ஜெர்மனி முழுவதும் ஆக்கிரமிக்கப் படும் அபாயம் இருந்தது. அதற்கு மாறாக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், தேசத்தை மறுசீரமைப்பதற்கு சிறிது கால அவகாசம் கிடைக்கும். இதனால் ஜெர்மன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.

தற்போது ஜெர்மன் அரசுக்கு புதிய நெருக்கடிகள் உருவாகின. அதுவரை காலமும் அரசுக்கு விசுவாசமாக போரிட்டு வந்த தேசியவாத இராணுவ அதிகாரிகள் இதை மிகப் பெரிய துரோகமாகப் பார்த்தனர். "அந்நியருக்கு நாட்டை அடகு வைத்த ஜெர்மன் இனத் துரோகிகள்" மீதான வெறுப்புணர்வு அன்று சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவி இருந்தது. இத்தகைய பின்னணியில், தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி இருந்தன. முதல் கட்டமாக, "இனத் துரோகிகளை களையெடுப்பது" அந்த தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக இருந்தது.

நாஸிகளின் SA இயக்கம் மட்டுமல்லாது, Stahlhelm, Jungdo என்று பல தீவிர தேசியவாத இயக்கங்கள் இரகசியமாக இயங்கி வந்தன. அவற்றின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையாளும் பயிற்சி பெற்றிருந்தனர். பல இடங்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. பவாரியா மாநிலத்தின் பொலிஸ் மா அதிபர், வலதுசாரி தீவிரவாதக் குழுக்களை ஆதரித்த படியால், அங்கிருந்து தான் பல அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன.

முதலாம் உலகப்போரின் முடிவில் ரஷ்யா மாதிரி, ஜெர்மனியிலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடித்தது. ஆனால், ஜெர்மன் அரசு Freikorps எனும் கூலிப்படையை அனுப்பி புரட்சியை நசுக்கியது. அதன் பிறகு, கம்யூனிஸ்டுகள் நீண்டதொரு ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்த படியால் அரசுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அதற்கு பதிலாக, தீவிர வலதுசாரி- தேசியவாதிகள் மத்தியில் இருந்து அரசுக்கு அச்சுறுத்தல் வந்தது.

ஒரு காலத்தில் அரசின் கூலிப்படையாக செயற்பட்ட Freikorps படையினர், திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றுப் போயினர். அதன் விளைவாக, Freikorps தடைசெய்யப் பட்ட படியால்,OC என்றொரு இரகசிய இயக்கம் உருவாக்கப் பட்டது. சுருக்கமாக OC என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் பெயர் "அமைப்புக் குழு". தேசப்பற்று, வெர்சேய் ஒப்பந்த எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு, இனவுணர்வு போன்றவற்றை கொள்கைகளாக கொண்டிருந்த OC இயக்கம், அரசியல் படுகொலைகள் மூலம் தனது இலக்கை அடைய எண்ணியது.

அவர்கள் ஜெர்மன் இனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், துரோகிகளை களையெடுப்பது அவசியம் என்று கருதினார்கள். பண்டைய ஜெர்மன் சொல்லான பெமே(Feme) என்ற சொல்லின் மூலம் தமது செயல்களை நியாயப் படுத்தினார்கள். பண்டைய ஜெர்மன் சமுதாயத்தில் காணப்பட்ட பெமே நீதிமன்றம், நம்மூர் பஞ்சாயத்து போன்றது. அங்கு வரும் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப் படும். அவை சிலநேரம் கொடூரமான தண்டனைகளாகவும் இருக்கலாம். அது மாதிரி, "துரோகிகளுக்கு மரணதண்டனை" என்பது தான் OC அமைப்பினரின் கோஷமாக இருந்தது.

1921 - 1922 ஆகிய இரண்டு வருடங்களுக்குள், ஜெர்மனியில் 350 க்கும் மேற்பட்ட "எதிரிகள்" அல்லது "துரோகிகள்" OC இயக்கத்தால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று பலர் OC வன்முறைக்கு பலியானார்கள். அவர்களில் சிலர் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள். சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கம்யூனிசப் புரட்சியில் பங்கெடுத்த USPD தலைவர்கள் இருவர் தெருவில் சுட்டுக் கொல்லப் பட்டனர். USPD என்பது, அன்று ஆளும் கட்சியாக இருந்த சமூக ஜனநாயகவாத SPD இலிருந்து பிரிந்த மார்க்சியவாத குழுவினர் ஆவர்.

அதைவிட சில வலதுசாரி அரசியல்வாதிகளும், வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியானார்கள்! அவர்களில் ஒருவர் மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர்(Mathias Erzberger). கத்தோலிக்க மதப்பற்றாளர். (வலதுசாரி) மத்திய கட்சியின் தலைவர். அவர் போருக்கு எதிராக குரல் கொடுத்த படியாலும், சமாதான தீர்வுத் திட்டத்தை ஆதரித்த படியாலும், தீவிர ஜெர்மன் தேசியவாதிகளால் ஒரு துரோகியாகக் கருதப் பட்டார். அவர் தனது நண்பருடன், மலைப் பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த இரண்டு கொலையாளிகளும் வேறு பெயரில் போலிப் பாஸ்போர்ட் செய்து ஹங்கேரிக்கு சென்று பதுங்கி இருந்தனர்.

இருப்பினும், OC வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியான இன்னொரு வலதுசாரி அரசியல்வாதியின் படுகொலை அதுவரை காலமும் நடந்து கொண்டிருந்த அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரபல தொழிலதிபராகவும் அமைச்சராகவும் இருந்த வால்டர் ராதேனவ் (Walther Rathenau) வெர்சேய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமைக்காக தீர்த்துக் கட்டப்பட்ட "துரோகிகளில்" முக்கியமானவர். அத்துடன் அவர் ஒரு பணக்கார யூதராகவும் இருந்த படியால் மேலதிக வெறுப்புக்கு ஆளாகி இருந்தார்.

ராதேனவ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பெரும் பணம் சம்பாதித்து இருந்தாலும், அவரது அரசியல் இடதுசாரி தன்மை கொண்டதாக இருந்தது. தானும் ஒரு முதலாளி என்ற மமதை இன்றி, நலன்புரி அரசை உருவாக்கி அடித்தட்டு மக்களையும் முன்னேற்றும் வகையில் செல்வத்தை பங்கிட விரும்பியவர். இதற்காக பணக்காரர்கள் மீது அதிகளவு வரி விதிக்கும் திட்டத்தையும் முன்மொழிந்தார். ஐரோப்பிய சந்தைகளை ஒன்று சேர்க்கும் பொருளாதார ஒன்றியம் பற்றிய சிந்தனை கூட அவரிடம் இருந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. அத்தகையதொரு அரசியல்வாதி அன்றைய ஜெர்மன் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததில் வியப்பில்லை.

ஒரு நாள், பெர்லின் நகரில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள தெருவொன்றில், காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் ராதேனவ்  சுட்டுக் கொல்லப் பட்டார். பட்டப் பகலில் இன்னொரு காரில் இருந்த படியே பிஸ்டலால் சுட்டுக் கொன்ற கொலையாளிகள், சம்பவத்தை கண்டு அங்கு கூடிய மக்கள் வெள்ளத்திற்குள் கலந்து தப்பிச் சென்று விட்டனர். ராதேனவ் கொலை செய்யப்பட செய்தி நாடு முழுவதும் எதிரொலித்தது. பெர்லின் நகர மத்தியில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜெர்மன் மக்களின் எதிர்ப்புணர்வு தங்களுக்கு எதிராக திரும்பி இருப்பதை கண்டுகொண்ட கொலையாளிகள் வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சித்தார்கள். அது நிறைவேறாத படியால், தீவிர வலதுசாரி நண்பர்களின் வீடுகளில் அடைக்கலம் கோரினார்கள். ஆனால், யாருமே அவர்களுக்கு உதவவில்லை. அவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இலட்சக்கணக்கான பணம் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனால் ஊருக்குள் செல்லப் பயந்து காடுகளுக்குள் சுற்றித் திரிந்தார்கள்.

இறுதியில் ராதேனவ் கொலையாளிகள் ஹல்லே நகருக்கு அருகில் இருந்த பாழடைந்த கோட்டை ஒன்றுக்குள் ஒளிந்திருந்தனர். அந்த இடத்தில் வெளிச்சத்தை கண்ட ஊர் மக்கள் பொலிசிற்கு அறிவித்து விட்டனர். அதையடுத்து பெரும் பொலிஸ் படை வந்து கோட்டையை முற்றுகையிட்டது. தாம் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கொலையாளிகள் துப்பாக்கியுடன் வெளியே வந்து, அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் அரசியல் கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து பொலிசாருடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். ஒருவன் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானான். மற்றவன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான்.

இந்தச் சம்பவம் நடந்து பதினொரு வருடங்களுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். நாஸிகள் அந்த இரண்டு கொலையாளிகளையும் "தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள்" என்று கௌரவித்தனர். அவர்கள் கொல்லப் பட்ட கோட்டையில், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நினைவுகூரும் வைபவம் நடைபெற்றது. ஹிட்லரின் அரசில் அமைச்சராக இருந்த ஹிம்லர், "மாவீரர்களின்" சமாதியில் மலர் வளையம் வைத்து விட்டு உரையாற்றினார். "தாயகத்திற்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களின் தியாகம் வீண்போகவில்லை என்றும், தற்போதைய ஜெர்மன் தேசிய இராணுவத்தினர் அவர்களது ஆன்மாவை கொண்டிருப்பதாகவும்" புகழாரம் சூட்டினார்.

முப்பதுகளின் தொடக்கத்தில், அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியையும் பாதித்தது. முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் கூட எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத ஜெர்மன் பணக்கார வர்க்கத்தினர், நிதி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். பலரது செல்வம் ஒரே நாளில் மறைந்து ஏழைகள் ஆனார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜெர்மனியில் பல்வேறு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போராடின.

ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகளின் இடதுசாரி சிவப்பு முன்னணிப் படையினர் மீண்டும் தெருக்களில் நடமாடினார்கள். ஹிட்லரின் கீழ் இயங்கிய SA, மற்றும் பல வலதுசாரி ஆயுதக் குழுக்கள், ஒரு பக்கம் சிவப்பு முன்னணிக்கு எதிராகவும், மறுபக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். இந்தத் தருணத்தில் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்ற நாஸிக் கட்சியை அரசமைக்க வருமாறு ஜெர்மன் ஜனாதிபதி அழைத்தார்.

ஹிட்லர் தேர்தல் ஜனநாயகப் பாதையில் தெரிவுசெய்யப் பட்டிருந்தாலும், அதிகாரத்தை கைப்பற்றியவுடன் பிற கட்சிகள் அனைத்தையும் தடை செய்தார். அதே நேரம் நாஸிக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் நிலவின. நீண்ட காலமாக தனித்து இயங்கி வந்த பல்வேறு வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் நாஸிக் கட்சியுடன் பொது உடன்பாட்டைக் கொண்டிருந்தாலும் ஒரே கட்சியாக கலந்து விடவில்லை. குறிப்பாக, பழைய Freikorps உறுப்பினர்கள் ஹிட்லரின் தலைமையை ஏற்க மறுத்தனர்.

அதுவரை காலமும் ஜெர்மனியில் இருந்து வந்த ஜனநாயக அமைப்புகள், தேர்தல்கள் எல்லாவற்றையும் நாஸிகள் தடைசெய்து விட்டனர். ஜனாதிபதி, பிரதமர் முறைமை ஒழிக்கப் பட்டு, ஹிட்லர் தேசியத் தலைவர் (Führer) ஸ்தானத்திற்கு உயர்த்தப் பட்டார். நாஸிகள் மட்டுமே ஜெர்மன் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், ஹிட்லர் மட்டுமே ஜெர்மனியரின் தேசியத் தலைவர் என்பதையும், ஏனைய தேசியவாத அமைப்புகள் ஏற்றுக் கொள்ள மறுத்தன.

"நீளமான கத்திகளின் இரவு" (Nacht der langen Messer, 30 June - 2 July 1934) என்று அழைக்கப்படும் நாட்களில் ஹிட்லரின் தலைமைத்துவத்திற்கு சவாலாக விளங்கிய மாற்று இயக்கத்தினர் களையெடுக்கப் பட்டனர். அவர்கள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதாக குற்றம் சுமத்தப் பட்டது. மாற்று இயக்கத் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள், ஹிட்லரின் கையாட்களால் வீடு வீடாக தேடிச் சென்று தீர்த்துக் கட்டப் பட்டனர். குறைந்தது நூறு பேராவது அன்று நடந்த களையெடுப்பில் கொல்லப் பட்டனர்.

ஜெர்மன் தேசியவாதம் ஹிட்லருடன் தொடங்கவில்லை. ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன. தேசாபிமானம், இனவுணர்வு போன்ற கொள்கை அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை கொண்டிருந்தன. தேர்தல் அரசியலில் மட்டுமல்லாது, ஆயுத வன்முறைகளிலும் ஈடுபட்டன. அரசியல் படுகொலைகளை புரிந்தன.

நாஸிகள் அல்லாத ஏனைய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆயுதப் போராட்டம் தனிநபர் பயங்கரவாதம் என்ற அளவில் தான் இருந்தது. அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஜெர்மன் தேசியத்தின் பேரில் போராடிய பல நூறு இளைஞர்களின் தியாகங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் ஹிட்லர் மட்டும் தான். SA, OC போன்ற வலதுசாரி தீவிரவாதக் குழுக்களின் போராட்டங்களின் விளைவாகாத் தான் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார். 

அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை தமது மீட்பராகக் கண்ட பல்வேறு  வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள், ஹிட்லரின் நாஸிக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆர்வம் காட்டின. அவற்றிற்கு இடையில் ஐக்கிய முன்னணி கூட ஏற்பட்டிருந்தது. ஆனால், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து ஜெர்மன் மக்களுக்கும் தானே தேசியத் தலைவர், தனது நாஸி கட்சியே ஏக பிரதிநிதிகள் என்றும் அறிவித்துக் கொண்டார். அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களை துரோகிகளாக்கி தீர்த்துக் கட்டினார். காலப்போக்கில் அதையெல்லாம் மறந்து விட்ட ஜெர்மன் மக்கள், ஹிட்லரை தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

இது ஒரு ஜெர்மன் கதை.

Sunday, March 10, 2019

ஜெர்மன் கம்யூனிசப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுக் குறிப்புகள்

9 நவம்பர் 1918, "ஜெர்மன் சோஷலிசக் குடியரசு" பிரகடனம் செய்யப் பட்டது. கீல், ஹம்பூர்க், பிறேமன், முன்சென், பெர்லின் ஆகிய பல ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஜெர்மன் தேசியக் கொடி இறக்கப்பட்டு, செங்கொடி ஏற்றப் பட்டது. அந்த நகரங்களில் "Räte" எனும் தொழிலாளர் மன்றங்கள் (ரஷ்யாவில் சோவியத் மாதிரி) உருவாகி இருந்தன.

நீங்கள் இந்த வரலாற்றுத் தகவல்களை இதற்கு முன்னர் கேள்விப் பட்டிரா விட்டால் ஆச்சரியப் படாதீர்கள். புதிய தலைமுறை ஜெர்மனியர்களுக்கு கூடத் தெரியவிடாமல் மூடி மறைக்கப் படுகிறது. ஜெர்மனியில் கம்யூனிசப் புரட்சி நடந்தது என்ற தகவலே பலருக்கு புதிதாக இருக்கலாம். அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்திருந்தாலும், முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் அப்படியான தகவல்களை இருட்டடிப்பு செய்வதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

நவம்பர் 1918, முதலாம் உலகப்போரில் தோல்வியடைந்த காரணத்தால், ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வந்த ஜெர்மன் இராணுவம், அப்போது தேசத்தின் எல்லையை பாதுகாப்பதற்கான தற்காப்புப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் உணவுப் பற்றாக்குறை காரணமாக மக்கள் பசியால் வாடிக் கொண்டிருந்தார்கள். பெரும்பான்மை ஜெர்மன் மக்கள் போரை விரும்பவில்லை. பசி, பட்டினியால் வாடிய மக்களிடம் தேசியப் பெருமிதம், இனவுணர்வு எதுவும் செல்லுபடியாகவில்லை. அதனால், அன்றைய ஜெர்மனி முழுவதும் போருக்கு எதிரான குரல்களே அதிகமாக கேட்டன.

4.11.1918, வட ஜெர்மனியின் துறைமுக நகரமான 'கீல்" (Kiel) பதற்றமாக காட்சியளித்தது. சுமார் ஐயாயிரம் பேர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களின் கைகளில் செங்கொடிகள் பறந்தன. "சமாதானமும் உணவும் வேண்டும்!", "அப்பாவிகளை விடுதலை செய்!" போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் காணப்பட்டன. அவர்கள் கீல் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருந்த தமது தோழர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வடக்கே உள்ள கீல் நகரை அண்டிய சர்வதேச கடல் பகுதியில், பிரிட்டிஷ் கடற்படையும், ஜெர்மன் கடற்படையும் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அந்தப் போரில் ஜெர்மனிக்கு தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தும், பிரிட்டிஷ் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துமாறு ஜெர்மன் தளபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மாலுமிகள் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தனர். ஊரில் தமது உறவுகள் பசியால் வாடிக் கொண்டிருக்கையில், தாம் இங்கே போரிடுவது யாருக்காக என்று குமுறினார்கள்.

தளபதிகளின் உத்தரவுக்கு கீழ்ப்பட மறுத்த மாலுமிகள், இயந்திரங்களை நிறுத்தி, கப்பல்களை கரைக்கு கொண்டு வந்தனர். கலகம் செய்த குற்றச்சாட்டில், 47 மாலுமிகள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். கைது செய்யப் பட்ட மாலுமிகளின் விடுதலையை வலியுறுத்தி, சக மாலுமிகள் மட்டுமல்லாது கப்பல் கட்டும் தளத்தில் இருந்த தொழிலாளர்களும் சேர்ந்து போராடினார்கள்.

தெருக்களில் குழுமிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் சோஷலிச அரசியல் ஆர்வலர்கள் அனல் பறக்கப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியான USPD உறுப்பினர்களாக இருந்தனர். சிறையில் இருந்த 47 மாலுமிகளை விடுதலை செய்வதற்காக, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்கரார்கள் கடற்படை முகாமை நோக்கி அணிவகுத்து சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய கடற்படை அதிகாரி, கூட்டத்தை கலைப்பதற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அந்த சம்பவத்தில் எட்டுப் பேர் கொல்லப் பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

புரட்சியில் முதல் களப்பலியான தோழர்களின் மரணத்தைக் கண்டு புரட்சியாளர்கள் பின்வாங்கவில்லை. மாலுமிகள் இன்னும் பல போர்க் கப்பல்களின் கட்டுப்பாட்டை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிறு ஆயுதங்களை கைப்பற்றினார்கள். அந்த ஆயுதங்களை கொண்டு கீல் நகரில் இருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியங்கள் கொள்ளையிடப் பட்டன. ஒரு சில மணிநேரங்களில் கீல் நகரம் முழுவதும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. முன்பு துப்பாக்கிப் பிரயோகம் செய்து தடுத்த கடற்படை முகாம் அதிகாரி, வேறு வழியின்றி சிறை வைத்திருந்த மாலுமிகளை விடுதலை செய்தார்.

அப்போது சமூக ஜனநாயகக் கட்சி தான் ஜெர்மன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், சோஷலிச குறிக்கோள் கொண்ட பாட்டாளி வர்க்கக் கட்சியாக ஆரம்பிக்கப் பட்ட சமூக ஜனநாயகக் கட்சி (SPD), புரட்சி நடந்த நேரத்தில் கொள்கையற்ற முதலாளித்துவ அரசியல் கட்சியாக சீரழிந்து போயிருந்தது. லெனின் அவர்களை "திருத்தல்வாதிகள்" என்று குறிப்பிட்டு பேசினார்.

SPD எப்போதோ தனது கொள்கையை கைவிட்டு விட்டு, சாதாரண அரசியல் கட்சியாகி ஜெர்மன் தேசியத்தை ஆதரித்தது. "தாய்நாட்டை பாதுகாக்கும் போருக்கு" முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. "ஏகாதிபத்திய போரை ஆதரிப்பது சோஷலிசக் கொள்கைக்கு முரணானது" என்று கூறி போரை எதிர்த்த கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப் பட்டனர். "நான் இங்கே ஜெர்மானியர்களை மட்டுமே பார்க்கிறேன், கட்சிகளை அல்ல." என்று சக்கரவர்த்தியால் புகழப் படும் அளவிற்கு, சமூக ஜனநாயக் கட்சி ஆளும் வர்க்கத்திற்கு முண்டு கொடுத்து வந்தது.

ஜெர்மன் அதிகார வர்க்கத்துடன் ஒத்தோடிய சமூக ஜனநாயக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நொஸ்கே, கீல் நகர புரட்சியை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப் பட்டார். நொஸ்கே ஒரு முதலாளித்துவ ஆளும் வர்க்க கைக்கூலி என்ற உண்மையை அறியாத தொழிலாளர்கள், அவரை வரவேற்று தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதே நொஸ்கே தான் புரட்சியை காட்டிக் கொடுத்து, தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடப் போகிறார் என்ற உண்மையை, அன்றைய தினம் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் தொழிலாளர்கள் பக்கம் நிற்பதைப் போன்று நடித்த நொஸ்கே, புரட்சியை நீர்த்துப் போக வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். "பிரிட்டன் படையெடுக்கும் அபாயம்" இருப்பதாக பயமுறுத்தி, மாலுமிகளை மீண்டும் போர்முனைக்கு அனுப்பும் வகையில் உரையாற்றினார். நொஸ்கேயின் துரோகம் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனால், அது கீல் நகரில் மட்டுமே சாத்தியமானது. யாரும் எதிர்பாராதவாறு அடுத்த சில நாட்களில் கடலை அண்டிய பிற நகரங்களுக்கும் புரட்சி பரவி விட்டது.

5 நவம்பர், லுய்பேக் (Lübeck) நகரம் புரட்சிகர மாலுமிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 6 நவம்பர், குக்ஸ்ஹாவன் (Cuxhaven), பிறேமன்(Bremen), அத்துடன் ஜெர்மனியின் மிகப் பெரிய துறைமுக நகரமான ஹம்பேர்க்(Hamburg) ஆகிய நகரங்கள் தொழிலாளர் சோவியத்துகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டன. ஹம்பேர்க் நகரத்தின் பிராந்திய பத்திரிகை "செங்கொடி" என பெயர் மாற்றப் பட்டு வெளியிடப் பட்டது.

அடுத்து வந்த சில நாட்களில் இன்னும் பல வட- மத்திய ஜெர்மன் நகரங்களில் தொழிலாளர்களும், படையினரும் கிளர்ந்தெழுந்து அரசாங்க கட்டிடங்களை கைப்பற்றினார்கள். தொழிற்சாலைகளும் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அங்கெல்லாம் தொழிலாளர் மன்றங்கள் (சோவியத்) ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டின. 8 நவம்பர், மேற்கு ஜெர்மன் நகரமான கெல்ன் (ஆங்கிலத்தில்: Cologne) வரை புரட்சி பரவி விட்டது. அதையடுத்து பிராங்க்பெர்ட், மியூனிச், லைப்சிக், மக்டபூர்க் ஆகிய பிற நகரங்களும் புரட்சியாளர்களின் வசமாகின. 9 நவம்பர், ரயில் வண்டிகளில் செங்கொடி ஏந்திய தொழிலாளர்கள் தலைநகர் பெர்லினை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

9.11.1918, பெர்லின் நகரம். ஜெர்மன் புரட்சிக்கு தலைமை தாங்கிய நாயகனை காண்பதற்காக மக்கள் வெள்ளம் கூடி இருந்தது. நகர மத்தியில் இருந்த பெருந் தெரு ஒன்றில், கனரக வாகனம் ஒன்றின் பின்பகுதி பெட்டி மேடை போன்று மாற்றப் பட்டிருந்தது. அதில் தாவி ஏறிய மனிதர் "புதிய ஜெர்மனி உருவாகி விட்டது" என்று முழங்கினார். அவர் பெயர் கார்ல் லீப்னெக்ட். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களில் ஒருவர். "சோஷலிசம் வாழ்க, சர்வதேச பாட்டாளிவர்க்கம் வாழ்க!" கார்ல் லீப்னெக்ட் முழக்கமிட்டதும், ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.

கார்ல் லீப்னெக்ட், இரண்டரை வருடங்களுக்கு முன்னர் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர். அன்று அவர் உறுப்பினராக இருந்த சமூக ஜனநாயகக் கட்சி தான் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. லீப்னெக்ட் மட்டுமல்ல, ரோசா லக்சம்பேர்க், இன்னும் பல கட்சி உறுப்பினர்களும் போர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் சிறைக் கைதிகளாக இருந்த காலத்தில், "சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி"(USPD) பெயரில் இயங்கினார்கள்.

9 நவம்பர் 1918 ம் ஆண்டு, "ஜெர்மன் சோஷலிசக் குடியரசு" பிரகடனம் செய்யப் பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர் கார்ல் லீப்னெக்ட், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். உண்மையிலேயே அன்று ஜெர்மனியில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்து, அரசு இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. இந்த குழப்பகரமான சூழ்நிலையில் இரண்டு அறிவிப்புகள் வந்தன. ஒன்று, கம்யூனிஸ்டுகளின் "சோஷலிச ஜெர்மன் குடியரசு". மற்றது, சமூக ஜனநாயகவாதிகளின் "சுதந்திர ஜெர்மன் குடியரசு".

சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பிரீட்ரிஷ் எபேர்ட்(Friedrich Ebert), பிலிப் ஷைடேமன்(Philipp Scheidemann) இருவரும் சேர்ந்து இடைக்கால அரசை பொறுப்பேற்பதாக ஜெர்மன் பாராளுமன்றத்தில் அறிவித்தனர். ஜெர்மனியில் "போல்ஷெவிக் தீவிரவாதம்" வருவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று சூளுரைத்தனர். அந்த நேரம், கார்ல் லீப்னெக்ட் போன்ற கம்யூனிஸ்டுகள் சமூக ஜனநாயகக் கட்சிக்குள் "ஸ்பார்ட்டசிஸ்ட் குழு" என்ற பெயரில் இயங்கி வந்தனர். அவர்களுக்கு ரஷ்யாவிலிருந்து லெனினின் போல்ஷெவிக் கட்சியினர் ஆதரவளித்து வந்தனர்.

அடுத்து வந்த இரண்டு மாதங்களும் பெர்லின் நகரில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டன. வன்முறையும், கலவரமும் நாளாந்த நிகழ்வுகளாகின. பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் பட்டன. வீதிகளில் தடையரண்கள் போட்டு, கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் உருவாக்கப் பட்டன. அங்கு ஆயுதமேந்திய புரட்சியாளர்கள் காவல் கடமையில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் உள்நாட்டுப் போர், அதாவது வர்க்கப் போர் நிதர்சனமானது.

புரட்சியாளர்களில் பெரும்பாலானோர் ஸ்பார்ட்டசிஸ்ட் குழுவை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் நடைமுறையில் உள்ள அரசை தூக்கியெறிந்து விட்டு பாட்டாளிவர்க்க அரசை கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டிருந்தனர். ஆனால், அது ரஷ்யாவில் நடந்ததைப் போன்று இருக்காது என்றனர். (அதாவது, இடைக்கால அரசை ஆயுதமுனையில் தூக்கியெறிய விரும்பவில்லை.) அவர்களுடன் முரண்பட்ட மாற்றுக் கருத்தாளர்களும் இருந்தனர். அனேகமாக, போரை முடிவுக்கு கொண்டு வருதல், பஞ்சத்தை போக்குதல் போன்ற உடனடி கோரிக்கைகளின் அடிப்படையில் தான் அவர்கள் ஒன்று சேர்ந்திருந்தனர்.

இதே நேரத்தில், பாராளுமன்றத்திற்குள்ளும் முரண்பாடுகள் வெடித்தன. சமூக ஜனநாயகக் கட்சியினர் "போல்ஷெவிக் தீவிரவாதத்தை" ஏற்றுக் கொள்ள முடியாது என்று விடாப்பிடியாக நின்றனர். டிசம்பர் மாதக் கடைசியில், பாராளுமன்ற அரசியலில் இருந்து வெளியேறிய கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் போன்றோர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) ஸ்தாபித்தனர். அவர்கள் அடி மட்ட மக்கள் திரளில் இருந்து சோஷலிசப் புரட்சி முன்னெடுக்கப் பட வேண்டும் என்று அறிவித்தனர். "சோஷலிசத்திற்கான போராட்டம் மக்களால் நடத்தப் பட வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் முதலாளிக்கு எதிரான பாட்டாளிவர்க்கத்தின் போராட்டமாக நடக்க வேண்டும்." என்ற அறைகூவலுக்கு மக்கள் அணிதிரண்டனர். நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. பெர்லின் நகரில் பல இடங்களில் துப்பாக்கிச் சமர்கள் நடந்தன.

1919 ம் ஆண்டு தொடக்கத்தில், ஜெர்மனியிலும் புரட்சி வெடித்து அது விரைவில் சோஷலிச நாடாகும் வாய்ப்புகள் தென்பட்டன. சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்ற அரசாங்கத்தால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. சமூக ஜனநாயகத் தலைவர்கள் இராணுவ அதிகாரிகளின் உதவியை நாடினார்கள். மேல்தட்டு மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்த தீவிர தேசியவாதிகளான இராணுவ அதிகாரிகள் தமது இருப்புக் குறித்து அச்சமடைந்திருந்தனர். புரட்சி வென்றால் அவர்களது தலைகளும் உருளும் என்று தெரிந்து வைத்திருந்தனர்.

பிரைகொர்ப்ஸ் (Freikorps) எனப்படும் தேசியவெறி கொண்ட கூலிப்படை இராணுவம் பெர்லினுக்கு வரவழைக்கப் பட்டது. அவர்கள் ஆயுதமேந்திய புரட்சியாளர்களுடன் மோதினார்கள். கடுமையான துப்பாக்கிச் சமருக்குப் பின்னர் தொழிற்சாலைகள், அரச கட்டிடங்களில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டனர். செங்கொடிகள் கிழித்தெறியப் பட்டன. இருப்பினும், பல கட்டிடங்களில் மறைந்திருந்த புரட்சியாளர்கள் சினைப்பர் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். இதனால், பெர்லின் நகரம் முழுவதும் யுத்தகளமாக காட்சியளித்தது.

10-13 மார்ச், புரட்சியாளர்களின் கோட்டையாக கருதப்பட்ட கிழக்கு பெர்லின் பகுதியை பிரைகொர்ப்ஸ் படையினர் சுற்றி வளைத்தனர். சில அற்பக் காரணங்களுக்காகக் கூட பொது மக்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஒரு அரசாங்க அலுவலகத்தில் மாதக் கணக்காக கிடைக்காத சம்பளப் பணத்தை கேட்டு தகராறு செய்த முப்பது மாலுமிகள், சுவரில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப் பட்டனர். பெர்லின் நகரில் மட்டும் ஒரு வாரத்திற்குள் குறைந்தது பத்தாயிரம் பேரளவில் படுகொலை செய்யப் பட்டனர். புரட்சியாளர்கள் மட்டுமல்லாது, வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள், ஆதரவு தெரிவித்த மக்களும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப் பட்டனர்.

ஏற்கனவே, 15 ஜனவரி 1919 அன்று, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் பிரைகொர்ப்ஸ் படையினரால் கடத்தப் பட்டு, சில மணிநேரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப் பட்டனர். தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டதும் கம்யூனிஸ்ட் கட்சி சிதறிப் போனது. தொழிலாளர்களின் புரட்சிக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுத்த சக்தி முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. இதனால், பெர்லினில் மட்டுமல்லாது ஜெர்மனி முழுவதும் புரட்சி நசுக்கப் பட்டு விட்டதாக அரசாங்கம் பெருமூச்சு விட்டது. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் ஓயவில்லை. அவர்கள் தோற்கடிக்கப் படவுமில்லை. தலைநகரை தவிர்த்து, ஜெர்மனியின் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் தொடர்ந்தது.

மிக விரைவில், சமூக ஜனநாயக கட்சி அரசாங்கம் தனது முட்டாள்தனமான செயலுக்கு அல்லது துரோகத்திற்கு விலை கொடுக்க வேண்டிய காலம் வந்தது. 1920 ம் ஆண்டு, பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரின் ஆயுதங்களை களையப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரைகொர்ப்ஸ் படையினர் பெர்லின் நகரில் ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்கள். இதனால், ஜெர்மன் அரசாங்கம் தெற்கே உள்ள ஸ்டுட்கார்ட் நகருக்கு இடம்பெயர்ந்தது.

சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் வீழ்ந்ததும், அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி கம்யூனிஸ்டுகள் மீண்டும் தலையெடுத்தனர். அவர்களது அறைகூவலை ஏற்று, பன்னிரண்டு மில்லியன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யுமளவிற்கு, அப்போதும் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக இருந்தது. அதே நேரம், ரோசா லக்சம்பேர்க் போன்ற லெனினுடன் கொள்கை முரண்பாடு கொண்ட தலைவர்களின் மறைவுக்குப் பின்னர், ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி வேறுவழியின்றி ரஷ்ய போல்ஷெவிக் கட்சியின் தலைமைத்துவ வழிகாட்டலின் கீழ் வந்தது. லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.

ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் இன்னமும் தோற்கடிக்கப் படவில்லை என்ற உண்மை வலதுசாரி அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது. நிலைமை இப்படியே நீடித்தால், இன்னும் சில வருடங்களில் ரஷ்ய போல்ஷேவிக்குகளின் உதவியுடன், ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். அன்று கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற வலதுசாரி அரசியல்வாதிகளில் ஒருவர் தான் அடோல்ப் ஹிட்லர். இராணுவத்திற்குள் இருந்த வலதுசாரிகளும், முன்பு புரட்சியை நசுக்கிய பிரைகொர்ப்ஸ் கூலிப்படையினரும் ஹிட்லரை ஆதரித்தார்கள்.

இதற்குப் பிறகு நடந்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கலாம். ஹிட்லர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், மர்மமான முறையில் பாராளுமன்ற கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. அந்த சம்பவத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் என்று பழிபோடப் பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஆதரவாளர்களும் வேட்டையாடப் பட்டனர். ஏராளமானோர் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர் பிற்காலத்தில் தடுப்பு முகாம்களில் நச்சுப் புகை அடித்துக் கொல்லப் பட்டனர்.

நாஸி சர்வாதிகார அடக்குமுறை காரணமாக, பல்லாயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் சோவியத் யூனியன், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா,அமெரிக்கா என்று பல நாடுகளுக்கும் அகதிகளாக சென்று அரசியல் தஞ்சம் கோரினார்கள். குறிப்பாக, சோவியத் யூனியனுக்கு அகதிகளாக சென்றவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் திரும்பி வந்தனர். பலர் ஏற்கனவே சோவியத் செம்படையில் சேர்ந்து நாஸிப் படையினருக்கு எதிராக போரிட்டிருந்தனர். அந்த ஜெர்மன் அகதிகள் தான் சோஷலிச கிழக்கு ஜெர்மனிக்கு (DDR) அடித்தளம் இட்டனர்.