Tuesday, September 30, 2008

வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்""முதலாளித்துவ வர்க்கம் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே அனைத்துக்கும் மேலாய் உற்பத்தி செய்கின்றது." - கார்ல் மார்க்ஸ், 160 வருடங்களுக்கு முன்னர். இந்த மேற்கோளை தற்போது நினைவுபடுத்தி பார்ப்பவர்கள் வேறுயாருமல்ல; முதலாளித்துவ பத்திரிகைகள், பங்குச்சந்தை தரகர்கள், சந்தைப் பொருளாதார நிபுணர்கள் ஆகியோர்.

சோஷலிச நாடுகள் மறைந்து, கம்யூனிசம் காலாவதியாகிப்போன சித்தாந்தம் என்று கொண்டாடப்பட்ட சோவியத் யூனியனின் வீழ்ச்சி காணும் முன்பே, மேற்கத்திய பொருளாதாரங்கள் நெருக்கடிக்குள் சிக்கியிருந்தன. அப்போது அதுபற்றி கதைக்காமல், புதிய சந்தைகளை சேர்த்துக் கொள்வதால், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொன்னூறுகளில் தகவல் தொழில்நுட்பப்(IT) புரட்சி ஏற்பட்டது. அது தான் இனி எதிர்காலம் என்று பலர் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யவே, பொருளாதாரம் தாறுமாறாக வீங்கியது. பின்னர் தொண்ணூறுகளின் இறுதியில் பலமான சரிவுகளை கண்ட இதே தகவல் தொழில்நுட்பம், முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்தது.

அதற்குப்பிறகு வீட்டுமனை துறை வளர்ச்சி பெற்றது. அதிக சம்பளம் எடுக்காத, கீழ் மத்தியதர வர்க்கத்தினர் கூட, வங்கிகள் கடன் கொடுக்கின்றன என்பதால் வீடு "வாங்கிப்"போட்டனர். வீட்டுக்கடனை குறிக்கும் "Mortgage" என்ற ஆங்கிலச்சொல், மரணம் என்ற பொருள்படும் "Mort" என்ற பிரேஞ்சுசொல்லில் இருந்து வந்தது. கடன்வாங்குபவர் சாகும்வரை கடனை அடைக்க வேண்டிவரும் என்ற அர்த்தத்தில் அந்தச்சொல் புழக்கத்திற்கு வந்திருக்குமோ தெரியாது. அமெரிக்காவிலோ இந்த Mortgage விவகாரம் கடன் கொடுத்த முதலீட்டு வங்கிகளுக்கே மரண அடியாக விழ, செய்வதறியாமல் திகைக்கின்றன இதுவரை திவாலாகாத வங்கிகள்.

அமெரிக்கா 1930 ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், தற்போது தான் பெரும் நெருக்கடியை சந்திப்பதாக கூறப்படுகின்றது. அடுத்தடுத்து திவாலாகும் வங்கிகள், முழு பொருளாதாரத்தையே அதலபாதாளத்திற்கு கொண்டு போகாமல் தடுக்க, அரசாங்கம் தலையிட்டு காப்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோள்கள் பல பக்கங்களிலுமிருந்து வருகின்றன. ஏற்கனவே இரண்டு வங்கிகளை தேசியமயமாக்கிய அமெரிக்க அரசாங்கம், பிற முதலீட்டு வங்கிகளை பிணை எடுக்க 700 பில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்க நிதியமைச்சர் போல்சன் தலைமையில் நிறுவப்படும் குழு, அறவிடப்படமுடியாத பங்குகளை வாங்கி, பெரிய வங்கிகளை தொடர்ந்து இயங்க வைக்கும் என்றும், மீண்டும் ஒரு காலத்தில் பொருளாதாரம் வளரும் வேளை, இந்த பங்குகளை தனியாருக்கு விற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நல்லது. பிரான்ஸில் இதனை சிறப்பாக செய்துகாட்டினார்கள். அங்கே அதிக காலம் ஆட்சியில் இருந்த சோசலிஷ கட்சியின் அரசாங்கம், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது முக்கிய நிறுவனங்களை தேசியமயமாக்கும். பின்னர் பொருளாதாரம் நல்லபடியாக வந்த பின்னர் அவற்றை விற்றுவிடும். ஆனால் அமெரிக்காவின் கதை வேறு. அங்கே அவர்களது பொருளாதார அகராதியின் படி, அரசாங்கம் என்பது ஒரு "கெட்டவார்த்தை". அரசாங்கம் பொருளாதாரத்தை நடத்தக் கூடாது, அதனை சந்தையின் போக்கில் விட்டுவிட வேண்டும் என்று கூறுபவர்களின் நாடு.

இயற்கையான பொருளாதாரமான, முதலாளித்துவத்தின் சித்தாந்தமான, தாராளவாதத்தின் (லிபரலிசம்) குருவான ஸ்கொட்லந்துகாரர் அடம் ஸ்மித் கூட அரசின் பங்கு பற்றி குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அமெரிக்கர்களின் புதிய லிபரலிச(Neo-Liberalism) கோட்பாடு, அரசாங்கம் என்பது தேவையற்ற ஒன்று, என்று கற்றுக்கொடுக்கின்றது. அதாவது இராணுவம், போலிஸ் மற்றும்பிற அரச அலுவலகங்களை மட்டுமே அரசாங்கம் நடத்த வேண்டும். பொருளாதாரத்தை சந்தை தீர்மானிக்கும்.

அப்படி சுதந்திரமாக விடப்பட்ட பங்குச்சந்தையில், ஊகவணிகம் செய்த சூதாடிகள் இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளதை, எல்லோரும் அவமானத்துடன் ஏற்றுக்கொள்கின்றனர். ஐரோப்பாவில் அரசாங்கம் தலையிட்டு ஊகவணிகம் செய்யும் பங்குச்சந்தை சூதாடிகளை தடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் சற்றே பிந்தி வந்த ஞானம் இது. மக்களின் ஓய்வூதிய காப்புறுதியிலும், சூதாடிகள் புகுந்து விளையாடி விட்டதால், வயதானவர்களின் ஓய்வூதியப்பணம் குறையப்போகின்றது.

அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்ப அரசாங்கம் உதவவேண்டும் என்று கூறுவது ஒரு முரண்நகையான விடயம். அவர்களது பொருளாதாரக் கொள்கையின் படி, நன்றாக நிர்வாகிக்கப் படாத நிறுவனங்கள்(வங்கிகள் என்றாலும்) திவாலாகி, அழிந்து போவதில் தவறில்லை. சிறப்பாக நிர்வகிக்கப்பட்டவை மட்டும் நிலைத்து நிற்கும். ஆனால் தற்போது லிபரலிசத்திலும், சந்தைப் பொருளாதாரத்திலும் அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. அதனால் தற்போது அரசாங்க தலையீடு குறித்து யாரும் முணுமுணுக்கவில்லை.

அமெரிக்க அரசாங்கம் வழங்கப்போகும் பில்லியன் டாலர் நிதி, பெரிய வங்கிகளை மட்டும், அதுவும் தமக்கு பிடித்த நிறுவனங்களை மட்டும் காப்பற்றப் போகின்றது. இன்றைய நிதியமைச்சர் கூட முன்னர் ஒரு காலத்தில் Goldman Sachs Group நிறுவன நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்தவர். அவர் கண்காட்டும் நிறுவனங்களுக்கு வழங்கப்படப் போகும் அரசநிதியானது, அமெரிக்காவில் எதிர்காலத்தில் அரச செல்வாக்குடன் பெருமளவு பணம் சேர்க்கப்போகும் வர்க்கமொன்றை உருவாக்கப்போகின்றது. இதனை கருத்தில் கொண்ட சில முதலாளிகள் போல்சன் அமெரிக்காவின் சக்திவாய்ந்த சர்வாதிகாரியாக மாறப்போவதாக கூறிவருகின்றனர். அதில் உண்மையில்லாமலும் இல்லை.

தற்போதுள்ள பொருளாதாரக் கட்டமைப்பை நவம்பர் மாத அமெரிக்க அதிபர் தேர்தல் வரை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன. அதற்குப்பின்னர், குறிப்பாக குடியரசுக்கட்சி வேட்பாளர் மக் கெய்ன் தெரிவானால், மீண்டும் பொருளாதார சரிவு ஏற்படும் வாய்ப்புண்டு. எப்படிப் பார்த்தாலும் பாதிக்கப்படப் போவது அமெரிக்க பொதுமக்கள் தான். நாட்டில் ஏழைகள் தொகை பெருகலாம். ஒரு வேளை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் ஏற்படலாம். இவற்றை சமாளிக்க இப்போதே நாடு முழுவதும் இராணுவம் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஈராக்கில் இருந்து நாடு திரும்பியுள்ள, ஒரு தொகுதி படையினரை உள்நாட்டு பாதுகாப்புக்காக(பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை?) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ செய்திகளை தாங்கிவரும் "Army Times" பத்திரிகை தெரிவிக்கின்றது.Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

Monday, September 29, 2008

"சியாட்டில் சமர்"- அமெரிக்காவின் அந்த ஐந்து நாட்கள்

1999 ம் ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவின் சியாட்டில் நகரம் போர்கோலம் பூண்டது. ஆமாம்,Microsoft தலைமையகம் அமைந்துள்ள அதே சியாட்டில் தான். அங்கே உலக பொருளாதாரத்தை தனது கைக்குள் வைத்திருக்கும், "உலக வர்த்தக கழகத்தின்"(WTO) மேல்மட்ட மகாநாடு ஆரம்பமாகவிருக்கிறது. உலகமயமாதலுக்கு எதிரான இளைஞர்கள், பல்வேறு இடதுசாரி சிந்தனைகளால் கவரப்பட்டவர்கள், சியாட்டில் நகரை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, WTO கூட்டத்தை குழப்ப தீர்மானிக்கின்றனர். தமது எதிர்ப்பை ஜனநாயக முறையில், அஹிம்சாவழியில், ஆனால் தந்திரோபாய வியூகங்கள் மூலம் காட்ட விளைகின்றனர்.

அமைதியான முறையில் நடந்த பேரணி, போலிஸ் தலையிட்டு கலைக்க முயன்றதால், வன்முறை தலைதூக்குகின்றது. நகரில் பெருமுதலாளிகளின் வர்த்தக நிலையங்கள் உடைத்து சேதமாக்கப்படுகின்றன, பொருட்கள் சூறையாடப்படுகின்றன. அதிகாரமட்டத்தில் உள்ளவர்களை, புரட்சி என்ற கெட்டகனவு வந்து பயமுறுத்துகின்றது. நவம்பர் மாத பனிக்குளிருக்குள், அந்த ஐந்து நாட்களும் இளைஞர்கள், போலீசுடன் மூர்க்கமாக மோதுகின்றனர். முதலாளித்துவத்தை எதிர்க்கும் இளம்சமுதாயம், வர்க்கப் போராட்டத்திற்கு தயாராக உள்ள பாட்டாளிகள், அமெரிக்காவுக்குள்ளேயே தருணம் பார்த்து காத்திருக்கின்றனர், என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய அந்த ஐந்து நாட்கள்.
BATTLE IN SEATTLE MOVIE

இந்த பின்னணியில் சந்தித்துக் கொள்ளும் நான்கு பேரை மையமாக வைத்து, "Battle in Seattle" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் தத்தமது சொந்த பிரச்சினைகளின் பேரில் அந்த போராட்டத்தில் பிரசன்னமாகியிருந்தவர்கள். அரசியலைப்பற்றி அதிகம் அறியாதவர்கள். ஆனால் உலகை மாற்ற வேண்டுமென்ற அவா கொண்டவர்கள். சியாட்டில் சமர் அவர்களது வாழ்க்கையை மட்டுமல்ல, அமெரிக்காவின் அரசியலையும் எவ்வாறு மாற்றியது என்பதை விளக்கும் இந்த திரைப்படம், தற்போது தான் வெளியாகியுள்ளது. சமுதாயத்தில் அக்கறையுள்ள அனைவரும் பார்க்க வேண்டிய அரிய திரைப்படம் இது.

Anti WTO demonstration Seattle '99

________________________________________________

Saturday, September 27, 2008

ஓர் உலக வல்லரசு உருவாகின்றது

"அமெரிக்காவை அழிக்க கூடிய ஒரேயொரு உலகசக்தி ரஷ்யா மட்டுமே!" - அமெரிக்க இராணுவத் தலைமையகமான "பெண்டகன்", 1992 ல் உள்ளக சுற்றுக்கு விடப்பட்ட கொள்கை வகுப்பு அறிக்கையிலிருந்து.

ஜோர்ஜியாவில் ரஷ்ய படை நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியாக இருந்த போதிலும்,
கடந்த பதினைந்து ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும், அமெரிக்கா அல்லது மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் நிலவிய இராஜதந்திர உறவுகளை/விரிசல்களை அவதானித்து வருபவர்களுக்கு இன்று நடப்பன எதுவும் புதுமையாக தெரியாது. சோவியத் யூனியன் உடைவுக்கு அடிகோலிய ரஷ்ய மாபியா பணக்காரர்களும், உயர் மத்தியதர வர்க்கமும், ரஷ்ய பொருளாதாரத்தை முதலலாளித்துவ பாதையில் கொண்டு செல்லும் போது,தாம் அமெரிக்க முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். இது உலகெங்கும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு தான், அவர்களது இயற்கையான வர்க்க குணாம்சம். அதற்கு ரஷ்யர்களும் விதிவிலக்கல்ல.

ஆரம்பத்தில் புதிய சந்தைகளை தேடும் அமெரிக்க முதலீட்டாளர்களையும், அதிக செலவை வைக்கும் ஆலோசகர்களையும், ரஷ்யர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். மேலைத்தேய கல்வி, முகாமைத்துவம், வர்த்தக நடைமுறை போன்றவற்றை தாமும் பின்பற்ற விரும்பினர். தாம் முன்பு கம்யூனிச நாடாக இருந்த படியால் தான் மேற்குலகம் தம்மை எதிரியாக பார்த்ததாகவும், தற்போது தாமும் அவர்களின் முதலாளித்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை வரித்துக்கொண்ட, உற்ற நண்பர்களானதாகவும் கருதிக்கொண்டனர். அந்தோ பரிதாபம்! அவர்களது நாட்டினரான லெனின் எப்போதோ எழுதிவைத்து விட்டுப்போன "ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்" என்ற நூலை ஒரு தடவை புரட்டிப் படித்திருந்தால், பல மாயைகள் அன்றே அகன்றிருக்கும்.

19 ம் நூற்றாண்டில், அன்றைய உலக வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சிற்கு இடையேயான வல்லரசுப்போட்டியில் சார் கால ரஷ்யாவும் பங்குபற்றியது. 20 ம் நூற்றாண்டில் அவை மூன்றையும் ஓரங்கட்டி விட்டு அமெரிக்கா சர்வ வல்லமை பொருந்திய ஏகாதிபத்தியமாக உருவானதுமான பின்னணியில் லெனின் அந்த நூலை எழுதியிருக்கலாம். அப்போது கூட இந்த வல்லரசுகள் நேரடியாக போரிடாமல், பதிலி போர்களின் மூலம் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டன. இதன் மூலம் ஒரு வல்லரசின் காலனிகளை, போட்டி வல்லரசு கைப்பற்றி, தமக்கிடையே நேரடி மோதலை தவிர்த்துக் கொண்டன. ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு இந்தியா வரை வரவிடாமல் தடுக்க, இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து நடுநிலைப்படுத்தியது.

இதையெல்லாம் இங்கே நினைவுபடுத்துவதன் நோக்கம், இன்று பலர் "பனிப்போர்" என்ற மேற்கத்திய கண்டுபிடிப்பான சொற்பதத்தை, சித்தாந்த வேறுபாட்டை வைத்து கணிப்பிடுவது தான். "யால்ட்டா ஒப்பந்த காலகட்டம்" இன்று இல்லை, என்று கூறிய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, தெளிவாக சொல்ல விரும்பியது, வல்லரசுகள் பிற நாடுகளை தமக்குள் பங்குபோட்ட காலம் மறைந்து விட்டது என்பது. 2 ம் உலகப்போர் முடிவில் உண்டான நேச நாடுகளின் ஒப்பந்தப்படி, கிழக்கு ஐரோப்பா சோவியத் ஆதிக்கத்தின் கீழும், மேற்கு ஐரோப்பா அமெரிக்க-பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழும் வந்தன. சார்கொசியின் வியாக்கியானம், பனிப்போர் பீதியில் உறைந்து போயுள்ள சிலருக்கு, அதாவது மீண்டும் சோவியத் யூனியன் என்ற பூதம் சீசாவை விட்டு வந்துவிடுமோ என்று அஞ்சுவோருக்கு, சற்று தெம்பை கொடுத்திருக்கும்.

இன்று அமெரிக்க-ரஷ்ய வல்லரசு போட்டியை குறிக்க, மீண்டும் பனிப்போர் என்ற சொற்பதம் பரவலாக பாவிக்கப்பட்டாலும், இந்த "21 ம் நூற்றாண்டுப் பனிப்போர்" முதலாளித்துவம் வேண்டுமா? அல்லது கம்யூனிசம் வேண்டுமா? என்று ஏதோவொரு அரசியல் கொள்கை அடிப்படையில் வரவில்லை. தமது அரசியல்-பொருளாதார நலன்களை மிக அப்பட்டமாக காட்டிக்கொள்ளும் வல்லரசு போட்டி இது. அதனால் தான் அண்மையில் ரஷ்யா, கியூபாவை அணுகி இராணுவ-பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது பற்றி கேட்ட போது, கியூபா தயங்கியது. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா மட்டுமே ( எந்த நேரம் அமெரிக்க இராணுவ தலையீடு வருமோ என்ற அச்சத்தில்), ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்த இராணுவ/கடற்படை ஒத்திகைகளை நடாத்தியுள்ளது.

அணுவாயுதம் பொருத்திய "மஹா பீட்டர்" யுத்த கப்பலும், அதனோடு இரண்டு விநியோக கப்பல்களும், வட ரஷ்ய துறைமுகமொன்றில் இருந்து வெனிசுவேலா நோக்கி செல்லும் வழியில், சிரியாவின் மத்தியதரைக்கடல் துறைமுகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளது. இதற்கிடையே சிரியாவுக்கு செய்மதி படங்களை கொடுப்பதாக, இஸ்ரேல் குற்றச்சாட்டு வேறு உள்ளது. கடந்த மாதம் ஜோர்ஜியாவுக்கு அமெரிக்கா யுத்தகப்பல்களை அனுப்பியதன் பதிலடியாகவே, ரஷ்யா-வெனிசுவேலா கடற்படை ஒத்திகை அமெரிக்காவின் மூக்கு நுனியின் கீழ் இடம்பெறுகின்றது.

வெனிசுவேலா அதிபர் சாவேஸ், மொஸ்கோ விஜயத்தின் போது போடப்பட்ட ஒப்பந்தப்படி, ரஷ்யா அணு உலை அமைக்கும் தொழில்நுட்பத்தை வெனிசுவேலாவிற்கும் விற்க உள்ளது. ரஷ்யாவின் பெற்றோலிய ஏகபோக நிறுவனமான Gasprom, வெனிசுவேலாவின் தேசிய பெற்றோலிய நிறுவனமான PDVSA ஆகியன பொது வேலைத்திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர். அதேநேரம் வெனிசுவேலா ஆயுதங்கள் வாங்கவென ரஷ்யா பில்லியன் டாலர் கடனுதவி வழங்குகின்றது. இது மீண்டும் முன்புபோல ஆயுத உற்பத்திப்பெருக்கத்திற்கு வழிவகுக்கலாம். ரஷ்யா தனது பாதுகாப்பு செலவினத்தை 26 சத வீதமாக அதிகரிக்கவுள்ளது.

ஜோர்ஜிய பிரச்சினையின் போது, மேற்கத்திய ஊடகங்கள் "ரஷ்ய ஆக்கிரமிப்பு" என்று கூறி ரஷ்யாவை வில்லனாக சித்தரித்த விதம், ரஷ்ய ஆட்சியாளர்களை வெறுப்படைய வைத்துள்ளது. அந்த பிரச்சினையில் ஜோர்ஜியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக ஒரு பக்க சார்பான செய்தி வெளியிட்டமையால், இனிமேல் மேற்குலகம் "ஊடக சுதந்திரம்" பற்றி எமக்கு பாடம் சொல்லித்தர வேண்டாம், என்று ரஷ்ய ஊடகவியாலாளர்கள் கூறிவிட்டனர். அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும், ஜோர்ஜியா தான் பிரச்சினையை தொடக்கியது(தெற்கு ஒசேத்தியா மீது ஜோர்ஜியபடைகளின் தாக்குதல்) என்ற உண்மையை இன்றுவரை பகிரங்கமாக சொல்ல மறுப்பதேன்? என்ற கேள்வி இராஜதந்திர மட்டத்தில் ரஷ்யாவால் கேட்கபடுகின்றது.

போலந்து, செக் குடியரசில் அமெரிக்கா நிறுவப்போகும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நிலையத்தை கண்காணிக்க ரஷ்ய பரிசோதகர்களை அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. (சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட போது, அங்கிருந்த ஏவுகணை நிலையங்களில் அமெரிக்க பரிசோதகர்கள் நிறுத்தப்பட்டனர்.) செக்-போலந்து ஏவுகணைகள் ஈரானை குறிபார்க்கின்றன என்றும், ரஷ்யா இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் அமெரிக்கா கூறிவருகின்றது. செக் குடியரசில் மக்கள் ஆதரவுடன் இடதுசாரி கட்சிகள் நடத்தும், அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ரஷ்யா நிதியுதவி வழங்குவதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவில் கலாச்சார தளத்திலும், மேற்கத்திய(அல்லது அமெரிக்க) செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் கலாச்சார சீரழிவை உருவாக்கும் "சிம்ப்சன்ஸ்" போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இனி ஒளிபரப்பப்பட மாட்டாது. அதற்கு மாறாக நாட்டுப்பற்றை வலியுறுத்தும் தொடர்கள் காண்பிக்கப்பட உள்ளன. ஜோர்ஜியா பிரச்சினையில் மேற்குலக நாடுகள் நடந்து கொண்ட விதம், பொதுமக்கள் மத்தியிலும் மேற்கத்திய வெறுப்பையும், தேசாபிமானத்தையும் உருவாக்கியுள்ளது. இதனால் இந்த மாற்றங்களுக்கு வெகுஜன ஒப்புதல் கிடைக்கலாம்.

அமெரிக்காவா? ரஷ்யாவா? என்ற போட்டியில் இடையில் அகப்பட்டது, (அன்றைய பனிப்போர் காலகட்டம் போல), ஐரோப்பிய நாடுகள் தான். பொது நாணயம் கண்ட ஐரோப்பிய யூனியன், தனக்கென பொது இராணுவம் இல்லாத குறைக்காக, கழிவிரக்கம் கொள்கின்றது. அனைத்து உறுப்பினர் நாட்டு இராணுவங்களை கூட்டினால் வரும் "இரண்டு மில்லியன் பேரைக்கொண்ட ஐரோப்பிய இராணுவம்", ரஷ்ய இராணுவத்தை விட பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இரண்டாம் உலகயுத்ததிற்கு பின்னர், ஐரோப்பிய நாடுகளில் இராணுவம் முக்கியமற்ற ஒன்றாக கருதப்பட்டது.(போர் அழிவு தந்த பாடம்) ஐரோப்பிய யூனியன் பலமடைந்த வேளை, ஐரோப்பா எதிர்காலத்தில் ஒரு இராணுவ வல்லரசாக மாறுவதை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா நேட்டோ அமைப்பை தனது ஆதிக்கத்தின் கீழ் தக்க வைத்துக் கொண்டது. அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம். அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வருவதால், அமெரிக்கா என்ற சாம்ராஜ்யத்தின் கதை முடிவுக்கு வருகின்றதென, ஜேர்மனிய அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
__________________________________________________
முன்னைய பதிவுகள்:
*ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்
*இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்
*விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
*CNN ஒளிபரப்பிய(ஒளி மறைத்த) மொழி திரிப்பு வீடியோ
__________________________________________________

Wednesday, September 24, 2008

இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்

பாகிஸ்தான் தலைநகரில் நடந்த, மரியட் ஹோட்டல் குண்டுவெடிப்பிற்கு இதுவரை அறியப்படாத இயக்கமொன்று உரிமை கோரியுள்ளது. அதேநேரம் அமெரிக்க மரைன் படையை சேர்ந்தவர்கள், தாக்குதலுக்கு முதல்நாள் இரவு அந்த ஐந்து நட்சத்திர தங்குவிடுதியின் 3 ம், 4 ம் மாடிகளில் இரகசிய பெட்டிகளை கொண்டுபோய் வைத்ததாக சில சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள், அவர்களின் பலம், தாக்குதல் இலக்கு குறித்து பல்வேறு ஊகங்கள் உலாவுகின்றன.

வெளிநாட்டு இராஜதந்திரிகள், பாகிஸ்தானிய அரசியல்தலைவர்கள், மற்றும் தொழிலதிபர்கள் போன்றோரின் மனங்கவர்ந்த மரியட் ஐந்து நட்சத்திர தங்குவிடுதி எப்போதாவது தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் காரணமாக, அங்கே ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு இருந்தன. எனினும் வெடிமருந்து நிரப்பபட்ட டிரக் வண்டி பாதுகாப்பு வேலிகளை தாண்டி, ஹொட்டேலை அண்மித்து வெடிக்க வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஹோட்டெலில் வேலை செய்த, அல்லது பாதுகாப்பு படையை சேர்ந்த சிலரது உதவி, குறைந்த பட்சம் அமெரிக்க அதிகாரிகளின் நடமாட்டம் பற்றிய தகவல் கிடைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. உரிமை கோரும் உரையில் 250 அமெரிக்க பாதுகாப்பு படையை சேர்ந்தோர் அன்று அந்த ஹோட்டெலில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிய அரசு 50 அமெரிக்கர்கள் தங்கியிருந்ததாக ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் (கல்வியறிவற்ற பழங்குடியின தலைவர்களை கொண்ட) தாலிபானை விட, (பல்கலைக் கழக பட்டதாரிகள் தலைமைதாங்கும்) அல் கைதா இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்க வேண்டும், என்று பாகிஸ்தான் அரச மட்டத்தில் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரித்த பாகிஸ்தான் பத்திரிகையொன்றிற்கு, ஆளும் PPP கட்சி பிரமுகர் ஒருவர் சொன்ன தகவல், தாக்குதலின் நோக்கம் பற்றிய மர்மங்களை வேறு உருவாக்கியுள்ளது. சம்பவதினத்திற்கு முதல்நாளிரவு தான் அந்த ஹோட்டலுக்கு சென்ற போது, அங்கே அமெரிக்க தூதுவராலய வாகனமொன்று நிறுத்தப்பட்டிருந்தாகவும், சீருடையணிந்த அமெரிக்க மரைன் படையை சேர்ந்த சிலர் அந்த வாகனத்தில் இருந்து, கருநிற உலோகப்பெட்டிகள் பலவற்றை இறக்கி, ஹோட்டேலின் நான்காம் அல்லது ஐந்தாம் மாடிக்கு எடுத்துச்சென்றதாகவும் கூறினார். அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருந்தனர்? அந்த பெட்டிகளில் என்ன இருந்தன? என்ற விபரங்கள் தனக்கு தெரியாதென்றும், ஹொட்டேல் ஊழியர்களை கூட அவர்கள் கிட்ட நெருங்க விடவில்லை என்றும், அதேநேரம் யாரும் வெளியே போக முடியாதபடியும், வெளியில் இருந்து யாரும் உள்ளே வராதபடியும் வாயில்கதவுகள் மூடப்பட்டிருந்தன என்றும் கூறியுள்ளார். இந்த தகவலை பிற சாட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மரியட் ஹோட்டெலில் குண்டு வெடித்த பின்னர் 4 ம், 5 ம் மாடிகள் தீப்பற்றி எரிந்ததை காணக்கூடியதாக இருந்தது. எரிவாயு குழாய்கள் வெடித்ததாக அதற்கு காரணம் கூறப்பட்டது. அதேநேரம் குண்டு வெடித்த அதே தினம், ஹோட்டல் அருகில் இருந்த பிரதமரின் வாசஸ்தலத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் விருந்துபசார வைபவம் நடைபெற்றதாகவும், குண்டுதாரியின் இலக்கு அதுவாக இருக்கலாமென்றும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மரியட் ஹோட்டேலை நோக்கி போய் வெடிக்க வைத்திருக்கலாம் என்றும் சிலர் சந்தேகப்படுகின்றனர். ஆனால் அந்த விருந்துபசார வைபவம் வழக்கம் போல ஐந்து நட்சத்திர மரியட் ஹொட்டேலில்
நடக்க இருந்ததாகவும், பத்து தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் இல்லத்திற்கு மாற்றப்பட்டதாகவும், விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கூறினர். பாகிஸ்தான் தலைவர்கள் தம்மை நன்றாக பாதுகாத்துக் கொண்டு, அப்பாவி மக்களை(குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் ஹோட்டல் ஊழியர்கள் அதிகம்) பலி கொடுப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு நடந்து ஓரிரு தினங்களுக்கு பின்னர், "அல் அராபியா" தொலைக்காட்சிக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்று, "ஃபெதாயீன் இஸ்லாம்" (இஸ்லாமிய போராளிகள்) என்ற புதிய அமைப்பொன்றின் பேரில் தாக்குதலுக்கு உரிமை கோரியது. பாகிஸ்தான்-அமெரிக்க அரசுகளுக்கிடையிலான உறவை முறித்துக்கொள்ளும் வரை தாம் இதுபோன்ற தாக்குதல்களை தொடர இருப்பதாக அந்த அனாமதேய குரல் தெரிவித்தது. விசாரணைகளை திசைதிருப்பும் நோக்குடன் இவ்வாறான போலி அமைப்பின் பேரில் உரிமை கோரப்பட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஒரு தீவிரவாதக் குழுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது கௌரவக்குறைவு என்று நடக்கும் எல்லா அரசாங்கங்களையும் போல, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதே தனது முதல் கடமை என்று கூறியுள்ளார். இருப்பினும் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா.மகாநாட்டில் சந்தித்த அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம், பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க இராணுவம் ஊடுருவும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னரும் பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க கூட்டுப்படை தலைமை அதிகாரி கூட இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக கூறினார். ஆனால் அவர் அப்படி சொல்லி சில மணித்தியாலங்களில், அமெரிக்க ஆளில்லா வேவுவிமானம் பாகிஸ்தானுக்குள் வந்து குண்டு போட்டது. இன்று கடைசியாக கிடைத்த தகவல் ஒன்று, அப்படி வந்த வேவு விமானமொன்றை, பாகிஸ்தான் பழங்குடியின ஆயுததாரிகள் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கின்றது. ஆனால் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் எல்லையோரமுள்ள பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் மாகாணத்தில் வாழும் பஷ்டூன் பழங்குடியின உறுப்பினர்களை கொண்ட, பைதுல்லா மசூத் தலைமை தாங்கும், தாலிபான் அமைப்பு தான் இந்த தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகின்றது. பாகிஸ்தான் அரசு மட்டுமல்ல, ஆங்கிலேய காலனிய அரசால் கூட பூரணமாக அடிபணிய வைக்க முடியாத வாசிரிஸ்தான் பழங்குடியினத்தவர்கள் மத்தியில் பத்துக்கும் குறையாத தாலிபான் குழுக்கள் இயங்கி வருகின்றன. அவற்றை "ஷூரா" என்ற நாற்பது பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனை சபை தலைமை தாங்குகிறது. அதன் தலைவராக பைதுல்லா மசூத் தெரிவான பின்னர் தான் தாலிபான் போராட்டம் சூடுபிடித்தது.
ஆப்கான் தாலிபான் தலைவர் முல்லா ஒமாரின் நம்பிக்கைக்குரிய தோழனான மசூத்தின் போராளிகள், பாகிஸ்தான் அரசபடைகளுடனான போரின் போது, 2oo இராணுவ வீரர்களை உயிருடன் பிடித்து, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தனர். போரில் வெல்லமுடியாமல், தாலிபானுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் போட நிர்ப்பந்திக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு, மசூத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக நினைத்துக் கொண்டது. ஒப்பந்தம் செய்வதற்கு பெருமளவு பணம் கொடுக்கப்பட்டதாக வந்த வதந்தியும் அந்தக்கருத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் பைதுல்லா மசூத்தும், தாலிபான் இயக்கமும் யுத்தநிறுத்த காலத்திற்குள் தம்மை பலப்படுத்திக் கொண்டு, மீண்டும் மூர்க்கமாக தாக்க ஆரம்பித்திருப்பதை, தற்போது நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
___________________________________________________
முன்னைய பதிவு:
பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்
___________________________________________________

Monday, September 22, 2008

ஜெர்மனி: மசூதிக்கு வந்த சோதனை

ஜெர்மனி, கெல்ன் நகரில் பிரமாண்டமான மசூதி நிர்மாணிக்கப்படுவதை எதிர்த்து "இஸ்லாமிய எதிர்ப்பு மகாநாடு" கூட்டப்பட்டது. ஜேர்மனிய வலதுசாரிகளும், இடதுசாரிகளும் எதிரெதிர் ஆர்ப்பாட்டம் நடத்தி தெருச்சண்டையில் இறங்கியதால், அந்த மகாநாடு பின்னர் நகரசபை உத்தரவின் பேரில் தடைசெய்யப்பட்டது.

இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் மீண்டும் ஐரோப்பாவில் சூடுபிடித்து வருகின்றது. ஒரு காலத்தில் அகதிகள் எதிர்ப்பு, பின்னர் குடியேறிகள் எதிர்ப்பு என்று இனவாத கொள்கைகளை வெகுஜன அரசியாலாக்கும் தீவிரவலதுசாரி சக்திகள் தற்போது, குறிப்பாக 11 செப்டம்பர் 2001 க்கு பின்னர், இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதன் மூலம் தாமே வெள்ளை-ஐரோப்பிய பாதுகாவலர்கள் என்று காட்ட முனைகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஜெர்மனி கெல்ன்(ஆங்கிலத்தில் Cologne) நகரில் பிரமாண்டமான மசூதி ஒன்றை, அந்த நகர் சனத்தொகையின் 12 வீதமான துருக்கிய முஸ்லிம்கள் கட்டுவதற்கான ஆயத்த வேலைகள் யாவும் பூர்த்தியான நிலையில், தற்போது அந்த மசூதியை சுற்றி சர்ச்சை தொடங்கியுள்ளது. கெல்ன் நகர அனுதாபிகள் என்ற பெயரில் சிலர் மசூதி வேண்டாம் என்று கோரும் கையெழுத்து வேட்டை நடத்தியதாக தெரிகின்றது. அதே நேரம் சில வெகுஜன ஊடகங்கள் சார்பாக பொதுமக்கள் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதாகவும், அதன்படி 30 வீதமானோர் மசூதி கட்டுவதை எதிர்ப்பதாகவும் தெரியவருகின்றது. அவர்களது பிரச்சினை எல்லாம் மசூதியின் பிரமாண்டம், அதன் கோபுரங்களின்(மினரெட்) உயரம் என்பவை தாம். அதை வைத்தே "இஸ்லாமிய எதிர்ப்பு மகாநாடு" கூட்டப்பட்டது. அதற்கு பிற ஐரோப்பிய நாடுகளின் தீவிர வலதுசாரிக்கட்சி பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர். சாதாரண ஜெர்மனியர்களும் ஆதரிப்பாளர்கள் என்பதால், இந்த பிரச்சினையை வைத்தே பிராந்திய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இத்தாலியில் நவபாசிச "லீகா நோர்த்" கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால், அங்கே புதிய மசூதிகள் கட்டுவதற்கு தடை போடப்படுகின்றது. சில நகரங்களில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த மசூதிகள் சில இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. இஸ்லாமியர் அதிகமாக வாழும் மிலான் நகர மசூதி மூடப்பட்டு, முஸ்லிம்கள் நகர விளையாட்டு மைதானத்தில் தொழுகை நடத்தும் காட்சி, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் செய்தியாகியது.

அனேகமாக தாராளவாத கொள்கையை தாராளமாக கடைப்பிடிக்கும் சில பணக்கார ஐரோப்பிய நாடுகள்(உதாரணத்திற்கு இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள்) தான் மதச்சுதந்திரம் என்ற பெயரில், விரும்பியபடி மசூதிகளும், கோயில்களும் கட்ட அனுமதி கொடுக்கின்றன. இவை கட்டுவதற்கு தேவையான பணம் கொடுப்பது அந்த இடங்களில் வாழும் மத நம்பிக்கையாளரும், அந்த மதத்தை சேர்ந்த வர்த்தகர்களும் மட்டும் அல்ல. அரசாங்கமும் வெளிநாட்டு தொழிலாளர் கட்டிய வரிப்பணத்தில் ஒரு பகுதியை அம்மக்களின் தேவைகளுக்காக திருப்பிக்கொடுப்பது என்று கூறி, மசூதி அல்லது கோயில் கட்டும் செலவின் ஒரு பகுதியை கொடுக்கின்றது. இந்த நாடுகளில் குறிப்பிட்ட அளவு மதச்சார்பற்ற இந்து அல்லது முஸ்லீம் சமூகங்களை சேர்ந்தவர்கள் கோயில்களுக்கோ, மசூதிகளுக்கோ போவதில்லை. இவர்களின் வரிப்பணத்தை கூட அரசாங்கம் கோயில்/மசூதி கட்ட வழங்குகின்றது.

ஐரோப்பிய அரசுகளின் இத்தகைய "சிறுபான்மையினர் கொள்கை" பல்வேறு மட்டங்களில் இருந்தும் விமர்சனங்களை ஏற்கனவே எழுப்பியிருந்தது. முதலாவதாக மதச்சார்பற்ற அரசாங்கம் என்பதை உறுதிப்படுத்தும்முகமாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை. கணிசமான ஐரோப்பிய மக்கள் தேவாலயங்களுக்கு போகாததால், ஒன்றில் கைவிடப்படும் அல்லது அருங்காட்சியகமாக மாறும் தேவாலயங்கள் ஒரு புறமிருக்க, தற்போதும் பெருமளவு வழிபாட்டாளர்களை ஈர்க்கும் கத்தோலிக்க தேவாலயமோ, அல்லது புரடஸ்தாந்து சபைகளோ அரச உதவிகளை எதிர்பார்க்க முடியாது. இரண்டாவதாக வரிப்பணத்தை மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் அரசாங்க கொள்கை, சிறுபான்மையினர் (வெளிநாட்டு குடியேறிகள், அல்லது இந்துக்கள், முஸ்லிம்கள்) என்று வந்து விட்டால் மட்டும் கோயில்கள், மசூதிகள் கட்டுவதற்கென்று தாராளமாக செலவழிப்பதேன்? இங்கே தான் அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தனது பூர்வீக குடிகளான, வெள்ளை-ஐரோப்பியருக்கு மதம் தேவையில்லை. ஆனால் வெளிநாட்டு குடியேறிகள் மதம் வளர்த்து, மைய நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். இதனால் ஊரை இரண்டுபடுத்தும் காரியமும் நிறைவேறுகின்றது. ஒருபக்கம் கோயில்கள், மசூதிகள் என்று திருப்திப்படும் சிறுபான்மையினம். மறுபக்கம் தமது கிறிஸ்தவ பாரம்பரியம் நலிந்து வருகையில் அந்நிய மதங்கள் வளர்ந்து வருவதையிட்டு கவலை கொள்ளும் பெரும்பான்மையினம். இந்த முரண்பாடுகளை சில இடதுசாரிக் கட்சிகளும், சிறுபான்மையின முற்போக்காளரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உண்மையில் பிற மதங்களை சகித்துக் கொள்ளும் போக்கு அபிவிருத்தியடைந்த ஐரோப்பாவை விட அபிவிருத்தியடையும் நாடுகளில் அதிகம் எனலாம். இதற்கு காலனியாதிக்க வரலாறும் ஒரு காரணம் தான். பலருக்கு வியப்பாக இருந்தாலும், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பல மதங்களும் அனுபவிக்கும் சுதந்திரம், ஐரோப்பாவில் கடந்த ஐம்பது வருட மிதமான வளர்ச்சியாக உள்ளது. உதாரணத்திற்கு மத விடுமுறை தினங்கள். இலங்கையிலும், இந்தியாவிலும் அனைத்து மதங்களது விசேட தினங்களும், தேசிய விடுமுறை தினங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஐரோப்பா இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. தற்போதும் கிறிஸ்தவ விசேட தினங்கள் மட்டுமே தேசிய விடுமுறை தினங்களாகும். ஐரோப்பா முழுமையான மதச்சார்பற்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வெகுதூரம் போகவேண்டியுள்ளது.
________________________________________________________________________ முன்னைய பதிவுகள் :
இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது
_______________________________________________________

Thursday, September 18, 2008

"கொல்லுவதோ இனிமை!" - ஈராக்கில் அமெரிக்க இராணுவம்

ஈராக்கில் ஒரு சாதாரண நகரத் தெருவில், காவல் கடமையில் அமெரிக்க வீரர்கள். அவர்களை நோக்கி ஒரு பெண் நடந்து வருகிறாள். அவள் கையில் ஒரு பெரிய பை. உடனே கிரேனேட் லோஞ்சர் வைத்திருக்கும் போர்வீரனின் மனதில் எச்சரிக்கை மணி அடிக்கிறது. ஆபத்து நெருங்குகிறது. ஒரு நிமிடமேனும் தாமதிக்காமல், துப்பாக்கியின் விசையை இழுக்கிறான். அந்த பெண்ணின் உடல் கிரேனேட் வெடி பட்டு துண்டுதுண்டுகளாக சிதறுகிறது. தூசுப்படலம் அகன்ற பின்னர் தான் தெரிந்தது, அந்தப்பெண்ணின் பையில் இருந்தது, கடையில் இருந்து வாங்கி வந்த உணவுப்பொருட்கள் என்று. ஒரு வேளை அதனை அங்கு நின்ற இராணுவவீரர்களுக்கு கொடுப்பதற்கும் எடுத்து வந்திருக்கலாம். இது ஈராக் போரில் கடமை புரிந்து விட்டு வந்துள்ள முன்னாள் அமெரிக்க போர்வீரன் ஒருவனின் வாக்குமூலம்.

தமது அரசாங்கம் காட்டிய அழகான படத்திற்கு மாறாக, ஈராக்கில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க படையில் பணியாற்றிய சாதாரண படைவீரர்கள், தாம் மனிதநேயமற்ற போருக்குள் மாட்டிக் கொண்டதை உணர்கின்றனர். போர் தீவிரமடையும் காலங்களில் "அரண்டவன் கண்ணுக்கு நெருங்குவதெல்லாம் எதிரி" என்ற வகையில், கண்டபடி சுட்டுத்தள்ளும் கொலைக் கலாச்சாரத்திற்கு, உயர் அதிகாரிகளே உத்தரவிடுகின்றனர். சிலவேளை "போர் என்றால், எதுவும் செய்யலாம்" என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. அப்பாவி மக்களை படுகொலை செய்வது, ஒரு சில "கெட்டவர்கள்" மட்டுமே, என்று வெளியில் பிரச்சாரம் செய்வதற்கு மாறாக, அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையே நீதி, நியாயம் பற்றி அக்கறை கொள்ளாததாகவே உள்ளது.

ஈராக்கில் நடைபெறும் நியாயமற்ற போர், பல போர் வீரர்களின் கண்களை திறந்துள்ளது. அவர்கள் "போருக்கு எதிரான முன்னாள் இராணுவவீரர்கள்" என்ற அமைப்பாக திரண்டு, அமெரிக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக, ஈராக்கில் அமெரிக்க படைகள் செய்த அட்டூழியங்களை, தாமே நேரே பார்த்த சம்பவங்களை கூறும் பல முன்னாள் இராணுவவீரர்களின் சாட்சியங்கள் அடங்கிய, "Winter Soldier Iraq and Afghanistan: Eyewitness Accounts of the Occupation," என்ற நூல் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பல அதிர்ச்சியளிப்பன.

வீதிகளில் ரோந்து செல்லும் படையினர், தமது வண்டிகளில் மேலதிக துப்பாக்கிகளையும் எடுத்துச் செல்வது வழமை. ஒருவேளை "எதிர்பாராத தாக்குதலில்" அப்பாவி பொதுமகன் யாராவது கொல்லப்பட்டால், அந்த பிணத்திற்கு அருகில் துப்பாக்கியை வைத்து விட்டு செல்வார்கள். தாம் "பயங்கரவாதிகளை நேரடி மோதலில்" கொன்றதாக காட்ட அது உதவும். பலூஜா இராணுவ நடவடிக்கையின் போது, வெள்ளைக்கொடி ஏந்தி வரும் பொதுமக்களையும் சுடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஏனெனில் எதிரிகள் வெள்ளைக்கொடி ஏந்தியபடி நெருங்கி வந்து திடீரென சுடலாம் என காரணம் கூறப்பட்டது.

அபு கிரைப் சிறைச்சாலையில், கைதிகளை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்து, அதனை படம்பிடித்து மகிழ்ந்த நிழற்படங்கள், அமெரிக்க இராணுவத்திற்கு உலகளவில் களங்கத்தை தேடித்தந்தன. அதுபோன்ற சம்பவங்கள் ஈராக்கில் சர்வசாதாரணம் என்று, முன்னாள் இராணுவவீரர்களின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. சிலவேளை வீதிகளில் கொல்லப்படும் ஈராக்கியரின் உடலங்கள் மீது, கவச வாகனங்களை ஏற்றி விட்டு, படம் பிடித்து குரூர திருப்தியடைவார்கள். வாகனங்களில் வீதி ரோந்து செல்லும் போது, சில வக்கிரம் பிடித்த படையினர், வண்டியினுள் இருந்து சிறுநீர் கழித்த போத்தல்களை, வீதியோரங்களில் நிற்கும் சிறுவர்கள் மீது வீசியெறிந்து மகிழ்வார்கள்.

அமெரிக்க படையினர் சிறுவர்களுக்கு இனிப்புகளை பரிமாறுவது கூட, ஈராக்கியரின் மனங்களை வெல்வதற்கு மட்டுமல்ல, தம்மை சுற்றிவளைக்கும் சிறுவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திக் கொள்வதே முதன்மையான நோக்கம்! ஏனெனில் சிறுவர்கள் இருக்குமிடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

இந்தப் புத்தகத்தில் சாட்சியமளித்திருக்கும் ஒவ்வொருவரும், வித்தியாசமான அனுபவங்களை சந்தித்திருக்கிறார்கள். ஈராக்கிற்கு புதிதாக அனுப்பப்பட்ட வீரர் ஒருவருக்கு, கண்ணில் படும் டாக்சிகள் எல்லாவற்றையும் சுடுமாறு மேலதிகாரி உத்தரவிட்டார். ஈராக்கில் தீவிரவாதிகள், தமது போக்குவரத்திற்கு பொதுமக்கள் செல்லும் வாடகைவண்டிகளை பயன்படுத்துவதாக தெரியவந்ததால், அப்படி ஒரு உத்தரவாம்.

முன்னாள் அமெரிக்க இராணுவவீரர்கள், ஈராக்கில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதையும், போரின் கடுமையையும், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதையும் அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கோடு தான், தாம் இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றனர். ஈராக்கிற்கு அதிகளவில் படைகளை அனுப்பியதால் தான், அங்கே தற்போது வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி புஷ் கூறுகின்றார். ஆனால் அங்கே தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் அமெரிக்க எதிரிகளுடன், உடன்பாடு கண்டு சமரசமாக போனதாலே தான், ஈராக்கில் ஓரளவிற்கு இயல்பான சூழல் உருவாகியுள்ளது, என்ற உண்மையை அமெரிக்க அரசாங்கம் சொல்லப்போவதில்லை.

________________________________________________________
முன்னைய பதிவு:
ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு
_______________________________________________________

Wednesday, September 17, 2008

பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்

தாலிபான் வேட்டையில் இறங்கிய அமெரிக்க துருப்புகள், பாகிஸ்தானின் எல்லை கடந்தும் யுத்தத்தை விரிவாக்கியதால், தற்போது பாகிஸ்தானிய இராணுவத்துடன் மோதும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க இராணுவ நடவடிக்கையில், சாதாரண பாகிஸ்தான் பொதுமக்களும் கொல்லப்பட்டதால், அந்நாடு முழுவதும் அமெரிக்க எதிர்ப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் எப்பாடுபட்டாகிலும் அமெரிக்க படைகளின் நகர்வுகளை தடுக்கும்முகமாக, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரண்டு அமெரிக்க ஹெலிகப்டர்கள் மீது, பாகிஸ்தான் இராணுவம் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்ததாக சொல்லப்படுகிறது. அமெரிக்க, பாகிஸ்தானிய அரசாங்கங்கள் அத்தகைய சம்பவம் நடைபெறவில்லை என்று மறுத்த போதும், நேரே கண்ட சாட்சிகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானிய வலதுசாரி மதவாத கட்சிகள், அமெரிக்க இராணுவத்துடன் போருக்குப் போக தயாராக இருந்தாலும், ஆளும்வர்க்கம் மோதல் நிலைக்கு தயங்குகின்றது. அமெரிக்கா உலகில் பலமிக்க இராணுவ வல்லரசு என்பதால் போரிட்டு வெல்லமுடியாது என்ற காரணம் மட்டுமல்ல, சர்வதேச ஆதரவு கிட்டாது என்பதாலும் அமெரிக்க அத்துமீறல்களை பாகிஸ்தான் அரசு பொறுத்துக் கொள்கின்றது. மேலும் புதிய அரசியல் சக்தியாக உருவாகியிருக்கும் "பாகிஸ்தானிய தாலிபான்" ஆதரவாளர்கள் ஒருபுறம் தாலிபானின் ஆயுதப்போராட்ட ஆதரவு பிரச்சாரத்தை முன்னெடுத்த போதும், மறுபுறம் குறிப்பாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பஞ்சாப் மாகாணம் போன்ற கிழக்கு பாகிஸ்தானில் , பயங்கரவாத தாக்குதல்களால் தாலிபானை எதிரிகளாக பார்க்கும் போக்கு தீவிரமாகி வருகின்றது.

வடமேற்கு எல்லை மாகாணம், மற்றும் வாசிரிஸ்தான் ஆகிய பஷ்டூன்(பட்டாணி) மொழி பேசும் மக்கள் மத்தியிலேயே தாலிபான் ஆதரவு அதிகம். பொதுவாக ஆப்கானிய தாலிபானும், பாகிஸ்தானிய தாலிபானும் பஷ்டூன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது வாழ்விடம் முன்பு ஆங்கிலேய காலனிய அரசினால் பிரிக்கப்பட்டது. அப்போதிருந்தே ஒன்றுபட்ட பஷ்டூன் தாயகத்திற்கான தேசியமும் தோன்றியிருந்தது. பெரும்பான்மை பஷ்டூன் மக்கள் கல்வியறிவற்ற, மதநம்பிக்கையுள்ள ஏழைமக்கள் என்பதால், அவர்களிடையே தாலிபான் போன்ற அமைப்பு வளர்ச்சியடைந்ததில் வியப்பில்லை.

ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவம் வெளியேறிய பிறகு, தமக்குள் சண்டையிட்ட முஜாகிதீன் குழுக்கள், நாட்டை சுடுகாடாக்கினர். அதுவரை மும்முரமாக போரை பின்னால் நின்று நடத்திக்கொண்டிருந்த அமெரிக்கா, தமது வேலை முடிந்தது என்று ஆப்கானிஸ்தான் அவலத்தை கண்டுகொள்ளாமல் விட்டது. அந்த தருணத்தில் தாலிபான் மட்டுமே நாட்டில் சட்டம், ஒழுங்கை கொண்டுவந்து, பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை உருவாக்கினர்.

2001 ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு, தாலிபன் மீது அதிக அக்கறை இருக்கவில்லை. அமெரிக்க இராணுவம் அல் கைதா உறுப்பினர்களை வேட்டையாடுவதிலேயே தனது கவனத்தை குவித்தது. அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப், தானும் அல் கைதா வேட்டையில் குதிப்பதாக அமெரிக்காவை குஷிப்படுத்தினார். அவ்வப்போது பாகிஸ்தானில் ஒளித்திருந்த முக்கிய அல் கைதா தலைவர்களை பிடித்துக் கொடுத்து பாராட்டு பெற்றதுடன், பலகோடி டாலர்கள் வெகுமானமாக பெற்று பெட்டியை நிரப்பிக் கொண்டார்.

அல் கைதாவின் கதை முடிந்தது என்று முஷாரப்பால் நம்ப வைக்கப்பட்ட அமெரிக்கா தனது படைகளை பெருமளவு விலக்கி, இராக்கிற்கு அனுப்பி வைத்தது. அந்த காலகட்டத்தில் புத்திசாலியான முஷாரப் தந்திரமாக காய் நகர்த்திக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் அமெரிக்கர்களுடன் கூட்டுச்சேர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர், மறு பக்கம் தாலிபான் பாகிஸ்தானை பின்தளமாக பாவிக்க அனுமதி என்று இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருந்தார். பாகிஸ்தானின் வெளிவிவகார கொள்கையை பொறுத்தவரை, தந்து பரமவைரியான இந்தியாவை ஆப்கானிஸ்தானை நெருங்க விடாமல் தடுத்து, அங்கே பாகிஸ்தான் சார்பு ஆட்சியாளர்களை அமர்த்த வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்கு நம்பிக்கையானவர்களாக தாலிபான் கருதப்பட்டது. உளவு நிறுவனமான ISI க்குள்ளும், தாலிபான் பாகிஸ்தானில் பயிற்சி முகாம்களை தொடர்ந்து வைத்திருக்க ஆதரவு இருந்தது.

வளர்த்தகடா மார்பில் பாய்ந்தது போல, தாலிபான் முஷாரப்பையும் குறிவைத்து தாக்கிய போது தான், பாகிஸ்தான் அரசு தாலிபானை எதிரியாக பார்த்தது. தொடர்ந்து செம்மசூதி முற்றுகையில் மதவாத கடும்போக்காளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், தாலிபானை அடக்கும் வேலையில் இராணுவம் இறங்கியது. இருப்பினும் இராணுவ அடக்குமுறை, பாகிஸ்தானிய தாலிபானை வளர்க்கும் ஊக்கியாக மாறிவிட்டது. பெருகிய மக்கள் ஆதரவு, ஆயுதமேந்திய உறுப்பினர் தொகை அதிகரிப்பு இவற்றால் தாலிபானும் முன்னை விட தீவிரமாக செயற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அரைகுறையாக விட்டுச்சென்ற வேலையை, ஐரோப்பிய நாடுகளின் இராணுவங்கள் பொறுப்பு எடுத்தன. ஐரோப்பிய அரசாங்கங்கள் தமது மக்களுக்கு உண்மையை கூறாது, தவறான தகவல்களை கொடுத்தே படைகளை அனுப்பி வைத்தனர். ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் கட்டவும், அபிவிருத்திப் பணிகளுக்குமே தமது இராணுவம் செல்வதாக கூறினார். ஆனால் தற்போது தாலிபான் தாக்குதல்களில் பல ஜேர்மனிய,பிரெஞ்சு, நெதர்லாந்து படையினர் கொல்லப்பட்ட பின்னர் தான், தாம் ஆப்கானிய சகதிக்குள் மாட்டிக்கொண்ட உண்மை தெரிய வந்தது.

இன்று போர் தீவிரமாகி, தாலிபான் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளை, அமெரிக்க இராணுவம் மீண்டும் சண்டையிட வந்திருக்கிறது. தாலிபான் பாகிஸ்தானை பின்தளமாக பாவித்து, அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்கி விட்டு ஓடுவதாக நம்பும் அமெரிக்கா, தாலிபான் உற்பத்தி மையமான பாகிஸ்தானுக்குள் சென்றே அவர்களை வேட்டையாடி அழிக்க எண்ணுகின்றது. அப்படி நடக்கும்வேளை பாகிஸ்தான் இராணுவத்துடனான மோதல் கூட தவிர்க்க முடியாது.

அமெரிக்காவின் எல்லை கடந்த இராணுவ நடவடிக்கை ஏற்கனவே வரலாற்றில் ஒருமுறை இடம்பெற்றுள்ளது. வியட்நாம் போரில், "வியட் கொம்" போராளிகள் கம்போடியா, லாவோசை பின்தளமாக பயன்படுத்துவதை தடுக்க அந்நாடுகள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டுகளை வீசின. அதன் விளைவாக பல்லாயிரம் அப்பாவி மக்கள் மரணமடைய, வெகுண்டெழுந்த மக்கள் அமெரிக்காவுக்கு எதிரான ஆயுதமேந்திய புரட்சி இயக்கங்கள் பின்னால் அணிதிரண்டனர். அதே போல அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை மட்டுமல்ல பாகிஸ்தானையும் சீரழித்து விட்டே திரும்பிச்செல்லும்.

___________________________________________________
இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்
___________________________________________________

Saturday, September 13, 2008

பொலிவியா கலவரம், அமெரிக்க தூதுவர் வெளியேற்றம்ஜனநாயக விரோத சதிப்புரட்சி மூலம், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்களை கவிழ்க்கும் முயற்சிகளை அமெரிக்கா இன்னும் கைவிடவில்லை போல் தெரிகின்றது. 11 செப்டம்பர் 1973 சிலியில் அய்யெண்டேயின் ஜனநாயக அரசாங்கத்தை, இராணுவ சதிப்புரட்சி மூலம் தூக்கி எறிந்தது. இன்று சரியாக35 வருடங்களுக்கு பின்னர், சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டி,
பொலிவியா அமெரிக்க தூதுவரை வெளியேற்றியுள்ளது. அந்த தூதுவர் பொலிவியாவில் சில மாகாணங்களில் அரசாங்கத்திற்கெதிராக வெடித்துள்ள கலவரங்களை தூண்டி விட்டார், கிளர்ச்சியாளருக்கு உதவி செய்தார் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் அதற்குமப்பால் அட்சி கவிழ்ப்பு சதி பற்றிய அச்சம் காரணமாகவும் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

பொலிவியாவின் வரலாற்றில் முதன்முறையாக பெரும்பான்மை பூர்வகுடிகளான செவ்விந்திய இனத்தை சேர்ந்த ஏவோ மொராலெஸ் ஜனாதிபதியாக தெரிவான பின்னர், அவர் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால் "சாந்த குரூஸ்". அது கிழக்கு பொலிவியாவின் செல்வச்செழிப்பு மிக்க மாநிலமொன்றின் பெயர். மேற்கு பொலிவியாவில் பெரும்பான்மை செவ்விந்தியர்கள் நித்திய வறுமைக்குள் வாழ்கையில், சிறுபான்மை ஸ்பானிய வம்சாவளி மக்கள் மட்டுமே செல்வந்தர்களாகவும், அதேநேரம் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவும் இதுவரை இருந்து வந்துள்ளனர். குறிப்பாக தொழில்துறை வளர்ச்சியடைந்த, எரிவாயு போன்ற இயற்கை வளங்களை கொண்ட சாந்த குரூஸ் மாநிலத்தில் அவர்கள் செறிவாக வாழ்கின்றனர்.
பொலிவியாவின் 55 வீதமானவர்கள் கெசுவா அல்லது அய்மரா என்ற செவ்விந்திய பூர்வகுடிகள். 30 % ஐரோப்பிய கலப்பினத்தவர்கள். 15 % தூய வெள்ளையர்கள்.

முதன்முறையாக ஒரு பொலிவியா ஜனாதிபதி, தனது நாட்டில் வீரச்சாவை தழுவிக்கொண்ட ஆர்ஜன்தீன புரட்சிவாதி சே குவேரவிற்கு நினைவு சின்னம் எழுப்பியதுடன் நில்லாது, அவரின் அடிச்சுவட்டை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் பெருமைக்குரிய ஏவோ மொராலெஸ், முதலாளித்துவ சக்திகளை உடனடியாக பகைத்து கொள்ளாமல், சோஷலிச பொருளாதார மாற்றங்களை, மிக மெதுவாக கொண்டு வர விரும்பினார். நாட்டின் முதன்மையான ஏற்றுமதி பொருளான எரிவாயு வளங்களை நாட்டுடமையாக்கியது கூட தாமதமாகத்தான். மொராலெஸ் ஒரு சோஷலிச-ஜனநாயகவாதி என்று குறிப்பிடுவதே பொருத்தம். அவரது அரசியல் வெனிசுவேலாவின் சாவேஸ் அளவிற்கு கூட தீவிரமானவை அல்ல. இருப்பினும் குறைந்தளவு மாற்றங்களைக் கூட முதலாளிகளும், வசதிபடைத்த மத்திய தர வர்க்கமும், ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே அங்கே நடக்கும் குழப்பங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து, வறிய செவ்விந்தியர்களும் பிரயோசனப்படும் வகையில் செல்வத்தை பிரித்துக் கொடுக்கும் ஏவோ மொரலேசின் முயற்சி, தற்போது பணக்காரர்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. முதலில் அவர்களை பிரிதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் எதிர்த்து வந்தது. பிரச்சினையின் உச்சகட்டமாக செல்வந்த "சாந்த குரூஸ் மாநிலம்" பிரிவினை கோரியது. மாநில கவர்னரும், பெரும் தொழில் அதிபர் ஒருவரும் கிளர்ச்சியை வழிநடத்தினர்.

இனவாதமும், பணவாதமும் கலந்த பாசிச அரசியல் சக்திகளின் அவதாரமான "சாந்த குரூஸ் இளைஞர் ஒன்றியம்" என்ற வலதுசாரி தீவிரவாதக்குழு வன்முறைகளில் இறங்கியது. அதன் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர் என்ற பெயரில் அரச அலுவலகங்களை சூறையாடினர். அதோடு வெறியடங்காமல் மொராலெஸ் ஆதரவு ஊர்வலத்தில் பங்குபற்ற சென்ற செவ்விந்திய பொதுமக்கள் சிலரை படுகொலை செய்தனர். இந்த வன்முறைக்கும்பல் அண்டை நாடுகளான அர்ஜன்தீனாவுக்கும், பிரேசிலுக்கும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் குழாய் ஒன்றை குண்டுவைத்து தகர்த்தது. இதனால் 8 மில்லியன் ஏற்றுமதி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசில் இதனை "பயங்கரவாத செயல்" என்று கண்டித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட செய்திகள் மேற்கத்திய ஊடகங்களில் வடிகட்டப்பட்டே வெளியிடப்பட்டன. சாந்த குரூஸ் பிரிவினை கோரிக்கை, அம்மாநில மக்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கை போன்று காட்டப்பட்டது. அமெரிக்க அரசின் நிலைப்படும் அதுதானே. ஆகையினால் பொலிவியாவின் அமெரிக்க தூதுவர் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடுகிறார் என்ற சந்தேகம் வலுத்தது. பெரும்பாலும் நிலைமை மோசமடைவதை தடுக்கும் பொருட்டு தூதுவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம். இதற்கிடையே வெனிசுவேலாவில் ஜனாதிபதி சாவேசை கொலை செய்து விட்டு சதிப்புரட்சி நடத்த சில இராணுவ ஜெனரல்களுடன் திட்டமிட்டதாக கூறியே அந்நாட்டு தூதுவரும் வெளியேற்றப்பட்டுள்ளார். அதற்கு ஆதாரமாக, ஒட்டுகேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒன்று வெனிசுவேலா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதேநேரம் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கர்கள் பங்கு பற்றிய சதி திட்டம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக பராகுவை அறிவித்துள்ளது.
பொலிவியா வன்முறைகளை ஆர்ஜன்தீனாவும், பிரேசிலும் கண்டித்துள்ளன. அதேநேரம் அமெரிக்காவோ ஜனநாயகத்திற்கு தானே முதல் எதிரி என்று நிரூபித்து வருகின்றது. சாவேஸ் எச்சரித்துள்ளது போல, ஏவோ மொரலேசின் ஆட்சி கவிழ்க்கப்பட்டால் அது ஆயுதமேந்திய போராட்டத்திற்கு வழிதிறந்துவிட்டது போலாகும்.

__________________________________________________

Thursday, September 11, 2008

9/11 தாக்குதல், அமெரிக்காவின் உள்வீட்டு சதியா?

நியூயோர்க் இரட்டைக்கோபுரங்கள் தகர்ந்த 11 செப்டம்பர் தாக்குதல் நடந்து 7 வருடங்கள் கடந்தாலும், இன்றுவரை பல மர்மங்கள் துலங்கவில்லை. அமெரிக்க அரசாங்கமே திட்டமிட்டு நடத்திய தாக்குதலாக இருக்கலாம், என்ற சந்தேகத்தை கிளப்பும் ஆவணப்படங்கள் பல வந்து விட்டன.
9/11 Conspiracy Video

கடைசியாக கூட இத்தாலிய படத்தயாரிப்பாளர் Giulietto Chiesa எடுத்த ZERO என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் காண்பிக்க தடைவிதிக்கப்பட்ட இந்தப் படம் கூட இரட்டைக் கோபுரங்கள் விமானங்கள் மோதியதால் இடிந்து விழவில்லை, ஆனால் உள்ளிருந்தே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டது என்று கூறுகின்றது. மேலும் அதே தினத்தில் நடந்த இராணுவ தலைமையகமான 'பெண்டகன்' மீதும் விமானம் மோதி சேதமடைந்த சம்பவத்தில், அங்கிருந்த பாதுகாப்பு வீடியோக்கள் யாவும் பின்னர் மாயமாக மறைந்ததேன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் விமானக்கடத்தலில் ஈடுபட்ட "பயங்கரவாதிகளின்" பெயர் விபரம் மூன்று நாட்களுக்குள் சி.ஐ.ஏ.க்கு தெரிந்ததெப்படி? (அரசாங்கம் சொல்வது போல) கண்காணிப்பில் இருந்த அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விசா கிடைத்தது எப்படி? "நடைபெற்ற சம்பவங்களை வைத்து பார்க்கும் போது; பூகோள அரசியல், உலக எரிபொருள் பொருளியல் போன்றவற்றை அறிந்தவர்கலாலேயே இந்த 9/11 தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் உலகம் எவ்வாறு மாறப்போகின்றது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்தே இருந்துள்ளது." இவ்வாறு தெரிவித்த இத்தாலிய தயாரிப்பாளர்கள், இந்த தாக்குதல் பின் லாடனால் நடத்தப்பட்டது என்பதை தாம் நம்பவில்லை என்றும், அல் கைதா என்ற அமைப்பு இருக்கின்றதா என்பதே சந்தேகத்திற்குரியது என்றும் கூறுகின்றனர்.

பிற்குறிப்பு:
11 செப்டம்பர் 2001 ம் ஆண்டு, தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்கரின் தொகை மூவாயிரம். அதற்கு பின்னர் அமெரிக்க அரசின் பழிவாங்கும் போரில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் தொகை இருபதாயிரம்.

Monday, September 08, 2008

பனாமா கால்வாயின் எழுதப்படாத இரத்த வரலாறு


சி.ஐ.ஏ. யின் முன்னாள் போதைவஸ்து கடத்தல் கூட்டாளியும், பின்னாள் வில்லனுமான, பனாமா சர்வாதிகாரி நொரியேகாவை கைது செய்ய, 1989 கிறிஸ்துமஸ் தினத்தன்று சின்னஞ்சிறிய நாடான பனாமா மீது படையெடுத்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை, எதிர்கால போர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தது. படையெடுப்பின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் பற்றியும், உண்மையான காரணங்கள் பற்றியும்; அமெரிக்கா அன்று உலகமக்களுக்கு பொய்களை விற்பது இலகுவாக இருந்தாலும்; அமெரிக்க படையெடுப்பின் உண்மையான காரணங்களை, நேரில் சென்று பார்த்த சில சுதந்திர ஊடகவியலாளரின் தளராத முயற்சியினால் "The Panama Deception" வீடியோ மூலம் உண்மைகளை உலகம் அறியக்கூடியதாக உள்ளது.


பனாமா எங்கே இருக்கின்றது? வட-தென் அமெரிக்க கண்டங்களை இணைக்கும் சிறிய நிலப்பரப்பு, ஒரு காலத்தில் கொலம்பியாவிற்கு சொந்தமாக இருந்து, பின்னர் கேந்திர முக்கியத்துவம் கருதி தனிநாடாக பிரிக்கப்பட்டது. அங்கே செயற்கையாக ஒரு கால்வாய் வெட்டுவதன் மூலம், பசுபிக் சமுத்திரத்தை அட்லாண்டிக் சமுத்திரத்துடன் இணைக்கும் குறுகிய கப்பல் போக்குவரத்து பாதையை அமைக்கும் நிர்மாணப்பணியை அமெரிக்க கம்பெனிகள் தொடங்கியதில் இருந்து, பனாமா மீதான அமெரிக்க ஆதிக்கம் ஆரம்பமாகியது.

அதிக வருவாய் தரும் பனாமா கால்வாய், பனாமா தேசத்தவருக்கு சொந்தமானதாக இருக்கவில்லை. அது அமெரிக்க இராணுவ மேலாண்மையின் கீழ் இருந்தது. ஒரு இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தொரியோஸ் வந்த பின்னர் தான், கால்வாயை 2000 ம் ஆண்டு பனாமாவுக்கு சொந்தமாக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது. நிலச்சீர்திருத்தம், கறுப்பினத்தவர் முன்னேற்றம் போன்ற புரட்சிகர கொள்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தொரியோஸ் சந்தேகத்திற்கிடமான விபத்தில் கொல்லப்பட்ட பின்னர் தான், சி.ஐ.ஏ. உளவாளி ஜெனரல் நோரியேகா பதவிக்கு வந்தான்.

நீண்ட காலமாக நொரியேகாவுக்கும், சி.ஐ.ஏ. க்கும் இடையில் போதைவஸ்து கடத்தல் விடயத்தில் புரிந்துணர்வு உடன்பாடு இருந்தபோதும், பின்னர் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வியாபார பிணக்குகளாலோ, அல்லது அதுவரை "ஆமாம் சாமி" யாக இருந்த நொரியேகா தன்னிச்சையாக நடக்க வெளிக்கிட்டதாலோ, உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா பகிரங்கமாக நொரியேகா மீது போதை வஸ்து கடத்தல் குற்றத்தை முன்வைத்து பிரச்சாரத்தை முடுக்கி விட்டது.

1989 ம் ஆண்டு, பனாமா போலிஸ் சுட்டதில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் இறந்த சம்பவத்தை சாட்டாக வைத்து, அன்று ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ்(இன்றைய புஷ்ஷின் தந்தை), டிசம்பர் 20 பனாமா மீது படையெடுக்க உததரவிட்டார். மகன் புஷ் 16 அடி பாய்ந்தால், அப்பா புஷ் 8 அடி பாய்ந்திருக்க மாட்டாரா? சன நெரிசலான நகரப்பகுதிகளில் அமெரிக்கப் படையினர் கண்மூடித்தனமாக சுட்டனர். வீதிகளில் தாங்கிகள் எதிரே வந்த பொதுமக்களின் கார்களையும் ஏறி மிதித்து, நொறுக்கிய படி முன்னேறின. தரைப்படைகளின் வெறியாட்டம் போதாதென்று, விமானங்கள் மூலம் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அப்போது கூட விமானங்கள் எதற்காக ஏழைகளின் சேரிகளை மட்டும் குறிபார்த்து குண்டு வீசின என்பது புஷ்ஷிற்கே வெளிச்சம்.

பனாமா படையெடுப்பின் போது முன்னர் ஒருபோதும் கண்டிராத புதிய வகை ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன. லேசர் குண்டுகள், அப்பாச்சி ஹெலிகப்டர்கள், ஸ்டெல்த் விமானங்கள், என்று அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தயாரித்த புதிய தலைமுறை ஆயுதங்களை பரிசோதித்துப் பார்க்கும் இடமாக பனாமா இருந்தது. எதற்காக தாக்கப்படுகிறோம் என்று கூட அறிந்திருக்காத அப்பாவி பனாமியர்கள் பரிசோதனைச்சாலை எலிகளாக மடிந்தனர். ஆயிரத்துக்கு மேலான பொது மக்கள், அமெரிக்காவின் மூன்று நாள் இராணுவ சாகசத்திற்கு பலியானார்கள். ஆள்பலத்தில் மிகச்சிறிய பனாமிய இராணுவம் முடிந்த அளவு அமெரிக்க படைகளை எதிர்த்து போரிட்டாலும், ஓரிரு நாட்களிலேயே சரணடைந்தது.

எலியைப் பிடிக்க வீட்டைக் கொளுத்திய கதையாக, ஆயிரம் பேரை கொன்று, நொரியேகா என்ற தனிமனிதனை கைது செய்து, அமெரிக்க சிறையில் அடைத்த பின்னரும், பனாமா வழமைக்கு திரும்பவில்லை. அமெரிக்க படைகள் நாடு முழுவதும் வேட்டையாடி, இடதுசாரி அரசியல்வாதிகள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பிற சந்தேகநபர்கள் என்று ஆயிரக்கணக்கானோரை கைது செய்து தடுத்து வைத்தன. அவ்வாறு சென்றவர்கள் எந்த வித குற்றச்சாட்டும் இன்றி மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டனர். பலர் இரகசிய புதைகுழிகளில் கொன்று புதைக்கப்பட்டனர்.

பனாமா முழுவதையும் தமது இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் எந்த ஒரு ஊடகவியலாளரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அமெரிக்க ஊடகங்களோ, அமெரிக்க அரசாங்கம் விற்ற பொய்களை மட்டுமே வாங்கி பிரசுரித்துக் கொண்டிருந்தன. எத்தனை பனாமிய மக்கள் இறந்தனர் என்பது இதுவரை யாருக்குமே தெரியாமல் இருக்கையில், படையெடுப்பின் போது இறந்த இருபது அமெரிக்க வீரர்களுக்காக மட்டும் கவலைப்பட்டு வருத்தம் தெரிவித்தார்கள். கடுமையான தணிக்கையை அமுல்படுத்திய அமெரிக்க அரசாங்கம், தனது படைகள் பொதுமக்களை கொல்லவில்லை என்று முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்தது.

பனாமா படையெடுப்பின் உண்மையான காரணம் என்ன? இதற்கான விடை அமெரிக்க அரச ஆவணங்களில் உறங்கிக் கிடக்கலாம். ஆயினும்
பனாமா கால்வாய் தற்போதும் அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து இருப்பதும், அப்போது பரிசோதிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்கள், சில வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான், ஈராக் மக்களையும் கொல்வதற்கு "வெற்றிகரமாக" பயன்படுத்தப்பட்டன என்பது மட்டும் உண்மை.

Sunday, September 07, 2008

ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"


"பணக்காரன்", "பூர்ஷுவா", மேட்டுக்குடி", "புத்திஜீவி", "சுயநலவாதி" போன்ற சொற்கள், ஒருவரை தூஷிப்பதற்குப் பயன்படுத்தும்,  மோசமான வார்த்தைகள்! மேல்தட்டு அல்லது உயர் மத்தியதர (பூர்சுவா) வர்க்க பாரம்பரியத்தில் இருந்து வந்த  மாணவர்கள், கணவன்மார், மனைவிமார் தமது குடும்பப் பின்னணியை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. 

ஒரு காலத்தில், சமூகத்தில்  உயர்ந்த அந்தஸ்தில் இருந்து கொண்டு, அனைத்து பொருள் சுகங்களையும் அனுபவித்து வந்த பணக்காரர்களும், வசதி படைத்தோரும், தற்போது சமூகத்தில் "தீண்டத்தகாதவர்கள்"  போன்று நடத்தப்பட்டனர். அவர்களது உயர்கல்வி வாய்ப்புகள்,பதவி, வேலை வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றங்கள் யாவும் தடுக்கப்பட்டன. ஒவ்வொரு குடிமகனும் தனது சொந்த பந்தங்களை விட புரட்சி முக்கியமானது என்று கருத வேண்டும். எதிர்ப்புரட்சிகர சக்திகள் யாராகவிருந்தாலும், அது நெருங்கிய உறவினராக இருந்தாலும், காட்டிக் கொடுக்க வேண்டும்.

இவையெல்லாம் ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில் (குறிப்பாக 1953 வரையிலான காலகட்டம்) நடந்த அன்றாட நிகழ்வுகள். அப்போது வாழ்ந்த சோவியத் "குடிமக்கள்" எந்தளவு  அச்சத்துடன் வாழ்ந்தனர்? "ஸ்டாலினிச பயங்கரவாதம்" என கூறப்படுவது எவ்வாறு செயல்பட்டது? எந்தப் பிரிவை சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்? அவர்களின் பின்னணி என்ன? போன்ற விடயங்களை Orlando Figes என்ற பிரிட்டிஷ் சரித்திர பேராசிரியர் ஒருவர், ஆயிரக்கணக்கான சாட்சியங்களை விசாரித்து, பழைய சோவியத் அரச ஆவணங்களை பார்வையிட்டு, கைதிகளின் கடிதங்களை வாசித்து... இவ்வாறு நீண்ட ஆராய்ச்சியின் பின்னர், "The Whisperers: Private Life in Stalin's Russia" என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூல், இதுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும், இன்னும் ஏனோ ரஷ்ய மொழியில் வெளியிடப் படவில்லை.

"சித்தாந்தங்களுக்கு அப்பால், பாதிக்கப்பட்டவர்கள் என்ற பொதுமைப் பண்பே இந்த புத்தகத்தின் கதாபாத்திரங்களை ஒன்றிணைக்கிறது." என்று கூறும் நூலாசிரியர், எதோ ஒரு வகையில் பக்கம் சாராத சரித்திரவியலாளராக காட்டிக் கொள்ள முனைகிறார். இருப்பினும், சில தடவைகள் மேற்கத்திய உத்தியோகபூர்வ கற்பித்தல்களை வழுவி நடப்பதும் தெரிகின்றது. உதாரணத்திற்கு, ஸ்டாலினை ஹிட்லருடன் ஒப்பிடும் பக்கத்தில், "என்ன இருந்தாலும்... கைதிகள் திட்டமிட்டு நச்சு வாயு செலுத்தி கொன்று குவிக்கப் படவில்லை", என்று குறிப்பிடுகின்றார். மேலும் பெரும்பாலான கைது செய்யப்பட்டவர்கள், "மக்கள் விரோதி" என்ற தகுதிக்கு உட்படாதவர்கள், இன்னும் சொல்லபோனால் எதோ ஒரு வகையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உழைத்தவர்கள், என்றும் பல இடங்களில் வலியுறுத்தப்படுகின்றன. அதே நேரம் நூலின் பிற பக்கங்களில், அப்படி ஏன் நடக்க வேண்டும் என்ற விளக்கம் கிடைக்கின்றது.

1. ஸ்டாலின் ஆட்சியில், யாருக்குமே பிரத்தியேக சலுகைகள் கிடைக்கவில்லை. ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்களாக இருப்பினும், அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிப்பவராக இருப்பினும், நீதிக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தனி மனிதர்களை விட புரட்சி உயர்ந்தது.
2. உளவுப் படையில் பணி புரிந்தவர்கள் எல்லோரும், பயிற்சி பெற்ற, தொழில் தகமையுடையவர்கள் அல்ல. (பல "விசாரணை அதிகாரிகள்", அதற்கு முன்னர் சாதாரண  விவசாயியாக, தொழிலாளியாக வேலை செய்தவர்கள்.)  சிலர், சந்தேகநபரை விசாரிக்கும் பக்குவம் கூட இல்லாத அளவுக்கு நடந்து கொண்டனர்.
3. ஒவ்வொரு ஊரில் இருந்தும், குறிப்பிட்ட அளவு "மக்கள் விரோதிகளை" அடையாளம் கண்டு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு பிராந்திய அரசு நிறுவனங்களுக்கு அறிவித்திருந்தது. சில நேரம், மத்திய அரசு கேட்ட  அளவு சேரா விட்டால், கூடவே சில அப்பாவிகளும் பிடித்து அனுப்பப்பட்டனர். சிலர் தனிப்பட்ட விரோதம் காரணமாகவும் பிடித்துக் கொடுத்தனர்.

பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள், கட்டாயமாக நிரப்ப வேண்டிய விண்ணப்படிவத்தில், "உங்கள் குடும்பத்தில் எவராவது கைது செய்யப் பட்டுள்ளனரா?" என்ற கேள்வி இருக்கும். அத்ற்கு "ஆம்" என்று பதிலளிக்கும் மாணவன், வகுப்பில் பிற மாணவர்களால் ஒதுக்கப் படுவான், அல்லது அவனது முன்னேற்றம் பாதிக்கப் படும்.  இதனால், பல மாணவர்கள், தமது குடும்ப பின்னணி குறித்து பொய் சொல்ல ஆரம்பித்தனர். நாடு முழுவதும் இருந்த அனைத்து பாடசாலைகளும், "வர்க்க எதிரி", அல்லது "மக்கள் விரோதி" என்போர் யார் யார் என்று, தமது மாணவர்களுக்கு போதித்து வந்தன. இதனால், சில சமயம் சிறுவர்களே, தமது ஊர்களில் புரட்சிக்கு எதிரான சக்திகளை அடையாளம் காட்டினர்.

"பவ்ளிக் மொரோசொவ்" என்ற சிறுவனின் கதை மிகப் பிரபலமானது. அந்த சிறுவன், 1932 ம்  ஆண்டு, தனது தந்தை ஒரு "கூலாக்" (பணக்கார கமக்காரன்) என்று பொலிசாருக்கு தகவல் கொடுத்தான். போலிசால் கைது செய்யப்பட்டு, சைபீரியாவின் சிற முகாமிற்கு அனுப்பபட்ட அந்தப் பையனின் தந்தை, எதிர்ப்புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டது நிதர்சனமான போதும், நூலாசிரியர் "அந்த தந்தை ஒரு புரட்சிக்கு ஆதரவாக உழைத்த சாதாரண விவசாயி" என்று கூறுவது, சரித்திரத்தை திரிப்பதாகும். இருப்பினும் இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், அந்த சிறுவனை புரட்சியின் நாயகனாக சித்தரித்து, திரைப்படங்கள், கதைகள், கவிதைகள் உருவாக்கப்பட்டது உண்மைதான். பாடசாலைகளில் அந்த சிறுவனை முன்மாதிரியாக பின்பற்றுமாறு பிற மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.

திருமணமான தம்பதியருக்கிடையிலும், வர்க்க எதிரி குறித்த சந்தேகம் நிலவியது. மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், புரட்சிக்குப் பின்னர், முன்னர் அனுபவித்து வந்த  சலுகைகளை இழந்து, சாதாரண பிரஜைகளாக மாறியிருந்தனர். முன்னாள் பணக்கார, மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகள் யாராவது, திருமணம் முடிக்கும் நேரம், தமது வாழ்க்கைத் துணையிடம், தமது  குடும்ப பின்னணி பற்றி வாய் திறப்பதில்லை.  ஒரு வேளை, அது பின்னர் தெரிய வந்து, குடும்பத்திற்குள் மிகப் பெரிய  பிரச்சினையாக மாறினால், தம்பதிகள் விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றனர்.

தம்பதிகள் அரசியல் காரணங்களுக்காக மணமுறிவு பெறுவதை, நூலாசிரியர்  "தனி மனித துயரமாக" கருதினாலும்; ஒரு நாட்டில் புரட்சி நடந்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை இது கோடிட்டுக் காட்டுகின்றது.  நமது நாடுகளில், நகரங்களில் வாழும் வேறு பட்ட  சாதிகளை சேர்ந்தவர்கள், காதலித்து திருமணம் செய்தாலும், தமது குடும்பப் பின்னணியை மறைப்பதும், பின்னர் இந்த விடயம் தெரிய வரும் போது விவாகரத்து பெறுவதும், வழமையாக நடந்து வருகின்றன. நமது நாடுகளில் ஒரு சோஷலிசப் புரட்சி நடந்தால், இந்த நிலை தலைகீழாக மாறலாம். தமிழ் சமூகத்தில் உள்ள சாதி வெறியர்கள், கம்யூனிசத்தையும், ஸ்டாலினையும்  வெறுப்பது, ஒரு காரணத்தோடு தான்.  ஒரு புரட்சி நடந்தால், தங்கள் நிலைமை என்னவாகும் என்பதை, நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.

சோவியத் சமூகம் மாபெரும் மாற்றங்களை கண்டது. காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகள், கல்வியறிவைப் பெறுவதன் மூலம், தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள முடிந்தது. அதேநேரம் பூர்சுவா பிரிவை சேர்ந்த, சார் மன்னர் கால அதிகாரிகளின், நிலவுடமையாளர்களின், அல்லது பிற மேல் தட்டு வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளின் உயர்கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. (அடிப்படை கல்வி பெறுவதற்கு எந்த தடையுமில்லை. ஒரு காலத்தில் வசதியான மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள், தற்போது தீண்டத்தகாதவர்களாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டனர். இன்றைக்கும் உலகில் பலர் ஸ்டாலினை வெறுப்பதும், ஸ்டாலினிச பயங்கரவாதம் பற்றி பேசுவோரும் அஞ்சுவது மேற்குறிப்பிட்ட நிலை தமக்கும் வரக்கூடாது என்பதற்காக தான்.)

நாடு முழுவதும் வியாபித்திருந்த, உளவாளிகளின் வலைப்பின்னல், புரட்சிக்கு எதிரானவர்களையும், மக்கள் எதிரிகளையும், வர்க்க எதிரிகளையும் அடையாளம் காணும் நோக்கில் உருவாக்கப் பட்டிருந்தது. இந்த உளவாளிகள் யாராகவும் இருக்கலாம். சக ஊழியர்கள், சக மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று எவரையும் நம்ப முடியாத நிலை இருந்ததால், மக்கள் ஒருவருக்கொருவர் இரகசியமாக முணுமுணுக்கும் வழக்கத்தை கொண்டிருந்தனர். இருப்பினும், வர்க்க எதிரிகளாக்கப் பட்ட முன்னாள் நிலவுடமையாளர், பணக்கார விவசாயி, போன்றோரை அடையாளம் காண்பது ஒன்றும் கடினமான காரியமல்ல, என்ற விடயத்தை நூலாசிரியர் தெளிவுபடுத்தவில்லை. குறிப்பாக நகரங்களில், வேறு கொள்கைகளை கொண்டோர், அரசை விமர்சிப்பவர்கள் என்போரை கண்டுபிடிப்பது இலகுவான காரியமல்ல. இதனால் பல விசுவாசமான கம்யூனிஸ்ட்களும் கைதிகளாகி தண்டனைக்குள்ளானார்கள். போலிஸ் பிடித்து செல்லும் நேரத்தில் கூட சில தந்தையர், "நீ வருங்காலத்தில் ஒரு நல்ல கம்யூனிஸ்ட்டாக வர வேண்டும்" என்று கூறி, தமது பிள்ளைகளிடம் இருந்து பிரியாவிடை பெற்றுச் செல்வதை,  இந்த நூல் பதிவு செய்துள்ளது.

அரசியல் கைதிகள் சைபீரியாவின் பனிப் பாலைவன சிறை முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நூல் விவரிப்பது போல ஒன்றுமேயில்லாத பாலைவனத்தில் வாழ நேர்ந்தது, இதனால் லட்சக்கணக்கானோர் பனியில் உருகி இறந்தனர், என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்று. சார் மன்னர் காலத்திலேயே, சிறை முகாம்கள் மரத்தால் ஆன வீடுகளாக கட்டப்பட்டிருந்தன.ஸ்டாலின் காலத்தில், சைபீரியாவில் தங்கம் உட்பட பல கனிமப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை சுரங்கம் கிண்டி எடுக்கும் வேலையில் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்படிப்பட்ட சுரங்கங்களுக்கு அருகில் நவீன கட்டிடங்களை கொண்ட புதிய நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டன.

இவையெல்லாம் "ஒன்றுமில்லாத" பனிப் பாலைவனத்தில், வெறும் கைகளால் சாத்தியமாகியிருக்கும் என்று நூலாசிரியர் கூறுவது அம்புலிமாமா கதை. சைபீரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள், என்னதான் பயங்கரமான வர்க்க எதிரியாக இருந்தாலும், அவர்கள் வேலை செய்த போது வேதனம் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் சுரங்க தொழிலில் அதிக ஊதியம் கிடைப்பது கேள்விப்பட்டு, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சாதாரண தொழிலாளர் கூட, சைபீரியா சென்று குடியேறினர். இத்தகைய தகவல்களை இந்த நூல் புறக்கணிக்கின்றது. ஏனெனில் அதன் நோக்கம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை சொல்வது மட்டும் தான்.

Saturday, September 06, 2008

ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை

வெனிசுவேலா, தென் அமெரிக்க கண்டத்தில் எண்ணை வளம் மிக்க நாடு. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் லாபம், மொத்த அரச வருமானத்தின் அரைவாசியாக உள்ளது. அந்நாட்டில் இன்னும் 74 மில்லியன் பரல்கள் எண்ணை கையிருப்பில் உள்ளது. அமெரிக்காவின் பெட்ரோலிய தேவையின் 14 %, வெனிசுவேலாவில் இருந்து ஏற்றுமதியாகின்றது. இருப்பினும் அதன் பலன்களை மொத்த சனத்தொகையில் 20 % ஆன பணக்கார அல்லது உயர் மத்தியதர வர்க்கமே அனுபவித்து வந்தது. மிகுதி 80% மக்கள் வறுமையில் வாடினர். அங்கே நடந்த பொதுத்தேர்தலில், ஏழை மக்களின் சார்பில் போட்டியிட்ட சாவேஸ் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த சமூக அநீதிக்கு முடிவு வந்தது. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம், ஏழை மக்களுக்கும் போய்ச் சேர வேண்டுமென்பதே சாவேஸ் முன்மொழிந்த "பொலிவாரிய புரட்சி" யின் நோக்கம்.

பொலிவாரிய புரட்சியின் முதற்கட்டமாக, மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் புதிய அரசியல் நிர்ணய சட்டம் அமுலுக்கு வந்தது. ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம், கல்வி, கடனுதவிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதால், அவர்களும் முன்னேற வழியேற்பட்டது. மேலும் முதன்முறையாக ஒரு தேசத்தின் அதிபர், பொது மக்களின் பிரச்சினையை நேரடியாக கேட்கும் "Alo Presidente" (ஹலோ ஜனாதிபதி) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, சாவேசை "மக்களின் ஜனாதிபதி"யாக காட்டியது. அரச யாப்பு பற்றி சாதாரண மக்களுக்கும் எடுத்து சொல்லப்பட்டதால், அரசியல் அறிவு பெற்ற மக்கள், தாமும் ஜனநாயகத்தில் பங்குபற்றுவதன் மூலம், தமது தலைஎழுத்தை மாற்றலாம் என கண்டு கொண்டனர்.

ஆனால் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான செலவை பணக்கார வர்க்கம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அதாவது அவர்களது ஆடம்பர வாழ்க்கை, ஏழைகளுக்கு பங்கிட மறுத்த செல்வத்தின் மூலமே ஏற்பட்டதால், அதனை விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவைகள் யாவும் சாவேசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. ஜனநாயக தேர்தல் மூலம் பதவியில் அமர்ந்துள்ள சாவேஸ், தனக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும் தடை செய்ய நினைக்கவில்லை. வசதியான சிறுபான்மையினரே எதிர்ப்புரட்சி சக்திகளின் ஆதரவு தளமாக இருப்பதாலும், அதற்கு மாறாக பெரும்பான்மை மக்கள் சாவேசை ஆதரிப்பதாலும், சாவேஸ் எதிரிகள் தமது ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வருகின்றனர்.

12 April 2002 ம் ஆண்டு, பெரிய தொழிலதிபர்களின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஜனாதிபதி மாளிகை நோக்கி நகர்த்தப்பட்டது. சாவேஸ் ஆதரவாளர்கள் எதிரணியில் திரண்டனர். திடீரென்று இனம்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சிலர் கொல்லப்பட, துப்பாக்கி சன்னங்கள் வந்த திசை நோக்கி சாவேஸ் ஆதரவாளர்கள் சுடுவதை படம்பிடித்த தொலைக்காட்சி கமெராக்கள், அதனை சாவேஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஊர்வலம் மீது சுட்டதாக காட்டி செய்தியை திரித்தன. சர்வதேச ஊடகங்களும் அப்படியே நம்பின.

ஏற்கனவே திட்டமிட்டபடி, குழப்பநிலையை பயன்படுத்தி இராணுவத்தில் ஒரு படைப்பிரிவு, சாவேசின் எதிரிகளுடன் சேர்ந்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியது. சாவேசை பதவி விலக சொல்லி வற்புறுத்தியும், அவர் மறுத்ததால் தொலைதூர தீவொன்றுக்கு கொண்டு சென்று தடுத்து வைக்கப்பட்டார். (சி.ஐ.ஏ. மறைமுகமாக ஆதரவளித்த) சதிப்புரட்சி தலைவர்கள், அரச பதவிகளை பொறுப்பு எடுப்பதாக அறிவித்தனர். முதலாளிகள், பணக்காரர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் மத்தியதர வர்க்கத்தினர், தமது இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். அதுவரை வெனிசுவேலாவில் நடந்த அரசியல் மாற்றங்களை கண்டுகொள்ளாத சர்வதேச ஊடகங்கள், அப்போது மட்டும் திடீரென விழித்துக் கொண்டு சதிப்புரட்சி பற்றிய செய்தியை வெளியிட்டன.

சதிப்புரட்சி பற்றி கேள்விப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த போது, பொலிஸ் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இருப்பினும் சாவேஸ் பதவி விலகவில்லை என்றும், சதிகாரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் வந்த செய்தி, மக்களை கிளர்ந்தெழப் பண்ணியது. அடக்குமுறைக்கு அஞ்சாத லட்சக்கணக்கான மக்கள் சாவேசை திருப்பி கொண்டு வருமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். பெருந்திரளாக அதிபர் மாளிகையை, அங்கிருந்த புதிய அரசாங்கத்தை, முற்றுகையிட்டனர். இது தான் தருணம் என்று, சாவேசுக்கு விசுவாசமான படைகள் ஜனாதிபதி மாளிகையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மக்கள் சக்தியை கண்டு அஞ்சிய சதிப்புரட்சியாளர்கள், வேறு வழியின்றி சாவேசை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சதிப்புரட்சி நடந்த வேளை, ஜனாதிபதி மாளிகைக்குள் தற்செயலாக சிக்கிக் கொண்ட ஆவணப்படங்கள் தயாரிக்கும் குழுவொன்று, நடந்த சம்பவங்களை தமது கமெராவில் பதிவு செய்து கொண்டனர். வெனிசுவேலாவில் (அமெரிக்க சார்பு) ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்து ஏமாந்து போன சர்வதேச ஊடகங்கள் காண்பிக்காத அரிய படங்களை தொகுத்து "The Revolution will not be Televised" என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப் பட்டது. அந்தப்படத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
The Revolution will not be Televised


_________________________________________________________________________

வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்
_____________________________________________________________________________________

Friday, September 05, 2008

ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, பல அமெரிக்க தனியார் கம்பனிகளுக்கு லாபம் தரும் வர்த்தகமாக மாறியுள்ளது. "ஈராக் விற்பனைக்கு" என்ற ஆவணப்படம், அமெரிக்க அரசு ஈராக்கை எவ்வாறு தனியார் கம்பெனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விற்றுள்ளது, என்பதை சாட்சிகளின் அடிப்படையில் விளக்குகின்றது. Halliburton, Titan, Parsons, Dyncorp, Black Water, Transatlantic Traders... இவையெல்லாம் ஈராக் போரில் லாபம் சம்பாதிக்கும் அமெரிக்க நிறுவனங்களின் பட்டியல்.

ஈராக்கின் பாதுகாப்பு கடமைகளை(அல்லது ஆக்கிரமிப்பு வேலையை), அமெரிக்க அரச படைகளிடம் இருந்து, Black Water என்ற தனியார் இராணுவம் பொறுப்பெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் முகாமையாளர்கள் பலர் முன்னாள் இராணுவ அதிகாரிகள். அதிக சம்பளம் கிடைப்பதால், பல சாதாரண முன்னாள் இராணுவவீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்துள்ளனர். அமெரிக்க அரச படைக்கும், தனியார் இராணுவத்திற்குமிடையில் என்ன வித்தியாசம்? ஈராக் மக்களின் கொலைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் தனியார் இராணுவம் காரணமாக இருந்தால், அந்த நிறுவனம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. தனியார் இராணுவ வீரர்கள், அப்பாவி மக்களை கொலை செய்த விவகாரம் வெளியே வந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதே உயர்ந்த பட்ச தண்டனையாக இருக்கும். அதேநேரம் அமெரிக்க அரச படையினராக இருந்தால், இராணுவ நீதிமன்றத்தில் தண்டனைக்குள்ளாக வேண்டி இருக்கும். ஈராக்கில் இருக்கும் அமெரிக்க இராணுவத்தை தனியார்மயப்படுத்தியிருப்பதால், அமெரிக்க அரசாங்கமும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக் கொள்கின்றது.

ஈராக்கில் சிறைச்சாலைகள் கூட தனியார் நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளதால், சிறைக்கைதிகளை அவர்கள் விரும்புவது போல சித்திரவதை செய்ய முடியும். சித்திரவதை மூலம் பெறப்படும் தகவல்கள் கூட எந்த அளவிற்கு நம்பகரமானவை? ஏனெனில் அரபு-ஆங்கில மொழிபெயர்பாளர்கள் எல்லோரும் தகுதியானவர்களுமல்ல. அமெரிக்க இராணுவத்திற்கு மொழிபெயர்ப்பாளர்களை வழங்கும் தனியார் நிறுவனம், அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர்களையும் பணிக்கமர்த்தியுள்ளது.

இந்த தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்க மட்டத்தில் ஆளும் ரிப்பப்ளிக்கன் கட்சி தலைவர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளதால், பல ஒப்பந்தங்களை போட்டி இன்றியே எடுக்கின்றனர்.(ஊழல்?) ஒப்பந்த காலத்திற்கு இந்த நிறுவனங்களுக்கு கொடுக்கும் பணம், அமெரிக்க அரசாங்க கஜானாவில் இருந்தே வருகின்றது. அதாவது பொது மக்களின் வரிப்பணம்.

போர் என்பது உயிரிழப்புகளையும், சொத்தழிவையும் மட்டுமே கொண்டுவருவதில்லை. மனித அழிவுகளில் இருந்து லாபம் சம்பாதிக்க பல வியாபாரிகள் எப்போதும் காத்திருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவை பொறுத்தவரை போர் என்பது லாபம் தரும் வணிகம். இரண்டாம் உலகப்போரின் போது ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்ததன் மூலம் கொள்ளை லாபமீட்ட ஆரம்பித்த அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்கள், ஈராக் போரையும் தமது வியாபாரத்திற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக பார்ப்பதில் வியப்பில்லை.

IRAK FOR SALE

BLACK WATER

Tuesday, September 02, 2008

CNN ஒளிபரப்பிய(ஒளி மறைத்த) மொழி திரிப்பு வீடியோ

ரஷ்ய பிரதமர் புத்தின் "பனிப்போர்" பற்றி கூறிய கருத்துகளை CNN இருட்டடிப்பு செய்தது. கடந்த வாரம் CNN சார்பில் Matthew Chance ரஷ்ய பிரதமர் புத்தினை நேர்கண்டார். ஜோர்ஜிய போருக்கு பின் ஏற்பட்ட, மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான "பனிப்போர் நெருக்கடி" குறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பிய போது, புத்தின் அதற்கு தகுந்த பதில்களை அளித்த போதும், இதுவரை முழுமையான பேட்டியை பார்த்தவர்கள் மிகக்குறைவு. புத்தின் அமெரிக்கா குறித்து கூறிய குற்றச்சாட்டுகளை மட்டும் CNN தெரிந்தெடுத்து ஒளிபரப்பியது. அதுவும் சரியான மொழிபெயர்ப்பு செய்யாமல், மொழிதிரித்து தான் ஒளிபரப்பியது. எமக்கு ரஷ்ய மொழி தெரியாது என்பதால், ஏமாற்றுவது எளிதல்லவா?

இதோ முழுமையான புத்தின் நேர்காணல் வீடியோ(மூன்று பகுதிகள்), நேரடி ஆங்கில மொழிபெயர்ப்புடன் (உபதலைப்புகளாக) இங்கே பார்க்கலாம். அமெரிக்கர்களுக்காக CNN ஒளிபரப்பிய வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை நீங்களாகவே பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.

CNN Putin Video 1CNN Putin Video 2CNN Putin Video 3CNN transcript Video (truncated broadcast, for Western consumption)


_____________________________________________________________________________________
அமெரிக்க தொலைக்காட்சியின் தணிக்கை அம்பலம்
_____________________________________________________________________________________

Monday, September 01, 2008

உலகப்போரில் மறைக்கப்பட்ட கறுப்பு வீரர்கள்

2 ம் உலகப்போரில் லட்சக்கணக்கான இந்திய,அரேபிய,ஆப்பிரிக்க வீரர்களின் உதவியின்றி, பிரிட்டனும், பிரான்சும் போரில் வென்றிருக்க முடியாது. ஆனால் அவர்கள் இராணுவத்திற்குள் இனவாத பாகுபாட்டுக்கு உள்ளாகினர். வெற்றி கிடைத்தவுடன் வெகு விரைவில் புறக்கணிக்கப்பட்டனர். வெற்றிவிழா அணிவகுப்பில் "கறுப்பு வீரர்கள்" தவிர்க்கப்பட்டனர். ஊடக ஒளிப்படக்கருவிகள் வெள்ளையின வீரர்களை மட்டுமே படம் பிடித்தன. போர் முடிந்தவுடன், காலனிய நாடுகளின் வீரர்கள் அவரவர் தாயகங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். முன்னாள் படையினருக்கான ஓய்வூதியப்பணம் கொடுக்கப்படவில்லை, அல்லது வெள்ளை வீரருக்கு கொடுப்பதின் 70 வீதம் மட்டுமே வழங்கப்பட்டது.

2 ம் உலகயுத்தத்தில், பிரிட்டிஷ் கொடியின் கீழ் போரிட்ட 11 மில்லியன் படைவீரர்களில், அரைவாசிப்பேர் இந்திய உபகண்டத்தை சேர்ந்த சிப்பாய்கள். குறிப்பாக வட ஆப்பிரிக்காவில் இவர்களது உதவியினால் தான் நாஸி- ஜெர்மன் படைகளை விரட்ட முடிந்தது. அல்லாவிட்டால் அன்று ஜெர்மனி எண்ணைவள வளைகுடா நாடுகளை கைப்பற்றியிருப்பதுடன், யுத்தம் வேறுவிதமாக முடிந்திருக்கும். ஆரம்பத்தில் இந்தியப்படையினரை பயன்படுத்த, அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் விரும்பவில்லை. என்ன இருந்தாலும், "இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதால் வெறுப்பதாக" கூறியவர் ஆயிற்றே, எப்படி விரும்புவார். பிரான்சாவது தனது படையில் பணிபுரிந்த அரேபியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இன்றுவரை ஓய்வூதியமாவது (70 வீதமாகிலும்) வழங்கி வருகின்றது. பிரிட்டன் பெரும்பாலும் எதுவுமே கொடுக்கவில்லை. காயமடைந்தவர்களுக்கு 10 பவுன் (அதுவும் ஒரு முறை) மாத்திரம் கொடுத்தது !

படைநகர்த்தல்களில் எடுக்கப்பட்ட உயர்மட்ட முடிவுகள் பல இனவாத அடிப்படையில் இருந்தன. பிரித்தானியாவை பாதுகாக்க வந்த அமெரிக்க படைகளில் கறுப்பு வீரர்களை அனுப்ப வேண்டாம் என்று, பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது. இத்தாலியின் பல பகுதிகளை முசோலினியின் பாசிச படையினரிடமிருந்து மீட்டெடுத்த, மொரோக்கோ வீரர்களை கொண்டிருந்த பிரெஞ்சு படைப்பிரிவு, ரோமை நோக்கி முன்னேறாதவாறு தடுக்கப்பட்டது. பின்னர் வெள்ளையின வீரர்களை கொண்ட பிரெஞ்சுபடை மட்டுமே ரோம் நகரவீதிகளில் வெற்றி உலா வந்தது. காரணம், கத்தோலிக்க தலைநகரான ரோமை முஸ்லிம்கள் விடுவித்ததாக சரித்திரத்தில் எழுதப்பட்டுவிடக் கூடாது என்பதாம்.

2 ம் உலகயுத்தத்தில் போரிட்ட பிரெஞ்சு இராணுவத்தில், 23 வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த வீரர்கள் அனைவரும் அப்போதிருந்த பிரெஞ்சு காலனிகளை சேர்ந்தவர்கள். போர்க்களத்தில் அவர்கள் தான், பெரும்பாலும் பீரங்கிக்கு இரையாகினர். பிரெஞ்சு இராணுவத்தில் சேர்ந்து, ஐரோப்பாவில் நடந்த யுத்தத்திற்கு போக அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. பலருக்கு வறுமை காரணமாக இருந்தது, அல்லது பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வற்புறுத்தல் காரணமாக இருந்தது. அதேநேரம் கணிசமான தொகையினர், குறிப்பாக அல்ஜீரியர்கள், பிரான்சுக்கு உதவி செய்வதன் மூலம் தமது தாயகத்தின் விடுதலையும் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பினர். ஆனால் போர் முடிந்த உடனேயே அவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்தது. 1945 ம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது, அல்ஜியர்ஸ் நகரில் அல்ஜீரிய தேசியக்கொடிகளை பறக்கவிட்டதன் காரணமாக, ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்களை பிரெஞ்சு இராணுவம் கொன்று குவித்தது. அதன் பின்னர் தொடர்ந்த நீண்ட ஆயுதப்போராட்டம் மூலமே அல்ஜீரியர்கள் தமது விடுதலையை பெற்றுக்கொண்டனர்.

போருக்குப் பின்னரான காலகட்டத்தில் வந்த திரைப்படங்கள் யாவும் வெள்ளையின வீரர்களையே பெரும்பாலும் காட்டுகின்றன. அண்மையில் கூட அமெரிக்க தயாரிப்பாளர் ஈஸ்ட்வூட் "Letters from Iwo Jima" என்ற தலைப்பில், ஜப்பான் தீவொன்றை அமெரிக்கவீரர்கள் கைப்பற்றிய சம்பவத்தை வைத்து எடுத்த படத்தில், கறுப்பு முகங்களை காணாததை பற்றி கண்டனக்குரல்கள் எழுந்தன. ஏனெனில் அந்த தீவை கைப்பற்றிய அமெரிக்க கடற்படைபிரிவில் 90 வீதமானவர்கள் கறுப்பின வீரர்கள்.

2006 ம் ஆண்டு, பிரான்சில் வெளியிட்ட "Indigénes" என்ற திரைப்படம், அந்நாட்டில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக ஒரு திரைப்படம், 2 ம் உலகயுத்தத்தில் பங்குபற்றிய அல்ஜீரிய, மொரோக்கோ வீரர்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அவர்களின் பங்களிப்பை கண்டுகொள்ளாது விட்ட பிரெஞ்சு அரசாங்கம், புத்திஜீவிகள், ஊடகங்கள் என்பன அதற்கு பின்னர் உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொள்ள நேர்ந்தது. இந்த திரைப்படம் வந்ததன் விளைவாக, முன்னாள் காலனிய வீரர்களின் ஓய்வூதியம் பிரெஞ்சு(வெள்ளையின) வீரர்களின் அளவு சமமாக்கப்பட்டது.

"எமது பாட்டன்மார் பிரான்சிற்காக சண்டையிட்டு மடிந்தனர், எமது தந்தைமார் பிரான்சை கட்டி எழுப்பினர். எமது தலைமுறையின் கடமை இந்தக்கதைகளை சொல்வது." என்று கூறுகிறார் அந்தப்படத்தின் முன்னனி நடிகர் Jamel Debbouze. இந்தப்படத்தை பிரெஞ்சு அரசாங்கத்தின் ஒப்புதல் இன்றி, பெரும் பணச்செலவில் தயாரித்திருக்க முடியாது. ஏனெனில் "பிரான்ஸ் என்ற தாயகத்தில், எல்லோரும் இந்நாட்டு மக்கள்." என்ற கருத்தை கொண்டிருப்பதால், அந்தப்படத்திற்கு தீவிர வலதுசாரிகளைத் தவிர பிறரின் ஆதரவு கிடைத்ததில் வியப்பில்லை.

Les Indigènes (Days of Glory)
Tell a Friend
______________________________________________________