Sunday, March 31, 2013

ஏசு கிறிஸ்துவுக்கு சம்பந்தமில்லாத ஈஸ்டர் பண்டிகை!


இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப் பட்டு மரணிக்கவில்லை! சிலுவையில் அறைந்து சில மணிநேரங்களின் பின்னர், குற்றுயிராகக் கிடந்த இயேசு இறக்கி விடப் பட்டு, உயிர் பிழைத்து எழுந்தார். அதன் பிறகு நீண்ட காலம் உயிரோடு வாழ்ந்தார். இன்றைக்கும் பலர், இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் படவில்லை என்று நம்புகின்றனர். அதற்கு, அவர்கள் நிறைய காரணங்களை கூறுகின்றனர். 

இயேசுவை ஆணியால் அறைந்த காரணத்தினால், இரத்தப் பெருக்கு ஏற்பட்டு, மூச்சடக்கி மரணமடைந்திருக்கலாம் என்று தான் பொதுவாக நம்பப் பட்டது. இன்று, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள சில கிறிஸ்தவ பக்தர்கள், ஒவ்வொரு வருடமும் பெரிய வெள்ளி அன்று, தம்மை சிலுவையில் அறைந்து கொள்கின்றனர். சில மணி நேரங்களின் பின்னர், ஆணிகள் அகற்றப்பட்டு, சிலுவையில் இருந்து இறக்கி விடப் படுகின்றனர். இன்று வரையில் யாரும் சிலுவையில் சாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அதாவது, சிலுவையில் ஆணியால் அறையப் பட்டாலும், சில மணிநேரங்களில் மரணம் சம்பவிக்க வாய்ப்பில்லை. அதற்கு நாள் கணக்காகலாம். மேலும், இந்தியாவில் சில யோகிகள், இறந்தது போல மூச்சடக்கி வைத்திருக்கும் யோகா பயிற்சியை செய்து காட்டியுள்ளனர். 

இயேசு முப்பது வயதில் பிரசங்கம் செய்யத் தொடங்குவதற்கு முந்திய காலத்தை பற்றி, விவிலிய நூலில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், இன்றுள்ள விவிலிய நூலில் சேர்த்துக் கொள்ளப் படாத சில நூல்கள் உள்ளன. "ஞானிகள்" (கிரேக்க மொழியில் ஞோஸ்தி, http://en.wikipedia.org/wiki/Gnosticism) என்ற கிறிஸ்தவ பிரிவினர், அந்த காலகட்டத்தில் இயேசு இந்தியா சென்றிருந்தார் என்றும், அங்கு இறையியல், யோகா போன்றவற்றை பல முனிவர்களிடம் இருந்து கற்றறிந்து கொண்டதாக நம்புகின்றனர்.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவானவர், மரணிப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர், " என் இறைவா, என் இறைவா, என்னை ஏன் கைவிட்டீர்?" என்று தனது இயலாமையை ஆண்டவரிடம் முறையிட்டதாக விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ளது. இன்றைக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள், இயேசுவின் கூற்றை மேற்கோள் காட்டி பேசுவது வழக்கம். அந்தப் பிரபலமான வாக்கியம், உண்மையில் (யூதர்களின் பைபிளான) பழைய ஏற்பாட்டில் எழுதப் பட்டுள்ளது. தாவீது மன்னன் எழுதிய, திருப்பாடல்கள் என்ற நூலில் உள்ளது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு, திருப்பாடல்களில் ஒன்றை பாடியிருக்க வேண்டும்.
" என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?"   (திருப்பாடல் 22-1, திருவிவிலியம்) 

பழைய ஏற்பாட்டில், திருப்பாடல்களில், தாவீது மன்னன் எழுதிய பாடல் வரிகள், இயேசு சிலுவையில் அறையப்பட்ட சம்பவத்தை எமக்கு நினைவு படுத்துகின்றன!  அப்படி  என்ன எழுதியிருக்கிறது என்பதை, நீங்களாகவே வாசித்து அறிந்து கொள்ளுங்கள்:

 " நானோ ஒரு புழு, மனிதனில்லை; 
மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; 
மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; 
உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 
" ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும், தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்","  என்கின்றனர். 
என்னைக் கருப்பையினின்று வெளிக் கொணர்ந்தவர் நீரே; 
என் தாயிடம் பால் குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே! 
கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே! 
என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; 
ஏனெனில், ஆபத்து நெருங்கி விட்டது; 
மேலும், உதவி செய்வார் யாருமில்லை. 
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன; 
பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன. 
அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; 
இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள். 
நான் கொட்டப்பட்ட நீர் போல் ஆனேன்; 
என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின; 
என் இதயம் மெழுகு போல் ஆயிற்று; 
என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. 
என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; 
என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; 
என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். 
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; 
நாய்கள் என அவர்கள் என்னைச் சூழந்து கொண்டார்கள்; 
என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். 
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; 
அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள். 
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; 
என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்; 
என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். 
வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; 
இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்;
இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; 
காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்."   
(திருப்பாடல் 22:6-21, திருவிவிலியம்)


இயேசு இறந்த பின்னர், அவரை சிலுவையில் இருந்து இறக்கி கீழே வைத்ததாக, பைபிளில் எழுதப் பட்டுள்ளது. ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமான பாலஸ்தீனத்தில், யூதர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்தனர்.  வெள்ளி மாலை, யூதர்களின் "சபாத்" (ஹீபுரு மொழியில்: சனிக்கிழமை) பண்டிகை நாள் ஆரம்பமாகின்றது. கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை போன்று, முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை போன்று, யூதர்களுக்கு சனிக்கிழமை (சபாத்) புனித நாளாகும். 

அன்றைய காலங்களில், பாலஸ்தீனத்தை ஆண்ட ரோமர்கள், யூத மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்ட கைதிகள் அனைவரையும் சபாத் வருவதற்கு முன்னர், சிலுவையில் இருந்து இறக்கி விடுவார்கள். ஆகவே, ஒரு வெள்ளிக்கிழமை பிற்பகல் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை, எப்படியும் அன்று மாலைக்குள் அவிழ்த்து விட்டிருப்பார்கள். 

அப்படிப் பார்த்தால், அன்று இயேசு சில மணி நேரங்களே சிலுவையில் தொங்கியிருப்பார். அதற்குள், ஒரு சராசரி மனிதனுக்கு மரணம் சம்பவிக்க வாய்ப்பில்லை. அன்றைய காலத்தில் இருந்த ரோமர்களின் தண்டனை முறைகளை வைத்துப் பார்க்கும் பொழுது, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டிருக்க வாய்ப்பில்லை என்று, பல அறிஞர்களும் ஆய்வு செய்து கூறியுள்ளனர். (Jesus did not die on cross, says scholar, http://www.telegraph.co.uk/news/religion/7849852/Jesus-did-not-die-on-cross-says-scholar.html)  

ஆபிரஹாம் முதல் முகமது வரையிலான இறைதூதர்கள் வரிசையில், இயேசுவையும் ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்களும், இயேசு சிலுவையில் கொல்லப் படவில்லை என்றே நம்புகின்றனர். திருக்குரானிலும் அதனை உறுதிப் படுத்தும் வாசகங்கள் உள்ளன.


"மரியாளின் புதல்வனும், இறைத்தூதருமான ஈசா (கிறிஸ்து)வை, அவர்கள் கொன்றதாக சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அவரைக் கொல்லவில்லை, அவர்கள் சிலுவையில் அவரது மரணத்தை உண்டாக்கவில்லை..."  (திருக் குரான் 4:157)


குரானிலும், அரபு மொழியிலும் "ஈசா" என்ற சொல்லால், இயேசு கிறிஸ்துவை அழைக்கின்றனர். (ஈசா என்பது, ஈசன் என்ற சம்ஸ்கிருத/தமிழ்ச் சொல்லை ஒத்திருப்பதை கவனிக்கவும்.) பழைய ஹீபுரு அல்லது அராமி மொழியில், இயேசுவை யாசு (Yazu) என்று அழைப்பார்கள். (யேசுஸ் என்ற கிரேக்க சொல்லில் இருந்து தான், ஆங்கிலச் சொல்லான "ஜீசஸ்" வந்தது.) இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், காஷ்மீரில், ஸ்ரீநகர் நகரத்திற்கு அருகில், இயேசுவின் சமாதி உள்ளதாக, அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். 

ஸ்ரீநகரில் உள்ள புனிதரின் சமாதியில் Yuz Asaf என்று எழுதப் பட்டுள்ளது. "யூசப், யாசு, இயேசு, ஈசா", எல்லாம் ஒரே மாதிரியான பெயர்களாக தோன்றவில்லையா? சிலுவையில் இருந்து உயிர் தப்பிய இயேசு, காஷ்மீர் வந்து சேர்ந்தார். அங்கு தனது மதப் பிரசங்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். இறுதிக் காலத்தையும் காஷ்மீரில் கழித்துள்ளார். இவ்வாறு, காஷ்மீர் மக்களில் ஒரு பகுதியினர் இன்னமும் நம்புகின்றனர்.  

காஷ்மீர் முஸ்லிம்களில்,  "அஹ்மதியா" என்ற ஒரு பிரிவினர், இயேசு கிறிஸ்துவையும் முக்கியமான இறைதூதராக நம்புவதால், பிற முஸ்லிம்களிடம் இருந்து அந்நியப் பட்டுள்ளனர். காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகள், இன்னமும் அங்கேயுள்ள "இயேசுவின் சமாதியை" தரிசிக்கலாம். (Is the tomb of Jesus at Khanyar Rozabal in Kashmir?, http://www.youtube.com/watch?v=7aauXxuLHnQ


இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறைந்ததால் கொல்லப் படவில்லை. பெரிய வெள்ளி என்பது, இயேசு சிலுவையில் இறந்த நாளைக் குறிக்கவில்லை. ஈஸ்டர் என்பது, இயேசு கிறிஸ்து மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும்  உயிர்த்த ஞாயிறும் அல்ல. அப்படியானால், நாம் எதற்காக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றோம்? 


"ஈஸ்டர்" என்பது, கிறிஸ்துவுக்கு முந்திய ஐரோப்பியரின் மத நம்பிக்கையில் வரும் தேவதை ஒன்றின் பெயர். (Ēostre, http://en.wikipedia.org/wiki/%C4%92ostre) அந்த பெண் தெய்வத்தின் பண்டிகைக்  காலம், வசந்த காலத்தின் வருகையை கொண்டாடுவதற்காக ஏற்படுத்தப் பட்டது. அன்று இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மக்கள், புல்வெளியில் முயல் துள்ளி விளையாடுவதைக் கண்டால், வசந்த காலம் வந்து விட்டது என்று புரிந்து கொண்டார்கள். அதனால் இன்றைக்கும் ஐரோப்பிய நாடுகளில், ஈஸ்டர் பண்டிகை அன்று, முயல் வடிவிலான சாக்லேட், பிஸ்கட் என்பன செய்து உண்கிறார்கள். 


ஈஸ்டர் பண்டிகையின் இன்னொரு சடங்காக முட்டை வைக்கப் படுகின்றது. வாழ்க்கையின் முடிவில்லாத சுழற்சியை, ஒரு தத்துவமாக உணர்த்தும் முட்டையும் கிறிஸ்துவுக்கு முந்திய, ஐரோப்பியரின் வேற்று மத நம்பிக்கை தான். இன்றைய மதச்சார்பற்ற ஐரோப்பிய நாடுகளில், ஈஸ்டர் ஒரு கிறிஸ்தவ மதப் பண்டிகையாக கருதப் படுவதில்லை. 

ஈஸ்டர் என்றால், முயல், முட்டை வடிவில் செய்யப்பட்ட தின்பண்டங்கள் தான் பலருக்கு நினைவுக்கு வரும். முன்னாள் ஐரோப்பிய காலனிகளில் வாழும் கிறிஸ்தவ மக்கள் மட்டுமே, பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) என்பன கிறிஸ்தவ மதப் பண்டிகைகள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.கிறிஸ்தவ பண்டிகைகள் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!
2.கிறிஸ்துமஸ் தாத்தாவின் நிறவாதம்

கிறிஸ்தவ மதம் பற்றிய வேறு பதிவுகள்:
1.அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்
2.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!
3.கிறிஸ்தவம்: .அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

Thursday, March 28, 2013

சுற்றுலாப் பயணிகளை கவரும் கம்யூனிச சொர்க்கம்மாவோவின் மரணத்திற்குப் பின்னர், சீனாவின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய டென்ங்சியாபிங், சோஷலிசத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு, சந்தைப் பொருளாதாரத்தை தழுவிக் கொண்டார். எண்பதுகளுக்குப் பிறகு, சீனாவின் சோஷலிச கட்டுமானங்கள் படிப்படியாக தகர்க்கப்பட்டு, முதலாளித்துவ பொருளாதாரம் புகுத்தப் பட்டது. இதனால், தன்னிறைவுப் பொருளாதாரத்தை கொண்ட கம்யூன் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இன்று சீனாவுக்கு செல்லும் யாரும், முதலாளித்துவ சீனாவை தான் தரிசிப்பார்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த சோஷலிச சீனா, எப்படி இருந்திருக்கும் என்பது இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு தெரியாது. ஆனால், இன்றைக்கும் ஓரிடத்தில் பழைய சோஷலிச கட்டுமானங்களை கொண்ட கிராமம் (அல்லது நகரம்) ஒன்று, திறந்த வெளி அருங்காட்சியகம் போன்று பாதுகாக்கப் படுகின்றது. சீனாவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், சீனாவில் வாழும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அந்த இடத்திற்கு சென்று வருகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, அன்றைய கம்யூனிச சீன எப்படி இருந்திருக்கும் என்று, அங்கு செல்பவர்கள் கண்டு களிக்கலாம்.

நாஞ்சிசுன் (Nanjiecun) என்ற ஊரில், மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்கின்றனர். முப்பது வருடங்களுக்கு முன்னர், முதலாளித்துவ சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, கம்யூனிசக் கொள்கைக்கு விசுவாசமாக இருப்பதற்கு முடிவு செய்தனர். அவர்களுக்கு அயலில் இருக்கும் ஊர்கள் எல்லாம், முதலாளித்துவத்திற்கு மாறியதால், ஒரு பக்கம் ஏழைகளும், மறுபக்கம் பணக்காரர்களும் அதிகரித்தனர். அந்த ஊர்களில், வேலயில்லாத் திண்டாட்டம், ஊழல், திருட்டு, விபச்சாரம், போதைவஸ்து பாவனை என்று, முதலாளித்துவத்திற்கே உரிய பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டன. பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் தோன்றின.  ஆனால், நாஞ்சிசுன் மக்கள், அவற்றைப் பற்றிய எந்தக் கவலையுமற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 
அதை ஏன் சொர்க்கம் என்று அழைக்க வேண்டும்? நாஞ்சிசுன் நகர தெருக்கள் சுத்தமாக வைத்திருக்கப் படுகின்றன. தெருவில் பிச்சை எடுப்போரைக் காண முடியாது. அங்கே வேலையில்லாப் பிரச்சினை என்ற பேச்சே கிடையாது. எல்லோருக்கும் தொழில் வாய்ப்புண்டு. வீடின்றி யாரும் இல்லை. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசதியான வீடுகளில் வாழ்கின்றனர். இந்தியாவில் அது போன்ற வீடுகளில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கலாம். நாஞ்சிசுன் வாழ் மக்கள், அந்த வசதியான வீடுகளுக்கு வாடகை கட்டுவதில்லை என்பது தான் விசேஷம். வீடு அவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றது. வீட்டு பாவனைக்கு தேவையான மின்சாரம் கூட இலவசமாகக் கிடைக்கின்றது. 

பெற்றோர், பிள்ளைகளின் படிப்புச் செலவுகளுக்கு என்று, பணம் சேர்க்கத் தேவையில்லை. பாலர் பாடசாலையில் இருந்து, பல்கலைக்கழகம் வரையில் கல்வி இலவசம். எதிர்பாராமல் வரும், மருத்துவ செலவுக்காவும் பணத்தை சேமித்து வைத்திருக்க தேவையில்லை. சாதாரணமாக வைத்தியரிடம் பரிசோதிப்பது முதல், அறுவைச் சிகிச்சைகள் வரையில் அனைத்தும் இலவசம். இதை எல்லாம், சீனாவின் பிற பகுதிகளில் நினைத்தும் பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, இந்தியாவில் கல்விக்கும், மருத்துவத்திற்கும் செலவளிப்பதற்காக, ஒரு சராசரி குடிமகன் என்ன பாடுபட வேண்டுமோ, அதே நிலைமை தான் இன்றைய சீனாவிலும் உள்ளது. 


வெறும் 3500 பேரை சனத்தொகையாக கொண்டிருந்தால், அது ஒரு கிராமம். ஆனால், நாஞ்சிசுன் ஒரு நகரம் போலக் காட்சியளிக்கின்றது. ஒரு நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் அங்கே உண்டு. நமது நாட்டில், தினசரி எத்தனை பேர்  கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர்? பிள்ளைகளின் படிப்புக்காக, வேலை வாய்ப்புக்காக, மருத்துவ வசதிக்காக, இவ்வாறு பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டு நகரங்களில் குடியேறுகின்றனர். இன்றைய முதலாளித்துவ சீனாவிலும் அது தான் நிலைமை. ஆனால், நகரங்களில் கிடைக்கும் அத்தனை வசதிகளும், கிராமங்களில் கிடைத்தால், யாராவது குடிபெயர யோசிப்பார்களா? 

விரும்பினால், ஒரு சுற்றுலாப் பயணியாக, மற்ற இடங்களை பார்த்து விட்டு வரலாம். அதைத் தான் நாங்கள் கம்யூனிசம் என்று சொல்கிறோம். அதாவது, ஒரு கம்யூனிச சமுதாயத்தில், நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து விடும். முன்பு சோஷலிச நாடுகளாக இருந்த, ரஷ்யாவோ, சீனாவோ அந்தளவு வளர்ச்சி அடைந்து விடவில்லை, என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஆனால், சில இடங்களில் அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடந்துள்ளன. நாஞ்சிசுன் கம்யூன் அப்படியான மாதிரிக் கிராமங்களில் ஒன்று. கடந்த முப்பது வருடங்களாக, அது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது ஒரு சாதனை தான். 

ஒரு கம்யூன் எப்படி இயங்குகின்றது? சுருக்கமாக சொன்னால், அது ஒரு தனி நாடு. பாதுகாப்பு போன்ற சில விடயங்களைத் தவிர, தனது பொருளாதாரத்தை தானே தீர்மானித்துக் கொள்கின்றது. கம்யூன் உறுப்பினர்களுக்கு இடையில் அந்தஸ்து வேறுபாடு கிடையாது. சமுதாயத்தில் உயர்வு, தாழ்வு கிடையாது. எல்லோரும் சமமாக மதிக்கப் படுகின்றனர். 

ஒரு கம்யூனில், அதன் "குடி மக்கள்", கூட்டுத்துவ உழைப்பை செலுத்துகின்றனர். தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை தாமே பயிரிட்டுக் கொள்கின்றனர். பால், இறைச்சி போன்றவற்றிற்காக, விலங்குப் பண்ணைகளை அமைகின்றனர். உணவை பதப் படுத்துவதற்கு, அல்லது அந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் மூலப் பொருட்களை பாவனைப் பொருட்களாகுவதற்காக, தொழிற்சாலைகளை கட்டுகின்றனர். அவற்றை சுற்றி, சேவைத் துறைகளும் உருவாகின்றன. நாஞ்சிசுன் கிராமம், தனக்கென்று சொந்தமாக மின்சாரம் உற்பத்தி செய்து கொள்ளுமளவிற்கு, அது பல high tech தொழிலகங்களை கொண்டுள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளில் பணி புரிவோர் எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆனால், உழவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது சேவையை வழங்குகின்றனர். 

ஒரு கம்யூனில், பணப் புழக்கம் கிடையாது. அதனால், அங்கே லஞ்சம், ஊழலும் கிடையாது. நாம் பயன்படுத்தும் நாணயத் தாளுக்கு பதிலாக, ஒரு பொருளின், சேவையின் பெறுமதி கணக்கிடப் படுகின்றது. இன்றைய நாகரிக உலகில், வங்கி அட்டைகளையும், கடன் அட்டைகளையும் மட்டுமே பாவிக்கும் மக்களும், காசை கண்ணால் காண்பதில்லை. 

கம்யூன் மக்களின் உழைப்பு அதிகரிக்கும் பொழுது, அவர்களின் செல்வமும் அதிகரிக்கின்றது. இன்று நாஞ்சிசுன் கிராமம், அயலில் உள்ள நூற்றுக் கணக்கான கிராமங்களை விட  "பணக்கார கிராமமாக" உள்ளது.  நாஞ்சிசுன் கம்யூனில் வசிக்கும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அயல் கிராமங்களில் இருந்து வேலை தேடி வந்தவர்கள், என்பது குறிப்பிடத் தக்கது. 

வேலை வாய்ப்பு, அதிக சம்பளம் போன்ற காரணங்களுக்காக ஒரு நகரத்திற்கு, அல்லது பணக்கார நாடொன்றுக்கு வேலை தேடி செல்லும் தொழிலாளர்கள் போன்று தான், அவர்களும் நாஞ்சிசுன் கம்யூனில் தங்கி இருக்கின்றனர். "குடிவரவாளர்களான" அயல் கிராம தொழிலாளர்களுக்கு, இலவச தங்குமிடமும், உணவும் கிடைக்கின்றது. அது மட்டுமல்ல, அவர்கள் தமது சொந்த ஊரில் சம்பாதிப்பதை விட அதிகளவு சம்பளம் பெறுகின்றனர். 

சீன முதலாளித்துவ ஆதரவாளர்கள், நாஞ்சிசுன் கம்யூனைப் பற்றி குறை சொல்லாமல் சும்மா இருக்கவில்லை. சீன அரசில், சில மேல் மட்ட நண்பர்களின் செல்வாக்கு, அவர்களின் உதவியால் கிடைக்கும் கடன்கள், குடியேற்ற தொழிலாளரின் கூலி உழைப்பு போன்ற பல காரணங்களினால் தான் அந்தக் கம்யூன் இயங்கிக் கொண்டிருப்பதாக குறை கூறுகின்றனர். 

ஆனால், இதே மாதிரியான குற்றச் சாட்டுகள், இஸ்ரேலை ஸ்தாபித்த கிப்பூட்ஸ் பண்ணைகள் மீதும் சுமத்தப் பட்டன. 20 ம் நூற்றாண்டு தொடக்கத்தில், பாலஸ்தீனத்தில் குடியேறிய மார்க்சிய யூதர்கள், அங்கே கம்யூனிசப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களை உருவாக்கினார்கள். அவர்களுக்கு சர்வதேச யூத நிதியத்தில் இருந்து கடனுதவி கிடைத்தது. மேலும், அயல் கிராமங்களில் இருந்த பாலஸ்தீன கூலித் தொழிலாளர்களின் உழைப்பையும் பயன்படுத்தினார்கள். 

சீனா முழுவதிலும் இருந்து, தினசரி ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாஞ்சிசுன் கம்யூனை பார்வையிட வந்து செல்கின்றனர். "கம்யூனிச சுற்றுலா" வருபவர்களிடம் இருந்தும், அந்த கிராமத்திற்கு மேலதிக வருமானம் கிடைக்கிறது. அங்கிருக்கும் முப்பதடி உயரமான மாவோ சிலை, அதற்கு அருகில் உள்ள மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் உருவப் படங்களும் சுற்றுலாப் பயணிகளை கவருகின்றன. அதற்கருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். திரும்பிப் போகும் பொழுது, உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பதற்காக, பல நினைவுப் பரிசுகளை வாங்கிச் செல்கின்றனர்.  

மேலதிக தகவல்களுக்கு: 
1.In China, a Place Where Maoism Still Reigns
2.Nanjie Cun: the village that time forgot

கீழே உள்ளது ஒரு ஜெர்மன் மொழி ஆவணப்படம். நாஞ்சிசுன் கம்யூன் மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுமையாக படம் பிடித்துக் காட்டுகின்றது. மொழி தெரியாதவர்களும் பார்த்து இரசிக்கலாம்:************************************

கம்யூனிச சமுதாயங்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:
ஸ்பெயினில் ஒரு பொருளாதார அதிசயம்: வளமான கம்யூனிச சமுதாயம்

Tuesday, March 26, 2013

வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான சைப்ரசில், வரலாறு காணாத வங்கிக் கொள்ளை ஒன்று நடந்துள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தினுள் ஆதிக்கம் செலுத்தும் ஜெர்மனியை சேர்ந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள், சைப்ரஸ் நாட்டு வங்கிகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.  அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, மக்களின் சேமிப்புப் பணத்தில் இருந்து ஒரு தொகை, வெளிநாட்டு கடனை அடைக்க பயன்படுத்தப் படப் போகின்றது. ஒரு சேமிப்பாளர் ஒரு இலட்சம் யூரோக்களுக்கு அதிகமாக பணம் வைப்பிலிட்டு இருந்தால், அந்த தொகையில் பத்து சத வீதம் கழிக்கப் பட வேண்டும். 

சைப்ரஸ் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான Laiki Bank, முதலாளித்துவ பயங்கரவாதிகளால் முற்றாகத் தகர்க்கப் பட்டுள்ளது. இந்த "பயங்கரவாத தாக்குதல்" காரணமாக, ஆயிரக் கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவி என்ற பெயரில், ஐரோப்பிய ஒன்றிய வழங்கிய கடனை அடைப்பதற்காக, இன்னும் பல்லாயிரம் வேலைகள் பறிக்கப் படவுள்ளன. இதனால், சைப்ரஸ் மென்மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப் படுவதுடன், வேலையில்லாப் பிரச்சினையும் அதிகரிக்கும். 

மேற்கு ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர், தமது சேமிப்புப் பணத்தை அங்குள்ள வங்கிகளில் வைப்பிலிட விரும்புவதில்லை. ஆனால், இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ விடுமுறையை கழிப்பதற்கு செல்லும் நேரம், அங்குள்ள வங்கி ஒன்றில் வைப்பிலிட்டு விட்டு வருவார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம்: "ஐரோப்பிய வங்கிகளில் சேமிப்பு பணத்திற்கு கொடுக்கும் வட்டி வீதம் குறைவு. நமது நாட்டு வங்கிகளில், பல மடங்கு அதிகமான வட்டி கொடுக்கிறார்கள்."  குறைந்த வட்டி கொடுக்கும் மேற்கத்திய நாடுகளின் வங்கிகளுக்கும், அதிகளவு வட்டி கொடுக்கும் கீழைத்தேய நாடுகளின் வங்கிகளுக்கும் என்ன வித்தியாசம்? 

மேற்கத்திய நாடுகளில் உள்ள வங்கிகளில், ஏற்கனவே வட்டி வீதம் குறைவாக இருப்பது மட்டுமல்ல, அது பண வீக்கத்திற்கு ஏற்ப அதிகரிப்பதில்லை என்பது ஒரு தீமை தான். அதே நேரத்தில், குறைந்தளவு வட்டி கொடுத்தாலும், வங்கித் துறையும், அரசுகளும் நிலையானவை. பெரும் மூலதனத்தின் நேரடிப் பயன்களை அனுபவிப்பவை. அதனால் எமது பணத்திற்கு ஒரு பாதுகாப்புக் கிடைக்கின்றது. அதற்கு மாறாக, கீழைத்தேய வங்கிகளிடம் என்ன குறைகள் உள்ளன? அண்மையில் சைப்ரசில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்தக் குறைபாட்டை புரிந்து கொள்வோம். 

ஒரு ஐரோப்பிய நாடான சைப்ரஸ் தீவு, எழுபதுகளில் நடந்த போர் காரணமாக இரண்டாகப் பிரிந்தது. மூன்றில் ஒரு பங்கு வடக்கு சைப்ரசை, துருக்கிப் படைகள் ஆக்கிரமித்தன. துருக்கி மொழி பேசும் சைப்ரஸ் மக்களுக்கான பாதுகாப்பு பிரதேசமாக, "வடக்கு சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் தனிநாடு போன்று இயங்கி வருகின்றது. ஆனால், அதனை எந்தவொரு உலக நாடும் அங்கீகரிக்கவில்லை. கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும் தெற்கு பகுதி மட்டுமே, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சைப்ரஸ் குடியரசு ஆகும். நாங்கள் சைப்ரஸ் என்று சொன்னால், அந்தப் பகுதியைத் தான் நினைத்துக் கொள்கிறோம். 

ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்த சைப்ரஸ், மூன்றாமுலக நாடுகள் போன்று வறிய நாடாக இருந்தது. பலர் பிரிட்டனுக்கு சென்று வேலை செய்து சம்பாதித்து, ஊருக்கு பணம் அனுப்ப வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால், துருக்கியுடனான போர் முடிந்த பின்னர், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. சூரிய வெப்பத்தை தேடி வரும், குளிர் வலைய மேற்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த, உல்லாசப் பிரயாணிகளின் வருகை.  
2. வங்கித் துறையின் அபார வளர்ச்சி. கறுப்புப் பண முதலைகள், தமது பணத்தை பாதுகாப்பாக பதுக்கி வைக்க சைப்ரஸ் உதவியது. சாதாரணமாக, சைப்ரஸ் வங்கி ஒன்றில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதில் பணத்தை போட்டாலே போதும். அந்த தொகைக்கு, வேறெந்த நாட்டிலும் இல்லாதவாறு, பல மடங்கு அதிகமான வட்டி கிடைப்பது மட்டுமல்ல, அரச கண்காணிப்பும் மிகக் குறைவு. அது மட்டுமல்ல, ஒரு நாடு கடந்த கம்பனி அமைப்பதற்கான சட்டங்களும் இலகுவானவை. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, பெரும் வணிக நிறுவனம் ஒன்று அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மிகக் குறைவு. (மேற்கு ஐரோப்பாவில் 30% - 40% கார்ப்பரேட் வரி கட்ட வேண்டும். சைப்ரசில் வெறும் 10% மட்டுமே!) 

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர், வர்த்தகம் செய்வது என்ற போர்வையின் கீழ், ஊர் மக்களின் பணத்தை சுரண்டி கொழுத்த பணக்கார மாபியா கும்பல், சைப்ரஸ் நாட்டை புகலிடமாக கருதியதில் வியப்பில்லை. அங்கே பெயருக்கு ஒரு கம்பனியை பதிவு செய்து விட்டு, ரஷ்யாவில் கிடைத்த இலாபம் என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை, சைப்ரஸ் கணக்கிலத்திற்கு மாற்றி விட்டார்கள். அப்படி மாற்றுவதன் மூலம், வரி ஏய்ப்புச் செய்து இன்னும் நிறைய சம்பாதித்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய பணக்காரர்கள், ரஷ்ய உழைக்கும் மக்களிடம் சுரண்டிய பணத்தை, தனது காலடியில் கொண்டு வந்து கொட்டுவதை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கும். 

ஐரோப்பிய ஒன்றியம், சைப்ரஸ் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மீட்பு நிதி அளித்து விட்டு, அந்தக் கடனை அறவிடுவதற்காக, சைப்ரஸ் மக்களின்  பணத்தில் ஒரு பகுதியை, மறைமுகமாக கொள்ளையடித்து விட்டது. ஏற்கனவே இது போன்ற நெருக்கடி வரப் போகின்றது என்று, சைப்ரஸ் ஜனாதிபதி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு எச்சரித்திருக்கிறார். அவர்கள் தமது பணத்துடன், வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி விட்டார்கள். இவ்வாறு கோடிக் கணக்கான பணம், திருட்டுத் தனமாக  சைப்ரஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. இறுதியில் பாதிக்கப் பட்டது, மத்தியதர வர்க்க சைப்ரஸ் மக்கள் தான். (குவைத் போன்ற வளைகுடா நாடுகளைப் போன்று, சைப்பிரஸ் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒப்பந்த அடிப்படையில் வந்து வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் தான் பொருளாதாரத்தின் தூண்களாக விளங்குகிறார்கள்.)

இப்போது எமது அடிப்படைக் கேள்விக்கு வருவோம். சைப்ரஸ் நாட்டின் பொருளாதார பிரச்சினை எங்கே, எப்படி ஆரம்பமாகியது ? நான்கு வருடங்களுக்கு முன்னர், கிரேக்க நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது, அனைவருக்கும் நினைவிருக்கலாம். கிரேக்க பெரும்பான்மையினரைக் கொண்ட சைப்ரஸ் நாட்டவர்கள், தீவிரமான கிரேக்க தேசியவாதிகள். நீண்ட காலமாக "தாய் நாடான" கிரேக்கத்துடன் சேர்ந்திருக்க விரும்பி வந்தனர். இன்றைக்கும், சைப்ரஸ் தேசியக் கொடியுடன், கிரேக்க கொடியும் பறப்பதை, அந்த நாட்டிற்கு சென்று வந்தவர்கள் அவதானித்திருக்கலாம். சைப்ரஸ் நாட்டு வங்கிகளும், கோடீஸ்வரர்களும், தமது "தாய் நாடான" கிரேக்கத்தில் முதலிட்டு வந்தனர். 

கிரேக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி வந்த பின்னர், "தொப்புள்கொடி உறவுகளை" காப்பாற்றும் நோக்கில், பல கோடி பெறுமதியான அரச கடன் பத்திரங்களை சைப்ரஸ் வங்கிகள் வாங்கின. ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத கிரேக்க அரசு, அந்நிய கடன்களை திருப்பிக் கொடுக்க முடியாத அளவுக்கு வங்குரோத்தான நிலையை அடைந்தது. "ஐயா, உங்கள் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் கடனில் ஒரு பகுதியை இரத்து செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் ..." என்று தொப்புள் கொடி உறவுகளிடம் கையை விரித்தது. அதனால் வந்தது கேடு. பெருமளவு சைப்ரஸ் நிதி, கிரேக்கத்தில் முடங்கி விட்டதால், சைப்ரஸ் வங்கித் துறை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஆனால், அந்த உண்மையை  தமது வாடிக்கையாளர்களுக்கு சொல்ல முடியுமா? 

வங்கியில் நாம்  போட்டிருக்கும் சேமிப்புப் பணத்திற்கு, "வட்டி எங்கிருந்து வருகின்றது?" என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா ?  ஆகாயத்தில் இருந்து கடவுள் அள்ளிக் கொட்டுகிறாரா ? "பக்தர்களே, உங்கள் வீடுகளில் லட்சுமி படத்தை வைத்து, தினந் தோறும் பூஜித்து வந்தால், லட்சுமி கையில் இருந்து பணம் கொட்டுவது போல, வீட்டிலும் பணம் கொட்டும்..." என்று ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றுவது போல, வங்கிகள் சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால், எமது முதலீட்டுக்கு கிடைக்கும் இலாபப் பங்கும், கடனாக கொடுத்த தொகைக்கு கிடைக்கும் வட்டியும், யாரோ ஒருவரது உழைப்பில் இருந்து சுரண்டப் பட்ட பணம் தான். அந்த பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து விட்டால், வாத்தும் செத்து விடும், பொன் முட்டையும்  கிடைக்காது. 

வங்கிகள் நமது சேமிப்புப் பணத்தை, அப்படியே பத்திரமாக பூட்டி வைப்பதில்லை. நமது பணத்தை எடுத்து, இன்னொருவருக்கு கடனாக கொடுக்கின்றன. அந்தக் கடனாளி, வங்கி நிர்ணயிக்கும் வட்டியை கட்டி வருகிறார். கடனாளியிடம் வங்கி அறவிடும் வட்டியானது, நமது சேமிப்பு பணத்திற்கு வங்கி கொடுக்கும் வட்டியை விட அதிகமாகும். நமது சேமிப்புக்கு கொடுக்கும் வட்டியை விட, பல மடங்கு வருமானம் வங்கிக்கு கிடைக்கிறது. தற்போது கடனாளியான கிரேக்கம் கையை விரித்து விட்டதால், சைப்ரஸ் வங்கிகளுக்கு வருமானம் கிடைக்கவில்லை. ஆனால், மறுபக்கத்தில் சேமிப்பாளர்களுக்கு மாதாமாதம் வட்டி கட்டியாக வேண்டிய நிலைமை. அதாவது வங்கியின் கணக்குப் புத்தகத்தில், ஒரு பக்கம் "மைனஸ்", இன்னொரு பக்கமும் "மைனஸ்" என்று இழப்பு ஏற்படுகின்றது. அதுவே சைப்ரஸ் நாட்டில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. 

ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி பற்றிய அறிவிப்பு வெளியானவுடனே,  சைப்ரஸ் நாட்டு வங்கிகள், குறைந்தது ஒரு வாரத்திற்கு மூடி இருக்கும் என்று அறிவிக்கப் பட்டது. அதன் அர்த்தம், வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, வங்கி அட்டையை பயன்படுத்தி கடையில் எதையும் வாங்க முடியாது. நாணயத் தாள்களை மட்டுமே ஏற்றுக் கொண்டார்கள். இன்டர்நெட் மூலமான பணப்பரிமாற்றமும் தடுக்கப் பட்டது. "வளர்ச்சி அடைந்த" மேற்கத்திய நாடுகளில், பெரும்பாலான மக்கள் எந்நேரமும் பணத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு திரிவதில்லை. எல்லா இடங்களிலும், ATM மெஷின்களும், வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியும் இருப்பதால், பணம் வைத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. 

"பணத்தையே கண்ணால் காணாத அளவுக்கு நாகரிக வளர்ச்சி கண்ட சமூகத்தில்", ஒரு வாரத்திற்கு வங்கிகள் எதுவும் இயங்காமல் ஸ்தம்பிதமடைந்து விட்டால், அன்றாட உணவிற்கே பணமின்றி கஷ்டப் பட வேண்டியிருக்கும். அந்த திகில் காட்சிகளை சைப்ரஸ் மக்கள் நேரடியாக அனுபவித்தார்கள். நல்ல வேளையாக, தினசரி குறிப்பிட்டளவு பணம் மட்டும் எடுக்கலாம் என்று மட்டுப் படுத்தப் பட்டது. அதுவும் இல்லையென்றால்? "நான் இத்தனை காலமும் முதலாளித்துவத்தை, ஐரோப்பிய ஒன்றியத்தை குறை சொல்பவர்களை எதிர்த்து திட்டிக் கொண்டிருந்தேன். இப்போது நானும் அவர்களைப் போல குறை கூறத் தொடங்கி விட்டேன்..." என்று பல சைப்ரஸ் பிரஜைகள் தமது உள்ளக் குமுறலை கொட்டித் தீர்க்கின்றனர்.  

வங்கிகள் திறக்கப் பட்டால், பொதுமக்கள் வங்கியில் போட்டிருக்கும் பணம் முழுவதையும் எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நிலவியது. அது உண்மை தான். வங்கிகள் மீது நம்பிக்கையிழந்த பொதுமக்கள், தமது கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் வழித்து துடைத்து எடுத்துக் கொண்டு, தப்பினோம், பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடிப்போகத் தான் நினைப்பார்கள். பொது மக்கள் தமது பணத்தை மீளப்பெற்றுக் கொண்டால், தவிர்க்கவியலாது வங்கிகள் திவாலாகும். பொது மக்களின் சேமிப்புத் தொகையில் பத்து வீதத்தை கழித்து, வெளிநாட்டு கடன்களை அடைக்கும் திட்டத்திற்கு, சைப்ரஸ் மக்கள் எதிர்த்து வந்தார்கள். இவ்வளவு காலமும் சொகுசாக வாழ்ந்த மக்கள், தாமாகவே வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  மக்களின் எதிர்ப்பலையை கண்டு அஞ்சிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்த பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. IMF, ஐரோப்பிய வங்கிகளின் திட்டத்தினை, ஒரு ஐரோப்பிய நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக எதிர்த்துள்ளமை இதுவே முதல் தடவை. 

துபாய் போன்று, சைப்ரசும் வீட்டுமனைகள் கட்டி விற்று வந்தது. அதுவும் சைப்ரசின் தேசியப் பொருளாதார வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை செய்துள்ளது. சைப்பிரசில் வீடு வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கியது. அதன் மூலம், சில வருடங்களின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய பிரஜாவுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில், குறைந்தது முப்பதாயிரம் பணக்கார ரஷ்யர்கள் சைப்பிரசில் வீடுகளை வாங்கியுள்ளனர். சைப்ரசில் ஏராளமான ரஷ்ய பணக்காரர்கள் வசிப்பதால், ஆட்சியாளர்கள் ரஷ்யாவின் நிதியுதவியை எதிர்பார்த்தார்கள். ஆனால், ரஷ்யாவோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு தட்டிக் கழித்து விட்டது.

கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், சைப்ரஸ் என்று அடுத்தடுத்து பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப் பட்டுள்ளன. அது போன்று, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற "பணக்கார" ஐரோப்பிய நாடுகளும், எதிர்காலத்தில் பாதிக்கப் படுமா?  இன்றைய நிலையில், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏன் அப்படி? ஏனென்றால், இவற்றை  "Triple - A நாடுகள்" என்று பொருளாதார நிபுணர்கள் வகைப் படுத்தி உள்ளனர். அதன் அர்த்தம், இந்த நாடுகள் எந்த நிபந்தனையுமின்றி கடனுதவி பெறலாம். அதாவது, முதலீட்டாளர்கள் இந்த நாட்டு பொருளாதாரம் பாதுகாப்பானது என்று இன்னமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நெருக்கடியினால் பாதிக்கப் பட்ட நாடுகள் மீது அந்த நம்பிக்கை கிடையாது. அதனால், அவை கடன் கேட்டாலும் பல கடுமையான நிபந்தனைகளுக்கு பிறகு தான் பெற்றுக் கொள்கின்றன. 

"மன்னிக்கவும், எல்லாமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்ற நாடுகள் அல்லவா? இப்படி எல்லாம் பாகுபாடு காட்டுவது நியாயமாகுமா?" ஆம், முதலாளித்துவ பொருளாதார விதிகளின் படி அது நியாயமானது. இதனை புரிந்து கொள்ள கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற நூலை படிக்க வேண்டும். உலகில் சில நாடுகளில் மட்டுமே, மூலதனம் குவிந்துள்ளது. சர்வதேச மூலதனம் எந்த நாடுகளில் உள்ளதோ, அந்த நாடுகள் மட்டுமே உலகில் பலமானவை. "அதிக பலசாலியே வெல்வான்" என்பது அனைத்து முதலாளித்துவ ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்ட தத்துவம் ஆகும். இதையே ஜோர்ஜ் ஆர்வெல், விலங்குப் பண்ணை என்ற நாவலில் அழகாக எழுதி இருந்தார். "அடிப்படையில் எல்லா விலங்குகளும் சமமானவை. ஆனால், சில விலங்குகள்  பிற விலங்குகளை விட அதிகம் சமமானவை." ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் அனைத்து நாடுகளும் சமமானவை என்று கடதாசியில் எழுதி உள்ளது. ஆனால், நடைமுறையில் ஜெர்மனி போன்ற பெருமளவு மூலதனத்தை திரட்டியுள்ள நாடுகள் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன."

Monday, March 25, 2013

ஐ.நா. அமெரிக்க தீர்மானம், யாருக்குக் கிடைத்த வெற்றி?


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்" என்ற நாடகம், இந்த வருடமும் ஜெனிவாவில் மேடையேறியுள்ளது. இந்த நாடகம் மேடையேற்றப்படும் ஒவ்வொரு வருடமும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் கடுமை குறைந்து கொண்டே செல்கின்றது. இம்முறை வெளியான அறிக்கை, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து வெறும் "கவலை" மட்டுமே தெரிவித்துள்ளது. 

கண்டனம் ஒரு புறம் இருக்க, குறைந்த பட்சம், நடந்த குற்றங்களுக்காக இலங்கை அரசை பொறுப்பேற்க வேண்டுமென்று கூடக் கோரவில்லை. அது மட்டுமல்ல, போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு சுதந்திரமான, சர்வதேச ஆணைக்குழுவை அமைப்பது பற்றிய பேச்சே கிடையாது. முன்பெல்லாம், ஈராக், யூகோஸ்லேவியா விவகாரத்தில் கடுமையாக நடந்து கொண்ட, அமெரிக்காவும், ஐ.நா. ஆணையகமும், இலங்கை விஷயத்தில் "ஒரு நண்பனை கண்டிப்பது போல" நடந்து கொண்டுள்ளன. அதற்கே, "நான் ஒரு நல்ல பிள்ளை, என்னை எதற்கு திட்டுகிறீர்கள்?" என்று, இலங்கையின் பிரதிநிதி மூக்கால் அழுது விட்டுப் போயிருக்கிறார். இலங்கைக்கு ஆதரவாக பேசிய நாடுகள் மட்டுமல்ல, எதிர்த்து பேசிய நாடுகளும், நாடகத்தில் தமது பாத்திரம் அறிந்து நடித்திருந்தார்கள். "ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்" என்ற நாடகத்தை இந்த வருடம் தவற விட்டவர்கள், அடுத்த வருடம் மேடையேறும் பொழுது கண்டுகளிக்கலாம்.

*****************************************

ஐ.நா. வில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக, "தமிழ் பேப்பர்" (http://www.tamilpaper.net/?p=7562) இணையத் தளத்திற்காக, என்னிடம் தோழர் மருதன் எடுத்த பேட்டி கீழே:1) ஐ.நா தீர்மானம் யாருக்குக் கிடைத்த வெற்றி? இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் ஏதேனும் பலன் உண்டா?

இதனை வெற்றியாக பார்ப்பதை விட, யாருக்கு சாதகமானது என்று பார்ப்பதே பொருத்தமானது. அதற்கு முதல் ஐ.நா. தீர்மானம் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப் பட்டது என்பதையும் சுருக்கமாக பார்த்து விடுவோம். வளர்ச்சி அடையாத மூன்றாமுலக நாடுகளில், அல்லது முன்பு கொள்கை அடிப்படையில் மாறுபட்ட இரண்டாமுலக நாடுகளில் (முன்னாள் சோஷலிச நாடுகள்), மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்னெடுக்கப் படுகின்றது. அந்த நாடுகளை "நல்வழிப் படுத்துவதற்காக", உருவானது தான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம். ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப் படுவதாக குற்றம் சாட்டி, ஐ.நா. அந்த நாட்டில் தலையிட முடியும்.

முன்பு யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மேற்கத்திய நாடுகள் தலையிடுவதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் பெரிதும் உதவியது. அதாவது, ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்று சொல்லலாம். ஆனால், சம்பந்தப்பட்ட நாடு எந்தளவு தூரம், மேற்கத்திய நலன்களுக்கு விரோதமானது என்பதைப் பொறுத்து, தீர்மானத்தின் அழுத்தம் அதிகரிக்கப்படும். இலங்கை அரசின் இராஜதந்திர நடவடிக்கை எதுவும் மேற்கத்திய நலன்களுக்கு எதிரானதல்ல. அதனால், தீர்மானம் மிகவும் மென்மையாக இருக்கிறது.

அமெரிக்க தீர்மானம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது, அதிலேயே அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது, போருக்கு பின்னரான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும். இந்த நல்லிணக்க ஆணைக்குழு இலங்கை அரசினால் தான் உருவாக்கப் பட்டது. அதைக் கூட மதிப்பதில்லை. ஒவ்வொரு வருடமும், ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வருகின்ற பிரேரணை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அழுத்தம் கொடுப்பதால், அந்த ஆணைக்குழுவானது ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆலோசனையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது பலன் உண்டா என்று கேட்டால், அதற்கு ஆம் என்றும், இல்லை என்றும் பதிலளிக்கலாம். ஆம் என்றால், எத்தகைய பலன்கள்? இலங்கையின் மனித உரிமைகள் மேம்படுத்தப் படலாம். சட்டத்தின் ஆட்சி உறுதிப் படுத்தப் படலாம். இதன் மூலம், தமிழர்களின் (மனித) உரிமைகள் மதிக்கப் படலாம். அமெரிக்க அழுத்தத்தை பயன்படுத்தி, சம உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம். சட்டத்துறை சுதந்திரமாக செயற்பட்டால், ஒரு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் உருவாகலாம். அது, சிறிலங்கா இராணுவம், புலிகள் ஆகிய இரண்டு தரப்பிலும் குற்றமிளைத்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்கலாம். மேற்குறிப்பிட்ட இலக்கினை அடைவது தான், அமெரிக்க தீர்மானத்தின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்ப்பது போல, இந்த நடவடிக்கைகள் தமிழீழம் என்ற தனிநாட்டை உருவாக்குவதற்கு உதவப் போவதில்லை. அதன் விளைவாக, தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரதேசம் எதுவும் உருவாகப் போவதில்லை. அந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால், தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று கூறலாம்.


2) அமெரிக்காவுக்கு திடீரென்று இலங்கைத் தமிழர்கள் மீது ஏன் இந்த அக்கறை?     

அமெரிக்காவுக்கு தமிழர்கள் மேல் விசேட கரிசனை இருப்பதாக கருத முடியாது. கடந்த காலத்தில், இரண்டு இனங்களையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் வேலையை செய்து கொண்டிருந்தது. அதாவது, ஒரு நேரம் தமிழர்களுக்கு சார்பானவர்களாக நடிப்பார்கள். இன்னொரு நேரம், சிங்களவர்களுக்கு சார்பானவர்களாக நடிப்பார்கள். உண்மையில், அமெரிக்கா யாரையும் ஆதரிக்கவில்லை. அது தனது பொருளாதார நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கின்றது. கடந்த காலத்தில், இந்தியாவும் அப்படித் தான் நடந்து கொண்டது. தெற்காசியப் பிராந்தியத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையில், தனது ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது.

அரபு வளைகுடாவில் உள்ள, எண்ணை வள நாடுகளில் இருந்து, சீனா, ஜப்பான் போன்ற தூர கிழக்காசியாவுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கை வழியாக தான் செல்லும். சீனாவோ, அல்லது இந்தியா தன்னிலும், அந்த விநியோகப் பாதையின் குறுக்கே வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. இன்றைக்கும், சர்வதேச வர்த்தகம் அமெரிக்காவின் மேற்பார்வையின் கீழ் தான் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் மேற்கத்திய நலன்களுக்கு எதிரான அரசு இருப்பதையும், அமெரிக்கா விரும்பவில்லை. அதற்காக, சிலநேரம் தமிழர்கள் சார்பாக நடப்பதாக காட்டி, இலங்கை அரசின் மேல் அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. அமெரிக்காவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இயங்குவதற்கு அனுமதித்ததும் ஒரு காரணத்தோடு தான். இதே போன்ற அரசியலைத் தான், முன்பு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் அளித்த இந்திரா காந்தியின் அரசும் செய்து கொண்டிருந்தது. வல்லரசுகளின் விளையாட்டில் இருந்து தமிழ் மக்கள் தப்ப முடியாது.

ஆனால், இந்த நிலைமையை எந்தளவு தூரம், எமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. "தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே குரலில் பேச வேண்டும்," என்ற நடைமுறைச் சாத்தியமற்ற, சிறுபிள்ளைத் தனமான அரசியலால் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. சில குறைபாடுகள் இருந்தாலும், ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை முன்னிறுத்துவது தவிர்க்கவியலாதது. இன்றைய நிலையில், தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் பொதுவான இணைக்கப் பாட்டை கொண்டு வந்து, தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமையை பலப்படுத்துவதும் அவசியமானது. அமெரிக்க தூதரகமும், இதனை பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளது.                                                                                       


3) அமெரிக்காவே ஒரு போர்க்குற்றவாளிதான் என்றபோதும் அமெரிக்காவை விட்டால் இப்படியொரு அழுத்தத்தை இலங்கைக்கு அளிக்க வேறு யாருக்கும் திறன் இல்லை என்று சொல்லப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?  

அமெரிக்கா ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலைக் குற்றங்களைக் கூட புரிந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இது வரையில் எந்த விசாரணையும் இல்லை. அதனால், பிற நாடுகளை குற்றம் சாட்டும் தார்மீக கடமையை அமெரிக்கா இழந்து விட்டதும் உண்மை தான். ஆனால், ஒரு உலகப் பேரரசு என்ற முறையில், உலகில் சமாதானத்தை நிலைநிறுத்துவதில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதையே நாம் இங்கு பார்க்கிறோம். சரித்திர காலத்தில், ரோமர்களால் Pax Romana (ரோமர்களின் சமாதான ஆட்சி) என்றும், அல்லது பிரிட்டிஷாரால் Pax Britannica (பிரிட்டிஷ் சமாதான ஆட்சி) என்றும் அழைக்கப் பட்ட, "ஒரு மேலாண்மை வல்லரசின் கீழான நீதி" பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  நான் முன்பு சுட்டிக் காட்டியது போன்று, மனித உரிமைகள் மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் யாவும், இன்று வரையில் அமெரிக்காவின் எதிரிகளை குறி வைத்து தான் ஏவப் பட்டு வந்தன. சில நேரம், நட்பு நாடுகளிலும், அமெரிக்கா எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கான கருவியாக பயன்படுத்தப் படுகின்றது. 

இலங்கையிலும், அதிக பட்சம் ஒரு ஆட்சி மாற்றத்தை தான், அமெரிக்க தீர்மானம் இலக்காக கொண்டுள்ளது. அதை தவிர்த்து விட்டு பார்த்தால், இலங்கையில் இனப்பாகுபாடு நிறுத்தப்பாடவும், தமிழ் மக்களின் சம உரிமை போன்றவற்றை பெற்றுக் கொள்ளவும், அமெரிக்க அழுத்தம் உதவலாம். ஏற்கனவே, இனப்பிரச்சினையை வளர்த்து விட்டதில் அமெரிக்காவின் பங்கு எந்தளவு உள்ளது? இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போருக்கு, அமெரிக்காவின் ஆதரவும் ஒரு காரணம். பனிப்போரின் இறுதிக் காலத்தில் ஈழப்போர் தொடங்கியது என்பதையும், உலகில் வல்லரசுச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்ட காலத்தில் அந்தப்போர் தீவிரமடைந்து இருந்ததையும் மறந்து விடலாகாது.

ஒற்றைத் துருவ வல்லரசாக, அமெரிக்கா தனது மேலாண்மையை நிச்சயப் படுத்திக் கொண்ட பிறகு, மூன்றாமுலக நாடுகளில் நடந்த இனப்போர்களுக்கும் முடிவு கட்டப் பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான உலகமயமாக்கல் கொள்கை முழு வீச்சில் அமுல்படுத்தப் பட்டது. அதற்கு, இன்று "தோற்றுப் போன" ஈழத் தமிழர்கள் முகம் கொடுக்கிறார்கள். வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலைகளை கட்டுதல் போன்ற சிங்கள பேரினவாத நடவடிக்கைகள் கூட, அமெரிக்காவின் உலகமயமாக்கல் கொள்கைக்கு உட்பட்டு தான் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை ஈடுகட்டும் வகையில் தான், தமிழரின் மனித உரிமைகள், சம உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஐ.நா. தீர்மானம் அமைந்துள்ளது. சுருக்கமாக சொன்னால்: அமெரிக்காவின் அழுத்தமானது, அடக்கப்படும் தமிழர்களை சுதந்திரமாக நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும். ஆனால், அது ஒரு விடுதலை ஆகாது. தமிழர்கள் விடுதலை அடைய வேண்டுமானால், அமெரிக்காவின் உலகமயமாக்கலுக்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கும். 


4) அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்க மறுக்கும் அளவுக்கு இலங்கைக்கு உண்மையில் துணிச்சல் இருக்கிறதா? யார் கொடுத்த துணிச்சல் இது?

உண்மையில் அது ஒரு வகையில் அமெரிக்கா கொடுத்த துணிச்சல் தான்! அமெரிக்க தீர்மானம், இலங்கை மீது பெரிய அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை. அது முன்பு யூகோஸ்லேவியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைப் போன்று கடுமையாக இல்லை. அமெரிக்கா அவற்றை தனது எதிரி நாடுகளாக கருதியது. ஆனால், சிறிலங்காவை தனது நட்பு நாடாக கருதுகின்றது. ஐ.நா. தீர்மானம் ஒரு புறம் இருக்கையில், அமெரிக்க படைகள், சிறிலங்கா படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். 

USAID என்ற அமெரிக்க அரசின் பணத்தில் இயங்கும் தொண்டு நிறுவனம், யாழ்ப்பாணத்தில் கலாச்சார, களியாட்ட விழாக்களை நடத்தியுள்ளது. இது போன்ற பல உதாரணங்களை குறிப்பிடலாம். சட்ட அடிப்படையில் பார்த்தால், ஐ.நா. வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டாயப் படுத்தவில்லை. இந்த விடயங்கள் எல்லாம் எமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இலங்கை அரசுக்கு தெரியாமல் இருக்குமா? மேலும், ஏற்கனவே இஸ்ரேல், இலங்கைக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக திகழ்கின்றது. அண்ணன் எவ்வழியோ, தம்பியும் அவ்வழியே செல்வது தானே உலக யதார்த்தம்?


5) இலங்கையின் செயலைப் போர்க்குற்றம் என்று அழைப்பதா அல்லது இனப்படுகொலை என்பதா?

1983 ம் ஆண்டு நடந்த இனக்கலவரம், உண்மையில் ஒரு இனப்படுகொலை என்று, ஏற்கனவே என்னைப் போன்று பலர் கூறி வந்துள்ளனர். கொழும்பு நகரில் வாழ்ந்த தமிழர்களின் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, தமிழர்களை நர வேட்டையாடிய சம்பவங்களை, இனப்படுகொலை என்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது? 2002 ம் ஆண்டு, குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடந்த அதே பாணியில் தான், 1983 ல் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது.

அன்றைக்கு நடந்த இனப்படுகொலைக்கு எதிராக, ஸ்ரீலங்கா அரசின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, இன்றைய தமிழ் தேசியவாதிகள் யாரும் முன்வரவில்லை. அன்று நடந்த இனப்படுகொலையை, குறைந்த பட்சம் தமது தொடர் அரசியல் பிரச்சாரத்திற்காகக் கூட பயன்படுத்தவில்லை. அது மட்டுமல்ல, இலங்கையில் ஏற்கனவே வேறு பல இனப்படுகொலைகளும் நடந்துள்ளன. 1971 மற்றும் 1989 - 1990 ஆகிய காலப்பகுதியில் சிங்கள மக்களை அழித்தொழித்த இனப்படுகொலை பற்றி யாரும் பேசுவதில்லை. ஏற்கனவே, இலங்கை அரசை இனப்படுகொலை குற்றத்தில் சிக்க வைப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் தவற விடப் பட்டுள்ளன. இதனால், இனப்படுகொலையாளர்களின் தன்னம்பிக்கை பெருமளவு அதிகரித்திருந்ததை, நாம் புரிந்து கொள்ளத் தவறி விட்டோம். 

2009 ம் ஆண்டு, எத்தனை ஆயிரம் மக்கள் அழிந்தாலும், புலிகளை அழித்தே தீருவதென்று இலங்கை அரசு கங்கணம் கட்டிய பொழுது தான், நாம் விழித்துக் கொண்டோம். ஆனால், அந்த நேரம் காலம் கடந்து விட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில், "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" என்ற பெயரில், புலிகளுக்கு எதிராக உருவான புனிதக் கூட்டு, தமிழ் இனப்படுகொலையை கூட மௌனமாக அங்கீகரிக்கும் அளவுக்கு சென்றது. இறுதிப்போரில், சிறிலங்கா இராணுவமும், புலிகளும் மூர்க்கமாக மோதிக் கொண்டதால், அங்கே போர்க்குற்றங்களும் நடைபெற்றுள்ளன. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம், சர்வதேச சட்டத்தின் படி, போர்க்குற்றங்கள் எவை என்பதை வரையறுப்பது இலகு. ஆனால், இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க வேண்டுமானால், அதற்கென்று சில அளவுகோல்களை வைத்திருக்கின்றனர். மிக முக்கியமாக, ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்ற திட்டம் அங்கே இருந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, யூதர்களை முற்றாக அழிக்க வேண்டுமென்ற திட்டம் ஒன்றை, ஜெர்மன் நாஜிகள் "Endlösung"  என்ற பெயரில் தீட்டி வைத்திருந்தார்கள். அது போன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

ஒரு நாட்டில் நடந்த போரையும், அதன் இறுதியில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டதையும் இனப்படுகொலை என்று, ஒரு தடவை தீர்ப்பு கூறி விட்டால், அது சர்வதேச அரங்கில் பெரியதொரு தாக்கத்தை உண்டாக்கும். அந்த தீர்ப்பு, வேறு பல உலக நாடுகளின் விடயத்திலும் பிரயோகிக்கப் படலாம். உதாரணத்திற்கு, இனப்படுகொலை குற்றச்சாட்டின் கீழ் இஸ்ரேலை தண்டிக்க வேண்டுமென, பாலஸ்தீன ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். அதையும் சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றும். 

************************************************************

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான முன்னைய பதிவு: 
ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு

Thursday, March 14, 2013

புதிய போப்பாண்டவர் ஒரு போர்க்குற்றவாளி!
Habemus Papam! (அபெமுஸ் பாப்பம்! எங்களுக்கு ஒரு போப்பாண்டவர் கிடைத்து விட்டார்!)

அப்பாடா... ஒரு வழியாக போப்பாண்டவரை தெரிவு செய்து விட்டார்கள். ஆர்ஜென்தீனா நாட்டை சேர்ந்த Mario Bergoglio, புதிய போப்பாண்டவராக தெரிவானதும் முதலாம் பிரான்சிஸ் என்ற நாமத்தை சூட்டிக் கொண்டார். கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாக கொண்ட, லத்தீன் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த ஒருவர் தெரிவானது, இது தான் முதல் தடவை. இருந்தாலும், கடந்த கால வத்திக்கான் அரசியலை வைத்துப் பார்க்கும் பொழுது, புதிய போப்பாண்டவரின் தெரிவு உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என சந்தேகப் பட வைக்கின்றது.

புதிய போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் ஒரு போர்க்குற்றவாளியா? புதிய பாப்பரசர், அவரது தாயகமான ஆர்ஜெந்தீனாவில் பிஷப்பாக கடமையாற்றிய காலத்தில், இரண்டு அரசியல் கொலைகளில் நேரடியாக பங்கெடுத்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. 1976 - 1983 காலகட்டத்தில், ஆர்ஜென்தீனாவை ஆண்ட இராணுவ சர்வாதிகார அரசு, இடதுசாரிகளுக்கு எதிரான போர் ஒன்றில் ஈடுபட்டிருந்தது. கம்யூனிஸ்டுகளும், பிற இடதுசாரி ஆர்வலர்களும் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப் பட்டனர். பலர் இராணுவ புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு காணாமல்போயுள்ளனர். (விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, அட்லாண்டிக் சமுத்திரத்தினுள் தூக்கிப் போடப்பட்டனர்.)

ஹொர்கெ மாரியோ  போர்கொயியோ (Jorge Mario Bergoglio)  என்ற இயற்பெயரைக் கொண்ட, எமது புதிய போப்பாண்டவர், இராணுவ கொலைகாரர்களுடன் நெருக்கமாக உறவாடியிருக்கிறார். (Bergoglio ocultó la complicidad del Episcopado argentino con la Junta Militar del dictador Videla , http://www.publico.es/internacional/452122/bergoglio-oculto-la-complicidad-del-episcopado-argentino-con-la-junta-militar-del-dictador-videla) அவரது மேற்பார்வையின் கீழ், இரண்டு இடதுசாரி ஆர்வலர்கள் காணாமல்போயுள்ளமை உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

2007 ம் ஆண்டு, இராணுவ சர்வாதிகார ஆட்சியில் நடந்த போர்க்குற்றங்கள் சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றத்தினால் எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது Cristian Federico என்ற பிஷப் கொலைக் குற்றச்சாட்டில் ஆஜர் படுத்தப் பட்டார். நமது புதிய போப்பாண்டவர், அந்த கொலைக் குற்றவாளியுடன் ஒரே இயேசு சபையில் பணியாற்றி உள்ளார். கம்யூனிசத்திற்கு எதிரான இயேசு சபையினரின் வெறுப்புணர்வு ஊரறிந்த ஒன்று. இந்த விபரங்கள், Horacio Verbistky என்ற ஆர்ஜந்தீனிய ஊடகவியலாளர் எழுதிய, "el Silencio" (2005) என்ற நூலில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. 

சில நாட்களுக்கு முன்னர் , புதிய போப்பாண்டவரின் தாயகமான ஆர்ஜென்தீனாவுக்கு அருகில் உள்ள மால்வினாஸ் (Falkland) தீவில் ஒரு தேர்தல் நடைபெற்றது. (Falklands referendum: Voters choose to remain UK territory, http://www.bbc.co.uk/news/uk-21750909) இன்னமும் பிரிட்டனுக்கு சொந்தமான காலனியான போல்க்லாந்து தீவுகளில் வாழும் அனைவரும் பிரிட்டனில் இருந்து சென்று குடியேறியோர் ஆவர். 99% மானோர், பிரிட்டனோடு சேர்ந்திருக்க விரும்புகிறோம் என்று வாக்களித்ததில், எந்த ஆச்சரியமும் கிடையாது. போல்க்லாந்து தீவுகளை, மால்வினாஸ் என்ற பெயரில் அழைத்து வரும் ஆர்ஜெந்தீனா, அந்த தீவுகள் தனக்கே சொந்தம் என்று உரிமை கோரி வருகின்றது. 1982 ம் ஆண்டு, பலாத்காரமாக தீவை ஆக்கிரமித்த ஆர்ஜெந்தீன படைகளுக்கும், பிரிட்டனுக்கும் இடையில் பெரும் யுத்தம் நடைபெற்றது. அந்தப் போரில் பிரிட்டன் வென்ற போதிலும், ஆர்ஜன்தீனாவின் உரிமை கோரல் தொடர்கின்றது. அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகளை, ஆர்ஜன்தீனாவின் இன்றைய ஜனாதிபதி கிறிஸ்டினா கிர்ஷ்ணர் நிராகரித்துள்ளார். 

போல்க்லாந்து தீவுகளில் நடந்த கேலிக்குரிய "தேர்தலுடன்" ஒப்பிடும் பொழுது, சர்வாதிகார நாடுகளில் நடக்கும் தேர்தல்கள் அதிக ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாக கூற முடியும். பிரிட்டன் அவசர அவசரமாக, அங்கு ஒரு தேர்தலை நடத்த வேண்டிய காரணம் என்ன? தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், போல்க்லாந்து தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு, எண்ணை ஆகிய இயற்கை வளங்களை 2017 ம் ஆண்டளவில் ஏற்றுமதி செய்யப் போவதாக, Borders and Southern Petroleum என்ற நிறுவனம் அறிவித்திருந்தது. (கார்டியன் பத்திரிகையில் ஜனவரி மாதம் வெளியான செய்தி, இணையத்தில் அழிக்கப் பட்டுள்ளது. செய்தியின் இணைப்பு: http://www.guardian.co.uk/uk/2013/jan/28/falkland-islands-british-oil-exploration? )

நிச்சயமாக, மால்வினாஸ் தீவுக்கு உரிமை கோரும் ஆர்ஜன்தீனா, இவற்றை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. ஏதோ ஒரு வழியில், பிரிட்டனிடம் இருந்து போல்க்லாந்து தீவுகளை பறித்து விட வேண்டும் என நினைக்கும். மீண்டும் ஒரு போர் நடக்கும் சாத்தியக்கூறுகள் இல்லாவிட்டாலும், அது நடக்காது என்றும் சொல்ல முடியாது. உலகில் எல்லாவற்றிற்கும் இடையில் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறது. போல்க்லாந்து தீவுகளில் எரிபொருள் கண்டுபிடிக்கப் பட்டதும், பிரிட்டனின் காலனிய உரிமையை நிலைநாட்ட நடந்த தேர்தலும், இறுதியில் ஆர்ஜன்தீனாவை சேர்ந்த போப்பாண்டவரின் தெரிவும்.... எல்லாமே தற்செயல் நிகழ்வுகள் தானா?


ஆர்ஜென்தீனா பற்றிய முன்னைய பதிவுகள்:
ஆர்ஜெந்தீன மக்களின் அறிவிக்கப்படாத புரட்சி

 போப்பாண்டவர் பற்றிய முன்னைய பதிவுகள்:
1. வத்திகானின் ஒரேயொரு பெண் பாப்பரசி!
2."பாப்பரசர் ஹமாஸ் பிரச்சாரகர்!" - இஸ்ரேல் குற்றச்சாட்டு

Friday, March 08, 2013

இந்தோனேசியாவின் இரகசியமான இனப்படுகொலை"மேற்குலகிற்கு கிடைத்த நற்செய்தி!"
- இந்தோனேசிய இனப்படுகொலையை மகிழ்வுடன் வரவேற்று தலையங்கம் தீட்டிய டைம்ஸ் வார இதழ் (ஜூலை 1966).

"கம்யூனிஸ்டுகளை கொலை செய்வது ஒரு சுகமான அனுபவம்! அவர்களை  (இனப்) படுகொலை செய்ததற்காக பெருமைப் படுகிறேன். போர்க்குற்றம் என்றால் என்னவென்று வென்றவர்களே தீர்மானிக்கின்றனர். கம்யூனிசத்திற்கு எதிரான போரில் நாங்கள் வென்று விட்டோம்."
- 1965 ம் ஆண்டு, இந்தோனேசிய இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒரு கொலைகாரனின் சாட்சியம்.

உலகம் முழுவதும் நடக்கும் இனப்படுகொலைகளை பற்றிய தகவல்களை சேகரிக்கவும், மக்களுக்கு நினைவு படுத்தவும் தயங்காத மனித உரிமை நிறுவனங்களும், ஊடகங்களும், இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி வாயைத் திறப்பதில்லை. எங்காவது ஒரு நாட்டில், இனப்படுகொலை நடந்த பிறகாவது, ஐ.நா. மன்றத்தை கூட்டி விசாரணை நாடகமாடும் சர்வதேச சமூகம், இந்தோனேசிய இனப்படுகொலை நடந்து ஐம்பது வருடங்கள் கடந்த பின்னரும், ஒரு கண்டனத் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை. ஏனிந்த இருட்டடிப்பு? ஏனிந்த பாரபட்சம்? ஏனிந்த புறக்கணிப்பு? காரணம்: இந்தோனேசிய இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள், கம்யூனிஸ்டுகள். எந்த நாட்டிலாவது, கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டால், சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐ.நா. மன்றமோ தலையிட்டு விசாரிக்க மாட்டாது. இந்தோனேசியா மட்டுமல்ல, சிலி, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த "கம்யூனிஸ எதிர்ப்பு இனப்படுகொலைகள்", இன்று வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் பட்டு விட்டன.அண்மையில் இந்தோனேசியாவுக்கு ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க சென்ற இயக்குனர்  Joshua Oppenheimer, ஐம்பது வருடங்களுக்கு முன்னர், அந்த நாட்டில் நடந்த இனப்படுகொலை பற்றி அறிந்து கொண்டார்.  இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும், கொலைகாரர்களும் அருகருகே வாழ்ந்து வருவதைக் கண்டார். பாதிக்கப்பட்ட மக்கள் குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதையும், இனபடுகொலை செய்தவர்கள் அதனை பெருமையுடன் சொல்லிக் கொண்டு திரிவதையும் நேரில் பார்த்தார். அப்படியானவர்கள் சிலரை தெரிந்தெடுத்து, ஒரு ஆவணப்படம் தயாரித்தார். அதிலே இனப்படுகொலை செய்தவர்கள், தாமாகவே முன்வந்து நடித்திருந்தனர். "கம்யூனிஸ்டுகளை கொல்வது எந்தளவு சுகமான அனுபவம். எத்தனை கம்யூனிஸ்டுகளை, எத்தனை விதமாக கொலை செய்தோம்..."  என்று கமெராவுக்கு முன்னால் தைரியமாகக் கூறுகின்றனர். சொல்வதோடு நின்று விடாமல், கொலை செய்த முறையை மீண்டும் ஒரு தடவை நடித்துக் காட்டுகின்றனர். முன்னாள் இனப்படுகொலையாளர்கள் நடித்த, The Act of Killing என்ற ஆவணப்படம், இந்த மாதம் உலகத் திரையரங்குகளில் காண்பிக்கப் படவுள்ளது.   

இனப்படுகொலை செய்தவர்கள், எவ்வாறு இந்தளவு தைரியமாக, சுதந்திரமாக நடமாட முடிகின்றது? "இனப்படுகொலையில் ஈடுபட்டதற்காக பெருமைப் படுகின்றோம்." என்று, எவ்வாறு பகிரங்கமாக கூற முடிகின்றது? எல்லாம் அமெரிக்கா கொடுக்கும் தைரியம் தான். ஒரு நாட்டில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்ற விடாமல் தடுக்க வேண்டுமானால், எத்தனை இலட்சம் போரையும் இனப்படுகொலை செய்யலாம். அது தவறென்று சர்வதேச சமூகம் கூறாது. அது பாவம் என்று மத நம்பிக்கையாளர்கள் கூற மாட்டார்கள். எந்த ஊடகமும் அதைப் பற்றி ஆராய மாட்டாது. எந்தக் கல்லூரியும் அதைப் பற்றி மாணவர்களுக்கு போதிக்க மாட்டாது.

 இந்தோனேசியாவில் இனப்படுகொலை செய்த ஒரு கொலைகாரன் சொன்னதைப் போல, "போர்க்குற்றம் என்றால் என்னவென்று, வென்றவர்களே தீர்மானிக்கிறார்கள்."  கடந்த மூவாயிரம் வருட உலக வரலாறு முழுவதும், அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகம் மாறி விட்டதாகவும், நியாயத் தீர்ப்பு வழங்குவதற்கென இயங்கும், ஐ.நா. போன்ற சர்வதேச ஸ்தாபனங்கள் கடமையைச் செய்து வருவதாகவும், எம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரும், அதற்கு டச்சுக்காரர்கள் உரிமை கோரியதால், அங்கே ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. இடையில் சில வருடங்கள், ஆக்கிரமித்த ஜப்பானியர்களுடன், இந்தோனேசிய தேசியவாதிகள் ஒத்துழைத்தனர். இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் மட்டுமே, டச்சுக்காரரையும், ஜப்பானியரையும் எதிர்த்து போராடினார்கள்.  இறுதியில்,  தேசியவாதிகளிடம் சுதந்திரத்தை கையளிக்குமாறு அமெரிக்கா வற்புறுத்தியதால், டச்சு காலனிய படைகள் வெளியேறின. 

அன்று இந்தோனேசியாவை ஆண்ட சுகார்னோவும், அவரது ஆதரவாளர்களும் கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ அல்லர். அவர்கள் தேசியவாதிகள். உண்மையில் இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகியது. உண்மையான, நேர்மையான தேசியவாதிகள், சிலநேரம் மேற்குலக நலன்களுக்கு எதிரானவர்களாக மாறலாம். சுகார்னோ, காலனிய முதலாளிகளின் நிறுவனங்களை தேசியமயமாக்கினார். அமெரிக்காவையோ, ரஷ்யாவையோ ஆதரிக்காத, அணிசேரா  நாடுகளின் கூட்டமைப்பை ஸ்தாபித்ததில் சுகார்னாவுக்கு பெரும் பங்குண்டு. மேலும், சீனாவுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தார். "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனாதிபதி சுகார்னோவை பொம்மை போல ஆட்டி வைத்ததாக," சில சரித்திர ஆசிரியர்களும் எழுதியுள்ளனர். ஆனால், அது எந்தளவு தூரம் உண்மை என்பது கேள்விக்குறி. இனப்படுகொலைக்கு நியாயம் கற்பிப்பதற்காக, அவ்வாறு வரலாற்றை திரித்திருக்கலாம். 

1913 ம் ஆண்டு, ஹென்க் ஸ்னேவ்லீட் (Henk Sneevliet) என்ற டச்சு கம்யூனிஸ்ட், "இந்தோனேசிய சமூக ஜனநாயக கூட்டமைப்பு" என்ற, கம்யூனிஸ்டுகளுக்கு முன்னோடியான சோஷலிசக் கட்சியை உருவாக்கினார். இவர் நெதர்லாந்து நாட்டின் தேசிய நாயகன். அதற்கான காரணம் வேறு. கம்யூனிசத்தின் பெயரால், இந்தோனேசிய மக்களையும் ஒன்று திரட்டி வந்ததை விரும்பாத டச்சு காலனிய அரசு, அவரை வெளியேற்றியது.  ஹென்க் தாயகம் திரும்பி வந்த காலத்தில், நெதர்லாந்து ஜெர்மன் நாஜிப் படைகளினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. நாஜிகளின் யூத மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதால், ஜெர்மன் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

1924 ம் ஆண்டு,   "இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி" (Partai Komunis Indonesia) உருவாகியது. (சுருக்கமாக PKI). 1926 ம் ஆண்டு, டச்சு காலனிய அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி ஒன்று இடம்பெற்றது. அது தோல்வியடைந்ததும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் பட்டது. 13000 கம்யூனிஸ்டுகள் கைது செய்யப் பட்டனர். டச்சு காலனிய அரசு, ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்டுகளை நியூ கினியா தீவுக்கு நாடு கடத்தியது. (இந்தியாவை ஆண்ட  ஆங்கிலேயருக்கு அந்தமான் தீவுகள் போன்று, இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக் காரருக்கு நியூ கினியா). இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் உருவான, சுகார்னோவின் தேசிய அரசுக்கு எதிராகவும், கம்யூனிஸ்டுகள் மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள். 

அந்தக் காலத்தில், இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த மூசோ, ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர். இரண்டாம் உலகப்போரில், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போரிட்ட கம்யூனிச கெரில்லாப் படைகளுக்கு சோவியத் யூனியன் உதவி வந்தது. ஆனால், இந்தோனேசியா குடியரசானதும், தேசியவாதிகளுடன் இணைந்து ஒரு தேசிய அரசமைக்குமாறு சோவியத் யூனியன் அறிவுறுத்தியது. ஆனால், மூசொவின் தலைமை அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. 1948 ம் ஆண்டு, டச்சு காலனியாதிக்க படைகளின் வெளியேற்றத்தை பயன்படுத்திக் கொண்ட கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், கிழக்கு ஜாவா பகுதியில் ஒரு விவசாயிகளின் எழுச்சிக்கு தலைமை தாங்கினார்கள். 

கிழக்கு ஜாவா விவசாயிகளின் புரட்சி வெற்றி பெற்றதால், அங்கு ஒரு "இந்தோனேசிய சோவியத் குடியரசு" உருவானது. அன்றைய சுகார்னோ அரசு பிரச்சாரம் செய்ததற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் அந்த கம்யூனிஸ்ட் எழுச்சியை அங்கீகரிக்கவில்லை. ஜாவா விவசாயிகளின் புரட்சிக்கு, வெளியுலக ஆதரவு கிடைக்காத நிலையில், சுகார்னோவின் படைகளால் கடுமையாக அடக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மூசொவும், அந்த யுத்தத்தில் கொல்லப்பட்டார். ஆகவே, "சுகார்னோ கம்யூனிஸ்ட் கட்சியின் பொம்மை போல ஆட்சி நடத்தியதாக" கூறுவது, பின்னாளில் நடந்த இனப்படுகொலைக்கு ஒரு காரணத்தை கண்டு பிடிப்பதற்காக என்பது இங்கே தெளிவாகும்.

1955 ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி பதினாறு சதவீத வாக்குகளைப் பெற்று, நாட்டில் நான்காவது பெரிய கட்சியாக உருவானது, சிலர் கண்களை உறுத்தி இருக்கலாம். 1965 ம் ஆண்டு, கட்சி அழிக்கப்பட்ட காலம் வரையில், மூன்று மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அன்றிருந்த சோஷலிச நாடுகளுக்கு வெளியே இருந்த எந்த நாட்டிலும், இவ்வளவு பெருந்தொகையிலான உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்ததில்லை. மேலும், கட்சியோடு சேர்ந்தியங்கிய விவசாயிகள் முன்னணியில் எட்டு மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். இந்த விபரங்கள் யாவும், சிலருக்கு எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்திருக்கலாம். அன்று அடுத்தடுத்து பல ஆசிய நாடுகளில், கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்ததால், இந்தோனேசியாவிலும் ஒரு கம்யூனிசப் புரட்சி உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று பலர் நம்பினார்கள்.   

இந்தோனேசியாவில் மிக முக்கியமாக, நான்கு அரசியல் சக்திகள், கம்யூனிஸ்ட் கட்சியை கருவறுக்க கங்கணம் கட்டின. அவையாவன: 
1. இராணுவத்திற்குள் ஒரு பிரிவினர். வலதுசாரி முதலாளித்துவ நலன் சார்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு, சுகார்ட்டோ தலைமை தாங்கினார்.
2. நிலவுடமையாளர்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக, நிலமற்ற விவசாயிகள் பெருமளவு நிலங்களை ஆக்கிரமித்து வந்தனர். அதனால் நாடு முழுவதும் இருந்த நிலவுடமையாளர்கள், தமது எதிர்காலம் சூனியமாகி விடும் என்று அஞ்சினார்கள்.
3. கடும்போக்கு இஸ்லாமிய மதவாதிகள். இந்தோனேசியா, உலகிலேயே அதிகளவு முஸ்லிம் சனத்தொகையை கொண்ட நாடு. இஸ்லாமிய மதவாதிகள், "நாஸ்திக கம்யூனிஸ்டுகளை" வெறுத்தார்கள். பிற்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களாக கருதப்பட்ட மத அடிப்படைவாத அமைப்புகள், அன்றைய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இனப்படுகொலையின் ஊடாக வளர்ந்தவை. 
4. அமெரிக்கா. அமெரிக்க தூதரகமும், சி.ஐ.ஏ. யும் மிகத் தீவிரமாக இந்தோனேசிய அரசியல் விவகாரங்களில் தலையிட்டு வந்தன. அவர்கள் மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினருடனும், மிகவும் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தனர். சுகார்ட்டோ என்ற கொடுங்கோல் சர்வாதிகாரியையும், இஸ்லாமிய மத அடிப்படைவாத தீவிரவாதிகளையும், அமெரிக்கர்களே உருவாக்கினார்கள். 

30 செப்டம்பர் 1965, ஜகார்த்தா நகரில் இராணுவ தளபதிகளின் வீடுகளின் முன்னால் ஒரு டிரக் வண்டி வந்து நின்றது. மிகவும் முக்கியமான ஏழு படைத்தளபதிகளை பிடித்துச் செல்வதே, டிரக் வண்டிகளில் வந்தவர்களின் நோக்கம். கைது செய்ய வந்தவர்களுடன் எதிர்த்துப் போராடியதால், மூன்று பேர் ஸ்தலத்திலே கொல்லப் பட்டனர். மூன்று பேர் அழைத்துச் செல்லப் பட்டு, அடுத்த நாள் கொல்லப் பட்டனர். ஒருவர் பிடிபடாமல் தப்பி ஓடி விட்டார். அடுத்தநாள், 1 ஒக்டோபர் 1965, ஆறு இராணுவ தளபதிகள் கொலை செய்யப் பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியது.  "30 செப்டம்பர் குழு" என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள், ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளதாக வானொலியில் அறிவித்தனர். ஆனால், யார் இந்த சதிப்புரட்சியாளர்கள்? உலகில் இன்று வரை துலக்கப் படாத மர்மங்களில் அதுவும் ஒன்று. அந்த சதிப்புரட்சி, CIA தயாரிப்பில் உருவான நாடகம் என்று சிலர் சந்தேகப் படுகின்றனர். அது உண்மையா? இந்தோனேசியாவில் நடந்த இனப்படுகொலையில், அமெரிக்காவுக்கும் பங்கு உண்டா?

Monday, March 04, 2013

ஆப்கானிஸ்தானை ஆண்ட ஆதித் தமிழர்கள் - ஓர் ஆய்வு

அசோக சக்கரவர்த்தியின்  கண்டஹார் 
கல்வெட்டு (கி.மு. 250  )

ஆப்கானிஸ்தானில், கி.மு. 250 ல் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடம் : கண்டஹார்! ஆமாம், ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டஹார் நகரம் தான். இறுதியாக, கம்யூனிஸ்டுகள் ஆப்கானிஸ்தானை ஆண்ட காலம் வரையில், இந்தக் கல்வெட்டு காபுல் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது. இஸ்லாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி ஏற்பட்ட குழப்பகரமான காலப்பகுதியில் காணாமல் போய்விட்டது. 

ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளில், பிரஜைகளின் நன்னடத்தையை குறிக்கும் அறிவுரைகள் எழுதப் பட்டுள்ளன.  இதிலே நாம் கவனிக்க வேண்டிய விடயம், கல்வெட்டில் பயன்படுத்தப் பட்டுள்ள தொடர்பாடல் மொழி. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சின் கீழ் இருந்த இந்திய சாம்ராஜ்யத்தில், அந்தந்த மாநில மக்களின் பிரதான மொழிகளில் கல்வெட்டுகள் எழுதப் பட்டன. ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுகளில், கிரேக்கம், அராமி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன. கண்டஹார் நகருக்கு வடக்கே இருந்த பகுதிகளில், கிரேக்க காலனிகள் உருவாகி, அது கிரேக்கர்களின் நாடாக இருந்தது. அதனால் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது. 

அப்படியானால் அராமி மொழி? ஹீபுரு, அரபு மொழிகளுக்கு நெருக்கமான, இயேசு கிறிஸ்து பேசிய அராமி மொழி, ஒரு காலத்தில் மேற்காசிய நாடுகளின் சர்வதேச மொழியாக இருந்தது. பாலஸ்தீனம் முதல், பாகிஸ்தான் வரையில் அராமிய மொழி பேசத் தெரிந்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் யார்? திராவிடர்களா? ஆப்கானிஸ்தானில், பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தை பற்றி, புராதன கால கிரேக்கர்களும், ஈரானியர்களும் எழுதி வைத்துள்ளனர்.

"அந்த மக்கள் இடுப்பில் ஒரு துண்டு  மட்டுமே ஆடையாக அணிந்திருந்தனர். மார்புப் பகுதியை மூடுவதில்லை. காலில் செருப்பு அணிந்திருந்தார்கள். அவர்களது வாள்கள் நீளமானவை என்பதால், வாளின் உறையில் தொங்கும் பட்டியை, தோளில் மாட்டி இருப்பார்கள்..."  என்று அந்த புராதன கிரேக்க, ஈரானிய வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளது (கி.மு. 450). (ஆதாரம்: Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang  ஆப்கானிஸ்தானின் ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள், பண்டைய தமிழர்களின், அல்லது திராவிடர்களின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது. ஆப்கானிஸ்தானின் பூர்வகுடிகள், தமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கலாம்.

இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் இனங்கள் பேசும் மொழிகள். இன்று ஆப்கானிஸ்தானில் யாரும், கிரேக்க அல்லது அராமிய மொழி பேசுவதில்லை.  (அராமி மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய சிரியாவில் மட்டும் சில ஆயிரம் பேர் பேசுகின்றனர்.) பெரும்பான்மை இன மக்கள் பேசும் பஷ்டூன் மொழி, ஈரானின் பார்சி மொழிக்கும், இந்தியாவின் இந்தி மொழிக்கும் இடைப்பட்டது. இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி. பஷ்டூன் இன மூதாதையர்கள், வடக்கே இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பதை, அந்த மக்களே ஒத்துக் கொள்கின்றனர். அதாவது, அவர்களது சரித்திர சான்றுகள் யாவும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிந்தியவை தான். அப்படியானால், பஷ்டூன் மக்கள் ஆரியர்களா? ஆமாம்!

ஆப்கானிஸ்தான் தேசிய விமான சேவையின் பெயர்: "ஆரியானா".  அதன் அர்த்தம், "ஆரியர்கள்" என்பது தான்! ரிக் வேதத்தில் "ஆர்ய வர்த்தம்" என்று அழைக்கப் பட்ட நாடு, பண்டைய ஆப்கானிஸ்தான் தான். மகாபாரதத்தில் "காந்தர்வர்கள்" என்ற இன மக்களின் குறிப்புகள் வருகின்றன. காந்தர்வர்கள் என்பது, காந்தார நாட்டை சேர்ந்த மக்களை குறிக்கும். இன்றைய கண்டஹார் நகரின் பழைய பெயர், காந்தாரம்! 

கண்டஹார் என்பது, அங்கு குடியேறிய ஆரியர்களால்  ஆரியமயமாக்கப் பட்ட இடப் பெயர் ஆகும்.  இன்று பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தில், ஒரு காலத்தில் சக்திவாய்ந்த காந்தார தேசம் இருந்தது. காந்தர்வ மக்கள், இன்றைய பஷ்டூன் மக்கள் அல்ல. காந்தர்வ மக்கள், பௌத்த மதத்தையும், இந்து மதத்தையும் பின்பற்றினார்கள். இந்து மதம் என்றால், எந்த இந்து மதம்? ஆரியர்களின் இந்து மதமா? அல்லது திராவிடர்களின் இந்து மதமா? இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஆப்கானிஸ்தானில் தான் தோன்றியது. 

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிட மக்களுடன், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் இனக்கலப்பு நடந்துள்ளது. அது இரண்டு வகையில் நடந்திருக்கலாம். ஒன்று, கலப்பு  மண உறவுகளின் விளைவாக  உருவான புதிய இனம். இரண்டாவது, தாய்மொழியை மறந்து விட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை ஏற்றுக் கொள்ளுதல். ஏதோ ஒரு வகையில், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் மொழி, அந்தப் பிரதேசத்தில் நிலைத்து விட்டது. 

தமிழர்களின் தேசிய அரசியல் போன்று, பஷ்டூன் மக்களின் தேசியமும், மொழியை அடிப்படையாக கொண்டது, என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஒரு பஷ்டூ தனது மொழியை பேசத் தெரியாமல், வேறொரு அந்நிய மொழியை பேசினால், அவன் பஷ்டூன் இனத்தை சேர்ந்தவனாக கருதப் பட மாட்டான். 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பஷ்டூன் இனத்தை சேர்ந்த ஷா மன்னர், பார்சி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்ததால், பெரியதொரு கலவரம் வெடித்தது.  அதன் பிறகு தான், ஆப்கானிஸ்தான் தலைநகரம், கண்டஹாரில் இருந்து காபுலுக்கு இடம் மாறியது. 

ஆப்கானிஸ்தானில் இன்னமும் திராவிட இனங்கள் இருக்கின்றனவா? ஆம்! "பிராஹுய்" (Brahui)  என்ற, திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த, மொழி ஒன்றை பேசும் மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். அவர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பல இடங்களில் சிதறிப் போயுள்ளனர். மேலும், பலுச்சி மொழி பேசும் மக்கள், ஒரு காலத்தில் பிராஹுய் மொழி பேசியிருக்கலாம். அதனை நிரூபிக்கும் வகையில், இரண்டு இனங்களினதும் கலாச்சாரங்கள் ஒன்றாக உள்ளன. பலுச்சி ஒரு இந்தோ-ஈரானிய மொழி என்பது மட்டுமே வித்தியாசம். "திராவிடர்களான" பலுச்சி, பிராஹுய் மக்கள் இன்று இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர். ஆனால், இஸ்லாம் என்பது, 1500 ஆண்டுகளுக்கு முன்னர், அரேபியாவில்  தோன்றிய புதிய மதம் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களை விட, "பாஷை" என்றொரு வித்தியாசமான மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். பாஷை மக்கள் தம்மை பஷ்டூனியருடன் அடையாள படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டவர்கள். பாஷை இன மக்கள் மத்தியில், கருப்பு நிற மேனியை கொண்ட, அல்லது தென்னிந்தியர்கள் போல தோற்றமளிக்கும் பலரை காணலாம். (எல்லோரும் அப்படி அல்ல.) 

வடக்கு ஆப்கானிஸ்தானில், காபுல் நகருக்கு கிழக்கே, பாகிஸ்தான் எல்லையோரம், "நூரிஸ்தான்" மாகாணம் உள்ளது. அவர்கள் தனித்துவமான, "நூரிஸ்தானி" மொழி பேசுகின்றனர். பார்சி, பஷ்டூன், உருது ஆகிய இந்தோ-ஈரானிய மொழிகளுடன் சம்பந்தமில்லாத தனித்துவமான மொழி அது. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு வெள்ளை இனத்தவர்  போன்று தோற்றமளிக்கின்றனர்.  அந்த மக்களுக்கு, நூரிஸ்தானி என்ற பெயர் வரக் காரணம் ஒரு தனிக்கதை. 

19 ம் நூற்றாண்டு வரையில், நூரிஸ்தானி மக்கள் "இந்துக்களாக" இருந்தார்கள். (இன்று மிகத் தீவிரமான இஸ்லாமிய மதப் பற்றாளர்கள். ரஷ்ய படைகளினால் ஆக்கிரமிக்கப் பட முடியாமல் இருந்த, ஒரேயொரு மாகாணம் அது தான்.) வேத கால இந்துக் கடவுளரான, இந்திரன், வருணன், அக்கினி போன்ற தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டாலும், பாரம்பரிய வேத கால இந்துக் கலாச்சாரங்களை இன்னமும் பின்பற்றி வருகின்றனர். 19 ம் நூற்றாண்டு வரையில் அந்த மாகாணம், "காபிர்ஸ்தான்" என்ற பெயரில் அழைக்கப் பட்டது.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், அது நூரிஸ்தான் என்று மாற்றப் பட்டது. 

ஒரு காலத்தில், தெற்கு ஈரானில் இருந்த, "ஈழம்" அல்லது "எலம்"  (Elam)  என்ற, திராவிடர்களின் ராஜ்யத்தை சேர்ந்த மட்பாண்டங்கள், ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டன. அது அந்தக் காலத்தில் இருந்த, வர்த்தகத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு, ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிடர்கள் எல்லாம், கறுப்பின மக்கள் என்று நாங்கள் அறுதியிட்டுக் கூற முடியாது.  உண்மையில், ஆரியர், திராவிடர் என்று, மக்களை இன அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது. 

"ஆரியர்கள் என்றால் வெள்ளையர்கள், திராவிடர்கள் என்றால் கருப்பர்கள்" என்ற, கருப்பு-வெள்ளை பாகுபாடு, எல்லா இடங்களிலும் பொருந்தாது. "ஆரிய கலாச்சாரம், திராவிட கலாச்சாரம்" என்று நாங்கள் பாகுபடுத்தலாம். ஆரியர்களின் வருகைக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் திராவிடர் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த வெள்ளையின மக்களும்  அதனை பின்பற்றி வந்தனர்.  சில நூறாண்டுகளுக்குப் பின்னர், அந்த இடத்தில் ஆரிய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், அங்கு வாழ்ந்த கறுப்பின மக்களும் அதனை பின்பற்றி வந்தனர். 

தெற்காசியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த ஒரு முக்கியமான இனத்தவர்கள் பற்றி, நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.  "யூதர்கள் (ஹீபுருக்கள்), பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, தெற்காசியாவிலும் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்," என்று நான் சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். நாங்கள் இப்போதும், ஐரோப்பியரின் மூளையை பொருத்திக் கொண்டு சிந்திப்பதால், எமது கடந்த கால வரலாற்றையே மறந்து விட்டோம். ஐரோப்பியர்களோ, தங்களது தேச, இன நலன்களை மையமாக கொண்டு தான், அனைத்தையும் ஆராய்கிறார்கள். 3000 வருடங்களுக்கு  முன்னர், ஹீபுரூ  மக்கள் யூத மதத்தை பின்பற்றவில்லை. ஆனால், யூதர்களின் புனித மொழியான ஹீபுருவுக்கு நெருக்கமான அராமிய மொழி பேசினார்கள். யூத மதம் கூட, சரதூசர் என்ற (ஈரானிய) தீர்க்கதரிசியின் மத தத்துவங்களை உள்வாங்கிக் கொண்ட புதிய மதமாக உருவெடுத்திருந்தது. 

ஒரு காலத்தில், பாகிஸ்தானில் இருந்து பாலஸ்தீனம் வரையில், அராமி  மொழி பேசப் பட்டு வந்தது.  அந்தப் பகுதியில் வாழ்ந்த எல்லோரும் அராமியை தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை. ஆனால், சர்வதேச மொழியாக தெரிந்து வைத்திருந்தனர். ஹீபுரு மொழி பேசிய யூதர்கள், அரேமி வம்சாவளியினர் தான். அராமி, ஹீபுரு மொழிகளை, தமிழ், மலையாளத்துடன் ஒப்பிடலாம். 19 ம் நூற்றாண்டு வரையில், ஆப்கானிஸ்தானில் இலட்சக் கணக்கான யூதர்கள் வாழ்ந்தார்கள். 

1836 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை ஆண்ட மன்னர் தோஸ்த் மொஹமட் கான், இஸ்லாமிய மதத்தை அரச மதமாக்கி, கடுமையான மத சட்டங்களை அமுல்படுத்தினார். மது பாவனை தடை செய்யப் பட்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த பெருந்தொகையான யூதர்கள் வெளியேறி விட்டனர். அன்று அவர்கள் பாலஸ்தீனா செல்லவில்லை. அருகில் இருந்த மத்திய ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். 20 ம் நூற்றாண்டில், இஸ்ரேல் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், எஞ்சியிருந்த ஆப்கான் யூதர்களும் வெளியேறி விட்டார்கள். 

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த யூதர்கள் எப்படியான தோற்றத்துடன் இருந்திருப்பார்கள்? இது சம்பந்தமான பழைய புகைப்படங்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள யூத கலாச்சார-வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அந்தப் படத்தில் இருக்கும் யாரும், வெள்ளையின ஐரோப்பியராக தோற்றம் அளிக்கவில்லை. மாறாக, இந்தியர்களை போன்ற முகச் சாயலை கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஹீபுருக்கள், அல்லது அரேமியர்கள், தென்னிந்திய திராவிடர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இன்றைக்கும் ஒரே மாதிரியான  சொற்கள், தமிழிலும், ஹீபுருவிலும் காணப் படுகின்றன. 

மேலதிக விபரங்களுக்கு, நான் எழுதிய "நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!" கட்டுரைத் தொடரை வாசிக்கவும். 


உசாத்துணை:
1.An inscription of Asoka discovered in Afghanistan, http://www.jstor.org/discover/10.2307/29753969?uid=3738736&uid=2&uid=4&sid=21101901312507 
2.The Nuristani people, http://en.wikipedia.org/wiki/Nuristani_people
3.The Pashayi people, http://en.wikipedia.org/wiki/Pashai_people
4.Aramaic language, http://en.wikipedia.org/wiki/Aramaic_languages
5.Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang
6.Lost Cities of China, Central Asia & India, by David Hatcher Childress