Saturday, January 31, 2009

மரணப்பொறிக்குள் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் (வீடியோ)

இலங்கையில் நடைபெறும் போர் தீவிரமடைந்து வருகையில், பொது மக்களின் உயிர் இழப்புகள் அதிகரிக்கின்றன. இது குறித்து, உலகத் தமிழ் மக்கள் மட்டுமல்ல; மனிதநேய அமைப்புகள், வெளிநாட்டு அரசுகள், ஊடகங்கள் என்பனவும் தமது அனுதாபங்களை பல்வேறு வழிகளிலும் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச ஊடகங்கள் தயாரித்தளித்த, பக்கச் சார்பற்ற செய்தி அறிக்கைகள் சில இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.

Trapped in Sri Lanka’s civil war crossfire (Channel 4)


Interview: Yolanda Foster (Amnesty International)

"முட்டாள் அமெரிக்கா!" - ஆவணப்படம்


அமெரிக்க மாணவர்களின் புத்திசாதுர்யம், திறமை, கல்வித்தகமை என்பன மிக மோசமாக உள்ளன. பிற நாட்டு மாணவர்களுடன் ஒப்பிடும் போது, மிகக் குறைவாக சித்தியடைகின்றனர். வறிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கூட, அமெரிக்கர்களை விட விவேகமானவர்களாக உள்ளனர். வகுப்பறைகளில் ஒழுங்கீனம் நிலவுகின்றது. ஆசிரியர்களால் மாணவர்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியவில்லை. ஆசிரியர்கள் மத்தியிலும் ஒழுக்கமின்மை நிலவுகின்றது. அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதில்லை என்பது அதைவிடக் கொடுமை. இந்த கல்விச் சீர்குலைவுக்கு, பாடசாலைகள் நிதிப்பற்றாக்குறையை, காரணமாக கூறுகின்றனர். உண்மை என்ன? அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி தயாரித்து ஒளிபரப்பிய ஆவணப்படத்தைப் பாருங்கள்:


Stupid in America

ராமேஸ்வரம் அகதிகள் பற்றிய ஆவணப்படம்

அல் ஜசீரா தொலைகாட்சி, இலங்கையில் நடக்கும் தமிழின விரோத போர், மற்றும் ஈழத்தமிழர் படும் துன்பங்கள் குறித்த அறிக்கைகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வரும் குறிப்பிடத்தக்க சர்வதேச ஊடகமாகும். ராமேஸ்வரம் அகதிகளின் அவலத்தை நேர்கண்ட ஆவணப்படம் ஒன்றை அண்மையில் அல் ஜசீரா ஒளிபரப்பியது.

Those who’ve been able to escape the fighting in Sri Lanka face new hardships. Many leave everything behind, in search of safety in neighbouring India. Thousands of refugees have attempted to make the dangerous voyage from the north of Sri Lanka to state of Tamil Nadu, as Al Jazeera’s Matt McClure reports from Rameswarem.

Sri Lankan refugees face hardships (Al Jazeera English, 29 Jan 09 )

Friday, January 30, 2009

ஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி


உலகின் ஆறாவது பணக்கார நாடான ஐஸ்லாந்தில், இடம்பெற்ற வெற்றிகரமான மக்கள் புரட்சியானது, வரவிருக்கும் புரட்சிகளின் முன்னறிவித்தலா? நிதி நெருக்கடியால் ஐஸ்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது, நிச்சயமாக ஒரு தொடக்கம் தான். சர்வதேசம் தனது கவனத்தை ஒபாமாவின் பதவியேற்பு வைபவத்தின் பக்கம் திசை திருப்பிய வேளை தான், அந்த அதிசயம் அரங்கேறியது. செல்வம் கொழித்த மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், மக்கள் போராட்டம் ஒரு அரசாங்கத்தையே மாற்றியது என்பதையோ, அரச அதிகாரத்தை மக்கள் தமது கைகளில் எடுத்தனர் என்பதையோ, உலகம் அறிய விடாது தடுப்பதில் தான் ஊடகங்கள் குறியாக இருந்திருக்கும்.

"ஐஸ்லாந்து பொருளாதாரம் உறுதியாக இருப்பதாகவும், வளர்ந்து வருவதாகவும்", ஜூலை 2008 ல் ஐ.எம்.எப். அறிவித்தது. அதற்கு ஓரிரு மாதங்களிற்குப் பிறகு, அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, மூன்று பெரிய வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகின. இதே வங்கிகள் தான், ஒரு காலத்தில் கடற் தொழிலையே நம்பி வாழ்ந்த ஐஸ்லாந்து மக்களை, செல்வந்தர்களாக்கின. இன்று தேசப் பொருளாதாரமே ஸ்தம்பிதமடைந்த நிலையில், கல்வியறிவு பெற்ற புதிய தலைமுறை கடலை நம்பி வாழும் கடந்த கால அவல வாழ்க்கைக்கு திரும்ப தயாரில்லை.

மூன்று மாதத்திற்குள், பணவீக்கம் 13% ஆகியது. தேசிய நாணயமான குரானாவின் பெறுமதி அரைவாசியாகியது. பொருளாதாரம் 10 வீதம் சுருங்கியது. திவாலான கம்பெனிகள், 300000 பேர் கொண்ட ஐஸ்லாந்து சனத்தொகையில், 12000 வேலையற்றோரை உருவாக்கின. சுகாதார துறை போன்ற பொதுநல செலவினத்தை குறைத்த போதும், இவ்வருட வரவு செலவு திட்டத்தில் பில்லியன் யூரோ துண்டு விழுந்தது. பொருளாதார பிரச்சினைக்கு, அமைச்சர்கள் வங்கி முதலாளிகளை குற்றஞ்சாட்டினர். வங்கி முதலாளிகளோ அமெரிக்காவை குற்றஞ்சாட்டினர். அரசாங்கம் பொது மக்களின் வரிப்பணத்தை கொடுத்து, வங்கிகளை திவாலாகாமல் தடுக்கப்பார்த்தது. அந்த செலவை ஈடுகட்ட ஐ.எம்.எப். பிடம் கடன் (2 billion dollar) வாங்கியது.

கடனை திருப்பி செலுத்துவதாயின், பொது துறை செலவினத்தை குறைக்கும் படியும், வரிகளை உயர்த்தும் படியும், ஐ.எம்.எப். ஆலோசனை கூறியது. அதாவது வங்கி முதலாளிகள் பங்கு வர்த்தகத்தில் சூதாடி தொலைத்த பணத்தை, பொது மக்களிடம் அறவிடக் கோரியது. பெரும்பான்மை மக்கள் படிக்காத பாமரர்களாயின், இலகுவாக ஏமாற்றி இருக்கலாம். ஐஸ்லாந்து மக்கள் கல்வியறிவு பெற்றது, தமது சம்பாத்தியத்திற்காக மட்டுமல்ல, அரசாங்கத்தை கேள்வி கேட்கவும் தான். அமைச்சர்கள், கம்பெனி நிர்வாகிகள், மக்களுடன் விவாதிக்க பொது மேடைக்கு அழைக்கப்பட்டனர். மக்களின் கேள்விக்கு அவர்களிடம் சரியான பதில் இருக்கவில்லை. ஆளும் கட்சியின் அரசியலில் நம்பிக்கை இழந்த மக்கள், தலைநகர் ரெய்ஜாவிக் தெருக்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில், முதியோர் முதல் சிறுவர் வரை தவறாமால் சமுகமளித்தனர். தேசபக்திப் பாடல்களைப் பாடினர். மக்களை கிளர்ந்தெழ செய்த அந்தப் பாடல்கள்: Land míns föður, landið mitt [எனது தந்தையின் நாடு, எனது நாடு) Hver á sér fegra föðurland (அழகான தந்தையர் நாடு யாருடையது?) . இதற்கிடையே கோடிகோடியாக பணம் சேர்த்து விட்ட பணக்கார கும்பல் நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருந்தது.

மூன்று மாதங்களாக, பாராளுமன்ற(Althingi) முன்றலான, Austurvöllur யில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆளும் வலதுசாரி "சுதந்திரக் கட்சி", பதவி விலகுமாறு கூறிய மக்களின் குரலுக்கு செவி சாய்க்க மறுத்தது. ஹார்டே தலைமை தாங்கிய அரசாங்கம், பொருளாதார அபாயம் குறித்து மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்த தவறிவிட்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. அரசாங்கம் புதுவருடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை, திருடர்கள் போல நகரில் வேறு கட்டடங்களில் கூடியிருந்து நடத்திக் கொண்டிருந்தது. 2009 ஜனவரி, 20 ம் திகதி , ஐஸ்லாந்து புரட்சி ஆரம்பமாகியது. பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாராளுமன்ற கட்டடத்தை சுற்றி வளைத்து நின்றனர். உறைய வைக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, தீவட்டிகளை நட்டு வைத்து காத்திருந்தனர். வீடுகளில் இருந்து எடுத்து வந்த, அலுமினிய பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மக்களின் இந்த முற்றுகை நாட்கணக்காக நீடித்தது.

கலகத் தடுப்பு பொலிசாருடன் சில இளைஞர்கள் மோதிய சம்பவம் தான், போராட்டத்தின் இறுதிக்கட்டம். முகத்தை மூடிக்கொண்ட இடதுசாரி இளைஞர்கள், வங்கி முதலாளிகள் புதுவருடக் கொண்டாட்டம் நடத்திய ஐந்து நட்சத்திர ஹோட்டலை முற்றுகையிட்டனர். அமைச்சர்கள் பாராளுமன்றத்தை அணுக விடாது தடுத்து விரட்டினர். பிரதமர் ஹார்டேயை கூட, அவரது மெய்ப்பாதுகாப்பாளர்கள் மக்க்களிடம் இருந்து பாதுகாத்து அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. அதற்குப் பிறகு, வெளிநாட்டில் புற்றுநோய்க்கு வைத்தியம் செய்யப்போவதாக ஒரு காரணத்தை சொல்லி, பிரதமர் நாட்டை விட்டு வெளியேற, அரசாங்கம் தோல்வியை ஒப்புக்கொண்டது. முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். 2009 ம் ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவரை இடதுசாரி பசுமைக்கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் ஆட்சி அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. "அமைதியான", "அடக்கமான" ஐஸ்லாந்து வன்முறையை அதுவரை கண்டதில்லை, என்று சிலாகித்து எழுதின வெளிநாட்டு பத்திரிகைகள். ஆனால் 1949 ம் ஆண்டு, ஐஸ்லாந்து நேட்டோ அமைப்பில் அங்கத்துவராக சேர்ந்ததை எதிர்த்து நடந்த போராட்டத்திலும், இது போன்ற வன்முறைக் காட்சிகள் அரங்கேறின.


ஐஸ்லாந்தில் நடந்ததை புரட்சி என்று அழைக்கலாமா? அங்கே வர்க்க எழுச்சி காணப்பட்ட போதும், சித்தாந்த ரீதியான வழிகாட்டும் தலைமை இன்னும் உருவாகவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்து உருவான புதிய "முற்போக்கு கட்சி"யும், மற்றும் சமூக ஜனநாயக, பசுமைக் கட்சிகளும் மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதே நேரம் புதிய அரசியல் நிர்ணய சட்டம் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சுருக்கமாக இதனை வெனிசுவேலா அல்லது பொலிவியாவில் போன்ற நாடுகளில் இடம்பெற்ற, இடதுசாரி அலையுடன் ஒப்பிடலாம். லத்தீன் அமெரிக்க கண்டத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம், தற்போது ஐரோப்பிய கரையை வந்தடைந்துள்ளது. ஐஸ்லாந்தின் உழைக்கும் வர்க்கம், பிற ஐரோப்பிய நாடுகளின் சகோதரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வார்களா? பதவி நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் ஆளும் கும்பல்கள் தவிப்புடன் பொழுதைக் கழிக்கின்றனர்.

**************************************************************
இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!
2.நிதியால் சிறுத்த ஐஸ்லாந்து சினத்தால் சிவக்கிறது
*************************************************************

Icelandic revolution begun


Iceland protests (Reuters video)


Revolution in Iceland!
Iceland’s economic collapse fires a 'saucepan revolution'

Tuesday, January 27, 2009

BBC தடை செய்த காஸா உதவி கோரும் வீடியோ


போரினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு, மனிதாபிமான உதவி கோரும் வீடியோ விளம்பரம் ஒன்றை, BBC மற்றும் SKY ஆகிய தொலைக்காட்சி சேவைகள் ஒளிபரப்ப மறுத்துள்ளன. அந்த வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Gaza Aid Appeal: BANNED by the BBC and SKY


Sky Won't Screen Gaza Aid Appeal

Monday, January 26, 2009

குழந்தைகளை கடத்தும் வெள்ளையின மேலாண்மை


உலகப் புகழ் பெற்ற பாடகி மடோனா, ஆப்பிரிக்காவில் மாலாவி நாட்டு குழந்தை ஒன்றை தத்தெடுத்த சம்பவம் சர்வதேச ஊடக கவனத்தை பெற்றது. அதைப்பார்த்த மக்களும், மேல்நாட்டு தர்மவான்களின் காருண்யத்தை மெச்சினர். அதேநேரம் சாட் நாட்டிலிருந்து விமானம் மூலம் குழந்தைகளை கடத்த முயன்று பிடிபட்ட, "Zoë's Ark" என்ற தொண்டர் நிறுவனத்தை சேர்ந்த சில உறுப்பினர்கள், அவர்கள் வாடகைக்கு அமர்த்திய விமானத்தின் ஓட்டி, இரு பத்திரிகையாளர்கள் ஆகியோர் சாட் அரசினால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதேயளவு பேசப்படவில்லை. அந்த தொண்டர் நிறுவன ஊழியர்கள், தாம் அயல்நாடான சூடானில் யுத்தம் நடைபெறும் டார்பூர் பிரதேச அநாதை குழந்தைகளையே, ஐரோப்பிய பெற்றோருக்கு தத்து கொடுக்கும் நல்லெண்ண நோக்குடன் கூட்டிச் சென்றதாக கதை அளந்தனர். ஆனால் அந்தக் குழந்தைகள் சாட் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும்,அவர்கள் அனாதைகளல்ல, பெற்றோர் இருக்கின்றனர் என்பதும், மேற்படி தொண்டர் நிறுவன ஊழியர்களால் கடத்தப்பட்டனர், என்ற உண்மை பின்னர் நிரூபணமானது.

இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர், ஐரோப்பிய சனத்தொகை குறைந்தாலும், வசதிபடைத்தோர் பெருகியதாலும், அல்லது "வறிய நாடுகளில் இருக்கும் ஏழைகளுக்கு உதவும் கொள்கை" காரணமாகவும் பலர் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். மேலைத்தேய அரசுகள் தத்து எடுக்கும் சட்டங்களை கடுமையாக வைத்திருக்கின்றன. தத்து எடுப்பதற்கு குழந்தைகளை பெற்றுக்கொடுக்கும் முகவர் நிலையங்கள் கண்டிப்பான சோதனைக்கு உள்ளாக வேண்டும். வறிய நாடொன்றில் அநாதை ஆச்சிரமங்களுக்கு அதிகபட்ச நன்கொடை அளிப்பது தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தத்து எடுக்கும் தொண்டர் நிறுவனங்கள், இதனை லாபம் கொழிக்கும் தொழிற்துறையாக வளர்த்து விட்டுள்ளன.

Unicef அறிக்கை ஒன்றின் படி, தத்து கொடுக்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும், 50 பெற்றோர் தத்து எடுக்க காத்திருக்கின்றனர். பணக்கார நாடுகள் சிலவற்றில் இந்த காத்திருக்கும் பட்டியலில் சராசரி 4000 பெற்றோர் உள்ளனர். சில நேரம் அவர்கள் 10 வருடங்களாவது ஒரு குழந்தைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமை தத்து எடுக்கும் தொழிற்துறை என்ற லாபகர வணிகத்திற்கு விளைநிலமாக உள்ளது. அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற போர்வையின் கீழ் இயங்கி வரும், இந்த வணிக நிறுவனங்கள் (உதாரணம்: Foster Parents), ஏழை நாட்டு குழந்தைகளை வாங்கி, பணக்கார நாடுகளில் விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றன.

இந்த நிறுவனங்கள், தத்து எடுக்க இருக்கும் தம்பதியினரிடம் $ 5000 தொடக்கம் $ 30000 வரை வசூலிக்கின்றன. இந்த தொகையில் ஒரு பகுதி குழந்தையை வாங்கிக் கொடுக்கும் உள்ளூர் முகவர், சட்ட ஆவணங்களை தயாரிக்கும் வக்கீல் ஆகியோருக்கு செல்கின்றது. உதாரணத்திற்கு ஆனால் குழந்தையை தத்து கொடுக்கும் பெற்றோருக்கு, மிக மிக சிறிய தொகை($600) மட்டுமே செல்கின்றது. சில நேரம் அதுவும் இல்லை. குடும்ப பாரத்தை சுமக்க முடியாத ஏழைப் பெற்றோர், தமது பிள்ளை எங்கேயாவது சென்று நன்றாக வாழ்தல் சரி, என திருப்திப்படுகின்றனர்.

இந்தியா உலகநாடுகளுக்கு குழந்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கின்றது. வருடந்தோறும் சராசரி ஒரு லட்சம் இந்தியக் குழந்தைகள், பணக்கார நாடுகளில் விற்கப்படுவதன் மூலம் அந்நாட்டிற்கு 10 கோடி டாலர்கள் அந்நிய செலாவணியாக கிடைக்கின்றது. இந்தியாவில், அரசால் தீர்மானிக்கப்பட்ட தொகையான $ 3000 ற்கும் அதிகமாகவே அங்குள்ள அநாதை ஆச்சிரமங்களுக்கு வழங்கப்படுகின்றது. தொண்டர் நிறுவனங்கள் மட்டுமல்ல, பணக்கார நாட்டு அரசுகள் கூட, இந்த தொழிற்துறையில் அதிக கட்டுப்பாடுகள் போட விடுவதில்லை.

அவை தத்து கொடுக்கு ஏழை நாடுகள் மீது அழுத்தம் பிரயோகிக்கின்றன. அநாதை இல்லத்தில் இருக்கும் குழந்தை ஒன்றை, 6 மாதங்களுக்கு யாரும் வந்து பார்க்கா விட்டால், அதனை அனாதைக் குழந்தை என்று தீர்மானித்து சட்டபூர்வமாக தத்து கொடுக்கும் படி அமெரிக்கா வற்புறுத்தி வருகின்றது. இதனால் வளர்முக நாடுகளின் ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அநாதை இல்லத்தில் விடும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர். ஏழை நாட்டு அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பு திட்டங்களில் முதலிடுவதை கைவிட்டு விட்டு, தமது நாட்டு ஏழைக் குழந்தைகளை பிடித்து கடத்தும் ஈனத்தனமான வேலைகளில் இறங்குகின்றன.

"தத்து எடுப்பது ஒரு தர்ம காரியம்" என்ற மாயை இன்னும் அகலவில்லை. பெரும்பாலும் ஏழை-பணக்கார நாடுகளின் உறவுகளில் இன்னொரு முரண்பாடாக "தத்து எடுக்கும் நற்பணி" உள்ளது. பெரும்பாலும் இனவாத சக்திகள் இதனால் பலம்பெருகின்றன. ஆசியா அல்லது ஆப்பிரிக்காவை சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட வளர்ந்து வரும் நாடொன்றில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தை, தனது பிறந்த இடத்தில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்ட சூழலில் வளர்கின்றது. பணக்கார நாடொன்றில், வெள்ளையின பெற்றோரால் வளர்க்கப்படும் அந்தக் குழந்தை, வளர்ப்புப் பெற்றோரின் உலகப்பார்வையை பெற்றுக் கொள்கின்றது. அந்தப் பார்வை பெரும்பாலும் வெள்ளையின மேலாதிக்கம் சம்பந்தப்பட்டது,என்பதை நான் இங்கே குறிப்பிடத்தேவையில்லை.

ஏழை நாடுகள் வளர முடியாது சபிக்கப்பட்டவை, பணக்கார நாடுகள் அதற்குமாறாக கடவுளின் அனுக்கிரகம் பெற்றவை, என்பன போன்ற இனவாதக் கருத்துகள் பிஞ்சுமனதில் விதைக்கப்படுகின்றன. கருப்புத்தோல் கொண்டிருந்தாலும், வெள்ளயினத்தவரை போல சிந்திக்கின்றனர். ஏழை நாடுகளை கண்டால் அருவருக்கும் போக்கை, பல தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் பெற்றுக்கொள்கின்றனர். இந்த இனவாத தத்தெடுக்கும் நடைமுறைக்கு அவுஸ்திரேலியா முன்னோடியாக விளங்கியது. அங்கே லட்சக்கணக்கான கருமைநிற அபோர்ஜின குழந்தைகள், அவர்களது பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்டனர். அந்தப் பிள்ளைகள், வெள்ளையின கிறிஸ்தவ சபைகளால், ஐரோப்பிய கலாச்சார அடிப்படையில் வளர்க்கப்பட்டனர். "திருடப்பட்ட தலைமுறை" என்றழைக்கப்படும் அந்த வன்செயல், நாகரீக உலகால் நிராகரிக்கப்படுகின்றது. ஆனால் தத்து எடுத்து வளர்ப்பது என்ற, "பிள்ளை பிடிக்கும் வணிக நிறுவனங்களின்" செயல், இன்றும் கூட தர்மகாரியமாக கருதப்படும் வேடிக்கையை பார்க்கலாம்.

உசாத்துணை:
Adoptie Industrie stimuleert kinderhandel (Fabel van de Illegaal, nr.89/90,2008)
Indiase ouders eisen zoontje terug (De Volkskrant, 11/8/2007)
Baby's te koop (De Volkskrant, 2/7/2007)

மேலதிக விபரங்களுக்கு:
Transracial Abducties
ROMANIA - FOR EXPORT ONLY
Guatemalan Baby Trade Means Trouble for Adoptions

Thursday, January 22, 2009

சர்வதேச விடுதலைப் போர்களின் திருத்தந்தை


ஜோர்ஜ் ஹப்பாஷ், 81 வயதில் மாரடைப்பால் 2008 ஜனவரி 26 ல் காலமான செய்தி பல பலஸ்தீன மக்களுக்கும், உலகில் பல்வேறு நாடுகளின் புரட்சிக்காரர்களுக்கும், பழைய இனிய நினைவுகளை கிளறி விட்டது. இஸ்ரேலின் எதிரியாக, மேற்குலக நாடுகளின் பயங்கரவாதத் திருத்தந்தையாக கணிக்கப்பட்ட ஹப்பாஷ், அதே நேரம் பலஸ்தீன மக்கள் அனைத்து பிரிவினரும் மதிக்கும் ஒருவராக, சர்வதேச விடுதலை இயக்கங்களின் தோழனாக கருதப்பட்டார். அவரது வாழ்க்கை பலஸ்தீன போராட்ட வரலாற்றின் ஒரு பகுதி. PLFP என்ற பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தின் வரலாறு ஜோர்ஜ் ஹப்பாஷின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தது.

1948 இஸ்ரேல் என்ற நாடு, பலஸ்தீன மாநிலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகியது. கிரேக்க கிறிஸ்தவ மதப்பிரிவை சேர்ந்த, ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்த ஜோர்ஜ் ஹப்பாஷ், பின்னர் லெபனானில் அகதியாக இருந்த போது, பெய்ரூட் அமெரிக்க பல்கலைகழகத்தில் மருத்துவராக பட்டம் பெற்றாலும், பலஸ்தீன விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆரம்ப காலத்தில் எகிப்திய நாசரின் வழியில், அரபு தேசியவாத இயக்கத்தை உருவாக்கிய ஹப்பஷும் தோழர்களும், பின்னர் மார்க்ஸ்சிய-லெனினிய தத்துவங்களால் கவரப்பட்டு, PLFP என்று மாற்றிக்கொண்டனர். அன்றிலிருந்து ஹப்பஷின் தனித்துவ அரசியல் உலகம் முழுக்க பிரபலமானது.

20 ம் நூற்றாண்டில் உருவான அரசியல் அமைப்புகள் யாவும், ஏதாவதொரு சர்வதேசியத்தை முன்னெடுக்க தவறவில்லை. இன்று ஹமாஸ், இஸ்லாமிய சர்வதேசியத்தின் ஒரு பகுதியாக தன்னை பார்ப்பது போல, அன்று ஹபாஷ் ஆரம்பத்தில் அரபு (சர்வ)தேசியம், பின்னர் மார்க்சிய சர்வதேசியம் போன்றவத்தின் ஓர் அங்கமாக தனது இயக்கத்தை நிறுவினார். இதற்கு அவரது தனிப்பட்ட வரலாறு காரணமாக இருக்கலாம். பலஸ்தீனியர்களில் கணிசமான அளவு தொகையில் உள்ள (கிரேக்க பிரிவு) கிறிஸ்தவர்கள், இஸ்ரேல் என்ற தேசம் ஸ்தாபிக்கப்பட்ட போது, யூத காடையர்கள் தமது குடியிருப்புகளையும் தாக்குவார்கள் என்று கருதவில்லை. வழக்கமாகவே மூன்றாம் உலக கிறிஸ்தவர்களிடம் காணப்படும் மேற்குலக சார்பு தன்மை, அந்த என்னத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும் சியோனிச பேரினவாத வெறியர்களின் நோக்கம், ஒரு மொழி(ஹீப்ரு) பேசும், ஒரே யூத மதத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே இஸ்ரேல் சொந்தம் என்று தீர்மானித்து விட்டதால், வன்முறையை பிரயோகித்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பலஸ்தீனத்தின் பூர்வீககுடிகள் அனைவரையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் பேதம் பார்க்காமல் வெளியேற்றினர். ஆகவே அரபு தேசியவாத இயக்கமாக இருந்தாலும், PLFP யாக இருந்தாலும் மதச்சார்பற்ற பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க முயன்றது, பூர்வீக மக்களின் தார்மீக உரிமை சார்ந்ததாகும். இன்று ஹமாஸ் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்புகள், சியோனிசத்தின் எதிர் பிம்பமாக உள்ளன. இஸ்ரேலும், மேற்குலக நாடுகளும் அப்படியான எதிரிகளையே எதிர்பார்ப்பர்களாயின், அப்படியே ஆகட்டும்.

அரபு சர்வதேசிய ஒற்றுமையின் முதற்படியாக, எகிப்தும், சிரியாவும் ஒன்று சேர்ந்த போது வரவேற்ற ஜோர்ஜ் ஹப்பாஷ், பின்னர் அந்த "அரபு யூனியன்" சுயநல அரசியலால் சீர்குலைந்த போது விரக்தியுற்று இருந்த வேளையில், அவர் ஸ்தாபித்த PLFP முற்றிலும் வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, பின்னர் பிரயாணிகளை விடுவித்து விட்டு, குண்டு வைத்து தகர்த்தத்தின் மூலம், பலஸ்தீன பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு எடுத்து சென்றனர். அப்படியான நடவடிக்கை ஒன்றில் பங்கு பற்றிய உலகப்புகழ் பெற்ற இளம் பெண் போராளி லைலா காலித், இன்று PLFP யின் தலைவர்களில் ஒருவராக ஜோர்டானில் வசிக்கிறார். இத்தகைய விமானக்கடத்தல் நடவடிக்கைகள் சில பின்னர் ஹோலிவூட் திரைப்படங்களில் எதிர்மறையாக, தோல்வியில் முடிந்த சாகசங்களாக திரிபுபடுத்தி சித்தரிக்கப்பட்டன. என்ன செய்வது? அமெரிக்க சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்தும் போது, மக்களிடம் இப்படியான பிரச்சாரங்களை எடுத்துச்செல்வது இலகுவாக உள்ளது.

PLFP யின் அதிரடி நடவடிக்கைகள் சர்வதேச ஆர்வலர்களின் உதவியின்றி சாத்தியமாகியிருக்காது. லத்தீன் அமெரிக்க தோழர்கள் சிலர் விமானக்கடத்தல்களின் போது பங்குபற்றி இருக்கின்றனர். திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் சிறை சென்றுள்ளனர். இஸ்ரேல், டெல் அவிவ் விமான நிலையத்தில் துப்பாக்கிப்பிரயோகத்தில் ஈடுபட்ட ஜப்பானியர்கள், பலஸ்தீன போராட்டத்தில் தமதுயிரையும் கொடுக்க தயாராக இருந்தனர். எழுபதிகளில் இடம்பெற்ற இது போன்ற தாக்குதல்கள் சர்வதேச ஒற்றுமைக்கு செயல் வடிவம் கொடுத்தன. அது எப்படி சாத்தியமானது?

அன்று எதிரணியில் இருந்த சோவியத் யூனியன், பலஸ்தீன போராட்டத்தை (அமெரிக்கா) ஏகாதிபத்திய எதிர்ப்பு போராக கணித்திருந்தது. அன்றைய சோவியத் யூனியனிலும், சோஷலிச கிழக்கைரோப்பாவிலும் கல்வி கற்ற பலஸ்தீன மாணவர்கள், வீதிகளில் பிரச்சாரம் செய்யவும், போராட்டத்திற்கு பணம் சேர்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். அதன்போது அங்கு படித்த சில பிற நாட்டு மாணவர்களும் பலஸ்தீன பிரச்சினை பற்றி தெரிந்து கொண்டு, ஆதரவளிக்க முன்வந்தனர். அப்படி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், வெனிசுவேலாவை சேர்ந்த கார்லோஸ் என்ற இளைஞர் பின்னர் உலகப்புகழ் பெற்ற "சர்வதேச பயங்கரவாதியாகி", தற்போது பிரெஞ்சு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய பிறநாட்டு ஆர்வலர்கள், PLFP இனால் தெரிவு செய்யப்பட்டு, ஆயுதப்பயிற்சிக்காக யோர்தான் அனுப்பப்பட்டனர். பயிற்சி முடிந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களுக்கான உத்தரவு வரும் வரை தங்கவைக்கப்பட்டனர்.

1967 ம் ஆண்டு, PLFP ஸ்தாபிக்கபட்ட அதே ஆண்டு, ஐரோப்பாவில் மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் மாணவர்கள் புரட்சியை முன்னெடுத்து, ஆட்சியை கைப்பற்றும் சாத்தியக்கூறுகள் இருந்தன. இருப்பினும் சமயோசிதமாக நடந்து கொண்ட அரசாங்கங்கள், திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணையுடன், கிளர்ச்சிகளை அடக்கின. இதனால் சில மாணவர்கள் ஆயுதப்போராட்ட வழியை நாடினர். ஜெர்மனியில் RAF, இத்தாலியில் Red Birigade, பிரான்சில் Action Directe போன்றன அரசியல் படுகொலைகள், குண்டு வைப்புகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்களுக்கு தேவையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் PLFP விநியோகித்தது. அத்தோடு நிற்காது, அந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தது. சோவியத் யூனியன் வேண்டிய அளவு நிதி உதவி செய்ததால், உலகின் எந்த நாட்டில் இருந்து போவோருகெல்லாம், இராணுவப்பயிற்சி தாராளமாக கிடைத்தது.

ஈழ விடுதலை போராளிகளும் இந்த சந்தர்ப்பத்தை தாராளமாக பயன்படுத்திக் கொண்டனர். வெளிநாட்டு பயிற்சி பெறுவதற்காக என்று, இலங்கையில் இருந்து தெரிவான பல தமிழ் இளைஞர்கள், லெபனானில் இருந்த PLFP முகாம்களில் வந்து குவிந்தனர். அப்போது நடந்து கொண்டிருந்த லெபனான் உள்நாட்டு யுத்தம், அந்த நாட்டில் பன்முகத்தன்மையிலான அரசியல்/இராணுவ கட்டுபட்டு பிரதேசங்களை ஏற்படுத்தியிருந்தது. தெற்கு லெபனான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது போல, மேற்கு லெபனான் சிரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. "பெகா பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படும் அந்தப்பகுதியில், PLFP உட்பட அனைத்து பலஸ்தீன அமைப்புகளும் சுதந்திரமாக இயங்கின. இதனால் உலகின் எல்லப்பகுதகளில் இருந்தும் வந்த தீவிரவாத இளைஞர்கள் அங்கே புகலிடம் பெற முடிந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு, லெபனான் அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால், சிரியா பின்வாங்கிய பின்னர் தான், அந்த புகலிடம் பறிபோனது.

அந்த சமயம் தான் யாசிர் அரபாத்தின் தேசியவாத PLO, இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பலஸ்தீன அதிகார சபை என்ற சமரசத்திற்கு இணங்கியது. ஜோர்ஜ் ஹப்பாஜ், இந்த சமரசத்திற்கு கடைசி வரை உடன்படாமல், தனது தோழர்களுடன் சிரியாவில் தஞ்சமடைந்தார். அவரது விட்டுக்கொடா தன்மை, அனைத்து பலஸ்தீன மக்களிடமும் நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தது. ஹப்பஷின் இறுதிக்காலத்தில் PLFP மார்க்சிய-லெனினிசத்தை நடைமுறையில் கைவிட்டு விட்டு, இடதுசாரி தேசியவாத அமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது. ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் போன்ற மதவாத அமைப்புகளுடன், போது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்தது. மதச்சார்பற்ற PLFP யும், மதவாத ஹமாசும் ஒன்றாக வேலைசெய்வது, பலருக்கு நம்பமுடியாமல் இருந்தாலும், நிகழ்கால பலஸ்தீன யதார்த்தம் அத்தகைய கூட்டணிக்கு நிர்ப்பந்தித்து உள்ளது. அண்மையில் கூட PLFP யும், இஸ்லாமிய ஜிஹாத்தும் சேர்ந்து இஸ்ரேலிய எண்ணைக்குதங்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. முற்றுகையின் கீழ் உள்ள காசா பகுதிக்கு காஸ், பெட்ரோல் விநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்திய நேரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் என்பன, பழிக்கு பழி வாங்கும் அரசியலை நடத்திக்கொண்டிருந்த காலத்தில், PLFP மட்டுமே அரசியல், பொருளாதார இலக்குகளை தாக்கும் பாடத்தை பலஸ்தீனியர்களுக்கு சொல்லிக்கொடுத்தது. ஒரு காலத்தில், PLO வின் தேசியவாதத்தால் கவரப்பட்ட பெரும்பான்மை பலஸ்தீனிய மக்கள், அது சர்வதேச மூலதனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவுடன் மயக்கம் தெளிந்தனர். பின்னர் இஸ்லாமியவாத ஹமாசிற்கு ஆதரவளித்து, அவர்களும் ஒரு கட்டத்திற்கு மேல் நகரமுடியாது என்பதைக் கண்டுகொண்டனர். வழிதெரியாமல் இருட்டுக்குள் தடுமாறும் மக்களுக்கு PLFP புதிய பாதையை காட்டுமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜோர்ஜ் ஹப்பாஷ் என்ற புரட்சிவாதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த சர்வதேச பலஸ்தீன ஆதரவாளர்கள், PLFP க்கு தமது ஆதரவை தொடர்கின்றனர். பலஸ்தீன விடுதலைக்கான போராட்டம் 21 ம் நூற்றாண்டிலும் முன்னெடுக்க அடுத்த தலைமுறை தன்னை தயார்படுத்திக்கொள்கின்றது.

__________________________________________________________
* இந்தக்கட்டுரை ஜோர்ஜ் ஹப்பாஷின் மறைவையொட்டி "உயிர் நிழல்"(ஜன.-ஜுன் 2008) இதழில் பிரசுரிக்கப்பட்டது.

__________________________________________________________
Video tribute to Dr. George Habash

ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம் (அல் கைதா: 2)


கிறிஸ்தவ மரபு சார்ந்தே சிந்திக்கப் பழகிய, அமெரிக்க அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் , பத்திரிகையாளர்களும் 'ஜிகாத்' என்ற சொல்லை "சிலுவைப்போர்" என்ற அர்த்தத்திலேயே புரிந்துகொள்கின்றனர். சுயசிந்தனையற்ற பிற நாடுகளின் பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகளும் அதையே திருப்பிச்சொல்கின்றனர். ஆனால் இது மிகத்தவறான அர்த்தப்படுத்தல்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க ஐரோப்பாவில் பாப்பரசர் ஆணையின்பேரில் கிறிஸ்தவப் படைப்பிரிவுகள் ஜெரூசலேத்தைக் கைப்பற்ற தொடுத்த போர்தான் சிலுவைப்போர் என அழைக்கப்படுகிள்றது. இந்த (கத்தோலிக்க) கிறிஸ்துவப் படைகள் மதத்தின் பேரில் மத்திய கிழக்கில் முஸ்லீம்களை மட்டுமல்ல யூதர்களையும் (கிழக்கைரோப்பிய) ஓர்த்தோடொக்ஸ் கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தமை வரலாறு. முன்பு தாம் செய்த வினையின் விளைவுகள், அதேரூபத்தில் தம்மைத் திருப்பித் தாக்குமோ என ஐரோப்பியர்கள் அஞ்சினர். அதனால் இப்போது மேற்கத்தைய மேலாண்மைக்கு எதிரான இஸ்லாமிய அரசியல் குழுக்களின் போராட்டத்தையும் மதவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கத் தலைப்படுகின்றனர். இவர்களை "மத அடிப்படைவாதிகள்", "மதத்தீவிரவாதிகள்" என எப்படி அழைத்தாலும், மத்திய கிழக்கில் மாற்றத்தைத் தேடும் அரசியல் சக்திகள், மதத்தின் பெயரால் மக்களைத்திரட்டி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது, ஏற்கெனவே 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த கதைதான்.

ஜிகாத் என்றால் என்ன? இந்தச் சொல் குர்ஆனில் இரண்டு அர்த்தத்தில் வருகின்றது. ஒன்று: தனிமனிதனின் மனதிலே நடைபெறும் தீய எண்ணங்களுக்கெதிரான நல்லெண்ணங்களின் போராட்டம். இரண்டு: மக்களை வருத்தி கொடுங்கோல் ஆட்சி புரியும் ஊழல்மய அரசுக்கெதிரான போராட்டம். இஸ்லாமியரின் இறைதூதர் முகமது நபியே இத்தகைய போரை அன்றைய மெக்கா அரசனுக்கு எதிராக நடத்தியதாக வரலாறு கூறுகிறது. அரேபியாவில் முஸ்லீம் அரசு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் வந்த முஸ்லீம் அரசர்கள் தமது ஆட்சிப்பரப்பை விஸ்தரிக்க நடந்த போர்களையும் ஜிகாத் என்று அறிவித்தது மறுப்பதற்கில்லை. ஆனால் அன்றைய காலகட்டம் வேறு இன்றைய கால கட்டம் வேறு. இன்று இஸ்லாமிய மதத்தை தமது சித்தாந்தமாக வரித்துக்கொண்ட பல்வேறு அரசியற் குழுக்கள் ஜிகாத் என்ற சொல்லை தாம் வாழும் பிரதேசத்தின் விடுதலைப் போராட்டம் என்ற அர்த்தத்திலேயே அநேகமாகப் பயன்படுத்துகின்றனர்.

இதைவிட ஒசாமா பின்லாடனின் (அல்-கைதா?) இயக்கம், ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலையில் தனது போராட்டத்தை ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தானில் 1979 ல் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசும், அதற்குப் பக்கபலமாக ஆக்கிரமித்த சோவியத் ராணுவமும் தமக்கு எதிரான பழமைவாத இஸ்லாமிய மதத்தலைவர்களின் எதிர்ப்பை வன்முறையால் அடக்கியபோது வந்தது பிரச்சினை. ஆப்கானிஸ்தானை "சோவியத் யூனியனின் வியட்னாமாக" மாற்றிக்காட்ட சபதமெடுத்த அமெரிக்க அரசு பாகிஸ்தான் ஊடாக முஜ்ஜாகிதீன்கள் என்ற ஆயுதக்குழுக்களுக்கு உதவி புரிந்தது. மிக நவீன ஆயுதங்கள் தாராளமாக அனுப்பிவைக்கப்பட்டன. சவுதி அரேபியா தாராளமாக பணத்தை வாரிவழங்கியது. இது போதாதென்று ஆப்கானிய மதவாத ஆயுதக் குழுக்கழுக்குத் துணையாக வெளிநாட்டுத் தொண்டர்படை அனுப்பிவைக்கப்பட்டது. அப்படியொரு தொண்டர் படையில் போனவர்கள்தான், ஒசாமா பின்லாடனும் அவரது தோழர்களும்.

யூத மதத்தவர்கள் முன்பு பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசி வாழ்ந்தாலும், தாம் அனைவரும் ஓரினம் என்ற கருத்து காலங்காலமாகப் பரப்பப்பட்டு வந்தது. அதே போல இஸ்லாமிய மதம் ஆரம்பித்த காலத்திலிருந்தே, முஸ்லீம்கள் என்ற இனத்தை உருவாக்கும் முயற்சியாக "முதலில் ஒருவன் முஸ்லீம்" என்ற கருத்தும், அரபுமொழியில் புனித குர்ஆனை படிக்கச்சொல்லும் வழக்கமும் பின்பற்றப்படுகின்றன. இதனால், உலகில் ஒரே மொழிபேசும் மக்களின் இனஉணர்வு போன்றே, முஸ்லீம் உணர்வும் பேணப்பட்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் சென்ற தொண்டர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள இந்தப் பின்ணணி அறிவு அவசியம்.

தொண்டர்படைக்கு ஆட்சேர்க்கும் பணிகள் அமெரிக்க நட்புநாடுகளான சவூதி அரேபியாவிலும், எகிப்திலும் அதிகம் இடம்பெற்றன. ஆப்கானிஸ்தானில் கடவுள் நம்பிக்கையற்ற ரஷ்யர்களால் இஸ்லாமியச் சகோதரர்கள் கொல்லப்படுகிறார்கள் எனப் பிரச்சாரம் செய்து இளைஞர்கள் திரட்டப்பட்டனர். இவ்வாறு திரட்டப்பட்ட மதநம்பிக்கையுள்ள இளைஞர்கள் சோவியத் இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்படிச் சென்றவர்களில் யாருமே பணக்கார வீட்டுப்பிள்ளைகள் கிடையாது. இதனால் சவூதி அரேபியா தனது தாராள மனப்பான்மையைக் காட்ட, ஒரு இளவரசரை அனுப்பிவைத்தால் நன்றாகவிருக்குமென சிலர் விரும்பியதற்கு ஏற்ப, இளவரசராக இல்லாவிட்டாலும் அரச குடும்பத்திற்கு நெருக்கமான பணக்காரக் குடும்பத்திலிருந்து ஒசமா பின்லாடன் சென்றபோது அதிக வரவேற்புக் கிடைத்ததில் ஆச்சரியமில்லை.

பத்தாண்டுகளாக அரபு முஜாகிதீன்கள், ஆப்கானிய முஜாதிதீன்களுடன் (முஜாகிதீன் என்றால் விடுதலைப் போராளிகள் என்று அர்த்தப்படும்) தோளோடு தோள் நின்று போராடியதன் இறுதியில், சோவியத் இராணுவம் வெளியேறியது. சோவியத் யூனியனில் அப்போது ஏற்பட்ட அரசியல் மாற்றமே படைகளைத் திரும்பப்பெறும் முடிவை எடுத்தபோதும், உலகின் பெரிய வல்லரசு இராணுவத்தை, தாம் அடித்து விரட்டி விட்டதாக முஜ்ஜாகிதீன்கள் இறுமாப்படைந்தனர். தொடர்ந்து சோவியத் யூனியன் வீழ்ந்ததற்கு ஆப்கான் யுத்தமே காரணம் என நம்பினர். அதனடிப்படையில்தான் இப்போது துணிந்து அமெரிக்காவை எதிர்த்து நிற்கின்றனர். சோவியத் வல்லரசை வீழ்த்திவிட்டோம், இனி அமெரிக்க வல்லரசும் வீழ்ந்துவிடும் என நம்புகின்றனர். அதன் அர்த்தம் அவர்கள் தமது போரை அமெரிக்காவிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்பதல்ல. சோவியத் இராணுவம் விட்டுவிட்டுப்போன இடத்தை, அமெரிக்க இராணுவம் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தான் தான், இப்போதும் அவர்களது விருப்பிற்குரிய போர்க்களம்.

சோவியத் இராணும் சென்ற பின்னர், தீவிரமாகச் சண்டைபுரிந்த வெளிநாட்டுத் தொண்டர்படைகளையும் கைவிட்டுவிட்டது அமெரிக்க அரசு. இவர்களோ யுத்தம் முடிந்ததும், வேலையற்ற இராணுவ வீரர்கள் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். போர்க்கலையைத் தவிர வேறெதுவும் தெரியாத அவர்களை, என்ன செய்வதென்று அதற்குப் பிறகு யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. எப்படியும் சோவியத் படைகளை தோற்கடிக்கச்செய்யும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்ட பணம், ஆயுதங்கள் வேறு குவிந்து கிடந்தன. இத்தகைய சூழலில் தமது தனியார் இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் அல்-கைதா (தளம்). இதன் தலைவர் மர்மமான முறையில் குண்டுவெடிப்பால் கொல்லப்பட்ட பின்பு, ஒசாமா பின்லாடன் தலைமைப் பதவியை ஏற்றார். அதற்குப் பின்புதான் மாபெரும் திருப்பங்கள் உண்டாகின.

வெற்றிவீரனாக தனது தாய் நாடான சவூதி அரேபியாவிற்குத் திரும்பிய ஓசமா பின்லாடன், அரச குடும்பத்துடன் இன்னமும் நெருக்கமானார். அப்போது ஈராக், குவைத்தை ஆக்கிரமித்து மத்திய கிழக்கில் நெருக்கடி தோன்றியிருந்தது. அடுத்ததாக ஈராக்கிய இராணுவம் சவூதி அரேபியாவிற்குள்ளும் வந்துவிடும் என்று சொல்லி அமெரிக்க இராணுவம் சவூதி மண்ணில் வந்திறங்கியது. மதநம்பிக்கையாளரான ஒசாமா பின்லாடனின் மனம் ஒரு கணம் வரப்போகும் விபரீதங்களை நினைத்துப் பார்த்தது. முஸ்லீம்களின் புனித ஸ்தலமான மெக்கா இருக்குமிடத்தில் அந்நியப்படைகள் வரக்கூடாது என்று குர்ஆனில் உள்ளதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் ஒசாமா. சவூதி அரேபிய இராணுவமும் தனது (ஆப்கானிஸ்தானில் போரிட்ட) முஜ்ஜாகிதீன்களுமாகச் சேர்ந்தே ஈராக்கிய இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிடுவோம், அமெரிக்க இராணுவம் இங்கே வேண்டாம் என்று ஒசாமா கூறியதற்கு, சவூதி மன்னர் செவி சாய்க்கவில்லை. நீண்டநாள் கூட்டாளியான அமெரிக்காவைப் பகைத்துக் கொள்வதைவிட, ஒசமாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவது சிறந்தது, என சவூதி மன்னர் தீர்மானித்தார். இந்த இடத்தில்தான் ஒசாமா பின்லாடனுக்கும் சவூதி அரசகுடும்பத்திற்கும் இடையே பிளவு உண்டாகி, பகையுணர்வு நிரந்தரமாகியது.

சவூதி அரேபியாவினுள் ஏற்கெனவே பல அரச எதிர்ப்புக் கிளர்ச்சியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் இருந்து ஒசமாவின் கிளர்ச்சி வேறுபடுகின்றது. முன்னைய கிளர்ச்சியாளர்கள் ஆதரவற்ற மிகப்பலவீனமான நிலையிலிருந்ததால் இலகுவாக அடக்கப்பட்டார்கள். ஆனால், பின்லாடனின் பிரபலம் அவருக்கு அரச மட்டத்திலும் ஆதரவாளர்களைத் திரட்டியுள்ளது. குறிப்பாக மன்னனுடன் முரண்படும், அல்லது அதிருப்தியுற்ற அதிகாரிகள், மறைமுகமான ஆதரவை பின்லாடனுக்கு வழங்கிவருகின்றனர். பின்லாடன் ஆப்கானிஸ்தானில் இருந்த காலத்தில்கூட இந்த அதிகாரிகள் பாகிஸ்தானில் உள்ள சவூதி தூதுவராலயம் ஊடாக பணம் அனுப்பியதாக தெரியவருகின்றது.

இதைவிட பின்லாடனுடன் ஊர்திரும்பிய முன்னாள் ஆப்கான் போராளிகள் சவூதி அரேபியாவில் தங்கிவிட்டதுடன், சவூதி அரசுக்கெதிரான கிளர்ச்சிக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் தமது தலைவர் பின்லாடனுக்கு விசுவாசமாக இருப்பதுடன் நாடு முழுவதும் இரகசிய முகாம்களை அமைத்துச் செயற்பட்டு வருகின்றனர். நவம்பர் மாதம் தலைநகர் றியாட்டில் உள்ள ஒரு இரகசிய முகாமில் கூடிய 50 (அல்கைதா?) போராளிகளைப் பொலிசார் சுற்றிவளைத்து பிடிக்கமுயன்ற போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர்பிடிபட, மிகுதிப்பேர் தப்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதான் உண்மையான அல்-கைதா. பின்லாடன் தலைமையிலான அல்கைதாவின் பிரதான நோக்கம், தனது தாய்நாடான சவூதி அரேபியாவில் அமெரிக்காவினால் பாதுகாக்கப்படும் ஊழல் மலிந்த மன்னராட்சியைத் தூக்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் இஸ்லாமியக்குடியரசை நிறுவுவது. அத்தகைய ஆட்சிமாற்றம் தனது நலன்களைப் பாதிக்கும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணை ஏற்றுமதி நாடான சவூதி அரேபியா ஆண்டாண்டு காலமாக அமெரிக்க தொழிற்துறைக்கு மலிவான எண்ணையை வழங்கி வருகின்றது.

அப்படியான சவூதி அரேபியா தனது கையை விட்டுப்போக அமெரிக்கா விரும்பப் போவதில்லை. தொண்ணூறுகளில் சவூதி அரேபியா முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. வளைகுடா யுத்தம் ஏற்படுத்திய சுமை, சந்தையில் எண்ணைவிலைச் சரிவு, மற்றும் பெருகிவரும் சனத்தொகை என்பன பல சவூதி அரேபிய மக்களை ஏழைகளாக்கியது. மறுபுறம், தமது ஆடம்பர வாழ்வைக் கைவிடாத, பணத்தை ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் அரசகுடும்பம், சவூதி அரேபியாவின் இன்றைய நிலையிது. இதனால் அரசகுடும்பத்திற்கெதிராக வளரும் அதிருப்தி, பின்லாடன் போன்ற கிளர்ச்சியாளருக்கு ஆதரவாகத் திரும்புவது இயற்கை.

__________________________________________________________

இது தொடர்பான முன்னைய பதிவு:
அல் கைதா என்ற ஆவி

Wednesday, January 21, 2009

அல் கைதா என்ற ஆவி


அல்-கைதா இயக்கம் காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவாக சர்வதேசத் தொடர்பு ஊடகங்களின் மகிமையால் காட்சி தருகின்றது. உண்மையில் அல்-கைதா இயக்கம் எவ்வளவு பெரியது? அதன் பலம் என்ன ? எநதெந்த நாடுகளில் செயற்படுகின்றது ? அதன் அரசியல் நோக்கம் என்ன ?

அமெரிக்காவில் ஸோல்ட் லேக் சிற்றி என்ற இடத்தில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நேரமது. ஸோல்ட் லேக் சிற்றிக்கு பின்லாடன் வந்துவிட்டதாக செய்தி அடிபட்டது. உடனேயே ஸோல்ட் லேக் சிற்றி வாழ் மக்களுக்கு "பின்லாடன் காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிட்டது. பின்லாடன் காரில் போனதைப் பார்த்ததாக, உணவு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக... இப்படிப் பல தகவல்களைப் பொதுமக்கள் பொலிசுக்கு அறிவித்தனர். இப்படி வந்த நூற்றுக்கணக்கான தகவல்களைக் கேட்டு அசந்து போய்விட்டது பொலிஸ்.

11 செப்டம்பர் 2001 தாக்குதல் சம்பவத்திற்குப்பிறகு உள்நாட்டு உளவுத்துறையான FBI மாதத்திற்கொரு தாக்குதல் திட்டத்தைக் கண்டுபிடித்து அறிவித்துக்கொண்டிருந்தது. ஒருமுறை பாலங்களைத் தகர்க்கும் திட்டத்தைப் பற்றி அறிவித்தல் வரும், மறுமுறை இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தவிருப்பதாக அறிவித்தல் வரும். இந்த அறிவித்தல்களைத் தொலைக்காட்சியில் பார்த்தறியும் சாதாரண பொதுமக்கள் பயப்பீதியுடன் காலத்தைக் கடத்துவார்கள். அமெரிக்காவில்தான் அப்படியென்றால் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தம் பங்கிற்கு அல்-கைதா இயக்க சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக அறிவித்துக் கொண்டிருப்பார்கள். ஐரோப்பா மட்டுமல்ல மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் அல்-கைதா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்தாக வந்த செய்திகளைத் தொகுத்துப்பார்த்தால், உலகில் அல்-கைதா உறுப்பினர்கள் போகாத நாடே இல்லையா என்ற எண்ணமும் வரும்.

விஷ்ணு புராணத்தில் வரும் பிரகலாதன் என்ற சிறுவன் கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வான். அல்-கைதா இயக்கமும் அவ்வாறே காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவாக சர்வதேசத் தொடர்பு ஊடகங்களின் மகிமையால் காட்சி தருகின்றது. உண்மையில் அல்-கைதா இயக்கம் எவ்வளவு பெரியது? அதன் பலம் என்ன ? எநதெந்த நாடுகளில் செயற்படுகின்றது ? அதன் அரசியல் நோக்கம் என்ன ? போன்ற கேள்விகளுக்கு பலரிடம் சரியான பதில்கள் இல்லை. நியூ யோர்க் இரட்டைக்கோபுரத் தகர்ப்பு அல்-கைதாவின் வேலையா ? அப்படியானால் இன்றுவரை ஏன் எந்தவொரு ஆதாரமும் காட்டப்படவில்லை ? கண்டுபிடித்ததாக அறிவிக்கப்பட்ட தாக்குதல் திட்டங்கள் உண்மையிலேயெ நடைபெறவிருந்ததா ? பல நாடுகளிலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உண்மையிலேயே அல்-கைதா உறுப்பினர்கள் தானா ? இப்படியான கேள்விகளைக் கூட பலர் நினைத்தப் பார்ப்பதில்லை. உலகில் பத்திரிகா சுதந்திரம் பேணப்படும் இலட்சணம் இது.

றொஹான் குணரட்ண, ஒரு இலங்கையர், முன்பு இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றுகையில் விடுதலைப் புலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர். இப்போது பதவியுயர்வு பெற்று ஸ்கொட்லாந்து பயங்கரவாத ஆய்வுமையத்தில் அல்-கைதா பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது "அல்-கைதாவின் உள்ளே" என்ற பெயரில் அல்-கைதாவின் ஆதியாகமம் என்று சொல்லக்கூடிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். பரபரப்பாக விற்பனையாகும் இந்தப்புத்தகத்தை ஏதாவது புதிதாக அறியவிரும்பி வாங்கி வாசிப்பவர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. ஏனெனில் பலருக்கு ஏற்கெனவே தெரிந்த பல செய்தி ஊடகங்களில் வந்த தகவல்களைத் தொகுத்திருப்பதைத் தவிர வேறெந்த ஆய்வும் அதில் இல்லை. நாலாபக்கமும் இருந்து விமரிசனங்கள் வந்துள்ளன. மலேசிய அரசு வேறு இந்த நூல் தம்மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கூடிய விரைவிலேயே இந்தநூல் அமெரிக்க அரசினால் சிபாரிசு செய்யப்பட்டு பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தமாக வைக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

பயங்கரவாதச் சந்தேக நபர்கள் என்ற பேரில் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட பலர், எந்தக்குற்றச்சாட்டும், விசாரணையுமின்றி சிறையிலிடப்பட்டள்ளனர். அரபு அல்லது முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுவது அதிகரித்துள்ளது. கனடா தனது நாட்டுப்பிரஜைகளை அமெரிக்காவிற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி கேட்டிருப்பது நிலைமை எவ்வளவு தூரம் மோசமாயுள்ளதென்பதைக் காட்டுகிறது. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் காணப்பட்ட நிலைமை அமெரிக்கா போன்ற முதலாம் உலக நாட்டிற்கு வந்துவிட்டதை மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஐரோப்பா அவ்வளவு மோசமாக இல்லாவிட்டாலும் கைது செய்யப்பட்ட ஒருசிலர் தான் அல்-கைதா இயக்கத்துடன் சம்பந்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. கணிசமான பிரிவினர் அல்ஜீரிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதான இலக்கு பிரான்ஸ் என்பதும், அவர்களை விசாரிப்பதில் அமெரிக்கா அக்கறை காட்டவில்லையென்பதும் வேறுகதை.

குறிப்பிடத்தக்க நபராக செப்டம்பர் 11 விமானக்கடத்தற் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சந்தேகநபர் முக்கியமானவர்களை விட்டுவிட்டு, தன்னைப்பிடித்து விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட வேறுசிலர்மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளே இருந்தனவென்பதும், பலர் பின்னர் விடுவிக்கப்பட்டதும் பத்திரிகைகளுக்குத் "தேவையற்ற" செய்திகள். மேலும் இந்தக் குற்றவாளிகளில் பெரும்பான்மையானோர் பலநாட்டுத் தீவிரவாத அல்லது விடுதலை இயக்கங்களின் பிரதிநிதிகள் என்பதும் அவர்களது முக்கிய நோக்கம் வசதி படைத்த ஐரோப்பிய அரபுக்கள் (அல்லது முஸ்லீம்கள்) மத்தியில் வர்த்தக-சமுக நிறுவனங்கள் மூலம் பணம் வசூல் செய்வதும், ஆர்வமுடைய இளைஞர்களை சேர்த்துக் களத்திற்கு அனுப்புவதும்தான். இதைத்தவிர "ஐரோப்பிய நகரங்களைக் குறிவைக்கும் அல்-கைதாவின் திட்டங்கள்" இன்றும் நிரூபிக்கப்படவில்லை. அமெரிக்காவில் உள்ளது போன்ற "முஸ்லீம்களிற்கெதிரான அடக்குமுறை" ஐரோப்பாவில் எதிர்பார்க்க முடியாது. அதற்குக் காரணம் பூகோள அரசியல் ரீதியாக ஐரோப்பிய நலன்கள் மத்தியகிழக்குடன் பிரிக்கவியலாது பின்னிப் பிணைந்துள்ளது.

ஐரோப்பாவில் ஜிகாத்திற்கு எனச் சேர்க்கப்படும் இளைஞர்களில் பலர் வெறும் ஊர் சுற்றும் பையன்கள் அல்ல, படித்த வாலிபர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம். பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்த் போன்ற நாடுகளில் இரகசியமாக சேரும் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ அல்லது (ரஸ்ய) செச்சனியாவிற்கோ அனுப்பப்படுகின்றனர். தீவிரவாத இஸ்லாமிய இளைஞர்கள் ஜிகாத் எனப்படும் விடுதலைப்போரிற்கு தம்மை அர்ப்பணிப்பது உண்மைதான். ஆனால், வெகுஜனச் செய்தி ஊடகங்கள் காட்டும் படத்திற்கு மாறாக ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அல்ல, மத்திய ஆசியாவிலேயே மையங்கொள்கிறதென்பது பலரறியாத செய்தி. (இது குறித்து அடுத்த கட்டுரை மேலும் விபரிக்கும்) . இந்த ஜிகாத்திற்கு தயாராவது அல்-கைதா மட்டும்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது. அல்-கைதாவைத்தவிர பிற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளைப் பற்றி "சர்வதேசச் சமுகம்" அக்கறைப்படவில்லை.

பின்லாடனின் மீது அல்லது அல்-கைதா பற்றி மேலும் அறிய முயன்ற பத்திரிகைகளின் முயற்சிகள் அதிக வெற்றியளிக்கவில்லை, அல்லது எதிர்பாராத தடைகள் ஏற்பட்டுள்ளன. அல்-கைதாவின் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கு பிரிட்டனில் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டள்ளது. லிபியாவில் இயங்கிய அல்-கைதாவின் பிரிவிற்கு பிரிட்டிஷ் உளவுத்துறை பெருமளவு பணம் வழங்கியுள்ளது. 1996 ல் லிபிய அதிபர் கடாபியை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அந்த முயற்சியில் ஈடுபட்ட அல்-கைதா உறுப்பினர்களுக்கு பிரிட்டிஷ் உளவுத்துறையுடன் தொடர்பிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனை பிரஞ்சுத் தனியார் புலனாய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. அதே தகவலை தற்போது பிரிட்டனில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரிட்டிஷ் உளவாளியும் கூறியுள்ளார். இந்த உளவாளியின் வழக்கு விசாரணை விபரங்கள் எந்தவொரு பத்திரிகைக்கும் கிடைக்கவிடாது தடுக்கப்பட்டன.

உண்மையில் முதன்முதல் பின்லாடனைக் கைது செய்து தருமாறு சர்வதேசப் பொலிசான ஸ்கொட்லாண்டைக் கேட்டது லிபியா, பலர் நினைப்பது போல் அமெரிக்கா அல்ல. கடாபி மீதான கொலைமுயற்சி, சதிப்புரட்சி போன்றவற்றிற்காக 1998 லேயே லிபியா இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது. ஆனால், இவையெல்லாம் இன்றுவரை உலகிற்குத் தெரியவிடாதபடி கவனமாக மூடிமறைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இப்போது பல கேள்விகள் தோன்றலாம். யார் இந்த பின்லாடன் ? அல்-கைதா ? அவர்களின் போராட்ட வழிமுறையென்ன ? இலக்கு என்ன ? எவ்வளவு தூரம் வெற்றி பெறுவார்கள்? இவற்றிற்கான விடைகாண அல்-கைதாவின் தோற்றம், வளர்ச்சி பற்றி அறிதல் அவசியம்.

(விரைவில் இதன் இரண்டாம் பகுதி: ஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம். )


முன்னைய பதிவு:
"அல்கைதா இல்லை!" ஆதாரங்களுடன் ஓர் ஆவணப்படம்

"அல்கைதா இல்லை!" ஆதாரங்களுடன் ஓர் ஆவணப்படம்


உலகில் அல் கைதா என்ற அமைப்பு இல்லை. அது அமெரிக்க அரசும், ஊடகங்களும் சேர்ந்து உருவாக்கிய கட்டுக்கதை. பயங்கரவாத தாக்குதல்கள் யாவும், அல் கைதா பெயரில் நடமாடும் சி.ஐ.ஏ. உளவாளிகளின் சதி வேலை. இவற்றை ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த ஆவணப்படம்.

Al Qaeda doesn't exist (Documentary)
Part 1


Part 2


_____________________________________________________
அல் கைதா என்ற ஆவி
_____________________________________________________

Tuesday, January 20, 2009

ஒபாமாவிற்கு ஒரு திறந்த மடல்


Maschom Watch எனப்படும் இஸ்ரேலிய மனித உரிமைகள் ஸ்தாபனம், அமெரிக்காவில் 44 வது ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் பாராக் ஒபாமாவிற்கு, பாலஸ்தீன மக்களின் அவல வாழ்வை தெரிவிக்கும், திறந்த (வீடியோ) மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேலிய படைகளினால் வீதித் தடை சோதனைகளில் சிறுமைப்படுத்தப்படும் பாலஸ்தீன மக்களை இந்த வீடியோ பதிவு செய்து காட்டுகின்றது.

Sunday, January 18, 2009

"எயுஸ்கடி": ஐரோப்பாவின் மூத்தகுடி
ஐரோப்பாவில், ஸ்பெயின் நாட்டில், தனித்துவமான பாஸ்க் மொழி பேசும் மக்களுக்காக, தனிநாடு அமைக்க போராடும் ETA, ஐரோப்பிய யூனியனால் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டாலும், அதன் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், ஒரு நூற்றாண்டு கால பாஸ்க் விடுதலைப்போராட்டம் இன்று வரை தொடர்கின்றது.

2003 ம் ஆண்டு கோடைக்காலம். வழக்கம் போல இவ்வாண்டும் வட ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் ஸ்பானியக் கடற்கரைகளில் தமது விடுமுறையைக் கழிக்க வந்திருந்தனர். ஒருநாள் அவர்கள் தங்கியிருந்த இரண்டு ஹொட்டல்களில் குண்டு வைத்திருப்பதாகத் தொலைபேசி அழைப்பு வந்தது. சில நிமிடங்களில் குண்டுகள் வெடித்து ஹொட்டேல்களுக்கு பெருஞ்சேதம் விளைவித்தன. குண்டுவெடிப்புக்கு அகப்பட்டுக் காயமடைந்தவர்கள் நெதர்லாந்து உல்லாசப்பிரயாணிகளே. சம்பவம் நடந்து சில மணிநேரத்திற்குள் ஸ்பெயினில் இருக்கும் நெதர்லாந்து தூதுவராயலத்திற்கு "எத்தா"(ETA) என்ற பெயரில் உரிமை கோரும் கடிதம் வந்தது. "தனது பிரசைகளை எந்த நாட்டிற்கு உல்லாசப் பயணிகளாக அனுப்ப வேண்டும் என்று உங்களது அரசாங்கத்திற்குத் தெரியாதா?" என்று அக்கடிதத்தில் காரசாரமாகக் கேட்கப்பட்டிருந்தது.

ஸ்பெயின் கஸ்திலியன் (ஸ்பானிய மொழி), கத்தலான், கலேக்கோ, பாஸ்க், என்ற நான்கு வேறு மொழிபேசும் இனங்கள் வாழும் நாடு. இருப்பினும் ஸ்பானிய மொழி மட்டுமே உத்தியோக பூர்வ மொழியாக இருந்து வருகின்றது. அண்மைக்காலங்களில் அதிகாரப்பரவலாக்கல் மூலம் பிறமொழிப் பிரதேசங்களுக்கும் சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதால் , அந்த மொழிகளும் நீண்டகால அடக்குமுறைக்குப்பின் மறுமலர்ச்சி கண்டுள்ளன.

இவற்றில் பாஸ்க் மொழி (அவர்கள் மொழியில் எயுஸ்கரா என அழைப்பர்) பேசும் மக்கள், மிக நீண்ட காலமாகவே தமது உரிமையயை விட்டுக்கொடாது, தனிநாடு கோரிப் போராடி வருகின்றனர். அதனை ஆயுதப் போராட்டமாக முன்னெடுத்தது ETA (எயுஸ்கடி தாயகத்திற்கும் விடுதலைக்குமான இயக்கம்). பாஸ்க் (அல்லது எயுஸ்கரா) மொழி பிற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்பில்லாத தனித்துவமான மொழியாகும். தற்கால ஐரோப்பியர்கள் வந்து குடியேறிய காலத்திற்கு முன்பே பாஸ்க் இன மக்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. இதனால் ஐரோப்பாவின் முத்த குடியென்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

கி.பி. 818 ல் அமைக்கப்பட்ட நவாரா இராசதானி, முழு பாஸ்க் மொழி பேசும் பிரதேசங்களை உள்ளடக்கி ஆட்சி புரிந்த முதலும் கடைசியுமான அரசாட்சியாகும்.
வடக்கே பிரஞ்சு மன்னர்களுக்கும் தெற்கே ஸ்பானிய மன்னர்களுக்குமிடையே சிக்கித் தவித்த நவாரா இராச்சியம் நெப்போலியனின் படையெடுப்புகளுடன் ஒரு முடிவிற்கு வந்தது. பிரஞ்சு, ஸ்பானிய மன்னர்களின் செல்வாக்குக்கு உட்பட்டு, பாஸ்க் மொழி பேசும் பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்றைய பிரஞ்சு-ஸ்பானிய எல்லை உருவானது. அன்றிலிருந்து நான்கில் மூன்று பங்கு பாஸ்க் பிரதேசங்கள் ஸ்பெயினாலும், ஒரு பங்கு பிரான்ஸாலும் நிர்வகிக்கப்பட்டன.

1930 ல் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் ஸ்பெயின் அரசியல் நிலவரத்தை ஒரேயடியாக மாற்றியது. மத்திய அரசிற்கெதிராகக் கிளர்ச்சி செய்த ஜெனரல் பிராங்கோவின் பாஷிச இராணுவம் பாஸ்க் பிரதேசங்களையும் கைப்பற்றியது. அன்றிலிருந்து 1975 ல் பிராங்கோ மரணமடையும் வரை பாஸ்க் சிறுபான்மையினர் மீது இராணுவ அடக்குமுறை தொடர்ந்தது. எயுஸ்கரா பேசுவது தடைசெய்யப்பட்டது. மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். மொழி உரிமைக்கான அல்லது தொழிலாளர் உரிமைக்கான சாத்வீக வகையிலான போராட்டஙகள் அனைத்தும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டன. அப்போது பாஸ்க் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய PNU என்ற தேசியக் கட்சி அகிம்சா வழிப்போராட்த்தைப் பின்பற்றியது.

1960 ல் அகிம்சாவழிப் போராடங்களில் ஏமாற்றமடைந்த PNU ன் மாணவர் அமைப்பு மாற்று வழி குறித்துச் சிந்தித்தது. தமது இன மக்களின் தேசிய விடுதலையை ஆயுதப் போராட்டம் மூலமே வென்றெடுக்கமுடியும் எனத் தீர்மானித்தனர். இந்தத் தீவிரவாத இளைஞர்கள் ஒன்றிணைந்து Euskadi ta Askatasuna(ETA) என்ற அமைப்பை உருவாக்கினர். தமது முதலாவது இராணுவ நடவடிக்கையாக ஸ்பானியப்படை வீரர்களை ஏற்றிச் சென்ற றயில் வண்டியை குண்டு வைத்துக் கவிழ்க்க முயற்சித்தனர்.

அதீத அவதானம் காட்டியதால் தண்டவாளத்தில் வெடித்த குண்டு ரயில் வண்டியைத் தடம் புரட்டவில்லை. ஆனால் இராணுவ அடக்குமுறை தீவிமடைந்தது. இயக்கத்துடன் தொடர்பற்ற பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகினர். ETA யின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் பிரான்சுக்குத் தப்பியோடினர். பிரான்ஸிற்குச் சொந்தமான பாஸ்க் பிரதேசத்தில் தளம் அமைத்து மத்திய குழு அங்கிருந்து இயங்கியது. அந்நேரம் பிரஞ்சு அரசாங்கம் சாதாரண பாஸ்க் அகதிகளுக்கு மட்டுமல்ல தீவிரவாத இளைஞர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்தது. ஆனால் எண்பதுகளின் பிற்பகுதியில் தனது நிலையை மாற்றிக்கொண்ட பிரஞ்ச அரசாங்கம் ETA உறுப்பினர்களைக் கைது செய்து ஸ்பெயினிடம் ஒப்படைத்து வருகிறது.

எயுஸ்கடி விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த போது அது பலரது கவனத்தை ஈர்த்தது. ஸ்பெயினில் பாஸிஸ சர்வாதிகார ஆட்சி நடந்ததும் அதனை உள்நாட்டு மக்கள் மட்டுமல்ல பிற ஐரோப்பிய நாடுகளும் விரும்பாததும் பரந்த ஆதரவைப் பெற்றுக்கொடுத்தது. இன்று ஒரு பயங்கரவாத இயக்கமாக ஒதுக்கப்படும் ETA, அன்று பலரால் ஒரு விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பதைக்கேட்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கும். பிற்காலத்தில் தலைகீழாக மாறிய உள்நாட்டு-சர்வதேச அரசியலும் ETA ன் எடுத்த கொள்கைகளை விட்டுக்கொடுக்காத பின்வாங்காத போர்க்குணமுமே இந்த முரண்பாட்டின் காரணங்கள்.

இந்த அரசியல் மாற்றம் 1973 ம் ஆண்டு ஸ்பானியப் பிரதமர் பிளாங்கோவின் மரணத்துடன் ஏற்பட்டது. மரணப்படுக்கையில் இருந்த சர்வாதிகாரி பிராங்கோவினால் தனது அரசியல் வாரிசாக முன்மொழியப்பட்டவர்தான் பிளாங்கோ. வருங்கால சர்வாதிகாரியை கொலை செய்யத் திட்டம் தீட்டியது ETA. பிளாங்கோ அடிக்கடி போகும் தேவாலயத்திற்கருகில் இருந்த வீட்டை ETA கொரில்லாக்கள் வாடகைக்கு எடுத்தனர். அங்கிருந்து பிளாங்கோவின் வாகனம் நிறுத்தும் வீதிவரை சுரங்கம் தோண்டினர். குறிப்பிட்ட நாளில் சுரங்கத்தினுள் வைத்த குண்டுகள் வெடித்து பிளாங்கோ ஸ்தலத்திலேயே மரணமுற்றார். இந்தப் பிரமிக்கத்தக்க தாக்குதற் சம்பவம் ஸ்பெயின் முழுவதும் ETA ன் புகழ் பரவக் காரணமாயிற்று.

ஸ்பெயினில் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வரவும் பாராளுமன்ற ஜனநாயகம் ஸ்தாபிக்கப்படவும் இத்தாக்குதல் வழிகோலியது. புதிதாகப் பதவியேற்ற அரசாங்கம் பாஸ்க் பிரதேசத்திற்கு சுயாட்சி வழங்குவதாக அறிவித்தது. எயுஸ்கரா மொழி பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் ஜனநாயக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தயங்கித் தயங்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தது. மாநில அரசுக்கான அதிகாரங்களை கைமாற்றுவதில் இழுபறி நிலையேற்பட்டது. ETA விற்கும் அரசுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் முடிவற்று இழுபட்டது. மாயையிலிருந்து விடுபட்ட ETA உறுப்பினர்கள் மீண்டும் வன்முறைப்பாதையை நாடினர்.

சில வருடங்களின் பின்னர் ஸ்பெயினை மட்டுமல்ல, முழு ஐரோப்பாவையும் உலுக்கிய பாஸ்க் விடுதலைப்போர் வெடித்தது. இம்முறை ETA ன் தாக்குதல்கள் மிகக் கடுமையாகவிருந்தன. இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மட்டுமல்ல நீதிபதிகள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரும் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள். அவர்கள் எத்தனை பாதுகாப்புகளுடனும் பவனி வந்த போதும் திட்டமிட்ட கார் குண்டுவெடிப்புகளுக்குப் பலியாகினர். தாக்குதல் பட்டியலில் வந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ETA வினால் எதிரிகளாக அறிவிக்கப்பட்டார்கள். உதாரணத்திற்கு கைது செய்யப்பட்ட ETA உறுப்பினர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிகள் ஆகியோர்.

இரு தசாப்தங்களைக் கடந்துவிட்ட நகர்ப்புற்ஙகளில் நடக்கும் நவீன பாணிப்போரில் இதுவரை 800 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்புப் படைகள் எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் எதிர்பாராமல் நடக்கும் தாக்குதல்கள் ETA ன் பலத்தைக் காட்டியது. இராணுவரீதியான வெற்றிகள் கிடைத்தபோதும் மறுபக்கம் ETA அரசியல் களத்தில் தோல்வியடைந்து கொண்டிருந்தது. தொடர்ந்த வன்முறைகளால் வெறுப்படைந்த பெரும்பான்மையின (ஸ்பானிய மொழி பேசும்) மக்கள் ETA மீது வெறுப்புற்றனர்.

ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்கெதிராக வன்முறைகள் புரிவது வெறும் பயங்கரவாதமெனக் கூறினர். பாஸ்க் மொழி பேசும் மக்களில் ஒரு பிரிவினர் கூட ETA வின் நடவடிக்கைகள் அதி தீவிரமானவை என விமர்சித்தனர். அரசாங்கம் இந்த உணர்வலைகளை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டது. ETA உறுப்பினர்கள் வேட்டையாடப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். பிரான்சுடன் நாடுகடத்தல் ஒப்பந்தம் செய்ததன் மூலம் ஸ்பெயின் ETA வை இயங்க முடியத நிலைக்குத் தள்ளியது. ஐரோப்பாவில் அறுபதுகளில் உருவான பல நகர்ப்புற கெரில்லா இயக்கங்கள் பல தற்போது இருந்த சுவடே தெரியாமல் மறைந்து போக ETA மட்டும் சளைக்காமல் போராடுகிறது.

அதற்குக் காரணம் இன்றும் தொடரும் பெரும்பான்மை பாஸ்க் மக்களின் ஆதரவு, குறையாத நிதி மற்றும் மிக இரகசிமான அமைப்பு முறை என்பனவாகும். பிரான்ஸில் ஒரு ரகசியமான இடத்தில் இருந்து இயங்கும் மத்திய குழுவினர் ஆளுக்கொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆட்சேர்ப்புக்கு ஒருவர், நிதிப்பொறுப்புக்கொருவர் என்றவாறு. மத்திய குழுவின் கீழே ஸ்பெயின் பாஸ்க் மாகாணங்களில் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் மேற்பார்வையின் கீழ் கொமாண்டோக் குழுக்கள் எனப்படும் கூடியது ஐந்து பேரைக்கொண்ட "செல்" கள் நகரங்கள், கிராமங்களெங்கும் அமைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கொமாண்டோக்கள் தமக்குத் தேவையான ஆயுதங்கள் உணவு இருப்பிடம் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஒழுங்கு செய்யும் ஆதரவுக்குழுக்கள் ஸ்பெயின் முழுவதும் இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ETA இன்றுவரை நிலைத்து நிற்க உதவுகின்றனர். பெரும்பாலான துடிப்பு மிக்க இளைஞர்கள் எதிர்ப்பு ஊர்வலங்கள் மூலம் தமது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கின்றனர். அவர்களில் இருந்து எதிர்கால ETA உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் முழுநேர உறுப்பினராவதற்கு இரண்டு வருட காலமெடுக்கும். அதுவரை அவரோடு தொடர்பு கொள்ளும் நபர் தனது தெரிவு நம்பிக்கைக்குரியதா எனப்பார்ப்பார். இத்தகைய இரகசிய அமைப்பு முறை அரச உளவாளிகள் ஊடுருவுவதை தடுக்கிறது.

ETA ஒரு தேசியவாத அமைப்பாக இருந்த போதும் மார்க்ஸீயத்தை தனது சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டுள்ளது. வெளிப்படையாகவே தொழிலாளர் வர்க்க நலன்களை கவனிப்பதாக தெரிவிக்கின்றது. பாஸ்க் மொழிபேசும் பிரதேசம் ஸ்பெயினின் தொழிற்துறை வளர்ச்சியடையந்த இடங்களில் ஒன்று. இதனால் அங்கே பெருகிய தொழிற்சாலைகளால் கணிசமான தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர். ETA பலமுறை தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்து நடாத்தியுள்ளது. மறுபக்கத்தில் தொழில் அதிபர்களிடம் இருந்து பெருந்தொகை பணத்தை வரியாகக் கறந்து வருகிறது. இந்த வரி கொடாத செல்வந்தர்கள் கடத்தப்படுகின்றனர்.

சர்வதேச மட்டத்தில் பிற ஆயதபாணி இயக்கங்களுடன் ETA தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் லிபியாவில் இரகசிய பயிற்சி முகாமகள் அமைக்க அந்நாட்டு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டது. முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் உளவுத்துறையான ஸ்டாசி ETA வுக்கு உதவி வழங்கியமை பிற்காலத்தில் பகிரங்கப்படுத்தப்பட்ட பைல்களில் இருந்து தெரியவந்தது.

மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் தலைமறைவாக இயங்கிய உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தமது பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் ETA வின் பெயரையும் சேர்த்துள்ளன. இராணுவ, அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கட்சி அரசியல் பிரதிநிதித்துவம் கூட தடைசெய்யப்பட்டது. இருப்பினும் ETA பாஸ்க் விடுதலைப் போராட்டத்தை 21 ம் நூற்றாண்டிற்கு எடுத்து வந்து விட்டது.


Euskadi ta askatasuna (E.T.A.)

Saturday, January 17, 2009

இஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்

"இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவு குறித்து வியக்கும் நீங்கள், அதற்குக் காரணம் அமெரிக்காவில் இருக்கும் யூத நலன் காக்கும் சங்கங்கள் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் எமக்கு ஆதரவாக இருப்பது கிறிஸ்தவ நலன்காக்கும் சங்கள்கள்தான்." - அமெரிக்காவில் பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாகு.

மேற்படி கூற்றில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்காவில் இயங்கி வரும் பல்வேறு புரட்டஸ்தாந்து , பெந்தகொஸ்தே பிரிவுகளைச் சேர்ந்த மதவாத அமைப்புகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதும் நிதி திரட்டுவதும் இரகசியமல்ல. இந்தச் செய்திகள் மறுபக்கத்தில் அமெரிக்காவில் கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுவருவதை மெய்ப்பிக்கின்றன.

சர்வதேச அரங்கில் மீண்டும் சூடுபிடித்துள்ள இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையில் இந்த கிறிஸ்தவ அமைப்புகள் வெளிப்படையாகவே இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. அதிலும் அவர்கள் தீவிரமான அரசியல் நிலையெடுத்துள்ளனர். தற்போது அமெரிக்க அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட சமாதான வரைபடத்திற்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு எழுந்த போதும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளர்ந்துள்ளது. இஸ்லாமியர் மனதைப்புண்படுத்தும்படி பேசி சர்ச்சையை உருவாக்கிய பாதிரியார் பேட் றொபேர்ட்சன் போன்றவர்கள் தாம் இந்தச் சமாதானத் திட்டத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாகக் கூறிவருவதுடன், சமாதானத்திற்கெதிராக கையெழுத்துகள் வாங்கி அமெரிக்க அரசிற்கு அனுப்பி வருகின்றனர். மொத்த அமெரிக்க வாக்காளர்களில் காற்பகுதியினர் இந்தக் கிறிஸ்தவ அமைப்புகள் சொல்வதைக் கேட்பவர்களாகவே உள்ளனர். பாலஸ்தீன எழுச்சிப்போராட்மான 'இன்டிஃபதா' வின் போது கிறிஸ்தவ மதகுழுக்கள் இஸ்ரேலுக்கான தமது ஆதரவைப் பெருக்கிக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இஸ்ரேலிய ஆதரவுப் பிரச்சாரத்துடன் நில்லாது செயலிலும் இறங்கியுள்ளனர். இஸ்ரேலில் (ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதிகளில்) சென்று குடியேறும் யூதர்களுக்கு கொடுப்பதற்கென 20 மில்லியன் டொலர்களை அமெரிக்க கிறிஸ்தவ மதகுழுவொன்று திரட்டியுள்ளது. இந்தப்பணம் குடியேற்றக்காரர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க, வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட என வழங்கப்படுகின்றது. இது இஸ்ரேலிய அரசு வழங்கும் உதவித்தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும் இரண்டு பிரபலமான பெந்தகொஸ்தே, புரட்டஸ்தாந்து அமைப்புகள் இணைந்து 'குடியேற்றக்காரரைத் தத்தெடுக்கும் திட்டத்தை' அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின்படி 14 ஆயிரம் குடியேற்றக்காரருக்கு தலா 55 டொலர் வீதம் வழங்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் இயங்கிவரும் "இஸ்லாமியர் புனர்வாழ்வுக் கழகம்" போன்ற அமைப்புகள் திரட்டும் பணம் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் போய்ச் சேருவதாகக் கூறி இவ்வமைப்புகளுக்கு அமெரிக்க அரசினால் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அல்-கைதாவுடன் தொடர்பிருப்பதாகக் கூறி சில அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அரசாங்கத்திற்கு இன்றுவரை இயலவில்லை. பொஸ்னிய, செச்செனிய போர்களின்போது சில இஸ்லாமிய உதவிநிறுவனங்கள் போராளிகளுக்கும் உதவி செய்தமை குறித்த செய்திகள் வந்துள்ளன. ஆனால் பொஸ்னியாவிலும், செச்செனியாவிலும் என்ன நடந்தது என்பது பற்றி அமெரிக்க அரசிற்கு அக்றையில்லை. அதுபோல பாலஸ்தீனப் பிரதேசத்தில் தோளில் இயந்திரத் துப்பாக்கியுடன் திரியும் சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் வழங்கும் உதவி குறித்தும் அமெரிக்க அரசுக்கு அக்கறையில்லை.

யூதக் குடியேற்றங்களுக்கு அமெரிக்காவிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது என்பது தெரியாது. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவச் சபைகள் யூதக் குடியேற்றக்காரர்களுக்கான மருந்துகள், பாடசாலை உபகரணங்கள் , குண்டு துளைக்காத பேரூந்து வண்டிகள் என்பன வாங்குவதற்கெனக்கூறி நன்கொடையளிக்கின்றன. பல தமிழ் கிறிஸ்தவர்கள் அங்கம் வகிக்கும் பில்லி கிரஹமின் (அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரன்) "Safe Harbour International" என்ற கிறிஸ்தவச் சபை தென்சூடான் கிளர்ச்சிக் குழுவான SPLA க்கு உதவி வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிறிஸ்தவச் சபைக்கும் இஸ்ரேலுக்குமான தொடர்புகள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இஸ்ரேல் சார்பு அரசியல் நிலைப்பாடு பகிரங்கமாகத் தெரிந்த விடயம்.

"கிறிஸ்தவ- சியோனிஸ்டுகள்" என அழைக்கப்படும் இந்த கிறிஸ்தவ மதவாதக்குழுக்கள் இஸ்ரேலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன ? "பைபிள் எனது சமாதான வரைபடம்" எனக்கூறுகின்றன சமாதானப் பேச்சுவார்தைகளை எதிர்க்கும் கிறிஸ்தவக் குழுக்கள். அவர்கள் பைபிளில் உள்ளதை அப்படியே நம்புகிறார்கள். பைபிளில் கூறியுள்ளபடி ஆண்டவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட புனித நிலத்திற்கு யூதர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். இனிக் கர்த்தரின் வருகைக்காக அவர்களின் இருப்பை நிச்சயப்படுத்த வேண்டிய கடமை தமக்குள்ளதாகக் கருதுகின்றனர். "சமாரியாவில் மீண்டும் நீங்கள் திராட்சை மரங்களை நடுவீர்கள் (ஜெரேமியா) " என்ற கூற்று பைபிளில் வருகிறது என்பதற்காக, சமாரியா (இன்று மேற்குக் கரை என்றழைக்கப்படும் பாலஸ்தீனப் பகுதி) சென்ற கிறிஸ்தவர்கள் அங்கே யூதக்குடியேற்றங்களில் திராட்சைக் கன்றுகளை நட்டனர். இவ்வாறு பைபிள்தான் எமது வழிகாட்டி, சட்டநூல் எல்லாமே அதன்படிவாழ்வதுதான் சிறந்தது என்று நம்பும் இவர்களை "கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள்" என அழைப்பதே பொருத்தம்.

யூதக் குடியேற்றக்காரரும் பைபிளின்படி இந்த நிலம் தமக்கு உரித்தானதென நம்புகின்றனர். பைபிளின் பழைய ஏற்பாடு யூத மதத்தவருக்குரியது. இதனை அவர்கள் "தோரா" என அழைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு, பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது. அப்போது அங்கே வாழ்ந்த யூதர்கள் மிகச் சிறுபான்மையினர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்களே இன்று இஸ்ரேலியப் பெரும்பான்மைச் சமூகமாக வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பெருமளவு நிலங்கள் அங்கே காலங்காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீன அரபுக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டவை. ஆனால் இந்த அத்துமீறலை பைபிளைக் கொண்டு நியாயப்படுத்துகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமது மூதாதையர் விட்டுச் சென்ற இடத்திற்கு தாம் மீண்டும் வந்துவிட்டனராம். ஆகவே இஸ்ரேலின் சுதந்திரத்திற்கு முன்பு இடம்பெற்ற போர் பாலஸ்தீன மக்கள் மீதான பயங்கரவாத வன்முறை (அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசே இதனைக் கூறியது) சொத்துகள் சூறையாடல் எல்லாமே பைபிளின் அடிப்படையில் நியாயமானவை. இதனைத்தான் 1967 ன் பின்பு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் குடியேறியுள்ள யூதர்கள் தொடர்கின்றனர். இஸ்ரேலின் மேற்குப் பகுதியில் வாழும் யூதர்களில் பலர் மதசார்பற்ற ஐரோப்பியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள். இதற்கு மாறாக பாலஸ்தீனப் பகுதிகளில் வாழும் யூதர்கள் மத நம்பிக்கையாளர்கள். உடைஉடுப்பதில், உணவுப்பழக்கத்தில் மத ஆச்சாரங்களைப் பிசகாது பின்பற்றுபவர்கள்.

சமாதான ஒப்பந்தப்பிரகாரம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை இஸ்ரேலிய அரசு வெளியேற்ற முயன்ற போது "இந்த நிலம் எமக்கு ஆண்டவரால் அளிக்கப்பட்டதனால், நாம் வெளியேறமாட்டோம்" என்று அடம் பிடித்தார்கள். குடியேற்றக்காரர்கள் அங்கே கடவுளை மட்டும் வணங்கிக் கொண்டு சும்மாவிருக்கவில்லை. யூதத் தீவிரவாதிகள் என்று அறியப்படுவோரில் பெரும்பான்மையானோர் இந்தக் குடியேற்றக்காரர்கள். வெளிப்படையாக இனவாதப் பிரச்சாரம் செய்யும் "காஹ்" என்ற அமைப்பு அமெரிக்க அரசினால் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பலஸ்தீனப் பாடசாலைகளுக்குக் குண்டுவைத்தல், பாலஸ்தீன வயல்களை எரித்து நாசம் செய்தல் என்பன இந்த இயக்கத்தின் அறியப்பட்ட சில செயல்கள். இந்த இயக்க உறுப்பினர்களில் ஒருவன் பள்ளிவாசலுக்குள் தொழுதுகொண்டிருந்த பலஸ்தீனர்களைச் சுட்டுக்கொன்றான். பின்னர் அவன் ஒரு மனநோயாளி என அறிவித்தார்கள்.

யூதக் குடியேற்றக்காரரின் தீவிரவாத அமைப்புடனான தொடர்பு பகிரங்கமாகத் தெரிந்த பின்னும் ஒவ்வொரு குடியேற்றக்காரருக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதபாணிக் குடியேற்றக்காரர்கள் அடிக்கடி விளையாட்டுக்காக அயலில் வாழும் பலஸ்தீனர்கள் மீது சுடும் சம்பவங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீனரின் குடியிருப்பு மீது கல்வீசுவது, தம்மைக் கடந்து போகும் பாலஸ்தீனர்களை இனவாத வார்த்தைகளைப் பிரயோகித்து இழிவுபடுத்துவது என்பன இவர்களுக்குச் சர்வசாதாரணமானவை. எந்தவொரு சர்வதேசச் செய்தி ஊடகமும் இந்தச் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இஸ்ரேலியர்கள் மீதான இன்னொரு குற்றச்சாட்டு பிராந்திய விஸ்தரிப்புப்பற்றியது. ஒருமுறை இஸ்ரேலின் தேசியக்கொடியைப் பாருங்கள். அதன் நடுவில் நட்சத்திரமும் மேலும் கீழுமாக இரண்டு நீலக்கோடுகளும் இருக்கும். நட்சத்திரம் முன்னொருகாலத்தில் இஸ்ரேலை ஆட்சி செய்த டேவிட் மன்னனின் அரச இலச்சினை. அப்படியானால் அந்த இரண்டு கோடுகள் ? இஸ்ரேலிய அரசு இதுபற்றித் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. ஹமாஸ், ஹிஸ்புள்ளா போன்ற அரபு-இஸ்லாமிய வாத விடுதலை இயக்கங்கள் விசித்திரமான விளக்கம் கொடுக்கின்றன.

அந்த இருகோடுகளில் ஒன்று ஈராக்கில் ஓடும் ஈயூப்பிரதீஸ் நதியையும் மற்றையது எகிப்திலோடும் நைல்நதியையும் குறிக்கும். ஆகவே இவற்றிற்கிடைப்பட்ட பிரதேசத்தை இஸ்ரேல் உரிமை கோருகிறது என்பது அவர்களது வாதம். பைபிளில் கூறப்பட்டுள்ள ஆபிரகாமிற்கு ஈயூப்பிரதீஸ், நைல்நதிகளுக்கடையிலான பிரதேசத்தை வழங்க ஆண்டவர் விரும்பியதாக வரும் ஒரு கூற்றைத் தவிர இதற்கு வேறு ஆதாரமில்லை. பைபிளில் கூறப்பட்டுள்ள பல இடங்கள் இன்றைய இஸ்ரேலில் மட்டுமல்லாது ஜோர்தான், எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலும் உள்ளன. பைபிளை நம்புபவர்களுக்கு இவையெல்லாம் புனித ஸ்தலங்கள்தான்.

ஈராக் பிரச்சினையின் போது பைபிள் கதைகள் அரசியல் மயமாகின. ஈராக்கின் பழம்பெருமை வாய்ந்த புராதனப்பொருட்களின் கொள்ளைக்குப்பின்னால் இஸ்ரேலியர்கள் இருந்ததாக ஈராக்கியர்கள் தெரிவித்தனர். அதேபோல வட ஈராக்கின் குர்திய விடுதலை இயக்கங்கள் இஸ்ரேலியக் கைக்கூலிகள் என்றும் சில துருக்கியப் பத்திரிகைகள் எழுதின. எது எப்படியிருந்தபோதும் ஈராக்கில் சதாமின் வீழ்ச்சியினால் தனக்குச் சவாலாக இருந்த எதிரி இல்லாமல் போய்விட்டதாக இஸ்ரேல் மகிழ்ந்தது மட்டும் உண்மை.

ஈராக் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் வந்தமை அரசியல் ரீதியில் இஸ்ரேலுக்கு நன்மையளிக்க வல்லது. "இஸ்ரேல் யாராலும் வெல்லமுடியாத நாடு" என்ற பைபிள் வாசகம் மெய்ப்பிக்கப்பட்டு விட்டதாக கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் தமது பிரச்சாரங்களில் கூறிவருகின்றனர். ஆனால் இவர்கள் எப்போதும் பைபிளில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே வாசிக்கும் பழக்கமுடையவர்கள். பைபிள் ஒருபோதும் இஸ்ரேலியர்களின் செயல்களை முழுக்கமுழுக்கச் சரியென்று வாதாடவில்லை. இஸ்ரேலியர்களின் மனித உரிமை மீறல்களை கடவுள் கண்டித்துத் தண்டனை கொடுத்ததாக பலவிடங்களில் வருகிறது. சுவாரசியமாக, பாபிலோனிய (இன்று ஈராக்) மன்னனிடம் அடிபணியவைப்பேன் என்று கடவுள் கூறுவதாகவும் ஒரு வாசகம் உள்ளது. (ஜெரேமியா 27: 6-17).

யாரும் எந்த நாட்டிற்கெதிராகவும், மனித உரிமைகள் மீறல் பற்றிக் கண்டிக்கலாம். இஸ்ரேலைத் தவிர. யூத நலன் காக்கும் சங்கங்கள் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை, கண்டனங்களை யூத எதிர்ப்புப் பிரச்சாரங்களாகத் திரிபுபடுத்துகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து பல ஐரோப்பியர்கள் பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலைக் கண்டிக்கத் தயங்குகின்றனர். ஏனெனில் கண்டிப்பவர்களை உடனடியாக நாஸிஸத்துடன் தொடர்புபடுத்திக் கதைக்கும் பழக்கம் யூதர்கள் மத்தியில் உள்ளது. பைபிளில் யூதர்களின் தீர்க்கதரிசி மோஸஸ் கூட இஸ்ரேலியர்கள் தமது நாட்டில் வாழும் அந்நியர்களை அடக்கக்கூடாது, சமமாக நடத்தவேண்டும் என்று கட்டளையிடுகிறார். "உன்னைப் போலவே அந்நியனையும் நேசி, நீங்கள் எகிப்தில் அந்நியர்களாக இருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்" எனவும் பைபிள் கூற்றுண்டு. இவையெல்லாவற்றையும் இன்று பலஸ்தீனர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கும் இஸ்ரேலியர்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

"சமாதானத் திட்டத்திற்கு ஆதரவளிக்காதீர்கள். கடவுளின் சாபத்திற்குள்ளாகாதீர்கள்" என்று அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள். அவர்களைப் பொறுத்தவரை இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலைச் செயல்கள் எல்லாம் கடவுளின் விருப்பப்படிதான் நடந்தன. இவ்வாறு கடவுளின் பெயரால் மனித உயிர்களை அழிப்பதை நியாயப்படுத்துபவர்கள் யூத-கிறிஸ்தவ மதங்களில் இருப்பதை உலகம் கண்டுகொள்வதில்லை. தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் கிறிஸ்தவர்களை பல யூதர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் சில யூத மதத் தலைவர்கள் இந்த கிறிஸ்தவ-சியோனிஸ்டுகளின் உள்நோக்கங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஏனெனில், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் இஸ்லாமியரை மட்டுமல்ல யூதர்களையும் தமது எதிரிகளாக இனங்காண்கின்றனர். அவர்கள் ஊழிக்காலத்தின் இறுதியில் தோன்றப்போகும் யேசுக்கிறிஸ்துவுக்காகக் காத்திருக்கின்றனர். அந்த இறுதிப் போரில் யூதர்களும் அழிக்கப்பட்டு விடுவரென நம்புகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலுக்குள் தங்கியிருந்த அமெரிக்கக் கிறிஸ்தவத் தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஜெருசலேமில் இருக்கும் அல் அக்ஸா மசூதியைக் குண்டுவைத்துக் தகர்க்கத் திட்டமிட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. உலக முஸ்லீம்களுக்கு மெக்காவிற்கு அடுத்த புனித ஸ்தலமான அல் அக்ஸா தகர்க்கப்பட்டால் ஏற்படப்போகும் பயங்கர விளைவுகள் இஸ்ரேலுக்குப் பாதகமாக இருக்கும் என்பது இஸ்ரேலிய அரசுக்குத் தெரியும். கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் பைபிளில் குறிப்பிட்ட (உலக அழிவென்ற) ஊழிக்காலத்தைத் தாமே செயற்கையாக உருவாக்கத் துணிந்துவிட்டார்கள் போலும்.


Friday, January 16, 2009

பொலிவிய அரசு கடவுளை தூக்கி வீசப்போகிறதா?


பொலிவியாவில் அரசையும், மதத்தையும் பிரிக்கும் சட்டத்திருத்தம் ஜனவரி 25 ம் திகதி மக்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட உள்ளது. கடவுளின் பூலோக பிரதிநிதிகளாக கருதிக்கொள்ளும், கத்தோலிக்க மதகுருக்களும், வலதுசாரி கட்சிகளும் இப்போதே அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் இறங்கி விட்டன. "உங்களுக்கு தெரியுமா? பொலிவியாவில் இருந்து கடவுளை தூக்கி வீசப் போகிறார்கள்." இவ்வாறு எதிர்க்கட்சி ஆதிக்கத்தில் உள்ள தொலைக்காட்சி, மதநம்பிக்கையாளர்களை பயமுறுத்துகின்றது. "கடவுளுக்கே உங்கள் வாக்கு. புதிய அரசியல்நிர்ணய சட்டத்தை நிராகரியுங்கள்." இவ்வாறு ஐக்கிய தேவாலயங்களின் கூட்டமைப்பு, விளம்பரங்கள் மூலம் பரப்புரை செய்கின்றது. வலதுசாரி எதிர்க்கட்சியான Podemos இந்த கூட்டமைப்பில் கைகோர்த்துள்ளது. நீண்டகாலமாக சோஷலிச ஜனாதிபதி ஏவோ மொராலசுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையில் நல்லுறவு இல்லை. அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும், வலதுசாரி கட்சிகளின் கோட்டையான சாந்த குரூஸ் மாநிலத்திற்கு கத்தோலிக்க மதகுருக்கள் ஆதரவு அளித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பொலிவியாவில் ஸ்பானிய காலனியாதிக்கவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கத்தோலிக்க மதம், 19 ம் நூற்றாண்டு வரை ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக கோலோச்சியது. கடைசியாக எடுத்த மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 56% கத்தோலிக்கராகவும், 36% புரட்டஸ்தாந்து அல்லது பிற கிறிஸ்தவ சபைகளை சேர்ந்தவர்களாக உள்ளனர். தற்போதுள்ள அரசியல்நிர்ணய சட்டத்தின் 3 வது அலகு, கத்தோலிக்க கிறிஸ்தவத்தை அரசமதமாக அங்கீகரித்துள்ளது. அரசிற்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான உறவு, இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவரை காலமும் அனைத்து தேசிய, சமய விசேட தினங்களில், அரசியல் தலைவர்கள் மத அனுஷ்டானங்களில் பங்குபற்றி வந்தனர். ஆனால் புதிதாக வரவிருக்கும், 4 வது திருத்தச் சட்டத்தின் படி, "அரசானது மதத்தில் தங்கி இருக்கவில்லை. அதேநேரம் மத நிறுவனத்தின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கின்றது." அனேகமாக மதச்சார்பற்ற ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் இந்த சட்டத்தை முன்மொழிந்த ஆளும் "சோஷலிசத்திற்கான இயக்கம்", நாஸ்திகத்தை முன்னிலைப்படுத்தவும் இல்லை. அதேநேரம் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கவுமில்லை.

மேலதிக விபரங்களுக்கு:
Bolivian Constitutional Referendum Analysis: An Overview

Thursday, January 15, 2009

வளர்ந்த நாட்டில் ஊழல் இல்லையா? (சைப்ரஸ் தொடர்-3)

பொதுத் தேர்தல் ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது, இன்றைய உலகில் அபூர்வமாக நடக்கும் விடயம் தான். சைப்ரசில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும் அளவிற்கு, அந்நாட்டில் ஊழல், வேலையில்லாப்பிரச்சினை என்பன அதிகரித்து வருகின்றன.

நான் அங்கு தங்கியிருந்த, கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தின் போது, கடைத்தெருக்கள் எல்லாம் அந்தந்த நகரசபைகளின் செலவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்த வர்ணஜால வேடிக்கைக்கு குறிப்பிட்ட நகரசபை இரண்டு லட்சம் யூரோக்களுக்கு மேல் செலவிடுகின்றது. அதே நேரம் நகரவாசிகளுக்கு அத்தியாவசிய தேவையான பொதுப்போக்குவரத்து துறைக்கு செலவிட பணமில்லை என்று கைவிரிக்கும் அரசாங்கத்தை, ஒரு நாளிதழ் சாடியிருந்தது. உலகில் பொதுப் போக்குவரத்து துறை வளர்ச்சியடையாத நாடுகளில் சைப்ரசும் ஒன்று. லட்சக்கணக்கான மக்கள் வாழும் பெரு நகரங்களில் கூட ஒரு சில பேரூந்துவண்டிகள் குறிப்பிட்ட ஓரிரு வழித்தடங்களில் மட்டும் ஓடுகின்றன. அதுவும் கிழமைநாட்களில், பகல் வேளை மட்டும் தான். இரவில் அரிது. ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சேவை அறவே இல்லை. டாக்ஸி வாடகை ஒன்றும் மலிவானதல்ல. வசதியுள்ளவர்கள் தனியாக கார் வைத்திருக்கிறார்கள். வசதிகுறைந்தவர்கள் ஸ்கூட்டர், சைக்கிள் அல்லது கால்களை நம்பி வாழவேண்டியது தான். கார்கள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக, அரசும் பொதுப் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்யாது, பாராமுகமாக விட்டுவிடுகின்றது. அந்நாட்டில் வருடம் 24000 யூரோக்களுக்கு குறைவாக சம்பாதிப்பவர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை. அதனால் வரி காட்டாதவர்களுக்கு, வசதி செய்து கொடுக்க முடியாது என்று அரசாங்கம் சிந்திக்கின்றது போலும்.

சைப்ரசில் குறைந்தது 1500 யூரோவுக்கு பாவிக்கப்பட்ட கார் வாங்கலாம். அது மட்டுமல்ல சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதும் இலகு. சாரதி பயிற்சியாளர்களை சோதிக்கும் பரிசோதகர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுப்பதாக உள்ளூர் வர்த்தக தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியது. சில சைப்ரஸ்கார பணக்காரர்கள் தமது வயதுவந்த பிள்ளைகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, பரிசோதகரை அழைத்து, ஆடம்பர உணவுவிடுதியில் விருந்து கொடுப்பதாக தெரிய வந்துள்ளது. அழகான இளம்பெண்கள் பரிசோதகருடன் ஓரிரவு படுக்கையை பகிர்ந்து கொண்டால், இலகுவாக அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.(Cyprus Mail) வீதிகளில் தறிகெட்டு ஓடும் சாரதிகளால், அந்நாட்டில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன என்பதை நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

நான் சைப்ரசில் இருந்த நாட்களில், சிறையில் இருந்து தப்பியோடிய ஒரு கிரிமினலின் கதை, உள்ளூர் ஊடகங்களில் பேசுபொருளாகி இருந்தது. உள்நாட்டில் "அல்கபோனே" என அழைக்கப்படும் உள்ளூர் மாபியா தலைவன், கொடூரமான இரட்டைக்கொலைகளுக்காக சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வந்தான். ஆறுமாதங்களுக்கு முன்பு வயிற்றுவலி என்று கூறி ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். அந்த பிரபல கிரிமினல் வைத்தியசாலை செலவுகளை தனது சொந்தப்பணத்தில் கட்டி வந்தது மட்டுமல்ல, அங்கிருந்த படியே தனது கூட்டாளிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளான். கிறிஸ்துமஸ் தினத்திற்கு சில நாட்கள் இருக்கும் நேரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாயிருந்த மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டான். இந்திய சினிமாவில் வருவது போல நடந்துள்ள இந்த சம்பவம், பாதுகாப்புத்துறையில் நிலவும் ஊழலுக்கு மிகச் சிறந்த உதாரணம். இதன் காரணமாக நீதி அமைச்சர் பதவி விலக நேர்ந்தது.

அந்த காலகட்டத்தில் தான் சைப்ரசின் முதலாவது மோசமான நிறவெறித் தாக்குதல் நடந்தது. 13 வயது ஆப்பிரிக்க சிறுமி(சைப்ரஸ் பிரசை) ஒருத்தி, அவள் படித்த பாடசாலை மாணவர்களால் மிருகத்தனமாக தாக்கப்பட்டாள். "கருப்பர்களே! உங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்லுங்கள்." என்று கத்திய படியே அந்த மாணவர்கள் தாக்கியதால், இது ஒரு நிறவெறித் தாக்குதல் ஆகும். மிகத் தாமதமாக அவ்விடத்திற்கு வந்த காவல்துறை, தாக்கப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாது, அவளது தந்தை வந்து கூட்டிச் செல்லும் வரை பாடசாலையில் வைத்திருந்தது. இவ்வளவு நடந்தும், தாக்கிய மாணவர்கள் அவ்விடத்தில் நின்றிருந்த போதும், பொலிஸ் அவர்களை கைது செய்யவில்லை. அரசாங்கமும், தினசரிப் பத்திரிக்கைகளும் இந்த இனவெறி சம்பவத்தை வன்மையாக கண்டித்த போதும், சமூகம் பெரிதாக மாறிவிடவில்லை. சைப்ரசில் வாழும் வெளிநாட்டவர்கள் செய்யும் குற்றச் செயல்களை முதன்மைச் செய்திகளாக தெரிவிக்கும் ஊடகங்கள் அந்நாட்டு மக்கள் மனதில் இனவெறி நஞ்சை ஊட்டுகின்றன. வழக்கமாக எங்காவது ஒரு இடத்தில் திருட்டு நடந்தால், பொலிஸ் வெளிநாட்டவர்களை மட்டும் தான் சந்தேகப்பட்டு விசாரிக்கும்.


வருடந்தோறும் இலங்கை, இந்தியாவில் இருந்து பெருமளவு இளைஞர், யுவதிகள் உயர்கல்வி கற்க என சைப்ரஸ் வருகின்றனர். ஹோட்டல் முகாமைத்துவம், வர்த்தகம் போன்ற கற்கைகள் ஆங்கில மொழியில் வழங்கும் தனியார் கல்லூரிகள், ஐக்கிய இராச்சியத்துடன் ஒப்பிடும் போது பாதியளவு குறைவான கட்டணம் அறவிடுவது மட்டுமல்ல, விசா இலகுவாக கிடைப்பதும் இதற்கு காரணம். அப்படி வரும் (அனேகமாக கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த) இளைஞர்கள், பெரும்பாலும் ஏதாவது வேலை செய்து சம்பாதிப்பதற்காக வருகின்றனர். தாயகத்தில் இருந்து கிளம்பும் போது, தாம் போகுமிடம் ஐரோப்பிய நாடென்பதால், பலவித கனவுகளுடன் வருபவர்கள், சைப்ரஸ் வந்த ஓரிரு மாதங்களிலேயே மாயை அகன்று நாடு திரும்ப விரும்புகின்றனர். தணலாய் தகிக்கும் வெயிலுக்குள் கட்டிடம் கட்டும் சித்தாள் வேலை போன்ற, சைப்ரஸ்காரர்கள் செய்ய விரும்பாத கடினமான வேலைகளையே இவர்கள் செய்கின்றனர். கிடைக்கும் சம்பளமும் சொற்பம். அதிக பட்சம் மணித்தியாலத்திற்கு 5 யூரோ கிடைப்பது அரிது. இவ்வாறு கஷ்டப்படும் இளைஞர்கள் சிலர் சொந்த நாட்டில் உயர்கல்வி கற்றவர்கள். வெளிநாட்டு கனவால் தமது வாழ்க்கையை பாழாக்கியதாக உணர்கின்றனர்.

சைப்ரசிற்கு மாணவர்களாக வருபவர்கள் படிக்காமல், வேலை செய்கின்றனர் என்ற விடயம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நன்கு தெரியும். இன்னும் சொல்லப்போனால், அவ்வளவு மாணவர்களும் ஒழுங்காக கல்லூரிக்கு சமூகமளித்தால், அதற்கென வகுப்புகளையும், ஆசிரியர்களையும் ஒழுங்கு படுத்த வேண்டி இருக்கும். அந்த செலவு தமக்கு மிச்சம் என்று நினைக்கின்றது, கல்லூரி நிர்வாகம். மாணவர்களாக வரும் இளைஞர்கள் வருடாவருடம் குடிவரவு திணைக்களத்தில் தமது விசாவை புதிப்பிப்பதற்காக, கல்லூரிக் கட்டணத்தை ஒழுங்காக கட்டி வருகின்றனர். இதனால் மகிழ்ச்சியுறும் கல்லூரி நிர்வாகம், தேவைப்பட்டால் பரீட்சை வினாத்தாள்களை கொடுத்து, சித்தி பெற்றதாக புள்ளிகளும் போட்டுத் தருவார்கள். கொஞ்சம் கூடுதலாக பணம் கொடுத்தால் டிப்ளோமாவும் கிடைக்கும். காசே தான் கல்வியடா!

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெறும் வரை, சைப்ரஸ் வளர்ச்சி குன்றிய மூன்றாம் உலக நாட்டைப் போல காட்சியளித்தது.
துருக்கி படையெடுப்பிற்குப் பின்னர் பிரிக்கப்பட்ட "சைப்ரஸ் குடியரசு" ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு முன்னேறியது. அதற்கு முக்கிய காரணம், உல்லாசப் பயணிகளாகவும், (மலிவுவிலை) வீடு வாங்கும் ஓய்வூதியக்காரராகவும் வருகை தரும் பிரிட்டிஷ்காரர்கள். சைப்ரஸ் பொருளாதாரம் அவர்கள் கொட்டிய பவுன்களால் வளர்ந்த போது, விலைவாசியும் அதிகரித்தது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மற்றும் பவுணின் பெறுமதி இறக்கம், என்பன காரணமாக, பிரிட்டிஷாரின் வருகை வருங்காலத்தில் குறைய வாய்ப்புண்டு. இதனால் வேலையில்லாப்பிரச்சினை அதிகரிப்பதால், வெளிநாட்டவர்கள் வேண்டாவிருந்தாளிகளாக நடத்தப்பட வாய்ப்புண்டு.

ஐரோப்பிய யூனியன் என்ற கோட்டையின் கிழக்கு வாயிலாக கருதப்படும் சைப்ரசிற்கு அகதிகளாக வருபவர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. அந்நாட்டிற்குள் இலகுவாக நுழையக்கூடியதாக இருந்தாலும், அங்கிருந்து வேறு நாடுகளுக்கு போவது ( பெரும்பாலான அகதிகளின் விருப்பம்) கடினமானது. பெரும்பாலான அகதிகள் துருக்கி வந்து, பின்னர் அங்கிருந்து (துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள) வடக்கு சைப்ரசிற்குள் பிரவேசித்து, நிலக்கண்ணிகள் நிறைந்த எல்லைக்கோட்டை கடந்து தெற்கு சைப்பிரசினுள் நுழைகின்றனர். இவ்வாறு வரும் போது, மிதிவெடியில் அகப்பட்டு காலை இழந்தவர்கள் சிலர். அகதிகளாக வருபவர்கள், முன்பெல்லாம் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் பதிய வேண்டி இருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த பின்னர், சைப்ரஸ் அரசு அகதிகளை பொறுப்பெடுத்து வருகின்றது. இருப்பினும் விசாரணைகளின் பின்னர் தொண்ணூறு வீதமான அகதிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுகின்றன. மேலும் தஞ்சக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் காலங்களில், அகதிகளுக்கான இருப்பிடமோ, அல்லது உணவோ வழங்கப்படுவதில்லை. இதனால் சட்டவிரோத வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலை.

சைப்ரசின் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்மையிலான அமைவிடம் காரணமாக, பாலஸ்தீன, லெபனானிய அகதிகளுக்கே இதுவரை காலமும் தஞ்சம் வழங்கப்பட்டு வந்தது. முன்பு ஒருமுறை பாலஸ்தீன இன்டிபதா போராட்டத்தின் போது, பெத்லஹெம் தேவாலயத்தினுள் சரண்புகுந்த ஆயுதபாணிகளை, சைப்ரஸ் வரவேற்று புகலிடம் கொடுத்து உலகப் புகழ் தேடிக்கொண்டது. அதேநேரம் அரசியல் ஆதாயமற்ற பிறநாட்டு அகதிகள், நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் சிறைகளில் அடைக்கப்பட்டு, நாடுகடத்தப்படுவது வழக்கமாக நடந்து வருகின்றது.
சைப்ரஸ் என்னதான் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றாலும், இன்றும் கூட மூடப்பட்ட சமுதாயமாகவே இருக்க விரும்புகின்றது. என்னதான் வெளி அழுத்தங்கள் இருந்த போதிலும், அந்நியரை தம்மில் ஒருவராக ஏற்றுக்கொள்ளும் "பன்முக கலாச்சார சைப்ரஸ்" என்பது இன்றுவரை ஒரு கனவு மட்டுமே.
(முற்றும்)
(இந்தக் கட்டுரையை தயாரிக்க உதவிய சைப்ரஸ் வாழ் நண்பர்களுக்கும், ஆங்கில மொழி நாளேடுகளுக்கும் எனது நன்றிகள்.)
_______________________________________________
கடந்தவை:
1. இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்
2. ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)

நிதி நெருக்கடியால் லாட்வியாவில் கலகம் வெடித்தது


சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த லாட்வியாவில், பொருளாதார பிரச்சினை காரணமாக கிளர்ந்தெழுந்த மக்களின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கலவரத்தில் முடிந்தது. தலைநகர் ரீகாவில், 13 ஜனவரி அன்று 10000 ற்கும் அதிகமான மக்கள் திரண்டு அரசுக்கெதிரான தமது வெறுப்பை வெளிக்காட்டினர். பெரும்பான்மை மக்களால் வெறுக்கப்படும், ஆளும் வலதுசாரி கட்சியை பதவி விலகக் கோரினர். பேரணியை தடுக்க முயன்ற கலகத்தடுப்பு பொலிஸ் மீது சில நூறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசியதால் அங்கே கலகம் வெடித்தது. பொலிஸ் வாகனங்கள், அரச அலுவலகங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றிய, நேட்டோ அலுவலகங்களும் கலகக்காரரின் கல்வீச்சுக்கு தப்பவில்லை. சில வர்த்தக நிலையங்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டதாக தெரியவருகின்றது. கலவரத்தில் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர், 125 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் உலக பொருளாதார நெருக்கடியால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் லாட்வியாவும் ஒன்று. அந்த நாட்டின் இரண்டாவது பெரிய வங்கி நெருக்கடியில் சிக்கியதால், வங்கிகள் கடன் கொடுக்க மறுத்து வருகின்றன. இதனால் கடன்பெற முடியாத விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஒருகாலத்தில் வேகமாக வளர்ந்து வந்த லாட்விய பொருளாதாரம், கடந்த வருடம் சுருங்க ஆரம்பித்தது. பணவீக்கமும் அதிகரித்தது. அரசு ஐ.எம்.எப். விதிக்கும் உத்தரவுகளுக்கு அடிபணிந்து, பொருளாதார சீர்திருத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த சீர்திருத்தத்தால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் தான் தற்போது கிளர்ந்தெழுந்து உள்ளனர்.

1991 ல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து லாட்வியா சுதந்திரமடைந்த பின்னர், (சோஷலிசத்தை கைவிட்டு விட்டு ஜனநாயகத்திற்கு மாறிய பின்னர்), இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்ட பேரணி இதுவாகும். இதே நேரம், அடுத்த நாள் (13 ஜனவரி) பல்கேரியாவிலும் விவசாயிகள், மாணவர்கள், வேலையற்றவர்களின் பேரணி ஒன்று கலவரத்தில் முடிந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் மிக வறிய நாடான பல்கேரியாவில், அரசாங்கத்தில் நிலவும் ஊழலையும், ஏழ்மை வாழ்வையும் இனியும் பொறுக்க முடியாது என்ற கட்டத்தில் இம்மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். கடந்த மாதம் கிரீஸ் மக்கள், இதே காரணங்களுக்காக வாரக்கணக்காக அரச எதிர்ப்பு கலகத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.]

மேலதிக தகவல்களுக்கு:
Latvia Shaken by Riots Over Economy
Bulgaria anti-government protest turns into riot

Anti-government riots in Riga, Latvia