Thursday, March 31, 2011

ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 8)

இந்திய இராணுவத்துடன் யுத்தம். பலரால் நம்ப முடியாமல் இருந்தது. கோட்டை முகாமில் இருந்து யாழ் நகரை நோக்கி, சரமாரியான எறிகணை வீச்சுகள் நடந்தன. இதனால் யாழ் நகருக்கு வேலைக்கு சென்ற அனைவரும், நேரத்தோடு வீடு திரும்பினார்கள். என்ன நடக்கின்றது என்று அவர்களால் ஊகிக்க முடியவில்லை. யாழ் நகர வீதிகள் எங்கும் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த யுத்தம் நினைவுக்கு வந்தது. இப்போதும் இலங்கை இராணுவமே மோதுவதாக நினைத்தனர். ஆனாலும், அவர்கள் எப்படி திரும்ப வந்தார்கள்? எல்லோர் மனதிலும் குழப்பம். ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்ட புலிகளும், ஆரம்பத்தில் சிங்கள இராணுவத்தையே குறி வைத்து தாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த கண்ணி வெடிச் சம்பவத்தில், இந்தியப் படையின் டிரக் வண்டிக்கு பின்னால் சென்ற, சிறிலங்கா படையினரின் வாகனமே தாக்கப்பட்டது.

இந்திய அமைதிப் படையும், தமிழர்களுக்கு சாதகமாகத் தான் நடந்து கொண்டது. உதாரணத்திற்கு திருகோணமலையை ஈழ சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரமாக்குவதற்கு இந்திய இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியது. வருங்கால மாகாண சபையும் அங்கேயிருந்து இயங்கவிருந்தது. அதற்கு முதல் படியாக, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை அப்புறப் படுத்த உதவியது. அத்தகைய சம்பவத்தை, அதற்கு முன்னரும், பிறகும் இலங்கை வரலாற்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. சிங்களப் பேரினவாத அரசு, தென்னிலங்கையில் சிறை வைக்கப்பட்ட சிங்கள குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, தமிழர் பகுதியில் குடியேற அனுப்பி வைத்தது. பாரம்பரிய தமிழர்களின் நிலங்களை அபகரித்து, தங்கள் குடும்பத்தை தருவித்து குடியேறினார்கள். 1983 கலவரத்திற்கு முன்னரே, திருகோணமலை கலவரப் பூமியாக காட்சியளித்தது. கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களுக்கு போலிஸ் பாதுகாப்பும் கிடைத்து வந்தது. இந்திய இராணுவத்தின் வருகையுடன் நிலைமை தலைகீழாக மாறியது. திருகோணமலை நகரிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் குடியேறிய சிங்களவர்களை விரட்டியடித்த தமிழ் இளைஞர்களுக்கு கிரேனேட் விநியோகம் செய்தது. முன்னர், சிங்களக் குடியேறிகளால் பாதிக்கப் பட்டு, பூசா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு விடுதலையானவர்கள் பழி தீர்க்க கிடைத்த சந்தர்ப்பமாக கருதினார்கள்.

கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல், இலங்கையின் இனப்பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று மூவின மக்கள், இன அடிப்படையில் பிளவுண்டு மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகும். சிறிலங்கா அரசு, சிங்கள, முஸ்லிம் கிராமங்களில் ஊர்காவல் படை அமைத்து, ஆயுதங்களைக் கொடுத்திருந்தது. (இந்தியா, ஒரிசாவில் உள்ள "சல்வா ஜூடும்" போன்றது.) சிறிலங்கா இராணுவத்துடனான யுத்தம் நடைபெற்ற காலங்களில், ஊர்காவல் படைகளால் பல தமிழ்க் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், தமிழ் ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டிருந்தது. இதனால் பெருமளவில் முஸ்லிம் கிராமங்களும், சிறிதளவு சிங்களக் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இலங்கையின் இனப்பிரச்சினையை, இந்தியாவும் எளிமையாக புரிந்து கொண்டதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இயற்கை வளம் நிறைந்த கிழக்கு மாகாணத்தில், இனங்களிடையே பகை முரண்பாடுகளை சிறிலங்கா அரசு, திட்டமிட்டு வளர்த்திருந்தது.

இனப்பிரச்சினைப் புயல் கிழக்கில் மையங் கொண்ட போதிலும், போர் மேகங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு சிறிய நிலப்பகுதியைத் தவிர, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள, யாழ் குடாநாட்டின் பூகோள அமைவிடம் எப்போதும் இராணுவத்திற்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை. இராணுவ முகாம்கள் அனேகமாக கடற்கரைப் பகுதியை ஒட்டியே இருந்ததால், அவற்றை முற்றுகையிடுவது போராளிகளுக்கு இலகுவாக இருந்தது. சிங்கள இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு சூனியப் பிரதேசம் இருக்கும். மயான பூமியாக காட்சி தரும் அந்த இடத்திற்கு அருகில் செல்லக் கூட, மக்கள் அஞ்சுவார்கள். சமாதான காலத்தில், இந்தியப் படையினர் முகாம் அருகாமையில் செல்லும் வீதிகள் பொது மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டன.

எமது உறவினர்கள் சிலர், காங்கேசன்துறை முகாம் அருகில் மீள்குடியேற்றத்திற்காக சென்றிருந்தனர். அவர்களின் வீட்டிற்கு செல்லும் வழியில், முகாமின் மத்தியில் இருந்த மைதானத்தில் ஆர்ட்டிலறி பீரங்கிகள் துருத்திக் கொண்டு நின்றன. முன்பு சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசையை மட்டும் கேட்டு வந்தோம். எறிகணைகளை ஏவும் ஆர்ட்டிலறிகளை அப்போது தான் நேரில் பார்த்தோம். இன்னும் சில வாரங்களில், இந்திய இராணுவம் இதே ஆர்ட்டிலரிகளை பயன்படுத்தி பொது மக்களின் குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் என்று, அப்போது யாரும் நினைக்கவில்லை. இலங்கை இராணுவம் காசுக் கணக்குப் பார்த்து ஷெல் வீசியிருப்பார்கள். இந்திய இராணுவத்தினர் வகை தொகையின்றி அள்ளிக் கொட்டினார்கள். நிமிடத்திற்கொரு ஷெல் வந்து விழுந்து வெடித்தது.

காங்கேசன்துறை, பலாலி முகாம்களில் இருந்த படையினரே முதலில் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். அதனால், அந்த முகாம்களை சுற்றி பத்து மைல் சுற்றாடலில் இருந்த வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. இந்தியப் படையினர் முன்னேறுவதற்கு டாங்கிகளும் பெருமளவு உதவின. வீதிகளில் கண்ணி வெடி புதைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்பதால், டாங்கிகள் வீட்டு வளவுகளைக் கடந்து முன்னேறின. எதிரில் அகப்பட்ட மதில் சுவர், மரம்,செடி எல்லாவற்றையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறின. சில இடங்களில் அலறி ஓடிய பொது மக்கள் மீதும் டாங்கிகள் ஏறிச் சென்றன. இந்திய இராணுவத்தின் போரிடும் முறை, சிறிலங்கா இரானுவத்தினதை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. நிலங்களை கைப்பற்ற முன்னேறும் சிறிலங்கா படையினர், தமது பக்கத்தில் அதிக இழப்பு ஏற்பட்டால் பின்வாங்கி விடுவார்கள். ஆனால் சனத்தொகை பெருக்கம் அதிகமுள்ள இந்தியாவை சேர்ந்த இராணுவத்திற்கு, ஆட்பற்றாக்குறைப் பிரச்சினை இருக்கவில்லை. எத்தனை போர் வீரர்கள் செத்து மடிந்தாலும், அலை அலையாக வந்து கொண்டே இருந்தனர்.

இவ்வளவு தீவிரமாக போரிட்டும், இந்தியப் படை யாழ்நகரை அடைவதற்கு ஒரு மாதம் எடுத்தது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி பெருமளவு நகரமயக்கப் பட்டிருந்தது. குடாநாட்டிலேயே சன நெரிசல் அதிகமுள்ள பிரதேசமும் அது தான். வலிகாமம் என்றழைக்கப்படும் செம்மண் பிரதேசம் முழுவதும், புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் நடந்த உக்கிரமான சண்டையில் சிக்கி சின்னாபின்னப் பட்டது. ஈழப்போர் தொடங்கியதில் இருந்து, யாழ்குடாநாடு சந்தித்த முதலாவது மனிதப் பேரவலம் அப்போது தான் ஏற்பட்டது. வடக்கே காங்கேசன்துறையில் இருந்து, தெற்கே யாழ் நகரம் வரையிலான பகுதி, யாருமற்ற சூனியப் பிரதேசமாகிக் கொண்டிருந்தது. மக்கள் சாரிசாரியாக கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர்.

யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதியான, வடமராட்சியும், தென்மராட்சியும் அமைதியாக காட்சியளித்தன. அங்கே வந்து சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள், தமக்குத் தெரிந்த உறவினர்கள் வீடுகளில் தங்கினார்கள். உறவினர்கள் இல்லாதோர் பாடசாலைகளில் தங்கினார்கள். இன்னும் சிலர் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இந்திய இராணுவம், யாழ் நகரம் வரை வந்து விட்டதால், புலிகளும் தென்மராட்சி ஊடாக வன்னிக் காடுகளை நோக்கி பின்வாங்கினார்கள். தென்மராட்சிப் பகுதி, யாழ் குடாநாட்டை வன்னி பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவிருந்தது. அதனால் அங்கே யுத்தம் நடக்காமல் தவிர்க்கப் பட்டது. இருப்பினும் தென்மராட்சியை கைப்பற்றும் நோக்குடன், இந்திய இராணுவம் அதிர்ச்சி தரும் படுகொலையை நடத்தியது.

(தொடரும்...)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:Tuesday, March 29, 2011

ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]

(பகுதி - 7)

இந்திய-இலங்கை ஒப்பந்தம், ஈழ விடுதலை இயக்கங்கள் உரிமை கோரிய வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தது. மாகாண சபைகள் அமைத்து, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்றும் சம்மதிக்கப்பட்டது. சிங்களப் பகுதி மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கல் சென்றதை, அன்று சில தமிழ் இனவாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை. முரண்நகையாக, தமிழர்களின் பிரச்சினை தீர்க்கவென கொண்டு வரப்பட்ட மாகாண சபை, இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தினால் வட- கிழக்கில் செயற்படாமல் முடங்கியது. 

இந்தியாவின் திட்டம் நிறைவேறியிருந்தால், வட-கிழக்கு மாகாணம் தனியான போலிஸ், துணைப் படையுடன் சுயாட்சிப் பிரதேசமாக இருந்திருக்கும். ஆனால் இந்தியா தான் விரும்பிய பொம்மை அரசொன்றை நிறுவ முயன்றது. இதற்கு முதற்படியாக "ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி" என்ற பெயரில் ஆயுதக் குழுவொன்றை அமைத்திருந்தது. இந்த புதிய அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள்.

முன்பு புலிகளால் ஈழத்தில் இயங்க விடாது தடை செய்யப்பட்ட புளொட், ஈபிஆர்எல்எப், டெலோ ஆகிய அமைப்புகளில் இருந்து விலகிய உறுப்பினர்கள். தமிழக முகாம்களில் அடைந்து கிடந்த அகதிகள். இத்தகையோரை சேர்த்து தான் அந்த இந்திய சார்பு அமைப்பு தோன்றியது. பரந்தனிலும், கிளிநொச்சியிலும் நகரையொட்டி நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தின் முகாம்களுக்கு அருகில், ஈஎன்டிஎல்ப் முகாம்கள் அமைந்திருந்தன. அவர்கள் பகிரங்கமாக ஆயுதங்களுடன் காவல் காப்பதை வீதியால் செல்லும் அனைவரும் காணக் கூடியதாக இருந்தது. மாகாண சபையின் தலைமையை, அரசியல் ரீதியாக பலம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். பிடம் ஒப்படைக்கவே விரும்பினர். ஆயுதபாணிகளான ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள், இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த இடங்களில் தங்க வைக்கப் பட்டனர்.

ஒரு முறை யாழ் நகரில், ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவின் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வழமையாக செல்லும் நபர்களை விட, எண்ணிக்கை அதிகமாக்கிக் காட்ட நினைத்தார்கள் போலும். யாழ் நகர் நோக்கிச் சென்ற பேரூந்து வண்டிகளை கூட்டம் நடை பெற்ற இடத்திற்கு திசை திருப்பி விட்டார்கள். எதிர்பாராத விதமாக அகப்பட்டுக் கொண்ட பயணிகள், கூட்டம் முடிவடைந்த பிறகு தான் தத்தமது இடம் நோக்கி செல்ல முடிந்தது. இந்திய அமைதிப் படையினர், இரவிலும் பகலிலும் வீதிகளில் ரோந்து செல்வது வழக்கம். அவர்களுடன் இந்தியாவிலிருந்து வந்த ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களும் கூடச் செல்வார்கள். முன்பு யாழ் குடாநாட்டில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்த அமைப்பில் ஏராளமான உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் இப்போது அரசியலை விட்டொதுங்கி தமது குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். இந்தியப் படையுடன் ரோந்து செல்லும் ஈபிஆர்எல்ப் ஆயுதபாணிகள், முன்னாள் தோழர்களையும் கண்டு பேசி கூட்டிச் சென்றனர். மீண்டும் அமைப்புடன் இணைந்து கொண்டவர்களுக்கு, இந்திய இராணுவம் ஆயுதங்களை வழங்கியது.

ஈஎன்டிஎல்ப், ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை, புலிகள் தமக்கு வந்துள்ள அச்சுறுத்தலாக கருதினார்கள். ஒப்பந்தத்தை ஏற்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதால், நிராயுதபாணிகளான தாங்கள் இலக்கு வைக்கப்படுவோம் என்று அஞ்சினார்கள். அவர்களது அச்சத்தை மெய்ப்பிப்பது போல, சில இடங்களில் தெருவில் கண்ட புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரும், சில குழுக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது குறித்து புலிகள் முறைப்பாடு செய்திருந்தனர். ஆயினும் அந்த முறைப்பாடுகளை இந்திய அமைதிப் படை புறக்கணித்தது. ஒரு நாளிரவு, பரந்தனிலும், கிளிநொச்சியிலும் ஈஎன்டிஎல்ப் முகாம்கள் மீது, இந்திய இராணுவம் திடீர்த் தாக்குதல் நடத்தியது. சிலர் காயமடைந்த தாக்குதலில், ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. இந்தியப் படை தனதருகில் ஒரே வேலியைப் பகிர்ந்து கொண்ட ஈஎன்டிஎல்ப் முகாமை தாக்கியது, அன்றைய சிறந்த நகைச்சுவை. அந்த நாடகம் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர், மீண்டும் அதே இடத்தில் ஈஎன்டிஎல்ப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் காட்சி தந்தனர்.

இராணுவ முகாம்களை தாண்டி செல்லும் வாகனங்களை இந்தியப் படையினர் சோதனையிட்டனர். பயணிகளை இறக்கி விட்டு, ஆயுதங்கள் கடத்தபடுகின்றதா என்பதை ஆராய்ந்தனர். இந்தியப் படை வரும் வரையில் யாழ் குடாநாட்டை கட்டுப் பாட்டில் வைத்திருந்த புலிகள், தமது ஆயுதங்களை நிலத்தை தோண்டி ஒளித்து வைத்திருந்தனர். "ஆயுதங்களை ஒப்படைத்தது தவறு" என்று பொருள் படும் சுவரொட்டிகள் பொது மக்களின் பெயரில் புலிகளால் ஓட்டப் பட்டன. புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் சென்ற வாகனங்களில் இயந்திரத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததாக நேரில் கண்ட சிலர் கூறினார்கள். அமைதிப் படை நிலை கொண்டிருந்ததாலும், சமாதானம் நிலவியதாலும் யாரும் ஆயுதங்களை பிரயோகிக்க தயங்கினார்கள். இதே நேரம், இரகசியமாக சில கொலைகள் நடப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர்.

இலங்கையில் வந்திறங்கிய இந்தியப் படையினர் சிலருக்கு, தாங்கள் எந்த நாட்டில் நிற்கிறோம் என்று தெரிந்திருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த படையினர், தாம் பாகிஸ்தானில் வந்திறங்கியதாக நினைத்தனர். கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்ந்ததும், இந்திய இராணுவ சிப்பாய்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ்-முஸ்லிம் கிராமங்களுக்கு இடையிலான முரண்பாட்டில், இந்திய இராணுவம் தமிழ் (இந்துக்கள்) பக்கம் சார்ந்து நின்றது. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் இந்திய இராணுவம் மீது அதிருப்தி தோன்றியது.

திருகோணமலையில் இந்திய இராணுவம் வன்முறைக்கு உதவியமை தெளிவாகத் தெரிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், தென்னிலங்கையில் "பூசா" முகாமில் சிறை வைக்கப் பட்டிருந்த தமிழ்க் கைதிகள் விடுதலையாகி ஊர் திரும்பினார்கள். திருகோணமலையை சேர்ந்த முன்னாள் பூசா கைதிகள், இந்திய இராணுவத்தின் உதவியுடன், திருகோணமலை வாழ் சிங்களவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். பல சிங்கள குடியேற்றங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால், சிங்கள மக்கள் இடம்பெயர்ந்தனர். மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தடுக்கும் நோக்குடன், சிறிலங்கா அரசு அந்த செய்திகளை இருட்டடிப்பு செய்தது. இன்று வரை, திருகோணமலை அசம்பாவிதங்கள் சிங்கள மக்களுக்கு மறைக்கப் பட்டே வந்துள்ளன.

சிறிலங்கா அரசு, புலிகளின் திருகோணமலைப் பொறுப்பாளரான புலேந்திரன் மேல் இலக்கு வைத்திருந்தது. ஈழப்போர் ஆரம்பமாகிய காலங்களில், திருகோணமலை சிங்களப் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக புலேந்திரன் முக்கிய சந்தேக நபராக கருதப்பட்டார். தற்செயலாக புலிகளின் தலைவர்களான, புலேந்திரன், குமரப்பா சென்ற படகு வட இலங்கைக் கடலில் தடுத்து நிறுத்தப் பட்டது. சிறிலங்கா கடற்படையானது, அவர்களை கைது செய்து, பலாலி இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றது. மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லவிருந்த வேளை, சயனைட் நஞ்சை உட்கொண்டு மாண்டனர். சிறையிலிருந்த அவர்களை பார்வையிடச் சென்ற அன்டன் பாலசிங்கம் போன்றோரே சயனைட் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப் பட்டது. புலித் தலைவர்கள் கொழும்பு கொண்டு செல்லப் படுவதை, இந்திய இராணுவம் விரும்பவில்லை. இருப்பினும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை.

அதற்கு முன்னர், வட-கிழக்கு மாகான சபையில் புலிகளின் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இந்திய இராணுவம் முன் வந்தது. திரை மறைவில் பேரம் பேசல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் எதுவுமே நடைமுறையில் வந்ததாகத் தெரியவில்லை. புலிகளின் கோரிக்கைகளை முன்வைத்து, அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இந்திய அமைதிப் படை, திலீபனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டியது. இறுதியாக நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மரணமடைந்த திலீபனின் பூதவுடல், யாழ் குடாநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. திலீபனின் சாத்வீக போராட்டத்தினால் கவரப்பட்ட பொது மக்கள், பெருமளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஹிம்சா வழிப் போராட்டத்தினால் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் திலீபனுக்கு பிறகு யாரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. புலிகளின் தலைமைப் பீடம் மீண்டும் ஒரு போருக்கு தயாராவதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் கைது நடவடிக்கையால், போர் நிறுத்தத்தை முறித்துக் கொள்வதாக புலிகள் அறிவித்தனர். கிழக்கு மாகாணத்தில் வீதியில் ரோந்து சென்ற படையினர் மீது நிலக்கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்திய, இலங்கைப் படையினர் அடுத்தடுத்து சென்ற போதிலும்; சிங்களப் படையினர் சென்ற பார ஊர்தி கண்ணி வெடிக்கு இலக்காகியது. புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தி விட்டதை புரிந்து கொண்ட இந்திய இராணுவம், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அக்டோபர் மாதம் வழமையான ரோந்துப் பணிகளை முடித்துக் கொண்டு, யாழ் கோட்டை முகாமுக்கு திரும்பிய இந்தியப் படையினரின் வாகனம் தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய புலி உறுப்பினர்கள், யாழ் கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.

யாழ் கோட்டை மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் இருந்த இராணுவ முகாம்கள் யாவும் முற்றுகையிடப் பட்டன. எதிர்பாராத முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட இந்திய இராணுவம், கண்மூடித் தனமான ஷெல் தாக்குதல் நடத்தியது. முகாம்களுக்கு அருகில் இருந்த புலிகளின் காவலரண்கள் மட்டுமல்லாது, குடியிருப்புகளும் ஷெல் வீச்சுக்கு இலக்காகின. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். இரண்டு மாத சமாதானத்தின் பின்னர், மீண்டும் யுத்தம் தொடங்கி விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இம்முறை, இந்தியப் படையினரின் தாக்குதல்கள், சிறிலங்காப் படையினரை விட மிகவும் ஆக்ரோஷமாக அமைந்ததிருந்தது. யாழ் குடாநாட்டு மக்கள், மாபெரும் மனிதப் பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:


Monday, March 28, 2011

இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 6)

ஈழத் தமிழ் தேசியம், அண்ணாதுரையின் திராவிட இயக்கத்தில் இருந்து சித்தாந்தத்தை கடன் வாங்கியது. மிதவாதத் தலைவர்கள், தனித் தமிழ்நாடு கோரிக்கையின் நீட்சியாகவே, தமிழீழத்தை கருதினார்கள். இருப்பினும் கட்சியின் இளைஞர் அணி, ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அவர்களைப் பொறுத்த வரையில், திராவிட இயக்கத்தினர் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடாததை; ஒரு வரலாற்றுத் தவறாக கருதினார்கள்.

அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்று அவர்கள் நம்புவதற்கு, கண் முன்னே கண்ட நிகழ்வுகள் இருந்தன. 1971 ம் ஆண்டு, ஜேவிபி அறிவித்த சோஷலிச இலங்கையை நோக்கிய கிளர்ச்சி, இலங்கைத் தீவின் முதலாவது ஆயுதப் போராட்டமாகும். 1977 ல் இருந்து, ஆயுதபாணி தமிழ் இளைஞர்கள் போலிசை இலக்கு வைக்கத் தொடங்கினர். ஜேவிபி கிளர்ச்சி நடந்து, ஐந்து வருடங்கள் கழித்து வடக்கில் வன்முறை வெடித்தமை குறிப்பிடத் தக்கது. ஆகவே ஆரம்ப கால தமிழ் தேசியப் போராளிகளின் தலைமுறை, சம காலத்தை சேர்ந்தவர்கள் என்பது புலனாகும். ஜேவிபி கிளர்ச்சி மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டமும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்திகளாக அமைந்துள்ளன.

ஜேவிபியில் சில யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும், தொழில் நிமித்தம் கொழும்பு நகரில் வாழ்ந்தவர்கள். ஜேவிபியில் இருந்த மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். 1990௦, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி வரையில் அதன் உறுப்பினர்களாக இருந்த மலையகத் தமிழர் சிலரை கொழும்பில் சந்தித்திருக்கிறேன். அப்போது ஜேவிபியில் இருந்து விலகி, தேநீர்க்கடை பணியாளர்களாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களின் தகவலின் படி, ஜேவிபியில் இருந்த தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும், சில நூறு பேராவது தேறும்.

ஜேவிபியில் இருந்து விலத்திய சிங்கள இளைஞர்கள் சிலர், தமிழீழ தேசிய இயக்கங்களிலும் சேர்ந்திருந்தனர். இடதுசாரித் தன்மை கொண்ட இயக்கங்களில் சேர்ந்திருந்த இவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. சிங்கள மொழியிலான அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தவும் உதவியுள்ளனர். பிற்காலத்தில் வளர்ச்சியடைந்த வலதுசாரித் தமிழ்த்தேசியம் அவற்றை எல்லாம் மறந்து விட்டது.

ஜேவிபியினர் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, "இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை, இந்திய மேலாண்மை வல்லரசின் ஐந்தாவது தூணாக கருதியமை." எதிர்காலத்தில் அவர்களைச் சாட்டியே இந்தியத் தலையீடு இடம்பெறும் என்றும் நம்பினார்கள். ஆனால் அந்தக் கருத்தியல் தவறு என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. ஜேவிபி சோஷலிசம் பேசினாலும், அதில் பெருமளவு தூய தேசியவாதக் கூறுகள் காணப்பட்டன.

அவர்களது இந்தியா மேலான வெறுப்பின் மூலவேர், இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி ஆகும். இலங்கையில் அரசுரிமைப் போட்டிகளும், கிளர்ச்சிகளும் தோன்றிய காலத்தில் எல்லாம் இந்தியத் தலையீடு இடம்பெற்றுள்ளது. நவீன காலத்தில் பதிவு செய்யப்பட்ட இந்திய இராணுவ நடவடிக்கை, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இடம்பெற்றது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க இந்தியப் படைகள் உதவின. 1987 ல் இந்தியப் படைகள் இலங்கையில் வந்திறங்கியமை, அதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே இரண்டு தடவைகள், இலங்கையில் எழுந்த அரச எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ஒடுக்க, இந்தியப் படைகள் தருவிக்கப் பட்டன.

கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், மன்னனைப் பிடிக்க உதவிய பிரபுக்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆங்கிலேயர்கள் ஒப்பந்தப் படி நடக்காததைக் கண்டு வெகுண்டெழுந்த கெப்பிட்டிப்பொல என்ற ஊவா மாகாணத்தை சேர்ந்த பிரபு ஒருவர் கலகம் செய்தார். விரைவிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான கலகம் பிற பகுதிகளுக்கும் பரவியது. கண்டி இராச்சியம் மீண்டும் சுதந்திர நாடாகி விடும் என்ற சூழ்நிலை தோன்றியது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படைகள் கலகத்தை அடக்க முடியாமல் தடுமாறின. இதனால் ஆங்கிலேயர் காலனியான சென்னையில் இருந்து, இந்தியப் படைகளை தருவிக்க வேண்டியதாயிற்று.

இந்தியப்படைகள் கண்ணில் பட்ட பொது மக்களை கொன்று, அவர்களின் சொத்துகளை நாசம் செய்து தான் கலகத்தை அடக்கினார்கள். இந்தியாவை பிராந்திய வல்லரசாக மாற்றும் எண்ணம், அன்றே பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் மனதில் எழுந்திருக்கும். நிகழ்கால பூகோள அரசியலையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. வரலாறு திரும்புகின்றது என்று கூறுவார்கள். நமது கால இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் ஆங்கிலேயத் தாயின் வயிற்றுப் பிள்ளைகளாகவே நடந்து கொள்கின்றனர்.

பனிப்போர் காலத்தில் இந்திய, இலங்கை அரசுகள் சோவியத் சார்பு முகாமுடன் நெருக்கமாகவிருந்தன. எழுபதுகளில் சோவியத் சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய இடது கொள்கை கொண்ட சுதந்திரக் கட்சி அரசுடன் ஒத்துழைத்தது. ஸ்டாலினசம் குறித்த முரண்பாடுகளால் பிரிந்து சென்ற சீனா சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் பாராளுமன்ற பாதையை நாடியது. இதனால் அதிலிருந்து பிரிந்த, ரோகன விஜேவீர தலைமையிலான இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தை ஸ்தாபித்து ஆயுதமேந்திய புரட்சியை நடத்த விரும்பினர்.

இது ஒரு வகையில் இந்தியாவில் நக்சல்பாரி (மார்க்சிய லெனினிய) இயக்கங்களின் தோற்றத்தை ஒத்த வரலாறாக இருந்த போதிலும், ஜேவிபி அதிலிருந்து வேறுபட்டது. ஒரு காலத்தில் ஜேவிபி இலக்கியங்களில் பொல்பொட் புரட்சியாளராக புகழப்பட்டார். பொல்பொட்டின் க்மெர் ரூஜ் அமைப்பும், ஜேவிபியும் ஒரே தலைவிதியை பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ, இரண்டுமே கடும்போக்கு தேசியவாதத்தை கடைப்பிடித்தன. 1971 ம் ஆண்டு கிளர்ச்சியை அடக்குவதற்கு, சோவியத் யூனியனும், சீனாவும் இலங்கை அரசுக்கு உதவிய போதிலும், இந்தியப் படைகள் களத்தில் நின்று போரிட்டன. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதலாவது மனிதப் படுகொலை நடந்த வருடம் அது. பதினையாயிரத்திற்கும் குறையாதோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1977 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த வலதுசாரி யு.என்.பி. அரசு, சிறையில் இருந்த ஜெவிபியினருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தது. 1983 இனக்கலவரத்தின் பின்னர், அதே அரசு மீண்டும் ஜேவிபியை தடை செய்தது. அன்று ஜேவிபி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே இனக்கலவரத்திற்கு காரணம் என்று தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு பேரினவாத அரசு கொடுத்த விளக்கத்தை சிங்கள மக்களோ, அல்லது தமிழ் மக்களோ நம்பவில்லை. இருப்பினும் சிறிலங்கா அரசானது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இடதுசாரிகளுக்கும் எதிரானது என்பது நிரூபிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்டதால் தலைமறைவான ஜேவிபி உறுப்பினர்கள், நீண்ட கால கெரில்லா யுத்தத்திற்கு தயார் படுத்தினார்கள். அரசுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பிக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம், எதிர்பார்த்திருந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது. சிங்கள மக்கள் இந்தியாவின் தலையீட்டை விரும்பாததால், ஜேவிபியின் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் ஈடுபட்டது. யுஎன்பி அரசாங்கத்தின் உள்ளேயும் அதிருப்தி நிலவியது. வருங்கால ஜனாதிபதியாகப் போகும் பிரேமதாச தலைமையில் ஒரு குழு கட்சிக்குள் கிளர்ச்சி செய்தது. முரண்நகையாக, இந்திய எதிர்ப்பாளர்களான ஜேவிபியும், பிரேமதாச அரசும் பிற்காலத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் இரத்தக் களரியை உருவாக்கின.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட சில வாரங்களில், கொழும்பில் மந்திரி சபை கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளை இரண்டு கிரனேட் குண்டுகள் வீசப்பட்டன. பாதுகாப்பு கடமையில் இருந்த ஜேவிபியைச் சேர்ந்த காவலர்களே, அந்த குண்டுவீச்சுக்கு காரணகர்த்தாக்கள். ஜனாதிபதி ஜே.ஆர்.யும், முக்கிய அமைச்சர்களையும் கொலை செய்யும் நோக்குடன் குண்டு வீசப்பட்டாலும், பலர் காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நாடு முழுவதும் உணரப்பட்டன. யாழ் குடாநாட்டில் சாதாரண மக்கள், சிறிலங்கா அரசின் மேல் வெறுப்புக் கொண்டிருந்ததால், மந்திரிசபை குண்டுவெடிப்பை வரவேற்கவே செய்தனர்.

ஜேவிபியின் கிளர்ச்சியில் நேரடியாக பங்களிக்கா விட்டாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் அவர்களுக்கு தமது தார்மீக ஆதரவை தெரிவிக்க தயங்கவில்லை. ஆயினும் இந்தியப் படைகளின் பிரசன்னம் குறித்து தான், ஜேவிபியின் நிலைப்பாடு தமிழ் மக்களிடம் இருந்து முரண்பட்டது. தமிழ் மக்கள், இந்தியப் படைகளை பாதுகாப்பு அரணாகக் கருதினார்கள். பிரச்சினை சுமுகமாக தீர்ந்த பின்னர், படைகள் இந்தியாவுக்கு திரும்பும் என்று நம்பினார்கள். ஜேவிபியும், சிங்கள மக்களில் ஒரு பிரிவினரும், இந்தியப் படைகளை அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவமாக பார்த்தனர். இன்னும் இரண்டு மாதங்களில், புலிகளும் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவிருந்தனர்.

இனப்பிரப்பிரச்சினை தீர வேண்டும், யுத்தம் முடிய வேண்டும் என்று எதிர்பார்த்த சிங்களப் பொது மக்கள், இந்தியப் படைகளின் வருகையை தவறாக கருதவில்லை. ஆளும்கட்சியான வலதுசாரி யுஎன்பி ஆதரவாளர்கள், இடதுசாரி ஜேவிபியுடன் கணக்குத் தீர்க்க இது நல்ல சந்தர்ப்பம் என்று கருதினார்கள். தமது கழுத்துக்கு கிட்டே கத்தி வந்து விட்டதை, ஜேவிபியினரும் உணர்ந்திருந்தனர். அதனால் உடனடியாக இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள். மக்கள் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினார்கள். பகிஷ்கரிப்பினால் தென்னிலங்கையில் இந்திய உற்பத்திப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியடைந்தது. விற்பனையாளர்கள் இந்தியப் பொருட்களை பதுக்கி வைத்தனர், அல்லது வேறு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டதாக கூறி விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பகிஷ்கரிப்பை மீறி விற்ற கடைக்காரர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர், சில நேரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறிலங்கா அரசு நீண்டகாலமாகவே இந்திய மருந்துகளையும், பேரூந்து வண்டிகளையும் இறக்குமதி செய்து வந்தது. அந்த வர்த்தகத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. புடவை வகைகள், இரும்பு, போன்றவற்றை இறக்குமதி செய்யும் நடுத்தர இந்தியத் தமிழ் வணிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதே வேளை, இந்தியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் பொருட்கள் அளவுக்கு அதிகமாகவே வந்து குவிந்து கொண்டிருந்தன. மக்கள் அதுவரை கேள்விப்பட்டிராத பொருட்கள் எல்லாம் சந்தைக்கு வந்தன. வியாபாரிகள் தமிழ்ப் பொது மக்களை மட்டுமல்ல, இந்தியப் படையினரையும் வாடிக்கையாளர்களாக பெற்று விட்ட மகிழ்ச்சியில், அவற்றை இறக்குமதி செய்து விற்றுக் கொண்டிருந்தனர்.

"இந்தியப் படையினர், இந்தியாவில் இருந்து நேராக பலாலி விமானநிலையத்தில் வந்திறங்குவது போல, இந்தியப் பொருட்கள் கொழும்பைத் தவிர்த்து இறக்குமதியாகின்றதோ," என்று மக்கள் பேசிக் கொண்டனர். வட-கிழக்கு மாகாணங்களில் கடமையில் இருந்த இந்தியப் படையினருக்கு, இந்திய ரூபாயிலேயே ஊதியம் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்திய ரூபாய்களை புழக்கத்தில் விட்டனர். இந்திய ரூபாய் எந்தக் கடையிலும், இலகுவாக மாற்றக் கூடியதாக இருந்தது. இதனால் யாழ் குடாநாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. அன்று நடந்த மாற்றங்களை இப்படியும் கூறலாம்.

"ஈழம் ஒரு இந்தியக் காலனியாக மாறிக் கொண்டிருந்தது."


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

Saturday, March 26, 2011

விசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா

அமெரிக்க அரசுக்கு தெரிந்த ஒரு உண்மை, பொது மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றது. லிபியாவில் இடம்பெற்றது மக்கள் எழுச்சி அல்ல. மாறாக கடாபி அரசுக்கு எதிரான அல்கைதாவின் கிளர்ச்சி. ஏற்கனவே தொன்னூறுகளில் இதே கிழக்கு லிபிய பிரதேசத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய- மத அடிப்படைவாத சக்திகளின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. இன்று கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரமும், அதன் சுற்று வட்டாரமும் அல்கைதா விசுவாசிகளைக் கொண்டது. ஈராக்கில் இஸ்லாமிய அரசமைக்கும் நோக்குடன் அனுப்பப்பட்ட லிபிய அல்கைதா உறுப்பினர்கள், இதே கிழக்கு லிபிய பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். அவர்களது பெயர், ஊர், பற்றிய விபரங்கள் ஏற்கனவே அமெரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் உள்ளன. லிபியாவில் அல்கைதா கிளர்ச்சியை பாதுகாப்பதற்காக, நேட்டோ படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பிரான்ஸ் உட்பட சில மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, "இடைக்கால அரசில்" அங்கம் வகிக்கும் அரைவாசிப் பேர் அல்கைதாவுடன் தொடர்புடைவர்கள். இவர்களது பெயர் விபரங்கள் "பாதுகாப்பு காரணங்களுக்காக" இன்னும் அறிவிக்கப் படவில்லை.

அக்டோபர் 2007, ஈராக்கில் சிரிய எல்லையோர நகரமான Sinjar ரில், அமெரிக்க படைகளின் இராணுவ நடவடிக்கையின் போது பல முக்கிய ஆவணங்கள் அகப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த West Point Military Academy அந்த ஆவணங்களை ஆராய்ந்தது. ஈராக்கிற்கு எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்கைதாவினால் திரட்டப்பட்டனர், அவர்களின் ஊர், பெயர் விபரங்கள் அந்த ஆவணத்தில் இருந்துள்ளன.
அதிகமான போராளிகள் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த இடத்தில் லிபியாவைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக டார்ணா நகரைச் சேர்ந்த போராளிகளே அதிகம். பெங்காசிக்கும், தொவ்றுக் நகருக்கும் நடுவில் அமைந்துள்ள டார்ணா வெறும் எண்பதாயிரம் மக்கட்தொகையைக் கொண்டது. அந்த ஊரைச் சேர்ந்த 52 பேரது விபரங்கள் அந்த ஆவணத்தில் காணப்படுகின்றன. இன்று கிளர்ச்சிக் குழுக்களின் "சுதந்திர லிபியாவின் தலைநகரமான" பெங்காசியில் இருந்து 21 போராளிகள் சென்றுள்ளனர். ( West Point Military அகாடமி வெளியிட்ட அறிக்கையின் PDF கோப்பு இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது)

மேற்கத்திய தலையீட்டையும், நேட்டோ படைகளினால் லிபியா விடுதலை விடுதலை செய்யப் படுவதையும் கிளர்ச்சியாளர்கள் எதிர்த்ததில் வியப்பில்லை. கடும்போக்கு இஸ்லாமியவாதிகளான அவர்கள், அமெரிக்கர்களை கொல்வதற்காக ஈராக் சென்றவர்கள். தங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் ஆதரவை இழந்து விடும் அச்சம் காரணமாக மறுத்து விட்டார்கள். இருப்பினும் மக்கள் எழுச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே, எகிப்திய இராணுவ அரசு ஆயுதங்களை அனுப்பி வைத்தது. (
Egypt Said to Arm Libya Rebels, Wall Street Journal, March 17, 2011") கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவுமாறு, ஒபாமா சவூதி அரேபியாவை கேட்டுக் கொண்டார். (“America’s secret plan to arm Libya’s rebels,” Independent, Mach 7, 2011 )

லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக Libyan Islamic Fighting Group (LIFG) என்ற தலைமறைவு அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. 2007 ம் ஆண்டு, ஈராக்கில் அல்கைதா தொடர்பின் பின்னர் அது தனது பெயரை Al Qaeda in the Islamic Maghreb (AQIM) என்று மாற்றிக் கொண்டது.

Libyan rebel commander admits his fighters have al-Qaeda links

Wednesday, March 23, 2011

லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்

"லிபியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்காக நேட்டோ படைகள் ஆக்கிரமிப்பு போருக்கு தயாராகின்றன," என்று காஸ்ட்ரோ உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரி ஆட்சியாளர்கள் ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தனர். அவர்களின் தீர்க்கதரிசனம் தற்போது மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. ஐ.நா. அவையின் சம்மதத்தை பெறாமலே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் விமானக் குண்டு வீச்சுகளையும், ஏவுகணை வீச்சுகளையும் ஆரம்பித்து விட்டன. கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் இருந்த லிபியாவின் சில பகுதிகளை, கடாபிக்கு விசுவாசமான படைகள் மீட்டெடுத்து வந்தன. நாடு முழுவதும், குறிப்பாக எண்ணெய் வளம் நிறைந்த சிரேனிகா பிரதேசம் மீண்டும் கடாபியின் வசம் வந்து விடும் நிலை ஏற்பட்டது. அத்தகைய தருணத்தில் தான் நேட்டோவின் இராணுவத் தலையீடு இடம்பெற்றுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் சில கடாபிக்கு ஆதரவு தெரிவித்தமை கண்டு, நம்மூர் இடதுசாரிகள் கூட அதிருப்தி தெரிவித்தனர். "தனது நாட்டு சொந்தக் குடிமக்களை கொன்று குவிக்கும் சர்வாதிகாரியை எப்படி ஆதரிக்கலாம்?" என்று நீதி கேட்க புறப்பட்டார்கள். தற்போது நேட்டோ படைகளின் குண்டு வீச்சில் லிபிய அப்பாவி பொது மக்கள் மரணமடைவதை கண்டும் காணாது வாளாவிருக்கின்றனர். கடாபியிடம் இருந்து லிபிய மக்களை காப்பாற்ற புறப்பட்ட நேட்டோப் படைகள், அதே மக்களை கொல்வது சரியாகுமா? "ஒரு சர்வாதிகாரியின் இரும்புப் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பொழுது, இத்தகைய மக்கள் இழப்பு தவிர்க்க முடியாது" என்று, இப்போது அதற்கு நியாயம் கற்பிப்பார்கள். இதே நியாயத்தை தான் ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போதும் கூறினார்கள். தம்மை சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிக்க வந்த அமெரிக்க படைகளை அந்த மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்க வேண்டும். மாறாக அந்நிய ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக போராடி மாய்ந்தார்கள். லிபியாவும் இன்னொரு ஈராக்காக, இன்னொரு வியட்நாமாக மாறிக் கொண்டிருக்கிறது.

சதாம் ஹுசைன், கடாபி ஆகியோர் தனது சொந்த மக்களை கொன்று குவித்தார்கள். மக்கள் படுகொலை, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு காரணமாக காட்டப்படுகின்றது. இது பல நூற்றாண்டுகளாக, காலனியாதிக்க காலத்தில் இருந்தே கற்பிக்கப்படும் நியாயம். "இந்தியாவில் வாழும் இந்துக்கள் பெண்களை உயிரோடு எரிக்கும் காட்டுமிராண்டிகள்." "இந்தியப் பெண்களை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன்" தான் பிரித்தானியா இந்தியாவை தனது காலனியாக்கியது. ஐரோப்பாவில் இதனை "வெள்ளை மனிதனின் கடமை" என்று கூறிக் கொள்வார்கள். அதாவது "காட்டுமிராண்டிகளான இந்தியர்கள், அரேபியர், ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் கற்றுக் கொடுப்பது" ஐரோப்பியரின் கடமை ஆகுமாம். காலனிய சுரண்டலை நியாயப் படுத்தும் நியாயப் படுத்தும் கதையாடல்கள், இன்று லிபியா வரை தொடர்கின்றது. இன்று மேற்குலக மக்களை மட்டுமல்ல, அனைத்து உலக மக்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு வசதியாக தொலைத் தொடர்பு ஊடகங்கள் வந்து விட்டன. சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாமே ஏகாதிபத்திய தலையீட்டுக்கு வழி சமைத்துக் கொடுக்கின்றன.

பெப்ரவரி 22 , ஆர்ப்பாட்டம் செய்த லிபிய மக்கள் மீது விமானக் குண்டு வீச்சு நடத்தப் பட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வாசிக்கப்பட்டது. "கடாபி தனது சொந்த மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலன்..." என்று, படித்தவர் முதல் பாமரர் வரை பேசத் தொடங்கி விட்டனர். இத்தகைய பொது மக்களின் அபிப்பிராயம் மட்டுமே, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு தேவைப் பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபை சும்மா ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தால் மட்டுமே போதுமானதாக கருதப் பட்டது. வான் பரப்பில் லிபிய விமானங்கள் பறப்பதை தடை செய்யும் படி தாம் கேட்டதாகவும், அதனையே ஐ.நா. பாதுகாப்புச் சபை வழி மொழிந்ததாகவும் அரபு லீக் தெரிவித்தது. லிபியா மீதான நேட்டோ தாக்குதல் அவர்களும் எதிர்பார்க்காத ஒன்று என்பதையே இது தெளிவாக்குகின்றது. ஏற்கனவே செர்பியா மீதான நேட்டோ தாக்குதல் ஐ.நா. சம்மதமின்றியே நடந்தது. இதன் மூலம், நேட்டோ விரும்பினால் உலகில் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் என்பது புலனாகின்றது. பெப்ரவரி 22, லிபிய விமானங்கள் வான் தாக்குதல் நடத்தியதாக நிரூபிக்கும், செய்மதிப் படங்கள் எதனையும் தான் பார்க்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. நிச்சயமாக ஐ.நா. கூட்டத்திலும் இது விவாதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் ஆதாரம் கேட்கப் போகின்றார்களா? ஊடகங்கள் சொல்வதை உண்மை என்று நம்பும் அப்பாவிகள் இருக்கும் வரை அவர்களுக்கென்ன கவலை?

மேற்குலக அரசுகளும், ஊடகங்களும் ஒரு நாளும் பொய் பேசாத உத்தமர்களா? ஈராக்கில் சதாம் ஹுசைன் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்களை வைத்திருப்பதாக ஒரு பொய்யைக் கூறித் தான், அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்தது. அது ஒரு பொய் என்று, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேர் பின்னர் ஒப்புக் கொண்டார். அமெரிக்கா தமக்கு தவறான தகவல்களை வழங்கியதாக, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தமது மக்களிடம் மன்னிப்புக் கோரின. லிபியா குறித்து ஊடகங்கள் வழங்கிய தவறான தகவல்களை, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்? காலம் பிந்தி வெளிவரும் உண்மை, அதனது முக்கியத்துவத்தை இழந்து விட்டிருக்கும். அந்நேரம் லிபியா அமெரிக்காவின் காலனியாகி விட்டிருக்கும். லிபியாவின் எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்க நிறுவனங்கள் அடி மாட்டு விலைக்கு வாங்கி விட்டிருக்கும்.

அயல் நாடுகளான துனிசியாவிலும், எகிப்திலும் மக்கள் எழுச்சி இடம்பெற்றதனால், லிபியாவையும் அதன் தொடர்ச்சியாக பார்ப்பது தவறு. அந்த நாடுகளில் வீதிக்கு வந்து போராடிய மக்கள், அரச அடக்குமுறையை அஹிம்சா வழியில் எதிர்த்து நின்றனர். இராணுவத்தை பகைப்பதும், திருப்பித் தாக்குவதும் போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக கருதினார்கள். சுடுவதற்கு மட்டுமே பயிற்றப்பட்ட படைகளையும், கனரக ஆயுதங்களையும், கண்டு அஞ்சாது வெறுங்கையுடன் எதிர்த்து நின்றதாலேயே உலக மக்களின் அனுதாபத்தை பெற்றார்கள். லிபியாவிலோ நிலைமை வேறு விதமாக இருந்தது. மக்கள் எழுச்சி ஏற்பட்ட முதல் நாளிலேயே சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. ஆர்ப்பாட்டம் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே, நவீன ஆயுதங்கள் புழக்கத்திற்கு வந்தது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. அவ்வாறான கேள்விகள் எதுவும் உங்கள் மனதில் எழுந்து விடக் கூடாது, என்ற அவசரத்தில் ஊடகங்கள் கதை புனைய ஆரம்பித்தன. லிபிய இராணுவம் முழுவதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டது போன்ற அர்த்தம் தொனிக்கும் செய்திகளைக் கூறின. கடாபி ஆப்பிரிக்க கூலிப்படைகளை அனுப்பி ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கிய கதை பரப்பப் பட்டது. ஆனால் ஓரிரு வாரங்களில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களை, கடாபிக்கு விசுவாசமான படைகள் சண்டையிட்டு மீட்டன. அப்போது அந்த இராணுவம் எங்கிருந்து வந்தது?

லிபியாவின் சகாராப் பாலைவனத்தில் வாழும் துவாரக் நாடோடி மக்களும், சாட் நாட்டின் எல்லையோரமாக வாழும் மக்களும் கறுப்பினத்தவர்கள் தாம். அவர்களும் லிபிய பிரஜைகள் தாம். லிபிய இராணுவத்தில் கறுப்பின வீரர்கள் காணப்படுவது ஒன்றும் புதுமையல்ல. கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட, அல்லது கொல்லப் பட்டதாக தெரிவிக்கபடும் ஆபிரிக்க கூலிப்படையினரின் விபரங்கள் இதுவரை ஊர்ஜிதப் படுத்தப் படவில்லை. அதற்கு மாறாக, லிபியாவில் கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்த ஆபிரிக்கர்கள் பலர் ஆர்ப்பாட்டக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். "லிபிய மக்கள் விடுதலை செய்த" பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப் பட்டனர். எகிப்திலும் துனிசியாவிலும் அடைக்கலம் புகுந்த மக்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிறவெறிப் படுகொலைகள் நடந்துள்ளன. ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட ஆப்பிரிக்க அகதிகளை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைகளில் குண்டுகள் வீசப்பட்டன. சிறைக்குள் இருந்த நூற்றுக் கணக்கான அகதிகள் மரணமடைந்திருக்கலாம் என்று பிரபல இத்தாலி பத்திரிகை ஒன்று தெரிவித்தது. கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள், இனப்படுகொலையாளர்களாக மாறியது எப்படி? சர்வதேச ஊடகங்கள் ஏன் இந்த இனப்படுகொலை பற்றிய செய்திகளை வெளியிடவில்லை?

கடாபி எதிர்ப்பாளர்கள் ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குலக நாடுகளில் அடைக்கலம் கோரியிருந்தனர். அவர்களின் அரசியல் அமைப்பான "லிபிய தேசிய மீட்பு முன்னணி", சி.ஐ.ஏ. இடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொண்டமை ஒன்றும் இரகசியமல்ல. அவர்களது அரசியல் கொள்கை, அல்கைதாவினதைப் போன்று, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கொண்டிருந்தது. சோவியத் காலத்தில் ஆப்கான் முஜாகிதினை ஊட்டி வளர்த்த சி.ஐ.ஏ., கடாபி எதிர்ப்பாளர்களின் கொள்கை என்னவென்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பெங்காசியின் சில பகுதிகளிலும், தொவ்றுக் நகரிலும் அவர்களது ஆதரவாளர்கள் அதிகம் என்பது கடாபி அரசுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்.
"லிபிய புரட்சி" ஆரம்பித்த நாள் கூட குறிப்பிடத் தக்கது. சில வருடங்களுக்கு முன்னர், "முகமது நபி கேலிச்சித்திரம்" தொடர்பாக முஸ்லிம் நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். அப்போது பெங்காசி நகரில் உள்ள இத்தாலி தூதுவராலயத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூதரகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிஸ் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் நினைவு தினத்தன்று தான் இன்றைய கிளர்ச்சி ஆரம்பமானது. துனிசியாவிலும், எகிப்திலும் உணவு விலையேற்றத்தை எதிர்த்து தான் மக்கள் எழுச்சி பெற்றனர். லிபியாவில் அது போன்ற நிலைமை இருக்கவில்லை. ஏற்கனவே லிபிய அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரியை இரத்துச் செய்திருந்தது. மேலும் உணவுப் பொருள் விலையேற்றத்தால் வாழ முடியாமல் கஷ்டப்படும் ஏழைகள் யாரும் லிபியாவில் கிடையாது. அப்படி யாராவது இருந்தால், அவர் ஒரு வெளிநாட்டு கூலித் தொழிலாளியாகவோ, அன்றில் அகதியாகவோ தான் இருப்பார்.

பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் தலைமையகமாக இருப்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. கடாபியால் பதவியிறக்கப்பட்ட மன்னருக்கு விசுவாசமான மக்கள் அந்தப் பிராந்தியத்தில் தான் அதிகம். மேலும் எண்ணெய், எரிவாயு குழாய்கள் வந்து முடியுமிடமும், ஏற்றுமதியாவதும் பெங்காசியில் இருந்து தான். அதனால் பல மேற்கத்திய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் அங்கே தலைமையகத்தைக் கொண்டுள்ளன. நேட்டோ போர் நடவடிக்கைகள் ஆரம்பமாக முன்னரே, சில மேற்கத்திய இராணுவ ஆலோசகர்கள் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் நோக்குடன் சென்றுள்ளனர். ஒரு ஹெலிகாப்டரில் சென்ற நான்கு நெதர்லாந்து போர்வீரர்கள் கடாபிக்கு விசுவாசமான படைகளால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டனர். லிபியாவில் மாட்டிக் கொண்ட தமது நாட்டு பிரஜைகளை மீட்கச் சென்றதாக நெதர்லாந்து அரசு முதலில் கூறியது. ஆயினும் வெளிநாட்டவர்களை திரிபோலி விமான நிலையம் ஊடாக மீட்டெடுத்து செல்லக் கூடிய வசதி இருந்த காலத்தில், லிபியாவுக்குள் இரகசியமாக நுழைய வேண்டிய தேவை என்ன?

லிபியா தொடர்பான முன்னைய பதிவுகள்:
லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!

Monday, March 14, 2011

யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]
(பகுதி - 5)

மந்தமாருதம் வீசும் பிற்பகல் வேளை. நண்பர்களுடன் வயலோரம் பல்சுவைக் கதைகள் பேசிக் கொண்டிருந்த நேரம். மேற்குத் திசையில் இருந்து இரண்டு மிராஜ் விமானங்கள் மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறந்து வந்தன. உருவத்தையும், வேகத்தையும் பார்த்தால், அவை சிறிலங்கா விமானப் படைக்கு சொந்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயமாக வேற்று நாட்டு விமானங்கள் தான். ஏதோ ஒரு வல்லரசு நாடு, இலங்கையை கண்காணிக்கின்றது என நினைத்தோம். சில நிமிடங்களில் விமானத்தில் இருந்து பொதிகள் வீசப்பட்டன. தூரத்தில் என்ன பொதிகள் என்று தெரியவில்லை. குண்டுகளாக இருக்குமோ? அந்நிய படையெடுப்பா? ஆனால் விமானங்கள் மறைந்து அரை மனித்தியாலமானாலும் குண்டு ஏதும் வெடித்த சத்தம் கேட்கவில்லை. நாம் நின்ற இடத்தில் இருந்து பத்து மைல் தூரத்தில், சிறிலங்கா இராணுவம் நிலைகொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் தான், அகோரமான ஷெல் வீச்சுடன் முன்னேறிக் கொண்டிருந்தது. இருப்பினும், நாட்கணக்காக யுத்தம் நடக்கும் அறிகுறியே இல்லை. என்ன நடக்கிறது? திடீர் அமைதிக்கு காரணம் என்ன?

இந்திய, இலங்கை அரசுகளுக்கு நடுவில் திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்ததும், அதனால் வடமராட்சி இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தப் பட்டதும் செய்திகளாக கசிய ஆரம்பித்தன. அப்போதெல்லாம், யாழ்ப்பாண மக்கள் இந்திய அரசின் தூர்தர்ஷன் வானொலியை செவி மடுப்பது வழக்கம். இலங்கை தேசிய வானொலி செய்தியை யாரும் நம்புவதில்லை. செய்தி சேகரிக்கும் "லங்கா புவத்" நிறுவனத்தை, "லங்கா பொறு" (சிங்களத்தில்: லங்கா பொய்) என்று கேலி செய்வது வழக்கம். இலங்கை வானொலி மறைக்கும் செய்திகளை இந்திய வானொலி தெரிவித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில், போராளிக் குழுக்கள் கொடுக்கும் செய்திகளையும் ஒலிபரப்பியது. இன்னும் சில மாதங்களில், இந்த நிலைமை தலைகீழாக மாறப் போகின்றது.

தூர் தர்ஷன் செய்தியின் பிரகாரம், "யாழ் குடாநாடு இராணுவ முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. சிறிலங்கா அரசின் பொருளாதாரத் தடை காரணமாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருந்தனர். நிலைமை மோசமாக இருந்தது." இராணுவ முற்றுகை, பொருளாதாரத் தடை, உணவுத் தட்டுப்பாடு, எதுவும் அன்று மக்களை பட்டினிச் சாவுக்கு தள்ளுமளவு மோசமாக இருக்கவில்லை. ஆனையிறவு ஊடான வணிகப் போக்குவரத்து தடைப்படவில்லை. மின்சாரம் தடையின்றி வந்து கொண்டிருந்தது. வலிகாமம் வடக்கு, வடமராட்சிப் பகுதிகளில் மட்டும் இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத மனிதப் பேரவலம் என்று கூற முடியாது. இந்தியா அவ்வாறான செய்திகள் மூலம் உள்நாட்டு, சர்வதேச அனுதாபத்தை ஈழத்தின் மீது திருப்பியது. அல்லலுறும் ஈழத் தமிழருக்கு உதவுவது, தனது தார்மீகக் கடமை என்று இந்திய அரசு கூறியது.

இந்திய செஞ்சிலுவை சங்கம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கென நிவாரணப் பொருட்களை சேகரித்தது. இராமேஸ்வரத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய படகுகள் இலங்கை கடல் எல்லையை அடைந்தன. இந்திய-இலங்கை கடல் எல்லையில் வைத்து இடைமறித்த சிறிலங்கா கடற்படை, நிவாரணக் கப்பல்களை மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. "இந்தியாவில் அன்றாட உணவுக்கு வழியற்ற ஏழைகளுக்கு கொண்டு சென்று கொடுங்கள்." திமிராக பதிலளித்தார் கடற்படைத் தளபதி. வேறு வழியின்றி, நிவாரணக் கப்பல்கள் இந்தியாவை நோக்கி திரும்பிச் சென்றன. அடுத்த நாள், அதே நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து நான்கு மிராஜ் விமானங்கள் கிளம்பின. இம்முறை யாழ் குடாநாட்டின் மீது விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் வீசுவதை, சிறிலங்கா இராணுவத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்பாராத விதமாக, இலங்கை அரசை அடிபணிய வைக்க, அந்த ஒரு நடவடிக்கையே போதுமானதாக இருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அன்றே வித்திடப்பட்டது.


இந்திய- இலங்கை ஒப்பந்தப் பிரகாரம், வட-கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை இந்திய அமைதிப் படை பொறுப்பேற்றது. பலாலி விமானப் படைத் தளத்தில் இந்திய இராணுவம் வந்திறங்கியது. அவர்கள் யாழ் குடாநாட்டினுள் போக முடியவில்லை. அங்கே ஒரு பிரச்சினை இருந்தது. இராணுவ முகாம்களும், போரில் கைப்பற்றிய சிறிய பிரதேசங்கள், ஆகியனவே சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. குடா நாட்டின் பிற பகுதிகளை விடுதலைப் புலிகள், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அவர்கள் இந்திய இராணுவத்தை வெளியேற அனுமதிக்கவில்லை. இந்தியா சிறிலங்கா அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் போட்டது, தங்களோடு அல்ல என்று வாதாடினார்கள். அதை விட, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட நேரம், தலைவர் பிரபாகரன் இந்தியாவில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்தார். தமது தலைவரை விடுதலை செய்தால் மட்டுமே, இந்தியப் படைகளை அனுமதிப்போம் என்றனர்.

புலிகள் பலாலி முகாமின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்தனர். மினிவான் அனுப்பி ஊர் ஊராக மக்களை திரட்டி அழைத்துச் சென்றனர். அன்றிருந்த முறுகல் நிலை மக்கள் மத்தியில் பதற்றத்தையும் தோற்றுவித்தது. புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் சண்டை மூளுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். இருந்தாலும், புலிகளின் அழைப்பை ஏற்று பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர். பெருமளவு இளம்பெண்களும் சென்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் நடந்த உரையாடல்களில், பலர் இந்திய படையினரை விடுப்புப் பார்க்க வந்திருந்தமை புலனானது. குறிப்பாக இளம் பெண்கள் வட இந்திய படைவீரர்களின் அழகையும், உயரத்தையும் சிலாகித்துப் பேசினார்கள்.

முற்றுகை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்திய அரசு பிரபாகரனை விடுதலை செய்ததும் முற்றுகை விலத்திக் கொள்ளப்பட்டது. இந்திய படையினர் டிரக், ஜீப் வண்டிகளில் சிறிய முகாம்களுக்கும் சென்றனர். இந்திய இராணுவம் தனக்கென முகாம் அமைக்கவில்லை. ஏற்கனவே இருந்த இலங்கை இராணுவ முகாம்களில் அரைவாசி இடத்தை பங்கு போட்டது. பின்வரும் காலங்களில், மிகப்பெரிய பலாலி முகாம் தவிர பிற முகாம்களில் இருந்த சிங்களப் படையினர் வெளியேறினார்கள். சுருங்கக் கூறின், ஒரு காலத்தில் சிறிலங்கா இராணுவ முகாம்களாக இருந்தவை, தற்போது இந்திய இராணுவ முகாம்களாயின. ஈழப்போர் ஆரம்பித்த காலத்தில் சிறிலங்கா படையினர் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு ரோந்து செல்வது போல, இந்தியப் படையினரும் செய்தனர்.

இந்தியப் படைகள் சென்றவிடமெல்லாம், அவர்களைக் காண வீதிகளில் மக்கள் குழுமினார்கள். ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுக்க விரும்பினார்கள். கடைக்காரர்கள் இலவச குளிர்பானம் அருந்தக் கொடுத்தனர். இந்திய அமைதிப் படையில் தமிழர்கள் மிக அருமையாகவே இருந்தனர். ஒரு சில மலையாளிகளும் தெலுங்கர்களும் தமிழ் பேசினார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த படையினரில் ஒரு சில ஆங்கிலம் தெரிந்தவர்களை தவிர, மற்றவர்களுக்கு மொழிப் பிரச்சினை ஒரு தடையாகவிருந்தது. அத்தகைய படைவீரர்களை கொண்ட இந்திய இராணுவம், சிங்கள இராணுவம் போன்று தமிழ் மக்களிடம் அந்நியப் பட்டு நின்றது. இருந்தாலும், இந்திய இராணுவத்தின் வருகையினால், தமிழ் மக்கள் தமக்கு விடிவு காலம் வந்து விட்டதாகவே நம்பினார்கள்.

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறையில் இருந்து காப்பாற்றுவதற்காக, இந்திய இராணுவத்தை அனுப்பி உதவும் என்று பல தமிழர்கள் நம்பினார்கள். பாமரர் முதல் படித்தவர் வரை அந்த நம்பிக்கை காணப்பட்டது. ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதாலும், தென்னிந்தியாவுடனான கலாச்சார தொடர்பாலும், பலர் இந்தியாவை தமது தாயகமாக கருதினார்கள். தென்னிந்தியாவிலும் தமிழர்கள் வாழ்வதாலும், பெரும்பான்மை இந்தியர்கள் இந்துக்கள் என்பதாலும், இந்திய அரசு தம்மை கைவிடாது என்று நம்பினார்கள். அன்று தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவு கட்சிகள், இந்தியா இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர். "அகில உலக தமிழினத் தலைவர்" கருணாநிதி முதல், "தூய தமிழ் தேசியவாதி" நெடுமாறன் ரை அவ்வாறு குரல் கொடுத்தவர்கள் தாம். இது போன்ற காரணங்களால், ஈழத்தமிழ் மக்கள் இந்தியப் படையினரை வரவேற்று மகிழ்ந்ததில் வியப்பில்லை. சில இடங்களில் இந்தியப் படைவீரர்கள் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்.

புலிகள் அமைப்பினரும், இந்தியப் படையினருடன் சினேகபூர்வமாக நடந்து கொண்டனர். இனி சமாதானம் வந்து விட்டது என்பது போல, புலிகளின் தலைவர்கள் பலர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண சடங்குகளில், இந்தியப் படை கொமான்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதற்கு முன்னர், ஆயுதங்களை ஒப்படைக்கும் வைபவம் நடந்தது. இந்தியாவில் இருந்து விடுதலையாகி, இந்திய விமானப்படை ஹெலிகொப்டரில் சுதுமலை வந்த பிரபாகரன் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையைக் கேட்க பெருந்திரளான மக்கள் குழுமியிருந்தனர். அமைதியாக உரையை செவிமடுத்த பார்வையாளர்கள், பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைப்பதாக அறிவித்ததும் கரகோஷம் செய்தனர். அடுத்த சில நாட்களில், புலிகளின் ஆயுதங்கள் வண்டி வண்டியாக கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. புலிகளுக்கு முன்னரே, ஈரோஸ் இயக்கம் தம்மிடம் இருந்த ஆயுதங்களை ஒப்படைத்து விட்டனர். அன்று ஈழத்தில் இயங்காத, இந்தியாவில் இருந்து வந்திருந்த புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற அமைப்புகள், சம்பிரதாயத்திற்காக ஆயுதங்களை ஒப்படைந்திருந்தனர். இந்த நிகழ்வுகளை எல்லாம் தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

அன்றைய சூழ்நிலை ஈழத்தமிழ் மக்கள் மனதில் நிம்மதியை தோற்றுவித்திருந்தது. இனிமேல் யுத்தம் இல்லை, சமாதானமாக வாழலாம் என்று எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள். வட-கிழக்கு மாகாணங்களில் சமாதானம் நிலவிய நேரம், இலங்கையின் பிற பாகங்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. யுத்தம் தெற்கை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. உண்மையில் வடக்கையும், தெற்கையும் ஒருசேர சமாளிக்க முடியாத காரணத்தினாலேயே, சிறிலங்கா அரசு, இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு சம்மதித்தது. அதே நேரம், அரசு வட-கிழக்கு மாகாண நிர்வாகத்தை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதால், தென்னிலங்கையில் இந்தியாவுக்கு எதிரான அலை வீசியது. சிங்கள மக்கள் மத்தியிலும், அரசாங்கத்தின் ஒரு பகுதியிலும் இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்தது. ஒரு நாள், பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்தினுள் கிரேனேட் குண்டு வீசப்பட்டது. அமைச்சர் படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அந்த குண்டு வெடிப்பு சம்பவம், வரப்போகும் போருக்கு கட்டியம் கூறியது.
(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.
தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Saturday, March 12, 2011

எகிப்திய உள்துறை அமைச்சகம் புரட்சியாளரால் தாக்கப்பட்டது

கெய்ரோ நகரில், எகிப்தின் உள்துறை அமைச்சகம் புரட்சிக்காரர்களால் தாக்கப்பட்டது. அங்கிருந்த ஆவணங்கள் யாவும் சூறையாடப்பட்டன. மார்ச் 6 நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது கிடைக்கப் பெற்றது. அதனை இங்கே பார்க்கலாம்.

உள்துறை அமைச்சக Amn al Dowla கட்டிடத்தினுள் திடீரென நுழைந்த புரட்சியாளர்கள் அங்கிருந்த தளபாடங்களையும், ஆவணங்களையும் சேதப்படுத்தினார்கள். பல இரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவை தற்போது அனைவரும் பார்வையிடுவதற்கு வசதியாக இணையத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. அதற்கான முகநூல் சுட்டியை இங்கே தருகிறேன். http://www.facebook.com/AmnDawlaLeaks
எகிப்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களிடையே கலவரங்களை தோற்றுவிக்கும் அரசின் சதி குறித்த ஆவணங்களும் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளன.
http://www.facebook.com/album.php?aid=42263&id=182473961797505


Protesters Storm Egypt Security Offices

Friday, March 11, 2011

குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

ஸ்டாலின் கால Gulag தடுப்பு முகாம்களை ஆய்வு செய்து எழுதிய அமெரிக்க எழுத்தாளர் Anne Applebaum உடன், பெல்ஜிய எழுத்தாளர் Dirk Verhofstadt நடத்திய நேர்காணலின் சுருக்கம். "Gulag. A History" நூலுக்கு புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளர், "குலாக் என்பது வதை முகாம்" என்ற தவறான பிம்பத்தை தகர்த்துள்ளார்.

கேள்வி: சோவியத் ஒன்றியத்தில் தடுப்பு முகாம்கள் எதற்காக உருவாக்கப்பட்டன? அவை வதை முகாம்களா? அன்றில் தொழில் முகாம்களா?
பதில்: இரகசிய அரசு ஆவணங்களின் படி, சோவியத் ஒன்றியத்தின் தொழிற்துறையை துரித கதியில் விருத்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட தொழில் முகாம்கள். ஆனாலும் அந்த முகாம்களில் மனிதர்கள் இறந்துள்ளனர். வட பகுதியிலும் (துருவத்திற்கு அண்மையில்), யுத்த காலத்திலும் முகாமில் வைக்கப் பட்டிருந்த பெருந்தொகை மக்கள் இறந்துள்ளனர். 1942 -1943 க்கும் இடைப்பட்ட காலத்தில் 25 % சிறைக் கைதிகள் மரணமடைந்திருக்கலாம்.

கேள்வி: ஆகவே தடுப்பு முகாம்கள் கைதிகளை சித்திரவதை செய்யும், அல்லது அழிக்கும் நோக்கில் அமைக்கப் படவில்லை. அங்கே யாருமே சித்திரவதைக்குள்ளாவோ, அல்லது கொலை செய்யப் படவோ இல்லையா?
பதில்: ஆமாம், அங்கே பலர் சித்திரவதை, அல்லது கொலை செய்யப்பட்டனர். இருப்பினும் முகாம் பொறுப்பாளர்கள் பொருளாதார நலன்களையே முக்கியமாக கருதினார்கள். முகாம் பொறுப்பாளர்களும், காவலர்களும் கைதிகளை "மக்கள் விரோதிகளாக" கருதினார்கள். அதாவது மக்களை விட தாழ்ந்தவர்கள். ஆனால் அவர்கள் உற்பத்தி சாதனமாக பார்க்கப் பட்டார்கள். யாருமே அவர்களை கொல்லத் துணியவில்லை. எவராவது இறந்தால் வருத்தப் படவுமில்லை.

கேள்வி: எத்தகைய காரணங்களுக்காக குலாக்கில் மனிதர்களை பூட்டி வைத்திருந்தார்கள்?
பதில்: ஸ்டாலின் காலத்தில், அந்நியர்கள், வெளிநாட்டுப் பயணம் செய்தவர்கள், விசித்திரமான நடத்தைகளுக்காக சந்தேகப் பட்டவர்களும் கைது செய்யப்பட்டார்கள். சோவியத் யூனியனின் அனைத்துப் பகுதியை சேர்ந்தவர்களும், எல்லா இனத்தவர்களும் கைதிகளானார்கள். சில நேரம், இராணுவம், கட்சி, போன்ற நிறுவனங்களை சேர்ந்தோரும் கைதானார்கள். எல்லோரும் அரசியல் குற்றங்களுக்காக கைது செய்யப் படவில்லை. சமூக கட்டுப்பாடுகளை மீறியோரும், கூட்டுப் பண்ணையில் திருடியோரும் கூட முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர்.

கேள்வி: மொத்தம் எத்தனை பேர் கைதிகளாக அடைந்து கிடந்தார்கள்?
பதில்: 1929 லிருந்து 1953 வரையில் 18 மில்லியன் மக்கள் குலாக் முகாம்களில் அடைக்கப் பட்டிருந்தனர். அதை விட ஏழு மில்லியன் மக்கள் தொலை தூர பிரதேசங்களுக்கு நாடு கடத்தப் பட்டனர். அவர்கள் முகாம்களில் அடைக்கப்படவில்லை, மாறாக வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். 25 மில்லியன் மக்கள், அதாவது மொத்த சனத்தொகையில் 15 % பலவந்தமாக இடம்பெயர்ந்தோ அல்லது முகாம்களிலோ வாழ்ந்தார்கள்.

கேள்வி: சோவியத் குலாக் முகாம்களை நாஸிகளின் தடுப்பு முகாம்களுடன் ஒப்பிட முடியுமா? இரண்டுக்கும் இடையில் என்ன வேறுபாடு?
பதில்: கைதிகளின் அன்றாட வாழ்க்கை, வேலை, மற்றும் காவலர்களின் நடத்தைகள், தண்டனைகள், பிரச்சாரம் அனைத்திலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. குலாக் முகாம்கள் தசாப்த காலமாக நிர்வகிக்கப் பட்டு வந்துள்ளன. முகாம் வாழ்வு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. சில வருடங்கள் குரூரமாக இருக்கும். சில காலங்கள் வாழ்க்கைத் தரம் ஏற்கக் கூடியதாக இருக்கும். குலாக் முகாம்கள் பலவகையானவை. தங்கச் சுரங்கத்தை அண்டிய முகாமில் வாழ்க்கை நரகமாக இருக்கும். அதே நேரம், மொஸ்கோவில் அறிவுஜீவிகளை அடைத்து வைத்திருந்த முகாம் ஆடம்பரமானதாக இருக்கும். அங்கே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி, செம்படைக்கு ஆயுதம் வடிவமைப்பது.

அதற்கு மாறாக, நாஸிகளின் முகாம்கள் சிறிது காலமே நிலைத்திருந்தது. யுத்தத்தில் நேச நாடுகளின் படைகள் முன்னேறிக் கொண்டு வரவும், நாஸிகள் தோற்பது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது முகாம் கைதிகளை அழித்தொழிக்க விரும்பினார்கள். சோவியத், நாஸி தடுப்பு முகாம்களுக்கு இடையில் முக்கியமான இரண்டு அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. சோவியத் யூனியனில் குற்றம் சாட்டப்பட்ட "மக்கள் விரோதிகள்" என்ற சொற்பதம், பொதுவாக எவரையும் குறிக்கும். இலகுவில் பகுத்தறிய முடியாது. மாறாக, நாஸி ஜெர்மனியில் குற்றம் சாட்டப்பட்ட "யூதர்கள்", எந்த வகையிலும் தம்மை மாற்றிக் கொள்ள வழியற்றவர்கள். நாஸி தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட எந்தவொரு யூதரும் உயிர் பிழைப்பேன் என்று எண்ணவில்லை.

சோவியத் குலாக் முகாம்களில் மரணங்கள் சம்பவித்திருந்தாலும், அங்கிருந்த கைதிகள் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. அல்லது குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த காரணத்திற்காக எவரும் கொலை செய்யப்படவில்லை. பொறியியலாளர் போன்ற அறிவுத் தகமை கொண்டோர் தமது திறமையை வளர்க்க முடிந்தது, அல்லது இலகுவான வேலைகள் வழங்கப்பட்டன. சில முகாம்களில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் சேர்ந்து விட்டால், பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில், செம்படையில் போர்வீரராக விரும்புவோரும் விடுதலை செய்யப்பட்டனர். சில நேரம், குறிப்பிட்ட கைதிகளின் நிலைமை திடீரென மாறலாம். உதாரணத்திற்கு, போலந்து சோவியத்துடன் கூட்டுச் சேர்ந்தவுடன், போலிஷ் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். சில நேரம், முகாம் பொறுப்பாளர்கள், காவலர்கள் கூட கைதிகளாகலாம்.

இரண்டாவது முக்கிய வேறுபாடு, பொருளாதார நலன். சோவியத் குலாக் முகாம்கள் குறிப்பிட்ட இடத்தில் தொழிற்துறை ஆரம்பிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டன. ஆனால், அதற்காக முகாம் கைதிகள் மனிதநேயத்துடன் நடத்தப் பட்டதாக கூற வரவில்லை. காவலர்கள் கைதிகளை கால்நடைகளைப் போல நடத்தினார்கள். அவர்கள் விரும்பினால் உணவு கொடுத்தார்கள், அல்லது நிறுத்தினார்கள்.

கேள்வி: ரஷ்யாவில் இன்றும் குலாக் முகாம்கள் இயங்கி வருகின்றனவா?
பதில்: இல்லை. ஸ்டாலினின் மரணத்திற்குப் பின்னர் குலாக் முகாம்கள் அகற்றப்பட்டன. ஆயினும், நாடு முழுவதும் அரசியல் கைதிகள் வழமையான சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டிருந்தனர். இன்றுள்ள ரஷ்ய சிறைக் கூடங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

(நேர்காணலின் ஒரு பகுதி. http://www.liberales.be இணையத் தளத்தில் பிரசுரமானது.)

Thursday, March 10, 2011

லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!

லிபியாவில் கிளர்ச்சிப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரம். லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியின் இராணுவ ஆயுதக் களஞ்சியம், கிளர்ச்சியாளர்களின் ஆயுத விநியோக மையமாக செயற்பட்டு வந்தது. லிபிய இராணுவத்தை விட்டோடி, கிளர்ச்சிக் குழுவில் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்களை அழைத்து வந்து காட்டுகிறார்கள். ஆயுதக் களஞ்சியம் இருக்கும் முகாமுக்குள் புதிய படையணிகளுக்கு நடக்கும் பயிற்சி எல்லாம் காட்டுகிறார்கள். நுழைவாயிலில் பாதுகாப்புக்காக ஒரு சிறுவன் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறான். வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அதையும் படம் பிடிக்கிறார்கள். அன்றிரவு நடுநிசி, இரண்டு கார்கள் முகாமுக்குள் வருகின்றன. வந்தவர்கள் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம், என்று முகாமில் தங்கியவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். எப்படியும் வேறுபாடு கண்டுபிடிப்பது மிகவும் கடினம். திடீரென பயங்கர வெடியோசை பெங்காசி நகரை உலுக்கியது. குண்டுவெடிப்பில் ஆயுதக் களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியது. முகாமில் தங்கியிருந்த முப்பது வீரர்களும் பலியானார்கள். மீட்புப் பணியாளர்களால் எதையும் மீட்க முடியவில்லை. அங்கே எதுவுமே மிஞ்சவில்லை.

கிளர்ச்சியாளர்கள் போன்று நடித்த கடாபியின் ஆதரவாளர்கள், கிளர்ச்ச்சிப் படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டிருந்தனர். மேற்கத்திய தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னால் கிளர்ச்சிக்குழு தலைவர் கூறுகிறார். "எங்களுக்கு எந்தவொரு அந்நிய உதவியும் தேவையில்லை. லிபிய மக்கள் பார்த்துக் கொள்வார்கள். சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாள், லிபியாவுக்குள் புகுந்த சில பிரிட்டிஷ் படை வீரர்களை, கிளர்ச்சிக் குழு கைது செய்கின்றது. மேற்கத்திய நாடுகளின் தலையீடு, கிளர்ச்சியாளர்கள் சந்தித்த மிகப் பெரிய நெருக்கடி. "லிபியாவில் ஏகாதிபத்திய தலையீடு. கிளர்ச்சியாளர்களுக்கு மேலைத்தேய நாடுகள் ஆயுத, நிதி உதவி வழங்குகின்றன." இவையெல்லாம் நிரூபணமானால், லிபிய மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி விடுவார்கள். யாரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி வெடித்ததோ, அதே கடாபியின் பக்கம் மக்கள் ஆதரவு சாய்ந்து விடும்.

துனிசியா, எகிப்து போன்ற வெற்றியடைந்த புரட்சிகளைக் கண்ட நாடுகளை தனது அருகாமையில் கொண்டுள்ள லிபியாவுக்கு, மக்கள் எழுச்சி சற்று தாமதமாகத் தான் வந்தது. "அவர்களுக்கு (லிபியர்களுக்கு) குறை ஏதும் இல்லை. எங்களைப் பார்த்து பின்பற்றுகிறார்கள்." என்றார்கள் எகிப்திய மக்கள் எழுச்சியில் பங்குபற்றிய ஆர்வலர்கள். ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள், எகிப்தில் கிடைப்பதை விட மூன்று மடங்கு அதிக ஊதியத்திற்கு லிபியாவில் வேலை பார்த்து வந்தார்கள். லிபிய பாடசாலைகளில், பெரும்பாலும் எகிப்திய ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டனர். லிபிய மக்கள் எழுச்சி விரைவில் உள்நாட்டுப் போராக மாறியதில், எகிப்திய தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து நாடு திரும்ப நேரிட்டது. முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், லிபியர்களின் தனிநபர் வருமானம் அதிகம். அவர்கள் பெரும்பாலும் உடல்சார்ந்த உழைப்பில் ஈடுபடுவதில்லை. கட்டுமானப் பணிகளில், துப்பரவுப் பணிகளில் எந்தவொரு லிபியப் பிரஜையும் வேலை செய்ய விரும்புவதில்லை. அத்தகைய அசுத்தமான, கடினமான பணிகளை செய்வதற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்படுகின்றனர். சுருக்கமாக சொன்னால், துபாய் போன்ற வளைகுடா அரபு நாடுகளின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.

கடாபி, நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அதிக இரத்தம் சிந்தாத சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார். அன்றிருந்த மன்னர் மீது அரச படையினர் மத்தியிலேயே அதிருப்தி நிலவியதால், கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை எதிர்க்க ஆளிருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றிய கடாபி, நாட்டின் முக்கிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் எண்ணெய் உற்பத்தியை தேசிய மயப்படுத்தினார். எண்ணெய் விற்று கிடைத்த பணத்தை மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவளித்தார். அப்போது இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட லிபியா, இலாபப் பணத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் சிரமமேதும் இருக்கவில்லை. இதனால் நாடு துரித கதியில் அபிவிருத்தியடைந்தது. கடாபியின் புரட்சிக்கு முன்னர், பெரும்பான்மை லிபியர்கள் வறுமையில் வாடினார்கள். பாலைவன ஓரங்களில் கூடாரங்களில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். பொருளாதார அபிவிருத்தி காரணமாக, இன்று எந்தவொரு லிபியரும் பாலைவனக் கூடாரத்தில் வாழ்வதில்லை, கடாபியைத் தவிர. தலைநகர் திரிபோலியில் கடாபியின் மாளிகை இருந்தாலும், தான் இன்றும் மரபு வழி கூடாரத்தில் வாழ்வதாகக் காட்டுவது கடாபியின் வெகுஜன அரசியல். வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் பொழுதும், அந்தக் கூடாரத்தை தன்னோடு எடுத்துச் செல்வார். எந்த நாட்டிலும், ஹோட்டலில் தங்காமல் கூடாரத்தில் தங்கும் ஒரேயொரு தேசத் தலைவர் அவராகத் தான் இருப்பார்.

கால்நடைகளை மேய்க்கும் ஏழைக் குடும்பமொன்றில் பிறந்த கடாபி, அதிகாரம் கையில் வந்தவுடன் குடும்ப அரசியலில் ஈடுபட்டு செல்வம் சேர்த்தமை, லிபிய மக்களின் எதிர்ப்புணர்வுக்கு முக்கிய காரணம். கடாபியின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது "கடாபா" கோத்திரமும் அரசியல்- பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பிற அரேபியர்கள் போல, லிபிய அரேபியரும் பல கோத்திரங்களாக அல்லது இனக்குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை சேர்ந்தவர் அரசில் பதவி வகித்தால், "நமது ஆட்கள்" சிலருக்கு வேலை எடுத்துக் கொடுப்பது அந்த சமூகத்தில் சர்வ சாதாரணம். கடாபி லிபியாவின் சர்வ அதிகாரம் பெற்ற அதிபரானதும், அவரது கடாபா கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கே அரசுப் பதவிகள் கிடைத்தன. இதனால் பிற கோத்திரங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், கசப்புணர்வும் பொறாமையும் காணப்பட்டது. "லோக்கர்பீ" நீதிமன்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை ஒப்படைக்கும் விஷயத்தில், இந்த முறுகல் நிலை வெளிப்பட்டது. அந்த சந்தேக நபர் வேறொரு கோத்திரத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடாபி அவரை ஒப்படைக்க முன்வந்தார் என்று பேசிக் கொண்டனர். இதை விட, கடாபியின் பிள்ளைகளின் திருவிளையாடல்கள் உலகப் பிரசித்தம். அதிகார மமதையும், பணத்திமிரும் உள்நாட்டு மக்களை முகம் சுழிக்க வைத்தன. பிரான்சில் மதுபோதையில் காரோட்டிய மகன், சுவிட்சர்லாந்தில் நட்சத்திர விடுதியில் கைகலப்பில் ஈடுபட்டு கம்பி எண்ணிய மகன். தனது தறுதலைப் பிள்ளைகளின் நடத்தையை கண்டிக்காத தகப்பனான கடாபி, பதிலுக்கு இராஜதந்திர சர்ச்சைகளை கிளப்பி விட்டார்.

கடந்த காலங்களில் லிபியா, எந்த வித உள்நாட்டுக் குழப்பமும் இல்லாதவாறு அமைதியாகக் காட்சியளித்தது. அதாவது, அங்கே நடந்த சம்பவங்கள் எதுவும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. கடாபியின் அதிகாரத்தை எதிர்ப்போர் அன்றும் கிழக்கு லிபியாவில் தான் தோன்றினார்கள். பண்டைய ரோமர்களின் மாகாணமான சிரேனிகா பகுதியில் இருந்து தான், காலனியாதிக்க எதிர்ப்புப் போர் ஆரம்பமாகியது. பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஒமார் முக்தார் தலைமையில், இத்தாலியருக்கு எதிராக வீரஞ் செறிந்த விடுதலைப் போர் நடந்தது. போராட்டம் தோல்வியடைந்த போதிலும், அவர்கள் ஸ்தாபித்த மதப்பிரிவு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. முன்னாள் போராளிகளும், ஆதரவாளர்களும், அவர்களின் குடும்பங்களும் "சானுசி" என்ற மத அமைப்பாக, தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டனர். இன்றைய அரசியல் புரிதலின் பிரகாரம் "இஸ்லாமிய கடும்போக்காளர்கள்" அல்லது "மத அடிப்படைவாதிகள்" என்று அழைக்கலாம். இருப்பினும் அன்று காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒமார் முக்தார் போன்ற பல தேசிய நாயகர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்களாக இருந்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரிட்டிஷாரால் முடி சூட்டப்பட்ட இடிரிஸ், சானுசி சமூகத்தை சேர்ந்தவர். இதனால் அவரது ஆட்சிக் காலம் முழுவதும், சானுசி சமூகத்தை சேர்ந்தோரின் ஆதரவு கிடைத்து வந்தது. குறிப்பாக கிழக்கு லிபிய பிரதேசம், இடிரிஸ் ஆதரவுத் தளமாக இருந்தது. 2011, பெப்ரவரி, கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டக் காரர்கள், மன்னர் இடிரிசின் உருவப்படத்தையும், அவரது கொடியையும் தாங்கியிருந்தனர். பெங்காசி போன்ற, கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் சிவப்பு, கருப்பு, பச்சை வர்ணங்களில் பிறைச்சந்திரன் பதித்த கொடி பறக்க விடப்பட்டது. மன்னராட்சியைக் கவிழ்த்த கடாபியின் சதிப்புரட்சி வரை, அதுவே லிபியாவின் தேசியக் கொடியாக இருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னரே, சானுசி மதப்பிரிவை சேர்ந்த போராளிகள் பலர், ஆப்கானிஸ்தானில் அல்கைதாவுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். நாடு திரும்பிய போராளிகள், லிபியாவிலும் ஒரு ஆயுதக் குழுவை ஸ்தாபித்து சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர். லிபிய அரசின் இரும்புப் பிடி, தீவிரவாத நடவடிக்கைகளை தொடர விடவில்லை. இன்று வரை பலர் அறியாத செய்தி என்னவெனில், முதன்முதலாக இன்டர்போல் மூலமாக பின்லாடனை குற்றவாளியாக அறிவித்து பிடியாணை பிறப்பித்தது அமெரிக்காவல்ல! மாறாக லிபியா!! 2001, அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர்க் காலத்தில், கடாபி இதனைக் குறிப்பிட்டு பல தடவை பேசியுள்ளார். ஆனால் அது சர்வதேச கவனத்தை பெறவில்லை.

கடாபி ஒருகாலத்தில் அரபு சர்வதேசியத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக இருந்தார். சோஷலிசம் பேசினார். இருந்தாலும் இஸ்லாமிய மதத்திலும் பற்றுறுதியுடன் இருந்தார். கடாபி மார்க்சியம் கலந்த புதுமையான இஸ்லாம் ஒன்றை போதித்தார். சானுசி மதப்பிரிவினர் தூய்மைவாதிகள் அல்லது கடும்போக்காளர்கள். அதற்கு மாறாக கடாபி ஒரு தாராளவாதி. கடாபியின் ஷரியா சட்டமும் பல திருத்தங்களைக் கொண்ட, மென்மையான தண்டனைகளைக் கொண்டிருந்தது. அரபு நாடுகளில் லிபியாவில் தான் பெண்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டது. குறிப்பாக சொத்துரிமைச் சட்டத்தில், ஆணுக்கே அதிக உரிமை வழங்கும் சட்டமே அரபு நாடுகள் எங்கும் அமுலில் உள்ளது. லிபியாவில் பெண்களும் சொத்தில் உரிமை கொண்டாடலாம். கடாபியின் காலத்தில் தான், பெண்கள் அதிகளவில் உயர் கல்வி கற்றனர். அரசிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளை அலங்கரித்தனர். கடாபியின் மகளிர் மெய்க்காவலர் படையணி, சர்வதேச மட்டத்தில் பலர் கவனத்தை ஈர்த்தது. நிச்சயமாக, இஸ்லாமிய கடும்போக்காளர்கள் அத்தகைய மாற்றங்களை விரும்பவில்லை. தாலிபான்களைப் போல பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகளுக்கு, கடாபியின் செயல்கள் எரிச்சலூட்டின. அந்த எதிர்ப்புகளை கணக்கெடுக்காத கடாபி, தனது "தாராளவாத இஸ்லாமிய மார்க்கம்" சிறந்தது என்று லிபியாவுக்கு வெளியேயும் பிரச்சாரம் செய்தார்.

நீண்ட காலமாக உலகின் மிகத் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக காட்டிக் கொண்ட கடாபியை, அமெரிக்கா அடக்க விரும்பியதில் வியப்பில்லை. 1986 ம் ஆண்டு, திரிபோலி நகரின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள், கடாபியின் மாளிகையை இலக்கு வைத்து குண்டுவீசின. விமானத் தாக்குதலில் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும், அயலில் குடியிருந்த பொது மக்கள் பல கொல்லப்பட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் பங்காளிகள் என்ற அடிப்படையில், இஸ்லாமியரல்லாத தேசியவாத, இடதுசாரி இயக்கங்களுக்கும் ஆதரவு வழங்கினார். அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ., ஜெர்மனியின் செம்படை போன்ற ஆயுதபாணி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு லிபியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.

லோக்கர்பீ விமானக் குண்டு தாக்குதலில் கடாபியை வேண்டுமென்றே சம்பந்தப் படுத்திய சர்வதேச சமூகம், ஐ.நா. பொருளாதாரத் தடையை கொண்டு வந்தது. (அந்தத் தாக்குதலில் லிபியாவுக்கு தொடர்பில்லை என்பதும், ஈரானின் பங்களிப்பும் அன்று வேண்டுமென்றே மறைக்கப் பட்டன.) 1993 லிருந்து 2003 வரையிலான பொருளாதாரத் தடை லிபியாவை மோசமாகப் பாதித்தது. சர்வதேச விமானப் பறப்புகள் துண்டிக்கப்பட்டன. எண்ணெய் அகழும் தொழிலகங்களில், பழுதடைந்த உபகரணங்களை திருத்த முடியாமல், உற்பத்தி குறைந்தது. இருப்பினும், லிபியா ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தது என்பதால், கடத்தல் வியாபாரிகள் உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதில் தடை இருக்கவில்லை. 2003 ல் பொருளாதாரத் தடை விலத்திக் கொள்ளப்பட்ட பிறகு, கடாபி முற்றிலும் மாறியிருந்தார். சோஷலிச, அல்லது தேசியவாத பொருளாதாரத்தைக் கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்திற்கு தாராளமான சுதந்திரம் வழங்கினார். கடாபியின் குடும்பத்தினரும், கடாபா இனக்குழுவை சேர்ந்த முதலாளிகளும் செல்வம் திரட்டியது இந்தச் சந்தர்ப்பத்தில் தான். கடாபியின் குடும்ப நிறுவனம், இத்தாலியில் இரண்டு உதைபந்தாட்டக் கழகங்களை வாங்கியது

லிபியாவை காலனிப் படுத்திய நாடான இத்தாலி, பிரதான வர்த்தகக் கூட்டாளியாகும். லிபியாவின் எண்ணெய் வயல்களிலும், பிற துறைகளிலும் இத்தாலியின் முதலீடுகள் அதிகம். நெதர்லாந்தின் ஷெல் நிறுவனமும் எண்ணெய் உற்பத்தியில் குத்தகைகளை பெற்றிருந்தது. இருப்பினும் அமெரிக்க நிறுவனங்களின் வரவு மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது லிபியா பிரச்சினையில் அமெரிக்கா மிகத் தீவிரமான அக்கறை செலுத்துவது ஒன்றும் தற்செயலல்ல. சதாம் ஹுசைன் கால ஈராக்கிலும், ரஷ்யர்களும், சீனர்களும், எண்ணெய் உற்பத்தியை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அமெரிக்கா படையெடுத்தது. அதற்குப் பிறகு ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி முழுவதையும் அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டன. தற்போது லிபியாவிலும் அது போன்ற நிலைமை காணப்படுகின்றது.

கடாபிக்கு ஆதரவான லிபியப் படைகள் முன்னேறிச் சென்று, கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு, சவூதி அரேபியாவை அமெரிக்கா கேட்டுள்ளது. லிபியா முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்திருந்தால், அவர்களுடன் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கலாம். கிளர்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும், "லிபியா தேசிய மீட்பு முன்னணி" புகலிடத்தில் இயங்கிய பொழுது, சி.ஐ.ஏ. தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, லிபியா முழுவதும் கடாபியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். லிபிய வான் பரப்பை நேட்டோ படைகள் கட்டுப் படுத்துதல், பொருளாதாரத் தடை என்பன, ஐ.நா. பெயரில் கொண்டு வரப்படும்.

ஊடகங்கள் பல தடவை செய்தி அறிவிப்பதை விட பிரச்சாரம் செய்வதற்கே பெரிதும் உதவுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே லிபிய மக்கள் அனைவரும் கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விட்டதாகவே காட்டிக் கொண்டிருந்தனர். இராணுவத்தை விட்டோடியவர்களை சுட்டிக் காட்டி, லிபிய இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்த மறுக்கிறது என்றும் கூறிக் கொண்டிருந்தன. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்கள் எல்லோரும் பிற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கறுப்பினக் கூலிப் படைகள் என்று செய்தி வாசித்தன. கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் மக்களும் அவ்வாறான தகவல்களை தெரிவித்தனர். ஆனால் அங்கே நிலவும் நிறவெறிப் பாகுபாட்டை ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்தன. லிபியாவின் தென் பகுதியில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர். அவர்களும் லிபியப் பிரஜைகள் தான். அதே நேரம் லிபியாவில் லட்சக் கணக்கான ஆப்பிரிக்க குடியேறிகள், அகதிகள் வசித்து வருகின்றனர். லிபிய நிறவெறியர்கள் அவர்களை தாக்குவது, அங்கே அடிக்கடி நடக்கும் நிகழ்வு. ஒரு தடவை, லிபிய காடையர்கள் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கர்களை இனப்படுகொலை செய்யுமளவிற்கு, அங்கே நிறவெறி உச்சத்தில் இருந்துள்ளது. இன்றும் கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்த பகுதிகளில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்டனர். அனைத்து வெளிநாட்டவர்களும் மோசமான விளைவுகளை எதிர்பார்த்து வெளியேறி விட்டனர்.

Sunday, March 06, 2011

சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]
(பகுதி - 4)

-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
அகதிகளிலும் "ஏழை அகதிகள், பணக்கார அகதிகள்" என்று இரண்டு வகை உண்டு. ஒருவர் ஈழத்தில் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது, இந்திய அகதி வாழ்க்கையிலும் தீர்மானிக்கப்படுகின்றது. ஈழத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அகதிகள், இந்தியாவில் அகதி முகாம்களிலேயே வருடக்கணக்காக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு மாறாக, மத்திய தர வர்க்க அகதிகள், கூடிய சீக்கிரத்தில் அகதி முகாமை விட்டு வெளியேறவே விரும்புவார்கள். அவர்கள் தங்களை இந்தியாவில் அகதியாக பதிந்து கொள்வார்கள், ஆனால் முகாமில் வாழ மாட்டார்கள். சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் சென்று வாடகை வீடு எடுத்து வாழ்வார்கள். பராமரிக்க வேண்டிய அகதிகளின் தொகை குறைகின்றது, என்ற சந்தோஷத்தில் மாநில அரசும் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

பெரு நகரங்களில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்வதற்கு மாதாந்த வருமானம் வேண்டும். பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் அந்த செலவை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த மேட்டுக்குடி மக்கள் மட்டும் அகதியாக பதியாமல், நேரடியாக இந்தியாவில் குடியேறினார்கள். ஏற்கனவே அவர்களது செலவை ஈடுகட்டும் பணத்தை கையிருப்பில் வைத்திருப்பார்கள். ஈழப்போர் காலகட்டத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் வாழும் மேட்டுக்குடி தமிழர் குறித்து இங்கே பேசத் தேவையில்லை. வெளிநாட்டுச் செலவில் வாழ்பவர்கள் எல்லோரும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழை விவசாயிக்கும் நிலம் சொந்தமாக இருக்கும். செறிவான மக்கட்தொகை கொண்ட யாழ்ப்பணத்தில் ஒரு பரப்பு காணியின் விலை பிற மாகாணங்களை விட அதிகம். இதனால் காணி விற்று அனுப்பிய பிள்ளை, வெளிநாடு சென்று உழைத்து அனுப்பினால், அந்தக் குடும்பம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டது. சில வருடங்களில், புதுப் பணக்கார மிடுக்கு அவர்களிடம் மத்தியதர வர்க்க மனோபாவத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

சென்னை மாநகரின் பகுதியான அண்ணா நகர், அப்போது தான் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஈழத்தமிழரின் "குடியேற்றம்" இடம்பெற்ற அண்ணா நகர் பகுதியில் வாடகைக்கு வீடெடுப்பது கடினமாகவிருந்தது. வீட்டு வாடகை உயர்ந்து கொண்டே சென்றமை, இலங்கை- இந்தியத் தமிழ் முரண்பாட்டை விதைத்தது. பேராசை கொண்ட வீட்டு உரிமையாளரும், வெளிநாட்டுப் பணத்தை தண்ணீராக செலவழித்த ஈழத் தமிழரும் சமூக முரண்பாடுகளை கணக்கில் எடுக்கவில்லை. இதே போன்ற நிலைமை இதே காலகட்டத்தில் கொழும்பில் தோன்றியது. வட மாகாணத் தமிழர்கள், போர்ச் சூழலில் இருந்து தப்புவதற்காக, போர் நடக்காத கொழும்பில் சென்று பாதுகாப்பாக வாழ விரும்பினார்கள். இந்தியாவில் இருந்து போவதை விட, கொழும்பில் இருந்து வெளிநாடு செல்வது இலகுவாக இருந்தது. வெளிநாடு போகா விட்டாலும், வெளிநாட்டில் இருந்து உறவினர் அனுப்பும் பணத்தில் கொழும்பில் வசதியாக வாழ விரும்பினார்கள்.

தமிழர்கள் கொட்டும் வெளிநாட்டுப் பணத்துக்கு பேராசை கொண்ட சிங்கள வீட்டு உரிமையாளர்களும், வீட்டு வாடகையை உயர்த்திக் கொண்டே சென்றனர். இதனால் கொழும்பு வாழ் சிங்கள, தமிழ் மக்களுடன் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கொழும்பு நகரில் யாழ்ப்பாணத் தமிழரின் தொகை பெருகிக் கொண்டிருந்தது. கொழும்பில் வாழ்வதற்கும், சென்னையில் வாழ்வதற்கும் இடையில் வேறுபாடு இருந்தது. யுத்தம் கொழும்பை நோக்கி புலம்பெயர்ந்தது. குண்டுவெடிப்புகள், அதையொட்டிய கைதுகள், நெருக்கடிகள் போன்றன அங்கேயும் பாதுகாப்பற்ற சூழலை தோற்றுவித்தது. சென்னையிலோ, திருச்சியிலோ அந்தப் பிரச்சினை இருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை மட்டும் அவர்களின் சீரான வாழ்க்கையில் நெருக்கடியைக் கொண்டு வந்தது.

சென்னையில் சில நண்பர்கள் வசித்ததால், அவர்களின் தொடர்பு கிடைத்து நானும் சென்னை நோக்கிப் புறப்பட்டேன். அப்போதெல்லாம் தனியார் நடத்தும் விரைவு பேரூந்து சேவைகள் கிடையாது. போக்குவரத்து சபை முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. நகரங்களுக்கு இடையில் "திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்" சேவையில் ஈடுபட்டிருந்தது. நானும், அகதி முகாமில் சந்தித்த நண்பருமாக சென்னை நோக்கி பஸ் பயணம் மேற்கொண்டோம். சென்னை நகரின் பிரமாண்டம் வியக்க வைத்தது. அதே நேரம், இந்தளவு நெருக்கமான குடிசனப் பரம்பலை இலங்கையில் எங்கேயும் காணவில்லை.

ஒவ்வொரு வீடும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. கூரைக்கு பதிலாக மொட்டை மாடி வைத்துக் கட்டியிருந்தார்கள். பிறகொரு தருணத்தில், அப்படியான வீடுகளை வெப்ப வலைய நாடுகளில் எல்லாம் காண முடிந்தது. நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில், கோடை காலமென்பதால் எல்லோரும் மொட்டை மாடியில் தான் படுப்போம். அந்தக் காலத்தில் காற்றாடி பாவிப்பது ஆடம்பரமானது. இலங்கையில் சில வசதியானவர்களைத் தவிர மற்றவர்கள் மின்சாரக் காற்றாடி பாவிக்கவில்லை. (என்பதுகளுக்கு பிறகு தான் எமது ஊருக்கு மின்சாரம் வந்தது.) ஆனாலும், கோடை காலத்து வெம்மையை தாங்கிக் கொள்ள முடிந்தது. சென்னையில் கோடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கொள்வது சித்திரவதை அனுபவிப்பதற்கு சமமானது. ஆகவே மொட்டை மாடியின் மகிமையை, சென்னை சென்று ஒரு சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன்.

நான் தங்கியிருந்த வீட்டில் வசித்த எல்லோரும் 25 வயதுக்கு மேற்படாத வாலிபர்கள். அனைவரது நோக்கமும் வெளிநாடு போவதாகவே இருந்தது. தாங்கள் எத்தனை மாதங்களாக காத்திருக்கிறோம், என்பதை ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்தும் போதே கூறிக் கொண்டனர். புதிதாக சென்ற என்னை, "தங்களோடு சேர்ந்து வருந்த வந்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்," போல சேர்த்துக் கொண்டார்கள். அங்கேயிருந்த சிலர் வெளிநாட்டுப் பயணத்திற்கான முயற்சியில் தோல்வியடைந்தவர்கள். சிலர் பணம் போதாமையால் இன்னும் விமான நிலையத்தை தரிசிக்காதவர்கள். இந்திய கடவுச்சீட்டில் படம் மாற்றி, டெல்லி விமான நிலையம் சென்று பிடிபட்டு திரும்பி வந்தவர்கள். நடுங்கும் இமாலயக் குளிரில் நேபாளம் வரை சென்று திரும்பியர்கள். இவ்வாறு பல சோகக் ககதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வெளிநாடு அனுப்பி வைக்கும் முகவர் ஒருவர் மட்டும், இருந்திட்டு எப்போதாவது வந்து எட்டிப் பார்த்து விட்டுச் செல்வார். தனது "வாடிக்கையாளர்களுக்கு" செலவுக்கு பணம் கொடுத்து விட்டுச் செல்வார். வீட்டு உரிமையாளரின் குடும்பம் கீழ் வீட்டில் வசித்து வந்தது. இவர்களைத் தவிர வேறு வெளியுலகத் தொடர்புகள் இல்லை. கொஞ்சம் பணம் இருந்தால், சினிமா பார்த்து விட்டு வருவதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இருக்கவில்லை. ஒரு புதுப்படம், தமிழகத்தில் ரிலீசாகி மாதக் கணக்கான பின்னர் தான் யாழ்ப்பாண திரையரங்குகளில் வெளியிடுவார்கள். அதனால் சென்னையில் புதுப்படத்தை உடனுக்குடன் பார்க்கும் வசதி, ரசிகர்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

ஒரு வகையில் நாம் தங்கியிருந்த வீடு இன்னொரு வகை "அகதி முகாம்." இது போன்ற பல உத்தியோகபூர்வமற்ற முகாம்கள் சென்னை நகர வீடுகள் பலவற்றில் இருந்தன. பொதுவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்களால் குறைந்த விலைக்கு வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தன. இந்த வீடுகளில் பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட இளைஞர்கள் வசித்தனர். எல்லோருடைய நோக்கமும் மேற்கு ஐரோப்பா, அல்லது கனடா போவதாக இருந்தது. நான் சந்தித்த சில இளைஞர்கள் ஈழ விடுதலை இயக்கங்களில் செயற்பட்டு, பின்னர் விட்டு விட்டு வந்திருந்தார்கள். ஈழத்திலும், தமிழகத்திலும் அந்த இயக்கங்கள் ஒன்றையொன்று பகைவர்களாக கருதிக் கொண்டிருந்த நேரம். ஆனால் இந்த முன்னாள் போராளிகள் மட்டும் நட்புடன் பழகினார்கள்.

ஒரு சில நேரம், அரசியல் பேச்சுகள் தர்க்கத்தில் முடிந்தாலும், அவர்களது நட்பு முறியவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், அரசியல் வாழ்வு அஸ்தமித்து விட்டது. இனிமேல் வெளிநாடு சென்று சம்பாதித்து சொந்தக் குடும்பத்தை பார்த்தால் போதும் என்று நினைத்தார்கள். முன்னர் இயக்க உறுப்பினர்களாக பொது வாழ்வில் இருந்த காலங்களில் குடும்ப உறவை துண்டித்திருந்தார்கள். தற்போது மீண்டும் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டார்கள். பெற்றோரும் "காணாமல் போன ஆட்டுக்குட்டி திரும்பி வந்த குதூகலத்தில்" திளைத்தார்கள். "ஈழத்திற்காக வேறு யாராவது போராடட்டும். தனது பிள்ளை வெளிநாடு சென்று நலவாழ்வு வாழ வேண்டும்," என்று நினைத்தார்கள். அதனால் எத்தனை லட்சம் கொடுத்தேனும் வெளிநாடு அனுப்பி விடத் துடித்தார்கள்.

முன்னாள் இயக்க உறுப்பினர்களின் மூலம், தமிழகத்தில் ஈழ அரசியல் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமான ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் இந்தியாவில், சென்னையில் தலைமை அலுவலகங்களை வைத்திருந்தன. ஈழத்தில் இயக்க நடவடிக்கைகள் யாவும் அங்கிருந்த படி நெறிப்படுத்தப் பட்டன. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கியதாக நம்பினார்கள். "இந்தியா இராணுவத்தை அனுப்பி தமிழீழம் எடுத்து தங்கள் கையில் தந்து விட்டுப் போகும்," என்று விடுதலை இயக்கப் போராளிகள் கூட அப்போதும் நம்பிக் கொண்டிருந்தனர். 1983 இனக்கலவரத்திற்குப் பின்னர், தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு அலை வீசிக் கொண்டிருந்தது.

அன்று முதலமைச்சராக இருந்த MGR உம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும், யார் அதிகம் ஆதரவளிப்பது என்பதில் போட்டி நிலவியது. MGR புலிகள் அமைப்பிற்கு நெருக்கமானவராக இருந்தார். வேண்டிய நேரமெல்லாம் பணமும், அரச உதவிகளையும் வழங்கி வந்தார். கருணாநிதி பிற கட்சிகளை சேர்த்துக் கொண்டு TESO (தமிழீழ பாதுகாப்பு அமைப்பு) என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் நிதி வழங்கினார். அன்று புலிகள் மட்டும் அந்த உதவியைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு முன்னர் இந்திய மத்திய அரசின் நேரடித் தொடர்பில் இருந்த டெலோ இயக்கத்திற்கு கருணாநிதி ஆதரவளித்து வந்தார். MGR ஆயினும், கருணாநிதி ஆயினும், இந்திய மத்திய அரசின் அனுமதி இன்றி அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியாது, என்று முன்னாள் போராளிகள் தெரிவித்தனர். இந்தியா வேண்டிய நேரத்தில் தலையிட்டு, யார் எஜமான் என்பதை நிரூபிக்கும், என்றும் கூறினார்கள். அதனை மெய்ப்பிப்பது போல சில சம்பவங்கள் நடந்தன.

இந்தியாவின் அனுசரணையின் பேரில், பூட்டானில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சேர்த்து, ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் கூட்டாக தமது தீர்வுகளை முன்வைத்திருந்தன. அதற்குப் பின்னர், புலிகள், டெலோ, ஈபிஆர்எல்ப், ஈரோஸ் போன்ற நான்கு இயக்கங்கள் தமக்குள்ள ஐக்கியம் கண்டன. "ஈழ தேசிய விடுதலை முன்னணி" என்ற பெயரின் கீழ் கூட்டாக அறிக்கை விட்டன. இந்தியா, ஈழ விடுதலை இயக்கங்களிடையே அத்தகைய ஐக்கியத்தை எதிர்பார்க்கவில்லை. திடீர் நடவடிக்கையாக டெலோ அமைப்பின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், ஆகியோரை நாடு கடத்தியது.

அதை விட, இன்னொரு சம்பவம் ஈழ விடுதலை அமைப்புகளின் சுதந்திரம் எந்தளவு மட்டுப்படுத்தப் பட்டது என்பதை நிரூபித்தது. ஒரு நாள் சொல்லி வைத்தாற் போல, அனைத்து இயக்கங்களினதும் தலைமை அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. திடீரென புகுந்த போலிசும், புலனாய்வுத்துறை அதிகாரிகளும், அங்கிருந்த ஆயுதங்கள், ஆவணங்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றனர். போலீசார் எவ்வாறு மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடினார்கள், என்று இயக்க அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய ஒரு நண்பர் தெரிவித்தார். சிறிலங்கா போலிஸ் மட்டுமே அத்தகைய அடக்குமுறையில் ஈடுபடும் என்று நம்பிக் கொண்டிருந்த நண்பருக்கு, அந்தச் சம்பவம் மீள முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது. திடீர் சோதனை நடவடிக்கைக்கு, இந்திய அரசு உத்தியோகபூர்வ விளக்கம் கொடுத்ததாக நினைவில்லை.

சிறிது காலம் யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் முன்னேறுவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை. வடமராட்சியை கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், படை நகர்வில் தேக்க நிலை காணப்பட்டது. புலிகள் திருப்பித் தாக்கத் தொடங்கியிருந்தனர். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பாதுகாப்பார்கள் என்று, அவர்களது பலத்தில் நம்பிக்கை கொண்ட அகதிகள் பலர் ஊர் திரும்பினார்கள். மீண்டும் ஒரு தடவை நண்பர்களுடன் இராமேஸ்வரம் சென்றிருந்த பொழுது, சில படகுகள் புறப்பட இருப்பதாக செய்தி வந்தது. நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் என்பதால், இலவசமாக ஏற்றிச் செல்ல முன்வந்தார்கள்.

சென்னையில் வசித்த நண்பர்களைப் போல, வெளிநாடு செல்லும் நோக்கம் எதுவும் எனக்கு அப்போது இருக்கவில்லை. இந்திய மண்ணில் அகதியானது போல, எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் அகதியாக அலைய மனம் ஒப்பவில்லை. எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும், அந்நிய மண்ணில் அடிமையாக வாழ்வதை விட, சொந்த மண்ணில் வாழ்வதே சுதந்திரம் என்று கருதுபவர்கள். அதனால் இலங்கை செல்லும் படகில் கால் வைத்த பொழுது, ஒரு தவறைச் செய்கிறோம் என்று நினைக்கவில்லை. அன்று என்னைப் போல பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்ததது சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு சில மாதங்களின் பின்னர், என்னோடு அகதி முகாமில் வசித்த ஈழ அகதிகள் அனைவரும் கப்பலில் வந்திறங்குவார்கள், என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்தியாவில் இருந்து சென்ற எம்மை, இந்தியாவின் நிழல் தொடரப் போகின்றது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

(தொடரும்)
தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
3.
தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

Thursday, March 03, 2011

தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]

(பகுதி - 3)
-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
அகதிகள் பலரிடமும் எப்போது இலங்கை திரும்புவோம் என்ற ஏக்கம் குடிகொண்டிருந்த போதிலும், இந்திய அனுபவங்களையும் தம்மோடு சுமந்து செல்ல எண்ணினார்கள். அரசு கொடுக்கும் ஒரு பிடி அரிசியில், காய்கறி சேர்த்து சமைத்து உண்ணும் அகதி வாழ்வில் உல்லாசப் பயணத்தை நினைத்துப் பார்க்க முடியாது. இருப்பினும் இந்தியா வந்தால், கோயில் பார்க்காமல் திரும்பக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்கள். இந்துக்களைப் பொறுத்த வரையில், இந்தியாவை தமது தாயகமாக கருதும் போக்கு தொன்று தொட்டு நிலவியது. இப்போதும் இலங்கை திரும்பிய முன்னாள் அகதிகள், தாம் இந்தியாவில் எந்தெந்த கோயில்களுக்கு சென்று வந்தோம், என்று கூறி அயலவரின் பொறாமையைக் கிளப்புவார்கள். எமது முகாமில் இருந்தும் இளைஞர்களின் குழு ஒன்று கோயில் பார்க்க கிளம்பியது. எனக்கு அப்போதும் சாமி, கோயில்களில் நம்பிக்கை இல்லாத போதிலும், ஊர் சுற்றக் கிளம்பினேன்.

பஸ் பயணத்திற்கு மட்டும் கையில் காசு வைத்திருக்க வேண்டும். ரயிலில் இலவசப் பிரயாணம் செய்யலாம் என்று கூறினார்கள். அது ஈழ அகதிகளுக்காக MGR வழங்கிய சலுகை என்றார்கள். (MGR அப்போதும் தமிழக முதலமைச்சராக இருந்தார்.) ரயிலில் டிக்கட் பரிசோதகர் வரும் போதெல்லாம், அகதி அட்டையைக் காட்டினால் போதும். தமிழ்நாடு மாநிலத்திற்குள், எந்த ரயிலிலும் டிக்கட் இல்லாமல் பயணம் செய்ய முடியும். ரயிலில் ஏறி திருச்சி சென்றோம். அங்கிருந்த கோயில்கள் எல்லாம் பார்த்து விட்டு, அன்றிரவு ரயில் நிலையத்திலேயே படுத்துறங்கினோம். மீண்டும் ரயில் ஏறி, நாம் வந்திறங்கிய இராமேஸ்வரம் வரையில் சென்று திரும்பி வந்தோம். வரும் வழியில் மறக்காமல் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தையும் தரிசித்தோம். நாம் சந்தித்த இந்திய தமிழர்கள், எங்களை "சிலோன் காரர்கள்" என்று அழைத்து உரையாடினார்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் சிலோன்காரர்கள் என்று தான் அழைத்து வந்தனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், இலங்கையில் மலையகத் தமிழரை "இந்தியத் தமிழர்கள்" என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அவர்களது பெயரும் சிலோன்காரர்கள் தான்.

எமது தமிழக சுற்றுப் பயணத்தின் பின்னர், இந்திய-இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 90 % சதவீதமான இலங்கை அகதிகள், அதற்கு முன்னர் இந்தியாவை பார்த்திராதவர்கள். இந்தியத் தமிழருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை. இந்தியாவுடனான அவர்களது தொடர்பு முழுவதும், சினிமா, சஞ்சிகைகள், நூல்கள் ஊடாகவே பரிமாறப்பட்டன. பெரும்பாலும் பாமர மக்கள், தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போலத்தான் இந்தியா இருப்பதாக நம்பினார்கள். இந்தியா வந்த பின்னர், அவர்களது மாயைகள் யாவும் அகன்றன. பிரமாண்டமான கோயில்களைத் தவிர, இந்தியாவில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறவாரம்பித்தனர்.

பொதுவாக இரண்டு சமூகங்களும், ஒன்றை மற்றொன்று தாழ்வாகக் கருதுவதை உணரக் கூடியதாகவிருந்தது. சில அகதி முகாம்களில், அதிகாரிகளின் திமிரான பேச்சு எரிச்சலூட்டியது. வசதிக் குறைபாடுகளை சுட்டிக் காட்டிய போதெல்லாம், ஒன்றில் புறக்கணித்தார்கள், அன்றில் வாயை மூடிக் கொள்ள சொன்னார்கள். "சிங்களவர்களால் அழிக்கப் பட்டுக் கொண்டிருந்த அரிய உயிரினத்தை வைத்துப் பராமரிப்பது," போலப் பேசினார்கள். இதனால் வெறுத்துப் போன அகதிகள், "யுத்தம் மட்டும் இல்லையென்றால், எமது ஊரில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்," என்று பேசவாரம்பித்தனர்.

மிகப்பெரிய இந்திய-இலங்கை முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்து எழுந்தது. அகதி முகாமில் கிடைக்கும் சொற்பத் தொகை வாழ்வதற்கு போதாது என்பதால், கூலி வேலை தேடவாரம்பித்தனர். இலங்கையில் இலவசக்கல்வி வாய்ப்பை பயன்படுத்தி, பல்கலைக்கழகம் வரை படித்த ஏழை மாணவர்கள் கூட, கூலி வேலைக்கு சென்று வந்தனர். பட்டதாரிகள் கூட, இந்தியாவில் தமது பட்டங்களுக்கு மதிப்பில்லை என்பதை விரைவில் புரிந்து கொண்டனர். ஒரு ஈழ அகதி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், எந்தவொரு நிறுவனமும் அவர்களுக்கு வேலை கொடுக்க முன் வரவில்லை. மாநில, மத்திய அரசுகள் சட்டபூர்வ அனுமதி வழங்க மறுத்தன. அகதிகள் கூலி வேலைக்கு செல்வதை மட்டும் தடை செய்யவில்லை. இதனால் உள்ளூர் முதலாளிகளும், ஒப்பந்தக்காரர்களும் வீதிகளை செப்பனிடும் வேலை, மற்றும் கட்டுமானப் பணிகளில் இலங்கை அகதிகளின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டனர். ஒரு இந்திய தொழிலாளிக்கு கொடுக்கும் சராசரி கூலியை விட குறைந்த அளவு ஊதியமாக வழங்கப்பட்டது.

ஈழ அகதிகள் என்றால் கடுமையாக வேலை வாங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. சில முதலாளிகள், அவர்களின் கையறுநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். மாதக் கணக்காக வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். ஒரு பக்கம், இந்தியத் தமிழ் முதலாளிகள் ஈழ அகதிகளின் உழைப்பை சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தனர். மறு பக்கம், தொழில் வாய்ப்பை இழந்த இந்தியத் தமிழ் தொழிலாளிகள் அதிருப்தி கொண்டனர். இந்தியாவில் கூலி வேலையாட்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை தலித் மக்கள். இவர்களது குடியிருப்புகளும் அகதி முகாம்களை அண்டியே காணப்பட்டன. தொழில் போட்டியால் ஏற்பட்ட முறுகல் நிலை, "இந்தியத் தமிழ்- இலங்கைத் தமிழ் முரண்பாடு" வளரக் காரணமாயிற்று. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர், ஈழ அகதிகளை தம்மை விட தாழ்ந்தவர்களாக கருதினார்கள். சமூகங்களுக்கு இடையிலான சிறு சிறு சச்சரவுகளின் பொழுது, இது போன்ற உணர்வுகள் மேலெழுந்து வெளிப்படையாக பேசினார்கள். இதற்கிடையே வசதி படைத்த அல்லது மேல்நிலை சாதி இந்தியத் தமிழர்கள், அத்தகைய பிரச்சினைகள் குறித்து எந்த அறிவுமற்று வாழ்ந்தனர்.

ஈழத்தில் பல்வேறு சாதிகளை சேர்ந்த அகதிகள் முகாமில் ஒன்றாக வாழ்ந்தனர். இந்திய வழக்கப்படி, ஈழ அகதிகளும் சாதி வாரியாக வகைப் படுத்தப் பட்டு பதியப்பட்டனர். அது ஒன்றும் கட்டாயமல்ல, எனக்குத் தெரிந்த பலர் படிவத்தில் சாதிப் பெயரை குறிப்பிடாமல் வெறுமையாக விட்டனர். சாதிப் பெயரை பதியும் நடைமுறை, இலங்கையில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கைவிடப் பட்டு விட்டது. (இன்று சிலர் இதைக் காட்டி ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லை என்று வாதிடுகின்றனர்.) ஆனால், கிராமங்கள் சாதி வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்த சமூக அமைப்பைக் கொண்டிருந்தன. ஆகவே இந்தியா வந்த பின்னும் சாதிப் பெயரை பதிந்து கொள்வதில் பலருக்கு பிரச்சினை இருக்கவில்லை. மாறாக, இந்த சந்தர்ப்பத்தில் தமது சாதியை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை கண்டு கொண்டார்கள். தங்களை "வெள்ளாளர்களாக" பதிந்து கொண்டார்கள். இதனால் சாதிய படிநிலையில் உயர்ந்து விட்டதாக மனதளவில் திருப்தி கொண்டனர். யார் கண்டது? சில வருடங்களில் ஈழத்து சாதியமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படலாம்.

(தொடரும்)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்