Saturday, February 27, 2016

உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்" விருது!


ஒரு முக்கிய அறிவித்தல்: வாழ்நாள் முழுவதும் சாதிவெறி, இனவெறி, மதவெறி பேசி சாதனை படைத்த நபர்கள், IBC தொலைக்காட்சியால் "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கிக் கௌரவிக்கப் படுவார்கள்! 

லண்டனில் மாநகரில், த‌மிழ் தேசிய‌த்தின் குர‌லாக‌, "அனைத்துல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின்" பெய‌ரில் வானொலி, தொலைக்காட்சி ந‌ட‌த்தும் ஐ.பி.சி. நிறுவ‌ன‌ம், ஒரு சாதி வெறிய‌னுக்கு (Ramasamy Thurairatnam) "வாழ் நாள் சாத‌னையாள‌ர்" விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌வுள்ள‌து. அடுத்த‌தாக‌, பௌத்த‌ ம‌த‌ வெறிய‌ன் ஞான‌சார‌ தேரோ, சிங்க‌ள‌ இன‌ வெறிய‌ன் ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேவுக்கும், ஐ.பி.சி. விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்கும் என‌ எதிர்பார்க்கிறோம்.

சுவிட்சர்லாந்தில் வாழும் ராமசாமி துரைரத்தினம் என்ற ஈழத் தமிழ் தேசிய "ஊடகவியலாளர்"(?), ஏற்கனவே தினக்கதிர் இணையத்தளத்தில், பழமைவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதி வருபவர். அவரது தீவிர வலதுசாரி குணாம்சமும், இடதுசாரி வெறுப்புணர்வும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள். அப்படிப் பட்ட ஒருவர், சாதியவாதம் பேச மாட்டார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இரா. துரைரத்தினம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் மட்டக்களப்பு பெண்ணை திருமணம் செய்தவர். முன்னர் ஒரு காலத்தில் மட்டக்களப்பு திருமலை வீதியில் இயங்கிய  "தினக்கதிர்" பத்திரிகையிலும், பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து வெளி வந்த "தமிழலை" பத்திரிகையிலும் வேலை செய்தார். கருணாவின் பிளவு நடந்த காலத்தில் சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்தார், அதன் பிற்பாடு தமிழ்த் தேசியவாதியான இரா.துரைரத்தினம், பின்னர் பிரபாகரனின் தலைமைக்கு விசுவாசியானார். தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு, தினக்கதிர் இணைய ஊடகத்தை நடத்துவதோடு GTV யிலும் வேலை செய்கிறார்.

கிழக்கு மாகாண பிரதேசவாதத்தை, வெறுமனே வட மாகாணத்திற்கு எதிரானது என்று பார்ப்பது தவறு. கிழக்கிலங்கையில் நிலவும் தமிழ் - முஸ்லிம் இனக்குரோதத்தை, அந்தளவு மோசமானதாக வேறெங்கும் காண முடியாது. சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு தினக்கதிர் இணையத்தளத்தில், துரைரத்தினம் எழுதி வரும் கட்டுரைகள் பலவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை காணலாம்.

தன் மீது இனவாதி என்ற குற்றச்சாட்டு இருக்கிறதென்பது ஏற்கனவே அவருக்கும் தெரியும். கிழக்கு மாகாண இனத்துவ விகிதாசார அரசியல் பற்றிய ஒரு கட்டுரையை இவ்வாறு ஆரம்பிக்கிறார்: //கிழக்கில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் வியூகமும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும். இந்த தலைப்பை பார்த்ததும் உங்களில் சிலர் என்னை ஒரு இனவாதியாக சித்தரிக்கலாம். நான் சார்ந்த இனத்தின் அழிவுகள் பற்றி எச்சரிப்பது இனவாதம் என்றால் நான் இனவாதி என்ற பட்டத்தை ஏற்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது.// (http://www.thinakkathir.com/?p=62282)

தமிழகத்தின் பிரபல தலித் அரசியல் ஆர்வலரான ரவிக்குமாருடன், பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் அவரை "பற நாயே" என்று சாதிவெறியுடன் திட்டியுள்ளார். இந்த விவகாரம் முகநூல் முழுவதும் பரவி. பலரால் கண்டிக்கப் பட்டதும், தனது முகநூல் கணக்கை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார்.

துரைரத்தினம் ரவிக்குமாரை "பற நாயே" என்று மட்டும் திட்டவில்லை. ஒட்டுமொத்த இந்தியர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் அழிய வேண்டும் என்று சாபம் போட்டுள்ளார். முகநூல் உரையாடல் முழுவதும், இந்தியத் தமிழர்களுக்கு எதிரான துவேஷம் எதிரொலிக்கிறது. (இலங்கையில் உள்ள சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகள் மத்தியில் கூட, இந்தியத் தமிழர்கள் குறித்து தாழ்வான அபிப்பிராயம் உள்ளது.) 

உடைக் கட்டுப்பாடு குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை விமர்சித்து, தமிழகத்து தலித் ஆர்வலர் ரவிக்குமார் கட்டுரை எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய துரை ரத்தினம்:
//ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார் போன்ற நாய்களே பொத்தடா வாயை//, //என்னைப்பற்றி கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு. பற நாயே// என்று வசை பாடியிருக்கிறார். 

ஆனால் இப்போது, "தன்னை ரவிக்குமார் இலங்கை அரசின் கைக் கூலி என்று எழுதியதும் அடக்க முடியாத கோபத்தில் அப்படி எழுதி விட்டேன்" என்று, துரை ரத்தினம் தன்னிடம் கூறியதாக Gowripal Sathiri Sri முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

"ரவிக்குமார் இலங்கை அரசின் கைக் கூலி என்று எழுதியதும் அடக்க முடியாத கோபத்தில் அப்படி எழுதி விட்டேன்" என்று துரைரத்தினம் சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை. அதற்கான ஆதாரமாக, முகநூலில் நடந்த முழுமையான உரையாடலை இங்கே தருகிறேன்:Friday, February 26, 2016

யாழ் பல்கலைக்கழகத்தில் இந்து- தாலிபான்களின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள்


இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சிறு கோயில்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். தற்போது, தாலிபான் பாணியில் மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்குமளவிற்கு வளர்ந்து விட்டார்கள்.

பெப்ரவரி 13 ம் தேதி, யாழ் பல்கலைக்கழகத்தில் "அனைத்துலக சைவ மகாநாடு" நடைபெற்றது. (http://www.pathivu.com/?p=61671) அது நடந்து சில நாட்களுக்குள் (பெப். 17), கலைப்பீட மாணவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவித்தல் ஒட்டப் பட்டது. அந்த அறிவித்தல் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி, பலத்த சர்ச்சைக்கு உள்ளானது.

இலங்கையில் எந்தவொரு தமிழ் ஊடகமும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. "ஒன்றுக்கும் உதவாதவர்கள்" என்ற அர்த்ததில் "பேஸ்புக் போராளிகள்" என்று, சமூகத்தில் சிலரால் நக்கலடிக்கப் படுபவர்கள் தான், இந்தப் பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தார்கள். 

உண்மையில், "பேஸ்புக் போராளிகளால்" பரவலாக கண்டிக்கப் பட்ட பின்னர் தான், பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம், தகவலுக்கு மறுப்புக் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இறுதியாக பெப்ரவரி 26 அன்று, பல்கலைக்கழக நிர்வாகம் அந்த உத்தரவை மீளப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தது.  அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள், பேஸ்புக் போராளிகளுக்கு பயந்து வாபஸ் வாங்கிய சம்பவம், யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்னர் நடக்கவில்லை. "அந்தப் பயம் இருக்கட்டும்!"

இந்தத் தகவல் இணையம் மூலம் மக்கள் மத்தியில் பரவி விட்ட படியால், தடையுத்தரவை வாபஸ் வாங்குவதாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்றைக்கு, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், எந்தளவு சக்தி வாய்ந்த ஊடகமாக மாறிவிட்டன என்பதற்கு இது ஓர் உதாரணம். (தமிழ்) மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயக விழிப்புணர்வையும் இது எடுத்துக் காட்டுகின்றது. (பார்க்க: "இணையப் புரட்சியாளர்களுக்கு அஞ்சும் அதிகார வர்க்கம்!" - ஒரு நேர்காணல்http://kalaiy.blogspot.nl/2014/02/blog-post_11.html)

தற்போது அந்தப் பிரச்சினையின் சூடு தணிந்து விட்டாலும், யாழ்ப்பாணத்தில் தலையெடுக்கும் இந்து- தாலிபான்கள் மீண்டும் தமது ஒழுக்கக் கட்டுப்பாடுகளை தமிழ் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கலாம். யாழ் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் திட்டம் கைகூடாத படியால், புற்றுக்குள் பதுங்கிக் கொண்ட, பழமைவாத - இந்துத்துவா நச்சுப் பாம்புகள், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஆகையினால், யாழ் பல்கலைக்கழகம் விடுத்த விசித்திரமான ஒழுக்க விதிகளை பற்றி விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகம் அறிவித்த மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய ஒழுக்க விதிமுறைகள் பின்வருமாறு: 
//மாணவர்களும், கல்விசார் உத்தியோகஸ்தர்களும் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். மாணவர்கள் தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. மற்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாணவிகள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.//

மன்னிக்கவும், இந்த அறிவித்தல் வெளியானது, ஆப்கானிஸ்தானிலோ அல்லது ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ அல்ல. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இவை. "இதெல்லாம் தமிழ்க் கலாச்சாரமா? இந்துக் கலாச்சாரமா? அல்லது ஆங்கிலேயக் கலாச்சாரமா?" என்று ஒரு எழவும் புரியவில்லை. தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கவும்:

1. மாணவர்கள் தாடி வைத்திருக்கத் தடை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்ததற்கும், இதற்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்தக் கட்டுப்பாடு, முஸ்லிம் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கு கொண்டு வரப் பட்டிருக்கலாம்? தாடி வைப்பது தமிழர் கலாச்சாரமாக இருந்திருக்கிறது. திருவள்ளுவரும், தமிழ்ப் புலவர்களும் தாடி வைத்திருந்திருக்கிறார்கள்.

2. டி - சேர்ட், டெனிம் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. அதே நேரத்தில், தமிழரின் கலாச்சாரப் படி, வேஷ்டி கட்டி, சால்வை அணிந்து வர வேண்டும் என்று ஏன் அறிவிக்கவில்லை? சேர்ட், காற்சட்டை அணிவது எந்த நாட்டுக் கலாச்சாரம்?

டெனிம் ஜீன்ஸ், ஒரு காலத்தில் தொழிலாளர்களால் மட்டுமே விரும்பி அணியப் பட்டது. தற்போது அந்த ஆடையை அனைவரும் அணிவதால், மேலெழுந்தவாரியாக வர்க்க சமத்துவம் பேணப் படுகின்றது. இதற்கு மாறாக கனவான்கள் உடுத்தும் காற்சட்டையை பல்கலைக் கழகம் அங்கீகரிக்கிறதா?

அல்ஜீரியாவில், GIA என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், ஆயுதப்போராட்டம் நடத்திய காலங்களில், ஜீன்ஸ் அணிவதற்கு தடைவிதித்தார்கள். அல்ஜீரியாவில் ஜீன்ஸ் அணிந்திருந்த காரணத்தாலேயே பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஜீன்ஸ் விடயத்தில், யாழ் பல்கலைக்கழக அறிவித்தலுக்கும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் அறிவித்தலுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

3. மாணவிகள் சேலை கட்ட வேண்டும். ஆங்கிலேய காலனிய காலத்தில், காஞ்சிபுரம் புடவை நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்த பின்னர் தான், அனைத்துப் பெண்களும் சேலை கட்ட ஆரம்பித்தார்கள். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர், இலங்கையில் வாழ்ந்த பெண்கள் சேலை உடுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

20 ம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் குறுக்குக் கட்டு கட்டி இருந்தமைக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. சிறு வயதில் எனது பாட்டி சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  அந்தக் காலங்களில், உயர்சாதி பெண்கள் மட்டும் தான் சேலை உடுத்தி இருந்தார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. சேலை சாதி அந்தஸ்தின் அடையாளம். மற்றது, அதன் விலையும் அதிகம். ஆங்கிலேயரின் வருகையின் பின்னர், தொழிற்புரட்சியும் வந்தது. புதிய இயந்திரங்கள் பெருமளவு சேலைகளை உற்பத்தி செய்தன. அதனால், விலையும் மலிந்தது.

 

அனைத்துப் பெண்களும் சேலை உடுக்கத் தொடங்கியதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. 19 ம் நூற்றாண்டு இறுதியில் கூட, இலங்கையில் பல பெண்கள் திறந்த மார்புடன் இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் கட்டாயப் படுத்தி சேலை உடுக்க வைத்தார்கள். ஆனால், அது சாதி ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக இருந்தது. சேலை உடுப்பதற்காக பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பொதுவாக முஸ்லிம் நாடுகள் பற்றி தமிழர்கள் கொண்டுள்ள தப்பெண்ணம் பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை. இருப்பினும், அண்மையில், கெய்ரோ மருத்துவக் கல்லூரி, மாணவிகள், ஊழியர்கள் நிகாப் அணிவதற்கு தடைவிதித்திருந்தது. நூறாண்டு காலமாக, துருக்கி பல்கலைக்கழகங்களில் முக்காடு அணிவதற்கு விதித்த தடைச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளது. ஆனால், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தாலிபான் பாணியில் பழமைவாத சம்பிரதாயங்களை பின்பற்றத் தொடங்கியுள்ளது.

"இருப்பவர்கள் இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா?" என்று சிலர் புலிகளின் ஆட்சிக் காலத்தை சுட்டிக் காட்டி கேள்வி கேட்கலாம். பெண்கள் "அடக்கமாக" புடவை கட்டும் கலாச்சார பின்புலத்தில் இருந்து வந்த பெண் போராளிகள் ஜீன்ஸ் அணிந்தது ஒரு கலாச்சாரப் புரட்சி தான். 

யுத்தகளத்திற்கு சேலை கட்டிக் கொண்டு செல்ல முடியாது என்று ஒரு விவாதத்தை முன்வைக்கலாம். இருப்பினும், எண்பதுகள் வரையில் இருந்த யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பெண்கள் என்றைக்குமே ஜீன்ஸ் அணிந்திருக்கவில்லை. 

தப்பித்தவறி ஓர் இளம்பெண் ஜீன்ஸ் அணிந்து சென்றால், ஊர் முழுக்க அவளைப் பார்த்து கேலி செய்யும். அப்பேர்ப்பட்ட பிற்போக்கான கலாச்சார பாரம்பரியம் கொண்ட யாழ்ப்பாணத்தில் பெண் போராளிகள் ஜீன்ஸ் அணிந்து புரட்சி செய்து காட்டினார்கள்.

சீனாவில், மாவோ காலத்தில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது, ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான உடை அணிந்தனர். ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி உடை அணியும் ஆடைக் கலாச்சாரம், மாவோ காலத்தில் தான் உலகம் முழுவதும் பரவியது. 

எண்பதுகளில் ஆண்களும், பெண்களும் அணியக் கூடியதான, ஒரு வகை ஆடை பிரபலமானது. சில தமிழ்த் திரைப்படங்களின் தாக்கமாக இருக்கலாம். அதுவும் மாவோ கலாச்சாரத்தின் பாதிப்பால், இந்தியாவில் நக்சலைட்டுகள் மூலம் அறிமுகமானது. அது பார்ப்பதற்கு வட இந்திய உடை மாதிரி இருக்கும். ஆனால், ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான உடை அணிந்தமை தான் இங்கே குறிப்பிடப் பட வேண்டிய சிறப்பம்சம்.

எழுபதுகளில் சீனாவில் பிரபலமாக இருந்த "மாவோ உடை" (Mao suit), 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஈழத் தமிழர்களுக்கு புலிகளால் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த உடை மூலம் பால் சமத்துவம் பேணப் பட்டது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் அடிக்கடி நடத்திய பொங்கு தமிழ் மேடை நிகழ்ச்சிகளில், ஆண்களும், பெண்களும், ஒரே மாதிரியான, மாவோ பாணி உடை அணிந்திருந்தார்கள். அதில், புலிகளின் தேசியக் கொடியில் உள்ள மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் இருந்தமை வேறு விடயம்.

சீனாவில் இருந்து, குறிப்பாக மாவோவிடம் இருந்து புலிகள் சில விடயங்களை கற்றுக் கொண்டார்கள். அதை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசமான de facto தமிழீழத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. எதற்கெடுத்தாலும், சீனாவை குற்றம், குறை சொல்லிக் கொண்டிருக்கும், வலதுசாரி- போலித் தமிழ் தேசியவாதிகள், குறைந்த பட்சம் புலிகளிடம் இருந்தாவது சில விடயங்களை கற்றுக் கொள்ளட்டும்.

Friday, February 19, 2016

தன்மானமில்லாத "தமிழன்டா"! அமெரிக்காவின் அடிமைடா!!இலங்கைத் தமிழ் பத்திரிகைகளில், இடதுசாரிகளை, கம்யூனிஸ்டுகளை சீண்டுவதும், கிண்டல் அடிப்பதும் தற்போது ஃபேஷனாகி விட்டது. வீரகேசரி, தினக்குரல், உதயன் என்று, பெரும் முதலாளிகளால் தமிழில் வெளியிடப் படும் இந்தப் பத்திரிகைகளின் வர்க்க சார்புத் தன்மை ஏற்கனவே தெரிந்த விடயம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

ஒரு காலத்தில், முதலாளித்துவ பத்திரிகைகள் யாவும், "தமிழர்கள் மத்தியில் இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் எவரும் இல்லை" என்பது போல காட்டிக் கொண்டன. வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது. இது ஒரு வகையில், "சிறுபான்மையினத்தின் இருப்பை மறைக்கும் பேரினவாத உத்தி" போன்றது. ஒரு சமூகம் பன்முகத் தன்மை கொண்டது என்பதை மறுப்பதும், ஜனநாயகப் பண்புகளை நசுக்குவதும் பாசிஸத்தின் கூறுகள் தாம். 

அந்த அடிப்படையில், "கம்யூனிஸ்டுகள் என்றால், ரஷ்யா, சீனாவில் இருப்பார்கள்..." என்று அம்புலிமாமாக் கதைகளை பரப்பி வந்தனர். ஈழப் போரின் இறுதிக் காலத்திலும், அதற்குப் பிறகும், எடுத்ததற்கு எல்லாம் "கம்யூனிச நாடுகளான ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபா...." என்று போட்டுத் தாக்குவது வழமையாக இருந்தது. தனக்குத் தானே "அரசியல் ஆய்வாளர்" பட்டம் சூட்டிக் கொண்ட யாராவது, வார இதழில் கட்டுரை எழுதி இருப்பார்கள். 

அறுந்த அரசியல் ஆய்வாளர்கள், தமது கட்டுரையில் என்ன எழுதி இருந்தாலும் பரவாயில்லை. தலைப்பு மட்டும் "கம்யூனிச" சீனாவை, ரஷ்யாவை திட்டுவதாக இருக்கும். இந்த நாடுகள் எல்லாம், கடந்த முப்பது வருட காலமாகவே, முதலாளித்துவ நாடுகளாக இருந்து வருகின்றன என்ற உண்மை, அறுந்த ஆய்வாளர்களுக்கு தெரிவதில்லை. முப்பது வருடமாக கோமாவில் படுத்திருந்து விட்டு எழுந்தவன் போல, "ஏய்... ரஷ்யாவே! ஏய்... சீனாவே! இதுவா உன் கம்யூனிசம்!" என்று திட்டி திட்டி எழுதுவார்கள்.

இப்போதெல்லாம் இந்த அலப்பறைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. அது மட்டுமல்ல, தமிழ் இளையோர் மத்தியில் இடதுசாரிக் கருத்துக்கள், மற்றும் கம்யூனிசம் குறித்த தேடுதல் அதிகரித்து வருகின்றது. அம்புலிமாமா ஆய்வாளர்கள் எதிர்பார்த்த மாதிரி, அது ஒன்றும் ரஷ்யா, சீனாவில் இருந்து இறக்குமதியாகவில்லை. இன்றைய உலகமயமாக்கல் தான் இளைஞர்கள் மத்தியில் மாற்று சிந்தனை குறித்த தேடலை உருவாக்கியது. உலகமயமாக்கல் என்றால் அமெரிக்கா இல்லாமலா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், அமெரிக்கா அனுப்பி வைத்த நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹைம் ஒரு விடயத்தை தெளிவாக சொல்லி இருந்தார். "ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவே இறுதி சந்தர்ப்பம். தற்போது சர்வதேச சமூகத்தின் கவனம் இலங்கை மீது குவிந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால், அது திரும்பி வராது."

2006 ம் ஆண்டு, புலிகளை கடுமையான தொனியில் எச்சரித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Jeffrey Lunstead, "இனப்படுகொலை" நடத்தவும் தயங்க மாட்டோம் என்பதை சூசகமாக குறிப்பிட்டார். "புலிகள் சமாதானத்தை கைவிட்டு விட்டு போருக்கு திரும்பினால், பெரியதொரு விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். மிகவும் பலமான, தீர்க்கமான சிறிலங்கா இராணுவத்தை சந்திக்க வேண்டி இருக்கும்...." என்று தெரிவித்தார். 
  US Ambassador Jeffrey Lunstead made it clear that Washington wanted the “cost of return to war to be high” to the Liberation Tigers of Tamil Eelam (LTTE). If the LTTE “abandon peace”, they would face a “stronger, more capable and more determined” Sri Lankan military, TamilNet quoted Lunstead as saying. 

அமெரிக்க தூதுவரின் எச்சரிக்கை, வாய்ச் சொல்லில் மாத்திரம் இருக்கவில்லை. இறுதி யுத்தத்திற்கு தேவையான ஆயுதங்களை கொண்டு வந்த புலிகளின் ஆயுதக் கப்பல்களை, அமெரிக்க செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அதனால், சிறிலங்கா கடற்படை அவற்றை சர்வதேச கடற்பரப்பிலேயே தாக்கி அழித்தன. அது மட்டுமல்லாது, அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்கச் சென்றவர்கள் பிடிபட்டனர். ஆயுதத் தரகர்களாக நடித்த FBI உளவாளிகள், அவர்களை பொறிக்குள் மாட்டி விட்டனர்.

இலங்கையில் நடந்த இறுதிப்போரின் உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில், அமெரிக்காவை நோக்கி சுண்டுவிரலை கூட நீட்ட முடியாத நிலையில் தமிழ் வலதுசாரிகள் உள்ளனர். அவர்களால் மேற்படி உண்மைகளை ஜீரணிக்க முடியவில்லை. அதே நேரம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவும் இல்லை.

அதற்கு மாறாக, நடந்த பிரச்சினைகளுடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத கம்யூனிஸ்டுகளை வம்புக்கிழுக்கும் பணியை, தமிழ் முதலாளித்துவ பத்திரிகைகள் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. பலசாலியான எதிராளியுடன் மோத முடியாத ஒருவன், வீட்டில் இருக்கும் அப்பாவி மனைவிக்கு அடித்து, தனது  ஆத்திரத்தை தீர்த்த கதை தான் இதுவும். (தமிழன்டா!)

லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சி முதலாளி, தற்போது யாழ் குடாநாட்டில் "தீபம்" என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை வெளியிட்டு வருகின்றார். இதுவும் வழமையான முதலாளித்துவ ஆதரவு பத்திரிகை தான். அதிலே நாடியா என்பவர் "தமிழன்டா" என்ற பெயரில் கட்டுரை எழுதி இருக்கிறார். தமிழ் சமூகத்தை கிண்டலடித்து நகைச்சுவையாக எழுதப்பட்ட கட்டுரை தான். ஆனால், நகைச்சுவை என்ற பெயரில் அது திணிக்கும் அரசியல் ஆபத்தானது. வலதுசாரிகள் கம்யூனிஸ்டுகள் பற்றி பரப்பி வரும் அவதூறான நச்சுக் கருத்துகளை, நகைச்சுவை என்ற தேன் தடவி உண்ணக் கொடுக்கிறது.

13.12.2015 தீபம் பத்திரிகையில் பிரசுரமான தமிழன்டா கட்டுரையின் கடைசிப் பந்தி இது:

//கோக்குமாக்கு கொம்மியூனிஸ்ற்

கொஞ்சம் வயது போனவர்கள் இருப்பார்கள். எப்போதும் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு, ஆளையாள் அடித்துவிடுபவர்களை போல விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததென ஒரு தரப்பு சொல்லும். சர்வதேச விசாரணையா, கூடவே கூடாதென இன்னொரு தரப்பு அடம்பிடிக்கும். இவர்களை விட இன்னொரு குறூப் கிளம்பும். போர்க்குற்ற விசாரணையின் மூலம் அமெரிக்கா அடைய நினைக்கும் ஏகாதிபத்திய நலன்கள் என்றொரு மீற்றிங் போடுவார்கள். நாலுபேர் கூடி நாள் முழுக்க அடிபடுவார்கள். அவர்கள் தான் கொம்யூனிஸ்ற் தோழர்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததா இல்லையா? சர்வதேச விசாரணையா, உள்ளக விசாரணையா என உள்நாட்டுக்குள் எல்லோரும் தலையை பிய்த்துக் கொண்டிருக்க, அதற்குள் அமெரிக்காவை கொண்டு வந்து கோக்குமாக்கு பண்ணுவது அவர்களின் இயல்பு.// 
(எழுதியவரின் மின்னஞ்சல் முகவரி: nadiyanice@yahoo.com)

"தமிழன்டா", "சிங்கலே" போன்ற இனவாதக் கோஷங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை மறைப்பதற்கு நன்றாகவே உதவுகின்றன. இதனை கட்டுரை எழுதியவரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 


சிங்கள - பௌத்த பேரினவாத இயந்திரம், எவ்வாறு தமிழினவாதிகளையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம். தற்போது இலங்கையில், சிங்கள இனவாத சக்திகள், "சின்ஹலே" என்ற பெயரில் ஸ்டிக்கர் பரப்புரை செய்து வருகின்றன.

"சின்ஹலே" என்பது ஒரு வெற்றுக் கோஷம் அல்ல. அது "சிங்கள இரத்தம்" என்ற இனவாதத் தொனி கொண்டது. இனவாதத்தை வெறுக்கும் முற்போக்கான சிங்களவர்கள், இதற்கெதிராக தமது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அதனால், "சின்ஹலே" பிரச்சாரத்தை நடத்தும் அதே அமைப்பு, தற்போது "தமிழன்டா" என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளது.

எமது நினைவுக்கு எட்டிய வரையில், தமிழகத்தில் இயங்கும் தமிழினவாத அமைப்புகளான நாம்தமிழர் வகையறாக்கள் தான், "தமிழன்டா" பரப்புரை செய்து வந்தன. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்?

"ஏகாதிபத்தியமா? அது எங்கே இருக்கிறது?" என்று பாமரத் தனமாகக் கேட்கும் அப்பாவியா நீங்கள்? 

ஈழப்போரின் முடிவுக்குப் பின்னர், இலங்கையில் எவ்வாறு ஏகாதிபத்தியம் கால் பதித்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை கீழே தந்திருக்கிறேன். அதற்குப் பிறகும் "அமெரிக்காவுக்கும், ஈழத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று சிறுபிள்ளைத்தனமாக கேள்வி கேட்பீர்கள் என்றால்.... தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுயரூபம் பற்றி எத்தனை தடவை எடுத்துக் கூறினாலும், அதையெல்லாம் புறக்கணித்து விட்டு, "அமெரிக்கா ஈழத் தமிழர்களின் நண்பன் (?)" என்று கூறி மக்களை ஏமாற்றுவோர் பலருண்டு. வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றியதைக் காட்டி, "இப்போது உலக நாடுகள் எல்லாம் எம்மை திரும்பிப் பார்க்கப் போகின்றன" என்றார்கள்.

அமெரிக்க அடிவருடிகளான போலித் தமிழ் தேசியவாதிகள், முதலமைச்சர் விக்னேஸ்வரனை அமெரிக்காவுக்கு அனுப்பி, தமது எஜமான்களை சந்தித்துப் பேச வைத்தனர். ஆனால், அவர்கள் நினைத்ததற்கு மாறாகவே அமெரிக்க எஜமானின் நடத்தை அமைந்திருந்தது.

"இனப்படுகொலை பற்றிய பேச்சுக்களை குறைத்துக் கொண்டு, மைத்திரி- ரணில் அரசுடன் கூட்டுச் சேர்ந்து வேலை செய்யுமாறு" விக்னேஸ்வரன் அறிவுறுத்தப் பட்டார்.

ஈழப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டை மூடி மறைப்பதற்காக, "ஏகாதிபத்தியம் என்ற ஒன்று இல்லவே இல்லை..." என்று, எமக்கு அரசியல் போதிக்கும் தமிழ் வலதுசாரிகள், இது குறித்து என்ன சொல்லப் போகிறார்கள். வழமை போல இதைக் கண்டும் காணாதது போல, தமது கண்களை இறுக்க மூடிக் கொண்டு கள்ள மௌனம் சாதிப்பார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மண்ணில், அமெரிக்க அரசு ஒரு மில்லியன் டாலர் செலவில், இரண்டு நவீன மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்தது. கிளிநொச்சியிலும், ஓட்டிசுட்டானிலும், அவை அமெரிக்க நிதியுதவியில் கட்டப் பட்டுள்ளன. 

2009 ம் ஆண்டு, வன்னியில் நடந்த போருக்குள் அகப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஷெல் வீச்சுகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் காயமடைந்து, மருத்துவ வசதி இன்றி மரணமடைந்தனர். அப்போது அந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்காத, உயிர் காக்கும் மருந்துகளை கூட அனுப்ப மறுத்த அமெரிக்கா, நாற்பதாயிரம் தமிழ் மக்களின் பிணங்களின் மேல் இரண்டு மருத்துவமனைகளை கட்டிக் கொடுத்துள்ளது. அதனை அமெரிக்க தூதரக அதிகாரி William Weinstein, நாமல் ராஜபக்சவுடன் சேர்ந்து  திற‌ந்து வைத்தார். (தகவலுக்கு நன்றி: அமெரிக்க தூதுவராலயம்; http://srilanka.usembassy.gov/pr-13feb2013.html)

தமிழ் மக்கள் மனதில் அமெரிக்க விசுவாசத்தை பரப்பி வரும், தமிழ் (முதலாளித்துவ) தேசிய ஊடகங்கள், இந்த செய்தியை பிரசுரிக்காது இருட்டடிப்பு செய்துள்ளன. ஒருவேளை, இந்த மருத்துவமனைகளை சீனா கட்டிக் கொடுத்திருந்தால், "தமிழருக்கு துரோகமிழைத்த கம்யூனிச சீனா ஒழிக!" என்ற கோஷம், அனைத்து ஊடகங்களிலும் முதன்மைச் செய்தியாக வந்திருக்கும். 

சிங்களப் பகுதிகள் சீனாவுக்கும், வட-கிழக்கு தமிழ்ப் பகுதிகள் அமெரிக்காவுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டுள்ளன. யாரை எப்படி ஏமாற்ற வேண்டும் என்பதை, வல்லரசு நாடுகள் தெரிந்து வைத்துள்ளன. ஆனால், அந்த உண்மையை தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது தான், தமிழ்-முதலாளித்துவ தேசிய ஊடகங்களின் பணியாக உள்ளது. 

"எதிரி எமக்குள்ளே இருக்கிறான்." என்று ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர் லீப்னெக்ட் கூறியது, ஒவ்வொரு தடவையும் நிரூபிக்கப் பட்டு வருகின்றது.  முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் முதலாளித்துவ தமிழ் ஊடகங்களும் தமிழ் மக்களின் எதிரிகள் தான்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசிய பிரதிநிதியான அவுஸ்திரேலியா, ஈழப் போரின் முடிவுக்குப் பின்னர், சிறிலங்கா அரசுடன் நெருங்கி உறவாடி வருகின்றது. ஏகாதிபத்தியம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளாமல், தமிழீழம் அமைக்கலாம் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.

ராஜபக்சேக்களுடன் Scott Morrison 
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் தமிழ் அகதிகளை, சிறிலங்கா கடற்படையினரிடம் ஒப்படைத்து வரும், அவுஸ்திரேலியா குடிவரவுத் துறை அமைச்சர் Scott Morrison இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். தனது உற்ற நண்பர்களான ராஜபக்சேக்களை சந்தித்துப் பேசியதுடன், சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை பரிசளித்திருந்தார். 

அதே நேரம், யாழ்ப்பாணத்திற்கு சென்று ஆளுநர் சந்திரஸ்ரீ யையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், யாழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் விக்னேஸ்வரனை சந்திக்கவில்லை. (http://www.theaustralian.com.au/news/scott-morrison-visits-jaffna-snubs-chief-minister-cv-wigneswaran/news-story/0424779b74b2016b070fdbb2a85c44d2?sv=adb7efb136baa3a8541420dd6bc106d3

பில்கேட்சின் Microsoft நிறுவனம், ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் முதலீடு செய்துள்ளது. அதிலும், மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் பிரியமான அம்பாந்தோட்டையில், தெற்காசியாவுக்கான புதிய தொழிற்சாலை ஒன்றை கட்டியுள்ளது. 

இலங்கையில் கட்டப்பட்டுள்ள முதலாவது கணணி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இதுவாகும். தமிழினப் படுகொலையாளிகளுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம், பில் கேட்சும், மைக்ரோசொப்ட் நிறுவனமும் தமிழர்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளனர்.

அம்பாந்தோட்ட தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கணனிகள், Laptop, Tablet ஆகியன, இலங்கையில் மட்டுமல்லாது, பிற ஆசிய நாடுகளிலும் விற்பனை செய்யப் படவுள்ளன. பில் கேட்சின் மைக்ரோசொப்ட் நிறுவனம், EWIS என்ற இன்னொரு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. (Microsoft, EWIS set up country’s first PC manufacturing plant at H’tota; http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=84917)

தமிழ் இன உணர்வாளர்கள், மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு எதிராகப் போராட முன்வருவார்களா? மைக்ரோசொப்ட் நிறுவனம், இலங்கையில் போட்டுள்ள முதலீட்டை வாபஸ் வாங்கி, அம்பாந்தோட்ட தொழிற்சாலையை மூடும் வரையில், மைக்ரோசொப்ட் தயாரிப்புப் பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப் படுமா?

தென் தமிழீழக் (கிழக்கிலங்கை) கடற்கரையோரத்தில், எண்ணை, எரிவாயு வளங்களை ஆய்வு செய்யும் உரிமையை, பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனமான Total S.A. பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், இலங்கை பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திமா வீரக்கொடியும், இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் Jean-Marin Schuh வும் கைச்சாத்திட்டுள்ளனர். (Govt. inks agreement with France's Total for oil exploration in East Coast; http://www.news.lk/news/business/item/12289-govt-inks-agreement-with-france-s-total-for-oil-exploration-in-east-coast)

தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசுடன் கைகோர்த்த, பிரெஞ்சு அரசுக்கு எதிராக, தமிழ் இன உணர்வாளர்கள் கிளர்ந்து எழுவார்களா? சார்லி ஹெப்டோ படுகொலைகள் நடந்தநேரம் "Je suis Charlie" என்று சொல்லி அழுதவர்கள், தற்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வார்களா?

அரச அடிவருடிகளான போலித் தமிழ் தேசியவாதிகளிடம் தன்மானத்தை எதிர்பார்க்க முடியுமா? இல்லை, தமிழ் இன உணர்வை விட, யூரோ பண உணர்வு முக்கியம் என்று வாயை மூடிக் கொள்வார்களா? இவர்கள் தான், மேற்கத்திய அரசுக்களின் ஆதரவுடன், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு, தமிழீழமும் வாங்கித் தருவார்களாம். நம்புங்க மக்களே!

ஏகாதிபத்தியத்தின் நிழலின் கீழ் இருந்து கொண்டு தமிழீழம் பற்றிப் பேசலாம். ஆனால், தமிழர்கள் தன்மானத்துடன் வாழ முடியாது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமின்றி, ஈழம் விடுதலை அடைய முடியாது.

Monday, February 15, 2016

No Sex please! உடலுறவு வேண்டாம், நாங்கள் தமிழ் இன உணர்வாளர்கள்!


"இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு!"

தமிழ் மக்களின் மனம் கவர்ந்த பிரபல "தமிழ் தேசிய"(?) இணையத் தளமான தமிழ்வின் (லங்காஸ்ரீ) இது போன்ற செய்திகளின் மூலம் தானும் ஒரு "காலாச்சாரக் காவலர்" என்று காட்டிக் கொண்டுள்ளது. 

தமிழ்வின் காதலர் தின ஸ்பெஷல் செய்தி போடுவதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான், கொழும்பு நகரில் மேற்கத்திய பாடகர் இக்லேசியாஸ்ஸின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது, பதின்ம வயது இலங்கை மகளிர் தமது உள்ளாடைகளை கழற்றி வீசினார்கள். அதையிட்டு கண்டனம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, தானும் ஒரு கலாச்சாரக் காவலர் போன்று காட்டிக் கொண்டார். சிங்கள தேசியவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், கூடவே முஸ்லிம் மதவாதிகளும் ஒன்று சேரும் புள்ளியும் இது (கலாச்சாரம்) தான்.

சுவிட்சர்லாந்தில் இருந்து இயங்கும் தமிழ்வின் இணையத்தளம், தனது நாட்டில் வாழும் எத்தனை பெண்கள் கன்னித் தன்மை இழந்துள்ளனர் என்று ஆய்வு செய்து பார்த்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யப் போனால் தனது குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினைகள் உருவாகும் என்பது, தமிழ்வின் இணையத் தள நிர்வாகிக்கு தெரியாதா? மஞ்சள் பத்திரிகை மாதிரி "இலங்கையில் காதலர் தினத்தில் 10000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு!" என்று இலங்கையில் வாழும் கன்னிப் பெண்களின் கற்புக்காக கண்ணீர் வடிக்கின்றது.

இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரர் தான் லங்காஸ்ரீ நடத்துகிறார். தனது அண்ணனின் தேர்தல் வெற்றிக்காக இலவச விளம்பரம் செய்து வந்தார். அண்ணனும், தம்பியும் தமிழ் தேசியம் பேசியே சம்பாதிக்கத் தெரிந்தவர்கள். "உலகில் அதி புத்திசாலியான மூன்று இனங்கள் மூன்றும் ஆங்கில "J" எழுத்தில் தொடங்குகின்றன. அவை முறையே "ஜப்பானிஸ் (ஜப்பானியர்கள்), ஜூஸ் (யூதர்கள்), ஜாப்பானிஸ் (யாழ்ப்பாணிகள்) என்று பேசி மக்களை கவரத் தெரிந்தவர் ஸ்ரீதரன். அவரது தம்பி, சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டே, தமிழர்கள் யூதர்களை பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறி வந்தார்.

தங்களை மட்டுமே புத்திசாலிகள் என்று கருதிக் கொள்ளும் யூத சியோனிஸ்டுகள், இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிய பின்னர் யூதர்கள் மட்டுமே பிரஜைகளாக இருக்கலாம் என்று சட்டம் இயற்றினார்கள். அதாவது, விபச்சாரிகள் கூட யூத இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் யூத தேசியவாதம். ஆனாலும் ஒரு பிரச்சினை இருந்தது. 

யூதப் பெண்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என்று தேசியவாதப் பெருமிதம் பேசிக் கொண்டே பாலியல் தொழிலை அனுமதிக்கலாமா? அதனால், ரஷ்யாவில் இருந்து குடியேறிய பாலியல் தொழிலாளர்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்ரேலில் வசிப்பவர்களை கேட்டுப் பாருங்கள். "நதாஷா"(Natasha) என்ற ரஷ்யப் பெயர் அங்கே பாலியல் தொழிலாளர்களை குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது. அந்தப் பெண்களும் யூதர்கள் தான் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை.

யூதர்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட தமிழ் இன உணர்வாளர்கள், தமிழ்க் கலாச்சாரத்தில் கை வைக்காமல் இருப்பார்களா? "காதலர் தினத்தன்று யுவதிகள் கன்னித் தன்மையை இழக்கிறார்கள்...", "பத்துப் பேருடன் படுத்தெழும்பிய பள்ளிக்கூட மாணவி..." என்று செய்திகளை வெளியிட்டு, இலங்கையில் வாழும் தமிழ்ப் பெண்கள் கற்புக் கெடாமல் வாழ வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னரான பாலுறவை நிராகரிக்கும் பழமைவாதிகளின் கூச்சல் இணையத் தளத்தில் எதிரொலிக்கிறது.

"இதற்குத் தான் தமிழர்களுக்கான தனி நாடு வேண்டுமென்பது! தமிழீழத்தில் மணமுறிவு கிடையாது, பாலியல் தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள், தகாத உறவுகளுக்கு இடமேயில்லை. பெண்களின் கன்னித்தன்மை பாதுகாக்கப் படும்." புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இன உணர்வாளர்கள், இப்படி பிரச்சாரம் செய்து தான் தமிழீழத்திற்கு ஆதரவு திரட்டுகிறார்கள். நல்லது, ஒருவேளை தமிழீழம் கிடைத்தால், அங்கே குடும்பத்துடன் சென்று குடியேற தயாராக இருக்கிறார்களா? 

கலாச்சாரக் காவலர்களின் போதனைகள் இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. அது காலங் காலமாக நடந்து வருகின்றது. ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலங்களில், ஆயுத முனையில் கலாச்சாரம் போதிக்கப் பட்டது. எண்பதுகளில் வந்த தென்னிந்திய திரைப்படங்கள் மூலம் டிஸ்கோ நடனம் பிரபலமாகியது. இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டிலும் அந்தக் கலாச்சாரம் பரவியது. 

ஊருக்கு ஊர் மேடைகள் போட்டு, டிஸ்கோ நடனம் ஆடினார்கள். தமிழகத்து பேபி ஷாலினி மாதிரி பாவனை செய்யும், ஈழத்து பேபி ஷாலினியும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தார். பிறகென்ன? ஒரு போராளி இயக்கம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, டிஸ்கோ நடன விழாக்கள் அடியோடு நிறுத்தப் பட்டன. "ஈழத்து பேபி ஷாலினி" இந்தியாவுக்கு அகதியாக சென்றார்.

எண்பதுகளில் தான் இலங்கையில் தொலைக்காட்சிப் பெட்டிகளும், வீடியோ கசெட்டுகளும் அறிமுகமாகின. எல்லோரிடமும் வாங்கிப் பாவிக்க வசதியில்லாத நிலையில், சினிமாப் படங்களை வாடகைக்கு எடுத்து பார்த்தார்கள். ஊருக்கு ஊர் வீடியோ கசெட் வாடைக்கு விடும் கடைகள் முளைத்தன. வீடியோக் கடைக்காரர்கள், சினிமாப் படங்களுடன், ஆபாசப் (போர்னோகிராபி) படங்களையும் வாடகைக்கு விட்டு வந்தார்கள்.

கலாச்சாரக் காவலர்கள் ஆயுதங்களுடன் திரிந்த காலகட்டம் அது. ஆபாசப் பட விநியோகம் பற்றிக் கேள்விப் பட்டால் சும்மா இருப்பார்களா? எமது ஊரில் இருந்த வீடியோக் கடையை டெலோ இயக்கத்தை சேர்ந்தவர்கள் சூறையாடினார்கள். அங்கிருந்த வீடியோ காசெட்டுகளை எல்லாம் பறிமுதல் செய்து கடையை மூடச் செய்தார்கள். ஆபாசப் படங்கள் வாடகைக்கு விட்டதற்கு, அது தான் தண்டனையாம். 

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையில் மோதல் வெடித்தது. கல்வியங்காடு எனுமிடத்தில் இருந்த டெலோ தலைமை முகாமை கைப்பற்றிய புலிகள், அங்கிருந்து நிறைய ஆபாசப் படக் காசெட்டுகளை கைப்பற்றினார்களாம். இந்தத் தகவலை அப்போது புலிகள் தான் அறிவித்தனர்.

எண்பதுகளில் தான் யாழ் நகரில் நவீன சந்தை கட்டப் பட்டது. அப்போது யாழ் குடாநாட்டிலேயே பெரிய வர்த்தக மையமாக திகழ்ந்த நவீன சந்தைப் பகுதியில், பாலியல் தொழிலாளர்களும் அதிகரித்தனர். அவர்கள் தமது வாடிக்கையாளர்களை பிடிப்பதற்கு அது வசதியாக அமைந்து விட்டது. தமிழீழத்திற்கான போராட்டம் சிங்கள இராணுவத்திற்கு எதிராக மட்டுமல்லாது, சமூகவிரோதிகளுக்கும் எதிராக நடந்து கொண்டிருந்த காலம் அது. போராளி இயக்கங்கள் பாலியல் தொழிலாளர்களை சுட்டுக் கொன்று மின் கம்பத்தில் கட்டி விட்டன. அதற்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் எங்குமே பாலியல் தொழிலாளர்களை காணக் கிடைக்கவில்லை.

கன்னித் தன்மை இழப்பு, தகாத உறவு, பாலியல் தொழில், இவை மட்டும் தான் கலாச்சாரக் காவலர்களின் முக்கியமான பிரச்சினையாக இருக்கவில்லை. அந்தக் காலங்களில், அரச அங்கீகாரம் பெற்ற மதுபான சாலைகள் மிகவும் அரிதாக காணப் பட்டன. ஒன்றிரண்டு யாழ்நகர் போன்ற இடங்களில் இருந்தன. அனேகமாக கள்ளுக் கடைகள் தான் குடி மக்களின் ஒரேயொரு புகலிடம். ஊருக்கு ஊர் தவறணைகள் இருந்தன. 

அன்றிருந்த எல்லா ஈழ விடுதலை இயக்கங்களும் கலாச்சாரத்தை பாதுகாக்க கிளம்பிய நேரம், NLFT என்ற இயக்கம் கொஞ்சம் வித்தியாசமாக சிந்தித்தது. பல ஊர்களில் இருந்த கள்ளுத் தவறணைகளை தீயிட்டுக் கொளுத்தியது. எரித்து விட்டு அதற்கு விளக்கம் சொல்லி துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தது. இதன் மூலம் மது விலக்கை அமுல்படுத்துகிறார்களாம்.

தற்போது மேற்கத்திய புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒரே கவலை. வட இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்து விட்டன. இதனால், தமிழர்கள் குடிகாரர்களாகி வருகிறார்கள் என்று கவலைப் படுகிறார்கள். புலிகள் வைத்திருந்த de facto தமிழீழத்தில் கூட, கள்ளுத் தவறணைகள் இயங்கின. பனையில் இருந்து எடுக்கப் பட்ட வடி சாராயம் விற்கப் பட்டது. சாராயம் வடிக்கும் தொழிற்சாலையை புலிகளே நடத்தினார்கள்.

அது சரி, சுதந்திரமான மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் குடிப்பதில்லையா என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அவர்கள் ஐரோப்பியக் கலாச்சாரத்தில் ஒன்று கலந்து விட்டார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பாக்கியம் பெற்ற தமிழ் ஆண்கள் மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களும் குடித்து விட்டு கூத்தடிக்கலாம். இதெல்லாம் இங்கே சாதாரணமான விடயம் என்று சொல்வார்கள். ஆனால், இலங்கையில் வாழும் "பக்குவப் படாத" தமிழ் மக்களுக்கு தான் இந்த அறிவுரை எல்லாம்.

எதற்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு "கலாச்சாரம் பற்றி பாடம்" எடுக்கிறார்கள்? புலம்பெயர்ந்து சென்றவர்களில் பெரும்பான்மையானோர் யாழ்ப்பாணத் தமிழர்கள். விவசாய உற்பத்தி குறைவாகவுள்ள யாழ் தீபகற்பத்தில் இருந்து, முன்னொரு காலத்தில் கொழும்பு சென்று உத்தியோகம் பார்த்தார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் செல்வச் செழிப்பு ஏற்பட்டது. அப்போது அதை "மணியோடர் பொருளாதாரம்" என்று சொன்னார்கள்.

ஈழப் போர் தொடங்கிய பின்னர், ஏராளமான இளம் வயதினர், புலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து அனுப்பிய பணத்தில் யாழ் குடாநாட்டின் செல்வம் மேலும் வளர்ந்தது. பெரும்பாலும் பணம் அனுப்புவோர் நெருங்கிய உறவினராக இருந்தாலும், காலப்போக்கில் அது ஒரு சமூகப் பிரிவினையை உண்டாக்கியது. ஊரில் இருக்கும் மக்கள் எல்லோரும் தாம் அனுப்பும் அந்நிய செலாவணியில் வசதியாக வாழ்வதாக புலம்பெயர்ந்தோர் நினைத்துக் கொண்டனர். அது ஓரளவு உண்மையும் கூட. ஆனால், வெளிநாட்டுப் பணத்தில் தங்கியிராத நிறைய குடும்பங்கள் இருக்கின்றன என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை.

இதற்கிடையே களத்தில் போராடிக் கொண்டிருந்த புலிகள் இயக்கத்திற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களே பெருமளவு நிதியுதவி செய்திருந்தனர். ஆனால், புலிகள் முற்றுமுழுதாக வெளிநாட்டுப் பணத்தில் மட்டுமே தங்கியிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களது வருமானத்தில் பெரும்பகுதி சட்டபூர்வமாக, சிலநேரம் சட்டவிரோதமாக நடந்த வணிக நிறுவனங்களில் இருந்தும் கிடைத்து வந்தது. இருப்பினும், தங்களது பணத்தில் தான் போராட்டம் நடப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் இறுமாப்புக் கொண்டிருந்தனர்.

இது ஒரு வகையில், பணக்கார கொடையாளி நாடுகளுக்கும், கடன் வாங்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான உறவு போன்றது. இலங்கைக்கு கடன் வழங்கும் IMF, உலகவங்கி போன்றன, பல நிபந்தனைகளை விதிப்பதில்லையா? அதே மாதிரித் தான் புலம்பெயர்ந்த தமிழர்களும் நடந்து கொள்கிறார்கள். பணம் கொடுப்பதால் தமக்கு அறிவுரை கூறும் அதிகாரம் வந்து விடுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களின் கலாச்சார சீர்கேடுகளை தடுத்து அவர்களை நல்வழிப் படுத்தும் பொறுப்பு தமக்குள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

Sunday, February 14, 2016

பிற்போக்கு தேசியவாதத்திற்கு முற்போக்கு முலாம் பூசும் "மார்க்சிய- அடிப்படைவாதி"!

தன்னை ஒரு மார்க்சிய அறிவுஜீவியாக காட்டிக் கொள்ளும், சாய்மனைக் கதிரை மார்க்சிஸ்டான "இலங்கை வேலன்" என்ற நபர், வலதுசாரி தமிழ்தேசியத்தை நியாயப் படுத்தும் கருத்துக்களை "தூய்மையான மார்க்சியம்" என்று கூறி வருகின்றார். 

இலங்கை அரசியலில் இது ஒன்றும் புதுமை அல்ல. ஏற்கனவே, சிங்கள இடதுசாரி கட்சிகளை சேர்ந்த கதிரை மார்க்சிஸ்டுகள் பலர், இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். சிங்கள தேசியவாதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுவதற்காக, மார்க்சிய சொல்லாடல்களை வரட்டுத்தனமாக பயன்படுத்துவார்கள். அதே பாணியில், இலங்கை வேலன் தமிழ் தேசியவாதத்திற்கு முற்போக்கு முலாம் பூசுகின்றார்.

தேசியவாதத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவதற்காக, "வரையறைகளின் காலப்பொருத்தம் பற்றி!!!" (http://xn--velan-68n6cxa6nmc.blogspot.no/2015/12/blog-post.html) என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். மார்க்சியம் தனக்கு இறைவனால் அருளப் பட்டது என நினைத்துக் கொண்டு எழுதியுள்ள அபத்தங்களை கீழே பட்டியலிடுகிறேன். "இலங்கையில் என்ன நடக்கின்றது?" என்ற உப தலைப்பின் கீழ் எழுதியுள்ளவை தான், முக்கியமாக விவாதிக்கப் பட வேண்டியவை.

கட்டுரையின் தொடக்கத்தில் இனம் என்ற சொல்லுக்கு கறுப்பர், வெள்ளையர், மங்கோலியர் என்று மானிடவியல் பாகுபாட்டை விவரித்து விட்டு, இலங்கை விடயத்தில் மட்டும் இனம் என்ற சொல்லுக்கு புதுமையான வியாக்கியானம் கொடுக்கிறார்: 
//மக்கள் கூட்டத்தினை குறிக்க இனம் என்ற சொல்லும் அதன் பொருட்டு வெளிப்படும் பாகுபாட்டுச் சிந்தனை என்பதை இனவாதமாக ஓட்டுமொத்தமான பார்வையில் பயன்படுத்தப்படுகின்றது.// 

தமிழில் இனம் என்று சொல்லும் பொழுது, அது எப்போதும் சரியான அர்த்தத்தை தருவதில்லை. அதே மாதிரித் தான், இனவாதம் என்ற சொல்லும். ஐரோப்பியர்களைப் பொறுத்தவரையில், இனம் என்ற சொல் வெள்ளையர்கள், கருப்பர்கள் போன்ற நிறப் பாகுபாட்டை மட்டுமே குறிக்கும். ஐரோப்பிய மொழிகளைப் பேசும் மக்களை "தேசியங்கள்" என்று வரையறுத்தார்கள். ஆனால், ஐரோப்பிய காலனிய எஜமானர்களினால் ஆளப்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்கள் ethnic groups என்று வேறு படுத்தப் பட்டனர். 

நாம் இன்று பேசும் நவீன தமிழ் மொழியானது, ஆங்கிலத்தில் இருந்து பல கலைச்சொற்களை மொழிபெயர்த்து பயன்படுத்துகின்றது. ஆகையினால், தமிழில் இவையெல்லாம் "இனம்" என்று பொதுப்படையாக மொழிபெயர்க்கப் பட்டன. தமிழில் மட்டும் தான் இந்தக் குழப்பம் என்று சொல்ல முடியாது. சிங்கள மொழியில் "ஜாதிய" என்ற சொல் இனத்தைக் குறிக்கும். அதாவது, சிங்களத்தில் சாதியை குறிப்பதும் அதே சொல் தான்.

தென்னாபிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மையினரின் அப்பார்ட்ஹைட் என்ற பெயரிலான பாகுபாட்டு அரசமைப்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். வெள்ளை நிறவெறி ஒடுக்குமுறை இனவாதம் பற்றியும் விளக்கம் தேவையில்லை. ஆனால், உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில், சிம்பாப்வே, தென்னாபிரிக்காவில் விடுதலைக்காக போராடிய கருப்பின ஆயுதபாணி இயக்கங்கள், சிலநேரம் வெள்ளையின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தின. பிரிட்டிஷ் ஊடகங்கள், அப்படியான சம்பவங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டன. அதை "கறுப்பர்களின் இனவாதம்" என்று கண்டித்து வந்தன.

ஆகவே, வெறுமனே பாகுபாட்டு "சிந்தனை" மட்டுமே இனவாதமாக கருதப் படுவதில்லை. இனக்குரோத செயற்பாடுகள், எந்த இனத்தில் இருந்து வந்தாலும், அதை இனவாதமாக கருதுவது உலகப் பொதுப் புத்தி ஆகும்.

//இலங்கையில் இருப்பது ஒடுக்கும் பாகுபாட்டுச் சிந்தனை மற்றையது அதனை எதிர்க்கும் பாதுகாப்புச் சிந்தனையாகும்.// 

இலங்கையில் இருப்பது இனவாதம் இல்லையாம்! "மார்க்சியத்தை கரைத்துக் குடித்த" வேலன் சொல்கிறார். எல்லோரும் நம்புங்கள். உலக நாடுகளில் உள்ள அத்தனை இனவாதிகளும், வேலனின் கோட்பாட்டை பயன்படுத்தி தம்மை தற்காத்துக் கொள்ள முடியும். உலகில் நடக்கும் அத்தனை இனப் பகை போர்களையும், "ஒடுக்கும் பாகுபாட்டு சிந்தனைக்கும், அதை எதிர்க்கும் பாகுபாட்டு சிந்தனைக்கும் இடையிலான முரண்பாடு" என்று விளக்கம் கொடுத்து விட்டு கடந்து செல்ல முடியும்.

இன்றைய உலகில் பாகுபாடு (discrimination) என்பது, எப்போதும் இனம், மதம், சாதி சார்ந்தே எழுகின்றது. அமெரிக்காவில் சிறுபான்மை கருப்பர்கள் பாகுபாடு காட்டப் படுகின்றனர். ஐரோப்பாவில் முஸ்லிம் குடியேறிகள் பாகுபாடு காட்டப் படுகின்றனர். ஈராக்கிலும், சிரியாவிலும், சுன்னி முஸ்லிம்களை, ஷியா முஸ்லிம்கள் பாகுபாடு காட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு, இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றது.

ருவாண்டாவில் ஒரே மொழி பேசும், ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும், டுட்சி, ஹூட்டு மக்களுக்கு இடையில் நடந்த இனப்படுகொலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வதாம்? இரத்தவெறி கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட இனங்கள் எல்லாம், வரலாற்றில் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒடுக்கும் இனமாகவும், ஒடுக்கபடும் இனமாகவும் இருந்துள்ளன. இவற்றில் எது "ஒடுக்கும் பாகுபாட்டு சிந்தன"? எது "எதிர்க்கும் பாகுபாட்டுச் சிந்தனை"? ஒவ்வொரு நாட்டு  இனப் பிரச்சினையையும் அவ்வாறு தெளிவாக வரையறுக்க முடியுமா? 

//தமிழ் மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆண்ட பரம்பரைக் கோசம் என்பது இந்த தேசிய இனத்தின் எழுச்சிக்கு உட்பட்டதேயன்றி இது இனவாதத்திற்கு உட்பட்டதல்ல.... 
தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது (myth- symbol- national heroes ) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்.//

தமிழ் தேசியவாதிகளை, "தமிழ் மிதவாதிகள்" என்று மிதமாக வருடிக் கொடுக்கிறார். ஒரு காலத்தில் தமிழர்கள் இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்டார்கள்... ராஜராஜ சோழன் காலத்தில் தெற்காசியா முதல் இந்தோனேசியா வரை ஆண்டார்கள்... இது போன்ற வரலாற்றுப் பெருமிதங்களில் இருந்து தான் ஆண்ட பரம்பரைக் கோஷம் முளைத்தது. இது ஒன்றும் இரகசியம் அல்ல. தமிழ் தேசியவாதிகளே பகிரங்கமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நமது ஆள் ஒரு "மார்க்சிய அறிஞர்" அல்லவா? அதனால், "தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம்" என்று கோட்பாட்டு விளக்கம் கொடுக்கிறார். அது சரி? இது தமிழர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமா?

"இலங்கை வேலன்" என்ற புனைபெயரில் எழுதும் இந்த எழுத்தாளர், தேசியப் பெருமை பேசும் மேற்கைரோப்பிய நாடொன்றில் வாழ்கிறார். அதனால், அவருக்கு ஐரோப்பிய தேசியவாதிகள், அவர்களது கோஷங்கள் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும்.

நோர்வீஜிய தேசியவாதிகளுக்கு வைகிங் சாகசக்காரர்கள் தேசிய வீரர்கள் ஆவார்கள். வைக்கிங் கடலோடிகள் ஐரோப்பாவை ஆட்டிப் படைத்த வரலாற்றுப் பெருமை பற்றி பேசுவார்கள். அதிலிருந்து நோர்வீஜியர்களின் ஆண்ட பரம்பரைக் கோஷம் எழுகின்றது. கிழக்கிந்தியக் கம்பனி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அதனை காலனிய சுரண்டலின் சின்னமாக பார்க்கலாம். ஆனால், நெதர்லாந்து (டச்சு) தேசியவாதிகளுக்கு அது பெருமைக்குரிய தேசிய சின்னம். காலனி அடிமைப்படுத்திய கடலோடிகள் அவர்களது தேசிய வீரர்கள். அவர்களது ஆண்ட பரம்பரைக் கோஷம் காலனிய பொற்காலத்தை நினைவுபடுத்துகின்றது.

இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், ஹிட்லரின் ஆண்ட பரம்பரைக் கோஷம் அமைந்திருந்தது. மேற்கைரோப்பா முழுவதிலும் ஜேர்மனிய இனம் தான் ஆதிக்கம் செலுத்துகின்றது என்று ஒரே போடாகப் போட்டான். ஸ்கண்டிநேவிய, டச்சு மொழிகளுக்கும், ஜெர்மன் மொழிக்கும் இடையில் ஒற்றுமைகள் இருப்பதால் மட்டும் அப்படிக் கூறவில்லை. ஆங்கிலேயரின் மூதாதையர் ஜெர்மனியில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஆங்லோ- சாக்சன் இனத்தவர்கள். பூர்வீகத்தில் ஜெர்மன் மொழி பேசிய பிராங் இனத்தில் இருந்து தான் பிரான்ஸ் என்ற பெயர் வந்தது. ஸ்பானிஷ் மன்னர் பரம்பரையில் ஜேர்மனிய இரத்தம் தான் ஓடுகின்றது. இதிலிருந்து தான் ஜெர்மன் தேசியவாதிகளின் ஆண்ட பரம்பரைக் கோஷம் எழுந்தது. 

"தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோஷம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்." ஆமாம், உலகில் உள்ள எல்லா தேசியவாதங்களினதும் அடிப்படைக் கொள்கையே அது தானே?

முன்னாள் சோவியத் யூனியனில் இருந்தும், முன்னாள் யூகோஸ்லேவியாவில் இருந்தும் பிரிந்த நாடுகளில் பிற்போக்கான தேசியவாதிகள், இனவாதிகள் மேலாதிக்கம் பெற்றது எவ்வாறு? போல்ஷெவிக் புரட்சிக்கு முன்பிருந்த அதே இனவாத சக்திகள் மீண்டும் அரசியலை தீர்மானிக்கும் சக்தியானது எப்படி? 

சோவியத் யூனியனின் குடியரசுகளாக இருந்த பால்டிக் நாடுகளில் ஏன் இன்றைக்கும் ரஷ்யாவை வெறுக்கிறார்கள்? சிறுபான்மையான ரஷ்யர்களை ஒடுக்கிறார்கள்? எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா தேசியவாதிகள், ஜெர்மன் நாஸிகளை விடுதலை வீரர்களாக போற்றும் அளவிற்கு இனவாதிகளாக இருப்பது எப்படி? 

அங்கெல்லாம் லெனினின் கோட்பாடு எவ்வாறு செல்லுபடியாகாமல் போனது? செல்லுபடியாமால் போனால்கூடப் பரவாயில்லை. லெனினின் சிலைகளை அல்லவா உடைத்தார்கள்? அவர்கள் லெனின் சிலைகளைக் கூட, ரஷ்ய பேரினவாத சின்னம் என்று சொல்லித் தான் உடைத்தார்கள் என்ற உண்மை "மார்க்சிய அறிவுஜீவி" வேலனுக்கு தெரியுமா? 

இன்று பால்டிக் நாடுகளிலும், உக்ரைனிலும் மீண்டும் பிரபலமாகும் நாசிஸத்தை, "வேலன் தான் கற்ற மார்க்சிய விஞ்ஞானம்" கொண்டு விளக்குவாரா? நாசிஸ ஆதரவு தேசியவாதங்களையும், மார்க்சியம் கொண்டு புனிதமாக்க முடியாது. வெறுமனே புத்தகப் பூச்சிகளாக இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. நடைமுறை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அது தான் சமூக விஞ்ஞானம்.

Ilankai Velan, நீங்க‌ள் பேசுவ‌து ஒரு வ‌கையில் "மார்க்சிய அடிப்ப‌டைவாத‌ம்" (dogmatism). புனித நூலில் எழுதியுள்ளதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கோரும் ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ம் மாதிரி, மார்க்சியம் தொடர்பான உங்க‌ள‌து க‌ருத்துக்க‌ள் அமைந்துள்ள‌ன‌. அறிவுஜீவித்தனத்துடன் மார்க்சிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌டித்து அப்ப‌டியே ஒப்புவிக்க‌ப் பார்க்கிறீர்க‌ள். அதை ச‌ரியென்று ந‌ம்புகிறீர்க‌ள்.

உங்க‌ளை போன்ற‌வ‌ர்க‌ளை "வ‌ர‌ட்டுத்த‌ன‌மான‌ சித்தாந்த‌வாதிக‌ள்" என்று சொல்வார்க‌ள். பெரும்பாலும் "க‌திரை மார்க்சிஸ்டுக‌ள்". ஒரு மேட்டுக்குடி ம‌ன‌ப்பான்மையுட‌ன் மார்க்சிய‌ம் பேசுவீர்க‌ள். உங்க‌ள‌து வ‌ர்க்க‌மும் அதுவாக‌ இருக்கும். அத‌னால் தான் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள் பேசும் மார்க்சிய‌த்தால் ம‌க்களை க‌வ‌ர‌ முடியாம‌ல் உள்ள‌து. நீங்க‌ள் உழைக்கும் ம‌க்க‌ளுக்கு புரியாத‌ மொழியில் பேசிக் கொண்டு, அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து த‌ள்ளி நிற்கிறீர்க‌ள்.

நீங்க‌ள் வ‌ர‌ட்டுத்த‌ன‌மாக‌ பின்ப‌ற்றும் மார்க்சிய‌ ஆசான்க‌ள் சுய‌நிர்ண‌யம் தொட‌ர்பாக‌ ஒருமித்த‌ க‌ருத்தைக் கொண்டிருக்க‌வில்லை. அதாவ‌து எந்த‌ நிப‌ந்த‌னையும் இன்றி எல்லா சுய‌நிர்ண‌ய‌ங்க‌ளையும் ஆத‌ரிக்க‌வில்லை. ஐரிஷ் சுயநிர்ணயத்தை ஆதரித்த கார்ல்மார்க்ஸ், அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை உடைத்து நொறுக்கும் என்று நியாயப் படுத்தினார்.

பெரும்பான்மை ஐரிஷ் மக்கள் பாட்டாளி வர்க்கத்தினராக இருந்ததும், சோஷலிச அமைப்புகள் தேசிய விடுதலையை முன்னெடுத்ததையும் கார்ல் மார்க்ஸ் சாதகமாகப் பார்த்தார். முதலாம் உலகப்போருக்கு பின்னர், பிரிட்டிஷ், பிரெஞ்சு காலனி நாடுகள் விடுதலையடைய வேண்டும் என்று மூன்றாம் கம்யூனிச அகிலம் தீர்மானம் நிறைவேற்றியது. அதிலும் தேசங்களின் சுயநிர்ணயத்தை, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக கருதும் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது.

ரோசா ல‌க்ச‌ம்பேர்க் ஒடுக்கப்பட்டபோலிஷ் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருந்தும், போலிஷ் தேசிய‌த்தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. இதுதொடர்பாக லெனினுக்கும், ரோசா லக்சம்பேர்க்குக்கும் இடையில் பெரும் விவாதங்கள் நடந்தன. ர‌ஷ்ய‌ பெரும்பான்மை இனத்தை சேர்ந்த லெனின், சிறுபான்மையின போலிஷ் தேசிய‌த்தை ஆத‌ரித்தாலும், அதே நேரம் யூத‌ர்க‌ளுக்கு எதிரான‌ போலிஷ் இன‌வாத‌த்தை ஏற்றுக் கொள்ள‌ முடியாது என்று நேரடியாகவே கூறினார்.

தேசங்களின் சுய‌நிர்ண‌ய‌ம் ப‌ற்றி நூல் எழுதிய‌ ஸ்டாலின், த‌ன‌து சொந்த‌ நாடான‌ ஜோர்ஜியாவில் வ‌ல‌துசாரி தேசிய‌வாதிக‌ள் த‌னிநாடு பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தை ஏற்றுக் கொள்ள‌வில்லை. இராணுவ‌த்தை அனுப்பி அட‌க்கினார். அயலில் இருந்த அச‌ர்பைஜான் தேசிய‌வாதிக‌ளின் சுதந்திர தனிநாடும் பறிக்கப்பட்டது. அவர்கள் தமது த‌னி நாட்டுக் கோரிக்கையை இஸ்லாமிய ஜிகாத் ம‌ய‌மாக்கினார்க‌ள். அதுவும் அட‌க்க‌ப் ப‌ட்ட‌து. மத்திய ஆசியாவில் துருக்கேஸ்தான் தேசத்திற்காக போராடிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள், செம்படையினரால் ஒடுக்கப் பட்டனர்.

எந்த விதமான வர்க்க கண்ணோட்டமும் இன்றி, சுயநிர்ணயத்தை அங்கீகரிக்க வேண்டுமென்று மார்க்சியம் கூறவில்லை. இன‌வாத‌த்திற்கு ப‌திலாக‌ இன்னொரு இன‌வாத‌த்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கார்ல் மார்க்ஸ் முன்மொழியவில்லை. ஒருதேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் அதே நேரம், ஒடுக்கும் இன‌த்தின் பாட்டாளி வ‌ர்க்க‌மும், ஒடுக்க‌ப் ப‌டும் இன‌த்தின் பாட்டாளி வ‌ர்க்க‌மும் உண‌ர்வுத் தோழ‌மையுடன் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று லெனின் விரிவாக எழுதியுள்ளார். நீங்க‌ள் பேசுவ‌து மார்க்சிய‌ம் அல்ல‌. அது எதற்கும் உதவாத வரட்டுவாதம்.

நீங்க‌ள் மார்க்சிய‌ முலாம் பூசிய த‌மிழ் தேசிய‌ம் பேசுகின்றீர்க‌ள். அது உங்கள் மத்தியதர வர்க்க நலன் சார்ந்தது. நீங்கள் ஒரு சிங்களவராக பிறந்திருந்தால், சிங்களத் தேசியம் முற்போக்கானது என்று வாதாடி இருப்பீர்கள். நீங்கள் பேசுவது இட‌துசாரி தேசிய‌ம் கூட அல்ல‌. அது அப்பட்டமான வ‌ல‌துசாரி தேசிய‌ம். அதனால் தான் இனமுரண்பாடுகளுக்கு ந‌டைமுறை சாத்திய‌மான‌ தீர்வு உங்க‌ள் க‌ண்க‌ளுக்கு தெரிய‌வில்லை.

Monday, February 08, 2016

புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளின் கதையைக் கூறும் "கொலம்பஸின் வரைபடங்கள்"


புலிகளின் de facto தமிழீழ ஆட்சி நடந்த வட இலங்கையில் இருந்து, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தென்னிலங்கையில் கொழும்பு நகரிலும், இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் தமது புதிய வசிப்பிடங்களை தேடிக் கொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன் எழுதியுள்ள "கொலம்பஸின் வரைபடங்கள்" என்ற நூல் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

யோ.கர்ணன் புலிகள் இயக்கத்தில் போராளியாக அல்லது உறுப்பினராக இருந்தவர். அவர் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேற எத்தனித்து, அது கைகூடாமல் திரும்பி வந்த அனுபவத்தை எழுதி உள்ளார். அது மட்டுமல்லாது, இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை நடந்த சம்பவங்களை விலாவாரியாக எழுதியுள்ளார்.

உண்மையில், இந்த நூலானது ஒரு மேற்கத்திய நாட்டவரான கோர்டன் வைஸ் எழுதிய "கூண்டு" நூலை ஒத்திருக்கிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் வருகின்றன. ஆனால், கூண்டு நூலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தீவிர புலி ஆதரவாளர்கள், கொலம்பஸின் வரைபடங்கள் நூலை தூற்றிக் கொண்டிருந்தனர். இந்த இரட்டை வேடத்திற்கு காரணம், கோர்டன் வைஸ் ஒரு மேற்கத்திய நாட்டு வெள்ளையர், யோ.கர்ணன் ஒரு தமிழீழத்து கறுப்பர் என்பது மட்டும் தான்.

ஈழத் தமிழருக்கு வாக்களிக்கப் பட்ட புனித பூமியான தமிழீழத்தில் இருந்து பணக்காரர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இது இறுதிப் போர்க் காலத்தில் மட்டும் நடக்கவில்லை. அதற்கு முன்னரே, காலங்காலமாக நடந்து கொண்டிருந்தது. அந்த உண்மையை யோ.கர்ணன் கூட காலந் தாமதித்து தான் அறிந்து கொண்டார். (அவர் வயதால் இளையவர், கொள்கைப் பற்றுடன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தார் என்பது ஒரு முக்கிய காரணம்)

இங்கே இன்னொரு வேடிக்கையையும் அவதானிக்கலாம். யோ. கர்ணனையும் அவரது இந்த நூலையும் தூற்றிக் கொண்டிருக்கும் "புலி விசுவாசிகளில்" பெரும்பான்மையானோர், ஒரு காலத்தில் இதே மாதிரியான நிலைமையில் வாழ்ந்தவர்கள் தான். ஒரு வேளை, யோ. கர்ணனின் வெளியேறும் முயற்சியும் வெற்றியடைந்து, அவர் இன்றைக்கு ஒரு மேற்கத்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரும் புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளில் ஒருவராக இருந்திருக்கக் கூடும். யார் கண்டது?

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், வட இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் உருவாகியது. அப்போதே இளம் வயதினர், அதாவது 16 க்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டோர் வெளியேற தடை விதித்திருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்களுக்கும் வெளியேற அனுமதி அளிக்கவில்லை. பலருக்கு அடிக்கடி கொழும்பு செல்ல வேண்டிய தேவை இருந்தது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டுப் பணம் பெறுபவர்களும், கொழும்புக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் ஒரு குடும்ப உறுப்பினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். திரும்பி வராவிட்டால் அவருக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

இத்தனை தடைகளையும் தாண்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடுகளில் குடியேறியவர்கள் யாராக இருக்கும்? பணக்காரர்கள் மற்றும் வசதி படைத்த மத்திய தர வர்க்கத்தினர். புலிகளின் உத்தியோகபூர்வ பிரச்சார சாதனங்கள், இவர்களை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருந்தன.

உண்மையிலேயே, அன்றிருந்த மேட்டுக்குடியினரில் பெரும்பான்மையானோர், புலிகளை அல்லது தமிழீழத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. யுத்தத்திற்குள் அகப்படாமல் தங்களது உயிரையும், வர்க்க நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, "கொலம்பஸின் வரைபடங்களுடன்" உலகம் முழுவதும் அகதிகளாக சென்றார்கள். 

தஞ்சம் கோருவதற்கு வசதியாக புதிய புதிய நாடுகளை கண்டுபிடித்தார்கள். அங்கே தமது வாழ்க்கையை உறுதிப் படுத்திக் கொண்டதும் என்ன செய்தார்கள்? அப்படியே 360 பாகையில் சுழன்று கரணம் அடித்து, தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டார்கள். இது அவர்களது கதை.

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. ஈழப்போர் நடந்து கொண்ட இடங்களில் இருந்து வெளியேறிய தமிழர்கள், உலகம் முழுவதும் அடைக்கலம் கோரியதை அது உவமைப் படுத்துகின்றது. தானும் ஒரு வரைபடம் தயாரித்து, அது கைகூடாமல் போன அனுபவத்தை இந்த நூலில் எழுதி உள்ளார். சரித்திர கால கொலம்பஸின் கப்பல் பயணத்திற்கு பெருமளவு பணம் செலவானது. அதே போன்று, "தமிழ்க் கொலம்பஸ்கள்" ஒழுங்கு படுத்தும் பயணத்திற்கும் பெருமளவு பணம் செலவாகின்றது. அண்மைக் காலத்தில் இருபதாயிரம் டாலர் அல்லது யூரோ கட்டிக் கூட வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.

பணக்கார மேற்கத்திய நாடுகளில் வாழும் சாதாரண மக்களிடம், ஆயிரம் டாலர்/யூரோ கூட சேமிப்பில் இல்லை. அப்படி இருக்கையில், வறிய நாடான இலங்கையில் இருந்து, பெருமளவு பணம் செலவழித்து வெளிநாடு செல்வதற்கு யாரால் முடியும்? வசதி படைத்தவர்களால் மட்டுமே அது முடிந்த காரியம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், தமது காணிகளை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியோர் ஏராளம் பேருண்டு. 

வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் வசதியான வீடுகளில் புலிகளின் அலுவலகங்கள் இயங்கின. இதை எல்லாம் ஆண்டு அனுபவித்து வந்த பணக்கார வர்க்கம், விருப்பத்துடன் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? சொத்துக்கு ஆசைப்பட்டு யுத்தத்திற்குள் அகப்பட்டு சாவதை விட, மேற்கத்திய நாடொன்றுக்கு சென்றால் இதை விட அதிகமான சொத்து சேர்க்கலாம் என்று கணக்குப் போட்டார்கள். உண்மையிலேயே வெறுங்கையுடன் வெளிநாடு சென்று பணக்காரர்களாக திரும்பி வந்தவர்கள் ஆயிரம் உண்டு.

இறுதிப்போர் வரையில், புலிகளின் de facto தமிழீழத்தில் இருந்து, வசதி படைத்தோர் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். "பணம் கொடுத்தால் எல்லா வழிகளும் திறந்தன" என்று யோ.கர்ணன் இந்த நூலில் எழுதி இருக்கிறார்.

புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், இலட்சக் கணக்கான பணத்தை (லஞ்சமாக) வாங்கிக் கொண்டு, குடும்பத்துடன் வெளியேறிச் செல்ல அனுமதித்தார்கள். சிலநேரம் அந்தப் பணம் இயக்க நிதி என்ற பெயரில் "விரும்பிக்" கொடுக்கப் பட்டது.

இறுதிப் போரில் இராணுவம் சுற்றி வளைத்ததும், கட்டுப்பாட்டுப் பகுதிகள் சுருங்கியதும், போரை நடத்துவதற்கு போதுமான போராளிகள் இருக்காமையும் வெளியேற்றத்தை முற்றாகத் துண்டித்தது. குடும்பத்திற்கு ஒரு பிள்ளை கட்டாய இராணுவப் பயிற்சிக்கு வர வேண்டும் என்று புலிகள் அறிவித்தனர். அது ஏழை, பணக்காரர் எல்லோரையும் பாதித்தது. அப்போதும் சில பணக்காரர்கள் புலிகளுக்கு பணம் கொடுத்து தமது பிள்ளைகளை மீட்டு வந்தனர்.

கொள்கை எல்லாம் குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். கட்டாய இராணுவ பயிற்சியை ஊக்குவித்த புலிகளின் முக்கியஸ்தர்கள் கூட, தமது பிள்ளைகளை சேவையில் ஈடுபடுத்த விரும்பி இருக்கவில்லை. தனது பிள்ளையும் படையில் இணைக்கப் பட்டதை அறிந்து கொண்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை (முக்கிய தலைவர்களில் ஒருவர்), சம்பந்தப் பட்ட பொறுப்பாளரின் சட்டையை பிடித்து உலுக்கி, பிள்ளையை மீட்டு வந்தார். இந்தச் சம்பவத்தை யோ. கர்ணன் தனது நூலில் பதிவு செய்துள்ளார். 

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று பெயரிட்டாலும், அதை எவ்வாறு சரித்திர கால கொலம்பஸ் உடன் ஒப்பிடுவது என்பதில் தடுமாறி உள்ளார். கொலம்பஸ் ஸ்பானிஸ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய நாடுகளை கண்டுபிடித்தார். ஆனால், ஈழத் தமிழர்களோ மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தை வளம் படுத்த அகதிகளாக சென்றனர். இரண்டையும் ஒப்பிட முடியாது.

இருப்பினும், யோ. கர்ணன் எதிர்பாராத ஒற்றுமை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். கொலம்பஸ் வாழ்ந்த காலத்தில், ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளாக இருந்த, அரபு பேசும் இஸ்லாமிய மூர்களின் இராச்சியம் சுருங்கிக் கொண்டிருந்தது. அதன் மீது கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகள் ஆக்கிரமிப்பு போரை நடத்திக் கொண்டிருந்தன. மூர்களின் இராச்சியத்தை புலிகளின் de facto தமிழீழத்துடன் ஒப்பிடலாம். அதே மாதிரி, கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகளை, பௌத்த சிங்கள படைகளுடன் ஒப்பிடலாம்.

அரேபியர் மட்டுமல்லாது, ஸ்பானிஷ் மொழி பேசும் முஸ்லிம்கள், மற்றும் யூதர்கள், என்று பெருந்தொகையான அகதிகள், அன்று மூர்களின் இழந்து கொண்டிருந்த இராச்சியத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் எல்லோரும் மூர்கள் என்று பொதுப் பெயரில் அழைக்கப் படவிருந்தனர். 1492 ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் முடிவில், ஸ்பெயின் நாடு முழுவதும் கத்தோலிக்க மன்னராட்சி நிறுவப் பட்டது. அத்துடன் ஸ்பெயினில் இருந்த "மூர் தேசியம்" அழிந்து விட்டது என்று கருத முடியாது.

புலம்பெயர்ந்த ஸ்பானிஷ் மூர்கள், அல்ஜீரியாவில் "நாடு கடந்த மூர் இராச்சியம்" அமைத்துக் கொண்டனர். அங்கிருந்த படியே, தமது தாயகத்தை ஆக்கிரமித்த "கத்தோலிக்க- ஸ்பானிஷ் பேரினவாத அரசுக்கு" எதிராக போர் தொடுத்தார்கள். இறுதிப்போரில் ஸ்பெயினில் நடந்த "மூர் இனப்படுகொலை", அவர்களது அரசியல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெற்றது. அந்தக் காலங்களில் ஐ.நா. மன்றம் எதுவும் இருக்கவில்லை. இருந்திருந்தால் ஜெனீவா சென்று ஸ்பெயினில் நடந்த மூர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டிருப்பார்கள்.

கிட்டத்தட்ட அதே மாதிரியான வரலாறு, 2009 ம் ஆண்டுக்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியல் அரங்கில் உருவானது. அந்த வருடம், அது வரை காலமும் புலிகளின் ஆட்சியில் இருந்த de facto தமிழீழமான வன்னிப் பிரதேசம், சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்காவில் "நாடு கடந்த தமிழீழம்" உருவானது. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், வன்னியில் நடந்த தமிழ் இனப்படுகொலையை தமது முக்கியமான அரசியல் கோரிக்கையாக வரித்துக் கொண்டன. இஸ்லாமிய மூர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி, அதே பாணியில் புலம்பெயர் தமிழ் தேசிய அரசியலை மீளுருவாக்கம் செய்தனர்.

முன்னாள் புலிப் போராளியான யோ. கர்ணன் எழுதியுள்ள கொலம்பஸின் வரைபடங்கள் நூலானது, "புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின்" கதைகளை கூறுகின்றது. இது அவர்களது சொந்தக் கதை. அதனால் தான், அதை மற்றவர்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை. கொலம்பஸின் வரைபடங்கள் இருப்பதை அறிந்து கொண்டவர்களும், அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் அவர்கள் தான். கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழம் உருவானது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது.


கொலம்பஸின் வரைபடங்கள் நூலை வாங்குவதற்கு: