Sunday, May 16, 2010

கிறீஸ் மக்களைத் தாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம்

முதலாளித்துவ ஊடகங்கள், செல்வந்த நாடுகள் யாவும் குந்தியிருந்து யோசித்து, கிரீசின் பொருளாதாரப் பிரச்சினைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டன. ஒலிம்பிக் போட்டிகளுக்கு கோடிக்கணக்கில் செலவளித்த அரசு, பொதுத்துறையில் "மக்களின் வரிப்பணத்தை விழுங்கி" சொகுசாக வாழும் அரச ஊழியர்கள், அவர்களுக்கு "அநியாயமான முறையில் கிடைக்கும்" இரண்டு மாத போனஸ், "குறைந்த சேவைக் காலத்தில் ஓய்வு பெறுவதால்" அதிகரிக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு.... மொத்தத்தில் ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கமும் குற்றவாளிகள்.

கிரேக்க ஊழியர்களின் சராசரி மாத சம்பளம் 800 யூரோக்கள். ஒரு தனியார் வங்கி ஊழியருக்கும் அல்லது அரச அலுவலக பணியாளருக்கும் அது தான் சம்பளம். வேலைக்கு சேரும் புதிதில் 600 யூரோ கொடுப்பதுமுண்டு. தனியார் துறை, பொதுத் துறை எங்கும் இது தான் நிலைமை. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப்போல கிரீசில் சட்டப்படி தீர்மானிக்கப்பட்ட சம்பள அளவீடு எதுவும் கிடையாது. அதே நேரம் மேற்கு ஐரோப்பிய நாட்டில் சராசரி மாத சம்பளம் 1400 யூரோக்கள். தேர்ச்சியடையாத அடிமட்ட தொழிலாளி கூட குறைந்தது 1200 யூரோக்கள் பெறுகிறார். ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சராசரி வேலை நேரம் ஒரு வாரத்திற்கு 40 மணித்தியாலங்கள். ஆனால் கிரீசில் ஒருவர் வாரத்திற்கு சராசரி 42 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். கிரீசில் ஓய்வூதியம் பெறும் வயது, சராசரி 61,4 (EU: 61,1). கிரீசில் கிடைக்கும் ஓய்வூதியப்பணம் சராசரி 750 யூரோக்கள். (ஸ்பெயினில் 950 ) கிரீசில் உள்ள மொத்த உழைப்பாளிகளில் அரசாங்க ஊழியர்கள் 22 சதவீதம். (நெதர்லாந்தில் 27 %) இந்தத் தரவுகள் எல்லாம் எங்கேயிருந்து கிடைத்தன? பார்க்க: European Commission - Eurostat

சட்டவிரோதமாக தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கும் முதலாளிகள், இந்தப் பொருளாதாரக் கணக்கெடுப்பினுள் வரவில்லை. கிரீசில் லட்சக்கணக்கான குடிவரவாளர்கள், அகதிகள் எந்தவிதமான பதிவும் இன்றி வேலை செய்கின்றனர். குறிப்பாக வயல்களில் கூலித் தொழிலாளர்களாக, நகரங்களில் சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்பவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள். அல்பேனியா, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். கிரீசில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள் அரசுக்கு வரி கட்டுவதில்லை. மருத்துவ சலுகைகளை பயன்படுத்துவதில்லை. போனஸ், ஓய்வூதியம் பற்றியெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவே மாட்டார்கள். ஆனால் மிகக் குறைந்த ஊதியம் (சராசரி மாதம் 300 யூரோ) பெறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் உற்பத்தி செய்த காய்கறிகள், பழங்கள், கிரீஸ் முழுவதும் நுகரப் படுகின்றன. பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஹோட்டல்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் (சில நேரம் சட்டவிரோதமாக) பணிபுரிவதால் தான், ஐரோப்பிய உல்லாசப்பிரயாணிகள் குறைந்த செலவில் தங்குகின்றனர்.

கிரீசில் சட்டப்படி ஒப்பந்தம் போட்டு வேலை செய்யும் கிரேக்கர்கள் கூட போதுமான அளவு சம்பாதிப்பதில்லை. விலைவாசியோ மேற்கு ஐரோப்பிய தரத்தில் தான் உள்ளது. ஆனால் சம்பளமோ மேற்கு ஐரோப்பாவில் கிடைப்பதை விட அரைவாசி. இந்த பிச்சை சம்பளத்தை தான் வருகிற மூன்று ஆண்டுகளுக்கு அதிகரிக்காதே, என்று கடன் கொடுத்த IMF, EU உத்தரவு போட்டுள்ளன. அன்றாட செலவுக்கே பத்தாத சம்பளம் பெறும் கிரேக்க ஊழியருக்கு, வருட முடிவில் கிடைத்து வந்த போனஸ் தொகை சிறிய ஆறுதலைக் கொடுத்து வந்தது. அது கூட ஒரு மாத சம்பளம் அளவே இருக்குமென்பதால், 13 வது மாத சம்பளம் என்றும் அழைப்பார்கள். பொதுத்துறையில் மூன்றில் ஒரு பங்கும், தனியார் துறையில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள். அதன் அர்த்தம் அவர்களுக்கு இந்த போனஸ் எல்லாம் கிடையாது.

உண்மையில் கம்பெனி, ஒரு தொழிலாளிக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதால் மிச்சம் பிடிக்கும் உபரி உழைப்பை தான் "போனஸ்" என்ற பெயரில் கொடுக்கின்றது. அதாவது போனஸ் என்பது அந்த தொழிலாளிக்கு நியாயமாக வழங்க வேண்டிய ஊதியத்தின் ஒரு பகுதி. அது கூட கட்டாயம் கொடுக்க வேண்டியதில்லை. நடைமுறையில், தனியார் நிறுவனங்கள் "இந்த முறை லாபம் போதாது" என்று கூறி கொடுப்பதில்லை. அரச நிறுவனங்கள் மட்டுமே ஒழுங்காக கொடுத்து வருகின்றன. இதை விட 14 வது மாத சம்பளம் என்ற "இன்னொரு போனஸ்" உள்ளது. சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதனை "விடுமுறைப் பணம்" என அழைப்பார்கள். சம்பளத்தில் இருந்து மாதாமாதம் பிடித்து வைக்கப்பட்ட தொகையை வருடத்தில் ஒரு தடவை மொத்தமாக வழங்குவார்ககள். இதைத் தான் "கிரீஸ் அரசு தனது ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் கொடுத்து திவாலானதாக" வலதுசாரி ஊடக பயங்கரவாதிகள் பீதியை கிளப்புகின்றனர். இந்த "இரண்டு மாத போனஸ்" பெரும்பாலான செல்வந்த நாடுகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்டு வருவது தான். தற்போது ஏதோ கிரீஸ் மட்டும் தான் அப்படியொரு விசித்திரமான செலவினத்தைக் கொண்டிருப்பதாக கதை கட்டி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு கிரேக்க தொழிலாளர் வர்க்கத்தின் மீது பழி போட்டு வன்மத்துடன் தாக்குதல் நடத்தி வரும் முதலாளித்துவ பயங்கரவாதிகள், வருமானவரி கட்டாத பணக்காரர்களை கண்டுகொள்வதில்லை. பொதுத்துறை நிறுவனங்களை தனியாரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. கிரீசில் இதுவரை எத்தனை தனியார் கம்பனிகளின் முதலாளிகள் வருமான வரி கட்டாமல் ஏய்த்திருக்கிறார்கள்? தனியாக கிளினிக் நடத்தும் வைத்தியர்கள் பற்றுச்சீட்டு கொடுக்காமல் 3000 - 4000 யூரோ சம்பாதிப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். யார் அதிக வரி ஏய்ப்பது என்பது பணக்கார்களிடையே பிரபலமான விளையாட்டுப் போட்டி. இத்தனைக்கும் கிரீசில் ஐரோப்பாவிலேயே குறைந்த அளவு வருமான வரியே விதிக்கப்படுகின்றது!

ஏதென்ஸ் நகரின் வட பகுதியில் குன்றின் மீது அமைந்துள்ளன அழகான பங்களாக்கள். அந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள். ஒவ்வொரு வீட்டிலும் கோடை கால வெப்பத்தை தணிக்க இதமான குளியலுக்காக நீச்சல் தடாகங்களை கட்டியுள்ளார்கள். அரசாங்கம் நீச்சல் குளம் வைத்திருக்கும் வீடுகளுக்கு பிரத்தியேக வரி அறவிட்டு வருகின்றது. வருமான வரி அதிகாரிகள் கணக்கெடுத்த பொழுது 320 வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே நீச்சல்குளம் வைத்திருப்பதாக எழுதிக் கொடுத்தனர். ஆனால் செய்மதிப் படம் எடுத்து பார்த்த பொழுது, அந்தப் பகுதியில் மட்டும் 16974 நீச்சல் குளங்கள் காணப்பட்டன! (De Tijd, 8 மே 2010 ) முதலாளிகளும், பணக்காரர்களும் அரசுக்கு கட்டாமல் பதுக்கும் வரித்தொகை வருடமொன்றுக்கு 25 பில்லியன் யூரோக்கள்! இருந்தாலும் ஒழுங்காக வரி கட்டி வந்த உழைக்கும் மக்கள் தான் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்க வேண்டுமாம்!!

கடன்கொடுத்த IMF, EU உத்தரவுகளுக்கு அடிபணிந்து உழைக்கும் மக்கள் தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்துக் கொள்கிறார்கள். போனசை, ஊதிய உயர்வை தியாகம் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான காலத்திலும், நாடு திவாலான போதும் பணக்காரர்கள் என்ன செய்கிறார்கள்? தம்மிடம் இருக்கும் பணத்தை சைப்ரஸ் வங்கிகளில் போட்டு முடக்கி வைக்கிறார்கள். அல்லது யூரோக்களாக வீட்டில் பதுக்கி வைக்கிறார்கள். கவனிக்கவும்: IMF, EU பணக்காரர்கள் பதுக்கிய கறுப்புப் பணத்தை அபகரிக்குமாறு கோரவில்லை. கட்டாமல் விட்ட வருமான வரித் தொகையை அறவிடுமாறு அரசுக்கு உத்தரவு போடவில்லை. ஊழல் செய்த அதிகாரிகளை தண்டிக்குமாறு கேட்கவில்லை.

கிரேக்க உழைக்கும் மக்கள் நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்க மறுப்பதும், தமது தலையில் கடன் சுமையை இறக்கி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் வியப்பில்லை. "நெருக்கடியால் ஏற்பட்ட செலவை பணக்காரர்கள் கட்ட வேண்டும்" எனக் கோருவது நியாயமானது. ஆனால் IMF, EU ஆகிய கடன் வழங்குனர்கள், நெருக்கடியை பயன்படுத்தி கிரேக்க அரசை மண்டியிட வைக்கின்றனர். நவ- லிபரலிச தாக்குதலை தொடுக்கின்றனர். "அனைத்து தீமைகளுக்கும் அரசே மூல காரணம்" என மந்திரம் ஓதுகின்றனர்.

*******************

கிரீஸ் நெருக்கடி தொடர்பான முன்னைய பதிவுகள் :
ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி
ஏதென்சில் மீண்டும் மக்கள் எழுச்சி
கிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது
கிறீசிலிருந்து புரட்சிகர கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை

8 comments:

Jai said...

//கிரீசில் உள்ள மொத்த உழைப்பாளிகளில் அரசாங்க ஊழியர்கள் 22 சதவீதம். //

ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டில் ஐந்துகோடி மக்கள் தொகையில் 12 லட்சம் அரசு ஊழியர்கள்.அதாவது வெறும் 2.4% தான் அரசு ஊழியர்கள்.மத்திய அரசு ஊழியர்கள் தமிழ்நடடில் இன்னொரு 12 லட்சம் பேர் இருப்பார்கள் என யூகித்தாலும் மொத்த மக்கள் தொகையில் 5% மட்டும்தான் இங்கே அரசு ஊழியர்கள்.

கிரேக்கத்தில் 22% பேர் அரசு ஊழியர்கள் என்றால் அது மலைக்க வைக்கும் தொகை.ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஒரு வாழ்க்கைதுணை, ஒரு குழந்தை என வைத்துகொண்டாலே சுமார் 66% கிரேக்க மக்கள் அரசு ஊழியர் அல்லது அரசு ஊழியரின் குடும்பத்தை சார்ந்தவர்கள்.அப்புறம் ஏன் கிரேக்கம் திவாலாகாது?

//முதலாளிகளும், பணக்காரர்களும் அரசுக்கு கட்டாமல் பதுக்கும் வரித்தொகை வருடமொன்றுக்கு 25 பில்லியன் யூரோக்கள்! இருந்தாலும் ஒழுங்காக வரி கட்டி வந்த உழைக்கும் மக்கள் தான் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்க வேண்டுமாம்!!//

பணகாரர்கள் வரி ஏய்ப்பு செய்வதை நான் சரி என சொல்லவில்லை. அதை கண்டுபிடித்து கடுமையாக தண்டனை தரவேண்டும்.ஆனால் நீங்களே பதிவில் சொல்லியிருப்பது போல அந்த தொகை 25 பில்லியன் யூரோ மட்டுமே.கிரேக்க பெயிலவுட் தொகை 146 பில்லியன் யூரோ.அதனால் தான் ஐஎமெப் கடன் தர இத்தனை சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த கோருகிறது.

திவாலான நாட்டுக்கு கடன் தருபவன் தன் பணம் திரும்ப வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கதான் செய்வான்.அந்த சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட விருப்பம் இல்லையெனில் ஐ.எம்.எப் கடன் வேண்டாம் என சொல்லிவிடலாமே? கிரேக்க அரசுக்கு சும்மா கடனை அள்ளிதர ஐ.எம்.எப் ஒன்றும் தான தருமம் செய்யும் அமைப்பு இல்லையே?

Kalaiyarasan said...

அன்புடன் நண்பர் ஜெய்க்கு,
"ஒரு நாட்டில் அரசு ஊழியரின் தொகை அதிகமென்றால் அந்த நாடு திவாலாகி விடும்" என்ற பொருளாதார சூத்திரத்தை எங்கே கற்றீர்களோ தெரியாது. நான் கொடுத்த தரவுகளின் படி அரச ஊழியர்கள் ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் கிரீசை விட அதிகம். உங்களது சூத்திரப்படி இந்த நாடுகள் தான் முதலில் திவாலாகி இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே?
அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ லாப, நஷ்டக் கணக்கை பகிரங்கமாக காட்ட வேண்டியது அவசியம். எல்லா நிறுவனங்களும் ஒரே கணக்கு முறையை தான் பயன்படுத்துகின்றன. கிரீசில் ஏற்கனவே எத்தனையோ தனியார் நிறுவனங்கள் (வங்கிகள் உட்பட) திவாலாகி இருக்கின்றன. அதன் விளைவாக தான் அரசாங்கமும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது. கடந்த இரண்டு வருட கிரேக்க பொருளாதார செய்திகளை படித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியும். நீங்கள் இந்த உண்மையை மறைத்து, கிறீஸ் அரசு மட்டுமே பொருளாதாரத்தை நடத்த தெரியாமல் நாட்டை திவாலாக்கி விட்டது போலக் கூறுகின்றீர்கள். தனியாரின் கைகளில் ஒப்படைத்தால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று ஜோசியம் சொல்கின்றீர்கள். ஐயா, சர்வதேச மூலதனத்துடன் தொடர்பு வைத்திருந்த தனியார் நிறுவனங்கள் தானே அமெரிக்க நிதி நெருக்கடி காரணமாக மண் கவ்வின? (கிறீஸ் நிதி நெருக்கடி தொடர்பான எனது பதிவுகளையாவது தொடர்ந்து படித்திருந்தால் புரியும்.) அயோக்கியர்களிடமும், திருடர்களிடமும் நாட்டை ஒப்படைக்க சொல்கிறீர்களே, இது எந்த வகையில் நியாயம்?
முதலாளிகளும், பணக்காரர்களும் ஏய்க்கும் வரி வருடத்திற்கு 25 பில்லியன் என்று தான் குறிப்பிட்டிருக்கிறேன். (மொத்தம் 25 பில்லியன் அல்ல) அவைகள் இப்படி எத்தனை வருடங்கள் கறுப்புப் பணம் சேர்த்திருப்பார்கள்? குறைந்தது 20 வருடங்கள்? அத்தனை வருட கறுப்புப் பணத்தையும் சேர்த்தால் வெளிநாட்டு கடனுக்காக கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காது. IMF , EU ஏதோ பாவம் பார்த்து கடன் கொடுக்கவில்லை. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. கடன் கொடுத்தால் கிடைக்கும் வட்டி, முதலை விட அதிகமாக கிடைக்கும் என்பதால் வாயில் எச்சில் வடியக் காத்திருக்கின்றன. அவர்கள் கடன் கொடுப்பது அவர்களது நன்மைக்காகவே தவிர கிரேக்க மக்களுக்காக அல்ல.

கிரேக்க மக்களுக்கு ஐரோப்பிய யூனியனும் அவர்கள் கொடுக்கும் பணமும் தேவையில்லை. அனால் கடன் கொடுக்கா விட்டால் அடுத்த நாளே கிறீஸ் அரசு காணாமல் போய்விடும். அந்த இடத்தில் மக்களே அதிகாரத்தை கையில் எடுப்பார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு தெரியும்.

Jai said...

//நான் கொடுத்த தரவுகளின் படி அரச ஊழியர்கள் ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் கிரீசை விட அதிகம். உங்களது சூத்திரப்படி இந்த நாடுகள் தான் முதலில் திவாலாகி இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே? //

அந்த நாடுகளில் தனியார்துறையும், பன்னாட்டு கம்பனிகளும் அதிகம் இருப்பதால் அவை இதை தாக்குபிடிக்கின்றன போலும்.இதே பாதையில் போனால் அவையும் வருங்காலத்தில் திவால் தான் ஆகும்.

//தனியாரின் கைகளில் ஒப்படைத்தால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விடும் என்று ஜோசியம் சொல்கின்றீர்கள். ஐயா, சர்வதேச மூலதனத்துடன் தொடர்பு வைத்திருந்த தனியார் நிறுவனங்கள் தானே அமெரிக்க நிதி நெருக்கடி காரணமாக மண் கவ்வின? //

சந்தை பொருளாதாரத்தில் எழுச்சியும்,வீழ்ச்சியும் சகஜம்.இன்று அந்த வங்கிகள் அனைத்தும் லாபத்துக்கு திரும்பிவிட்டன. அமெரிக்க அரசு அளித்த கடன் தொகையை வட்டியுடன் திருப்பி தந்துவிட்டன.இது விஷயத்தில் அமெரிக்க பெடெரல் வங்கி தன் கடமையை (lender of the last resort) மட்டுமே செய்தது.

//முதலாளிகளும், பணக்காரர்களும் ஏய்க்கும் வரி வருடத்திற்கு 25 பில்லியன் என்று தான் குறிப்பிட்டிருக்கிறேன். (மொத்தம் 25 பில்லியன் அல்ல) அவைகள் இப்படி எத்தனை வருடங்கள் கறுப்புப் பணம் சேர்த்திருப்பார்கள்? குறைந்தது 20 வருடங்கள்? அத்தனை வருட கறுப்புப் பணத்தையும் சேர்த்தால் வெளிநாட்டு கடனுக்காக கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காது. //

சரி..கருப்புபணத்தை பிடுங்கி கடனை கட்டிவிட்டு ஐ.எம்.எபிடம் கடன் வாங்காமல் இருக்கலாமே? கிரேக்கத்தில் வரி ஏய்ப்பு நடப்பது ஜெர்மனி மற்றும் ஐ.எம்.எப்பின் பிரச்சனை அல்ல.அவர்கள் பொருளாதாரத்தை அவர்கள் தான் சரிப்படுத்த வேண்டும்.

//MF , EU ஏதோ பாவம் பார்த்து கடன் கொடுக்கவில்லை. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. கடன் கொடுத்தால் கிடைக்கும் வட்டி, முதலை விட அதிகமாக கிடைக்கும் என்பதால் வாயில் எச்சில் வடியக் காத்திருக்கின்றன. அவர்கள் கடன் கொடுப்பது அவர்களது நன்மைக்காகவே தவிர கிரேக்க மக்களுக்காக அல்ல. //

சந்தையை விட மிககுறைந்த விலையில் தான் ஐ.எம்.எப் கடன் தருகிறது.(5% என நினைக்கிறேன்).இது கிரேக்கம் தற்போது சந்தையில் கடன்வாங்ககூடிய வட்டிவிகிதத்தை விட நாலைந்து சதவிகிதம் குறைந்த வட்டிதான். மற்றபடி இந்த கடனை தருவது ஐ.எம்.எப் மட்டும் அல்ல. ஐரோப்பிய யூனியனின் பிறநாடுகள் சுமார் நூறுபில்லியனுக்கும் மேலாக தம் மகக்ளின் வரிப்பணத்தை கிரேக்கர்களுக்கு தருகின்றன.அதுவும் வேண்டாவெறுப்பாக தான் தருகின்றன

//கிரேக்க மக்களுக்கு ஐரோப்பிய யூனியனும் அவர்கள் கொடுக்கும் பணமும் தேவையில்லை. அனால் கடன் கொடுக்கா விட்டால் அடுத்த நாளே கிறீஸ் அரசு காணாமல் போய்விடும். அந்த இடத்தில் மக்களே அதிகாரத்தை கையில் எடுப்பார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்கு தெரியும்.//

அப்படி என்னதான் செய்வார்கள் என்று சற்று விளக்கமாக சொல்லலாம்.எனக்கு சஸ்பென்ஸ் தாங்கலை:-)

Kalaiyarasan said...

//ஐரோப்பிய யூனியனின் பிறநாடுகள் சுமார் நூறுபில்லியனுக்கும் மேலாக தம் மகக்ளின் வரிப்பணத்தை கிரேக்கர்களுக்கு தருகின்றன.அதுவும் வேண்டாவெறுப்பாக தான் தருகின்றன//

கிரீசும் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடு என்பதால், கிறீஸ் நெருக்கடியில் சிக்கிய நேரம் உதவி செய்ய கடமைப் பட்டுள்ளது. கிரேக்க மக்களும் ஐரோப்பிய யூனியனுக்கு தமது பங்களிப்பை செலுத்தியுள்ளனர். தமது கிரேக்க சகோதரர்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவுவதற்கு பிற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் விரும்புகின்றார்கள். ஐரோப்பிய யூனியன் அதைக் கொடுக்காமல் அடாவடித்தனம் செய்வது அயோக்கியத்தனம். ஐரோப்பிய சகோதரர்கள் இருக்கும் போது, கிறீஸ் அரசாங்கம் சந்தையில் கடன் வாங்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்படிக் கூறுவது மனிதத் தன்மையும் கிடையாது.

ஜெய் அவர்களே! மூச்சுக்கு முன்னூறு தடவை "மக்களின் வரிப்பணம் வீணாகிறது" என்று மக்கள் மேல் கரிசனை கொண்ட நபர் போல முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள். இதுவரையிலான உங்களது மக்கள் விரோதக் கருத்துகளை பட்டியலிடுகிறேன். பாருங்கள்.
1. பொதுத் துறையில் வேலை செய்யும் மக்களின் வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
2. வேலையிழந்த மக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யக் கூடாது.
3. வேலை செய்யும் மக்களுக்கு கிடைத்து வரும் பிச்சை சம்பளத்தை இன்னும் குறைக்க வேண்டும்.
4.மக்களின் வாழ்க்கை செலவை ஈடு கட்ட உதவிய போனஸ் இனிமேல் கொடுக்கக் கூடாது.
5.மக்களின் ஓய்வூதியத்தை குறைக்க வேண்டும் அல்லது ஒரேயடியாக நிறுத்த வேண்டும்.
6.மக்கள் தமது வயோதிப வயதிலும் ஓய்வு எடுக்காமல் உடல் வருத்தி உழைக்க வேண்டும்.
7.மக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் ரத்து செய்து அவர்களை துன்பப் பட வைக்க வேண்டும்.

இவ்வாறு எப்போதும் மக்களுக்கு எதிராகவே பேசிப் பழகியவர், "மக்களின் வரிப்பணத்தை" எடுத்து தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க கோருகிறார். வரிப்பணத்தை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், அதை லாபமாக மாற்றி தமது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்வார்கள். மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தியதற்கு நன்றி கூட தெரிவிக்க மாட்டார்கள். மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை. நன்றிக்கடனாக மக்களுக்கு என்ன செய்வார்கள்? ஒன்றுமேயில்லை. இப்படி மக்களின் பணத்தை தனது சொந்த சொத்தாக மாற்றுவதற்கு பெயர் பகல் கொள்ளை! "தனியார் நிறுவனங்கள் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" என்று நீங்கள் நேரடியாகவே கூறலாம். இவ்வளவு பீடிகை போட்டு சுற்றி வளைத்து கூறத் தேவையில்லை.

Jai said...

//கிரீசும் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடு என்பதால், கிறீஸ் நெருக்கடியில் சிக்கிய நேரம் உதவி செய்ய கடமைப் பட்டுள்ளது. கிரேக்க மக்களும் ஐரோப்பிய யூனியனுக்கு தமது பங்களிப்பை செலுத்தியுள்ளனர். தமது கிரேக்க சகோதரர்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவுவதற்கு பிற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் விரும்புகின்றார்கள். ஐரோப்பிய யூனியன் அதைக் கொடுக்காமல் அடாவடித்தனம் செய்வது அயோக்கியத்தனம். //

இல்லை.ஜெர்மனியில் கிரேக்கத்துக்கு கடன் தர பொதுமக்கள் விரும்பவில்லை என்பதால் தான் ஏஞ்செலா மார்க்கெல் அரசு கடன் தர இத்தனை தயக்கம் காட்டியது.இது தேர்தல் பிரச்சனையாக கூட மாறலாம் என அந்த அரசு பயப்படும் அளவுக்கு அங்கே பொதுமக்களிடையே இதற்கு எதிர்ப்பு.

//இதுவரையிலான உங்களது மக்கள் விரோதக் கருத்துகளை பட்டியலிடுகிறேன். பாருங்கள்.
1. பொதுத் துறையில் வேலை செய்யும் மக்களின் வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். //

இல்லை.அவை தனியார் மயமாக்கபடவேண்டும்.தனியார்மயமானால் அந்த கம்பனிகளில் பெரும்பான்மையான ஊழியர்களின் வேலை பாதுகாக்கபடும்.

//2. வேலையிழந்த மக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யக் கூடாது. //

நான் அப்படி சொல்லவில்லை.வேலை இழந்தால் மூன்றுமாதம் வரை அரசு ஒருவருக்கு உதவிதொகை வழங்கலாம்.

//3. வேலை செய்யும் மக்களுக்கு கிடைத்து வரும் பிச்சை சம்பளத்தை இன்னும் குறைக்க வேண்டும்.//

நான் அப்படி எங்கும் சொல்லவில்லை.சம்பளம் உயர்வை மூன்று வருடம் ப்ரீஸ் செய்ய தான் கூறுகிறேன்.

//4.மக்களின் வாழ்க்கை செலவை ஈடு கட்ட உதவிய போனஸ் இனிமேல் கொடுக்கக் கூடாது.//

ஆம்.போனஸ் தர அரசிடம் காசு இல்லை.

//5.மக்களின் ஓய்வூதியத்தை குறைக்க வேண்டும் அல்லது ஒரேயடியாக நிறுத்த வேண்டும். //

இல்லை. Guaranteed pension benefits எனும் முறையை நிறுத்தவேண்டும்.ஓய்வூதியத்தை யூனியன்களே சந்தையில் முதலீடு செய்து பணத்தை ஊழியர்களுக்கு வழங்கிகொள்ளலாம்.மக்களின் வரிப்பணம் இதற்Kஉ பயன்பட கூடாது.

//6.மக்கள் தமது வயோதிப வயதிலும் ஓய்வு எடுக்காமல் உடல் வருத்தி உழைக்க வேண்டும். //

நான் அப்படி கூறவில்லை.தம் வயதான காலத்தில் தனக்கு தேவையான முதலீடுகலை செய்துகொள்வது தனிமனிதனின் கடமை.அதற்கு சந்தையில் தன் சம்பளத்தின் ஒரு பகுதியை சேமிக்க அரசு வரிசலுகைகள் மூலம் உதவலாம். Guaranteed pension benefits எனும் முறை இருக்ககூடாது.

//7.மக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் ரத்து செய்து அவர்களை துன்பப் பட வைக்க வேண்டும். //

இதுவும் நான் கூறாதது.

Anonymous said...

comrade, i fell india also being in same situation because we to repay to world bank about the rs 33,83,000 crs by the end of 2010. But if anything market crisis arised like the guy jai said, india will be the another greek. what is your opinion com.

Anonymous said...

com, i fell india also in same situation, because the ndian govt have to give back rs 33,83,000 crs toe the world bank by the end of this 2010. it will be very tough if anything like the bulshit market crisis rised. what is your opinion.

Kalaiyarasan said...

தோழர் நீங்கள் எதிர்பார்ப்பது சரி தான். எப்போது? என்பது தான் யாருக்கும் தெரியாது. தற்போது இந்தியாவில் சுரண்டப்படும் பணம் கடனுக்கு வட்டி என்ற பெயரில் ஒழுங்காக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் கிரீசில் நடந்ததைப் போல வெளிநாட்டு வங்கிகள் திட்டமிட்டு திவாலாக வைப்பதும் சாத்தியமே. கடந்த இருபதாண்டு கால பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பெற்ற பயன்கள் யாவும் ஒரே நாளில் காணாமல் போகலாம். அப்போது மேலும் கடனுக்குள் மூழ்கி நாட்டை அடமானம் வைக்கும் நிலைக்கு போகலாம். இந்தியாவுக்கு முன்னர் இந்தோனேசியா, தாய்லாந்து பொருளாதாரங்கள் புலிப்பாய்ச்சல் பொருளாதாரம் என அழைக்கப்படும் அளவிற்கு வளர்ச்சி கண்டிருந்தன. 10 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நெருக்கடி அதற்கு முடிவு கட்டியது. மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படும் போது இந்திய பொருளாதாரமும் பாதிக்கப்படலாம்.