Saturday, May 25, 2019

"ஸ்டாலின் விழுங்கிய போலந்து" - நடந்தது என்ன?

இன்றும் பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் "போலந்து படுகொலைகள்" பற்றிக் குறிப்பிட்டுப் பேச மறுப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் வழமை போலவே பல பிழையான வரலாற்றுத் தகவல்களையும், மிகைப்படுத்தல்களையும் உள்ளடக்கியுள்ளன. அத்துடன் இன்றைய லிபரல்-ஜனநாயகவாதிகள் கூட அன்றைய நாஸி பிரச்சார ஊடகங்களில் தெரிவிக்கப் பட்ட தகவல்களை நம்பிப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட "கட்டின் காட்டில் நடந்த மர்மப் படுகொலைகள்" பற்றிய ஆய்வுகளும், விவாதங்களும் இன்றைக்கும் பல 'அறிவுஜீவிகளால்" ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பப் படுகின்றன. ஆகவே, அந்தக் காலகட்டத்தில் போலந்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக அலசுவது அவசியம்.

இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சற்று முன்னர், அதாவது 1939 ம் ஆண்டிலிருந்து 1941 வரையில் நடந்த சம்பவங்கள் தான் இங்கு பேசுபொருளாக உள்ளன. அன்றைய காலகட்டத்தில் நாஸி ஜெர்மனி அயலில் இருந்த நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்து விட்டு சோவியத் யூனியன் மீதான படையெடுப்புக்கு தயாராக இருந்தது. ஜெர்மனியின் இராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு சோவியத் யூனியன் பலமாக இருக்கவில்லை. ஆகையினால் தற்காலிகமாக மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் பெயரால் அழைக்கப்படும் மொலோடோவ் - ரிப்பன்டாப் உடன்படிக்கை குறித்த சர்ச்சைகளை தவிர்த்து விட்டு அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களை இங்கு பார்ப்போம். அந்த உடன்படிக்கையில் போலந்தை பங்குபோடுவதற்கான "இரகசிய ஒப்பந்தம்" இருந்ததாக மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டமைக்கான ஆதாரம் எதுவுமில்லை. இது அன்றைய கள நிலவரத்தை கணக்கில் எடுக்காத முற்சாய்வான எண்ணக்கருவாக கருத இடமுண்டு.

ஒப்பந்தம் போட்டவுடனே ஜெர்மனி போலந்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்தது. வார்சோ வரையிலான போலந்தின் மேற்குப் பகுதிகளை இரண்டு வாரங்களில் கைப்பற்றி ஆக்கிரமித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் ஜெர்மன் படைகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே, சோவியத் செம்படை படையெடுத்து சென்று கிழக்கு போலந்து பகுதிகளை கைப்பற்றி ஆக்கிரமித்தது.

இந்த இடத்தில் ஓர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஜெர்மன் படையெடுப்புக்கு எதிராக போலந்து இராணுவம் தீவிரமாகப் போரிட்டது. தலைநகர் வார்சோ கடும் இழப்புகளுடன் சரணடைந்தது. அதற்குக் காரணம் போலந்தின் மேற்குப் பகுதி போலிஷ் இனத்தவரின் தாயகப் பகுதியாக கருதப் படக் கூடியது. அதற்கு மாறாக, கிழக்குப் பகுதியில் போலந்து இராணுவம் மிகக் குறைந்தளவு எதிர்ப்பைக் காட்டியது. பெருமளவு இழப்புகள் ஏதுமின்றி சோவியத் செம்படை அந்தப் பகுதிகளை கைப்பற்றியது. அதற்கு என்ன காரணம்? அதைப் புரிந்து கொள்ள வரலாற்றை சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான போலந்து ராஜ்ஜியத்தின் எல்லைகள் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தன. அதற்குள் பல சிறுபான்மை இனங்களது பிரதேசங்களும் அடங்கி இருந்தன. முதலாம் உலகப்போர் வரையில் போலந்து ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1917 ம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. லெனின் தலைமையிலான கம்யூனிச அரசு உள்நாட்டுப் போர்களால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தது. அதே நேரம் மேற்கில் இருந்து ஜெர்மனியும் படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தியது.

1919 ம் ஆண்டு, முதலாம் உலகப்போர் இன்னமும் முடிந்திராத காலகட்டத்தில், ஜெர்மனியின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து, ரஷ்யா தனது பல்லாயிரம் சதுரமைல் பரப்புடைய பிரதேசங்களை விட்டுக் கொடுத்தது. குறிப்பாக இன்றைய பெலாரஸ், உக்ரைனின் மேற்குப் பகுதிகள் அதற்குள் அடங்கும். பிற்காலத்தில் ஜெர்மனி போரில் தோற்கடிக்கப் பட்டதால், போலந்து என்ற புதிய தேசம் உருவானது. புதிய போலந்து குடியரசில் ரஷ்யா விட்டுக் கொடுத்த பகுதிகள் உள்ளடக்கப் பட்டிருந்தன.

இப்போது மீண்டும் 1939 ம் ஆண்டுக்கு வருவோம். முதலாம் உலகப்போர் முடிந்து இருபது வருடங்களுக்குப் பின்னர், ரஷ்யா பறிகொடுத்த பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக ஸ்டாலின் நம்பினார். பெலாரஸ், உக்ரைனிய சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில், கிழக்குப் போலந்தை கைப்பற்றியதாக படையெடுப்புக்கு காரணம் கூறப்பட்டது. உண்மையில் நடந்ததும் அது தான்.

அந்தக் காலகட்டத்தில் சோவியத் செம்படையினர் ஆக்கிரமித்த கிழக்குப் போலந்து பிரதேசத்தில் 13 மில்லியன் போலந்து பிரஜைகள் வாழ்ந்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே போலிஷ் இனத்தவர்கள். சுமார் 8 மில்லியன் மக்கள் பல்வேறு மொழிகளை பேசும் சிறுபான்மை இனத்தவர்கள். குறிப்பாக பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள். அவர்கள் சோவியத் செம்படையினரின் படையெடுப்புக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்கள். போலிஷ் பேரினவாத நுகத்தடியில் இருந்து தம்மை விடுதலை செய்ய வந்தவர்களாக கருதி சோவியத் படைகளை வரவேற்றனர்.

1939-1941 வரையில், ஓரிரு வருடங்கள் நீடித்த சோவியத் இராணுவத்தின் போர்க்கால நிர்வாகத்தின் கீழ் நிலைமை தலைகீழாக மாறி இருந்தது. குறிப்பாக, போலிஷ் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். ஒரு காலத்தில் மேலாதிக்கம் செலுத்திய பெரும்பான்மை இனமாக இருந்த போலிஷ்காரர்கள், திடீரென ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாக மாறிவிட்டனர். அதற்கு மாறாக, முன்னர் போலிஷ் பேரினவாதிகளால் ஒடுக்கப்பட்டு வந்த சிறுபான்மை இனங்கள், தற்போது மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கின.

சோவியத் படையெடுப்புக்கு முன்னர் இருந்த போலந்து குடியரசில், உரிமைகள் மறுக்கப் பட்ட சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருந்த பெலாரஸ், உக்ரைன், யூத இனத்தவர்கள், தற்போது விடுதலை பெற்று விட்டதாக உணர்ந்தார்கள். அதனால், சோவியத் செம்படையினருடன் ஒத்துழைத்தனர். முன்னர் தம்மை ஒடுக்கி வந்த போலிஷ் அரச நிர்வாகத்தில் பணியாற்றியவர்களை காட்டிக் கொடுத்தனர்.

முன்பிருந்த போலந்து குடியரசின் நிர்வாகம், இராணுவம், போலிஸ், நீதிமன்றம் ஆகிய அரச நிறுவனங்கள் அனைத்திலும் போலிஷ்காரர்களே அமர்த்தப் பட்டிருந்தனர். அப்போது போலந்தை ஒரு சர்வாதிகாரி ஆண்டு வந்தார். ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. சிறுபான்மையினத்தவரின் உரிமைகள் மதிக்கப் படவில்லை. 

ஆகவே, போலிஷ் பேரினவாதக் கொள்கை அடிப்படையில் போலந்தை ஆண்ட, வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்கள் சிறுபான்மை இனத்தவரின் வெறுப்புக்கு உள்ளானதில் வியப்பில்லை. அவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலிஷ் அரச நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் சோவியத் செம்படையினரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

மேலும், ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கிழக்குப் போலந்தில் இயங்கிய சோவியத் புலனாய்வுத்துறைப் பிரிவுகள், போலிஷ் வர்க்க எதிரிகளை தேடிப் பிடித்து கைது செய்து கொண்டிருந்தன. முதலாளித்துவக் கட்சிகள் மட்டுமல்லாது, போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் கூட, தீவிர போலிஷ் தேசியவாதிகளாக சந்தேகிக்கப் பட்டனர். அவர்கள் எல்லோரும் பிற்போக்கான எதிர்ப்புரட்சியாளர்களாக கருதி கைது செய்யப் பட்டனர். 

அது மட்டுமல்ல, நிலவுடைமையாளர்கள், முதலாளிகள், செல்வந்தர்கள் எல்லோரும் பெரும்பாலும் போலிஷ் ஆதிக்க இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் அத்தனை போரையும் ஒருவர் விடாமல் கைது செய்து சைபீரிய குலாக் முகாம்களுக்கு அனுப்பப் பட்ட சம்பவங்களை தான் இன்று பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் இரைமீட்கிறார்கள். அவர்களில் பலருக்கு விசாரணையின் பின்னர் மரணதண்டனை விதிக்கப் பட்டிருக்கலாம். அதை மிகைப் படுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான், கட்டின் காட்டில் நடந்த போலிஷ் இராணுவ வீரர்களின் படுகொலை பற்றிய தகவலையும் பார்க்க வேண்டும். சோவியத் செம்படையினர் வருவதற்கு முன்னரே பெரும்பாலான போலிஷ் படையினர் வெளியேறி விட்டனர். அவர்கள் ருமேனியா ஊடாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்று விட்டனர். 

எஞ்சியிருந்த போலிஷ் இராணுவ அதிகாரிகளும், வீரர்களும் செம்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டனர். அவர்களைத் தான், பிற்காலத்தில் ஜெர்மன் படையெடுப்பு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கட்டின் காட்டில் சுட்டுக் கொன்று புதைத்ததாக சொல்கிறார்கள். அதுவும் நாஸி ஜெர்மனி வழங்கிய தகவல் தான். அந்தக் காலத்திலும் எதிரிப் படையினரின் மனித உரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வது சர்வசாதாரணமான விடயம்.

22-06-1941 அன்று, அப்போது யாரும் எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. சோவியத் யூனியன் மீது போர் தொடுப்பதாக நாஸி ஜெர்மனி அறிவித்தது. கிழக்குப் போலந்திற்கு ஜெர்மன் படைகள் வருவதற்கு முன்னர், செம்படையினர் அவசர அவசரமாக வெளியேறி விட்டனர். குறிப்பிட்ட காலம் அங்கு யாருடைய நிர்வாகமும் இருக்கவில்லை. அதாவது, சோவியத் இராணுவமோ, ஜெர்மன் இராணுவமோ இல்லாத காலகட்டம் ஒன்று கிழக்கு போலந்தில் ஏற்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் போலிஷ் மொழி பேசும் மக்கள் ஜெர்மன் இராணுவம் வருவதை எதிர்பார்த்து மகிழ்ச்சியாக காத்திருந்தார்கள். அதற்கிடையில், அவர்கள் "ரஷ்யர்களுக்கு காட்டிக் கொடுத்த" யூதர்களை பழிதீர்க்க எண்ணினார்கள். உண்மையில் சில யூதர்கள் ரஷ்யர்களுடன் ஒத்துழைத்தனர். அன்று சோவியத் போல்ஷேவிக் கட்சியின் தலைமையில் பல யூதர்கள் இருந்த படியால், போலந்து யூதர்கள் செம்படையினர் மீது அனுதாபம் கொண்டிருந்தமை ஒரு சாதாரணமான விடயம். அதற்காக எல்லா யூதர்களும் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், ரஷ்யர்கள் மீதிருந்த போலிஷ் மக்களின் வெறுப்புணர்வு யூதர்கள் மீது திரும்பியது. பல போலிஷ் கிராமங்களில் இருந்த யூதர்கள் போலிஷ்காரர்களால் இனப்படுகொலை செய்யப் பட்டனர். அங்கிருந்த கத்தோலிக்க பாதிரியார்களும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தனர். போலிஷ்காரர்களால் கொல்லப் பட்ட யூதர்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. ஏனெனில் பல தசாப்த காலமாக இந்த விபரங்கள் மிக இரகசியமாக வைக்கப் பட்டிருந்தன. அண்மைக் காலமாகத் தான் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சில தகவல்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. குறிப்பாக Jedwabne எனும் கிராமத்தில் பல நூறு யூதர்கள் கொல்லப் பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையால், அது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. (பார்க்க: Neighbors, The Destruction of the Jewish Community in Jedwabne, Poland)

ரஷ்யப் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்த நேரம், அதனை பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் போல்ஷெவிக்குகள் மத்தியில் இருந்தது. அருகில் இருந்த போலந்திலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடிக்க வேண்டும் என்று லெனின் எதிர்பார்த்தார். அதற்காக செம்படையை அனுப்பி வைத்தார். ஆனால், ஸ்டாலினிடம் போலந்து குறித்து மாறுபட்ட கருத்து இருந்தது. "பொதுவாக போலிஷ்காரர்கள் பிற்போக்கான தீவிர தேசியவாதிகள், கத்தோலிக்க மத அடிப்படைவாதிகள்... அவர்களிடமிருந்து தற்போதைக்கு ஒரு வர்க்கப் புரட்சியை எதிர்பார்க்க முடியாது..." என்பது ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்தது. இன்று வரையிலான போலந்து வரலாறும் அதையே நிரூபித்து வருகின்றது.

இன்று வரையில் போலிஷ் சமூகம் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கின்றது. நீண்ட காலமாக பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாத அளவிற்கு எதிர்ப்பு இருந்தது. எண்பதுகளின் இறுதியில் கம்யூனிச ஆட்சி கவிழ்ந்த பின்னர், அனைவரும் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. 

அத்துடன் ரஷ்ய எதிர்ப்பு என்பது போலந்தில் ஒரு தேசியக் கலாச்சாரமாக உள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் முரண்பாடு போன்று அயல் நாடுகளுக்கு இடையிலான தேசியப் பகை உணர்வு. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட, "ஸ்டாலின் நடத்திய போலிஷ் படுகொலைகள்" பற்றிய கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பரப்புரைகளும், போலந்து தேசியவாதிகளால் தான் உற்பத்தி செய்யப் படுகின்றன.