Monday, February 27, 2017

பொதுவுடமை ஒரு "சிந்தனைவாதம்"(?) - ஒரு அபத்தக் குறிப்பு


இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும்,  வலதுசாரி தமிழ்த் தினசரியான வீரகேசரி,அடிக்கடி கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரைகளை பிரசுரிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதற்காகவே இருக்கும் சில "அறிவுஜீவிகள்", அபத்தமான கட்டுரைகளை எழுதிக் கொடுப்பார்கள்.

ஆசி கந்தராஜா என்பவர் வீரகேசரி வாரமஞ்சரியில் (26 February 2017) "பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு" என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார். (அவரது கட்டுரையை இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம்:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு)  

சுருக்கமாக சொன்னால், இது இன்னொரு கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை. வாசகர்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து, அவர்களை அறியாமையில் வைத்திருக்கும் உள்நோக்கம் கொண்டது. கட்டுரையின் தொடக்கம் முதல் முடிவு வரை அபத்தக் களஞ்சியம் தான்.

முதலில், "பொதுவுடைமை ஒரு சிந்தனைவாதம்" என்ற கட்டுரையின் தலைப்பே அபத்தமானது. "சிந்தனாவாதம்" என்று சொல்வது ஒரு கருத்தியல் முதல்வாதம். அதாவது, உலகில் இருப்பது எல்லாம் சிந்தனாவாதம் மட்டுமே எனும் தத்துவம். அதைத் தான் மதங்கள் பின்பற்றுகின்றன. உதாரணம்: கடவுளை நீங்கள் உணர முடியும், ஆனால் பார்க்க முடியாது. அதாவது கடவுள் என்ற சிந்தனை மட்டுமே நிரந்தரமானது.

மார்க்சியம் கருத்துமுதல்வாத தத்துவத்தை மறுக்கிறது. அது பொருள்முதல்வாத தத்துவத்தை பின்பற்றுகின்றது. அதாவது உலகில் நாம் கண்ணால் காண்பது மட்டுமே நிஜம். எனும் பொருள்முதல்வாத தத்துவம். அதிலிருந்து தான் விஞ்ஞானம் பிறந்தது. மார்க்சியம் கூட விஞ்ஞானம் தான். கார்ல் மார்க்ஸ் இயங்கியலையும் பொருள் முதல்வாதத்தையும் இணைத்தார். அதையே நாம் இன்றைக்கு மார்க்சியம் என்று சொல்கிறோம்.

கார்ல் மார்க்ஸ் தனது ஆய்வில் ஆதிகால பொதுவுடைமை சமுதாயம் பற்றி எழுதி இருக்கிறார். அதாவது ஆதி கால மனித சமூகங்கள் பொதுவுடமை உற்பத்தி அமைப்பைக் கொண்டிருந்தன. சிறு குழந்தைக்கும் புரியும் மொழியில் சொன்னால், வேட்டையாடி வாழ்ந்த ஆதிகால மனிதர்கள், இயற்கை வளங்களை தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஒரு குடும்பம் மாதிரித் தான் ஒரு சமூகம் இருந்தது. அதற்கு ஆதாரமாக, 19ம் நூற்றாண்டிலும் பொதுவுடமையை பின்பற்றிய அமெரிக்க செவ்விந்திய பழங்குடியின மரபுகளை எடுத்துக் காட்டுகின்றார். மேலதிக விபரங்களுக்கு எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு என்ற நூலை வாசிக்கவும்.

//கம்யூனிச கொள்கைளின் கேள்வி ஞானத்திலே, பொதுவுடமை சித்தாந்தம் பற்றி, முழுதாக ஒரு புத்தகத்தையேனும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே, முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவி’தத்தனத்தை அடையாளப் படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என, நான் நினைப்பதும் உண்டு.//(ஆசி கந்தராஜா)

கம்யூனிச கொள்கை என்பது கேள்வி ஞானத்தின் ஊடாக வருவதல்ல. அது வர்க்கப் போராட்டத்தின் ஊடாக வருவது. அதாவது, தமது உழைப்பை தொழிற் சந்தையில் விற்று அதற்கு நஷ்டஈடாக கூலி பெற்றுக் கொள்ளும் உழைப்பாளிகள், தமது வாழ்க்கைப் போராட்ட அனுபவத்தின் ஊடாக பெற்றுக் கொள்வது தான் கம்யூனிசக் கொள்கை. முதலாளித்துவ நாடுகளில் எல்லோரும் "சுகபோக" வாழ்க்கை வாழ்வதாக யார் சொன்னார்கள்?

நானும் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டில் தான் வாழ்கிறேன். இங்கே வந்து வேலை செய்து பாருங்கள். குறைந்தது மூன்று பேர் செய்யும் வேலையே ஒரு ஆளைக் கொண்டு செய்விப்பார்கள். அது இங்கே சர்வசாதாரணம். ரெஸ்டோரன்ட் ஒன்றில் கோப்பை கழுவும் அடிமட்ட தொழிலாளியாக இருந்தாலும், அலுவலக ஊழியராக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சிய வேலைப்பளு பற்றி முறையிடாதோர் எவருமில்லை. Burn out என்று சொல்வார்கள். இங்கே மிக மோசமான உழைப்புச் சுரண்டல் நடக்கிறது. அது எல்லோருக்கும் தெரியும்.

முதலாளித்துவ நாடுகளில், பல உழைப்பாளிகள் மன அழுத்தங்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலருக்கு அளவுக்கு மிஞ்சிய வேலைப்பளு காரணமாக மார்படைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளது. இருபது வருட கடும் உழைப்பாளி நாற்பது வயதில் மண்டையைப் போடுவது பல இடங்களில் நடந்துள்ளது. பல தமிழர்களும் பலியாகி உள்ளனர்.

அனேகமாக, நிரந்தரமாக பணியில் இருக்கும் ஊழியர்கள் வேலைப்பளு காரணமாக அடிக்கடி சுகயீன விடுப்பு எடுத்து வீட்டில் நிற்கிறார்கள். அதனால் தற்போது எந்தக் கம்பனியிலும் நிரந்தர வேலை கொடுப்பதில்லை. ஒப்பந்தம் முடிந்தவுடன் தூக்கி வீசுகிறார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளில் பதினாறு, பதினெட்டு வயது இளைஞர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அரைவாசி சம்பளம். இப்படிப் பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில் ந‌ல‌ன்புரி அர‌சு என்ற‌ பெய‌ரில், சோஷ‌லிச‌த்தின் வ‌ச‌திக‌ளை வேறு வித‌மாக‌ ந‌டைமுறைப் ப‌டுத்துகிறார்க‌ள். அது தொழிலாள‌ர் வ‌ர்க்க‌ம் போராடிப் பெற்ற‌ உரிமை. அந்த‌ப் போராட்ட‌ம் இப்போதும் தொட‌ர்கிற‌து. உதார‌ண‌த்திற்கு அண்மையில் பிரான்ஸில் ந‌ட‌ந்த‌ பொது வேலைநிறுத்த‌ப் போராட்ட‌த்தை குறிப்பிடலாம். 

பிரான்ஸில் தொழிற்சங்கங்களுக்கு ஏற்கனவே இருந்த பேரம் பேசும் உரிமைக்கான சட்டத்தை மாற்றினார்கள். அதன் மூலம், ஒரு வேலையாளை இலகுவாக பணி நீக்கம் செய்வதற்கும் அனுமதித்தது. அதற்கு எதிராக பிரான்ஸ் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு வந்து நெடுஞ்சாலைகளை மறித்து போராடினார்கள். பொலிஸ் படை, அளவுகடந்த வன்முறை பிரயோகித்து தான் போராட்டத்தை அடக்கியது.

//சோசலிஷ நாடொன்றில் நான் கல்வி கற்ற காலங்களில், மாற்றுக் கருத்துடன் அங்கே வாழ்ந்த கிழக்கு ஜேர்மன் பேராசிரியர் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ஒன்று இன்றும் மனதில் நிக்கிறது. ‘சோசலிஷம், கம்யூனிசம் பேசும் பலருக்கு பணத்தையும் பதவியையும் கொடுத்துப் பாருங்கள், மறுகணமே அவர்கள் முதலாளித்துவம் பேசத்துவங்கி விடுவார்கள். பொதுவுடமை ஒரு சிந்தனாவாதம் மட்டும்தான். நடைமுறைக்கு உதவாது’ என்பது பேராசிரியரின் நம்பிக்கை. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்கிற நம்மவர் பழமொழியை அவர் அநுசரித்துப் பேசுவார்.// (ஆசி கந்தராஜா)

ஆரம்பத்திலேயே "மாற்றுக் கருத்துடன் வாழ்ந்த பேராசிரியர்" என்கிறார். சோஷலிச நாடுகளில் வாழ்ந்த எல்லோரும் அரசை ஆதரித்தவர்கள் அல்ல. எதிர்த்தவர்களும் இருந்தார்கள். முதலாளித்துவ ஆதரவாளர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருந்தது. (அதை இந்தக் கட்டுரையாளரே உறுதிப்படுத்துகிறார்.) அதிக பட்சம், இனவாதம்  பேசியவர்களை மட்டுமே கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

ஸ்டாலினின் காலத்திற்குப் பிறகு, சீனாவைத் தவிர வேறெந்த சோஷலிச நாட்டிலும் வர்க்கப் போராட்டம் நடக்கவில்லை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கு பதிலாக, குருஷேவ் முன்மொழிந்த "அனைத்து மக்களின் நாடு" கொள்கை பின்பற்றப் பட்டது. அதன் அர்த்தம், அங்கு அறிவுஜீவிகளை கொண்ட மத்தியதர வர்க்கம் இருப்பதற்கு அனுமதிக்கப் பட்டது. அந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பணம், பதவிக்கு ஆசைப் படுவது இயற்கை. அது  அவர்களது வர்க்கக் குணாம்சம்.

//சோசலிஷம் பேசிய நாடுகள் இன்று சின்ன பின்னப்பட்டுப் போனதுக்கும், முதலாளித்துவ முறைகளைப் பின் பற்றி இப்போது அவை வீறுநடை போடுவதற்கும் காரணம் என்ன? நடை முறையில் அவை தோற்றுப்போனதற்கு பேராசிரியர் சொன்னது மட்டுமே காரணமாகுமா? சித்தாந்தங்களிலும் பார்க்கச் சிக்கலானவை நடைமுறைகள் என்பதை, நான் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் அநுபவ வாயிலாக அறிந்துகொண்டேன்.//(ஆசி கந்தராஜா)

அந்த நாடுகள் எதுவும் முதலாளித்துவ முறைகளை பின்பற்றி "வீறு நடை" போடவில்லை. இது முழுக்க முழுக்க கற்பனாவாதம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகம். சம்பளம் குறைவு. வாழ்க்கைச் செலவு அதிகம். இலட்சக்கணக்கான ஏழைகள் வாழ்வதற்கு சிரமப் படுகிறார்கள். அதனால், தேர்தல்களில் தீவிர தேசியவாத அல்லது இனவாத கட்சிகளை வெல்ல வைக்கிறார்கள். அதற்கு அடிப்படைக் காரணம் பொருளாதாரப் பிரச்சினை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்தாலும், ருமேனியாவும், பல்கேரியாவும் இன்று வரைக்கும் மிகவும் வறுமையான நாடுகளாக உள்ளன. ருமேனிய, பல்கேரிய தொழிலாளர்கள் மேற்கு ஐரோப்பாவில் மிகக் குறைந்த கூலிக்கு அடிமை வேலை செய்கிறார்கள்.  அந்த நாடுகளில் தனிநபர் வருமானம் மிகவும் குறைவு. அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அண்மையில் கூட ருமேனியாவில் ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் எழுச்சி நடந்தது.

முதலாளித்துவத்தை பின்பற்றி "வீறுநடை போட்ட" அல்பேனியா, திருடர்களையும், பாலியல் தொழிலாளர்களையும் இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அது இன்றைக்கும் ஐரோப்பாவில் மிகவும் வறுமையான நாடாக உள்ளது. அரசாங்கத்தில் கூட கிரிமினல்கள் தான் அங்கம் வகிக்கிறார்கள். அதைக் காரணமாகக் காட்டி பலர் அகதியாக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சென்ற வருடம், நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரியவர்களில் அல்பேனியர்கள் முதலிடத்தில் இருந்தனர். தாம் கிரிமினல் கும்பல்களிடமிருந்து பாதுகாப்பு தேடி வந்ததாக காரணம் கூறினார்கள்.

//எல்லோரும் வாழ வீடு, எல்லாருக்கும் வேலை, இலவச மருத்துவம், என்ற சோசலிஷ சித்தாந்தம், புத்தகத்தில் மட்டுமே என்பதை உணர, எனக்கு அதிக காலம் பிடிக்கவில்லை.... கம்யூனிசம் என்ற மாயமான் கொள்கையில் அங்கு கஷ்டப்பட்டவர்கள் பாமர மக்களே.//(ஆசி கந்தராஜா)

எல்லோரும் வாழ வீடு, எல்லாருக்கும் வேலை, இலவச மருத்துவம், என்ற சோசலிஷ சித்தாந்தம், புத்தகத்தில் மட்டும் இருக்கவில்லை. இது கட்டுரையாளரின் கற்பனாவாதம். உண்மையிலேயே அது நடைமுறையில் இருந்தது. (பார்க்க: உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி ) அந்த நாடுகள் "சின்னாபின்னமாகிய" பொழுது, அதாவது முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், மேற்படி வசதிகள் தொடர்ந்தும் இருக்கும் என்று சாதாரண மக்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே. 

முன்பு சோவியத் குடியரசாக இருந்து பிரிந்த மோல்டாவியா பற்றிய டச்சு ஆவணப்படம் பற்றிய குறிப்புகளை எனது வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். அந்த ஆவணப் படத்தில் சாதாரண மோல்டாவியா மக்களை பேட்டி எடுக்கிறார்கள். முன்பு சோவியத் யூனியன் இருந்த காலத்தில் வாழ்க்கை சிறப்பாக இருந்ததாகவும், தமக்கு எல்லா வசதிகளும் கிடைத்தாகவும் அந்த மக்கள் கூறுகின்றார்கள். தற்போது "வீறுநடை போடும்" முதலாளித்துவ காலத்தில் அவர்கள் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள். (பார்க்க: "சோவியத் கால வாழ்க்கை மிகவும் சிறந்தது!" - பொது மக்களின் வாக்குமூலம்)

வீடு, வேலை, இலவச மருத்துவம், இலவச கல்வி போன்ற வசதிகள் மட்டுமல்ல, விடுமுறைக்கு இலவச சுற்றுலா பயணமும் ஒழுங்கு படுத்தப் பட்டது! அதுவும் சாதாரணமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க முடிந்தது. சோவியத் யூனியனில் கிரீமியா பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. குளிர்வலைய பிரதேசத்தில் வாழ்ந்த ரஷ்யர்கள், வெப்ப வலைய பிரதேசமான கிரீமியா கடற்கரைக்கு சென்று உல்லாசமாக விடுமுறையை களித்தனர். பிரயாணச்சீட்டு, தங்குமிட வசதி அனைத்தும் இலவசம்! கிழக்கு ஜெர்மானியர்கள் உல்லாசக் கப்பலில் பல உலக நாடுகளுக்கு சென்று வந்தனர். (பார்க்க: தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை )

//ஜேர்மனியில் நான் கல்வி கற்ற காலங்களில், லெனின், கார்ல் மார்க்ஸ், எங்கிள்ஸ் போன்ற மேதைகள் எழுதிய கருத்துச் சாரங்களை, ஜேர்மன் மொழியிலேயே கல்வி கற்றுத் தேறும் வாய்ப்பு கிட்டியது. அத்துடன் இதில் பரீட்ஷை எழுதி, சிறப்பு சித்தியும் பெற்றுள்ளேன்.// (ஆசி கந்தராஜா)

இதை நான் நம்பவில்லை. யாரும் அவற்றை வாசிக்கவில்லை என்று தானாகவே கற்பனை பண்ணிக் கொண்டு புளுகுகிறார். ஒன்றில் இவர் எதையும் படிக்கவில்லை, அல்லது படித்தாலும் அதை மறைத்து விட்டு வேண்டுமென்றே தவறான தகவல்களை எழுதுகிறார்.

//கார்ல்மார்க்ஸ், ‘Das Kapital’ (The capital) என்னும் நூலை தன் தாய்மொழியாகிய ஜேர்மன் மொழியில் எழுதினார். பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புச் சம்பந்தமாக இதுவரை முன் மொழியப்படாத புதிய சித்தாந்தத்தை அது முன் வைத்தது. கம்யூனிச பொருளாதார வாதத்தின் விவிலிய நூல் இதுதான். இது குறித்த பல்வேறு விளக்கங்களை கார்ல் மார்க்ஸ், தமது தோழர் எங்கிள்ஸ் உடன் இணைந்தும் எழுதினார்.// (ஆசி கந்தராஜா)

இவ‌ர் உண்மையிலேயே மூல‌த‌ன‌ம் நூலை ப‌டித்தாரா என்ப‌து ச‌ந்தேக‌த்திற்குரிய‌து. ஏன் என்றால் அதில் முக்கிய‌மான‌ ப‌குதியான‌ உப‌ரிம‌திப்பு ப‌ற்றி ஒரு வார்த்தை கூட‌ க‌ட்டுரையில் இல்லை. மூல‌த‌னம் ஒரு "க‌ம்யூனிச‌" பொருளாதார‌ நூல் அல்ல‌! சுத்த அப‌த்த‌ம். அதில் உள்ள‌து முழுவ‌தும் முத‌லாளித்துவ‌ பொருளாதார‌ம் மீதான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள். அதை விவிலிய நூலுடன் ஒப்பிடுவது மகா அபத்தம். அப்படியானால், ஆடம் ஸ்மித் எழுதிய வெல்த் ஒப் நேஷன்ஸ் நூலைப் பற்றி என்ன சொல்கிறார்? அது லிபரல் பொருளாதாரவாதத்தின் விவிலிய நூல் என்பாரா?

//அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன... இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரேநேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்! அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.// (ஆசி கந்தராஜா)

அமெரிக்க‌ டால‌ர், மற்றும் பிரிட்டிஷ் ஸ்டேர்லிங் பவுன்ஸ் உல‌க‌ம் முழுவ‌தும் ப‌ரிவ‌ர்த்த‌னைக்கு விட‌ப் ப‌டும் நோக்க‌ம் வேறு. அது ச‌ர்வ‌தேச‌‌ வ‌ர்த்த‌க‌த்தின் மீது ஆதிக்க‌ம் செலுத்தும் நோக்க‌ம் கொண்ட‌து. காலனிய காலத்தில் பிரித்தானியா உலகில் அரைவாசியை ஆண்டது. அதன் கடற்படை சர்வதேச வர்த்தகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அப்போது ஸ்டேர்லிங் பவுன்ஸ் உலகமெல்லாம் பரவியதில் என்ன ஆச்சரியம்?

இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா பிரிட்டனை மிஞ்சிய வல்லரசாக மாறியது. அமெரிக்க டொலர் இன்று பெட்ரோ டொல‌ர் என்றும் அழைக்க‌ப் ப‌டுகின்ற‌து. அதற்குக் காரணம், ஒபெக் நாடுகளின் பெட்ரோல் விற்ப‌னை முழுக்க‌ முழுக்க‌ அமெரிக்க டொல‌ரில் ந‌ட‌க்கிற‌து. ஒரு தடவை, ச‌தாம் ஹுசைன், க‌டாபி ஆகியோர் யூரோவுக்கு மாற‌ விரும்பினார்க‌ள். அத‌ற்குப் பின்ன‌ர் அவ‌ர்க‌ள் ப‌த‌வியில் இருந்து தூக்கியெறிய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

//சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் புழக்கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் சோசலிச நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப்பணம் தங்கு தடையின்றி உலகமெங்கும் உலவுவதில்லை.// (ஆசி கந்தராஜா)

சோஷ‌லிச‌ நாடுக‌ளின் ம‌த்திய‌ வ‌ங்கிக‌ளிலும் த‌ங்க‌ம் கையிருப்பில் வைத்திருந்தார்க‌ள். இது அடிப்படை பொருளாதாரம். ஒரு நாடு சோஷலிச பொருளாதாரத்தை பின்பற்றினாலும் மத்தியவங்கியும் அதன் செயற்பாடுகளும் ஒன்று தான். ஒரு பொருளின் விலையை உற்பத்தி செலவுகள் தீர்மானிக்கின்றன. அதன் விற்பனை விலையை சந்தை தீர்மானிக்கிறது. ஒரு சோஷலிச நாட்டிலும் அப்படித் தானே இருக்க வேண்டும்? 

பணத்தாள்களை அதிகமாக அச்சிட்டால் அங்கு பணவீக்கம் ஏற்படும். பணத்தின் மதிப்பு குறைவாகவும், பொருளின் விலை அதிகமாகவும் இருக்கும். ஆகவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தாள்களை மட்டுமே புழக்கத்தில் விட முடியும். ஒரு நாடு முதலாளித்துவத்தை பின்பற்றினாலும், சோஷலிசத்தை பின்பற்றினாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தை பரிவர்த்தனை செய்து கொள்வது வழக்கம். அதற்கான விலைகளையும் நிர்ணயித்துக் கொள்கின்றன. ஒரு தேச‌த்தின் நாண‌ய‌ம் அந்த‌ நாட்டிற்குள் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌த‌ற்கு ம‌ட்டும் தான். அது ஏன் உல‌க‌ம் முழுக்க‌ சுற்ற‌ வேண்டும்? சோஷ‌லிச‌ பொருளாதார‌த்தை, உல‌க‌ம் முழுவ‌தும் ஆதிக்க‌ம் செலுத்தும் முத‌லாளித்துவ‌ பொருளாதார‌த்துட‌ன் ஒப்பிடுவதே அபத்தமானது.முதலாளித்துவமானது, இன்று நிதி மூலதான ஏகாதிபத்தியமாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது.

//கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது. (“Geld ist ein zirkulation mittel” – German language, Money is a circulation medium).// (ஆசி கந்தராஜா)

ப‌ண‌ம் சுற்றி சுழ‌ல‌ வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் கூற‌வில்லை! அதை சொன்ன‌து ஆட‌ம் ஸ்மித். அவர் எழுதிய வெல்த் ஒப் நேஷன்ஸ் (The Wealth of Nations) நூலில், அதாவது "லிபரல்வாத விவிலிய நூலில்", அப்படி எழுதப் பட்டுள்ளது. ஆடம் ஸ்மித் ஒரு முத‌லாளித்துவ‌ பொருளாதார‌ மேதை. இன்றை‌க்கும் மேற்க‌த்திய‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில் அவரது கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். அதாவது, ப‌ண‌ம் சுற்றி சுழ‌லும் கொள்கையும் பின்ப‌ற்ற‌ப் ப‌டுகின்ற‌து. ஒரு உதார‌ணம் த‌ருகிறேன். வ‌ங்கிக‌ள் சேமிப்பை ஊக்குவிப்ப‌தில்லை. அத‌ற்காக‌ மிக‌க் குறைந்த‌ வ‌ட்டி கொடுக்கிறார்கள்.

//விடுமுறையில் நான் யாழ்ப்பாணத்தில் நின்றபோது, லங்கா சமசமாசக் கட்சிக்கும் கம்யூனிஸ் கட்சிக்கும் தேர்தல் வேலை செய்த பொன்னையா மாஸ்ரர் தொடக்கம், தமிழரசு தம்பித்துரை அண்ணர் வரை கார்ல் மார்க்ஸ்ஸின் ‘பணம் சுற்றிச் சுழல வேண்டிய தத்துவத்தை’ சொல்லிப் பார்த்தேன். சோசலிஷம் எங்களுக்கு சரிவருமோ? என அன்று எனக்கு ஏற்பட்ட ஐயத்துக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.// (ஆசி கந்தராஜா)

"பணம் சுற்றிச் சுழலும் தத்துவம்", லிபரல்வாத விவிலிய நூல் எழுதிய ஆடம் ஸ்மித் கண்டுபிடித்த தத்துவம் என்பது, ஜெர்மனியில் படித்த ஆசி கந்தராஜாவுக்கே தெரியவில்லை. இலங்கையில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? இவர் சோஷலிசம் என்று லிபரலிசத்தை சொல்கிறாரோ என்று எனக்கு ஐயம் ஏற்படுகின்றது. ஏனென்றால், இலங்கையில் முதலாளித்துவம் இருந்தாலும், அது மேற்குலகில் இருப்பதைப் போன்ற நவ- தாராளவாத முதலாளித்துவமாக இருக்கவில்லை. அந்த மாற்றம் தற்போது மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

முன்பெல்லாம், இப்போதும் கூட, பெரும்பாலான தமிழ் மக்கள் நகை, காணி போன்ற அசையும், அசையா சொத்துக்களில் பணத்தை பதுக்குவார்கள். அதனால் பணம் சுற்றிச் சுழலுவதில்லை. அதற்கு மாறாக, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் யாரும் காணி, நகைகளில் பணத்தை முடக்குவதில்லை. வீடு வாங்கினாலும் வங்கிக் கடனில் வாங்கி இருப்பார்கள்.

மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான மக்களிடம் எந்தச் சொத்தும் கிடையாது. அவசரத் தேவைகளுக்காக கொஞ்சப் பணம் சேமித்து வைத்திருப்பார்கள். பலரிடம் அதுவும் இருப்பதில்லை. தலைக்கு மேலே கடனை வைத்திருப்பார்கள். கடனால் சூழப்பட்ட சமூகத்தில் தான் பணம் சுற்றிச் சுழல்கிறது. 

அந்த நிலைமை தற்போது இலங்கையிலும் வந்து விட்டது. கிரெடிட் கார்ட், லீசிங் என்று மக்களை கடனில் மூழ்கடிக்கும் சாதனங்கள் வந்து விட்டன. நாட்டில் கடனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், பணம் சுற்றிச் சுழல்கிறது. எப்படியோ ஆடம் ஸ்மித்தின் தத்துவம் நடைமுறைக்கு வந்துவிட்டது.


பிற்குறிப்பு:
அவரது கட்டுரைக்கு நான் மறுப்புத் தெரிவித்து எழுதியதும், "மார்க்ஸ் எழுதிய‌ மூல‌த‌ன‌ம் நூலை ஜேர்ம‌ன் மொழியில் வாசிக்குமாறு", திரு ஆசி க‌ந்த‌ராஜா என‌க்கு ப‌தில் அளித்திருக்கிறார். என‌க்கு ஜேர்ம‌ன் மொழி தெரியும் என்பது ஒரு புற‌ம் இருக்க‌ட்டும். 

எல்லோரும் எல்லாவ‌ற்றையும் மூல‌ மொழியில் தான் வாசிக்க‌ வேண்டுமா? ஏற்க‌ன‌வே த‌ர‌மான‌ த‌மிழ், ஆங்கில‌ மொழிபெய‌ர்ப்புக‌ள் உள்ள‌ன‌ தானே? விவிலிய‌ நூலை வாசிப்ப‌த‌ற்கு எம‌க்கு கிரேக்க‌ மொழி தெரிந்திருக்க‌ வேண்டுமா? என்ன‌வொரு அப‌த்த‌மான‌ ப‌தில் இது? 

உண்மையில் அவ‌ர் எதையும் ப‌டிக்க‌வில்லை. அதை ம‌றைப்ப‌த‌ற்காக ஜேர்மன் மொழியில் ப‌டித்த‌தாக‌ புளுகுகிறார். த‌ன‌து க‌ட்டுரையை வாசிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, யாருமே மார்க்ஸின் நூல்க‌ளை ப‌டிக்க‌வில்லை என்று அவ‌ர் நினைத்துக் கொள்கிறார். அதை த‌னது க‌ட்டுரையின் தொட‌க்க‌த்திலேயே கூறி விடுகிறார். 

அது மட்டுமல்ல, நான் கொடுத்த இணைப்புகளை கூட "ஏட்டுச் சுரைக்காய்" என்று நிராகரித்துள்ளார். அதில் ஒன்று நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் சொல்லப் பட்ட விடயங்கள். முன்னாள் சோவியத் குடியரசான மொல்டாவியா மக்களை பேட்டி கண்டிருந்தனர். மற்றைய இணைப்பு Le Monde எனும் பிரெஞ்சு பத்திரிகையில் வந்த கட்டுரை ஆகும்.

Tuesday, February 21, 2017

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும்

வர்க்கப் போராட்டத்தில் வியூகமும், உத்திகளும் 
(Strategy and Tactics in the Class Struggle)

பாடம் ஒன்று : வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

இன்று வரையிலான வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்ட வரலாறே ஆகும் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதி உள்ளனர். வர்க்கப் போராட்டம் என்பது ஒன்றுடன் ஒன்று இணைய முடியாத இரண்டு பகைச் சக்திகளுக்கு இடையிலான போர் ஆகும்.

அரசியல் பொருளாதாரத்தின் மீதான விமர்சனம் என்ற பிரசுரத்தில் மார்க்ஸ் எழுதிய முன்னுரையில் இருந்து, வர்க்கப் போராட்டம் பற்றிய சுருக்கமான முக்கிய குறிப்புகள்:

- சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து வர்க்கப் போராட்டம் உருவாகின்றது.

- ஆரம்பத்தில் மனிதர்களின் சுய விருப்புகளுக்கு அப்பாற்பட்டு வர்க்கப் போராட்டம் பரிணமிக்கிறது. இருப்பினும் தற்போதுள்ள சமூக அமைப்பின் இந்த தீவிர மாற்றமானது, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உணர்வு பூர்வமான புரட்சிகர நடைமுறையை கோரி நிற்கிறது.

- இரு துருவங்களான சக்திகளுக்கு இடையிலான பகை முரண்பாடுகளை உண்டாக்கும் தோற்றுவாயை ஒழித்துக் கட்டுவதற்கு வர்க்கப் போராட்டம் முயல்கின்றது. காலத்திற்கு ஒவ்வாத உற்பத்தி உறவுச் சங்கிலியில் இருந்து உற்பத்தி சக்திகளை விடுதலை செய்வதை குறிக்கோளாக கொண்டது.

- பழைய சமுதாயத்திற்கு உள்ளேயே புதிய பொருளாதார சமூக அடிப்படை தயார் படுத்தப் படுகின்றது.

இன்றைய காலத்தில், ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் இரண்டு பிரதானமான வர்க்கங்கள் ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன. ஒன்று, ஏகபோக முதலாளிகளால் தலைமை தாங்கப் படும் முதலாளித்துவ வர்க்கம். இரண்டு, உழைக்கும் வர்க்கம். இவ்விரண்டு வர்க்கங்களுக்கு இடையில் வர்க்கப் போராட்டம் நடக்கிறது.

"முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கொல்வதற்கான ஆயுதங்களை மட்டும் உருவாக்கவில்லை. அவற்றை இயக்குவதற்காக நவீன உழைக்கும் வர்க்கம் அல்லது பாட்டாளிகளையும் உருவாக்கியது." - மார்க்ஸ்/எங்கெல்ஸ் (தேர்ந்தெடுக்கப் பட்ட படைப்புகள்)

ஆகையினால், வர்க்கப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத அம்சங்களாக பின்வரும் தோற்றப்பாடுகளை கருதலாம். முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரையில் இது வாழ்வா, சாவா போராட்டம். உழைக்கும் வர்க்கத்தைப் பொறுத்தவரையில் அடிமைத்தளை அல்லது விடுதலைக்கான போராட்டம்.

மேற்படி காரணத்தால், முதலாளித்துவ வர்க்கம் அடக்குமுறையை கையில் எடுக்கிறது. உழைக்கும் வர்க்கம் ஒரு கொடூரமான எதிரியை தூக்கி எறியப் பார்க்கிறது.

இந்த இரண்டு பகை முரண்பாடு கொண்ட வர்க்கங்களுக்கு இடையிலான போர் தான் வர்க்கப் போராட்டம் ஆகும். அமைதியான காலத்தில் அது மறைமுகமாக நடக்கிறது. ஆனால், ஆயுதமேந்திய எழுச்சியின் பொழுது, அது தீவிரமடைந்து உச்சத்தை தொடுகின்றது.

மனித விருப்புக்கு மாறாக, அன்றாட வாழ்வில் முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையில் வர்க்கப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து அரசியல் வியூகமும், உத்திகளும் பிறக்கின்றன. இருப்பினும் அது ஒரு புறவயமான தோற்றப்பாடு ஆகும். மறுபக்கத்தில், தற்சார்புடைய உணர்வு பூர்வமான போர்களும் நடக்க வாய்ப்புண்டு.

இது குறித்து ஸ்டாலின் கொடுத்த விளக்கம் : "வர்க்கப் போராட்டத்திற்கான புறவயமான காரணிகளை விட, உழைப்பாளர்களின் உணர்வுபூர்வமான தன்னெழுச்சி எமக்கு முக்கியமானது. அதற்குக் காரணம், இந்த இயக்கமே வியூகத்தையும், உத்திகளையும் வகுக்கின்றது. புறவயமான சக்திகள் தாக்கம் செலுத்தும் சூழலில் எந்த வியூகமும் இருப்பதில்லை. ஆனால், அகவயமான இயக்கத்தில் வியூகமானது பரந்துவிரிந்துள்ளது. அங்கு வியூகமானது இயக்கத்தின் வேகத்தை அதிகரிக்கவோ அல்லது பின்தள்ளவோ உதவுகின்றது. அந்த இயக்கத்தின் திறன்மிக்க செயற்பாடுகள் அல்லது குறைபாடுகள் அதைத் தீர்மானிக்கிறது." -ஸ்டாலின், (ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் வியூகமும், உத்திகளும் பற்றிய ஆய்வுகள்)

இராணுவ அறிவியலில் இருந்து தான் வியூகமும், உத்திகளும் தோன்றின. பகை முரண்பாடு கொண்ட வர்க்கங்களுக்கு இடையில் நடக்கும் வர்க்கப் போராட்டமும் ஒரு போர் தான். அந்த வகையில், அதுவும் போர்க்கலைக்கு நெருக்கமானது. அரசியல் உத்திகளும், போர் உத்திகளும் பற்றி பேசிய லெனின், தனது கட்சி ஊழியர்கள் கிளவுஸ் விட்ஸ் எழுதிய நூல்களை படிக்குமாறு கோரினார்.

கிளவுத்ஸ்விட்ஸ் பிரஷிய (ஜெர்மன்) படையில் ஜெனரலாகவும், இராணுவக் கல்லூரி அதிபராகவும் இருந்தார். அவர் 1832 ம் ஆண்டு எழுதிய போரியல் பற்றிய நூலில் எழுதிய வாசகங்கள் உலகப் புகழ் பெற்றன. அதை பல தடவைகள் லெனின் மேற்கோள் காட்டிப் பேசியிருந்தார். 

அதாவது, "யுத்தம் என்பதும் ஒரு வகையில் அரசியல் கொள்கையின் தொடர்ச்சி. அந்த வகையில், போர் கூட ஒரு அரசியல் செயற்பாடு தான்." என்பது அவரது கூற்று. போரும் அரசியலும் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கின்றன. ஆகையினால், வர்க்கப் போராட்டத்திற்காக போர்க்கலையின் விதிகளை பற்றி அறிந்து கொள்வதும் "சமாதான" காலத்தில் முன்னெடுக்கப் படும் அரசியல் தான்.

கிளவுத்ஸ்விட்ஸ் எழுதிய போர்க்கலை இந்தக் காலகட்டத்திற்கு ஏற்றது அல்ல என்று ஸ்டாலின் அதைப் புறக்கணித்து வந்தார். இந்தக் காலத்தில் இராணுவ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்ட நவீன காலத்தில், இயந்திரங்கள் போர்க்கலையை தீர்மானிக்கிறது என்பது ஸ்டாலினின் வாதமாக இருந்தது. 

லெனினிடம் அத்தகைய கருத்துக்கள் எதுவும் இருக்கவில்லை. மாறாக, கிளவுத்ஸ்விட்ஸ் எழுதிய இராணுவ போதனைகளில் உள்ள அரசியல் முக்கியமானது என்று கருதினார். இராணுவ தொழில்நுட்ப கருவிகளின் வளர்ச்சி பற்றி மட்டுமே ஸ்டாலின் சிலாகித்து பேசியிருந்தால் அதில் தவறேதும் இல்லை. ஏனெனில், இன்றைய போர்க்கருவிகள் முன்பிருந்ததை விட பல மடங்கு திறன் வாய்ந்ததாகவும், போரின் வியூகங்களை தீர்மானிக்கும் சக்தி படைத்தனவாகவும் உள்ளன.

"தாக்குதல்களில் ஈடுபடுத்தப் படும் இராணுவ சக்திகளின் கோட்பாடு உத்திகள் எனப்படும். அந்தத் தாக்குதல்களை போர் எனும் இறுதி இலக்கை நோக்கி பாவிக்கும் கோட்பாடு வியூகம் எனப்படும்." - கிளவுத்ஸ்விட்ஸ்

அந்த வகையில் வியூகம் முதன்மையானது. அது போர் முழுவதினதும் குறிக்கோள் என்னவென்பதை தீர்மானிக்கிறது. அத்துடன், ஒவ்வொரு தாக்குதலுக்கும் பின்னால் உள்ள அடிப்படை நோக்கம் என்னவென்பதையும் சொல்கின்றது. உத்திகள் இரண்டாம் பட்சமானவை. ஒவ்வொரு தாக்குதலும், சமர்களும் எவ்வாறு நடத்தப் பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.

வியூகம் என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப் பட்ட நிபந்தனை. சக்திக்கு மீறிய அழுத்தங்கள் வந்தால் அன்றி, அது போரின் திசையை மாற்றுவதில்லை. ஆனால், சண்டை நடந்து கொண்டிருக்கும் சூழலில் புதிய புதிய உத்திகள்  எழலாம். அவை நிபந்தனைக்கு உரியவை அல்ல. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக் கூடியவை. வியூகம் வகுப்பதற்கு ஒரு நீண்டகால திட்டமும், அது பற்றிய தொலைநோக்கும் அவசியம். ஒவ்வொரு சமரிலும் பயன்படுத்தப் படும் உத்திகள் முக்கியத்துவம் குறைந்த குறுகிய கால திட்டங்கள் ஆகும்.

இராணுவ அறிவியலில் பின்பற்றப்படும் அதே வகையான வியூகமும், தந்திரோபாயமும், மார்க்சிய லெனினிச கோட்பாட்டிலும் பிரயோகிக்கலாம். அதற்காக உழைக்கும் வர்க்கம் தனது இலக்கை தீர்மானித்துக் கொள்வதுடன், அது சார்ந்த வியூகத்தையும், உத்திகளையும் பின்பற்ற வேண்டும்.

"பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தில் தலைமைப் பாத்திரம் ஏற்றிருப்போரின் அறிவியலை, மார்க்சிய லெனினிச வியூகமும், உத்திகளும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன." - ஸ்டாலின்

இந்த சமூகத்தின் புறவயமான காரணிகளின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, உழைக்கும் வர்க்கத்தின் இறுதி இலக்கு எதுவென்பதை மார்க்சிய லெனினிசம் தீர்மானிக்கிறது. மார்க்சிய லெனினிச வியூகங்களும், உத்திகளும் சமூக அசைவியக்கத்தில் பலவிடங்களிலும் பிரயோகிக்கப் படலாம். அது பிரச்சார வேலைத் திட்டங்களை வளர்க்கிறது. போராட்ட சக்திகளையும், உறங்குநிலையில் உள்ள ஆதரவு சக்திகளையும் இனங் காண்கின்றது. போர்க் களம், ஆதரவுத் தளங்களை தீர்மானிக்கிறது. சிறிய சிறிய சண்டைகள், பெரியதொரு போருக்கு இட்டுச் செல்கின்றன. 

வர்க்கப் போரில், முன்னணி அரங்கில் நின்று போரிடும் பிரதானமான இராணுவம் உழைக்கும் வர்க்கம் ஆகும். நாட்டுப்புற விவசாயிகள் ஆதரவு சக்திகள். உழைக்கும் மக்களின் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் போரை வழிநடத்தும் தளபதிகள் ஆகும்.


உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர குறிக்கோள் எதுவென கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம் ஒன்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்: 
"நவீன சமுதாயத்தில் இருக்கும் வர்க்கங்களை கண்டுபிடித்ததாக நான் பிரகடனப் படுத்தவில்லை. எனக்கு முன்னரே, பல வருடங்களுக்கு முன்பிருந்த முதலாளித்துவ வரலாற்று அறிஞர்கள் சரித்திர காலத்தில் வர்க்கங்களுக்கு இடையில் நடந்த போராட்டங்கள் பற்றி குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்கள். பொருளாதார கட்டமைப்புகளை பற்றி எழுதிய முதலாளித்துவ பொருளியல் அறிஞர்கள் அது பற்றி சொன்னார்கள். எனது பங்களிப்புகள்: 
1.உற்பத்தி வளர்ச்சியில் வர்க்கங்களின் உந்துசக்தியை எடுத்துக் காட்டியது.
2.வர்க்கப் போராட்டமானது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் அவசியத்தை உண்டாக்கும் என்றது. 
3.அது வர்க்க வேற்றுமைகளை ஒழித்து, வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் இடைநிலைப் பாத்திரம் வகிக்கும் என்றது." 
- Karl marx letter to Joseph Weydemeyer on March 5, 1852(பிற்குறிப்பு: Willi Dickhut எழுதிய Strategy and Tactics in the Class Struggle நூலில் இருந்து எடுக்கப் பட்ட பகுதிகள். இந்நூலானது ஜெர்மன் மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான தத்துவார்த்த வழிகாட்டியாக உள்ளது.)

Monday, February 20, 2017

கம்பன் ஏமாந்தான், சாதிப் பிரிவினையை சரி என்றானே!


கம்பவாரிதி ஜெயராஜின் வர்ணாச்சிரம வம்புகள்!
 - இரண்டாம் பாகம்

கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மேட்டுக்குடி தமிழ் இலக்கியவாதிகள் ஒன்றுகூடும் இடமாக கம்பன் கழகம் இருக்கிறது. அதன் நிறுவனர் "கம்வாரிதி ஜெயராஜ்", இதுவரை காலமும் ஒரு இந்து மத அடிப்படைவாதியாக உரையாற்றி வந்திருக்கிறார் என்பதை அவரே தெளிவு படுத்தியுள்ளார். 

வர்ணாச்சிரம சாதி அமைப்பை நியாயப் படுத்தும் ஒரு இந்துத்துவாவாதிக்கும், கிலிபாத் எனும் இஸ்லாமிய தேசத்தை நியாயப் படுத்தும் முஸ்லிம் அடிப்படைவாதிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

வர்ணாச்சிரம அதர்மத்தை வலியுறுத்துவோரின் நோக்கம் என்ன? சாதிப் பிரிவினைகளை பாதுகாப்பது தானே? அதை கம்பவாரிதி ஜெயராஜ் மிக நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி திணிக்கிறார். அதற்காக "அந்தணன் ஏன் மாறினான்?" என்று தொடங்குகிறார். அதாவது, ஆங்கிலேய காலனிய ஆட்சி தந்த உத்தியோக போதையில் மயங்கிய பிராமணர்கள் தமது குலத் தொழிலை கைவிட்டு விட்டனராம். அந்தோ குலத்திற்கு வந்த நாசம்! என்று புலம்புகிறார்.

//இப்போதுதான் பெரிய தீங்கு உண்டாயிற்று. அதுவரை காலமும் தத்தமக்கென ஒரு தொழிலை நிர்ணயித்து,வாழ்வின் தேவைகள் பற்றிக் கவலையில்லாமல் இருந்து வந்த மற்றையவரும்,பிராமணனைப் பார்த்து பரம்பரை பரம்பரையாகச் செய்த தொழிலை விட்டுவிட்டு,வெள்ளைக்காரர்கள் காட்டிய பிறதொழில்களில் போய் விழுந்தனர். இதனால் தத்தமக்கு என்றிருந்த தொழில்முறைகள் போய்,எல்லோரும் ஒரே வகையான தொழிலுக்காய் போட்டி போடத் தொடங்கினர். அதனால், “தொழிலுக்கான போட்டி” என்ற விபரீதம் தொடங்கிற்று. போட்டி என்று வந்ததும் பொறாமை, பகை என்பவை அதைத் தொடர்ந்தன. ஒற்றுமையாய் இருந்த சமூக அமைப்பு சீர்குலைந்தது.// (ஜெயராஜ்)

பறையன் பார்ப்பானை பார்த்தாலே தீட்டு என்று வெட்டிக் கொன்ற அட்டூழியம் எல்லாம் ஜெயராஜின் கண்களுக்கு "ஒற்றுமையான சமூக அமைப்பாக" தெரிகின்றது! அத்தகைய கொலை பாதகச் செயல்கள் எதுவும் அவருக்கு விபரீதமாக தெரியவில்லை. ஆனால், பிராமணன் குலத் தொழிலை கைவிட்டது மட்டும் தான் "விபரீதம்"! //தத்தமக்கு என்றிருந்த தொழில்முறைகள்// அதாவது, அந்தந்த சாதிகளுக்கு என விதிக்கப் பட்ட தொழில்களை செய்வது நல்லது தானே என்பது தான் ஜெயராஜின் வாதம். எல்லாவற்றையும் இந்த ஆங்கிலேயன் வந்து கெடுத்து விட்டானே என்று புலம்புகிறார்.

//தம் மூதாதையர்களின் தவபலத்தால் புத்திக் கூர்மை பெற்றிருந்த பிராமணன், அதனால் வந்த படிப்பு, உத்தியோகம் இவற்றிலே மற்றவர்களை விட முன்னின்றான். அதனால் மற்றவர்களுக்கு பிராமணன் மேல் பகை அதிகரித்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவை இனங்கண்டு கொண்ட வெள்ளைக்காரன்,ஆரியன், திராவிடன் என்ற கதைகளையும் கட்டி,ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தவர்களிடத்தில், பிரிவின் விதைகளை நன்றாகப் போட்டுவிட்டான்.// (ஜெயராஜ்)

பிராமணர்களின் மூதாதையர் காலத்தில் நடைமுறையில் இருந்த மனுநீதியின் படி, வேதம் பயிலும் நேரத்தில் ஒரு சூத்திரன் கேட்டுக் கொண்டிருந்தால், அவன் காதுக்குள் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும் என்றது. பிற சாதியினர் படிப்பதை தடுப்பதற்காக கொடுமையான தண்டனை கொடுத்த பிராமண சமூகம், "தவவலிமையால் புத்திக்கூர்மை பெற்றது" என்று பசப்புவது ஒரு பித்தலாட்டம். இது தவவலிமையால் பெற்ற புத்திக்கூர்மை அல்ல, சூழ்ச்சியால் பெற்றது.

ஜெயராஜ் சொல்வது போல "படிப்பு, உத்தியோகத்தில் முன்னின்ற பிராமணன் மீது மற்றவர்களுக்கு ஏற்பட்ட பகை" காலனிய காலத்திற்கு முன்பு ஏற்படவில்லையா? பண்டைய காலத்திலும் பிராமணர்கள் தானே படிப்பு, உத்தியோகத்தின் முன்னின்றார்கள்? அதை மறுக்க முடியுமா? அப்போதெல்லாம் ஏற்படாத பகை உணர்ச்சி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் ஏற்பட்டது என்று ஜெயராஜ் எமது காதுகளில் பூச் சுற்றுகிறார். இந்த அம்புலிமாமாக் கதைகளை நம்புவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல.

"ஒடுக்குபவனும், ஒடுக்கப் படுபவனும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்" என்று ஜெயராஜ் ஒரு பொய்யை துணிந்து சொல்கிறார். ஓநாயும் ஆடும் ஒற்றுமையாக வாழ்ந்தன என்று எம்மை நம்பச் சொல்கிறார். இப்படிக் கூறும் தைரியம் அவருக்கு எங்கிருந்து வந்தது? ஆதிக்க சாதி மேட்டுக்குடி இலக்கியவாதிகள், கம்பன் கழகத்திற்கு அள்ளிக் கொடுத்த பணத்தில் வந்த திமிர்.

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் காலங்காலமாக நடந்து வந்துள்ளது. பிராமணர்களின் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள், சாதிப் பாகுபாட்டை நிராகரித்த பௌத்த, சமண மதங்களில் பெருமளவில் சேர்ந்தனர். பிற்காலத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் சேர்வதற்கும் சாதி ஒடுக்குமுறை காரணமாக இருந்துள்ளது. அதற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏராளம் இருந்த போதிலும், அவற்றை எல்லாம் புறக்கணித்து விட்டு "வெள்ளைக்காரனின் ஆரியர், திராவிடர் கதை தான் பிரிவினை உண்டாக்கியது" என்று ஜெயராஜ் கூசாமல் புளுகுகின்றார்.

சாதிப் பாகுபாடுகளை நியாயப் படுத்துவதற்காக, ஜெயராஜ் ஆன்மீகத் தத்துவம் ஒன்றை திரிக்கிறார்: 
//பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற,இந்த நான்கு பிரிவுகளினுள் ஒரு தனிமனிதனின் வாழ்வு ஒட்டுமொத்தமாய் அடங்கிப்போக, இந்நான்கு பிரிவுகளையும் தனிமனித வாழ்வின் அடிப்படைப் பிரிவுகளாக்கி, அப்பிரிவுகளுக்கு ஆச்சிரமம் எனப் பெயரிட்டனர் நம் ஆன்றோர். இதுவே ஆச்சிரமப் பிரிவு அமைந்த அடிப்படையாம்.//

ஐயா, அந்த ஆச்சிரம் வேறு. அது தனி மனிதன் முக்தி பெறுவதற்கானது. சமூகத்திற்கானது அல்ல. அதைக் கூறி சமூகப் பிரிவினைகளை நியாயப் படுத்துவது நயவஞ்சகமானது. இது எந்தளவு தூரம் அநீதியானது என்பதற்கு ஓர் அண்மைய உதாரணம் மூலம் விளக்குகிறேன். பதினெட்டு வயதானவர்கள் தான் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு சொல்லப் படும் காரணம் என்ன? 

பதினெட்டு வயதில் தான் ஒரு மனிதன் முதிர்ச்சி அடைகிறான் என்பார்கள். நிறவெறியர்கள் ஆண்ட தென் ஆப்பிரிக்காவில் இதே காரணத்தை சொல்லித் தான் கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப் பட்டது! அதாவது அவர்கள் வாக்களிக்கும் அளவிற்கு அந்த மக்கள் முதிர்ச்சி அடையவில்லை என்று காரணம் சொல்லப் பட்டது.

//உற்பத்தி, விநியோகம், நிர்வாகம், கல்வி என்னும் நாற்கூறில், ஒட்டுமொத்த சமூக அமைப்பும் உள்ளடங்குதலைக் கொண்டே,சூத்திரன், வைசிகன், சத்திரியன், பிராமணன் எனும், இந்நான்கு வர்ணங்களும் வகுக்கப்பட்டன. இதுவே வர்ண அமைப்பு தோன்றியதன் அடிப்படையாம்.//(ஜெயராஜ்)

மிகவும் அபத்தமான விளக்கம். இந்தக் காலத்து சமுதாய அமைப்பையும், மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய சமுதாய அமைப்பையும் ஒரே மாதிரி கருதுவது அறியாமை. இரண்டு காலகட்டத்திற்கும் இடையில் நாகரிக வளர்ச்சி இருக்கவில்லையா? உலகில் மன்னராட்சி மறைந்து குடியரசு முறை வந்த பின்னரும், இன்றைய சமுதாயம் மன்னராட்சிக் காலத்தில் இருந்த மாதிரித் தான் இருக்க வேண்டுமா?

உண்மையில் வேத கால வர்ணாச்சிரம தர்மம் என்பது, நிலப்பிரபுத்துவ காலகட்டத்திற்கும் முந்தியது. ஏனெனில், நிலப்பிரபுத்துவ காலத்தில் சத்திரியர்களான மன்னர் குலமும், நிலப்பிரபுக்களும், புலவர்களும் கல்வி கற்க முடிந்தது. அதற்கு முந்தியது, கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டது போன்று ஆண்டான் - அடிமை சமுதாய காலகட்டம். 

அப்போதும் மன்னர்கள் இருந்தார்கள். ஆனால் போர்க்கலை பயில்வதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினார்கள். உற்பத்தியில் ஈடுபட்ட உழைக்கும் வர்க்கத்தினர் அடிமைகளாக இருந்தனர். அதனால் அவர்களும் படிக்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்ல, ரோமப் பேரரசு, மற்றும் பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் அவ்வாறு தான் சமுதாய அமைப்பு இருந்தது. அவர்கள் அதை வர்ணாச்சிரமம் என்று அழைக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம்.

பண்டைய கிரேக்க நாகரிகத்தில், உடல் உழைப்பு இழிவானதாக கருதப் பட்டது. அது அடிமைகளுக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டிருந்தது. சுதந்திரமான பிரஜைகள் வேலை செய்வதில்லை. அதனால் தான் அங்கிருந்து தத்துவ அறிஞர்கள் உருவானார்கள். அவர்களுக்கு "சும்மா இருந்து கொண்டு சிந்திப்பதை தவிர" வேறெந்த வேலையும் இருக்கவில்லை.

இந்தியாவில் வர்ணாச்சிரம காலத்தில் வாழ்ந்த அந்தணர்களும் அப்படித் தான். வேதம் படிப்பதை தவிர அவர்களுக்கு வேறெந்த வேலையும் இருக்கவில்லை. அவர்களால் இழிவாகக் கருதப்பட்ட உடலுழைப்பை அடிமைகள் செய்து வந்தனர். (வேதம் அவர்களை தாசர்கள் என்று குறிப்பிடுகின்றது.) பிற்காலத்தில் அரச கட்டமைப்பு நிறுவனமயப் பட்டதும் அவர்கள் சூத்திரர்கள் என்ற தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டனர்.

இன்றைக்கு யாரும் நாகரிகத்திற்கு முந்திய கற்காலத்தில் வாழ விரும்ப மாட்டார்கள். வர்ணாச்சிரமவாதி ஜெயராஜ் வாழப் பொருத்தமான இடம், சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள இஸ்லாமிய தேசம் தான். அவர்கள் தான் மக்களை கற்காலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஜெயராஜ் புகழ்ந்துரைக்கும் வர்ண அமைப்பு, தற்காலத்தில் அங்கு தான் இருக்கிறது.

நவீன கால சமுதாய அமைப்பில், இன்று எல்லாத் துறைகளிலும் கல்வி அவசியமாகக் கருதப் படுகின்றது. ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கேட்டுப் பாருங்கள். சாதாரணமான துப்பரவுப் பணி செய்வதற்கே அந்தத் துறையில் கல்வி கற்ற சான்றிதழ் தேவைப் படுகின்றது. உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப கருவிகள் நுழைந்து விட்டன. அவற்றை இயக்குவதற்கு அடிப்படை கல்வி கற்ற வேலையாட்கள் தேவைப் படுகின்றனர். 

இன்றைய காலத்து நவீன கல்வி, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை உருவாக்கும் நோக்கில் விரிவடைந்துள்ளது. எல்லோரும் உயர்கல்வி கற்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவான அடிப்படைக் கல்வி, அதற்குப் பின்னரான தொழிற்கல்வி ஒரு படித்த சமுதாயத்தை உருவாக்கப் போதுமானது. முன்னாள் சோஷலிச நாடுகளில் மட்டுமல்லாது, மேற்கு ஐரோப்பாவில் கூட அடிப்படை வருமானம் எல்லோருக்கும் ஒன்று தான். உதாரணத்திற்கு, கணக்காளரும், கட்டிடத் தொழிலாளியும் ஒரே சம்பளம் பெறுகின்றனர்.

ஆனால், வர்ணாச்சிரம காலத்தில் அப்படி இருக்கவில்லை. அது வேத சுலோகங்களை மனனம் செய்யும் மதக் கல்வி மட்டும் தான். ஆப்கானிஸ்தானில் தாலிபான் நடைமுறைப் படுத்திய மதராசா எனும் இஸ்லாமிய மதக் கல்வியுடன் அதை ஒப்பிடலாம். மதக் கல்வியானது சுயசிந்தனை இல்லாத இயந்திரத் தனமான மனிதர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இந்த இயந்திர மனிதர்களைத் தான், "தவவலிமையால் புத்திக்கூர்மை பெற்ற அந்தணர்கள்" என்று ஜெயராஜ் புகழ்கிறார்!

(முற்றும்) 

இதன் முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு: 

Sunday, February 19, 2017

கம்பவாரிதி ஜெயராஜின் வர்ணாச்சிரம வம்புகள்!


இலங்கையில் போர்க்காலத்தில் பதுங்கிக் கிடந்த இந்து மத அடிப்படைவாத பாம்புகள், தற்போது மெல்ல மெல்ல வெளியில் நடமாடத் தொடங்கி விட்டன. அவை இலங்கையில் வாழும் தமிழர் மத்தியில் தமது மதப் பாசிச விஷக் கருத்துக்களை பரப்பி வருகின்றன. ஏற்கனவே மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தியாவில் இருந்து சிவசேனையை இறக்குமதி செய்து மத வெறுப்பு அரசியல் செய்து வருகிறார். இலங்கையில் ஏற்கனவே இயங்கி வந்த கம்பன் கழக நிறுவனர் கம்பவாரிதி ஜெயராஜ், தனது உகரம் இணையத் தளத்தில் வர்ணாச்சிரமத்தை ஆதரித்து கட்டுரைகள் எழுதி வருகின்றார்.

ஜெயராஜ் பற்றி விக்கிபீடியா வழங்கும் தகவல்: //இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.// (இ. ஜெயராஜ்)

இலங்கைத் தமிழ் மேட்டுக்குடியினரின் இலக்கிய அறிவுப் பசியை தீர்த்து வைக்கும் கம்பன் கழகம், அவர்களது நன்கொடைகளால் ஒரு பணக்கார கழகமாக உள்ளது. அதன் சொத்து மதிப்புகள் பல கோடி இருக்கலாம். மூளை உழைப்பாளிகளான உயர் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள், தமக்கும் இலக்கிய தாகம் இருப்பதைக் காட்டுவதற்காக கம்பன் கழகத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு படுத்திக் காட்டிக் கொள்வார்கள்.

அது ஒருபுறமிருக்கட்டும். ஜெயராஜின் வர்ணாச்சிரம பிரச்சாரத்திற்கு வருவோம். ஜெயராஜ் தனது "வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா?" (வருணாச்சிரமம் தர்மமா? அதர்மமா? கட்டுரைகளில், வர்ணாச்சிரமம் எத்தகைய "உயர்ந்த தர்மம்" என்று வக்காலத்து வாங்குகிறார்.

தொடக்கத்திலேயே "தான் ஒரு பிராமணன் அல்ல" என்று ஜெயராஜ் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி விடுகிறார். பிராமணீயம் என்பது ஒரு அரசியல்- சமூகக் கட்டமைப்பாக மாறி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும், வர்ணாச்சிரம ஆதரவாளர்கள் பிராமணர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. 

இது ஓர் அரசியல் தத்துவார்த்த கொள்கை. இன்று ஜெயராஜ் போன்ற பலர் எதற்காக வர்ணாச்சிரமத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பது நாம் அறியாதது அல்ல. சிரியாவில் இஸ்லாமிய தேசம் அமைத்தவர்களுக்கும், இந்தியாவில் வர்ணாச்சிரம தேசம் அமைக்க விரும்புவோருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

நூறு வருடங்களுக்கு முன்னரே, கல்வியாளர் அம்பேத்காரும், சிந்தனையாளர் பெரியாரும் தத்தமது அறிவுப்புலத்தில் நின்று வர்ணாச்சிரமத்தை அலசி ஆராய்ந்துள்ளனர். வேதங்கள், மனுநீதி, புராணக் கதைகளை மேற்கோள் காட்டி தமது மறுப்புரைகளை முன்வைத்தனர். அவற்றை இன்றைக்கும் நாம் வாசிக்கும் வகையில், பெரியார், அம்பேத்கார் எழுதிய நூல்கள் திரும்பத் திரும்ப பதிப்பிக்கப் படுகின்றன.

ஜெயராஜ் அவற்றை மேற்கோள் காட்டி தனது எதிர்க்கருத்துகளை முன்வைப்பார் என்று எதிர்பார்த்தால் நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே. இதுவரையில் ஐந்து பாகங்களாக வந்துள்ள கட்டுரைகளில் எந்த ஒரு இடத்திலாவது, அம்பேத்கார், பெரியார் கூற்றுக்களில் ஒன்றைக் கூடக் காணவில்லை. ஒருவேளை அவற்றில் உள்ள நியாயத்தன்மை ஜெயராஜை மிரட்டி இருக்கலாம். ஆதாரபூர்வமாக எதிர்க்க முடியாது என்பதால் அவர்களது கூற்றுக்களை மேற்கோள் காட்டுவதை தவிர்த்து விடுகிறார். அதற்குப் பதிலாக பொத்தாம்பொதுவாக "புரட்சியாளர்கள்" என்று சாடுகிறார்.

யார் அந்தப் "புரட்சியாளர்கள்"? அம்பேத்கார், பெரியார், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டுகள் ஆகியோரை ஜெயராஜ் ஒரே பக்கத்திற்கு தள்ளி விடுகிறார். இவர்களுக்கு இடையிலான கொள்கை முரண்பாடுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் புறக்கணிக்கிறார். அவரது ஒரே பிரச்சினை "இவர்கள் எல்லோருமே வர்ணாச்சிரம எதிர்ப்பாளர்கள்" என்பது மட்டும் தான்.

சரி, ஒரு பேச்சுக்கு அப்படியே இருக்கட்டும். "அந்தணர்கள் தவறு செய்தார்கள், புரட்சியாளர்கள் ஒழுங்காக இருந்தார்களா?" என்று ஜெயராஜ் எதிர்க் கேள்வி கேட்கிறார். ஆனால், இந்த தர்க்கீகத்தில் குறிப்பிடப் படும் அந்தப் "புரட்சியாளர்கள்" அண்ணாத்துரை தலைமையில் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். இதை அவர் வெளிப்படையாக குறிப்பிடா விட்டாலும், அது தான் உண்மை.

ஜெயராஜின் கட்டுரையில்இருந்து:
//ஒரு காலத்தில் பிராமணர்களைக் குற்றம் சாட்டினர். பின்னர் இனத்தையும் மொழியையும் சொல்லி ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்தபின்பு,அந்தணர்கள் செய்த குற்றங்களில் ஒன்றையாவது இவர்கள் நிவர்த்தித்தார்களா? பிரிந்து கிடந்த நம் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி விட்டார்களா? நம் இனம் மீதும் மொழிமீதும் பற்றை வளர்த்திருக்கிறார்களா? ஒழுக்க நிலையில் நம் சமுதாயத்தை உயர்த்தியிருக்கிறார்களா? மற்றைய இனத்தார் நம்மை மதிக்கும்படி நம் சமூகத்தை வளர்ந்திருக்கிறார்களா? ஜாதிச்சண்டை, மதச்சண்டை, இனச்சண்டை, பிராந்தியச் சண்டை,பொய், களவு, சூது, வஞ்சனை, ஊழல், லஞ்சம் என்பவற்றை,முன்பை விடக் குறைத்துவிட்டார்களா?//(ஜெயராஜ்)

முதலில் நாங்கள், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சீர்திருத்தவாத இயக்கம், அது ஒரு புரட்சிகர இயக்கம் அல்ல என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அது தேர்தலில் போட்டியிட்டு மாநில அரசு அதிகாரத்தை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. நடைமுறையில் உள்ள முதலாளித்துவ- தாராளவாத அரசமைப்பில், பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.அதற்காக இனத்துவ, சாதிய முரண்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்கின்றன.

தற்போதுள்ள முதலாளித்துவ- தாராளவாத கட்டமைப்பினுள், ஒரு அமைதியான சமூகப் புரட்சி நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. அதற்கு முதலில் அதிகாரக் கட்டமைப்பு தூக்கி எறியப் பட வேண்டும். ஆனால், ஒரு சில மறுசீரமைப்புகள், சீர்திருத்தங்கள் சாத்தியமாகலாம். 

அந்த வகையில், அனைவருக்குமான பொதுக் கல்வி, வேலை வாய்ப்புகள் போன்றவை தான் திராவிட கட்சியினரால் சாதிக்க முடிந்தது. அத்துடன், வணிகத்துறை முதலீடுகள் பெருகியதால் இடைத்தர சாதிகளும் அரசியல் ஆதிக்கம் பெற்றனர். இவை எல்லாம் முதலாளித்துவ- பொருளாதார  நலன்களை எந்த வகையிலும் பாதிக்காதவை. அதனால் சாத்தியமானது.

இந்துத்துவாவாத பாஜக, அல்லது ஆர்எஸ்எஸ், தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தாலும் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை. தற்போது இந்தியாவில் பாஜக பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சி நடக்கிறது. மோடி  கம்பவாரிதி ஜெயராஜை விட மிகவும் தீவிரமான வர்ணாச்சிரம ஆதரவாளர். அவரது ஆட்சிக் காலத்தில் தேனாறும், பாலாறும் ஓடவில்லை. 

ஜெயராஜ் திராவிட கட்சியினரிடம் கேட்ட அதே கேள்வியை பாஜக வை  நோக்கியும் கேட்கலாம்: "ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தினரை குற்றம் சாட்டினார்கள். பின்னர் வர்ணாச்சிரமத்தையும், மதத்தையும் சொல்லி ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்தபின்பு,திராவிடர்கள் செய்த குற்றங்களில் ஒன்றையாவது இவர்கள் நிவர்த்தித்தார்களா? பிரிந்து கிடந்த நம் (இந்து) சமுதாயத்தை ஒன்றுபடுத்தி விட்டார்களா?...." இப்படி கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் கேட்க மாட்டார்.

கம்பவாரிதி ஜெயராஜ் பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்த மாற்றமும் நடக்காது என்பது தான் உண்மை. ஏனென்று கேட்டால் முதலாளித்துவ - தாராளவாத ஜனநாயகக் கட்டமைப்பு சொத்துடமை வர்க்கத்தை பாதுகாப்பதற்காக மட்டுமே உருவாக்கப் பட்டது. ஜாதிச்சண்டை, மதச்சண்டை, இனச்சண்டை, பிராந்தியச் சண்டை, இவையெல்லாம் இருக்கவே செய்யும். உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர விடாமல் தடுப்பதற்கு இவையெல்லாம் ஆளும்வர்க்கத்திற்கு உதவுகின்றன. பொய், களவு, சூது, வஞ்சனை, ஊழல், லஞ்சம் போன்றன இல்லாமல் முதலாளித்துவ பொருளாதாரம் இயங்குவதில்லை. பொய், களவு, சூது, இல்லாமல் உலகில் எந்த முதலாளியும் செல்வம் சேர்க்க முடியாது.

இந்திய உபகண்டத்தில் ஆரிய இனத்தவர் மேலாதிக்கம் பெற்றது எப்படி என்பதை மானிடவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பல நூல்களில் எழுதி இருக்கிறார்கள். அது எதையும் வாசித்திராத ஜெயராஜ், அடக்கப் பட்ட மக்கள் மீது பழி போடுகின்றார். இது "Blame the Victim" என்று ஆங்கிலத்தில் சொல்வதைப் போன்று, பாதிக்கப் பட்டவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் நயவஞ்சகத்தனம்.

ஜெயராஜின் கட்டுரையில் இருந்து: 
//நமது வீழ்ச்சிக்கும் நம் இனத்தின் வீழ்ச்சிக்கும் மற்றவர்கள் காரணரல்லர். நாமேதான் காரணர்களாய் இருந்திருக்கிறோம். பெரும்பான்மை இனமொன்று சிறுபான்மை இனத்தை ஆள்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் சிறுபான்மையினர் பெரும்பான்மையை ஆண்டிருக்கிறார்கள். அது எப்படிச் சாத்தியமாயிற்று? நம் பலவீனம் தான் அவர்களைப் பலப்படுத்தியிருக்கிறது. இன்றும் நம் பலத்தை வளர்க்காமல் மற்றவர்கள் பலவீனத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஏதிலார் குற்றத்தை அகழ்ந்து அகழ்ந்து காணுகிற நாங்கள், நம் குற்றம் காணத் தயங்கி நிற்கிறோம்.// (ஜெயராஜ்)

இதற்கு அண்மைய காலனிய வரலாற்றில் இருந்து பதிலளிக்கலாம். சிறுபான்மை இனமான ஆங்கிலேயர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ற பெயரில் உலகில் அரைவாசியை ஆண்டது எப்படி? உள்நாட்டு இனங்களின் பலவீனம் மட்டும் அதற்கு காரணம் அல்ல. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன போர்க்கருவிகள் காரணமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சூழ்ச்சிகள், துரோகங்கள் காரணமாக இருந்துள்ளன.

ஆரம்ப காலத்தில் அமெரிக்காவில் குடியேறிய ஆங்கிலேயர்கள் செவ்விந்திய இனங்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். செவ்விந்திய பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்கள். வணிகம் செய்து சமாதானமாக வாழ்ந்தார்கள். ஆனால், பிற்காலத்தில் அவர்களது பிரதேசங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். யுத்தம் நடந்தது. இனப்படுகொலை நடந்தது. சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். பின்னர் அதை கிழித்தெறிந்து விட்டு யுத்தம் செய்தனர். அவ்வாறு தான் அமெரிக்கா முழுவதும் ஆங்கிலேய மயமாகியது.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த ஆக்கிரமிப்புக் கதை, ஐயாயிரம் வருடங்களுக்கு முந்திய இந்தியாவில் நடந்திருக்கலாம் அல்லவா? அதற்கான ஆதாரம் வேதங்களில் இருக்கிறது. குறிப்பாக ரிக் வேதத்தில், அன்று நடந்த இனப்படுகொலைகள் பற்றி வெளிப்படையாகவே எழுதப் பட்டுள்ளது.

ஆரிய குலத் தலைவனான இந்திரன், எத்தனை ஆயிரம் கிராமங்களை கொளுத்தினான், எத்தனை ஆயிரம் பேரை படுகொலை செய்தான், எத்தனை ஆயிரம் கால்நடைகளை கொள்ளையடித்தான் என்பன போன்ற விபரங்கள் விலாவாரியாக எழுதப் பட்டுள்ளன. இந்திரனால் ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசங்களை சேர்ந்த மக்கள் அடிமைகளாக்கப் பட்டனர். ரிக் வேதம் அவர்களை தாசர்கள், அதாவது அடிமைகள் என்று குறிப்பிடுகின்றது.

பிராமணர்கள் (அந்தணர்கள்) தமது "தவறுகளை" உணர்ந்து திருந்தி விட்டார்களாம். அது என்ன "தவறு"? ஜெயராஜ் ஒரு நகைப்புக்குரிய விளக்கம் தருகிறார்: 
//தங்களைப் போலவே மாறி தங்கள் வழியில் வரத் தலைப்பட்ட,இயல்பான ஆற்றலோடு இருந்த பிராமணனுக்கு,வெள்ளைக்காரர்கள் நிறைய உத்தியோகங்களைக் கொடுத்தார்கள். இப்போதுதான் பெரிய தீங்கு உண்டாயிற்று. அதுவரை காலமும் தத்தமக்கென ஒரு தொழிலை நிர்ணயித்து, வாழ்வின் தேவைகள் பற்றிக் கவலையில்லாமல் இருந்து வந்த மற்றையவரும், பிராமணனைப் பார்த்து பரம்பரை பரம்பரையாகச் செய்த தொழிலை விட்டுவிட்டு,வெள்ளைக்காரர்கள் காட்டிய பிறதொழில்களில் போய் விழுந்தனர்.... அதுவரை தன் சுயதர்மத்தை விடாத பிராமணன்,வெள்ளைக்காரனின் புரட்டை நம்பி அதனைக் கைவிட்டான். வெள்ளைக்காரனைப் போலவே ‘டிப்டொப்பாக டிறஸ்’செய்துகொண்டு,சிகரட் குடிக்கவும் ‘டான்ஸ்’ ஆடவும் பழகிக்கொண்டான். தங்களைப் போலவே மாறி தங்கள் வழியில் வரத் தலைப்பட்ட, இயல்பான ஆற்றலோடு இருந்த பிராமணனுக்கு,வெள்ளைக்காரர்கள் நிறைய உத்தியோகங்களைக் கொடுத்தார்கள்.// (ஜெயராஜ்)

கம்ப இராமாயண சொற்பொழிவாற்றும் "அறிஞர்"ஜெயராஜ், இந்தளவு பாமரத்தனமாக எழுதுவது ஏமாற்றத்தை தருகின்றது. நுனிப்புல் மேயும் செம்மறி ஆடுகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா என்ற ஆயாசம் ஏற்படுகின்றது. வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்னர், இந்தியாவில் பல நூறாண்டுகளாக இஸ்லாமிய மொகலாயரின் ஆட்சி நடந்தது. அப்போது இந்த பிராமணர்கள் சீரழியவில்லையா? தமது சுயதர்மத்தை கைவிடவில்லையா? ஆரம்ப கால இஸ்லாமிய படையெடுப்புகளின் பொழுது இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட பிராமணர்கள், இன்றைக்கும் பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். அங்கேயும் அவர்கள் தான் உயர்ந்த ஆதிக்க சாதி.

உண்மையில் வெள்ளையரின் வருகை, இந்து- பிராமணர்களுக்கு அரசியல் மேலாதிக்கம் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கியது. மொகலாயர் காலத்திலும் பிராமணர்களுக்கு தானங்கள் வழங்கப் பட்டன. சில பிராமணர்கள் அரசவை உத்தியோகங்களிலும் இருந்திருக்கின்றனர். இருப்பினும் அரசியல், பொருளாதாரம் முழுவதும் முஸ்லிம் மேட்டுக்குடியினரின் கைகளில் இருந்தது. அரசு நிர்வாகங்களில், உள்நாட்டு/சர்வதேச வணிகத்தில் பாரசீக மொழி பேசிய முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

ஆங்கிலேய காலனிய காலத்தில், பிராமணர்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்தார்கள். ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளுக்கு விசுவாசமாக நடந்து பதவிகளை பெற்றுக் கொண்டனர். இது தக்கன பிழைக்கும் தந்திரம். அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஒட்டி உறவாடுவதன் மூலம், தன்னலம் சார்ந்த நன்மைகளை பெற்றுக் கொள்ளும் தந்திரம். இது கலாச்சார சீரழிவு அல்ல. மாறாக காட்டிக்கொடுக்கும் கபட அரசியல்.

மொகலாயர் காலத்தில், பிராமணர்கள் அவர்களைப் போன்றே நடை, உடை, பாவனைகளை பின்பற்றினார்கள். ஒரு சில விதிவிலக்குகளை தவிர, பெரும்பாலான பிராமணர்கள் மதம் மாறவில்லை. உண்மையில் அதற்கு தேவை இருக்கவில்லை. மொகலாயர்கள் இந்தியா முழுவதும் தீவிரமான இஸ்லாமியமயமாக்கலை நடைமுறைப் படுத்தவில்லை. இந்துக்கள் வரி கட்டி விட்டு தம் பாட்டில் வாழ்வதற்கு அனுமதிக்கப் பட்டது. இஸ்லாமியர் அல்லாதவர்களை "இந்திய மதத்தவர்" என்ற அர்த்தத்தில், இந்துக்கள் என்ற பெயர் சூட்டியதே மொகலாயர் தான்.

ஆகவே, மொகலாயர் காலத்தில் மொகலாயர் மாதிரி வாழ்ந்த பிராமணர்கள், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலேயர் மாதிரி வாழத் தலைப்பட்டதில் வியப்பேதும் இல்லை. ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் தனக்கு மேலே இருப்பவர்களை பார்த்து தானே பாவனை செய்து கொள்கிறார்கள்? அதைத் தானே "நாகரிகம்" என்கிறார்கள்? அது வழமை தானே?

நமது "கம்பவாரிதி" ஜெயராஜ், ஆங்கிலேயர் கொண்டு வந்த வாழ்க்கை வசதிகளை பின்பற்றவில்லையா? வெள்ளவத்தையில் உள்ள கம்பன் கழகத்திற்கு வெள்ளைக்காரன் அறிமுகப் படுத்திய காரில் வந்து பேசி விட்டுப் போகிறார். வர்ணாச்சிரம தர்மப் படி மாட்டு வண்டிலில் வராத படியால், ஜெயராஜ் சீரழிந்து விட்டார், தவறிழைத்து விட்டார் என்று அர்த்தமா?

இந்தியாவில் மன்னராட்சி அல்லது நிலப்பிரபுத்துவம் இருந்த காலத்தில் வேதம் ஓதிக் கொண்டிருந்த அந்தணர்கள், எப்போதும் அப்படியே இருந்திருக்க வேண்டுமா? அவர்களும் நாகரிக மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறிக் கொண்டிருப்பார்கள் அல்லவா? கோவணம் மட்டும் கட்டியிருந்த காட்டுவாசிகள், சட்டை, காற்சட்டை போட்டால் அதை நாகரிகம் என்கிறீர்கள். அதே மாதிரி, பிராமணர்களும் நாகரிகம் அடைந்தார்கள். அதிலென்ன தவறு?

ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். பிராமணர்கள் வெள்ளையரை பின்பற்றி தம்மை மாற்றிக் கொண்டிரா விட்டால், அவர்கள் இன்றைக்கு சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்திருப்பார்கள். முன்பு கீழே இருந்த சாதிகள், ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்ந்த நிலைக்கு வந்திருப்பார்கள். இந்த உண்மை தெரிந்த படியால் தான், "வெள்ளைக்காரன் மாதிரி டான்ஸ் ஆடப் பழகிய" பிராமணர்கள், இன்றைக்கும் மேன் நிலையில் இருக்கிறார்கள். இது கலாச்சார சீரழிவு அல்ல, சமூக அரசியல் மாற்றம்.

(தொடரும்)

Friday, February 17, 2017

கேப்பாபுலவு, ஜல்லிக்கட்டு : இரண்டு போராட்டங்களின் கதை

ஈழத்தில் ஒரே காலகட்டத்தில் நடந்த இரண்டு போராட்டங்களின் கதை:
1. ஜல்லிக்கட்டு - ஈழத் தமிழ்த் தேசியவாதிகளின்  போராட்டம் 
2. கேப்பாபுலவு - ஈழத் தமிழ் மக்களின்  போராட்டம் 

இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், யாழ் நகரிலும், பின்னர் கொழும்பு நகரிலும் ஆதரவுப் போராட்டம் நடந்தது. சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு விடுக்கப் பட்ட தன்னெழுச்சியான போராட்டம் என்று அறிவிக்கப் பட்டது. போருக்கு பின்னரான காலத்தில், முன்னர் எப்போதும் இல்லாதவாறு, பெருமளவு எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ஈழத்து ஜல்லிக்கட்டு போராட்டங்களில், ஐநூறு, ஆயிரம், அல்லது ஐயாயிரம் பேர் வந்திருந்ததாக எடுத்துக் கொள்வோம். அதிலே பங்குபற்றியவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்க இளைஞர்களாக இருந்தனர். யாழ்நகரில் நடந்த போராட்டத்தில், "ஏன் சாதாரண மக்களை காணவில்லை?" என்று பிபிசி தமிழோசை நிருபர் கேட்ட பொழுது, "இனிமேல் தான் மக்கள் வருவார்கள்..." என்று பதிலளித்தனர். ஆனால், அந்த போராட்டம் தொடரவுமில்லை, தமிழ் மக்கள் வரவுமில்லை.

தமிழ்த் தேசியவாத, தமிழ் இன உணர்வு அரசியல், எப்போதுமே தமிழ் மத்தியதர வர்க்க அரசியலாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் அது தான் உண்மை. "தமிழன்டா!", "தமிழன் என்று சொல்லடா!" போன்ற இனப்பெருமை பேசும் ஆணாதிக்க கோஷம் எதுவும் பெரும்பான்மை தமிழ் மக்களை கவரவில்லை. இது தமிழ்த் தேசியவாதிகள் எந்தளவுக்கு மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கின்றனர் எனக் காட்டுகின்றது.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம், மற்றும் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் மக்கள் தானே என்று வாதாடலாம். உண்மையில் அதற்குக் காரணம் "தமிழ் இன உணர்வு" என்று நினைத்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமமாகும். மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தமக்குத் தெரிந்த வழிகளில் வெளிப்படுத்துவார்கள். ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஓட்டுப் போட்டதும் அதனால் தான். அவ்வாறு தான் மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெருமளவு மத்தியதர வர்க்க இளைஞர்கள் வந்ததற்கு வலுவான காரணம், அது எந்த வகையிலும் அரசுக்கு எதிரான போராட்டம் இல்லையென்பது தான். பலர் இதை நம்ப மறுப்பார்கள். "தமிழன்டா, தமிழன் என்று சொல்லடா" என்று ஒற்றுமையாக கோஷம் போடுவதால், சிறிலங்கா அரசு தமிழரின் சக்தி கண்டு அஞ்சி நடுங்கும் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம். தமிழ்த் தேசியம் பேசுவதும், தமிழ் உணர்வு கொள்வதும் அரச கட்டமைப்பை பாதுகாக்கும் இன முரண்பாட்டு அரசியல் என்பதை பலர் அறிவதில்லை.

இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் தான் போராடுவார்கள். இழப்பதற்கு எல்லாம் இருப்பவர்கள் போராட வர மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சென்றவர்கள் பெரும்பாலும் உத்தியோகம் பார்க்கும் வசதியான இளைஞர்கள், அல்லது உயர்கல்வி கற்கும் மாணவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதால், தமது கல்விக்கோ, வேலைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பது அவர்களுக்குத் தெரியும். 

மேலும், அன்றாட வாழ்வில் வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு "தமிழ் உணர்வு இல்லாமை" மட்டுமே ஒரு குறைபாடாக தெரிவதில் வியப்பில்லை. அதற்காக போராடுவதன் மூலம் தாம் சமூகத்திற்கு தொண்டாற்றி விட்டதாக திருப்திப் படுகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக ஒரு நாள் கூடி, தமிழ் உணர்வுக் கோஷங்கள் போட்டு விட்டு தமது வேலையைப் பார்க்க சென்று விட்டார்கள்.

ஜல்லிக்கட்டுக்காக போராட வந்தவர்கள், மக்களின் பிற போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று அப்போதே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நேரம், "இப்போது தான் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது" என்றும், "இனிவருங்காலத்தில் இவ்வளவு பேரும் எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்" என்றும் பதில் சொன்னார்கள். ஆனால், அந்த உறுதிமொழியை யாரும் காப்பாற்றவில்லை. இப்போதும் தமிழ் மக்களின் பிற போராட்டங்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

இது நடந்து ஓரிரு வாரங்கள் கூட ஆகியிருக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டம் தொடங்கியது. இறுதிப் போரில், விமானப் படையினரால் அபகரிக்கப் பட்ட காணிகளை மீட்பதற்காக, பெண்களும், பிள்ளைகளும் போராடினார்கள். அது அவர்களது வாழ்வாதாரத்திற்கான போராட்டம். அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள். அதனால் எதற்கும் அஞ்சாமல் படையினரின் முகாமுக்கு முன்னால் அமர்ந்திருந்து போராடினார்கள்.

என்ன அதிசயம், ஜல்லிக்கட்டு போராளிகள் எவரையும் அங்கே காணவில்லை. ஜல்லிக்கட்டு காளைகளுக்காக பொங்கிய தமிழ் இன உணர்வு, கேப்பாபுலவு ஏழைகளுக்காக பொங்கவில்லை. ஒரு சில தமிழ்த் தேசியவாதிகள் சென்று பார்த்து விட்டு வந்தார்கள். தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகளை சேர்ந்தோரும் சென்றிருந்தனர். 

சில நாட்களுக்குப் பின்னர் மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழுக்கு சேர்ந்த கூட்டத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட கேப்பாபிலவுக்கு வரவில்லை. அந்தளவுக்கு தமிழ் இன உணர்வாளர் யாருக்கும் அதில் அக்கறை இருக்கவில்லை. "கேப்பாபிலவு கிராமம் எளிதில் செல்ல முடியாத ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதாகவும், அங்கு செல்வதற்கான போக்குவரத்து கஷ்டம் எனவும்", ஒரு தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் காரணம் கண்டுபிடித்தார்.

இருப்பினும் சாதாரண இளைஞர்கள் சிலர் கேப்பாபுலவுக்கு சென்று மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்களே அவர்கள். சாதாரண பொது மக்களின் நலன் சார்ந்து அவர்கள் பக்கம் நிற்பதே இடதுசாரியம் என்பதை அவர்கள் நிரூபித்தனர். அதனால், அது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போராட்டமாக இருக்கவில்லை.

11.02.2017 அன்று யாழ்நகரில், மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில், கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக் கணக்கான அரசியல் ஆர்வலர்கள், சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் கலந்து கொண்டனர். தமிழ், சிங்கள இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அங்கு எழுப்பப் பட்ட கோஷங்களில் தமிழர் என்பதை தவிர்த்து, மக்கள் என்று சொல்லப் பட்டது ஒரு முக்கியமான விடயம். "மக்களின் காணிகளை மக்களுக்கே திருப்பிக் கொடு" என்று தான் கோஷம் எழுப்பப் பட்டது.

இதே நேரத்தில், கேப்பாபிலவு கிராமம் மக்கள் போராட்டக் களமாக மாறிக் கொண்டிருந்தது. பாடசாலை செல்ல வேண்டிய சிறு பிள்ளைகள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்களது கல்வி பாதிக்கப் படுகின்றது. அதனால் சமூக ஆர்வலர்கள் திறந்தவெளியில் இலவசப் பள்ளிக்கூடம் நடத்தினார்கள். கட்டாந்தரையில் அமர்ந்திருந்து பாடங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.

அங்கே ஒரு மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கேப்பாபிலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்தை பற்றிக் கேள்விப் பட்டு, தென்னிலங்கையில் இருந்து சிங்கள இடதுசாரிகளும் வந்தனர். ஒரே உணர்வோடு மக்களோடு சேர்ந்து போராடினார்கள். அதன் மூலம், கேப்பாபிலவு மக்களின் பிரச்சினை சிங்கள மக்கள் மத்தியிலும் போய்ச் சேர்ந்தது. தமிழருக்காக தமிழர் மட்டுமே போராடுவார்கள் என்று நினைத்திருந்த அரசு இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

பதினைந்து நாட்களாக தொடர்ந்து நடந்த கேப்பாபிலவு மக்களின் போராட்டம், மெல்ல மெல்ல அரசு அதிகாரத்தை அசைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த படைத் தலைமை, பின்னர் இறங்கி வந்து மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும் மக்கள் அங்கு சென்று குடியேறிய பின்னர் தான் எதுவும் நிச்சயமாகும். எது எப்படி இருப்பினும், கேப்பாபுலவு மக்களின் வெற்றி பெற்றால், அது இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக கருதப் படும். மக்கள் போராட்டம் மூலம் அரசை பணிய வைப்பதன் மூலம் மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும்.

வரட்டுத் தமிழ்த் தேசியம் பேசும் வசதிபடைத்த தமிழ் மத்தியதர வர்க்க  இளைஞர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற கேப்பாபுலவு ஏழைத் தமிழ் மக்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பொதுவுடைமைத் தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னர் சொன்ன மாதிரி, இழப்பதற்கு எதுவுமற்ற மக்களே போராடத் தயாராக இருப்பார்கள்.  இங்கிலாந்து முதல் ஈழம் வரை அது உண்மையென நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வு பொங்குவது இறுதியில் பேரினவாத அரசுக்கே சாதகமானது. இனப்பெருமை பேசும் "தமிழன்டா" கோஷம், வேற்றின மக்கள் எம்மை நெருங்க விடாமல் விரட்டுகிறது. அதனால் தமிழர்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். நாம் தமிழர் என்று சொல்லாமல், மக்கள் என்று அரசியல் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைக்கலாம்.

கேப்பாபிலவு போராட்டம் ஒரு மக்கள் புரட்சியின் ஆரம்பம். 

மேலதிக தகவல்களுக்கு: 

Tuesday, February 07, 2017

முதலாம் உலகப் போருக்கு மூல காரணமான பெர்லின் - பாக்தாத் ரயில் பாதை

முதலாம் உலகப் போருக்கு காரணமாக இருந்தது முதலாளித்துவம் என்ற உண்மை வரலாற்று நூல்களில் மறைக்கப் பட்டு வருகின்றது. இருப்பினும் சம்பந்தப் பட்ட ஐரோப்பிய நாடுகளின் போருக்கான தயார்ப் படுத்தல்களை ஆராயும் ஒருவர் அந்த உண்மையை கண்டறிவார்.

சரஜெவோ என்ற திரைப்படம், 2014 ம் ஆண்டில் வெளியாகி பல விருதுகளைப் பெற்றிருந்தது. ஆஸ்திரிய இளவரசரின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியின் கோணத்தில் இருந்து திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. (பட விமர்சனத்தை இந்த இணைப்பில் வாசிக்கவும் : “Sarajevo”: Saga of 1914 joins ranks of great pacifist films )

Leo Pfeffer ஒரு நேர்மையான அதிகாரியாக கொலைக்கு காரணம் என்னவென்ற உண்மையை கண்டுபிடிக்கிறார். அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது உள்வீட்டு சதி என்ற உண்மை தெரிய வருகின்றது. உண்மையை கண்டறிந்த விசாரணை அதிகாரியும் மிரட்டப் படுகின்றார்.

முதலாம் உலகப்போருக்கு காரணமாக பெரும்பாலான வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ள புனைகதையை தான் இன்றைக்கும் மாணவர்கள் படிக்கிறார்கள். அது அன்று ஆஸ்திரிய அரசினால் சோடிக்கப் பட்ட கதை என்பது பலருக்குத் தெரியாது.

//ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெரினன்ட் கொலைக்கு காரணமாக இருந்த காவ்ரிலோ பிரின்சிப்பும் அவனது தோழர்களும் செர்பிய தேசியவாதிகள். அவர்களுக்குப் பின்னால் பேரினவாத அபிலாஷைகள் கொண்ட செர்பியா இருந்தது. அந்தத் தாக்குதல் ஆஸ்திரியா மீதான போர்ப் பிரகடனமாக எடுத்துக் கொள்ள பட்டது.....// இது சரித்திரப் புத்தகம் சொல்லும் கதை. ஆனால் அது சொல்லாத கதை ஒன்றுள்ளது.

எதற்காக பேர்டினன்ட் இளவரசரின் வருகைக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படவில்லை? ஏற்கனவே கொந்தளிப்பான பிரதேசத்திற்கு வருகை தரும் ஓர் இளவரசருக்கு முப்பது போலீஸ்காரர்களின் பாதுகாப்பு போதுமானதா? சரஜெவோவில் இருந்த ஆஸ்திரிய இராணுவத்திற்கு வேறு பொறுப்புகள் கொடுத்து இடம் மாற்றிய உயர் மட்ட அதிகாரி யார்? மேலும் இளவரசின் மோட்டார் வாகனம் பவனி வரும் பாதைகள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன. இது தாக்குதல் நடத்துவோருக்கு சாதகமாக அமையாதா?

இளவரசர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் அனைவரும் செர்பியர்கள் தான். அதிலும் போஸ்னிய செர்பியர்கள். தலைமறைவாக இயங்கிய இரகசியக் குழு ஒன்றின் உறுப்பினர்கள். ஆனால், விசாரணைகளின் பொழுது அவர்கள் யாரும் தம்மை செர்பிய தேசியவாதிகளாக காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக பல்லினங்களை உள்ளடக்கிய யூகோஸ்லேவியா தேசியத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர். புரட்சி, சோஷலிசம், தொழிலாளர் அரசு பற்றியும் பேசினார்கள்.

சுருக்கமாக, அவர்கள் ஆஸ்திரிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை அடைவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தனர். அது எந்தக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று அக்கறை கொள்ளவில்லை. அதாவது அவர்கள் சரித்திர நூல்கள் குறிப்படுவது மாதிரி, "செர்பிய தேசியவாதிகளோ" அல்லது "செர்பிய பேரினவாதிகளோ" அல்ல.

விசாரணையின் பொழுது இன்னொரு உண்மையும் தெரிய வந்தது. இளவரசரைக் கொல்லும் தாக்குதல் திட்டத்திற்கு செர்பியா ஒத்துழைக்கவில்லை. உண்மையில் அன்றிருந்த அரசியல் சூழலில்  அப்படியான தாக்குதல் தனக்கு நன்மை பயக்காது என்று செர்பியா திடமாக  நம்பியது. ரஷ்யாவும் அதற்கு எதிராக இருந்தது.

தாக்குதலுக்கு செர்பியா உதவி செய்யவில்லை என்றால், வேறு யார் உதவினார்கள்? விசாரணையின் பெறுபேறுகள் யாவும் போஸ்னியாவை நிர்வகித்த ஆஸ்திரிய அதிகார வர்க்கத்தை குற்றம் சாட்டின. அதாவது, சில போர் வெறியர்களே இதற்குக் காரணம். அவர்களே சில தீவிரவாத செர்பிய இளைஞர்களுக்கு பணம் கொடுத்து தாக்குதல் நடத்த வைத்து இருக்கிறார்கள். 

தங்களது இளவரசரை தாமே கொலை செய்வதால், ஆஸ்திரியர்களுக்கு என்ன ஆதாயம்? செர்பியா மீது போர் தொடுக்க விரும்பிய, ஆஸ்திரிய போர் வெறியர்களின் திட்டங்களுக்கு அந்த இளவரசர் எதிராக இருந்தார். அதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்து விழுத்தினார்கள். போருக்கு தடையாக இருந்த இளவரசர் தீர்த்துக் கட்டப் பட்டார். அதை சாட்டாக வைத்து செர்பியா மீது போர்ப் பிரகடனம் செய்யலாம்.

எதற்காக செர்பியா மீது போர் தொடுக்க வேண்டும்? தொழிற்புரட்சி பற்றிக் கேள்விப் பட்டிருப்போம். தொழிற்புரட்சி என்பது உண்மையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் கட்டம். அது ரயில் பாதை அமைப்பது போன்ற, அதிக இலாபம் தரும் மிகப் பிரமாண்டமான திட்டங்களை நிறைவேற்றியது.

பெர்லினில் இருந்து பாக்தாத் வரையில் ரயில் பாதை அமைப்பதற்கு பல நிறுவனங்கள் விரும்பின. எதிர்காலத்தில் அதனால் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய இலாபத்திற்காக கனவு கண்டன. அரச மட்டத்திலும் பலர் பங்குதாரராக இணைந்து கொண்டனர். போஸ்னியா ஆளுநரும் அவர்களில் ஒருவர்.

அன்றைய ஐரோப்பிய அரசியல் சூழலில், பெர்லின் முதல் பாக்தாத் வரையிலான ரயில் பாதை செல்லும் நாடுகள் எல்லாம் நட்பு நாடுகளாக இருந்தன. ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, அத்துடன் துருக்கியும் நட்பு நாடுகள். அன்று ஈராக் முழுவதும் துருக்கியின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஆகவே ரயில் பாதையை எந்தத் தடங்கலும் இல்லாமல் அமைக்க முடியும். ஆனால், இடையில் செர்பியா மட்டுமே பகை நாடாக இருந்தது.

தவிர்க்க முடியாது, பெர்லின் - பாத்தாத் ரயில்பாதை செர்பியாவுக்கு ஊடாகத் தான் செல்ல வேண்டும். அதனால் செர்பியா மீது படையெடுத்து ஆக்கிரமிப்பது தான் திட்டம். ஆனால், எதிர்பாராத விதமாக போரின் முடிவுகள் வேறு விதமாக அமைந்து விட்டன. ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் தோல்வியடைந்தன. அதற்குப் பிறகு மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. பெர்லின் - பாக்தாத் ரயில்பாதை திட்டமும் கிடப்பில் போடப் பட்டது.

ஐரோப்பாவில் முதலாளித்துவ வளர்ச்சியானது ஓர் உலகப் போரை மட்டும் கொண்டு வரக் காரணமாக இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல உலக நாடுகளில் சாதாரணமான விடயங்களாகி விட்ட, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு போன்றனவும் முதலாளித்துவம் கொண்டு வந்தது தான். ஆஸ்திரிய இளவரசர் கொலையுடன் தான் அவை ஆரம்பமாகின.

இளவரசரின் கொலைக்கு பழிவாங்குவது என்ற சாட்டில், போஸ்னியாவில் வாழ்ந்த செர்பிய குடிமக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. ஆஸ்திரிய படையினர், குரோவாசிய, முஸ்லிம் ஒட்டுக் குழுக்களை உருவாக்கினார்கள். அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து செர்பியர்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டி விட்டார்கள். இதனால் ஆயிரக் கணக்கான செர்பியர்கள் கொல்லப் பட்டு, சொத்துக்கள் அழிக்கப் பட்டன. பல கிராமங்களில் இனச் சுத்திகரிப்பு நடந்தது.

முதலாம் உலகப் போர் தொடங்கியதுமே, எதிர்பார்த்த மாதிரி ஆஸ்திரியா செர்பியாவை ஆக்கிரமித்தது. அதைத் தொடர்ந்து இலட்சக் கணக்கான செர்பியர்கள், ஹங்கேரியில் இருந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர். பிற்காலத்தில் நாஸிகள் கட்டிய தடுப்பு முகாம்களுக்கு சற்றிலும் குறைவில்லாத அந்த முகாம்களில் நிலவிய வசதிக் குறைபாடு, தொற்று நோய்கள் காரணமாக ஆயிரக் கணக்கான செர்பியர்கள் இறந்தனர்.