Tuesday, December 31, 2019

சோவியத் செம்படையில் சேர்ந்து வரலாறு படைத்த பெண்கள்

ந‌வீன‌ போரிய‌ல் வ‌ர‌லாற்றில் முத‌ல் த‌ட‌வையாக‌, இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட சோவிய‌த் செம்ப‌டையில் ம‌ட்டும் தான் பெண்க‌ள் பெருமளவில் (சுமார் 800.000 பேர்.) போரிட்ட‌ன‌ர். 

போர் உக்கிர‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ 1943 ம் ஆண்டு, செம்ப‌டை வீர‌ர்க‌ளில் ப‌த்தில் ஒருவ‌ர் பெண். அதாவது மொத்த படையினரில் 10%. அதை விட‌ நாஸிக‌ள் ஆக்கிர‌மித்த‌ பிர‌தேச‌ங்க‌ளில் இய‌ங்கிய‌ கெரில்லா குழுக்க‌ளில் ஏராள‌மான‌ பெண் போராளிக‌ள் இருந்த‌ன‌ர். அன்று அவ‌ர்க‌ள் செம்ப‌டை வீர‌ர்க‌ளாக‌ க‌ண‌க்கெடுக்க‌ப் ப‌ட‌வில்லை. அதையும் சேர்த்தால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். 

செம்ப‌டையில் ப‌ல‌ பெண்க‌ள் லெப்டின‌ன்ட் போன்ற‌ உய‌ர் ப‌த‌விக‌ளிலும் இருந்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ர்க‌ளாக‌ அல்ல‌து தாதிக‌ளாக‌ ப‌ணியாற்றிய‌ பெண்க‌ள் கூட‌ இராணுவ‌ப் ப‌யிற்சி பெற்றிருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளும் ஆயுத‌ம் வைத்திருந்த‌ன‌ர். 

சோவிய‌த் வான் ப‌டையின் மூன்று ப‌டைய‌ணிக‌ள் முழுக்க‌ முழுக்க‌ பெண்க‌ளை ம‌ட்டுமே கொண்டிய‌ங்கின. பெண் விமானிக‌ள் செலுத்திய‌ குண்டு போடும் விமான‌ங்க‌ள் போர் முனையில் நாஸிப் ப‌டையின‌ரை துவ‌ம்ச‌ம் செய்த‌ன‌. 

சினைப்ப‌ர் துப்பாக்கியால் குறிபார்த்து சுடுவ‌தில் பெண்க‌ளே வ‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌ன‌ர். அந்த‌ள‌வுக்கு சினைப்ப‌ர் ப‌டைப்பிரிவில் பெண்க‌ள் தான் பெரும்பான்மையாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் லியூட்மிலா ப‌விஷென்கோ. 309 நாஸிப் ப‌டையின‌ரை கொன்று உலக சாத‌னை ப‌டைத்தவர்.

Saturday, December 21, 2019

சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு

ஜோர்ஜியா பயணக் கதை - இரண்டாம் பாகம்


ஸ்டாலின் பிறந்த காலத்தில் ஜோர்ஜியா என்ற தேசம் இருக்கவில்லை. பெரும்பாலான ஜோர்ஜியர்களுக்கும் தேசிய இன உணர்வு இருக்கவில்லை. கருங்கடலுக்கும், கஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை காவ்காசாஸ் பிரதேசம் என்று அழைப்பார்கள். அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை வாழ் மக்கள். இன்றைக்கும் பல்வேறு மொழிகளை பேசுகிறவர்கள். ஜோர்ஜிய மொழியுடன் தொடர்புடைய மிங்கேறிலியன், ஸ்வான் ஆகிய மொழிகள் இன்று அழிந்து வருகின்றன. தற்போது நாற்பதாயிரம், அல்லது எண்பதாயிரம் பேர் தான் அந்த மொழிகளைப் பேசுகிறார்கள்.  ஜோர்ஜியாவின் மொத்த மக்கட்தொகை நான்கு மில்லியன் கூட இல்லை.

ஜோர்ஜியாவில் ஸ்டாலின் பிறந்த கோரி (Gori) எனும் சிறு நகருக்கு அருகில், ஒசெத்தியர் எனும் ஈரானிய மொழி ஒன்றைப் பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. தொண்ணூறுகளில் ஜோர்ஜியா தனியான சுதந்திர நாடானாதும், ஒசெத்தியர் தமக்கென தனிநாடு கோரினார்கள். ஆனால் அது சாத்தியப் படவில்லை. 2008 ஆம் ஆண்டு அங்கு பெரியதொரு யுத்தம் நடந்தது. ஜோர்ஜிய இராணுவத்தின் படையெடுப்பை எதிர்த்து நிற்க முடியாத ஒசேத்திய கெரில்லாப் படையினர் ரஷ்யாவை உதவிக்கு அழைத்தார்கள்.

அந்த நேரம் ஜோர்ஜியாவை ஆண்ட சாகாஷ்விலி தனது மேற்கத்திய சார்பு அரசியல் நிலைப்பாடு காரணமாக ரஷ்யாவை பகைத்திருந்தார். ரஷ்யாவும் இது தான் சாட்டு என்று "ஒசேத்திய சிறுபான்மை இன மக்களை பாதுகாப்பதற்காக" இராணுவத்தை அனுப்பியது. ஜோர்ஜிய இராணுவத்தை ஓட ஓட அடித்து விரட்டிய ரஷ்யப் படைகள், கோரி வரை வந்து விட்டன. அப்போது கோரியை விட்டு ஜோர்ஜியர்கள் வெளியேறியதும், நகர மத்தியில் ரஷ்யப் படையினர் நின்றதும் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக பேசப் பட்டன.

உண்மையில் அன்று ரஷ்யப் படையினர் தமது பலத்தைக் காட்டுவதற்காகவே கோரியை கைப்பற்றி இருந்தனர். சில நாட்களின் பின்னர் தாமாக வெளியேறி ஒசேத்திய தனிநாட்டு எல்லையோடு நின்று விட்டனர். இந்த நிலைமை இப்போதும் தொடர்கிறது. ஆனால், முன்பிருந்த பதற்றம் தணிந்து சமாதானம் நிலவுகிறது. அப்போது தொலைக்காட்சிகளில் கோரி நகர சபைக் கட்டிடமும், அதற்கு முன்னால் நின்ற துப்பாக்கி ஏந்திய ரஷ்யப் படையினரையும் காட்டினார்கள். அப்போது அங்கே ஒரு பிரமாண்டமான ஸ்டாலின் உருவச் சிலை இருந்தது.


கோரி நகர மத்தியில் இருந்த ஸ்டாலின் சிலை, 2010 ம் ஆண்டு "சோவியத் நீக்கம்" என்ற பெயரில் அகற்றப் பட்டது. பகலில் செய்தால் ஊர் மக்கள் எதிர்ப்பார்கள் என்ற பயத்தில், இரவோடிரவாக வந்து சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று நகருக்கு வெளியே வீசி விட்டனர். தற்போது பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று சிலையை மீண்டும் கொண்டு வர திட்டமிடுகின்றார். இது தொடர்பாக நகரசபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அனேகமாக அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கும் ரஷ்யாவில் இருந்து பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதை விட போலந்து, (தென்) கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்தும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருவதாக அங்கு வேலை செய்யும் ஊழியர் தெரிவித்தார். நான் அங்கே சென்றிருந்த நேரத்திலும், ரஷ்யர்கள், ஈரானியர்கள் ஒரு பெரிய குழுவாக வந்து பார்வையிட்டனர். 


பத்து வருடங்களுக்கு முன்னர், கோரி சுற்றுலாத் துறை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. தற்போது நிறைய புதிய ஹோட்டேல்கள் கட்டப் பட்டுள்ளன. நான் தங்கிருந்த ஹோட்டேல் கட்டி ஒரு வருடம் தானாகிறது என்றார்கள். கோடை காலத்தில் எல்லா அறைகளும் நிரம்பி விடுமாம். நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அறை வாடகை ஐம்பது லாரிகள். ஸ்டாலின் மியூசியத்தில் இருந்து இருநூறு மீட்டர் தூரத்தில் இருந்தது. ஸ்டாலின் நினைவுச் சின்னங்கள் உட்பட, தற்போது அங்கே எல்லாம் வணிக மயமாகி விட்டது. வழமையாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த கோரி நகருக்கு ஸ்டாலின் மியூசியத்தால் பெருமளவு வருமானம் கிடைக்கிறது எனலாம்.

(ஸ்டாலின் பிறந்த வீட்டின் முன்புறத் தோற்றம்)

1937 ம் ஆண்டு, அதாவது சோவியத் யூனியனில் ஸ்டாலின் ஆட்சியில் இருந்த காலத்தில், அவரது பிறந்த வீடு மியூசியமாக்கப் பட்டது. அதைச் சுற்றி தூண்களை எழுப்பி, மேலே கொங்கிரீட் கூரை போடப் பட்டது. இந்த நினைவுச்சின்னம் இப்போதும் பேணிப் பாதுக்கப் பட்டு வருகின்றது. ஸ்டாலின் பிறந்த வீட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய ஸ்டாலினின் சிலையும் மியூசியக் கட்டிடமும் அமைந்துள்ளன. 


ஐம்பதுகளின் தொடக்கத்தில் தான் தற்போதுள்ள நூதனசாலைக் கட்டிடம் கட்டிமுடிக்கப் பட்டது. அப்போது ஸ்டாலின் மறைந்து, குருஷேவ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. "ஸ்டாலினிச எதிர்ப்பாளர்" குருஷேவ் அங்கு ஒரு நூதனசாலை வருவதை விரும்பி இருக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மக்களும் விட்டுக் கொடுக்கவில்லை. அப்போது திறக்கப் பட்ட மியூசியம் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.


ஸ்டாலின் மியூசியம் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு மாடிக் கட்டிடத்தின் மேல் பகுதியில் தான் மியூசியம் உள்ளது. அதற்கு செல்லும் படிக்கட்டின் நடுவிலும் மார்பிளால் செய்யப் பட்ட ஸ்டாலின் சிலை உள்ளது. உள் நுழைந்தவுடன் வாயில் அருகில் சிறு வயது ஸ்டாலின், மற்றும் அவரது தாய், தந்தையின் புகைப்படங்கள் உள்ளன. அதற்கு அருகில் அவர் பள்ளிக்கூடத்தில் படித்த புத்தகங்கள் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப் பட்டுள்ளன. மேலே கற்பித்த ஆசிரியர்களின் படங்கள் உள்ளன. ஸ்டாலின் சிறு வயதில் எழுதிய கவிதைகளும் பெரிதாக்கி காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

ஒரு கிறிஸ்தவ பாதிரியாக வேலை செய்வதற்கு படித்துக் கொண்டிருந்த ஸ்டாலின், அரசியல் ஈடுபாடு காரணமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப் பட்டார். அதற்குப் பின்னர் அவர் புரட்சிகர சமூக ஜனநாயகக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவில் இயங்கிய காலங்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. நகர்ப்புற தொழிலாளர்களின் கூட்டங்கள், மேதின ஊர்வலம் போன்றவற்றை ஒழுங்கமைத்து நடத்திய ஸ்டாலினின் ஓவியங்கள் வைக்கப் பட்டுள்ளன. 
 
அடுத்த பகுதியில் இரண்டாம் உலகப்போர் காலத்தில் எடுத்த படங்கள், மற்றும் ஸ்டாலின் எழுதிய நூல்களின் தொகுப்புகள் வைக்கப் பட்டுள்ளன. இறுதியாக இன்னொரு பகுதியில் உலகம் முழுவதிலும் இருந்து ஸ்டாலினுக்கு கிடைத்த அன்பளிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளன. திரும்பி வரும் வழியில், மாடியில் இருந்து கீழிறங்கும் போது, படிகளில் வலது பக்கத்தில் ஸ்டாலின் கிரெம்ளினில் பயன்படுத்திய அலுவலக மேசை, நாற்காலிகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. 


மேலும் வெளியே மியூசியக் கட்டிடத்திற்கு அருகில் ஸ்டாலின் தனது அலுவலகமாக பயன்படுத்திய ரயில் பெட்டி உள்ளது. ரஷ்யப் புரட்சியின் ஆரம்ப காலங்களில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது புரட்சியை நடத்திய தலைவர்கள் இது போன்ற ரயில் பெட்டிகளை தமது அலுவலகமாக வைத்திருந்தனர். அதாவது விடுதலைப் போருக்கு தலைமை தாங்கவும், போர் முனைக்கு சென்று செம்படையினரை ஊக்குவிக்கவும், அன்றைய தலைவர்கள் ரயில்களை பயன்படுத்தினார்கள்.

கோரி நகரில் இன்னொரு மியூசியமும் ஆர்வத்தை தூண்டியது. ஜோர்ஜிய இன மக்களின் பூர்வீகம் தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்துள்ள நூதனசாலை அது. நுழைவுக் கட்டணம் மூன்று லாரிகள். மேலதிகமாக ஐந்து லாரிகள் கொடுத்தால் ஒரு ஆங்கிலம் பேசும் வழிகாட்டி கிடைப்பார். அது மிகவும் பிரயோசனமாக இருந்தது. அங்கிருந்த பொருட்கள் பற்றிய விளக்கத்தில் ஆங்கிலத்திலும் குறிப்புகள் இருந்த போதிலும், வழிகாட்டி மூலம் அதிக விளக்கம் கிடைத்தது.


சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் நாகரிகம் தொடர்பாக கண்டெடுத்த அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் அங்கே உள்ளன. அந்தக் காலத்திலேயே தானியம் அரைப்பதற்காக பயன்படுத்திய அம்மிக் குழவி அங்கே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. நமது நாட்டில் உள்ள அதே மாதிரியான அம்மிக் குழவி தான். கல் கொஞ்சம் வளைந்திருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்த மக்கள் ஒரே மாதிரியான உபகரணங்களை பாவித்துள்ளமை மிகப் பெரிய ஆச்சரியம்.

ஆதி கால மக்கள் களிமண்ணால் கட்டப் பட்ட வீடொன்றில் வாழ்ந்துள்ளனர். கூரையும் களிமண்ணால் செய்யப் பட்டது. கூரை நடுவில் புகை போவதற்கான ஓட்டை இருந்தது. வீட்டுக்கு நடுவில் அடுப்பு மாதிரி கட்டி இருந்தனர். அதில் எந்த நேரம் நெருப்புத் தணல் இருந்து கொண்டிருக்கும். அதை அடுப்பு மாதிரி சமைப்பதற்கும் பயன்படுத்தலாம். அதே நேரம், குளிரை தாக்குப் பிடிக்க வெப்பம் தருவதற்கும் பயன்பட்டது. இது போன்ற வீடுகள் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் இருந்துள்ளன. தற்போதும் மத்திய ஆசியாவில் வாழும் நாடோடி மக்கள் இது போன்ற வீடுகளை அமைக்கும் கலையை அறிந்து வைத்திருக்கின்றனர்.

ஆதி கால மனிதர்கள் பிற்காலத்தில் வளர்ச்சி அடைந்ததும், வெண்கலம், இரும்பால் செய்த கருவிகளை வேட்டையாட பயன்படுத்தினார்கள். அப்போது பயன்படுத்திய ஈட்டிகள், கத்திகள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அப்போது பயன்பாட்டில் இருந்த மான் வடிவில் செய்யப்பட்ட வைன் குடிக்கும் கிண்ணம், ஒரு சில மாற்றங்களுடன் இன்றைய காலத்திலும் பயன்பாட்டில் உள்ளது. அன்றிருந்த ஆதி கால மக்களும் மலை வாழ் மக்கள் தான். வேட்டையாடுவோராக, கால்நடைகள் மேய்ப்பவர்களாக இருந்துள்ளனர். குளிர் நேரத்தில் வெப்பம் தரும் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டார்கள். அது ஆட்டுத் தோலால் செய்யப் பட்டது. அந்த மணத்திற்கு பாம்புகளும் கிட்ட நெருங்காதாம்.

மியூசியத்தின் இறுதிப் பகுதியில் ஜோர்ஜிய மொழியின் தோற்றம், கிறிஸ்தவ மதத்தின் வருகை போன்ற விபரங்கள் உள்ளன. ஜோர்ஜியாவில் இன்றைக்கும் கிறிஸ்தவ மதத்தலைவர் பாவிக்கும் தொப்பியின் பெயர் "மித்ரா". தற்செயலாக, மித்ரா என்பது ஈரான், இந்தியாவில் வேதகால ஆரியர்கள் வழிபட்ட ஒரு கடவுளின் பெயர். அநேகமாக ஒரு காலத்தில் அந்தப் பிரதேசத்திலும் மித்ரா வழிபாடு இருந்திருக்கலாம்.

அந்த மியூசியத்தில் வரவேற்பளராக இருந்த பெண், தன்னுடைய பெயர் "தமிழ்" என்றும், அது பற்றித் தெரியுமா என்றும் கேட்டார். மிகுந்த ஆச்சரியத்துடன் நானும் ஒரு தமிழர் தான், உங்களுக்கு அந்த மொழி பற்றிய விபரங்கள் தெரியுமா என்று கேட்டேன். அவர் அது பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். ஜோர்ஜியாவில் நிறையப் பெண்களுக்கு தமிழ் என்று பெயர் இருக்கிறதா என்று நான் கேட்டேன். பெருமளவில் இல்லையென்றாலும், சில பெண்களுக்கு தமிழ் என்ற பெயர் இருப்பதாக பதில் அளித்தார். அங்கிருந்து விடை பெறும் முன்னர் "தமிழும், தமிழும் சந்தித்துக் கொண்ட தருணத்தை" செல்பி எடுத்துக் கொண்டேன்.

ஜோர்ஜிய மொழியின் பூர்வீகம் எதுவென்பது யாருக்கும் தெரியாது. தாங்கள் ஆயிரமாயிரம் வருட காலமாக அந்தப் பிராந்தியத்தில் வாழ்வதாக ஜோர்ஜியர்கள் சொல்லிக் கொள்வார்கள். அவர்களது மொழியின் எழுத்து வடிவம் ஆச்சரியப் படத் தக்கவாறு தென்னிந்திய மொழிகளின் வரி வடிவத்தை ஒத்திருக்கிறது. பெருமளவு வளைவுகளும், சுழிகளும் கொண்ட எழுத்துக்கள். பண்டைய ஜோர்ஜிய எழுத்துக்கள் இதிலிருந்து வித்தியாசமாக இருக்கும். அதிலும் ஓர் அதிசயம் என்னவென்றால் இந்தியாவின் பிராமி எழுத்துக்கள் போலுள்ளன. ஜோர்ஜிய மொழி எழுத்துக்கள் அரேமிய அல்லது, கிரேக்க மொழிகளை பின்பற்றி உருவாக்கப் பட்டிருக்கலாம் என மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்தக் கோட்பாடு கூட தவறாக இருக்கலாம்.

உலகில் இன்னமும் அறிந்து கொள்ளப்படாத பல அதிசயங்களை ஜோர்ஜியா கொண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அங்கிருந்து திரும்பும் பொழுது ஒரு ஜோர்ஜிய மொழி திரைப்பட டிவிடி வாங்கிக் கொண்டு வந்தேன். "தேதே"(அம்மா) என்ற பெயரிடப் பட்ட படம், நவீன நாகரிகம் ஊடுருவி இருக்காத மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றிப் பேசுகின்றது. குளிர்காலத்தில் பனி மூடிய பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்கு குதிரைகளில் தான் செல்ல வேண்டும்.

அந்தப் படத்தில் காட்சிக்கு காட்சி எவ்வாறு பழைய சம்பிரதாயங்கள் தனி மனித வாழ்வைப் பாதிக்கின்றன என்பதை சிறப்பாக காட்டி இருந்தார்கள். அந்த சமுதாயத்தில் இன்னமும் பெண்களுக்கென்று தெரிவுகள் இருக்க முடியாது. குடும்பத்தில் பெரியவர்கள் சிறுவயதில் நிச்சயர்தார்த்தம் செய்த ஆணை தான் திருமணம் செய்ய வேண்டும். ஓர் ஆண் ஒரு இளம் பெண்ணை கடத்திச் சென்று விட்டால், அவள் அவனோடு தான் காலம் முழுவதும் வாழ வேண்டும். இல்லாவிட்டால் இரு குடும்பங்களுக்கும் இடையில் பகை மூண்டு இரத்தக்களரி ஏற்படும். அதை விட சாமிப் படத்தின் மீது சத்தியம் செய்வது, நோயை குணப்படுத்துவதற்கு முன்னோர்களின் ஆவிகளை துணைக்கு அழைப்பது எனப் பல சம்பிரதாயங்கள் இன்னமும் பின்பற்றப் படுகின்றன. இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது ஜோர்ஜியர்களின் கலாச்சாரம், கீழைத்தேய மரபுகளை கொண்டுள்ளமை தெரிய வந்தது.

ஜோர்ஜியா பயணம் முடித்து வந்ததும், பல நண்பர்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பினார்கள். நான் ஏற்கனவே ஐரோப்பாவின் மேற்கிலும், கிழக்கிலும் பல நாடுகளுக்கு பயணம் செய்திருப்பதால் வித்தியாசங்களை உணர முடிந்தது. எல்லா நாடுகளிலும் பெரும் நகரங்களில் திருட்டுக்கள் நடப்பதுண்டு. ஆனால் கிராமங்கள் பாதுகாப்பானவை.நான்பார்த்த அளவில் பெரும்பாலான ஜோர்ஜியர்கள் நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். யாரும் எம்மை வெளிநாட்டவர் தானே என்று ஏமாற்ற நினைக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விடயம். "எங்களிடம் பணம் இருக்கிறது" என்று ஆடம்பரம் காட்டுவோரை தான் திருடர்கள் குறிவைக்கிறார்கள். "ரோமாபுரியில் ஒரு ரோமனாக இருக்க வேண்டும்" என்று சொல்வது மாதிரி, எந்த நாட்டுக்கு சென்றாலும் உள்ளூர் மக்களில் ஒருவராக மாறிவிட வேண்டும். அவர்களது நடை, உடை, பாவனைகளை மேலெழுந்த வாரியாக அவதானித்து விட்டு, நாமும் அப்படியே நடந்து கொண்டால் எந்தப் பிரச்சினையும் வராது. சுருக்கமாக, எங்கிருந்தாலும் மிகவும் எளிமையாக வாழ வேண்டும். 

 (முற்றும்) 

முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு:
"ஸ்டாலின் பிறந்த மண்" - ஜோர்ஜியா பயணக் கதை  


Tuesday, December 17, 2019

"ஸ்டாலின் பிறந்த மண்" - ஜோர்ஜியா பயணக் கதை

உலகில் அதிகம் அறியப்படாத நாடுகளில் ஒன்று ஜோர்ஜியா. அறிந்தவர்களும் அதை ஒரு "ஐரோப்பிய நாடு" என நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஆசியாக் கண்டத்தில் இருக்கிறது! அதன் பூகோள அமைவிடம் காரணமாக அயலில் உள்ள வல்லரசுகளின் மேலாதிக்க வெறிக்குள் அகப்பட்டு நசுக்கப் பட்டு வந்தது. இப்போது தனிநாடாக இருந்தாலும் அயலில் உள்ள ரஷ்யாவுடன் பகைத்துக் கொண்டு, தொலைதூரத்தில் உள்ள அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. நேட்டோ படைகளையும் வரவேற்று வைத்திருக்கிறது. இதன் விளைவாக 2008 ம் ஆண்டு நடந்த போர் ஜோர்ஜியா மீது சர்வதேச நாடுகளின் கவனத்தை குவிக்க வைத்தது. 


சோவியத் யூனியன் இருந்த காலத்தில், ஜோர்ஜியாவும் ஒரு சோவியத் குடியரசாக பிரகடனப் படுத்தப் பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் உலகில் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய சோவியத் அதிபர் ஸ்டாலின் ஒரு ஜோர்ஜிய இனத்தவர் என்பது பலருக்குத் தெரியாது. சார் மன்னன் காலத்து ரஷ்ய சாம்ராஜ்யத்தில் பிறந்த, அங்கிருந்த சிறுபான்மை மொழிகளில் ஒன்றான ஜோர்ஜிய மொழி பேசும் ஒருவரை, பெரும்பான்மை ரஷ்யர்கள் தமது தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயம் தான். ஆனால், உலக வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. அதற்குக் காரணம், ஸ்டாலினே ஓரிடத்தில் எழுதியது மாதிரி, "இன்றுள்ள தேசிய இன உணர்வுகள் யாவும் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளே!" அந்த விளைவுகள் என்னவென்பதையும், அவற்றின் இன்றைய நிலைப்பாடுகளையும் இந்தப் பயணக் கட்டுரையில் ஓரளவு அலசி இருக்கிறேன்.
ஜோர்ஜியாவுக்கு சுற்றுலாப் பயணியாக செல்வதற்கு பெருமளவு பணம் வைத்திருக்கத் தேவையில்லை. ஹங்கேரியின் மலிவு விலை விமான நிறுவனமான விஸ் எயர், ஐரோப்பாவின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் பயண சேவைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எனக்கு ஏற்பட்ட டிக்கட் செலவு வெறும் ஐம்பது யூரோக்கள் மட்டுமே! பொதுவாக டிசம்பர் மாதத் தொடக்கம் சுற்றுலாக் காலம் இல்லையென்பதால் விலைகள் குறைக்கப் படுவது வழமை.

ஜோர்ஜியாவில் தங்குவதற்கும், சுற்றிப் பார்ப்பதற்கும் அதிக செலவு பிடிக்காது. கடந்த பத்து வருடங்களில் தான் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனை பல இடங்களிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஹோட்டல்களை தவிர்த்து, ஹொஸ்டலில் தங்குவதற்கு நாளொன்றுக்கு சராசரி பத்து யூரோ போதும். பதிவு செய்வதற்கும் அதிக கேள்விகள் கேட்பதில்லை. ஒரு தடவை, கூட்டைசி எனும் நகரில் ஒரு குடும்பம் நடத்தும் சிறிய ஹொஸ்டல் அறையில் தங்கி இருந்தேன். "பதிவு செய்வீர்களா?" என்று கேட்டதற்கு "அப்படி என்றால் என்ன?" என்று திருப்பிக் கேட்டார்கள். இந்த விடயத்தில் அரசு அதிக கட்டுப்பாடுகள் விதிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். 


முதலில் ஒரு விடயத்தை சொல்ல மறந்து விட்டேன். ஜோர்ஜியா பயணம் செய்பவர்கள் கையில் யூரோ, டாலர், பவுன் நாணயத் தாள்களை வைத்திருக்க வேண்டும். மூலைக்கு மூலை உள்ள நாணய மாற்று கடைகளில் கொடுத்து உள்ளூர் நாணயமான லாரிக்கு மாற்றிக் கொள்ளலாம். ஒரு யூரோ/டாலர் மூன்று லாரிகள் என்று அண்ணளவாக கணக்குப் போடலாம். அங்குள்ள வங்கி ATM களில் கிரெடிட் கார்ட் தவிர வங்கி அட்டையையும் பாவிக்க முடியாது. சர்வதேச வங்கித் தொடர்புகளில் ஜோர்ஜிய வங்கிகள் இணைக்கப் படவில்லை போலிருக்கிறது. எயர்போர்ட்டில் வந்திறங்கியவுடனேயே குடிவரவு அலுவலகர்கள் எம்மிடம் பணம் இருக்கிறதா என்று விசாரிக்கிறார்கள். 


பல நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட்களுக்கு விமான நிலையத்தில் இறங்கியவுடன் இலவச விசா அடித்துக் கொடுக்கிறார்கள். இந்தியா, இலங்கையில் இருந்து வருபவர்களுக்கும் விசா கட்டுப்பாடுகள் குறைவு. தலைநகர் திபிலிசியில் பல இந்திய சுற்றுலாப் பயணிகளை காணக் கூடியதாக இருந்தது. குறைந்த செலவில் படிக்கலாம் என்பதற்காக மாணவர் விசாவில் வந்தவர்களையும் சந்தித்தேன். 


திபிலிசி நகர மத்தியில் இருந்த இந்திய உணவு விடுதிக்கு முன்னால், இரண்டு இந்திய, பங்களாதேஷ் இளைஞர்கள் வாடிக்கையாளர்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்த நேரம், அவர்கள் அந்நாட்டில் படிக்கவென வந்து வேலை செய்வதை அறிந்து கொண்டேன். நாளொன்றுக்கு நாற்பது லாரிகள் சம்பளமாக கிடைக்கிறதாம். அந்த ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஒரு கேரளாக் காரர். அங்கு சென்று பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் அவரும் வந்து கதைத்தார்.

ஜோர்ஜியாவில், அதுவும் மொழி தெரியாத ஒரு நாட்டில் தனியாகப் பயணம் செய்வது ஒரு பெரிய சாகசம் எனலாம். இங்கே நான் பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றிக் கூறவில்லை. பலர் நினைப்பதற்கு மாறாக பாதுகாப்பாக பயணம் செய்யலாம். நாம் கொஞ்சம் எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருந்தால் போதும். அது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. லண்டன், பாரிஸ் நகரம் என்றாலும், நாம் தான் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

நான் சென்று இறங்கிய கூட்டைசி (Kutaisi) சர்வதேச விமான நிலையம் பெரும்பாலும் மலிவு விலை விமான சேவைக்காக கட்டப் பட்டிருக்க வேண்டும். அங்கே பெரும்பாலும் ஹங்கேரியின் விஸ் எயர் (Wizz air) தான் வருகின்றது. விமான நிலையத்தில் இருந்து தலைநகர் திபிலிசிக்கு (Tbilisi) எந்நேரமும் பேருந்து சேவைகள் உள்ளன. ஒவ்வொரு விமானமும் வந்திறங்கும் நேரம் பார்த்து பஸ் ஓடுகிறது. திபிலிசி செல்வதற்கு சுமார் நான்கு மணி நேரம் எடுக்கிறது. இடையில் அரை மணித்தியாலம் சாப்பாட்டு இடைவேளை விடுகிறார்கள். டிக்கட் விலை இருபது லாரிகள்.

மொபைல் பாவனையாளர்கள் ரோமிங் செலவுகளை தவிர்க்கும் பொருட்டு, உள்ளூர் சிம் கார்ட் வாங்கிப் போடுவது நல்லது. அதை விமான நிலையத்திலேயே வாங்க முடியும். சிம் காரட்டுடன் 2GB இன்டர்நெட் ஐந்து லாரிக்கு கிடைக்கிறது. Bee line நிறுவனம் வழங்கும் சேவை சிறந்தது என்று சொல்கிறார்கள். மொபைல் தொலைபேசி வணிகத்தை பொறுத்த வரையில் ஜோர்ஜியா மிகவும் பின்தங்கியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் பாவனையில் இருந்த தொலைபேசிகளை தான் இப்போதும் அங்கே பலர் பாவிக்கிறார்கள். பெரும்பாலான ஜோர்ஜியர்களின் வாங்கும்திறனும் குறைவு தான்.

மேற்கு ஐரோப்பாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் மூன்று மணிநேர வித்தியாசம். நான் திபிலிசி போய்ச் சேர்ந்த நேரம் அதிகாலை ஏழு மணி. இருப்பினும் ஒன்றரை மில்லியன் சனத்தொகை கொண்ட அந்த நகரம் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு டாக்சியை பிடித்து நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலையில் உள்ள ஹொஸ்டல் ஒன்றில் சென்று தங்கினேன். புஷ்கின் சாலை சார் மன்னன் காலத்தில் இருந்தே இயங்கிக் கொண்டிருக்கும் சுறுசுறுப்பான வீதி. அதற்கு அருகில் தான் திபிலிசி பழைய நகரம் உள்ளது. 


திபிலிசி செல்லும் சுற்றுலாப் பயணிகள் யாரும் பழைய நகரத்தை பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். மிகவும் அழகான இடம். பழைய கோட்டை ஒன்றின் இடிபாடுகளை கொண்ட குன்றின் உச்சியை நோக்கி கேபிள் கார் செல்கிறது. நரிகலா (Narikala) எனும் பெயருடைய கோட்டை ஆயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையானது. அடிப்படை கட்டுமானம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த ஈரானிய- சசானிய சாம்ராஜ்ய காலத்தில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் ஈரான் பாக்தாத்தை தலைநகராகக் கொண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த காலத்திலும், ஆட்சியாளர்களின் கைமாறிய போதிலும் நரிகலா கோட்டை பாவனையில் இருந்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் பாவனையில் இருந்த கோட்டைக்கு நீர் விநியோகம் செய்வதற்கு ஒரு இரகசிய சுரங்க வழி இருந்ததாம். 

நரிகலா கோட்டைக்கு அருகில், நவீன காலத்தில் கட்டப்பட்ட "சுதந்திர தேவி" சிலை உள்ளது. ஒரு கையில் வாளுடன் குன்றின் உச்சியில் நின்று கொண்டே திபிலிசி நகரை பார்க்கும் வகையில் கட்டப் பட்ட சிலை, ஜோர்ஜிய தேசியவாதத்தை பிரதிபலிப்பதை வேறெந்த விசேடமும் அதில் இல்லை. குன்றின் மறு பக்கத்தில் கீழே இறங்கிச் சென்றால் தாவரவியல் பூங்கா இருக்கிறது. அதிலிருந்து நடந்து சென்றால் மீண்டும் திபிலிசி பழைய நகரத்தை அடையலாம். 


இந்த இடத்தில் திபிலிசி நகரம் பற்றி சில குறிப்புகளை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ஜோர்ஜியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள திபிலிசி நகரமும், அதை அண்டிய பிரதேசங்களும் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் சுதந்திரமான மன்னராட்சியாக இருந்து வந்தது. அப்போது ஜோர்ஜியாவை ஆண்ட கடைசி மன்னன் இரண்டாம் இராக்லி, இஸ்லாமிய ஓட்டோமான் சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கு அஞ்சி, கிறிஸ்தவ ரஷ்ய சாம்ராஜ்யத்தின் உதவியை நாடினான். அப்போது மதம் தான் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் காரணியாக இருந்துள்ளது. எது எப்படியோ அன்றிலிருந்து ஜோர்ஜியா ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகி விட்டது. 

அயல் நாடான ஆர்மேனியா மாதிரி, ஜோர்ஜியாவில் உள்ளவர்களும் தாமே ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் என்று பெருமை பேசுவதுண்டு. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. கிரேக்க அல்லது ரஷ்ய ஒர்தொடக்ஸ் பாணி கிறிஸ்தவத்தை பின்பற்றும் ஜோர்ஜியாவில், தனித்துவமான திருச்சபை உள்ளது. அதாவது ஜோர்ஜியாவை மட்டும் மையமாகக் கொண்ட மத நிறுவனம். அன்றிருந்த கிறிஸ்தவ மடாதிபதிகள் ஜோர்ஜிய மொழியை மட்டும் வளர்க்கவில்லை. ரஷ்ய மொழிக்கும் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அன்றைய ஜோர்ஜியா ரஷ்ய சக்கரவர்த்தியின் ஆளுகையின் கீழ் இருந்தாலும், பிற பிரதேசங்களில் நடந்த மாதிரி அதை ஒரு காலனியாக்கி, ரஷ்யர்களை அங்கு கொண்டு சென்று குடியேற்றவில்லை. ரஷ்ய படையினரை வைத்திருந்து பராமரித்ததை தவிர, ஜோர்ஜியாவின் அரசியலிலோ, அல்லது பொருளாதாரத்திலோ ரஷ்யர்கள் பெருமளவு செல்வாக்கு செலுத்தவில்லை. "ரஷ்ய மயமாக்கல்" என்று சொல்லக் கூடிய அளவுக்கு, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழியை படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியவர்கள் ஜோர்ஜிய கிறிஸ்தவ மடாதிபதிகள் தான். அதற்குக் காரணம், அன்றைய காலகட்டத்தில் ரஷ்யன் ஒரு வளர்ச்சி அடைந்த, சர்வதேச தொடர்புகளுக்கு உதவும் மொழியாகக் கருதப் பட்டது. அதாவது, இந்தியர்கள், இலங்கையர்கள் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்த மாதிரி, ஜோர்ஜியர்கள் ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அன்றிருந்த ரஷ்ய சாம்ராஜ்யம் மன்னராட்சியாக இருந்தாலும், அதற்குள் முதலாளித்துவ பொருளாதாரம் சுதந்திரமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் மூலதனத்தை குவித்த பெரும் முதலாளிகள் பெரும்பாலும் ஆர்மேனியர்கள், அல்லது யூதர்களாக இருந்தார்கள். இப்போதும் திபிலிசி நகரில் இலட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் வசிக்கிறார்கள். நான் ஒரு முடிதிருத்தும் கடைக்கு சென்றிருந்த நேரம், எனக்கு முடி வெட்டிய பையன் ஓர் ஆர்மேனியன். தனது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லாம் ஜோர்ஜியாவில் பிறந்து வளர்ந்ததாக கூறினான். அதாவது, தாங்கள் அண்மையில் ஆர்மேனியாவில் இருந்து வந்த வந்தேறுகுடிகள் அல்ல, ஜோர்ஜியாவின் பூர்வ குடிகள் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்பினான்.

அந்த ஆர்மேனிய முடி திருத்தும் தொழிலாளியுடன் பேச்சுக் கொடுத்த நேரம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. ஓரளவு சமாளிக்கும் அளவுக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்து வைத்திருந்தான். தனக்கு ஆங்கிலத்தை தவிர, ஆர்மேனியன், ஜோர்ஜியன், ரஷ்யன் ஆகிய நான்கு மொழிகளும் தெரியும் என்றான். தானும் வேறு சிலரும் சேர்ந்து அந்தக் கடையை நடத்துவதாகவும், நாளொன்றுக்கு பதின்மூன்று மணிநேரம் வேலை செய்வதாகவும், அப்போது தான் ஓரளவு சம்பாதிக்கலாம் எனவும் தெரிவித்தான். ஜோர்ஜிய இனத்தவர்கள் எப்போது பார்த்தாலும் இந்நாட்டில் வேலை இல்லை என்று முறையிடுகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடுவதையும், வைன் குடிப்பதையும் தவிர வேறெந்த வேலையும் தெரியாது. பலர் இங்கே வேறு நாடுகளில் இருந்து வந்து வேலை செய்து நன்றாக சம்பாதிக்கிறார்கள். ஜோர்ஜியர்களுக்கு அந்தத் திறமை இல்லை. இவை அந்த ஆர்மேனிய பையனின் கருத்துக்கள்.

மேற்குறிப்பிட்ட உரையாடலில் தெரிவிக்கப் பட்ட விடயங்கள், நான் அடுத்து எழுதப் போகும் திபிலிசி தேசிய நூதனசாலையின் அரசியலை புரிந்து கொள்ள பெரிதும் உதவும் என நினைக்கிறேன். அங்கு பல அருமையான ஆவணங்கள் சேகரிக்கப் பட்டு பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஜோர்ஜிய மக்களின் ஆடை, அணிகலன்கள், வீட்டில் பாவித்த உடைமைகள் போன்றனவற்றை கண்டு களிக்கலாம். அத்துடன் அன்று வாழ்ந்த மக்களின் பாரம்பரிய வீடுகள், மற்றும் தொழிலகங்களின் மாதிரிகளும் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றை நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர்.


இந்த நூதனசாலையை பார்வையிட்டுக் கொண்டிருந்த நேரம் ஓர் உண்மை மூளைக்குள் பளிச்சிட்டது. இவற்றில் ஏதோ ஓர் ஒற்றுமை அல்லது சிறப்பம்சம் உள்ளது. என்ன அது? அங்கு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த பொருட்கள், ஆடைகள் எல்லாமே வசதியான மேல்தட்டு வர்க்கத்தினர் பாவித்தவை. அதாவது, அந்தக் காலத்திலேயே ஜோர்ஜிய மேட்டுக்குடியினர் எந்தளவு சிறப்பாக வாழ்ந்தனர் என்பதை காட்டுகிறார்கள். உண்மையில், ஜோர்ஜிய இனத்தவர்களில் வசதி படைத்தவர்கள் ஒன்றில் சிறிய தொழிலதிபராக அல்லது கடை வியாபாரி போன்றவர்கள் தான். அதாவது, இடைத்தர முதலாளித்துவ வர்க்கம். மார்க்சிய சொல்லாடலில் குட்டி பூர்ஷுவா எனப்படுவோர்.

இடைத்தர முதலாளிகள் பெரும்பாலும் தளபாடங்கள் செய்வது, ஆடை தைப்பது, ஆபரணங்கள் செய்வது, நிலவிரிப்பு (Carpet) பின்னுவது போன்ற தொழிற்துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அனேகமாக இவர்களது தொழிலகமும், கடையும் ஒரே இடத்தில் இருக்கும். அவர்களுக்கு கீழே இரண்டு, மூன்று பேர் வேலை செய்வார்கள். அவர்களில் சிலர் நன்றாக சம்பாதித்து பணக்காரர்களாக இருப்பார்கள். "அதிர்ஷ்டம் இல்லாத" பலர் ஏழைகளாக இருப்பார்கள். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியாக இருந்த தனது தந்தையும், இது போன்று தனியாக தொழிலகம் நடத்தும் கனவுடன், குட்டி முதலாளித்துவ சிந்தனையுடன் வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.

அதிகம் பேசுவானேன். நமது இன்றைய சூழலிலேயே இதற்கு உதாரணம் காட்டலாம். தமிழர்களில் தொழில் முனைவோராக உள்ளவர்கள், ஒரு கடை போட்டு, இரண்டு பேரை வேலைக்கு வைத்திருப்பதால் தம்மை முதலாளிகளாக கருதிக் கொள்வார்கள். அப்படித் தான் அன்றிருந்த ஆரம்ப காலகட்ட முதலாளித்துவம் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரித்தானியா, பிரான்ஸ் உட்பட, பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அப்படியான சிறு தொழில் முனைவோர் பிற்காலத்தில் பெரும் தொழிலதிபர்களாக வந்ததிருந்தனர். அதே பாணியை பின்பற்றி தாமும் ஒரு வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடாக வந்திருப்போம் என்ற செய்தியை, இந்த நூதனசாலை மூலமாக இன்றுள்ள ஜோர்ஜிய அரசு நமக்கு தெரிவிக்கிறது.

அந்தக் காலகட்டத்தில் ஜோர்ஜியாவில் வாழ்ந்த சிறு தொழில் முனைவோரும் தமது நலன் பேணும் சங்கங்களை உருவாக்கி வைத்திருந்தனர். அந்தப் புகைப் படங்கள் எல்லாம் திபிலிசி நூதனசாலையில் வைக்கப் பட்டுள்ளன. கவனிக்கவும், அவை தொழிற் சங்கங்கள் அல்ல. அதாவது, தொழிலாளர்களின் சங்கம் அல்ல. அவர்களை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகளின் சங்கங்கள். அதே நூதனசாலையில் இன்னொரு பக்கத்தில் பங்குச் சந்தை இருந்தமைக்கான ஆதாரம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது, ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியதற்கான சான்றிதழ். அதில் ரஷ்யன், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருந்தது. அதாவது, அவை இரண்டும் வர்த்தகத் தொடர்புகளுக்கான சர்வதேச மொழிகளாக கருதப் பட்டன. அதைத் தவிர ஜோர்ஜிய, ஆர்மேனிய, அசேரி மொழிகளில் சுருக்கமான விபரமும் அந்த சான்றிதழில் எழுதப் பட்டுள்ளது. 


எனது பயணத் திட்டத்தில் மிகக் குறைந்த நாட்களே இருந்த படியால், அடுத்த நாளே திபிலிசியை விட்டு வெளியேறத் தீர்மானித்தேன். குறிப்பாக ஸ்டாலின் பிறந்த இடமான கோரிக்கு செல்வதே நோக்கம். அங்கு எப்படிப் போகலாம் என்று ஹொஸ்டல் வரவேற்பளராக இருந்த பெண்ணிடம் விசாரித்து விபரங்களை பெற்றுக் கொண்டேன். அருகிலேயே "சுதந்திர சதுக்கம்" எனப்படும் ஐந்து சாலைகள் சந்திக்கும் பெரிய சந்தி உள்ளது. அதில் ஒரு பக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. மெட்ரோ ரயில் பிடித்து, டிடுபே (Didube) எனும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கு தான் பல நகரங்களுக்கும் செல்லும் மினிபஸ் சேவை நடக்கிறது. கோரி எனும் சிறிய நகரம், திபிலிசி மாகாணத்தை சேர்ந்த பகுதி தான். சுமார் எழுபது கிலோ மீட்டர் தூரம். மினிபஸ் கட்டணம் ஐந்து லாரிகள் மட்டுமே. 


ஜோர்ஜியாவில் ஸ்டாலின் வாழ்ந்த காலத்திலும் கோரியில் இருந்து வரும் வண்டிகள் டிடுபே தரிப்பிடத்திற்கு தான் வந்து நிற்கும். ஸ்டாலின் கோரியில் பிறந்து வளர்ந்தாலும், பருவ வயதை அடைந்ததும் தந்தையுடன் திபிலிசிக்கு வந்து செருப்புத் தைக்கும் தொழில் செய்துள்ளார். பிற்காலத்தில், ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் பாதிரியாவதற்காக மதக் கல்வி கற்ற காலத்திலும், அங்கிருந்து வெளியேறி புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுதும் திபிலிசியில் தங்கி இருந்துள்ளார். 


அப்போது ஸ்டாலின் புஷ்கின் சாலையில் தான் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தார். ஸ்டாலின் படித்த மடாலயம் இப்போதும் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பழைய நகரத்தில் உள்ளது. அது தற்போது மியூசியமாக மாறிவிட்டது. அந்தக் காலகட்டத்தில், திபிலிசி நகர மத்தியில் இருந்த புஷ்கின் சாலை, ஏழை உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்ந்த அழுக்கான கட்டிடங்களை கொண்ட தெருவாக இருந்தது. இன்று அவையெல்லாம் திருத்தப்பட்டு பணக்காரர்கள் குடியிருக்கும் ஆடம்பர கட்டிடங்களாக மாற்றப் பட்டு விட்டன.

ஜோர்ஜியாவில் "மாட்ரூஷ்கா" என அழைக்கப் படும் மினி பஸ், அல்லது ஷெயர் டாக்சியில் பயணம் செய்வது மிகவும் மலிவானது. நம்ப முடியாத அளவுக்கு செலவு குறைவு. ஆனால், ஒரு பிரச்சினை. இடத்தின் பெயரைக் குறிப்பிடும் மட்டைகளில் ஜோர்ஜிய மொழி மட்டுமே எழுதப் பட்டிருக்கும். கோரி, பாதுமி, கூட்டைசி போன்ற பெரிய நகரங்களுக்கு செல்லும் மினி பஸ்களில் சிலநேரம் ஆங்கில(லத்தீன்) எழுத்துக்கள் காணப்படும். ஆகவே, எந்த இடத்திற்குப் போவது என்றாலும் முன்கூட்டியே அங்கு நிற்கும் டிரைவர்களிடம் விசாரிப்பது நல்லது. இங்கேயும் மொழிப்பிரச்சினை எழும். அவர்களில் யாருக்கும் பெரும்பாலும் ஒரு சொல் கூட ஆங்கிலம் தெரியாது. கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் சமாளிக்கலாம். இருப்பினும், நாங்கள் போக வேண்டிய இடத்தின் பெயரை அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாலே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களது பாஷையில் ஏதோ சொல்லி எங்களை கூட்டிச் சென்று அந்த இடத்திற்கு செல்லும் மினி பஸ்ஸில் ஏற்றி விடுவார்கள். எம்மூரில் நடப்பது மாதிரி, மினி பஸ் தரிப்பிடத்தில் கூவிக்கூவி ஆட்களை சேர்ப்பதற்கும் சிலர் அங்கே நிற்பார்கள். ஆகவே நாங்கள் எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாக தனியாகப் பயணம் செய்யலாம்.

(தொடரும்) 


Sunday, November 24, 2019

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்

"நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்": அனைவரும் வாசித்து அறிந்திருக்க வேண்டிய ஆவணம். சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையில் வாங்கிய நூலை இப்போது தான் வாசித்து முடித்தேன். 432 பக்கங்களை சில நாட்களில் வாசித்து முடிக்கும் அளவிற்கு சுவையாக எழுதப் பட்டுள்ளது.

 இது ஒருவரது சுயசரிதை தான். ஆனால், இதனூடாக பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அறுபதுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ஏற்பட்ட பிளவுகள். திருத்தல்வாததிற்கு எதிரான போராட்டம். புரட்சிகர அரசியலுக்காக ஒரு புதிய கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய கடமைப்பாடு. அதற்கான தத்துவார்த்த விவாதங்கள். அஜிதா இது போன்ற விடயங்களை, நூலின் ஆரம்பத்தில் இலகுவான மொழி நடையில் கூறிச் செல்கிறார்.

ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான அஜிதா, தீவிர கம்யூனிச அரசியல் ஈடுபாடு காரணமாக நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்து காடுகளில் தலைமறைவாக வாழும் அளவிற்கு துணிச்சல் உள்ள பெண்மணி. ஆரம்ப கால நக்சலைட் ஆயுதப்போராட்டத்தில் பங்கெடுத்த ஒரே பெண்ணாகவும் இருந்துள்ளார். அந்த வகையில் அவரது நினைவுக்குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக உள்ளன.

அஜிதாவின் தாயும், தந்தையும் கூட நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர்கள் தான். இவர்கள் ஆரம்ப காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த காலத்தில் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து சென்றுள்ளனர். இவரது தந்தை கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகிய நேரம், "சி.ஐ.ஏ. உளவாளி" என்று எந்த ஆதாரமும் இன்றி அவதூறு செய்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சல்பாரி புரட்சியின் தலைவர் சாரு மாஜும்தார் கூட அஜிதா குடும்பத்தினரை புறக்கணிக்கும் அளவிற்கு கட்சிக்குள் கழுத்தறுக்கும் நபர்கள் இருந்துள்ளனர்.

வட இந்தியாவில் சாரு மாஜும்தாரால் கூட்டப்பட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டியிலும், பின்னர் உருவாக்கப் பட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) போன்றவற்றில் அஜிதாவின் குடும்பத்தினர் ஆர்வமாக பங்கெடுத்துள்ளனர். (பிற்காலத்தில் சாரு மாஜும்தாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.) அதே நேரம், கேரளாவுக்கு வருகை தரும் திருத்தல்வாத மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, மகாநாட்டுக்கு அருகில் மாவோவின் நூல்களை விற்பனை செய்வது என்று இவர்களது ஆரம்ப கால கிளர்ச்சி அரசியல் இருந்துள்ளது.

மலைப் பகுதியை சேர்ந்த வயநாட்டு விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னெடுக்கும் பொழுது தான் ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு தயாராகிறார்கள். அப்போது மன உறுதியற்றவர்கள் விலகிச் செல்கிறார்கள். மரணத்திற்கு அஞ்சாத துணிச்சலான போராளிகள், ஆயுதப்போராட்டம் பற்றிய முன் அனுபவம் ஏதும் இல்லாத நிலையிலும் காடுகளுக்குள் முகாமிட்டு தங்கியுள்ளனர். அப்போது அவர்களது கைகளில் இரண்டு, மூன்று துப்பாக்கிகளும், நாட்டு வெடிகுண்டுகளும் இருந்துள்ளன.

நக்சலைட் போராளிகள் ஒரு போலிஸ் நிலையத்தை தாக்கியுள்ளனர். அங்கிருந்த தொலைத்தொடர்பு கருவியை சேதப் படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் நிலச்சுவாந்தர்களான ஜமீன்தார்கள் வீடுகளை தாக்கி, அங்கு அடமானம் வைக்கப் பட்டிருந்த விவசாயிகளின் கடன் பத்திரங்களை கொளுத்தி உள்ளனர். ஜமீன்தார்களிடம் இருந்த பணம், நகைகளை சூறையாடியுள்ளனர். இதனால் இயக்கத்தின் நிதித் தேவையை ஈடுகட்ட முடிந்தாலும், ஆயுதப்போராட்டம் குறித்த சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அத்தனையும் வீணாகிப் போயின.

உழைக்கும் மக்களின் வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு அந்தப் பகுதி ஆதிவாசி மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவின் பிற பாகங்களில் இருந்து வந்து குடியேறி தமது நிலங்களை பறித்துக் கொண்ட பிற மலையாளிகளை விட இந்த நக்சலைட் புரட்சியாளர்கள் வேறுபட்டுத் தெரிந்தனர். அதனால் அவர்களுக்கு ஆதிவாசி மக்கள் தமது தார்மீக ஆதரவை வழங்கி உள்ளனர். மேலும் ஆதிவாசி இளைஞர்கள் தான் காடுகளில் வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். இருப்பினும் நீண்ட காலம் தலைமறைவாக வாழ முடியாத காரணத்தால், அல்லது வேறு வழி தெரியாத படியால் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்றுள்ளனர். அஜிதா உட்பட எஞ்சியோர் ஆள்நடமாட்டம் உள்ள கிராமப் பகுதிக்கு வந்த நேரம், பொலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

வழமையான வெகுஜன அரசியலில் தெருக்களில் போராட்டம் நடத்துவதற்கும், தலைமறைவு அரசியலில் ஆயுதப்போராட்டம் நடத்துவதற்கும் இடையிலான வேறுபாட்டை, அன்று அஜிதா போன்றோர் புரிந்து கொள்ளவில்லை. இதை அவரே தனது நூலில் ஒத்துக் கொள்கிறார். இருப்பினும் "இது தனிநபர் சாகசம்" என்று சொல்வதையும் மறுக்கிறார். அவர்களது ஆயுதப்போராட்டத்திற்கு ஆதிவாசி மக்களின் ஆதரவு இருந்துள்ளது. இந்தியாவில் புரட்சிக்கான தேவையும் இருந்துள்ளது. வாயளவில் புரட்சி பற்றிப் பேசிக் கொண்டே, செயலில் எதையும் காட்டாத கபடவேடதாரிகள் ஒரு மிகப்பெரிய தடையாக (குறிப்பாக தேர்தல் அரசியலில் ஈடுபடும் வலது-இடது கம்யூனிஸ்ட் கட்சியினர்.) இருந்துள்ளனர். அரசாங்கமும் வாய்ச் சொல் வீரர்கள் தமக்கு ஆபத்தில்லாதவர்கள் என்பதால் சில விட்டுக்கொடுப்புகளை செய்கின்றது.

இந்த நூல் அறுபதுகள், எழுபதுகள் காலகட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும், அன்றிருந்த நிலைமை இன்றும் தொடர்வதை நாங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளலாம். அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளா மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு மாவோயிஸ்டுகள் போலிசால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்களும் சரணடைய வந்தவர்கள் என்றும், பொலிஸ் முதலில் கைது செய்து பின்னர் "என்கவுண்டர்" கொலை செய்ததாகவும் சொல்லப் படுகின்றது. இதே மாதிரியான சம்பவங்கள் அறுபதுகள், எழுபதுகளிலும் நடந்துள்ளதை அஜிதாவின் நூல் வாயிலாக அறிய முடிகின்றது.

நூலின் அரைவாசிப் பகுதி, அஜிதாவின் சிறை வாழ்க்கையை பற்றி விவரிக்கின்றது. அவர் சிறைச்சாலையில் பிற கைதிகளிடம் இருந்து அறிந்து கொண்ட கதைகளை எழுதி உள்ளார். அவை அடித்தட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கும் குரூரமான சமூக யதார்த்தம் பற்றிப் பேசுகின்றன. அஜிதா ஓர் ஆயுட்தண்டனை கைதியாக சிறையில் கழித்த காலத்தில் தான் மார்க்சிய நூல்களை ஆழமாகக் கற்றுள்ளார். தீராத்துயருக்குள் சிக்கிக் கொண்டாலும் மன உறுதியை காப்பாற்றுவதற்கு மார்க்சியப் படிப்பு அவருக்கு உதவியுள்ளது. இந்திரா காந்தியின் அவசர கால சட்டம் முடிவுக்கு வந்து, மத்தியில் ஆட்சி மாறியதும் பெரும்பாலான நக்சலைட் கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர்.

நக்சலைட் புரட்சியாளர்கள் போலீசில் பிடிபட்டவுடன் அவர்களுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றியும் இந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. எந்தக் குற்றமும் செய்திராதவரைக் கூட அடித்து கையை உடைக்கும் அளவுக்கு போலிசின் வன்மம் மேலோங்கி காணப்பட்டது. சிறைக்குள் கைதிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை கோரினாலும் அடி, உதை, சித்திரவதை தான் பதிலாகக் கிடைக்கும். அந்தளவுக்கு நக்சலைட் புரட்சியாளர்களை கீழ்மக்கள் போன்று, காவல்துறையினரால் வெறுக்கப் பட்டுள்ளனர்.

நக்சலைட் கைதிகள் அத்தனை போரையும் நிரந்தர நோயாளியாக்கும் நோக்குடன் போலிஸ் சித்திரவதைகள் அமைந்துள்ளன. பிற்காலத்தில் அவர்கள் விடுதலையான போதிலும் நிரந்தர நோயாளிகளாக காலம் கழிக்க வேண்டிய அவல நிலை. இதை ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலையாக கருத வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்றும் குழுவினர் ஒடுக்கப்படுவதும் இனப்படுகொலை தான்.

ஒரு நாட்டில் இன முரண்பாடுகள் மட்டுமே ஒடுக்குமுறைக்கு காரணம் அல்ல. ஒரே இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வர்க்க முரண்பாடு காரணமாக அதிகார வர்க்கம் அளவுகடந்த வன்முறையை, ஒடுக்குமுறையை பிரயோகிக்கத் தயங்காது என்பதை "நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்" நமக்கு உணர்த்துகின்றன.

Wednesday, October 23, 2019

சிலி மக்க‌ள் புர‌ட்சி - க‌ம்யூனிச‌ம் 2.0


தென் அமெரிக்காவில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் பொருளாதார‌த்தையும், பெரும‌ள‌வு ப‌டித்த‌ ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ இள‌ம் த‌லைமுறையின‌ரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாத‌வாறு க‌ல‌வ‌ர‌ பூமியாக காட்சிய‌ளிக்கிற‌து. ஒரு மெட்ரோ ர‌யில், 16 பேருந்து வ‌ண்டிக‌ள் கொழுந்து விட்டு எரிந்த‌ன‌. ப‌த்துக்கும் குறையாத‌ சூப்ப‌ர் மார்க்கெட்க‌ள், ம‌ருந்துக் க‌டைக‌ள் சூறையாட‌ப் ப‌ட்ட‌ன‌. க‌ல‌வ‌ர‌த்திற்குள் அக‌ப்ப‌ட்டு ப‌தினொரு பேர் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

சிலி ஜ‌னாதிப‌தி செப‌ஸ்டியான் பிஞேரா "நாம் ஒரு யுத்த‌த்தில் ஈடுப‌ட்டிருக்கிறோம்" என‌ அறிவித்துள்ளார். "ஒரு ப‌ல‌மான‌, இண‌க்க‌மாக‌ போக‌ முடியாத‌, எவ‌ரையும் மதிக்காத‌, வ‌ன்முறை பிர‌யோகிக்க‌த் த‌ய‌ங்காத‌ எதிரியுட‌ன்" இந்த‌ யுத்த‌ம் நட‌ப்ப‌தாக‌ தெரிவித்துள்ளார்.

சிலியில் ந‌ட‌ந்த இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ கால‌க‌ட்ட‌த்திற்குப் (1973 - 1990) பின்ன‌ர், முத‌ல் த‌ட‌வையாக‌ இராணுவ‌ம் வீதிக‌ளில் ரோந்து சுற்றுகிற‌து. த‌லைந‌க‌ர் சான்டியாகோ உட்ப‌ட‌ எட்டு ந‌க‌ர‌ங்க‌ளில் ஊர‌ட‌ங்கு ச‌ட்ட‌ம் பிற‌ப்பிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. இது வ‌ரை 1500 பேர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.

யார் இந்த‌ பிஞேரா? எழுப‌துக‌ளில், ச‌ர்வாதிகாரி பினோச்சேயின் ஆட்சிக் கால‌த்தில் சிலியில் கிரெடிட் கார்ட் முறையை அறிமுக‌ப் ப‌டுத்திய‌த‌ன் மூல‌ம் கோடி கோடியாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதித்த‌வ‌ர். அதாவ‌து, பினோச்சே கால‌த்தில் வ‌ந்த‌ ந‌வ‌- தாராள‌வாத‌ பொருளாதார‌க் கொள்கையால் ப‌ல‌ன‌டைந்த‌ கோடீஸ்வ‌ர‌ன். அப்ப‌டியான‌ ஒருவ‌ர் சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் மீதே யுத்தப் பிர‌க‌ட‌ன‌ம் செய்த‌தில் என்ன‌ ஆச்ச‌ரிய‌ம் இருக்கிற‌து? ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும், பாசிச‌ சர்வாதிகார‌ ஆட்சி ந‌ட‌ந்தாலும் ப‌ண‌க்கார‌ வ‌ர்க்க‌த்தின் ந‌ல‌னுக்காக‌வே அர‌சு இய‌ங்குகிற‌து.

இந்த‌ ம‌க்க‌ள் எழுச்சிக்கு நேர‌டிக் கார‌ண‌ம், அரசு கொண்டு வ‌ந்த‌ மெட்ரோ ர‌யில் டிக்க‌ட் விலை அதிக‌ரிப்பு. பிற‌ தென் அமெரிக்க‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடும் பொழுது சிலியில் மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம். ஆனால் மாத‌ வ‌ருமான‌த்தில் ஐந்தில் ஒரு ப‌ங்கு போக்குவ‌ர‌த்து செல‌வுக‌ளுக்கு சென்று விடுகிற‌து.

குறிப்பாக‌ பொதுப் போக்குவ‌ர‌த்தை ந‌ம்பியிருக்கும் மாண‌வ‌ர்க‌ள் வெகுண்டெழுந்து இல‌வ‌ச‌மாக‌ ப‌ய‌ண‌ம் செய்ய‌த் தொட‌ங்கினார்க‌ள். மெட்ரோ நிலைய‌ டிக்க‌ட் மெஷின், த‌டைக் க‌ம்ப‌ங்க‌ளை அடித்து நொறுக்கினார்க‌ள்.

மெட்ரோ டிக்க‌ட் விலை உய‌ர்வை மீள‌ப் பெறுவ‌தாக‌ ஜ‌னாதிப‌தி பிஞேரா அறிவித்தும் க‌ல‌வ‌ர‌ம் அட‌ங்க‌வில்லை. அத‌ற்குக் கார‌ண‌ம் ப‌ண‌க்கார‌ர்க‌ளுக்கும் ஏழைக‌ளுக்கும் இடையிலான‌ ஏற்ற‌த்தாழ்வு ம‌ட்டும‌ல்ல‌. மிகப் ப‌ல‌மான‌ இட‌துசாரி க‌ட்சிக‌ளால், ந‌ன்றாக‌ அர‌சிய‌ல்ம‌ய‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ இள‌ம் த‌லைமுறையின‌ர் எந்த‌ வித‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாராக‌ இல்லை.

நிச்ச‌ய‌மாக‌, சிலி அர‌சுக்கு இது ஒரு இக்க‌ட்டான‌ கால‌ க‌ட்ட‌ம். அடுத்த‌ மாத‌ம் Apec நாடுக‌ளின் உச்சி ம‌காநாடு ந‌ட‌க்க‌வுள்ள‌து. அமெரிக்க‌ அதிப‌ர் டிர‌ம்ப், சீன‌ அதிப‌ர் ஸிஜின்பிங் உட்ப‌ட‌ ப‌ல‌ உல‌க‌ நாடுக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் சிலிக்கு வ‌ர‌ இருக்கிறார்க‌ள். அத‌ற்குள் நிலைமையை க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டு வ‌ருவ‌து முடியாத காரியம். ஏனெனில் இது ஒரு தெளிவான இலட்சியத்துடன் தானாக சேர்ந்த கூட்டம். 

எத‌ற்காக‌ இழ‌ப்ப‌த‌ற்கு எதுவும‌ற்ற‌ ஏழைக‌ள் ம‌ட்டும‌ல்லாது, ஓர‌ள‌வு வச‌தியான‌ ம‌த்திய‌த‌ர‌வ‌ர்க்க‌ இளைஞ‌ர்க‌ளும் வ‌ன்முறைப் போராட்ட‌ங்க‌ளில் ஈடுப‌டுகிறார்க‌ள்?

1973 ல் நட‌ந்த‌ இராணுவ‌ ச‌திப்புர‌ட்சிக்குப் பின்ன‌ர் சிலி ந‌வ‌- தாராள‌வாத பொருளாதார‌க் கொள்கையின் ப‌ரிசோத‌னைச் சாலையாக‌ க‌ருத‌ப் ப‌ட்ட‌து. பொருளாதார‌ம் நூறு ச‌த‌வீத‌ம் த‌னியார்ம‌ய‌ப் படுத்த‌ப் ப‌ட்ட‌து. பொருட்க‌ளின் விலைக‌ள் மிக‌ அதிக‌ம். ஆனால் செல‌விடுவ‌த‌ற்காக‌ ம‌க்க‌ளின் கையிருப்பில் ப‌ண‌ம் இல்லை. சுருக்கமாக, வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைவு. க‌ல்வி, ம‌ருத்துவ‌ செல‌வுக‌ள் ஏழைக‌ளால் நினைத்துப் பார்க்க‌ முடியாத‌ அள‌வு அதிக‌ம். வ‌ச‌தி இல்லாத‌வ‌ர்க‌ள் க‌ட‌ன் வாங்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம்.

ந‌வ‌- தாராள‌வாத‌ ப‌ரிசோத‌னைச் சாலையில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் தான் இன்று முத‌லாளித்துவ‌த்திற்கு எதிராக‌ திரும்பி உள்ள‌ன‌ர். இந்த‌ இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌வ‌- தாராள‌வாத‌ம் என்ற‌ சொல் ஒரு கெட்ட‌ வார்த்தை போன்று க‌ருத‌ப் ப‌டுகின்ற‌து.

முன்பு இராணுவ‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலையில், க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உறுப்பினர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒருவ‌ர் விடாம‌ல் தேடி அழிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். பாசிச‌ ஆட்சியாள‌ர்க‌ள் கம்யூனிச‌த்தை வேரோடு பிடுங்கி அழித்து விட்ட‌தாக‌ இறுமாப்புட‌ன் இருந்த‌ன‌ர்.

ப‌னிப்போர் முடிவில், "க‌ம்யூனிச‌ம் இற‌ந்து விட்ட‌து" என்ற‌ ந‌ம்பிக்கை ஏற்ப‌ட்ட‌ பின்ன‌ர், 1990 ம் ஆண்டு ஜ‌ன‌நாய‌க‌ம் மீட்க‌ப் ப‌ட்ட‌து. அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் இய‌ங்க‌ அனும‌திக்க‌ப் ப‌ட்ட‌து. பொதுத் தேர்த‌ல் ந‌ட‌ந்த‌ன‌. அதே நேர‌ம், சாம்ப‌லில் இருந்து உயிர்த்தெழுந்த‌ பீனிக்ஸ் ப‌ற‌வை போல‌ புதிய‌ த‌லைமுறை க‌ம்யூனிஸ்டுக‌ள் தோன்றினார்க‌ள்.

புதிய‌ சிலி க‌ம்யூனிஸ்ட் க‌ட்சி உருவாகி சில‌ வ‌ருட‌ங்க‌ளில் பாராளும‌ன்ற‌த்தில் ஒரு ப‌ல‌மான‌ எதிர்க்க‌ட்சியாகிய‌து. அத்துட‌ன், அனார்க்கிஸ்டுக‌ள், ட்ராக்கிஸ்டுக‌ள், இன்னும் ப‌ல‌ சோஷ‌லிச‌ அமைப்புக‌ளும் உருவாகின‌. குறிப்பாக‌ அனார்க்கிஸ்டுக‌ள் முத‌லாளித்துவ‌த்தை ம‌ட்டும‌ல்லாது, அர‌சு என்ற‌ க‌ட்ட‌மைப்பையே எதிர்ப்ப‌வ‌ர்க‌ள்.
க‌ம்யூனிச‌, இட‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு மாண‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ல்ல செல்வாக்கு இருந்த‌து. ஆர‌ம்ப‌த்தில் இல‌வ‌ச‌க் க‌ல்வி உரிமைக்காக‌ போராடிய‌ மாண‌வ‌ர்க‌ள், கூட‌வே நியோ லிப‌ர‌ல் சிஸ்ட‌த்தையும் எதிர்க்க‌க் க‌ற்றுக் கொண்டனர். த‌ற்போது முத‌லாளித்துவ‌த்தை வீழ்த்தி விட்டுத் தான் ம‌று வேலை பார்ப்ப‌து என்று கிள‌ம்பி விட்டார்க‌ள்.

க‌ம்யூனிஸ்டுக‌ள் வேறு யாரும் அல்ல‌. அவ‌ர்க‌ளும் முத‌லாளித்துவ‌ம் வ‌ள‌ர்த்து விட்ட‌ பிள்ளைக‌ள் தான். சிலியில் முத‌லாளித்துவ‌ம் த‌ன‌து ச‌வ‌க்குழியையை தானே தோண்டி விட்டுள்ள‌து. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"!

Wednesday, October 09, 2019

ஒற்றைப் பனைமரம் திரைப்படம் - ஈழப்போருக்கு பின்னரான போராட்டம்


புதியவன் ராசையா இயக்கி நடித்திருக்கும் ஒற்றைப் பனைமரம், நெதர்லாந்தில் சைஸ்ட் (Zeist) எனும் இடத்தில், 5-10-2019 அன்று திரையிடப் பட்டது. கிட்டத்தட்ட ஐம்பது பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். படம் அனைவரையும் கவர்ந்தது. பார்த்தவர்கள் பாராட்டினார்கள். இது போன்ற திரைப்படம் இதற்கு முன்னர் வந்ததில்லை என்பதே எல்லோருடைய கருத்துமாக இருந்தது. குறிப்பாக கதாநாயகனாக வரும் புதியவன் ராசையா, தனது அபாரமான நடிப்பாற்றல் மூலம் சுந்தரம் என்ற பாத்திரமாகவே மாறிவிட்டிருந்தார்.


2009 ம் ஆண்டு இறுதிப் போரின் முடிவுடன் படம் தொடங்குகிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப் பட்ட பின்னர் தனித்து நிற்கும் கஸ்தூரி எனும் பெண் போராளியுடன் கதை தொடங்குகிறது. தற்செயலாக அந்த இடத்திற்கு வரும் சுந்தரம் (புதியவன் ராசையா) அவரை தனது மனைவி என்று சொல்லி கூட்டிச் சென்று இராணுவத்திடம் சரணடைகின்றனர். கூடவே அஜாதிக்கா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளை்யை சுந்தரம் தனது மகள் என்று சொல்லி கூட்டிக் கொண்டு வருகிறார். (படத்தில் அஜாதிக்கா பாத்திரத்தில் நடித்திருப்பவர் டைரக்டரின் சொந்த மகள்.) இந்த மூவரும் ஒரே குடும்பமாக புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வருகிறார்கள்.

இந்தத் தொடக்கக் காட்சிகள், முன்னர் வெளிவந்த தீபன் திரைப்படத்தை நினைவுபடுத்தின. அதுவும் போரினால் பாதிக்கப்பட்ட முன்பின் தெரியாத மூன்று மனிதர்கள் குடும்பமாக ஒன்று சேரும் கதை தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் வித்தியாசமும் உள்ளது. தீபன் திரைப்படம் ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலத்தை பேசுகின்றது. அதற்கு மாறாக ஒற்றைப் பனைமரம் வன்னியில் தங்கிவிட்ட அகதிகளின் வாழ்வில் நடக்கும் அவலங்களை பற்றிப் பேசுகின்றது.

போர் முடிந்த பின்னர், யாழ்ப்பாண சமூகத்தில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஒற்றைப் பனைமரம் முக்கியத்துவம் கொடுக்கிறது. இது அங்குள்ள சமூக யதார்த்தம். இந்த உண்மை பலரது முகத்தில் அறைந்து முகமூடிகளை கிழித்துள்ளது. இல்லாவிட்டால் இந்தத் திரைப்படத்திற்கு நிறைய இடங்களில் இருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்குமா?

நெதர்லாந்திலும் இந்தப் படம் திரையிடப் படுவதை சிலர் தடுத்தார்கள். "தேசியத்திற்கு எதிரான படம்" என்று காரணம் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி எந்த "தேசிய எதிர்ப்பையும்" காணவில்லை. படத்தில் சொல்லப் படும் உண்மைகள் சிலருக்கு கசப்பானதாக இருக்கலாம். சம்பவங்கள், பாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் எதுவுமே கற்பனை அல்ல. நிஜத்தில் நடந்தவை தான். ஒருவேளை கொஞ்சம் பிசகினாலும் ஆவணப்படமாக வந்திருக்கும். அப்படி நடக்காமல், எல்லோரும் பார்த்து இரசிக்கும் வகையில் படத்தை தயாரித்து வெளியிட்ட டைரக்டருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையில், முன்னாள் போராளிகளின் அவலங்களும், வறுமையின் கொடுமையும் சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. ஏழை, எளியவர்களை சுற்றியே கதை பின்னப் பட்டுள்ளது. உதாரணமாக, தனது இரண்டு பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு சம்மதிக்கும் விமலா என்ற இளம் தாய். லண்டனில் இருந்து வந்த தமிழ்ப் பணக்காரனின் காமவெறிக்கு பலியாகி தற்கொலை செய்து கொள்ள சென்ற அவலம். இவை இரக்கமற்ற வர்க்க பேதமுள்ள சமூகத்தில் நடக்கும் கொடுமைகள்.

விமலா போன்ற அபலைகள் வாழ்வதைக் கூட ஏற்றுக் கொள்ள விரும்பாத அயோக்கியர்கள் எம்மத்தியில் உள்ளனர். அப்படியானவர்கள், படத்தில் அந்த இளம் பெண்ணை சீரழித்த லண்டன் பணக்காரன் போன்ற கொடியவர்களை மறைத்து வைப்பார்கள். ஒற்றைப் பனைமரம் திரைப்படம் இது போன்ற அயோக்கியர்களின் இரட்டை வேடங்களை தோலுரித்துக் காட்டுகின்றது. அதே நேரம், நிஜ உலகில் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டத்தினரும் அப்படியான மனிதர்கள் தான்.

திரைப்படம் பேசும் அரசியல் மிக முக்கியமானது. சுருக்கமாக சொன்னால், இதுவும் ஒரு விடுதலைப் போராட்டக் கதை தான். கடந்த கால போராட்டத்தில் நடந்த தவறுகளை திருத்தி, சரியான வழியில் கொண்டு செல்வதைப் பற்றிப் பேசுகின்றது. இந்தத் திரைப்படத்தில் கடந்த கால அரசியல் விமர்சிக்கப் படுகிறது. அதே நேரம் நிகழ்கால அரசியல் பிரச்சினைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் ஆணித்தரமாக முன்வைக்கிறது. எதிர்கால அரசியலை தீர்மானிப்பது பார்வையாளர்களான எமது கைகளில் உள்ளது.

இந்தத் திரைப்படம் ஈழப்போரில் சம்பந்தப் பட்ட அனைத்து தரப்பினரையும் விமர்சிக்கிறது. அந்த விமர்சனம் ஊடாக தீர்வுகளை தேடுகிறது. உதாரணத்திற்கு, தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகள் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய வரலாறு ஒரு சில காட்சிகளில் நிகழ்த்திக் காண்பிக்கப் படுகிறது. அதை முன்னாள் புலிப் போராளியான கஸ்தூரிக்கு, அவளது இஸ்லாமிய நண்பி சொல்வதைப் போன்று காட்சி அமைக்கப் பட்டுள்ளது. அதைக் கேட்டு வருத்தப்படும் கஸ்தூரி மன்னிப்புக் கோருகிறாள். இன்னொரு காட்சியில், மாற்று இயக்கம் ஒன்றை சேர்ந்த சுந்தரம் புலிகளால் சித்திரவதை செய்யப் பட்ட கதையை கஸ்தூரி வாயால் சொல்ல வைக்கிறது.

இறுதிப்போருக்கு முன்பிருந்த, புலிகள், மாற்று இயக்கத்தினர், முஸ்லிம்கள் போன்ற அடையாளங்கள் இங்கே களையப் படுகின்றன. தற்போது அவர்கள் ஒரே வர்க்கமாக ஒன்று சேர்ந்து புதிய அடையாளத்தை தேடுகிறார்கள். இது தான் படக் கதை கூறும் அரசியலின் சாராம்சம். வர்க்க அரசியலின் தாக்கம் பல காட்சிகளில் பிரதிபலிக்கிறது.

பிரான்சில் இருந்து வந்தவர் முன்னாள் போராளிக்கு உதவி செய்வதாக காட்டி போட்டோ எடுக்க முயற்சிக்கிறார். இதைக் கண்டவுடன் அந்த உதவியை மறுக்கும் முன்னாள் போராளியான கஸ்தூரி, ஏழைகளாக இருந்தாலும் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறார். அதே மாதிரி, முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக வேலைக்கு சேர்க்க மறுக்கும் புடவைக்கடை உரிமையாளர் உதவிக்கு கொடுத்த பணத்தையும் வாங்க மறுக்கிறாள்.

ஒரு மலையகத் தமிழ்ப் பெண்ணான கஸ்தூரியின் குடும்பத்தினர், லண்டன் பணக்காரனின் காணிக்குள் கொட்டில் கட்டி வாழ்ந்தவர்கள். தற்போது லண்டனில் இருந்து திரும்பி வந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்லும் உரிமையாளரை "வெளியே போடா!" என்று சொல்லும் தைரியம் வரக் காரணம், கஸ்தூரியின் கடந்த கால போராளி வாழ்க்கை தான். அன்று நடந்தது வெறுமனே தமிழீழத்திற்கான போராட்டம் மட்டுமல்ல. ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற போராளிகளுக்கு, அதுவே வர்க்கப் போராட்டமாகவும் இருந்துள்ளது.

முன்னாள் போராளிகள் சிலர் பணக்காரர்களின் அடியாட்களாக வேலை செய்கிறார்கள். லண்டனில் இருந்து வந்த பணக்காரனின் வீட்டில் தான் முன்னாள் போராளி கஸ்தூரி குடியிருக்கிறாள். அவளை வெளியேற்ற அனுப்பிய அடியாட்கள் கஸ்தூரியின் பேச்சால் மனம் திருந்தி சுந்தரத்தின் அரசியலை ஏற்றுக் கொள்கிறார்கள். கஸ்தூரி அவர்களை புலிகள் இயக்கத்தின் நற்பண்புகளை சொல்லி திருத்துவதாக காட்சி அமைந்துள்ளது. ஆனால், சுந்தரத்தின் அரசியலுடன் ஒன்று சேர்வதற்கு வர்க்க உணர்வு அவசியம்.

லண்டனில் புலிகளுக்காக காசு சேர்த்து பணத்தை பதுக்கியவர், இலங்கை வந்த நேரம் தனது சொந்த நலனுக்காக சிங்களப் புலனாய்வுத் துறையினருடன் கூட்டுச் சேர்கிறார். பணம் இனபேதம் பார்ப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் அதிகாரமும் கூட்டுச் சேரும். கள்ளுக் கடையில் அரசியல் பேசிய சுந்தரத்தை சிறிலங்கா அரச புலனாய்வுத்துறையினர் கடத்திச் சென்று சித்திரவதை செய்ய வேண்டிய காரணம் என்ன?

ஈழத்தில் இப்போதும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. வர்க்க அடிப்படையில் புதிய நண்பர்கள் கூட்டுச் சேர்கிறார்கள். புதிய எதிரிகள் உருவாகிறார்கள். கூடவே துரோகிகளும் இருக்கிறார்கள். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றி இந்த சமூகம் அக்கறை படுவதில்லை. அவர்கள் முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தாலும் கழிவிரக்கம் கொள்வதில்லை.

படத்தின் தொடக்கத்தில் கஸ்தூரி கேட்கிறாள்: "எம்மைப் பற்றி சனம் கேவலமாக பேசுவதை கேட்கும் பொழுது, இந்த மக்களுக்காகவா இவ்வளவு காலமும் போராடினோம் என்ற வெறுப்பு ஏற்படுகிறது." அதே கஸ்தூரி படத்தின் முடிவில் சொல்கிறாள்: "சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க வேண்டும் என்றால், எங்களுக்கும் மாடுகளுக்கும் என்ன வித்தியாசம்?" திரைப்படத்தில் பேசப்படும் வசனங்கள் கூரான அம்புகளாக இதயத்தை துளைக்கின்றன.

எந்தத் தலைமையையும் எதிர்பாராமல் மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக ஒன்று திரண்டு போராடக் கிளம்பினால்....? ஒற்றைப் பனைமரம் தோப்பாகுமா? இது ஒரு பொழுதுபோக்கு திரைப் படம் அல்ல. இந்தத் திரைப்படம் பன்முகத்தன்மை கொண்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தத் திரைப் படத்தைப் பார்க்க வேண்டும்.

Sunday, October 06, 2019

ஏன் "திராவிட மொழிகள்" என்று சொல்ல வேண்டும்?


அரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். இது இறுதியில் தமிழ்- நாஜிச அரசியலுக்குள் கொண்டு சென்று விடும் என்பதைப் பலர் உணர்வதில்லை.

ஐரோப்பாவில் பேசப்படும் ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, டேனிஷ், நார்வீஜியன், சுவீடிஷ், ஆகிய மொழிகளை ஜெர்மனிய மொழிகள் என்று அழைக்கிறார்கள். கவனிக்கவும்: ஜெர்மனியர்கள் தமது மொழியை ஜெர்மன் என்று சொல்வதில்லை! அவர்களது மொழியில் "டொய்ச்" (Deutsch) என்பார்கள். அவர்களது நாட்டின் பெயர் "டொய்ச் லாந்து" (Deutschland).

ஆகவே "ஜெர்மனிய மொழிகள்" என்ற சொற்பதத்தில் உள்ள ஜெர்மனி என்பது இன்றைய ஜெர்மனியை குறிப்பிடும் சொல் அல்ல. ஜெர்மன், அலெமான், சாக்சன் என்பன பண்டைய ஜெர்மனிய இனக் குழுக்களின் பெயர்கள். அன்று அவர்கள் பேசிய மொழிக்கும் இன்றைய டொய்ச் மொழிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

இருநூறு வருடங்களுக்கு முன்னர் கூட, இன்றைய ஜெர்மனி முழுவதும் ஒரே மொழி பேசப் படவில்லை. கிழக்கே "பிரஷிய டொய்ச்" (Preußisch), மேற்கே "நீடர் (தாழ்ந்த) டொய்ச்" (Niederdeutsch), தெற்கே "ஹொஹ் (உயர்ந்த) டொய்ச்" (Hochdeutsch) என்று மூன்று பிரிவுகள் இருந்தன. இறுதியில் ஹொஹ் டொய்ச் தான் அங்கீகரிக்கப் பட்ட அரச கரும மொழி ஆகியது. நீடர் டொய்ச் தான் பிற்காலத்தில் "நெடர்லான்ட்ஸ்" (டச்சு மொழி) ஆகியது. அதன் இன்னொரு பிரிவு தான் தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் "ஆபிரிக்கான்ஸ்" (Afrikaans) மொழி.

இன்றைய டொய்ச்காரர்கள் தாம் இன்றைக்கும் தொன்மையான ஜெர்மன் மொழி பேசுவதாக பெருமைப் படலாம். அதற்காக, ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள், டச் காரர்கள் போன்ற பிற மொழியினரும், தாம் டொய்ச் பேசுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்க முடியாது. இது தான் ஹிட்லரின் காலத்தில் நடந்தது. அதாவது, ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் டொய்ச் மட்டுமே பேச வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வும், இரண்டாம் உலகப்போரின் முடிவும் அனைவரும் அறிந்தவை.

தமிழ், திராவிடம் ஆகிய சொற்களும் இதே அரசியல்- வரலாற்றுப் பின்னணியை கொண்டவை தாம். இன்றுள்ள தமிழர்கள் தாம் ஒரு தொன்மையான மொழியை பேசுவதற்காக பெருமைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக அயலில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்களும் தாம் தமிழ் பேசுவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஐரோப்பாவில் நடந்தது போன்று ஆபத்தான நாஜிச அரசியலுக்கே இட்டுச் செல்லும்.

பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட இன்றைய தமிழ், மலபார் மொழி என்று அழைக்கப் பட்டது. தமிழ் என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் எழுதப் பட்டிருக்கலாம். அதேநேரம் தமிழர் என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை மட்டும் சுட்டும் சொல்லாகவும் இருந்திருக்கலாம். தற்கால நவீனத் தமிழ் பிற்காலத்தில் செழுமைப் படுத்தப் பட்ட மொழி. அதற்கும் பண்டைய தமிழுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இன்று தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அனைத்தும் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் செழுமைப் படுத்தப் பட்ட நவீன மொழிகள் தான். இந்த நவீன மொழிகள் முன்பிருந்த மூல மொழியுடன் பெரிதும் மாறுபடுகின்றன. இவற்றில் தமிழ் மட்டும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு தெலுங்குடன் ஆங்கிலத்தையும், தமிழுடன் டொய்ச் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரோமர்கள் காலத்தில் பிரித்தானியாவில் குடியேறிய, ஜெர்மன் மொழி பேசிய சாக்சனியர்கள், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ் மொழிகளுடனான கலப்பில் ஆங்கிலம் என்ற புதிய மொழியை உருவாக்கிக் கொண்டனர். அதே நேரம் இன்றைய ஜெர்மனியில் தங்கி விட்ட மக்கள் பெரும்பாலும் பண்டைய ஜெர்மனிய மொழியுடன் நெருக்கமான டொய்ச் மொழி பேசுகிறார்கள்.

அதே மாதிரி, தென்னிந்தியாவில் நீண்ட காலம் சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் தெலுங்கு என்ற புது மொழியை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், தமிழ்நாட்டின் பகுதிகளில் சம்ஸ்கிருதமயமாக்கல் மிக மிகக் குறைவாக நடந்த படியால், இன்றைக்கும் பண்டைய தமிழ் மொழியுடன் நெருக்கமான தமிழைப் பேசுகின்றனர்.

வரலாற்றுக் காலகட்டத்தில் மொழிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான், இன்று தமிழை தமிழ் என்கிறோம். அதே நேரம், தமிழுடன் தொடர்புடைய ஏனைய தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்கிறோம். உலக மொழிகளுக்கிடையிலான தொடர்புகளை இலகுவாக புரிந்து கொள்வதற்காக தான் ஜெர்மனிய மொழிகள், திராவிட மொழிகள் போன்ற சொற்பதங்கள் உருவாக்கப் பட்டன. அது அரசியலிலும் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது.

Saturday, October 05, 2019

பூர்க்கா அணியும் இஸ்லாமிய‌ ஆண்க‌ள்!


வ‌ட‌ ஆப்பிரிக்காவில், ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் வாழும் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் விநோத‌மான‌ ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர். அந்த‌ ச‌மூக‌த்தில் எல்லாவ‌ற்றிலும் பெண்க‌ளுக்கு தான் முத‌லிட‌ம்.

அல்ஜீரியா, மாலி, நைஜ‌ர், நைஜீரியா, மொரோக்கோ, மொரிட்டானியா ஆகிய‌ நாடுக‌ளை இணைக்கும் ச‌ஹாரா பாலைவ‌ன‌ப் ப‌குதிக‌ளில் நாடோடி வாழ்க்கை வாழும் துவார‌க் ம‌க்க‌ள் தனித்துவ‌மான‌ பெர்ப‌ர் மொழி பேசுகின்ற‌ன‌ர். வ‌ட‌ ஆப்பிரிக்காவுக்கு அரேபிய‌ர்க‌ள் வ‌ருவ‌த‌ற்கு முன்ன‌ர் அந்த‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் வாழ்ந்த‌வ‌ர்கள். த‌ற்போது ப‌ல‌ தேச‌ங்க‌ளுக்குள் பிள‌வு ப‌ட்டு, ஒடுக்க‌ப் ப‌டும் சிறுபான்மையின‌ ம‌க்க‌ளாகி விட்ட‌ன‌ர்.

அரேபிய‌ப் ப‌டையெடுப்புக‌ளுக்கு பின்ன‌ர் துவார‌க் ம‌க்க‌ள் இஸ்லாமிய‌ராக‌ மாறி விட்டிருந்தாலும், த‌ம‌து த‌னித்துவ‌மான‌ க‌லாச்சார‌த்தை கைவிட‌வில்லை. அவை எம‌க்கு ம‌ட்டும‌ல்லாது, அங்கு வாழும் அரேபிய‌ருக்கும் புதினமான‌வை.

அது ஒரு முற்றிலும் மாறுப‌ட்ட‌ ச‌முதாய‌ம். துவார‌க் பெண்க‌ள் அந்நிய‌ ஆட‌வ‌ருக்கு முன்னால் கூட‌ முக‌த்தை மூடுவ‌தில்லை. ஆனால், ஆண்க‌ள் க‌ட்டாய‌ம் முக‌த்தை மூட‌ வேண்டும். இதை அவ‌ர்க‌ள் ப‌ருவ‌ வ‌ய‌தில் இருந்தே பின்ப‌ற்றுகிறார்க‌ள்.

அதாவ‌து ஒரு துவார‌க் ஆண் த‌ன‌து ம‌னைவிக்கு முன்னால் மட்டுமே முக‌த்தை மூடாம‌ல் இருக்க‌லாம். வெளியில் எந்த‌ப் பெண்ணும் பார்க்க‌ முடியாம‌ல் முக‌த்தை மூடி இருக்க‌ வேண்டும். விருந்தின‌ருட‌ன் சாப்பிடும் பொழுது கூட‌ முக‌த்திரையை அக‌ற்றாம‌ல் உண‌வை வாய்க்குள் செலுத்த‌ வேண்டும். வீட்டில் உள்ள‌ பெண் பேச‌த் தொட‌ங்கினால் ஆண் வாயை மூடிக் கொள்ள‌ வேண்டும்!

திரும‌ண‌த்திற்கு ச‌ம்ம‌த‌மா என்று முத‌லில் பெண் தான் ஆணைக் கேட்க வேண்டும்! அதே மாதிரி ம‌ண‌ முறிவுகளும் சாதார‌ண‌ம். ஒரு பெண் ம‌றும‌ண‌ம் முடிப்ப‌து குடும்ப‌த்தில் ஒரு கொண்டாட்ட‌ நிக‌ழ்வாக‌ வ‌ர‌வேற்க‌ப் ப‌டும். விவாக‌ர‌த்து செய்தால் சொத்துக்க‌ள் அனைத்தும் பெண்ணுக்கே உரிமையாகும். அத்துட‌ன் திரும‌ணமான‌ பெண் வேறு ஆண் துணையை வைத்திருந்தாலும் குடும்ப‌ உறுப்பின‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள்.

உண்மையில் ப‌ண்டைய‌ கால‌த்தில் நில‌விய‌ தாய் வ‌ழிச் ச‌மூக‌த்தின் தொட‌ர்ச்சி தான் துவார‌க் ப‌ழ‌ங்குடியின‌ரின் ம‌ர‌பு. அதை அவ‌ர்க‌ள் ஆயிர‌மாயிர‌ம் வருட‌ங்க‌ளாக‌ பின்ப‌ற்றுகிறார்க‌ள். ஆண் மேலாதிக்க‌த்தை வலியுறுத்தும் இஸ்லாமிய‌ ம‌த‌ம் கூட‌ அதில் எந்த‌ மாற்ற‌த்தையும் கொண்டு வ‌ர‌வில்லை.

ஆனால், அண்மைக் கால‌த்தில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் அர‌சிய‌ல் இஸ்லாம் துவார‌க் ம‌க்க‌ள‌யும் விட்டு வைக்க‌வில்லை. ISIS எனும் பெய‌ரில் இய‌ங்கும் ப‌ல்வேறு ஆயுத‌க் குழுக்க‌ள் பெண்க‌ளை பூர்க்கா அணிய‌ வற்புறுத்துகின்ற‌ன‌. குறிப்பாக‌ மாலி, நைஜீரியாவின் வ‌ட‌ ப‌குதிக‌ளில் ந‌ட‌க்கும் உள்நாட்டுப் போர் கார‌ணமாக‌ த‌னித்துவ‌மான‌ துவார‌க் க‌லாச்சார‌ம் அச்சுறுத்த‌லுக்குள்ளாகி இருக்கிற‌து.

Friday, September 27, 2019

அரபு தத்துவஞானி இபுன் கல்டூன் - ஓர் "இஸ்லாமிய கார்ல் மார்க்ஸ்"?

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்த இபுன் கல்டூன் என்ற இஸ்லாமிய தத்துவ ஞானி எழுதி வைத்த குறிப்புகள் அதிசயப் படத்தக்கவாறு கார்ல் மார்க்ஸின் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகின்றன. அது பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.


இபுன் கல்டூன் ஒரு வட ஆப்பிரிக்க தத்துவ அறிஞர். கார்ல் மார்க்ஸ் ஒரு மேற்கு ஐரோப்பிய தத்துவ அறிஞர். இருவரும் ஐநூறு வருட கால இடைவெளியில், இரண்டு வேறுபட்ட கலாச்சாரக் கூறுகளை கொண்ட கண்டங்களில் வாழ்ந்துள்ளனர். இருப்பினும், அதிசயப் படத் தக்கவாறு இருவரது எழுத்துக்களும் ஒரே மாதிரியான சமூகவியல் பார்வையைக் கொண்டுள்ளன.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதிலும், பொருளாதாரமே சமூகத்தின் உந்துசக்தி என்பதிலும் இரண்டு தத்துவ அறிஞர்களும் உடன்படுகின்றனர். ஆனால், ஒரு வித்தியாசம். "ஒவ்வொரு தடவையும் அதே வரலாறு திரும்புகிறது" என்ற வாதத்துடன் இபுன் கல்டூன் நின்று விடுகிறார். ஆனால், "அவ்வாறு திரும்பி வரும் வரலாறு தன்னகத்தே முற்போக்கான கூறுகளை கொண்டிருக்கும்" என்பது கார்ல் மார்க்ஸின் வாதம்.

யேமனில் பிறந்த இபுன் கல்டூன், மொரோக்கோவில் கல்வி கற்றதுடன், தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை துனீசியாவில் கழித்துள்ளார். ஆரம்பத்தில் அவரும் இஸ்லாமிய மார்க்கம், ஷரியா சட்டங்கள் போன்ற மதம் சார்ந்த கல்வியை கற்றிருந்தாலும், மதத்திற்கு அப்பால் உள்ள பொருளியல் உலகைப் பற்றி சிந்தித்துள்ளார். இபுன் கல்டூனின் சமூகப் பொருளாதார தத்துவ ஞானம், அவரை பிற அரபு தத்துவ அறிஞர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும், பல்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக தான் வரலாறு எழுதியுள்ளனர். அதற்கு மாறாக, ஆண்டுகள், சாட்சிகள், போன்ற ஆதாரத் தகவல்களுடன் எழுதும் நவீன வரலாற்று ஆவணப் படுத்தலை ஆரம்பித்து வைத்தவர் இபுன் கல்டூன் தான். அது மட்டுமல்ல, நவீன கால சமூக விஞ்ஞானத்தின் தந்தையாகவும் அவர் இன்று வரை போற்றப் படுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த சமூகவியல் அறிஞர்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்.

ஒரு சமூகத்தில் பொருளாதாரம் எந்தளவு தனி மனிதர்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை, மார்க்ஸ் எழுதுவதற்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னரே இபுன் கல்டூன் எழுதி இருக்கிறார். அதாவது நமது ஒவ்வொரு செயலுக்கும், விளைவுக்கும் பின்னணியில் ஏதாவதொரு பொருளாதாரக் காரணி இருக்கலாம் எனும் தத்துவம். இன்றைக்கும் பலர், "படித்தவர்கள்" கூட, பொருளாதார மாற்றங்களுக்கும், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

"மனிதன் ஒரு அரசியல் மிருகம்" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். அதையே தான் இபுன் கல்டூனும் சொல்லி இருக்கிறார். அதாவது, மனிதன் தனது தேவைகளை தனியாக பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அவன் மற்றவர்களுடன் ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஒருவன் சமூகத்தில் உள்ள எல்லோருக்குமாகவும் வேலை செய்ய வேண்டும். அதே மாதிரி எல்லோரும் ஒருவனுக்காக வேலை செய்ய வேண்டும். இந்தக் கூட்டுறவில் தான் உலகம் இயங்குகிறது. இதையே மார்க்சியமும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இபுன் கல்டூன் தனது சமூக- பொருளாதார தத்துவத்தை விளக்குவதற்காக, நாம் அன்றாடம் உண்ணும் ரொட்டியை உதாரணமாகக் காட்டுகிறார். தானியத்தை அரைப்பது, மாவு பிசைவது, அடுப்பில் சுடுவது போன்ற மூன்று செயல்களை செய்வதற்கு வித்தியாசமான உபகரணங்கள் தேவை. இதை எல்லாம் ஒரு தனி மனிதன் தானே தயாரிக்க முடியாது. ஒருவேளை தானியம் கிடைத்தாலும் அதைப் பயிரிட்டு வளர்ப்பதற்கு மற்றவர்களின் உதவி தேவை. ஒரு தனி மனிதன் வாழ்வதற்கும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் கூட்டு உழைப்பு அவசியம். இதையே கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் எழுதி இருக்கிறார்.

இருப்பினும் கார்ல் மார்க்ஸ் முக்கியமாகக் கருதிய சில விடயங்களை இபுன் கல்டூன் அலட்சியப் படுத்தி உள்ளார். உதாரணத்திற்கு, இபுன் கல்டூன் பொருளாதார உற்பத்தியில் உருவாகும் உபரிமதிப்பு பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் அதை சமூக அசைவியக்கமாக கருதுகிறார். அதாவது நாகரிக வளர்ச்சிக்கு மட்டுமே அது பயன்படுகிறது என்கிறார். அதற்கு மாறாக, கார்ல் மார்க்ஸ் உபரி மதிப்பு தான் முதலாளிகளால் திரட்டப் படும் மூலதனம் என்று வாதிடுகிறார்.

ஐநூறு வருடங்களுக்கு முன்னர், இபுன் கல்டூன் வாழ்ந்த காலத்தில் முதலாளித்துவம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. அப்போதிருந்த "முதலாளிகள்", பெரும்பாலும் வணிகர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவம் ஆட்சியதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களது செல்வாக்கும் மிகக் குறைவாக இருந்தது. ஆகவே, நிலப்பிரபுத்துவ பின்னணியில் வாழ்ந்த இபுன் கல்டூன், உபரிமதிப்பின் வளர்ச்சிக் கட்டத்தை உயர்ந்த நாகரிக சமுதாயம் எனக் குறிப்பிடுகிறார். இது பற்றி இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

"அசாபியா" (Asabiyyah) என்ற அரபுச் சொல் இஸ்லாத்திற்கு முன்பிருந்த இனக்குழு சமூக கட்டமைப்பை குறிக்கிறது. ஆனால், இபுன் கல்டூன் அதை விரிவான அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளார். ஒரு பொதுவான கலாச்சாரத்தை பின்பற்றும் மனிதர்களுக்கு இடையிலான ஒருங்கிணைவை கொண்ட சமூகம் எனலாம். அனேகமாக, நமது காலத்தில் "தேசியம்" அல்லது "தேசிய இனம்" எனப் புரிந்து கொள்ளப் படும் விடயத்தை தான் இபுன் கல்டூன் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

இபுன் கல்டூனின் கோட்பாடுகளின் படி, மனிதர்களின் நாகரிகக் காலகட்டம் மூன்று படிநிலைகளை கொண்டது. அவற்றில் அசாபியா என்பது ஓர் உயர்ந்த அறிவியல் பயன்பாட்டைக் கொண்ட நாகரிகமடைந்த சமுதாயம். மார்க்சியம் கூறும் கம்யூனிச நாகரிகம் போன்றதொரு சமுதாயம் என்றும் புரிந்து கொள்ளலாம். ஆனால், இதை அவர் கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறார். இந்த இடத்தில் கார்ல் மார்க்சுக்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான தத்துவார்த்த முரண்பாடுகள் ஆரம்பமாகின்றன.

மனிதர்களினால் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளிலும் மனித உழைப்பு இருக்கிறது. உழைப்புச் சக்தியை செலுத்தும் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக உருவாகிறார்கள் என்பது கார்ல் மார்க்ஸின் இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு. இபுன் கல்டூன் இயங்கியல் பார்வை கொண்டிருந்தாலும், உழைப்பு என்ற செல்வத்தை அடையாளம் காணத் தவறிவிட்டார். இது அவரது கருத்துமுதல்வாதப் பார்வையால் ஏற்பட்ட விளைவு எனலாம். திரும்பவும், ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த உலகம் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது என்பதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் பொழுது, கார்ல் மார்க்சிற்கும், இபுன் கல்டூனுக்கும் இடையிலான ஒற்றுமைகள் நம்மை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம். மார்க்சியம் தனது சொந்தக் கண்டுபிடிப்பு அல்ல என்று கார்ல்மார்க்ஸ் மறுத்திருக்கிறார். அவரே தனது கோட்பாடுகளுக்கு ஆதாரமாக சோக்கிரடீஸ் முதல் ஹெகல் வரையிலான தத்துவஞானிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார்.

இஸ்லாமிய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் ஏராளமான கிரேக்க தத்துவ அறிஞர்கள் எழுதிய நூல்கள், அரபு மொழிக்கு மொழிபெயர்க்கப் பட்டன. அவற்றை எல்லாம் இபுன் கல்டூனும் கற்றிருப்பார். தான் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைப்பது தான் ஒரு தத்துவ ஞானியின் வரலாற்றுக் கடமை. அதைத் தான் இபுன் கல்டூனும், கார்ல் மார்க்சும் செய்திருக்கிறார்கள்.