Saturday, December 20, 2014

வேலை வெட்டி இல்லாமல் அல்லது காசுக்காக இதை எழுதவில்லை


சமூகவலைத் தளங்களில் எழுதும் என்னைப் போன்ற பலர், வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல. எங்கள் எல்லோருக்கும் வாரத்திற்கு நாற்பது மணிநேர வேலையும், குடும்பப் பொறுப்புகளும் இருக்கின்றன. ஏனென்றால், நாங்கள் எல்லோரும் உழைத்து வாழ வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்ட உழைக்கும் வர்க்க மக்கள். எங்களில் யாரும், வேலையே செய்யாமல் பணத்தாள்களை மட்டும் எண்ணிக் கொண்டிருக்கும் சோம்பேறி முதலாளிகள் அல்ல.

 "உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில், சமூக வலைத் தளங்களில் எழுதுங்கள்" என்று, சில தினங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு சிலர் பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தனர்:
//எங்களுக்கு யாராவது காசு கொடுத்தால் எழுதுகிறோம்!//

இந்தக் கூற்றின் மூலம் அவர்கள் தெரிவிக்க விரும்புவது இது தான்:

//நாங்கள் அடிமைகள் தான். மறுக்கவில்லை. யார் பணம் கொடுத்தாலும் உழைப்பை விற்கத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தனித்தன்மை, சுயகெளரவம் கிடையாது. சுதந்திரத்தை பற்றியும் அக்கறை இல்லை.//

"நீங்கள் யாருடைய ரொட்டியை சாப்பிடுகிறீர்கள்? அவருடைய வார்த்தைகளைப் பேசுகின்றீர்கள்." என்பது ஒரு பழமொழி. எங்களுக்கு காசு கொடுப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் சொல்வதை மட்டும் தான் எழுத முடியும். அதனால் தான், வணிக நோக்கில் இயங்கும் ஊடகங்கள் எல்லாம், குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. ஏனென்றால், அவர்களுக்கு காசு கொடுக்கும் விளம்பரதாரர்கள் விரும்புவதை மட்டுமே வெளியிட முடியும். மற்றவை சுயதணிக்கை செய்யப்படும்.

உதாரணத்திற்கு, ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் இனவாதமாக கூட இருக்கலாம். இனவாதம் கவர்ச்சிகரமாக இருப்பதால், அதற்கு சந்தையில் கேள்வி அதிகமாக இருக்கின்றது என்பதால் தான், முதலாளிகளும் விளம்பரம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இன்று இனவாதம் பேசுபொருளாக உள்ளதற்கு காரணம், அதற்கான சந்தை மதிப்பு அதிகம் என்பதால் தான். எப்படியான அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதையும், மக்களது அரசியல் கருத்து எதுவாக இருக்க வேண்டும் என்பதையும், சந்தை தான் தீர்மானிக்கிறது.

"முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்கள் யாவும், முதலாளித்துவத்தின் இலாபவெறிக்காக உருவாக்கப் பட்டவை தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மறுபக்கத்தில் அது ஜனநாயகத்திற்கான அசைவியக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

முதலாளிகள் விரும்பும் தகவல்களை மட்டுமே வெளியிட்டு வந்த வணிக ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக நின்று பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளிலேயே, பல பிரபலமான பத்திரிகைகள் நடத்த முடியாமல் முடங்கிப் போயுள்ளன. அந்த இடத்தை சமூக வலைத்தளங்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வருகின்றன.

இன்று பிரபலமான வணிக ஊடகங்களே, தமது தகவல்களை இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன என்பது இரகசியம் அல்ல. இணையத் தொடர்பு வைத்திருக்கும் மக்கள், தமது சொந்தப் பிரச்சினைகள் பற்றியும், சுற்றாடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றியும் எழுதி வருகிறார்கள். அதன் மூலம், முன்னொருபோதும் இல்லாத சமூக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது.

மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். சமூகவலைத் தளங்களில் சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசும் யாரும் "வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள்" அல்ல. உழைத்துக் களைத்து வீடு வந்து, எமது சொந்த அரசியல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் உழைக்கும் வர்க்கம். இவ்வளவு காலமும் வணிக ஊடகங்களால் ஒதுக்கப்பட்டு வந்த குரலற்றவர்கள்.

தங்களது ஆன்மாவைத் தொலைத்த அடிமைகள், யாரோ ஒரு முதலாளி கொடுக்கும் பணத்திற்காக விபச்சாரம் செய்யலாம். ஆனால், நாங்கள் சுதந்திரமான மனிதர்கள் என்ற தன்முனைப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனால் தான் எழுதுகின்றோம். ஏனென்றால், ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப் படும் நிர்வாகக் கட்டமைப்பு ஆகும். பெரும்பான்மை மக்களின் பெயரில், ஒரு சிறு மேட்டுக்குடியினர் தீர்மானிப்பது ஜனநாயகம் ஆகாது. அதை வேண்டுமானால் "பண நாயகம்" என்று அழைக்கலாம்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

1 comment:

drogba said...

////

//எங்களுக்கு யாராவது காசு கொடுத்தால் எழுதுகிறோம்!//

இந்தக் கூற்றின் மூலம் அவர்கள் தெரிவிக்க விரும்புவது இது தான்:

//நாங்கள் அடிமைகள் தான். மறுக்கவில்லை. யார் பணம் கொடுத்தாலும் உழைப்பை விற்கத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தனித்தன்மை, சுயகெளரவம் கிடையாது. சுதந்திரத்தை பற்றியும் அக்கறை இல்லை.//

////


நீங்கள் சொல்லுவது தவறாகும். எனது எழுத்துக்கு ஒருவன் பணம் கொடுக்க தயாராக இருக்கும் போது அவனுக்காக எழுதினால் என்ன தவறு? அதற்காக எனது கொள்கையை விட்டு கொடுத்துத்தான் எழுதுவேன் என்று கூற நீங்கள் யார்? எனது கொள்கையை எழுத அவன் பணம் கொடுக்கும்போது அதை நான் பயன்படுத்த தயாராக உள்ளேன். நீங்கள் இலவசமாக எழுதுகிறீர்கள் என்பதற்காக நான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? நான் பணம் வாங்கி எழுதுகிறேன் என்பதற்காக இலவசமாக எழுதவில்லை என்று அர்த்தம் இல்லை. மற்றும் அவனின் கருத்தை மட்டும் பிரதிபலிக்கிறேன் என்று அர்த்தமும் அல்ல