Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Wednesday, July 21, 2021

ஜகமே தந்திரம் படம் பேசும் புலி எதிர்ப்பு அரசியல்

 2009 ம் ஆண்டு, புலிகள் மக்களைக் கூட்டிக் கொண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்றமைக்கு "அமெரிக்கா கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்" என்ற காரணம் சொல்லப் பட்டது. புலிகளின் உறுப்பினர்கள் பகிரங்கமாகவே இதைச் சொன்னதாக முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த பலர் என்னிடம் தெரிவித்து இருந்தனர்.


நான் முன்பு பல தடவைகள் இதைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிய போதெல்லாம், பலர் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு சண்டைக்கு வந்தார்கள். 2009 ம் ஆண்டு மே மாதம், ஐரோப்பாவில் இயங்கிய புலிகளின் ஊடகங்கள் தாமாகவே அப்படி ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார்கள். அதாவது, இரண்டு அமெரிக்க கப்பல்கள் முல்லைத்தீவை அண்டிய ஆழ்கடலில் தரித்து நிற்பதாகவும், மேலிடத்து உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ஜகமே தந்திரம் படத்தில், இறுதியுத்தம் நடந்த புது மாத்தளன் பகுதியை காட்டுவார்கள். அங்கு இரண்டு பேர் வானொலிப் பெட்டிக்கு அருகில் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் சொல்வார்: "இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பிக் காப்பாற்றும்!" (அமெரிக்கா இந்தியா என்று மாற்றப் பட்டுள்ளது.) ஆகவே, அமெரிக்க (அல்லது இந்திய) கப்பல் வரும் என்று நம்பித் தான் புதுமாத்தலன் கடற்கரை வரை சென்றிருக்கிறார்கள்? அதாவது, புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி இருக்கிறார்கள்? அதைத் தானே இந்தப் படத்தில் சொல்ல வருகிறீர்கள்?

படத்தில் அந்த வசனத்தை பேசுகிறவர் சோமிதரன் என்ற ஈழத்தமிழர். அதுவும் சாதாரணமான ஈழத்தமிழர் அல்ல. ஈழத்தில் யுத்தம் நடந்த காலத்திலும் ஓர் ஊடகவியலாளராக செயற்பட்டவர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் செய்தி சேகரித்தவர். மேலும், ஈழப் பிரச்சினை தொடர்பாக ஆவணப்படங்களை எடுத்தவர். அதைவிட இன்று வரை புலிகளை விமர்சிக்க மறுத்து வருபவர். புலிகள் விட்ட தவறுகளை நேரில் கண்ட போதிலும் அவற்றைப் பற்றி பேச மறுப்பவர். சுருக்கமாக: தன்னை ஒரு புலி ஆதரவாளராக காட்டிக் கொள்வதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லாதவர்.

அப்பேற்பட்ட பெருமைக்குரிய ஒருவரை, அதிலும் ஒரு புலி ஆதரவாளரை, ஜகமே தந்திரம் என்ற புலி எதிர்ப்புப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதிலே ஹைலைட் என்னவென்றால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு அரசு மட்டுமல்ல, புலிகளும் காரணம் என்று, அவர்களது தவறை சுட்டிக் காட்டும் வகையில் வசனம் பேச வைத்திருக்கிறார்கள்!

புது மாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசம் மிகவும் சிறிது. ஒரு பக்கம் இந்து சமுத்திரம், மறுபக்கம் நந்திக் கடல். இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு குறுகிய நிலப்பரப்பை அரசு பாதுகாப்பு வலையமாக அறிவித்து இருந்தது. அங்கு சென்ற மக்களை கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்தமை அரசின் போர்க்குற்றம். அந்த நேரம் தான் அங்கு ஓர் இனப்படுகொலை நடக்கிறது என்ற செய்தி பல உலக நாடுகளின் தலைநகரங்களிலும் எதிரொலித்தது.

அப்போது இது குறித்து சர்வதேச கண்டனங்கள் எழுந்திருந்த போதிலும், அதையெல்லாம் அரசு அலட்சியப் படுத்தியது. அரசு தானாகவே ஒரு பிரதேசத்தை பாதுகாப்பு வலையம் என்று அறிவித்து விட்டு, அந்த இடத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியமை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால், பாதுகாப்பு வலையத்தில் புலிகள் மக்களோடு பதுங்கி இருப்பதால் தாக்குதல் நடத்துவதாக அரசு தனது போர்க்குற்றத்தை நியாயப் படுத்தியது.

உண்மையில் புதுமாத்தலன் பகுதியில் தான் பெருந்தொகையான மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் முள்ளிவாய்க்காலில் தங்கியிருந்த படியால், இராணுவம் முன்னேறுவதை தடுப்பதற்காக மிக உயரமான மண் அணை அமைத்திருந்தார்கள். அதைக் கைப்பற்றுவதற்காக கடுமையான சண்டை நடந்தது.

ஜகமே தந்திரம் படத்தில் புதுமாத்தளன் என்று ஓரிடத்தையும், அங்கு இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களையும் காட்டுவார்கள். அங்கு நடந்த விமானக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட அழிவுகளையும், மக்களில் சிலர் கொல்லப் படுவதையும் காட்சியாக அமைத்திருக்கிறார்கள். கமெரா என்னவோ பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை சுற்றிப் படமெடுத்தாலும், தூரத்தில் புலிச் சீருடையில் சிலர் நிற்பதாக காட்டுவார்கள். இது எத்தனை பெரிய தவறு என்பது படம் எடுத்தவர்களுக்கு தெரியாதா?

அன்று யுத்தம் நடந்த காலத்தில் புது மாத்தளன் பாதுகாப்பு வலையத்திற்குள் அடங்கியது. அரசிடம் பாதுகாப்புத் தேடி வந்த மக்களை, அரச படையினர் குண்டு போட்டு கொன்றமை ஒரு மன்னிக்க முடியாத போர்க்குற்றம். நாங்கள் இன்றைக்கும் அந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஜகமே தந்திரம் படத்தை எடுத்தவர்கள், அரசு சொன்ன காரணத்தை நியாயப்படுத்துவது போன்று காட்சி அமைத்திருக்கிறார்கள்!

பாதுகாப்பு வலையத்தில் இருந்த மக்களுக்குள் புலிகள் பதுங்கி இருந்தார்கள் என்பது அரசு தரப்பு குற்றச்சாட்டு. அதைத் தானே இந்தப் படமும் காட்டுகிறது? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று சொல்ல வருகிறார்களா? எதுவென்றாலும் நேரடியாக பேச வேண்டும். மொத்தத்தில் ஜகமே தந்திரம் முழுக்க முழுக்க சிறிலங்கா அரசு சார்பாக எடுக்கப் பட்ட ஒரு தமிழ்ப் படம்.

Saturday, June 26, 2021

மேதகு - திரைக்கதைக்கு பின்னால் உள்ள நிஜக்கதை

 


மேதகு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். ஜகமே தந்திரம் போன்ற குப்பைப் படங்களை விட இது பல மடங்கு மேலானது. குறிப்பாக நாட்டுக்கூத்துடன் கதை சொல்லும் பாணி அருமை. சிறந்த படப்பிடிப்பு. எந்த இடத்திலும் தொய்வில்லாத அளவுக்கு தரமான எடிட்டிங்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையில் சில மிகைப் படுத்தல்கள் இருந்தாலும், அவை படம் பார்ப்பதற்கு உறுத்தலாக இருக்கவில்லை. பெருமளவு சம்பவங்கள், களம் சார்ந்து கதை நகர்கிறது. பாடல்கள் கேட்டு இரசிக்கும் படி உள்ளன. தமிழாராய்ச்சி மகாநாட்டு நடனமும் அருமை. குறைந்த பட்ஜெட்டில் எடுத்த ஒரு படத்திற்கு இவையெல்லாம் அதன் மதிப்பைக் கூட்டுகின்றன.

இருப்பினும் படத்தில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. பொதுவாக இந்தப்படம் தமிழ்தேசிய கொள்கை சார்ந்த பார்வையாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், ஆங்காங்கே கிளம்பும் பிரச்சார வாடையை குறைத்திருக்கலாம். முடிந்த அளவு தவிர்த்திருக்கலாம். இது ஓர் ஆவணப்படம் இல்லைத் தான். ஆனால், வரலாற்றைப் பதிவு செய்யும் படம்.

படம் தொடங்கும் போதே சொல்லப்படும் குமரிகண்டம் பற்றிய புனைகதை ஒரு தேவையற்ற காட்சி. தமிழினவாத கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இது போன்ற பிரச்சாரங்கள், படத்தின் நம்பகத்தன்மையை பாதித்து விடும். இந்தப் படத்தை எடுத்தவர்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்தக் கட்சியினருக்கு மட்டுமே உவப்பானதாக இருக்கும்.

இலங்கை என்ற தமிழ்ச் சொல் எப்போதும் பாவனையில் இருந்து வந்த போதிலும், படத்தில் எதற்காக சிலோன் என்று வலிந்து திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ்காரரின் பட்டியில் கூட சிலோன் போலிஸ் என்று இருக்கிறது. அப்படி எந்தக் காலத்திலும் வந்த சீருடையிலும் இருக்கவில்லை.

இந்தப் படத்தில் சிறிலங்கா போலிஸ் என்றால் அது சிங்களவர்கள் என்பது போன்று காட்சிப் படுத்தி உள்ளனர். அது தவறு. எழுபதுகளில் வட மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தமிழ்ப் போலீஸ்காரர்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர். சிங்களவர்கள் அனேகமாக அதிகாரிகளாக இருந்தனர். (தமிழ் அதிகாரிகளும் இருந்தார்கள்.) ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்ததும் தமிழ்ப் போலீசார் தான். அதனால், அந்தக் காலங்களில் நடந்த கெரில்லாத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களும் (பெரும்பாலும்) தமிழ்ப் போலீஸ்காரர்கள் தான்.

படத்தில் பிரபாகரனின் முதலாவது வன்முறைத் தாக்குதலாக ஒரு பஸ்ஸை எரிப்பது காட்டப் படுகின்றது. அந்தக் காலங்களில் பஸ் கொளுத்தும் போராட்டம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒருபோதும் பிரபாகரன் அதில் ஈடுபட்டிருக்கவில்லை. வேறு சில இளைஞர் குழுக்கள் அதைச் செய்தன. ஆனால், புலிகள் இயக்கத்தில் இது போன்ற போராட்டத்தை நிராகரிக்கும் போக்கு காணப்பட்டது. (காரணம்: பஸ் எரிப்பதும் வழமையான "அஹிம்சைப் போராட்டம்" என்ற கருத்து நிலவியது.)

பொன் சிவகுமாரன் போலிஸ் ஜீப் மீது தாக்குதல் நடத்த முனைந்த சம்பவம் சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. அந்த வரலாறு சரியானது தான். இருப்பினும் அந்த சம்பவத்தில் அவர் போலிஸ் ஜீப் மீது கையெறி குண்டை வீசியெறிந்தார் என நினைக்கிறேன். அது வெடிக்கவில்லை. உண்மையில் பிரபாகரனுக்கு முன்னர், சிவகுமாரன் தான் பல தாக்குதல்களை நடத்தி இருந்தார். அவற்றில் பல வெற்றி அளிக்கவில்லை என்பது வேறு விடயம். இறுதியில் போலிஸ் தேடுதலில் சிக்காமல் ஓடிய பொழுது புகையிலைத் தோட்டத்தில் தான் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். படத்தில் அந்த சம்பவம் ஒரு தெருவில் நடப்பது போன்று காட்டுவது தவறு.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் புத்த பிக்குகள் என்பது போலவும், அவர்கள் தான் தேசத்தை ஆள்கிறார்கள் என்பது போலவும் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களை கொடூரமான வில்லன்களாக காட்டுகிறார்கள். உண்மையில் புத்த பிக்குகளில் இனவாதிகள் (எல்லோரும் அல்ல) இருந்த போதிலும், அவர்கள் எப்போதும் அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார், நித்தியானந்தா மாதிரி அரசியலில் தலையிட்டுக் கொண்டிருக்கும் பௌத்த மதகுருக்கள் இன்னும் உள்ளனர். ஆனால், படத்தில் காட்டப் படுவது போன்று அவர்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக இல்லை.

இலங்கையில் புத்த பிக்குகளை, பேரினவாத அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியது. அப்படியானால் ஒரு பிரதமரான பண்டாரநாயக்கவை சுட்டதும் புத்த பிக்கு தானே என்று கேட்கலாம். அது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட சதி. அதன் பின்னணியில் சிஐஏ இருந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. இன்று வரையில் பண்டாரநாயக்க கொலை தொடர்பான மர்மங்கள் துலங்கவில்லை. அது தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.

மேதகு படத்தில் வரும் புத்த பிக்குகள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. நிச்சயமாக அது சிங்களம் அல்ல! படத் தயாரிப்பாளர்கள் சிங்களம் மாதிரி ஒரு புதிய மொழியை உருவாக்கி விட்டிருக்கிறார்கள்!! அது என்ன? பாளியா? தெலுங்கா? சமஸ்கிருதமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்! பண்டாரநாயக்கவுக்கு ஆங்கிலம் முதல் மொழி தான். ஆனால், அவரது மனைவி சிறிமாவோவும் ஆங்கிலத்தில் உரையாடுவது மாதிரிக் காட்டி இருப்பது படத்துடன் ஒட்டவில்லை.

பண்டா - செல்வா ஒப்பந்தம் ஸ்ரீ எதிர்ப்பு கலவரத்திற்கு பிறகு வந்தது. இங்கே அவை இரண்டும் கால வரிசை மாற்றிக் காண்பிக்கப் படுகின்றன. 1958 ம் ஆண்டு பிரதமராக தெரிவான பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தார். தமிழரசுக் கட்சியினர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். சிங்கள சிறியை தார் பூசி அழித்தனர். அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் ஸ்ரீ பாதுகாப்பு கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கலவரக் காலத்தில் தமிழரின் முதுகில் கத்தியால் ஸ்ரீ எழுதியமை, தமிழ்க் கடைகளை உடைத்தமை போன்ற கொடுமைகள் தென்னிலங்கையில் மட்டுமே நடந்துள்ளன. அப்போது வடக்கு அமைதியாக இருந்தது.

வடக்கு- கிழக்கில் தமிழை நிர்வாக மொழியாக்கும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க தானாக கிழித்தெறியவில்லை. அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக புத்த பிக்குகள் மட்டுமல்லாது, எதிர்கட்சியான யு.என்.பி. யும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தன. படத்தில் எதிர்க்கட்சி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்தியா மாதிரி, இலங்கையும் ஆளும் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் பாதிக்கப்பட்ட நாடு தான்.

பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் பற்றி இந்தப் படத்தில் எதுவுமே பேசப் படவில்லை. ஆளும் வர்க்கம் தவறாக கையாண்ட பிரச்சினைகள் பற்றியும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அனைவரும் தமிழர்களை ஒடுக்குவதில் மட்டும் குறியாக இருந்ததாக ஒரே முனைப்பான அரசியல் பேசுகின்றது. இலங்கை அரசியல் நிலவரம் அந்தளவு கருப்பு - வெள்ளை அல்ல. இது குறித்த புரிதல்கள், இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு இருந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சிங்களம் மட்டும் சட்டம் முதல், தரப்படுத்தல் வரை பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப் படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டன. அதிலும் தரப்படுத்தல் மாவட்ட வாரியாக செயற்படுத்தப் பட்டது. இந்தியாவில் இட ஒதுக்கீடு போன்று பின்தங்கிய மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனால் தமிழர்களில் ஒரு பகுதியினரும் நன்மை அடைந்தனர். இருப்பினும் பெரும்பான்மை சிங்களவர்கள் அதிக இலாபம் அடைந்தனர் என்பதை மறுக்க முடியாது.

துரையப்பா பற்றிய காட்சிகளிலும் அதீத மிகைப்படுத்தல்கள் உள்ளன. அவர் மேயர் வேலையை விட்டு விட்டு தமிழரசுக் கட்சியை ஒழிப்பது தான் தனது இலட்சியம் போன்று நடந்து கொண்டதாக காட்டுகிறார்கள். தமிழாராய்ச்சி மகாநாட்டில் போலிஸ் கரண்ட் கம்பிகளை அறுத்து விட்டு சிலரை சுட்டுக் கொன்று விட்டு, அந்தக் கொலைகளை விபத்து மாதிரி நடத்தி இருந்தது. அது திட்டமிடப்பட்ட கொலைகள் தான். ஆனால் படத்தில் காட்சிப் படுத்தப் பட்டது மாதிரி போலிஸ் சுற்றிவளைத்து பிடித்து அடித்துக் கொல்லவில்லை.

துரையப்பா சிறிமாவோவின் SLFP கட்சிக்காரர் தான். ஆனால், தமிழரசுக் கட்சியை இல்லாதொழிக்கும் நோக்கம் எதுவும் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அதற்கு மாறாக தமிழரசுக் கட்சியினர் துரையப்பாவை துரோகி என்று சாடி வந்தனர். அதற்குக் காரணம் தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கொலைகள் மட்டுமல்ல. தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலும் காரணம். 

அன்றைய காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்ட பிரபாகரன் போன்ற இளைஞர்கள், தமிழரசுக் கட்சியினரின் கையாட்கள் போன்றே செயற்பட்டனர். துரையப்பா கொலையில் அந்தக் கட்சிக்கும் பங்கிருந்தது. ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட சில வருடங்கள், தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதபாணி இளைஞர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தன. அவர்கள் அரசியல் தலைமைத்துவம் கொடுப்பதென்றும், இவர்கள் இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதென்றும், எழுதப்படாத ஒப்பந்தம் இருந்து வந்தது.

Tuesday, October 20, 2020

800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்!

கிரிக்கட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் 800 திரைப்படத் தயாரிப்பு தொடங்கும் பொழுதே தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது. புதிய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் என்று அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களான பாரதிராஜா, தாமரை, வைரமுத்து, திருமுருகன் காந்தி, சீமான் இன்னும் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இதனால் தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமல்லாது, விவாத நிகழ்ச்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு இந்த சர்ச்சை வளர்ந்து வந்தது.

தமிழகத்தின் புதிய தமிழ்த்தேசியவாதிகளால் "துரோகி" முத்திரை குத்தப்பட்ட முத்தையா முரளிதரன் வரலாற்றுத் திரைப்படத்தில், அரசியல் உணர்வுள்ள குணச்சித்திர நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். முத்தையா முரளிதரன் "இனப்படுகொலையை நியாயப் படுத்தி வந்தார், சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக பேசி வந்தார்", அதனால் அப்படியானவரின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று "அன்புக் கட்டளை" இட்டனர். பகிரங்க மிரட்டல்களுக்கு "வேண்டுகோள்", "அறிவுரை" என்றும் அர்த்தம் இருப்பதாக இப்போது தான் தெரிகிறது.

இங்கே உலகப் புகழ் பெற்ற கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் விளையாட்டு சாதனைகள் பின்னுக்கு தள்ளப் பட்டு, அவர் பேசிய அபத்தமான அரசியல் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழ் உணர்வாளர்கள், ஒரு திரைப்படத் தயாரிப்பில் தலையிடுவது மட்டுமல்லாது, கருத்து சுதந்திர மறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தமிழகத்தில் இன்னமும் ஜனநாயக சூழல் வளரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் குறைந்த பட்ச கருத்துச் சுதந்திரத்தை கூட எதிராளிக்கு தர மறுப்பதையும், சகிப்புத்தன்மை இன்றி நடந்து கொள்வதையும் கண்கூடாகக் காணக் கூடியதாக உள்ளது.

இந்த தமிழ்த்தேசிய அடிப்படைவாதிகள், தாம் ஈழத் தமிழர்களின் பெயரால் பேசுவதாக காட்டிக் கொண்டாலும், இவர்களது போராட்டத்தால் ஈழத் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது என்பது தெரியவில்லை. இவர்களிடம் அது பற்றிக் கேட்டால், தாம் இனப்படுகொலைக்கு நீதிகோருவதாகவும், இந்த செய்தி சிறிலங்கா அரசை பிடித்து உலுக்கி விடும் என்றும் கூறுகிறார்கள். நான் அறிந்த வரையில், இலங்கையில் யாரும் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.

பொதுவாகவே தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை  இலங்கையில் வாழும் தமிழர்கள் கூட பெரிது படுத்துவதில்லை. அதற்குக் காரணம், ஒரு பொழுதுபோக்கு சினிமாப் படத்திற்காக உணர்ச்சிகரமாக பொங்கியெழும் யாரும், உண்மையான பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. அத்துடன், தமிழ்நாடு மாதிரி, ஈழத்தில் சினிமா அரசியல் பெருமளவு தாக்கம் செலுத்துவதில்லை. ஒரு சினிமா நடிகரோ அல்லது விளையாட்டு வீரரோ அரசியல் கருத்துக் கூற வேண்டும் என்று இலங்கையில் யாரும் எதிர்பார்ப்பதில்லை.

அந்த வகையில் அன்று முரளிதரன் தெரிவித்த "அரசியல்" கருத்துக்களையும் யாரும் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் ஓர் அரசியல்வாதி அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். பெட்டைக் கோழி கூவி பொழுது விடிவதில்லை. ஒரு தடவை முரளிதரனின் சகோதரன் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் தேர்தல் பிரச்சாரம் செய்தும், அவர் வெல்லவில்லை. இன்னொரு தடவை, கொழும்பில் UNP ஆதரவுடன் தேர்தலில் நின்ற மனோ கணேசனுக்கு எதிராக, மகிந்த ராஜபக்சேவின் கட்சியான SLFP முரளிதரனை கொண்டு எதிர்ப்பிரச்சாரம் செய்வித்தது. அப்படி இருந்தும் மனோகணேசன் வென்றார். இதை அவரே தனது முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.  அந்தளவுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் அரசியலையும், விளையாட்டையும் பிரித்துப் பார்க்கிறார்கள்.

முரளிதரன் தனது அரச ஆதரவுக் கருத்துக்களை இலங்கையில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் மட்டும் சொல்லி இருந்திருந்தால், அது இந்தளவு தூரம் சர்ச்சையை கொண்டு வந்திருக்காது. அங்கு ஏற்கனவே பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தத்துப் பித்து என்று உளறி இருக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் கணக்கெடுக்கவில்லை. ஆனால், அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் கூர்ந்து கவனிப்பார்கள். அவர்கள் ஒரு சொல் தவறாக சொன்னாலும், அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். ஏனென்றால் அரசியல்வாதிகள் கருத்துருவாக்கிகள். விளையாட்டு வீரர்கள் அப்படியானவர்கள் அல்ல. அவர்களிடம் விளையாட்டை தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.

சிங்களவர்கள் பொதுவாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ன சொல்கிறார் என்று தான் கூர்ந்து கவனிப்பார்கள். முன்பு ஜெயலலிதா, அதற்கு முன்னர் கருணாநிதி ஆகியோர் இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சிங்கள ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படும். அவை பொது மக்கள் மத்தியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படும். தீவிர இனவாதம் பேசும் சிங்களக் கட்சிகளும், அமைப்புகளும் "இந்திய விஸ்தரிப்புவாதிகளுக்கு" எதிரான தமது எதிர்ப்பை பதிவு செய்வார்கள். ஆனால், சீமான், தாமரை, பாரதிராஜா போன்ற தீவிர தமிழினப் பற்றாளர்களை யாரும் கணக்கெடுப்பதில்லை. அவர்கள் யார் என்பதே சிங்கள மக்களுக்கு தெரியாது.

இலங்கையில் எந்தவொரு சிங்களவரும், இது போன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை கண்டுகொள்வதில்லை. காரணம் மிக இலகு. தற்போதைய 800 திரைப்பட சர்ச்சை தொடர்பாக ஒரு சிங்கள ஊடகம் எப்படி தெரிவிக்கும்?  "தமிழ்நாட்டில் தமிழர்கள் முரளிதரன் என்ற ஒரு தமிழனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் தமிழ்ப் படத்தை எதிர்க்கிறார்கள்!" சுருக்கமாக, இது தமிழர்களின் உள்வீட்டுப் பிரச்சினை. இவ்வாறு தான் அந்த செய்தி வெளிவரும். இதைப் பார்க்கும் ஒரு சராசரி சிங்களவர், "தமிழர்கள் தங்கள் இனத்தில் ஒருவன் முன்னுக்கு வருவதை விரும்பாத அளவுக்கு பொறாமை மிக்கவர்கள் போலிருக்கிறது..." என்று நினைத்து விட்டு நகர்ந்து சென்று விடுவார்.

"அப்படி அல்ல, தமிழர்கள் ஒன்று திரண்டு இனப்படுகொலைக்கு நீதி கோருகிறார்கள்" என்று சிங்கள ஊடகங்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். யுத்தம் நடந்த காலங்களில், இராணுவத்தால் கொல்லப் பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருந்த ஊடகங்களிடம் இதை விட வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்? சில நேரம், இராணுவத்தால் பொது மக்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தால், அவை புலிகளின் தாக்குதலின் எதிர்வினையாக நடந்தவை என்றும் குறிப்பிடத் தவறுவதில்லை. தமது தேசத்தை பாதுகாக்கும் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடும் என்பதற்காக போர்க்குற்றம் பற்றிக் கூட பேச மறுத்து வருகின்றனர். 

முரளிதரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளில் பாரதூரமானது, காணாமல்போனவர்களை தேடி போராட்டம் நடத்தியவர்களை கொச்சைப் படுத்தியது தான். இதனை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி கூட விமர்சித்து இருந்தது. அவர்கள் தவறாக வழிநடத்தப் பட்டிருக்கலாம் என்ற பதில் எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத கூற்று. இது பாதிக்கப் பட்ட மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் தான் ஆதரிக்கும் அரசை நியாயப் படுத்த நினைத்தாலும், இது போன்ற பதில்களை தவிர்ப்பது புத்திசாலித்தனம். அநேகமாக அரசியல் அனுபவமின்மை காரணமாக அந்தக் கூற்று அவரது வாயில் இருந்து வந்திருக்கலாம். இருந்தாலும் தவறு தவறு தான்.

அதற்காக, அன்று முரளிதரன் தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைகளை கண்டித்திருக்க வேண்டும், இனப்படுகொலை பற்றிப் பேசி இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. உண்மையில் அவர் அப்படி ஏதாவது பேசியிருந்தாலும், அது தேசத்துரோகமாக கருதப்பட்டு, இனிமேல் கிரிக்கெட் விளையாடவே முடியாமல் தடைசெய்திருப்பார்கள். அன்றைய காலத்தில், அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, அதிக பட்சம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.

ஈழப் போர் முடிந்தது தொடர்பாக முரளிதரன் தெரிவித்த கருத்தானது, "இனப்படுகொலையை ஆதரித்தார்" என்பதாக திரிபுபடுத்தி பரப்பப் படுகின்றது. தமிழ்நாட்டில் சில அரசியல் அறிஞர்கள் கூட கண்ணை மூடிக் கொண்டு இப்படி ஒரு பொய்யை பரப்புரை செய்து வருகின்றனர். முரளிதரன் அவ்வாறு சொன்னதாக நான் எங்கேயும் கேள்விப் படவில்லை. இவர்களே அப்படி ஒன்றை கற்பனை செய்து கொள்கிறார்கள்.

அன்று அவர் போர் முடிந்ததால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து இருந்தாலும், அது ஒரு சாமானியனின் கூற்றாக கருதப் பட வேண்டும். ஏனெனில் அன்று சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் முப்பதாண்டு கால போர் முடிவுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். உலகில் எந்த நாடாக இருந்தாலும், போர் முடிந்தால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவது சாதாரண விடயம். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிந்த நேரம் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கவில்லையா? அதைக் கொண்டாடவில்லையா? ஜெர்மனியிலும் பலருக்கு போரின் முடிவு திருப்திகரமாக இருக்கவில்லை.

உண்மையில் இறுதிப் போர்கூட தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகத் தான் நடந்தது. அதிகம் பேசுவானேன். புலிகள் இயக்கப் போராளிகளே இந்தப் போர் போதும் என்ற கட்டத்திற்கு வந்து விட்டிருந்தனர். அந்தளவுக்கு எல்லோரும் போரினால் களைத்துப் போயிருந்தனர். அன்று அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் போர் முடிவுக்கு வந்து விடும் என்று நம்பினார்கள். அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. இது சாதாரண மக்களின் மனநிலை. நீண்ட காலப் போரினால் உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும், வார்த்தையில் வடிக்க முடியாத அளவுக்கு துன்பங்களையும் அனுபவித்த மக்களிடம் இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்?

இது போன்ற விவாதங்களில் மிகுந்த மனச்சோர்வை தரும் விடயம் என்னவென்றால், பலரிடம் வர்க்கப் பார்வை மருந்துக்கும் கிடையாது. ஒரு சில இடதுசாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மூலதனம் நூலை தமிழில் மொழிபெயர்த்த முன்னாள் மார்க்சிஸ்ட் தியாகு கூட தட்டையான இனவாத கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார் என்பது வருத்தத்திற்குரியது. இந்தியாவில் நடப்பது வர்க்கப் போராட்டம் என்பவர்கள் கூட, ஈழம் என்று வந்து விட்டால் மட்டும் சிங்களவர் எதிர் தமிழர் என்று இன அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் முரண்நகையை புரிந்து கொள்ள முடியவில்லை.

முரளிதரனின் குடும்பம், இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான கண்டியில் வாழ்ந்து வருகின்றது. அவரது தந்தை முத்தையா, லக்கிலேன்ட் பிஸ்கட் கம்பனி நடத்திய ஒரு முதலாளி. அப்படியானால் முரளிதரனின் வர்க்கம் என்னவென்று நான் சொல்லியா புரிய வேண்டும்? அவர் கல்விகற்றதும் மத்தியதர வர்க்க பிள்ளைகள் செல்லும் தனியார் பாடசாலை ஒன்றில் தான். அதனால் தான் கிரிக்கெட் விளையாட்டில் முன்னுக்கு வந்து, தேசிய அணியில் இடம்பெற முடிந்தது. இலங்கையில் இன்றைக்கும் சாதாரண அரசு பாடசாலைகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தேசிய அணியில் இடம்பெறுவது ஒரு கனவாக மட்டுமே உள்ளது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, இலங்கையிலும் கிரிக்கெட் எப்போதும் மேட்டுக்குடியினரின் விளையாட்டாகவே இருந்து வந்துள்ளது.

நீண்ட காலமாகவே, தேசிய கிரிக்கெட் அணியில் தமிழ் விளையாட்டு வீரர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை என்ற குறைபாடு இருந்து வந்தது. இதுவும் இனப் பிரச்சினையின் ஓரங்கம் தான் என்பதை பலர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். எப்போதாவது ஓரிருவர் சேர்க்கப் பட்டாலும், அவர் நிச்சயம் ஏதாவதொரு மேட்டுக்குடி பாடசாலையில் கல்வி கற்றிருப்பார். அந்த வகையில் முரளிதரன் தமிழனாக இருந்தாலும், அவரது வர்க்க அடிப்படை தான் கிரிக்கெட்டில் முன்னுக்கு வர உதவியது எனலாம். நிச்சயமாக இதெல்லாம் திரைப்படத்தில் பேசப் படப் போவதில்லை. நமது பெரு மதிப்புக்குரிய தமிழின உணர்வாளர்களும் வாய் திறக்க மாட்டார்கள்.

இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் போது முத்தையா குடும்பத்திற்கு சொந்தமான வணிக நிறுவனம் சிங்களக் காடையரினால் கொளுத்தப் பட்டது. முரளியின் தந்தைக்கு வெட்டு விழுந்தது. ஆகவே அவர்களும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் தான். இருப்பினும், இழந்த செல்வத்தை மீண்டும் திரட்டிக் கொண்டதும் தமது மேட்டுக்குடி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டனர். கிரிக்கெட்டால் நிறைய சம்பாதித்த முரளிதரனும் தனது பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலிட்டுள்ளார். ஆகையினால், முதலாளிகளின் இடத்தில் இருந்து பார்த்தால், அரசுக்கு ஆதரவாக இருப்பது அவர்களது வர்க்க நலன்களுக்கு அனுகூலமானது.

தென்னிலங்கையில் தொழிற்துறையில் சிறந்து விளங்கும் தமிழ் முதலாளிகள் எல்லோரும் அரசுக்கு ஆதரவாகத் தான் நடந்து கொள்வார்கள். இந்த விடயத்தில், தென்னிலங்கையில் வாழும் வட மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலதிபர்களும் விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு யாழ்ப்பாணத் தமிழ் கோடீஸ்வரரான மகாராஜா நிறுவனத்தின் உரிமையாளரை எடுத்துக் கொள்வோம். அவர் நீண்ட காலமாக UNP அனுதாபி. UNP எனும் வலதுசாரி பேரினவாதக் கட்சி தான் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தியது. பேரழிவு தந்த ஈழப்போரை தொடங்கி வைத்த பெருமைக்குரியது.

அமெரிக்காவில் ரிப்பப்ளிக்கன், டெமோக்கிராட்டிக் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்கும். அதனால் அந்நாட்டில் உள்ள முதலாளிகளும் இவ்விரு கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பார்கள். அதே மாதிரியான நிலைமை தான் இலங்கையிலும் நிலவுகிறது. மகாராஜா முதலாளி UNP அனுதாபி என்றால், முத்தையா முரளிதரன் SLFP அனுதாபி. அவ்வளவு தான் வித்தியாசம். அதிகம் பேசுவானேன். போர் முடியும் வரை தீவிர புலி விசுவாசிகளாக வெளிநாடுகளில் நிதி சேகரித்து மூலதனம் திரட்டியவர்கள், இன்று இலங்கைக்கு சென்று ராஜபக்சே ஆசீர்வாதத்துடன் முதலிட்டுள்ளனர். அதிலென்ன ஆச்சரியம்? இனம் இனத்தோடு தான் சேரும். முதலாளிகள் எப்போதும் அதிகார வர்க்கம் சார்ந்து நிற்பார்கள். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் நிழல் அரசை ஆதரித்த அதே முதலாளிகள், பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும் அரச ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். அது முதலாளிகளின் இயற்கையான வர்க்கக் குணாம்சம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

இன்னும் தயாரிக்கப் படாத திரைப்படம் ஒன்றுக்காக, இல்லாத எதிரிக்காக காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் திடீர் தமிழின உணர்வாளர்களுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் புரியப் போவதில்லை. முதலில், முரளிதரன் போன்ற முதலாளித்துவவாதிகள் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பதே மடமைத்தனம். "ஐயா, இது காளை மாடு, பால் தராது" என்கிறேன். அவர்களோ "இல்லை இல்லை, மாடென்றால் பால் தரத் தானே வேண்டும்?" என்று அடம் பிடிக்கிறார்கள். எல்லாவற்றையும் தமிழின ஆதரவு, தமிழினத் துரோகம் என்று தட்டையாக பார்த்து பழகி விட்டனர். அவர்களிடம் சென்று வர்க்க அரசியலை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் காதில் போட்டுக் கொள்வார்களா? இந்த விடயத்தில் முத்தையா முரளிதரன் மட்டுமல்லாது, அவரை எதிர்ப்பவர்களும் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்கின்றனர்.

 

- கலையரசன் - 

20-10-2020

Saturday, February 22, 2020

பாரசைட் vs மின்சார கண்ணா: முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!


Parasite vs Minsara kanna : Fuck the Capitalism! Don't worship it!! 
பாரசைட் vs மின்சார கண்ணா : முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டு! அதை வழிபடாதே!!

ஆஸ்கார் விருதுகள் வென்ற தென் கொரிய திரைப்படமான Parasite, முன்பு தமிழகத்தில் வெளியான மின்சார கண்ணா திரைப் படக் கதையை தழுவி எடுக்கப் பட்டதாக, அதன் தயாரிப்பாளர் தேனப்பன் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ல் வெளியான மின்சார கண்ணா திரைப்படமும், Bong Joon Ho இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான Parasite திரைப்படமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத மாறுபட்ட கதைகளை கொண்டுள்ளன. அது பற்றிய ஒரு சிறிய அலசல்.

- Parasite, மின்சார கண்ணா இரண்டும் முற்றிலும் வேறுபட்ட கதையமைப்பை கொண்ட திரைப்படங்கள். இரண்டுக்கும் இடையில் ஒற்றுமைகளை விட வேற்றுமைகளே அதிகம். இரண்டும் எதிரெதிரான வர்க்கப் பார்வை கொண்டவை.

- பாரசைட் படக்கதை முழுக்க முழுக்க ஓர் ஏழைக் குடும்பத்தின் கண்ணோட்டத்தில் நகர்கிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா திரைக்கதை ஒரு பணக்காரக் குடும்பத்தின் பார்வையில் இருந்து சொல்லப் படுகிறது. இரண்டும் முற்றிலும் முரண்பாடான வர்க்க அரசியல் கருத்துக்களை கருப்பொருளாகக் கொண்ட திரைப்படங்கள்.

- தமிழகத்திலும், தென் கொரியாவிலும் வர்க்க நிலைப்பாடு ஒன்று தான். பணக்கார வீட்டில் பிறந்த பிள்ளை பணத்தில் புரளுவதும், ஏழை வீட்டில் பிறந்த பிறந்த பிள்ளை வறுமையில் வாடுவதும் இரண்டு நாடுகளுக்கும் பொதுவான சமூக யதார்த்தம். அது என்றும் மாறாத முதலாளித்துவ பொருளாதார நியதி. பாரசைட் திரைப்படம் இந்த உண்மையை உள்ளபடியே காட்டுகிறது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் காட்டுகிறது. "ஏழைகள் கஷ்டப் பட்டு உழைத்தால் பணக்காரர் ஆகலாம்..." என்ற பொய்யை நம்ப வைக்க முயல்கிறது.

- பாரசைட் படத்தில் வரும் ஏழைக் குடும்பத்தினர் அடித்தட்டு வர்க்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களது வர்க்கக் குணாம்சம் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. உழைக்கும் வர்க்க மக்களை சுரண்டிக் கொழுத்த பணக்காரர்களை நம்மால் முடிந்த அளவு சுரண்டுவதில் தவறில்லை என நினைக்கிறார்கள். அவர்கள் பணக்கார குடும்பத்தில் வேலைக்கு சேர்வதற்கு பின்னணியில் உழைக்கும் வர்க்கம் சார்ந்த பழிவாங்கும் குணாம்சம் உள்ளது. இந்த வர்க்கப் போராட்டம் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. முதலாளிக்கு போலி விசுவாசம் காட்டுவது, வேலை செய்யாமல் இழுத்தடிப்பது, கம்பனி பொருட்களை திருடுவது... இப்படிப் பலவுண்டு.

- அதற்கு மாறாக மின்சாரக் கண்ணாவில் காட்டப் படுவது உண்மையில் ஓர் ஏழைக் குடும்பம் அல்ல! ஏற்கனவே மேல்தட்டில் இருந்த பணக்காரக் குடும்பம்! படத்தின் கதாநாயகன் விஜய்யின் காதலுக்காக அவனது குடும்பத்தினர் "ஏழைகளாக நடிக்கிறார்கள்"! ஜெர்மனியில் வசதியாக வாழ்ந்த மல்ட்டி மில்லியனர் குடும்ப உறுப்பினர்கள், இந்தியா வந்து கஷ்டப்பட்டு வீட்டு வேலைகள் செய்கிறார்களாம்! மகனின்/சகோதரனின் காதலுக்காக இந்த கஷ்டங்களை பொறுத்துக் கொள்கிறார்களாம்! இதன் மூலம் "பணக்காரர்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்கள் பார்த்தீர்களா?" என்று கதாசிரியர் நமது காதுகளில் முழம் முழமாக பூச்சுற்றுகிறார். படத்தில் ஆண்களை வெறுக்கும் பணக்காரியாக வரும் வரும் குஷ்பு ஆரம்பத்தில் ஏழைத் தொழிலாளியாக இருந்து "உழைப்பால் உயர்ந்து" பணக்காரியாக வந்தவர் என்பது அடுத்த பூச்சுற்றல்.

- பாரசைட் திரைப்படத்தின் நோக்கம் இன்றைக்கும் சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடுகளை தோலுரித்துக் காட்டுவது. காலங்காலமாக முதலாளித்துவத்தால் ஒடுக்கப்பட்டு வரும் அடித்தட்டு வர்க்கம் திருப்பித் தாக்க வேண்டும் என்பது தான் பாரசைட் படக் கதை. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா ஆண்- பெண் எனும் பாலின முரண்பாட்டை முன்வைக்கிறது. படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையில் ஆண்களை வெறுக்கும் ஒரு பணக்காரியின் விசித்திரமான நடத்தை தான் காட்டப் படுகிறது. சமூகத்தில் நிலவும் பிரதானமான வர்க்க முரண்பாடு பற்றிப் பேசாமல், "ஆண்-பெண் பாலின முரண்பாடு" என்று திரிப்பது ஒருவகையில் முதலாளித்துவ அடிவருடி அரசியல்.

- பாரசைட் படத்தின் நோக்கம் முழுவதும் பார்வையாளர்களுக்கு அடித்தட்டு ஏழை மக்கள் மீது அனுதாபத்தை உண்டாக்குவது. அதற்கு மாறாக மின்சாரக் கண்ணா பணக்கார வர்க்கத்தினர் மீது அனுதாபத்தை உண்டாக்கும் நோக்கில் எடுக்கப் பட்டுள்ளது. இது முற்றிலும் முரண்பாடான வர்க்கக் கண்ணோட்டம். இரண்டு திரைப்படங்களையும் எடுத்த டைரக்டர்கள் எதிரெதிரான வர்க்க நிலைப்பாட்டில் உள்ளவர்கள். பாரசைட் திரைப்பட இயக்குனர் Bong Joon Ho "முதலாளித்துவத்தை ஒழித்துக் கட்டுவோம்!" (Fuck the capitalism!) என்று ஆஸ்கார் விழா மேடையில் முழங்கியவர். மின்சாரக் கண்ணா திரைப்பட இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் வாயில் இருந்து முதலாளித்துவம் என்ற சொல் கூட வராது. அவருக்கு அந்தளவு தைரியம் இல்லை. தற்போதும் அவர் இயக்கும் தமிழ்ப் படங்கள் நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களை கொண்டுள்ளன. இப்படியானவர்கள் ஆஸ்கார் விருது குறித்து கனவு கூட காணமுடியாது.

- பாரசைட் திரைப்படம் மின்சாரக் கண்ணா திரைப்படத்தின் தழுவல் என்பது சுத்த அபத்தமானது. அது ஒரு மலினமான விளம்பர உத்தி. வர்க்க அரசியல் பற்றி தெளிவில்லாத தற்குறிகள் மத்தியில் மட்டுமே இந்த மலினப் பிரச்சாரம் எடுபடும். ஆஸ்கார் விருதுக்கேற்ற தமிழ்ப் படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு முதலில் சமூகப் பிரச்சினைகள் குறித்த அரசியல் அறிவு இருக்க வேண்டும். மின்சாரக் கண்ணா எடுத்தவர்களிடம் அது துளி கூட இருக்கவில்லை. வழக்குப் போடுவதற்கு முன்னர் வர்க்க அரசியல் படியுங்கள்!

Tuesday, June 26, 2018

மெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி

முதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரைப்படத்தை பாருங்கள். ஓரளவு வசதியான மத்தியதர வர்க்க குடும்ப இளைஞர்கள் கூட, விலை உயர்ந்த ஆடம்பர நுகர் பொருட்களுக்கு ஆசைப்பட்டு திருடர்களாக மாறுகிறார்கள்.

இது வெறும் சினிமாக் கற்பனை அல்ல. அன்றாட வாழ்க்கையின் யதார்த்தம். அந்தப் படத்தில் வருவதைப் போன்று, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பவனி வர ஆசைப்பட்டு நச்சரிக்கும் யுவதிகளை, ஐபோன் வைத்திருக்க ஆசைப்படும் இளைஞர்களை, இன்று நாங்கள் கிராமங்களிலும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, "வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டம் நடந்த மண்" என்று போற்றப்படும் ஈழத்திலும் இது தான் நிலைமை. சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் Mahathevan Nadanathevan தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட நிலைத் தகவல் இது. தமது பிள்ளைகளின் துர்நடத்தைகள் பற்றி போலீஸில் முறைப்பாடு செய்யும் பெற்றோர் பற்றிய பின்வருமாறு எழுதி உள்ளார்:
//உயர்தரம் படிக்கும்போதே விலை கூடின போன், விலை கூடின ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை வாங்கித்தருமாறு சண்டை பிடிப்பதாகவும், அவ்வாறு மறுக்கும் சந்தர்ப்பங்களில் தமக்கு அடிப்பதாகவும், கூடாத சினேகிதர்களுடன் சேர்ந்து ஊரைச்சுற்றிவிட்டு தாங்கள் நினைத்த நேரத்தில் வீடு வருவதாகவும் கூறுகின்றனராம்.//(26-6-18)

இது "தமிழர்களுக்கு மட்டுமே வரும் வியாதி" அல்ல. உலகம் முழுவதும் இது தான் நடக்கிறது. அத்துடன், வறிய நாடுகளில் மட்டுமே நடப்பதாகவும் சொல்ல முடியாது. பணக்கார நாடுகளும் விதிவிலக்கு அல்ல. "எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக" நினைத்துக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் கூட திருட்டுக்களும், வழிப்பறிகளும் பெருமளவில் நடக்கின்றன.

நியூ யோர்க், டொராண்டோ, லண்டன், பாரிஸ் என்று எந்தப் பெரு நகரத்திலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பதின்மூன்று வயதிலேயே திருடத் தொடங்கும் இளைஞர்கள் செல்வந்த நாடுகளிலும் உண்டு. பருவ வயதில் விபச்சாரம் செய்ய தொடங்கும் யுவதிகளும் உண்டு. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், "விலை உயர்ந்த நுகர் பொருட்களின் மீதான மோகம்" என்று பதில் வரும். ஆடம்பர வசதி வாய்ப்புகளை பணக்கார குடும்பத்து பிள்ளைகள் மட்டும் அனுபவிக்க வேண்டுமா? ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கு ஆசை இருக்காதா?

மேற்கத்திய நாடுகளில் கேங் (Gang) கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது. பதினைந்துக்கும், இருபத்தைந்துக்கும் இடைப்பட்ட வயதினர் ஒரு குழுவாக சேர்ந்து திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். இளம் குற்றவாளிகளின் நடத்தைகளை ஆராய்ந்தால் பெரும்பாலும் கிடைக்கும் முடிவு இது தான். முதலாளித்துவ நுகர்பொருட்கள் மீதான வெறி குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.

சந்தையில் புதிதாக வரும் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பாவனைப் பொருட்களை வாங்கும் வசதியற்ற குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், எங்காவது திருடியாவது வாங்க நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் திருட்டு ஒரு குற்றம் அல்ல. ஆனால், குறிப்பிட்ட ஒரு பிராண்ட் பொருள் தன்னிடம் இல்லை என்பதை ஒரு பெரும் குறையாகக் கருதுகிறார்கள். இது குறித்து பிராண்ட் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் "பெருமைப்" பட்டுக் கொள்ளலாம்.

முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. அப்போது உலகமயமாக்கல் இருக்கவில்லை. இலங்கை, இந்தியா மட்டுமல்லாது, பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் சந்தை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்தியை நம்பி இருந்தது. மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தன. அவற்றை வாங்குவதற்கான கடை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருக்கும். அப்படி ஒரு கடை இருப்பதே பலருக்கும் தெரியாது.

அந்தக் காலங்களில், பணக்காரர்கள் மொத்த சனத்தொகையில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த படியால் சற்று அடக்கமாக இருந்தனர். விலை உயர்ந்த   ஆடம்பர பொருட்களை பகிரங்கப் படுத்தாமல் தமக்குள்ளே வைத்துக் கொண்டார்கள். ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. பண வசதி படைத்த உயர் மத்திய தர வர்க்கத்தின் பெருக்கம், ஆடம்பரப் பொருட்களுக்கான சந்தையை விஸ்தரிக்க வைத்துள்ளது. அது கிராமங்களை கூட விட்டு வைக்காமல் எங்கும் வியாபித்துள்ளது.

உலகமயமாக்கல் காரணமாக, இன்று அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப் படும் ஒரு பொருள், நாளைக்கே உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்து விடும். ஒவ்வொரு நாட்டிலும் பெரிய நகரங்கள் மட்டுமல்லாது, சிறிய நகரங்களிலும் உள்ள இலட்சக் கணக்கான கடைகளுக்கு விநியோகிக்கப் பட்டிருக்கும். ஒரு பொருள் சந்தைக்கு வரும் முன்னரே, அது தொடர்பான ஆரவாரமான விளம்பரங்கள் அறைகூவல் விடுக்கும். அது போதாதென்று, "சராசரி" இளைஞர்களின் "சாதாரணமான" உரையாடல்களில் அது பற்றிய தகவல்கள் பரிமாறப் படும்.

எமக்கு அவசியமான பாவனைப் பொருள் சந்தையில் மலிவான விலையில் கிடைத்தாலும் வாங்க மாட்டோம். ஏனென்றால் அது "பெயர் தெரியாத", "யாராலும் விரும்பப் படாத" பொருள். எல்லோராலும் விரும்பி வாங்கப் படும் பிராண்ட் பொருட்களையே வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.

"அனைவராலும் விரும்பப் படும்" நுகர் பொருட்கள்,  அவற்றின் பிராண்ட் பெயருக்காக மட்டும் செயற்கையாக விலை கூட்டி விற்கப் படும். ஒரு ஐபோனின் உற்பத்திச் செலவு ஐம்பது டாலர்களாக இருக்கலாம். ஆனால், அது ஐநூறு டாலர்களுக்கு விற்கப் படும். அதை விட அதிக விலை வைத்தாலும் வாங்குவதற்கு ஏராளமானோர் போட்டி போடுவார்கள். 

இவ்வாறு முதலாளித்துவம் மனிதர்கள் எல்லோரையும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருளை வாங்க முடியாத அளவுக்கு வருமானம் குறைந்தவர்களின் நிலைமை தான் சங்கடமானது. பலர் அது பற்றிய ஏக்கத்துடனே பொழுதைக் கழிப்பார்கள். நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதற்கு கூட வெட்கப் படுவார்கள். இதைவிட இளம் பிராய நண்பர்களுக்கு இடையிலான ஏளனப் பேச்சுக்கள், சீண்டல்கள் மன உளைச்சல் உண்டாக்கும் அளவிற்கு மோசமாக இருக்கும்.

அதை விடக் கொடுமை, சமூகத்தில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு இல்லாமை தான். மேற்குறிப்பிட்ட விடயங்கள் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் கூட, அதற்குக் காரணம் முதலாளித்துவம் என்று வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். மெத்தப் படித்தவர்களிடம் கூட இது குறித்த அறியாமை உள்ளது. அதனால் தான் பல்கலைக்கழக மாணவர்கள் கூட நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாகிறார்கள். குற்றச் செயல்களில் கூட ஈடுபடுகிறார்கள்.

மெட்ரோ திரைப்படத்தில், நுகர்பொருள் கலாச்சாரத்தால் சமூகத்தில் விளையும் தீமைகள்  மிகவும் தெளிவாக காட்டப் படுகின்றன. ஒரு அப்பாவி கல்லூரி மாணவன், விலை உயர்ந்த நுகர்பொருள்களுக்கு ஆசைப் பட்டு, தெருவில் பெண்களின் தங்கச் சங்கிலி அறுக்கும் திருடனாக மாறுகிறான். முதலாளித்துவ நுகர்வு வெறி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது. ஒரு கட்டத்தில் பெற்ற தாயையே கொலை செய்யும் அளவிற்கு இரக்கமற்ற ஜடமாக மாற்றுகிறது.

திரைப்படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகளை பார்த்து கண்ணீர் விட்டவர்கள் பலரிருப்பார்கள். ஆனால், அவர்களது கோபம் எப்போதும் தனி மனிதர்களின் மீது மட்டுமே இருக்கும். எந்தக் கட்டத்திலும், இந்த முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு எதிராகத் திரும்பாது. அந்த விடயத்தில் திரைப்படமும் மௌனம் சாதிக்கிறது. ஆனால், படம் வெளியிட அனுமதிக்க முடியாமல் தணிக்கை சபைக்கு மட்டும் ஏதோ நெருடி இருக்கிறது. வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம் என A சேர்ட்டிபிகேட் கொடுப்பதற்கும் தயங்கி இழுத்தடித்ததாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். என்ன செய்வது? முதலாளித்துவ அரக்கனின் அடிமடியில் கை வைத்தால் சும்மா விடுவார்களா?

Tuesday, January 30, 2018

வேலைக்காரன் - திரையில் ஒலிக்கும் உழைக்கும் மக்களின் கலகக் குரல்

வேலைக்காரன் திரைப்படம்: ஒரு நிகழ்கால அரசியல்- பொருளாதாரக் கண்ணோட்டம்


"எங்களோட இந்த முயற்சியே ஒரு மார்க்கெட்டிங் தான். நல்லது ஜெயிக்கும் என்று sample காட்ட..."

படத்தின் முடிவில் வரும் இந்த வசனம் தான், இதன் "மார்க்கெட்டிங் வெற்றி" எனலாம். மார்க்ஸிய சொல்லாடலான "உழைக்கும் வர்க்கம்" என்பதை, இந்தத் திரைப்படத்தில் "வேலைக்காரர்கள்" என்று மக்களின் பேச்சு மொழியில் பயன்படுத்துகின்றனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இதுவே படத்தின் வெற்றிக்கு காரணம். அதாவது, கம்யூனிசத்தை உழைக்கும் மக்களின் மொழியில் புரிய வைப்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். அது நிறைவேறியுள்ளது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், இந்திய மத்தியதர வர்க்கத்தினர் கார்பரேட் நிறுவனங்களை கைநீட்டி வரவேற்றனர். துரித உணவுகளை Junk food என்றும் பாராமல் உண்டு களித்தனர். அன்று அது "நாகரிகமாக" கருதப் பட்டது. மேலைநாட்டு கார்ப்பரேட் கலாச்சாரத்தை வெறித்தனத்துடன் பின்பற்றுவதில் பெருமைப் பட்டனர்.

ஆனால், காலப்போக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல், துரித உணவுகளில் கலந்துள்ள இரசாயன நஞ்சு போன்ற விடயங்கள் வெளித் தெரியவாரம்பித்தன. அதன் எதிரொலி தான் வேலைக்காரன் திரைப்படம். இது "முதலாளித்துவம் தனது சவக்குழியை தோண்டுகின்றது" என்று கார்ல் மார்க்ஸ் சொன்னதை நினைவுபடுத்துகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் "படிப்புக்கேற்ற ஊதியம் தருகிறார்கள்" என்று இறுமாந்திருந்தனர். தற்போது தாமும் உழைக்கும் வர்க்கம் தான் என்பதையும், முதலாளிகள் ஈவிரக்கமின்றி தமது உழைப்பை சுரண்டுகிறார்கள் என்பதையும் உணர்கிறார்கள். இவர்கள் நவீன பாட்டாளிவர்க்கமாக மாறியுள்ளனர். 

அத்தகைய சமூகப் பின்னணியில் இருந்து வந்தவன் தான் வேலைக்காரன் படக் கதாநாயகன். இவன் போன்ற குட்டி முதலாளிய இளைஞர்கள், ஆரம்பத்தில் முதலாளிக்கு விசுவாசமாக இருப்பார்கள். ஒரு கட்டத்தில் சமூக விழிப்புணர்வு பெற்று, பாட்டாளி வர்க்க நலன்களுக்காக வென்றெடுக்கப் படுவார்கள். இது நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் கார்ல் மார்க்ஸ் கூறியது. வர்க்க சிந்தனையில் ஏற்படும் பண்பு மாற்றத்தை வேலைக்காரன் திரைப்படம் திறம்பட எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில்,விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்கு சேரும் கதாநாயகன் அறிவு, முதலாளிக்கு விசுவாசமாக பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு குப்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த, உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட அறிவு, தனக்குக் கிடைத்த கார்ப்பரேட் வேலையை பெரிதாக எண்ணுகிறான். தனது குப்பத்து இளைஞர்களை அடியாட்களாக பயன்படுத்தி, கூலிக்கு கொலை செய்யும் தாதாவான காசியை வெறுக்கிறான். ஆனால், ஒரு கட்டத்தில் காசி தனது நண்பனை கொல்லும் போது உண்மை தெரிய வருகின்றது.

காசி போன்ற பேட்டை ரவுடிகளையும் காரப்பேட் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அப்போது ஓர் உண்மை உரைக்கிறது. முதலாளிகளின் அடியாட்களாக கூலிக்கு கொலை செய்யும் ரவுடிக் கும்பலுக்கும், சம்பளம் வாங்கிக் கொண்டு மனச்சாட்சியை அடைவு வைத்து விட்டு வேலை செய்யும் மத்தியதர வர்க்க அடியாட்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு தரப்பினரும் முதலாளிய நிறுவனங்களின் குற்றங்களுக்கு உடந்தையாகின்றனர்.

தமக்கு எதிரானவர்களை அடிப்பது, கொலை செய்வது போன்ற "சட்டவிரோத  செயல்களை" கூலிக்கு மாரடிக்கும் அடியாட்களிடம் ஒப்படைத்து விட்டு, தமது கை சுத்தம் என்று மேட்டுக்குடி கனவான்களாக நடந்து கொள்வது தான் கார்ப்பரேட் கலாச்சாரம். அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில் இது தான்  நடக்கிறது. 

இருபது வருடங்களுக்கு முன்னர், எண்ணை வள நாடான நைஜீரியாவில், எண்ணைக் கழிவால் மக்களின் வாழ்விடம் மாசடைவதை எதிர்த்துப் போராடிய, ஒரு பிரபல சூழலியல்வாதி (Ken Saro-Wiwa) கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்குப் பின்னால் ஷெல் நிறுவனம் இருந்தது. அது அப்போது உலகச் செய்தியாகி ஷெல் நிறுவனத்திற்கு அவமானத்தை தேடித் தந்தது.

நெதர்லாந்தில் ஒரு தடவை, "உங்களுக்குப் பிடிக்காத விடயம் எது?" என்று ஒரு கார்ப்பரேட் நிர்வாகியிடம் கேட்ட நேரம், "எல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள்" என்று பதில் கூறினார். அவர் சுட்டிக் காட்டிய "எல்லாம் தெரிந்தவர்கள்" இடதுசாரி சமூக ஆர்வலர்கள் தான். உண்மை தெரிந்தவர்கள், அதை மக்களுக்கு சொல்லி விடக் கூடாது என்பதில் முதலாளிகள் கவனமாக இருக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனம், எங்கெல்லாம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது? அவற்றின் சட்டவிரோத செயல்கள், நிதி மோசடிகள், உழைப்புச் சுரண்டல்கள் போன்ற பல விபரங்களை தேடி அறியும், மேற்கத்திய இடதுசாரி அமைப்புகள், அந்த அறிவை மக்களிடம் பரப்புவதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. வேலைக்காரன் திரைப்படத்தில் மேற்படி இடதுசாரி செயற்பாட்டாளர்களின் மொத்த உருவமாக கதாநாயகன் அறிவு காட்டப் படுகின்றான். இங்கே அறிவு என்பது ஒரு தனி மனிதன் அல்ல. சமூக உணர்வாளர்களின் பொது வடிவம்.

மேற்குலக நாடுகளில் உழைக்கும் வர்க்கம் உரிமைக்காக போராடும் ஒவ்வொரு தடவையும், முதலாளிய வர்க்கம் அதைக் கடுமையாக எதிர்த்து நிற்கும். ஆனால், ஒரு தடவை தொழிலாளர்கள் (அல்லது நுகர்வோர்) தமது நியாயமான உரிமைகளை வென்று விட்டால், அந்த வெற்றிக்கு முதலாளிகளும் சொந்தம் கொண்டாடுவார்கள்.

மேற்கைரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் விடயத்தில் "நாகரிக வளர்ச்சி" கண்டுள்ளது என்றால், அதற்குக் காரணம் அங்கு நடந்த தொழிலாளர் போராட்டங்கள் தான். ஆனால், அயோக்கியத்தனமாக அந்த உண்மையை மறைக்கும் மேற்கத்திய முதலாளிய வர்க்கம், அதை தானே செய்ததாக தம்பட்டம் அடிக்கும். இந்த அயோக்கியத்தனம், வேலைக்காரன் திரைப்படத்தில் ஆதி என்ற பாத்திரம் மூலம் காட்டப் படுகின்றது.

திரைப்படத்தில் தான் வேலை செய்யும் கம்பனி தயாரிக்கும் பொருட்களில் இரசாயன நஞ்சு கலந்துள்ளது என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் அறிவு, இரண்டு நாட்களுக்கு தரக் கட்டுப்பாட்டுக்கு ஏற்றவாறு வேலை செய்யும் திட்டத்தை கொண்டு வருகிறான். அறிவின் மேலாளரும், போட்டி நிறுவன முதலாளியின் மகனுமான ஆதி, தந்திரமாக அதற்கு உடன்படுகிறான்.

அதற்குப் பின்னால், போட்டி நிறுவனத்தை கழுத்தறுக்கும் முதலாளிகளின் சுயநலம் ஒளிந்துள்ளது. அது மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் ஆதி தானே தொழிலாளர்களின் பாதுகாவலன் என்றும் காட்டிக் கொள்வான். நிஜ வாழ்வில், இந்த விடயங்கள் பல்வேறு கம்பனிகளில் பல வருட கால இடைவெளிகளுக்குள் நடந்துள்ளன. 

அவற்றை கோர்வையாக்கி, ஒரே கதையாக கூறத் தெரிந்த டைரக்டரின் திறமையை பாராட்ட வேண்டும். பெரும்பாலும் படித்தவர்களும் கவனம் செலுத்தாத, கார்ப்பரேட் ஊழல்களை, பொருளாதார நுணுக்கங்களை, மிகவும் எளிமையாக பாமர மக்களுக்கும் புரிய வகையில் கூறியிருக்கும் டைரக்டரை மெச்சலாம்.

இரண்டு மணிநேர திரைப்படத்தில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பது உண்மை தான். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் எளிதான விடயம் அல்ல. இருட்டைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரு மெழுவர்த்தியை ஏற்றி வைக்கலாம். அதைத் தான் வேலைக்காரன் திரைப்படம் கூற முனைகின்றது. 

உலகில் எதுவும் போராடாமல் கிடைப்பதில்லை. அதை புதிய சிந்தனைகளுடன் வடிவமைப்பதும் அவசியமாகின்றது. உதாரணத்திற்கு, வேலைநிறுத்தம் செய்வது மட்டும் போராட்டம் அல்ல. "வேலை செய்வதும்" ஒரு போராட்ட வடிவம் தான்.

அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் உள்ளிருந்து வேலை செய்து கொண்டு போராடிய சம்பவங்கள் நடந்துள்ளன. (பார்க்க: சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது) அதாவது, வழமை போல முதலாளிக்கு விசுவாசமாக உற்பத்தி செய்யாமல், சமூகத்திற்காக உற்பத்தி செய்யும் போராட்டம்.

ஒரு தொழிலகம், சமூகத்தில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப் பட்ட முடிவுப் பொருட்களை அந்த சமூகத்திற்கே விற்கிறது. (இது முதலாளித்துவ மார்க்கெட்டிங் பாடநூலில் எழுதப் பட்டுள்ளது.) அதன் அர்த்தம், தொழிலாளர்கள் சமூகத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான நஷ்டஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார்கள். எதற்காக முதலாளிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? இந்தக் கேள்வியை வேலைக்காரன் திரைப்படம் எழுப்புகின்றது.

தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியான அறிவுக்கும், முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியான ஆதிக்கும் இடையில் நடக்கும் விட்டுக்கொடுக்காத போராட்டமே படத்தின் பின்பாதிக் கதை. அறிவின் யோசனைப் படி, தொழிலாளர்கள் இரண்டு நாட்கள் தரக் கட்டுப்பாடுடன் தயாரித்த பொருட்களை, ஆதி எரித்துக் கொளுத்தி நாசமாக்கி விடுகிறான். இதனால் தரமான பொருள் சந்தைக்கு வருவது தடுக்கப் படுகின்றது. 

இறுதியில், தொழிலாளர்கள் நேர்மையாக வேலை செய்யும் விழிப்புணர்வு பெற்றதே வெற்றி தான் என்பது அறிவின் வாதம். அது இன்னொரு கட்டத்திற்கு நகர வேண்டும். தொழிலாளர்கள் தாமே நிர்வாகத்தைப் பொறுப்பேற்று நடத்த வேண்டும். குறைந்த பட்சம், கம்பனி நிர்வாகிகள் குழுவில் தொழிலாளர் பிரதிநிதிகளை சேர்த்துக் கொள்ள வற்புறுத்த வேண்டும்.

Monday, July 25, 2016

கபாலி சொல்லாத "மண்ணின் மைந்தர்களின்" கதை


ரஜனிகாந்த் நடித்துள்ள க‌பாலி திரைப்ப‌ட‌ம் ம‌லேசிய‌ த‌மிழ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் பிர‌ச்சினையை மைய‌மாக‌ வைத்து எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அந்த‌ விட‌ய‌த்தில் இது பாராட்ட‌த் த‌க்க‌ ப‌டைப்பு. ப‌ட‌ம் முழுவ‌தும் காட்பாதர் திரைப் ப‌ட‌த்தை நினைவுப‌டுத்தினாலும், இது ம‌லேசிய‌த் த‌மிழ‌ர்க‌ளின் நடைமுறைப் பிர‌ச்சினையை கூறும் த‌னித்துவ‌ம் கொண்ட‌து.

அர‌சிய‌ல் பேசும் ப‌ட‌மாக‌ இருந்தாலும், அது ம‌லேசிய‌ அர‌சின் விளையாட்டு விதிக‌ளுக்கு அமைய‌வே எடுக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. ப‌ட‌த்தின் தொட‌க்க‌த்தில் ஒரு த‌மிழ் சிறை அதிகாரி சொல்வார்: "வெளியே போய் ப‌ழைய‌ப‌டி ஆர‌ம்பிக்காதிங்க‌... த‌மிழ‌ர்க‌ளுக்கு இங்கே கெட்ட‌ பெய‌ர் இருக்கிற‌து." இது தான் எம‌க்கு ம‌லேசிய‌ அரசு சொல்ல‌ விரும்பும் "அறிவுரை"!

கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் உல‌க‌ம் முழுவ‌தும், குறிப்பாக‌ வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ (அல்லது அடைந்து வ‌ரும்) நாடுக‌ளில் உள்ள‌ பிர‌ச்சினை. ல‌ண்ட‌ன், பாரிஸ், டொர‌ன்டோ ஆகிய‌ மேற்க‌த்திய‌ ந‌க‌ர‌ங்க‌ளில், ஈழ‌த் த‌மிழ் இளைஞ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள் இருக்கின்ற‌ன‌. அந்த‌க் குழுக்க‌ள் த‌ம‌க்குள் மோதிக் கொள்ளும். ஹாலிவூட் திரைப் ப‌ட‌ங்க‌ளில் வ‌ருவ‌து போன்ற‌ துப்பாக்கிச் சூட்டு ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் ந‌ட‌க்கும்.

ஒரு த‌ட‌வை ல‌ண்ட‌ன் போயிருந்த‌ நேர‌ம், "ல‌ண்ட‌னில் உள்ள‌ த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்? " என்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்தேன். "த‌மிழ் ம‌க்க‌ளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்க‌ள்.... அத‌னால் எம‌க்கு ந‌ல்ல‌து செய்கிறார்க‌ள்." என்றார்க‌ள். அப்ப‌டி என்ன‌ ந‌ன்மை செய்து விட்டார்க‌ள்? க‌ட‌ன் அட்டை மோச‌டி போன்ற‌வ‌ற்றில் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் ஈடுப‌ட்டாலும், அவர்க‌ளால் த‌மிழ‌ர்க‌ளும் பெரும‌ள‌வு பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். கோஷ்டி மோத‌ல்க‌ளில் ப‌லியாகுப‌வ‌ர்க‌ளும் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் தான்.

க‌பாலி ப‌ட‌ம் சொல்லாத‌ க‌தையும் இது தான். கேங்ஸ்ட‌ர் க‌லாச்சார‌ம் த‌மிழ‌ர்களுக்கு ந‌ன்மை உண்டாக்குவ‌தாக‌ நினைத்துக் கொள்வோர் ப‌ல‌ருண்டு. இன்னொரு ப‌க்க‌மாக‌ பார்த்தால், இதுவும் "சிறுபான்மையின‌ருக்கு எதிரான‌ ஒடுக்கு முறையின் இன்னொரு வ‌டிவ‌ம்" என்றும் சொல்ல‌லாம். மேற்க‌த்திய‌ நாடுக‌ள் போன்று, ம‌லேசிய‌ அர‌சும் த‌மிழ் கேங்ஸ்ட‌ர்க‌ள் மீது க‌டுமையான‌ நட‌வடிக்கை எடுப்ப‌தில்லை. கார‌ண‌ம்? த‌மிழ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்குள்ளே மோதிக் கொண்டு சாக‌ட்டும் என்ற‌ அல‌ட்சிய‌ ம‌ன‌ப்பான்மை!

வ‌ள‌ர்ச்சி அடைந்த‌ முத‌லாளித்துவ‌ நாடுக‌ளில், சிறுபான்மையின‌த்த‌வ‌ர்க‌ளின் கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ள், அந்த‌ ச‌முக‌த்தின‌ர் பொருளாதார‌ ரீதியாக‌ "முன்னேறுவ‌தை" குறிக்கோளாக‌ கொண்டுள்ள‌ன‌. ஆனால், இது அர‌சு அனும‌திக்கும் "சுத‌ந்திர‌த்திற்குள்" சாத்திய‌மாகும். ஏனென்றால், கேங்ஸ்ட‌ர் குழுக்க‌ளில் சேர்ப‌வ‌ர்க‌ள் ஒரு பேரின‌வாத‌ அர‌சை தட்டிக் கேட்ப‌தில்லை. அது ம‌ட்டும‌ல்ல‌, பெரும் முத‌லாளித்துவ‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் மேலாதிக்க‌த்தை கேள்வி எதுவுமின்றி ஏற்றுக் கொள்வார்க‌ள்.

தமிழன் முன்னேறாமல் இருப்பதற்கு தமிழன் தான் காரணம் என்று, ரஜனி ஒரு "நண்டுக் கதை" சொல்கிறார்.அதாவது, ஒரு நண்டு மேலே ஏறினால், அடுத்த நண்டு இழுத்து விழுத்துமாம். தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்று புலம்பும் தமிழ் தேசியவாதிகளின் அரதப் பழசான பிரச்சாரம் இது. அன்றைய கருணாநிதி முதல் இன்றைய சீமான் வரையில் "நண்டு அரசியல்" தான் பேசிவருகிறார்கள். தமிழ் மக்களை சினிமா போதைக்கு அடிமைகளாக்கி, பணத்தை சுரண்டி வாழும் "கார்ப்பரேட் நடிகன்" ரஜனிகாந்த், இதைச் சொல்வது தான் வேடிக்கை. பெரிய பெரிய பண முதலைகள், தமிழர்களை பிடித்து விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

கபாலி சொல்லும் அந்த "நண்டுகள்" எவை? படத்தில் கபாலிக்கு எதிரான கேங்க்ஸ்டர்கள். குறிப்பாக, "கபாலியை காட்டிக் கொடுத்தவர்கள், எதிரியான சீன கேங்க்ஸ்டருடன் ஒத்துழைப்பவர்கள்". மலேசிய அரசுடன் ஒத்துழைக்கும் தமிழ் அமைச்சர்களை படத்தில் மிகவும் கவனமாக தவிர்த்திருக்கிறார்கள். மலேசிய அரசு கடைப்பிடிக்கும் "பூமி புத்திரர்கள் கொள்கை" வெளிப்படையானதொரு பேரினவாதக் கொள்கை. இவ்வளவு யுத்த அழிவைக் கண்ட இலங்கையில் கூட, அந்தளவு மோசமான இனப்பாகுபாட்டுக் கொள்கை கிடையாது.

அது என்ன "பூமி புத்திரர்கள் கொள்கை"? அந்த சம்ஸ்கிருத சொல்லை தமிழில் மொழிபெயர்த்தால் மண்ணின் மைந்தர்கள் என்று அர்த்தம் வரும். அதாவது, மலே மொழி பேசும் இனத்தவர்கள் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். ஏனையோர் எல்லாம், சீனர்கள், தமிழர்கள் வந்தேறுகுடிகள்! இது வெளிப்படையான இனவாதக் கொள்கை என்று பலரால் கண்டிக்கப் பட்டாலும், மலேசிய அரசு இன்றைக்கும் அதை நடைமுறைப் படுத்தி வருகின்றது.

மலே இனத்தில் பிறந்தவர்கள், பணக்காரர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் வீட்டு மனை போன்ற பல துறைகளில் அரசு மானியம் கொடுக்கும். பிற இனங்களில் உள்ள ஏழைகளுக்கு அந்தச் சலுகை கிடையாது. மலேசிய அரசின் இன ஒதுக்கல் கொள்கையால் பெரியளவில் பாதிக்கப் பட்டவர்கள் தமிழர்கள் தான். பொருளாதார வல்லரசான சீனாவின் தொடர்பு காரணமாக, தனியார் முதலீடுகளில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் சீன சமூகத்தினருக்கு தனியார் துறை ஆதரவு கிடைக்கிறது.

மலேசியாவில் தமிழர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகமாக இருப்பதால், அவர்கள் மத்தியில் வேலையற்றோரும், ஏழைகளும் அதிகம். கேங்க்ஸ்டர் கலாச்சாரம் பரவுவதற்கு அதுவும் ஒரு காரணம். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அது ஏற்ற வழி. மலேசியத் தமிழ் சமூகம் முழுவதும் அப்படி என்று நினைப்பதும் தவறு. பெரும்பாலான மலே,சீன மக்கள், தமிழர்கள் பற்றி எதிர்மறையான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.

மலேசியத் தமிழர்களில் உயர் கல்வி கற்று உத்தியோகம் பார்ப்பவர்களும் ஏராளம் பேருள்ளனர். இவர்களில் சிலர் தமது மத்தியதர வர்க்க மனப்பான்மை காரணமாக மலேசிய பேரினவாத அரசுக்கு வக்காலத்து வாங்குவதுமுண்டு. மலேசிய அரசும் வேண்டுமென்றே வர்க்கப் பிரிவினையை உருவாக்கி வளர்த்து வருகின்றது. இல்லாவிட்டால் பூமி புத்திரர்களின் நாட்டு அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்களுக்கு இடம் கிடைத்தது எப்படி? தமிழ் அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட மலேசிய பேரினவாத அரசுடன் இணக்க அரசியல் நடத்துபவர்கள் தான். இதையெல்லாம் கபாலி பேச மாட்டார். படத்தை தணிக்கை செய்து விடுவார்கள் என்று பயம்.

இது காலனிய காலத்தில் இருந்து தொடரும் பிரித்தாளும் சூழ்ச்சி. மலேசியா பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்தியத் தமிழ்க் கூலிகளை தருவித்தனர். அதே நேரம், அவர்களை மேற்பார்வை செய்வதற்கு, யாழ்ப்பாணத் தமிழ் கங்காணிகளை (கண்காணிப்பாளர்) பதவியில் அமர்த்தினார்கள். பெருந்தோட்டப் பக்கம் வெள்ளைக்கார முதலாளி வரா விட்டாலும், தமிழ்க் கங்காணிகள் தமிழ்க் கூலிகளை வருத்தி வேலை வாங்கினார்கள். ஒரு காலத்தில், இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற பகை முரண்பாடு ஏற்படவும் அதுவே காரணமாக இருந்தது.

தமிழ் கூலித் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து மீள முடியாமல் தவிக்கையில், தமிழ் மேற்பார்வையாளர்கள் செல்வம் சேர்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் ஓய்வு பெறும் வயதில் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச் சென்று, வசதியான வீடு கட்டி வாழ்ந்தார்கள். யாழ்ப்பாணத்தில் மக்கள் அவர்களை "மலேசியா பென்சனியர்" என்று அழைத்தார்கள். எழுபதுகளில், மலேசியா பென்சனியர் என்றால் பணக்காரன் என்றும் இன்னொரு அர்த்தம் இருந்தது.

தமிழர்கள் மத்தியில் இருந்த சாதிப் பாகுபாட்டையும் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். தொழிலாளர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சாதியினராகவும், அவர்களை மேற்பார்வை செய்தவர்கள் ஆதிக்க சாதியினராகவும் இருந்தனர். மலேசியாவில் மட்டுமல்ல, இலங்கையின் மலைநாட்டில் இருந்த பெருந் தோட்டங்களிலும் அதே நிலைமை காணப் பட்டது. அதாவது, இந்தியத் தமிழ் கூலித் தொழிலாளர்கள், இலங்கைத் தமிழ் மேற்பார்வையாளர்கள். இந்தவிரு சமூகங்களுக்கு இடையில் பிளவை உண்டாக்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம்.

கபாலி படத்தில் நண்டுக் கதை சொல்லும் ரஜனி, அதை வெறுமனே "தமிழர் எதிர் தமிழர்" என்று விளக்கம் கொடுப்பது எதற்காக? வேறொன்றுமில்லை. அப்போது தான், தமிழர்கள் மத்தியில் உள்ள வர்க்க வேற்றுமைகளை மறைக்க முடியும். தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் உள்ள தமிழ்த் தேசியவாதிகளும், கபாலியின் நண்டுக் கதை சொல்லித் தான் வர்க்க முரண்பாடு வெளித்தெரிய விடாமல் பூசி மெழுகி வருகின்றனர்.

Sunday, December 28, 2014

"கம்யூனிசமும் கத்தரிக்காயும்" : காடு சினிமா ஓர் அறிமுகம்


கத்தி சினிமாப் படத்தில் கம்யூனிசமும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை. ஆனால், சமூகவலைத் தளங்களில் அதைச் சுற்றி நடந்த விவாதங்கள், வியாக்கியானங்கள் ஏராளம். அதில் நூறில் ஒரு பங்கு கூட, "காடு" திரைப் படம் பற்றிப் பேசப் படவில்லை. காடு படத்தில், "கத்தரிக்காயை வைத்தே கம்யூனிச விளக்கம்" கொடுக்கப் படுகின்றது. அதைப் பற்றி பேசினால், "கத்தரிக்காய் சாப்பிடும் பொழுதெல்லாம் கம்யூனிசம் நினைப்பு வந்து தொலைக்கும்" என்ற எச்சரிக்கை உணர்வுடன் பலர் தவிர்த்திருக்கலாம்.

வேலு காட்டுக்குள் வாழும் எழுதப் படிக்கத் தெரியாத கதாநாயகன். அவனுக்கு ஒரு படித்த நண்பன் கருணா.வனத்துறை அதிகாரியாக வர விரும்பிய கருணா, வேலை கிடைக்காத காரணத்தினால் சந்தன மரம் கடத்தி அகப்படுகிறான். ஆனால், தனக்குப் பதிலாக வேலுவை பொலிசில் மாட்டி விடுகிறான். அதைத் தொடர்ந்து வேலு வெளியே வர முடியாதவாறு பொய்க் குற்றச்சாட்டுகளை சோடித்து சிறைக்கு அனுப்புகிறான். அதே நேரத்தில், கருணா எதிர்பார்த்த வனத்துறை அதிகாரி வேலை கிடைக்கிறது. சந்தன மரக் கடத்தல்காரர்களுடன் ஒத்துழைப்பதுடன், சூழ்ச்சி செய்து தனது ஊர் மக்களையே வெளியேற்றுகின்றான்.

இதற்கிடையே, செய்யாத குற்றத்திற்காக சிறைக்குள் அடைக்கப்பட்ட வேலுவுக்கு, அரசியல் ஞானோதயம் பிறக்கிறது. புரட்சிகர அரசியல் செயற்பாடுகளுக்காக, சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சமுத்திரக்கனி மூலம் அரசியல் உணர்வு பெறுகிறான். இறுதியில், காடும் காடு சார்ந்த மக்களினதும் அரசியல் உரிமைகள் பற்றிய தெளிவு பெற்ற கதாநாயகன் வேலு, விடுதலையான பின்னர் போராட்டம் நடத்துகிறார்.

இந்தப் படத்தில், கம்யூனிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? போன்ற விடயங்களை, மிகவும் எளிமையாக பாமரர்களுக்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறார்கள். உரிமைகளுக்காக சிறைக் கைதிகள் நடத்தும் ஒன்று பட்ட போராட்டம், சிறைச்சாலையும் புரட்சியின் கூடாராம் தான் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. 

சிறைக் கைதிகள் சேகுவேரா தனது மகளுக்கு எழுதிய கடிதத்தை வாசிக்கிறார்கள். உண்மையில், பல கைதிகள் சிறையில் தான் சேகுவேராவின் பெயரைக் கேள்விப் பட்டிருப்பார்கள். அவர்கள் சேகுவேராவின் புத்தகம் வாசிக்கும் அளவிற்கு அரசியல் அறிவு பெறுகிறார்கள் என்பதை படத்தில் பல காட்சிகளின் ஊடாக காட்டி இருக்கிறார்கள்.

சிறைக்குள் சென்ற கைதிகள் அரசியல் உணர்வு பெறுவது, நிஜத்தில் பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவில் நக்சல்பாரி போராட்டம் நடந்த காலத்தில், சிறைச் சாலைகள் புரட்சியை போதிக்கும் பள்ளிக்கூடங்களாக இருந்தன. இத்தாலியிலும் அதே காலகட்டத்தில் Brigate Rosse (செம்படை) இயக்கம், இதற்காகவே தனது உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்திருந்தது.

காடு படத்தில் வரும் புரட்சியாளர் பற்றிய பின்னணி விபரங்கள் எதுவும் கொடுக்கப் படவில்லை. ஆனால், அவர் பேசும் வசனங்கள் மனதில் தைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. சாக்ரடீஸ் மாதிரி, காவலர்களின் அழுத்தம் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் நேரத்திலும், "நீங்கள் வெறும் அம்புகள் தான்... எனது போராட்டம் உங்களுக்கும் சேர்த்து தான்..." என்று கூறும் காட்சி வருகின்றது.

நல்ல உணவு வேண்டுமென்பதற்காக, சிறைக் கைதிகள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுகிறார்கள். இதுவும் உண்மையில் பல நாடுகளில் நடந்துள்ளது. பெரு நாட்டில் நடந்த மாவோயிச ஒளிரும் பாதை கைதிகளின் சிறைச்சாலைப் போராட்டங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை.

கம்யூனிசம் பேசுவது, தமிழ் மண்ணுக்கு அந்நியமான விடயம், என்று நினைத்துக் கொண்டிருக்கும் மேட்டுக்குடியினர், காடு படத்தை பார்க்க வேண்டும். காட்டையும், அதன் வளத்தையும் பாதுகாப்பது கம்யூனிசம் என்றால், காட்டை அழிப்பது முதலாளித்துவம் என்று பொருளாகும். காட்டில் வாழும் மக்களின் போராட்டமும் மண் உரிமைப் போராட்டம் தான்.

காடு படத்தில் வரும் சில வசனங்கள்: 
  • “இந்தக் காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும் உன் பாட்டன், பூட்டன், முப்பாட்டன் வைச்சது.. உன்னோட குடும்பச் சொத்து.. அதை ஒருத்தன் வெட்டுனா அவனை நீ வெட்டு..”
  • “உலகத்தில் சமாதானம் முன் வைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அதிகாரம்தான் ஜெயிச்சிருக்கு.”
  • “உரிமைகளை முழுமையாக பெற ஒரே வழி போராடி பெறுவதுதான். அப்படி பெற்ற உரிமைகள்தான் நீடிச்சு நிலைச்சு நிக்கும்..”

Monday, November 03, 2014

கார்ப்பரேட் ஆதரவு அரசியல் பேசும் கத்தி - சினிமா விமர்சனம்


ஏற்கனவே, "கத்தி ஒரு கம்யூனிச படம்" என்று மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் பயமுறுத்தி இருந்த படியால், "கம்யூனிச தடுப்பு மருந்து" போட்டுக் கொண்டு கத்தி படத்தை பார்த்து முடித்தேன். தொடக்கம் முதல் முடிவு வரை, அந்தப் படத்தில் மருந்துக்குக் கூட கம்யூனிச வாசனை வரவில்லை. ஒரு காட்சியில், கதாநாயகன் "கம்யூனிசம்" என்ற தலைப்பைக் கொண்ட புத்தகம் வைத்திருப்பான். "கம்யூனிசம் என்றால் என்ன அண்ணா?" என்ற கேள்விக்கு, "நம்ம பசி தீர்ந்ததற்கு அப்புறம் சாப்பிடுகிற இட்லி இன்னொருவருடையது...!" என்று பதில் கூறுவான். அந்த "ஒரு வரி விளக்கம்" மிகவும் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. இது கம்யூனிசம் பற்றிய இயக்குனர் முருகதாசின் அறிவுக்கெட்டிய புரிதல் என்று நினைக்கிறேன்.

கொக்கோ கோலா, பல்தேசியக் கம்பனிகளை எதிர்ப்பவர்கள் "கம்யூனிஸ்டுகளாக" இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வது மத்தியதர வர்க்கத்தின் வெகுளித்தனம். அதைத் தான் முருகதாசும் கத்தி படத்தில் காட்சிப் படுத்தி உள்ளார். வசூலில் சாதனை படைக்கும் ஒரு வெற்றிப் படத்தை தர வேண்டும் என்பதற்காக, முருகதாஸ் வித்தியாசமான கதை ஒன்றை தெரிவு செய்துள்ளார். மொத்தத்தில், கத்தி இன்னொரு மசாலா படம் தான். ஆனால், பொதுவாக தமிழ் சினிமாக்கள் தொடாத கதையை தெரிவு செய்திருக்கிறார். தமிழில் இதுவே முதலாவது "கார்ப்பரேட் எதிர்ப்புப் படம்" என்று சொல்ல முடியாது. சூரியா நடித்த மாற்றான் திரைப்படமும், கார்ப்பரேட் கம்பனிகளை வில்லத்தனமாக சித்தரித்த திரைப் படம் தான்.

A. R. முருகதாஸ், சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து, திரைக்கதை எழுதி இருக்கிறார். கேரளாவில் கொக்கோ கோலா கம்பனிக்கு எதிரான பிளாச்சி மாடா மக்களின் போராட்டம், முழு இந்தியாவிலும் மட்டுமல்ல, உலகளவில் பரபரப்பாக பேசப் பட்ட விடயம் ஆகும். ஏற்கனவே ஊடகங்களின் கவனத்தை பெற்றிருந்த மக்கள் போராட்டத்தை, தமிழ் சினிமாவின் வழமையான பாணியான தனி நபர் சாகசங்கள் மூலம் திரிபு படுத்தும் வேலையை தான் முருகதாஸ் செய்திருக்கிறார். இதற்காக, கார்ப்பரேட் கம்பனிகள் அவர் மீது கோபப் படப் போவதில்லை. மாறாக தட்டிக் கொடுத்து பாராட்டி இருப்பார்கள்.

மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் நினைப்பது போல, இந்தக் காலத்தில் கார்பரேட் கம்பனிகளின் அராஜகங்களுக்கு எதிராக பேசுவது கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட சிறு முதலாளிகளும் தான். அது மட்டுமல்லாது, ஜனநாயகத்தை பேண விரும்பும் ஊடகங்கள், சில அரசு சாரா நிறுவனங்கள், இதை விட மிகவும் ஆணித்தரமாக கார்ப்பரேட் எதிர்ப்புக்குரல்களை எழுப்பி வருகின்றன. மேற்கத்திய நாடுகளில், அவற்றின் மூலமாக சாதாரண பொது மக்களுக்கும் கார்ப்பரேட் அராஜகங்கள் பற்றிய தகவல்கள் போய்ச் சேர்ந்துள்ளன.

மேற்கத்திய நாடுகளில், குறைந்தது எழுபது சதவீத பத்திரிகைகள், சஞ்சிகைகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் நடக்கின்றன. அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGO) மேலைத்தேய அரசுகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் நிதி வழங்குகின்றன. இது ஏற்கனவே பலருக்குத் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும், எவ்வாறு அவர்களால் கார்பரேட் எதிர்ப்பு தகவல்களை தெரிவிக்க முடிகின்றது? ஏனென்றால், முதலாளித்துவம் என்பது அதற்கே உரிய சுதந்திரத் தன்மை கொண்டது. அதாவது, தன்னியல்பாக வளரும் பொருளாதார அமைப்பு முறை ஆகும். அதனால் எல்லாவற்றையும் மூடி மறைக்க முடியாது. மேலும், மேற்கத்திய நாட்டு மக்களின் பொது அறிவு முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண அடித்தட்டு மக்களும், பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அடக்குமுறை கொண்டு, நாலாபுறமும் மக்களை அமுக்கினால், ஏதோ ஒரு பக்கத்தால் உடைத்துக் கொண்டு வெளியேறப் பார்ப்பார்கள். அதைத் தான் புரட்சி என்று அழைக்கிறோம். அப்படியான புரட்சிகர சூழ்நிலை கம்யூனிஸ்டுகளுக்கு உகந்ததாக மாறி விடும். அதைத் தடுக்க வேண்டுமானால், மூச்சு விடுவதற்கு ஜன்னலை திறந்து விடுவது அவசியம். அதனால் தான், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.

கார்ப்பரேட்களை எதிர்க்கும் இடதுசாரிகளுக்கும், சுதந்திரத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள். அரசுகள் அவர்களின் கருத்துக்களை அடக்குவதில்லை. கார்ல் மார்க்ஸ் கூறியது போன்று, மக்களை ஒடுக்குபவன் நிம்மதியாக வாழ முடியாது. தன்னால் சுரண்டப் படுபவர்கள், ஒரு நாளைக்கு தன்னைக் கொல்லவும் வருவார்கள் என்று ஒவ்வொரு முதலாளியும் அஞ்சிக் கொண்டிருக்கிறான். அதைத் தடுப்பதற்கான ஒரே வழி, குறைந்த பட்சம் தகவல் சுதந்திரத்திற்கு வழி திறந்து விடுவது தான். அது தான், மேற்குலகில் போற்றப் பட்டுக் கொண்டிருக்கும் கருத்துச் சுதந்திரம் உருவான பின்னணிக் கதை.

கார்பரேட் பணத்தில் கார்பரேட் எதிர்ப்பு கருத்துக் கூறுபவர்கள், மக்களின் கோபாவேசத்தை தணிப்பதற்கும் உதவுவார்கள். அது எப்படி சாத்தியமாகும்? ரொம்ப இலகு. "மக்களே வன்முறையில் இறங்காதீர்கள். அது "பயங்கரவாதமாக" கருதப்படும். கம்யூனிஸ்டுகளை பின்பற்றாதீர்கள். ஏனென்றால், அவர்கள் "கொடுங்கோலர்கள்", ஏற்கனவே "பல இலட்சம் பேரை கொன்று குவித்தவர்கள். நாங்கள் உங்களுக்கு வழி காட்டுகிறோம்... அஹிம்சா வழியில் போராடுங்கள். ஊடகங்களின் கவனத்தை கவரும் நடவடிக்கை எடுங்கள்..."

முன்பெல்லாம் போர்க் குணாம்சம் கொண்ட மக்களிடம், பாராளுமன்ற தேர்தல் முறையில் நம்பிக்கை வைக்குமாறு கூறி வந்தார்கள். "தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை பிடிக்கவில்லை என்றால், வருகிற தேர்தல்களில் எதிர்க் கட்சிக்கு ஓட்டுப் போட்டு வெல்ல வையுங்கள்." என்று அறிவுரை கூறினார்கள். தற்போது பெரும்பாலான மக்கள் பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்து வருகின்றனர். என்ன செய்வது? தந்திரோபாயத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது தான். ஆடுகிற மாட்டை ஆடித் தான் கறக்க வேண்டும். கார்பரேட் நிதியில் இயங்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இடதுசாரி முகமூடி போட்டு மக்களிடம் அனுப்ப வேண்டும். அவை கார்பரேட் எதிர்ப்பு அரசியல் பேசினாலும் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. சர்வதேச மூலதனத்தை யாரும் அந்தளவு இலகுவாக அசைத்து விட முடியாது.

கத்தி திரைப்படத்தின் பின்னால் உள்ள அரசியலும் அது தான். படத்தை மிகக் கவனமாகப் பாருங்கள். பிரச்சினைக்கு தீர்வாக கதாநாயகன் என்ன திட்டம் வைத்திருக்கிறான்? சென்னை நகரத்திற்கு தண்ணீர் செல்லும் குழாய்ப் பாதையை தடுக்கிறார்கள். அது ஒரு அஹிம்சைப் போராட்டம். ஊடகங்களின் கவனத்தை தங்கள் மேல் குவிக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், அது மாதிரியான போராட்டங்களைத் தான் கிறீன் பீஸ் (Green Peace) அமைப்பு கடந்த பல தசாப்தங்களாக செய்து வருகின்றது. அவர்களின் எதிரிகளும் கார்பரேட் நிறுவனங்கள் தான். அவர்களின் அறிக்கைகளை படித்தால், கத்தி திரைப்படம் கூறுவதை விட, பல மடங்கு அதிகமான கார்பரேட் இரகசியங்கள் தெரிய வரும். ஒரு தடவை, "உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குபவர்கள் யார்?" என்று ஷெல் நிறுவன அதிபரிடம் கேட்டார்கள். "எங்கள் நிறுவனத்தைப் பற்றி எல்லா விடயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்கள்." என்று அதற்குப் பதில் சொன்னார்.

ஆனால்... ஆனால்... கிறீன் பீஸ் இயக்கத்தைக் கண்டு, நமது தமிழ் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் யாரும் "ஐயோ கம்யூனிஸ்டுகள்" என்று விழுந்தடித்து ஓடவில்லையே? அது ஏனுங்கோ? மேலை நாட்டவர்கள் என்பதால், உங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் வரவில்லையோ? கிறீன் பீஸ் இயக்க தொண்டர்களில், குறைந்தது அரைவாசிப் பேராவது இடதுசாரி சூழலியவாதிகள். எனக்குத் தெரிந்த வரையில், தீவிர இடதுசாரிகளான அனார்க்கிஸ்டுகள் பலர் அதனை ஆதரிக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்கு சவாலாக விளங்கும், கிறீன் பீஸ் போன்ற அமைப்புகளே தைரியமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் வாழ்கிறோம். கத்தி என்ன பெரிய அரசியல் பேசிக் கிழித்து விடப் போகிறது? கத்தி திரைப் படத்தை விட, அமெரிக்காவில் தயாரிக்கப் பட்ட "சிரியானா"(Syriana) மிகவும் அழுத்தமாக கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியல் கருத்துக்களை பதிவு செய்துள்ளது. மன்னிக்கவும், தயவுசெய்து அதையெல்லாம் "கம்யூனிச படம்" என்று சொல்லி எங்கள் மண்டைகளை காய வைக்காதீர்கள்.

அது சரி, கொக்கோ கோலா, மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பவர்கள், எல்லோரும் கம்யூனிஸ்டுகள் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்? நீங்களாகவே அப்படி நினைத்துக் கொண்டீர்களோ? பல் தேசியக் கம்பனிகளின் வரவால் அழிந்து போன உள்ளூர் கம்பனிகள் எத்தனை? எத்தனை சிறு வணிகர்கள் நஷ்டப் பட்டு வியாபாரத்தை கை விட்டார்கள்? சிறிய அளவில் வியாபாரம் செய்தாலே, தன்னை பெரிய முதலாளியாக நினைத்துக் கொள்ளும் பலர் உண்டு. அவர்களும் தான் பல்தேசியக் கம்பனிகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். விவசாயிகள் மாதிரி அந்த "முதலாளிகளும்" தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கத்தி திரைப்படம் அந்த உண்மையை சொல்லவில்லை.

கத்தி திரைப்படத்தை, லைக்கா கம்பனி தயாரித்தது. அது கோடிக் கணக்கான இலாபம் ஈட்டும் ஒரு "கார்பரேட் நிறுவனம்" என்று சிலர் வாதாடலாம். உண்மையில், லைக்கா கம்பனி, பல்தேசியக் கம்பனிகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாது. ஒரு சராசரி பல்தேசியக் கம்பனியின் வருமானம், இந்தியாவின் மொத்த பொருளாதார உற்பத்தியை விட அதிகமாக இருக்கும். அவர்களால் இந்திய அரசையே தாங்கள் நினைக்கும் படியாக சட்டம் இயற்ற வைக்க முடியும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. உலகவங்கி, IMF, அமெரிக்க அரசு என்பன, கார்பரேட் நிறுவனங்கள் சொல்லிக் கொடுப்பதை செய்யும் சேவையாளர்கள் தான்.

இயக்குனர் முருகதாசுக்கும், கத்தி படத்தை தயாரித்தவர்களுக்கும், கம்யூனிசம் பற்றித் தெரியாது என்பது ஒரு புறமிருக்கட்டும். அவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும் சரியாகத் தெரியவில்லை. அல்லது வேண்டுமென்றே பார்வையாளர்களுக்கு தவறான தகவல்களை கொடுக்கிறார்கள். கத்தி படத்தில் காட்டுவது மாதிரி, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பதில்லை. அந்தக் காட்சி மிகவும் அபத்தமானது.

உலக யதார்த்தம், சினிமாவுக்கு முற்றிலும் முரணானது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் போட்டி, பொறாமை அதிகம். ஒன்றையொன்று காட்டிக் கொடுப்பது, போட்டுக் கொடுப்பது, எதிராளிகளை போட்டுத் தள்ளுவது.... இப்படி நிறைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன. சுருக்கமாக சொன்னால், சட்டவிரோத மாபியாக் குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதல்கள், கார்ப்பரேட் உலகில் இரகசியமாக நடக்கின்றன. சின்ன மீன்களை பெரிய மீன்கள் பிடித்து சாப்பிடும். ஒன்றின் அழிவில் மற்றொன்று வாழும். வலியது பிழைக்கும், மற்றவை அழிந்து போகும். அது தான் முதலாளித்துவத்தின் இயற்கை நியதி.

"தாயும், பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு." அந்தப் பழமொழி, வர்த்தக உலகின் நிதர்சனம். அண்மையில், பிரிட்டிஷ் உளவுத்துறையின் தொழில்நுட்பப் பிரிவு, பெல்ஜியத்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனத்தை உளவு பார்த்தமை கண்டுபிடிக்கப் பட்டது. தொழில் நுட்ப இரகசியங்களை திருடுவது என்று சொல்வார்கள். இன்று இணையம் மூலமாக இலகுவாக நடக்கும் சமாச்சாரமாகி விட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

உலகில் மிக அதிகமான பல்தேசியக் கம்பனிகளின் தலைமை அலுவலகங்கள், அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் உள்ளன. அதன் அர்த்தம், மேற்கத்திய நாடுகள் "அண்ணன், தம்பி மாதிரி" ஒற்றுமையாக, நம்பிக்கைக்கு உரியவர்களாக நடக்கிறார்கள் என்பதல்ல. திரை மறைவில் எத்தனையோ கழுத்தறுப்புகள், குழி பறிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும், சொந்த இனத்தவரின் கார்ப்பரேட் நிறுவனங்களை, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் விழுங்கி ஏப்பம் விடுவதைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை விட, 2008 ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியில் காணாமல் போன கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தனை?

நல்ல வேளையாக, உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் அரசு என்ற நிறுவனம் பெயருக்காவது இயங்கிக் கொண்டிருக்கிறது. அது சும்மா தேசியம், தேசியக் கொடி, தேசிய இராணுவம், தேசிய விலங்கு என்றெல்லாம் பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. பல்தேசியக் கம்பனிகள் அவற்றை உள்ளூர வெறுத்தாலும், சட்டத்திற்கு அடி பணிந்து நடப்பது போன்று காட்டிக் கொள்கின்றன. இல்லாவிட்டால், ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென தனியாக இராணுவம் வைத்துக் கொண்டு ஆட்சி செய்யத் தொடங்கி விடும். ஜூராசிக் பார்க் மாதிரி, ஒன்றையொன்று பிடித்து விழுங்கி விடும். பூரண சுதந்திரம் கொண்ட சந்தை அமைப்பும், சுதந்திரமான முதலாளித்துவமும் உலகில் இருக்க முடியாது.


இது தொடர்பான முன்னைய பதிவு:
கத்தி சினிமாவின் "இட்லி கம்யூனிசம்!" - ஒரு கார்பரேட் கனவுப் புரட்சி!!

Saturday, November 01, 2014

கத்தி சினிமாவின் "இட்லி கம்யூனிசம்!" - ஒரு கார்பரேட் கனவுப் புரட்சி!!


"கத்தி கம்யூனிசப் படமா?" என்று, மீண்டும் வர்க்க வெறுப்புடன் சிலர் பேசி வருகின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அநீதியை தட்டிக் கேட்கும் கதாநாயகனின் தனி நபர் சாகசப் படங்கள் எல்லாம் "கம்யூனிசப்" படங்கள் தான். 

சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிரான, உழைக்கும் மக்களின் கோபாவேச உணர்வுகளை கட்டுப்படுத்துவதே, இது போன்ற தனி நபர் சாகச திரைப் படங்களை தயாரிப்பதன் நோக்கம். சினிமாவில் தமிழீழம் கிடைக்கும் என்று நம்பும் காலத்தில் இது ஒன்றும் புதினம் அல்ல.

கத்தி முருகதாசின் முன்னைய படமான ஏழாம் அறிவு, ஒரு "தமிழ் தேசியப் படம்". டி.எஸ்.சேனநாயக்க காலம் தொடங்கி மகிந்த வரைக்கும், இலங்கைத் தமிழ் தேசியவாதிகள் கூடிக் குலாவி அமைச்சர்களாக இருந்து இருக்கிறார்கள். ஜி.ஜி. பொன்னம்பலம் தொடக்கம் டக்லஸ், கருணா வரையில் பல தமிழ் தேசியவாதிகள் அரசுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. அது ஏனுங்கோ? என்ன இருந்தாலும், தமிழ் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான காழ்ப்புணர்ச்சி, எளிதில் விட்டுப் போகுமா?

கத்தி திரைப்படம் மூலம் பிரபலமான "இட்லி கம்யூனிசம்", எனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகின்றது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, எனது வீட்டிருக்கு அருகில் இருந்த அகதி முகாம் ஒன்றுக்கு அடிக்கடி சென்று வந்தேன். அந்த முகாமில் பல ஈழத் தமிழ் அகதிகள் தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அப்போது எனக்கு இந்தியாவில் இருந்து அஞ்சலில் வந்து கொண்டிருந்த, "புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம்" போன்ற சஞ்சிகைகளை கொண்டு சென்று வாசிக்கக் கொடுப்பது வழக்கம்.

ஒரு தடவை, இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட வயதுடைய இளைஞன், அந்த முகாமிற்கு மாற்றலாகி வந்திருந்தான். அவன் முன்பு ஒரு காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கப் போராளியாக இருந்தவன். பல யுத்த களங்களில் போராடி இருக்கிறான்.

வறுமையான குடும்பப் பின்னணியை கொண்ட போராளி என்ற காரணத்தால், பொதுவாக இடதுசாரிக் கருத்துக்கள் மீது கவர்ச்சி இருந்தது. ஆனால், எதையும் சரியாக அறிந்து வைத்திருக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. (இப்படி நிறைய புலிப் போராளிகளை சந்தித்திருக்கிறேன்.)

அந்த புதிய வாலிபனும், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களை ஆர்வமாக வாங்கி வாசித்து வந்தான். தான் வன்னியில் போராளியாக இருந்த காலத்தில், முகாம்களில் அந்த சஞ்சிகைகளை பார்த்ததாக கூறினான். தமிழ்நாட்டில் சில நக்சலைட் இயக்கங்களும், ஈழப் போராட்டத்தை ஆதரிப்பதால், புலிகள் இயக்கத் தலைமை, அந்த சஞ்சிகைகளை முகாம்களில் வாழ்ந்த போராளிகளும் வாசிக்க அனுமதித்ததாக தெரிவித்தான்.

சில வாரங்களுக்குப் பின்னர், மீண்டும் அந்த முன்னாள் போராளி இளைஞனை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவன் என்னிடம் கேட்டான்: - "அண்ணே, நீங்க கம்யூனிஸ்டா?"

- "இருக்கலாம்.... உங்களைப் பொறுத்த வரையில், கம்யூனிசம் என்றால் அர்த்தம் என்ன?" என்று ஒரு விவாதத்தை தொடங்கும் ஆர்வத்துடன் நான் கேட்டேன். 

அதற்கு அந்த இளைஞன் கூறிய பதில் என்னை தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பதில் இது தான்: 
- "பிச்சை எடுப்பதென்றாலும், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டும்...!" 
- "கம்யூனிச சமுதாயத்தில் பணக்காரர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதன் அர்த்தம் மற்றைய மக்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள் என்பதல்ல. அவர்கள் உழைப்பாளிகள். கம்யூனிசம் என்றால் எல்லோரும் ஒன்றாக பிச்சை எடுப்பதல்ல. எல்லோரும் ஒன்றாக சேர்ந்து உழைத்து முன்னேறுவது." என்று சொன்னேன்.

வன்னியில் வாழ்ந்த காலத்தில், தனக்கு இப்படி யாரும் தெளிவாக விளக்கவில்லை என்று, மேலும் அறியும் ஆர்வத்துடன் கூறினான்.

இப்படித் தான், விஜய்-முருகதாஸ் சினிமாக்காரர்களின் "இட்லி கம்யூனிசம்", மக்கள் மனதில் தவறான புரிதல்களை உண்டாக்கி வருகின்றது.

Saturday, September 13, 2014

சினிமா, காசு, பணம், துட்டு... இது தான் போலித் தமிழ் இன உணர்வு!


பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர், மணிரத்தினம் இயக்கிய "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படம் வெளியாகியது. அது, இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டிருந்த காலத்தில், புலிகளின் போராட்டத்தை மையப் படுத்தி எடுக்கப் பட்ட படமாகும். அதனை இயக்கிய மணிரத்தினம் ஓர் இந்திய தேசியவாதி, இந்திய அரச ஆதரவாளர் என்பது இரகசியம் அல்ல. கன்னத்தில் முத்தமிட்டால் படமும் ஓர் அப்பட்டமான புலி எதிர்ப்புப் படம் ஆகும். அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் வருவது போன்றே, ஈழப் போரின் இறுதி யுத்தமும் அமைந்தது ஒரு தற்செயலாக இருக்கலாம்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் வெளியான நேரம், அதனை எல்லாத் தமிழர்களும் பார்க்க வேண்டும் என்று, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் கூட கூறி வந்தனர். கனடாவில், டொரோண்டோ திரைப்பட விழாவில் காட்டப் பட்ட பொழுது, "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப் படும் டொரோண்டோ மாநகரில் இருந்து எந்த எதிர்ப்புக் குரலும் எழவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம், கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள திரையரங்குகளில் "ஹவுஸ் புல்" காட்சிகளாக காண்பிக்கப் பட்டது. அதன் வீடியோ டிவிடிக்கள் அமோகமாக விற்பனையாகியது. ஐரோப்பா, கனடாவில் கன்னத்தை முத்தமிட்டால் படத்தை விநியோகம் செய்தவர்கள், விற்றவர்கள், அனேகமாக புலி ஆதரவாளர்கள் தான். இது குறித்து எந்தவொரு போலித் தமிழ் இன உணர்வாளரும் விமர்சிக்கவில்லை. எந்தவொரு "மாற்றுக்"கருத்தாளரும் எதிர்ப்புக் காட்டவில்லை. ஏனென்றால், நாய் விற்ற காசு குரைக்காது என்பது போல புலி விற்ற காசும் கடிக்காது.

தமிழ் சினிமா என்பது, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்த நாடுகளிலும் வணிக ரீதியாக அதிக இலாபம் தரும் தொழிற் துறையாக கருதப் படுகின்றது. கடந்த இருபதாண்டு காலமாக, தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாயகர்களின் புதுப் படம், அதே காலத்தில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திரையிடப் படும். அவை எல்லாம் வணிகப் படங்கள் தான்.

தமிழகத்தில் வெளியான ஒரு சில நல்ல தரமான படங்களை, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் திரையரங்குகளில் கண்டு களிக்க முடியாது. எத்தனை வருடம் காத்திருந்தாலும், அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால், எந்தவொரு விநியோகஸ்தருக்கும் அதிலே அக்கறை கிடையாது. என்ன செய்வது? தரமான தமிழ்ப் படங்களை, டிவிடியில் அல்லது இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

மேற்கத்திய நாடுகளில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் பலர் ஈழத் தமிழர்கள் தான். அவர்கள் யாரும் அந்த நல்ல படங்களின் பெயர்களைக் கூட கேள்விப் பட்டிருக்கவில்லை என்பது கவலைக்குரியது. மேற்கத்திய நாடுகளில், தமிழகப் படங்களை காசு கொடுத்து பார்க்கும் இரசிகர்களில் பெரும்பான்மையானவர்களும் ஈழத் தமிழர்கள் தான்.

ஒரு தசாப்த காலமாகவே, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் செல்வந்தர்கள் பலர், தமிழ்ப் படத் தயாரிப்புகளில் முதலிட்டு வருகின்றனர். அவை எல்லாம் வணிகப் படங்கள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. அந்த முதலீட்டாளர்கள் எவராவது, ஈழத் தமிழரின் அவலத்தை தத்ரூபமாக எடுத்துக் காட்டும் கலைப் படம் ஒன்றில் முதலிட்டிருக்க முடியும். ஆனால், செய்யவில்லை. அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான தமிழர்களால், ஒரு காலத்தில் "அடுத்த தேசியத் தலைவர்" ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்ட சீமான் ஒரு பிரபலமான சினிமா இயக்குனர். அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர், தமிழ் தேசிய அரசியலை மிகச் சரியாக சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. சீமான் அப்படிச் செய்ய வேண்டும் என்று, "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கவுமில்லை.

ஒரு சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகமில்லாதவராக இருக்கலாம். ஆனால், ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும், புலி ஆதரவு அரசியலை ஏற்றுக் கொண்ட பலருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். புலி ஆதரவு ஊடகங்களில் அவரது திரைப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் எழுதப் பட்டதும் ஒரு காரணம்.

பிரசன்ன விதானகே சிங்களத் திரைப்படங்களை மட்டும் தயாரிக்கும் ஒரு சிங்கள இயக்குனர் என்பதால், சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் ஒரு திரைப் படத்தை தயாரிப்பார். அந்த உண்மையை புலிகளும் புரிந்து கொண்டிருந்தனர். அதனால், அவரிடம் இருந்து அதிகமாக எதையும் எதிர்பார்க்கவில்லை.

பிரசன்ன விதானகேயின் திரைப்படம் தமிழ்நாட்டில் காட்டப் பட்ட உடனே, போலித் தமிழ் தேசியர்கள் பலருக்கு திடீர் தமிழ் இன உணர்வு பொங்கி எழுந்தது. பிரசன்ன விதானகே இப்படித் தான் படம் எடுக்க வேண்டும் என்று, ஆளாளுக்கு அறிவுரை சொல்லத் தொடங்கி விட்டனர். இது, "ஒருவர் தனது அரசியல் கருத்துக்களை இன்னொருவரின் தலைக்குள் திணித்து, தன்னை மாதிரியே பேச வேண்டும் எனும் எதிர்பார்ப்பு" ஆகும். அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவர்கள் சொல்வது போல யாருமே படம் எடுக்க முடியாது. குறிப்பாக சிங்களப் பிரதேசங்களில் அப்படி ஒரு படம் ஓட முடியாது.

சிறிலங்கா அரசு உடனே அதனை "புலி ஆதரவு படம்" என்று கூறி முத்திரை குத்தி தடை செய்து விடும். சுதந்திரமாக ஓட விட்டாலும், அது சிங்கள சினிமா இரசிகர்களினால் ஏற்றுக் கொள்ளப் படும் என்று கூற முடியாது. குறிப்பாக, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிப்பதும், தமிழீழம் என்ற தனிநாடு பிரிவதை ஆதரிப்பதும், பெரும்பான்மை சிங்கள மக்களினால் இன்றைக்கும் நிராகரிக்கப் பட்டு வரும் கருத்துக்களாக உள்ளன. ஆகவே, அப்படி எந்த எண்ணமும் தோன்றாதவாறு திரைப் படம் தயாரிக்க வேண்டும். முடியுமா? இது கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது.

தமிழ் நாட்டில் நிறைய "தீவிரவாதிகள்" பற்றிய சினிமாக்கள் வெளியாகி உள்ளன. இன்று வரையில், ஏதாவது ஒரு திரைப் படத்திலாவது, "தீவிரவாதிகள்" பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப் படவில்லை. அவர்களது அரசியல் அபிலாஷைகள் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளது. அந்த சமூகத்தின் அரசியல் கோரிக்கைகள் கூட தெரிவிக்கப் படுவதில்லை. விஜயகாந்த், அர்ஜுனின் படங்கள் மட்டுமல்லாது, மணிரத்தினத்தின் ரோஜா, கமலின் விஸ்வரூபம் ஆகியன அரசுக்கு சார்பான பிரச்சாரப் படங்களாகவே வெளிவந்தன.

அரச படைகள் புரிந்த போர்க்குற்றங்களை மறைத்து, விடுதலைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து வந்தன. அந்த திரைப்படங்கள் வெளியான நேரம், இலட்சக் கணக்கான தமிழ் இரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். போலித் தமிழ் இன உணர்வாளர் யாரும், அந்தத் திரைப்படங்கள் வெளியான நேரம் கண்டனம் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல, அவர்களின் நண்பர்கள், உலகம் முழுவதும் அந்தத் திரைப்படங்களை விநியோகித்த போதிலும், ஒரு தடவையேனும் எதிர்ப்புக் காட்டவில்லை.

சினிமா என்பது பல கோடி பணம் புரளும் இலாபகரமான வியாபாரம். அதிலே போட்டி பொறாமைகளும் அதிகம். தமிழ்நாட்டில் தயாரிக்கப் படும் சினிமாக்கள் இலங்கையில் காண்பிக்கப் படும் அளவிற்கு, இலங்கையில் தயாரிக்கப் பட்ட சினிமா எதுவும் தமிழ்நாட்டில் ஓடவில்லை. ஈழத்துக் கலைஞர்கள் எந்தளவு திறமையானவர்களாக இருந்தாலும், தமிழ்நாட்டில் மதிக்கப் படுவதில்லை. இது போன்ற ஏராளமான குறைகள் ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்களில் வசதி படைத்த பிரிவினர், ஈழத்தில் வாழும் கலைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து திரைப் படம் தயாரிக்க முன்வரவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டுமே துணிந்து களத்தில் இறங்கினார்கள்.

பெரும்பாலான புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் முதலீட்டாளர்கள், திரும்பத் திரும்ப தமிழ் நாட்டில் தயாராகும் வணிகப் படங்களில் மட்டுமே முதலிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் பணம், பணம், பணம் மட்டுமே. தமிழக சினிமாத் தொழிற் துறையினுள் நடக்கும் வர்த்தகப் போட்டிகள், பொறாமைகள், காட்டிக் கொடுப்புகள், கவிழ்ப்புகள், சுத்துமாத்துகளை மறைப்பதற்காக, பலர் "தமிழ் தேசிய" அரசியல் பேசுகின்றார்கள். இது வணிகம் சார்ந்த அரசியல். தமிழ் இனத்தின் நலன்களை விட, தமது வணிக நலன்களே தமிழ் முதலாளிகளுக்கு முக்கியமானவை. போலித் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பல "மாற்றுக்" கருத்தாளர்களுக்கும் இந்த உண்மை தெரியும். சமூகத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் அப்படித் தான் வாழ வேண்டும்.

ஒரு திரைப்படம் தயாரித்து தமிழீழப் புரட்சியை உண்டு பண்ணி விடலாம் என்ற நம்பிக்கை யாரிடமும் கிடையாது. பெரும்பாலான தமிழ் இரசிகர்களும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பார்த்து இரசிக்கிறார்கள். சினிமாவில் இருந்து வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ளும் எண்ணமும் அவர்களிடம் கிடையாது. பிறகு எதற்காக, சில குறிப்பிட்ட சினிமாப் படங்களைப் பற்றி மயிர் பிளக்கும் விவாதம் நடத்துகிறார்கள்?

வேறொன்றுமில்லை. "இது நம்ம ஏரியா, இதற்குள் நுளையாதே!" என்பதை கொஞ்சம் "நாகரிகமாக" எடுத்துக் கூறுகிறார்கள். பல தசாப்தங்களாக, சினிமாத் தொழிற் துறை, தமிழ்நாட்டு மாநிலத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தருகின்றது. பலருக்கு அதனால் ஆதாயம் கிடைப்பது புரிந்து கொள்ளத் தக்கது. வலதுசாரி தமிழ் தேசியவாதத்திற்கும், தமிழ் முதலாளியத்திற்கும் இடையிலான உறவு அந்த இடத்தில் மிகவும் இறுக்கமாக உள்ளது. அந்த உறவு தான், இன்று சமூகத்தில் பரப்பப் படும் பல அரசியல் கருத்துக்களின் ஊற்றுக்கண்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்
2. உழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசியம் போலியானது
3.அவர்கள் முள்ளிவாய்க்காலுக்காக அழவில்லை, இஸ்ரேலுக்காக அழுகிறார்கள்!

Wednesday, September 25, 2013

மெட்ராஸ் கபே : இந்திய பிராந்திய நலன்களின் விஸ்வரூபம்

ரோஜா படத்தில் காஷ்மீர் போராளிகளை வில்லன்களாக சித்தரித்தார்கள். விஸ்வரூபம் படத்தில் இந்தியர்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாத தாலிபான் போராளிகள் வில்லன்களாக காட்டப் பட்டார்கள். அந்த அரசியல் பிரச்சாரப் படங்களை பார்த்துப் பாராட்டிய தமிழர்கள், மெட்ராஸ் கபே படம் வந்த பின்னர் தான் விழித்துக் கொண்டார்கள். ரோஜா, விஸ்வரூபம், மெட்ராஸ் கபே ஆகிய மூன்று படங்களும், இந்திய மத்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு அமைய எடுக்கப் பட்டவை.


மேற்குறிப்பிட்ட சினிமாப் படங்களை தயாரித்தவர்கள், காஷ்மீர் போராளிகள், தாலிபான்கள், புலிகள் ஆகிய இயக்கங்களை வேறு படுத்திப் பார்க்கத் தெரியாதவர்கள். மணிரத்தினம்(ரோஜா), கமலஹாசன்(விஸ்வரூபம்), ஷூஜித் சிர்கார் (மெட்ராஸ் கபே) ஆகிய தயாரிப்பாளர்கள், இந்திய மத்திய அரசின் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளை அனுசரித்து தான் தமது திரைப்படங்களை தயாரித்துள்ளனர். அதனைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்கு மாத்திரம் எதிர்ப்புக் காட்டுவதன் மூலம், இந்திய அரசின் வெளிவிவகார கொள்கையில் மயிரளவு மாற்றத்தை கூட உண்டாக்க முடியாது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் வெளியான பொழுதே, அது விடுதலைப் புலிகளையும் கொச்சைப் படுத்துகின்றது என்று எழுதினேன். (விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்; http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_16.html) அப்போது அதனை அலட்சியப் படுத்திய தமிழ் இன உணர்வாளர்கள், மெட்ராஸ் கபே வெளியான பின்னராவது புரிந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. அதுவே இந்திய மத்திய அரசின் பலமாகும். நமது தமிழ் இன உணர்வாளர்கள் போன்ற, சிறுபான்மையின அரசியல் ஆர்வலர்களின் அலட்சிய மனோபாவமே, மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களை தயாரிக்க ஊக்குவிக்கின்றது.

மெட்ராஸ் கபே படத்தை பற்றி, இதுவரையில் நிறைய விமர்சனங்கள் வந்து விட்டன. ஆனால், அந்த விமர்சனங்களில் எல்லாம், படத்தின் கதைக்கருவின் ஒரு பகுதி (வேண்டுமென்றே) இருட்டடிப்பு செய்யப் படுகின்றது. மெட்ராஸ் கபேக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும், ஏற்கனவே படத்தை பார்த்து விட்ட தமிழ் தேசிய இன உணர்வாளர்களும் கூட, அதைப் பற்றிக் குறிப்பிடாமல் கடந்து செல்கின்றனர். அவர்களது வழமையான மேலைத்தேய விசுவாசம், வாயையும், கையையும் கட்டிப் போட்டிருக்கலாம்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம், யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவப் பிரசன்னம், புலிகளின் போர், ராஜீவ் காந்தியின் கொலை, போன்ற சரித்திர சம்பவங்களை வைத்து திரைக்கதை புனையப் பட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை, இன்றைய தலைமுறையினருக்கு கூற வேண்டிய தேவை என்ன? அதுவும், புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப் பட்ட பின்பு, அது தொடர்பான அச்சம் அகன்ற பின்னர், இதைப் போன்ற படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

மெட்ராஸ் கபே, "புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கெட்டவர்களாக காண்பிக்கின்றது" என்பது, புலி ஆதரவாளர்களின் வாதம். அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. ஆனால், அது மட்டுமே திரைக்கதையின் மையக் கரு அல்ல. தமிழில் அர்ஜுன், விஜயகாந்த் நடித்த "தேசபக்தி படங்களில்" காஷ்மீர் அல்லது இஸ்லாமியவாத தீவிரவாதிகளை கொடூரமானவர்களாக சித்தரிப்பதைப் போன்றது தான் இதுவும். வட இந்தியர்களைப் பொறுத்தவரையில், மெட்ராஸ் கபே "தேசபக்தி படங்கள்" எனும் வகையறாவை சேர்ந்தது. தமிழர்களுக்கு காஷ்மீர் போராட்டத்தின் நியாயத்தன்மை எதுவும் தெரியாதது போன்று, வட இந்தியர்களுக்கும் (ஈழத்) தமிழரின் போராட்டத்தின் நியாயம் குறித்து அக்கறை கிடையாது.

படத்தின் தொடக்கத்திலேயே, சில ஆயுதமேந்திய இளைஞர்கள் பேரூந்து வண்டி ஒன்றை மறித்து, (தமிழர்களை பிரித்தெடுத்து விட்டு) அதில் வந்த சிங்களப் பயணிகளை சுட்டுக் கொல்கின்றனர். புலிகளைப் பற்றிய எதிர்மறையான சித்திரம் ஒன்றை பார்வையாளர் மனதில் பதிய வைக்கும் உத்தி இது. "புலிகள் ஒருபோதும் சிங்களப் பொதுமக்களை கொல்லவில்லையா?" என்று படத் தயாரிப்பாளர்கள் கேட்கலாம்.  (தமிழினவாதிகளைப் பொறுத்தவரையில், சிங்களப் பொதுமக்கள் மீதான தாக்குதல் என்பது ஒரு நியாயமான எதிர்வினை.) ஆனால், படம் முழுக்க வரும் இந்திய இராணுவமும், ஓரிரு காட்சிகளில் மட்டும் தலைகாட்டும் ஸ்ரீலங்கா படையினரும், "சாதாரண பொதுமகனுக்கு எந்தவொரு தீங்கும் இளைக்காதவர்கள் " போன்று காட்டுவது தான், மெட்ராஸ் கபேயின் பக்கச்சார்புத் தன்மையை வெளிப்படுத்துகின்றது. 

ஈழப்போர் வரலாற்றில் நடந்த உண்மைக் கதைகள் பல திரைப்படத்தில் கூறப் பட்டுள்ளன. சில பெயர்களை மட்டும் மாற்றி இருக்கிறார்கள். புலிகளைக் குறிக்கும் எல்.டி.டி.ஈ.(LTTE) என்பதை, எல்.டி.எப். (LTF) என்று மாற்றி இருக்கிறார்கள். அது போன்று பிரபாகரன் என்பதை பாஸ்கரன் என்று மாற்றினாலும், இந்தப் பெயர்கள் யாரைக் குறிப்பிடுகின்றன என்பதை புரிந்து கொள்வது பார்வையாளர்களுக்கு கடினமானதல்ல. 

"இந்திய உளவுப் பிரிவான RAW, இன்னும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், ராஜீவ் காந்தி கொலையை தவிர்த்திருக்கலாம்" என்ற கோணத்தில் இருந்து கதை சொல்லப் படுகின்றது. படம் முழுக்க முழுக்க இந்திய அரசின் பிராந்திய நலன் சார்ந்து எடுக்கப் பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. "இந்திய இராணுவம், ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க இலங்கை சென்றதாகவும், புலிகள் அதனை குழப்பியதாகவும்" காட்டப் படுகின்றது. இது ஏற்கனவே பல தடவைகள் கேட்டுக் கேட்டு புளித்துப் போன இந்திய அரசின் பிரச்சாரம் தான். 

ஈழப்போர் தொடங்கிய 1983, 1984 காலப்பகுதியில், இந்தியா தனது படைகளை அனுப்பி பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை, ஈழத் தமிழர்களிடம் இருந்தது உண்மை தான். இன்றைக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் போன்றவர்கள் மத்தியில் இன்னமும் இந்தியா மீதான நம்பிக்கை போகவில்லை. ஆனால், முப்பது வருட காலத்திற்குள் பல திருப்புமுனைகள் ஏற்பட்ட பின்னரும், ஈழத் தமிழர்கள் இன்னமும் எண்பதுகளில் வாழ்வதாக நினைத்துக் கொள்வது தான் அபத்தமானது. அது தான் மெட்ராஸ் கபே திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை. 


வட இலங்கையில், யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் தொடங்கும் கதை, ராஜீவ் காந்தி கொலையுடன் முடிவடைகின்றது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட பின்னர், புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பதாக போக்கு காட்டி விட்டு, இந்திய இராணுவத்துடன் யுத்தம் ஒன்றை ஆரம்பித்தனர். அப்போது இரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப் படும் RAW அதிகாரி விக்ரம் (John Abraham) தான் படத்தின் கதாநாயகன். 

விக்ரமுக்கு கிடைத்த பணிகள் மிகவும் கடினமானவை. அந்த RAW அதிகாரி யாழ்ப்பாணம் சென்ற நோக்கம் நிறைவேறி இருந்தால், ராஜீவ் கொலை நடந்திருக்காது என்பது மெட்ராஸ் கபே முன்வைக்கும் வாதம். அது சரி, RAW நிறைவேற்ற விரும்பிய இரகசிய (சதித்) திட்டம் என்ன? 

  1. LTF தலைவர் பாஸ்கரனை ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. அவர் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு முரட்டுப் பிடிவாதத்துடன் போரை நடத்துகின்றார். அதனால், LTF க்கு போட்டியாக உள்ள ஸ்ரீ (வரதராஜப் பெருமாள்?) குழுவை பலப் படுத்த வேண்டும். அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்கள் கொடுத்து புலிகளுடன் மோத விட வேண்டும்.
  2. LTF இயக்கத்தின் உள்ளே பிரிவினையை உண்டாக்க வேண்டும். இந்தியாவுக்கு விசுவாசமான இரண்டாம் மட்டத் தலைவரான மல்லையா (மாத்தையா?) தலைமைப் பொறுப்பை ஏற்றால், அந்த இயக்கத்தை வழிக்கு கொண்டு வருவது இலகு. 


மேற்குறிப்பிட்ட இரண்டும், ஏற்கனவே RAW வினால் நிறைவேற்றப் பட்டு தோல்வியுற்ற சதித் திட்டங்கள் ஆகும். அனால், அது குறித்த சுய விமர்சனம் எதையும் முன்வைக்காமல், "மேற்குலகின் ஊடுருவல், எதிரிக்கு தகவல் கொடுக்கும் RAW உளவாளி" என்று கதை வேறு திசையில் தாவுகின்றது. புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் கூட, ENDLF, EPRLF போன்ற இயக்கங்கள் ஆயுதங்களை வைத்திருந்தன. அந்த துணைப் படையினர், தமிழக அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருந்தனர். இந்திய இராணுவத்துடன் கூட்டி வரப் பட்டனர். ஆகவே, புலிகள் யுத்தத்தை தொடங்கிய பின்னர் தான், இந்தியா எதிர்க் குழுக்களுக்கு ஆயுதம் வழங்க முன்வந்தது என்பது ஒரு வரலாற்றுத் திரிப்பாகும்.

இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிரான தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதங்களையும், பாதுகாப்பையும் வழங்கி இருந்தது. அப்படி இருந்தும் புலிகளை அழிக்க முடியாமல் போனது. புலிகளின் புதிய நண்பர்களான, பிரேமதாச அரசு, மற்றும் மேற்குலகின் தொடர்பு மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவை எல்லாவற்றையும் விட, புலிகளுக்கு இருந்த தமிழ் மக்களின் ஆதரவு, மற்ற இயக்கங்களுக்கு இருக்கவில்லை என்பதும் உண்மை தான். அந்தக் குறையை நிவர்த்தி செய்யாமல், ஆயுதங்களை மட்டும் கொடுத்து விட்டு, இந்தியாவின் நலன்களை காப்பாற்றி இருக்க முடியுமா?

இதுவரை காலமும், வதந்தி வடிவில் பேசப்பட்ட  மாத்தையா பற்றிய கதைகளை, மெட்ராஸ் கபே உண்மை என்று நிரூபித்துள்ளது. பிரபாகரனும், மாத்தையாவும் வன்னிக் காடுகளுக்குள் இரண்டு படையணிகளுடன் மறைந்திருந்தனர். இந்தியப் படையினரின் சுற்றிவளைப்புகளால் இரண்டு தலைவர்கள் மத்தியில் தொடர்பில்லாமல் இருந்தது. இந்திய இராணுவத்தின் மிகப் பெரிய படை நடவடிக்கை ஒன்றில், பிரபாகரன் கொல்லப் பட்டதாக அன்று நம்பப் பட்டது. அந்தத் தகவலுடன், மாத்தையா தலைவரான தகவலும் இந்திய அரசினால் பரப்பப் பட்டது. அது வெறும் வதந்தி என்று சொல்வதை விட, தோல்வியடைந்த சதித் திட்டத்தின் பெறுபேறு என்று கூறுவதே தகும். மெட்ராஸ் கபே படமும் அதனை உறுதிப் படுத்துகின்றது.

இதுவரை காலமும் பேசப் படாத முக்கியமான உண்மை ஒன்று, மெட்ராஸ் கபே படத்தில் வலியுறுத்திக் கூறப் படுகின்றது. மெட்ராஸ் கபே திரைப்படம் அழுத்திக் கூறும் செய்தி இது தான்: "இலங்கை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்திற்கு உட்பட்ட நாடு. ஈழப்போரை முடிவுக்கு கொண்டு வரவும், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் கொடுக்கவும் இந்தியாவால் முடிந்திருக்கும்..... ஆனால்...ஆனால்... மேற்கத்திய நாடுகள் அதனை விரும்பவில்லை." இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடர வேண்டும் என்று அவை விரும்பின. இலங்கையில் போர் நடந்தால் ஆயுத விற்பனை அதிகரிக்கும். அதனால் சிங்கப்பூரில் உள்ள முகவர் ஒருவர் (KP?) மூலம், மேற்கத்திய நாடொன்று புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகின்றது.

ராஜீவ் காந்தி போரை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார். அதனால் அவரின் கதையை முடித்து விட வேண்டும் என்று தீர்மானிக்கப் படுகின்றது. ராஜீவை கொலை செய்வதற்கான சதித் திட்டம், மேற்கத்திய நாடொன்றினால் தீட்டப் படுகின்றது. ராஜீவ் இலங்கையில் சமாதானத்தை கொண்டு வந்து விட்டால் (?), சர்வதேச ஆயுத விற்பனை படுத்து விடும் என்ற அச்சம் காரணம். பல மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், பன்னாட்டு ஆயுத நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு இரகசியமானதல்ல. 


ராஜீவை கொலை செய்யும் சதித் திட்டத்திற்காக, பெருமளவு பணம் கைமாறுகின்றது. (ஏற்கனவே CIA உளவாளியாக அறியப்பட்ட) RAW மேலதிகாரி ஒருவர், அந்த சதிக்கு உடந்தை ஆகிறார். மேலைத்தேய உளவு நிறுவனம் ஒன்று, அந்த அதிகாரியை பெண் தொடர்பு ஒன்றின் மூலம் சிக்க வைத்து, தனது காரியங்களை சாதித்துக் கொள்கின்றது. மெட்ராஸ் கபே பற்றிய விமர்சனம் எழுதிய தமிழினவாதிகள் சிலர், இந்தப் படத்தில் "மலையாளிகளை நல்லவர்களாகவும், தமிழர்களை கெட்டவர்களாகவும்" காட்டி இருப்பதாக எழுதியுள்ளனர். அது ஒரு தவறான கருத்து. 

உதாரணத்திற்கு, பாலகிருஷ்ணன் என்ற RAW மேலதிகாரி, படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரம் ஆவார். அவரை ஒரு மலையாளியாகத் தான் காட்டுகின்றனர். திரைப்படத்தில், "பாலா என்ற மலையாளி" புலிகளின் நெருக்கமான நண்பராக காட்டப் படுகின்றார். ஸ்ரீ குழுவிற்கு ஆயுத விநியோகம் செய்யப் படும் தகவலை கசிய விடுகின்றார். கடற்கரையில் வந்திறங்கும் வெளிநாட்டு ஆயுதங்கள், புலிகள் கையில் போய்ச் சேர்வதற்கு உதவுகிறார். தனது வழியில் குறுக்கே வரும் கதாநாயகனை கடத்திச் செல்லுமாறு புலிகளுக்கு காட்டிக் கொடுக்கிறார். கதாநாயகனின் மனைவி கொலை செய்யப்படுவதற்கும் காரணமாகின்றார். இறுதியில் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் சதித் திட்டம் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை அழிக்கிறார்.   

ராஜீவ் கொலை போன்ற அரசியல் படுகொலைகளை நிறைவேற்றுவதற்காக, உலகில் எங்கோ ஒரு மூலையில் திடீரென முளைக்கும் வங்கி ஒன்று, அதன் தேவை முடிந்ததும் கலைக்கப் படுகின்றது. அதனால், சதியில் சம்பந்தப் பட்ட நபர்கள், பணப் பரிமாற்றம் சம்பந்தமான தகவல்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற சம்பவம் ஒன்றுக்காகவே, புலிகளின் ஆயுத முகவர் கேபி யை தன்னிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது. மேலும், ராஜீவ் காந்தி கொலையில், இஸ்ரேலிய மொசாட் சம்பந்தப் பட்டிருந்தமை கூட ஏற்கனவே தெரிந்த விடயம் தான்.

நீண்ட காலமாகவே, "இந்தியாவுக்கு சீனாவிடம் இருந்து ஆபத்து வருகின்றது" என்று தமிழினவாதிகள் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கருதுகோளுக்கு மாறாக, "இந்திய நலன்களுக்கு எதிரான ஆபத்து மேற்குலகில் இருந்தே வருகின்றது." என்பதை மெட்ராஸ் கபே அழுத்திக் கூறுகின்றது. ஈழத் தமிழரின் பிரச்சினையானது, இந்திய, சர்வதேச நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

ஈழத் தமிழர் பிரச்சினையை கையாள்வதில் இந்தியா விட்ட நடைமுறைத் தவறுகளை எல்லாம், புலிகள் அல்லது மேற்கத்திய நாடுகளின் தலையில் சுமத்தி விட்டு தப்ப முடியாது. இந்திரா காந்தியின் அரசியல் சாணக்கியம், ராஜீவ் காந்தியிடம் இருக்கவில்லை என்று அவரது ஆட்சிக் காலத்திலேயே விமர்சிக்கப் பட்டார். ராஜீவ் காந்தியின் அதிரடித் தீர்வு அரைவேக்காட்டுத் தனமாக அமைந்தது மட்டுமின்றி, அதுவே இலங்கையில் அமெரிக்க வல்லூறு காலூன்றவும் காரணமாகியது.


சினிமா தொடர்பான முன்னைய பதிவுகள்:
5.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்