Showing posts with label தமிழ் ஊடகங்கள். Show all posts
Showing posts with label தமிழ் ஊடகங்கள். Show all posts

Tuesday, June 21, 2016

"இனம் என்னடா இனம், வர்க்கம் தான் நிரந்தரம்!" - இப்படிக்கு தமிழ் முதலாளிகள்


இனம் இனத்தோடு தான் சேரும். ஈழத் தமிழ் முதலாளி, சிங்கள பேரினவாத அரசுடன் கைகோர்ப்பான். யாழ்ப்பாண தமிழ் கோடீஸ்வரர், வெற்றிகரமான தொழிலதிபர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன். இவர் சிங்கள பேரினவாத அரசு இயந்திரத்துடன் கைகோர்த்துள்ளதை நிரூபிக்கும் படங்கள், சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

யாழ்நகரில் இருந்து வெளியாகும் தமிழ்த் தேசிய, புலி ஆதரவு தினசரி உதயன் பத்திரிகை முதலாளி சரவணபவன் மகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஆடம்பரமாக நடைபெற்றது. அதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரி, மற்றும் சிங்கள இராணுவத் தளபதியும் கலந்து சிறப்பித்தனர்.

கடந்த பல தசாப்த காலமாக யாழ்நகரில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையை மற்றைய பத்திரிகைகளுடன் ஒப்பிட முடியாது. யுத்த காலத்தில், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் புலிகளுக்கு ஆதரவான செய்திகளை தெரிவித்து வந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. இருப்பினும், உதயன் பத்திரிகைக்கு யாழ்ப்பாண தமிழ் மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு இருந்தது.

உதயன் பத்திரிகை வரலாற்றில் அது பல தடவைகள் தடங்கலுக்கு உள்ளாகியது. அதன் நிர்வாகம் பல தடவைகள் கைமாறியுள்ளது. இன்றைய உதயன் பத்திரிகை, புலிகளின் முதலீட்டில் உருவானதாக சந்தேகிக்கப் பட்டது. தலைமை நிர்வாகி சரவணபவன் ஒரு பினாமி முதலாளி என்றும் நம்பப் பட்டது. இராணுவப் புலனாய்வுத்துறை அது தொடர்பாக மோப்பம் பிடித்த படியால், சரவனபவனை கைது செய்து விசாரித்துள்ளது.

ஒரு தடவை, உதயன் பத்திரிகையாளர் நிமலராஜன் ஈபிடிபி ஆயுதபாணிகளால் படுகொலை செய்யப் பட்டார். இறுதிப்போர் நடந்த காலத்தில், உதயன் பத்திரிகை அலுவலகம் அடிக்கடி தாக்குதலுக்குள்ளானது. ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் செயல்பட்டனர். இத்தனை பிரச்சினைகள் இருந்த போதிலும், உதயன் தனது புலி ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.

சிங்கள பேரினவாதிகளின் கோட்டையான கொழும்பு நகரில் இருந்து வெளியான, உதயனின் சகோதர பத்திரிகையான சுடரொளி வெளிப்படையாகவே புலிகளின் புகழ் பாடி வந்தது. இதெல்லாம் எப்படி சாத்தியமானது? உதயன் முதலாளி சரவணபவன், திரைமறைவில் சிங்கள அரசுடன் தொடர்புகளை பேணி வந்தார். ஒரு காலத்தில் இரகசியமாக இருந்த உறவு, இன்று பரகசியமாக வெளிப்பட்டுள்ளது. இதிலென்ன அதிசயம்?

விடுதலைப் புலிகள் வலதுசாரிப் பாதையை தேர்ந்தெடுத்ததும், தமிழ் முதலாளிகளை ஊக்குவித்து வளர்த்ததும் கடந்த கால வரலாறு. சிலநேரம் புலிகளே உருவாக்கி வளர்த்து விட்ட தமிழ் முதலாளிகள், புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தனர். (பார்க்க: இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!) சரவணபவன் போன்ற பல முதலாளிகள், இன்று சிங்களப் பேரினவாத அரசை பகிரங்கமாகவே ஆதரிக்கிறார்கள். எல்லாம் வணிக நலன்தான் காரணம்.

இன உணர்வை விட வர்க்க உணர்வு மிகவும் உறுதியானது. தமிழீழ தேசிய போராட்டமும், முதலாளித்துவமும் ஒன்றுக்கொன்று விரோதமான விடயங்கள். அந்த உண்மையை காலங் கடந்தாவது உணர வேண்டும். இன்றைக்கும் முதலாளித்துவத்தை ஆதரித்துக் கொண்டே, புலிகளையும் ஆதரிப்பதாக பாசாங்கு செய்யும் வலதுசாரிகளையிட்டு தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"இனம் என்னடா இனம், வர்க்கம் தான் நிரந்தரம்!" - இப்படிக்கு தமிழ் முதலாளிகள்


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, April 16, 2016

ஏடு காவிகள் : தமிழ் ஏடு பத்திரிகைத்துறை அனுபவங்கள்


சுவிட்சர்லாந்தில், 1992 - 1994 காலப்பகுதியில், கடும் சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ் ஏடு எனும் மாதாந்த பத்திரிகையை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. புலம்பெயர்ந்த நாடொன்றில், எந்த அரசியல் சார்புமற்று நடுநிலையாக பத்திரிகை நடத்துவது ஒரு பெரிய சாதனை. அதே காலகட்டத்தில், சுவிட்சர்லாந்தில் வந்து கொண்டிருந்த "சுவிஸ் தமிழர்", அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பத்திரிகையாக பல்சுவை அம்சங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

அந்த வகையில் தமிழ் ஏடு, புலம்பெயர்ந்த தமிழரின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளது. அது பற்றிய தகவல்கள், எதிர்கால சந்ததியினரின் அறிவுத் தேடலுக்கு உதவும் வகையில் பதிவு செய்யப் பட வேண்டும். தமிழ் ஏடு பத்திரிகையின் ஆசிரியராக இரண்டு வருடங்கள் கடமையாற்றிய எனது ஊடகவியல் அனுபவங்களை இங்கே பதிவு செய்கிறேன்.


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் நண்பர் ஒருவர் மூலமாக அந்த அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. சுவிட்சர்லாந்தில் மிக நீண்ட காலமாக வசித்து வந்த தமிழ் அரசியல் ஆர்வலரான பாலசுப்ரமணியம், கடும் சுகவீனமுற்று இலங்கைக்கு சென்றிருந்த நேரம் 10-4-2016 அன்று காலமானார். அவரது இறுதிக் காலங்களில், ஒரு சமூக ஆர்வலராக, அரசியல் ஆர்வலராக பலராலும் அறியப் பட்டவர். 

சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப் பட்ட முதலாவது தமிழ் செய்திப் பத்திரிகையை நடத்தியவர் என்ற பெருமையும் அமரர் பாலசுப்ரமணித்தையே சேரும். தமிழ் ஏடு என்ற அந்தப் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரதம ஆசிரியரும் அவர் தான். அமரர் பாலாவின் நினைவாக, தமிழ் ஏடு பத்திரிகை தொடர்பான நினைவுக் குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"தமிழ் ஏடு" பத்திரிகையின் (உதவி) ஆசிரியர் என்ற வகையில், அதன் வளர்ச்சியில் எனது பங்களிப்பும் இருந்துள்ளது. திரு பாலசுப்ரமணியம், நிர்வாகம், விநியோகம் சம்பந்தமான விடயங்களை கவனித்துக் கொண்டிருந்தார். நான் பத்திரிகையின் உள்ளடக்கங்களை தீர்மானிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தேன். 

அதன் முதல் இதழில் இருந்து, "எடிட்டோர் பக்கம்" என்ற பெயரின் கீழ் ஆசிரியர் தலையங்கம் எழுதி வந்தேன். அது மட்டுமல்லாது, "கலை, அநாமிகா, தரணியன், தான்தோன்றி, யூரேசியன்" போன்ற பல புனை பெயர்களின் கீழும் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன். உலகச் செய்திகள், உலக அரசியல் நிலவரம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் நானே எழுதினேன். 

தமிழ் ஏடு, 1992 முதல் 1994 வரையில், இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக மாதமொருமுறை வெளிவந்து கொண்டிருந்தது. பொருளாதார கஷ்டம் காரணமாக இடையிடையே காலதாமதம் ஏற்பட்டு பின்னர் ஒரேயடியாக வராமல் நின்று விட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்த அனைத்து தமிழ்க் கடைகளிலும் விற்பனைக்கு விடப் பட்டது. அது மட்டுமல்லாது, உலகம் முழுவதும் சந்தாதாரர்களுக்கு அனுப்பப் பட்டது.

தமிழ் ஏடு பத்திரிகையை, இந்திய, இலங்கை வாசகர்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொண்டிருந்தோம். அதைவிட, ஐரோப்பாவில் வெளிவந்து கொண்டிருந்த முற்போக்கான சிற்றிதழ்களுடன் இதழ் பரிமாற்றம் செய்து கொண்டோம். 

மனிதம் (சுவிட்சர்லாந்து), தூண்டில் (ஜெர்மனி), சுவடுகள் (நோர்வே), ஓசை (பிரான்ஸ்) போன்ற பல சஞ்சிகைகள், தமிழ் ஏட்டுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தன. அந்தக் காலங்களில் இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த, நடுநிலை தவறாத முற்போக்கான சரிநிகர் பத்திரிகையுடன், தமிழ் ஏட்டை ஒப்பிட்டுப் பார்த்தவர்களும் உண்டு.

தமிழ் ஏடு, ஒரு காலத்தில் பலராலும் விரும்பி வாசிக்கப் பட்ட பிரபலமான பத்திரிகையாக இருந்தது. அது எந்த அரசையும், எந்தவொரு தமிழ் அரசியல் அமைப்பையும் சார்திருக்கவில்லை. அதனால், அனைத்து தரப்பினரினதும் கடும் விமரிசனங்களை சந்தித்து இருந்தது. நிதி விடயத்தில், கொடையாளிகள், முதலாளிகளின் பணத்தில் தங்கியிருக்கவில்லை. தமிழ் விற்பனை நிலையங்கள் தொடர்ச்சியாக விளம்பரம் கொடுத்து வந்தாலும், பிற்காலத்தில் ஒரு சிலரின் பயமுறுத்தல் காரணமாக பின்வாங்கி இருந்தனர்.

வெளிநாட்டு சமூகத்தினரின் கலாச்சார ஏடு என்ற காரணத்தால், சுவிஸ் அரசு ஒரு சில நேரங்களில் சிக்கனமான நிதி வழங்கி இருந்தது. அது பத்திரிகை அச்சடிக்கும் செலவுக்கே போதவில்லை. அமரர் பாலசுப்ரமணியம், தனது சொந்தப் பணத்தை முதலிட்டு ஆரம்பித்த பத்திரிகை, கடைசியில் நஷ்டத்தையும், பெரும் செலவையும் உண்டாக்கியது. அப்படி இருந்தும் பாலா அண்ணா அதை ஒரு சமூக சேவையாக கருதி வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

எண்பதுகளின் இறுதியில், ஜெர்மனி மூலம் சுவிட்சர்லாந்து வந்த ஆரம்ப கட்ட தமிழ் அகதிகளில் பாலசுப்ரமணியமும் ஒருவர். அழகிய எழில் கொஞ்சும் ஸ்பீஸ் (Spiez) என்ற எரிக் கரை கிராமத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். வதிவிட அனுமதி பெற்ற பின்னர், ஸ்பீஸ் கிராமத்தில் இருந்த வயோதிபர் மடத்தில் உதவியாளர் வேலை செய்து வந்தார். தனது தஞ்சக் கோரிக்கைக்கு, பேர்ன் நகரில் இருந்த பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபை உதவிய காரணத்தால், அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தார்.

பேர்ன் (Bern) நகரில் தமிழர்கள் ஒன்றுகூடும் கிறிஸ்தவ தேவாலயத்தில் தான், நான் பாலா அண்ணாவை முதன்முதலாக சந்தித்தேன். அப்போது 40 கி.மி. தூரத்தில் உள்ள பீல் (Biel) நகரத்தில் வாழ்ந்த என்னையும், பிற தமிழ் இளைஞர்களையும், கூட்டிச் செல்வதற்கு தேவாலய ஊழியர்கள் வருவார்கள். ஒவ்வொரு ஞாயிறும் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு, பயணச் சீட்டு கொடுத்து அழைத்துச் செல்வார்கள். அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதாக இருந்தது. எமது நோக்கம் தொடர்புகளை ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதாக இருந்தது.

இலங்கையில் வவுனியாவில் பிறந்த பாலசுப்ரமணியம் ஓர் இந்து. அவரது (முதல்)மனைவி ஒரு கத்தோலிக்கர். இருப்பினும் பெந்தெகொஸ்தே சபையுடன் ஒத்துழைத்தனர். இதை நாங்கள் வெறுமனே மதம் சார்ந்த விடயமாக பார்க்க முடியாது. 

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், திக்குத்தெரியாத அந்நிய நாடொன்றில் வந்திறங்கிய அகதிகள், கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி முன்னேறத் துடித்தனர். உண்மையில், அந்த கிறிஸ்தவ சபை தொடர்பு காரணமாக கிடைத்த சுவிஸ் வயோதிப நட்புறவுகள், தமிழ் ஏடு பத்திரிகை தொடங்குவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இருந்தனர். அவர்களுடைய உதவியின் மூலம், சுவிஸ் அமைச்சர் வரையில் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்தது.

தொடக்கத்தில், தமிழ் எழுத்துரு மூலம் கணணி தட்டச்சு செய்யும் மென்பொருள் தொடர்பாகத் தான், எனக்கும் பாலா அண்ணாவுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. அந்தக் காலத்தில் கணணி தொழில் நுட்பத்துடன் பரிச்சயம் உடையவர்கள் மிகக் குறைவு. ஸ்பீஸ் கிராமத்தில், பாலா குடும்பத்தினரின் வீட்டுக்கு நான் சென்றிருந்த நேரம், பத்திரிகை தொடங்குவது பற்றிய யோசனையை தெரிவித்தார். அப்போது இன்னும் பெயர் வைக்கவில்லை. நான் தமிழ் ஏடு என்ற பெயரை முன்மொழிந்தேன். பாலா அண்ணாவுக்கும் அது பிடித்து விட்டது.

தமிழ் ஏடு முதலாவது இதழுக்கான வேலைகள் ஆரம்பமாகி விட்டன. நான் கணனியில் தமிழ் எழுத்துருவை பயன்படுத்தி கட்டுரைகள், கதைகள், கவிதைகளை தட்டச்சு செய்து கொடுத்தேன். பாலா அண்ணா அவற்றை வெட்டி வெள்ளைத் தாளில் ஒட்டி வடிவமைத்தார். சிறிய அளவில், பதினாறு பக்கத்தில் தயாரான பத்திரிகையின் மூலப்பிரதியை அச்சகத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்தார். இரவு பகலாக உறக்கமில்லாமல் உழைத்து நாம் தயாரித்திருந்த தமிழ் ஏடு, சுவிட்சர்லாந்து முழுவதும் இருந்த தமிழ்க் கடைகளுக்கு அனுப்பப் பட்டது. அது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் வரவேரப் பெற்ற நேரம், நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.


அந்தக் காலகட்டத்தில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில், பிரான்சில் "பாரிஸ் ஈழநாடு", பிரிட்டனில் "தமிழன்" ஆகிய இரண்டு பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. இரண்டும் இலங்கைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டு வந்தன. புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் சம்பவங்கள், எங்கோ ஒரு மூலையில் பெட்டிச் செய்தியாக வெளிவரும். 

நாங்கள் அதற்கு மாறாக, புலம்பெயர்ந்த நாடுகளின் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டோம். ஐரோப்பிய நாடுகளில் குடியேறிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் விதத்திலும், தமிழ் ஏடு செய்திகள் அமைந்திருந்தன. அன்றைய காலத்தில், பத்திரிகைத் துறையில் ஏற்பட்ட புரட்சி அதுவெனலாம்.

தமிழ் ஏடு பத்திரிகையின் முதலாவது இதழில், சுவிட்சர்லாந்தில் குடியேறிய தமிழ் அகதிகளுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்று முன்பக்கத்தில் பிரசுரமானது. அந்தப் பிரதி தற்போது என்னிடம் இல்லை. அதனால் என்ன எழுதியிருந்தது என்பதை சொல்ல முடியாமல் உள்ளது. ஆயினும், அன்று தமிழ் ஏடு வெளியிட்ட, யாரும் அறிந்திராத, குடியேறிகளுக்கு அவசியமான தகவல் காரணமாக, விற்பனைக்கு வைத்திருந்த கடைகளில் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டது.

பத்திரிகை வெளியிட்டவர்கள் கைகளில் கூட ஒரு பிரதியும் மிஞ்சாத அளவிற்கு, அனைத்தும் விற்றுத் தீர்ந்தமை எமக்கும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த மாதம் வந்த இரண்டாவது இதழும் அனைத்தும் சுடச் சுட விற்கப் பட்டன. அன்றில் இருந்து தமிழ் ஏடு பத்திரிகையின் புகழ் சுவிட்சர்லாந்து முழுவதும் பரவியது. "பத்திரிகை அலுவலகத்திற்கு", அதாவது பாலசுப்ரமணியம் வீட்டிற்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்ட பலர், தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

வாசகர் கடிதங்கள் வந்து குவிந்தன. பலர் தாமாகவே முன்வந்து ஆக்கங்களை எழுதி அனுப்பினார்கள். இலங்கைக்கும் பத்திரிகை சென்றதால், அங்கிருந்தும் கடிதங்கள், ஆக்கங்கள் வந்தன. தமிழ் ஏடு பத்திரிகை, பல இலக்கிய ஆளுமைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களை மக்கள் முன் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களில் நானும் ஒருவன் என்பதை மறக்காமல் குறிப்பிட வேண்டும். தமிழ் ஏடு பத்திரிகைத் துறை அனுபவம், என்னை ஓர் அரசியல் ஆர்வலராக, எழுத்தாளராக உருவாக்கியது.

தமிழ் ஏடு மூலம் பிரபலமடைந்த பலர், இன்று தாமிருக்கும் நிலைமை காரணமாக அதை சொல்லிக் காட்ட விரும்புவதில்லை. இருப்பினும் பலருக்கும் தெரிந்த பிரபலங்கள் சிலரது பெயர்களை குறிப்பிட்டாக வேண்டும். வவுனியாவில் இருந்து கொண்டு தமிழ் ஏட்டுக்கு இலங்கையின் உள்நாட்டு அனுப்பிக் கொண்டிருந்த மாணிக்கவாசகர், பிற்காலத்தில் சிறந்த ஊடகவியலாளர் பரிசு பெற்றார்.

தனது பூஸா சிறைச்சாலை அனுபவங்களை தொடராக எழுதிய கல்லாறு சதீஷ், இன்று வணிகத்துறையில் கொடி கட்டிப் பறக்கிறார். கோடம்பாக்கம் சினிமாத்துறை அனுபவங்களை எழுதிய அஜீவன் பிற்காலத்தில் புகழ்பெற்ற குறும்படத் தயாரிப்பாளர் ஆனார். அரசியல் கட்டுரைகள் எழுதிய முன்னாள் ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர் அழகு குணசீலன். சுவிட்சர்லாந்தில் தமிழ் கலாச்சார நிகழ்வுகளில் பிரபலமான கஜேந்திர சர்மா, மற்றும் ஜெயக்கொடி இன்னும் பலரைக் குறிப்பிடலாம்.

1992 ம் ஆண்டு, இரண்டு பேரின் உழைப்பால் ஆரம்பிக்கப் பட்ட தமிழ் ஏடு பத்திரிகை பிரபலமான பின்னர், தாமாகவே விரும்பி பங்களிப்பை செலுத்துவதற்கு பலர் முன்வந்தார்கள். ஆசிரியர் குழுவில் மேலும் பலர் உள்வாங்கப் பட்டனர். பத்திரிகையின் உள்ளே வந்தவர்கள் தமது உழைப்பை மட்டும் செலுத்தி விட்டு சென்றிருந்தால் பரவாயில்லை. சிலர் கூடவே பிரச்சினைகளையும் இழுத்துக் கொண்டு வந்தார்கள். 

ஆரம்ப கட்டத்தில், ஒரு நடுநிலைப் பத்திரிகை, முரண்பட்ட கொள்கைகளை கொண்டவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பது தவறல்ல என்று கருதப் பட்டது. ஆனால், சுயநலவாதிகளையும், கூட இருந்தே குழி பறிப்பவர்களையும் சேர்த்துக் கொள்வது எத்தனை ஆபத்தானது என்பது போகப் போக தெளிவானது.

(தொடரும்)

Sunday, November 08, 2015

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்புகள்

யாழ் முஸ்லிம்களின் கலை நிகழ்ச்சி 

வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது, பெரிய தவறு என்பதை புலிகள் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார்கள். சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்திய காரணிகளில் அதுவும் ஒன்று. இருப்பினும் இயக்கத்தினுள் இருந்த கருணா போன்ற கடும்போக்காளர்கள் காரணமாக, தவறை திருத்திக் கொள்ள முயலவில்லை. 

"இராணுவத்திற்கு காட்டிக் கொடுத்ததற்காக" முஸ்லிம்களை வெளியேற்றியதாக "நியாயம்" கற்பித்தவர்கள், பிற்காலத்தில் கருணா குழு என்று பிரிந்து சென்று, பகிரங்கமாகவே இராணுவத்திற்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் நடந்த, முதலாவதும் கடைசியானதுமான பத்திரிகையாளர் மகாநாட்டில், "முஸ்லிம்களை வெளியேற்றிய துயரத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக" பிரபாகரன் தெரிவித்திருந்தார். அன்டன் பாலசிங்கம் அதை ஆங்கிலத்தில் மொழிதிரித்து, "தவறுக்கு மன்னிப்புக் கேட்பதாக" கூறினார்.

அந்தக் கூற்றானது, ஊடகங்களில் இரண்டு விதமாக தெரிவிக்கப் பட்டது. தமிழ் ஊடகங்களில் "புலிகள் வருத்தம் (மட்டுமே) தெரிவித்தனர்." ஆங்கில ஊடகங்களில் "புலிகள் மன்னிப்புக் கோரினார்கள்." சர்வதேசத்தை திருப்திப் படுத்துவதற்காக "மன்னிப்பு" என்ற வார்த்தையும், தமிழ் வலதுசாரி- பழமைவாதிகளை திருப்திப் படுத்துவதற்காக "வருத்தம்" என்ற வார்த்தையும் பயன்பட்டது.

முஸ்லிம்கள் தமது பிரதேசங்களில் மீளக் குடியேறலாம் என்று, இறுதிக் காலத்தில் புலிகளின் தலைமை கூறி வந்த போதிலும், அது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது. நடைமுறையில் நிலைமையில் எந்த மாற்றமும் வரவில்லை.

பின்வரும் இரண்டு காரணிகள் புலிகளின் "முஸ்லிம் கொள்கையை" தீர்மானித்தன:


  1. கிழக்கு மாகாணத்தில், அரசின் சூழ்ச்சி காரணமாக, இரண்டு சமூகங்களும் எதிரிகளாக பிரிந்திருந்தனர். இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்ட முஸ்லிம் ஊர்காவல் படையினர், தமிழர்களின் கிராமங்களை தாக்கி, அப்பாவி மக்களை படுகொலை செய்வதனர். அரசின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாத சாதாரண தமிழ் - முஸ்லிம் மக்கள், இனக்குரோதத்தை மனதில் வளர்த்து வந்தனர். போர் முடிந்த பின்னரும் இந்த இன முரண்பாடு நீடிக்கிறது.
  2. யாழ் குடாநாட்டில், முஸ்லிம்களின் சனத்தொகை குறைவு. தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை. இருப்பினும், ஆண்டாண்டு காலமாக, யாழ்ப்பாணத்தில் மேலாதிக்கம் செலுத்தும், யாழ்- வேளாள மையவாத கருத்தியல் முஸ்லிம்களுக்கு விரோதமாக இருந்து வந்துள்ளது.


வலதுசாரி, தீவிர தேசியவாத இயக்கமாக பரிணமித்த புலிகள் இயக்கத்தில் இருந்த, ஆஞ்சநேயர் போன்ற பழமைவாத தலைவர்கள், முஸ்லிம் விரோத கொள்கை வகுக்க காரணமாக இருந்தனர். உலகம் முழுவதும் பழமைவாதிகள் ஒரே மாதிரித் தான் சிந்திப்பார்கள். தமிழ்ப் பழமைவாதிகளும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

இங்கே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. தற்போது புலிகள் இல்லை. இருப்பினும், முஸ்லிம்களை வெளியேற்றியது சரியென்று வாதிடும் பழமைவாதிகள் இன்றைக்கும் தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள். தமக்கு புலிகள் மீது விமர்சனம் இருந்தாலும், முஸ்லிம்களை வெளியேற்றிய செயலை முழு மனதுடன் ஆதரிப்பதாக கூறி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் பிரிந்து சென்ற கருணா குழுவினர், அரச ஆதரவு கட்சியாக மாறிய போதிலும், அவர்களது முஸ்லிம் எதிர்ப்பு அரசியலில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. பௌத்த பாசிஸ அமைப்பான பொது பல சேனாவுடன் சேர்ந்து, திராவிட சேனை என்ற அமைப்பையும் உருவாக்கி இருந்தனர்.

ஆகவே, வலதுசாரி- பழமைவாதிகள் புலிகளை தமது கருவியாக பயன்படுத்தி உள்ளனர். இந்த உண்மை எத்தனை புலி ஆதரவாளர்களுக்கு தெரியும் என்பது கேள்விக்குறி. கண்மூடித்தனமாக புலிகள் மீது விசுவாசம் காட்டுவோர், இனப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று மண்ணின் மைந்தர்கள் தான். அவர்கள் பேசுவதும் யாழ்ப்பாண வட்டார பேச்சுத் தமிழ் தான். தமிழர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் முஸ்லிம்களுக்கும் உண்டு. இந்து (அல்லது கிறிஸ்தவர்கள்) மட்டும் தான் தமிழர்கள் என்றால், அதற்குப் பெயர் தமிழ் தேசியம் அல்ல, இந்து மதத் தேசியம்.

புலம்பெயர்ந்த புலிகள், தமிழ் மக்களிடம் சேகரித்த பணத்தில் உருவாக்கிய , லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் GTV தொலைக்காட்சியில், யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றிய அரசியல் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதைப் பார்த்த பொழுது, வட கொரிய தொலைக்காட்சி பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. "வட கொரியாவுடன் எப்படி ஒப்பிட முடியும்?" என்று வலதுசாரி- போலித் தமிழ்த் தேசியவாதிகள், இப்போது வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவார்கள்.

வட கொரிய தொலைக்காட்சியிலும் அரசியல் கலந்துரையாடல்கள் நடக்கும். அதில் பெரும்பாலும், தென் கொரியாவில் வாழும், கொரிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி கூடியிருந்து விவாதிப்பார்கள். தென் கொரிய அரசியல் தலைவர்களின் முறைகேடான கூற்றுக்களால், கொரிய மக்கள் கொந்தளிப்பதாக கூறுவார்கள். இறுதியில் அந்த வட கொரிய ஆய்வாளர்கள், தென் கொரிய மக்களும் தம்மைப் போன்று பேசக் கற்றுக் கொண்டு, தென் கொரிய அரசியல் தலைமையை மாற்றியமைக்க வேண்டும் வேண்டும் என்று முடிப்பார்கள்.

அதே மாதிரித் தான், GTV இல் உரையாடும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் நடந்து கொள்கிறார்கள். "யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டதாக சொன்ன சுமந்திரனின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக, தமிழ் மக்கள் கொந்தளித்துப்பதாக..." நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் பேசினார்.

ஒரு மேற்கத்திய ஜனநாயக நாடான பிரிட்டனில் இயங்கும் GTV, மாற்றுக் கருத்துக் கொண்ட யாரையும் விவாதத்திற்கு அழைப்பதில்லை. இந்த தடவையும், முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை கேட்பதற்காக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த யாழ் முஸ்லிம் யாரையும் அழைக்கவில்லை.

தொடர்ந்து பேசிய இரண்டு "ஆய்வாளர்களும்", எந்த வித கருத்து முரண்பாட்டையும் எதிரொலிக்காமல், ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவித்தனர். "தமிழர்களை விட முஸ்லிம்கள் எந்தக் குறையுமற்று வாழ்கிறார்கள். இப்போது பிரச்சனைகளை கிளறும் சுமந்திரன் போன்றோர், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறார்கள்." என்று கூறினார்கள்.

இதற்குத் தீர்வாக, "இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் தாம் பேசுவதைப் பார்த்து, அதே மாதிரி பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுப்பற்ற அரசியல் தலைமையை மாற்ற வேண்டும்." என்று "அன்பான" உத்தரவு பிறப்பித்தார்கள்.

4-11-2015 அன்று ஒளிபரப்பான GTV அரசியல் கலந்துரையாடலை, ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த நேரம் பார்த்து இரசித்தேன். ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் பெரும்பான்மையான தமிழர்கள், GTV சொல்வதை, தமது அரசியல் கருத்துக்களாக வரித்துக் கொள்கிறார்கள். எனது நண்பரும் அதற்கு விதி விலக்கல்ல. இத்தனைக்கும், அவர் ஒரு புலி ஆதரவாளர் அல்ல. முன்னாள் புளொட் ஆதரவாளர்.

அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், எனது நண்பர் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே இவ்வாறு கூறினார்: 
//யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் வீடுகளில் வாள்கள் கண்டெடுக்கப் பட்டனவாம்!// 
AK - 47 துப்பாக்கிகள் வைத்திருந்த புலிகளை எதிர்த்து, முஸ்லிம்களின் வாள்களால் எதையும் சாதித்திருக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் பெரும்பான்மையான தமிழர்கள் இல்லை.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, December 31, 2014

தமிழ் தேசிய தொலைக்காட்சியில் முதல் தடவையாக ராஜபக்சேவின் பேட்டி!


தமிழ்நாட்டில் "ஈழ ஆதரவு அரசியல்" செய்யும், "தமிழ் தேசியவாதிகள்" பலருக்கு, இலங்கை அரசியல் நிலவரம் சுத்தமாகப் புரிவதில்லை. பிள்ளையார் பிடிப்பதாக நினைத்து, குரங்குப் பொம்மைகள் செய்து கொண்டிருப்பார்கள். "தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் தடவையாக..." என்று முன்பெல்லாம் சினிமாப் படத்திற்கு விளம்பரம் செய்வார்கள். "தமிழ் தேசியவாத தொலைக்காட்சியான" தந்தி டி.வி., முதல் தடவையாக மகிந்த ராஜபக்சவின் பேட்டியை ஒளிபரப்பி உள்ளது.

அது ஒன்றும் ஊடக தர்மத்திற்கு முரணான விடயம் அல்ல. தந்தி டி.வி. கூட விளம்பரதாரர்களின் வருமானத்தை நம்பி இருக்கும் வணிக ஊடகம் தான். (வணிக நலன் தமிழ் தேசிய கொள்கைக்கு எதிரானதும் அல்ல.) ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நேரத்தில், இப்படி ஒரு நேர்காணல் ஒளிபரப்பப் பட்டது தான் எங்கோ உதைக்கிறது.

இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆசீர்வாதம் வாங்குவதற்காக திருப்பதி சென்றிருந்தார். அப்போது அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வைகோ குழுவினர், தற்போதும் தந்தி டி.வி.க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பல "தமிழ் உணர்வாளர்கள்" கொந்தளித்து எழுந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதைத் தான்... இதையே தான் ராஜபக்சவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. அதே மாதிரி, சிங்களப் பெரும்பான்மை கட்சிகள், புலிகள் இருந்த காலத்தில் அதைக் காட்டி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தன. தற்போது புலிகள் அழிந்த பின்னாலும், தமது பிழைப்பு அரசியலை தொடர்கின்றன.

ராஜபக்ச அரசு புலிகளை வளர்த்து வருகின்றது என்று, மைத்திரிக்கு ஆதரவான எதிர்க்கட்சி அணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கேபி, கருணா, நகுலன் போன்ற முன்னாள் புலித் தலைவர்கள் ராஜபக்ச அரசில் இருக்கிறார்கள். மைத்திரி ஆட்சி வந்த பின்னர் எல்லாப் புலிகளும் கைது செய்யப் படுவார்கள் என்று கூறி வருகின்றனர். 

நாடுகடந்த தமிழீழ அரசும் ராஜபக்ச ஆதரவில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறதாம். மேலும் வெளிநாடுகளில் இருக்கும் புலிகளுக்கு நிதி வழங்குவது புலம்பெயர்ந்த தமிழர்கள் இல்லையாம். அவர்களுக்கும் ராஜபக்ச அரசு தான் நிதி வழங்கி வருகின்றதாம். மேற்படி தகவல்களை, எதிரணியில் இருக்கும் ஜாதிக சிஹல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

"ஈழத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் புலிகளை ஆதரிக்கிறார்கள்." என்று தமிழகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அதே மாதிரி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தென்னிந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்வதாகவும், அவர்கள் எல்லோரும் புலிகளை ஆதரிப்பவர்கள்..." என்றும் பெரும்பாலான சிங்களவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

மைத்திரியை ஆதரிக்கும் எதிரணியினரின் ஊடகங்களில், ராஜபக்ச திருப்பதி சென்ற படம் அடிக்கடி பிரசுரமாகின்றது. தற்போது தந்தி டி.வி. நேர்காணலையும் எதிரணியினரே அதிகளவில் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், ராஜபக்ச, புலிகள் கூட்டணி பற்றிய கதைகளுக்கு "ஆதாரம்" காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விபரம் எல்லாம் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு தெரியுமா?


மேலதிக தகவல்களுக்கு:
Sirisena to arrest all LTTEers; http://www.ceylontoday.lk/51-81040-news-detail-sirisena-to-arrest-all-ltteers.html
I’ll get more votes from North at this election - Mahinda Rajapaksa in an interview with Tamil Nadu TV station Thanthi TV; http://www.dailymirror.lk/60015/video-i-ll-get-more-votes-from-north-at-this-election-mr
Last days of the Raj?; http://www.economist.com/news/leaders/21637389-encouragingly-mahinda-rajapaksa-faces-real-battle-win-re-election-president-better

Friday, May 04, 2012

யாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி!! தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு!!


வடபுலத்துப் போர்ச் சூழலால் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்தது. போர் முடிந்த பின்பும் அதே நிலை தொடருகிறது. இதன் மத்தியிலேயே இம்முறை மேதினம் யாழ்ப்பாணத்தில் பேரணிகளுடன் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி தமது தமிழ் மேட்டுக்குடிச் சகாவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டு மேதினம் கொண்டாடியது. தெற்கிலிருந்து பெருந்தொகையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் பேரணிக்கும் கூட்டத்துக்கும் கொண்டுவரப்பட்டிருந்தனர். இதனை வேறொரு கட்சியினர் செய்திருந்தால் யாழ்ப்பாண ஊடகங்கள் எகிறிக்குதித்து இனவாதத்தையும் இனவெறியையும் எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆனால் இது மேட்டுக்குடிக் கூட்டு என்பதால் அதனை அடக்கி வாசித்துக்கொண்டனர். இது தமிழர் பழைமைவாத ஆதிக்க அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் பத்திரிகா தர்மமாகும். அத்துடன் சிங்கக்கொடி பிடித்த ரணில் சம்பந்தன் கூட்டுக்கரங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைத்தானும் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (NDMLP) யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடத்திய சைக்கிள் பேரணிக்கும் கூட்டத்திற்கும் கொடுக்க மறுத்துவிட்டனர்.
மேற்படிப் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சியின் மேதினப் பேரணியும் கூட்டமும் செஞ்சட்டைகளுடனும் செங்கொடிகளுடனும் மிகவும் எழுச்சிகரமாக சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை நடாத்தப்பட்டது.
அரசாங்க எதிர்ப்பு முழக்கங்கள் பிரதான இடத்தைப் பிடித்திருந்தன. பொருட்கள் மீதான விலையேற்றத்தை எதிர்த்தும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பைக் கண்டித்தும் அரசியல் தீர்வை வலியுறுத்தியும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சி வழங்கக்கோரியும் தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தியும் தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்தும் உழைக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரளக்கோரியும் ‘ரணில் சம்பந்தன் கூட்டு தமிழ் மக்களுக்கு வேட்டு’ என்றும் இந்திய அமெரிக்க தலையீட்டை எதிர்த்தும் பேரணியில் முழக்கங்கள் முழங்கப்பட்டன.
இவற்றைப் பார்த்த மக்கள் மிகவும் வியப்புடனும் அவதானத்துடனும் பேரணிக்கு ஆதரவு கொடுத்தனர். அவ்வாறே மேதினப் பொதுக்கூட்டமும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்ட கூட்டமாக அமைந்திருந்தது. கட்சியின் வடபிரதேசச் செயலாளர் தோழர் கா. செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி. கா செந்திவேல் பிரதான உரையை ஆற்றினார். தொழிற்சங்க, வெகுஜன, பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர். கட்சியின் கலைக்குழுவினரால் புரட்சிகரப் பாடல்கள் இடையிடையே பாடப்பட்டன. பெருந்தொகையான பொலிசாரும் புலனாய்வுத்துறையினரும் பேரணியையும் கூட்டத்தினையும் நோட்டமிட்டவாறே இருந்தனர். ஆனால் மக்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு யாழ்ப்பாண வீதிகளில் செங்கொடிகளும் செஞ்சட்டைகளும் அணிவகுத்து வந்த காட்சிகளும் உணர்ச்சிகர முழங்களும் புரட்சிகர இயக்கத்தை முன்தள்ளுவதற்கான அடையாளமாகக் கண்டனர்.
இவ்வாறான புரட்சிகர மேதினப் பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் பற்றி  யாழ்ப்பாண நகரத்திலிருந்து வெளிவரும் நான்கு நாளிதழ்களான உதயன், யாழ் தினக்குரல், வலம்புரி, தினமுரசு ஆகியவற்றில் ஒரு வரி கூட எழுதப்படவில்லை. நான்கு நாட்களாகியும் இந்த நான்கு நாளிதழ்களும் தமது வக்கிரமான மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. இது ஏன்?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் பெரும் சத்தத்துடன் வாயுபறிந்தால் அதில் தமிழ்த்தேசிய மணம் வீசுவதாக இப்பத்திரிகைகள் தமிழ் மக்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உழைக்கும் தமிழ்மக்களான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தனியார் துறை ஊழியர்கள், போன்றவர்களின் பிரச்சினைகளை முன்வைத்தும் அவற்றுக்கான தீர்வை வற்புறுத்தியும் இடம்பெற்ற உணர்வு பூர்வமான இவ்விடதுசாரி மேதினம் பற்றி இருட்டடிப்புச் செய்தமையானது இந்த யாழ்ப்பணாத்துத் தமிழ் ஊடகங்களின் நடுநிலை, சுதந்திரக்குரல், தமிழ்த்தேசிய பாதுகாப்பு போன்ற போலித்தனங்களை அம்பலமாக்கியுள்ளது.
தமிழ்மக்கள் மத்தியில் ஊடக வியாபாரத்தை நடாத்தும் ஊடக முதலாளிகளின் பைகளை நிரப்புகின்ற அதேவேளை மக்கள் மத்தியில் மாற்று அரசியற் கருத்தும் மாற்றுச் சிந்தனையும் வரக்கூடாது என்பதில் அவை மிக அக்கறையாக இருக்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இதனை ஊடக அயோக்கியத்தனம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது?  இவ்வூடக இருட்டடிப்புப் பற்றி வடபுலத்து இளம் தலைமுறையினர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.
துலா 
thulaa.net
04-05-2012