Showing posts with label நிறவெறி. Show all posts
Showing posts with label நிறவெறி. Show all posts

Thursday, December 18, 2014

"யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்


இது முற்போக்கு டச்சு இணையத் தளம் ஒன்றில் (http://onsfundament.nl/het-komt-allemaal-door-de-buitenlanders/) பிரசுரமான, மிகவும் அருமையான கட்டுரை.

ஐரோப்பாவில், குறிப்பாக நெதர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பரவிவருகின்றது. பூர்வீக வெள்ளையின மக்கள், தங்களது பொருளாதார பிரச்சினைகளுக்கு, வெளிநாட்டவர்களை குற்றம் சாட்டுகின்றனர். உண்மையான பிரச்சினை என்னவென்பதை ஆய்வு செய்யும் கட்டுரை இது.

நாம் எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கியது. இதை வாசிக்கும் தமிழர்கள், நெதர்லாந்து அல்லது ஐரோப்பாவின் யதார்த்த நிலைமையை புரிந்து கொள்வார்கள். அங்கு வாழும் மக்களின் மனோநிலையை உணர்ந்து கொள்வார்கள்.

இந்தக் கட்டுரை பூர்வீக டச்சுக்காரர்களை நோக்கி எழுதப் பட்டாலும், வர்க்க உணர்வற்ற தமிழர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. ஆகையினால், தமிழ் பேசும் மக்களுக்காக அதனை மொழிபெயர்த்து தருகிறேன்:
________________________________________________________________________________


 எல்லாவற்றுக்கும் வெளிநாட்டவர்கள் தான் காரணம்! 

அடிக்கடி என்ன கேள்விப் படுகின்றீர்கள்? நெதர்லாந்தில் எல்லாமே பிழையாக நடக்கிறது. அதற்குக் காரணம் வெளிநாட்டவர்கள்.


  • அகதிகள்: "சொந்த மக்களுக்கு" உதவி செய்ய வேண்டிய அரசாங்கம், அகதிகளுக்காக பணத்தை செலவளிக்கின்றது. 
  • முஸ்லிம்கள் : அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள். எங்கள் மேல் இஸ்லாத்தை திணிக்கப் பார்க்கிறார்கள். 
  •  மொரோக்கோ குடியேறிகள்: திருட மட்டுமே தெரிந்த வேலை செய்யாத சோம்பேறிகள். 
  • கிழக்கு ஐரோப்பியர்கள்: எங்களது தொழில் வாய்ப்புகளை பறிக்கிறார்கள்.


சிலநேரம், இதை வாசிக்கும் நீங்களும் இப்படி எல்லாம் நினைத்திருப்பீர்கள். மிகவும் நன்றி. இப்படியான கதைகளை பரப்புவதன் மூலம், மக்களை ஒடுக்கி வைத்திருக்கும் கோடீஸ்வரர்களுக்கு உதவுகின்றீர்கள்.

அகதிகளின் வருகையினால் தான், சுகாதாரப் பணியகங்கள் மூடப் படுகின்றன என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை இழுத்து மூடி விட்டால், சுகாதார சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப் படுமா? எதற்காக மக்கள் தங்கள் வீடு, வாசல்களை துறந்து வெளியேறுகின்றார்கள் என்று ஒரு நிமிடமேனும் நினைத்துப் பார்த்தீர்களா? சிலநேரம், அவர்கள் சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம், குண்டு வீச்சினால் பாதிக்கப் பட்டிருக்கலாம், அல்லது கைது செய்வதற்காக தேடப் படலாம். எமது அரசாங்கம் அந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்வதை விரும்புகின்றது.

நெதர்லாந்து கலாச்சாரத்திற்கு முஸ்லிம்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக நினைக்கிறீர்களா?  மக்டொனால்ட்ஸ் முதல் சினிமாக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் வரை. ஏன் எங்கள் தேசத்தின் மேலான அமெரிக்க ஆக்கிரமிப்பு குறித்து எந்தக் கவலையுமற்று இருக்கிறீர்கள்? அமெரிக்கா ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டான நாடு என்ற பிரச்சாரத்தை இன்னமும் நம்புகிறீர்களா? அந்த நாடு பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது மட்டுமல்லாது, நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக அதே பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தம் செய்கின்றது.

எங்களது நாட்டில் குறைந்தளவு மொரோக்கோ குடியேறிகள் இருந்திருந்தால், வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்புகள், இவை எல்லாம் மறைந்து விடுமா? தொழிலகங்களில் வழமைக்கு மாறாக அதிக வேலை வாங்கப் படுவதற்கும், அரசு கொடுக்கும் சமூகநல உதவித்தொகை போதாமல் இருப்பதற்கும், "அந்த" மொரோக்கோ காரர்கள் தான் காரணமா? உண்மையில் யார் யாரிடம் இருந்து திருடுகிறார்கள்? உங்களிடம் இருந்து திருடும் அதே மேட்டுக்குடி வர்க்கம் தான், மொரோக்கோ காரர்களிடமும் இருந்து திருடுகின்றது.

"அந்த" கிழக்கு ஐரோப்பியர்களினால் தான், உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? எல்லைகளை மூடி விட்டால், உங்களுக்கு ஒரு நிரந்தர வேலைக்கான ஒப்பந்தம் கிடைக்குமா? பார ஊர்திகளின் (லொறி) முதலாளிகளும், ஷெல் போன்ற நிறுவனங்களும், ஐரோப்பாவில் மலிவு விலை கூலிகளை தேடிப் போவது, கிழக்கு ஐரோப்பிய மக்களின் குற்றமா? ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக சட்டங்கள் இயற்றுவதற்கு கிழக்கு ஐரோப்பியர்கள் தான் காரணமா? நீங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து கொண்டிருந்தால், பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க வழியில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

சிலநேரம், இந்த நாட்டில் எல்லாமே பிழையாக நடப்பதற்கு எங்கள் மேல் தவறு இருக்கலாம். எங்களது தவறு? ஆமாம், எங்களது தவறு தான். ஏனென்றால், இந்த நாட்டில் வாழும் நாங்கள் தெளிவாக சிந்திப்பதில்லை. இங்கே என்ன நடக்கிறது, அது ஏன் நடக்கிறது என்று அறிந்து வைத்திருக்கவில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே வர்க்கத்தை, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை அறியாமல் இருக்கிறோம்.

உலகம் முழுவதும் தங்கள் இருப்பிற்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள், பணத்திற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதை மறந்து விடுகிறோம். ஏனென்றால், தோல்நிறம், பூர்வீகம், மதம் போன்ற வித்தியாசங்களை பெரிதென எண்ணி, எங்களை நாங்களே பிரித்துக் கொள்கிறோம். எங்களுடைய பணம் எந்த வர்க்கத்திடம் போய்ச் சேருகின்றது என்ற உண்மையை அறியாதிருக்கிறோம். உண்மையான குற்றவாளிகளை பற்றி அறியாதிருக்கிறோம்.

எங்களை விட வித்தியாசமாக தோன்றும் மனிதர்கள் மேல் சீறிப் பாய்வது மிகவும் இலகுவானது. ஏனென்றால், முதலாளிகளுக்கு எதிராக எழுச்சி கொள்வதும், அவர்களது அரசியல் அமைப்பை எதிர்ப்பதும், "நெதர்லாந்து பண்பாடு" அல்ல! அப்படித் தானே? முன்னாள் லிபரல் கட்சிக்காரரும், இந்நாள் "கார்ப்பரேட்களுக்கான கட்சி"(PVV) நடத்துபவருமான ஒருவர், அமெரிக்க, இஸ்ரேலிய கோடீஸ்வரர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு நெதர்லாந்தை நாசமாக்குவதற்கு உதவுகிறார். அவர் சொல்லும் கதைகளை கேட்டு ஏமாறுகிறோம். 

இந்த பொம்மைகள், தொழிலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் பக்கம் நிற்பதாக நினைக்கிறீர்களா? அவர்கள் தான் (பூர்வீக) நெதர்லாந்து மக்களின் நன்மைக்காக பாடுபடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இனிப்பாகப் பேசுகிறவர்களை நம்புகிறீர்களா? வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, அரசு செலவினக் குறைப்பு போன்ற திட்டங்களுக்கு, பாராளுமன்றத்தில் அவர்களும் தான் சம்மதிக்கிறார்கள். (உழைக்கும் வர்க்கம்) பிரிந்திருப்பதால் பலவீனமாகப் போகிறோம் என்பதை நீங்கள் உணரவில்லையா?

இன்னும் உணரவே இல்லை? அப்படியானால், தங்களது நிதி வழங்குநர்கள் முன்னேற வேண்டுமென்பதற்காக, இந்த சமூகத்தை இன்னும் விரைவாக உடைக்கும் நபர்களை பற்றியும் முறைப்பாடு செய்ய வராதீர்கள். ஏனென்றால், அவர்கள் அகதிகள், மொரோக்கோ காரர்கள், கிழக்கு ஐரோப்பியர்கள் ஆகியோரை மட்டுமல்ல, வேலை செய்யும் எல்லோரையும் பிடித்து அடக்குவார்கள். அதனை நீங்கள் பொறுத்திருந்து பார்ப்பீர்கள். 

தொழிற்சங்கம் ஒன்றின் மூலம் நிறுவனமயமாகும் ஒவ்வொருவரும், நல்லதொரு எதிர்காலத்திற்காக கிளர்ந்து எழும் ஒவ்வொருவரும் அடக்கப் படுவார்கள். ஒன்றில் வன்முறை மூலம், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை மூலம் இது நடக்கும். அதனால், அந்த நேரம் உங்களைப் பிடிக்க வந்தால், சிலநேரம் நீங்களும் தப்பி ஓட வேண்டி இருக்கும். அந்த நேரம், உங்களை ஒரு நாட்டில் அகதியாக வரவேற்பார்கள் என்று நம்புவோமாக...


(இது ஒரு மொழிபெயர்ப்பு. மூலக் கட்டுரையை வாசிப்பதற்கு: ‘Het komt allemaal door de buitenlanders’)

Tuesday, June 08, 2010

கனவான்களின் ஜெர்மனியில் ஒரு கருப்பன் படும் பாடு


"-  ஏய்! கருப்பா தள்ளிப்போ!"
 -"
ஏய்! வெள்ளை!"
-"ஏய்... என்ன வெள்ளை? உனது எஜமானைப் பார்த்து அப்படி சொல்ல மாட்டாய்."
-"நான் வெள்ளை என்று மட்டுமே சொன்னேன்."
"-வெள்ளை என்றால் ஜெர்மன் என்று அர்த்தம், நண்பா"
"-அப்படி என்றால் என்ன? விளங்கப் படுத்து."
"எனது ..... "
(முதுகைத் திருப்பி வளைந்து பிட்டத்தைக் காட்டுகிறான்.)

நிலைமை மோசமடையும் போலத் தெரிகின்றது. சுற்றவிருக்கும் உதைபந்தாட்ட வெறியர்கள் குடித்து விட்டு சண்டைக்கு வருவார்கள் போல் தெரிகின்றது. அவர்களது சட்டையில் காணப்படும் ஹிட்லரையும், நாஜிகளையும் நினைவு கூறும் வாசகங்கள் வேறு பயமுறுத்துகின்றன.

ஜெர்மனியில் டிரெஸ்டென் நகர உதைபந்தாட்ட அரங்கத்திற்கு முன்னால் நடந்த சம்பவம். இருபது வயது மதிக்கத் தக்க வெள்ளையின உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு மத்தியில், தன்னந்ததனியாக ஒரு கருப்பன் நின்றிருந்த பொழுது இடம்பெற்ற வாக்குவாதம் அது. அந்த கருப்பன் உண்மையில் ஒரு வெள்ளையின ஜெர்மானியர்! பிரபல எழுத்தாளர் Günter Wallraff. "உன்னதமான நாகரீகத்தைக் கொண்ட" ஜெர்மன் சமூகத்தின் இருண்ட மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பவர். இம்முறை அவர் எடுத்துக் கொண்ட விஷயம் "நிறவாதம்". சாமானியர்களான "அப்பாவி" ஜெர்மனியர்களின் மனதில் ஒளிந்திருக்கும் நிறவாதத்தை வெளிக்கொணர்ந்துள்ளார். இதற்காக தனது மேனியின் நிறத்தையே கருப்பாக மாற்றிக் கொண்டு, ஒரு ஆப்பிரிக்க கருப்பனாக வாழ்ந்து பார்த்திருக்கிறார்.

வெள்ளை நிறத் தோலை கறுப்பு நிறமாக்குவது நடைமுறைச் சாத்தியமல்ல. 1959 ம் ஆண்டு, John Howard Griffin என்ற எழுத்தாளர் அமெரிக்காவில் "ஒரு கருப்பனாக" பயணம் செய்து கறுப்பினத்தவர்களின் அவலங்களை Black Like Me என்ற நூலில் பதிவு செய்தார். தனது தோலை கறுக்க வைக்க அவர் பாவித்த மாத்திரைகள் இறுதியில் அவருக்கு எமனாக மாறின. குய்ந்தர் வல்ராப் அது போன்ற ஆபத்தான பரிசோதனையை செய்யவில்லை. பெண்களுக்கு மேக்கப் போடும் ஒரு நிபுணரை அணுகியுள்ளார். விசேஷ ஸ்ப்ரே மூலம் அவரது தோலை கறுக்க வைத்துள்ளார். தலையில் சுருட்டைமுடி விக் அணிந்து கொண்டார். பார்ப்பதற்கு அசல் ஆப்பிரிக்க கருப்பன் போல இருந்த அவரை யாரும் அடையாளம் காண முடியவில்லை.

வால்ராப் தன்னோடு சில நடிகர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். ஒரு கறுப்பனைப் பற்றி சாதாரண வெள்ளையர்கள் தமக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என அறியும் ஒற்றர்கள். தேவைப்பட்டால் சம்பாஷணைகளை கமெராவில் அல்லது ஒலிவாங்கி மூலம் பதிவு செய்து கொண்டு வருவார்கள். வால்ராப் "கருப்பனாக" வாழ்ந்து பார்த்த அனுபவங்களை, "அற்புதமான புது உலகம்" (Aus der schönen neuen Welt) என்ற நூலில் எழுதியுள்ளார். அவற்றை இங்கே சுருக்கமாக தருகிறேன். வால்ராபின் பயணம் கிழக்கு ஜெர்மனியில் அரசர் காலத்து மாளிகைகளையும், பூந் தோட்டங்களையும் கொண்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற வெர்லிட்ஸ் எனுமிடத்தில் ஆரம்பிக்கின்றது.

ஜெர்மன் உல்லாசப்பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் படகு ஆற்றில் மிதந்து சென்று கொண்டிருக்கிறது. வழிகாட்டி ஜெர்மன் சரித்திரக் கதைகளை சொல்லிக் கொண்டு வருகிறார். "..... அன்று இளவரசர் Franz விரும்பிய பெண்ணை மணம் முடிக்க, பிரசிய நாட்டு அரசனான அவரது தந்தை விடவில்லை. பிரன்ஸ் திருமணம் செய்து கொண்டு இங்கிலாந்தில் வாழ விரும்பினார். ஆனால் அரசன் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். இறுதியில் இளவரசர் மாமன் மகளை கலியாணம் செய்து கொண்டு ஜெர்மனியிலேயே தங்கி விட்டார்." கேட்டுக் கொண்டிருந்த வால்ராபினால் சும்மா இருக்க முடியவில்லை. "(முறைப் பெண்ணை மணம் முடிப்பது) தடை செய்யப் பட்டுள்ளது அல்லவா? இதையெல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்ட (பெற்றோர் நிச்சயித்த) திருமணங்கள் என்றல்லவா சொல்வார்கள்?"

ஜெர்மனியில் வாழும் இஸ்லாமிய, இந்து சமூகங்கள் மத்தியில் உறவுக்குள் திருமண ஒப்பந்தங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த "காட்டுமிராண்டி கால" வழக்கத்தை ஜெர்மன் அரசாங்கமும், ஊடகங்களும் கடுமையாக எதிர்க்கின்றன. "ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணங்கள்" பிற்போக்கு கலாச்சாரம் கொண்ட சமூகங்களில் மட்டுமே சாத்தியம் எனக் கூறி வருகின்றன. (தமிழ் வாசகர்களுக்கு ஜெர்மன் சமூக கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தும் எனது சிறு விளக்கம். தமிழ்க் கலாச்சாரத்தில் "பெற்றோர் நிச்சயித்ததாக" கூறுவதை, அவர்கள் "நிறுவனமயப் படுத்தலாக" புரிந்து கொள்கின்றனர். நூலில் இல்லை.) இன்றைய ஜெர்மானியர்கள் கருதுவதைப்போல "ஆதி காலம் தொட்டு நாகரீகமடைந்த சமூகமாக" இருக்கவில்லை. ஜேர்மனிய சமூகமும் பல "பிற்போக்கு அம்சங்களை" கொண்டிருந்தது. இதைத் தான் அன்று அந்தப் படகுப் பயணத்தில், சக ஜெர்மானியர்களுக்கு வல்ராப் தெளிவு படுத்தியுள்ளார்.

வல்ராபின் விமர்சனம் பலரை புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. படகுப் பயணம் முடிவடையும் தருணம் இவரருகில் வந்த ஜெர்மன்காரர் கேட்கிறார்:
 - " நீ எப்படி இவ்வளவு சரளமாக ஜெர்மன் பேசுகிறாய்? "
- " தான்சானியாவில் கோதே (ஜெர்மன் மொழிக்) கல்லூரியில் கற்றேன்."
ஒருவருக்கொருவர் தெரியாத மற்ற பயணிகள் "நீங்கள்" என்று பன்மை விகுதியில் அழைக்கின்றனர். இவர் மட்டும் "நீ" என்கிறார். பொதுவாகவே மேற்கு ஜெர்மானியர்களை விட கிழக்கு ஜெர்மானியர்கள் "நீங்கள்" பாவிப்பது குறிப்பிடத் தக்கது.
-" வேலை செய்கிறாயா?" 
"- இல்லை"
-"இங்கே படகு வலிக்கும் வேலை கிடைக்கலாம்" (சைகை செய்து காட்டுகிறார்.)
நான் ஒரு கருப்பன் என்பதால் கூலி வேலைக்கு தான் லாயக்கு என்று அவர் கருதுவது புரிகின்றது.

வேறு பல சந்தர்ப்பங்களிலும், தனக்கு ஜெர்மன் புரியாது என நினைத்துக் கொண்டு தன் முன்னிலையில் ஜெர்மன் மொழியில் பேசி சிரித்தவர்கள், பற்றி வல்ராப் பதிவு செய்துள்ளார். வெளிநாட்டவரை கேலிப்பொருளாக கருதுவது நவீன நிறவாதம். ஜெர்மனியில் மட்டுமல்ல, வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற சிறுமைப்படுத்தும் ஏளனப் பேச்சுகள் சகஜம். இந்தியர்கள், ஆபிரிக்கர்கள் போல தோற்றமளிப்பவர்களிடம் எடுத்தவுடன் ஆங்கிலத்தில் பேசுவது கூட அதற்குள் அடக்கம்! (அதாவது உங்களுக்கு "ஆங்கிலம் போன்ற இலகுவான மொழிகளை" மட்டுமே கற்றுக் கொள்ளும் ஆற்றல் உண்டு.) மொழியறிவு குறைந்த வெள்ளையின ஐரோப்பியர்களுடன், அப்படி (ஆங்கிலத்தில் பேசுவது) நடந்து கொள்ள மாட்டார்கள்.

மேற்கு ஜெர்மனியில் கெல்ன் நகரத்தில், வல்ராப் பத்திரிகையில் வீடு வாடகைக்கு விளம்பரத்தை பார்த்து விட்டு தொலைபேசியில் அழைக்கிறார். வீட்டைப் பார்வையிட நேரம் கணித்து விட்டு அங்கே செல்கிறார். வீட்டை சுற்றிக் காட்டும் வயதான ஜெர்மன் மாது, "படிகளை சுத்தப் படுத்த மாதம் 26 யூரோ" மேலதிகமாக கேட்கிறார். வல்ராப் சென்று மறைய, அவர் அனுப்பிய நடிகர்கள் தோன்றுகிறார்கள். என்ன அதிசயம்! அவர்கள் 26 யூரோ கொடுப்பதற்கு பதிலாக, படிகளை தாமே சுத்தப் படுத்திக் கொள்வதாக கூற அதற்கு அந்த மூதாட்டி சம்மதிக்கிறார். மேலும் சற்று முன்னர் வந்து விட்டுப் போன கறுப்பனைப் பற்றி முறைப்பாடு செய்கிறார். "அவன் இங்கிருக்க வேண்டிய ஆள் இல்லை. வீடு வாடகைக்கு எடுக்க வந்தான். தொலைபேசியில் பேசிய பொழுது சரளமாக ஜெர்மன் பேசினான். வருபவன் கருப்பா, வெள்ளையா என்று தொலைபேசியில் மணந்து பார்க்க முடியுமா?"

காட்டில் வேட்டையாடும் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் வெள்ளை ஜெர்மானியர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள். வல்ராப் அதையும் ஒரு கை பார்த்து விடுவது என்று களத்தில் இறங்குகிறார். தென் ஜெர்மன் மாநிலமான Beieren இல், தனது ஆப்பிரிக்க நண்பனையும் சேர்த்துக் கொண்டு, "வேட்டை அனுமதிப் பத்திரம்" பெறுவதற்காக அரசாங்க அலுவலகம் செல்கிறார். அலுவலக வரவேற்பறையில் நின்றிருந்த பெண் "இரண்டு கறுப்பன்கள் வருவதைக் கண்டவுடன்" தனது மேலதிகாரியை கூப்பிடுகிறார். மேலதிகாரி இருவரையும் மேலும் கீழும் பார்த்து விட்டு: "இதற்கெல்லாம் அடையாள அட்டை வேண்டும்." என்கிறார். சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் அரச அலுவலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்வார்களா? என்ற யோசனையே இல்லாமல் பேசுகிறார். தாம் இருவரும் ஜெர்மன் பிரஜைகள் என்றும், விண்ணப் பத்திரத்தை கொடுக்குமாறும், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கூறுமாறும், வல்ராப் கேட்கிறார். உடனே பொறுமையிழந்த மேலதிகாரி சத்தம் போடுகின்றார்: " இடத்தைக் காலி பண்ணுங்கள். இல்லாவிட்டால் போலீசைக் கூப்பிடுவேன்."

ஜெர்மனியில் வாழும் கருநிற மேனியர்கள் தினசரி அனுபவிக்கும் நிறவாதம் இது போன்றது. அவர்களின் தோலின் நிறத்திற்காக அரசாங்கம் அவர்களை சந்தேகிக்கின்றது. பொது இடங்களில் போலிஸ் அவர்களிடம் மட்டும் தான் அடையாள அட்டை கேட்கின்றது. Charles Friedek ஒரு பிரபலமான கறுப்பின ஜெர்மன்காரர். உலகக் கிண்ணத்தை கைப்பற்றி ஜெர்மனிக்கு பெருமை தேடித்தந்த தடகள விளையாட்டு வீரர். அவர் ஒரு முறை பத்திரிகை பேட்டியில் அரச நிறவாதம் குறித்து முறைப்பாடு செய்தார். "நான் தற்போது ஒரு வயதான நபர். அண்மையில் கூட விமான நிலையத்தில் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டார்கள். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் பாஸ்போர்ட் சோதனை இன்றி செல்ல முடிந்தது. என்னை மட்டும் மறித்து வைத்திருந்தார்கள். ஏன்? நான் தான் ஒரேயொரு கருப்பன்!" (இந்த குற்றச் சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. எனக்கும் வேறு பலருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் அத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.)

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிரிந்திருந்த ஜெர்மன் ஜனநாயக குடியரசும் (கிழக்கு ஜெர்மனி), ஜெர்மன் சமஷ்டிக் குடியரசும் (மேற்கு ஜெர்மனி) "கருப்பர்களை" வெள்ளையின சமூகத்துடன் சேர விடாமல் தனிமைப் படுத்தி வைத்திருந்தன. கிழக்கு ஜெர்மனி ஆப்பிரிக்காவை சேர்ந்த சோஷலிச நாடுகளில் இருந்து மாணவர்களையும், தொழில் பயிலுனர்களையும் அழைத்து வைத்திருந்தது. ஆனால் விருந்தாளிகள் என்ற அந்தஸ்தில் ஜெர்மன் சமூகத்துடன் சேர விடாமல் முகாம்களில் வைத்திருந்தனர். மேற்கு ஜெர்மனி துருக்கியில் இருந்து தருவிக்கப்பட்ட தொழிலாளிகளை அவ்வாறு முகாம்களில் வைத்திருந்தது. பிற்காலத்தில் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிக்கவே கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது.

இன்று கிழக்கு ஜெர்மனியில் நிறவாதம் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்கின்றது. ஆனால் மேற்கு ஜெர்மனியில் அது மறைபொருளாக வேறு வழிகளில் காண்பிக்கப் படுகின்றது. அது இன்று நவீன நிறவாதமாக பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளது. "நான் அவர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அவர்கள் இங்கே இருக்க வேண்டியவர்கள் அல்ல!" புராதன நிறவாதம் வெள்ளயினத்தவர்களின் நாட்டினுள் வாழத் துணியும் அந்நியர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. ஆனால் நவீன நிறவாதம் அப்படியல்ல. அந்நியர்களை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளும் அதே வேளை, அவர்களை எட்டத்தில் வைத்திருக்க விரும்புகிறது.

பெர்லினைச் சேர்ந்த "நிற வெறிக்கு எதிரான அமைப்பு" தொண்ணூறுகளின் பின்னர் இனவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை ஆவணப்படுத்தியுள்ளது. 1993 இல் இருந்து 761 அகதிகள் தாக்கப் பட்டுள்ளனர். முகாம்களுக்கு நெருப்பு வைத்த அசம்பாவிதத்தில் அகப்பட்டு மரணமுற்றவர்கள் 67 பேர். தெருவில் அகப்பட்டு கும்பல் வன்முறைக்கு இலக்காகி 15 அகதிகள் இறந்துள்ளனர்.

"மொட்டைத் தலையர்கள்"(ஸ்கின் ஹெட்ஸ்), ஹிட்லரையும், நாஜிசத்தையும் ஆராதிக்கும் நிறவெறிக் காடையர்களே வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். சாதாரண உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடக்கும் இடங்களில் அவர்களைக் காணலாம். 88 அல்லது 18 போன்ற இலக்கங்களைக் கொண்ட சட்டை போட்டிருப்பார்கள். அந்த இலக்கத்தில் என்ன இருக்கிறது? "Heil Hitler" - இந்த ஜெர்மன் சொற்களில் வரும் முதல் எழுத்தான "H" அரிச்சுவடியில் எட்டாவது இடத்தில் வருகின்றது! அதே போன்றது தான் Adolf Hitler (18). அதற்கடுத்ததாக ஒரு பிரிட்டிஷ் பாஷன் கம்பெனி தயாரிக்கும் "Lonsdale" பிராண்ட் ஆடைகளும் நாஜி ஆதரவாளர்களிடையே பிரபலம். நாஜிக் கட்சியின் பெயரின் சுருக்கமான NSDA அதற்குள் மறைந்துள்ளது! ஜெர்மனியில் மேற்குறிப்பிட்ட சொற்களை நேரடியாக பாவிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனிக்குள் கருப்பனாக சுற்றிக் கொண்டிருந்த வல்ராப், ஒரே ஒரு இடத்தில் மட்டும் அடையாளம் காணப்பட்டார். கிழக்கு ஜெர்மனியில் மாக்டபூர்க் என்ற நகரில் ஒரு வாகன வர்த்தகர் இவரை சரியாக இனங்கண்டு கொண்டார். ஆயினும் கடைசி வரை காட்டிக் கொடுக்கவில்லை. இருந்தாலும் "பொதுவாகவே கிழக்கு ஜெர்மானியர்கள் நிறவெறியர்கள் என்பதைப் போல (மேற்கு) ஜெர்மன் ஊடகங்கள் ஒரு பக்க சார்பான கருத்துகளை பரப்பி வருவதாக" விசனமுற்றார். அதற்கு பதிலளித்த வல்ராப், தான் இரண்டு பக்க ஜெர்மனியிலும் நிலவும் நிறவாதம் பற்றியே ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். பின்னர் ஒரு நேரம் வல்ராபை நேர்காணல் செய்த மாக்டபூர்க் பத்திரிகையாளர், இதே போன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். "உங்களது அரிய செயல், எமது நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை இல்லாதொழிப்பதில் பங்காற்றுமாகில், அதற்கு நான் துணை நிற்கிறேன்." என்று வாழ்த்தி அனுப்பினார்.

______________________________________________________

Günter Wallraff

Günter Wallraff
Aus der schönen neuen Welt
Expeditionen ins Landesinnere
ISBN: 978-3-462-04049-4

Erscheinungsdatum: 14. Oktober 2009
336 Seiten, Taschenbuch
KiWi 1069
Lieferbar
Euro (D) 13.95 sFr 25.20 Euro (A) 14.40

Sunday, December 20, 2009

RACISM = நிறவெறி + சாதிவெறி + இனவெறி

"எந்த ஒரு மனிதனும் இன வெறியனாக பிறப்பதில்லை. பெற்றோரும், சுற்றியுள்ள சமூகமுமே ஒரு பிள்ளையின் மனதில் இனவெறிக் கருத்துகளை பதிக்கின்றனர்." - முன்னாள் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் கோபி அனன்.

2001 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஐக்கிய நாடுகள் சபையால் கூட்டப்பட்ட "இனவெறிக்கு எதிரான உச்சி மகாநாடு" உலகளவில் சலசலப்பை தோற்றுவித்தது. 166 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றிய சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மகாநாட்டை உலக வல்லரசான அமெரிக்கா புறக்கணித்தது. இறுதி நேரத்தில் தாழ்நிலை அரச பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்து, அவர் அங்கே வாயே திறக்கக் கூடாது என்று கூறி விட்டு ஒதுங்கி விட்டது. அமெரிக்கா மட்டுமல்ல, இஸ்ரேலுக்கும் மகாநாடு தர்மசங்கடமான நிலையை தோற்றுவித்தது. தென் ஆபிரிக்காவில் தமக்கு எதிரான காற்று வீசும் என உணர்ந்து பின் வாங்கி விட்டனர்.

இந்த மகாநாடு, அமெரிக்காவையும், இஸ்ரேலையும், இந்தியாவையும் எதிரணியில் தள்ளி விட்டது. இந்த மூன்று நாடுகளையும் ஒன்று சேர்க்கும் புள்ளி என்ன? நிறவெறியில் வளர்ந்தது அமெரிக்கா. இன/மத வெறியில் வளர்ந்தது இஸ்ரேல். சாதிவெறியில் வளர்ந்தது இந்தியா. அமெரிக்கா கலந்து கொள்ளாமைக்கு இன்னொரு காரணமும் கூட சேர்ந்து கொண்டது. அமெரிக்க பொருளாதார வளம் ஆப்பிரிக்க அடிமைகளால் கட்டி எழுப்பப்பட்டது. அடிமைகளை பயன்படுத்தியதற்காக கடமைப்பட்டுள்ள அமெரிக்கா இன்று வரை மன்னிப்புக் கூட கேட்கவில்லை. இந்நிலையில் அதற்காக நஷ்டஈடு வழங்க வேண்டுமென ஆப்பிரிக்க நாடுகள் கோரி வருகின்றன.

ஆப்பிரிக்க அடிமைகளின் நூறாண்டு கால உழைப்பில் பணக்காரனான அமெரிக்கா, அதற்காக நஷ்டஈடு வழங்க இன்றுவரை தயாராக இல்லை. அமெரிக்கா மட்டுமல்ல, காலனிய காலகட்டத்தில் அடிமை வியாபாராததாலும், காலனிய நாடுகளை சுரண்டியதாலும், செல்வந்த நாடுகளாக மாறிய மேற்கு ஐரோப்பிய நாடுகளும் நஷ்டஈடு பற்றிய பேச்சை எடுத்தால் ஓடி விடுகின்றன. நஷ்டஈடு விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் பிரஸ்தாபித்த ஆப்பிரிக்க நாடுகள், தமது வாதத்தை நியாயப்படுத்த, நடைமுறையில் இருக்கும் "யூத நஷ்டஈடு" விவகாரத்தை எடுத்துக்காட்டின. ஜெர்மனியில் நாசிச ஆட்சிக் காலத்தில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட யூதர்களுக்காகவும், வதை முகாம்களில் கட்டாயவேலை வாங்கியதற்காகவும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு நஷ்டஈடு வழங்கி வருகின்றன. இஸ்ரேல் அரசுக்கு கிடைத்துவரும் வருடாந்த வருமானத்தில் பெரும்பங்கு இந்த தொகையாகும்.

ஒவ்வொரு இனமும் தான் பாதிக்கப்படும் பொது மட்டும் இனவெறி எதிர்ப்பு கூச்சல் போடுவதும், அதே இனம் பிறிதொரு இனத்தை அடக்குவதை தனது உரிமை என நியாயப்படுத்துவதும் உலகில் நடப்பது தான். நாசிச அடக்குமுறையில் இருந்து விடுபட்டு, தமக்கென இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிய யூதர்கள், அந்தப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருந்த பாலஸ்தீன அரபு மக்களை அடித்து விரட்டி, தற்போது ஒரு சிறுபான்மை இனமாக மாற்றிவிட்டனர். அம்மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பதை ஜனநாயகம் என்கின்றனர். எத்தனை சமாதானப் பேச்சுவார்த்தைகள் வந்தாலும், வீடு திரும்ப முடியாத பாலஸ்தீன அகதிகள். இலட்சக்கணக்கில் அயல்நாடுகளில் உள்ள அகதி முகாம்களில் 60 வருடங்களாக அல்லலுறுகின்றனர். இஸ்ரேலினுள் வாழும் பாலஸ்தீனர்கள், சரளமாக ஹீப்ரூ மொழி பேசிய போதிலும் இரண்டாந்தரப் பிரஜையாக நடத்தப் படுகின்றனர். அதே நேரம் முன்னாள் சோவியத் குடியரசுகளில் இருந்து வந்து குடியேறும், ஹீபுரு மொழியோ, யூத மத அனுஷ்டானங்களோ அறியாத யூதர்களுக்கு இலகுவில் இஸ்ரேலிய பிரஜாவுரிமை கிடைக்கின்றது.

இவற்றை தென் ஆப்பிரிக்காவில் முன்பு நிலவிய அப்பார்ட்ஹைட் (Apartheid ) நிறவெறி ஆட்சி முறையுடன் ஒப்பிட்டு, பாலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலையையும் கண்டித்த அரசுசாரா நிறுவனங்களின் டர்பன் மகாநாட்டு அறிக்கை இஸ்ரேலையும், அமெரிக்காவையும் உலுக்கி விட்டது. யூகோஸ்லேவியா மற்றும் ஈராக் மீதான மோதல்களின் போது வாயில் வந்த படி பேசிய அமெரிக்கா, தனது நண்பனான இஸ்ரேலை விமர்சிப்பது என்றால் மட்டும் "பொருத்தமான வார்த்தைகளை" பாவிக்கும் படி வலியுறுத்தி வருகின்றது. இதுவரை காலமும் வழக்கில் இருந்த சொற்கள் பல யார் யாருக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அர்த்தம் கற்பிக்கப்பட்டன.

துருக்கியில் கமால் பாஷாவின் லிபரல் பாசிஸ்ட்கள் ஆர்மேனிய மக்கள் மீது நடத்திய இனப்படுகொலையை உலகம் நினைவுகூர்வதில்லை. ஆனால் ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிகளின் யூத மக்கள் படுகொலை ஆண்டுதோறும் தவறாமல் நினைவுகூரப்படுகின்றது. கம்போடியாவில் பொல்பொட் மில்லியன் மக்களை இனப்படுகொலை செய்ததை விசாரிக்க நீதி மன்றம் அமைக்கும் ஐ.நா.சபை, இந்தோனேசியாவில் சுகார்ட்டோ நடத்திய படுகொலைகளை பற்றி விசாரிப்பதில்லை. கம்யூனிய எதிர்ப்பு என்ற பெயரில் சுகார்ட்டோ லட்சக்கணக்கான இந்தோனேசிய மக்களை கொன்று குவித்தமை இனப்படுகொலை இல்லையாம், அது "ஜனநாயக மீட்பு" என்று விளக்கமளிக்கின்றனர்.

கொசோவோ மக்களின் போராட்டத்தை நசுக்கிய காலஞ்சென்ற செர்பிய ஜனாதிபதி மிலோசொவிச்சை இனப்படுகொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரித்தனர். மறுபக்கம் லெபனான் படையெடுப்பின் போது, பெய்ரூட் நகரில் 2000 பாலஸ்தீன அகதிகளை கொன்ற இஸ்ரேலிய படைத்தளபதி ஷரோன் பின்னர் பிரதமராகி அமெரிக்காவிற்கும் சென்று வந்தார். அவரை யாரும் இனப்படுகொலை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து விசாரிக்கவில்லை. இங்கே ஒரு நடைமுறை தத்துவத்தை மறக்கக் கூடாது. எல்லோரும் தான் கொலை செய்கிறார்கள். ஆனால் கொலை செய்தவர்கள் எதிரியா, நண்பனா என்பதைப் பொறுத்தே நீதி வழங்கப்படுகின்றது.

டர்பன் மகாநாட்டில் எந்த சொற்களை யாருக்கு பாவிப்பது என்று மயிர்பிளக்கும் விவாதம் நடந்தது. இறுதித்தீர்மானத்தில் எந்த சொற்களை தவிர்க்க வேண்டும் என்று சர்ச்சை எழுந்தது. வெறும் சொற்கள் பலரை அச்சமடைய வைப்பதன் காரணம், அவற்றின் எதிர்கால விளைவுகளையும் கருதித்தான். "நடந்தவற்றை செய்தியாக தரும்" மக்கள் தொடர்பு சாதனங்கள், உண்மையில் அரச கொள்கைகளை மக்களிடம் பரப்புரை செய்யும் பிரச்சார சாதனங்களாகவே செயற்பட்டன. ஆங்கிலத்தில் "Racism " என்றழைக்கப்படும் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இல்லை. "நிறவெறி" அல்லது "இனவெறி" என்று இடம், பொருள் கருதி பயன்படுத்தப் படுகின்றது. இதனால் தான் "சாதிவெறி" Racism அல்ல என்று இந்தியா வாதிட்டது.

இன்றும் பலர் Racism என்றால் அது நிறவெறியைக் குறிக்கும் என கருதுகின்றனர். இந்தக் கற்பிதம் உண்மையில் மேற்குலக நாடுகளில் இலகுவில் அறியப்படும் கருப்பு-வெள்ளை வேற்றுமை பற்றி கூறுகின்றது. மேற்குலக நாடுகளில் சூழலுக்கேற்ப பயன்படுத்திய அந்த சொல்லை தமிழில் அப்படியே இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். "மேற்குலக சூழலுக்கேற்ப" என்பதில் அர்த்தம் உண்டு. ஐரோப்பிய இனங்களுக்கு இடையில் எத்தனை வேறுபாடுகள், பகை முரண்பாடுகள் இருந்த போதிலும், வெள்ளையினம் என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடந்து வருகின்றன. அமெரிக்க ஆங்கிலம் பேசும் வெள்ளையினத்தவரின் மூதாதையர் பல்வேறு ஐரோப்பிய இனங்களை சேர்ந்தவர்கள். தோல் நிறம் காரணமாகவும், அடிமைகளின் சந்ததி என்பதாலும் கருப்பர்களை இலகுவில் பாகுபடுத்தி, அதிகார பீடத்தை நெருங்க விடாமல் தடுக்கின்றனர். (ஒபாமா போன்றவர்கள் விதிவிலக்குகள். வேறொரு நாடாக இருந்தால் அதிகாரத்திற்கு சேவை செய்யும் இனத்துரோகிகள் என தூற்றப்பட்டிருப்பர்.)

ஆகவே Racism என்பதை எப்படி வரையறுப்பது? இரண்டாம் உலகயுத்ததிற்கு பின்பே Racism என்ற சொல் உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இதன் அர்த்தம் அதற்கு முன்னர் நிற/இனவெறி இருக்கவில்லை என்பதல்ல. நவீன உலகம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல மாற்றங்களை கண்டது. மேலும் எப்போதும் வெல்பவர்கள் அகராதியை நிரப்புகிறார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் "பந்தவம்" அல்லது "இனம்" (Race ) என்ற அடிப்படையை வைத்து மக்களை வேறுபடுத்தினான். நாசிச சித்தாந்தம் ஏற்கனவே ஐரோப்பியர் மனதில் இருந்த வெள்ளையர் இனம் உலகில் சிறந்தது என்ற மேலாதிக்க உணர்வின் மேல் எழுப்பப்பட்டது. ஆப்பிரிக்காவை அடிமைப்படுத்திய ஐரோப்பியர்கள் கருப்பர்களை மனிதர்களாக கருதவில்லை. இத்தகைய கருத்தியல்களுடன் யூத மதத்திற்கு எதிரான கிறிஸ்தவ மதத்தின் காழ்ப்புணர்ச்சியையும் சேர்த்து நிறுவனமயப்படுத்தியத்தில் ஹிட்லருக்கு பெரும் பங்குண்டு.

ஐரோப்பிய காலனிகள் எங்கும் நிற ரீதியிலான பாகுபாடு நிலவியது. கிறிஸ்தவ ஐரோப்பா முழுவதும் ஆயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இழிவுபடுத்தப் பட்டனர். இதனால் மற்ற ஐரோப்பிய நாடுகளின் கனவான்கள் ஹிட்லர் மீது பழி போட்டு விட்டு தப்பி விட முடியாது. பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது கடந்தகால நிற/இனவாத ஒடுக்குமுறையை மறைத்துக் கொண்டு, நாசிகளை மட்டும் இனவெறியர்களாக காட்டுகின்றனர். எது எப்படி இருந்த போதிலும் நவீன சரித்திரவியலாளரும், அரசியல்வாதிகளும், சமூக விஞ்ஞானிகளும் ஹிட்லர் காலத்தில் இருந்து தான் Racism என்ற சொல்லின் பயன்பாட்டை ஆரம்பிக்கின்றனர்.

இங்கே கூர்ந்து நோக்கினால் இன்னொரு விஷயம் தெளிவுபடும். ஹிட்லரின் இன ஒடுக்குமுறைக்கு பலியானவர்கள் வெண்ணிறத் தோலுடைய யூதர்கள். அவர்கள் ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தாம் வாழ்ந்த நாட்டு மொழிகளையே தாய்மொழியாக கொண்டிருந்தனர். மேலும் ஐரோப்பிய யூதர்களை, பிற ஐரோப்பிய மக்களிடம் இருந்து பிரித்தறிய முடியாது. வெள்ளையின யூதர்கள் மட்டுமல்ல, வெள்ளையின ஸ்லாவிய மக்களும் (ரஷ்யர், செர்பியர்) நாசிச இனவெறிக் கொள்கைக்கு பலியானார்கள். ஆகவே Racism என்பது "நிற"வெறியை மட்டுமே குறிக்கும் எனக் கருதுவது தவறானது.

இதுவரை காலமும் பலரால் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட உண்மை ஒன்றுண்டு. ஹிட்லரின் ஆரிய சித்தாந்தத்திற்கும், இந்திய (மற்றும் ஈரானிய) ஆரியத்திற்கும் இடையிலான தொடர்பு தான் அது. ஆரியனிசமும், ஸ்வாஸ்திகா சின்னமும் ஹிட்லரின் மூளையில் உதித்த சிந்தனை அல்ல. இந்தியாவில் "தெயோசோபி" அமைப்பை ஸ்தாபித்த அன்னி பெசன்ட் அம்மையார் ஹிட்லர் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அத்தகைய கருத்துகளை கொண்டிருந்தார். ஹிட்லருக்கு ஆரியனிசத்தை கற்பித்த அமைப்பு, இன்றும் சென்னை நகரில் அடையார் பகுதியில் இயங்கி வருகின்றது. ஹிட்லர் காலத்தில் இத்தாலியில் ஆட்சிக்கு வந்த பாசிச முசோலினி பண்டைய ரோமர்களின் சின்னங்களுக்கு புத்துயிர் கொடுத்தான். அதே போல ஹிட்லரும் வெள்ளையினத்தவரின் மூதாதையர் மத்திய ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஆரியர்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தான். மத்திய ஆசியாவில் காணப்பட்ட (இன்று இந்துக்களால் பயன்படுத்தப்படும்) ஸ்வாஸ்திகா சின்னத்தை நாசிச அமைப்பின் சின்னமாக்கினான்.

சரித்திர ஆசிரியர்கள், ஐரோப்பிய இனத்தவர்களினதும், வட-இந்தியர்களினதும் முன்னோர்கள் ஆரியர்களே என்றும், அதற்கு ஆதாரமாக மொழியியல் ஒற்றுமைகளையும் எடுத்துக் காட்டுகின்றனர். "திபெத்தில் ஏழு வருடங்கள்" என்ற அமெரிக்க திரைப்படம் வெளியானது. சரித்திர சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைக்கதை அது. ஒரு சாதாரண சாகசக்காரனாக திபெத்தினுள் நுழையும் கதாநாயகனை பற்றி கூறுகிறது திரைப்படம். கதாநாயகன் நாசிக்கட்சி உறுப்பினர் என்பதும், ஹிட்லரின் உத்தரவின் பேரில் ஆரிய இனத்தின் தோற்றம் பற்றி ஆராய திபெத்திற்கு அனுப்பபட்டவன் என்பதையும் அந்த திரைப்படம் சொல்லாமல் மறைத்து விட்டது. திபெத்திய பௌத்தம் பல இந்து மதக் கூறுகளை கொண்டுள்ளது. ஸ்வாஸ்திகா சின்னமும் அவற்றில் ஒன்று. இந்து மதத்தினதும், திபெத்திய பெளத்த மதத்தினதும் மூலம் ஒன்றாக இருக்க வேண்டும். இந்துக்கள் சிவபெருமானின் வதிவிடமாக நம்பும் கைலாச மலை திபெத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள சாதியமைப்பு ஆதிகால வர்ணாச்சிரம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. ஆரியரின் வரலாற்றைக் கூறும் வேதமான ரிக்வேதம் சாதிகளைப் பற்றி எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆனால் வர்ணங்கள் பற்றியும், அவற்றிற்கு இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்தும் பேசுகின்றது. மேலும் ஆரியக் குழுக்களின் தலைவன் இந்திரனால் தோற்கடிக்கப்பட்ட கருநிற தாசர்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அடிமைகள் எனப் பொருள்படும் "தாசர்கள்" இன்றைய தாழ்த்தப்பட்ட தலித் சாதியினராக கருத இடமுண்டு. வர்ணம் என்பது நிறம் என்று கருதிக் கொள்பவர்கள், அது நிறவெறி என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். சாதியமும், நாசிசமும் சமூக ஏற்றத்தாழ்வு நியாயம் எனக் கூறுகின்றன. சாதிகளுக்கு இடையிலான கலப்புமணம் தடைசெயயப்பட்டதைப் போல, தூய ஆரிய இனம் பற்றி பேசிய நாசிசம் வேற்றினக்கலப்பை குற்றமாகப் பார்த்தது. நாசிகளின் காலத்தில் யூதர்களும், ஜிப்சிகளும் அசுத்தமானவர்கள், தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கப்பட்டனர். இத்தகைய சிந்தனை இன்றும் கூட இந்திய உயர்சாதியினர் மத்தியில் உள்ளது.

டர்பன் மகாநாட்டில் சாதிப்பிரச்சினை இந்தியாவில் இல்லை என்று பூசி மெழுக இந்திய அரசு பகீரதப் பிரயத்தனம் எடுத்தது. அப்படியே இருந்தாலும் சாதியத்தை Racism என வரையறுக்க முடியாது என வாதிட்டது. ஆயினும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசின் கூற்றை மறுதலித்தன. மகாநாட்டில் சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானத்தின் சில பகுதிகள் இவை:

- பாகுபடுத்தும் வடிவமான சாதி அமைப்பு சரித்திர ரீதியாக சமூகங்களை பிளவு படுத்தி உள்ளது. தீண்டாமை முறையானது மனித உரிமைகளை மீறவும், வன்முறைகளை தூண்டவும் வழி வகுக்கின்றது.
- மனிதத்திற்கு விரோதமான சாதிப்பாகுபாடு, மதத்தாலும், கலாச்சாரத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட பொய்யான சித்தாந்தம் மீது கட்டப்பட்டுள்ளது. தென் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் வாழும் கோடிக்கணக்கான தாழத்தப்பட்ட மக்களை இது பாதிக்கின்றது.
- தூய்மையற்றவர்கள் என்று சொல்லி ஒதுக்கும் தீண்டாமை முறையானது, அம்மக்களின் வழிபாட்டு உரிமையை மறுப்பதுடன், கீழ்த்தரமான வேலைகளை செய்யுமாறு பணிக்கப்படுகின்றனர்.
- தலித் மக்கள் தமது உரிமைகளுக்காக போராடும் போதெல்லாம் அவர்கள் மீது சொத்துகளை அழித்தல், பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற வன்முறைகள் ஏவிவிடப்படுகின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"இனி" (அக்டோபர் 09 ) சிற்றிதழில் பிரசுரமாகியது.

Monday, July 13, 2009

நீதிபதியின் முன்னிலையில் நிறவெறிப் படுகொலை

ஜெர்மனி, டிரெஸ்டென் நகரம். நீதிமன்றத்தில் வைத்து ஒரு எகிப்திய கர்ப்பிணிப் பெண்மணி, வெள்ளை நிறவெறியன் ஒருவனால் குத்திக் கொலை செய்யப் பட்டார். 16 கத்திக்குத்துகளை வாங்கி ஸ்தலத்திலேயே மரணமடைந்த மார்வா என்ற எகிப்தியப் பெண்ணும், கொலையாளியான அலெக்ஸ் என்ற ஜெர்மன் நபரும் அயலவர்கள். வெளிநாட்டவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அலெக்ஸ், பூங்காவில் தன் 3 வயது மகனோடு பொழுதுபோக்கிக் கொண்டிருந்த 4 மாத கர்ப்பிணியான முக்காடு போட்டிருந்த மார்வாவைப் பார்த்து "பயங்கரவாதி" என தூற்றியுள்ளார்.

மார்வா இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததால், இனவெறிப் பாகுபாட்டு குற்றச்சாட்டில் அலெக்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அலெக்ஸ் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு அலெக்சிற்கு பாதகமாக அமைந்திருந்தது. விசாரணையின் போது, மார்வா சாட்சியமளித்திருந்தார். நீதிபதி தீர்ப்புக் கூறிய பின்னரே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் மூன்று வயது மகனின் கண் முன்னால் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் இருந்து தனது மனைவியைப் பாதுகாக்க முயன்ற கணவனை, காவலில் நின்ற போலீஸ்காரர் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார். தாக்குபவர் யார் என்று தெரியாமல் தடுமாற்றத்தில் சுட்டு விட்டதாக, பொலிஸ் பின்னர் விளக்கமளித்தது. இந்த சம்பவம் குறித்து ஜெர்மன் பத்திரிகையில் வந்த செய்தி.

இதுவரை காலமும் ஒரு மூன்றாம் உலக நாட்டில் மட்டுமே, இது போன்ற நீதிமன்றக் கொலைகள் நடக்க வாய்ப்புண்டு, என்று பலர் நினைத்திருக்கலாம். பட்டப்பகலில், பலர் பார்த்திருக்கையில், அதுவும் நீதிமன்றத்தினுள் எப்படி இந்தக் கொலை நடக்கலாம்? என்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "நாகரீகமடைந்த மக்கள் வாழும்" ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், இஸ்லாமியர் மீதான வெறுப்பின் விளைவாக நடந்த இந்தக் கொலை, ஜெர்மனியில் புத்திஜீவிகள் மட்டத்தில் மட்டும் சிறு சலசலப்பை தோற்றுவித்துள்ளது. மற்றும் படி, எந்த ஒரு ஐரோப்பிய ஊடகமும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. சில நாளேடுகளில் இந்தச் செய்தி, உள்பக்கத்தில் ஒரு சிறு மூலையில் பிரசுரமாகி இருந்தது. ஒரு வேளை பலியானவர் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்தவராக இருந்து, குத்திய கொலையாளி ஒரு இஸ்லாமிய எகிப்தியர் ஆக இருந்திருந்தால்? அனைத்து ஊடகங்களிலும் அதுவே அன்று முதன்மைச் செய்தியாக இருந்திருக்கும். "அல் கைதாவின் பயங்கரவாதத் தாக்குதல்" என்று சர்வதேச ஊடகங்களிலும் ஒரு சுற்று வந்திருக்கும். மேற்குலகில் இனவாதம் எப்படி நிறுவனமயப்பட்டுள்ளது என்பதற்கு, மேற்குறிப்பிட்ட செய்தி வழங்கல் நெறிமுறை ஒரு உதாரணம்.

ஜெர்மனியில் இனவெறிக்கு பலியான எகிப்தியப் பெண் மார்வாவின் மரணச் சடங்கு, அவரது சொந்த ஊரான அலெக்சாண்ட்ரியா நகரில் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்கள். எகிப்தியப் பத்திரிகைகள் "ஹிஜாப்பிற்காக (முஸ்லிம் பெண்கள் தலையில் அணியும் முக்காடு) தியாக மரணத்தை தழுவிக்கொண்டவர்." என்று புகழாரம் சூட்டின. பல அரசியல் தலைவர்களும் மார்வாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர். ஐரோப்பாவில் அரபு மக்களின் நலனுக்காக பாடுபடும் AEL மட்டும் கண்டன அறிக்கையை வெளிவிட்டது. அந்த அமைப்பின் தலைவர் அபு ஜாஜா "ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம் மக்களையும், அவர்களது மதத்தையும் கிரிமினல் மயப்படுத்தியதன் விளைவு இது." என்று தெரிவித்துள்ளார்.

இது இப்படியிருக்க, வட அயர்லாந்து தலைநகரமான பெல்பாஸ்டில் வாழும் அந்நியர்களை, குறிப்பாக இந்திய, முஸ்லிம், ரொமேனியா சமூகங்களை சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற வேண்டுமென நிறவெறி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. Ulster Young Militants (UYM) என்ற, முன்னாள் புரட்டஸ்தாந்து தீவிரவாத அமைப்பான Ulster Defence Association னின் இளைஞர் முன்னணி, வெளிநாட்டவரை விரட்டும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கடிதங்கள், பெல்பாஸ்டில் வாழும் வெளிநாட்டவர் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. "ஜூலை 12 ம் திகதிக்கு முன்னர், வெள்ளையரல்லாத அந்நியர்கள் யாவரும் வட அயர்லாந்தை விட்டு வெளியேறி விட வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 ம் திகதி, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களின் பண்டிகை தினம் என்பதும்,Ulster Defence Association முன்னர் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசால் நிர்வகிக்கப்பட்ட துணைப்படை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட செய்தி இந்திய செய்தி ஊடகங்களிலும் வந்திருந்தது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர் என்ற படியால் தான் விஷேச கவனம் செலுத்தி வெளியிட்டிருந்தன. ஏற்கனவே ஜூன் 17 ம் திகதிக்கு முன்னர், ரொமேனியர்களை வெளியேறும் படி கோரி இதே அமைப்பினால் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவ்வாறு வெளியேறாத பட்சத்தில், அவர்களின் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்றும் பயமுறுத்தப்பட்டனர். ரொமேனியா குடும்பம் ஒன்றின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர், பெல்பாஸ்டில் வசித்த அனைத்து ரொமேனியா குடும்பங்களும் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அரச செலவில், விமானம் மூலம் ரொமேனியா திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஜூலை 2 ம் திகதி, நிறவெறிக்கு எதிரான ஐரிஷ் பிரஜைகள், பெல்பாஸ்ட் நகரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இதன் மூலம் அனைத்து ஐரிஷ் மக்களும் நிறவெறியை ஆதரிப்பவர்கள் அல்ல என காட்ட விரும்பினர். இந்த ஊர்வலத்தில் பேசிய தொழிற்சங்க தலைவர் ஒருவர், "தொழிற்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வெளிநாட்டு தொழிலாளர்கள் அவசியம். ஐரிஷ் மக்களின் சமூகநலன் காப்புறுதிக்கு அவர்கள் பங்களிப்பு செலுத்துகின்றனர். இனப்பாகுபாடு காட்டுவோரை தண்டிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.

Sunday, April 26, 2009

மனிதக் காட்சிச் சாலை


வெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் "மனிதக் காட்சி சாலைகள்" (Human Zoo) ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளெங்கும் பிரபலமாக இருந்துள்ளன. காலனியாதிக்க நாடுகள், தமது காலனிகளில் காணப்பட்ட, "விசித்திரமான" மனிதர்களை பிடித்து வந்து, தமது மக்களுக்கு காட்சிப் படுத்தினர். இந்தியர்கள், தமிழர்கள், அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள், செவிந்தியர்கள், அபோரிஜின்கள் இவ்வாறு பல வேறுபட்ட இனங்களில், உதாரணத்திற்கு சிலரை தெரிந்தெடுத்து, ஐரோப்பிய நகரங்களுக்கு கூட்டிக்  கொண்டு வந்தனர்.

இந்த "விசித்திரமான  விலங்குகளை" அருங்காட்சியகத்தில் மட்டும் கொண்டு வந்து வைக்கவில்லை. நகரில் உள்ள, வழமையான மிருகக்காட்சிச் சாலையில் ஒரு பகுதி, இதற்கென ஒதுக்கப்பட்டது. சில நேரம் நகரங்களில் நடக்கும் கானிவல் களியாட்ட நிகழ்வுகளின் போதும், கண்காட்சிகளில் வைக்கப்பட்டனர். குரங்கை வைத்து வித்தை காட்டுவது போல, மனிதர்களை  வைத்து சிலர் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.

" காட்டுமிராண்டி பச்சை மாமிசம் உண்ணும் காட்சியை பார்க்க வாரீர்!" என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பார்வையாளரை கவர்ந்திழுத்தார்கள். பெரும்பாலான காட்சிகளில், இந்த காலனிய மக்கள், தமது பாரம்பரிய குடிசைக்குள், பாரம்பரிய உடையில் இருப்பார்கள். பாரம்பரிய நடனமும் நிகழ்த்திக் காட்ட வேண்டும். சில நேரம் சண்டைக் காட்சி நாடகமும் அரங்கேறும். இவர்களைப் பார்த்து இரசிக்கும் வெள்ளையினத்தவர்கள், காலனி நாடுகளின் மக்கள், விலங்குகளை காட்டிலும் கொஞ்சம் அதிகமாக வளர்ச்சி  அடைந்துள்ளதாக கருதிக் கொள்வார்கள்.

1875 லிருந்து 1940 ம ஆண்டு வரை, அதாவது காலனியாதிக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில், "மனிதக் காட்சிச் சாலைகள்" பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்பட்டன. ஜெர்மனியில் இது "Völkerschau" என்றும், இங்கிலாந்தில் "Human Zoo" என்றும் அழைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த வெள்ளையின மக்கள், தம்மை விட வேறுபட்ட மனிதர்களைப் பார்த்திராததால், அவர்களுக்கு இது புதுமையாக இருந்தது. வித்தியாசமான தோற்றம், மேனி நிறம், பழக்க வழக்கங்கள் என்பன அவர்களை கவர்திழுத்தன. மேலும் பயங்கர திகில் காட்சிகளைப் பார்ப்பது போன்ற ஆர்வமும் அவர்கள் மத்தியில் காணப்பட்டது. திகில் காட்சிகளுக்கு மெருகூட்டுவதற்காக, சில நேரம் மண்டை ஓடுகள் காட்சிப் படுத்தப்பட்டன. புராதன காலத்து காட்டுமிராண்டிகள், மனித தலை கொய்வதே வேலையாக இருப்பவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு.

வெள்ளையின வியாபாரிகளுக்கு காலனிகளில் உயிருள்ள மனிதர்கள் மட்டும் தேவைப்படவில்லை. வெப்ப மண்டல நாடுகளில் வாழும் பல்வேறு இனத்தவர்களின் மண்டையோடுகளும், எலும்புக்கூடுகளும் கூட தேவைப்பட்டன. ஐரோப்பிய நகரங்களின் அருங்காட்சியகங்களில் வைப்பதற்கும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கும் அவை பயன்படுத்தப்பட்டன.

காலனிகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் மண்டையோடுகளும், எலும்புக் கூடுகளும் இதற்கென எடுத்து வரப்பட்டன. மண்டையோடு வாங்கி விற்கும் முகவர்கள், காலனிய இந்தியாவின் தெருக்களிலும் அலைந்து திரிந்து மண்டையோடுகளை சேகரித்ததாக, நெதர்லாந்தின் லைடன் நகர அருங்காட்சியக நிர்வாகி தெரிவித்தார். (அந்தக் காலங்களில் ஏராளமான இந்தியர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்ததாலும்,போர்களினாலும், மண்டையோடுகள் தாராளமாக கிடைத்து வந்தன.)

காலனிய மக்களை நிறவெறிக் கண்ணோட்டத்துடன் பார்த்து ரசிக்கும் கலாச்சாரம் இன்றைக்கும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றது. ஐரோப்பிய நகரங்களில் "காலனிய மக்களின் கண்காட்சிகள்" யாவும், அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்ட காலத்தில் தான் இடம்பெற்றன. ஐரோப்பியர்கள் தமது காலனிய அடிமை மக்களை நாகரீகமடையாத காட்டுமிராண்டிகளாக மட்டும் கருதவில்லை. பிரான்ஸின் காலனிகளான அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற அரபு நாடுகளை சேர்ந்த இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள், ஐரோப்பிய நகரங்களில் சூடாக விற்பனையாகின.

இன்றைக்கு சில தொலைக்காட்சித் தொடர்கள், "கலாச்சார பரிமாற்றம்" என்ற பெயரில், நிறவெறிக் கூத்துகளை அரங்கேற்றுகின்றன. இந்தத் தொடரில், தெரிந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய குடும்பங்கள், ஆப்பிரிக்க பழங்குடியின குடும்பங்களின் வீடுகளில் சில காலம் வசிப்பார்கள். பதிலுக்கு விருந்துபசரித்த ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பா வந்து சில காலம் வசிப்பார்கள். இது தான் தொடரின் சாராம்சம். ஆப்பிரிக்க பழங்குடியின குடியிருப்புகள் பாரதிராஜா படத்தில் வரும் கிராமங்களைப் போல வசதிக் குறைபாடுகளுடன் காணப்படும். படப்பிடிப்பின் போது, பழங்குடியின குடும்பத்தவர்கள், செல்லிடத் தொலைபேசி, கைக்கடிகாரம் போன்றவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. தப்பித் தவறியும், ஒரு வார்த்தை ஆங்கிலம் பேசக்கூடாது. 

ஆப்பிரிக்க பழங்குடியின குடும்பங்களும், பணத்திற்காக படப் பிடிப்பாளர்கள் கூறிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டனர். அதை விடக் கொடுமை, ஆப்பிரிக்க குடும்பங்கள் ஐரோப்பிய நகர வாழ்க்கைக்கு பழக்கப்படாதவர்களாக பல வேடிக்கையான காரியங்களை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டது தான். தொலைக்காட்சி பார்வையாளர்கள், பட்டணத்தில் பட்டிக்காட்டானின் அவதிகளைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்கள். மனிதக் காட்சி சாலைகள், வெறும் கோட்பாடாக இருந்த  நிறவெறிப் பாடத்தை, மக்களுக்கு நடைமுறையில் கற்பித்து வந்தன. அதன் தாக்கம், பல தலைமுறைகளுக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.



மேலதிக தகவல்களுக்கு:
Human zoo