"பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து"
- பண்டைய தமிழ் பாட்டாளி வர்க்க போர் எதிர்ப்புக் கோஷம்.
மேற்படி பழமொழியின் நேரடி அர்த்தம் சிலருக்கு ஏற்க முடியாதுள்ளது. குறிப்பாக தமிழ் மேட்டுக்குடி பூர்ஷுவா வர்க்கத்தினர், "இந்தப் பழமொழி தமிழர்களை தேசப் பற்று இல்லாதவர்களாக சித்தரிக்கிறது" என்று பதறுகிறார்கள். அதனால் பல வகையான விளக்கங்கள் கொடுத்து பழமொழிக்கு வேறு அர்த்தம் கற்பிக்க முனைகிறார்கள். அவை பெரும்பாலும் வலிந்து புகுத்திய, இட்டுக் கட்டிய கற்பனைகளாக உள்ளன.
உண்மையில் இந்தப் பழமொழி பண்டைய தமிழ் உழைக்கும் மக்களை நோக்கி சொல்லப் பட்டிருக்க வேண்டும். இன்றுள்ளதை போன்றே அன்றும் வறுமையில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களில் இருந்தே காலாட் படைக்கு ஆட்கள் சேர்க்கப் பட்டனர். அன்றிருந்தவை எல்லாம் கூலிப் படைகளே. வாழ் நாள் முழுவதும் பட்டினி கிடக்கும் மக்கள் மத்தியில் கூலிக்கு போரிட ஆள் திரட்டுவது மிகச் சுலபம்.
வறுமையில் வாடும் உழைக்கும் வர்க்க மக்கள், வழமையாக கோயில்களில் கொடுக்கப் படும் அன்னதான பந்திகளில் முண்டியடிப்பது வழமை. இது ஒரு வகையில் அவர்களை பட்டினி கிடந்து சாக விடாமல் பாதுகாக்கும் அரச மானியமாக செயற்பட்டது. அன்றாடம் அரைப் பட்டினியுடன் படுப்பவர்கள் அன்னதானங்களில் வயிறாற உண்டு மகிழ்ந்தனர். எண் சாண் உடம்பிற்கு உணவே பிரதானம் என்பதால் "பந்திக்கு முந்து" என்று சொல்லி வைத்தனர்.
பண்டைய காலங்களில் தேசிய இராணுவம் இருக்கவில்லை. பணம் கொடுக்கும் அரசர்களுக்கு விசுவாசமான கூலிப் படைகளே இருந்தன. காலாட் படையினராக சேர்த்துக் கொள்ளப் படும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த வீரர்கள், பீரங்கித் தீனியாக பலி கொடுக்கப் பட்டனர். அதனால் தான் "படைக்கு பிந்து" என்று சொல்லி வைத்தனர்.
உலகில் இது வரையான வரலாறுகள் யாவும் வர்க்கப் போராட்ட வரலாறு என்றார் கார்ல் மார்க்ஸ். அதன் படி பண்டைய தமிழர் மத்தியிலும் வர்க்க விழிப்புணர்வு இருந்திருக்க வேண்டும்.
செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மன்னர், நிலப்பிரபுக்கள், மற்றும் அவர்களுடைய குடும்பங்களும் எதற்காக பந்திக்கு முந்த வேண்டும்? அவர்களுக்குத் தான் இருந்த இடத்தில் அறு சுவை உணவு உண்ணும் வசதி இருக்கிறதே?
அதே மாதிரி, மேல்தட்டு வர்க்கத்தினர் படைக்கு முந்துவதில்லை. காலாட் படையினரை முன்செல்ல விட்டு, இவர்கள் பாதுகாப்பாக பின்னால் செல்வார்கள். சாதாரண வறிய குடும்பப் பின்னணி கொண்ட படைவீரர்கள் தான் போரில் பெருமளவில் கொல்லப் படுவார்கள். ஆகையினால், படைக்கு பிந்து என்பது அவர்களுக்காக சொல்லப் பட்ட அறிவுரை.
********
தமிழ் பேசும் பூர்ஷுவாக்கள், தமிழ்ப் பழமொழிகளையும் தமது வர்க்க நலன்களுக்கு ஏற்றவாறு திரித்து, வேடிக்கையான விளக்கம் கூறிக் கொண்டிருக்கின்றனர். "பழமொழியும் (பிழையான) பொருளும்" என்ற தலைப்பில் அவற்றிற்கு வேடிக்கையான அர்த்தங்கள் கற்பித்து, நூல்களாக அச்சிட்டும், ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்று இன்னொரு பழமொழி: //வீட்டுக்கு வீடு வாசற்படி//
இதற்கு தமிழ் பூர்ஷுவாக்கள் கூறும் வேடிக்கையான ஆன்மீக விளக்கம்:
//மேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மீகம் என்னும் வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.//
இது மிகவும் அபத்தமான பொருள். பொதுவாக பழமொழிகள் உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இருந்தே உருவாகின்றன. அதனால் தான் அவை இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய மொழி நடை கொண்டுள்ளன.
அன்றும் இன்றும் ஆன்மீகம் சார்ந்த சிக்கலான கதையாடல்கள் மேட்டுக்குடியினர் கலாச்சாரமாகவே இருந்து வருகின்றன. சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் அந்தளவு ஆழமான ஆன்மீகத் தேடல் இருப்பதில்லை.
வீட்டுக்கு வீடு வாசற்படி இருப்பது போன்று, உலகில் உள்ள எல்லாக் குடும்பங்களிலும் ஒரே மாதிரியான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைத் தான் பழமொழி கூறுகின்றது. அது தான் உண்மையும் கூட.
தமிழ் பூர்ஷுவாக்கள் இந்தப் பழமொழியை திரிக்க வேண்டிய காரணம் என்ன? அங்கே தான் அவர்களது வர்க்க நலன் மறைந்துள்ளது.
உதாரணத்திற்கு, ஒரு சராசரி தமிழ்க் குடும்பம் எதிர்நோக்கும் அதே பிரச்சினைகளைத் தான் சராசரி சிங்களக் குடும்பமும் எதிர்கொள்கிறது. அதே பிரச்சினைகள் ஐரோப்பிய, ஆப்பிரிக்கக் குடும்பங்களிலும் காணப் படும்.
சுருக்கமாக: உலகில் உள்ள அத்தனை உழைக்கும் வர்க்க மக்களுக்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகள் உள்ளன.
உலகளாவிய பாட்டாளிவர்க்க ஒருமைப் பாட்டை அடிப்படையாகக் கொண்ட மேற்படி சிந்தனை பண்டைய தமிழர்கள் மத்தியிலும் இருந்திருக்க வேண்டும். அதனால் "வீட்டுக்கு வீடு வாசற்படி" என்ற சுலோகம் மூலம் வர்க்க ஒற்றுமையை வலியுறுத்தி வந்தனர்.
தமது சுயநலன்களுக்காக தேசியவாத, இனவாதக் கருத்துக்களை காவித் திரியும் மேட்டுக்குடி தமிழ் பூர்ஷுவாக்கள், இது போன்ற பழமொழிகளை திரிப்பது எதிர்பார்க்கத் தக்கதே. உழைக்கும் மக்களை பிரித்தாள்வதை குறிக்கோளாக கொண்டவர்கள், பழமொழியின் உண்மையான அர்த்தத்தை சிதைத்து, ஆன்மீக வர்ணம் பூசி பரப்பி வருகின்றனர்.
*******
பழமொழிகளுக்கு தமிழ் பூர்ஷுவாக்களின் தவறான விளக்கம்....
இந்த வரிசையில் இன்னொரு பழமொழி: "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்."
இதற்கு முதலாளியவாதிகள் கற்பிக்கும் பிழையான பொருள்:
//ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே "உண்மையான"(?) பொருள்.//
இதுவும் ஒரு பொருத்தமற்ற வேடிக்கையான கற்பனை. அத்துடன் தற்கால முதலாளிய கோட்பாட்டுக்கு அமைய தனிநபர் வாதத்தை தூக்கிப் பிடிக்கிறது. மேற்படி பழமொழி பகிரங்கமாக பொதுவுடைமை பேசுவதால், அதற்கு மாற்றாக தனியுடைமை கொள்கையை திணிக்கிறது.
"அனைவரும் ஒருவருக்காக, ஒருவர் அனைவருக்குமாக" என்ற பொதுவுடைமைக் கருத்து மேற்படி பழமொழியில் எதிரொலிக்கிறது. பண்டைய காலத் தமிழர்கள் ஒரு பொதுவுடைமை சமுதாயத்தில் வாழ்ந்தனர். அதில் சிலர் "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கும்" கடமையில் இருந்தனர். அதே நேரம் தன் பிள்ளையை தனியாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஒட்டு மொத்த சமுதாயமும் அந்தப் பிள்ளைக்கு பாதுகாவலர்களாக இருந்தனர்.
இது போன்ற சமூக அமைப்பு அமெரிக்க செவ்விந்தியர் மத்தியிலும் காணப் பட்டது. அதைப் பல மானிடவியல் ஆய்வாளர்கள் எழுதி உள்ளனர். இங்கே நான் கூறும் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள், செவ்விந்தியர் பற்றிய சமூகவியல் நூல்களில் வாசித்து அறியலாம்.
எது எப்படியோ, 2000 வருட கால நிலப்பிரபுத்துவ அமைப்பும், 150 வருட கால முதலாளிய அமைப்பும், பழந்தமிழரின் பொதுவுடைமை வாழ்க்கை முறையை அந்நியப் படுத்தி விட்டன. தற்காலத்தில் "நான், எனது குடும்பம்" என்று சுயநலமாக சிந்திக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது.
தற்கால முதலாளித்துவ சமுதாயத்திற்கு ஏற்றவாறு "ஊரான் வீட்டுப் பிள்ளையான கர்ப்பிணி மனைவி" என்று தலைகீழாக சிந்திக்கிறார்கள். பண்டைய காலத்தில் யாரும் கட்டிய மனைவியை ஊரான் வீட்டுப் பிள்ளையாக கருதுவதில்லை. ஏனெனில் ஒரு பொதுவுடைமை சமுதாயத்தில் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்ந்தனர்.
********
No comments:
Post a Comment