Showing posts with label இலங்கை அரசியல். Show all posts
Showing posts with label இலங்கை அரசியல். Show all posts

Saturday, October 27, 2018

இலங்கையில் திடீர் சதிப்புரட்சி! மைத்திரி- மகிந்த அரசின் "பொல்லாட்சி" ஆரம்பம்!!


26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், நாட்டிலும் பெரும் குழப்பங்களை உண்டாக்கி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரையில், தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று பல நாடுகளின் அரசுகள் எச்சரித்துள்ளன.

ஏற்கனவே பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று அறிவித்துள்ளார். இதனால் தற்போது இலங்கையில் இரண்டு பிரதமர்கள் உள்ளனர். விரைவில் பன்முக அழுத்தம் காரணமாக ரணில் பதவியை விட்டு விலகிச் செல்லலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2) கீழ், ஜனாதிபதி திடீரென பிரதமரை பதவி விலக்குவதற்கான காரணம் எதுவுமில்லை. பிரதமர் தானாக பதவியை துறந்தால், அல்லது அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாது போனால் மட்டுமே, ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்க முடியும்.

ஜனாதிபதி மைத்திரியின் செயலானது அரசமைப்பு சட்டத்திற்கு முரணாக இருப்பதானது, இலங்கையில் ஒரு சதிப்புரட்சி நடப்பதை சுட்டிக் காட்டுகின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்களை வைத்து, ரணிலுக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைகீழாக நின்றாலும் மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்காது என்று தமிழர் தரப்பில் சொல்லப் படுகின்றது.

இந்த விடயம், மைத்திரி, மகிந்தவுக்கும் தெரியாமல் இருக்காது. ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்பார்க்காமல், மகிந்த பிரதமராக பதிவிப் பிரமாணம் செய்து வைக்கப் படவில்லை. ஒரு வேளை, பாராளுமன்ற பெரும்பான்மை மகிந்தவுக்கு கிடைக்காவிட்டால், பெரும் நெருக்கடி ஏற்படும். அதற்குப் பிறகு நாட்டில் ஏற்படப் போகும் குழப்பங்கள் பாராளுமன்றத்தை கலைக்கும் அளவுக்கும் போகலாம். அதனால், நவம்பர் பதினாறு வரையில் பாராளுமன்றம் கூடுவது ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை இரவு வெளியானதையும் அவதானிக்க வேண்டும். எவராவது அரசியமைப்பு சட்டத்தை காரணம் காட்டி, நீதிமன்றத்தை நாடுவதென்றாலும், திங்கள் வரை பொறுத்திருக்க வேண்டும். அதற்குள் வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி, மைத்திரியும், மகிந்தவும் கூட்டுச் சேர்ந்து தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி விடுவார்கள். ரணிலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஏற்கனவே இருபது பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள். 

காவல்துறையில் பணியாற்றுவோரின் லீவுகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டுள்ளன. இலங்கையில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை காணப்படுகின்றது. இராணுவம், காவல்துறையில் மகிந்த ஆதரவாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர். ஏற்கனவே, அரச ஊடகம் உட்பட, பெரும்பாலான சிங்கள/ஆங்கில வெகுஜன ஊடகங்கள் அவர்களது கைகளுக்குள் விழுந்து விட்டன.

இதற்குள் சிலர் இந்தியா, சீனாவை இழுத்து முடிச்சுப் போடுவது வேடிக்கையானது. இலங்கையில் வர்த்தகம் தவிர்ந்த, அரசியல் நிலவரம் தொடர்பாக, சீனா, இந்தியாவுக்கு இடையில் எந்த பகை முரண்பாடும் இல்லை. 

சில தினங்களுக்கு முன்னர், RAW தன்னைக் கொல்ல சதிசெய்வதாக ஜனாதிபதி அறிவித்து இருந்தார். அந்தக் காரணத்தை காட்டி ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப் பட்டார். இருப்பினும் இந்தியாவிலும், இலங்கையிலும் இந்த விடயத்தை யாரும் பெரிது படுத்தவில்லை.

அனேகமாக, தற்போது நடக்கும் சதிப்புரட்சி திட்டங்களை மறைப்பதற்காக, "இந்தியா - சீனா முரண்பாடு" எனும் கதையை மைத்திரியே உருவாக்கி பரப்பி விட்டிருக்கலாம். மகிந்த ராஜபக்சே பிரதமராக வருவதால், அல்லது மீண்டும் ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

மைத்திரி - மகிந்த சதிப்புரட்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில் நரேந்திர மோடியின் அரசியல் ஆலோசகர் சுப்பிரமணியன் சுவாமி, மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசி உள்ளார். ஆகவே, இதற்கு மோடி அரசின் ஆசீர்வாதம் இருப்பதாக நம்ப இடமுண்டு. 

இதற்கிடையே, வட இலங்கையில், இந்துத்துவா சார்பான, தமிழ்த்தேசிய பழமைவாதியான விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்ததற்கு பின்னணியிலும் இந்தியாவின் கை இருக்கலாம். இந்திய தூதுவராலயத்தின் அனுசரணையில் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இந்து மத அடிப்படைவாத சக்திகளின் ஊடுருவலும் நடந்துள்ளது. இதுவரை காலமும் போலியாக  தமிழ்த்தேசியம் பேசியவர்களை, அசல் இந்து மத அடிப்படைவாதிகளாக மாற்றி உள்ளமை இந்தியாவின் வெற்றி எனலாம். 

இந்தியாவில் அரச இயந்திரம் பாசிச மயப்பட்டு வருவதைப் போன்ற அதே பாணியில் இலங்கை அரசியலும் பாசிசமயமாக்கப் படுகின்றது. மகிந்தவின் பிரதமர் பதவியேற்பு குறித்து, அவரது சகோதரர் கோத்தபாய வரவேற்றுப் பேசிய நேரம், பக்கத்தில் 'ராவண பலய' தலைவரும் இருந்தார். சிங்கள-பௌத்த பாசிச இயக்கமான 'ராவண பலய', கடந்த காலங்களில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

மகிந்த ராஜபக்சே பிரதமரான விடயம், "அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு உவப்பானதல்ல" என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. இதற்குப் பின்னணியில் இந்தியாவின் ஆசீர்வாதம் இருந்தது எந்தளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு அமெரிக்காவின் ஆசீர்வாதமும் இருந்திருக்க வேண்டும்.

பத்தாண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சே சர்வாதிகார ஆட்சி நடத்தியதால், 2015 பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டு, மைத்திரி - ரணில் தலைமையிலான "நல்லாட்சி" அரசாங்கம் வந்தது. ஆனால், காலப்போக்கில் "நல்லாட்சி" அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.

மைத்திரி- ரணிலின் நல்லாட்சி அரசு, தம்மால் ஜனநாயகம் மீட்கப்பட்டதாக சொல்லிக் கொண்டாலும், பழைய பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப் படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்து வந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும், எதிர்ப்புணர்வும் அதிகரித்தது. இதற்கிடையே, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரம் காரணமாக, முஸ்லிம் மக்களின் ஆதரவும் வெகுவாக குறைந்தது.

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசு இருப்பதால், சிங்கள மக்கள் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. சிங்கள மக்கள் மத்தியிலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவு குறைந்து வருகின்றது. 

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் புதிய கட்சிக்கு பெருமளவு வாக்குகள் விழுந்ததில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம். மகிந்த ராஜபகச்வுக்கு ஆதரவான வாக்குகள் எல்லாம் இனவாத ஓட்டுகள் அல்ல. பல வாக்காளர்கள் ஆளும் கட்சி மீதான அதிருப்தி காரணமாகவும் மகிந்தவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

எரிபொருள், உணவுப்பொருட்களின் விலையேற்றம், இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் இன வேறுபாடின்றி பாதித்து வருகின்றது. இலங்கையில் பொருட்களின் விலைகள் ஐரோப்பிய தரத்திலும், தனிநபர் வருமானம் ஆப்பிரிக்கத் தரத்திலும் உள்ளன. இதனால் மைத்திரியின் "நல்லாட்சி" அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடப்பது வழமையானது. இது மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது.

இலங்கையில் தற்போதுள்ள நிலவரத்தின் படி, ரணில் ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களில் இறங்கலாம் என்று சர்வதேச சமூகம் (அதாவது: மேற்குலம்) எதிர்பார்க்கின்றது. மகிந்த ஆதரவாளர்கள், ரணில் ஆதரவாளர்கள் என்ற பிரிவினை, இலங்கையின் தற்கால அரசியலில் பிரதானமான முரண்பாடாக காட்டப்படுகின்றது.

இருப்பினும், நாட்டில் ஏற்படும் குழப்பகரமான சூழ்நிலை விரைவில் பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறலாம். அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு மகிந்த ராஜபக்சே சரியானவர் என்பதை கணித்து வைத்துள்ளனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. அதனால் தான் இதை சதிப்புரட்சி என்று அழைக்க வேண்டியுள்ளது.

இது போன்ற நிலைமைகளில், அதாவது சதிப்புரட்சிகளில் எப்போதும் இராணுவம் சம்பந்தப் பட வேண்டிய அவசியம் இல்லை. பல நாடுகளில் அரச மாளிகைக்குள் சதிப்புரட்சி நடந்து ஆட்சி மாற்றங்கள் நடந்துள்ளன. இதற்கு முன்னர் ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில், அல்லது லத்தீன் அமெரிக்க நாட்டில் இப்படியான சதிப்புரட்சி நடந்ததைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம்.

அப்படியான நாடுகளை "வாழைப்பழக் குடியரசு" என்று அழைப்பார்கள். அதாவது, ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கும் நேரத்தில், திடீரென ஆட்சி மாற்றம் நடக்கும். மக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஒரு பாசிச நிர்வாகக் கட்டமைப்பு நிலைநிறுத்தப் பட்டிருக்கும். மனித உரிமை பற்றிப் பேசினால் சிறையில் அடைத்து விட்டு மறுவேலை பார்ப்பார்கள். தேர்தல் ஜனநாயகம் மூலம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாவிட்டால், பாசிச சர்வாதிகாரத்தை கையில் எடுப்பது, உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுக்களின் வாடிக்கை. இலங்கை அரசும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

Friday, February 17, 2017

கேப்பாபுலவு, ஜல்லிக்கட்டு : இரண்டு போராட்டங்களின் கதை

ஈழத்தில் ஒரே காலகட்டத்தில் நடந்த இரண்டு போராட்டங்களின் கதை:
1. ஜல்லிக்கட்டு - ஈழத் தமிழ்த் தேசியவாதிகளின்  போராட்டம் 
2. கேப்பாபுலவு - ஈழத் தமிழ் மக்களின்  போராட்டம் 

இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், யாழ் நகரிலும், பின்னர் கொழும்பு நகரிலும் ஆதரவுப் போராட்டம் நடந்தது. சமூக வலைத்தளம் மூலம் அழைப்பு விடுக்கப் பட்ட தன்னெழுச்சியான போராட்டம் என்று அறிவிக்கப் பட்டது. போருக்கு பின்னரான காலத்தில், முன்னர் எப்போதும் இல்லாதவாறு, பெருமளவு எண்ணிக்கையான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ஈழத்து ஜல்லிக்கட்டு போராட்டங்களில், ஐநூறு, ஆயிரம், அல்லது ஐயாயிரம் பேர் வந்திருந்ததாக எடுத்துக் கொள்வோம். அதிலே பங்குபற்றியவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்க இளைஞர்களாக இருந்தனர். யாழ்நகரில் நடந்த போராட்டத்தில், "ஏன் சாதாரண மக்களை காணவில்லை?" என்று பிபிசி தமிழோசை நிருபர் கேட்ட பொழுது, "இனிமேல் தான் மக்கள் வருவார்கள்..." என்று பதிலளித்தனர். ஆனால், அந்த போராட்டம் தொடரவுமில்லை, தமிழ் மக்கள் வரவுமில்லை.

தமிழ்த் தேசியவாத, தமிழ் இன உணர்வு அரசியல், எப்போதுமே தமிழ் மத்தியதர வர்க்க அரசியலாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் அது தான் உண்மை. "தமிழன்டா!", "தமிழன் என்று சொல்லடா!" போன்ற இனப்பெருமை பேசும் ஆணாதிக்க கோஷம் எதுவும் பெரும்பான்மை தமிழ் மக்களை கவரவில்லை. இது தமிழ்த் தேசியவாதிகள் எந்தளவுக்கு மக்களிடம் இருந்து அந்நியப் பட்டிருக்கின்றனர் எனக் காட்டுகின்றது.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம், மற்றும் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் மக்கள் தானே என்று வாதாடலாம். உண்மையில் அதற்குக் காரணம் "தமிழ் இன உணர்வு" என்று நினைத்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றுவதற்கு சமமாகும். மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை தமக்குத் தெரிந்த வழிகளில் வெளிப்படுத்துவார்கள். ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு ஓட்டுப் போட்டதும் அதனால் தான். அவ்வாறு தான் மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பெருமளவு மத்தியதர வர்க்க இளைஞர்கள் வந்ததற்கு வலுவான காரணம், அது எந்த வகையிலும் அரசுக்கு எதிரான போராட்டம் இல்லையென்பது தான். பலர் இதை நம்ப மறுப்பார்கள். "தமிழன்டா, தமிழன் என்று சொல்லடா" என்று ஒற்றுமையாக கோஷம் போடுவதால், சிறிலங்கா அரசு தமிழரின் சக்தி கண்டு அஞ்சி நடுங்கும் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம். தமிழ்த் தேசியம் பேசுவதும், தமிழ் உணர்வு கொள்வதும் அரச கட்டமைப்பை பாதுகாக்கும் இன முரண்பாட்டு அரசியல் என்பதை பலர் அறிவதில்லை.

இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் தான் போராடுவார்கள். இழப்பதற்கு எல்லாம் இருப்பவர்கள் போராட வர மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சென்றவர்கள் பெரும்பாலும் உத்தியோகம் பார்க்கும் வசதியான இளைஞர்கள், அல்லது உயர்கல்வி கற்கும் மாணவர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்வதால், தமது கல்விக்கோ, வேலைக்கோ எந்த ஆபத்தும் வராது என்பது அவர்களுக்குத் தெரியும். 

மேலும், அன்றாட வாழ்வில் வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு "தமிழ் உணர்வு இல்லாமை" மட்டுமே ஒரு குறைபாடாக தெரிவதில் வியப்பில்லை. அதற்காக போராடுவதன் மூலம் தாம் சமூகத்திற்கு தொண்டாற்றி விட்டதாக திருப்திப் படுகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக ஒரு நாள் கூடி, தமிழ் உணர்வுக் கோஷங்கள் போட்டு விட்டு தமது வேலையைப் பார்க்க சென்று விட்டார்கள்.

ஜல்லிக்கட்டுக்காக போராட வந்தவர்கள், மக்களின் பிற போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை என்று அப்போதே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நேரம், "இப்போது தான் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது" என்றும், "இனிவருங்காலத்தில் இவ்வளவு பேரும் எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்" என்றும் பதில் சொன்னார்கள். ஆனால், அந்த உறுதிமொழியை யாரும் காப்பாற்றவில்லை. இப்போதும் தமிழ் மக்களின் பிற போராட்டங்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

இது நடந்து ஓரிரு வாரங்கள் கூட ஆகியிருக்கவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாபுலவு கிராம மக்களின் மண்மீட்புப் போராட்டம் தொடங்கியது. இறுதிப் போரில், விமானப் படையினரால் அபகரிக்கப் பட்ட காணிகளை மீட்பதற்காக, பெண்களும், பிள்ளைகளும் போராடினார்கள். அது அவர்களது வாழ்வாதாரத்திற்கான போராட்டம். அவர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள். அதனால் எதற்கும் அஞ்சாமல் படையினரின் முகாமுக்கு முன்னால் அமர்ந்திருந்து போராடினார்கள்.

என்ன அதிசயம், ஜல்லிக்கட்டு போராளிகள் எவரையும் அங்கே காணவில்லை. ஜல்லிக்கட்டு காளைகளுக்காக பொங்கிய தமிழ் இன உணர்வு, கேப்பாபுலவு ஏழைகளுக்காக பொங்கவில்லை. ஒரு சில தமிழ்த் தேசியவாதிகள் சென்று பார்த்து விட்டு வந்தார்கள். தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகளை சேர்ந்தோரும் சென்றிருந்தனர். 

சில நாட்களுக்குப் பின்னர் மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழுக்கு சேர்ந்த கூட்டத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட கேப்பாபிலவுக்கு வரவில்லை. அந்தளவுக்கு தமிழ் இன உணர்வாளர் யாருக்கும் அதில் அக்கறை இருக்கவில்லை. "கேப்பாபிலவு கிராமம் எளிதில் செல்ல முடியாத ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதாகவும், அங்கு செல்வதற்கான போக்குவரத்து கஷ்டம் எனவும்", ஒரு தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் காரணம் கண்டுபிடித்தார்.

இருப்பினும் சாதாரண இளைஞர்கள் சிலர் கேப்பாபுலவுக்கு சென்று மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்ட இளைஞர்களே அவர்கள். சாதாரண பொது மக்களின் நலன் சார்ந்து அவர்கள் பக்கம் நிற்பதே இடதுசாரியம் என்பதை அவர்கள் நிரூபித்தனர். அதனால், அது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போராட்டமாக இருக்கவில்லை.

11.02.2017 அன்று யாழ்நகரில், மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில், கேப்பாபிலவு மக்களுக்கு ஆதரவான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக் கணக்கான அரசியல் ஆர்வலர்கள், சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் கலந்து கொண்டனர். தமிழ், சிங்கள இடதுசாரிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். அங்கு எழுப்பப் பட்ட கோஷங்களில் தமிழர் என்பதை தவிர்த்து, மக்கள் என்று சொல்லப் பட்டது ஒரு முக்கியமான விடயம். "மக்களின் காணிகளை மக்களுக்கே திருப்பிக் கொடு" என்று தான் கோஷம் எழுப்பப் பட்டது.

இதே நேரத்தில், கேப்பாபிலவு கிராமம் மக்கள் போராட்டக் களமாக மாறிக் கொண்டிருந்தது. பாடசாலை செல்ல வேண்டிய சிறு பிள்ளைகள் போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்களது கல்வி பாதிக்கப் படுகின்றது. அதனால் சமூக ஆர்வலர்கள் திறந்தவெளியில் இலவசப் பள்ளிக்கூடம் நடத்தினார்கள். கட்டாந்தரையில் அமர்ந்திருந்து பாடங்களை சொல்லிக் கொடுத்தார்கள்.

அங்கே ஒரு மக்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கேப்பாபிலவு மக்களின் மண்மீட்புப் போராட்டத்தை பற்றிக் கேள்விப் பட்டு, தென்னிலங்கையில் இருந்து சிங்கள இடதுசாரிகளும் வந்தனர். ஒரே உணர்வோடு மக்களோடு சேர்ந்து போராடினார்கள். அதன் மூலம், கேப்பாபிலவு மக்களின் பிரச்சினை சிங்கள மக்கள் மத்தியிலும் போய்ச் சேர்ந்தது. தமிழருக்காக தமிழர் மட்டுமே போராடுவார்கள் என்று நினைத்திருந்த அரசு இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை.

பதினைந்து நாட்களாக தொடர்ந்து நடந்த கேப்பாபிலவு மக்களின் போராட்டம், மெல்ல மெல்ல அரசு அதிகாரத்தை அசைக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த படைத் தலைமை, பின்னர் இறங்கி வந்து மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும் மக்கள் அங்கு சென்று குடியேறிய பின்னர் தான் எதுவும் நிச்சயமாகும். எது எப்படி இருப்பினும், கேப்பாபுலவு மக்களின் வெற்றி பெற்றால், அது இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக கருதப் படும். மக்கள் போராட்டம் மூலம் அரசை பணிய வைப்பதன் மூலம் மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும்.

வரட்டுத் தமிழ்த் தேசியம் பேசும் வசதிபடைத்த தமிழ் மத்தியதர வர்க்க  இளைஞர்கள், இழப்பதற்கு எதுவுமற்ற கேப்பாபுலவு ஏழைத் தமிழ் மக்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பொதுவுடைமைத் தத்துவ அறிஞர் கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னர் சொன்ன மாதிரி, இழப்பதற்கு எதுவுமற்ற மக்களே போராடத் தயாராக இருப்பார்கள்.  இங்கிலாந்து முதல் ஈழம் வரை அது உண்மையென நிரூபிக்கப் பட்டு வந்துள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வு பொங்குவது இறுதியில் பேரினவாத அரசுக்கே சாதகமானது. இனப்பெருமை பேசும் "தமிழன்டா" கோஷம், வேற்றின மக்கள் எம்மை நெருங்க விடாமல் விரட்டுகிறது. அதனால் தமிழர்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். நாம் தமிழர் என்று சொல்லாமல், மக்கள் என்று அரசியல் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைக்கலாம்.

கேப்பாபிலவு போராட்டம் ஒரு மக்கள் புரட்சியின் ஆரம்பம். 

மேலதிக தகவல்களுக்கு: 

Tuesday, January 31, 2017

முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவான இலங்கை அரச பாடநூல்


"நலன்புரி முதலாளித்துவம்"! - முதலாளித்துவ கொள்ளையருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் யோதிலிங்கம் எழுதிய அரசறிவியல் பாடநூலில் இருந்து:

//இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதாகும்.// (அரசறிவியல், பக்கம் 87)

சிறிலங்கா அரச பாடத் திட்டத்திற்கு அமைய, யோதிலிங்கம் எழுதிய இந்த நூலானது, அந்நாட்டில் தற்போது இருப்பதைப் போன்ற "தாராண்மை வாத (லிபரல்) அரசு" கட்டமைப்பு உலகில் சிறந்தது என்று கூறுகின்றது. அதற்காக முதலாளித்துவம் பற்றி இல்லாத கற்பனைகளை புனைகின்றது. அதில் ஒன்று தான் "நலன்புரி முதலாளித்துவம்" என்ற கட்டுக்கதை.

நலன்புரி அரசு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன, "நலன்புரி முதலாளித்துவம்"? முதலாளித்துவம் எப்போதும் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே நலன்புரிவதாக இருக்கும். அது இயற்கை. அனைத்து மக்களுக்கும் நலன்புரியும் முதலாளித்துவம் உலகில் இருக்க முடியாது. அப்படியானால் அதற்குப் பெயர் முதலாளித்துவம் அல்ல, சோஷலிசம்.

யோதிலிங்கம் வாழும் இலங்கையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளான இலவசக் கல்வி, இலவச சுகாதார வசதிகளை போன்றவற்றை அரசு பொறுப்பேற்று செய்கின்றது. ஆனால், அதைச் செய்வது முதலாளித்துவம் அல்ல. இது முக்கியமாக கவனிக்கப் பட வேண்டும்.

உதாரணத்திற்கு, இலவச சேவை வழங்கும் அரச மருத்துவமனைகளுக்கு போட்டியாக, தனியார் மருத்துவமனைகள் ஊருக்கு ஊர் முளைத்துள்ளன. அங்கு நின்றால் காசு, நடந்தால் காசு, லிப்டில் ஏறினால் காசு என்று, நோயாளிகளிடம் பணத்தைக் கறந்து, அவர்களை மனநோயாளிகளாக மாற்றி விடுகின்றன. இதுவா "நலன்புரி முதலாளித்துவம்"?

ஓய்வூதியம் பெற்ற பின்னர், பிரான்ஸில் இருந்து சென்று இலங்கையில் சிலகாலம் இருந்து விட்டு வந்த நண்பர் சொன்னார். "இலங்கையில் தனியார் மருத்துவமனைகளுக்கு செலவிடும் தொகை, பிரான்ஸ் மருத்துவ செலவுகளை விட அதிகம்!" அந்த நண்பர் முன்பு மருத்துவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது. இதற்குப் பேர் நலன்புரி முதலாளித்துவம் அல்ல, கொள்ளைக்கார முதலாளித்துவம்!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் "நலன்புரி முதலாளித்துவம்" இருக்கிறது தானே என்று கேட்கலாம். ஐயா, உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் முதலாளிகளின் குணம் மாறுவதில்லை. நியூ யோர்க்கில் இருக்கும் நாயும் "வவ்....வவ்..." என்று தான் குரைக்கும்! எல்லா முதலாளிகளும் தொழிலாளர்களையும், வாடிக்கையாளர்களையும் ஏமாற்றி, சுரண்டித் இலாபத்தை கூட்டிக் கொள்வது வழமை.

"நலன்புரி முதலாளித்துவம்" நிலவும் நாடுகளில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு இடையிலேயே ஏற்றத்தாழ்வான ஊதியம் வழங்கப் படுகின்றது. அது சிலநேரம் பத்துப், பன்னிரண்டு மடங்கு அதிகம்! உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அடிமட்ட ஊழியரின் சம்பளம் ஆயிரம் டொலர் என்றால், அதே நிறுவனத்தில் நிர்வாகியின் சம்பளம் பன்னிரண்டாயிரம் டொலர்!

நான் நெதர்லாந்திற்கு வந்து இருபது வருடங்களாகின்றன. இத்தனை வருட கால அனுபவத்தில், ஒரு தடவையாவது "நலன்புரி முதலாளித்துவத்தை" காணவில்லை. மாறாக கொள்ளைக்கார முதலாளித்துவம் மட்டுமே கண்டிருக்கிறேன். இது எனது அனுபவம் மட்டுமல்ல. இங்குள்ள அனைத்து உழைப்பாளிகளும் ஒத்துக் கொள்ளும் உண்மை.

வழமையாக எல்லா நிறுவனங்களிலும் மூன்று பேர் செய்யும் வேலையை, ஒரு ஆளைக் கொண்டு செய்விப்பார்கள். ரெஸ்டோரன்ட் ஒன்றில் கோப்பை கழுவும் தொழிலாளியாக இருந்தாலும், வங்கியில் கணக்குப் பார்க்கும் ஊழியராக இருந்தாலும், Burn out என சொல்லப் படும் மித மிஞ்சிய வேலைப் பளுவால் பாதிக்கப் படுகின்றனர்.

ஐரோப்பிய தொழிலகங்களில் அடிக்கடி சுகயீன விடுப்பு எடுப்போர் அதிகம். தாங்கு சக்தியை விட அதிகமாக வேலை செய்வதால், பலருக்கு மன உளைச்சல் வந்து நோயாளிகளாக மாறி விட்டனர். ஐரோப்பாவில் வேலை செய்யும் தமிழ் தொழிலாளர்கள் பலர், நாற்பது வயது தாண்டுவதற்குள் மாரடைப்பால் இறந்துள்ளனர். காரணம், சக்திக்கு மீறிய வேலைப்பளு.

எமது கண் முன்னாலேயே எமது உழைப்பு சுரண்டப் படுகின்றது. இலவசமாக உறிஞ்சப் படும் எமது உழைப்பு, முதலாளிகளின் இலாபமாக மாறுகின்றது. நிர்வாகிகளின் போனசாக மாறுகின்றது. இவர் என்னவென்றால் அது தான் "நலன்புரி முதலாளித்துவம்" என்று வக்காலத்து வாங்குகிறார்.

மேற்கு ஐரோப்பாவில் இருப்பது நலன்புரி அரசு, அது முதலாளித்துவம் அல்ல. அரசு வேறு, முதலாளித்துவம் வேறு. இந்த வித்தியாசம் அரசறிவியல் எழுதிய யோதிலிங்ககத்திற்கு தெரியாது என்று நான் நம்பவில்லை. இங்குள்ள முதலாளிகள் மக்களின் நலனுக்காக ஒரு சதம் கூட கொடுப்பதில்லை. அவர்கள் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட சுயநலவாதிகள்.

இந்த முதலாளிகள் மக்களின் நலனுக்காக தானம் தர்மம் எதுவும் செய்யத் தேவையில்லை. குறைந்த பட்சம் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை உறுதிப் படுத்தினாலே போதும். அந்த விடயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். கடந்த தசாப்த காலத்தில் மட்டும் இலட்சக் கணக்கானோர் பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

வேலையிழந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பல வறுமையில் வாடுகின்றன. அதற்குக் காரணம், கணணி மயமாக்கல், ரோபோ மயமாக்கல் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சி. நூறு தொழிலாளர்கள் செய்த வேலையை ஒரு ரோபோ செய்யும் காலம் வந்து விட்டது. இதனால் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து விட்டு, பெருந்தொகை பணத்தை மிச்சம் பிடிக்கின்றன. அதனால் தான் வேலையில்லாப் பிரச்சினை அதிகரிக்கின்றது.

அதே நேரத்தில் நிர்வாகிகளுக்கு கொடுக்கும் இலட்சக் கணக்கான போனஸ் பணம், பங்குதாரர்களுக்கு கிடைக்கும் இலாபம் போன்றவற்றில் எந்தக் குறையுமில்லை. வேலையிழந்த தொழிலாளர்கள் தெருவில் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்ளட்டும். அதனால், முதலாளிகளுக்கு என்ன கவலை?

இது தான் "நலன்புரி முதலாளித்துவத்தின்" மகத்துவம்! யோதிலிங்கத்தால் எப்படி இவ்வாறு மனச்சாட்சிக்கு விரோதமாக எழுத முடிகின்றது? கொள்ளைக்கார முதலாளித்திற்கு "நலன்புரி" என்று மனிதாபிமான முகமூடி அணிவித்து மாணவர்களை ஏமாற்றுவது நியாயமா? முதலாளிகளின் கொள்ளையை மறைப்பதற்காக "நலன்புரி முதலாளித்துவம்" என்று வெள்ளை அடிப்பது ஒரு பிழைப்பா?

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
இலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்
ஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுகளுக்குப் பதில்

Monday, January 30, 2017

இலங்கை அரசறிவியல் பாட நூலில் உள்ள கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம்


சி.அ.யோதிலிங்கம் எழுதிய "அரசறிவியல் - ஓர் அறிமுகம்" நூல், இலங்கையில் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்கள் படிப்பதற்காக எழுதப் பட்டுள்ளது. "வினாத்தாளை மையமாக வைத்து" எழுதப் பட்டிருப்பதாக அந்த நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவ்வாறான ஒரு பாட நூலில் சோஷலிச  நாடுகள் பற்றிய உண்மைக்கு புறம்பான, பிழையான கருத்துக்கள் எழுதப் பட்டுள்ளன. வழக்கமாக இதைப் படிக்கும் மாணவர்கள், பரீட்சையிலும் அதைத் தான் ஒப்புவிக்கப் போகிறார்கள். அதற்கு மாறாக சரியான தகவல்களை எழுதினால் அவர்களுக்கு புள்ளிகள் கிடைக்காது. தமிழ் மாணவர்களை கம்யூனிச எதிர்ப்புவாதிகளாக மூளைச் சலைவை செய்யவும் இது போன்ற பாட நூல்கள் உதவுகின்றன. இப்படியான பாடநூல்கள் சிறிலங்கா அரசின் முதலாளித்துவ சார்புக் கொள்கைக்கு ஏற்றவாறு எழுதப் படுகின்றன.

அரசறிவியல் நூலில், அரசு பற்றிய சோசலிசக் கொள்கையின் குறைபாடுகள் என்ற உபதலைப்பின் கீழ் எழுதப் பட்டுள்ள அபத்தமான கட்டுக்கதைகளையும், அதற்கான எனது விளக்கங்களையும் கீழே தருகின்றேன். 



1.//காலச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கார்ல் மார்க்ஸ் இக்கொள்கையை முன்வைத்தார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொருந்துகின்ற கொள்கை எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என கூற முடியாது.// - யோதிலிங்கம்

அது என்ன "காலச் சூழ்நிலை"? கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முதலாளித்துவம் அதன் உயர்ந்த வளர்ச்சிக் கட்டத்தை கண்டிருந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் மீதான விமர்சனமாக மூலதனம் என்ற நூலை எழுதினார். முதலாளித்துவம் எவ்வாறு உழைப்பாளிகளின் உழைப்பை உபரி மதிப்பாக சுரண்டுகின்றது? அதை எவ்வாறு மூலதனமாக மாற்றிக் கொள்கிறது? செல்வம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சிலரின் கைகளில் மட்டும் குவிகின்றது? இதை விளக்குவது தான் "கார்ல் மார்க்ஸின் கொள்கை". இன்று உலகில் எங்குமே முதலாளித்துவம் இல்லையா? உழைப்பாளிகள் சுரண்டப் படுவதில்லையா? உபரிமதிப்பு மூலதனமாக மாறுவதில்லையா?

அது எப்படி இன்றைய உலகில் ஏழைகள் மென் மேலும் ஏழைகளாகவும்,பணக்காரர்கள் மென் மேலும் பணக்காரர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்? உலக சனத்தொகையில் அரைவாசிப் பேரிடம் உள்ள செல்வம் அளவிற்கு, எட்டுப் பணக்கார்களிடம் செல்வம் குவிந்துள்ளது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முதலிட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள், உழைப்பாளிகளுக்கு சொற்பத் தொகையை கொடுத்து சுரண்டும் பணம் (மூலதனம்) மேலை நாடுகளுக்கு கடத்தப் படுகின்றது. அந்த இலாபப் பணத்திற்கு எந்த நாட்டிலும் வரி கட்டுவதில்லை. அது வரியில்லா சொர்க்கத் தீவுகளில் இரகசிய வங்கிக் கணக்கில் குவிக்கப் படுகின்றது. இதெல்லாம் கார்ல் மார்க்ஸின் கொள்கை இந்தக் காலத்திலும் சரியாகப் பொருந்துகின்றது என்பதை தானே நிரூபிக்கின்றது?

2.//இக் கொள்கை பொருளாதாரக் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள், சமூகம், மதம், புவியியல் போன்ற காரணிகளை கவனத்தில் எடுக்கவில்லை.// - யோதிலிங்கம்

ஒன்றைப் பற்றி எழுதுவதற்கு முன்னர் அதைப் பற்றி ஓரளவுக்காவது அறிந்திருக்க வேண்டும். மார்க்சியத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் நுனிப்புல் மேயக் கூடாது. கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் பொருளாதாரத்தை அலசுகின்றது. ஆனால், அவர் அதை மட்டும் எழுதவில்லையே? வேறு நூல்களும் இருக்கின்றன தானே? மார்க்ஸின் நண்பர் எங்கெல்ஸ் எழுதிய "குடும்பம், அரசு, தனிச் சொத்து ஆகியவற்றின் தோற்றம்" நூலில் மனித இனத்தின் வரலாறு, மானிடவியல், சமூகவியல் என்பன ஆராயப் படுகின்றன. பிரிட்டனில் உழைக்கும் வர்க்க மக்களின் அவலங்கள் பற்றிய நூல், அன்றைய காலத்து சமூகப் பிரச்சனைகளை விரிவாக விளக்குகின்றது. வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தின் பாத்திரம் பற்றி மார்க்ஸ் ஒரு நூல் எழுதி இருக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். //வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள்// வரலாறுகள் யாவும் மன்னர்களை புகழ்ந்து எழுதி இருப்பதாகவும், மக்களின் வரலாறு எழுதப் படுவதில்லை என்பதையும் மார்க்சியம் தான் எடுத்துக் காட்டியது.

3.//இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமானதாகும்.// - யோதிலிங்கம்

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் வாழும் ஒருவர் இப்படி எழுதி இருந்தால், அவரது குறுகிய சிந்தனைக்கு ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால், இன்றைக்கும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் இதை எழுதியிருப்பதை நம்ப முடியவில்லை. இலங்கையிலும் முதலாளித்துவம் இருக்கிறது. ஆனால் அங்குள்ள "நலன்புரி முதலாளித்துவம்" சிறப்பாக செயற்படுமானால், யாரும் வேலை தேடி வெளிநாடுகளுக்கு ஓட மாட்டார்கள். யாரும் வறுமையில் வாட மாட்டார்கள். வேலையில்லா விட்டால் ஒரு குடும்பமே பட்டினி கிடக்க வேண்டிய நிலைமை.

அது வந்து... மேற்கத்திய "நலன்புரி முதலாளித்துவம்" பற்றி சொன்னேன் என்று சப்பைக் கட்டு கட்டலாம். நீண்ட நெடுங்காலமாக நடந்த தொழிலாளர்களின் உரிமைப் போராட்டம் காரணமாகத் தான், மேற்கு ஐரோப்பாவில் நலன்புரி அரசுகள் உருவாகின. அதுவும் இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் தான். கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிச நாடுகள் உருவான பின்னர் தான். அதாவது, தாங்களும் அதே சோஷலிசக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதை சொல்லிக் கொள்ளாமல், நலன்புரி அரசு என்றார்கள். இல்லாவிட்டால் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சிகள் நடந்திருக்கும் என்று அஞ்சினார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்ற மூலதன குவிப்புகளால் நன்மை அடைந்த முதலாளித்துவ நாடுகளில் தான், நலன்புரி அரசு இருக்கின்றது. பெரும்பாலான லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் இன்றைக்கும் முதலாளித்துவம் இருக்கிறது. ஆனால், அது எதுவுமே "நலன்புரி முதலாளித்துவம்" அல்ல. இன்றைக்கும் மார்க்ஸ் வாழ்ந்த காலத்து ஐரோப்பா மாதிரி, கஞ்சிக்கும் வழியில்லாத ஏழைகளும், மாட மாளிகைகளில் வாழும் பணக்காரர்களும் என சமூகம் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. அந்த நாடுகளில் ஏழைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதால், அவை இன்றைக்கும் வறிய நாடுகள் என்றே அழைக்கப் படுகின்றன.

4.// மக்கள் இருக்கின்ற வரை மக்களுக்கான பொதுத் தேவைகளும் இருக்கும். இப்பொதுத் தேவைகளை நிறைவேற்ற அரசு என்ற நிறுவனமும் எப்போதும் அவசியமாக இருக்கும். இந்நிலையில் அரசற்ற கம்யூனிச சமூகம் உருவாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.// - யோதிலிங்கம்

ஸ்பெயின் நாட்டில் மரினலேடா (Marinaleda)என்ற கிராமம் இருக்கிறது. அங்கே பல வருட காலமாக கம்யூனிச சமூகம் சிறப்பாக இயங்கி வருகின்றது. அரசு கட்டமைப்பின் எந்த அம்சமும் அங்கே இல்லை. அதாவது, நீதிமன்றம், பொலிஸ், சிறைச்சாலை எதுவும் இல்லை! அந்தளவுக்கு அங்கே எந்தக் குற்றச் செயலும் நடப்பதில்லை! வேலை செய்யும் எல்லோருக்கும் சமமான ஊதியம் வழங்கப் படுகின்றது. 

அருகில் உள்ள ஸ்பானிஷ் கிராமங்களை விட அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம்! அதனால், அயல் கிராம கூலியாட்கள் அங்கு சென்று வேலை செய்கிறார்கள். குழந்தைகள் பராமரிப்பு, ஓய்வுநேர பொழுதுபோக்குகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும். அத்தோடு சொந்தமாக வீடு கட்டுவதற்கு உதவியும் கிடைக்கும். இப்படியான கம்யூனிச சமூகங்கள், இன்றைக்கும் ரஷ்யாவிலும், சீனாவிலும் சில இடங்களில் இருக்கின்றன. ஏன் அமெரிக்காவில் கூட இருக்கிறது!

அரசு என்பது ஒரு அடக்குமுறை இயந்திரம். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இலங்கையில் வாழும் தமிழர்களைக் கேட்டால் அரச அடக்குமுறைகள் பற்றிக் கதை கதையாக சொல்வார்கள். உலகில் எல்லா நாடுகளிலும் அரசு இருந்தால் அங்கு அடக்குமுறையும் இருக்கும். ஒரு நாட்டில் அதிகமாகவும், இன்னொரு நாட்டில் குறைவாகவும் இருக்கலாம். 

அரசு எப்போதும் மனிதர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் இன்னொரு நாட்டிற்கு செல்ல முடியாது. அதாவது தேசம் என்ற சிறைச்சாலைக்குள் நாங்கள் எல்லோரும் கைதிகள் தான். இது உங்களுக்கு நகைப்புக்குரியதாக இருக்குமானால், நீங்கள் அரச அடக்குமுறைகளை ஒரு சாதாரணமான விடயமாக ஏற்றுக் கொள்ள பழகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

5.//மார்க்ஸ் வர்க்கங்களை கவனத்தில் எடுத்தாரே தவிர அண்மைக்காலத்தில் வளர்ச்சி அடைந்துள்ள தேசியவாதம் பற்றி கவனத்தில் எடுக்கவில்லை.// -யோதிலிங்கம்

இது சுத்த அபத்தமான கூற்று. உண்மைக்கு புறம்பான கட்டுக்கதை. மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்தே ஐரோப்பாவில் தேசியவாத கொள்கைகள் பின்பற்றப் பட்டு வந்துள்ளன. மிகச் சரியாக சொல்வதென்றால், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், நெப்போலியனின் நாடு பிடிக்கும் போர்கள் நடந்தன. முதலாளித்துவம், தாராண்மைவாதம் போன்ற கொள்கைகள் அப்போது தான் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டன. நெப்போலியன் போரில் தோற்கடிக்கப் பட்ட பின்னர், அநேகமான ஐரோப்பிய நாடுகள் குடியரசுகளாக மாறின. அப்படித் தான் தேசிய அரசுகள் தோன்றின. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவாகி பல தசாப்தங்களுக்குப் பின்னர் தான், கார்ல் மார்க்ஸ் தனது ஆய்வுநூல்களை எழுதினார்.

கார்ல் மார்க்ஸ் ஐரிஷ் தேசியவாதத்தை ஆதரித்தார். அதற்குக் காரணம், பிரிட்டனின் காலனிகளில் ஒன்று விடுதலை அடைவது ஒரு சாதகமான விடயம் என்பது தான். அதே மாதிரி, ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர், உலகின் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவு வழங்குவதாக லெனின் அறிவித்தார். அப்போது பிரித்தானியா அதைக் கடுமையாக எதிர்த்து வந்தது. அதற்குக் காரணம், தேசிய விடுதலைக்காக போராடும் காலனிய நாடுகள் விடுதலை அடைந்தால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கி விடும். கடைசியில் அது நடந்து விட்டது. 

பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தேசிய விடுதலைக்காக போராடியவர்கள் மார்க்சிஸ்டுகளாக இருந்தனர். இது தற்செயல் அல்ல. சில நாடுகள் சுதந்திரம் பெற்றதும் அங்கு கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைத்தனர். உதாரணம்: வியட்நாம். வேறு சில நாடுகளில் தேசிய விடுதலைக்கான கம்யூனிஸ்டுகளின் போராட்டம் காலனியாதிக்கவாதிகளால் நசுக்கப் பட்டன. உதாரணம்: மலேசியா.

6.//உடைமையாளன் வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என்பனவற்றிற்கு புறம்பாக மத்தியதர வர்க்கம் எனும் ஒரு வர்க்கம் இன்று எழுச்சியடைந்துள்ளது. மார்க்ஸ் இது பற்றி எதுவும் கூறவில்லை.// - யோதிலிங்கம்

இது முழுக்க முழுக்க கற்பனையான வாதம். இவருக்கு மார்க்சியத்தில் அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதற்கு இந்த கூற்று ஒன்றே போதும். முதலாளிய வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் தனது உடைமையாக வைத்திருக்கின்றது. ஏனையோர் முதலாளிகளுக்கு உழைப்பை விற்றுப் பிழைக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் என்பது மார்க்சிய அடிப்படைக் கோட்பாடு. 

இந்த நூலை எழுதிய யோதிலிங்கம் ஒரு முதலாளி அல்ல. அவர் ஓர் ஆசிரியராக வேலை செய்வதன் மூலம், தனது உழைப்பை தொழிற்சந்தையில் விற்று, அதற்கு ஈடாக சம்பளம் பெற்றுக் கொள்கிறார். ஆகவே அவரும் உழைக்கும் வர்க்கத்தில் ஒருவர் தான். ஆனால், அவரது பல்கலைக்கழக பட்டங்கள் தந்த தகைமை காரணமாக, சமூகத்தில் அந்தஸ்து கூடிய உத்தியோகம் ஒன்றை செய்கிறார்.

இப்படியானவர்களை திருப்திப் படுத்துவதற்காக, முதலாளிய வர்க்கம் அதிக சம்பளம் கொடுக்கிறது. காரணம், இவர்கள் "அறிவுஜீவிகள்" அல்லவா? இந்தப் பொருளாதார கட்டமைப்பு எப்படி இயங்குகின்றது என்ற இரகசியங்களை அறிந்து வைத்திருப்பார்கள். அந்த அறிவு காரணமாக, முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலை கேள்வி கேட்க வந்து விடுவார்கள். அதை தடுப்பது எப்படி? சம்பளத்தை கூட்டிக் கொடுத்து வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 

இந்தப் பிரிவினர் தான் மத்தியதர வர்க்கம். மார்க்ஸ் அவர்களை "குட்டி முதலாளிய வர்க்கம்" என்றார். அதாவது அவர்களது உயர்ந்த சமூக அந்தஸ்து, வாழ்க்கை வசதிகள் காரணமாக, முதலாளித்துவத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள். இவ்வாறு இடையில் ஊசலாடும் குட்டி முதலாளிய வர்க்கத்தினரை (மத்திய தர வர்க்கம்) உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் வென்றெடுக்க வேண்டும். இதைத் தான் மார்க்ஸ் கூறினார்.

7.//நடைமுறையில் காணப்பட்ட சோஷலிச அரசுக்களிலும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பல மறுக்கப் பட்டிருந்தன.// - யோதிலிங்கம்

இது மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளால் செய்யப்படும் ஒரு பக்கச் சார்பான பிரச்சாரம். "மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள்" என்று இவர் எதைக் கருதுகிறார்? மிகவும் வறுமையான ஆப்பிரிக்க நாடொன்றில், பட்டினி கிடக்கும் ஒருவனிடம் சென்று, "உனக்கு அடிப்படை ஜனநாயக உரிமை இருப்பதற்காக சந்தோஷப் படு" என்று சொன்னால், அவன் கொலைவெறியுடன் அடிக்க வருவான். ஒரு மனிதனுக்கு முதலில் உயிர் வாழ்வதற்கான உரிமை அல்லவா முக்கியம்? அதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நிரந்தரமான வருமானம் வேண்டும். உணவு, உடை, உறையுள் மிக அவசியம். கல்வி, மருத்துவம், அத்தியாவசியம். இவை எல்லாம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லையா?

பொதுவாக ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு இருக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளும் சோஷலிச நாடுகளிலும் இருந்தன. ஆனால், இவர்கள் பல கட்சி அரசியல் உரிமையை பற்றி மட்டுமே, அதை மட்டுமே பேசுகின்றனர். உலகில் பொதுவான ஜனநாயக அமைப்பு எதுவும் இல்லை. பலகட்சி ஜனநாயகம் பற்றிப் பேசும் மேற்கத்திய நாடுகளில் கூட, 19 ம் நூற்றாண்டு வரையில் அதற்கான சுதந்திரம் மறுக்கப் பட்டு வந்தது. அப்போது எந்த நாட்டிலும் கருத்துச் சுதந்திரம் இருக்கவில்லை. பொதுத் தேர்தல்கள் நடக்கவில்லை. சர்வசன வாக்குரிமை இருக்கவில்லை. இவையெல்லாம், மேற்கத்திய நாடுகளில் உருவான கம்யூனிச, சோஷலிச கட்சிகளால், தொழிலாளர் வர்க்க நலன் சார்ந்து போராடிப் பெற்ற சலுகைகள் ஆகும்.

8.//சோஷலிச அரசில் அதிகாரம் ஓரிடத்தில் குவிகின்ற நிலைமை ஏற்படுகின்றது.// - யோதிலிங்கம்

இதுவும் முதலாளித்துவவாதிகளால் முன்னெடுக்கப் படும் எதிர்ப்புப் பிரச்சாரம் தான். "அனைத்து அதிகாரமும் மக்களுக்கே" என்பது கம்யூனிஸ்டுகளின் பிரதானமான கோஷம். ரஷ்ய மொழியில் "சோவியத்" என்றால், தொழிலாளர் மன்றம் என்று அர்த்தம். உண்மையில், தற்போது பல நாடுகளில் நடைமுறையில் பாராளுமன்ற அமைப்பில் தான் அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப் படுகின்றது. அதற்குப் பதிலாக சோஷலிச நாடுகளில் அதிகாரம் பரவலாக்கப் படுகின்றது.

கிராமம், நகரம் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் தொழிலாளர் மன்றங்கள் அமைக்கப் படும். அங்கு மக்கள் அனைவரும் ஒன்று கூடி விவாதித்து, வாக்கெடுப்புக்கு விடப் பட்டு, பெரும்பான்மை முடிவு ஏற்றுக் கொள்ள படும். இதை நேரடி ஜனநாயகம் என்று சொல்வார்கள். அதாவது மக்கள் நேரடியாகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக அமைப்பு. தொழிற்சாலைகள், கல்லூரிகள், பாடசாலைகளிலும் இந்த ஜனநாயக அமைப்பு இயங்கும். ஒரு தொழிலகத்தின் நிர்வாகி நினைத்த நேரத்தில் ஒரு தொழிலாளியை வேலையை விட்டு தூக்க முடியாது. அதற்கு பிற தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

9.//அரசின் பணிகள் அதிகரிப்பதால் ஊழல் போன்ற தீமைகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு.// - யோதிலிங்கம்

ஒரு நாட்டில் சோஷலிசப் புரட்சி நடந்து விட்டால், ஒரே இரவுக்குள் எல்லாம் மாறி விடுவதில்லை. முந்திய முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்த மாதிரியே அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது, சிறிது காலத்திற்கு பெரும்பாலான நிறுவனங்களை ஒரே மாதிரித் தான் நிர்வகிக்க வேண்டி இருக்கும். அது தவிர்க்க முடியாதது. முந்திய முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்த அதே அதிகாரிகள், நிர்வாகிகள் தமது கடமையை செய்து கொண்டிருப்பார்கள். ஆகவே, முதலாளித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்த ஊழல், சோஷலிச ஆட்சிக் காலத்திலும் தொடர வாய்ப்புண்டு. இதைத் தடுப்பதற்கு ஒரு வர்க்கப் போராட்டம் அவசியம்.

ஸ்டாலின் காலத்தில் "கொடூரமான சர்வாதிகார ஆட்சி" நடந்ததாக இன்றைக்கும் பரப்புரை செய்யப் படுகின்றது. மாவோ காலத்து கலாச்சாரப் புரட்சி பற்றியும் எதிர்மறையான கதைகள் பரப்பப் படுகின்றன. உண்மையில் அப்போது நடந்தது வர்க்கப் போராட்டம். அந்தக் காலகட்டத்தில் ஊழல் முற்றாக ஒழிக்கப் பட்டிருந்தது! 

ஸ்டாலின் காலத்தில், ஒரு அதிகாரி ஊழல் செய்தால், இலஞ்சம் வாங்கினால், மக்கள் விழிப்புடன் இருந்து இரகசியப் பொலிசிற்கு அறிவித்தார்கள். அதற்குப் பிறகு அவர் சிறையில் தான் காலம் கழிக்க வேண்டியிருக்கும். சிலநேரம் மரணதண்டனையும் விதித்தார்கள். அதனால், ஊழல் செய்வதற்கு எல்லோரும் பயப்பட்டார்கள். அவர்களை காட்டிக் கொடுப்பது யார் வேண்டுமானாலும் இருக்கலாம். கூட வேலை செய்யும் பணியாளாக இருக்கலாம் அல்லது குடும்ப உறுப்பினராகக் கூட இருக்கலாம்.

சீனாவில், கலாச்சாரப் புரட்சி வித்தியாசமாக நடந்தது. அங்கு மக்கள் ஒன்றுசேர்ந்து, ஊழல் செய்த அதிகாரியை பிடித்து, சந்தியில் கட்டி வைத்து அவமானப் படுத்தினார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்டனர். சிறை முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர். அதனால், கலாச்சாரப் புரட்சி நடந்த பத்து வருட காலத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. இதிலே முக்கியமான விடயம் என்னவென்றால், அதிகார கட்டமைப்பில் மேல் தட்டில் இருந்தவர்களும் ஊழல் செய்து பிடிபட்டால் மக்களினால் அவமானப் படுத்தப் பட்டனர். 

பிற்குறிப்பு: படித்த மத்தியதர வர்க்க தமிழர்கள் பலர் கம்யூனிச எதிர்ப்பாளர்களாக அல்லது வலதுசாரிகளாக இருப்பது தற்செயல் அல்ல. பாடசாலையில், பல்கலைக்கழகத்தில் அவர்கள் படிக்கும் காலத்திலேயே,  முதலாளித்துவவாதிகளால் மூளைச்சலவை செய்யப் படுகின்றனர். அதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணம்.


இது தொடர்பான முன்னைய பதிவு: 

Sunday, January 29, 2017

ஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுகளுக்குப் பதில்

ஈழத்தமிழ் சூழலில் வலதுசாரிகள் தம்மை தமிழ்த் தேசிய போர்வையால் மறைத்துக் கொண்டு, காழ்ப்புணர்வுடன் இடதுசாரிகள் மீது அவதூறு பரப்பும் வேலையை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் யோதிலிங்கம் அவர்களில் ஒருவர்.

 அவர் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி உறுப்பினராகவோ, ஆதரவாகவோ இருப்பது அவரது அரசியல் தெரிவு. ஆனால், இடதுசாரிகள் மீதான வன்மம் காரணமாக உண்மைக்குப் புறம்பான கதைகளை கூறுவதன் மூலம் தமிழ் மக்கள் சுரண்டப் படும் கொடுமையை மறைக்கப் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் ஆசிரியர் போன்ற அறிவுஜீவிகளின் தவறான கருத்துக்கள், சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

//ஈழ‌த்து சூழ‌லில் வ‌ல‌துசாரிக‌ள் அயோக்கியர்களாக, பொய்ய‌ர்க‌ளாக‌, புளுக‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். தேர்த‌லில் ம‌க்க‌ளை ஏமாற்றி பாரளும‌ன்ற‌ ப‌த‌விக‌ள் எடுப்ப‌தில் குறியாக‌ இருந்த‌ன‌ர். ஆயுத‌ப் போராட்ட‌ம் தொட‌ங்கிய‌தும் புலிக‌ள் அவ‌ர்க‌ளுக்கு ம‌ர‌ண‌த‌ண்ட‌னை விதித்த‌ன‌ர். பலரை துரோகி என்று போட்டுத் தள்ளினார்கள். அதனால், வ‌ல‌துசாரித் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் அனைவ‌ரும் கொழும்புக்கு சென்று அர‌சுட‌ன் ஒட்டிக் கொண்டார்க‌ள். அவ்வாறு தான் ஒட்டுக் குழு உருவானது. 

ஈழத்து சூழலில் வலதுசாரிகள் சாதிவெறியர்களாக இருந்தனர். அத்துடன் இனவாதிகளாக, மதவாதிகளாக, ஆணாதிக்கவாதிகளாகவும் இருந்தனர். 1940களுக்கு பின்னரான காலத்திலும் அவர்கள் மாறவில்லை. தமிழ்த் தேசிய போராட்டத்தில், தமிழ் மக்கள் இவர்களை மதிப்பிடுவதில் பெரும் தவறுகளை இழைத்தனர்.
 
வ‌ர‌லாறு முக்கிய‌ம் ஆசிரிய‌ரே! // 
இவ்வாறு பேஸ்புக்கில் நான் போட்ட பதிவொன்றுக்கு அவர் எந்த மறுப்பும் கூறவில்லை. அது சரியென்றோ, தவறென்றோ கூறவில்லை. அவரது பதிலில், வலதுசாரிகள் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

அதற்கு மாறாக, பதில் கூற முடியாமல் வேறு இடத்திற்கு தாவுகிறார். வழமை போல, இடதுசாரிகள் மீது அவதூறு செய்யும் பிரச்சார வேலையை தொடங்கி விடுகிறார்: //இரண்டு வகையான இடதுசாரிகள் இருந்தனர்,பாரம்பரிய இடதுசாரிகள்,விடுதலைஇயக்க இடதுசாரிகள், முதலாம் கூட்டத்தவர் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர். இரண்டாம் வகைக்குள் eprlf, eros ,nlft ,plft என்போர் அடங்கினர். தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின,இவர்களில் பலர் வெறும் கதைகாறர்களாக மட்டும் இருந்தனர்.சிலர் ஒட்டுக்குழுவாகவும் மாறினர். புலிகளை எதிர்ப்பதாகக் கூறி தமிழ்த் தேசியத்திற்கே எதிரிகளாக மாறினர். தேசியசக்திகளிடமிருந்த போராட்ட நேர்மை இவர்களிடம் இருக்கவில்லை.//


இவரது பதில் முழுவதும் வார்த்தை ஜாலங்களால் படிப்பவரின் மனதை மயக்கி தவறான கருத்தை திணிப்பதாக உள்ளது. அதனால், அரிசியில் கல் பொறுக்குவது மாதிரி, ஒவ்வொரு வார்த்தையாக கவனமாக எடுத்து ஆராய வேண்டியுள்ளது.

முதலில் இடதுசாரி என்றால் யார்? ஆசிரியர் யோதிலிங்கம் உண்மையிலேயே தமிழ் மக்களின் (கவனிக்கவும்: மக்களின்) நலன் குறித்து சிந்திப்பவராக இருந்தால், அவரும் ஓர் இடதுசாரியே. அதற்கு மாறாக அவர் முதலாளிகளின் நலன் குறித்து சிந்திப்பவர் என்றால் ஒரு வலதுசாரி. இதில் அவர் எந்தப் பக்கத்தில் நிற்கிறார் என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

(தமிழ்த்) தேசியவாதிகள் என்றால், அவர்கள் வலதுசாரிகளோ, இடதுசாரிகளோ அல்ல என்பது மாதிரி வாதிடுவது பாமரத்தனமானது. (தமிழ்த்) தேசியவாதிகள் என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும், நிச்சயமாக அதற்குள் வலது - இடது பிரிவுகள் இருக்கும். ஓர் அறிவுஜீவி, அதிலும் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் பாமரத்தனமாக பேசுவது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது.

நீங்கள் என்னதான் புலிகளை ஒரு வலதுசாரி இயக்கமாக காட்ட நினைத்தாலும், அதற்குள்ளும் ஆரம்பம் முதல் இறுதி வரை இடது - வலது வேற்றுமைகள் இருந்தன. அப்படி இல்லாமல் அது பெரும்பான்மை தமிழர்களின் ஆதரவைப் பெற்ற விடுதலை இயக்கமாக இருக்க முடியாது. வலதுசாரிப் புலிகளும், இடதுசாரிப் புலிகளும் முரண்பட்ட இடங்கள் பலவுண்டு. அவர்களுக்கு இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. புலிகள் அமைப்பில் இருந்த பல போராளிகள் இந்த உண்மையை உறுதிப் படுத்தி உள்ளனர்.

"பாரம்பரிய இடதுசாரிகள்" - மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி போன்றவற்றை இவர் அப்படிக் குறிப்பிடுகின்றார். இலங்கையில் சிறிதும் பெரிதுமாக குறைந்தது பத்து இடதுசாரிக் கட்சிகளாவது இருந்தன, தற்போதும் உள்ளன. அவை எல்லாம் சிறிலங்கா அரசை ஆதரித்தன என்று காட்ட முனைவது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது.

மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அரசை ஆதரித்த போதிலும், சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து நின்றது. அதன் வரலாற்றில் ஒரு தடவையாவது அரசை ஆதரித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மேலும் புலிகளின் முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட புதுவை இரத்தினதுரை, தமிழ்ச்செல்வன் போன்றோர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பால் அரசியல்மயப் பட்டவர்கள். இவர்களை விட வேறு சிலரும் புலிகள் அமைப்பில் இருந்தனர்.

அன்டன் பாலசிங்கம் யார் தெரியுமா? நவ சம சமாஜக் கட்சி உறுப்பினராக இருந்தவர். அவர்களது தொழிலாளர் பாதை பத்திரிகையில் எழுதி வந்தவர். அவர் தான் பிற்காலத்தில் புலிகளின் தத்துவ ஆசிரியர் என்றும் தேசப் பிதா என்றும் புகழப் பட்டார். அது சரி, அன்டன் பாலசிங்கத்தின் சமசமாஜக் கட்சி என்ன செய்தது? ஆசிரியர் யோதிலிங்கம் சொல்வது போல "இனவாதிகளுடன் (அரசுடன்) சேர்ந்து கொண்டது."

இலங்கையில் அன்றும் இன்றும் பல சிறிய இடதுசாரிக் கட்சிகள் தோன்றிக் கொண்டிருந்தன. சில இப்போதும் உள்ளன. அவை எல்லாம் அரசை அல்லது இனவாதிகளை ஆதரிக்கின்றன என்பது, குறுகிய மனப்பான்மை கொண்ட சிறுபிள்ளைத்தனமான வாதம். அவற்றில் சில தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கின்றன. விக்கிரமபாகு கருணாரத்தின போன்ற சில சிங்கள இடதுசாரிகள் வெளிப்படையாகவே புலிகளை ஆதரித்தனர். இந்த உண்மைகளை மறைப்பதும், திரிபு படுத்தி அவதூறு செய்வதும் ஓர் ஆசிரியருக்கு அழகல்ல.

//முதலாம் கூட்டத்தவர் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர்.// இது ஒரு பக்கச் சார்பான திரிபுபடுத்தப் பட்ட கருத்து.

அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர், முதலில் இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களை அவதானிக்க வேண்டும். அதை அலசி ஆராய வேண்டும். சாதாரணமான மூன்றந்தர அரசியல்வாதி மாதிரி காழ்ப்புணர்வுப் பிரச்சாரம் செய்யக் கூடாது.

தெற்கில் சிங்களத் தேசியவாதம் பலமான சக்தியாக உருவானது. அது இடதுசாரிகளையும் மிரட்டிப் பணிய வைத்து தனக்குள் உள்வாங்க முயற்சித்தது. இதே நிலைமை தான் வடக்கிலும் நிலவியது. அங்கு பலமான சக்தியாக இருந்த தமிழ்த் தேசியவாதம், இடதுசாரிகளை மிரட்டி தனக்கு கீழே அடிபணிய வைத்தது.

இந்த நிலைப்பாடு சரியென்று, ஆசிரியர் யோதிலிங்கம் வழிமொழிகிறார். அதாவது, தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே "நல்ல இடதுசாரிகள்" என்று நற்சான்றிதழ் வழங்குகிறார். இதையே தான் தெற்கில் சிங்களத் தேசியவாதிகளும் செய்தார்கள்! எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

இனவாதம் என்ற கருத்தியலும், தேசியவாதம் என்ற கருத்தியலும் பல இடங்களில் ஒரே அர்த்தத்துடன் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில் எதிரி இனத்தவரான சிங்களவர்கள் பேசுவதெல்லாம் இனவாதம் தான். அதே மாதிரித் தான் சிங்களத் தேசியவாதிகளும் சிந்திக்கிறார்கள். தமிழர்கள் பேசுவதெல்லாம் இனவாதம் என்கிறார்கள்.

முன்பு யாராவது ஒரு தமிழர், புலிகளுக்கு ஆதரவான நியாயத்தை பேசினாலே இனவாதி என்று முத்திரை குத்தினார்கள். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளும் இனவாதம் என்று ஒதுக்கப் படுவதுண்டு.

இன முரண்பாடுகளால் பிளவுபட்ட ஒரு நாட்டில் இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். அவர்களுக்கு இவர்கள் இனவாதிகளாக தெரிவார்கள். இவர்களுக்கு அவர்கள் இனவாதிகளாக தெரிவார்கள். இதற்குப் பின்னால், இனங்களை பிரித்தாளும் அரசின் சூழ்ச்சி இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஆசிரியர் யோதிலிங்கத்திடம் ஒரு கேள்வி. "பாரம்பரிய இடதுசாரிகள் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர்." என்று சொல்கிறீர்களே. யார் அந்த இனவாதிகள்? அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா? நான் அவர்கள் தான் வலதுசாரிகள் என்கிறேன். உங்களால் மறுக்க முடியுமா?

சந்தேகம் இருந்தால், நீங்கள் எழுதிய அரசறிவியல் ஓர் அறிமுகம் நூலை வாசித்துப் பாருங்கள். அதிலே தீவிர வலதுசாரிகளான பாசிஸ்டுகள் பற்றி என்ன எழுதி இருக்கிறீர்கள்? //இவர்கள் தீவிர தேசியவாதிகளாகவும், இனவாதிகளாகவும், சோஷலிசத்தை வெறுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.// இது நீங்கள் எழுதியது தான்!

இனவாதிகளான வலதுசாரிகளுக்குள், இடதுசாரிகள் மூழ்கினார்கள் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அவர்கள் வலதுசாரிகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தம்! அதாவது அவர்களை இப்போதும் நீங்கள் இடதுசாரிகள் என்று அழைப்பது அரசியல் அறிவியல் படி தவறாகும். ஏன் அந்தத் தவறை தெரிந்து கொண்டே செய்கிறீர்கள்?

//இரண்டாம் வகைக்குள் eprlf, eros ,nlft ,plft என்போர் அடங்கினர். தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின//

இது ஒரு அப்பட்டமான வரலாற்றுத் திரிபுபடுத்தல் மட்டுமல்ல, அடுத்த அவதூறுக்கான தயார்படுத்தல். ஆசிரியரே, நீங்கள் எண்பதுகள், தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறையை சேர்ந்தவர் அல்ல. ஈழப்போர் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலைமைகளை தாங்கள் நேரில் கண்டிருப்பீர்கள். எதற்காக இல்லாததை எல்லாம் திரிக்கிறீர்கள்?

1986 ம் ஆண்டிலிருந்து, புலிகள் தம்மைத் தவிர வேறு அமைப்புகள் இயங்குவதை தடை செய்தனர். டெலோவை அழித்தொழித்த நடவடிக்கையின் பின்னர், மற்றைய இயக்கங்களை பகிரங்க அறிவித்தல் மூலம் தடை செய்தனர். போராளிகளிடம் இருந்த ஆயுதங்களை பறித்துக் கொண்டு, வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்த உண்மை தெரிந்தும் "தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின" என்று திரிப்பது எதற்காக?

தனிநபர் பிரச்சினை எல்லா இயக்கங்களிலும் இருந்தன. அவற்றிற்குள் பிளவுகள் ஏற்பட்டன. புலிகளில் இருந்து புளொட் பிரிந்தது. பின்னர் அதிலிருந்து தீப்பொறி பிரிந்தது. ஈரோசில் இருந்து ஈபிஆர்எல்ப் பிரிந்தது. NLFT யில் இருந்து PLFT பிரிந்தது. இந்த உண்மைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், புலிகள் தடை செய்யும் வரை தொடர்ந்தும் இயங்கி வந்தன.

//இவர்களில் பலர் வெறும் கதைகாறர்களாக மட்டும் இருந்தனர்.// இதைக் கேட்கும் பொழுது, கிராமங்களில் பாமர மக்களின் திண்ணைப் பேச்சு போலுள்ளது. எண்பதுகளில் அனேகமாக எல்லா இயக்கங்களும், சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான கெரில்லாத் தாக்குதல்களை நடத்தி இருந்தன. ஈழப்போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக ஈரோஸ் தான் கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைத்திருந்தது. இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியாது என்று நான் நம்பவில்லை. தெரிந்து கொண்டும் மறைக்கிறீர்கள்.

//சிலர் ஒட்டுக்குழுவாகவும் மாறினர்.// ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்ததும், அவர்களில் பலர் இந்தியாவுக்கு சென்றனர். பலர் தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் இருந்தனர். அவர்களில் மீண்டும் ஒன்று சேர்த்த இந்திய அரசு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஈழத்தில் கொண்டு சென்று இறக்கியது.

அவர்கள் அப்போது இந்திய இராணுவத்தின் துணைப்படையாக அல்லது ஒட்டுக்குழுவாக இருந்தனர். அந்தக் காலத்தில் தான் புலிகளை வேட்டையாடினார்கள். அப்போது புலிகள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சென்று, சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுக்குழுவாக இருந்தனர். அந்த நேரத்தில் சிங்கள இராணுவம் புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்தது. புலிப் போராளிகளை தனது முகாம்களில் மறைத்து வைத்திருந்தது. இது குறித்து ஏற்கனவே இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டிருந்தது.

ஆசிரியர் யோதிலிங்கம் அவர்களே! இடதுசாரிகள் மீதான காழ்ப்புணர்வு காரணமாக, "இனவாதத்திற்குள் மூழ்கியவர்கள், அல்லது ஒட்டுக்குழுக்கள்" என்று ஒட்டுமொத்த இடதுசாரிகளையும் அவதூறு செய்வதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். தமிழ்த் தேசியவாதிகள் பற்றியும் இதே மாதிரி சொல்வதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுக்கு முண்டு கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டில், அதன் தலைவர் அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார். உண்மையில், பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகள் பெரும்பாலும், புலிகளால் தான் அழித்தொழிக்கப் பட்டனர்.

கூட்டணி மட்டுமல்ல, டெலோ, ஈபிஆர்எல்ப் போன்ற தமிழ்த் தேசியவாதிகள், தசாப்தகாலம் அரச ஒட்டுக்குழுக்களாக இருந்து விட்டு, புலிகளிடம் ஞானஸ்நானம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்று சேர்ந்தார்கள். அதே நேரம் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இப்போதும் அரச ஒட்டுக்குழுவாக இருக்கின்றனர்.

தமிழ்த் தேசியவாதிகள் என்றால், அதற்குள் இடதுசாரிகள் அடங்க மாட்டார்களா? ஏற்கனவே இந்தக் கேள்வியை பல தடவைகள் கேட்டு விட்டேன். ஆனால், இன்று வரையில், உங்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. என்ன காரணமோ? தாங்களும் வலதுசாரி என்பதாலா? அது சரி, "நான் ஒரு வலதுசாரி தான்" என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வதற்கு என்ன தயக்கம்? வலதுசாரி என்பது ஒரு கெட்ட வார்த்தை இல்லைத் தானே?

Wednesday, December 28, 2016

எழுபதுகளில் பொருளாதாரப் பிரச்சினை, எழுந்தது ஈழக் கோரிக்கை!

[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(ஏழாம் பாகம்)

கடந்த முப்பதாண்டு கால இலங்கை வரலாற்றில், தேசியவாத, இனவாத, மதவாதக் கருத்துக்கள் முன் எப்போதும் இருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகமாகக் காணப் படுகின்றது. அதே நேரம், இலங்கையின் பொருளாதாரம் முதலாளித்துவத்தை, குறிப்பாக நவ தாராளவாத கொள்கையை சிறப்பாக நடைமுறைப் படுத்தி வருவதையும் காணலாம். இவ்விரண்டு போக்குகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனது கடந்த கால வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு, அதை இங்கு ஆராய்கிறேன்.

இலங்கையில் இன்று தீவிரமாக தமிழ்த் தேசியம் பேசுவோர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினராக இருப்பார்கள். அதாவது, மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த பூர்ஷுவா மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை இலகுவாக நிரூபிக்கலாம். அவர்களில் தொண்ணூறு சதவீதமானோர் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறார்கள். அதனால் கிடைத்த நன்மைகளை அனுபவிக்கிறார்கள். அதாவது, படித்து பட்டம் பெற்று, ஏதாவதொரு உத்தியோகம் பார்ப்பவர்களாக அல்லது வணிகத் துறையில் இருப்பார்கள்.

இது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களாகவே ஒத்துக் கொள்ளும் உண்மை. சிங்களத் தேசியவாதிகள், முஸ்லிம் தேசியவாதிகள் யாரென்று பார்த்தால், அவர்களும் மேற்படி வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எல்லோருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன.
- சமூகத்தில் மேன்நிலை அந்தஸ்தில் இருப்பவர்கள்.
- வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள்.
- முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள்.
- கம்யூனிசத்தை, இடதுசாரியத்தை வெறுப்பவர்கள்.

சிங்கள-தமிழ்-முஸ்லிம் எந்த சமூகத்தை சேர்ந்த தேசியவாதியாக இருந்தாலும், மேற்படி அரசியல் கொள்கைகளையும் பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் நவ தாராளவாத பொருளாதாரத்தின் குழந்தைகள். எண்பதுகளுக்குப் பிறகு பிறந்தவர்கள் தான் இந்த இளைய தலைமுறையினர். அதே காலகட்டத்தில் தான் இலங்கையில் முதலாளித்துவம் வளர்ச்சி பெற்றிருந்தது. முதலாளித்துவத்திற்கு சேவை செய்பவர்களை உருவாக்குவதற்காக, பாடத் திட்டங்களில் கூட மாற்றங்கள் செய்யப் பட்டிருந்தன.

முப்பது வருடங்களுக்கு முன்னர், இலங்கை ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளித்துவ நாடாக இருந்த படியால், நிலப்பிரபுத்துவ எச்சங்களும் பரவலாக காணப் பட்டன. குறிப்பாக எழுபதுகளில் கூட, யாழ்ப்பாண தமிழ்ச் சமூகம் சாதிய கட்டுமானங்களை கைவிட்டிருக்கவில்லை. அதனால் தான் தேசியவாதம் அங்கு காலூன்றுவதற்கு சிறிது காலம் எடுத்தது. தெற்கில் சிங்களத் தேசியவாதம் தோன்றி பல தசாப்தங்களுக்கு பிறகு தான், வடக்கில் தமிழ்த் தேசியவாதம் நிலை கொண்டது. அதற்கான காரணம் என்ன?

அப்போது வட மாகாணத்தில் முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை என்பதும் ஒரு முக்கிய காரணம். இலங்கையின் தொழிற்துறை முழுவதும் தெற்கில் தான் காணப்பட்டன. கொழும்புத் துறைமுகம் பெருமளவு தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தது. இந்தியாவில் இருந்து கூட தொழிலாளர்கள் வந்து வேலை செய்தார்கள். ஆனால், வடக்கில் எந்த அபிவிருத்தியும் நடக்கவில்லை. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை தவிர வேறெந்த தொழிற்துறையும் அங்கே இருக்கவில்லை.

முதலாளித்துவம் வரும் போதே தன்னோடு சேர்த்து வர்க்கங்களையும் அழைத்துக் கொண்டு வரும். அதாவது, ஒரு நாட்டில் முதலாளித்துவ உற்பத்திகள் அதிகரிக்கும் பொழுது, ஒரு பக்கம் முதலாளிய- பூர்ஷுவா வர்க்கமும், மறுபக்கம் உழைக்கும்- பாட்டாளி வர்க்கமும் உருவாகும். அது பழைய நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளை சீர்குலைப்பதால், சாதிய முரண்பாடுகளும் மறைந்து போகின்றன. தென்னிலங்கையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அதனால், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அங்கே சிங்களத் தேசியவாதம் இருந்து வருவதில் ஆச்சரியப் பட எதுவுமில்லை.

ஒரு நாட்டில் தொழிற்துறையும், அதை சார்ந்த தொழிலாளர்களும் அதிகரிக்கும் நேரம், அங்கே இடதுசாரிக் கட்சிகள் பலம் பெறுவதையும் தவிர்க்க முடியாது. அது இலங்கையிலும் நடந்தது. எமது வீட்டில் நடக்கும் அரசியல் கலந்துரையாடல்களில், தவிர்க்கமுடியாமல் இடதுசாரிகள் பற்றிய கதைகளும் அடிபடும். அதற்குக் காரணம் இருக்கிறது. ஐம்பதுகள், அறுபதுகளில் கொழும்பில் அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெறும்.

பாலா தம்பு என்ற தமிழ் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் பற்றி, எமது வீட்டில் அப்பாவும், அவர்களது நண்பர்களும் அடிக்கடி பேசுவார்கள். அன்று அவர்கள் மிகவும் மதித்த அரசியல் தலைவர்களில் பாலா தம்புவும் ஒருவர். அப்போது நான் சிறுவனாக இருந்த படியால், பல விடயங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. இருப்பினும் தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றிப் பேசும் பொழுது, அது பற்றித் தெரியாமல் இருக்க முடியாது.

அன்றைய காலகட்டத்தில் மத்தியதர வர்க்கத்தினர் எல்லோரும் பூர்ஷுவா மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கவில்லை. தமக்குக் கீழே இருந்த பாட்டாளி வர்க்கத்துடன் தங்களையும் சேர்த்து ஒரே உழைக்கும் வர்க்கம் என்ற எண்ணம் இருந்தது. எனது பெற்றோரின் தனிப்பட்ட கருத்துக்களும் அப்படித் தான் இருந்தன. அதனால், அன்று நடந்த வேலைநிறுத்த போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவளித்தனர். அப்போதெல்லாம் அரச ஊழியர்களும் பங்கெடுத்த நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

அரசியல் ரீதியாக எனது அப்பாவும் ஒரு வலதுசாரி தான். தமிழ்த் தேசியவாதி தான். இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும், அவர் எதையும் பிரச்சார நோக்கில் பேசவில்லை. நியாயம் எங்கே இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தார். தற்போதுள்ள வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் மாதிரி, "தமிழரின் சுய நிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாத இடதுசாரிகள் நாசமாகப் போகட்டும்!" என்று சாபம் போடவில்லை. அவரவர் அரசியல் நிலைப்பாட்டுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்கள் பக்க நியாயங்களை ஏற்றுக் கொள்வதும் அவசியம் என்றுரைத்தார்.

உண்மையில், முதன்முதலாக ஜேவிபி யை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் என் தந்தை தான். அவர் வேலை செய்த இடத்தில் ஜேவிபி ஆதரவாளர்கள் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மூலம் கிடைத்த ஜேவிபியின் தமிழ்ப் பிரசுரங்களையும் எனக்கு வாசிக்கத் தந்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய ஒரு பிரசுரமும் அவற்றில் இருந்தது. அது இப்போதும் என் ஞாபகத்தில் உள்ளது. அப்போது அதைப் புரட்டி வாசித்திருக்கிறேன். ஆனால், அதைப் புரிந்து கொள்ளுமளவிற்கு அரசியல் அறிவு போதுமானதாக இருக்கவில்லை.

அதற்காக, அப்பா அன்று ஜேவிபியை ஆதரித்தார் என்று யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அன்றிருந்த நிலைமை வேறு. பிற்காலத்தில் எவ்வாறு தமிழ் மக்கள் புலிகளின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கினர் என்பதை நான் இங்கு குறிப்பிடத் தேவையில்லை. அதே மாதிரியான நிலைப்பாடு தான் அன்று ஜேவிபி தொடர்பாகவும் இருந்தது. கணிசமான அளவு சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும், மறைமுகமாக ஜேவிபிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி இருந்தனர். அதற்குக் காரணம், அரச இயந்திரத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். அரசின் மீது எல்லோருக்கும் விமர்சனம் இருந்தது. அவர்கள் ஜேவிபி வடிவில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தார்கள்.

மேலும் ஜேவிபி குட்டி முதலாளிய வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியது. தாய்மொழியில் கல்வி கற்ற, கீழ் மத்தியதர வர்க்க இளைஞர்களை கவர்ந்திருந்தது. அப்போதிருந்த சிறிமாவோ அரசும் சோஷலிசத்தை ஆதரிப்பதாக சொல்லிக் கொண்டது. சோவியத் யூனியன், சீனா போன்ற சோஷலிச நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தது. ஜேவிபி சோஷலிச இலங்கைக்காக ஆயுதமேந்திப் போராடுவதாக அறிவித்த நேரம், அந்த நாடுகள் எதுவும் ஆதரவு வழங்கவில்லை. மாறாக, ஜேவிபி கிளர்ச்சியை மூர்க்கமாக ஒடுக்கிய சிறிலங்கா அரசை ஆதரித்தன. ஆயுதங்களும் கொடுத்துதவின.

உலகில் எந்த நாட்டினதும் ஆதரவு கிடைக்காத நிலையில், அல்லது அப்படி எதையும் எதிர்பார்க்காத காரணத்தால், ஜேவிபி "மண்ணுக்கேற்ற மார்க்சியம்" ஒன்றை உருவாக்கி இருந்தது. அதில் தேசியவாதத்தின் கூறுகளும் அடங்கி இருந்தன. சர்வதேச அளவில், வட கொரியாவும், கம்பூச்சியாவும் இது போன்ற மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்தன. வட கொரியாவில் கிம் இல் சுங், கம்பூச்சியாவில் பொல் பொட் ஆகியோரைப் பின்பற்றி, இலங்கையில் ரோகன விஜேவீர புதிய சித்தாந்தம் ஒன்றை உருவாக்கி இருந்தார்.

எழுபதுகளில் ஒரு குழப்ப நிலை இருந்தது. பலருக்கு சரியான அரசியல் பாதை எதுவென தெரிவு செய்ய முடியாமல் இருந்தது. அன்றைய இலங்கையின் சமூக பொருளாதாரமும் அதற்கான முக்கிய காரணம். அந்நிய நாட்டு இறக்குமதி பெருமளவு குறைக்கப் பட்டது. இலங்கை தற்காப்புப் பொருளாதாரத்தை பின்பற்றியது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் அரசால் தேசியமயமாக்கப் பட்டிருந்தன. அரசு தான் நாட்டில் மிகப் பெரிய தொழில் வழங்குனராக இருந்தது. பெரும்பான்மையான மத்திய தர வர்க்கத்தினர் அரச ஊழியர்களாக இருந்தனர்.

அன்று பங்குச் சந்தை என்ற சொல்லையே யாரும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அப்படி எதுவும் இருக்கவில்லை. 1977 ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தனியார்மயம் புகுத்தப் பட்டு பங்குச் சந்தை உருவானது. அப்போது பல பெரிய நிறுவனங்களின் மதிப்பு பங்குகளாக பிரிக்கப் பட்டு, பொது மக்களுக்கும் விற்பனை செய்யப் பட்டது. எனது அப்பாவும் சில பங்குகள் வாங்கி இருந்தார். அந்தக் காலத்தில் இதெல்லாம் ஒரு விளையாட்டுப் போன்றிருந்தது. எதிர்கால பொருளாதாரத்தில் பங்குச் சந்தை வகிக்கப் போகும் பிரதானமான பாத்திரம் குறித்து அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இலங்கையில் வாழும் மக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு, "சோஷலிசம் அல்லது இடதுசாரியம் பிடிக்காது" என்பதாக இன்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. அன்றும் முதலாளித்துவத்தை ஆதரித்த லிபரல்வாதிகள் பலர் இருந்தனர். அவர்கள் யாரென்று பார்த்தால், சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வாழும் மேட்டுக்குடியினராக இருப்பார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. மொத்த சனத்தொகையில் அதிக பட்சம் ஒரு சதவீதம் கூட இருக்காது. அன்று அவர்களது குரல் பெரிதாகக் கேட்கவில்லை.

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, ஒரு வலதுசாரி, முதலாளிய ஆதரவாளரான என் தந்தையே சோஷலிசத்தையும் ஆதரித்தார்! அதற்குக் காரணம் என்ன தான் முதலாளித்துவத்தின் மீது பற்று இருந்தாலும், சோஷலிசம் தவிர்க்க முடியாதது என நம்பினார். உதாரணத்திற்கு, சிறிமாவோ காலம் பற்றிய அப்பாவின் விமர்சனங்களை எடுத்துக் காட்டலாம்.

பொதுத் தேர்தலில் சிறிமாவோ ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டு, ஜே.ஆர். தாராளமயம் கொண்டு வந்த காலத்தில் தான், அப்பா அந்த விமர்சனத்தை முன்வைத்தார். பொருளாதார விடயத்தில் அந்த அரசாங்கத்தின் குறிக்கோள் நல்லது தான். மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியது தான். சிலவேளை, இன்னும் சில வருடங்கள் போயிருந்தால் அதன் பலன் கிடைத்திருக்கலாம். ஆனால், நடைமுறையில் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது. மக்கள் கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை அனுபவித்து விட்டார்கள். இதற்கு மேலும் சகிக்க முடியாது என்ற நிலைமையில் தான் தேர்தலில் தோற்கடிக்க வைத்தனர்.

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று சொல்லி, சிறிமாவோ அரசாங்கம் சட்டத்திற்கு மாறாக ஏழாண்டுகள் ஆட்சி நடத்தியது. வெளிநாட்டு இறக்குமதி நிறுத்தப் பட்டு, உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. ஐந்தாண்டு, பத்தாண்டுத் திட்டம் என்ற பெயரில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டன. விவசாயம் அதன் மையப் பொருளாக இருந்தது. அரசு மானியங்கள் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்தது.

எங்கும், எப்போதும் விவசாயம் பற்றிய பேச்சாக இருந்தது. அன்று மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த பலர் விவசாயிகளாக மாறி இருந்ததை, இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஒரு சாதாரணமான ஆசிரியர் கூட, மாதாந்த சம்பளப் பணத்தில் இருந்து சேமித்த தொகையில், ஒரு துண்டு நிலம் வாங்கி விவசாயம் செய்தார். வன்னியில் நிலம் இன்னும் மலிவாகக் கிடைத்தது. படித்த வாலிபர் திட்டத்தின் கீழ் அரசு இலவசமாகவும் நிலம் கொடுத்தது.

மத்திய தர வர்க்க உத்தியோகம் பார்த்தவர்கள், விவசாயத்தை ஒரு பகுதி நேரத் தொழிலாக செய்து வந்தனர். அதன் மூலம் இரட்டிப்பு வருமானம் கிடைத்தது. அதனால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டவர்கள் பலருண்டு. எனது பெற்றோரும் அவர்களில் அடக்கம். எனது அப்பாவும் அடிக்கடி வன்னிக்கு சென்று விவசாயம் செய்து விட்டு வருவார்.

அந்தக் காலத்தில் "கமத்தொழில் விளக்கம்" என்ற சஞ்சிகை பிரபலமாக இருந்தது. பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு பற்றிய கட்டுரைகள், படங்களுடன் பிரசுரிக்கப் பட்டிருந்தது. எல்லோருக்கும் புரியக் கூடிய மொழிநடையில் எழுதப் பட்டிருக்கும். எங்கள் வீட்டில் அது கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது. அவற்றை வாசித்து எனது விவசாய அறிவையும் பெருக்கிக் கொண்டேன். பாடசாலையில் தொழிற்கல்வி ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைமை வந்த நேரம், நான் விவசாய பாடம் தெரிவு செய்து படித்தேன். என்னைப் பொறுத்தவரையில், மிகவும் இலகுவான பாடங்களில் அதுவும் ஒன்று.

மேற்குறிப்பிட்ட காலப் பின்னணியை வைத்துப் பார்க்கும் பொழுது, அன்றிருந்த மக்கள் சோஷலிசத்தை சிறந்ததாக நினைத்ததில் தவறேதும் இல்லை என்பது தெளிவாகும். சிறிமாவோ காலத்தில் உணவுப் பொருட்கள், உடைகள், பாவனைப் பொருட்களுக்கு பற்றாக்குறை இருந்தது. அதனால் ஏராளமான மக்கள் கஷ்டப் பட்டனர். இதற்கிடையே, ஓரிரு வருடங்கள் பருவ மழை பெய்யாத படியால் வரட்சி நிலவியது. அரசு செயற்கை மழை உருவாக்க எத்தனித்தும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

எழுபதுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றமும் இலங்கைப் பொருளாதாரத்தில் பெரியளவு தாக்கம் செலுத்தியது. அது சமூக அரசியலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. மழை வீழ்ச்சி குறைந்த படியால் விவசாயம் பாதிக்கப் பட்டது. பஞ்சம் ஏற்பட்டது. இறக்குமதிக்கு எதிரான சிறிமாவோ அரசாங்கமே அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்படியான பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்பட்ட மக்களின் மனக்குமுறல் அரசியலில் எதிரொலித்தது.

பொதுத் தேர்தலில் சிறிமாவோவின் சுதந்திரக் கட்சிக்கு படுதோல்வி கிட்டியது. எதிர்பாராத விதமாக வடக்கு, கிழக்கில் அத்தனை ஆசனங்களையும் கைப்பற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக வந்தது. அது முன்வைத்த தமிழீழக் கோரிக்கை பிரபலமடைந்தது. அதைத் தொடர்ந்து தமிழீழத்திற்காக ஆயுதமேந்திப் போராடுவதாக சொன்ன விடுதலைப் புலிகள் போன்ற இயக்கங்களின் தாக்குதல்களும் அதிகரித்தன.

ஆகவே, இதிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. தமிழ்த் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்வது போன்று, "ஒன்றுபட்ட தமிழ் இன உணர்வும், தமிழீழத்திற்கான வேட்கையும்" ஈழபோருக்கான உந்துசக்திகளாக இருக்கவில்லை. அதற்கான சமூகப் பொருளாதார காரணிகளை யாரும் ஆராய்வதில்லை. இலங்கையில் சிறிமாவோ அரசும், இந்தியாவில் இந்திராகாந்தி அரசும், இறக்குமதியை தடுத்து உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

அந்தக் காலத்தில் இரு நாடுகளிலும் வெவ்வேறு பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவியது. இது கடத்தல்காரர்களுக்கு வாய்ப்பாகப் போனது. வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தினசரி கடத்தல் படகுகள் சென்று வந்தன. அது ஒரு சட்டவிரோத பொருளாதாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. குட்டிமணி போன்ற கடத்தல்தொழிலில் ஈடுபட்ட சிலர், துப்பாக்கிகள் வைத்திருந்தனர். அவர்கள் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர்.

தமிழ்நாட்டுடன் கடத்தல் வியாபாரம் செய்து வந்த அரசியல் ஆர்வலர்கள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலரை கைக்குள் வைத்திருந்தார்கள். ஒரு இரகசியமான ஆயுதக் குழுவின் உருவாக்கத்திற்கு அவை போதும். ஒரு காலத்தில் TELO "முதன் முதலாக தோன்றிய இயக்கம்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தது. குட்டிமணி, தங்கத்துரையை தலைவர்களாகக் கொண்ட TELO இயக்கம் பற்றி நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. குறிப்பிட்ட காலம் பிரபாகரனும் அதில் இருந்தார். 1983 வெலிக்கடை சிறைப் படுகொலைகளில், குட்டிமணி, தங்கத்துரை கொல்லப் பட்டதும், இயல்பாகவே ஈழ விடுதலை இயக்கங்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருகியது.

அதை விட, எழுபதுகளில் மழைவீழ்ச்சி குறைந்த படியால், விவசாயம் பாதிக்கப் பட்டதும் மக்களை வேறு திசையில் சிந்திக்க வைத்திருந்தது. அதுவே கூட்டணி தமிழீழத்தை முன்மொழிந்த வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான ஆதரவாகவும் மாறி இருந்தது. தென்னிலங்கையில் சிங்கள வாக்காளர்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து யு.என்.பி. க்கு வாக்களித்தனர். அதே தான் வட இலங்கையிலும் நடந்தது. தமிழ் வாக்காளர்களும் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து தான், த.வி.கூ. க்கு வாக்களித்தனர். அன்று இலங்கையில் நடந்த மாற்றம் ஒன்று தான். ஆனால், காலப்போக்கில், சிங்களவர்களும், தமிழர்களும், அதனை இன முனைப்புக் கொண்ட அரசியலாக மொழிபெயர்த்துக் கொண்டனர்.

(தொடரும்) 

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1. வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை! 
2. வேற்றுக் கிரக வாசிகளான தமிழினத்தில் வர்க்க வேற்றுமை கிடையாது! 
3.தமிழனின் உழைப்பை சுரண்டிய பணத்தில் நல்லூர்க் கோயிலில் அன்ன தானம்! 
4. ஒரு பிச்சைக்காரனுக்கு உணவிட முடியாத கடவுளால் என்ன பிரயோசனம்? 
5. ஜேவிபி, புலிகளுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்திய தமிழர்கள்!
6. தேர்தல் பாதை திருடர் பாதை ஈழப் புரட்சி ஒரு சர்வதேசப் புரட்சி

Saturday, April 23, 2016

வர்க்க நலன் காரணமாக சமஷ்டியை நிராகரித்த ஈழத் தமிழ்த் தலைவர்கள்!

பண்டாரநாயக்க, சேர் பொன் இராமநாதன் 

"ஈழத் தமிழர்களுக்கு, வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய சமஷ்டி அமைப்பை, 1926 ம் ஆண்டே பண்டாரநாயக்க முன்மொழிந்திருந்தார். ஆனால் அன்றைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டி யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்!" இந்தத் தகவலை, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கான பேட்டியில் தெரிவித்துள்ளார். (Bandaranaike Proposed Federalism to Isolate Tamils, Charges Wigneswaran)

அவர் மேலும் தெரிவிக்கையில்:"பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், தமிழர்கள் மிகுந்த செல்வாக்கோடு இருந்தனர். நாடு முழுவதும் எந்த இடத்திலும் காணி வாங்க முடிந்தது. உத்தியோகம் பார்க்க முடிந்தது. அதனால், தமிழர்களை வடக்கு- கிழக்கிற்குள் ஒதுக்கி வைக்கும் சமஷ்டி அமைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தலில் வியப்பில்லை. எது எப்படி இருந்தாலும், 1956 ம் ஆண்டு பண்டாரநாயக்க பிரதமரான பின்னர், தமிழ் சமஷ்டிக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தது. அப்போது பண்டாரநாயக்க மனதை மாற்றிக் கொண்டு விட்டார். தமிழ் அடையாளத்தை அழிப்பதற்காக சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்தார்." என்று கூறினார்.

அண்மையில் பேசிய ஜேவிபி தலைவர் டில்வின் சில்வா, "(விக்னேஸ்வரன் போன்ற) தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமே சமஷ்டி கோருகிறார்கள்." என்று குற்றஞ் சாட்டி இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் முகமாக, "பண்டாரநாயக்கவின் சமஷ்டி கோரிக்கையை" விக்னேஸ்வரன் எடுத்துக் காட்டி இருந்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினையை கருப்பு - வெள்ளையாக பார்க்க முடியாது என்பதைத் தான், விக்கினேஸ்வரனின் கூற்று தெளிவு படுத்துகின்றது. "வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழரின் தாயகம்" என்று இன்றைய தமிழ் தேசியவாதிகள் உரிமை கோருகின்றனர். ஆனால், அன்றைய தமிழ் தலைவர்கள் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. தமிழீழம் என்பதெல்லாம் பிற்காலத்தில் தோன்றிய எண்ணக்கரு தான்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நடந்த, அரசால் திட்டமிடப் பட்ட இனக் கலவரங்கள், ஈழத் தமிழர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் முடங்க வைத்தது. தென்னிலங்கையில், சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டனர். அவர்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்தனர். பண்டாரநாயக்கவின் சமஷ்டி திட்டம், தமிழர்களை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் ஒதுங்க வைக்கும் உள்நோக்கம் கொண்டது என்று, அன்றைய தமிழ்த் தலைவர்கள் எதிர்பார்த்தது மாதிரியே பல சம்பவங்கள் நடந்துள்ளன.

1925 ம் ஆண்டு, இங்கிலாந்தில் உயர்கல்வி கற்று விட்டு நாடு திரும்பிய பண்டாரநாயக்க, முற்போக்கு தேசியக் கட்சிக்கு தலைமை தாங்கினார். முற்போக்கு தேசியக் கட்சி, ஆங்கிலேயக் காலனியான இலங்கையின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு தன்னைத் தயார் படுத்தி வந்தது. பண்டாரநாயக்க முன்வைத்த சமஷ்டித் திட்டத்தின் படி, இலங்கை மூன்று சமஷ்டி அலகுகளாக பிரிக்கப் பட வேண்டும். 
1.கரையோர சிங்களவர்களின் தென்னிலங்கைப் பிரதேசம். 
2.முன்பு கண்டி ராஜ்ஜியமாக இருந்த மத்திய மலைநாடு. 
3.வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்ட தமிழர் பிரதேசம்.

இலங்கைக்கான அரசியல் யாப்பு எழுத வந்த டொனமூர் ஆணைக்குழுவிடம் பண்டாரநாயக்கவின் சமஷ்டித் திட்டம் கையளிக்கப் பட்டது. அன்று பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்திற்கும் சென்று, தமிழர்கள் முன்னிலையில் தனது சமஷ்டித் திட்டம் பற்றி உரையாற்றினார். யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஒழுங்கு படுத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில், சமஷ்டிக்கு பெரிய வரவேற்பு இருக்கவில்லை.

முற்போக்குத் தேசியக் கட்சியில், பண்டாரநாயக்கவின் தமிழ் நண்பர் ஜேம்ஸ் ரத்தினமும் அங்கம் வகித்திருந்தார். பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்க முன்மொழிந்த சமஷ்டி அமைப்பை எதிர்த்து வாக்களித்தவர்களில் அவர் முக்கியமானவர். தான் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறேன் என்று, “Ceylon Morning Leader” (19 May 1926) பத்திரிகையில் காரசாரமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் சமஷ்டிக் கோரிக்கை ஒற்றையாட்சியை சீர்குலைத்து விடுமென்றும், பிரிவினைக்கு வழிவகுத்து விடும் என்றும் வாதிட்டு இருந்தார்!

இவ்வாறு தமிழர்கள் சமஷ்டி எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், கண்டிச் சிங்களவர்கள் சமஷ்டிக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இலங்கை சுதந்திரமடையும் வரையில், கண்டிச் சிங்களவர்கள் தமது சமஷ்டிக் கோரிக்கையை கைவிடவில்லை. ஒற்றையாட்சியின் கீழான இலங்கையில், கரையோரச் சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்துவார்கள் என்று அஞ்சினார்கள். தமது பிரதேசங்களில் கரையோச் சிங்களவர்களின் குடியேற்றம் அதிகரிப்பதாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

1927 ம் ஆண்டு, டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு வந்தது. பல்வேறு பட்ட உள்நாட்டு அரசியல் தலைவரகள் ஆணைக்குழுவிடம் தமது பிரேரணைகளை முன்வைத்தனர். தமிழர்களுக்கு தலைமை தாங்கிய சேர் பொன் இராமநாதன்  தமிழ் லீக் கட்சி சார்பில் தனது ஆலோசனைகளை தெரிவித்திருந்தார். 

டொனமூர் ஆணைக்குழு முன்பு சாட்சியமளித்த, அன்றைய "ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவர்" சேர் பொன் இராமநாதன், வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான பிரிவினையை கோரவில்லை. குறைந்த பட்சம், அன்று பண்டாரநாயக்க முன்மொழிந்த சமஷ்டிக் கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அரசியல் தலைமைத்துவத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அதிகரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

சேர் பொன் இராமநாதன், பிரதேச அடிப்படையிலான பிரதிநித்துவத்திற்கு மாறாக இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை முதன்மைப் படுத்தினார். பாராளுமன்றத்தில், மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்கள் சிங்களவர்களுக்கு, மூன்றிலொன்று தமிழர்களுக்கு என்று ஒதுக்கப் பட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். 

ஆனால், டொனமூர் ஆணைக்குழு அந்த யோசனையை நிராகரித்து விட்டது. அதற்குப் பதிலாக பிரதேசவாரி பிரதிநித்துவத்தை ஏற்றுக் கொண்டது. அது சிங்களவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது என்று, தமிழ்த் தலைவர்கள் ஆதங்கப் பட்டனர். ஆனால், வடக்கு கிழக்கிற்கு சமஷ்டி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அப்போது கை நழுவ விட்டிருந்தனர்.

ஏன் பிரிட்டிஷ் காலனிய காலத்திலேயே வடக்கு- கிழக்கு சமஷ்டியை பெற்றுக் கொள்வதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தமிழ்த் தலைவர்கள் தவற விட்டனர்? அதற்குக் காரணம், தமிழ் மக்களை பிரதிநித்துவப் படுத்திய தலைவர்கள், தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கினார்கள். "வடக்கு-கிழக்கு தமிழர் தாயகம்" என்ற எண்ணம் அன்று அவர்கள் மனதில் இருக்கவில்லை. அதற்கு மாறாக மேட்டுக்குடியினருக்கு உரிய மத்தியதர வர்க்க சிந்தனை மட்டுமே இருந்தது.

அன்றைய காலகட்டத்தில், தமிழ் மேட்டுக்குடியினர் கொழும்பு அல்லது தென்னிலங்கையில் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வந்தனர். அவர்கள் ஒன்றில் அதிகம் சம்பாதிக்கும் பதவி வகிக்கும் உத்தியோகஸ்தர்களாக இருந்தனர், அல்லது வணிகத் துறையில் ஈடுபட்டு பெரும் பொருளீட்டி வந்தனர். அது மட்டுமல்லாது, தென்னிலங்கையில் பல காணிகளுக்கும், சொத்துக்களுக்கும் அதிபதிகளாக இருந்தனர். இதையெல்லாம் விட்டு விட்டு யாழ் குடாநாட்டுக்குள் முடங்கிக் கொள்ள விரும்புவார்களா?

Saturday, June 27, 2015

இடதுசாரி புலிகள் உருவாக்கிய முதலாளிகள் எனும் வலதுசாரி அழிவு சக்திகள்!

இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்களும், அதே நேரம் தாம் தீவிர வலதுசாரிகள் என்பதை மறைத்துக் கொள்ளும் பலர் இன்றும் உள்ளனர். உலகில் உள்ள எல்லா அரசியல் அமைப்புகளிலும் இடதுசாரியம், வலதுசாரியம் இருக்கும். வலதுசாரிக் கட்சிகளுக்குள் இடதுசாரியம் இருக்கும். இடதுசாரிக் கட்சிகளுக்குள் வலதுசாரியம் இருக்கும். (அரசியல்) விஞ்ஞானமும் அப்படித்தான் வரையறுக்கிறது.

"வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவனுக்கு வீர வணக்கம்..." என்று, புலிகளின் தீவிர விசுவாசி ஒருவர் தனது தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வந்தார். அதில் உண்மையும் இருக்கிறது. ஆரம்பத்தில் தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாகக் காட்டிக் கொண்ட புலிகள், பிற்காலத்தில் வலதுசாரிகளாகி, சிறு முதலாளிகளையும் வளர்த்து விட்டதன் விளைவு அவர்களது அழிவுக்கு வித்திட்டது.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் இயக்கம் ஒன்றை கட்டி வளர்ப்பது அதிகச் செலவு பிடிக்கும் விடயம். உலகத் தீவிரவாத இயக்கங்கள் பற்றிய சி.ஐ.ஏ. அறிக்கைகளை படித்தால் ஓர் உண்மை புலனாகும். அந்த இயக்கங்கள் எவ்வாறு தமது நிதித் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன என்று விபரமாக ஆராய்ந்திருப்பார்கள்.

புலிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது, அது எந்த வகையில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது என்பன போன்ற முழு விபரங்களையும் சி.ஐ.ஏ. போன்ற மேற்கத்திய உளவு நிறுவனங்கள் கணித்து வைத்திருந்தன. அது அவ்வளவு கடினமான விடயமாக இருக்கவில்லை. பெருமளவு நிதி வழங்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தனர். வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்ட புலிகளின் முகவர்கள், சர்வதேச முதலாளித்துவ பொருளாதார வலைப்பின்னலை பயன்படுத்திக் கொண்டார்கள்.

கொழும்பிலும் புலிகளின் நிதியில் உருவாக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இயங்கின. சில தனியார் நிறுவனங்களிலும், கொழும்பு பங்குச் சந்தையிலும் புலிகளின் முதலீடு இருந்ததாக சந்தேகிக்கப் பட்டது. இதிலே முக்கியமான விடயம், சர்வதேச மூலதனத்திற்குள் அகப்பட்ட பணத்தின் மூலத்தை கண்டுபிடிப்பதும் தடை செய்வதும் மிகவும் இலகு.

அது மட்டுமல்ல, புலிகள் உருவாக்கிய முதலாளிகள், என்ன தான் தீவிர புலி விசுவாசிகளாக வேஷம் போட்டாலும், பணத்தின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டிருந்தனர். இறுதியில், சந்தர்ப்பம் பார்த்து, தம்மை வளர்த்து விட்ட புலிகளை காட்டிக் கொடுக்கவும், கைவிடவும் தயங்கவில்லை. என்ன இருந்தாலும், முதலாளிகளின் பிறவிக் குணம் மாறுமா?

எது எப்படி இருந்த போதிலும், புலிகளால் இடதுசாரியத்தை முற்றாக கழற்றி விட முடியவில்லை. "துப்பாக்கி முனையில் இருந்து அதிகாரம் பிறக்கிறது....", "மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை விடுவதில்லை..." போன்ற மாவோவின் மேற்கோள்கள், தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளில் எதிரொலித்தன.

"முதலில் கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகரங்களை சுற்றி வளைக்கும்" மாவோயிச போர்த்தந்திரம் புலிகள் நடத்திய போர்களின் அடிநாதமாக இருந்தது. சர்வதேச கம்யூனிசப் புரட்சியாளர்களினால் குறிவைக்கப் படும், பெற்றோலிய குதங்கள், மின் உற்பத்தி நிலையம், துறைமுகம், விமான நிலையம் போன்ற பல பொருளாதார இலக்குகளும் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகின.

வன்னியில் இரண்டு தசாப்த காலமாக இருந்த, புலிகளின் "de facto தமிழீழம்" சர்வதேச மூலதனம் ஊடுருவ முடியாத பகுதியாக இருந்தது. நிச்சயமாக, தமது இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டில் இருந்து புலிகள் அதை தடுக்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மீது செயற்கையான வரி விதிப்பதன் மூலம் தான் பெருமளவு வருமானத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆயினும், இரகசியங்கள் தெரிந்து விடும், பொருளாதாரம் தமது கைகளை விட்டு சென்று விடும் என்ற எச்சரிக்கை உணர்வும் காரணமாக இருந்தது. அந்நிய மூலதனத்தை நிர்வகித்த முதலாளிகள், புலிகள் அளவுக்கு அதிகமான வரி அறவிடுவதாக குற்றஞ் சாட்டினார்கள்.

கொக்கோ கோலா(அல்லது பெப்சி கோலா) நிறுவனம் மட்டும், சில வருட காலம் புலிகள் கேட்ட வரியை கொடுத்து விட்டு வன்னிக்குள் கடை விரித்திருந்தது. ஆயினும், இறுதிப்போர் தொடங்குவதற்குள் அவர்களும் பின்வாங்கி விட்டிருந்தனர். கொக்கோ/பெப்சி கோலாக்களின் தாயகமான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேற்பார்வையின் கீழ், பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் நடந்தது.

போர் முடிந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டு, பெப்சி கோலா மீண்டும் அதே பிரதேசத்தில் விற்பனையை தொடர்ந்து செய்கிறது. புலிகளுக்கு கொடுத்த பணத்தை விட, இராணுவத்திற்கு கொடுக்கும் பணம் பல மடங்கு குறைவானது. இதனால் சந்தைப் படுத்தும் செலவினமும் குறைகிறது. எந்த முதலாளியும் எப்படி செலவைக் குறைக்கலாம் என்று தான் யோசிப்பான். அதற்குப் பெயர் தான் முதலாளித்துவம்.

புலிகள் ஒரு தடவை, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் "தமிழீழ நாணயம்" அறிமுகப் படுத்தவிருப்பதாக கூறி வந்தனர். சிலநேரம், தமிழீழ ரூபாய் நோட்டுகள் அச்சிடப் பட்டிருந்தாலும், எந்தத் தருணத்திலும் புழக்கத்திற்கு விடப் படவில்லை. அதற்குக் காரணம், தமிழ் மேட்டுக்குடி மற்றும் முதலாளிகளின் எதிர்ப்பு என்று நம்பப் படுகின்றது. தமது சொத்துக்கள் ஒரே நாளில் காணாமல் போய்விடும் என்று அவர்கள் அஞ்சி இருக்கலாம். "100 தமிழீழ ரூபாய் = 120 சிறிலங்கா ரூபாய்" என்று செயற்கையான பெறுமதி நிர்ணயித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

முதலாளித்துவ பொருளாதாரத்தில், நாணயத்தின் பெறுமதியையும் சந்தை தான் தீர்மானிக்கிறது. வட கொரியா போன்ற, "ஸ்டாலினிச - சர்வாதிகார நாடுகள்" தான், நாணயப் பரிமாற்றத்தை தாம் நினைத்தவாறு தீர்மானிக்கின்றன. (அமெரிக்க டாலருடனான, வட கொரிய வொன்னின் பெறுமதி, செயற்கையாக கூட்டி வைக்கப் பட்டுள்ளது. சந்தையில் அது பல மடங்கு குறைவானது. கருப்புச் சந்தையில் மட்டும் உண்மையான பெறுமதி தெரிய வரும்.) ஆகவே, தீவிர வலதுசாரிகளான போலித் தமிழ் தேசியவாதிகள் சிலர், வட கொரியாவை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இடதுசாரிகளின் கனவான "தமிழீழ வைப்பகம்" என்ற தனியான வங்கித் துறை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பாக இயங்கி வந்தது. இருப்பினும், சிறிலங்கா அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி, மக்கள் வங்கிக் கிளைகளும் அப்படியே இருந்தன. மக்கள் தமது பணத்தை தமிழீழ வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப் பட்டது. ஈழத்திற்கு வெளியே "தமிழ் தேசிய இன மான உணர்வு" உறுதியாக இருப்பது போன்று தெரிந்தாலும், தமிழீழ வங்கிகளில் தமது பணத்தை இட்டவர்களின் எண்ணிக்கை குறைவு. தவிர்க்க முடியாத காரணங்களினால் "சிங்கள வங்கிகளின்" சேவைகளை தான் அதிகமாக பயன்படுத்தினார்கள்.

ஏன் என்ற கேள்விக்கான விடை மிகவும் எளிது. வெளிநாட்டில் வாழும் உறவினர் அனுப்பும் பணத்தை எந்த வங்கியில் பெற்றுக் கொள்வது? உலகில் எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப் படாத தமிழீழ வங்கிக்கு, யாரும் பணம் அனுப்ப முடியாது. இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் உறவினர்கள், மேற்கத்திய நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. போர் நடந்த காலங்களில், வெளிநாட்டுப் பணம் தான் உள்ளூர் மக்கள் பலரின் வயிற்றை நிரப்பப் பயன்பட்டது.

அந்நிய செலாவணி தான், உள்ளூர் பொருளாதாரத்தின் உந்துசக்தியாகவும் இருந்தது. தமிழ் மக்களுக்கு வந்த வெளிநாட்டுப் பணத்தை மாற்றிக் கொடுத்த சிறிலங்கா வங்கிகள் தான், மறுபக்கத்தில் அரசின் போர்ச் செலவினங்களுக்கு கடன் வழங்கின. மூலதனத்தின் தன்மைகளில் அதுவும் ஒன்று. நாய் விற்ற காசு குரைக்காது.

இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதுவராலயம் அனுப்பிய இரகசிய கேபிள்களில் தமிழீழ வைப்பகம் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது. (பார்க்க: விக்கிலீக்ஸ்) அமெரிக்கா, வெளிப்படையாக சிறிலங்காவின் வங்கிகளை ஆதரித்ததை கேபிளில் வாசிக்கக் கூடியதாக உள்ளது. 

அதற்கு, "ஊடுருவும் தன்மை கொண்ட பொருளாதாரம்" (Transparency) என்று, மேற்கத்திய நாடுகளால் அடிக்கடி சொல்லப் படும் காரணத்தை தான் அமெரிக்காவும் சுட்டிக் காட்டியது. அதாவது, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட, சிறிலங்கா வங்கிகளை, சர்வதேச மூலதனம் நினைத்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியும். தமிழீழ வங்கிக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியாது. இதனை அமெரிக்க தூதுவராலயம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஆரம்ப காலங்களில், தமது இயக்கத்தை மார்க்சியம் வழிநடத்துவதாகவும், சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகவும் சொல்லிக் கொண்ட புலிகள், தமது இடதுசாரி பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வந்திருந்தால், இன்று வரைக்கும் நிலைத்து நின்றிருக்கலாம். ஆனால், கொள்கையை விட நிதி மூலதனம் முக்கியம் என்று கருதி, "தமிழ் தேசிய" முதலாளிகளை உருவாக்கி விட்ட பலனை உணர்ந்து கொள்வதற்குள் காலம் கடந்து விட்டது. 

தமிழீழக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பப் பட்ட தமிழ் தேசிய முதலாளிகள், இறுதிப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள். அதன் விளைவு, இன்று எல்லோருக்கும் தெரிந்த வரலாறாகி விட்டது. சர்வதேச மூலதனத்தின் பாதையில் தடைக்கல்லாக நின்ற "இடதுசாரி புலிகள்" அழிக்கப் பட்டனர். "வலதுசாரி தமிழ் தேசிய முதலாளிகள்", சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து, சர்வதேச மூலதனத்தில் ஐக்கியமாகி விட்டனர்.

*****


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: