Showing posts with label சோஷலிச நாடுகள். Show all posts
Showing posts with label சோஷலிச நாடுகள். Show all posts

Monday, June 22, 2020

ஒரு பொலித்தீன் பைக்காக விற்கப் பட்ட சோவியத் தேசம்!

அமெரிக்க தத்துவ அறிஞர் Andre Vltchek ஒரு முன்னாள் சோவியத் யூனியன் பிரஜை. சிறு வயதில் அவரது தந்தையின் தொழில் நிமித்தம்  செக்கோஸ்லாவாக்கியாவில் வாழ்ந்து வந்தார். முப்பது வருடங்களுக்கு முன்பு கம்யூனிசத்தில் வெறுப்புற்று அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த இளம் தலைமுறையை சேர்ந்தவர். மேற்கத்திய முதலாளித்துவ சொர்க்கபுரியாக கருதப்பட்ட அமெரிக்காவுக்கு வந்த பின்னர், தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன் என்று வருந்தி இருக்கிறார். 

அவர் தனது செக் நாட்டு வாழ்க்கை அனுபவங்களை இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு உலக நாடுகளை நாசமாக்கி வருகிறது என்பதை இன்றைய ஹாங்காங் மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக இதை எழுதி இருக்கிறார். முன்னாள் சோஷலிச நாடுகளுக்குள் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை நான் இங்கே தமிழில் சுருக்கி தருகிறேன்.

அன்றைய வாழ்க்கை நன்றாக அர்த்தமுள்ளதாக இருந்தது. செல்வச் செழிப்புள்ளதாக இருந்தது. செல்வம் என்பது பணத்தின் அடிப்படையில் அல்லாது, பண்பாட்டு ரீதியாக, அறிவுபூர்வமானதாக, ஆரோக்கியமானதாக இருந்தது. ஆனால், அது பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம்.

நாங்கள் கிளர்ந்தெழும் இளைஞர்களாக, அத்துடன் இலகுவில் ஏமாறக் கூடியவர்களாக இருந்தோம். எங்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும் திருப்திப் படவில்லை. எல்லாம் தானாகக் கிடைத்ததாக எண்ணிக் கொண்டோம். இரவு நேரங்களில் BBC, Voice of America, Radio Free Europe ஆகிய வானொலிகளில் சொல்வதை செவிமடுத்தோம். அவை சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாடுகளையும் பற்றி அவதூறாகசொன்ன எல்லாவற்றையும் நம்பினோம்.

செக் நாட்டு சோஷலிச தொழிற்துறை நிறுவனங்கள் ஆசிய, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் நட்பு ரீதியாக பல தொழிற்சாலைகளை கட்டிக் கொடுத்தன. அவை உருக்காலை, சீனி ஆளை என்று பலதரப் பட்டன. ஆனால் நாங்கள் அவற்றை பெருமையாகக் கருதவில்லை ஏனென்றால் மேற்கத்திய ஊடகங்கள் அந்த திட்டங்களை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தன.

எங்களுடைய சினிமா தியேட்டர்கள் இத்தாலி, பிரெஞ்சு, சோவியத், ஜப்பானிய ஆகிய நாடுகளில் இருந்து மிகச் சிறந்த திரைப்படங்களை காண்பித்துக் கொண்டிருந்தன. ஆனால், நாங்கள் அமெரிக்க குப்பைப் படங்களை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தோம்.

மேடைக் கச்சேரி ஆனாலும், பதிவுசெய்யப் பட்டதானாலும், எமக்குக் கிடைத்த இசை மிக உயர்ந்த தரத்தில் இருந்தது. சிறிது தாமதமானாலும் நாம் விரும்பிக் கேட்ட இசை உள்ளூர் கடைகளில் கிடைத்தது. அன்று எமது கடைகளில் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் விற்கப் படவில்லை. ஆனால், நாங்கள் அதைத் தான் விரும்பிக் கேட்டோம். அதையெல்லாம் மத அனுஷ்டானம் மாதிரி விரும்பிக் கேட்டதுடன், கேசட் வடிவிலும் பதிவு செய்து வைத்திருந்தோம். ஏதாவது கிடைக்கவில்லை என்றால், சுதந்திர பேச்சுரிமை பறிப்பு என்று மேற்கத்திய ஊடகங்கள் அலறின.

இளம் மூளைகளை ஏமாற்றுவது எப்படி என்று அன்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஒரு கட்டத்தில் நாம் விரக்தி அடைந்தவர்களாக இருந்தோம். எங்கள் நாடுகளில் இருந்த எல்லாவற்றையும் விமர்சித்தோம். எதனோடும் ஒப்பிட்டுப் பாராமல், சிறிதளவு கூட நடுநிலைமை இல்லாமல் நடந்து கொண்டோம்.

(மேற்குலகு) எங்களுக்கு சொன்னதை எல்லாம் திருப்பிச் சொன்னோம்: சோவியத் யூனியன், செக்கோஸ்லாவாக்கியாவில் இருந்த எதுவுமே கூடாது. மேற்குலகில் இருந்த ஒவ்வொன்றும் சிறந்தது. ஆம், அன்றிருந்த நிலைமை மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம், அல்லது மத அடிப்படைவாதம் போன்ற நம்பிக்கை. உண்மையில் அன்று நாம் ஒரு தொற்று நோயால் பீடிக்கப் பட்டிருந்தோம். அது எங்களை முட்டாள்களாக மாற்றி விட்டது.

சோஷலிச மானியங்கள் மூலம் எமக்குக் கிடைத்த வசதிகளான நூலகம், அரங்கம், தேநீர் விடுதி ஆகிய பொது இடங்களை பயன்படுத்தி எமது தேசத்தின் மீது சேறு பூசிக் கொண்டே, மேற்குலகை மகிமைப் படுத்தினோம். மேற்குலக வானொலி, தொலைக்காட்சி, அங்கிருந்து கடத்தப்பட்டு வந்த சஞ்சிகைகள் என்பன இவ்வாறு தான் எம்மை மூளைச்சலவை செய்து வைத்திருந்தன.

அந்தக் காலங்களில் மேற்குலகில் இருந்து வந்த பொலித்தீன் பைகள் எமது அந்தஸ்தாக மாறின! உங்களுக்கு தெரியுமா? இன்றைக்கு பெட்டிக் கடைகளில், சில மலிவான சூப்பர் மார்க்கெட்டுகளில் கொடுக்கும் அதே பொலித்தீன் பைகள் (shopping bags) தான். அவற்றை நாம் நிறையப் பணம் கொடுத்து வாங்கினோம். ஏனென்றால் அது நுகர்வுக் கலாச்சாரத்தை அடையாள படுத்தியது! நுகர்வுக் கலாச்சாரம் தான் நல்லது என்று நாங்கள் நம்ப வைக்கப் பட்டிருந்தோம்.

சுதந்திரத்தை விரும்ப வேண்டும் என்று எமக்கு சொல்லப் பட்டது. அதாவது, மேற்கத்திய பாணி சுதந்திரத்தை. "சுதந்திரத்திற்காக போராட வேண்டும்" என்று கற்பிக்கப் பட்டோம். உண்மையில் நாம் பல வகைகளில் மேற்குலக நாடுகளை விட அதிக சுதந்திரத்தை அனுபவித்து வந்தோம். இதை நான் முதல் தடவையாக அமெரிக்கா வந்த பின்னர் தான் உணர்ந்து கொண்டேன். நியூ யோர்க் நகரில் என்னுடைய வயதையொத்த பிள்ளைகள் உலக அறிவு குறைந்தவர்களாக, மோசமான கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தனர்.

எமது உணவுகள் சுவையானவையாக, இயற்கையாக உற்பத்தி செய்யப் பட்டவையாக இருந்தன. ஆனால், நாம் வர்ணமயமான பைகளில் அடைக்கப்பட்ட மேற்கத்திய பொருட்களுக்காக ஆசைப்பட்டோம். நாம் இரசாயன பொருட்களை உண்ண விரும்பினோம்.

நாம் எப்போதும் ஆத்திரத்தோடு எதிர்க்கத் தயாராக இருந்தோம். எமது குடும்பங்களை பகைத்துக் கொண்டோம். நாம் மிக இளமையாக இருந்தாலும் பெரியவர்களாக நினைத்துக் கொண்டோம். நான் எனது முதலாவது கவிதைப் புத்தகத்தை வெளியிட்டு விட்டு,கதவை இழுத்து சாத்தி விட்டு, நியூ யோர்க்கிற்கு சென்று விட்டேன். நான் ஒரு முட்டாளாக்கப் பட்டு விட்டேன் என்பதை வெகு விரைவில் உணர்ந்து கொண்டேன்.


முழுமையான கட்டுரையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்:

Saturday, June 22, 2019

Volkspolizei - கிழக்கு ஜெர்மனியின் மக்களுக்கான சோஷலிச போலிஸ்


ஜூலை 1, GDR எனும் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் "மக்கள் காவலர் தினம்" கொண்டாடப் பட்டது. உண்மையிலேயே, அன்றைய கிழக்கு ஜெர்மன் போலிஸ், "மக்களின் காவலர்" என அழைக்கத் தகுதியானதா? இது பற்றி ஒரு மேற்கத்திய சஞ்சிகையில் வந்த தகவலை இங்கே தருகிறேன். அதை வைத்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

"கொலை, வன்முறை, பாலியல் தொழில் ஆகிய குற்றச் செயல்கள் எல்லாம், முதலாளித்துவத்தின் விளைவுகள். சோஷலிச சமுதாயத்தில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லாததால், பொறாமைக்கும், பேராசைக்கும் அங்கே இடமில்லை." முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனி (ஜெர்மன் ஜனநாயக குடியரசு) இவ்வாறு கூறி வந்தது. அந்த நாட்டில் குற்றச் செயல்கள் மிக அரிதாகவே நடந்தன. புள்ளிவிபரங்கள் அதனை மெய்ப்பிக்கின்றன.

1960 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட காலத்தில், மேற்கு ஜெர்மனியில், ஒரு இலட்சம் பேருக்கு 6200 குற்றச் செயல்கள் நடந்துள்ளன. அதே நேரம் கிழக்கு ஜெர்மனியில், அதே காலப் பகுதியில், அதே அளவு சனத்தொகைக்கு, வெறும் 550 குற்றச்செயல்கள் மட்டுமே நடந்துள்ளன.

எல்லைகளில் கடுமையான கண்காணிப்பின் காரணமாகவும், அந்நிய நாணயப் பற்றாக்குறை காரணமாகவும், போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

மக்களின் காவலர்கள் (Volkspolizei) என்ற பெயரைக் கொண்ட காவல் துறை, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும், குற்றங்களுக்கான காரணங்களையும் உடனுடக்குடன் கண்டுபிடித்து தீர்த்து வைத்தது.

மக்கள் மீதான அதீத கண்காணிப்பே அதற்கு காரணம் என்று சொல்லப் படுகின்றது. ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் மட்டுமே மக்கள் கண்காணிக்கப் படுவார்கள் என்று நம்புவது பேதைமை. இன்று எல்லா மேற்கத்திய நாடுகளிலும், வீடியோ கமெராக்கள், செய்மதி மூலம் மக்கள் கண்காணிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

1981 ம் ஆண்டு, Neustadt எனும் நகரத்தில் ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டுமே நீண்ட காலமாக இழுபட்ட விசாரணை ஆகும்.

குறைந்தது ஆறு மாதங்களாவது, கொலைகாரனை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸ் தடுமாறியது. கொலை நடந்த இடத்தில் கண்டுபிடித்த பத்திரிகைத் தாள் ஒன்றில் இருந்த புதிர் விளையாட்டில் காணப்பட்ட கையெழுத்தை மட்டுமே வைத்து துப்புத் துலக்கினார்கள்.

பொலிஸ் ஆய்வாளரும், Stasi என்ற புலனாய்வுத்துறையும் சேர்ந்து, ஒருவரின் கையெழுத்தை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் செயல்முறை ஒன்றை உருவாக்கினார்கள். இறுதியில் கையெழுத்தை வைத்து, சிறுவனை கொன்ற கொலைகாரனை கண்டுபிடித்து ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.

ஆனால், இந்த வழக்கு நடந்து சில வருடங்களில் பெர்லின் மதில் விழுந்தது. ஜெர்மனி ஒன்றாகியது. கிழக்கு ஜெர்மனியை பொறுப்பெடுத்த மேற்கு ஜெர்மனி, அந்த கொலைகாரனை விடுதலை செய்தது.

1985 ம் ஆண்டு, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட மொத்த குற்றச் செயல்கள் பற்றிய புள்ளி விபரம்: 
கொலை - 137, 
வன்முறை - 10132, 
பாலியல் வல்லுறவு - 571, 
தீவைப்பு -338, 
போதையில் வாகனம் ஓட்டுதல் - 2574.

Source: 
Der Kreuzworträtsel Mord und andere Kriminalfalle aus der DDR, Hans Girod 
http://mdr.de/doku/175228.html

Thursday, February 21, 2019

பல்கேரிய பயணக்கதை


"உல‌கில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே இனப் பிர‌ச்சினை இருப்ப‌தாக‌" நினைத்துக் கொண்டிருக்கும் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளை ப‌ல்கேரியாவுக்கு கூட்டிச் சென்று காட்ட‌ வேண்டும்.

இங்கும் அதே இன‌ப்பிர‌ச்சினை. மொழி ம‌ட்டும் தான் வேறு. ம‌ற்றும் ப‌டி அர‌சியல் ஒன்று தான். அர‌சிய‌ல்வாதிக‌ளின் பேச்சுக‌ளும் கேட்டால் ஒரே மாதிரித் தான் இருக்கும்.

இல‌ங்கையில் உள்ள‌ சிங்க‌ள‌வ‌ர் - த‌மிழர் பிர‌ச்சினையை விட‌ ப‌ல்கேரிய‌ இன‌ப் பிர‌ச்சினை இன்னும் மோச‌மான‌து என‌லாம். அய‌ல் நாடுக‌ளும் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டிருப்ப‌தால் சிக்க‌லான‌து. 

சுருங்க‌க் கூறின்: 
பெரும்பான்மை ப‌ல்கேரிய‌ர்க‌ளுக்கும், சிறுபான்மை துருக்கிய‌ருக்கும் இடையிலான பிர‌ச்சினை. இல‌ங்கையில் சிங்க‌ள‌வர் போன்று ப‌ல்கேரிய‌ர்க‌ளும் த‌மிழ‌ர் போன்று துருக்கிய‌ரும் ஒரே மாதிரியான‌ அர‌சிய‌ல் க‌தையாட‌ல்க‌ளை கொண்டுள்ள‌ன‌ர்.

துருக்கிய‌ர்க‌ள், ப‌ல்கேரிய‌ பேரின‌வாத‌ ஒடுக்குமுறை ப‌ற்றி பேசுவார்க‌ள். அதே நேர‌ம், ப‌ல்கேரிய‌ர்க‌ள் துருக்கியின் பிராந்திய‌ வல்ல‌ர‌சு ஆக்கிர‌மிப்பு ப‌ற்றி பேசுவார்க‌ள்.

அதை விட‌ இருப‌தாம் நூற்றாண்டின் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ இன‌ப்ப‌டுகொலைக‌ள், இன‌ச் சுத்திக‌ரிப்புக‌ள் ப‌ற்றி இன்றும் நினைவுகூருகிறார்க‌ள். அத‌ற்காக‌ நீதி கோரி ஜெனீவாவில் முறையிடுகிறார்க‌ள்.

இன்றைகும் இன‌ முர‌ண்பாடுக‌ளின் விளைநில‌மான‌ பால்க‌ன் பிராந்திய‌த்திற்கு உங்க‌ளை வ‌ர‌வேற்கிறோம்! இன‌ப் பிர‌ச்சினை ப‌ற்றி தெரிந்து கொள்வோமா? நான் சொல்லத் இன்னும் தொட‌ங்க‌வேயில்லை... 
எங்கே த‌லை தெறிக்க‌ ஓடுகிறீர்க‌ள்? 



பல்கேரியா தலைநகர், சோபியா நகர மத்தியில் அமைந்துள்ள மசூதி, ஐநூறு வருட காலப் பழமையானது. இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சோபியாவில் வாழும் துருக்கி - இஸ்லாமிய சிறுபான்மையினர் மட்டுமல்லாது, அகதிகள், மாணவர்களும் அங்கு தினசரி தொழுகைக்காக வருகின்றனர்.

சுமார் ஐநூறு வருடங்களுக்கும் மேலாக, பல்கேரியா துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அந்தக் காலத்தில் இலட்சக் கணக்கான பல்கேரியர்கள் இஸ்லாமியராக மதம் மாறி இருந்தனர்.

ஓட்டோமான் ஆட்சியில் கிடைத்த சலுகைகளும், குறிப்பாக அரச பதவிகள் இஸ்லாமியருக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டமையும் மத மாற்றத்திற்கு ஒரு காரணம். அதனால், பெரும்பாலானவர்கள் துருக்கி மொழியை தாய்மொழியாக பேசி துருக்கியராக மாறி விட்டனர். 

இதைவிட "போமாக்" எனப்படும், பல்கேரிய மொழி பேசும் முஸ்லிம்களும் அங்கே வாழ்கிறார்கள். ஆனால் அந்த சமூகத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைவு. தொலைதூர மலைப் பிரதேசங்களில் வாழும் அந்த சமூகம், உலகில் அழிந்து வரும் சிறுபான்மை இனங்களில் ஒன்று.

துருக்கி எல்லையோரம் இருக்கும் தெற்குப் பகுதியில் துருக்கியரின் எண்ணிக்கை அதிகம். அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் இப்போதும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாகவும், பல்கேரிய மொழி பேசி கடையில் ஒரு பொருள் கூட வாங்க முடியாது என்று பல்கேரிய நண்பர் ஒருவர் தெரிவித்தார். 



வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கும் என்ற மாதிரி, பல்கேரிய இனப்பிரச்சினைக்கும், இலங்கை இனப்பிரச்சினைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டு நாடுகளிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதற்குக் காரணம், தேசியவாத அரசியல் சமூகங்களும், அது தொடர்பான தீர்க்கப் படாத பிரச்சினைகளும் தான். துருக்கி சிறுபான்மையினர் தனிநாடு பிரித்து தரச் சொல்லிக் கேட்பதாகவும், அதை துருக்கி ஊக்குவிப்பதாகவும் பல்கேரியர்கள் கூறுகின்றனர்.

பல்கேரிய பெரும்பான்மை இனத்தவரின் வாதம் இப்படி இருக்கிறது. தமது நாட்டில் உள்ள துருக்கியர்கள், இனத்தால் பல்கேரியர்கள் என்றும், துருக்கி மொழி பேசுவதால் வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள். அதே நேரம் துருக்கி சிறுபான்மையினரின் வாதம் அதற்கு நேர் எதிரானது. பல்கேரியர்கள் பூர்வீகத்தில் துருக்கியரே என்றும், ஸ்லாவிய மொழி பேசுவதால் தம்மை வேறு இனமாக காட்டிக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

இரண்டு தரப்பினரும் சொல்லும் வாதங்களிலும், ஓரளவு உண்மையும் இருக்கிறது. அதே நேரம் மிகைப் படுத்தல்களும் உள்ளன. பண்டைய கால அரசியல் இன்றுள்ளதை விட மிகவும் மாறுபாடானது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசியவாதம் அறிமுகமானது. அன்றிலிருந்து எல்லோரும் தேசியக் கற்பிதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எண்பதுகளில் பல்கேரிய அரசியல் போக்கும் மாறிக் கொண்டிருந்தது. பூகோள அரசியல் மாற்றங்கள் காரணமாக, அந்நாட்டிலும் மெல்ல மெல்ல தேசிய இனப் பிரச்சினை தலைதூக்கியது. அயல்நாடான துருக்கி நேட்டோ உறுப்பினராக இருந்த படியால், பல்கேரியாவில் இருந்த துருக்கி சிறுபான்மையினர் நசுக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமாக இருப்பதாக நிரூபிக்க வேண்டும் என கோரப் பட்டனர். பல்கேரிய மொழிப் பெயர்களை சூட்டிக் கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டனர். பல்கேரியாவுக்கு விசுவாசமில்லாதவர்கள் துருக்கிக்கு செல்லலாம் என அறிவிக்கப் பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் அகதிகளாக வெளியேறி துருக்கிக்கு சென்றனர்.
****** 



நாஸி ஜெர்மனியில் நடந்த பாராளுமன்ற எரிப்பு வழக்கில் துணிச்சலாக தனது தரப்பு வாதங்களை முன்வைத்து விடுதலையாகி உலகப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் டிமிட்ரேவ் ஒரு பல்கேரியா நாட்டுக்காரர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் சோஷலிச பல்கேரியாவின் முதலாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். பல்கேரியாவில் அவரது காலம் பொற்காலம் என்று கூறலாம்.

பிரபலமான பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் டிமிட்ரோவ், சோஷலிச பல்கேரியாவின் 1949 ம் ஆண்டு காலமானார். மொஸ்கோ நகரில் உள்ள லெனின் சமாதி போன்று, பல்கேரியாவில் இந்த சமாதி கட்டப் பட்டு, டிமித்ரோவின் பூதவுடல் அங்கு வைக்கப் பட்டிருந்தது.

பல்கேரியா முதலாளித்துவ- ஜனநாயக நாடான பின்னர், டிமித்ரோவின் பூதவுடல் அகற்றப் பட்டு எரிக்கப் பட்டது. 1999 ம் ஆண்டு, வலதுசாரிக் கட்சி ஆட்சியில் இந்த சமாதியையும் இடித்து விடுவதற்கு முடிவு செய்யப் பட்டது. அந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்தில் கூட எதிர்ப்பு இருந்தது.

ஒரு கருத்துக் கணிப்பில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் சமாதி இடிக்கப் படுவதை விரும்பவில்லை. இருப்பினும், மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், டிமிட்ரோவ் நினைவாலயம் நான்கு தடவைகள் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. தற்போது அந்த இடத்தில் அப்படி ஒரு கட்டிடம் இருந்தமைக்கான எந்த சுவடும் இல்லை. 
  
 ப‌ல்கேரிய‌ த‌லைநகர் சோபியாவில் முன்பிருந்த‌ க‌ம்யூனிச‌ கால‌த்து சிலைக‌ளை எல்லாம் அக‌ற்றி விட்டார்க‌ள். அவ‌ற்றில் சில‌வ‌ற்றை ஓரிட‌த்தில் வைத்து மியூசிய‌ம் ஆக்கி விட்டார்க‌ள்.

அத‌ற்கு அருகில் Socialist art museum என்ற‌ பெய‌ரில் க‌ம்யூனிச‌ எதிர்ப்பு ஓவிய‌ங்க‌ளை காட்சிக்கு வைத்திருக்கிறார்க‌ள். அந்த‌ ஓவிய‌ங்க‌ள் 1989 ம் ஆண்டு முத‌லாளித்துவ‌த்திற்கு திரும்பிய‌தை கொண்டாடுகின்ற‌ன. அந்த‌ வருட‌த்திற்கு முந்திய‌ வ‌ர‌லாற்றை அழித்து விட‌ விரும்புகிறார்க‌ளாம்.

*****


தலைநகர் சோபியாவில் இருந்து வடக்கு நோக்கி சுமார் நூறு கிலோமீட்டர் தூரத்தில் Montana என்ற நகரம் உள்ளது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், நீரோடைகளும் கொண்ட அழகிய நகரம். இன்றைக்கும் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அங்கு பண்டைய மனிதர்கள் வாழ்ந்த குகைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

அங்கு ஒரு ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ரின் விருந்தாளியாக‌ த‌ங்கி இருந்தேன். அந்த‌ ப‌ல்கேரிய‌ ந‌ண்ப‌ருக்கு ஆங்கில‌ம் ஒரு சொல் கூட‌ தெரியாது. இந்த தொட‌ர்பாட‌ல் பிர‌ச்சினை ப‌ற்றி சோபியாவில் இருந்து என்னை அங்கு அனுப்பி வைத்த‌ ந‌ண்ப‌ரும் முன்கூட்டியே அறிவித்து இருந்தார். மொழிப் பிர‌ச்சினையை தீர்ப்ப‌த‌ற்கு என்ன‌ செய்ய‌லாம் என்று என்னைப் போல் அவ‌ரும் யோசித்திருப்பார். என்னை அழைத்துச் செல்ல‌ வ‌ந்த‌ நேர‌ம் "பிரெஞ்சு தெரியுமா?" என்று கேட்டார். ந‌ல்ல‌வேளையாக‌ என‌க்கும் பிரெஞ்சு தெரிந்த‌ ப‌டியால், இருவ‌ரும் பிரெஞ்சில் உரையாடினோம். 


இங்கே முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ப் பட வேண்டிய‌ விட‌ய‌ம் ஒன்றுள்ள‌து. ப‌ல்கேரியா சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌ கால‌த்தில் ஆங்கில‌ம் இர‌ண்டாம் மொழியாக‌ க‌ற்பிக்க‌ப் ப‌ட‌வில்லை. அத‌ற்குப் ப‌திலாக‌ ர‌ஷ்ய‌ன் க‌ற்பித்தார்க‌ள். 90 க‌ளுக்கு பிற‌கு தான் அதை நிறுத்தி விட்டு ஆங்கில‌த்திற்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள்.

தொண்ணூறுக‌ளுக்கு முன்ன‌ர், ர‌ஷ்ய‌ன் இர‌ண்டாம் மொழியாக‌ இருந்தாலும், பாட‌சாலைக‌ளில் இன்னொரு அந்நிய‌ மொழியும் க‌ற்பித்த‌ன‌ர். அது மாண‌வ‌ர்க‌ளின் சுய‌ தெரிவாக‌ இருந்த‌து. மூன்றாம் மொழியாக‌ ஆங்கில‌ம், பிரெஞ்சு, ஜெர்ம‌ன், ஸ்பானிஷ் ஆகிய‌ மொழிக‌ளை க‌ற்ற‌ன‌ர். இதே த‌க‌வ‌லை முன்னாள் சோஷ‌லிச‌ நாடுக‌ளில் வாழ்ந்த‌ ப‌ல‌ர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அவ்வாறு தான் என‌து ப‌ல்கேரிய‌ நண்ப‌ருக்கு பிரெஞ்சு பேச‌த் தெரிந்திருக்கிற‌து. ஓய்வு பெறும் வ‌ய‌திலும் அவ‌ர் பிரெஞ்சை ம‌ற‌க்க‌வில்லை. என‌க்கும் ச‌ர‌ள‌மாக‌ பிரெஞ்சு தெரியாது. கொஞ்ச‌ம் தான் தெரியும். ஆனால், அடிப்ப‌டை விட‌யங்க‌ள் ப‌ற்றிய‌ தொட‌ர்பாட‌லுக்கு தேவையான‌ அள‌வு பிரெஞ்சு தெரிந்தால் போதும். 

விராட்சா நகரில் ஒரு பெரிய அர‌ச‌ அச்ச‌க‌ம் இருந்த‌து. பல்வேறு வகையான அரச வெளியீடுகளை அங்கு தான் அச்சடித்தார்கள். 1990 ம் ஆண்டு வரையில், சுமார் 300 தொழிலாள‌ர்க‌ள் அங்கு வேலை செய்த‌ன‌ர். தொண்ணூறுக‌ளில் "ஜ‌ன‌நாயக‌ம்" வ‌ந்த‌ பின்ன‌ர் உற்ப‌த்தியை நிறுத்தி விட்டார்க‌ள். விலை உய‌ர்ந்த‌ அச்சு இய‌ந்திர‌ங்க‌ளை, இந்திய‌ நிறுவன‌ம் ஒன்றுக்கு அடி மாட்டு விலைக்கு விற்று விட்ட‌னர். தொன் க‌ண‌க்கிலான‌ கட‌தாசிக‌ளை வீசி விட்ட‌ன‌ர். அங்கு வேலை செய்த‌வ‌ர்க‌ள் வேலையில்லாம‌ல் ந‌டுத் தெருவில் விட‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அந்த‌ தொழில‌க‌த்தை நான் நேரில் சென்று பார்த்தேன். பாழடைந்த‌ க‌ட்டிட‌மாக‌, உள்ளே ஒன்றும் இல்லாம‌ல் வெறுமையாக‌ இருந்த‌து. ஜ‌ன்னல் க‌ண்ணாடிக‌ள் உடைக்க‌ப் ப‌ட்டு, த‌ரையெங்கும் க‌ண்ணாடித் துண்டுக‌ள் சித‌றிக் கிட‌ந்த‌ன‌. நொறுங்கிய‌ க‌ண்ணாடித் துண்டுக‌ள் போன்ற‌து தான், அந்த‌ ந‌க‌ர‌த்தில் வாழும் பெரும்பாலான தொழிலாள‌ர்க‌ளின் நிலைமையும். அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி க‌வலைப்ப‌ட‌ யாருமில்லை. 


*****














Wednesday, February 20, 2019

அல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்குத் த‌டை!


அல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்குத் த‌டை! 

1945 - 1991 வ‌ரையில் அல்பேனியா ஒரு சோஷ‌லிச‌ நாடாக‌ இருந்த‌து. ஸ்டாலின் ம‌றைவுக்குப் பின்ன‌ர், சோவிய‌த் முகாமில் இருந்து வில‌கி, மாவோயிச‌ சீனாவுட‌ன் ம‌ட்டுமே ந‌ட்பாக‌ இருந்த குட்டி நாடான‌‌ அல்பேனியா, ஐரோப்பாவில் த‌னிமைப் ப‌டுத்த‌ப் ப‌ட்டிருந்த‌து.

த‌லைந‌க‌ர் டிரானாவில் உள்ள‌ தேசிய‌ திரைப்ப‌ட‌ க‌ள‌ஞ்சிய‌ அறைக‌ளில் இன்ன‌மும் ப‌ழைய‌ க‌ம்யூனிச‌ கால‌த்து சினிமாச் சுருள்க‌ள் பாதுகாக்க‌ப் ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. அவ‌ற்றின் வ‌ர‌லாற்று முக்கிய‌த்துவ‌ம் க‌ருதி, டிஜிட்ட‌லில் ப‌திவுசெய்து ம‌க்க‌ளுக்கு போட்டுக் காண்பிக்க‌ முடிவெடுக்க‌ப் ப‌ட்டிருந்த‌து.

அன்றைய‌ கால‌த்தில் த‌யாரிக்க‌ப் ப‌ட்ட‌ எல்லாத் திரைப்ப‌ட‌ங்களையும் "க‌ம்யூனிச‌ப் பிர‌ச்சார‌ம்" குற்ற‌ம்சாட்ட‌ முடியாது. உதார‌ண‌த்திற்கு, "மாவீர‌ன் Skenderbeu" திரைப்ப‌ட‌ம், துருக்கிய‌ருக்கு எதிராக‌ போரிட்ட‌ ச‌ரித்திர‌ நாய‌க‌னின் வ‌ர‌லாற்றைக் கூறுகின்ற‌து.

இருப்பினும், க‌ம்யூனிச‌ கால‌க‌ட்ட திரைப்ப‌ட‌ங்களை மீள் வெளியீடு செய்தால், அவை ம‌க்க‌ளை "மூளைச் ச‌ல‌வை" செய்து விடும் என்று அர‌சிட‌ம் முறைப்பாடு செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌து. இதிலே வேடிக்கை என்ன‌வென்றால், அன்றைய‌ க‌ம்யூனிச‌ அர‌சு த‌ணிக்கை செய்த‌ திரைப்ப‌ட‌ங்க‌ளையும் காண்பிக்க‌க் கூடாதாம்!

ICC (க‌ம்யூனிச‌ குற்ற‌ ஆய்வு மைய‌ம்) என்ற‌ நிறுவ‌ன‌ம் தான் இந்த‌ த‌டையுத்த‌ர‌வை கோரியுள்ள‌து. அது அர‌ச‌ நிதியில் இய‌ங்கும் க‌ம்யூனிச‌ எதிர்ப்பு நிறுவ‌ன‌ம் ஆகும். அத‌னால் செல்வாக்கு மிக்க‌தாக‌ உள்ள‌து.

அந்த‌க் கால‌ திரைப் ப‌ட‌ங்க‌ளை பார்வையிடும் ம‌க்க‌ள், "க‌ம்யூனிச‌ க‌ட‌ந்த‌ கால‌த்தை சிற‌ந்த‌தாக‌க் க‌ருத‌த் தொட‌ங்கி விடுவார்க‌ள்..." என்று குற்ற‌ப் ப‌த்திர‌த்தில் தெரிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. அர‌சு அந்த‌ நிறுவன‌த்தின் முறைப்பாட்டை ப‌ரிசீலித்து க‌ம்யூனிச‌ப் ப‌ட‌ங்க‌ளுக்கு த‌டை போடுமா என்று தெரிய‌வில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.

அந்த‌க் கால‌த்து ந‌ட்ச‌த்திர‌ ந‌டிகை Monika Lubonja (பிற‌ந்த‌ ஆண்டு 1968) இது ப‌ற்றிக் குறிப்பிடும் பொழுது: "க‌லைஞ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரையில் அது ஒரு பொற்கால‌ம். க‌லை என்ப‌து ஆத்மார்த்த‌மான‌தாக‌, உண‌ர்வுக‌ளை வெளிப்ப‌டுத்த‌க் கூடிய‌தாக‌, அன்பை ப‌ர‌வ‌ச்செய்வ‌தாக‌, அர்ப்ப‌ணிப்புக் கொண்ட‌தாக‌ இருந்த‌து." என்றார்.

(த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி: NRC Handelsblad, 31- 5- 2017)

Monday, April 02, 2018

இஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா!



ஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ்லாமிய மதத்தவரை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள அல்பேனியா, ஒரு நாஸ்திக நாடானது எப்படி? அதற்குக் காரணம், அந்நாட்டின் கம்யூனிச அதிபர் என்வர் ஹோஷாவும், அவரது விட்டுகொடாத சோஷலிச  அரசியல் கோட்பாடுகளும் ஆகும்.

1912 ம் ஆண்டு, அதாவது முதலாம் உலகப்போர் நடப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர் தான் வரலாற்றில் முதல் தடவையாக அல்பேனியா என்ற தேசம் உருவாகி இருந்தது. பண்டைய காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாகவும், பிற்காலத்தில் துருக்கி- ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் பகுதியாகவும் இருந்து வந்தது. ரோம சாம்ராஜ்யத்தின் இறுதிக் காலத்தில் பரவிய கிறிஸ்தவ மதம், அல்பேனியர்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றி இருந்தது.

மேற்கெல்லையில் இத்தாலி இருப்பதால் அங்கிருந்து கத்தோலிக்க கிறிஸ்தவமும், கிழக்கெல்லையில் கிரேக்கம் இருப்பதால் அங்கிருந்து ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவமும் தாக்கம் செலுத்தின. பதினாறாம் நூற்றாண்டில் துருக்கி- ஓட்டோமான் சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட நேரம், பலர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

இந்த வரலாற்றுப் பின்புலம், இன்றைக்கும் அல்பேனிய சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்றது. இன்றைய அல்பேனிய மக்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியராகவும், அதற்கு அடுத்த படியாக கத்தோலிக்கர்களாகவும், குறைந்தளவில் ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். "பொதுவான" (வேறுபாடுகள் உண்டு) அல்பேனிய மொழி மட்டுமே, அவர்கள் அனைவரையும் ஒரே தேசிய இனமாக ஒன்றிணைத்தது.

என்ன தான் தேசிய இனப் பெருமிதம் பேசினாலும், இறுதியில் அதைத் தீர்மானிப்பது வல்லரசு நாடுகள் தான். முதலாம் உலகப்போர் முடிவில், அல்பேனிய மொழி பேசும் மக்களில் அரைவாசிப் பேர், பிற நாடுகளில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர். அவ்வாறு தான், கொசோவோ செர்பியாவுக்கு சொந்தமானது. இன்னொரு பிரதேசம் மாசிடோனியாவுக்கு கொடுக்கப் பட்டது. மொன்டிநீக்ரோ, கிரீஸ் ஆகியனவும் தமக்கென சிறிய துண்டுகளை பிடுங்கிக் கொண்டன.

அல்பேனியா என்ற தேசியம் தோன்றிய காலத்தில் தான் என்வர் ஹோஷாவும் பிறந்தார். அந்தக் காலத்தில் அல்பேனியாவில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள், எழுதப் படிக்க தெரியாத ஏழைகளாக இருந்தனர். ஓட்டோமான் சுல்த்தானின் ஆட்சிக் காலத்தில், அல்பேனிய இஸ்லாமிய சமூகத்தில் இருந்து ஒரு வசதியான மேட்டுக்குடி வர்க்கம் உருவாகி இருந்தது. அவர்கள் நிலவுடமையாளர்களாகவும், வணிகர்களாகவும், அரச ஊழியர்களாகவும் இருந்தனர். ஆகையினால், என்வர் ஹோஷாவும் ஒரு இஸ்லாமிய வணிகரின் மகனாகப் பிறந்ததில் ஆச்சரியம் இல்லை.

1930ம் ஆண்டு, என்வர் ஹோஷா உயர் கல்வி நிமித்தம் பிரான்ஸிற்கு சென்றார். பாரிஸ் நகரில் தங்கிப் படிக்கும் காலத்தில் அல்பேனிய தூதுவராலயத்தில் செயலாளராக வேலை செய்தார். அந்தக் காலத்தில் பிரெஞ்சு கலாச்சாரம், இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தாலும், சந்தர்ப்பவசத்தால் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பு கிடைத்தது. பிரான்ஸின் புரட்சிகரமான கடந்தகாலமும் அவரைக் கவர்ந்திருந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான பின்னர், மார்க்ஸிய தத்துவங்களை கற்றுத் தெளிவதில் ஆர்வம் காட்டிய என்வர் ஹோஷா, ஒரு கட்டடத்தில் படிப்பை பாதியில் இடைநிறுத்தி விட்டு தாயகம் திரும்பினார்.

1939 ம் ஆண்டு, முசோலினியின் பாசிச இத்தாலி இராணுவம், அல்பேனியா மீது படையெடுத்து ஆக்கிரமித்தது. அப்போது, இத்தாலி ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கியது. அந்த நேரத்தில், தலைநகர் டிரானாவில் ஒரு புகையிலைக் கடை தொடங்கிய என்வர் ஹோஷா, அதை விடுதலை வீரர்கள், குறிப்பாக அல்பேனிய கம்யூனிஸ்டுகள் இரகசியமாக கூடி சந்திக்கும் இடமாக மாற்றினர்.

என்வர் ஹோஷாவுக்கு முன்னரே, அல்பேனியாவில் நிறைய மார்க்சியவாதிகள் இருந்தனர். குறிப்பாக மெஹ்மெட் ஷேகு என்ற அல்பேனிய கம்யூனிஸ்ட், ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரில் பங்கெடுத்திருந்தார். அத்தகைய கள அனுபவம் காரணமாக, அன்று அல்பேனியாவில் இரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் கெரில்லாப் படையின் தளபதியாக பொறுப்பேற்றார். என்வர் ஹோஷா, மெஹ்மெட் ஷேகு ஆகியோரின் இராணுவ தந்திரோபாயம் காரணமாக, கம்யூனிஸ்ட் கெரில்லாப் படையணிகள் போரில் வெற்றி பெற்று முன்னேறின.

இரண்டாம் உலகப்போரில், ஒரு கட்டத்தில் பாசிச இத்தாலி பல முனைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பலவீனமடைந்திருந்தது. அப்போது நாஸி ஜெர்மனி உதவிக்கு வந்தது. ஆகையினால், அல்பேனிய கெரில்லாக்கள் நாஸி ஜெர்மன் படையினரையும் எதிர்த்துப் போரிட வேண்டி இருந்தது. ஒரு மலைநாடான அல்பேனியாவில் எந்த வளமும் இல்லையென்பதால், அங்கு போரிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்த ஜெர்மன் படைகள் யூகோஸ்லேவியாவில் கவனத்தை குவித்தன. அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட, கம்யூனிச கெரில்லாக்கள் அல்பேனியாவை தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்தனர்.

இரண்டாம் உலகப்போர் முடிவில், பெரும்பாலான கிழக்கைரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அந்த நேரத்தில், யூகோஸ்லேவியா, பல்கேரியா, அல்பேனியாவை இணைத்து "பால்கன் சோஷலிச குடியரசு" அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முறிந்து விட்டன. அனேகமாக, மிகப் பெரிய நாடான யூகோஸ்லேவியாவின் உள்நோக்கம் குறித்து அதிருப்தி உண்டாகி இருக்கலாம்.

இதற்கிடையே, ஸ்டாலினுக்கும், டிட்டோவுக்கும் இடையிலான முரண்பாடுகள் வெடித்து, யூகோஸ்லேவியா சோவியத் ஆதிக்கத்தில் இருந்த Cominform அமைப்பில் இருந்து வெளியேறியது. அந்தத் தருணத்தில் என்வர் ஹோஷா ஸ்டாலினை ஆதரித்தார். ஸ்டாலின் மரணமடையும் வரையில், சோவியத் யூனியனின் உதவி அல்பேனியாவுக்கு கிடைத்து வந்தது.

அந்தக் காலகட்டத்தில், "டிட்டோயிஸ்டுகள்" என்று குற்றம் சாட்டி பலர் கைது செய்யப் பட்டனர். கட்சியின் தலைமையில், ஹோஷாவின் வலதுகரமாக இருந்த கோசி ஹோசே கூட அந்தக் களையெடுப்புகளுக்கு தப்பவில்லை. யூகோஸ்லேவிய அதிபர் டிட்டோவிடம், அல்பேனியாவையும் சேர்த்து யூகோஸ்லேவிய சமஷ்டிக் குடியரசு அமைக்கும் நோக்கம் இருந்தது. அல்பேனியாவிலும் சிலர் அந்தத் திட்டத்தை ஆதரித்திருந்தனர்.

ஹோஷாவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான நல்லுறவு, அல்பேனியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என்றால் அது மிகையாகாது. ஸ்டாலினைப் போன்று, ஹோஷாவும் தொழிற்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சோவியத் உதவியுடன் பல கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. ஒரு காலத்தில் விவசாயம், மீன்பிடியை மட்டுமே நம்பியிருந்த அல்பேனியா, பதினைந்து வருடங்களில் தொழிற்துறை வளர்ச்சி கண்ட நாடாக மாறியது.

1957ம் ஆண்டு தான், அல்பேனிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பல்கலைக்கழகம் உருவானது. இலவசக் கல்வி, நாடு முழுவதுமான பொதுக் கல்வி காரணமாக, எழுத்தறிவின்மை கணிசமாகக் குறைக்கப் பட்டது. பதினைந்து வருடங்களில் எழுத்தறிவற்றோர் எண்ணிக்கை 85 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைந்தது.

அதே நேரம், பெண்களின் நிலைமையும் மேம்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முந்திய அல்பேனியாவில், பெண்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. நிலப்பிரபுத்துவ காலத்தில் ஒரு மனைவி கணவனின் உடைமையாக கருதப் பட்டாள். "ஒரு பெண் கழுதையை விட கடுமையாக வேலை செய்ய வேண்டும்" என்ற பழமொழியும் இருந்தது. கம்யூனிஸ்டுகள் பெண்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி கற்கவும், வேலை செய்யவும் அனுமதித்தனர்.

ஸ்டாலின் இறந்த பின்னர், அல்பெனியாவுக்கும் சோவியத் யூனியனுக்குமான உறவு சீர்குலைந்தது. புதிதாக பதவியேற்ற குருஷேவ் வாயளவில் கம்யூனிசம் பேசினார். ஆனால், செயலளவில் ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்தியவாதியாக நடந்து கொண்டார். ஸ்டாலின் காலத்தில் கம்யூனிச நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர தோழமை என்ற கொள்கை பின்பற்றப் பட்டது. அதனால் தான், எந்த வளமும் இல்லாத பின்தங்கிய நாடாக கருதப் பட்ட அல்பேனியா தொழிற்துறை வளர்ச்சி காண முடிந்தது.

குருஷேவ், அல்பேனியாவை ஒரு சோவியத் காலனியாக நடத்த விரும்பினார். அல்பேனியா, மத்திய தரைக் கடலை அண்டிய வெப்ப மண்டல பிரதேசத்தில் அமைந்திருப்பதால், அங்கு பழங்களும், காய்கறிகளும் பெருமளவில் உற்பத்தி செய்து, சோவியத் யூனியனுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதற்குப் பதிலாக சோவியத் யூனியனிடம் இருந்து எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யலாம் என குருஷேவ் ஆலோசனை கூறினார்.

குருஷேவின் காலனியவாத கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுத்த என்வர் ஹோஷா, சோவியத் யூனியனுடனான உறவை முற்றாகத் துண்டித்துக் கொண்டார். அதற்குப் பதிலாக மாவோவின் சீனாவுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். சீன உதவியுடன் மிகப்பெரிய அணைக்கட்டுகள், புனல் மின்சார நிலையங்கள் கட்டப்பட்டாலும், ஸ்டாலின் காலத்து தொழிற்துறை வளர்ச்சியை எட்ட முடியவில்லை. எண்பதுகளில் சீனாவில் டென்சியோபிங் பதவிக்கு வந்த பின்னர் சீன உறவும் துண்டிக்கப் பட்டது.

ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், உலகில் எந்தவொரு நட்பு நாடும் இல்லாமல் தனிமைப் படுத்தப் பட்ட அல்பேனியாவில், மீண்டும் திருத்தல்வாதிகள், டிட்டோயிஸ்டுகள் தலையெடுக்கலாம் என ஹோஷா அஞ்சினார். அந்தக் காலத்தில் மாவோவை விட்டால் வேறு நண்பனும் இல்லை. ஸ்டாலின் முன்னெடுத்த வர்க்கப் போராட்டம் பல்வேறு தளங்களிலும் தொடர வேண்டும் என்று மாவோவும், ஹோஷாவும் கருதினார்கள். மாவோவின் சீனாவில் அது கலாச்சாரப் புரட்சியாக வடிவமெடுத்தது. ஹோஷாவின் அல்பேனியாவில் நாஸ்திகப் புரட்சியாக வடிவமெடுத்தது.

1967 ம் ஆண்டு, அல்பேனியா உலகின் முதலாவது நாஸ்திக நாடாக பிரகடனம் செய்யப் பட்டது. அல்பேனிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், பொது இடங்களிலும் மதம் இல்லாதொழிக்கப் பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இழுத்து மூடப் பட்டன. சில குறிப்பிட்ட பழம்பெருமை வாய்ந்த மத வழிபாட்டு ஸ்தலங்கள் அருங்காட்சியமாக மாற்றப் பட்டன. எஞ்சியவை விளையாட்டுத் திடல்களாக அல்லது கால்நடை வளர்க்கும் இடங்களாக மாற்றப் பட்டன.

இஸ்லாமிய, கிறிஸ்தவ மதகுருக்கள் யாராவது எதிர்ப்புக் காட்டும் பட்சத்தில், கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்கள் மதத்தை துறந்து சாதாரண மனிதர்களாக வாழ்வதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு மதச்சார்பற்ற பெயர்கள் வைக்க வேண்டுமென ஊக்குவிக்கப் பட்டது. அவற்றில் பல மொழி சார்ந்த பெயர்களாகவும் இருந்தன.

இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நாட்டில், பொது உணவுச் சாலைகளில் பரிமாறப் பட்ட உணவில் பன்றி இறைச்சி சேர்த்துக் கொள்ளப் பட்டது. அல்பேனியாவில் இன்றைக்கும் பல "இஸ்லாமியர்கள்" எந்தத் தயக்கமும் இன்றி பன்றி இறைச்சி சாப்பிடுவதைக் காணலாம். இன்று அல்பேனியா சோஷலிச நாடல்ல. ஒரு முதலாளித்துவ ஜனநாயக நாடு. இருப்பினும், பெரும்பாலான மக்கள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

எண்பதுகளின் என்வர் ஹோஷா இறந்த பின்னர் நாஸ்திக நாடு கொள்கையும் கைவிடப் பட்டது. மீண்டும் மத வழிபாட்டு நிறுவனங்கள் இயங்குவதற்கு சுதத்திரம் கிடைத்தது. தொண்ணூறுகளில், அது முதலாளித்துவ நாடான பின்னர், சவூதி அரேபிய நிதி உதவியுடன் பல புதிய மசூதிகள் கட்டப் பட்டன. இருந்த போதிலும், இளையோர் மத்தியில் மத நம்பிக்கை மிகக் குறைவாக உள்ளது. பெரும்பான்மையான அல்பேனியர்கள் பொருளாதார நலன்களையே முக்கியமாகக் கருதுகிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று பணம் தேடுவதை குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

அல்பேனியாவை நீண்ட காலத்திற்கு ஒரு நாஸ்திக நாடாக வைத்திருக்க வேண்டுமானால், அதற்கு மக்களின் ஆதரவும் இருந்திருக்க வேண்டும். அதற்கான காரணிகள் எவை? துருக்கி- ஓட்டோமான் ஆட்சிக் காலத்தில், அல்பேனியர்களுக்கு மத அடையாளம் மட்டுமே இருந்தது. அந்தக் காலகட்டத்தில், இஸ்லாமியர்கள் "துருக்கியர்கள்" என்றும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் "ரோமர்கள்" என்றும், ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள் "கிரேக்கர்கள்" என்றும் அழைக்கப் பட்டனர். அவர்கள் பேசிய அல்பேனிய மொழி ஒரு அடையாளமாக இருக்கவில்லை.

19ம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவில் தோன்றிய மொழித் தேசியவாதக் கோட்பாடுகள் அல்பேனியாவிலும் எதிரொலித்தன. அப்போது மொழி அடிப்படையில் அல்பேனியர் என்ற தேசிய இனம் (புதிதாக) உருவானது. இந்த தேசிய இன அடையாளம் வளர்ச்சி அடைந்த நேரம், மத அடையாளம் கைவிடப் பட்டது. மேலும் பெரும்பான்மை அல்பேனியர்கள் இஸ்லாமியராக இருந்த போதிலும், உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த நிலப்பிரபுக்களாகவும் அவர்களே இருந்தனர்.

அல்பேனிய நிலப்பிரபுக்கள் மத நிறுவனங்களையும் தமக்கு சார்பாக வளைத்துப் போட்டிருந்தனர். அப்போதே அல்பேனிய மக்களின் மனதில் மத நிறுவனங்கள் குறித்த நல்லெண்ணம் இருக்கவில்லை. அதே நேரம், துருக்கி சாம்ராஜ்யவாதிகளும் அல்பேனிய நிலப்பிரபுக்களை ஆதரித்தனர். அத்தகைய பின்னணியில் தான் அல்பேனிய தேசிய விடுதலைப் போராட்டம் நடந்தது. அப்போதே அல்பேனிய மக்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருந்தது.



Wednesday, February 07, 2018

"தோழர் பிரபு": ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு


நம்மூரில் பண்ணையார்கள், நிலவுடைமையாளர்கள் போன்றோர், சொத்துக்களை ஆண்டு அனுபவிப்பவர்கள், ஏன் கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்ற காரணம் தெரிய வேண்டுமா? இலங்கையிலோ, இந்தியாவிலோ கம்யூனிச ஆட்சி வந்தால், தமது சொத்துக்களைப் பறித்துக் கொண்டு சிறையில் அடைத்து விடுவார்கள் அல்லது கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். இதற்கு முன்னர் சோஷலிச நாடுகளில் தமது வர்க்கத்தினருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி அஞ்சி நடுங்குகிறார்கள்.

ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் சொகுசாக வாழ்ந்து வந்த நிலப்பிரபுக்கள் வர்க்கம் (கவனிக்கவும்: "வர்க்கம்", மனிதர்கள் அல்ல.), எவ்வாறு கம்யூனிஸ்டுகளால் இல்லாதொழிக்கப் பட்டது என்பதை ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல் "Kameraad Baron" (தோழர் பிரபு). இதை எழுதிய டச்சு எழுத்தாளர் Jaap Scholten, பல மாதங்களாக ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்து, அங்கு வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் நபர்களை சந்தித்துப் பேசி, அவர்களது கதைகளை எழுதி உள்ளார்.

இந்தப் புத்தகமானது நிலப்பிரபுக்கள் மீதுள்ள கரிசனையால், ஒரு காலத்தில் மாட மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் சாதாரண மக்களாக தெருவுக்கு வந்து விட்டார்களே என்ற சுய கழிவிரக்கம் காரணமாக எழுதப் பட்டது.  கம்யூனிஸ்டுகளால் பிரபுக் குடும்பத்தினருக்கு நடந்த கொடுமைகளை விவரித்துக் கூறுவது தான் நூலின் நோக்கம். ஆனால், நிலப்பிரபுக்கள் தமக்குக் கீழே வேலை செய்த பண்ணையடிமைகளுக்கு செய்த கொடுமைகள் பற்றி ஒரு வரி கூட  இல்லை. (ஆண்டாண்டு காலம் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வை, கம்யூனிஸ்டுகள் ஒரே நாளில் தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டார்கள் என்ற உண்மையை மறைக்க வேண்டுமே?)

இன்றைக்கும் வாழும்  முன்னாள் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தமது வாழ்க்கைக் கதைகளை கூறுகின்றனர். தமது பிரபுக் குடும்பத்தினரின் அருமை பெருமைகளை, சிறுவயதில் அனுபவித்த ஆடம்பரங்களை மட்டுமே நினைவுகூருகின்றனர். கிழக்கில் இருந்து மேற்கு வரையிலான, ஐரோப்பிய மன்னர் குடும்பங்களுக்குள் நடந்த கலப்புத் திருமணங்கள், பன்மொழித் தேர்ச்சி இவை போன்ற பழம் பெருமைகளை சொல்லி மகிழ்கிறார்கள்.

இன்றைக்கு ருமேனியாவுக்கு சுற்றுலா செல்வோர், ஐரோப்பாவிலேயே அழகான கோட்டைகள், மாளிகைகளை கண்டு களிக்கலாம். மன்னர் காலத்து வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நேரில் பார்க்கலாம். அவை இன்று சுற்றுலா மையங்களாக அனைவருக்கும் திறந்து விடப் பட்டாலும், 1949 ம் ஆண்டு வரையில் அங்கு உள்ளூர் நிலப்பிரபுக்களின் குடும்பங்கள் வசித்து வந்தன.

இரண்டு உலகப் போர்களை கண்ட போதிலும், நிலப்பிரபுக் குடும்பங்கள் எந்தக் குறையும் இல்லாமல் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தன. இதிலே குறிப்பிடத் தக்கவர்கள் ஹங்கேரிய நிலப்பிரபுக்கள். ஏனெனில், முதலாம் உலகப் போர் நடக்கும் வரையில், ருமேனியாவின் பெரும் பகுதி, குறிப்பாக மத்திய டிரான்ஸ்சில்வேனியா பிரதேசம், ஹங்கேரி சாம்ராஜ்யத்திற்குள் அடங்கியது. ருமேனியாவின் வட மேற்குப் பகுதியில் ஹங்கேரி மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.

இரண்டாம் உலகப் போர் முடிவில், சோவியத் செம்படைகளால் விடுதலை செய்யப் பட்ட ருமேனியாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைப் பிடித்தனர். அவர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளை வர்க்க எதிரிகளாக பிரகடனம் செய்தனர். இதிலே இன்னொரு பிரச்சினையும் சேர்ந்து ஹங்கேரி நிலப்பிரபுக்களை ஒடுக்கியது. அவர்கள், முன்னை நாள் ஆஸ்திரிய - ஹங்கேரி சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் என்பதால், பெரும்பாலான ருமேனிய மக்களால் வெறுக்கப் பட்டு வந்தனர்.

கம்யூனிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், மாளிகைகளில் வசித்து வந்த நிலைப்பிரபுக் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஒரே இரவில் வெளியேற்றப் பட்டனர். அரை மணி நேரம் மட்டுமே நேரம் ஒதுக்கி, உடுப்புகள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை மட்டுமே ஒரு பெட்டியில் எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள். எல்லோரையும் டிரக் வண்டியில் ஏற்றி தடுப்பு முகாம்களுக்கு அனுப்பினார்கள்.

பல நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக, "ஆண்ட பரம்பரை" என்ற மிதப்பில், செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், ஒரே நாளில் "அடிமைப் பரம்பரையாக" வறுமைக்குள் தள்ளப் பட்டனர். ஆடம்பரமான மாளிகைகளில் வசதியாக வாழ்ந்த பணக்காரக் குடும்பங்கள், அடிப்படை வசதிகள் இல்லாத சிறை முகாம்களில் அடைக்கப் பட்டன. ஒரு நாள் கூட உடல் வருந்தி உழைத்திராத அரச வம்சத்தினர், இளவரசர்கள், நிலவுடைமையாளர்கள், வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண கூலித் தொழிலாளர்கள் ஆனார்கள். கட்டாய வேலை முகாம்களில் கால்வாய் தோண்டுவது போன்ற கடின உடல் உழைப்பை செலுத்த நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

ருமேனியப் புரட்சியின் ஆரம்ப காலங்களில், நிலப்பிரபுக்களுக்கு எதிரான நடவடிக்கையில் பலர் கொல்லப் பட்டுள்ளனர். மக்கள் நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றம் நிரூபிக்கப் பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்க்க எதிரிகளாகவோ, அல்லது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்ததாகவோ குற்றம் சாட்டப் பட்டவர்கள். அதே நேரம், சித்திரவதை தாங்க முடியாமல், அல்லது பொருள் இழப்புகளால் மனமுடைந்து  தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

அதற்காக, ருமேனியாவின் எல்லா நிலப்பிரபுத்துவக் குடும்பங்களும் கொல்லப் பட்டனர் என்று கூறுவது ஒரு மிகைப் படுத்தல். கைது செய்யப் படுவதற்கு முன்னரே ஆஸ்திரியாவுக்கு தப்பியோடியவர்கள் பலருண்டு. அவர்கள் பின்னர் மேற்கத்திய நாடுகளில் அடைக்கலம் கோரி அங்கேயே தங்கி விட்டனர். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கம்யூனிச ஆட்சி கவிழும் வரையில் நாடு திரும்பவில்லை.

சுற்றிவளைப்பில் பிடித்துச் செல்லப் பட்டவர்களும், சில வருட காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப் பட்டவர்கள் ஏராளம் பேருண்டு.விடுதலை செய்யப் பட்ட பின்னர், ஒவ்வொரு வாரமும் போலிஸ் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. 

இருப்பினும் "செகுரிதாத்தே" (Securitate) என்ற உளவுப் பிரிவு அவர்களை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருந்தது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் பட்டன. இப்படியானவர்கள் அரசில் உள்ளவர்களை குறை கூறினாலும், சந்தேகத்தில் திரும்பவும் கைது செய்யப் பட்டனர். ஒரு தடவை, பாடசாலை ஆசிரியையாக பணியாற்றிய ஒருவர் ஸ்டாலினை பற்றி அவதூறு செய்த குற்றத்திற்காக சக ஆசிரியரால் காட்டிக் கொடுக்கப் பட்டார். நல்ல வேளையாக, அந்த ஆசிரியையின் பிரியத்துக்குரிய வகுப்பு மாணவியின் தந்தை உளவுப்பிரிவில் வேலை செய்த படியால் தண்டனையில் இருந்து தப்பினார்.

பெரும்பாலும் எந்தக் குற்றமும் இல்லாமல் விடுதலை செய்யப் பட்ட நிலப்பிரபுத்துவக் குடும்பத்தினர், சாதாரண மக்களைப் போன்று ஏதோ ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு, அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.  அவர்களது பிள்ளைகள் பாடசாலையில் படிக்கும் காலத்தில், தமது நிலப்பிரபுத்துவ பின்னணியை மறைத்து வந்தனர்.

முன்னாள் நிலப்பிரபுக்களின் பிள்ளைகள் படிக்க அனுமதிக்கப் பட்டாலும், ஆரம்பப் பாடசாலைக் கல்வியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி கற்கும் உரிமை பாட்டாளிவர்க்க குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமே உண்டு. (புரட்சிக்கு முன்னர் இது நேர்மாறாக இருந்ததை இங்கே சொல்லத் தேவையில்லை.) "நிலப்பிரபுவின் பிள்ளைகள்" என்றால் அது சமூகத்தில் தாழ்வானவர்கள் என்ற அர்த்ததில் பார்க்கப் பட்டது. அதனால், தமது குடும்பம் பற்றிய உண்மை ஏனைய பிள்ளைகளுக்கு தெரிய விடாமல் மறைத்தனர். சிலநேரம், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் சொல்லி இருப்பார்கள்.

முன்பு மாளிகையில் வாழ்ந்த நிலப்பிரபுக் குடும்பங்கள், தற்போது அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இருப்பினும், வீடுகளில் தமது நிலப்பிரபுத்துவ கடந்த காலத்தை நினைவுபடுத்தும் படங்கள், நினைவுச் சின்னங்களை வைத்திருந்தனர். சிலநேரம், முன்னாள் நிலப்பிரபுக்கு விசுவாசமான சாமானியர்கள் அவற்றை பாதுகாப்பாக எடுத்து வைத்திருந்து கொடுத்தனர்.

நிலப்பிரபுக்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் வெளிப்படையாக நடந்தன. அந்தக் காலத்தில் ருமேனியாவில் சுற்றுப் பயணம் செய்த அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் Wilfred G. Burchett அவற்றை நேரில் கண்டு குறிப்பெடுத்துள்ளார். அந்தக் கட்டுரைகள் 1951 ம் ஆண்டு வெளியான Peoples Democracies சஞ்சிகையில் பிரசுரிக்கப் பட்டன. 

அதில் அவர் முன்னாள் நிலப்பிரபுக்களின் அவல நிலை பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "அவர்கள் தாம் ஏழ்மையில் வாடுவதாக குறைப் படுகின்றனர். எந்தக் காலத்திலும் கஷ்டப் பட்டு உழைத்து வாழாதவர்கள், இப்போதும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு, தம்மிடம் இருந்த நகைகளை விற்று சாப்பிடுகிறார்கள் அல்லது சட்டவிரோத சந்தைகளில் பொருட்களை விற்றுப் பிழைக்கிறார்கள்."

இன்றைக்கு எஞ்சியிருக்கும் நிலப்பிரபுக்களின் வாரிசுகள், தாம் "கம்யூனிச கொடுங்கோன்மைக்கு" அடிபணியாமல் தப்பிப் பிழைத்து விட்டதாக சொல்லிப் பெருமைப் படுகின்றனர். "கொலை செய்தார்கள், சித்திரவதை செய்தார்கள், சிறுமைப் படுத்தினார்கள், ஒதுக்கி வைத்தார்கள். ஆனால், ருமேனிய நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் எதுவுமே கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை..." என்று இறுமாப்புடன் கூறுகின்றனர். 

இந்த நூலை எழுதியவரும் அது உண்மை என்றே நம்பி இருக்கிறார். ஆனால், நாடு முழுவதும் பலரது சாட்சியங்களை கேட்டு பதிவு செய்த பின்னர், எல்லாமே கருப்பு, வெள்ளை இல்லை என்ற உண்மை தெரிய வந்தது. பலர் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டனர். ருமேனியாவில் புதிய கம்யூனிச ஆட்சியாளர்களை ஆதரித்த முன்னாள் நிலப்பிரபுக்களும் இருந்தனர்.

பாட்டாளிவர்க்கத்தின் பக்கம் நின்ற ஒரு "கம்யூனிச இளவரசி" இன் கதை பிரபலமானது. மார்கிட் (Margit Odescalchi), ஒரு குறுநில மன்னர் குடும்பத்தில் இளவரசியாக பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் காலத்தில், நாஸிகள் இவரது சகோதரனை சித்திரவதை செய்ததை கண்டதில் இருந்து தீவிர பாசிச எதிர்ப்பாளராக மாறியவர். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததும் தனது பரிபூரண ஆதரவை வழங்கினார். 

அதற்காக, கம்யூனிச ஆட்சியாளர்கள் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 150 ஹெக்டேயர் நிலத்தை வைத்திருக்க அனுமதித்து இருந்தனர். இருப்பினும், அவர் அந்த நிலங்களை தானாகவே ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுத்து விட்டு, ஒரு தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளியாக வேலை செய்து வாழ்ந்தார். ஒரு நிலப்பிரபுக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பாட்டாளிவர்க்கத்தில் ஒருவராக மாறிய இளவரசி மார்கிட், சோஷலிச ஹங்கேரி நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

(நன்றி: Kameraad Barron, Jaap Scholten நூலில் இருந்து சில பகுதிகள்.) 


ருமேனியா தொடர்பான முன்னைய பதிவுகள்:

Wednesday, November 29, 2017

பணம் தான் மனிதர்களை மிருகங்களில் இருந்து வேறுபடுத்துகிறது


(சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள் ) 
(பகுதி - 4)

கம்யூனிச ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கலாச்சார மண்டபம் இருந்தது. அங்கு நடக்கும் கலாச்சார நிகழ்வுகளை பார்வையிடுவதற்கான கட்டணம் மிகவும் குறைவு, சிலநேரம் இலவசம். சாதாரண மக்கள் கண்டுகளிப்பதற்காக, அங்கு மேடையேறிய நாடகக் குழுக்கள், இசைக் குழுக்கள் போன்றவற்றிற்கு அரசு மானியம் கொடுத்து ஊக்குவித்தது. மொஸார்ட் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற கலைஞர்கள் உருவாக்கிய படைப்புகளும் சாமானியர்களுக்காக இசைக்கப் பட்டன.

ஜனநாயகம் வந்ததும் மொஸார்ட் இசையும் நின்று விட்டது. ஏனென்றால் அரசு அதற்காக பணம் செலவிட விரும்பவில்லை. இசை, கலாச்சாரம், கல்வி? இதற்கெல்லாம் அரசிடம் பணம் கிடையாது. கிராமங்களில் இருந்த கலாச்சார மண்டபங்கள் எல்லாம் மூடப் பட்டு விட்டன. நகரங்களில் அவை குறைக்கப் பட்டன. எல்லா இடங்களிலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இசைக் கலைஞர்கள் காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. உயிர் பிழைப்பதற்காக இரவு விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

பெர்லின் மதில் வீழ்ந்த பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் பல நம்ப முடியாத விடயங்கள் நடந்தன. மிகக் குறுகிய காலத்தில் நாம் மேற்குலகை எட்டிப் பிடித்தோம். குறைந்த பட்சம் பொருட்களின் விலைகளிலாவது. ஏனெனில் எமது நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் பிரான்ஸ், நெதர்லாந்தை விட அதிக விலைக்கு விற்கப் பட்டன.

முன்பெல்லாம் பெருந்தெருக்களின் அருகில் உள்ள கட்டிடங்களின் சுவர்களில் கடின உழைப்பாளிகளின் ஓவியங்கள் காணப்படும். அந்த இடங்களில் தற்போது விஸ்கி, கார் விளம்பரங்கள் காணப் படுகின்றன. சில விளம்பரங்களில் தோன்றும் பெண்கள் ஏறக்குறைய நிர்வாணக் கோலத்தில் இருந்தனர்.

மேற்குலகம் கொடுத்த பொருளாதார உதவிக்கு பிரதியுபகாரமாக IMF மூலம் நிபந்தனைகளை விதித்தது. அந்த நிதியத்தின் "புத்திசாலி" பொருளாதார ஆலோசகர்கள், கூடிய விரைவில் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என அறிவித்தனர். பெறுமதியான இயந்திரங்கள் எல்லாம் விற்கப் பட்டன. ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

தொழிற்சாலைகள் மறைந்து விட்டன. பொருளாதாரமும் போய் விட்டது. மக்களுக்கு சாப்பிட எதுவும் இருக்கவில்லை. திடீரென உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு மட்டும் தடை இருக்கவில்லை.

மேற்குலகம் நினைத்திருக்கலாம், கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை அறிமுகப் படுத்தினால், ஒரே நாளில் எல்லாம் நல்ல படியாக மாறி விடும் என்று. "இதுவா சந்தைப் பொருளாதாரத்தின் வலிமை" என்று ஏழைகள் ஆக்கப்பட்ட மக்களால் நம்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் வறுமையும், பிணியும் தலைவிரித்தாடின.

கம்யூனிச காலத்தை விட மிக மோசமான நிலைமை வந்தது. இருப்பதை எல்லாம் இழந்த பலர் மீதியை குடித்து அழித்தார்கள். தமது வாழ்க்கை இதை விட துயரம் மிக்கதாக அமைய முடியாது என்று உணர்ந்தார்கள். வாங்கிய கடனை அடைக்க முடியாத பலர் தற்கொலை செய்து கொண்டனர். அனேகமாக, அவர்கள் தம் இளம் பிள்ளைகளுக்கு சாப்பாடு போட வேண்டியிருந்த குடும்பத் தலைவராக இருந்தனர்.

பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நொறுங்கி விழுந்தது. அவர்களது கனவுகள் குப்பைத் தொட்டிக்குள் கிடந்தன. புதிய சமுதாயம் அவர்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் கொடுக்கவில்லை. புதியதொரு வர்க்கம் உருவானது. அது "வேண்டப்படாதவர்கள்" என்ற சமூகத்தால் ஒதுக்கப் பட்ட வர்க்கம். "வேண்டப்படாதவர்கள்" வேலை செய்ய விரும்பினார்கள். ஆனால், எங்கேயும் வேலை இல்லை. அவர்களுக்கு கிடைத்த அரச உதவிப்பணம் அத்தியாவசிய செலவுகளுக்கே போதாது.

சந்தைப் பொறிமுறை ஒரு மந்திரச் சொல் போன்று ஒலித்தது. ஆனால், பின்னர் அந்த மாயை மறைந்தது. பணவீக்கம் ஏறிக்கொண்டே சென்றது. கையில் கிடைத்த சம்பளம் பெறுமதி இழந்திருந்தது. பல நிறுவனங்களிடம் சம்பளம் கொடுக்க பணமும் இருக்கவில்லை. சிலருக்கு மாதக் கணக்காக சம்பளம் கிடைக்கவில்லை. சிலருக்கு பணத்திற்கு பதிலாக பொருட்களை கொடுத்தார்கள். நீங்கள் ஒரு கண்ணாடித் தொழிற்சாலையில் வேலை செய்தால். சம்பளமும் கண்ணாடியாகத் தான் கிடைக்கும். அதை உணவுக்காக வேறொருவருடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டும்.

முன்பிருந்த கம்யூனிச அரசு அடிக்கடி ஒரு பிரச்சாரம் செய்து வந்தது: "பல்கேரியாவில் எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதே நேரம், மேற்குலகில் வருடக் கணக்காக விசுவாசமாக வேலை செய்பவர்களையும் பணி நீக்கம் செய்கிறார்கள்." என்று சம்மட்டியால் அடித்த மாதிரி பிரச்சாரம் செய்தனர். புதிய (முதலாளித்துவ) அரசு அதை நடைமுறைப் படுத்தி மெய்ப்பித்தது. கம்யூனிச அதிகாரம் இருந்த இடத்தில் பணத்தின் அதிகாரம் வந்தது. என்ன முன்னேற்றம்?

ஏழ்மையில் கூட சமத்துவம் இருந்த இடத்தில், ஏழை, பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. புதிய பணக்காரர்கள் சேர்த்த பணத்தில் கோட்டைகள் கட்டினார்கள். புதிய மொடல் கார்களை இறக்குமதி செய்தார்கள். அதே நேரத்தில், தெருக்களில் பிச்சைக்காரர்களும் பெருகினார்கள். 

இதற்கு முன்னர், இப்படியான காட்சிகளை சினிமாப் படங்களில் மட்டுமே கண்டிருந்த எமக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஓய்வூதியப் பணத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியாத மூதாட்டி ஒருவர், குப்பைத் தொட்டிக்குள் கிளறிக் கொண்டிருந்ததை அருவருப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இதனுடன் ஒப்பிட்டால், கம்யூனிசத்தின் திட்டமிடல் பொருளாதாரக் காலத்தில் நிலவிய தட்டுப்பாடு ஒரு கொடை எனலாம்.

நிச்சயமாக, எங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் கருத்துச் சுதந்திரம் இருந்தது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? என்னைப் பொறுத்தவரையில், வயதானவர்களுக்கு உணவு கொடுக்க வழி கிடைக்குமென்றால் அந்தக் கருத்துச் சுதந்திரம் கூட வேண்டாம் என்பேன். எமது ஊடகங்கள் இந்தக் கருத்துச் சுதந்திரத்தை பிழையாக புரிந்து வைத்திருக்கின்றன. ஒரு குற்றம் நடந்தால், சந்தேகநபரின் பெயர் விபரங்களை உடனே வெளியிட்டு விடுகின்றன. அவரது குற்றம் நிரூபிக்கப் பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. வதந்திகளை உண்மை என்று சொல்கின்றன.

முதலாளித்துவமானது பற்றாக்குறை பொருளாதாரத்தை நிவர்த்தி செய்தது. அது சந்தைப் பொருளாதாரம் வேலை செய்வது போலிருந்தது. கம்யூனிச காலத்தில் இருந்த மாதிரி வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதே நேரம், பலரிடம் வாங்குவதற்கு கையில் பணம் இருக்கவில்லை. முந்திய கம்யூனிச அரசு உணவுப் பொருட்களுக்கு கொடுத்து வந்த மானியம் இரத்து செய்யப் பட்டது. அதனால், பொருட்களின் விலைகள் நூறு சதவீதம் அதிகரித்தன. ஒரு சோடிக் காலணிகள் வாங்குவதற்கு ஒரு மாத சம்பளம் தேவைப்பட்டது.

பெரும்பாலான மக்களுக்கு சாதாரணமான பொருட்களையும் வாங்கும் வசதி இருக்கவில்லை. எனது மாமியின் வீட்டை பார்த்தாலே போதும். மாமி வாழும் அடுக்குமாடிக் கட்டிடம் சோபை இழந்து காணப்பட்டது. அவரிடம் ஒரு பழைய காலத்து கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அது தான் விரும்பிய நேரத்திற்கு தான் வேலை செய்யும். குப்பையில் போட வேண்டிய தளபாடங்கள் அங்கு கிடந்தன. மாமி இதையெல்லாம் வீசாமல் வைத்திருக்கக் காரணம் பழைய நினைவுகள் அல்ல. புதிதாக வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்கவில்லை. அவருக்கு கிடைக்கும் விதவை ஓய்வூதியத் தொகை பற்றிக் கேள்விப் பட்டவுடன் திடுக்கிட்டுப் போனேன்.

"இந்தளவு குறைந்த பணத்துடன் எப்படி வாழ முடிகிறது?" 
மாமி தனது தோளைக் குலுக்கிக் கொண்டு சொன்னார்: 
"தேவையில்லாத பொருள் எதையும் வாங்குவதில்லை. அதே நேரம், எனக்குத் தேவையான பொருட்களையும் வாங்குவதில்லை. ஒவ்வொரு சதமும் பார்த்து செலவளிக்க வேண்டும். காசைப் பற்றிய கவலை தான் மனிதர்களை மிருகங்களில் இருந்து வேறு படுத்துகின்றது."

எதற்காக கம்யூனிசக் காலத்தில் எல்லாம் சிறப்பாக இருந்தது என்று வயதானவர்கள் சொல்கிறார்கள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. உண்மையில் மிகச் சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், பொருட்களின் விலைகள் வருடக் கணக்காக மாறாமல் இருந்தன. வாழ்க்கையில் பெரியளவு பிரச்சினைகளும் வரவில்லை.

புதியதொரு எதிர்காலத்திற்கு கட்டியம் கூறினார்கள். ஆனால் அதன் மேல் கட்டப்பட்ட நம்பிக்கை எல்லாம் நீர்த்துப் போயின. இவை கிழக்கு ஐரோப்பிய வரலாற்றின் அதிர்ச்சியூட்டிய வருடங்கள். பெர்லின் மதில் வீழ்ந்தவுடன் எல்லாம் நல்ல படி நடக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகிப் போனது. அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. சுதந்திரமாக வெளிநாட்டுப் பயணம் செய்ய முடிந்தது. ஆனால், பயணம் போவதற்கு மக்களிடம் பணம் இருக்கவில்லை. நீங்கள் விரும்பிய எந்த இடத்திலும் சென்று தங்கி வேலை செய்யலாம். ஆனால், எங்கேயும் வேலை இருக்கவில்லை.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால், எவருமே மக்கள் சொல்வதைக் கேட்கவில்லை. பாராளுமன்றத்தில் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்களை தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. எந்த வர்ணம் பூசி இருந்தாலும், நாங்கள் எந்த அரசியல்வாதியையும் நம்பத் தயாராக இருக்கவில்லை. முதலாளித்துவ பரிசோதனைச் சாலையில் நாங்கள் வெறும் எலிகள் மட்டுமே.

இந்த மாற்றங்களுக்குப் பிறகு பலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களது எல்லா நம்பிக்கைகளும் பறந்து போயின. ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகத்தில் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எல்லா கிழக்கைரோப்பிய நாடுகளிலும் சுய முன்னேற்ற நூல்கள் பெருமளவு விற்பனையாகின. சிலநேரம், மதமும் உதவ முடியும். மேற்குலகில் இருந்த அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள் பெருகின. அந்த சபைகள் ஏற்கனவே மேற்கில் வெளிச்சத்தை கண்டுவிட்டார்கள் என்பதால் நாமும் காண்போம் என்று நம்பினார்கள்.

கொஞ்சக் காலத்திற்கு முன்னர் நாம் வாழ்ந்த சமுதாயம் மறைந்து, பல ஒளிவருடங்கள் தள்ளிப் போன உணர்வை உண்டாக்கியது. கம்யூனிச காலத்தில் "எவ்வாறு இலட்சக் கணக்கான கிழக்கைரோப்பிய மக்கள் மூளைச்சலவை செய்யப் பட்டனர்" என்ற ஆராய்ச்சிகள் கட்டுக் கட்டாக வெளிவந்தன.

வரலாற்றை நீங்கள் திருப்பிச் சொல்லலாம். ஆனால், அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் அனுபவங்களில் தான் உண்மை ஒளிந்துள்ளது. எல்லா சரித்திர நூல்களையும் வாசிக்கையில் பெரியதொரு புதிர் தென்பட்டது. சம்பவங்கள் சரியாகத் தான் இருந்தன. ஆனால், வாழ்பனுபவங்கள் ஒத்துப் போகவில்லை. கம்யூனிசத்தின் மடத்தனங்கள் வெளியில் இருந்து பார்க்கும் போது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும். ஆனால், அதற்குள் வாழ்ந்தீர்கள் என்றால் பல விடயங்கள் சரியாகத் தான் நடந்துள்ளன என்று தோன்றும்.

பல வருட காலமாக, மேற்கத்திய நாட்டவர் எம்மைப் பற்றிய கற்பனைகளை வளர்த்துக் கொண்டனர். எங்களை சுயவிருப்பில்லாமல் நடக்கும் பொம்மைகளாக பார்த்தார்கள். நாங்கள் உத்தரவுகளுக்கு கீழ்ப் படிந்து நடந்ததாகவும், அனைத்து விடயங்களும் அரசியலை சுற்றி சுழன்றதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே அரசியலில் ஆர்வம் காட்டினார்கள். கிழக்கைரோப்பிய இளைஞர்களுக்கும், மேற்கைரோப்பிய இளைஞர்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. எமது நாட்டின் பொருளாதார நிலைமையை விட இளம் பருவத்தில் தோன்றும் முகப்பரு எமக்கு முக்கியமாகப் பட்டது.

மேற்கத்திய நாட்டவர் பற்றிய எங்களது கற்பனைகளும் விசித்திரமானவை தான். அவர்கள் எல்லோரும் பணக்கார, சுயநலம் பிடித்த, சுருட்டு புகைக்கும் முதலாளிகள். மேற்குலகவாசிகள் பலர் விலை உயர்ந்த சுருட்டு வாங்கவும், சிலநேரம் மாத முடிவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் பணமில்லாதவர்கள் என்பதை பல வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன். 


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்: 

Tuesday, November 28, 2017

தேர்தலில் கம்யூனிச விரோதிகளை அடித்து விரட்டிய பல்கேரிய விவசாயிகள்


(சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்  )
(பகுதி  - 3)

"கருத்துச் சுதந்திரம் கிடைக்கவில்லையே என்று எப்போதாவது கவலைப் பட்டதுண்டா?" என்று கேட்டான் பிராங்.

 உண்மையில் இல்லை. சுருக்கமாக சொன்னால், அதைப் பற்றி எதுவும் தெரியாது. அங்கு சில விடயங்கள் தடை செய்யப் பட்டிருந்தாலும், ஒடுக்கப் படுகிறோம் என்று யாரும் கருதிக் கொள்ளவில்லை. மேற்குலகில் பல தசாப்தகாலமாக கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆனால், தவறுகளுக்கும் குறைவில்லை.

எதையுமே மாற்ற முடியாத கருத்துச் சுதந்திரம் எதற்கு? அது இருந்து என்ன பிரயோசனம்? கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் எங்களுக்கும் அந்த அனுபவம் கிடைத்தது. திடீரென எல்லா இடங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை காண முடிந்தது. ஆனால், யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை.

கருத்துச் சுதந்திரம் கிடைத்து விட்டதால் எந்த நன்மையையும் உண்டாகவில்லை. நிலைமை முன்னரை விட மோசமடைந்தது. மக்கள் எல்லாவற்றையும் இழந்தார்கள். அவர்களது வீடு, சேமிப்புப் பணம், இலட்சியங்கள். அதிக பணம் கொடுக்கத் தயாராக இருந்தவரால் நீதிமன்ற தீர்ப்பை கூட விலைக்கு வாங்க முடிந்தது.

நாட்டில் நடக்கும் குற்றச் செயல்கள் எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். ஏனென்றால் அது ஊடக சுதந்திரத்திற்கு நல்லது என்றார்கள். ஒவ்வொரு இறந்த உடலையும், வன்முறைச் சம்பவத்தையும் பார்க்கும் பொழுது, எமது அழகான நாட்டில் இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டோம்.

கம்யூனிசக் காலத்தில் எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தாலும், கிரிமினல் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமல்ல, உணவை வாங்குவதற்கு கையில் போதுமான பணம் இருக்கிறதா என்ற கவலை கூட இருக்கவில்லை.

ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளுக்கு தம் மக்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கும். இந்த மக்கள் எல்லாவற்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், எதற்காக? கடைசியில், மக்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் சொல்ல முடிந்தது. அப்போதும் அவர்களுக்கு திருப்தி வரவில்லை.

"அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை என்றால், குரலை உயர்த்தி சொல்ல வேண்டியது தானே?" என்றான் பிராங்.

அதைத் தானே நாமும் செய்தோம்? அரசாங்கம் மாறியது. ஆனால், எந்தப் பிரயோசனமும் இருக்கவில்லை. கருத்துச் சுதந்திரம் வெறும் வயிற்றை நிரப்பவில்லை. இடது, வலது வித்தியாசம் இல்லாமல், அனைத்து அரசியல்வாதிகளதும் பிரதானமான நோக்கம், தமது பணப் பைகளை நிரப்புவது மட்டுமே.

"எது முக்கியம்? கருத்துச் சுதந்திரமா, பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதா? என்று தெரிவு செய்ய வேண்டிய நிலைமை வந்தால் என்ன செய்வாய்?" நாங்கள் எதையும் விருப்பத்துடன் தெரிவு செய்யவில்லை. அதை வரலாறு எமக்காக செய்தது. ஒரு நாள் வயிறு நிறைய உணவு கிடைத்தது. ஆனால், முழுச் சுதந்திரம் இருக்கவில்லை. அடுத்த நாள் முழுச் சுதந்திரம் இருந்தது, கையில் காசு இருக்கவில்லை.

நிச்சயமாக, இது எல்லோருக்கும் பொருந்தாது. வழமையாக முதலாளித்துவத்தில் இருப்பது போன்று, புதிய சமுதாயத்தில் எல்லாம் நேர்மையற்ற வகையில் பங்கிடப் பட்டது. வலிமை மிக்க பணக்காரர்கள் சரியான தருணத்தில் ஒரு மூழ்கும் கப்பலை விட்டு வெளியேற முடிந்தது. பலவீனமான ஏழைகள் அதற்குள் கிடந்தது அமிழ்ந்து போனார்கள். யாருமே அவர்களை காப்பாற்ற வரவில்லை.

ஏழு பேரில் ஒருவர் தனது உணவுக்காக கஞ்சித் தொட்டியை நம்பியிருக்கும் மக்களைக் கொண்ட அமெரிக்காவை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றினோம். ஆனால் ஒரு வித்தியாசம். எமது நாட்டில் ஏழைகளுக்கான கஞ்சித் தொட்டிகள் இருக்கவில்லை, எந்தவொரு செல்வந்தரும் தான தர்மம் செய்யவில்லை. எத்தனையோ பேர் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆனார்கள். ஆனால், அவர்களுக்கு ஏழைகளுடன் பணத்தைப் பங்கிடும் மனம் இருக்கவில்லை.

சோவியத் யூனியனில் கொர்பெசெவ் அதிபர் பதவிக்கு வந்தார். பெறேஸ்ட்ரோய்கா கொண்டு வந்தார். பெர்லின் மதில் வீழ்ந்தது. ஆரம்பத்தில், பல்கேரியாவில் கோர்பசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ரஷ்ய பத்திரிகைகள், சஞ்சிகைகள் தடை செய்யப் பட்டன. "சோஷலிசத்தை காப்பாற்றுவதற்காக, பல்கேரியா சோவியத் யூனியன் மீது படையெடுக்குமா?" என்று நாங்கள் எமக்குள் வேடிக்கையாக பேசிக் கொண்டோம்.

ஒரு நாள் பல்கேரியாவிலும் ஆட்சி மாற்றம் நடந்தது. எந்நேரமும் சிரித்துக் கொண்டிருந்த எமது "மகிழ்ச்சியான சர்வாதிகாரி" பதவி விலக நிர்ப்பந்திக்கப் பட்டதை தொலைக்காட்சியில் காண முடிந்தது. திடீரென கட்டவிழ்த்து விடப் பட்ட மாதிரி எல்லாம் நடந்தேறின. ஏனென்றால், எமது நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கட்சித் தலைவரை அகற்றலாம் என்றால், எதுவும் சாத்தியமே. திடீரென பலர் தெருவுக்கு வந்து கம்யூனிசத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். நாற்பது வருட கால பரிசோதனை போதும். கம்யூனிசத்தை குப்பைத் தொட்டிக்குள் வீசுவோம். எல்லோரும் இறக்கை முளைத்ததை போன்று நடந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் நடக்க முடியாதவை என்று நினைத்துக் கொண்டிருந்தவை எல்லாம் நடந்தன. இந்த ஆட்சி மாற்றம் மூலம், கம்யூனிஸ்டுகள் தமது அதிகாரத்தை பலப் படுத்தி விட்டதாக நினைத்தார்கள். ஆனால், திடீரென சிறிய சிறிய எதிர்க்கட்சிகள் முளைத்தன. கடைசியில் சுதந்திரம் பெற்றோம். அதாவது, பல கட்சிகள் கலந்து கொண்ட பொதுத் தேர்தலை சொல்கிறேன். கம்யூனிச எதிர்ப்புப் கட்சிகள் ஒன்று சேர்ந்து நீல வர்ணத்தில் போட்டியிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்புக்கும், நீலத்திற்கும் இடையில் தேர்தல் போட்டி ஆரம்பமானது.

அப்போது எனக்கு பதினெட்டு வயது ஆகியிருந்தது. வாழ்க்கையில் முதல் தடவையாக தேர்தலில் வோட்டுப் போடும் உரிமை கிடைத்தது. எனது தெரிவு நீலக் கட்சிக்குத் தான் என்பது எப்போதோ தீர்மானிக்கப் பட்டு விட்டது. குறிப்பாக நகரங்களில் வாழ்ந்த இளைஞர்களின் தெரிவும் அதுவாக இருந்தது. எனது நாய்க்குட்டியின் கழுத்துப் பட்டியில், எதிர்க்கட்சியின் நீல நிற பலூன் கட்டி விட்டேன். அதையும் இழுத்துக் கொண்டு எனது தாத்தா, பாட்டி இருக்கும் வீட்டிற்கு சென்றேன்.

தாத்தா, பாட்டிக்கு அது பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதுமே கம்யூனிச ஆதரவாளர்களாக இருந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல, அப்படி நிறையப் பேர் இருந்தனர். இந்தக் கருத்து முரண்பாடு பல குடும்பங்களுக்குள் பிரச்சினையை உண்டாக்கியது. இரவும், பகலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் இடையறாத வாக்குவாதங்கள் நடந்தன.

நான் தாத்தா, பாட்டியின் வீட்டிற்கு சென்று அவர்களது அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்து வந்து, எனது நாயின் கழுத்துப் பட்டியில் இருந்த நீல பலூனை கண்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், இது சகிக்க முடியாத, கம்யூனிச விரோத சீண்டுதல். அதனால், கோபத்துடன் கதைவை அடித்து சாத்தி விட்டார்கள்.

அப்போது தான் எனது முட்டாள்தனம் உறைத்தது. தாத்தாவும், பாட்டியும், இந்த உலகில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர்களாக இருந்தனர். சிறு வயது முதல் கொஞ்சி மகிழ்ந்து, இனிப்புப் பண்டங்களை கொடுப்பதை தவிர வேறெதையும் செய்திராதவர்கள். பாட்டி பல்கனியில் நின்று கொண்டு என்னைப் பார்த்து கண்ணீர் விடுவதைக் கண்டேன்.

அந்த நேரத்தில், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டங்களில் மும்முரமாக இருந்த எனக்கு, தாத்தா, பாட்டியின் பிரிவின் துயரம் பெரிதாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எல்லோரும் புன்முறுவலுடன் வீடுகளுக்கு திரும்பினோம். வழியில் எதிர்ப்பட்ட கம்யூனிச ஆதரவாளர்கள் மட்டும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், எதுவும் பேசவில்லை. (எதிர்க்கட்சி ஆதரவாளரின்) மகிழ்ச்சி ஆரவாரம் ஒரு சில நாட்கள் நீடித்தது.

கம்யூனிச எதிர்ப்பு எதிர்க்கட்சிக்கு நகரங்களில் மட்டுமே செல்வாக்கு இருந்தது என்று சொல்லலாம். ஆனால், கிராமப் புறங்கள் அப்போதும் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்தன. கிராமங்களில் நீலக்கொடி காட்டிய சிலருக்கு விவசாயிகள் அடி போட்டு அனுப்பினார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியானது தனது கடந்த கால சாதனைகளை சொல்லிக் காட்டி பிரச்சாரம் செய்தது. குறிப்பாக விவசாயிகள் மத்தியில் எதிர்க்கட்சி அரசாங்கம் பற்றிய அச்சவுணர்வை தோற்றுவித்து இருந்தனர். எதிர்க்கட்சி அவர்களது நிலங்கள் பறித்து, முந்திய நிலவுடைமையாளர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுவார்கள். இதனால் வேலையிழப்புகள் ஏற்படும். அத்துடன், மருத்துவத்திற்கு காசு கொடுக்க வேண்டி இருக்கும். சந்தைப் பொருளாதாரம் வந்தால், அவர்கள் எடுக்கும் சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் பெறுமதி இருக்காது.

ஆரம்பத்தில், நான் இந்த அச்சுறுத்தல்களை கம்யூனிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரம் என்று நினைத்தேன். இருப்பினும் கிராமப் புற விவசாயிகள் அதை நம்பினார்கள். மேற்கத்திய அமைப்பில் நம்பிக்கை கொண்டிருந்த நகர்ப்புற அறிவுஜீவிகளை விட, கிராமப்புற விவசாயிகள் உண்மைக்கு அண்மையில் நின்றுள்ளனர் என்பது கடைசியில் தெரிய வந்தது. எதிர்க்கட்சி அவமானப் பட்டு நாட்டை நாசமாக்கிக் கொண்டிருந்த நேரம், மிக மோசமான நிலைமை நிதர்சனமானது. ஆனால், அந்த நேரம் நல்லது நடக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் மனதில் எந்த வித எதிர்மறையான எண்ணமும் இருக்கவில்லை.

ஒரு தலைமுறை கடந்ததும் வந்த பிள்ளைகள் எவருக்கும் கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அவர்கள் படிக்கும் சரித்திரப் பாடநூலில் ஒரு சுருக்கமான குறிப்பு இருக்கும். அந்தளவு தான் அறிவு. நாங்கள் மார்க்ஸ், லெனின் சிலைகளுடன் வளர்ந்தோம். ஆனால், இன்றைய தலைமுறைக்கு அவர்கள் யார் என்பதே தெரியாது. லெனினை பார்த்து "யார் இவர்? மொஸ்கோ நகர மெட்ரோ ரயில் கட்டியவரா?" என்று கேட்கிறார்கள்.

லெனின் ஒரு இலட்சியவாதியாக இருந்தார். அவரது பிரதானமான சாதனையாக, சோவியத் காலகட்டத்தில் இனங்களுக்கு இடையில் நல்லுறவு நிலவியதைக் குறிப்பிடலாம். அதாவது, இனவாதத்திற்கு இடமிருக்கவில்லை. சோவியத் அமைப்பு விழுந்த பின்னர், எண்ணில் அடங்காத தேசியவாதக் கட்சிகள் தோன்றின. அவை மக்களின் அடிமனது உணர்வுகளைப் பிரதிபலித்தன. "மோசமான பொருளாதார நிலைமைக்கு காரணம் சிறுபான்மை இனத்தவர் தான்." - எப்போதும் பழி போடுவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவர்கள், மேற்கத்திய "ஜனநாயக" நாடுகளைப் பார்த்து கற்றுக் கொண்டார்கள்.

ஒரு பெர்லின் மதில் மட்டுமே வீழ்ந்தது. ஆனால், கணக்கிட முடியாத புதிய மதில்கள் எழுந்தன. உக்ரைன் ரஷ்ய எல்லையில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் மதில் கட்டுவதற்கு யோசித்தது. அதனோடு ஒப்பிடும் பொழுது பெர்லின் மதில் ஒன்றுமேயில்லை. மிகவும் தடிமனான மதில் மக்களின் மனதில் தான் உள்ளது. அதை ஊடுருவுவதும் கடினமானது. பனிப்போர் முடியவில்லை. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தொடர்கிறது. நீண்ட நெடுங்கால ஜனநாயக மரபைக் கொண்ட நாடுகளில் கூட, நாகரிகம், சகிப்புத்தன்மை என்பன இலகுவில் உடையும் அளவிற்கு மெல்லிய தடுப்புச் சுவர்களாக உள்ளன.


இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:

Saturday, November 18, 2017

போதுமென்ற மனமே கம்யூனிசம் சொல்லும் மருந்து


[சோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்] 
(பாகம் - 2)

கம்யூனிச சமூக அமைப்பில் முதலாளித்துவ சிந்தனை இல்லாமல் இல்லை. சோஷலிச நாட்டில் சந்தைப் பொருளாதாரம் இருக்கவில்லை என்று யார் சொன்னார்கள்? புதிய கார் வாங்க வேண்டுமென்றால், பதிவு செய்து விட்டு வருடக் கணக்கில் (5-10 வருடங்கள்) காத்திருக்க வேண்டி இருந்தது. 

உங்களால் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என்றால், இருக்கவே இருக்கிறது பழைய கார். யாராவது பாவித்த ஒரு கார் வாங்கி ஓடலாம். சிலநேரம் பழைய காரின் விலை, புதிய காரை விட அதிகமாக இருக்கும். அதாவது "கேள்வி - வழங்கல்" முறையில் இயங்கும் சந்தைப் பொருளாதாரம். 

சோவியத் யூனியனில் சந்தை இன்னும் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது. மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்கும் சந்தை பெருந்தெருக்களின் ஓரத்திலேயே இருந்தது. கோர்பசேவ் பதவிக்கு வர முன்னரே அங்கு தனியார் துறை இருந்தது. கம்யூனிச சமூகத்தில் அந்தளவு நெளிவு சுளிவுகள் இருந்தன.

பொருட்கள் விரைவில் பழுதடைவதா அல்லது தட்டுப்பாடு நிலவுவதா? பொருளாதாரத்தில் எது மிக மோசமானது என்பது எமக்குத் தெரியாது. திட்டமிட்ட பொருளாதாரத்தில் அடிக்கடி பொருட்களுக்கு தட்டுப்பாடு வருவதை தவிர்க்க முடியாது. நுகர்வோரின் தேவையை முன்கூட்டியே அறிந்து செயற்படுவதற்கு பொருளியல் அறிஞர்கள் முயற்சித்தார்கள். ஆனால், அது எப்போதும் இலகுவானதல்ல. 

கம்யூனிச காலத்தில் அது ஒரு தவறாக இருந்தது. எல்லா இடங்களிலும் தையல் மெஷின் விற்பனைக்கு கிடைக்கும். ஆனால், பிறகு ஊசி வாங்கக் கிடைக்காது என்பது மாதிரி. திருத்த வேலை செய்வதற்கு சில பகுதிகளை வாங்கிப் பொருத்த வேண்டி இருக்கும். ஆனால், அது கடையில் இருக்காது. நெதர்லாந்து வந்த பின்னர், "நீங்களே செய்து பாருங்கள்" (Do it yourself) கடைக்கு சென்று பார்த்தேன். அங்கே எல்லாம் தயார் நிலையில் பொருத்தக் கூடிய உபகரணங்களாக இருந்தன. அதெப்படி, நாங்களாகவே செய்து கொள்வதாகும்?

முதலாளித்துவமா, அல்லது கம்யூனிசமா, மனிதர்களின் படைப்புத் திறனை வளர்க்கிறது என்ற பட்டிமன்ற விவாதத்தில், ஏற்கனவே கம்யூனிசமே வென்று விட்டது. பற்றாக்குறை நிலவும் பொழுது, மனிதர்கள் தாமாகவே சிலவற்றை கண்டுபிடிக்கிறார்கள். ஒரு தடவை எமக்கு புல்வெட்டும் கருவி தேவைப் பட்டது. 

நிச்சயமாக அதற்கும் தட்டுப்பாடு தான். எனது அப்பா ஒரு வேலை செய்தார். நான் குழந்தையாக இருந்த நேரம் பாவித்த தள்ளுவண்டியின் அடிப்பாகத்தையும், பழைய சலவை இயந்திரத்தின் மோட்டாரையும் இணைத்து ஒன்றை உருவாக்கி விட்டார். இருபது வருடங்களுக்குப் பிறகும் அந்தப் பொருள் நன்றாக வேலை செய்கிறது.

சில விடயங்களை சொல்லிப் புரிய வைக்க முடியாது. இரட்டைத் தொலைபேசி இணைப்பு (Duplex line) அதில் ஒன்று. (ஒரே இணைப்பு இரண்டு வீடுகளுக்கு செல்லும்) நாங்கள் தொலைபேசினால் பக்கத்து வீட்டுக்காரர் பேச முடியாது. எனது சகோதரி மணித்தியாலக் கணக்கில் தனது காதலனுடன் வம்பளந்து கொண்டிருப்பாள். எரிச்சலில் மேல் வீட்டுக்காரி தொம் தொம் என்று நிலத்தில் குத்துவாள். மணித்தியாலக் கணக்காக வம்பளந்து கொண்டிருக்க அவளுக்கும் ஒரு காதலன் இருந்திருக்கலாம். 

பக்கத்து வீட்டுக்காரர் அறுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எமக்கு தொலைபேசி பாவிக்க வேண்டி இருந்தால் ஒரு வேலை செய்வோம். இரகசியமாக சென்று Duplex பெட்டியில் குத்தி விட்டால் இணைப்பு துண்டிக்கப் பட்டு விடும். நிச்சயமாக, அன்று நாடு முழுவதும் இணைப்பு திடீரென துண்டிக்கப் படுவது அடிக்கடி நடக்கும்.

கம்யூனிச காலகட்டத்தில் வாழ்ந்த எல்லா தலைமுறைகளிலும், நாங்கள் வாழ்ந்த காலம் தான் சிறப்பானது. பொது இடத்தில் யாராவது கம்யூனிஸ்ட் கட்சியை குறை சொன்னால், அதிக பட்சம் அவரது உத்தியோகத்திற்கு ஏதாவது பிரச்சினை வரலாம். ஆனால், ஜெயிலுக்கு எல்லாம் போக வேண்டி வராது. அரசியல் கைதிகளுக்கான மீள் படிப்பு முகாம்கள் எல்லாம் கடந்த காலம். அதெல்லாம் முந்தி இருந்தன. சிலநேரம், ஒருவர் அமெரிக்க டாலர் சின்னம் வரைந்திருந்தால் கூட சந்தேகிக்கப் பட்ட காலம் ஒன்று இருந்தது.

கம்யூனிசத்தின் ஆரம்ப காலங்களில் சில அற்பமான விடயங்களையும் அவதானித்தார்கள். எனது அம்மா குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு வெளியே போனால், முழங்காலில் கரும் புள்ளி குத்தி விடுவார்கள். அதே மாதிரி,அப்பா இறுக்கமான காற்சட்டை அணிந்து சென்றால் இடுப்புக்கு கீழே கத்திரிக்கோலால் வெட்டி விடுவார்கள். 

அனேகமாக இப்படியான வேலைகளை செய்வது பொலிஸ்காரர்கள் அல்ல. சாதாரண பொது மக்கள். அதற்கென கையில் சிவப்புப் பட்டி அணிந்த தொண்டர்கள் இருந்தனர். இறுக்கமாக காற்சட்டை அணிவது முதலாளித்துவ நாகரிகம். ஆகையினால் அதைக் கண்டால் வெட்டி விட்டார்கள்.

ஒரு தலைமுறைக்கு பிறகு சமுதாயம் மாறி விட்டது. அப்போதும், நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசலாம், செய்யலாம் என்று அர்த்தம் அல்ல. இருப்பினும், நாம் எல்லோரும் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் உணர்ந்தோம். எல்லோருக்கும் வேலை இருந்தது. பள்ளிக்கூடங்கள், மருத்துவ வசதி என்பன இலவசமாக கிடைத்தன. 

பெரும்பாலான மக்கள் போதுமான அளவு சம்பாதித்தார்கள். அத்துடன் விடுமுறைக்காக கொஞ்சப் பணம் சேமித்து வந்தனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய விடுப்பும், இரண்டாம் வருடம் சம்பளம் இல்லாத விடுப்பும் கிடைத்தது. 

பெரிய நகரங்களில் உள்ள தெருக்கள் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் கழுவித் துப்பரவாக்கப் பட்டன. பூங்காக்கள் அழகாகவும், பசுமையாகவும் இருந்தன. எங்கேயும் நாசவேலைகள் நடக்கவில்லை. போதைவஸ்து பாவனை இருக்கவில்லை. அத்துடன் சமூகத்தில் பதற்றமும் நிலவவில்லை.

பள்ளிக்கூடங்களில் மனித இன வரலாற்றின் வித்தியாசமான காலகட்டங்கள் பற்றி சொல்லித் தந்தார்கள். அந்த அடிப்படையில், இப்போது நாங்கள் "அபிவிருத்தி அடைந்த சோஷலிச சமுதாயத்தில்" வாழ்வதாக சொன்னார்கள். இப்போதுள்ள குறைபாடுகள் எல்லாம், கம்யூனிச காலகட்டத்தை அடையும் பொழுது தான் பூர்த்தியாக்கப் படும் என்றார்கள். அப்போது மனிதர்களின் தேவைக்கு ஏற்றவாறு எல்லாம் கிடைப்பதுடன், கடைகளில் பணம் இல்லாமல் எதுவும் வாங்கலாம் என்றார்கள். இந்தக் கதைகள் எல்லாம் சொல்வதைப் போன்று நடக்குமாக இருந்தால் அழகாகத் தானிருக்கும்.

நேர்மையாகத் தான் சொல்கிறேன். அமெரிக்காவில் நூறில் ஒருவர் சிறைக் கைதியாக இருந்த நேரம், எங்கள் நாட்டில் கிரிமினல் குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடந்தன. அதற்குக் காரணம், சர்வாதிகாரமானது அயோக்கியர்களையும் அடிபணிய வைத்திருக்கலாம். சிலநேரம், யாருமே பணக்காரர் இல்லாத ஒரு தேசத்தில் திருடுவதற்கு எதுவும் இல்லை என்று திருடர்கள் நினைத்திருக்கலாம்.

விடுமுறையை கழிப்பதற்கு கருங்கடல் ஓரம் நிறைய கம்யூனிச இளைஞர் விடுதிகள் இருந்தன. அங்கு தங்குவது மிகவும் மலிவானது. ஒரேயொரு குறை என்னவெனில், விடியற் காலையில் எழுந்து நாட்டுப் பற்றுப் பாடல்கள் பாட வேண்டும். அணிவகுக்க வேண்டும். சில பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். 

ஆனால், மாலை நேரம் நெருப்புத் தணலுக்கு அருகில் அமர்ந்திருக்கும் நேரம், எவராலும் காதல் உணர்வை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தான், எனது பெற்றோர் என்னை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. நான் அவர்களது கடும் கண்காணிப்பில் இருந்து தப்புவதுடன் கர்ப்பமாக வீடு வந்து சேருவேன் என்று அஞ்சினார்கள்.

ஆகையினால், நான் "பிரிகேட்" பணி செய்ய செல்லும் காலங்களில் அரும்பும்   காதல்களுடன் திருப்திப் பட வேண்டும். பிரிகேட் பணிக் காலத்தில் நாங்கள் வயல்களில் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். நிச்சயமாக, அது விடுமுறை அல்ல. ஆனால், எனக்கு அப்படித் தெரிந்தது. ஆளரவம் இல்லாத மூலையில் ஒரு இளைஞனும், யுவதியும் செய்யும் குறும்புகளை மேற்பார்வையாளர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களும் இளம் வயதினர் தானே.

அப்படியான பிரிகேட் போவதற்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு வரும். அதற்கு சமூகமளிப்பது கட்டாயம் என்று, மீறினால் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எழுதப் பட்டிருக்கும். என்ன நடவடிக்கை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், தொண்டர் படையணிக்கு ஒருவர் தவறாமல் எல்லோரும் நேரத்திற்கு வந்து விடுவார்கள்.

எல்லா கம்யூனிச நாடுகளிலும் இளைஞர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வது வழக்கம். போலந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த படியால், அங்கே ஒவ்வொரு வருடமும் உருளைக்கிழங்கு தோண்டுவது தான் வேலை. பல்கேரியாவில் வித்தியாசம். திராட்சைப் பழம், செரி பழம், அல்லது ஆப்பிள் பிடுங்க வேண்டி இருக்கும். கடலை பறிப்பது  என்றால் எனக்கு மிகுந்த வெறுப்பு. நிலத்தை தோண்டி விரல்கள் கறுத்து விடும். முதுகு வலி வரும். அத்துடன் மழை பெய்தால் அந்த மண் சேறாகி விடும். 

அதை விட மோசமான விடயம், குறிப்பிட்ட அளவு செய்து முடிக்கவில்லை என்றால், மேற்பார்வையாளர் எல்லோருக்கும் முன்னால் திட்டுவார். அதற்காக நான் ஒரு வேலை செய்வேன். வாளியின் அடிப்பகுதியில் கொஞ்சம் மண் போட்டு வைத்திருப்பேன். நிறுக்கும் பொழுது கடலையை விட மண்ணின் நிறை அதிகமாக இருக்கும்.

நமது காவியத்திற்குள் யாராவது வந்து குழப்பி விடுவார்களா? ஆம், சில நேரம் கட்சி முக்கியஸ்தர்கள் விஜயம் செய்வார்கள். அந்த நேரம் பாதையை கூட்டி, அருகில் வளர்ந்திருக்கும் புற்களை வெட்ட வேண்டும். ஊத்தையான குப்பை வாளியை அகற்ற சொன்னார்கள். எங்கே கொண்டு போய் வைப்பது என்று மேற்பார்வையாளருக்கு தெரியவில்லை. அந்த இடம் கூடாது, இங்கே வேண்டாம் என்று சொல்லி சொல்லி ஆறு தடவைகளுக்கு மேல் அலைக்கழிக்கப் பட்டோம். கடைசியில் அது முதலில் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தது.

அப்படியான தருணத்தில் அங்கு வருகை தரும் அரசியல்வாதி பற்றி நமக்குள் பேசிக் கொள்வோம். ஆனால், பொதுவாக சொன்னால், நாங்கள் ஒரு நாளும் அரசியல் பற்றிப் பேசுவதில்லை. இந்த கம்யூனிச தலைவர்கள் ஐந்தாண்டு திட்டத்தில் என்னவெல்லாம் புனைந்து வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப் படவில்லை.

எங்களுடைய ஆர்வம், கவலை எல்லாம் எதிர்ப் பாலினத்தவர் பற்றியதாகவே இருந்தது. அவர்களது நடையுடை, தோற்றம் பற்றியதாகவே இருந்தது. ஆண், பெண் இனக்கவர்ச்சி பற்றியே அதிக அக்கறை கொண்டோம்.

யாரையாவது கவரும் வகையில் என்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டி இருந்தது. பிரபல அமெரிக்க பாடகி Tina Turner மாதிரி முடி அலங்காரம் அந்தக் காலத்து நாகரிகம். இதெல்லாம் பள்ளிக்கூடத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், வெளியில் யாரும் என்னைக் கேட்க முடியாது.

அந்தக் முடி அலங்காரம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக, அப்பாவின் ஷேவிங் கிறீம் எடுத்து பூசிக் கொள்வேன். ஏன் தனது ஷேவிங் கிறீம் அடிக்கடி முடிகிறது என்று அப்பாவுக்கு அதிசயமாக இருக்கும். அந்தக் காலங்களில் தலைக்கு வைக்கும் ஜெல் கடைகளில் விற்பதில்லை. ஆகவே, எனக்கும் வேறு வழியில்லை. ஒரேயொரு குறை. மழை பெய்தால் எல்லாம் கரைந்து வழிந்து விடும்.

"உங்கள் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை இருக்கவில்லை. அது எப்படி சாத்தியமானது?" எனது துணைவர் பிராங் இடையிடையே இப்படி விசித்திரமான கேள்விகள் கேட்பார்.

இதற்கு நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். நிறையப் பேரை பிடித்து அர்த்தமில்லாத வேலைகளையும் செய்ய வைத்தால் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தீர்ந்து விடும். கடுமையாக வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்து சாதனை படைக்கிறார்கள் என்று பத்திரிகைகளே எழுதுகின்றன.

நிறையப் பேர் தாம் வேலை செய்யும் தொழிலகங்களில் உள்ள பொருட்களை கொண்டு சென்று அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்வார்கள். அதனால் சிலநேரம் உற்பத்தி தடைப் படும். அதற்காக யாரையும் பணி நீக்கம் செய்ய முடியாது. செய்வதற்கு ஒரு வேலையும் இல்லையென்றாலும் சம்பளம் கொடுத்தாக வேண்டும். இது தான் கம்யூனிசத்தின் பொருளாதார சுழற்சி.

மேற்குலக பொருளாதாரம் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை கொண்டுள்ளது : 
  • உற்பத்தி குறைவு: தொலைந்து போ! 
  • கேள்வி அதிகரிக்கிறது : உற்பத்தி முழுவதையும் சீனாவுக்கு கொண்டு போ! 
  • சீனாவில் செலவு அதிகம்: உற்பத்தியை மலேசியாவுக்கு இடம் மாற்று! 
  • எதிர்ப்புப் போராட்டம் : இன்னமும் உயிரோடு இருக்கிறாயா? 
  • உச்ச கட்ட சம்பளம் : வங்கியில் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்று சொல்லு!
  • பொருளாதார நெருக்கடி : நெருக்கடிக்கு காரணமான வங்கிகளுக்கு ஆதரவளி. செலவை மக்கள் தலையில் கட்டி விடு!

உண்மையை சொன்னால், எந்த பொருளாதார சுழற்சி நல்லது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கம்யூனிசத்தில் மக்களுக்கு பெருமளவு திருப்தி கிடைத்தது. மேற்குலகில் மரணப் போட்டி நிலவுகிறது. இரும்புத் திரைக்குப் பின்னால் போட்டி என்ற சொல்லை யாரும் கேள்விப் பட்டிருக்கவில்லை.

விளம்பரம் ஒரு அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரம். அது மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து மேலதிக பணத்தை எடுக்கிறது. எங்கள் நாட்டில் விளம்பரங்களால் மூழ்கடிக்கப் படாத படியால் தொடர்ந்து புதிய பொருட்களை வாங்குவதற்கு நிர்ப்பந்திக்கப் படவில்லை. அதனால் பல விடயங்கள் இலகுவாக நடந்தன.

உன்னுடைய வீட்டில் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்யவில்லையா? நல்லது. நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடலாம். ஒரு கார் வாங்குவதற்காக பதிவு செய்து விட்டு ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டுமா? அது பற்றி கவலைப் படாமல் வாழ்க்கையில் நல்ல பக்கத்தை பாருங்கள். "வாகன வரி கட்டத் தேவையில்லை. காற்றுப் போன டயர் மாற்றத் தேவையில்லை. சேர்விஸ் செலவு இல்லை..."

மொத்தத்தில் நிறைய நேரம் மிச்சம் பிடிக்கலாம். கம்யூனிச காலகட்டத்தில் "மாற்றி யோசிக்க" கற்றுக் கொண்டோம். மேற்குலக பொருளாசை தரும் போதைக்குள் மூழ்குவதற்கு முன்னர் இது ஒரு நல்ல பயிற்சி.