Tuesday, December 16, 2014

முதலாளிய - உலகமயமாக்கலுக்கு எதிரான ஐந்தாம் கட்ட ஈழப் போர்

உலகமயமாக்கலின் சுயரூபம். கொக்கோ கோலா நிறுவனம், கேரளா, பிளாச்சி மாடாவில் நிலத்தடி நீரை மாசு படுத்தியது. தற்போது, யாழ்ப்பாணத்தில் இன்னொரு "பிளாச்சி மாடா" உருவாகின்றது. இதுவும் ஒரு பன்னாட்டு நிறுவனம் தான்.

யாழ்ப்பாணத்தில் மின்சார விநியோகம் செய்யும், நொதேர்ன் பவர்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம், நிலத்தடி நீரை மாசு படுத்தி வருகின்றது. அந்த நிறுவனத்திற்கு எதிராக தமிழ்ப் பொது மக்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். நொதேர்ன் பவர்ஸ் அவர்களை "பயங்கரவாதிகள்" என்று குற்றஞ்சாட்டியுள்ளது. ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஒன்று நடந்தால், அது நிச்சயமாக முதலாளித்துவ உலகமயமாக்கலுக்கு எதிரானதாக இருக்கும்.

யாழ் குடாநாட்டில் ஒரு பகுதிக்கு மின்சார விநியோகம் செய்து வரும் சுன்னாகம் மின்சார நிலையத்தை வாங்கியுள்ள மலேசியா கார்ப்பரேட் நிறுவனமான MTD Capital, "நொதெர்ன் பவர்ஸ்" என்ற பெயரில் நடத்தி வருகின்றது. தரகு முதலாளிய சிறிலங்கா அரசு, இவ்வாறு தனியார்மயத்தை ஆதரிப்பவர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது.

தனியார் மயத்தின் பின்னர், புதிதாக ஒரு பிரச்சினை முளைத்துள்ளது. சுன்னாகம் மின்சார நிலையம் வெளியேற்றும் கழிவு எண்ணை, நிலத்தைடி நீரை மாசுபடுத்தியுள்ளது. அயலில் உள்ள கிணறுகளில் எண்ணைக் கசிவுகள் நீருடன் கலப்பதாக, பொது மக்கள் முறையிடுகின்றனர். இது தொடர்பாக நொதெர்ன் பவர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.


நீதிமன்றத்தில் நொதெர்ன் பவர்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் கூறிய காரணம் நகைப்புக்குரியது. "மன்னாரில் எண்ணை வளம் இருக்குமென்றால், ஏன் சுன்னாகத்தில் இருக்கக் கூடாது?" என்று சிறுபிள்ளைத் தனமாகக் கேட்டுள்ளார். அந்த வழக்கறிஞர் மட்டுமல்ல, முதலாளித்துவம், தனியார்மயத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தனி நபர்களும், இப்படித் தான் சிறுபிள்ளைத்தனமாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுற்றுச் சூழலை மாசு படுத்துவது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா, பிளாச்சிமாடாவில், கொக்கோ கோலா கம்பனி இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்தமை இங்கே நினைவுகூரத் தக்கது. தென்னிலங்கையிலும் பாதணி தயாரிக்கும் தொழிலகம் ஒன்று அகற்றிய இரசாயனக் கழிவுகள், சுற்றுச் சூழலை மாசு படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியதும், இராணுவ அடக்குமுறை பிரயோகிக்கப் பட்டதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

நான் முன்னர் எழுதிய "மாவிலாறு முதல் வெலிவாரியா வரை" எனும் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:

உலகில் எந்தத் தேசியவாதியும், தனது சொந்த தேசிய இனத்தின் வர்க்க அடிப்படையையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதில்லை. தமிழ் தேசியவாதிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. பொருளியல் துறையில் முதுமானிப் பட்டம் பெற்ற தமிழ் தேசியவாதிகளும் நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்கள் கூட, தமது சொந்த தமிழ் இன மக்களின் போராட்டத்திற்கு, பொருளாதார பிரச்சினைகளும் காரணம் என்பதை கூறுவதில்லை. குறைந்த பட்சம், அது பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் சேவகர்களா, அல்லது முதலாளித்துவ அடிமைகளா? 


 யாழ் குடாநாடு முழு இலங்கையிலும், மிகவும் வரட்சியான மாவட்டங்களில் ஒன்று. வரண்ட மண்ணைக் கொண்ட யாழ் குடாநாட்டில், மக்கள் தொகை அடர்த்தி அதிகம். குடிநீருக்கான தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி சாதிக் கலவரங்கள் நடக்கும் இடமாக இருந்தது. எழுபதுகளில் மழை வீழ்ச்சிக் குறைவு, முழு இலங்கையையும் பாதித்திருந்தது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையை, யாழ்ப்பாணத்திற்கு திருப்பி விடும் அரசின் திட்டம், இறுதியில் திருகோணமலை வரையில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த உதவியது. அத்தகைய காலகட்டத்தில் தான், தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியது என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

இது தொடர்பான முன்னைய பதிவு: 
மாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்


நிலத்தடி நீர் மாசடைவது பற்றி தாய் வீடு பத்திரிகையில் வெளியான கட்டுரை:
 

No comments: