Wednesday, December 10, 2014

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் "அத்த" பத்திரிகை தடை செய்யப் பட்டுள்ளது!

இறுதியாக வந்த அத்த பத்திரிகையின்
முகப்புப் பக்கம்
 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான "அத்த"(உண்மை) தடை செய்யப் பட்டுள்ளது. இதிலே வேடிக்கை என்னவென்றால், பத்திரிகையை வெளியிட விடாமல் தடை செய்தது, அந்தக் கட்சியின் தலைமைப் பீடம் தான்!

கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, ஊடகவியலாளர்கள் ராஜபக்ச அரசுக்கு எதிரான தகவல்களை பிரசுரித்தமையினால் தடை செய்யப் பட்டதாக கூறப் படுகின்றது. பத்திரிகையின் பிரதிகள் அச்சிடப் பட்டிருந்த போதிலும், அவற்றை விநியோகத்திற்கு விடாமல் பறிமுதல் செய்து, கட்சி அலுவலக களஞ்சிய அறைக்குள் போட்டு விட்டார்கள்.

அத்த ஊடகவியலாளர்கள் பலர், தற்போது, மைத்திரிபால முகாமிற்கு மாறி விட்டார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து, "இதிரிய" என்ற புதிய பத்திரிகையை ஆரம்பித்துள்ளனர். அதில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிக்கும் செய்திகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன என்பதை, நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ நாளேடான அத்த, கடந்த ஐம்பது வருடங்களாக தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தது. அறுபதுகளில், எழுபதுகளில், அரச மட்டத்தில் நடந்த ஊழல்களை பகிரங்கப் படுத்தும் துணிச்சலான ஊடக தர்மம் காரணமாக, எதிரி முகாமில் இருந்தவர்களாலும் பாராட்டப் பட்டது.

அத்த பத்திரிகை, கம்யூனிஸ்ட் கட்சி நிதியில் இயங்கினாலும், அதன் ஊடகவியலாளர்கள் கட்சிக்குள் சுயாதீனமான குழுவாக செயற்பட்டனர். அதனால், முதலாளிய பத்திரிகைகள் பிரசுரிக்காத பல தகவல்களை வெளியிட முடிந்தது. உதாரணத்திற்கு, யாழ் நூலகம் எரிக்கப் பட்ட செய்தியை, படங்களோடு வெளியிட்ட ஒரேயொரு சிங்களப் பத்திரிகை அத்த தான். அதனால், அரசாங்கம் அத்த மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குப் போட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த அரசாங்கம், 83 கலவரத்தின் போது பத்திரிகையை தடை செய்திருந்தது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியானது, பாராளுமன்ற அரசியலில் சிக்கி சீரழிந்த திரிபுவாத அரசியல் கட்சி ஆகும். அது கம்யூனிஸ்ட் பெயரில் உள்ள, சாதாரண முதலாளியக் கட்சியாகவே இயங்கி வருகின்றது. ஸ்டாலின் - குருஷேவ் பிரச்சினையில், குருஷேவின் நிலைப்பாட்டை ஆதரித்த காரணத்தினால், "ரஷ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சி" என்று அழைக்கப் பட்டது. அதனால், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. பாராளுமன்ற அரசியலை நிராகரித்து புரட்சிகர பாதையை நாடியவர்கள், மாவோவின் தொடர்பை ஏற்படுத்தி தனியான கட்சியாக இயங்கத் தொடங்கினார்கள்.

ரஷ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, குருஷேவின் ஆலோசனையை ஏற்று, "சமாதான சகவாழ்வு" என்ற கோஷத்தின் கீழ், கம்யூனிசப் புரட்சியை கைவிட்டு விட்டு, சமூக ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தது. அன்று முதல், மத்திய இடது கட்சியாக கருதப்பட்ட சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அரசாங்கங்களில் பங்கெடுத்து வருகின்றது.

நாய் வேஷம் போட்டால் குலைக்க வேண்டும் என்பதைப் போல, கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தது. மத்திய இடது கட்சியுடன் கூட்டணி அரசு அமைத்தால், அவர்களை வென்றெடுக்க முடியும் என்பது குருஷேவின் ஆலோசனையாக இருந்தது. ஆனால், நடந்த கதை வேறு. ஆளும் கட்சியுடன் இனவாத சகதிக்குள் புரண்டெழுந்து தாமும் சேறு பூசிக் கொண்டது தான் மிச்சம்.

இருப்பினும், சுதந்திரமாக இயங்கிய படியால், அத்த ஊடகவியலாளர்கள் அவ்வப்போது அரசுக்கு எதிராக எழுதிக் கொண்டிருந்தார்கள். அண்மைக் காலமாக, கம்யூனிஸ்ட் கட்சி ராஜபக்ச அரசில் அங்கம் வகித்தாலும், அத்த பத்திரிகை ராஜபக்சவை விமர்சிக்கும் கட்டுரைகளை பிரசுரித்து வந்தது. அதனால் செய்தித் தணிக்கை போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்தது.

செய்தித் தணிக்கை அத்தவுக்கு பழகிப் போன விடயம். அதனால், பத்திரிகையில் தணிக்கை செய்யப் பட்ட இடத்தை வெற்றிடமாக விடுவார்கள். அதிலே ஒரு சிறு குறிப்பு இருக்கும்: "இந்த செய்தியை நாய் சாப்பிட்டு விட்டது!" தற்போது கட்சி ராஜபக்ச அரசை ஆதரிக்கையில் கூட, அத்த அரசுக்கு எதிரான செய்திகளை பிரசுரித்த நேரங்களில் தணிக்கைக்கு உள்ளானது. அப்போது பின்வருமாறு ஒரு குறிப்பு வரும்: "இந்த செய்தியை எமது வளர்ப்பு நாய்களே சாப்பிட்டு விட்டன!" 

தற்போது, அத்த தடை செய்யப் பட்டதன் பின்னணியிலும் மகிந்த ராஜபக்சவின் கரம் மறைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகின்றது. தன்னோடு இணைந்திருக்கும் கட்சி ஒன்றின் பத்திரிகை, தனக்கு எதிராக எழுதுவது, கண்ணில் முள்ளாகக் குத்தி இருக்கலாம். ஆயினும், பத்திரிகை வெளிவராமல் தடை செய்ததன் மூலம், திறமையான ஊடகவியலாளர்களை எதிரணிக்கு தாவ வைத்துள்ளது.

No comments: