Thursday, June 26, 2014

லாசிஸ்தான் : துருக்கியில் அழிந்து வரும் மொழிச் சிறுபான்மை இனம்

லாசிஸ்தான் தேசியக் கொடி 
உலகில் பல சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைக்கான போராட்டம் வெளியில் தெரிய வருவதில்லை. அழிந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின்  ஒடுக்குமுறைக்கு அப்பால், வெளியுலகில் பலருக்கு ஆர்வம் இருப்பதில்லை. அப்படிப் பட்ட இனங்களில் ஒன்று : லாஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே லாசிஸ்தான்  என்ற ராஜ்ஜியத்தை சொந்தமாக வைத்திருந்த மக்கள், இன்று துருக்கி பெரும்பான்மை சமூகத்திற்குள் உள்வாங்கப் பட்டு விட்டனர். 


துருக்கியின் வட கிழக்கு பகுதியில், கருங்கடல் கரையோரமாக ஒரு தனித்துவமான மொழிச் சிறுபான்மை இனமான லாஸ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்று குறைந்தது இருபதாயிரம் பேர் மட்டுமே லாஸ் மொழி பேசத் தெரிந்து வைத்திருக்கின்றனர். கடந்த கால வரலாறு முழுவதும், லாஸ் இன மக்கள், துருக்கியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு, துருக்கியராக மாறி வந்துள்ளனர். 

அண்மைக் காலமாகத் தான், லாஸ் மொழி மீள் உயிர்ப்பு பெற்று வருகின்றது. இளந் தலைமுறையினர் லாஸ் மொழி கற்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கூட, அங்கிருந்த நிலைமை வேறு விதமாக இருந்தது. லாஸ் மக்கள், தமது தாய்மொழியை பேசுவதற்கு வெட்கப் பட்டார்கள். தனிப்பட்ட பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, தமது தாய்மொழி உதவாது என நினைத்து, அதனை புறக்கணித்து வந்தனர். 

துருக்கியின் பிற சிறுபான்மை மொழி பேசும் மக்களைப் போன்று, லாஸ் மக்களும் வேலை வாய்ப்புகளுக்காக, துருக்கி மொழி கற்பதில் ஆர்வம் காட்டினார்கள். இன்னொரு அந்நிய மொழியாக ஆங்கிலம் அல்லது ரஷ்யன் படிப்பதற்கு காட்டிய அக்கறை காட்டி வந்தனர். அரசாங்கத்தின் திட்டமிட்ட மொழி அடக்குமுறைக் கொள்கை மட்டுமல்லாது, அந்த மக்களின் அக்கறையின்மையும் லாஸ் மொழி அழிந்து வருவதற்கு காரணமாக அமைந்தது.

துருக்கியில் வாழும் மக்கள் அனைவரும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாக வெளியுலகில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். துருக்கியின் மிகப் பெரிய மொழிச் சிறுபான்மையினரான குர்து மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக, குர்து மொழி பற்றி பலர் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், துருக்கியில் பேசப் படும் பத்துக்கும் குறையாத பிற மொழிகள் பற்றி அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 

துருக்கி மொழி, 1300 வருடங்களுக்கு முன்னர் தான் துருக்கியில் காலடி எடுத்து வைத்தது. அதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் கிரேக்க, ஆர்மேனிய மொழிகள் பெரும்பான்மையாக பேசப் பட்டன. அது முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கிரேக்க மொழி உத்தியோகபூர்வ அந்தஸ்து பெற்றிருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், முன்னாள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகளில் நிரந்தரமாக தங்கி விட்டனர். (ஓட்டோமான் சக்கரவர்த்திகளின் காலத்தில் கூட ரோமாபுரி என்ற அர்த்தம் வரும் "ரூம்" என்ற சொல் சில இடங்களில் புழக்கத்தில் இருந்தது.)

துருக்கி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், முன்பு கிரேக்க மொழி பேசிய மக்களில் ஒரு பகுதியினர், துருக்கி மொழியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டனர்.  இருப்பினும், இருபதாம் நூற்றாண்டு வரையில் கூட, கிரேக்க மொழியை தாய்மொழியாக பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். நவீன கிரேக்க குடியரசு எல்லையோரம் உள்ள மேற்கு துருக்கிப் பகுதிகளில் மட்டுமல்லாது, கருங்கடல் பகுதிகளிலும் கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர். 

முதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாக் கண்டம் முழுவதும் தேசியவாத சித்தாந்தம் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் ஒரு தேசிய அரசாகியது. துருக்கியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி தேசியவாதிகள், தமது நாட்டில் துருக்கி மட்டுமே பேசப் பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு தான் சிறுபான்மை மொழிகளின் அழிவு ஆரம்பமாகியது. 

நவீன மயமாக்கல் கூட, சிறுபான்மை மொழிகளுக்கு எதிராகவே அமைந்திருந்தது. உலகமயமாக்கலை தோற்றுவித்த தொழிற்புரட்சி அல்லது தொழில்நுட்ப புரட்சி காரணமாக, கல்வி, ஊடகத் துறை வளர்ச்சி அடைந்ததாலும், பெரும்பான்மை மொழி ஆதிக்கம் பெறத் தொடங்கியது. நிலப்பிரபுத்துவ காலத்தில் சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த சுதந்திரம் யாவும், முதலாளித்துவ காலத்தில் பறிக்கப் பட்டன. இந்த சமூக மாற்றம் துருக்கிக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவானது.

துருக்கி, கிரேக்க எல்லைகள் வரையறுக்கப் பட்ட போதும், அதற்குப் பின்னரும் துருக்கியில் வாழ்ந்த இலட்சக் கணக்கான கிரேக்கர்கள் வெளியேற்றப் பட்டனர். ஒரு பகுதியினர் கிரேக்க குடியரசுக்கும், இன்னொரு பகுதியினர் ரஷ்யாவுக்கும் நாடு கடத்தப் பட்டனர். லாஸ் இன மக்கள், அது போன்ற அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கவில்லை. அதற்குக் காரணம், லாஸ் மக்கள் இஸ்லாமியர் என்பது மட்டுமல்ல, மிகச் சிறுபான்மை இனமான அவர்கள், துருக்கி மொழி கற்பதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டார்கள். 

லாஸ் மக்களின் லாசிஸ்தான் நாடு, முன்னாள் ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. ஆனால், 19 நூற்றாண்டின் இறுதியில் நடந்த ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, ஒரு பகுதி ஜோர்ஜியாவுடன் இணைக்கப் பட்டது. மறுபகுதி இன்றைக்கும் துருக்கி குடியரசின் பகுதியாக உள்ளது. 

லாஸ் மொழிக்கும், துருக்கி மொழிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ஒரே மாதிரி தோன்றினாலும், ஜோர்ஜிய மொழியும், லாஸ் மொழியும் வேறுபட்டவை. ஜோர்ஜியர்கள் அந்த வேறுபாட்டை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் லாஸ் மொழி என்ற தனியான மொழி இல்லை என்றும், அது ஜோர்ஜிய மொழியின் வட்டார வழக்கு மொழி என்று வாதிட்டு வருகின்றனர்.

மேற்கு ஜோர்ஜியாவில், கருங்கடலோர பிரதேசத்தில் பேசப்படும் மிங்கிரெலிய மொழிக்கும், லாஸ் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. லாஸ், மிங்கிரெலியா மட்டுமல்லாது, சில வருடங்களுக்கு முன்னர், ஜோர்ஜியாவுடன் முரண்பட்டு, தனி நாடு கோரிப் பிரிந்து சென்ற, அப்காசியா மொழியும் ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த வேறுபட்ட மொழிகள் ஆகும். 

லாஸ் மொழி, உலகில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு கூட, லாஸ் மொழி பேசும் மக்கள் கருங்கடல் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள் அவர்களது நாட்டை "கொள்கிஸ்" என்று அழைத்தனர். (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, லாஸ் மக்களின் வாழ்விடத்திற்கு அருகாமையில், குறிப்பாக Trabzon நகர்ப் பகுதியில், கிரேக்கர்கள் வாழ்ந்து வந்தனர்.) மெடியா என்ற கிரேக்க புராணக் கதையில், கொள்கிஸ் நாடு பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. 

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், லாஸ் மக்கள் தமது பூர்வீகத்தை மறந்து விட்டார்கள். தங்களது மொழி உலகிலேயே பழமையான மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை கூட அறிந்திருக்கவில்லை. பொயர்ஸ்டைன் (Feurstein) என்ற ஜெர்மானியர், துருக்கிக்கு சுற்றுலா பயணியாக சென்ற காலத்தில் லாஸ் மொழிச் சிறுபான்மையினர் பற்றி அறிந்து கொண்டார். லாஸ் மொழி பேசும் மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நாட்டார் பாடல்களை சேகரித்தார். 

பொயர்ஸ்டைன் அடிக்கடி லாஸ் பிரதேசத்திற்கு சென்று வருவதைக் கண்டு சந்தேகப் பட்ட துருக்கி அரசு அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பின்னர், இனிமேல் எந்தக் காலத்திலும் துருக்கிக்கு வரக் கூடாது என்று எச்சரித்து விட்டு, ஜெர்மனிக்கு நாடுகடத்தினார்கள்.

பொயர்ஸ்டைன் ஜெர்மனியில் இருந்து கொண்டே, புலம்பெயர்ந்த லாஸ் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, லாஸ் மொழிக்கு எழுத்து வடிவத்தை உருவாக்கினார். அழிந்து வரும் மொழி ஒன்றுக்கு எழுத்தை உருவாக்கினால், அந்த மக்களே தமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பார்கள் என்பது அந்த ஜெர்மனியரின் நம்பிக்கை. அது பலித்தது. இரகசியமாக துருக்கிக்கு அனுப்பப் பட்ட லாஸ் மொழியின் எழுத்து வடிவத்தை, லாஸ் மக்கள் ஆர்வமெடுத்து படித்தார்கள். தற்போது அவர்கள் தமது தாய்மொழியை தாமாகவே வளர்க்கின்றனர். பொயர்ஸ்டைனின் அயராத முயற்சியால், லாஸ்-ஜெர்மன் அகராதி ஒன்றும் உருவாக்கப் பட்டது.

லாஸ் மொழியின் மறுமலர்ச்சிக்கு இன்னொரு அரசியல் சக்தியும் உதவியுள்ளது. சோவியத் கம்யூனிஸ்ட் புரட்சியின் பின்னர், துருக்கியின் கருங்கடல் பிரதேசத்தில் மார்க்சிய அமைப்புகள் தோன்றின. லாஸ் மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் மத்தியில் தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான கம்யூனிச கொள்கை பிரபலமடைந்தது. அவர்களது பிரதேசத்திற்கு அருகில், லாஸ் மொழி பேசும் சகோதரர்கள் வாழும் ஜோர்ஜியா ஒரு சோஷலிச நாடாக மாறியிருந்தது. அதுவும் லாஸ் மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பரப்புவதற்கு இலகுவாக இருந்தது எனலாம்.


கம்யூனிச கொள்கைகளினால் ஈர்க்கப் பட்ட, லாஸ் புத்திஜீவிகள் சிலர், Mç'ita Murutsxi  (சிவப்பு நட்சத்திரம்) எனும் பத்திரிகையை லாஸ் மொழியில் வெளியிட்டு வந்தனர். அந்தப் பத்திரிகை லாஸ் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பலர் சந்தா கட்டி பெற்றுக் கொண்டார்கள். Mç'ita Murutsxi பத்திரிகையின் முதலாவது பிரதி வெளிவந்தவுடனேயே, துருக்கி அரசு பத்திரிகை ஆசிரியர்களை பிடித்து சிறையில் அடைத்தது. ஆயினும், பத்திரிகையின் இரண்டாவது பிரதியும் வெளிவந்து விட்டது. காலப்போக்கில், அடக்குமுறை காரணமாக லாஸ் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கண்ட துருக்கி அரசு பின்வாங்கியது.

தற்போது லாஸ் மொழி கற்பிக்கும் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. துருக்கி அரசு இன்னமும் லாஸ் மொழியை அங்கீகரிக்காத படியால், அரசு மானியம் எதுவும் கிடைப்பதில்லை. அதனால் தனியார் நிதி உதவியுடன் தான் லாஸ் மொழி கற்பிக்கப் படுகின்றது. லாஸ் மொழியில் பத்திரிகை, சஞ்சிகைகள், நூல்கள் வெளிவருவதற்கு துருக்கி அரசு சுதந்திரம் வழங்கி உள்ளது. (அதுவும் நீண்ட கால போராட்டத்தின் பின்னர் தான்.) ஆனால், இன்னமும் லாஸ் மொழி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உரிமம் வழங்க மறுத்து வருகின்றது. 


மேலதிக தகவல்களுக்கு:
அல்ஜசீரா ஆவணப் படம் 

1 comment:

Packirisamy N said...

ஜனநாயகக் கொள்கையின்படி, எப்பொழுதும் மெஜாரிட்டியின் தேவைகளே பூர்த்தி செய்யப்படவேண்டும். தனக்கென நாடு இல்லாத ஒவ்வொரு மொழிக்கும் இறுதியில் இந்தக்கதிதான் ஆகும் என்று நினைக்கிறேன். தாய் மொழிக்கு பர்மிஷன் வேண்டுமாம். கொடுமை. இப்பொழுது , பொதுவாக வசதி இல்லாதவர்கள் குழந்தைகள் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழில் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வேறு வழியில்லை.