இங்கேயுள்ள படத்தில், மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப் படும், சிரியாவின் "அல்கைதா விடுதலைப் போராளிகள்", சிரிய கிறிஸ்தவப் பெண் ஒருவரை வன்புணர்ச்சி செய்து, கோரமாக கொலை செய்த காட்சி. இந்த செய்திகள், உலகில் எந்த கிறிஸ்தவரது மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், சிரிய அரச படைகளும், கிளர்ச்சிக் குழுக்களும் மனித உரிமைகளை மீறுவதுடன், பொது மக்களையும் துன்புறுத்தி, பலி வாங்கி வருவதும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள். போரில் ஈடுபடும் இரண்டு தரப்பினரும் பாரிய போர்க்குற்றங்களை புரிந்துள்ளன. ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே உலகிற்கு தெரிவித்து வருகின்றன.
சிரிய உள்நாட்டுப் போருக்கு காரணமான, மத ரீதியிலான சமூகப் பிரிவினைகள், அவற்றிருக்கு இடையிலான முரண்பாடுகள் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. கிறிஸ்தவ சிறுபான்மையினர் சிரியாவின் அசாத் அரசை ஆதரவளிப்பதால், கிறிஸ்தவ மக்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் வேட்டையாடிக் கொலை செய்யப் படுகின்றனர். அல்கைதா தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. ஆனால், "கிறிஸ்தவ நாடுகள்" என்று கருதப்படும் மேற்கத்திய நாடுகள், சிரிய கிறிஸ்தவர்களின் அவலங்களை புறக்கணித்து வருவதுடன், தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாத அல்கைதா தீவிரவாதிகளை ஆதரித்து வருகின்றன. உலகத்தில் எங்காவது கிறிஸ்தவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால், "கிறிஸ்தவ நாடுகள்" தட்டிக் கேட்கும் என்ற மாயை இங்கே உடைக்கப் படுகின்றது.
*****************
சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்ந்தால், அங்கே அல்கைதா ஆட்சியை கைப்பற்றி விடும். அதற்குப் பிறகு, இஸ்ரேல் மீதான ஜிகாத் அறிவிக்கப் பட்டாலும் ஆச்சரியம் இல்லை. முகம் தெரியாத பிசாசை விட, இவ்வளவு காலமும் பழகிய பிசாசே பரவாயில்லை என்ற முடிவுக்கு இஸ்ரேலிய இராணுவம் வந்துள்ளது. ஆசாத் அரசு பலவீனமாக இருந்தாலும், இஸ்ரேலுடன் சமாதானமாக இருக்கும் என்று நினைக்குமளவிற்கு நிலைமை வந்துள்ளது. இதைத் தான், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது என்று சொல்வார்கள்.
எகிப்தில் ஆட்சியில் இருப்பதைப் போன்ற, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி சிரியாவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அது ஆசாத் (இன்றைய அதிபரின் தந்தை) காலத்தில் தடை செய்யப் பட்டிருந்தது. எண்பதுகளில், ஹோல்ம்ஸ் நகரில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சி, ஈவிரக்கமின்றி நசுக்கப் பட்டது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் சகோதரக் கட்சி உறுப்பினர்கள் மாண்டனர். அதற்குப் பிறகு, அந்தக் கட்சி தலைமறைவாக இயங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக, சிரியாவில் பெரும்பான்மை சமூகமான சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் அதன் ஆதரவுத்தளம் இருந்தது.
2010 ல் சிரிய அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி இடம்பெற்றது. அந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் சகோதரத்துவ கட்சி பயன்படுத்திக் கொண்டது. அப்போது உருவான ஆயுதக் குழுவுக்கு, சவூதி அரேபியாவும், கட்டாரும் நிதியும், ஆயுதங்களும் வழங்கின. இதே நேரம், ஆயுதக் குழுக்கள் இயங்கவும், பயிற்சி பெறவும், துருக்கி இடம் கொடுத்தது. எண்பதுகளில் நடந்ததைப் போன்று, 2010 போராட்டமும், சுன்னி முஸ்லிம்களின் எழுச்சியாக கருதப் பட்டது. (ஷியா, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிரியர்கள், அந்தக் கிளர்ச்சியில் பங்கு பற்றவில்லை. அவர்கள் இன்றைக்கும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர்.)
2010 ல் சிரிய அரசுக்கு எதிரான, சுன்னி முஸ்லிம் சமூக போராளிகளின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தமது சமூகத்தை சேர்ந்த போராளிகளை எதிர்த்து போரிட விரும்பாத, சிரிய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய சுன்னி முஸ்லிம் இராணுவ வீரர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருந்தது. சிரியா இராணுவத்தில் இருந்த, கணிசமான அளவு சுன்னி முஸ்லிம் அதிகாரிகளும், படைவீரர்களும் துருக்கிக்கு தப்பி ஓடினார்கள். அவர்கள் அங்கிருந்து "சுதந்திர சிரியா இராணுவம்" (FSA) என்ற பெயரில் இயங்கினார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் எதிர்பார்க்கப் பட்டது போன்று, சிரிய சுதந்திர இராணுவம், பலமான எதிர்ப்புச் சக்தியாக உருவெடுக்கவில்லை.
சிரியா அரசுக்கு எதிராக போராடும் போராளிக் குழுக்களுக்கு, தாராளமாக நிதி, ஆயுதங்களை அள்ளி வழங்க பல வெளிநாடுகள் முன்வந்தன. இந்த வெளிநாட்டு நிதி, ஆயுதங்கள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஈராக்கிய அல்கைதா சிரியாவிற்குள் ஊடுருவியது. பின்லாடனின் அல்கைதாவும், ஈராக் அல்கைதாவும் ஒன்றல்ல. ஈராக் அல்கைதா, அந்த நாட்டு சுன்னி முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்திய அமைப்பு. பின்லாடனின் அல்கைதாவின் அரசியல் கொள்கைகளை வரித்துக் கொண்டனர். அதில் முக்கியமானது, முதலாம் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட பிரிட்டிஷ் - பிரெஞ்சு ஒப்பந்தம் (Syces - Picot Agreement.).
முதலாம் உலகப்போரின் முடிவில் தான், இன்றுள்ள சிரியா, ஈராக் என்ற தேச எல்லைகள் பிரிக்கப் பட்டன. எல்லை பிரிப்பது குறித்து, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரபு மக்களுடனோ, அவர்களின் பிரதிதிகளுடனோ கலந்தாலோசிக்கப் படவில்லை. அதைக் காரணமாக காட்டும் அல்கைதா, அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அதனால், ஈராக் நாட்டை மட்டுமல்ல, சிரியாவையும் சேர்த்து அரசமைப்பது அவர்களின் எதிர்கால இலட்சியம். ஈராக்கிய அல்கைதா, அல் நுஸ்ரா (Jabhat al-Nusra) என்ற பெயரில் சிரியாவில் களமிறங்கியது.
அது ஒரு அல்கைதா பாணி இயக்கம். அதன் அர்த்தம், அந்த இயக்கத்தில் எந்த நாட்டவரும் உறுப்பினராக சேரலாம். அதனால், சர்வதேச ஜிகாதிகளையும் ஒன்று சேர்க்க முடிந்தது. குறிப்பாக லிபியாவில் கடாபிக்கு எதிராக போரிட்ட போராளிகள் சிரியாவில் வந்து குவிந்தார்கள். ஆட்பலம் ஆயுத பலம் மிக்க அல் நுஸ்ரா, பல இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. சிரியா, லெபனானில் வாழும் மக்களுக்கு இந்த விபரங்கள் தெரியும். ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் சிரியாவில் அல்கைதாவின் இருப்பை மூடி மறைத்து வந்தன. அல் நுஸ்ரா பெற்ற போர்க்கள வெற்றிகளை, FSA பெற்ற வெற்றிகள் என்று திரித்துக் கூறினார்கள். ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இளைஞர்களும், சிரியாவில் போரிடுவது பற்றிய தகவல்கள், அண்மைக் காலமாக வெளிவருகின்றன. அதற்குப் பிறகு தான், சிரியாவில் அல் நுஸ்ரா என்ற அல்கைதா பாணி இயக்கம் இருக்கின்றது என்ற உண்மையை ஒத்துக் கொள்ளவாரம்பித்தன.
"அல்கைதாவும், அமெரிக்காவும் எதிரிகள்" என்று நம்பும் அப்பாவியா நீங்கள்? அமெரிக்க இராணுவத்தின், இரகசியமான துணைப்படை தான் அல்கைதா என்பது, ஏற்கனவே பல தடவைகள் நிரூபிக்கப் பட்ட விடயம். ஒரு முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர். இப்போது, Al Nusrah ல் சேர்ந்து போராடி வருகின்றார். Eric Harroun என்ற 30 வயது இளைஞர், முஸ்லிமாக மதம் மாறி, சிரியாவின் "விடுதலைப் போராட்டத்தில்" பங்கெடுத்து வருகிறார். சிரிய தீவிரவாதக் குழுக்கள் மத்தியில், "அமெரிக்கன்" என்று செல்லமாக அழைக்கப் பட்டவர். ஆனால், இவர் மட்டுமே ஒரேயொரு அமெரிக்கர் அல்ல. இன்று வரையில், எத்தனை அமெரிக்கர்கள் சிரிய அல்கைதாவில் சேர்ந்து போரிடுகிறார்கள் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.
Eric Harroun சிரியாவிலும், அமெரிக்காவிலும் பிரபலமாக அறியப்பட்ட ஒருவர். அதற்கு காரணம், சிரிய படைகளுக்கு எதிரான பல தாக்குதல்களில் பங்குபற்றியிருக்கிறார். சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதைக் காட்டும் வீடியோ ஒன்றில், இவர் தலையைக் காட்டுகிறார். அதைத் தவிர, இன்னொரு வீடியோவில், சிரிய அதிபர் ஆசாத்திற்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் விடுக்கின்றார். (அந்த Youtube வீடியோக்களை இணைத்துள்ளேன்) சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில், சில தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும், எரிக் ஹரூனும் அவர்களில் ஒருவர் என்று சிரிய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தான் இன்னும் சாகவில்லை என்று, Eric Harroun பேஸ்புக் மூலம் அறிவித்துள்ளார். மேலும், தான் Al Nusrah வில் சேரவில்லை என்றும், (மதச்சார்பற்ற) FSA வில் சேர்ந்திருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆயினும், சுதந்திர சிரிய இராணுவம் என்ற FSA, முழுக்க முழுக்க முன்னாள் சிரிய படையினரையும், சிரிய பிரஜைகளையும் கொண்ட படை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த அமெரிக்கர் போன்ற வெளிநாட்டு போராளிகள், பொதுவாக அல்கைதாவின் கிளை அமைப்பான Al Nusrah போன்ற இயக்கங்களில் சேர்வது ஊரறிந்த இரகசியம் ஆகும். அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறதென்பது இன்றைக்கும் பலருக்குத் தெரியாது. அதனால், ஏதாவது பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.
சிரியாவில் போரிட்ட இன்னொரு அமெரிக்கர் பெயரும் ஊடகங்களில் அடிபட்டது. Matthew VanDyke என்ற பெயரை உடைய அந்த அமெரிக்கர், தான் ஒரு "ஊடகவியலாளர்" என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார். இவர் முன்பு லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போரிட்டவர். அங்கே வேலை முடிந்தவுடன் சிரியா வந்து விட்டார். இவரது புகைப்படமும், சிரிய அரச ஊடகங்களில் பிரசுரிக்கப் பட்டதால் தான், வெளியுலகம் இவரைப் பற்றி அறிந்து கொண்டது. இவர்களைப் போல இன்னும் எத்தனை அமெரிக்கர்கள், அல்கைதா தீவிரவாதிகள் என்ற பெயரில் உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ? அந்த ஒபாமாவுக்கே வெளிச்சம்!
(US Army veteran fighting with al Qaeda, http://www.longwarjournal.org/videos/2013/03/us_army_veteran_fighting_with.php)
(Message from U.S. Mujahid in Syria to Bashar al-Assad, http://www.youtube.com/watch?v=2SEdheC8Yq4&feature=player_embedded)
சிரியாவில் இன்னொரு ஆப்கானிஸ்தான் உருவாகின்றது. சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆயுதபாணி இயக்கங்கள், அல்கைதா போன்ற தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் என்பது தெரிந்ததே. அந்த இயக்கங்களுக்கு, அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அயல்நாடான ஜோர்டானில் வைத்து, அல்கைதா போன்ற இயக்கங்களுக்கு, அமெரிக்க படைகள் இராணுவப் பயிற்சி அளிக்கின்றன. சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் இயக்கங்களில், வெளிநாட்டு போராளிகள் பெருமளவில் போரிடுவதாக சிரிய அரசு குற்றஞ்சாட்டி வந்தது. குறிப்பாக, லிபியா, ஈராக், எகிப்தை சேர்ந்த தொண்டர் அணிகள், சிரியாவில் போரிட்டு வருகின்றன. இந்த செய்திகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்தவை தான். ஆனால், அதனை மேற்குலக நாடுகள் மறுத்து வந்தன.
தற்போது, மேற்குலக நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் சிரியாவில் போரிடுவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. பிரிட்டனை சேர்ந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே நேரம், ரஷ்யாவில் இருந்தும் பெருமளவு செச்னிய இளைஞர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் எல்லாம், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நடந்ததை நினைவுபடுத்துகின்றன. எண்பதுகளில், சோவியத் படைகளினால் பாதுகாக்கப்பட்ட ஆப்கான் சோஷலிச அரசுக்கு எதிராக முஜாஹிதீன் இயக்கங்கள் போராடி வந்தன. அன்றும், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியளித்து வந்தன. அன்றும், பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து தொண்டர் அணிகள், ஆப்கானிஸ்தானில் போரிட்டன. ஆப்கான் போர் முடிந்ததும், வெளிநாட்டு போராளிகள் தமது தாயகங்களுக்கு திரும்பி வந்து, தமது அரசுகளுக்கு எதிரான ஜிகாத் போராட்டங்களை நடத்தினார்கள். இவை எல்லாம் வரலாறு.
இன்று வரலாறு திரும்புகின்றது. அமெரிக்கா அன்று ஆப்கானிஸ்தானில் விட்ட அதே தவறை, இன்று சிரியாவில் விடுகின்றது. இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், சிரியா எல்லையில் இஸ்ரேல் இருக்கின்றது. நாளை, சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்த பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போகும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், இஸ்ரேலுக்கு எதிராக தமது ஆயுதங்களை திருப்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? ஒருவேளை, சிரியாவை சேர்ந்த போராளிகள் தயங்கினாலும், வெளிநாட்டு ஜிகாதிகள் இஸ்ரேலுக்கு எதிரான போரை நடத்தப் போகின்றார்கள். இஸ்ரேலிய இராணுவத்திற்கு அது தெரியாமல் இல்லை. அதனால் தான், "முன் பின் பழக்கமில்லாத பிசாசுகளை விட, ஆசாத் போன்ற தெரிந்த பிசாசு ஆட்சியில் இருப்பதே உத்தமம்..." என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளே கூறுமளவிற்கு நிலைமை உள்ளது.
**********
சிரியா பற்றிய முன்னைய பதிவுகள்: