Showing posts with label துருக்கி. Show all posts
Showing posts with label துருக்கி. Show all posts

Sunday, November 21, 2021

துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்!

 


துருக்கியில் ஒரு கம்யூனிஸ்ட் மேயர்! துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியை(TKP) சேர்ந்த Fatih Mehmet Maçoğlu கிழக்கு துருக்கியில் உள்ள துன்செலி (Tunceli) உள்ளூராட்சி சபை மேயராக இருக்கிறார். இவரது ஆட்சியில் பல சோஷலிச பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 

சுமார் 33000 பேரை சனத்தொகையாக கொண்ட துன்செலியில் சிறுபான்மையின குர்திஷ், அலாவி, ஆர்மீனிய மக்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். அங்கே வேலையில்லாதோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

கடந்த தேர்தலில் Mehmet Maçoğlu மேயராக தெரிவானார். அவர் தனது முதலாவது கடமையாக வேலையில்லா பிரச்சினையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன் படி கூட்டுறவுப் பண்ணைகள் உருவாக்கப் பட்டன. தற்போது அந்த பண்ணைகளில் உற்பத்தியாகும் மிதமிஞ்சிய தேன் துருக்கி முழுவதும் ஏற்றுமதியாகிறது.

இதைத் தவிர நகர எல்லைக்குள் இலவச பொதுப் போக்குவரத்து சேவை, இலவச தண்ணீர் விநியோகம் செய்து கொடுக்க பட்டுள்ளது. அத்துடன் ஏழைகளுக்கான சலுகைகள் வழங்க படுகின்றன. வெளிநாடுகளில் வாழும் இடதுசாரி துருக்கியரும் சமூக நலத் திட்டத்திற்கு நிதியுதவி செய்துள்ளனர்.

துருக்கியின் ஒரேயொரு கம்யூனிச மேயரின் சாதனைகளை கேள்விப்பட்ட பலர், கடந்த காலத்தில் தாம் கொண்டிருந்த கம்யூனிசம் தொடர்பான தப்பெண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.

Wednesday, July 27, 2016

துருக்கியில் முறியடிக்கப் பட்ட இராணுவத்தின் சதிப்புரட்சி ஒத்திகை


துருக்கியில் நடந்த இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்துள்ளது. சதிப்புரட்சி பற்றிய தகவல்கள் உலகம் முழுவதும் வலம் வந்த போதிலும் உண்மையில் அங்கே என்ன நடந்தது என்பது தெளிவாவாவதற்கு ஒரு நாள் எடுத்தது. இருப்பினும், இதை எழுதிக் கொண்டிருக்கும் வரையில், சதிப்புரட்சியை நடத்தியவர்களின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. துருக்கி அரசு கூட ஊகங்களின் அடிப்படையில் தான் செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தது.

15 ஜூலை, துருக்கி நேரம் இரவு ஒன்பதரை மணியளவில், இஸ்தான்புல், அங்காரா போன்ற முக்கிய நகரங்களில் பெரும‌ள‌வு இராணுவ‌த்தின‌ர் குவிக்க‌ப் பட்டனர். இலட்சக் கணக்கான மக்கள் வசிக்கும் இரண்டு நகரங்களின் மீதும், போர் விமானங்கள் வட்டமிட்டன. யாரும் பயந்த படி குண்டு போடவில்லை. ஆனால், ஹெலிகாப்டர்களில் இருந்து சுட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்தன. தலைநகர் அங்காராவில், பாராளுமன்றம், அமைச்சுக்கள், அரசு அலுவலகங்கள், ஊடக நிறுவனங்கள் யாவும் இராணுவக் கட்டுப்பாட்டில் வந்தன. தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து சதிப்புரட்சியை பிரகடனம் செய்த இராணுவத்தினர், தாம் ச‌ர்வ‌தேச‌ ச‌ட்ட‌ங்க‌ளுக்கு ம‌திப்புக் கொடுப்ப‌தாக‌ தெரிவித்த‌ன‌ர்.

இஸ்தான்புல் ச‌ர்வதேச‌ விமான‌ நிலைய‌ம் மூட‌ப் பட்டிருந்தது. வெளிநாட்டு, உள்நாட்டு விமான‌ சேவைக‌ள் அனைத்தும் இர‌த்து செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. விமான‌ நிலைய‌த்தில் யுத்த‌ தாங்கிக‌ள் நிறுத்த‌ப் பட்டிருந்தன. இஸ்தான்புல் நநகரில் காவ‌ல்துறையின‌ர் எதிர்ப்புக் காட்டி உள்ள‌ன‌ர். இராணுவத்தினருக்கும், பொலிசாருக்கும் இடையில் நடந்த சண்டையில் பலர் கொல்லப் பட்டனர். சில மணி நேரத்தின் பின்னர், அதாவது சதிப்புரட்சி தோல்வியுற்றதும், இராணுவத்தினர் பொலிசாரிடம் சரணடைந்தனர்.

அன்றைய சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களில் பெரும்பான்மையானோர் இருபது வயது மதிக்கத் தக்க இளைஞர்கள். பலருக்கு என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை. தாம் ஒரு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப் படுவதாக நம்பினார்கள். இதுவும் ஓர் ஒத்திகை என்று நினைத்தார்கள். அதனால் தான், சதிப்புரட்சி தோல்வியடைந்த நேரம் மக்களைத் தாக்காமல் சரணடைந்தார்கள். சதிப்புரட்சியாளர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப் பட்டு மரண தண்டனை விதிக்கப் படலாம்.

தலைநகரில் சதிப்புரட்சி நடந்த நேரம், ஜ‌னாதிப‌தி எர்டோக‌ன் தென் துருக்கியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமான மார்மாரிஸ் நகரில் இருந்தார். ஆளும்கட்சியான, அவ‌ர‌து AK க‌ட்சிக்கு எதிராக‌வே ச‌திப்புர‌ட்சி ந‌ட‌ந்துள்ள‌து. இராணுவ‌த்தின‌ர், அங்காரா ந‌க‌ரில் AK க‌ட்சி த‌லைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தனர். தனது ஆட்சிக் காலம் முழுவதும் மக்கள் போராட்டங்களை சகித்துக் கொள்ளாத ஜனாதிபதி எர்டோகன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்து விட்டது என்றதும், மக்களை வீதிக்கு வந்து போராடுமாறு அறைகூவல் விடுத்தார்.

தொலைக்காட்சி நிலையம் ஒன்று ஸ்கைப் மூலம் உரையாடிய ஜனாதிபதியின் பேச்சை நேரடி ஒளிபரப்புச் செய்தது. எர்டோகனின் அறைகூவலை செவி மடுத்த அவரது கட்சி ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி சதிப்புரட்சியாளர்களுக்கு எதிராக சவால் விட்டனர். யுத்த தாங்கிகளை துணிச்சலுடன் எதிர்த்து நின்றனர். "இராணுவ சதிப்புரட்சி மக்கள் சக்தி மூலம் முறியடிக்கப் பட்டதாகவும், இராணுவத்தினர் மக்களைக் கொல்லவில்லை..." என்று ஊடகங்களில் தெரிவிக்கப் பட்டதில் ஒரு பகுதி உண்மை தான் உள்ளது.

உண்மையில் சதிப்புரட்சியின் போது இரத்தக் களறி ஏற்பட்டது. இராணுவம் மக்களை நோக்கி சுட்டது. அதில் பல பொது மக்கள் மரணமடைந்தனர். இதைத் தவிர, பொலிசாருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சமரில், இரண்டு தரப்பிலும் பலர் கொல்லப் பட்டனர். சதிப்புரட்சியின் விளைவாக, மொத்தம் 260 பேர் மரணமடைந்ததாக ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதிப்புரட்சி தோல்வியடைந்ததற்கு இன்னொரு காரணம் துருக்கி இராணுவம்! ஆமாம், தொண்ணூறு சதவீத படையினர் சதிப்புரட்சியில் பங்குபற்றவில்லை. அன்று இரவே, "இராணுவ‌த்தில் ஒரு பிரிவின‌ர் ம‌ட்டுமே ச‌திப்புர‌ட்சியில் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டுள்ள‌தாக‌" பிர‌த‌ம‌ர் யில்ட்ரிம் (Yildrim) தெரிவித்திருந்தார். அது உண்மை தான். படையினரே சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை தெருவில் பிடித்து வைத்து அடித்து உதைக்கும் காட்சிகளை அடுத்த நாள் காணக் கூடியதாக இருந்தது.

இதில் இன்னொரு முக்கிய விடயத்தையும் கவனிக்க வேண்டும். துருக்கியில் 1960 - 1980 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மூன்று தடவைகள் இராணுவ சதிப்புரட்சிகள் நடந்துள்ளன. பல வருட காலம் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்துள்ளது. நவீன துருக்கியின் சிற்பியாக கருதப் படும், "தேசப் பிதா" கெமால் அட்டா துர்க் காலத்தில் இருந்து, துருக்கியில் இராணுவம் ஒரு பலமான ஸ்தாபனம். ஜனநாயக தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப் படும் அரசாங்கங்கள் இராணுவத்துடன் சமரசமாகப் போகவே விரும்பும்.

துருக்கியில் மேலைத்தேய கலாச்சாரத்தை புகுத்தி, அதை ஒரு சராசரி ஐரோப்பிய நாடாக்கிய பெருமை அட்டா துர்க்கையே சேரும். துருக்கி அரசு மதச்சார்பின்மையை கறாராக பின்பற்ற வேண்டும் என்பது அவர் உத்தரவு. அதை இன்றைக்கும் நடைமுறைப் படுத்தி வரும் அரச இயந்திரம் இராணுவம் தான். இஸ்லாமியவாத எர்டோகன், பல தடவைகள் மத நம்பிக்கை சார்ந்த சட்டங்களை கொண்டு வர முயன்றார். அப்போதெல்லாம் இராணுவம் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. ஆனால், இந்த தடவை எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதிப்புரட்சியை இராணுவம் ஆதரிக்கவில்லை.

ஆகவே, தற்போது நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, சதிப்புரட்சிக்கு மக்கள் மட்டுமல்ல, துருக்கி இராணுவம் கூட ஆதரவளிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. அப்படியானால் சதிப்புரட்சியை நடத்தியவர்கள் யார்? நிச்சயமாக இராணுவத்தில் ஒரு சிறு பிரிவினர் தான். ஆனால், அவர்களது நோக்கம் என்ன? பின்னணியில் வேறு யார் இருந்துள்ளனர்? இவை இன்னும் மர்மமாகவே உள்ளன.

சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், அதில் ஈடுபட்ட எட்டு இராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தப்பியோடி கிரீசில் தரையிறங்கி உள்ளனர். (இஸ்தான்புல் நகரில் இருந்து கிரேக்க நாட்டு எல்லை சில மைல் தூரம் தான்.) அவர்கள் அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். கிரேக்க அரசு அவர்களை கைது செய்து விட்டு, ஹெலிகாப்டரை துருக்கிக்கு திருப்பி அனுப்பி விட்டது. ஆனால், அரசியல் தஞ்சம் கோரிய படையினர் திருப்பி அனுப்பப் படுவார்களா என்பது தெரியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் மாதிரித் தான், கிரீஸ், துருக்கிக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளும் உள்ளன.

துருக்கியில் இது வ‌ரையில் ஜெனர‌ல்க‌ள் உட்பட‌ இர‌ண்டாயிர‌த்திற்கும் அதிக‌மான‌ ப‌டையின‌ர் கைது செய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். குறிப்பாக இரண்டாம் படைப்பிரிவு தளபதி ஆதம் ஹுடுத்தி (Adem Huduti), மூன்றாம் படைப்பிரிவு தளபதி எர்டல் எஸ்துர்க் (Erdal Öztürk) ஆகிய தளபதிகளும் கைது செய்யப் பட்ட பெரிய தலைகள் ஆவார்கள். மூன்றாம் படைப்பிரிவு இஸ்தான்புல் மாநகர காவலுக்கும், இரண்டாம் படைப்பிரிவு சிரியா எல்லைக் காவலுக்கும் பொறுப்பான இராணுவப் பிரிவுகள் ஆகும். மேலும், 2745 நீதிப‌திக‌ளும், 140 ச‌ட்ட‌மா அதிப‌ர்க‌ளும் கைது செய்யப் பட்டவர்களில் அடங்குவார்கள். இன்னும் ப‌ல‌ர் தேட‌ப் படுகின்ற‌ன‌ர்.

எர்டோகன் அரசு எதற்காக நீதிபதிகளை கைது செய்ய வேண்டும்? அரசு, அரசாங்கம் என்பவற்றிக்கு எதிரான வித்தியாசங்களை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தேர்தலில் வெற்றி பெறும் கட்சி அரசாங்கம் அமைத்தாலும், அது விரும்பும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு தடையாக அரசு இருக்கலாம். நீதிபதிகள் போன்றோர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படாத அரசுப் பிரதிநிதிகள். அப்படியானவர்களை அப்புறப் படுத்தினால், தான் விரும்பும் இஸ்லாமிய மதச் சார்பான மாற்றங்களை கொண்டு வரலாம் என்பது எர்டோகனின் நோக்கம்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சிரியா எல்லைக்கு அருகில் உள்ள இன்சிரில்க் (Incirlic) விமானப் படைத் தளத்தை சேர்ந்தவர்களே இராணுவ சதிப்புரட்சியின் சூத்திரதாரிகள் என்று ஒரு சந்தேகம் நிலவுகின்றது. அங்கிருந்து தான் சதிப்புரட்சிக்கு திட்டம் தீட்டப் பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப் படுகின்றது. இதனால், இன்சிரில்க் முகாம்மு சுற்றிவளைக்கப் பட்டது. முகாமுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப் பட்டது. அங்கிருந்த துருக்கிப் படையினர் விசாரணை செய்யப் பட்டனர். பலர் கைது செய்து காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

இன்சிரில்க் படைத்தளம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் ஒரு பகுதியில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியில் மொத்தம் 2,200 அமெரிக்கப் படையினர் நிலைகொண்டுள்ளனர். அவர்களில் 1,500 பேர் இன்சிரில்க் முகாமில் உள்ளனர். சிரியாவில் ISIS பிரதேசம் மீது குண்டு வீசும் அமெரிக்க விமானங்கள் இன்சிரில்க் படைத் தளத்தில் இருந்து தான் புறப்படுகின்றன.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் குய்லன் (Gülen) என்ற அரசியல் தலைவர் தான், தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு காரணம் என்று எடோகன் குற்றம் சாட்டுகின்றார். அவர் ஒரு "பயங்கரவாதி" என்றும், துருக்கிக்கு நாடு கடத்துமாறும் அமெரிக்க அரசை கோரியுள்ளார். ஆனால், அது நடக்குமா என்பது தெரியவில்லை. எர்டோகனும், குய்லனும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள்! தற்போது ஜென்மப் பகைவர்கள்!

தற்போது ஆளும்கட்சியான AK கட்சி, முதன்முதலாக 2002 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தமைக்கு குய்லன் முக்கிய காரணம். அவரது மேற்பார்வையின் கீழிருந்த குய்லன் இயக்கம் தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தது. ஆட்சியைப் பிடித்த பின்னர், எர்டோகனுக்கும், குய்லனுக்கும் இடையில் விரிசல் தோன்றியது. 

எர்டோகன் தீவிர இஸ்லாமியவாதியாக இருந்தது மட்டுமல்லாது, தனது சர்வாதிகார தலைமையின் கீழ் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முயற்சித்தார். அதற்கு மாறாக, குய்லன் மிதவாத இஸ்லாமியவாதியாக, பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆதரித்து வந்தார். இது மட்டுமே, AK கட்சியின் இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு. அதைத் தவிர வேறு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பின்தங்கிய நாடாக இருந்த துருக்கி, தொண்ணூறுகளுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி கண்டது. அப்போது தோன்றி வளர்ந்த தேசிய முதலாளிகளின் செல்வாக்கும் அதிகரித்தது. அவர்கள் தான் இஸ்லாமியவாத AK கட்சியின் நிதிப் புரவலர்கள். தேசிய முதலாளித்துவமும், இஸ்லாமியவாதமும் கையோடு கைகோர்த்து ஆட்சியைப் பிடித்தன. இருப்பினும் ஆளும் வர்க்கத்தின் உள்ளேயே பிளவுகள் தோன்றின. அவற்றில் குய்லன் ஆதரவுக் குழுவினர் முக்கியமானவர்கள். இது ஒரு கோஷ்டி மோதல். குய்லன் இயக்கம் என்பது, ஒரு சமூக அரசியல் அமைப்பாக, ஏராளமான உறுப்பினர்கள், ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.

துருக்கியர்கள் ஒரே மொழி பேசினாலும், அவர்கள் ஒரு பிளவு பட்ட சமுதாயம் தான். கொள்கை முரண்பாடு காரணமாக சிலநேரம் உறவினர்களும் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதில்லை. இடதுசாரிகளும், வலதுசாரிகளும் நேரில் கண்டால் கடித்து இரத்தம் குடிக்குமளவிற்கு வெறுப்பார்கள். அந்தப் பிரிவினை ஒரு புதினமல்ல. காலங்காலமாக இருந்து வருவது தான். ஆனால், இஸ்லாமியவாதிகள் (துருக்கி இடதுசாரிகள் அவர்களை "இஸ்லாமிய - பாசிஸ்டுகள்" என்றும் அழைக்கிறார்கள்) தமக்குள் பிளவு பட்டு அடிபடுவது ஒரு புதிய அரசியல் தோற்றப் பாடு என்று தான் சொல்ல வேண்டும்.

தோல்வியுற்ற சதிப்புரட்சிக்கு குய்லன் தான் காரணம் என்று எர்டோகன் சொல்வது உண்மையானால், இது ஆளும் வர்க்கத்திற்குள் தோன்றிய முரண்பாட்டின் விளைவு என்பது தெளிவாகின்றது. ஏனெனில், சதிப்புரட்சிக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினர், நீதித்துறையினரில் பெரும்பான்மையானோர் குய்லன் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

குய்லன் இயக்கம் ஒரு சாதாரணமான சமூக அமைப்பு அல்ல. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள மசூதிகள், பள்ளிக்கூடங்கள், வணிக நிலையங்கள் பல குய்லன் இயக்க ஆதரவாளர்களினால் நடத்தப் படுகின்றன. உண்மையில் இன்னும் சில சமூக அமைப்புகள் அவ்வாறு இயங்குகின்றன. ஆனால், எர்டோகனின் சர்வாதிகாரத்திற்கு சவாலாக இருப்பது குய்லன் இயக்கம் மட்டும் தான். பிரபல இஸ்லாமிய அறிவுஜீவியான பெதுல்லா குய்லன், அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் வாழ்ந்து வருகிறார்.

துருக்கி அமைச்ச‌ர் சொய்லு, "இராணுவ‌ ச‌திப்புர‌ட்சியில் அமெரிக்காவுக்கு ப‌ங்கிருக்கிற‌து" என்று தெரிவித்தார். இவ்வாறு துருக்கி அர‌சு ப‌கிர‌ங்க‌மாக‌ அமெரிக்காவை குற்ற‌ம் சாட்டிக் கொண்டிருந்தால், "இர‌ண்டு நாடுக‌ளுக்கும் இடையிலான‌ இராஜ‌த‌ந்திர‌ உற‌வில் விரிச‌ல் ஏற்ப‌டும்." என்று அமெரிக்க‌ அமைச்ச‌ர் கெரி எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க - துருக்கி உறவில் விரிசல் ஏற்படுமானால், அது எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். தற்போது நடந்துள்ள நடந்துள்ள இராணுவ சதிப்புரட்சி ஓர் ஒத்திகை மட்டுமே. ஆட்டம் இனித் தான் ஆரம்பமாகவுள்ளது. 

துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி தோல்வியடைந்ததும், மக்கள் சக்தி வெற்றி பெற்று விட்டதாக பலர் நினைக்கலாம். ஆனால், ஆட்சியாளர்கள் அப்படிக் கருதவில்லை. "சதிப்புரட்சி அபாயம் இன்னும் நீங்கவில்லை" என்று பிதமர் யில்ட்ரிம் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். 

வழமையாக இஸ்லாமியவாத AK கட்சியுடன் கொள்கை ரீதியாக முரண்படும், MHP (துருக்கி தேசியவாதிகள்), HDP (குர்திய உரிமைப் போராளிகள்) போன்ற எதிர்க்கட்சிகளும் சதிப்புரட்சியை கண்டித்துள்ளன. ஆனால், அமெரிக்க தூதுவராலயம் சதிப்புரட்சியை வரவேற்று அறிக்கை விட்டதாக சொல்லப் படுகின்றது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளும் "எர்டோகன் ஆட்சி கவிழ்க்கப் பட்டதற்கு" மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

துருக்கியில் நடந்த சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்கு என்ன? எர்டோகன் தன்னை ஒரு நவீன சுல்த்தானாக காட்டிக் கொள்வதும், ஓட்டோமான் சாம்ராஜ்யப் பெருமை பேசுவதும் மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை மாற்றும் உள்நோக்கம் கொண்டது. எர்டோகனின் இஸ்லாமியவாத அரசியல் கொள்கை அமெரிக்காவை எரிச்சலூட்டி வருகின்றது. 

ஐ.எஸ்., அல்கைதா போன்ற தீவிரவாதிகளை விட, எர்டோகன் போன்ற ஜனநாயகவாதிகள் ஆபத்தானவர்கள் என்று அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் எர்டோகனின் எதிரி குய்லன். இன்சிரில்க் இராணுவ தளத்துடன் தொடர்பு பட்டவர்களின் கைது. சிரியா எல்லைக் காவல் படைத் தளபதி கைது. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத் தான் வருகின்றது.

Wednesday, November 25, 2015

இஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) பாதுகாவலன் அமெரிக்கா : சில ஆதாரங்கள்

ரஷ்ய Su24 போர் விமானம், துருக்கி F16 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப் பட்டது. துருக்கி, சிரியா எல்லையில் நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு ரஷ்ய விமானிகளும் பாரசூட் மூலம் உயிர் தப்பினாலும் அவர்கள் பின்னர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

சுட்டு வீழ்த்தப் பட்ட ரஷ்ய விமானம், சிரியா வான் பரப்பின் மீது பறந்து கொண்டிருந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆயினும், அது தனது நாட்டுக்குள் பிரவேசித்ததாக துருக்கி கூறுகின்றது. அதை நிரூபிப்பதற்கு காட்டிய வரை படத்தில், இரண்டு கி.மீ. தூரமுள்ள பிரதேசம் உள்ளது. ரஷ்ய விமானம் அதைக் கடக்க வெறும் 17 செக்கண்டுகள் மட்டுமே எடுத்தது.

நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தக் காரணம் என்ன? அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கி, நீண்ட காலமாகவே ISIS உடன் தொடர்புகளை பேணி வந்தது. அதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. சிரியா யுத்ததில் காயமடைந்த ISIS போராளிகளுக்கு துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை அழிக்கப் பட்டது. கொபானியில் குர்திஷ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்திய ISIS படையணிகள், துருக்கியில் இருந்து சென்றுள்ளன.

ISIS தொடர்புகள் மூலம், துருக்கிக்கு பொருளாதார நன்மைகள் கிடைத்து வந்தன. சிரியாவின் ஒரேயொரு எண்ணை வளமுள்ள பகுதி, வருடக் கணக்காக ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் எண்ணை, பார ஊர்திகள் (Oil tanker) மூலம் துருக்கிக்கு கொண்டு செல்லப் படுகின்றது. சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு, துருக்கி சிரியா எண்ணையை வாங்கி வருகின்றது. (Turkey buying oil from Isis? Syrian army releases photos of captured tanker; http://www.ibtimes.co.in/turkey-buying-oil-isis-syrian-army-releases-photos-captured-tanker-656183 )

சிரியா போரில் ரஷ்யாவும் பங்கெடுக்கத் தொடங்கியதால், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும், இதுவரை காலமும் பாலைவனத்தில் குண்டு போட்டு விட்டு, "ISIS அழிப்பு போர் நடத்துவதாக" பம்மாத்து காட்டிக் கொண்டிருந்தன. ஆனால், ரஷ்ய விமானங்கள் ISIS நிலைகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தின. 

ISIS எண்ணை கடத்தி வந்த வாகனங்கள் மீதும் குண்டு போட்டதால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டது. தனக்கு கிடைத்து வந்த மலிவு விலை எண்ணை தடைப் பட்டதால் கோபமுற்ற துருக்கி, ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தி பழி தீர்த்திருக்கலாம். ஆனால், இதனால் ரஷ்யா சிரியா போரில் இருந்து பின்வாங்கி விடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் ISIS இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் வைத்திருக்கும் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு அமெரிக்காவே பாதுகாப்பு வழங்குகின்றது. சிரியாவில் ஆசாத் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் மேற்குலகினால் உருவாக்கப் பட்ட ISIS, துருக்கி போன்ற அயல்நாடுகளால் நேரடியாகவும், அமெரிக்காவினால் மறைமுகமாகவும் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. அமெரிக்காவும், ISIS உம் இணைபிரியாத நண்பர்கள் என்பதற்கு எத்தனை ஆதாரங்களை காட்டினாலும், சில மரமண்டைகளுக்கு உறைப்பதில்லை.

இதோ சமீபத்தில் கிடைத்த ஆதாரம் ஒன்று: 

ISIS, சிரியாவின் எண்ணையை திருடி, அதை பார ஊர்திகள் மூலம் கொண்டு சென்று துருக்கியில் விற்று வருவது தெரிந்த விடயம். கடந்த சில நாட்களாக, ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் ISIS கொண்டு சென்ற எண்ணைத் தாங்கி வாகனங்கள் எரிந்து நாசமாகின. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் தன் பங்கிற்கு, எண்ணை வாகனங்களை தாக்கி அழித்ததாக ஊடகங்களில் பீற்றிக் கொண்டது. ஆனால், உண்மையில் அங்கே நடந்ததோ வேறு கதை.

இந்த தடவை, தாக்குதல் நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவிக்கும் துண்டுப் பிரசுரங்களை, அமெரிக்க விமானம் ஒன்று ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வீசியுள்ளது. விமானத் தாக்குதல் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் போடப் பட்டுள்ளன. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. (Pentagon Confirms: Warning Pamphlets Dropped on Islamic State ‘to Minimize the Risks to Civilians’ http://freebeacon.com/national-security/pentagon-confirms-warning-pamphlets-dropped-on-islamic-state-to-minimize-the-risks-to-civilians/)

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ISIS படையணிகளுக்கு அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் பாதுகாப்பு வழங்குகிறது. ஈராக்கில் இருந்து ISIS படையணிகள், சிரியாவில் உள்ள ராக்கா போர்முனை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்னர், பட்டப் பகலில், ஏராளமான டொயாட்டா பிக்கப் வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட போதிலும், அவை அமெரிக்க செய்மதிகளின் கண்களுக்குத் தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.

Wednesday, April 01, 2015

இஸ்தான்புல் நகரை அதிர வைத்த கம்யூனிச கெரில்லாக்களின் நீதிமன்ற பணய நாடகம்

31 March 2015
துருக்கி, இஸ்தான்புல் நகர நீதிமன்றத்திற்குள் நுளைந்த ஆயுதபாணி நபர்கள், அரச தரப்பு வழக்கறிஞர் Mehmet Selim Kiraz பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு, குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

Revolutionary People's Liberation Party Front (DHKP-C) என்ற கம்யூனிச கெரில்லா இயக்க உறுப்பினர்களே இந்தச் சம்பவத்தில் சம்பந்தப் பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடக்குவதற்காக பொலிஸ் வன்முறை பிரயோகித்த நேரம், Berkin Elvan என்ற 13 வயது சிறுவன், கண்ணீர்ப் புகைக் குண்டு பட்டு காயமடைந்ததால் கொல்லப் பட்டான்.

தற்போது பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டுள்ள வழக்கறிஞர் அந்த வழக்கில் அரசுக்கு சார்பாக ஆஜராகியுள்ளார். சிறுவனின் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யா விட்டால், பணயக்கைதியை கொன்று விடப் போவதாக, ஆயுதபாணிகள் எச்சரித்துள்ளனர். காவல்துறையை சேர்ந்த நான்கு குற்றவாளிகளின் விபரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவர்களை மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


அரச தரப்பு வழக்கறிஞர், கம்யூனிச கெரில்லாக்களினால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப் பட்டிருக்கும் தகவலை கேள்விப் பட்டதை தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் மறியல் செய்த சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரின் Okmeydani பகுதியில், பெருமளவு இளைஞர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Okmeydani பகுதியில், கம்யூனிச கெரில்லாக்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மணிநேரமாக அந்தப் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பொலிஸ் வர விடாமல், தெருக்களை வழிமறித்து தடையரண்கள் போடப் பட்டிருந்தன.

பணயக் கைதியை விடுவிப்பதற்கு, பொலிஸ் ஆறு மணிநேரமாக பேரம் பேசியதாகவும், இறுதியில் பெரும் பொலிஸ் பட்டாளம் ஒன்று நீதிமன்ற கட்டிடத்தினுள் நுளைந்து ஆயுதபாணிகளை கொன்று விட்டதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பணயக்கைதியான அரச தரப்பு வழக்கறிஞர் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காரணமாக இறந்தார். நீதிமன்ற தாக்குதலை சம்பவம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த, DHKP-C ஆதரவு டிவிட்டர் கணக்குகள் தடை செய்யப் பட்டுள்ளன. 

துருக்கி பத்திரிகை ஒன்று, DHKP-C கம்யூனிச போராளிகளுடன் மேற்படி சம்பவம் பற்றி பேட்டி கண்டு எழுதியுள்ளது:
Interview with the militants: “Our barrels will bring justice”


இது  தொடர்பான முன்னைய பதிவுகள்:
துருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்
"துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி

Monday, November 17, 2014

மக்களின் மின்சாரக் கடன்களை இல்லாதொழித்த மார்க்சிய ஹேக்கர்கள்!



நீங்கள் நீண்ட காலமாக கட்ட முடியாமல் கஷ்டப் படும் மின்சாரக் கடன் பாக்கி, திடீரென ஒரு நாள் மின்சார சபையின் கணனியில் இருந்து அழிக்கப் பட்டால், எவ்வளவு சந்தோஷப் படுவீர்கள்? பல்லாயிரக் கணக்கான துருக்கி மக்களுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 

துருக்கியில் ரொபின் ஹூட் பாணியில் இயங்கும், கம்யூனிச ஹேக்கர் அமைப்பான ரெட் ஹேக், கோடிக் கணக்கான டாலர் மின்சாரக் கடன் பாக்கியை அழித்து விட்டுள்ளது. (http://www.techworm.net/2014/11/redhack-hacks-turkeys-electric-distribution-company-website-delete-bills-worth-1-5-trillion-turkish-lira.html)

துருக்கி மின்சார சபையின் கணனிக் கோப்புகளுக்குள் நுளைந்து, சுமார் 1.5 ட்ரில்லியன் லீரா (668523705000.00 US Dollar ) தொகையை அழித்து விட்டது. இதனால் மின்சார விநியோக நிறுவனத்திற்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ரெட் ஹேக் அமைப்பு, தாங்கள் எவ்வாறு கோப்புகளை அழித்தோம் என்ற விபரத்தை, வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணைப்பு இங்கே: http://vimeo.com/111586164


Türkiye Elektrik İletim A.Ş. Hacked REDHACK from RedHack on Vimeo.


யார் இந்த ரெட் ஹேக்? துருக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புடைய, இளம் மார்க்சிய - லெனினிச கணனித் துறை நிபுணர்கள். 1997 ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகின்றனர். இது வரை காலமும், துருக்கி இராணுவம், காவல்துறை, புலனாய்வுத் துறை, தொலைத்தொடர்பு துறை போன்றவற்றின் இணையத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளனர். துருக்கி அரசு, ரெட் ஹேக் "ஒரு பயங்கரவாத இயக்கம்" என்று அறிவித்துள்ளது. ஆனால், துருக்கி மக்களுக்கு அவர்கள் "நவீன காலத்து ரொபின் ஹூட்கள்".

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
மக்கள் மனங்கவர்ந்த வங்கிக் கொள்ளைக்காரன்!


Saturday, November 08, 2014

கருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புரட்சி


பத்சா (Fatsa), கருங்கடலுக்கு அருகில் உள்ள துருக்கியின் ஒர்டு மாகாணத்தில் ஒரு நகரம். எழுபதுகளில், இருபதாயிரம் பத்சா வாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். உணவுக்கான சாக்லேட் களி செய்ய பயன்படும் மூலப் பொருளான hazel nut உற்பத்தியாகும் அரிதான இடங்களில் அதுவும் ஒன்று. விவசாயிகள் தவிர்ந்த ஏனையோர் மீனவர்கள்.

1965 ஆம் ஆண்டு, பத்சா நகரில், துருக்கி உழைப்பாளர் கட்சி (TIP) உருவாக்கப் பட்டது. உழைப்பாளர் கட்சியானது, மாணவர்கள், தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கம், விவாத அரங்கம் போன்றவற்றின் ஊடாக இயங்கத் தொடங்கியது. குறிப்பாக விவசாயிகள் சுரண்டப் படுத்தல், கந்து வட்டிகாரர்களின் கொடுமை, இடைத் தரகர்களின் மோசடி  போன்றவற்றை விவாதப் பொருளாக்கியது.

TIP கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, மஹிர் ஜயான் (Mahir Çayan)  தலைமையில், "மக்கள் விடுதலை இயக்கம் - துருக்கி முன்னணி" (THKP-C) ஸ்தாபிக்கப் பட்டது. துருக்கி, கோடீஸ்வர தொழிலதிபர்களினால் ஆளப்படுகின்றது என்றும், நவ- தாராளவாத பிடியின் கீழ் இருக்கிறது என்பதும் அவர்களது கொள்கையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தை அடக்க வேண்டுமானால், ஆயுதப் போராட்டம் அவசியம் என்பது அவர்களது பாதை. பத்சா நகரில் அந்த இயக்கத்திற்கு ஆதரவுத் தளம் இருந்தது.

12-5-1971 அன்று, துருக்கியில் ஒரு சதிப்புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியாளர்கள் புரட்சிகர இடதுசாரி சக்திகளை அடக்க முனைந்தனர். அதனால் THKP-C ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டது. இதே நேரம், இராணுவத்தினர் மூன்று இடதுசாரி மாணவர் தலைவர்களை (Deniz Gezmis, Hüseyin Inan, Yusuf Aslan) கைது செய்து தூக்கில் போட இருந்தனர்.

மாணவர் தலைவர்களின் மரண தண்டனையை தடுக்கும் நோக்கில், THKP-C கெரில்லாக்கள், நேட்டோ வில் வேலை செய்த மூன்று ரேடார் தொழில் நுட்ப நிபுணர்களை கடத்திச் சென்றனர். அவர்கள் கிசில்டேரே(Kizildere) எனும் கிராமத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். 30-3-1972 அன்று, அந்தக் கிராமத்தை படையினர் சுற்றி வளைத்தனர். இராணுவத்தினருடன் நடந்த மோதலில், ஜயான் உட்பட பத்து போராளிகளும், மூன்று நேட்டோ பயணக்கைதிகளும் கொல்லப் பட்டனர்.

இராணுவ சர்வாதிகார ஆட்சி, கிசில்டேரே தாக்குதல் காரணமாக, பத்சா கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. ஏனெனில், கொல்லப் பட்ட போராளிகளில் பலர் அந்த நகரத்தை சேர்ந்தவர்கள். எழுபதுகளின் மத்தியில், பாராளுமன்ற ஜனநாயகம் மீட்கப் பட்டு, அங்காராவில் சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது இராணுவ அடக்குமுறை ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட, இடதுசாரி ஆர்வலர்கள் பலர் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவர், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான "பிக்ரி சென்மெஸ்" (Fikri Sönmez). அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், பத்சா நகரில் ஒரு தையல்காரராக தொழில் புரிந்து வந்தவர்.

பிக்ரி சென்மெஸ் (Fikri Sönmez)

பிக்ரி சென்மெஸ், ஜோர்ஜிய மொழி பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர். அதனால் இன வேற்றுமைகளை கடந்து மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது. விடுதலையாகி வரும் பொழுது, அவரின் வயது 36 மட்டுமே. அதனால், இரண்டு தலைமுறைகளை சேர்ந்தவர்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தார். பத்சா உதைபந்தாட்ட கழகத்தின் நிறுவனராக இருந்தார். மேலும் மக்களைக் கவரும் பேச்சு வன்மை கொண்டவர்.  பிக்ரி சென்மெஸ், அடுத்து வரப் போகும் பத்சா நகர புரட்சியில் முக்கிய பாத்திரம் வகிக்க இருந்தார்.  

பிக்ரி சென்மெஸ், THKP-C இயக்கத்தின் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கினார். பத்சா விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிக பட்ச விலை நிர்ணயம் செய்தல், அரிதாகக் கிடைத்த பாவனைப் பொருட்களின் பதுக்கலை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தார்.

அந்தக் காலத்தில், துருக்கி கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்டிருந்தது. சீனி, மார்ஜரீன், சலவைத் தூள், சீமென்ட், சிகரட் போன்ற பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. வர்த்தகர்கள் அவற்றை பதுக்கி வைத்திருந்து, அதிக விலைக்கு விற்று வந்தனர்.

இடதுசாரி ஆர்வலர்கள், பதுக்கப் பட்ட களஞ்சிய அறைகளை உடைத்து, அந்தப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்தனர். விற்பனையில் கிடைத்த இலாபத்தை, சம்பந்தப் பட்ட வர்த்தகர்களிடம் கொடுத்தனர். இடதுசாரி இளைஞர்களின் இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, உள்ளூர் மக்கள் மத்தியில் சோஷலிசவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது.

எழுபதுகளின் மத்தியில், நாடு முழுவதும் இடதுசாரி அலை வீசியது. பத்சாவில் மட்டுமல்லாது, வேறு பல இடங்களிலும் பல்வேறு சோஷலிச, கம்யூனிச இயக்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. 

1971 ஆம் நடந்த இராணுவ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, மக்கள் இடதுசாரி கட்சிகளை ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். துருக்கியின் "ஜனநாயக அரசாங்கத்திற்கும்" அது ஒரு பெரும் தலையிடியாக இருந்தது. அன்று உலகம் முழுவதும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலமாகையினால், அதன் தாக்கம் துருக்கியிலும் உணரப் பட்டது. 

இடதுசாரிகளை அடக்குவதற்கு, ஆளும் வர்க்கத்திற்கு இன்னொரு இராணுவ சதிப்புரட்சி தேவைப் படவில்லை. அதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படைகளுக்கும், பாசிஸ இயக்கங்களுக்கும் இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டது. சாம்பல் ஓநாய்கள், தேசிய செயற்பாட்டுக் கட்சி (MHP) என்பன, அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாக இயங்க முன் வந்தன. 

இடதுசாரிகளின் கோட்டைகள் எனக் கருதப் படும் இடங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் திரியும் பாசிஸ காடையர்கள், இலக்கின்றி சகட்டுமேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். புரட்சிகர சோஷலிச இயக்கங்களின் உறுப்பினர்களை தேடிச் சென்று தாக்கினார்கள். தெருக்கள், பாடசாலைகள் போன்ற எந்தப் பொது இடத்திலும், இடதுசாரிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. அதனால், இடதுசாரி ஆர்வலர்கள், தற் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆதரவாளர்கள் குறைவான பகுதிகளில், தலைமறைவாக வாழ வேண்டி இருந்தது. அங்கெல்லாம் பாசிஸ இயக்கங்களின் கை ஓங்கியது. 

1977 ஆம் ஆண்டு, பத்சா நகரில் இயங்கிய மக்கள் குழுத் தலைவரும், சென்மெஸ்ஸின் கூட்டாளியுமான கெமல் கரா (Kemel Kara) படுகொலை செய்யப் பட்டார். அந்தக் கொலை மூலம், மக்கள் மனதில் பீதியை உண்டாக்கலாம் என்று பாசிஸ்டுகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், விளைவு அதற்கு மாறாக அமைந்தது. மக்கள் மத்தியில் பாசிஸ எதிர்ப்புணர்வு அதிகரித்தது. அதனால், பத்சாவை சேர்ந்த சாம்பல் ஓநாய்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக் கருதி ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

மேலும் 1977 ஆம் ஆண்டு படுகொலைச் சம்பவம், புதியதொரு புரட்சிகர இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. டெவ்ரிம்சி யொல் (Devrimci Yol: புரட்சிகர பாதை) எனும் பெயரிலான இயக்கத்தில், முன்னாள் THKP-C உறுப்பினர்கள் சிலருடன், மக்கள் குழுக்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்க வாதிகளும் அங்கம் வகித்தனர். 

டெவ்ரிம்சி யொல் துருக்கி முழுவதுக்குமான இயக்கமாக இயங்கியது. பத்சா நகரில் சென்மெஸ்ஸும், அவரின் தோழர்களும் முக்கிய பங்கு வகித்தனர். அது ஒரு மார்க்சிய இயக்கம் தான். ஆனால், பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து வேறு பட்டிருந்தது. அதாவது, டெவ்ரிம்சி யொல் சோவியத் யூனியனையோ, அல்லது சீனாவையோ பின்பற்றவில்லை. 

துருக்கி பற்றிய டெவ்ரிம்சி யொல்லின் அரசியல் நிலைப்பாடு இது: "துருக்கியில் முதலாளித்துவம் மேலிருந்து திணிக்கப் பட்டது. பிற்காலத்தில் வெளிநாட்டு உதவியுடன் நிலைநாட்டப் பட்டது. அந்தக் காரணத்தினால், துருக்கி முதலாளித்துவம் பலவீனமானதாகவும், நிலப்பிரபுத்துவ பிரச்சினைகளுடன் போராட வேண்டிய நிலையிலும் உள்ளது. ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தியங்கும், தொழிலதிபர்கள், நிலவுடமையாளர்கள், மேட்டுக்குடி வர்க்கத்தினர், துருக்கியில் முதலாளித்துவத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அந்த ஆளும் வர்க்கம், பாசிஸ்டுகளை அடியாட்படையாக வைத்துக் கொண்டுள்ளது. அதனால், பாசிஸ்டுகளை தோற்கடிப்பது சோஷலிச புரட்சிக்கு முன் நிபந்தனையாக உள்ளது."  

முந்திய THKP-C இயக்கத்திற்கும், பிந்திய டெவ்ரிம்சி யொல் இயக்கத்திற்கும் இடையில் ஒரு பிரதானமான கொள்கை வேறுபாடு இருந்தது. முன்னையது ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தது. பிந்தியது மக்கள் விழிப்புக் குழுக்கள் அமைத்து, மக்கள் போராட்டமாக மாற்ற விரும்பியது. முதலில் மக்கள் புரட்சிக் கமிட்டிகள் உருவாக்கி, பின்னர் தேவைப் பட்டால் அவற்றை ஆயுதபாணிகளாக்கலாம் என்றது. 

மக்கள் கமிட்டிகள், எதிர்கால சோஷலிச மாற்று சமூகத்திற்கான வித்துகள் என்று சொல்லப் பட்டது. மக்கள் தமது அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு பயிற்சிக் களமாக மக்கள் கமிட்டிகள் இருக்கும். குறிப்பாக, பத்சா நகரில், மக்கள் கமிட்டிகள் செயற்பட ஆரம்பித்தன. அங்கே பாசிஸ்டுகள் விரட்டப் பட்ட பின்னர், பெருமளவு மக்கள் ஆதரவு கிடைத்தது. 

1979 ஆம் ஆண்டு, பத்சா நகர சபையை நிர்வகித்த, சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மேயர் காலமானார். அதனால் அங்கே இடைத் தேர்தல் வந்தது. டெவ்ரிம்சி யொல் இடைத்தேர்தலில் பங்கெடுப்பதா, அல்லது பகிஷ்கரிப்பதா என்று விவாதம் நடந்தது. அரச அடக்குமுறைக்குள் சுதந்திரமான தேர்தல் நடக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, கட்சித் தலைமை முடிவு செய்தது. இருப்பினும், பத்சா நகரில் கணிசமான அளவு மக்கள் ஆதரவு இருந்த படியால், டெவ்ரிம்சி யொல் தேர்தலில் போட்டியிட்டது. 

டெவ்ரிம்சி யொல் ஒரு அங்கீகரிக்கப் பட்ட கட்சியாக இருக்கவில்லை. அதனால், சென்மெஸ் ஒரு சுயேச்சை உறுப்பினராக நிறுத்தப் பட்டார். பிற கட்சிகளின் வேட்பாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை விட வித்தியாசமாக, சென்மெஸ் நேரடி ஜனநாயகத்தை கொண்டு வரப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். 

நகர சபை நிர்வாகத்தில் ஊழல், அணைவு அரசியல், போன்ற தீமைகளை இல்லாதொழிப்பதற்கு மக்கள் கமிட்டிகள் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். 14-10-1979 அன்று நடந்த தேர்தலில், சென்மெஸ்  61சதவீத வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அவருடன் போட்டியிட்ட சமூக ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 22 சதவீத ஓட்டுக்கள் விழுந்தன. 

உள்ளூராட்சி சபைக்கான இடைத் தேர்தல் முடிந்தவுடனே, 11 மக்கள் கமிட்டிகள் உருவாக்கப் பட்டன. அவற்றின் பொறுப்பாளர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப் பட்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கமிட்டிக் கூட்டங்கள், வெளிப்படையாக நடத்தப் பட்டன. 

மக்கள் கமிட்டிக் கூட்டங்களில் நடக்கும் விவாதங்கள், நகரின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம், மக்கள் அனைவருக்கும் கேட்கும் வசதி செய்யப் பட்டது. மக்களின் பல்வேறு பிரச்சினைகள், தேவைகளுக்காக, தனித் தனி கமிட்டிகள் நியமிக்கப் பட்டன.    

மக்களின் பிரதான பிரச்சினைகளான, பாதைகளை செப்பனிடுவது, கால்வாய் அமைத்தல், குடி நீர் மற்றும் மின்சார விநியோகம், போன்றவற்றை கவனிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில், மக்கள் கமிட்டிகள் பரித்துரைக்கும் திட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு, "சட்ட பூர்வமான" நகர சபையின் அங்கீகாரம் தேவைப் பட்டது. 

அன்று நடைபெற்ற தேர்தல் மேயர் பதவிக்கானது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நகரசபை உறுப்பினர்களாக இருந்தனர். சமூக ஜனநாயகக் கட்சி பெருமளவு ஆசனங்களில் அமர்ந்திருந்தது. இருந்த போதிலும், மக்கள் கமிட்டிகள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். 

மேயர் சென்மெஸ், மாதத்திற்கு இரண்டு தடவைகள் மக்கள் கமிட்டிக்கு முன்னால் சமூகமளித்தார். நகர சபை நிர்வாகத்தில் நடக்கும் விடயங்கள் தொடர்பாக, கமிட்டியில் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் கூறும் பொறுப்பை ஏற்றிருந்தார். 

நகர சபையின் கீழ் வேலை செய்த அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக ஒரு பொது ஒப்பந்தம் போடப் பட்டது. புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DISK) முன்மொழிந்த ஊழியர் சம்பளத் திட்டம், துருக்கி முழுவதற்கும் முன்னுதாரணமாக விளங்கியது. உதாரணத்திற்கு, அரசியல் ஈடுபாடு தொடர்பாக ஓர் அரச ஊழியர் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் பட்டாலும், அவரது சம்பளம் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வழங்கப் படும். அதற்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு 25% கிடைத்துக் கொண்டிருக்கும். 

துருக்கியில் முன்னெப்போதும் கேள்விப் பட்டிராத நேரடி ஜனநாயகம், மக்களுக்கு புதுமையாக இருந்தது. உண்மையில், பத்சா நகரில் இரண்டு அதிகார மையங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. வழமையான அரச இயந்திரமான பொலிஸ், நீதிமன்றம் போன்றன அப்படியே இருந்தன. ஆனால், மக்கள் அவற்றின் உதவியை நாடுவது குறைந்து கொண்டே சென்றது. அதற்குப் பதிலாக, மக்கள் கமிட்டிகள் மக்களின் குறை, நிறைகளை கேட்டு நிவர்த்தி செய்தன. 

மக்கள் கமிட்டிகள் உள்ளூர் பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. முன்னர் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டிருந்த நிறுவனங்களை, மீண்டும் அரசுடமையாக்கியது. உதாரணத்திற்கு, குடிநீர், தானிய விநியோகம், பொதுப் போக்குவரத்து, துறைமுக மேற்பார்வை போன்றவற்றை குறிப்பிடலாம். அதனால், நகர சபைக்கு நிறைய வருமானம் கிடைத்தது. 

நீண்ட காலமாக, சட்டவிரோதமாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் தடை செய்யப் பட்டது. கந்துவட்டிக் காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டது. பத்சா நகரவாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள் என்பதால், வருடத்திற்கு ஒரு தடவை தான் பணத்தை கண்ணால் காண்பார்கள். அதாவது, அறுவடைக் காலத்தில் விளைச்சலை விற்றால் தான் பணம் கிடைக்கும். அதனால், இடைப்பட்ட காலத்தில் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி, அநியாய வட்டி கட்டிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகள் வாங்கிய கடனை மட்டுமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கமிட்டிகள் உத்தரவு பிறப்பித்தன. 

புரட்சியின் இன்னொரு முக்கியமான சாதனையாக, தெருக்கள் அமைத்ததை குறிப்பிடலாம். பத்சா நகரில் பெரும்பாலான தெருக்கள் செப்பனிடப் படாமல் இருந்தன. மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். அதனால், அவற்றை தார் போட்டு நிரப்பும் பணிகள் ஆரம்பமாகின. தெருக்களை புனரமைப்பதற்கு, ஆயிரக் கணக்கான தொண்டர்கள் தாமாகவே முன்வந்து வேலை செய்தனர். 

துருக்கியின் பல பாகங்களில் இருந்தும், புரட்சியாளர்கள் திரண்டு வந்தார்கள். அயலில் இருந்த நகரங்களில் இருந்தும், வாகன, உபகரண உதவி கிடைத்தது. அதனால், தொடங்கப் பட்டு சில வாரங்களிலேயே அனைத்து தெருக்களும் செப்பனிட்டு முடிக்கப் பட்டன. 

1980 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பத்சா நகரில் "மக்கள் பண்டிகை" அறிவிக்கப் பட்டது. நகர மத்தியில் மேடைகள் அமைக்கப் பட்டு, ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டம் நடைபெற்றது. துருக்கி முழுவதிலும் இருந்து பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட வெகுஜன கலாச்சாரத்திற்கு மாற்றாக, இடதுசாரி கலாச்சார விழுமியங்களை வெற்றிகரமாக மேடையேற்றினார்கள். 

நிச்சயமாக, துருக்கி அரசாங்கம் பத்சா புரட்சியை கலக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. தலைநகர் அங்காராவில் இருந்து, வெறும் 500 கிலோ மீட்டர் தூரத்தில் பத்சா இருந்தது. 1978 ம் ஆண்டு. ஜோரும், மாராஸ், ஆகிய இடங்களில், சாம்பல் ஓநாய் பாசிஸ்டுகள், அலாவி சிறுபான்மையின மக்களை படுகொலை செய்திருந்தனர். அந்த இனப்படுகொலை துருக்கியை உலுக்கி இருந்தது.

பிரதமர் டெமிரேல், அந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தி, பாசிஸ்டுகளை தூண்டி விடும் வகையில் உரையாற்றினார்: "ஜோருமை மறந்து விடுங்கள்... பத்சாவை பாருங்கள்... இப்போதே நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால், எதிர்காலத்தில் நூறு பத்சாக்கள் உருவாகும்."

அரசு நிறுவனங்கள், பத்சா நகர சபை நிர்வாகத்தின் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன. பெட்ரோல் போன்ற பொருட்களின் விநியோகம் தடுக்கப் பட்டது. ஆடிட்டர் பரிசோதகர்களை அனுப்பி, நகர சபை கணக்குகளை ஆராய்ந்தது.

இதற்கிடையே, முதலாளிய ஊடகங்கள் அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டன. பத்சாவில் "ஒரு குட்டி மொஸ்கோ" உருவாகி விட்டது என்று பதறின. அது ஒரு தனியான குடியரசாக பிரிந்து சென்று விட்டதாகவும், பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் அங்கே செல்ல முடியாதென்றும், கட்டுக்கதைகளை பரப்பின. 

நகர சபை கட்டிடம், காவல்துறையினரால் அடிக்கடி காரணமின்றி சோதனையிடப் பட்டது. அங்கு வேலை செய்த ஊழியர்கள் துன்புறுத்தப் பட்டனர். பத்சா நகரவாசிகள், அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு செல்லும் போதெல்லாம் தாக்கப் பட்டனர். அவர்கள் வைத்திருந்த பணம், பொருட்கள் வழிப்பறி செய்யப் பட்டன. பாசிஸ்டுகள் அவர்களைக் கண்டால் குண்டாந்தடிகளால் தாக்கினார்கள். 

பத்சா நகரம் அமைந்துள்ள, ஒர்டு மாகாணத்தின் ஆளுநராக, பாசிஸ MHP கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப் பட்டார். அவர் "பத்சாவை மீட்டெடுக்கப் போவதாக" சூளுரைத்தார். பாதுகாப்புப் படைகளையும், பாசிஸ குண்டர்களையும், பத்சாவை நோக்கி நகர்த்தினார். 

11-7-1980 அன்று, பத்சா மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அயல் நாட்டின் மீது படையெடுப்பது போன்று, பாதுகாப்புப் படைகள் கவச வாகனங்கள், தாங்கிகள் சகிதம் முன்னேறிச் சென்றன. கடலில் இரண்டு போர்க் கப்பல்கள் ரோந்து சுற்றின. இவை யாவும் அங்கே ஒரு யுத்தம் நடப்பது போன்ற பிரமையை உண்டாக்கின. 

இராணுவ நடவடிக்கையின் போது, சென்மெஸ் உட்பட, 600 பேரளவில் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப் பட்டனர். தப்பி ஓடக் கூடியவர்கள், காடுகளுக்குள்ளும், மலைகளிலும் மறைந்து கொண்டார்கள். பெரும் படையை எதிர்த்து நிற்பது தற்கொலைக்கொப்பானது என்பதால், யாரும் ஆயுதமேந்திப் போராடவில்லை. அவ்வாறு போராடி இருந்தாலும், ஆயுத வன்முறையை துருக்கி அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நினைத்தனர். 

கைது செய்யப் பட்டவர்கள், முகமூடி அணிந்த தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப் பட்டனர். முன்னர் பத்சாவில் வாழ்ந்த, இடதுசாரிகளினால் விரட்டப்பட்ட பாசிஸ இளைஞர்களே, படையினருடன் கூட வந்து காட்டிக் கொடுத்தனர். இராணுவ நடவடிக்கையின் பின்னர், பாசிஸ்டுகள் பத்சா நகரில் சுதந்திரமாக தங்க முடிந்தது. பத்சா இராணுவ நடவடிக்கையானது, துருக்கியில் வரப் போகும் இராணுவ ஆட்சிக்கு ஒத்திகையாக அமைந்திருந்தது. 12-9-1980 அன்று, துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி நடந்தது. 

சென்மெஸ்ஸுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப் பட்டது. அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சித்தமை ஒரு குற்றமாக தீர்ப்புக் கூரப் பட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த சென்மெஸ், தனது 47 வது வயதில், 4-5-1985 அன்று மாரடைப்பினால் காலமானார். 

பத்சா புரட்சி பத்து மாதங்கள் நீடித்தது. அதற்கு காரணமான புரட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். மார்க்சிஸ்டுகள் ஆனால் லெனினிஸ்டுகள் அல்லர். இடதுசாரி சோஷலிஸ்டுகள் என்று கூறலாம். அவர்களால் பூரணமான சோஷலிச சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை. அரசு இயந்திரத்தின் மேல் கை வைக்கவில்லை. அரசு நிறுவனங்கள் வழமை போல இயங்கிக் கொண்டிருந்தன. தனியுடைமை, சொத்துரிமை ஆகியவற்றில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. மேலும் சில கலாச்சார மரபுகள், இடதுசாரி ஒழுக்கக் கோட்பாட்டின் பெயரில் நீடித்தன. 

பத்து மாத பத்சா புரட்சியானது, ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை உண்டாக்கி விட்டிருந்தது. அடக்குமுறை இல்லாதிருந்தால், அது இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கும். ஆயினும், கோட்பாடுகளில் காலம் கழிக்காமல், மக்கள் கமிட்டிகள் மூலம் மாற்று உலகை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது. மக்கள் சுதந்திரமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். 

(நன்றி: Doorbraak, oktober 2012, Mehmet Kirmaci எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.)

Thursday, June 26, 2014

லாசிஸ்தான் : துருக்கியில் அழிந்து வரும் மொழிச் சிறுபான்மை இனம்

லாசிஸ்தான் தேசியக் கொடி 
உலகில் பல சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைக்கான போராட்டம் வெளியில் தெரிய வருவதில்லை. அழிந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின்  ஒடுக்குமுறைக்கு அப்பால், வெளியுலகில் பலருக்கு ஆர்வம் இருப்பதில்லை. அப்படிப் பட்ட இனங்களில் ஒன்று : லாஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே லாசிஸ்தான்  என்ற ராஜ்ஜியத்தை சொந்தமாக வைத்திருந்த மக்கள், இன்று துருக்கி பெரும்பான்மை சமூகத்திற்குள் உள்வாங்கப் பட்டு விட்டனர். 


துருக்கியின் வட கிழக்கு பகுதியில், கருங்கடல் கரையோரமாக ஒரு தனித்துவமான மொழிச் சிறுபான்மை இனமான லாஸ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்று குறைந்தது இருபதாயிரம் பேர் மட்டுமே லாஸ் மொழி பேசத் தெரிந்து வைத்திருக்கின்றனர். கடந்த கால வரலாறு முழுவதும், லாஸ் இன மக்கள், துருக்கியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு, துருக்கியராக மாறி வந்துள்ளனர். 

அண்மைக் காலமாகத் தான், லாஸ் மொழி மீள் உயிர்ப்பு பெற்று வருகின்றது. இளந் தலைமுறையினர் லாஸ் மொழி கற்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கூட, அங்கிருந்த நிலைமை வேறு விதமாக இருந்தது. லாஸ் மக்கள், தமது தாய்மொழியை பேசுவதற்கு வெட்கப் பட்டார்கள். தனிப்பட்ட பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, தமது தாய்மொழி உதவாது என நினைத்து, அதனை புறக்கணித்து வந்தனர். 

துருக்கியின் பிற சிறுபான்மை மொழி பேசும் மக்களைப் போன்று, லாஸ் மக்களும் வேலை வாய்ப்புகளுக்காக, துருக்கி மொழி கற்பதில் ஆர்வம் காட்டினார்கள். இன்னொரு அந்நிய மொழியாக ஆங்கிலம் அல்லது ரஷ்யன் படிப்பதற்கு காட்டிய அக்கறை காட்டி வந்தனர். அரசாங்கத்தின் திட்டமிட்ட மொழி அடக்குமுறைக் கொள்கை மட்டுமல்லாது, அந்த மக்களின் அக்கறையின்மையும் லாஸ் மொழி அழிந்து வருவதற்கு காரணமாக அமைந்தது.

துருக்கியில் வாழும் மக்கள் அனைவரும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாக வெளியுலகில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். துருக்கியின் மிகப் பெரிய மொழிச் சிறுபான்மையினரான குர்து மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக, குர்து மொழி பற்றி பலர் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், துருக்கியில் பேசப் படும் பத்துக்கும் குறையாத பிற மொழிகள் பற்றி அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். 

துருக்கி மொழி, 1300 வருடங்களுக்கு முன்னர் தான் துருக்கியில் காலடி எடுத்து வைத்தது. அதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் கிரேக்க, ஆர்மேனிய மொழிகள் பெரும்பான்மையாக பேசப் பட்டன. அது முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கிரேக்க மொழி உத்தியோகபூர்வ அந்தஸ்து பெற்றிருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், முன்னாள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகளில் நிரந்தரமாக தங்கி விட்டனர். (ஓட்டோமான் சக்கரவர்த்திகளின் காலத்தில் கூட ரோமாபுரி என்ற அர்த்தம் வரும் "ரூம்" என்ற சொல் சில இடங்களில் புழக்கத்தில் இருந்தது.)

துருக்கி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், முன்பு கிரேக்க மொழி பேசிய மக்களில் ஒரு பகுதியினர், துருக்கி மொழியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டனர்.  இருப்பினும், இருபதாம் நூற்றாண்டு வரையில் கூட, கிரேக்க மொழியை தாய்மொழியாக பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். நவீன கிரேக்க குடியரசு எல்லையோரம் உள்ள மேற்கு துருக்கிப் பகுதிகளில் மட்டுமல்லாது, கருங்கடல் பகுதிகளிலும் கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர். 

முதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாக் கண்டம் முழுவதும் தேசியவாத சித்தாந்தம் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் ஒரு தேசிய அரசாகியது. துருக்கியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி தேசியவாதிகள், தமது நாட்டில் துருக்கி மட்டுமே பேசப் பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு தான் சிறுபான்மை மொழிகளின் அழிவு ஆரம்பமாகியது. 

நவீன மயமாக்கல் கூட, சிறுபான்மை மொழிகளுக்கு எதிராகவே அமைந்திருந்தது. உலகமயமாக்கலை தோற்றுவித்த தொழிற்புரட்சி அல்லது தொழில்நுட்ப புரட்சி காரணமாக, கல்வி, ஊடகத் துறை வளர்ச்சி அடைந்ததாலும், பெரும்பான்மை மொழி ஆதிக்கம் பெறத் தொடங்கியது. நிலப்பிரபுத்துவ காலத்தில் சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த சுதந்திரம் யாவும், முதலாளித்துவ காலத்தில் பறிக்கப் பட்டன. இந்த சமூக மாற்றம் துருக்கிக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவானது.

துருக்கி, கிரேக்க எல்லைகள் வரையறுக்கப் பட்ட போதும், அதற்குப் பின்னரும் துருக்கியில் வாழ்ந்த இலட்சக் கணக்கான கிரேக்கர்கள் வெளியேற்றப் பட்டனர். ஒரு பகுதியினர் கிரேக்க குடியரசுக்கும், இன்னொரு பகுதியினர் ரஷ்யாவுக்கும் நாடு கடத்தப் பட்டனர். லாஸ் இன மக்கள், அது போன்ற அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கவில்லை. அதற்குக் காரணம், லாஸ் மக்கள் இஸ்லாமியர் என்பது மட்டுமல்ல, மிகச் சிறுபான்மை இனமான அவர்கள், துருக்கி மொழி கற்பதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டார்கள். 

லாஸ் மக்களின் லாசிஸ்தான் நாடு, முன்னாள் ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. ஆனால், 19 நூற்றாண்டின் இறுதியில் நடந்த ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, ஒரு பகுதி ஜோர்ஜியாவுடன் இணைக்கப் பட்டது. மறுபகுதி இன்றைக்கும் துருக்கி குடியரசின் பகுதியாக உள்ளது. 

லாஸ் மொழிக்கும், துருக்கி மொழிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ஒரே மாதிரி தோன்றினாலும், ஜோர்ஜிய மொழியும், லாஸ் மொழியும் வேறுபட்டவை. ஜோர்ஜியர்கள் அந்த வேறுபாட்டை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் லாஸ் மொழி என்ற தனியான மொழி இல்லை என்றும், அது ஜோர்ஜிய மொழியின் வட்டார வழக்கு மொழி என்று வாதிட்டு வருகின்றனர்.

மேற்கு ஜோர்ஜியாவில், கருங்கடலோர பிரதேசத்தில் பேசப்படும் மிங்கிரெலிய மொழிக்கும், லாஸ் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. லாஸ், மிங்கிரெலியா மட்டுமல்லாது, சில வருடங்களுக்கு முன்னர், ஜோர்ஜியாவுடன் முரண்பட்டு, தனி நாடு கோரிப் பிரிந்து சென்ற, அப்காசியா மொழியும் ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த வேறுபட்ட மொழிகள் ஆகும். 

லாஸ் மொழி, உலகில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு கூட, லாஸ் மொழி பேசும் மக்கள் கருங்கடல் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள் அவர்களது நாட்டை "கொள்கிஸ்" என்று அழைத்தனர். (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, லாஸ் மக்களின் வாழ்விடத்திற்கு அருகாமையில், குறிப்பாக Trabzon நகர்ப் பகுதியில், கிரேக்கர்கள் வாழ்ந்து வந்தனர்.) மெடியா என்ற கிரேக்க புராணக் கதையில், கொள்கிஸ் நாடு பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. 

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், லாஸ் மக்கள் தமது பூர்வீகத்தை மறந்து விட்டார்கள். தங்களது மொழி உலகிலேயே பழமையான மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை கூட அறிந்திருக்கவில்லை. பொயர்ஸ்டைன் (Feurstein) என்ற ஜெர்மானியர், துருக்கிக்கு சுற்றுலா பயணியாக சென்ற காலத்தில் லாஸ் மொழிச் சிறுபான்மையினர் பற்றி அறிந்து கொண்டார். லாஸ் மொழி பேசும் மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நாட்டார் பாடல்களை சேகரித்தார். 

பொயர்ஸ்டைன் அடிக்கடி லாஸ் பிரதேசத்திற்கு சென்று வருவதைக் கண்டு சந்தேகப் பட்ட துருக்கி அரசு அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பின்னர், இனிமேல் எந்தக் காலத்திலும் துருக்கிக்கு வரக் கூடாது என்று எச்சரித்து விட்டு, ஜெர்மனிக்கு நாடுகடத்தினார்கள்.

பொயர்ஸ்டைன் ஜெர்மனியில் இருந்து கொண்டே, புலம்பெயர்ந்த லாஸ் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, லாஸ் மொழிக்கு எழுத்து வடிவத்தை உருவாக்கினார். அழிந்து வரும் மொழி ஒன்றுக்கு எழுத்தை உருவாக்கினால், அந்த மக்களே தமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பார்கள் என்பது அந்த ஜெர்மனியரின் நம்பிக்கை. அது பலித்தது. இரகசியமாக துருக்கிக்கு அனுப்பப் பட்ட லாஸ் மொழியின் எழுத்து வடிவத்தை, லாஸ் மக்கள் ஆர்வமெடுத்து படித்தார்கள். தற்போது அவர்கள் தமது தாய்மொழியை தாமாகவே வளர்க்கின்றனர். பொயர்ஸ்டைனின் அயராத முயற்சியால், லாஸ்-ஜெர்மன் அகராதி ஒன்றும் உருவாக்கப் பட்டது.

லாஸ் மொழியின் மறுமலர்ச்சிக்கு இன்னொரு அரசியல் சக்தியும் உதவியுள்ளது. சோவியத் கம்யூனிஸ்ட் புரட்சியின் பின்னர், துருக்கியின் கருங்கடல் பிரதேசத்தில் மார்க்சிய அமைப்புகள் தோன்றின. லாஸ் மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் மத்தியில் தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான கம்யூனிச கொள்கை பிரபலமடைந்தது. அவர்களது பிரதேசத்திற்கு அருகில், லாஸ் மொழி பேசும் சகோதரர்கள் வாழும் ஜோர்ஜியா ஒரு சோஷலிச நாடாக மாறியிருந்தது. அதுவும் லாஸ் மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பரப்புவதற்கு இலகுவாக இருந்தது எனலாம்.


கம்யூனிச கொள்கைகளினால் ஈர்க்கப் பட்ட, லாஸ் புத்திஜீவிகள் சிலர், Mç'ita Murutsxi  (சிவப்பு நட்சத்திரம்) எனும் பத்திரிகையை லாஸ் மொழியில் வெளியிட்டு வந்தனர். அந்தப் பத்திரிகை லாஸ் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பலர் சந்தா கட்டி பெற்றுக் கொண்டார்கள். Mç'ita Murutsxi பத்திரிகையின் முதலாவது பிரதி வெளிவந்தவுடனேயே, துருக்கி அரசு பத்திரிகை ஆசிரியர்களை பிடித்து சிறையில் அடைத்தது. ஆயினும், பத்திரிகையின் இரண்டாவது பிரதியும் வெளிவந்து விட்டது. காலப்போக்கில், அடக்குமுறை காரணமாக லாஸ் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கண்ட துருக்கி அரசு பின்வாங்கியது.

தற்போது லாஸ் மொழி கற்பிக்கும் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. துருக்கி அரசு இன்னமும் லாஸ் மொழியை அங்கீகரிக்காத படியால், அரசு மானியம் எதுவும் கிடைப்பதில்லை. அதனால் தனியார் நிதி உதவியுடன் தான் லாஸ் மொழி கற்பிக்கப் படுகின்றது. லாஸ் மொழியில் பத்திரிகை, சஞ்சிகைகள், நூல்கள் வெளிவருவதற்கு துருக்கி அரசு சுதந்திரம் வழங்கி உள்ளது. (அதுவும் நீண்ட கால போராட்டத்தின் பின்னர் தான்.) ஆனால், இன்னமும் லாஸ் மொழி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உரிமம் வழங்க மறுத்து வருகின்றது. 


மேலதிக தகவல்களுக்கு:
அல்ஜசீரா ஆவணப் படம் 

Sunday, May 25, 2014

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள். 
 அமைதி வழி ஆர்ப்பாட்டம் அடக்கப் பட்டால், ஆயுதங்கள் பேசும் 



துருக்கி, இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதியான Okmeydani எனும் இடத்தில், சில ஆயுதபாணி இளைஞர்களின் நடமாட்டம் காரணமாக, அங்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். தலைமறைவாக இயங்கும், DHKP எனும் கம்யூனிச கெரில்லா இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களே, ஆயுதங்களுடன் நடமாடுவதாக சந்தேகிக்கப் படுகின்றது. துருக்கியில் ஓர் உள்நாட்டு யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறி?
இஸ்தான்புல் நகரின் Sarigazi பகுதியும், ஆயுதபாணி இளைஞர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அந்தப் பகுதியில், துருக்கி மாவோயிஸ்ட் கட்சியான TKP/ML உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். பொலிஸ் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, ஆயுதமேந்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 
Footage from last night's clashes in Sarigazi.














"பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல. அது மேட்டுக்குடியினரின் அடியாட் படை," என்பதற்கு இந்தப் படமே சான்று. இஸ்தான்புல் நகரில், சோமா நிலக்கரிச் சுரங்க விபத்து தொடர்பாக, துருக்கி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒருவரை, துருக்கி போலீசார் தெருவில் போட்டு அடிக்கின்றனர். பொலிஸ் பக்கத்தில் நின்று கொண்டு, அகப்பட்ட ஆர்வலரை காலால் உதைக்கும், இந்த கோட்டு சூட்டு போட்ட ஆசாமி யார் தெரியுமா? துருக்கி பிரதமர் எர்டோகானின் அந்தரங்க ஆலோசகர். இந்தப் படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி உலகெங்கும் பிரபலமாகி விட்டது. அதனால், ஏற்டோகனின் ஆலோசகர் பொது மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தார். அவர் அன்றே ஒரு வேலை செய்தார். "உதைத்ததால் கால் வலிக்கிறது" என்று சொல்லி, மருத்துவச் சான்றிதழ் எடுத்துக் கொண்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் தங்கி விட்டார். 

Turkish PM’s adviser goes on sick leave for injury to leg used to kick Soma protester http://www.hurriyetdailynews.com/Default.aspx?pageID=238&nID=66658&NewsCatID=338




துருக்கியில், எட்டாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த, இடதுசாரி பெண் ஊடகவியலாளர் Füsun Erdogan, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளார். நெதர்லாந்து குடியுரிமை பெற்ற Füsun Erdogan, இஸ்தான்புல் நகரில் Özgür Radyo (சுதந்திர வானொலி) என்ற வானொலி நிலையத்தை நடத்தி வந்தார்.

இலட்சக் கணக்கான மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரத்தில், பொதுவுடமைக் கருத்துக்களை பரப்பி வந்தது. செய்திகள், நேர்காணல்கள், புரட்சிப் பாடல்கள் என்று, வழமையான வர்த்தக வானொலிகளில் இருந்து மாறுபட்டு இயங்கிக் கொண்டிருந்தது.

துருக்கியில் ஒரு மகாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றிருந்த நேரம், Füsun Erdogan னை நேரில் கண்டு பேசியிருக்கிறேன். Özgür Radyo வானொலியில் எனது நேர்காணலும் நேரடி ஒலிபரப்புச் செய்யப் பட்டது. இது நடந்தது 2006 ம் ஆண்டு. மகாநாடு முடிந்து சில மாதங்களின் பின்னர், Özgür Radyo வானொலி நிலையம் மூடப் பட்டது. Füsun மற்றும் சில அரசியல்- சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

Füsun இரட்டைக் குடியுரிமை பெற்றவர். அவரது கைது தொடர்பாக, நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப் பட்டது. இருப்பினும், துருக்கி குடியுரிமையும் வைத்திருந்த காரணத்தால், அரசு அவரை விடுதலை செய்ய மறுத்து விட்டது. இருப்பினும், நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் சங்கம் (NVJ), ஐரோப்பிய ஊடகவியலாளர்கள் சங்கம் (EFJ) ஆகியன, அவரது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தன.

Füsun இன் மகன் Aktas Erdogan, கடந்த இரண்டு வருடங்களாக, தாயின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தார். சங்கீதக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவனான Aktas ஒரு கிட்டார் இசைக் கலைஞன். ஐரோப்பிய ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது.

துருக்கியில் அண்மையில் சில சட்டங்கள் திருத்தப் பட்டன. சில குற்றங்களுக்கான தண்டனைக் காலம் குறைக்கப் பட்டது. அதனால் தான், ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட Füsun, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. "ஒரு இடதுசாரி பயங்கரவாத இயக்கத்தை தலைமை தாங்கியதாக" அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது. MLKP என்ற கம்யூனிஸ்ட் கட்சியைத் தான், அரசு அவ்வாறு குறிப்பிடுகின்றது.

துருக்கியில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியையும், சட்டப் படி இயங்க அனுமதிப்பதில்லை. ஏதாவதொரு காரணம் சொல்லித் தடைசெயவார்கள். அவ்வாறு தான், MLKP தடை செய்யப் பட்டிருந்தது.

குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி, MLKP வேறு பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது எந்த ஆயுதபாணி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் என்றால், ஏதாவதொரு பொய்க் குற்றம் சுமத்தி சிறையில் அடைப்பது துருக்கியில் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

Füsun இனை பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு படுத்துவதற்காக, பொலிஸ் தயாரித்த ஆவணங்களில் பல குளறுபடிகள் இருந்ததும் நீதிமன்ற விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது. எட்டு வருடங்களுக்கு பின்னர், திடீரென விடுதலை செய்யப் பட்டதற்கு, அதுவும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், தற்போது விடுதலையாகி உள்ள Füsun, துருக்கியை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. விரைவில் அவர் நெதர்லாந்து வருவார் என்று எதிர்பார்ப்போம்.

Monday, June 10, 2013

"தாக்சிம் மக்கள் குடியரசு" : துருக்கியில் தோன்றிய புரட்சி

"கல்லைக் கண்டால் பொலிசைக் காணோம்! பொலிசைக் கண்டால் கல்லைக் காணோம்!! " - புரட்சி மொழி 
("இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி" -   இரண்டாம் பாகம்)

"துருக்கி என்று பெயரிடுவதன் மூலம், அந்த நாட்டை இதற்கு மேலும் அவமதிக்க முடியாது." துருக்கி மொழி பேசாத பிற சிறுபான்மை இனங்களின் மனக்குமுறல் இது. மகாகவி பாரதியார், இலங்கையை "சிங்களத் தீவு" என்று விளித்து பாடியதற்காக மனம் நொந்த தமிழர்கள் பலர் உண்டு. இலங்கையை சிங்களம் என்று அழைப்பதால் என்ன அரசியல் விளைவு ஏற்படுமோ, அதே போன்று தான் துருக்கி என்ற நாட்டின் பெயரும் உண்டாக்குகின்றது. 

ஓட்டோமான் சக்கரவர்த்தியின் ஆட்சிக் காலத்தில், "துருக்கியர்" என்று அழைப்பது ஒரு இழி சொல்லாக கருதப் பட்டது. பெரும்பான்மையினர் பேசிய மொழியாக இருந்த போதிலும், அதற்கு சமூக அந்தஸ்து இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில், பல உலக நாடுகளிலும் பரவிய "தேசியவாதம்" என்ற தொற்று நோய் துருக்கியையும் பிடித்தாட்டியது. துருக்கி தேசியவாதிகள், அவர்களது தேசியத் தலைவர் அட்டாதுர்க் தலைமையில் ஒரு தேசிய அரசை உருவாக்கினார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த கிரேக்கர்களையும், ஆர்மேனியர்களையும் வெளியேற்றினார்கள். பிற சிறுபான்மை இனங்களான, அரபி, குர்து மக்கள் மேல், பலவந்தமாக துருக்கி மொழியை திணித்தார்கள்.

துருக்கியை ஒரு இஸ்லாமிய நாடாக பார்ப்பதும், யதார்த்தத்திற்கு முரணானது. கிரேக்கர்கள், ஆர்மேனியர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றினார்கள். முஸ்லிம்களிலும் அலாவி பிரிவினர் ஒதுக்கப் பட்டனர். அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. அலாவி முஸ்லிம்கள் துருக்கியில் மட்டுமல்லாது, சிரியா, லெபனான், போன்ற நாடுகளிலும் கணிசமான தொகையில் வாழ்கின்றனர். அலாவி முஸ்லிம்களின் மதக் கொள்கைகள் பல, இருபதாம் நூற்றாண்டு சோஷலிச தத்துவத்துடன் பெருமளவு ஒத்துப் போகின்றன. அதனால், பெரும்பாலான துருக்கி கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் அலாவி முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தற்செயல் அல்ல.

அலாவி முஸ்லிம்களும், துருக்கி தேசியவாதிகளும் மேற்கத்திய கலாச்சார விழுமியங்களுடன் பெரிதும் ஒத்துப் போகக் கூடியவர்கள். இதைவிட பெரும்பாலான துருக்கியர்கள் மத்தியில், தாம் ஒரு ஐரோப்பிய நாட்டவர் என்ற எண்ணமும் நிலை கொண்டுள்ளது. துருக்கியின் வட - கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் ஆர்மேனியாவை ஒரு ஐரோப்பிய நாடாக ஏற்றுக் கொள்ள முன்வருபவர்கள், துருக்கியை நிராகரிப்பது முரண்நகையானது. இதற்கு "கிறிஸ்தவம், இஸ்லாம்" என்ற மதப் பிரிவினையை தவிர வேறெந்த காரணத்தையும் சாட்டாக கூற முடியாது. எது எப்படி இருப்பினும், கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும், இஸ்லாமியவாத AKP, மதம் காரணமாக அரபு-இஸ்லாமிய உலகுடன் தன்னை இனம் காட்டிக் கொள்ள விரும்புகின்றது.

AK கட்சி, "இஸ்லாமிய - முதலாளியம்" என்ற புதிய அரசியல் - பொருளாதார கொள்கையை நடைமுறைப் படுத்தி வருகின்றது. அதன் படி, நாடு முழுவதும் புதிய மசூதிகள் கட்டப் படுகின்றன. அதற்கு அருகில் புதிய கடைத் தொகுதிகள் கட்டப் படுகின்றன. AK கட்சியுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இதனால் இலாபமடைந்துள்ளனர். இந்தப் புதிய அரசியல் - பொருளாதார கொள்கை, துருக்கியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றதை மறுக்க முடியாது. அயலில் உள்ள ஐரோப்பிய நாடுகள் எல்லாம், பொருளாதார தேக்கத்தால் கஷ்டப் படும் நேரம், துருக்கியின் பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது. ஆனால், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அந்த நாட்டின் மக்கள் அனைவருக்கும் பயனளிக்குமா? உதாரணத்திற்கு, சமீபத்திய இந்திய, இலங்கை பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது, ஒரு சிறிய மத்தியதர வர்க்கம் மட்டுமே நன்மை அடைந்தது, அல்லது அந்த வர்க்கத்தின் எண்ணிக்கை மட்டுமே பெருகியது. ஆனால், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நிலைமை மாறாமல் அப்படியே உள்ளது.

AKP யின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், நாடு துரிதகதியில் இஸ்லாமிய மயமாகிக் கொண்டிருந்தது. பெண்கள் முக்காடு போடுவது ஊக்குவிக்கப் பட்டது. முக்காடு போடாத பெண்கள், பொது இடங்களில் பயமுறுத்தப் பட்டனர். காதலர்கள் கையோடு கை கோர்த்துக் கொண்டு திரிவதும், பொது இடங்களில் முத்தமிடுவதும் கலாச்சார சீர்கேடாக கருதப் பட்டது. தற்போது ஒரு சராசரி மேற்கு ஐரோப்பிய நாடு போன்று காட்சியளிக்கும் துருக்கி, வெகு விரைவில் சவூதி அரேபியா போன்று மாறிவிடும் என்ற அச்சம் பல மதச் சார்பற்ற துருக்கியர் மனதில் எழுந்தது. அவர்களின் உள்ளக் குமுறல், சமீபத்திய மக்கள் எழுச்சியில் எதிரொலித்தது. மேற்குக் கரையோரம் அமைந்திருக்கும் அழகிய இஸ்மீர் நகரம், பார்ப்பதற்கு பாரிஸ், லண்டன் போல மேற்குலகமயமாக காட்சியளிக்கும். வழமையாக அந்த இடத்தில் AKP க்கு ஓட்டுப் போடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. மக்கள் எழுச்சி தொடங்கிய அடுத்த நாளே, இஸ்மீரில் இருந்த AKP கட்சி அலுவலகம் எரிக்கப் பட்டது.


உலகம் முழுவதும், புரட்சி என்றதும், பலர் கம்யூனிஸ்டுகளை தான் நினைப்பார்கள். கம்யூனிஸ்டுகள் மட்டுமே புரட்சிக்கு ஏகபோக உரிமை கோர முடியாது. அராஜகவாதிகள் (அனார்கிஸ்டுகள்), சோஷலிஸ்டுகள், இடதுசாரி லிபரல்கள் மட்டுமல்ல, இஸ்லாமியவாதிகள் கூட புரட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதற்கு உலகில் பல உதாரணங்களை காட்டலாம். புரட்சி என்பதை "ஜனநாயகமயப்படுத்தல், மக்கள் மயப் படுத்தல்" என்றும் வேறுவிதமாக அழைக்கலாம். 

அறுபதுகளில், மேற்கு ஐரோப்பிய மாணவர்கள், புரட்சியில் புதியதொரு பரிமாணத்தை அறிமுகப் படுத்தினார்கள். ஆங்கிலத்தில் "Occupy" என்று அழைக்கப் படும், பொது இடங்களை ஆக்கிரமிக்கும் போராட்டம் அது. அது ஒரு மக்கள் அரசாங்கம். மாணவர்கள் கல்வி நிலையங்களை ஆக்கிரமித்து, கல்விக் கொள்கைகளை தீர்மானிப்பார்கள். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து உற்பத்தியை தீர்மானிப்பார்கள். அது மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் உண்மையான ஜனநாயகம். அதனை மக்கள் கற்றுக் கொள்வதற்கு, பல நாடுகளில் நடக்கும் Occupy போராட்டம் உதவுகின்றது.

இஸ்தான்புல் நகரில், கேசி பூங்காவில் சுமார் நூற்றுக் கணக்கான ஆர்வலர்கள் Occupy பாணியில் ஒன்று கூடினார்கள். அங்கேயே கூடாரம் அடித்து தங்கினார்கள். ஒரு வகையில் அது விடுதலை செய்யப் பட்ட பிரதேசமாக இயங்கியது. ஆரம்பத்தில் காவல்துறையினர், கண்ணீர்புகைக் குண்டுகள், ஒரெஞ்ச் நச்சு வாயுக்களை அடித்து, போராடிய மக்களை கலைக்க முயற்சித்தனர். வெகுஜன ஊடகங்களும், பொலிஸ் அராஜகத்தை கண்டுகொள்ளவில்லை. துருக்கி மொழியில் ஒளிபரப்பாகும் அமெரிக்கர்களின் CNN கூட, அன்றைய தினம் பென்குயின்கள் பற்றிய விவரணப் படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அப்படியானால், பிற அரசு சார்பான ஊடகங்களை பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

"இன்று பெரும்பாலான மக்கள், மரபு வழி ஊடகங்களில் நம்பிக்கை இழந்து விட்டனர். உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வதற்கு டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களை பயன்படுத்துகின்றனர்." - துருக்கி அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆர்வலர்கள் பலர் தெரிவித்த கருத்து. துருக்கி ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இஸ்தான்புல் நகரில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களை போலிஸ் ஒடுக்கிய சம்பவத்தை அறிவிக்காமல் அமைதி காத்தன. "தாங்கள் அறிவிக்கா விட்டால், நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு தகவல் போய்ச் சேராது, ஒரு சில நாட்களில் அப்படி ஒரு சம்பவம் நடந்த சுவடே இல்லாமல் மறக்கப் பட்டு விடும்..." என்று ஊடக நிறுவனங்கள் நினைத்திருந்தன. 

ஆனால், சமூக வலைத் தளங்களின் மூலம் தகவல்கள் நாடு முழுவதும் பரவியது. அதற்குப் பிறகு தமது தவறை உணர்ந்து கொண்ட ஊடகங்கள், போராட்டம் குறித்த செய்திகளை அறிவிக்கத் தொடங்கன. அரச சார்பு தொலைக்காட்சியான NTV யின் தலைமை நிர்வாகி, நடந்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார். அப்படி இருந்தும், போராடும் மக்களின் ஆத்திரம் அடங்கவில்லை. தங்களின் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வந்த NTV நிறுவனத்தின் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தும் சாதாரண மக்களின் சக்தி எத்தகைய தாக்கத்தை உண்டாக்க வல்லது என்பதை, இன்று அதிகார வர்க்கம் உணர்ந்துள்ளது.

ஆயுதம் வைத்திருப்பவர்கள் மட்டுமே போராளிகள் என்ற தவறான எண்ணம் கொண்டவர்கள், சமூக ஆர்வலர்களை "இணையப் போராளிகள்" என்று நையாண்டி செய்து வருகின்றனர். பெரும் முதலாளிகளின் நிதியில் இயங்கும் ஊடகங்கள், மக்களுக்கு தெரிவிக்காத செய்திகளை, சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இணையப் போராளிகள் தெரிவித்து வருகின்றனர். துருக்கி மக்கள் எழுச்சி பற்றி வெகுஜன ஊடகங்கள் செய்தி அறிவிக்காது புறக்கணித்து வந்தன. சமூக வலைத் தளங்களின் ஊடாக தகவல்கள் பரவிய பின்னர் தான், திடீரென விழித்துக் கொண்டது போல பாசாங்கு செய்தன. துருக்கியில் டிவிட்டர் பயன்படுத்திய 23 இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் என்பதில் இருந்தே, அரசாங்கம் எந்தளவு தூரம் "இணையப் போராளிகளை" நினைத்து அஞ்சுகின்றது என்பது தெரிய வரும். 

பெரும் முதலாளிகளிடம் சம்பளம் என்ற பெயரில் கையூட்டு வாங்கும் தொழில்முறை ஊடகவியலாளர்களை விட, மக்கள் மத்தியில் இருந்து தோன்றும் ஊடகவியலாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். இஸ்தான்புல் நகரில் ஒரு தற்காலிக ஊடக மையத்தை உருவாக்கிய சமூக ஆர்வலர்கள், அங்கு நடக்கும் புரட்சியை உலகிற்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கணணியும், இணையமும், சமூக வலைத்தளங்களும் மட்டுமே அவர்கள் கையில் உள்ள ஆயுதங்கள். புரட்சி நடக்கும் களத்தில் நின்று பணியாற்ற வேண்டியிருப்பதால், கண்ணீர்ப் புகையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு, பாதுகாப்பு முகமூடி அணிந்திருக்கின்றனர். புரட்சி என்பது இரண்டு ஆயுதக் குழுக்களின் மோதல் அல்ல. அது மக்கள் தாமாகவே உருவாக்கிக் கொள்ளும் சமுதாய மாற்றம்.

 "இவர்கள் புத்தகம் ஏந்திய பயங்கரவாதிகள்!" 
பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும், இலக்கற்ற வன்முறையில் இறங்குவதும் புரட்சி அல்ல. தெருக்களை ஆக்கிரமிப்பதும், அங்கு புத்தகங்களை கொண்டு வந்து வாசிப்பதும், தான் கற்றவற்றை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதும் புரட்சியின் ஒரு அங்கம் தான். "இவர்கள் புத்தகம் ஏந்திய பயங்கரவாதிகள்!"

ஒரு மருத்துவரின் முன் முயற்சியினால், கேசி பூங்காவில் ஒரு நூலகம் கட்டப் பட்டது. செங்கற்களால் தூண்களைப் போல கட்டி, அவற்றின் நடுவில் பலகைகளை வைத்து, புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக, மார்க்ஸ் முதல் மாவோ வரை எழுதிய நூல்கள் அங்கே கிடைக்கும். அவற்றோடு பல இடதுசாரி எழுத்தாளர்கள் எழுதிய நூல்களும், நாவல்களும் வைக்கப் பட்டுள்ளன. அவற்றை இரவல் எடுத்து வாசிப்பதற்கு கட்டணம் கிடையாது. ஆனால், வாசித்து முடித்த பின்னர் நூலை திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.



புரட்சியாளர்களின் "அதி பயங்கரமான ஆயுதக் களஞ்சியம்!" பூங்காவின் மத்தியில் இயங்கும் தற்காலிக நூலகம். மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து இடதுசாரி இலக்கியங்களையும் இரவல் வாங்கலாம். 


கேசி பூங்காவில் தினசரி உடற்பயிற்சி அப்பியாசங்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். யோகா பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலவச உணவு கிடைக்கிறது. பகலில் வேலை செய்து விட்டு வருபவர்கள், பூங்காவில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு விட்டு, அங்கே படுத்து உறங்குகிறார்கள். இலவச உணவு, எந்த வணிக நிறுவனமும் தனது பெயரில் கொடுத்த "நன்கொடை" அல்ல. மக்கள் தம்மிடம் உள்ள உணவை கொண்டு வந்து பகிர்ந்து உண்கிறார்கள். மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம், புதிய உலகத்தையே உருவாக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறார்கள். பொலிஸ் படையுடன் மோதியதால் காயமுற்ற போராட்டக் காரர்களுக்கு இலவச மருத்துவம் செய்வதற்கு மருத்துவ மாணவர்கள் வருகிறார்கள். அதை விட, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் போராளிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்கிறது. அதற்கென வழக்கறிஞர்களின் குழு ஒன்று, அல்லும் பகலும் தயாராக இருக்கிறது.

இஸ்தான்புல் நகரின் மத்தியில் உள்ள Taksim சதுக்கத்தில் முதன் முதலாக மக்கள் எழுச்சி ஆரம்பமாகியது. அங்கு குழுமியிருந்த போராட்டக்காரர்களை பொலிஸ் கண்ணீர்ப்புகை குண்டு வீசி அடித்து விரட்டியது. அந்த பொலிஸ் வன்முறை, நாடு முழுவதும் மக்கள் எழுச்சி ஏற்படக் காரணமாக அமைந்தது. தற்போது தாக்சிம் சதுக்கத்தில் இருந்து பொலிஸ் வெளியேறி விட்டது. அந்த இடம் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்கள் அதனை "தாக்சிம் மக்கள் குடியரசு" என்று அழைக்கின்றனர். அந்தப் பகுதியை சுற்றிலும், பொலிஸ் வர விடாமல் தடையரண்கள் போடப்பட்டுள்ளன. விடுதலை செய்யப் பட்ட "தாக்சிம் குடியரசில்" ஒரு மக்கள் அரசாங்கம் நடக்கின்றது. அதன் "பிரஜைகளின்" கடமைகள் என்னவென்று கூறும் அறிவிப்புகள் சுவர்களில் ஓட்டப் பட்டுள்ளன. எல்லோரும் சேர்ந்து, அங்கிருக்கும் குப்பை கூளங்களை அகற்றி சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

போராட்டக் காரர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்ட போதிலும், பிரதமர் எர்டோகன் அவர்களை  "சூறையாடிகள்" என்று அழைத்தார். அதனைக் குறிக்கும் "çapulcu" (ஷப்புல்சு)  என்ற துருக்கிச் சொல், இன்று போராட்டக்காரர்களின் விருப்பத்திற்குரிய சொல்லாக மாறி விட்டது. போராட்ட செய்திகளை அறிவிக்கும் இணைய ஆர்வலர்கள், தமது பெயருடன் çapulcu என்று சேர்த்துக் கொள்கிறார்கள்.  இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும் வலைத்தளத்திற்கு Çapul TV என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  ஆங்கிலமயமாக்கப் பட்ட, Chapulling  என்ற சொல் கூட சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது.  "Chapulling என்றால் உரிமைக்காக போராடுதல்" என்ற அர்த்தம் உருவாகி விட்டது. நாளை அந்தச் சொல் அகராதியில் சேர்க்கப் பட்டாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை.

நாளை துருக்கி மக்களின் எழுச்சி நசுக்கப் படலாம், அல்லது இலக்கை எட்ட முடியாமல் தோற்றுப் போகலாம். ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்து கொண்ட திருப்தியை அது உண்டாக்கும். ஜனநாயகம் என்ற குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சியில் அவர்கள் திளைக்கிறார்கள். அதனை வளர்த்தெடுப்பது ஒரு சவாலாக இருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அதிகாரவர்க்கத்திற்கு நாங்கள் அஞ்சத் தேவையில்லை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். மக்கள் அரசாங்கத்திற்கு அஞ்சும் நிலைமை மாற வேண்டும். அரசாங்கம் மக்களுக்கு அஞ்சும் காலம் வர வேண்டும். அது தான் புரட்சி.

(முற்றும்)
**********


துருக்கி மக்கள் எழுச்சி தொடர்பான முன்னைய பதிவுகள்:


2. இஸ்லாமிய - முதலாளியத்திற்கு எதிரான துருக்கி மக்களின் எழுச்சி
1. "துருக்கி வசந்தம்" : முதலாளியத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி

மேலேயுள்ள படங்கள்: புரட்சியாளர்களின் அன்றாட செயற்பாடுகளை காட்டுகின்றன.
கீழேயுள்ள படங்கள் : அரச படைகளின் அடக்குமுறை 
இதிலே யார் வன்முறையாளர்கள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.