Saturday, December 13, 2025

"மா(வெள்ளாள)மனிதர்" குமார் பொன்னம்பலத்தின் சாதிவெறி சிந்தனை!

 


ஆதிக்க சாதி வெள்ளாள மேலாதிக்க மனப்பான்மையுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமையை கோரிக்கையை மறுத்த குமார் பொன்னம்பலம் என்ற ஒரு கபட வேடதாரியை "மாமனிதர்" என்று கொண்டாட வெட்கமாக இல்லையா? 

"சாதி என்ற சிந்தனை இருக்க கூடாது..." என்று யாரை நோக்கி அறிவுரை கூறுகிறார்? 

அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்ட, மனித உரிமைகள் மறுக்கப்பட்ட சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளை மீட்டெடுக்க "சிறுபான்மை தமிழர் மகாசபை" மற்றும் "தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்" ஆகிய சமநீதி அமைப்புகளில் அணிதிரண்டு, விகிதாசார அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்துவம் கோரி போராட்டம் நடத்திய சிறுபான்மை சமூகங்களை (ஒடுக்கப்பட்ட பஞ்சம சாதியினர்) பார்த்து "சாதி அடிப்படையில் சிந்திக்காதீர்கள்!" என்று அந்த மக்களின் உரிமைப் போரா‌ட்ட‌த்தை கொச்சைப் படுத்துகிறார். 

ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்கள் அன்று "சிறுபான்மைத் தமிழர்" அடையாளத்துடன் தான் அரசியலில் ஈடுபட்டனர்.  ஏனென்றால் தமிழ்த் தேசியம் பேசிய வெள்ளாள கட்சிகளில் அவர்களுக்கு இடமில்லை. ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் உரிமைகளை பற்றி அந்த கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பேசியதே இல்லை. அத்தகைய சூழ்நிலையில் தமது உரிமைகளை வென்றெடுக்க ஒரு அரசியல் இயக்கமாக அணி திரள்வது  தானே முறை? 

அதை இந்த "மா(ங்காய்) மனிதர்" குமார் பொன்னம்பலம்  எப்படி திரிக்கிறார் என்று பாருங்கள்: "சாதி அடிப்படையில் கூட்டம் நடத்த கூடாது!" அந்தக் காலகட்டத்தில் குமாரின் தமிழ்க் காங்கிரஸ் முழுக்க முழுக்க வெள்ளாள சாதிக் கட்சியாக தான் இயங்கியது. அந்தக் கட்சியின் உறுப்பினர்கள், தேர்தல்  வேட்பாளர்கள் மட்டுமல்ல, வாக்காளர்கள் கூட வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் தான். அத்தகைய பின்னணியில் இருந்து கொண்டு "சாதி அடிப்படையில் கூட்டம் நடத்தக் கூடாது..." என்று அறிவுரை கூறுவது முரண்நகை இல்லையா? ஊருக்கு தான் உபதேசம். 

தொடர்ந்து அந்த மாமனிதர், மன்னிக்கவும் மண்ணாங்கட்டி மனிதர், இவ்வாறு சாதிய வன்மம் கக்கி இருக்கிறார்: "சாதி என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகள் மனதில் சாதிப் பாகுபாட்டை புகு‌த்துகிறார்களாம்!" 

இதை எந்தக் காலகட்டத்தில் சொல்கிறார்? எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்த அறிவுரையை கூறுகிறார்.  வெள்ளாள சாதிவெறி காடையர்கள் உரிமைப் போராட்டம் நடத்திய இளைஞர்களை வெட்டிக் கொலை செய்தது மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசை வீடுகளுக்கு நெருப்பு வைத்து வெறியாட்டம் ஆடிய காலத்தில்  குமார் பொன்னம்பலம் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி இந்த அறிவுரையை கூறி இருக்கிறார்.அத்தகைய மனிதன் எப்பேர்ப்பட்ட அயோக்கியனாக இருப்பான்? 

இவர்கள் தான், குமார் பொன்னம்பலத்தின் பாணியில் சொன்னால், "இன அடிப்படையில் கூட்டங்கள் நடத்தி, குழந்தைகள் உள்ளத்தில் இனப் பாகுபாட்டை புகுத்தியவர்கள்." 

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம். வெள்ளாளர் தமிழர்களுக்கு அடித்தால் நல்லிணக்கம் பேசுவார்கள். ஆனால் சிங்களவர் வெள்ளாளருக்கு அடித்தால் தனி ஈழம் கேட்பார்கள். இது தான் இவர்களது கபட நாடகம். 

No comments: