Showing posts with label தேசியம். Show all posts
Showing posts with label தேசியம். Show all posts

Friday, January 17, 2020

ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாதக் கோட்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. பண்டைய காலத்து பெருமை பேசுவதும், ஆயிரம் வருடங்களானாலும் இனம் மாறவில்லை என்று நம்புவதும் தேசியவாதத்தின் கொள்கைகள். தமிழ்த்தேசியம் என்றாலும், ஜெர்மன் தேசியம் என்றாலும் அதில் எந்தக் குறையும் இல்லை. எப்போதுமே மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். ஜெர்மன் தேசியமும் அதற்கு விதிவிலக்கல்ல.

உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் ஜேர்மனியர்களுக்கு "இன உணர்வு" ஏற்பட்டது. அதற்கு முன்னர் யாருமே தம்மை ஜெர்மனியர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஒன்றில் புரூசியர், ஆஸ்திரியர் என ராஜ்ஜியத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது அவரவர் வாழ்ந்த பிரதேசத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். அல்லது கத்தோலிக்கர், புரட்டஸ்தாந்துக்காரர், யூதர்கள் என்று மதத்தின் பெயரால் அழைக்கப் பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் ஜெர்மன் இனத்தவர்கள் ஒற்றுமையில்லாமல்  தமக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.

ஜெர்மனியர்கள் என்றால் யார்? ஆங்கில மொழியில் ஜெர்மன் என்று அழைக்கப் பட்டாலும், ஜெர்மன்காரர்கள் தம்மை டொய்ச்சே என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி டொய்ச் என்றும், அவர்களது நாடு டொய்ச்லாந்து என்றும் அழைக்கப் படுகின்றது. பிரெஞ்சு, ஸ்பானிஷ் காரர்கள் தமது மொழியில் அலெமான் என்று அழைக்கிறார்கள். ஜெர்மன், அலெமான் என்பன பண்டைய காலத்தில் ஜெர்மனியர்களை குறிக்கப் பயன்படுத்தப் பட்ட பெயர்ச் சொற்கள் தான். அதே நேரம் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர் என்பன கூட ஜெர்மன் இனத்தவரைக் குறிப்பிடும் சொற்கள் தான்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் ரோம சாம்ராஜ்யத்திற்கு வடக்கே வாழ்ந்த மக்கள் நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக கருதப் பட்டனர். ரோமர்கள் அந்த மக்களை "கெர்மானி" (Germani) எனும் பொதுப் பெயரில் அழைத்தனர். அதுவே பிற்காலத்தில் ஆங்கிலத்தில் ஜெர்மனி ஆகியது. ஆனால், கெர்மானி என்பது ஒரே மொழி பேசும், ஒரே இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல. இன்றைய ஜெர்மானியர்கள் மட்டுமல்லாது, டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், சுவீடிஷ்காரர்கள், நோர்வீஜியர்கள் எல்லோரும் ரோமர்களின் பார்வையில் கெர்மானி தான்.

உண்மையில் அன்றிருந்த ஜெர்மன் இனத்தவர்கள் நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. அவர்கள் நகரங்களை கட்டவுமில்லை. அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. அவர்கள் இடி, மின்னல், மரங்கள் போன்றவற்றை வணங்கும் இயற்கை வழிபாட்டை பின்பற்றினார்கள். அத்துடன் ஜெர்மன் இனக்குழுக்கள் அடிக்கடி தமக்குள் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி யுத்தம் செய்து கொண்டிருந்தன. அதனால் பெருந்தொகையிலான அகதிகள் ரோமர்களின் நாட்டுக்குள் தஞ்சம் கோரி இருந்தனர்.

இன்று ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து புலம்பெயரும் அகதிகளை தடுப்பதற்காக, ஐரோப்பியக் கோட்டை எனும் பெயரில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் படுவது தெரிந்ததே. அதே மாதிரியான சூழ்நிலை தான் பண்டைய ரோம சாம்ராஜ்யத்திலும் நிலவியது. இருண்ட ஐரோப்பாவில் இருந்து ஜெர்மன் அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக ரோம சாம்ராஜ்யத்தின் வட புற எல்லைகள் பலப்படுத்தப் பட்டன. தெற்கே சுவிட்சர்லாந்தில் இருந்து வடக்கே நெதர்லாந்து வரை ஓடிக் கொண்டிருக்கும் ரைன் நதி தான், அன்று ரோமர்களின் நாகரிகமடைந்த ஐரோப்பாவையும், ஜெர்மனியர்களின் காட்டுமிராண்டி ஐரோப்பாவையும் பிரிக்கும் எல்லையாக தீர்மானிக்கப் பட்டது.

அதற்காக, ஜெர்மனியர்கள் எல்லோரும் ரோம ராஜ்ஜியத்தின் எல்லைக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்று அர்த்தமில்லை. கணிசமான அளவு ஜெர்மன் இனத்தவர்கள் ஏற்கனவே ரோமப் பேரரசின் குடிமக்களாக உள்வாங்கப் பட்டு விட்டனர். இதற்கு நாம் பெரியளவு யோசிக்கத் தேவையில்லை. ஐரோப்பிய வரைபடத்தில் ரைன் நதிக்கு தெற்கில் உள்ள பிரதேசங்களை பார்த்தாலே போதும். 

அதாவது, இன்றைய நெதர்லாந்தில் ரொட்டர்டாம் நகருக்குக் கீழே உள்ள பகுதியும், பெல்ஜியம் முழுவதும் ரோம நாட்டிற்குள் இருந்தன. அங்கு வாழ்ந்தவர்கள், இன்றைக்கும் கூட, டச்சு மொழி (தற்காலத்தில்: நெடர்லான்ட்ஸ் மற்றும் பிளாம்ஸ்) பேசும் ஜெர்மன் இனத்தவர்கள். அத்துடன் இன்றைக்கு தனிநாடாக உள்ள லக்சம்பேர்க், மற்றும் பிரான்சின் மாகாணமாக உள்ள அல்சாஸ், லோரேன் பிரதேசங்களில் வாழ்பவர்களும் ஜெர்மன் இனத்தவர்கள் தான். இன்றைக்கும் அவர்கள் பேசும் மொழிகள், உண்மையில் ஜெர்மனின் கிளை மொழிகளே!

மேற்குறிப்பிட்ட மக்கள் சமூகத்தினர், ரோம மயமாக்கப் பட்ட ஜெர்மனியர்கள் எனலாம். அவர்களில் படித்தவர்கள் லத்தீன் மொழி பேச, எழுதத் தெரிந்து வைத்திருந்தனர். இந்த "நாகரிக வளர்ச்சி" தான் பிற்காலத்தில், தனித்துவமான ஜெர்மன் மன்னராட்சி தோன்றுவதற்கு அடித்தளம் இட்டது. மத்திய கால ஐரோப்பாவில், அதாவது ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பின்னர், ஒரு அசல் ஜெர்மனியரான கார்ல் சக்கரவர்த்தி கெல்ன் (ஆங்கிலத்தில்: கொலோன்) நகரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். கார்ல் மன்னரின் நிர்வாகம் முழுக்க முழுக்க லத்தீன் மொழியில் தான் நடந்தது. அப்போதும் படித்தவர்கள் லத்தீன் பேசினார்கள். ஜெர்மன் மொழி? அது படிப்பறிவில்லாத பாமரர்கள் பேசும் கீழ்த்தரமான மொழியாக கருதப் பட்டது.

ரோமர்கள் ஆட்சிக் காலத்தில், இருண்ட ஐரோப்பாவை அடிபணிய வைக்கும் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதற்கான போர்களில் ஈடுபட்ட ரோம இராணுவத்தில், கணிசமான அளவில் ஜெர்மன் மொழி பேசும் வீரர்களும் இருந்தனர். ரைன் நதிக்கு அப்பால் சுதந்திரமாக வாழ்ந்த ஜெர்மனியர்களின் பார்வையில், அந்த வீரர்கள் துரோகிகளாக, ஒட்டுக் குழுக்களாக தெரிந்ததில் வியப்பில்லை. இருப்பினும் காலப்போக்கில் "காட்டுமிராண்டி ஜெர்மனியர்களும்" ரோம இராணுவத்தின் கீழ் இயங்கிய கூலிப் படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர்.

"காட்டுமிராண்டி ஜெர்மனியர்கள்" எதற்கும் அஞ்சாத வீரர்களாக இருந்த படியால், அவர்கள் ரோமர்களால் பிரித்தானியா தீவு வரை கொண்டு செல்லப் பட்டனர். அதனால், ரோமர்கள் காலத்திலேயே பெருமளவு ஜெர்மானியர்கள் இன்றைய பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் சென்று குடியேறத் தொடங்கி விட்டனர். அவர்கள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த படியால், அடுத்த வந்த தலைமுறையினர் ஜெர்மன் மொழியை மறந்து விட்டனர். ஏனெனில் பொதுவாக தாய்மார் ஊடாகத் தான் மொழி கடத்தப் படுகின்றது.

மத்திய காலத்தில், கிறிஸ்தவ மத ஆட்சிக் காலத்தில் தான், இன்றைய ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சி அடைந்தன. சாதாரண பாமர மக்களுக்கும் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டிய கட்டாயம் இருந்தமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தேவாலயங்களில் லத்தீன் மொழி பயன்படுத்தப் பட்டாலும், பொது மக்களுக்கு புரியும் மொழியிலும் செயலாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் நடைமுறைக் காரணங்களுக்காக "மக்களின் மொழி" பயன்படுத்தப் பட்டது. அது லத்தீன் மொழியில் தெயோடிசே (Theodisce) என அழைக்கப் பட்டது. அது காலப்போக்கில் மருவி டொய்ச் (Deutsch) ஆனது. பிற்காலத்தில், ஜெர்மனியர்கள் அதையே தமது மொழியின் பெயராக ஏற்றுக் கொண்டு விட்டனர்!

தெயோடிசே தான் ஆங்கிலேயரால் டச்(Dutch) என்றும் அழைக்கப் பட்டது. டச் என்பது நெதர்லாந்து, பெல்ஜியத்தில் வாழும் மக்கள் பேசும் மொழியை குறிப்பிடும் ஆங்கில பெயர்ச் சொல். இன்றைய காலத்தில் டச், டொய்ச் (ஜெர்மன்) இரண்டும் வெவ்வேறு மொழிகளை குறிப்பிடும் சொற்கள். ஆனால் குறைந்தது ஐநூறு வருடங்களுக்கு முன்னராவது அது ஜெர்மனின் கிளை மொழியாக கருதப் பட்டு வந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில், வட ஜெர்மனியில் லுய்பேக் நகரை மையமாகக் கொண்டு ஹான்சே எனும் வணிகர்களின் அமைப்பு இயங்கியது. மேற்கே அன்த்வேர்பன் (பெல்ஜியம்)முதல் கிழக்கே ரீகா (லாட்வியா) வரையில் ஹான்சே வணிகர்களின் பணத்தால் வளர்ந்த நகரங்கள் பல உண்டு. அன்று வர்த்தக நோக்கிற்காக ஒரு பொது மொழி தேவைப் பட்டது.

அப்போது தரப்படுத்தப் பட்ட ஜெர்மன் மொழி, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் "நேடர் டொய்ச்"(தாழ்நில ஜெர்மன்) என்ற பெயரில் புழக்கத்தில் இருந்தது. இன்றைய ஜெர்மனியில் நேடர் டொய்ச் அழிந்து விட்டது. ஆனால் மத்திய காலத்து நேடர் டொய்ச் பிற்காலத்தில் "நெடர் லான்ட்ஸ்" (டச்) என்ற பெயரில் ஒரு தனியான மொழியாகி விட்டது. தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஆப்பிரிகான்ஸ் மொழியும் அதிலிருந்து பிரிந்து சென்ற தனி மொழி தான்.

இதற்கிடையே மத்திய கால ஐரோப்பாவில் இன்னொரு அரசியல்- சமூக மாற்றம் ஏற்பட்டது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னரும் கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாத பல இனங்கள் வாழ்ந்தன. அன்றிருந்த போப்பாண்டவர் அங்கெல்லாம் வாள்முனையில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டுமென்றார். அதற்காக தொய்ட்டன்ஸ் எனப்படும் ஜெர்மன் குதிரைப் படையினரை ஒரு சிலுவைப் போருக்கு அனுப்பினார். கிழக்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜெர்மன் படையினர், பெருமளவு நிலங்களை கைப்பற்றி காலனிப் படுத்தினார்கள். அங்கு பெருமளவு ஜெர்மன் இனத்தவரை குடியேற்றினார்கள். குறிப்பாக இன்றைய போலந்தின் வட மேற்குப் பகுதிகள் ஜெர்மன்மயமாகின.

இன்று போலந்துக்கும், லிதுவேனியாவுக்கும் இடையில் காலினின்கிராட் எனும் பெயரில் ஒரு சிறிய நிலப்பகுதி ரஷ்யாவுக்கு சொந்தமாக உள்ளது. அது ஒரு காலத்தில் கேனிங்க்ஸ்பேர்க் என்ற பெயரில் ஜெர்மனியர்களின் பிரதேசமாக இருந்தது. அன்றைய காலத்தில் வட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இனத்தவர்கள் "நாகரிகமடையாத காட்டுமிராண்டிகளாக" கருதப் பட்டனர். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமர்கள் ஜெர்மனியர்களை பார்த்து நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர். அதே ஜெர்மனியர்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னர், கிழக்கு ஐரோப்பாவில் இயற்கை வழிபாடு செய்த மக்களை நாகரிகமடையாத காட்டுமிராண்டிகள் என்றனர்.

காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வாழ்ந்த மக்களை இந்துக்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்த மாதிரி, அன்றைய ஜெர்மனியர்கள் வட கிழக்கு பிராந்திய மக்களுக்கு "புரூசீ" என்று ஒரு பொதுப் பெயர் சூட்டி இருந்தனர். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அந்த இடங்கள் யாவும் ஜெர்மனியரின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்த பின்னர் "புரூசியா" (Prussia) என அழைக்கப் பட்டது. வெளியுலகில் இருந்தவர்களுக்கு, புரூசியா என்பது ஜெர்மனியை குறிக்கும் ஒத்த கருத்துச் சொல்லாக தென்பட்டது. அங்கிருந்த ஜெர்மனியர்களும் தம்மை புரூசியர்கள் என அழைத்துக் கொண்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இன்றுள்ள ஜெர்மனியின் நிலப்பரப்பை உள்ளடக்கிய புரூசிய சாம்ராஜ்யம் இருந்தது. அப்போது ஐரோப்பா முழுவதும் தேசியவாத கொள்கைகள் செல்வாக்குப் பெறத் தொடங்கி விட்டன. அதனால் ஜெர்மனியர்களின் தேசம் எனும் பொருள்படும் "டொய்ச்லாந்து" என்ற பெயர் சூட்டப் பட்டது. இருப்பினும் "ஜெர்மனியரின் தேசத்தில்" போலிஷ், லிதுவேனிய, இன்னும் பல மொழிகளைப் பேசும் சிறுபான்மையின மக்கள் வாழ்ந்தனர்.

அதைவிட கணிசமான அளவு ஜெர்மன் மொழி பேசும் மக்கள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவும், ஆஸ்திரியாவும் இடையறாது போரில் ஈடுபட்டிருந்தன. அதாவது இரண்டு ஜெர்மன் ராஜ்ஜியங்கள் நீண்ட காலம் பகைமை பாராட்டி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், அதுவும் ரஷ்யா, பிரித்தானியா ஆகிய வல்லரசுகளின் நெருக்குதல் காரணமாக ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அது வரைக்கும், புரூசியாவில், ஆஸ்திரியாவில் வாழ்ந்த யாருக்கும் ஜெர்மன் இன உணர்வு இருக்கவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் புரூசியாவிலும், ஆஸ்திரியாவிலும் வாழ்ந்த ஜெர்மன் மேல்தட்டு வர்க்கத்தினர் பிரெஞ்சு மொழி பேசினார்கள். அந்தக் காலத்தில் அதுவே நாகரிகமடைந்த மொழியாக கருதப் பட்டது. இன்றைக்குப் பலர் ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது மாதிரி, அன்றைய ஐரோப்பிய மேட்டுக்குடியினர் பிரெஞ்சு பேசுவதில் பெருமைப் பட்டனர். இன்றைய ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் உத்தியோகபூர்வ ஜெர்மன் மொழியாக உள்ள ஹோக் டொய்ச் (உயர்ந்த ஜெர்மன்) பிரெஞ்சு மொழியின் நிழலில் வளர்ச்சி அடைந்தது.

"ஜெர்மன் ஷேக்ஸ்பியர்" என்று அழைக்கப் படக் கூடிய இலக்கிய மேதை கோதே கூட பிரெஞ்சு மொழியை உயர்வாகக் கருதினார். பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்த நெப்போலியன் போர்களின் போது ஜெர்மனி முழுமையாக ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்காக எல்லா ஜெர்மனியர்களும் நெப்போலியனை ஓர் அந்நிய ஆக்கிரமிப்பாளராக கருதவில்லை. உண்மையில் நவீன ஜெர்மனியின் அடித்தளம் நெப்போலியனால் (ஒரு பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்) இடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. நெப்போலியன் காலத்தில் இன்றைய ஜெர்மனியின் பெரும்பகுதியை உள்ளடக்கிய "ரைன் சமஷ்டிக் குடியரசு" உருவானது. அங்கு நிலப்பிரபுக்களின் அதிகாரம் பறிக்கப் பட்டது. சட்டத்தின் ஆட்சி ஏற்பட்டது. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற நடைமுறை வந்தது.

1848 ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு புரட்சி நடந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் கொள்கைகளை பின்பற்றிய ஜெர்மன் மத்தியதர வர்க்கத்தினரின் புரட்சி. அவர்கள் அமெரிக்கப் புரட்சியையும் முன்மாதிரியாகப் பார்த்தனர். அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு: 
- மக்கள் பிரதிநிதிகளுக்கான பாராளுமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். 
- அரசமைப்பு சட்டம் எழுதப்பட வேண்டும். 
-பிரஜைகளின் தனி மனித உரிமைகள் குறித்த சட்டம் கொண்டு வர வேண்டும். 
- தடையற்ற ஊடகச் சுதந்திரம் வேண்டும். 

பெர்லினில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான துப்பாக்கிப் பிரயோகத்தில் முன்னூறு பேரளவில் கொல்லப் பட்டனர். அதன் விளைவாக ஜெர்மன் புரட்சி தோல்வியுற்றது. இருப்பினும் அரசு முன்பு போல இயங்க முடியவில்லை. ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கைகளை ஓரளவிற்கேனும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. புதிதாக கொண்டு வரப்பட்ட பாராளுமன்ற அமைப்பில் ஆரம்பத்தில் பழமைவாதக் கட்சிப் பிரதிநிதிகள் மட்டுமே வீற்றிருந்தனர். சில வருடங்களுக்கு பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உருவாக்கப் பட்ட சோஷலிசக் கட்சியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு போட்டியிட்டது.

இந்தக் காலகட்டத்தில் ஜெர்மன் தேசியவாதம் தோன்றியது. அது மொழி அடிப்படையிலான கொள்கையை முன்வைத்தது. வாரிசு உரிமை அடிப்படையில் ஆளும் மன்னர் பரம்பரைக்கு பதிலாக, ஜெர்மன் மக்களே ஜெர்மனியை ஆள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது. அந்தக் காலத்தில் தேசியவாதக் கொள்கை முற்போக்கானதாக கருதப்பட்டது. லிபரல் சித்தாந்தத்தை பின்பற்றியது. ஆனால் ஐரோப்பிய நாடுகளை ஆண்ட மன்னர்கள் தேசியவாதத்தை கண்டு அஞ்சினார்கள்.

தேசியவாதத்திற்கு இடம் கொடுத்தால் தமது அதிகாரம் முடிவுக்கு வந்து விடும் என்று மன்னர்கள் அஞ்சினார்கள். அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த அச்சத்தை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் காலம் மாறிவிட்டிருந்தது. கிழக்கே ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த புரூசிய, ஆஸ்திரிய மன்னர்கள் ஒன்று சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வரலாற்றில் முதல் தடவையாக ஜெர்மன் பேசும் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்தனர். அது ஜெர்மன் தேசியவாதத்தின் எழுச்சிக்கு சாதகமாக அமைந்து விட்டது.

Sunday, September 30, 2018

மசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது?

மசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை இன்றுடன் (30-9-18) முடிவுக்கு வருகிறது. பொது வாக்கெடுப்பில் பெருமளவு மக்கள் ஆம் என்று வாக்களிப்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது. 

இவ்வளவு காலமும் "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான மசிடோனியா" (FYROM) என்ற பெயர் நீக்கப் பட்டு, "வடக்கு மசிடோனியா" என்ற புதிய பெயர் சூட்டப் படும். இது தொடர்பாக மசிடோனியா, கிரேக்க வெளிவிவகார அமைச்சர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஐரோப்பாவில், கடந்த 27 வருடங்களாக, தேசியவாதிகளால் (அல்லது பேரினவாதிகளால்) தீர்க்க முடியாத இனப்பிரச்சினையை இடதுசாரிகள் தீர்த்து வைத்திருக்கிறார்கள். யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த மசிடோனியா (அல்லது மக்கெதோனியா) என்ற புதிய நாட்டிற்கு பெயரிடுவது பற்றிய பிரச்சினை தற்போது தான் (பெருமளவு) ஓய்ந்துள்ளது.

உலகப் பேரரரசை கட்டி ஆண்ட மகா அலெக்சாண்டர் பிறந்த இடம் மசிடோனியா என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எங்கே இருக்கிறது என்பதிலும், அலெக்சாண்டர் காலத்தில் என்ன மொழி பேசினார்கள் என்பதிலும் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. இது குறித்து, ஒரு பக்கம் கிரேக்க தேசியவாதிகளும், மறு பக்கம் மசிடோனியா தேசியவாதிகளும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் மயிர்பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.

இலங்கையில் தமிழரும், சிங்களவரும் (குறிப்பாக தேசியவாதிகள்) இராவணன் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருவார்கள். அதே மாதிரித் தான், கிரேக்கர்களும், மசிடோனியர்களும் (குறிப்பாக தேசியவாதிகள்) அலெக்சாண்டர் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருகிறார்கள். பழம் பெருமை பேசி மகிழ்வதும் ஒரு தேசியவாத கருத்தியல் தான்.

பண்டைய காலத்து மசிடோனியர்கள் கிரேக்க மொழி பேசியதாக கிரேக்க தேசியவாதிகள் நம்புகின்றனர். அதற்கு மாறாக அவர்கள் தனியான மசிடோனிய மொழி பேசியதாக மசிடோனியா தேசியவாதிகள் நம்புகிறார்கள். இருப்பினும், இன்றைய மசிடோனிய மொழி கிரேக்க மொழியுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.

சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர், அதாவது அலெக்சாண்டர் காலத்திற்கு பின்னர் தான், தென் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்லாவிய மொழி பேசும் மக்களின் இனப் பரம்பலும், ராஜ்ஜியங்களும் தோன்றின. பல நாடுகளில் மொழிக்கும் இனத்திற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மசிடோனியாவில் வாழ்ந்த பண்டைய இன மக்களில் ஒரு பகுதியினர் கிரேக்கர்களாகவும், இன்னொரு பகுதியினர் ஸ்லாவியர்களாகவும் மாறி இருக்கலாம்.

இன்றைய மசிடோனியா மொழியும், பல்கேரிய மொழியும் ஒன்று தான். வித்தியாசம் மிகக் குறைவு. தமிழ்நாட்டுத் தமிழும், ஈழத் தமிழும் போன்றது. இருப்பினும் மசிடோனியர்கள் தாம் தனித்துவமான மொழி பேசுவதாக உரிமை கோருகிறார்கள். பல்கேரியர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், வல்லரசுகளின் தலையீடு காரணமாக, மசிடோனியாவின் அரைவாசிப் பகுதி கிரேக்க நாட்டிற்கு சொந்தமானது. மிகுதிப் பகுதி யூகோஸ்லாவியாவுடன் இணைக்கப் பட்டது. இன்று கிரேக்க மாகாணமாக உள்ள மசிடோனிய பகுதிகளில் வாழ்ந்த, மசிடோனிய மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப் பட்டனர். அவர்கள் யூகோஸ்லேவிய மாசிடோனியாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டனர்.

1991 ம் ஆண்டு யூகோஸ்லேவியாவில் இருந்து மசிடோனியா தனியாக பிரிந்து சென்றது. ஆனால் அது ஐ.நா. சபையில் சேர்வதற்கு கிரீஸ் தடைபோட்டது. பின்னர், "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசு" என்ற அடைமொழியுடன் சேர்த்துக் கொள்ள சம்மதித்தது. இருப்பினும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளில் சேர விடாமல், கிரீஸ் தொடர்ந்தும் வீட்டோ உரிமையை பயன்படுத்தி தடுத்து வந்தது. 

மசிடோனியாவுக்கு உரிமை கோரும் கிரேக்க தேசிய (பேரின)வாதிகளின் சுவரொட்டி 

கடந்த கால் நூற்றாண்டு காலமாக, மசிடோனியா தேசியவாதிகளும், கிரேக்க தேசியவாதிகளும் விட்டுக்கொடாமல் எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தனர். அதனால் பெயர் தொடர்பான சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. அண்மையில், கிரேக்க நாட்டில் ஆட்சி பீடம் ஏறிய பிரதமர் சிப்ராசின் இடதுசாரி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது. உலகில் எந்த நாடாக இருந்தாலும், பொதுவாக இடதுசாரிகள்  கடும்போக்கு தேசியவாதிகளின்  விதண்டாவாதங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

கிரீசில் ஆளும் சீரிஸா இடதுசாரி அரசு, "வடக்கு மசிடோனியா" என்ற பெயரை ஏற்றுக் கொள்வதாகவும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு சம்மதிப்பதாகவும் அறிவித்தது. இது தொடர்பாக மசிடோனியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் விளைவாகத் தான் பொது வாக்கெடுப்பு நடக்கிறது. இருப்பினும் தேசியவாதிகள் இன்று வரைக்கும் எதிர்ப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் தேசியவாதிகளின் பேச்சைக் கேட்டால் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது. பிரச்சினை தீர்ந்தால் அவர்களது இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் தீவிரமாக எதிர்ப்பு அரசியல் செய்வார்கள். அதனால், தேசியவாதிகளை புறக்கணித்து ஒதுக்கி விட்டுத் தான் தீர்வு ஒன்றைக் காண முடியும். மசிடோனியா பிரச்சினையும் அதைத் தான் நிரூபிக்கின்றது.

Tuesday, May 09, 2017

சுயநிர்ணயம் என்பதன் அர்த்தம் அமெரிக்காவின் அடிமை நாடாவதல்ல!


சுய‌நிர்ண‌ய‌ம் என்ப‌து பிரிந்து த‌னி நாடாகி, பின்ன‌ர் அமெரிக்காவுக்கு அடிமை சாச‌ன‌ம் எழுதிக் கொடுப்ப‌த‌ல்ல‌. லெனின் கூறிய‌ பிரிந்து செல்வ‌த‌ற்கான‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை என்ப‌தன் அர்த்த‌ம், புதிய‌ முத‌லாளித்துவ‌ குடிய‌ர‌சுக‌ளை உருவாக்குவ‌த‌ல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில் ப‌ல‌ர், தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்லாது, சில தமிழ் இடதுசாரிகளும் த‌வ‌றாக‌ நினைத்துக் கொள்கிறார்க‌ள்.

சார் மன்னன் காலத்தில் ஒரே நாடாக இருந்த ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு நடந்த புரட்சியின் விளைவாக உள்நாட்டுப் போர் மூண்டது. ஆரம்பத்தில் தலைநகரும் அதை அண்டிய பகுதிகளும் தான் போல்ஷெவிக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சார் மன்னனுக்கு விசுவாசமான வெண் படைகள் ரஷ்யாவின் பிறபகுதிகளில் ஆதிக்கம் செலுத்தின.

அந்த நிலையில், முதலாம் உலகப்போரை முடித்து வைக்கும் வகையில், 1918 ம் ஆண்டு, ஜெர்மனியுடன் Brest - Litovsk எனும் இடத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப் படி, ரஷ்யாவின் மேற்கே இருந்த நாடுகள் ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் விடப் பட்டன. எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, பெலாரஸ், உக்ரைன் ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜெர்மனியுடன் பொருளாதாரத் தொடர்புகளை கொண்டிருந்தன. அதனால், ஜெர்மனி அவற்றை தனது செல்வாக்கு மண்டலமாக கருதியது.

1919 ம் ஆண்டு, ஜெர்மனி முற்றாகத் தோற்கடிக்கப் பட்ட பின்னரும், அவை தனி நாடுகளாக தொடர்ந்திருந்தன. இரண்டாம் உலகப்போரில் தான், அந்த நாடுகள் மீண்டும் சோவியத் யூனியனின் பகுதிகளாக ஒன்று சேர்க்கப் பட்டன. அந்தக் காலகட்டத்தில் தனி நாடுகளான பின்லாந்து, போலந்து ஆகிய இரண்டும் தொடர்ந்து சுதந்திரத்தை பேணுவதற்கு அனுமதிக்கப் பட்டன.

அதே நேரம், ஆர்மேனியா, ஜோர்ஜியா, அஸ‌ர்பைஜான் ஆகிய‌ நாடுக‌ள் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்துட‌ன் உட‌ன்ப‌டிக்கை செய்து கொண்டு த‌னி நாடுக‌ளாக‌ மாறின. அந்த‌க் கால‌த்திலும் "ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌ம்" என்ப‌த‌ன் அர்த்த‌ம் முத‌லாளித்துவ‌- ஏகாதிப‌த்திய‌ நாடுக‌ள் தான்.

ஜோர்ஜியாவில், தேசியவாதிகள் தலைமையில் ஒரு   மேற்கத்திய பாணி பாராளுமன்றம் உருவானது. அந்த அரசில் ஜோர்ஜிய சமூக ஜனநாயகக் கட்சி பங்குபற்றியது. அதே நேரம், ஜோர்ஜிய கம்யூனிஸ்ட் கட்சி போல்ஷெவிக் புரட்சியாளர்களை ஆதரித்தது.

மேற்படி தனி நாடுகள், குறைந்தது ஒரு வருடமாவது சுதந்திரமாக இருந்துள்ளன.  மேற்கத்திய முதலாளித்துவ வல்லரசுகள், அவற்றின் சுதந்திரத்தை பாதுகாத்தன. ரஷ்யாவில் புரட்சிக்குப் பின்னர் உருவான கம்யூனிஸ்ட் அரசை ஒடுக்குவதற்கு, அந்த நாடுகளின் பூகோள அமைவிடம் பெரிதும் உதவியது.

அதாவது, அன்று ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரில், கம்யூனிசப் புரட்சிகர அரசை எதிர்த்துப் போரிட்டவர்கள், சார் மன்னனுக்கு விசுவாசமான படையினர் மட்டுமல்ல. பிரித்தானியா, பிரான்ஸ், செக்கோஸ்லோவாக்கியா என்று பன்னாட்டுப் படைகள் களமிறங்கி இருந்தன. ஒவ்வொருவரும் தமக்கென சில பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தனர். அத்தகைய குழப்பமான நிலையில் தான், மேற்படி நாடுகள் சுதந்திரமாக இருக்க முடிந்தது. அது மட்டுமல்ல, செச்னியா போன்ற ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் தனிநாட்டு விடுதலைக்கான போராட்டங்கள் நடந்தன.

லெனின் த‌லைமையிலான‌ போல்ஷேவிக்- கம்யூனிஸ்ட் க‌ட்சியின‌ர், அந்த‌ நாடுக‌ளில் ஏற்க‌ன‌வே இருந்த உள்நாட்டு க‌ம்யூனிஸ்டுக‌ளுட‌ன் தொட‌ர்புக‌ளை எற்ப‌டுத்திக் கொண்ட‌ன‌ர். துருக்கிஸ்தான் போன்ற இஸ்லாமிய மத்திய ஆசிய பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் யாரும் இருக்கவில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில் பழமைவாத மதவாதிகளுக்கு எதிரான, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் இனங்கண்டு ஊக்குவிக்கப் பட்டன. தமக்கு ஆதரவளித்தால், அவர்களை பதவியில் அமர்த்துவதாக கம்யூனிஸ்ட் செம்படை உறுதியளித்தது.

ரஷ்யாவில் நூற்றுக் கணக்கான வேறுபட்ட தேசிய இனங்கள் இருந்தன. மன்னராட்சிக் காலத்தில் அவை யாவும் ரஷ்யக் காலனிய நாடுகளாக இருந்தன. ஆர்மேனியா, ஜோர்ஜியா போன்ற வளர்ச்சி அடைந்த தேசிய இனங்களை கொண்ட நாடுகள் தாமாகவே தேசிய அரசுக்களை அறிவித்துக் கொண்டன. அதே நேரம், மத்திய ஆசியாவில் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், சுல்த்தான் அரசாட்சியை கொண்டு வர முயன்றனர்.

அந்த நாடுகளில் எல்லாம், போல்ஷெவிக் கட்சிக்கு ஆதரவான அரசியல் சக்திகள் ஊக்குவிக்கப் பட்டன. ஆட்சிப் பொறுப்பேற்ற தேசியவாதிகள், மற்றும் மதவாதிகளுக்கு எதிராக அவர்களை கிள‌ர்ச்சி செய்ய‌ ஊக்குவித்தனர். ச‌ரியான த‌ருண‌த்தில் செம்படையை அனுப்பி ஆட்சியை கைப்ப‌ற்றினார்க‌ள். பின்ன‌ர் அவை ஒவ்வொன்றாக இணைக்க‌ப் ப‌ட்டு, 1922 ம் ஆண்டு, தனித்தனி சோவிய‌த் குடிய‌ர‌சுக‌ளாக‌ பிரிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.

செம்படையின் இராணுவ வெற்றி மட்டும் அதற்குக் காரணம் அல்ல. போரில் வென்ற பின்னர், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப் படும் என்று லெனின் வாக்குறுதி அளித்தமையும் ஒரு முக்கிய காரணம். சுயநிர்ணய உரிமை தொடர்பாக கட்சிக்குள் ஒருமித்த கருத்து நிலவவில்லை. அது அளவு கடந்தால் மார்க்சிய சர்வதேசியத்தை பாதிக்கும் என்று பலர் வாதாடினார்கள். 

சுயநிர்ணய உரிமையானது பல்லின மக்களுக்கானது மட்டுமே. அதன் அர்த்தம், அந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்ட தேசியவாத இயக்கங்கள் சுதந்திரமாக இயங்கலாம் என்பதல்ல. மக்கள் விரோதிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டவர்களில் பல்வேறுபட்ட  தேசியவாதிகளும் அடங்கி இருந்தனர். ரஷ்ய பேரினவாதியாக இருந்தாலும், ஏதாவதொரு சிறுபான்மையினத்தை சேர்ந்த குறுந் தேசியவாதியாக இருந்தாலும் தண்டனை ஒன்று தான்.

சோவியத் யூனியனை கட்டியெழுப்பும் பணியில், Narkomnats என்ற சுருக்கப் பெயரிலான தேசிய விவகாரங்களுக்கான மக்கள் அதிகார சபை குறிப்பிடத் தக்க பங்காற்றியது. முன்பு சார் மன்னனின் கீழ் பணியாற்றிய மானிடவியல் அறிஞர்கள், தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளை ஏற்று வேலை செய்தனர். ரஷ்யாவில் எத்தனை தேசிய இனங்கள் உள்ளன என்பதைக் கண்டறிவதற்கு அவர்களது உதவி தேவைப் பட்டது.

துறை சார்ந்த அறிஞர்கள், சோவியத் யூனியன் முழுவதும் பயணம் செய்து, பல்லின மக்களிடம் கேள்விக் கொத்துக்களை கொடுத்து நிரப்பிக் கொண்டனர். இனத்தின் பெயர், மொழியின் பெயர், நிரந்தரமான வாழிடம், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டனர். அதன் அடிப்படையில் எல்லைகள் பிரிக்கப் பட்டன.

தேசிய‌ங்க‌ளை பிரித்து, தேசிய‌ எல்லைக‌ளை தீர்மானித்து, சுய‌நிர்ண‌ய‌மும் வ‌ழ‌ங்கி விட்டால், அத‌ற்குப் பிற‌கு அந்த‌ நாடுக‌ள் என்ன‌ வேண்டுமானாலும் செய்து கொள்ள‌லாம் என்று அர்த்த‌ம் அல்ல‌. Gosplan என்ற‌ அர‌ச‌ திட்டமிடல் அதிகார சபை, சோவியத் நாடு முழுவதற்குமான பொருளாதார‌க் க‌ட்ட‌மைப்பை வ‌குத்த‌து. அது சந்தேகத்திற்கிடமின்றி சோஷ‌லிச பொருள் உற்ப‌த்தி முறையை கொண்டிருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ங்க‌ளின் தாயகங்களில் இருந்த சிறு கிராம‌ங்க‌ள் கூட‌, பொதுவுடைமைக் கூட்டுற‌வுப் ப‌ண்ணைத் திட்ட‌த்திற்கு த‌ப்ப‌வில்லை. ஏனெனில், சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்திற்குள், இன்னொரு சிறுபான்மை தேசிய இன‌ம் இருக்க‌லாம். அவ‌ர்க‌ள் பாதிக்க‌ப் ப‌ட‌க் கூடாது. எந்த‌ இன‌த்தை சேர்ந்த‌வ‌ராக‌ இருந்தாலும், ச‌ம‌ உரிமை கொண்ட‌ ம‌னித‌ர்க‌ளாக‌ ம‌திக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

குறிப்பிட்ட‌ ஒரு தேச‌ம் விரும்பிய‌வாறு பொருளாதார‌ முடிவெடுக்க‌ விட்டிருந்தால், அது முத‌லாளித்துவ‌த்தை நாடிச் சென்றிருக்கும். அத‌ற்குப் பின்ன‌ர் அந்த‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை கொண்ட‌ தேச‌த்தில், இன்னொரு இன‌ம் ஒடுக்க‌ப் ப‌டும். இப்ப‌டியான‌ விரும்ப‌த் த‌காத‌ விளைவுக‌ள் த‌டுக்க‌ப் ப‌ட‌ வேண்டும். பாட்டாளிவ‌ர்க்க‌ ச‌ர்வ‌தேசிய‌மே அத‌ற்கு நிர‌ந்த‌ர‌ தீர்வு த‌ரும்.

//அக்டோப‌ர் புர‌ட்சியான‌து முத‌லாளிகளையும், நில‌வுட‌மையாள‌ர்க‌ளையும் வீழ்த்திய‌தால், ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ தேசிய‌ இன‌ ம‌க்க‌ளின் தேசிய‌, கால‌னிய‌ அடிமைச் ச‌ங்கிலி உடைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌னால், அனைத்து ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளும் ஒருவ‌ர் த‌வ‌றாது விடுத‌லை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஒடுக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை விடுத‌லை செய்யாம‌ல் பாட்டாளிவ‌ர்க்க‌ம் த‌னது விடுத‌லையை பெற்றுக் கொள்ள‌ முடியாது. அக்டோப‌ர் புர‌ட்சியின் குண‌விய‌ல்பு பின்வ‌ருமாறு அமைந்திருந்த‌து.

ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லையான‌து, தேசிய‌ங்க‌ளுக்கு இடையிலான‌ வெறுப்புண‌ர்வு, இன‌ மோத‌ல்க‌ளை கொண்டிருக்க‌வில்லை. அத‌ற்கு மாறாக, ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளை சேர்ந்த‌ தொழிலாள‌ர்க‌ள், விவ‌சாயிக‌ளின்‌ ப‌ர‌ஸ்ப‌ர‌ ந‌ம்பிக்கை, ப‌ர‌ஸ்ப‌ர‌ ச‌கோத‌ர‌த்துவ‌ம் மூல‌ம் விடுத‌லை பெற்றுக்கொள்ள‌ப் ப‌ட்ட‌து.

தேசிய‌வாத‌த்தின் பெய‌ரால் அல்ல‌, ச‌ர்வ‌தேசிய‌த்தின் பெய‌ரால் தான் ப‌ல்வேறு தேசிய‌ இன‌ங்க‌ளின் விடுத‌லை சாத்தியமாகிய‌து.//

- ஸ்டாலின் (அக்டோப‌ர் புர‌ட்சி நூலில் இருந்து.)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, April 21, 2017

தமிழ்த் தேசியவாதிகளுக்கு, லெனின் தேசியம் பற்றி என்ன சொன்னார்?


"தேசியம் பற்றி லெனின் என்ன சொன்னார்?"

இப்படி ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகளின் உண்மையான நோக்கம், "லெனின் கூட ஒரு தேசியவாதி" என்று குறுக்குவது தான். லெனின் ஒரு சர்வதேசியவாதி என்பதை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியுள்ளது. தேசியவாதம் என்பது உள்நோக்கிப் பார்க்கும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம். அதற்கு மாறாக, சர்வதேசியவாதம் என்பது உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக கருதும் பரந்த மனப்பான்மை கொண்ட சிந்தனாவாதம்.

பொதுவாக தேசியவாதிகளின் உலகம் தேசியங்களால் மட்டுமே ஆனது. இந்தப் பூமியில் எல்லோருக்கும் தனித் தனி தேசங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. "ஒவ்வொரு மொழி பேசும் இனத்திற்கும் தனித்தனியாக தேசங்கள் உள்ளன. தமிழருக்கு மட்டும் தான் இன்னும் ஒரு நாடு இல்லை. அதுவும் வந்து விட்டால், உலகில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்காது." இது தான் அவர்களது உலகப் பார்வை.

இதிலிருந்து தான் அவர்களது கருத்துக்களும், கேள்விகளும் பிறக்கின்றன. உலகில் உள்ள எல்லா தேசியவாதியும் தான் சார்ந்த இனத்திற்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக நினைத்துக் கொள்வான். தங்களது பிரச்சினை, உலகில் வேறெந்த மக்கள் குழுக்களுடனும் ஒப்பிட முடியாத அளவு தனித்துவமானது என்று கருதுவார்கள்.

உலகில் உள்ள ஒவ்வொரு தேசியவாதியும், தங்களது இனம், மொழி, இருப்பிடம் அழிக்கப் படுகின்றது என்று சொல்வார்கள். பணக்கார மேற்குலக நாடுகளில் வாழும் தேசியவாதிகளும் அப்படித் தான் சொல்லிக் கொள்வார்கள். "தெற்காசிய, ஆப்பிரிக்க மக்கள் லண்டன் நகர் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டார்கள்... இஸ்லாம் வேகமாகப் பரவுகின்றது... ஆங்கிலம் அழிகிறது..." இவ்வாறு ஆங்கிலேய தேசியவாதிகள் முறையிடுவதைக் கேட்கலாம்.

தேசியம் பற்றி லெனின் என்ன சொன்னார்? லெனின் ஒரு தேசியவாதி அல்ல, மாறாக சர்வதேசியவாதி. பாட்டாளிவர்க்க சர்வதேசியம் அவரது குறிக்கோள். அதாவது, "பாட்டாளி வர்க்கத்திற்கு தேசம் கிடையாது" என்ற மார்க்ஸின் கூற்றை ஏற்றுக் கொண்ட ஒருவர் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இதை நாங்கள் லெனின் என்ற தனி மனிதனின் கருத்துக்களாக பார்ப்பதை விட, போல்ஷெவிக் (கம்யூனிஸ்ட்) கட்சியின் கொள்கையாக பார்ப்பது தான் சிறந்தது. ஒரு சிலர், போலந்து, நோர்வே தொடர்பாக லெனின் எழுதிய கடிதங்களை மேற்கோள் காட்டிப் பேசலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இருந்த ஐரோப்பாவில், அவை இரண்டும் சர்வதேச பிரச்சினையாக கருதப் பட்டவை.

உதாரணத்திற்கு போலந்து தேசத்தை அங்கீகரிப்பது தொடர்பான கருத்து முரண்பாடுகள், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச மகாநாடுகளில் எதிரொலித்தன. ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பெரியதொரு ராஜ்ஜியமாக இருந்த போலந்து, பிற்காலத்தில் ஜேர்மனி, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்களின் விஸ்தரிப்பால் மூன்று துண்டுகளாகப் பிளவு பட்டிருந்தது.

சுருக்கமாக, இன்றைக்கு இஸ்ரேல்/பாலஸ்தீனம் ஒரு சர்வதேசப் பிரச்சினையாக இருப்பது மாதிரித் தான், அன்றைக்கு போலந்து இருந்தது. அன்று ஐரோப்பாவில் கூடிய சர்வதேச மகாநாடுகளில், போலந்தை விடுதலை செய்யுமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டு வந்தது. ரஷ்யாவின் போர்வெறியை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்த ரஷ்யக் கம்யூனிஸ்டுகள், தமது வர்க்க எதிரிகளான ரஷ்யப் பேரினவாதிகளின் நிலைப்பாட்டுக்கு மாறாக போலந்து விடுதலையை ஆதரித்து வந்தனர்.

ஆகவே, போலந்து தொடர்பாக லெனின் தெரிவித்த கருத்துக்களை, தேசியம் தொடர்பான லெனினின் பொதுவான நிலைப்பாடாக ஏற்றுக் கொள்ள முடியாது. அன்று போல்ஷெவிக் கட்சிக்குள், தேசியம் தொடர்பான கொள்கை வகுக்கும் வேலை ஸ்டாலினிடம் ஒப்படைக்கப் பட்டது. எதற்காக ஸ்டாலினை தேர்ந்தெடுத்தார்கள்? அந்தக் காலகட்டத்தில், வியன்னாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஸ்டாலின், அந்நகரில் வாழ்ந்த பல்லின மக்களுடன் தொடர்பேற்படுத்தி தேசிய இனப் பிரச்சினை பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார்.

அன்று ஆஸ்திரியாவில் மன்னராட்சி இருந்தது. அதன் கீழ் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்து வந்தன. அந்த நேரத்தில், ஆட்சியதிகாரத்தில் இல்லாத போதிலும், ஆஸ்திரிய சமூக ஜனநாயகக் கட்சி மாத்திரம், தேசிய இனங்களின் கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருந்தது. ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் பல்லின மக்கள் குடியேறி இருந்தனர். போஸ்னியா, குரோவாசியா போன்ற பெரும்பாலான யூகோஸ்லேவிய பகுதிகள் ஆஸ்திரியா சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தன. அந்தப் பிரதேசத்தில் தேசியவாத இயக்கங்கள் எழுச்சி பெற்றிருந்தன. அன்று அது சர்வதேச (ஐரோப்பிய)பிரச்சினையாக விவாதிக்கப் பட்டது.

போல்ஷெவிக் கட்சியில், தேசியம் தொடர்பாக இரண்டு வகையான நிலைப்பாடு இருந்தது. அது அன்றைய காலகட்டத்து அரசியல் - வரலாற்று - பொருளாதார நிலைமைகள் காரணமாக உருவானது. எதையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதே சிறந்தது.

தேசியத்தை குறிக்க ரஷ்ய மொழியில் இரண்டு சொற்கள் உள்ளன.
1.நரோட்னிநொஸ்க் 
2.நாட்சீ

நரோட்னிநொஸ்க் என்ற சொல், சார் மன்னன் காலத்தில் புவி இயல், மானிடவியல் அறிஞர்களால் பாவிக்கப் பட்டது. ரஷ்ய மொழியில் நரோட்னி என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே, இதை தமிழில் "மக்கள் குழுமம், இனக்குழு" என்று மொழிபெயர்க்கலாம்.

போல்ஷேவிக்குகளை பொறுத்தவரையில், நரோட்னிநொஸ்க் சைபீரியாவில் வாழ்ந்த பழங்குடி இன மக்களுக்கு பொருத்தமான சொல். ஆனால், போலந்து, ஜோர்ஜியா, உக்ரைன் போன்ற முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளில் வாழ்ந்த மக்களை வேறுபடுத்திப் பார்த்தனர். அவர்களது அரசியல் மேற்கத்திய மயப் பட்டிருந்தது. அங்கு ஏற்கனவே தேசியவாத கட்சிகள் உருவாகி இயங்கத் தொடங்கி இருந்தன.

இங்கே ஓர் உண்மையை நாங்கள் மறந்து விடலாகாது. தமிழில் தேசியம் என்ற கருத்தியல் மட்டுமல்ல, அதைக் குறிக்கும் எந்தச் சொல்லும் பாவனையில் இருக்கவில்லை. அது ஒரு சமஸ்கிருதச் சொல். 19 ம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த தமிழருக்கு தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது. 

உண்மையில், தேசியவாதம் என்ற அரசியல் சித்தாந்தம் ஒரு மேலைத்தேய இறக்குமதி ஆகும்! (தமிழ்த் தேசியவாதிகள் இதனை ஏற்றுக் கொள்ள சங்கடப் படுவார்கள்.) ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் தான், முதன்முதலாக தேசியவாத சிந்தனைகள் தோன்றின. பிரெஞ்சுப் புரட்சியின் விளைபொருளாக வந்தது தான் தேசியம். பிரெஞ்சு மொழியில் nationalité என்று சொல்வார்கள். 

நெப்போலியன் நடத்திய போர்களின் விளைவாக ஐரோப்பா முழுவதும் தேசியவாதக் கருத்துக்கள் பரவின. அது பின்னர் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் உலகம் முழுவதும் கொண்டு செல்லப் பட்டது. ரஷ்யா, உட்பட பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் 19 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தான் தேசியம் பற்றிய கருத்தியல் பரவியது. 

தேசியம் என்பது, ஐரோப்பிய வரலாற்று கால கட்டத்தில், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து உருவானது. ஆகையினால், லெனின் மற்றும் போல்ஷெவிக் கட்சியினர், "நாஷியோநாலிட்டே" என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து வந்த "நாட்சீ" என்ற சொல்லை தெரிவு செய்தனர். ஜெர்மன், டச்சு போன்ற பிற ஐரோப்பிய மொழிகளிலும் "நாட்சீ" என்றே அழைக்கப் படுகின்றது.

19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்த காலத்தில், அதற்குள் வாழ்ந்த பிற மொழி பேசும் இனங்களைப் பற்றி ஆராய்ந்து படிக்கும் ஆர்வமும் அதிகரித்தது. அதே காலகட்டத்தில், பிரித்தானியாவிலும், பிரான்ஸிலும் மானிடவியல் துறை வளர்ச்சி அடைந்திருந்தது. அங்கிருந்து வெளியான அறிவியல் நூல்களும் ரஷ்யாவில் விரும்பிப் படிக்கப் பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் இருந்த உலகப் பார்வை அந்தளவு விசாலமானதாக இருக்கவில்லை. நாகரிகம் தொடர்பாக ஒரு பக்கச் சார்பான கருத்துக்கள் நிலவின.

நாங்கள் இன்றைக்கு தமிழர், சிங்களவர், தெலுங்கர் என்றால் தனியான (தேசிய) இனங்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், இந்தியாவும், இலங்கையும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்தில், அன்று யாரிடமும் தேசிய இன உணர்வு இருக்கவில்லை. காலனிய மக்களை ஆய்வு செய்ய சென்ற, ஆங்கிலேய மானிடவியல் அறிஞர்கள் பார்வையில், இந்தியா அல்லது இலங்கையில் வாழ்ந்த அனைத்து மக்களும் இனக்குழுக்களாக தெரிந்தனர். அதாவது, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் "அவர்கள் அனைவரையும்  (ஐரோப்பிய) நாகரிகத்தை கற்றுக் கொள்ள வேண்டிய பழங்குடி இனமாக" கருதினார்கள். அவர்களை நாகரிக மயப் படுத்துவது, "வெள்ளையர்களின் கடமை" (White men's Burden) என்று சொல்லிக் கொண்டனர்.

ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் புவியியல், மானிடவியல் துறைகளில் படித்தவர்களுக்கும், மொத்தம் எத்தனை மொழி பேசும் இனங்கள் உள்ளன என்ற விபரம் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு இன்னொரு சிக்கலும் இருந்தது. சார் மன்னனின் தீவிரமான ரஷ்ய மயமாக்கல் கொள்கை காரணமாக, பல சைபீரிய பூர்வகுடி மக்கள் ரஷ்யர்களாக மாறி இருந்தனர். புள்ளிவிபரக் கணக்கு எடுத்தால், அவர்கள் தங்களை ரஷ்யர்கள் என்றே சொல்லிக் கொண்டனர். இதிலிருந்து தேசியம் தொடர்பாக ஒரு வளர்ச்சி அடைந்த கருத்தியல் உருவானது.

தேசியம் என்பது குறிப்பிட்ட மொழி சார்ந்தது அல்ல. தேசியம் தொடர்பாக கருத்துரைத்த மானிடவியல் அறிஞர்கள், ஐரிஷ் மக்களை உதாரணமாகக் காட்டினார்கள். நீண்ட காலமாக ஆங்கிலேய காலனியாக இருந்த படியால், ஐரிஷ் மக்கள் தமது மொழியை முற்றாக மறந்து விட்டனர். அவர்கள் (இன்றைக்கும் கூட) ஆங்கிலத்தை தாய்மொழியாகப் பேசி வந்தனர். இருப்பினும், அந்த மக்கள் மத்தியில் தாம் தனித்துவமான கலாச்சாரம் கொண்டவர்கள் என்ற உணர்வு இருந்தது. அதுவே ஐரிஷ் தேசியம் உருவாகக் காரணமாக இருந்தது.

தேசியம் என்பது ஒரே இனத்தைக் குறிப்பதில்லை. உண்மையில், தேசிய இனம் ஆயிரமாயிரம் வருடங்களாக மாறாத தன்மை கொண்டது என்ற கோட்பாடு ஒரு ஜெர்மன் கவிஞரின் சிந்தனையில் எழுந்தது. யோஹான் ஹெர்டர் (Johann Gottfried Herder, 1744 – 1803) கூறிய வரைவிலக்கணப் படி, "Volk" (உச்சரிப்பு: Folk) என்பது மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்களில் வெளிப்படும் பொதுவான மக்கள் குழுமத்தின் ஆன்மாவைக் குறிக்கும். இன்றைக்கு அதைத் தான் இனவாதிகள் பின்பற்றி வருகின்றனர். (நாஸிகளும் Volk என்பதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தனர்.) ஆகவே, தேசிய இனம் வேறு, இனம் வேறு. இரண்டுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.

1913 ம் ஆண்டு, ஸ்டாலின் எழுதிய தேசியக் கோட்பாடு ரஷ்ய போல்ஷெவிக் கட்சியால் ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஆரம்பத்தில் அது விவாதத்திற்கு விடுவதற்காக எழுதப் பட்டிருந்தாலும்,பிற்காலத்தில் அதுவே கட்சியின் சித்தாந்த நூலாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. ரஷ்யாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளும், தேசிய கொள்கை வகுப்பாளர்களும், தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஸ்டாலின் எழுதிய நூலை படிக்கத் தொடங்கினார்கள்.

அந்த நூலில் ஸ்டாலின், "தேசியம் என்பது ஓர் இனத்தை (race) அல்லது இனக்குழுவை (tribe) குறிப்பதல்ல" என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றார். அதற்கு மாறாக, வரலாற்று ரீதியாக வளர்ச்சி அடைந்த, பல்வேறு இனங்களையும், இனக்குழுக்களையும் ஒன்று சேர்த்து உருவான சமூகம் தான் தேசியம். பொதுவான மொழி, பொதுவான கலாச்சாரம், பிரதேசத்தை கொண்ட மக்கள் சமூகத்தின் உறுப்பினர்கள், பொது மனப்பான்மை ஒன்றை பகிர்ந்து கொள்கின்றனர். அது அவர்களது கலாச்சாரத்தில் எதிரொலிக்கும்.

இருப்பினும், அவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் அல்ல. பல்வேறு இனங்களை கொண்டது ஒரு தேசியம். அதற்கு ஸ்டாலின் பிரெஞ்சு தேசியத்தை உதாரணமாகக் காட்டுகின்றார். ரோமர்கள், கோலியர்கள், பிரித்தானியர்கள் (இன்றைய பிரிட்டன் அல்ல), டோயட்டானியர்கள் போன்ற பல்வேறு இனங்களின் கலவை அது. அதே மாதிரித் தான் இத்தாலிய தேசியத்தில் ரோமர்கள், எத்ருஸ்கன், கிரேக்கர்கள், அரேபியர்கள் என்று பல்வேறு இனங்கள் ஒன்று கலந்துள்ளன.

லெனினின் கண்ணோட்டத்தின் படி, தேசியம் என்பது முதலாளித்துவ அபிவிருத்திக் காலத்திற்கு உரியது. அதாவது, ஒரு தேசிய இனம் முதலாளித்துவ பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி அடைந்திருக்கும். அது வர்க்க முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கும். சுருக்கமாக, 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த தேசியங்களின் மாதிரியை பின்பற்றும்.

"லெனின் என்ன சொன்னார்?" என்று கேட்கும் தமிழ்த் தேசியவாதிகள், அதற்கு முதலில் லெனினின் தர்க்கீக வாதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்: 
1. தமிழர் என்பது பல்வேறு இனங்கள் கலந்து உருவான தேசிய இனம். 
2. தமிழ்த் தேசிய இனத்தில் வர்க்க முரண்பாடுகள் இருக்கும்.


Saturday, January 08, 2011

காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?] (பகுதி : 3)

2003 ம் ஆண்டளவில் என்று நினைக்கிறேன். அமெரிக்கா, ஈராக் போருக்கு தயார் படுத்திக் கொண்டிருந்த காலகட்டம். பெல்ஜியத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடும் நாடுகளையும் அமைப்புகளையும் ஆதரிக்கும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இன்று பனிப்போர் கிடையாது. அதனால் மார்க்சிய சித்தாந்தப் படி நடக்கும் தேசத்துடன், அல்லது அமைப்புடன் மட்டும் நட்பை பேணுவோம் என்று கூற முடியாது. ஆகையினால் காலத்திற்கேற்ப தந்திரோபாயங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பெல்ஜியத்தில் நடந்த கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. தமது கட்சியின் தலைமை சதாமின் ஈராக்கை ஆதரிப்பதையிட்டு கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதைப் போன்றே, மத அடிப்படைவாத ஹமாஸ் பக்கம் நிற்பதையும் பலர் எதிர்த்தார்கள். இதை எல்லாம் ஏன் இங்கே கூறுகின்றேன் என்றால், "கம்யூனிஸ்ட்கள் கண்ணை மூடிக் கொண்டு, எந்த வித விமர்சனமுமின்றி பிற்போக்கு சக்திகளையும் தேசிய விடுதலையின் பேரில் ஆதரிப்பார்கள்," என்ற தவறான கருத்தை பலர் கொண்டிருக்கின்றனர். "கம்யூனிஸ்டுகள் உலகில் உள்ள அனைத்து தேசிய விடுதலைப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும், அது அவர்கள் சித்தாந்தம்." என்றெல்லாம் பலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர். கேள்விச்செவியன் ஊரைக் கெடுப்பான் என்ற பழமொழிக்கேற்ப, ஒன்றை பற்றி அரைகுறையாக தெரிந்தவர்கள் மற்றவர்களின் மனதையும் கெடுக்கின்றனர்.

பெல்ஜியத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அறுபது வயதைக் கடந்த பேராளர் ஒருவர் குறிப்பிட்டார். "முன்னொரு காலத்தில் சைப்ரஸ் விடுதலைக்கு போராடிய கிரேக்க எயோகஸ் அமைப்பை ஆதரித்தோம். அது ஒரு பாஸிச அமைப்பு என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். இருப்பினும் சைப்பிரசில் பிரிட்டிஷ் காலனியாத்திக்கத்திற்கு எதிரான போராட்டத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு ஆதரித்தோம். பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக பேசினால், ஹமாஸ் ஆதரவு என்று பிரச்சாரம் செய்கின்றனர். மார்க்சிய PLFP குறைந்தளவு மக்களின் ஆதரவைக் கொண்டது. அதே நேரம் மத அடிப்படைவாத ஹமாஸ் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. அந்த உண்மையை மறுக்க முடியாது." இந்திய இடதுசாரிகளும் இதே நிபந்தனையின் கீழ் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கூறுகின்றனர். "பெரும்பான்மை தமிழர்கள் அவர்கள் பின்னால் நிற்கின்றனர்...." பெல்ஜியம் கூட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து ஆழமான ஈடுபாடு இருந்தது. புலிகள் மார்க்சிச- லெனினிச சித்தாந்த அடிப்படையில் இயங்கும் அமைப்பு என்று, தமக்கு சில ஈழத்தமிழர் கூறியதாக தெரிவித்தனர்.

"மார்க்சியவாதிகள் அனைத்து வகை தேசிய விடுதலைப் போராட்டங்களையும் நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும்." என்று எங்கே எழுதப் பட்டுள்ளது? அநேகமாக இவ்வாறு (விதண்டா) வாதம் செய்பவர்கள் வலதுசாரிகள் என்பது குறிப்பிடத் தக்கது. தாலிபான், ஹமாஸ், ஆகிய மத அடிப்படைவாத அமைப்புகளும் தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துகின்றன. மிக மிகக் குறைந்த அளவு வலதுசாரி அறிவுஜீவிகளே, அவற்றை தேசிய விடுதலை இயக்கங்களாக ஆதரிக்க முன்வருவார்கள் என்பது நிதர்சனம். ஐரோப்பாவில் மார்க்ஸியம் தோன்றிய காலத்தில் இருந்தே தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக கவனத்தில் எடுக்கப் பட்டு வந்துள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் அயர்லாந்து விடுதலையை ஆதரித்தனர். அயர்லாந்து சுதந்திரமடைந்தால், அது ஒரு முதலாளித்துவ நாடாகவே அமையும் என்பதை தெரிந்து தான் ஆதரித்தார்கள். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து ஒரு நாடு விடுதலையடைவது முற்போக்கானது என்பதே அவர்கள் கூறிய நியாயம். அதே நேரம் பகுனின், புருடோ போன்ற அனார்கிசவாதிகள் எந்தவொரு தேசியமும் பிற்போக்கானது என்று வாதாடினார்கள். இன்றைக்கும் அனார்கிஸ்டுகள் தேசிய எல்லைகளை, தேசிய அரசுகளை, தேசிய இனங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இவை யாவும் பாட்டாளி வர்க்கத்தை பிரிக்கின்றன, என்று அவர்கள் கூறும் காரணத்தை உண்மையை மறுப்பதற்கில்லை.

மார்க்ஸ், எங்கெல்ஸ், பகுனின், புருடோ ஆகியோர், ஐரோப்பிய சோஷலிச முதலாம் அகிலத்தில் நன்கு அறியப்பட்டவர்கள். அவர்கள் காலத்தில் தான் ஏறக்குறைய இன்றுள்ள ஐரோப்பிய தேசிய அரசுகள் தோன்றியிருந்தன. (அது குறித்து ஏற்கனவே முதல் இரண்டு அத்தியாயங்களிலும் எழுதியிருக்கிறேன்.) அதனால் அவர்கள் சிந்தனை முழுவதும், தேசிய அரசுகளை நிராகரித்து, உழைக்கும் மக்களின் நலன் பேணும் சோஷலிச அரசு அமைப்பதிலேயே குவிந்திருந்தது. இருப்பினும் அவர்களிடம் இருந்து பிரிந்த சமூக-ஜனநாயகவாதிகள் தேசிய அரசில் பங்கெடுப்பதாக அறிவித்தன. அவர்கள் தமக்கென இரண்டாவது அகிலம் ஒன்றை உருவாக்கினர். முதலாவது அகிலம், பாட்டாளி மக்களின் அதிகாரத்தைக் கொண்ட தேசியத்தை மட்டும் ஏற்றுக் கொண்டது. இரண்டாவது அகிலம் அதற்கு மாறாக அனைத்து பிரஜைகளினதும் தேசத்தை ஏற்றுக் கொண்டது. "குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் அது ஒரு தேசிய இனமாகும் என்ற வரையறை அவசியமில்லை." (யூத தேசியத்திற்கு பொருந்துவது) போன்ற கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன.
ஸ்டாலினின் "மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினையும்" என்ற நூலிலும், சமூக ஜனநாயக அறிஞர்களின் தேசியம் குறித்து விமர்சிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, "ஒவ்வொரு தேசிய இனத்தினதும் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமூக-ஜனநாயகவாதிகள், அந்த தேசிய இனம் தனியாக பிரிந்து போகும் பொழுது அடக்க முனைவார்கள்...."

ஸ்டாலினின் தேசிய இனங்கள் குறித்த நூலில் இருந்து தான் பலர், "மார்க்சிய தேசியவாதத்தை" ஆராய்கின்றனர். ஸ்டாலின் வியனாவில் (அன்று ஆஸ்திரிய-ஹங்கேரிய ராஜ்ய தலைநகரம்) தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் தான் புதிய தேசிய அரசுகள் உருவாகியிருந்தன. அதனால் ஸ்டாலினுக்கு தேசிய இனம், தேசிய அரசு குறித்த அனுபவ அறிவு இருக்கும் என்று லெனின் நம்பினார். புரட்சிக்குப் பின்னர் அமையப்போகும் சோவியத் குடியரசில் தேசிய இனங்களை வகைப்படுத்தும் பொறுப்பு அவ்வாறு தான் ஸ்டாலின் கைக்கு வந்தது. புரட்சிக்கு முன்னர் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் 150 க்கும் குறையாத மொழிகளைப் பேசும் இனங்கள் வாழ்ந்தன. அந்த நாட்டின் எல்லைக்குள் பேசப்பட்ட 150 மொழிகளில் ஒன்று தான் ரஷ்ய மொழி. மேற்கில் இருக்கும் மின்ஸ்க் நகரில் இருந்து, கிழக்கில் உள்ள விலாடிவொஸ்டொக் வரை பிரயாணம் செய்தால், அரைவாசி உலகைச் சுற்றிப் பார்த்த உணர்வு தோன்றும்.

முதலாம் உலகப்போர் வரையில், சார் ரஷ்ய சாம்ராஜ்யமும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் ஒன்றுடன் ஒன்று வல்லரசுப் போட்டியில் ஈடுபட்டிருந்தன. ஏட்டிக்குப் போட்டியாக நாடுகளை பிடித்து காலனியாக்கிக் கொண்டிருந்தன. ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் இரண்டு சாம்ராஜ்யங்களினதும் எல்லைக்கோடாக இருந்தது. ரஷ்யாவும், பிரிட்டனும் இரண்டு உலகப்போரில் பெருமளவு இழப்புகளை சந்தித்திருந்தன. இருப்பினும் ரஷ்ய சாம்ராஜத்தின் எல்லைக்குட்பட்ட நாடுகளை புதிய ஆட்சியாளர்களால் (போல்ஷெவிக் கம்யூனிஸ்டுகள்) தொடர்ந்து பராமரிக்க முடிந்தது. அந்தளவு வல்லமை பிரிட்டிஷாருக்கு இருக்கவில்லை. அதற்கு காரணம், இயற்கையான புவியியல் காரணிகள்.

பிரிட்டன் ஆயிரம் மைல்கள் கடல் கடந்து சென்று, காலனிகளை பராமரிக்க வேண்டியிருந்தது. அது நடைமுறைச் சாத்தியற்றது மட்டுமன்று, சாம்ராஜ்யத்தை கட்டியாள அதிக செலவு பிடித்தது. இதனால் காலனிகளுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு, நவ காலனிய கட்டுப்பாட்டை வைத்திருப்பது இலகுவாகப் பட்டது. இந்தியாவும், இலங்கையும், இங்கிலாந்து எல்லையோரம் அமைந்திருந்தால், இன்றைக்கும் பிரிட்டன் என்ற ஒரே நாட்டின் மாநிலங்களாக இருந்திருக்கும். ஆகவே இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டு தான், இரண்டு சம்ராஜ்யங்களினதும் தேசிய இனங்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு தனிதனி தேசங்களான முன்னாள் சோவியத் குடியரசுகளில் ரஷ்யாவின் தலையீடு அதிகரித்து வருகின்றதே தவிர குறையவில்லை. பிரிட்டனும் அதைத்தான் தனது முன்னாள் காலனிகளில் செய்து கொண்டிருக்கின்றது. இவர்கள் யாரும் நேரடியாக தங்கள் நோக்கத்தை தெரிவிப்பதில்லை. பிரான்ஸ் மட்டும் உள்ளதை உள்ளபடியே கூறி வருகின்றது. முன்னாள் ஆப்பிரிக்க காலனிகளில் தலையீடு செய்வது, தனது நலன் சார்ந்த விடயம் என்பதை, பிரான்ஸ் ஒரு நாளும் மறுக்கவில்லை.

(தொடரும்)


Friday, January 07, 2011

பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?] 
(பகுதி : 2)

தேசியவாதம் எப்போதும் வலதுசாரிக் கருத்தியலாகவே பார்க்கப்பட்டது. "நாங்கள்", "அவர்கள்" என்று இனங்களை மோதல் நிலையில் வைத்திருப்பது, வலதுசாரித் தேசியவாதம் என்று பிரிக்கப்பட்டது. இதைவிட சமத்துவம், சுதந்திரம் என்பனவற்றிற்கு போராடுவது இடதுசாரித் தேசியம் என்று வகைப் படுத்தப்பட்டது. தேசியவாதத்தின் வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக பிரித்து புரிந்து கொள்ளலாம்.

முதலாவது கட்டம்: தேசியவாதத்தின் பிறப்பு. பிரெஞ்சுப் புரட்சியின் போது தான் முதன்முதலாக "தேசியம்" என்ற சொல் பாவிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அது முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. நிலவுடமையாளர்களுக்கு எதிராக சாதாரண மக்களை, தேசியம் என்ற பெயரில் முன்னிறுத்தியது. அன்று தேசியம் என்பது சாமானிய உழைக்கும் மக்களைக் குறிக்கும். நிலப்பிரபுக்கள் தேசியத்துக்குள் அடங்கவில்லை. புரட்சி நடந்த காலத்தில் பல மொழி பேசும் மக்களும் பிரஜைகள் என்று சமத்துவமாக பார்க்கப்பட்டனர்.

இரண்டாவது கட்டம்: 1870 ம் ஆண்டுக்குப் பின்னரும், முதலாம் உலகப்போர் வரையிலும். தேசியம் என்றால் இனம் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. பல தேசிய அரசுகள் தமக்கென ஒரு மொழியை அரச கரும மொழியாக்கின. ஆதிக்கம் செலுத்திய மொழியைப் பேசும் மக்கள் தனி இனமாக கருதப்பட்டனர். சிறுபான்மை மொழிகள் அடக்கப்பட்டன. இந்தப் பிரிவினை ஏற்படுத்திய முறுகல் நிலை, முதலாம் உலக யுத்தத்தில் போய் முடிந்தது.

மூன்றாவது கட்டம்: முதலாம் உலகப்போர் முடிவில், மேற்குலகில் வில்சன் கோட்பாடு "தேசிய சுயநிர்ணயம்" என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஐ.நா. சபையின் முன்னோடியான, தேசங்களின் கூட்டமைப்பிலும் அது அங்கீகாரம் பெற்றது. அதற்கு வேறொரு தூண்டுதலும் இருந்தது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெற்றி பெற்றதும், 1918 ல் கம்யூனிஸ்ட்கள் சுயநிர்ணைய உரிமை அடிப்படையிலான சோவியத் குடியரசுகளை அறிவித்தனர். காலனிய நாடுகள் விடுதலையடைய உரிமையுடையவை என்று அறிவித்தனர். போல்ஷெவிக் பிரகடனத்தை சமன் செய்வது போல வில்சன் கோட்பாடு அமைந்திருந்தது. முதலாம் போரின் முடிவில் ஐரோப்பாவின் வரைபடம் மாறியிருந்தது. புதிதாக பல நாடுகள் சுதந்திரமடைந்தன. அவற்றின் சுயநிர்ணய உரிமையை வில்சன் கோட்பாடு அங்கீகரித்தது. ஆனால் அதற்காக ஒவ்வொரு இனமும் தனக்கான தேசிய அரசை பெற்றுக் கொண்டன என்று அர்த்தமில்லை. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியா என்ற சுயநிர்ணய உரிமை கொண்ட புதிய நாட்டில், செர்பியர்கள் பிற தேசிய இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பாவில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலை இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்தது.

நான்காவது கட்டம்: இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், உலகில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்தது. காலனியாதிக்கத்தை இல்லாதொழிப்பதற்கு தேசியவாதத்தின் அவசியத்தை இடதுசாரிகளும் உணர்ந்தனர். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் பல காலனிகள் விடுதலையடைந்தன. முதலாம் உலகப்போர் காலத்தில், கனடா, நியூசிலாந்து போன்ற பிரிட்டிஷ் காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. "வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு" அடிப்படையிலேயே அந்த சுதந்திரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களை சேர்ந்த பிரிட்டிஷ் காலனிகள் இரண்டாம் உலகப்போர் வரையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. சுயநிர்ணய உரிமையை முன்மொழிந்த வில்சன் கோட்பாட்டின் நீட்சியாகவே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு கருதப்படுகின்றது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலனிகள் அந்த யாப்பை அடிப்படையாக கொண்டிருந்தன. அண்மையில் சிம்பாப்வே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்புக்கு பதிலாக, புதிய யாப்பு எழுதக் கிளம்பிய பொழுது சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டது. (1972 ல் குடியரசான இலங்கை அதே போன்ற நெருக்கடிக்கு உள்ளானது.) இன்று பல தமிழ் தேசியவாத அறிவுஜீவிகள் வில்சன் கோட்பாடு, வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு போன்றன தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது போல பேசி வருகின்றனர். உண்மையில் வில்சன் கோட்பாடு ஐரோப்பாவை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு ஆங்கிலேயர் குடியேறிய காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கும் நோக்குடன் எழுதப்பட்டது. இரண்டுமே காலனிய அடிமைப்பட்ட நாடுகளின் விடுதலை குறித்து பேசவில்லை.

ஐந்தாவது கட்டம்: பெர்லின் மதில் இடிந்து, சோஷலிச நாடுகள் மறைந்து விட்ட காலகட்டம். தற்காலத்தில் நாம் வாழும் உலகில் பல மோதல்களுக்கு காரணமானது. வலதுசாரிகளும், இடதுசாரிகளும் தமக்கேற்ற தேசியவாதம் பேசிய காலம் மறைந்து விட்டது. மேற்குலகின் ஆதிக்கத்தின் கீழ் வலதுசாரி சக்திகள் தாம் விரும்பியவாறு தேசியவாதத்தை வரையறுக்கின்றனர். அது மேலும் புதிய நாடுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. யூகோஸ்லேவியா உடைந்து செர்பியா, ஸ்லோவேனியா, குரோவேசியா, போஸ்னியா, மாசிடோனியா, மொண்டி நெக்ரோ, கொசோவோ போன்ற புதிய தேசங்கள் உருவாகின. இப்படி எந்த தேசம் புதிதாக உருவாக வேண்டும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். வேறு சில நாடுகளின் தேசிய சுயநிர்ணய உரிமையை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. உதாரணத்திற்கு அப்காசியா, ஒசேத்தியா.

இவ்விடத்தில் சில முக்கிய குறிப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும். இலங்கையில் ஒரு காலத்தில், தமிழ் தேசியம் பேசிய வலதுசாரிகள், "சிங்கள இனவாதம்" என்ற சொல்லை மட்டுமே பாவித்து வந்தனர். அதே நேரம், சிங்கள/தமிழ் இடதுசாரிகள் சிங்களப் பேரினவாதம் என்ற சொல்லை பாவித்தனர். தற்போது சிங்கள பேரினவாதம் என்ற சொல் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது. மேற்குலக அரசியல் கோட்பாட்டாளர்கள் உருவாக்கிய "சுயநிர்ணய உரிமை" ஒவ்வொரு தேசிய இனத்துக்குமானது என்ற தவறான புரிதல் காணப்படுகின்றது. உண்மையில் மேற்குலக சுயநிர்ணய உரிமை தோன்றிய காலத்தில், அது ஐரோப்பாவில் பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே எழுந்தது.

உதாரணத்திற்கு பிரான்ஸில் கோர்சிகா, ஒக்கிடண்டல், நோர்மாண்டி, அல்சாஸ், பாஸ்க் ஆகிய மாகாணங்களுக்கென தனியான மொழிகள் உள்ளன. இவை பிரெஞ்சு மொழிக்கு சம்பந்தமில்லாதவை. ஆனால் பிரெஞ்சு பேரினவாதம் அந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி அழித்தது. பொது இடங்களில், தெருவில் கூட பிரெஞ்சு மொழி தவிர்ந்த வேறு மொழிகள் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டது. மீறியோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஜெர்மனியிலும் அதே போல, டென்மார்க்கை அண்டிய பகுதியில் பிரீஸ் என்றொரு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட ஜெர்மனியில் போலிஷ் மொழி பேசும் பிரதேசங்களும் அடங்கின. ஆனால் ஜெர்மன் பேரினவாதம் இவற்றை எல்லாம் அடக்கி, ஜெர்மன் மொழி மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கியது. அதே போல நெதர்லாந்தில், பிரீஸ்லாந்து மாகாணத்தில் பேசப்படும் பிரீஸ் மொழி, மற்றும் மாகாணங்களுக்கு உரிய கிளை மொழிகள், எல்லாவற்றையும் ஹோலந்து மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதாவது ஹோலந்து என்ற மேற்கு மாகாணத்தில் மட்டுமே பேசப்பட்ட மொழி. அது பின்னர் நெதர்லாந்து (டச்சு) என்ற பெயரில் செம்மையான மொழியாக்கப்பட்டது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி ஆதிக்கம் செலுத்தியது. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.

நாம் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், மேற்குலக "சுயநிர்ணய உரிமை" கோட்பாட்டாளர்கள், அத்தகைய பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே கொள்கை வகுத்தனர். அதே கொள்கையை பின்னர், ஐரோப்பிய காலனிகளிலும் நடைமுறைப் படுத்தினர். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்து சுதந்திரமடைந்த நாடுகளை உதாரணமாக எடுப்போம். இந்தியாவில் இந்தி மொழி, பாகிஸ்தானில் உருது மொழி, இலங்கையில் சிங்கள மொழி, பிற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பிரிட்டிஷாருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அத்தகைய ஆதிக்கம் தமது நிர்வாக பிரிவுகளை நிரந்தரமாக வைத்திருக்க உதவும் என்று நம்பினார்கள். அதாவது காலனிய காலத்தில் எவ்வாறு ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தியதோ, அதே இடத்தில் காலனிகளில் பெரும்பான்மை மொழிகள் உள்ளன. இது பிரிட்டிஷாரின் நவகாலனித்துவ கொள்கைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. அன்று எஜமானர்கள் நேரடியாக ஆண்டார்கள். இன்று எஜமானர்களின் சுதேசிப் பிரதிநிதிகள் ஆள்கிறார்கள். அது மட்டும் தான் வித்தியாசம்.


(தொடரும்)


Thursday, June 19, 2008

"இனம்" காணப்பட்ட தேசியம்


"இலங்கைத்தமிழர்" என்ற ஒற்றை அடையாளப்படுத்தலுடன், எமது அறியாப்பருவத்திலிருந்தே தேசியபாடம் ஆரம்பிக்கிறது. இலங்கையில் சர்வசாதாரணமாகவே இனம் என்பதை குறிப்பிட, ஆங்கிலத்தில் உள்ள "Race" என்ற சொல்லை பாவிப்பது குறித்து படித்தவர்களிடம் கூட தெளிவின்மை காணப்படுகின்றது. "Sinhala race", "Tamil race" என்று கூறுவது சரியானதா?

"Race" என்ற சொல்லை உருவாகிய ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பாக "வெள்ளை-ஐரோப்பிய", "கருப்பு-ஆப்பிரிக்க", "மஞ்சள்-சீன" வகை மனிதப்பிரிவுகளை குறிக்கவே பயன்படுத்துகின்றனர். இருப்பினும் ஆங்கிலேயர்கள் இலங்கையில் ஆங்கில மொழியை அறிமுகப்படுத்தியதுடன் நில்லாது, கூடவே "Racism" என்ற ஒன்றையும் கற்பித்து விட்டு சென்றுள்ளனர். சிங்களவர்கள் ஆரியரின் வழித்தோன்றல்கள், தமிழர் திராவிடரின் வழிதோன்றல்கள் என்பது கூட சில ஆங்கிலேய அறிஞர்களின் கண்டுபிடிப்பு தான். அதற்கு முன்பு தாம் சார்ந்த மன்னனுடனும், அல்லது மதத்துடனும் அடையாளம் காணப் பழகிய மக்கள் மத்தியில் ஆரிய, திராவிட கருத்தியல்கள் தூவப்பட்டதும் அந்தக்காலகட்டத்தில் தான்.

இன்று இலங்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களிடமும் மரபணு(DNA) சோதனை செய்யப்பட்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம். மரபணு அடிப்படையில் இலங்கைத்தமிழருக்கும், சிங்களவருக்கும் இடையில் அதிக ஒற்றுமை இருக்கும். அதேநேரம் இலங்கைத்தமிழருக்கும், இந்தியத்தமிழருக்கும் இடையில் வேற்றுமையும் இருக்கும். அதே போல கணிசமான சிங்களவர்கள், இந்திய தமிழருடன் ஒத்த மரபணுக்களை கொண்டிருப்பர். உலகின் பலபாகங்களிலும் இனங்களின் கலப்பு நடந்ததும், பின்னர் மொழியடிப்படையில் பிரிந்ததற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. ஏற்கனவே இனப்பிரச்சினை கூர்மையடைந்துள்ள அயர்லாந்தில் மரபணு சோதனை செய்த விஞ்ஞானிகள் இதுபோன்ற முடிவுகளுக்கு வந்தனர்.

மொழி அடிப்படையிலான தேசியம் கூட ஒரு ஐரோப்பிய கண்டுபிடிப்பு தான். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இராசதானிக்குள் பல்வேறு மொழிகள் பேசும் மக்களை ஒன்றிணைக்க மதம் உதவியது போல; மன்னனின், மதத்தின் ஏகபோக அதிகாரத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த மத்தியதர வர்க்கம், புதிதாக "பிரசைகள்" என்று அழைக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க மொழியை பயன்படுத்தியது. அது பின்னர் ஏகாதிபத்திய உருவாக்கத்திற்கும் தனது பங்களிப்பை செய்தது. இலங்கையில் ஏகாதிபத்திய மொழியில் கல்விகற்ற உள்ளூர் மத்தியதர வர்க்கம் பின்னர் உள்ளூர் மொழிகளை தமது நன்மைகளுக்காக வளர்க்க வேண்டிய தேவை உருவாகியது. தன்னை போலவே சிந்திக்க வைப்பதற்காக கல்வியூட்டும் ஏகாதிபத்திய நிர்வாக முறை பண்டைய எகிப்திலும் நிலவியது. ஆங்கிலேயரும் அதையே செய்தனர். எல்லாவற்றிலும் அனுகூலங்களும், பிரதிகூலங்களும் உள்ளது போலவே, இந்த கல்விமுறையும் அமைந்தது. ஒருபக்கம் ஏகாதியபத்திய நலன்களை பாதுகாக்கும் அதேநேரம், பூர்வீக மொழிகள், கலாச்சாரம் என்பன மறுமலர்ச்சி காண்கின்றன. எகிப்தில் தோன்றிய அரபு-இஸ்லாமிய மறுமலர்ச்சி, இந்தியாவில் இந்து மறுமலர்ச்சி, இலங்கையில் சிங்கள-பௌத்த மறுமலர்ச்சி என்பன பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழே தான் தோன்றின.

எல்லாவற்றையும் கற்றுகொடுத்த ஐரோப்பியர்கள், தேசியம் என்ற சொல்லை தமது தாயகங்களை குறிக்கவே நீண்ட காலமாக பயன்படுத்தினர். பிற்காலத்தில் காலனிய காலகட்டத்தில் பிரிக்கப்பட்ட நிர்வாக அலகுகள் சுதந்திர நாடுகளாக மாறியபோது, அவற்றிற்கும் தேசியம் பொருத்தப்பட்டது. அன்றிருந்த ஐரோப்பிய மையவாத கண்ணோட்டம், ஆப்பிரிக்க, ஆசியாவில் இருந்த பல்வேறுபட்ட மக்கட்குழுக்களை "இனங்கள்" என்ற வரையறைக்குள் பார்த்தது. அதனால் தான் மேற்கத்தைய ஊடகங்கள், அரசாங்கங்கள் இன்றும் இலங்கையில் நடப்பதை "இனப்பிரச்சினை" என்று குறிப்பிடும் அதே சமயம், அயர்லாந்தில், யூகோஸ்லேவியாவில் நடந்ததை "மதப்பிரச்சினை" என்றனர். ருவண்டாவில் "இனப்"படுகொலைகளில் இறங்கிய ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை சேர்ந்த ஹூட்டு, துட்சி பிரிவுகள் எந்த அடிப்படையில் இனங்கள் என்று அழைக்கப்படுகின்றன? ஒரே மாதிரி(கருப்பினத்தை சேர்ந்த) தோற்றமளிக்கும், சூடான் அரபு மொழி பேசுவோருக்கும், டார்பூர் பிராந்திய மொழி பேசும் மக்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தம், எதற்கு இனவாத பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது? ஒரே மொழியை பேசுபவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்களா? அப்படியானால் "செர்போ-குரவசிய" மொழி பேசும் செர்பியரும், குரவசியர்களும் எப்படி வேறு இனங்களாகும்?

பல கேள்விகள் இவ்வாறு கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். விடை தான் கிடைக்காது. மிகவும் பொருந்தக்கூடிய பதில் ஒன்று மட்டுமே உள்ளது. 19 ம் நூற்றாண்டில் தோன்றிய புதிய அரசியல் தத்துவமான "தேசியம்" என்ற சொற்பதம் இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு காரணமாக உள்ளது. குறிப்பிட்ட பிரதேசத்தில் காலங்காலமாக வாழ்ந்து வரும், தமக்குள் இலகுவாக தொடர்பு ஏற்படுத்தக் கூடியதாக உள்ள மொழி பேசும் மக்கள் குழுக்கள் தாம் ஒரு தேசியமாக பரிணாம வளர்ச்சி அடைவதை விரும்புகின்றனர். ஒரு சில வேளைகளில் அது மதம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியாவில் (கத்தோலிக்கரான) குறோவசியர்கள், (கிரேக்க-கிறிஸ்தவ) செர்பியரிடம் இருந்து தம்மை வேறுபடுத்தி பார்த்தனர். வேறு சில நேரம் அது பிரதேசம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு அரபு மொழி பேசும், அதேநேரம் மதத்தால் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களுமான பாலஸ்தீனியர்கள், தமக்கென "பாலஸ்தீன தேசியம்" ஒன்றை உருவாக்கினர். அதற்கு மாறாக இஸ்ரேலியர்கள் யூத மதத்தால் மட்டுமே ஒற்றுமையை கொண்டுள்ளனர். அவர்களுக்கிடையில் இருந்த பல்வேறு மொழி பேசுவோர், மறைந்த ஹீப்ரு மொழியை புதிதாக கற்றுக்கொண்டு புதிய தேசியம் படைத்தனர். யூதர்களிடையே காணப்படும் இன/நிற வேறுபாடுகள், அந்த தேசியம் வலிந்து உருவாக்கப்பட்டது என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கின்றது.

இனம் தொடர்பான சிக்கல்கள் இத்துடன் முடியவில்லை. அவை வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு விதமாக இனங்காணப்படுகின்றன. ஒருபக்கம் தமது "வேர்களை தேடும்" இனங்கள் தேசியங்களை உருவாக்கி நிலைநிறுத்த பட்டுபட்டுக் கொண்டிருக்கும் காலத்தில்; மறுபக்கம் இனப்பிரச்சினையின் வேர்களை தேடும் ஆய்வுகளும் தொடரட்டும்.

_____________________________________________________