Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Friday, March 26, 2021

"விடாய் ஒரு படுவான்கரை இலக்கியம்" - நூல் அறிமுகம்

 

ஈழத்து பெண்ணியக் கவிஞர் தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் தமிழகத்து புத்தகக் கண்காட்சியில், முற்போக்கு எழுத்துகளுக்கான பாரதி பதிப்பகத்தின் ஸ்டாலில் விற்பனையாகின்றது. தமிழ் தி இந்துவினால் கவனிக்கப் பட வேண்டிய சிறந்த நூல்களுக்கான பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. குறிப்பு: பிரதேச மொழி வழக்கில் விடாய் என்றால் தாகம் என்று அர்த்தம். 

ஈழப்போரின் இறுதிக் காலங்களில் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் அங்கீகரிக்கப் பட்ட அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் கவிஞர் தில்லை வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு இது. இந்த நூலில் உள்ள கவிதைகளை கீழ்க்கண்ட உப பிரிவுகளாக பிரிக்கலாம்: 
  • 1. உறவுச் சிக்கல்களால் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணின் உள்மனக் குமுறல்கள். 
  • 2. குழந்தைப் பராயத்தில் ஊர்ப் பெரியவர்களாலும் , நெருங்கிய உறவினர்களாலும் துஸ்பிரயோகம் செய்யப் பட்ட ஒரு சிறுமியின் அவலக் குரல். 
  • 3. பிறந்த மண், அதன் தனித்துவமான கலாச்சாரத்தின் மீதான பற்று. 
  • 4. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் இயலாமையின் வெளிப்பாடு. 
  • 5. புலம்பெயர்ந்து சென்று, முற்றிலும் அந்நியத்தன்மை கொண்ட ஐரோப்பிய நாடொன்றில், ஒரு மாறுபட்ட புதிய வாழ்க்கையை தொடங்குதல்.

இந்தத் தொகுப்பில் சில கவிதைகள் காப்கா பாணியிலான உள்மனக் குமுறல்களின் வெளிப்படுத்தல்களாக உள்ளன. உண்மையில் ஓர் உளவியல் மருத்துவரிடம் ஆற்றுப்படுத்தல் தேடுவது மாதிரி, கதை, கவிதை போன்ற புனைவு இலக்கியங்களில் வெளிப்படுத்துவதற்கு ஒரு துணிச்சல் தேவை. அது தில்லையிடம் தாராளமாக இருக்கிறது. 

தான் பிறந்தவுடனேயே தாயையும், தந்தையும் இழந்து அநாதரவாக கைவிடப்பட்ட வலிகளை, ஒடுக்கப்பட்ட உணர்வுகளை கவிதைகளில் வடித்திருக்கிறார். ஒரு பக்கம் தாய், தந்தையின் அரவணைப்பு கிடைக்காத ஏக்கம், மறுபக்கம் தத்தெடுத்த உறவினர்கள் இழைத்த கொடுமைகளால் ஏற்பட்ட வலி. குழந்தைப் பராயத்தில் ஏற்படும் இதுபோன்ற உளவியல் தாக்கங்கள் பெரியவர்களாக வளர்ந்த பின்னரும் மறைவதில்லை. 

பிரான்ஸ் காப்கா என்ற செக்கோஸ்லாவாக்கிய எழுத்தாளர் தனது சொந்த வாழ்வியல் பிரச்சினைகள் பற்றி எழுதிய உளவியல் குறிப்புகள் உலகப் புகழ் பெற்ற இலக்கியமானது மாதிரி, ஈழத்து கவிஞர் தில்லையின் கவிதைகளும் எடுத்த எடுப்பிலேயே பலரால் விரும்பி வாசிக்கப் பட்ட இலக்கியமாகி விட்டது. காப்கா தனது தாய்நாடான செக்கோஸ்லாவாக்கியாவில் ஜெர்மன் மொழி பேசும் யூத சிறுபான்மை இனத்தை சேர்ந்திருந்த படியால் மேலதிகமாக சில துயர அனுபவங்களை பெற்றிருந்தார். 

தில்லையும் இலங்கையில் அதே நிலைமையில் இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. காப்காவின் எழுத்துக்கள் கவலை, வருத்தம், அச்சம், ஆத்திரம், ஆவேசம், ஆதரவின்மை போன்ற கலவைகளாலான சர்லியச இலக்கியப் போக்கை கொண்டிருந்த மாதிரி, தில்லையின் பல கவிதைகள் உள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிட்ட வகைக்குள் அடங்காத பிற கவிதைகள், வாசகர்களுக்கு இந்த தொகுப்பை வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன. 

எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு உரிய மண்வாசனை வீசும் கவிதைகள் தனித்துவமானவை. மேலும் அந்தப் பிரதேசத்தின் கலாச்சாரத்தை மட்டுமல்லாது, அரசியல், சமூக வேறுபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் "பாரம்பரிய ஈழம்" என்று தற்காலத்தில் அரசியல்மயப் படுத்தப் பட்டிருந்தாலும், அதற்குள் பல முரண்பாடுகளை கொண்டுள்ளது. பேசும் தமிழும் மாறுபடுகின்றது. கிளை மொழிகளையும் வட்டார சொல் வழக்குகளையும் கொண்டுள்ளது. 

தில்லை இந்தக் கவிதைத் தொகுப்பில் தான் பிறந்து வளர்ந்த படுவான்கரை பிரதேச வட்டார வழக்கு மொழியில் சில கவிதைகள் எழுதி இருப்பது, ஒரு பாராட்டத்தக்க துணிச்சலான விடயம். ஒரு கவிதை முழுவதும் வட்டார மொழியில் எழுதப் பட்டுள்ளது. பிற கவிதைகளில் அந்தப் பிரதேசத்திற்கு தனித்துவமான சொற்கள் கையாளப் பட்டுள்ளன. இந்தக் கவிதைகளில் ஒட்டுமொத்த படுவான்கரை மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமிதமும் தெரிகின்றது. 

இங்கே மேலதிகமாக ஒரு சிறு சமூக- அரசியல் குறிப்பையும் இணைக்க விரும்புகிறேன். இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் குடாநாடு அபிவிருத்தி அடைந்த அளவிற்கு, வன்னிப் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை. அது எப்போதும் பொருளாதார வசதிகளில் பின்தங்கிய பிரதேசமாக இருந்தது. அதே மாதிரித் தான் கிழக்கு மாகாணத்து நிலைமையும். கிழக்கு கரையோரம் உள்ள எழுவான்கரை பிரதேசம் அபிவிருத்தி அடைந்து காணப்படுகையில், மேற்கில் உள்ள படுவான்கரை இன்றைக்கும் வளர்ச்சி அடையாமல் பின்தங்கிய பிரதேசமாக உள்ளது. 

யாழ்ப்பாணம் - வன்னி, எழுவான்கரை - படுவான்கரை, இந்த பிரதேசங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு பல மட்டங்களில் எதிரொலிக்கும். ஈழப்போர் காலகட்டத்தில் நடந்த பல குறிப்பிடத்தக்க இராணுவ, அரசியல் மாற்றங்களில், இந்த பிரதேச ஏற்றத்தாழ்வு மறைந்திருந்தது. ஆனால், அதை அன்றும் இன்றும் பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அந்த வகையில் "படுவான்கரை இலக்கியம்" என்று அழைக்கப் படக் கூடிய தில்லையின் விடாய் கவிதைத் தொகுப்பு நூல் சமூகவியல் பார்வையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. 

Sunday, December 20, 2020

தமிழ்நாடு புரட்சிக்கு வித்திட்ட விசைத்தறி தொழிலாளர் போராட்டம்


தறியுடன் நாவல் விமர்சனம்...

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த மக்கள் புரட்சியை விலாவாரியாக விவரிக்கும் ஒரு நாவல் தமிழில் இதுவரை காலத்திலும் வரவில்லை எனலாம். இரா. பாரதிநாதன் எழுதிய தறியுடன் நாவல் அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்துள்ளது. தமிழ்நாட்டின் வட மேல் மாவட்டங்களான திருப்பூர், சேலம், தருமபுரி ஆகிய இடங்களில் எண்பதுகளில் நக்சலைட் புரட்சியாளர்களின் ஆதரவுடன் நடந்த தொழிலாளர் போராட்டம் தான் இந்த நாவலின் கதைக்கரு. இதை எழுதிய இரா. பாரதிநாதன் ஒரு விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்தவர் என்பது மட்டுமல்லாது, அங்கு நடந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்காக போலீசில் பிடிபட்டு சித்திரவதைப் பட்டு வருடக் கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். இந்த நாவலில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனை அல்ல.

உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப் பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, சில புனைவுகளுடன் இந்த நாவல் எழுதப் பட்டுள்ளது. இதை வாசிக்கும் பொழுது தமிழ்நாட்டில் இப்படி எல்லாம் நடந்துள்ளதா என்ற பிரமிப்பு ஏற்பட்டுகிறது. சமூகப்புரட்சி சம்பந்தப்பட்ட நாவல் என்றால், அது ரஷ்யாவை, அல்லது வியட்நாமை கதைக் களனாக கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இந்த நாவலை வாசிக்க வேண்டும். இதில் சாதி, மத பேதமின்றி, வர்க்க உணர்வுடன் போராட்டத்தில் பங்கெடுத்த அனைவரும் தமிழ் பேசும் தமிழ்நாட்டுக் காரர்கள். வர்க்கப் போராட்டத்தில் மொழி முரண்பாட்டுக்கும் இடமில்லை. தெலுங்கு மட்டுமே பேசத் தெரிந்த கத்தார், அங்கு சென்று புரட்சிகர இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். இந்த சம்பவம் நாவலின் இறுதியில் வருகிறது.

திருப்பூர் பகுதிகளில் பரவலாகக் காணப்படும், விசைத்தறி இயந்திரங்கள் பாவித்து, நெசவு செய்யும் தொழிற்சாலைகள் தான் இந்த நாவலின் அச்சாணி. உள்நாட்டு ஆடைத் தேவைக்காக மட்டுமல்லாது, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யும் சிறிதும் பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள், தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்களை பற்றி சிந்திப்பதில்லை. கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களை சுரண்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகின்றன. இயந்திரங்களின் பேரிரைச்சல் காரணமாக காதுகள் செவிடாகலாம். ஆனால் எந்த முதலாளியும் காதுகளுக்கு கவசம் வாங்கிக் கொடுப்பதில்லை. இதைவிட பஞ்சுத் துகள்களை சுவாசித்து காலப்போக்கில் காச நோய் வந்து செத்தவர்கள் பலருண்டு. இருப்பினும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் கவசங்களை வாங்கினால் தனது இலாபத்தில் ஒரு பகுதியை இழக்க வேண்டி வருமே என்பது தான் முதலாளிகளின் கவலை.

பெரும்பாலான விசைத்தறிகளை சொந்தமாக வைத்திருக்கும் சிறு முதலாளிகள், பெரும் மூலதன முதலாளிகளுக்கு கிட்டவும் நெருங்க முடியாது. காலப்போக்கில் அவர்களும் பெரும் மூலதன திமிங்கிலங்களால் விழுங்கப் படுவார்கள். அது குறித்து எந்த அரசியல் விழிப்புணர்வும் இல்லாத, குட்டி பூர்ஷுவா வர்க்கத்தை சேர்ந்த சிறு முதலாளிகள், ஈவிரக்கமின்றி தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் தாமும் ஒரு நாள் பெரிய முதலாளியாக வரலாம் எனக் கனவு காண்கிறார்கள். இந்த உண்மையும் நாவலில் ஓரிடத்தில் பேசப் படுகின்றது.

இருப்பினும் இந்த நாவலின் கதை சிறு முதலாளிகளுக்கு எதிரான போராட்டக் களமாக விரிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், தொழிற்புரட்சிக்கு பின்னரான லண்டன், மான்செஸ்டர் நகரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை அறியாதவர்கள் இந்த நாவலை வாசிக்கவும். அப்போதும் இதே மாதிரித் தான் சிறிதும், பெரிதுமான விசைத்தறி நிறுவனங்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தன. அன்றிருந்த லண்டன், மான்செஸ்டர் தொழிலகங்களில் இதே நிலைமை தான் காணப்பட்டது. அங்கும் அப்போது தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை. இயந்திரங்களில் அகப்பட்டு கைகளை இழந்து முடமானவர்கள் பலருண்டு.

அவ்வாறு இயந்திரத்தில் சிக்கி கை துண்டிக்கப் பட்ட ஒரு பெண் தொழிலாளியின் துயரச் சம்பவத்தில் இருந்து தான் தறியுடன் நாவலின் கதை ஆரம்பமாகிறது. சம்பந்தப்பட்ட முதலாளி விபத்தில் சிக்கிய தொழிலாளியின் மருத்துவ செலவுகளை பொறுப்பேற்க மறுப்பதுடன், சிறு தொகையை கொடுத்து ஏமாற்ற முனைகிறான். இந்த அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கம் அமைத்து உரிமைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் மார்க்சிய நூல்களை கண்டாலே ஓட்டமெடுத்த ரங்கன் என்ற தொழிலாளி, தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக அரசியலுக்குள் இழுக்கப் படுகிறான். அன்றிலிருந்து ஒரு தீவிர இளம் புரட்சியானாக மாறுகிறான். அந்த ரங்கன் தான் இந்த நாவலின் கதாநாயகன்.

அரசியல் உணர்வற்ற சாதாரண மக்கள் எவ்வாறு அரசியல்மயப் படுகிறார்கள் என்பதை, இந்த நாவல் விரிவாகக் கூறுகின்றது. அதைக் கதாசிரியர் சாதாரண மனிதர்களின் பேச்சு மொழியில் எழுதிச் செல்கிறார். ஒரு தேர்ந்த எழுத்தாளராக அந்த மக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை விபரிக்கிறார். உதாரணத்திற்கு ஒரு மரமேறும் தொழிலாளியின் உதவியை நாடிச் செல்லும் ரங்கனை, அரசியலை வெறுக்கும் அவனது மனைவி கண்டபடி திட்டி விரட்டும் காட்சி ஒன்று வருகின்றது. பிற்காலத்தில் அதே பெண் அரசியலை புரிந்து கொள்வதுடன் புரட்சிப் பாடல்கள் பாடும் பெண்கள் குழுவிலும் பங்கெடுக்கிறார்.

அன்றைய காலத்தில் தலைமறைவாக இயங்கி வந்த நக்சலைட் இயக்கம், விசைத்தறித் தொழிலாளர் சங்கம் அமைப்பதற்கு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குகின்றது. உண்மையில் ஒரு சமூகப் புரட்சியை முன்னெடுக்கும் இயக்கம் தலைமறைவாக மட்டுமல்லாது, இது போன்று வெளிப்படையாகவும் இயங்க வேண்டிய அவசியத்தை நாவல் உணர்த்துகிறது. தலைமறைவாக மட்டும் இயங்கும் கெரில்லா இயக்கம், சிலநேரம் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டுப் போகலாம். அதைத் தடுப்பதற்கு தொழிற்சங்கம் போன்ற வெகுஜன அமைப்புகள் ஊடாக செயற்படுவதும் அவசியமானது. 
 
மேலும் வெளிப்படையாக இயங்குவோர் அரசு வழங்கும் ஜனநாயக வெளியை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. கைது செய்யப் பட்டவர்களை விடுவிப்பதற்காக வழக்காடுவது, நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது, பிணையில் விடுவிப்பது என்பனவும் அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதி தான். சிறைச்சாலையில் கைதிகளாக அடைக்கப் பட்டிருந்த போதிலும், அதற்குள்ளும் அரசியல் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும். நாவலின் சில அத்தியாயங்கள் சிறைச்சாலைக்குள் நடக்கும் உரிமைப் போராட்டங்களை விளக்குகின்றன.

தறியுடன் நாவலின் கதை, எண்பதுகளில் நக்சலைட்டுகள் தலைமறைவாக இயங்கிய காலத்தில் நடக்கிறது. நக்சலைட் இயக்கத்தின் முழுநேரப் பணியாளர்கள் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, தொழிலாளர் போராட்டங்களுக்கு தத்துவார்த்த வழி காட்டுகின்றனர். அவர்களில் தகுதியான செயற்பாட்டாளர்களை தேர்ந்தெடுத்து அரசியல் வகுப்புகள் நடத்துகின்றனர். பொதுவாக எல்லா தலைமறைவு இயக்கங்களும், தமது உறுப்பினர்கள் ஒன்று கூடும் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்களை மிக இரகசியமாக வைத்திருப்பார்கள். உறுப்பினர்களின் உண்மைப் பெயர் மறைக்கப் பட்டு புனைபெயர் பாவிக்கப் படும். இது போன்ற இரகசிய நடவடிக்கைகள் பற்றி இந்த நாவல் விரிவாகப் பேசுகின்றது.

அதை வாசிக்கும் பொழுது, எனக்கு ஈழப் போராட்டம் தொடங்கிய காலகட்டம் நினைவுக்கு வந்தது. குறிப்பாக எண்பதுகளின் தொடக்கப் பகுதிகளில் ஈழ விடுதலை அமைப்புகளும் இதே மாதிரித் தான் இயங்கின. கூட்டம் நடக்கும் இடம் குறித்து சில மணிநேரங்களுக்கு முன்னர் தான் வாய் வழியாக அறிவிக்கப் படும். சிலநேரம் வேறொரு கிராமத்திற்கு சென்று தங்க வேண்டியும் இருக்கலாம். அனேகமாக ஊருக்கு வெளியே அடித்தட்டு மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியாக இருக்கும். திடீரென ரோந்து சுற்றும் போலிஸ் வாகனம் வந்தால், எந்தப் பக்கத்தால் தப்பிக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, அந்த மறைவிடம் தெரிவு செய்யப் பட்டிருக்கும். தமிழ்நாட்டில் நக்சலைட் புரட்சி இயக்கமும், ஈழத்தில் ஈழ விடுதலை இயக்கமும் வெவ்வேறு குறிக்கோள்களுக்காக போராடினாலும், இரகசிய நடவடிக்கை குறித்த செயற்பாடுகளில் பெருமளவு ஒற்றுமை காணப்படுகின்றது.

தறியுடன் நாவலை வாசிக்கும் பொழுது, கிளாசிக்கல் நாவலாக புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவலை வாசித்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைகளை கொண்டவை. அதாவது அரசியல் என்னவென்றே அறியாத கதாபாத்திரங்கள், தொழிற்சாலைகளில் நடக்கும் சுரண்டலை எதிர்த்து தமது உரிமைகளுக்காக போராடுவதன் ஊடாக அரசியலை கற்றுக் கொள்கின்றன. எழுநூறு பக்கங்களுக்கு அதிகமாக விரியும் தறியுடன் நாவல், பிற நாவல்களைப் போன்று சாதாரண மக்களின் இன்பம், துன்பம், காதல், சோகம், கோபம் போன்ற உணர்வுகளை மட்டும் பேசவில்லை. இடையிடையே அரசியல் குறிப்புகளும் வருகின்றன. உதாரணத்திற்கு நாவலில் வரும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகளான சாதிமறுப்புத் திருமணம், பெண்களின் சமத்துவம் போன்ற விடயங்களில் அரசியல் விளக்கவுரைகளும் சேர்க்கப் பட்டுள்ளன.

இந்த நாவலை வாசிக்கும் வாசகர்கள், வழமை போல வாசித்து முடிந்த பின், ஒரு மூலையில் போட்டு விட்டு சென்று விட முடியாது. இந்த நாவல் சொல்ல வரும் அரசியல் கருத்துக்கள் மூலம் தெளிவான உலகறிவைப் பெற்றுக் கொள்வார்கள். அதனால் எல்லா வகையான தரத்தை உடையவர்களுக்கும் புரியும் வகையில் இலகு தமிழில் எழுதப் பட்டுள்ளது. தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, கதை எந்த இடத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்ந்து செல்கிறது. இதுவரை தமிழில் வெளிவந்த நாவல்களில் தறியுடன் குறிப்பிடத் தக்க இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாவல் ஒரு நடந்து முடிந்த கதையை பற்றி மட்டுமல்லாது, இனிமேல் நடக்கப் போகும் கதைகளை பற்றியும் கூறுகின்றது.

- கலையரசன் 
20-12-2020

 
நூலின் பெயர்: தறியுடன் 
ஆசிரியர்: இரா. பாரதிநாதன்

வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம் 
4/413, 3வது வீதி பாரதி நகர், பிச்சம்பாளையம் 
திருப்பூர் 641 603 
94866 41586 
gunarpf@gmail.com 
விலை இந்திய ரூபா: 650.00

Sunday, March 15, 2020

பின்நவீனத்துவம் சாதிப் பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஏ.ஜி. யோகராஜா "எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்!" என்ற பெயரில் ஒரு நூல் எழுதி இருக்கிறார். ஈழத்து சாதிய பிரச்சினைக்கு அவர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அதை நூலின் அட்டையிலேயே "சமூக சமத்துவம்: அடுத்த கட்ட நகர்வு குறித்த முன் வரைவு." என்று குறிப்பிட்டு விடுகிறார். இந்த நூலானது, "ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கான கடமைகள், ஒழுக்க நெறிகள் பற்றி எழுதியுள்ள கையேடு" போன்ற வடிவில் எழுதப் பட்டுள்ளது!


ஏ.ஜி. யோகராஜா எனக்கும் நண்பர் தான். அவர் ஏற்கனவே பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்களையும் நான் அறிவேன். யாழ்ப்பாணம், வடமராட்சியில் உள்ள அவரது சொந்த ஊருக்கும் நேரில் சென்றிருக்கிறேன். ஆகவே இது அவர் எழுதிய இந்த நூல் மீதான விமர்சனமாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இந்த நூலுக்கு பேராசிரியர் அ. மார்க்ஸ் முன்னுரை எழுதிக் கொடுத்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. ஒருவேளை யோகராஜாவும் ஒரு பின்நவீனத்துவவாதி என்பதால் ஆதரவளித்திருக்கலாம். இந்த நூலில் அப்படி என்ன எழுதி இருக்கிறது என்பதை அ. மார்க்ஸின் முன்னுரையை வாசித்தாலே புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவராலும் சில இடங்களில் உடன்பட முடியவில்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

நூலாசிரியர் யோகராஜாவுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள, நமக்குத் தெரிந்த அரசியல் கோட்பாடுகள் அனைத்துடனும் முரண்பாடுகள் உள்ளன. அவர் அடிக்கடி கம்யூனிசத்தின் போதாமை குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார். அதே நேரம், முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை (?). தலித் மக்களின் விடுதலைக்கு அம்பேத்காரியம், பெரியாரியம் இருப்பதையும் கண்டுகொள்ளவில்லை. ஆகவே இந்த நூலில் அவராகவே ஒரு புதிய அரசியல் கோட்பாட்டை படைத்திருக்கிறார். (இது தான் பின்நவீனத்துவம்!) அது என்னவென்று பார்ப்போம்.

"அதிகாரம் 1. மொழியதிகாரத்தின் பிடியிலிருந்து விடுபடல்..." (இது அவரே கொடுத்துள்ள தலைப்பு.) இதில் அவர் தனது நோக்கம் என்ன என்பதை தெளிவுபடுத்தி விடுகிறார். பெரும்பாலும் யாழ் குடாநாட்டு தமிழ்ச் சமூகம் பற்றிய "சமூகவியல்"(?) பார்வை தான் இந்த நூலின் சாராம்சம். உண்மையில் இந்த நூல் அரசியலும் இல்லாமல், சமூக விஞ்ஞானமும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. இந்த நூலை வாசித்து முடித்த பின்னர் உங்களுக்கு ஒன்றுமே புரியாவிட்டால் கவலைப்படாதீர்கள். அது தான் பின்நவீனத்துவம்!

இந்த நூலாசிரியர், ஈழத்து தலித் அல்லது தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களை "விளிம்பு நிலைச் சமூகங்கள்" என்று குறிப்பிடுகிறார். அது அவர்களது சமூக முன்னேற்றத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையில், நூல் முழுவதும் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறார். அதாவது, "சாதி என்ற சொல்லை பயன்படுத்தா விட்டால் சாதி ஒழிந்து விடும்" (லாஜிக்?) என்பது போன்றதொரு வாதம் இது. இதற்கு நூலாசிரியர் கொடுக்கும் விளக்கத்தை அப்படியே தருகிறேன்: 
//பல்வேறு காரணங்களால் பஞ்சமர், தாழ்த்தப்பட்ட மக்கள், மற்றும் தலித்துகள் எனும் சொல்லாடல்களைத் தவிர்த்து; குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளைக் குறிக்கும் வகையில் தோற்றம் பெற்ற விளிம்புநிலைச் சமூகங்கள் எனும் சொல்லாடலின் கீழ் ஒன்றிணைக்கப் படுகின்றனர்.//

இங்கே "விளிம்பு நிலைச் சமூகங்கள்" என்ற சொற்பதம் பிழையான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகின்றது. உலகம் முழுவதும், அமெரிக்கா, பிரிட்டன், இவர் வாழும் சுவிட்சர்லாந்து ஆகிய முதலாம் உலக நாடுகளிலும் விளிம்புநிலைச் சமூகங்கள் உள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் வேலை இழந்து, வீடிழந்து, சொத்துக்களை இழந்து தெருவில் படுக்கும் அனைவரும் விளிம்புநிலைச் சமூகம் தான். பாலியல் தொழிலாளர்களையும் இதற்குள் அடுக்கலாம். மூன்றாமுலக நாடுகளில் நிரந்தரமாக சேரிகளில் வசிப்பவர்களும் அதற்குள் அடக்கம்.  இது பொருளாதாரக் காரணங்களினால் ஏற்படும் தோற்றப்பாடு. 

ஒரு காலத்தில் தொழிலதிபராக கொடி கட்டிப் பறந்தவரும் மீளாக் கடன்களில் மூழ்கி விளிம்புநிலைச் சமூகத்தவர் ஆகலாம். ஆனால் சாதியமைப்புமுறை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த காரணத்திற்காகவே "சாதியில் குறைந்தவர்" முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப் படலாம். அவர் எவ்வளவு படித்திருந்தாலும், நிறையப் பணம் வைத்திருந்தாலும், சமூகத்தில் அவருக்கான சாதிய முத்திரை மாறாமல் இருக்கும். சாதிய சமூகத்திற்கும், விளிம்பு நிலைச் சமூகத்திற்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவதால் சமூக சமத்துவம் ஏற்பட்டு விடாது.

நூலாசிரியர் இன்னும் இரண்டு "புதிய" சொற்களை எமக்கு "அறிமுகப்" படுத்துகிறார். சாதிவெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களை இனிமேல் "பின்நிலைச் சமூகம்" என்றும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முற்போக்காளர்கள் இனிமேல் "முன்நிலைச் சமூகம்" என்றும் அழைக்கப்பட வேண்டும் என்கிறார். உண்மையில் இந்த நூல் எழுதிய யோகராஜா தமிழ்த் தேசியக் கருத்தியலை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும், "தமிழர்கள் எல்லாம் ஒரே இனம்" என்ற கொள்கை கொண்ட தமிழ்த்தேசியவாதிகளின் மனதில் பால் வார்க்கும் வகையில் எழுத்துக்கள் அமைந்துள்ளன. அவர்கள் ஒருவேளை "தமிழர்களை ஒன்றுபடுத்தும்" அரசியல் கோட்பாடு எதுவென தெரியாமல் தவித்திருந்தால், இந்த நூல் அதற்கு உதவலாம்.

இனவெறியர்கள், மதவெறியர்கள் போன்று சாதிவெறியர்களும் சமூகத்தில் உள்ளனர். அவர்களை "நல்வழிப்படுத்தும்" முகமாக "பின்நிலைச் சமூகம்" என்று குறிப்பிடுவதால் எதுவும் மாறப் போவதில்லை. ஒரு சமூகத்தில் குறிப்பிடத்தக்க இன/மத/சாதி வெறியர்களை இனங்காண்பதும், அவமானப் படுத்துவதும் மக்களின் வழமையான போராட்டக் குணாம்சங்கள். (வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இந்தப் போராட்டம் நடக்கிறது.) இந்த தீயசக்திகளையும் உள்வாங்கிக் கொண்டு அவர்களுக்கு "தமிழ் தேசிய இன" அடையாளம் கொடுப்பதும், "பின்நிலைச் சமூகம்" என்று வகைப் படுத்துவதும் ஒன்று தான். இரண்டும் ஒரே நோக்கம் கொண்டவை. இதன் மூலம் நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப் படுகிறது. அதையே இந்த நூலாசிரியர் செய்ய நினைக்கிறார்.

மேலும் இவர் நேர்மறையான அர்த்தத்தில் வகைப்படுத்தும் "முன்நிலைச் சமூகம்" எப்போதும் முன்நிலையானதும் அல்ல. இன்னொரு இடத்தில் அதில் உள்ளவர்கள் பின்நிலைச் சமூகமாக காட்டிக் கொள்ளலாம். விரிவாகச் சொன்னால், ஓரிடத்தில் சாதிய சமத்துவம் பாராட்டும் ஒருவர், இன்னோர் இடத்தில் இஸ்லாமிய வெறுப்பைக் காட்டலாம். தமிழ்த்தேசியம் பேசும் பலரை இதற்கு உதாரணம் காட்டலாம். ஒரு பக்கம் சாதிய முரண்பாடுகளை சமரசப் படுத்திக் கொண்டே, மறுபக்கம் இனவாத - மதவாத முரண்பாடுகளுக்கு எண்ணை ஊற்றி தீ வளர்ப்பார்கள். இப்படிப் பலரை நூலாசிரியர் கண்டிருப்பார். இவர்களை எல்லாம் "முன்நிலைச் சமூகம்" எனலாமா?

யாழ்ப்பாணத்தில் அறுபதுகளில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் பல வெள்ளாள "உயர்சாதி" சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அதை இங்கே நன்றியுடன் நினைவுகூரும் நூலாசிரியர் "முன்நிலைச் சமூகம் என்ற சொல்லாடலால் விஷேஷிக்கப் படுகின்றனர்" என்கிறார். அன்று போராட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினால் வர்க்க அடிப்படையில் அரசியல்மயப் படுத்தப் பட்டவர்கள். ஒரு சில லிபரல் புத்திஜீவிகளும் இருந்ததை மறுப்பதற்கில்லை. அவர்கள் எல்லோரும் தாம் நம்பிய அரசியல் தத்துவார்த்த நிலைப்பாடு காரணமாக முற்போக்காளர்களாக இருந்தவர்கள். அதற்காக தமது குடும்ப உறுப்பினர்களுடனும் முரண்பட்டவர்கள். இது உலகம் முழுவதும் உள்ள சமூக யதார்த்தம். இதே மாதிரியான விமர்சனத்தை அ. மார்க்ஸ் கூட தனது முன்னுரையில் எழுதி உள்ளார். யாழ்ப்பாணத்தில் சைவ மத அடிப்படைவாத சிவ சேனையின் வருகை பற்றி இந்த நூல் எதுவும் பேசவில்லை என்று கூறி உள்ளார்.

ஐரோப்பாவில் வாழும் பெரும்பாலான தமிழ் குடியேறிகள் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு தேர்தலில் வாக்களிப்பார்கள். அதற்குக் காரணம் அந்த நாடுகளில் பெரும்பாலும் இடதுசாரிகள் மட்டுமே வெளிநாட்டுக் குடியேறிகள் மீது அனுதாபம் காட்டுகின்றனர். அப்படியானவர்களை தான் யோகராஜா "முன்நிலைச் சமூகம்" என்று புகழ்கிறார். இதை அவர் நமக்கு ஆன்மீக ஒளியில் காண்பிக்கிறார். "...சமூகத்திற்கு விடிவெள்ளிகளாக துலங்கிக் கொண்டிருக்கும் மனிதஜீவிகளையும் காலத்திற்குக் காலம் இதே சமூகம் பிரசவித்துக் கொண்டு தான் இருக்கிறது." என்கிறார். இந்த "முன்நிலைச் சமூகத்தினர்" எமக்காக தேவதூதர்களால் அனுப்பப் படவில்லை. அவர்கள் சுயமாகவோ அல்லது கட்சி சார்பாகவோ அரசியல் கற்றுக் கொண்டதால் தம்மைத் தாமே முற்போக்காளர்களாக மாற்றிக் கொண்டவர்கள். அதே நேரம், குறிப்பிட்ட ஒரு விடயத்தில் முற்போக்காளராக இருக்கும் ஒருவர் இன்னொரு விடயத்தில் பிற்போக்காளராக இருக்கலாம்.

நூலாசிரியர் யோகராஜா தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களை தனியாக நிறுவனமயப் படுத்த வேண்டும் என்ற தனது நோக்கத்தை " அடுத்த கட்ட நகர்வு குறித்த முன் வரைவு" என்பதன் மூலம் அறியத் தருகிறார். ஆனால் இது பல இடங்களில் இடறுகிறது. சொல்லதிகாரம் மூலம் சாதிகளை இல்லாதொழிக்க கிளம்பியவர் தவிர்க்கவியலாது சாதிகளை பெயர் சொல்லி குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஆங்காங்கே ஏற்படுகிறது. ஈழத்தில் பலவகையான சாதிப்பிரிவுகள் இருந்தாலும், நூலாசிரியர் "நளவர், பள்ளர்" ஆகிய இரண்டு சாதிகள் மீது மட்டுமே அதிக கவனத்தைக் குவிக்கிறார். அதற்குக் காரணம் அவர்கள் பாரம்பரியமாக பனை மரம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் என்பதே. இந்தியாவில் நாடார் சமூகம் மாதிரி அவர்களும் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வரும் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்கிறார்.

யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியான (மன்னிக்கவும், "பின்நிலைச் சமூகம்") வெள்ளாளர்கள் பெருமளவு நிலத்திற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அதே மாதிரி கடலோர பிரதேசங்களில் வாழும் கரையார்கள் கடல் வளத்திற்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆகவே, பனை சார்ந்த தொழிலில் ஈடுபடும் நளவர், பள்ளர், பனை மரங்களுக்கு சொந்தம் கொண்டாடுவதில் என்ன தவறு என்பது தான் இவரது வாதம். பனைமரங்கள் ஆகாயத்தில் தொங்கும் தோட்டத்தில் வளர்வதாக இருந்தால் இவரது வாதத்தில் எந்தத் தவறும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பனைமரங்கள் எல்லாம் நிலவுடைமையாளர்களான வெள்ளாளரின் காணிகளில் தானே உள்ளன?

ஒரு பேச்சுக்கு, வயல் நிலங்கள் வெள்ளாளர்களுக்கு, பனைமரக் காணிகள் நளவர் - பள்ளருக்கு என்று பிரித்துக் கொடுத்து விடலாம். கடல் முழுவதும் கரையாருக்கு கொடுப்பதில் இவருக்கு ஆட்சேபனை இருக்காது. ஆனால், கரையோரப் பிரதேசங்களில் கடற் தொழிலை நம்பி வாழும் திமிலர் எனும் தாழ்த்தப் பட்ட சாதியினர் வசிக்கிறார்களே? அவர்களுக்கு எதைக் கொடுப்பது? அது மட்டுமல்ல, எந்த வித இயற்கை வளத்திற்கும் சொந்தம் கொண்டாட முடியாமல் நகரங்களை அண்டி வாழும் சக்கிலியர்கள், பறையர்கள் போன்ற சாதிய சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ள சாதியினருக்கு என்ன தீர்வு? நான் இங்கே உட்சாதிப் பிரிவுகள் பற்றிப் பேசவில்லை. ஈழத்தில் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் மாறுபட்ட சமூக- பொருளாதார அடிப்படைகளை கொண்டுள்ளனர். எல்லா சாதிகளும் சமமாக பொருளாதார வளர்ச்சி அடையவில்லை.

யாழ்ப்பாண சாதிய சமூகத்தில் வெள்ளாளர்களின் விகிதாசாரம் அதிகமாக இருந்ததாகவும், ஈழப்போரின் பின்னர் அவர்களது எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும், தற்போது தாழ்த்தப்பட்ட சாதியினர் அறுபது சதவீதமாக இருக்கலாம் எனவும் நூலாசிரியர் நினைக்கிறார். (உண்மையில் இப்படி ஒரு கதையாடல் யாழ் குடாநாட்டில் இருப்பதை மறுப்பதற்கில்லை.) அதை அடிப்படையாகக் கொண்டு தனது "முன்வரைபை" சமர்ப்பிக்கிறார். இந்தியா மாதிரி, இலங்கையில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடப்பதில்லை. மக்கட்தொகையில் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.

ஈழப்போருக்கு முந்திய காலத்தில் வெள்ளாளர்கள் 40% - 50% இருந்திருக்கலாம். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் பெரும்பாலும் வெள்ளாளர்கள் தான். அதற்கு மாறாக பெரும்பாலான தாழ்த்தப்பட்ட சாதியினர் தாயகத்தில் தங்கி இருந்தனர். அதை மட்டுமே வைத்துக் கொண்டு யாழ் குடாநாட்டில் வெள்ளாளரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து விட்டது என்று கருத முடியாது. முப்பதாண்டு கால போரில் இலட்சக்கணக்கானோர் கொல்லப் பட்டாலும், வெளிநாடுகளுக்கு சென்று விட்டாலும் ஈழத்தமிழர் சனத்தொகையில் அதிகரிப்பு காணப்படுகின்றது.

மேலும் சாதிய கட்டமைப்பில் சனத்தொகை விகிதாசாரம் எந்தத் தாக்கத்தையும் செலுத்துவதில்லை. உதாரணத்திற்கு தமிழ்நாட்டு நிலைமையை எடுத்துப் பார்க்கலாம். அங்கு சாதிய பிரமிட்டின் உச்சியில் இருக்கும் பிராமணர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதே நேரம் அடித்தளத்தில் இருக்கும் பறையர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இருப்பினும் சமூகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பிராமணர்கள் மற்றும் மேன் நிலைச் சாதியினர் தான் பொருளாதார துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதைக் கொண்டு அரசியல்- சமூக மாற்றங்கள் வந்து விடாமல் தடுக்க முடிகிறது. அதே நிலைமை தான் யாழ்ப்பாணத்திலும் உள்ளது. சனத்தொகையில் வெள்ளாளரின் எண்ணிக்கை குறைந்தாலும் பொருளாதாரத்தில் அவர்களது ஆதிக்கம் அதிகம்.

இன்று தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மத்தியதர வர்க்கத்தினர் பெருமளவு காணிகளை வாங்கிச் சேர்த்தாலும், நிலத்தின் மீதான அதிகாரம் வெள்ளாளரின் கையில் தான் உள்ளது. அந்த சாதியை சேர்ந்த நிலவுடைமையாளர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கு சொந்தமான காணிகளின் தொகையும் மிக மிக அதிகம். இப்போதும் ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் உள்ளனர். இந்த பொருளாதார ஆதிக்கத்தை மறைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளை போர்வையாக வைத்திருக்கின்றனர்.

இந்த நிலைமையை மாற்றுவதற்கு அரசியல் சக்திகள் முன்வர வேண்டும். அதை இந்த நூலாசிரியர் ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயக அடிப்படையில் "விளிம்பு நிலை சமூகத்தவர்" அதிக பிரதிநிதித்துவம் கோர வேண்டும் என்கிறார். அது சரியே. ஆனால், நிலங்களையும், வளங்களையும் பகிர்ந்தளிக்கும் வரையில் சாதிய அமைப்பு மாறப் போவதில்லை. ஏனென்றால் தாம் ஆண்டு அனுபவிக்கும் சொத்துக்களை விட்டுக் கொடுக்க யாரும் தயாராக இல்லை. மயிலே மயிலே என்றால் இறகு போடாது. "முன்நிலைச் சமூகத்தவரே" என்று மயிலிறகால் வருடிக் கொடுத்தாலும் எதுவும் நடக்காது. 


Tuesday, March 10, 2020

நூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய "ஆக்காட்டி"


நூல் விமர்சனம் - இரா. பாரதிநாதன் எழுதிய "ஆக்காட்டி". தோழர் இரா. பாரதிநாதன் ஏற்கனவே எனக்கு ஓர் அரசியல் போராளியாக அறிமுகமானவர். நான் வாசித்த அவரது முதல் நாவல் இது தான். இந்த நூலை வாசிக்கத் தொடங்கும் போதே வாசகரை தனது எழுத்தால் கவரும் ஆற்றல் அவருக்கு வாய்த்திருக்கிறது. உண்மையை சொன்னால், ஒரு எட்டு மணிநேர ரயில் பயணத்தின் போது 230 பக்கங்கள் கொண்ட இந்த நூல் முழுவதையும் வாசித்து முடித்து விட்டேன்.

இந்த நாவல் அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதில் வரும் பாத்திரங்கள் கற்பனை தான். ஆனால், மக்களின் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது உண்மை. அதை ஏற்கனவே பலர் அறிந்திருப்பார்கள். உண்மைச் சம்பவங்களுக்கு பொருத்தமாக ஒரு கதையை புனைவது இலகுவான காரியம் அல்ல. அதிலும் சாமானியர்களுக்கும் புரியும் வகையில் அரசியல் கருத்துக்களை கற்றுக் கொடுப்பதற்கும் ஒரு தனித் திறமை வேண்டும். அது தோழர் பாரதிநாதனிடம் இயற்கையாகவே உள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடந்த மீத்தேன் எரிவாயு எதிர்ப்புப் போராட்டம் தான் கதைக்கரு. மீத்தேன் எரிவாயு என்றால் என்ன? எதற்காக மக்கள் அதை எதிர்த்துப் போராடினார்கள்? உண்மையில் இது போன்ற விபரங்கள் அன்றாடம் அரசியல் ஈடுபாடு கொண்ட பலருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை. பாரதிநாதன் அந்த விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து எழுதி இருக்கிறார். எதற்காக அரசும், வணிக நிறுவனங்களும் மீத்தேன் வாயு எடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றன? அதனால் அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன? என்றெல்லாம் விளக்கிச் சொல்லி இருக்கிறார்.

ஆரம்பத்தில் அரசியல் அறிவற்று இருந்த சாதாரண நடுத்தர வர்க்க இளைஞன் தான் கதையின் நாயகன். தற்செயலாக சர்ச்சைக்குரிய மாங்குடி கிராமத்திற்கு தாத்தா, பாட்டியை பார்க்கச் செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது. அது ஒரு சாதாரணமான உறவினர் வீட்டுக்கு போகும் நிகழ்வாக இருந்த போதிலும் எரிவாயு திட்டத்தை நடைமுறைப் படுத்த வரும் அரசியல்வாதிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதிலிருந்து மீத்தேன் வாயு, அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தேடி அறிந்து கொள்கிறான்.

கார்த்தியின் காதலி, ஈழத்தமிழ்ப் பெண் பிருந்தா மூலம் அரசியல் உணர்வு பெறுவதாக காட்டி இருப்பது ஒரு திருப்புமுனை. ஏற்கனவே கிராமிய மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வில் மனதை பறிகொடுத்த கார்த்தி, ஓர் அரசியல் போராளியாக திரும்பி வருகிறான். அதற்காக தாத்தாவுடன் முரண்பட்டு நகரத்து ஆடம்பர வாழ்க்கையை தேர்ந்தெடுத்த தந்தையை பகைத்துக் கொள்கிறான். இதன் மூலம் கதாசிரியர் தலைமுறை இடைவெளி என்ற விடயத்தில் அக்கறை காட்டினாலும், அது அரசியல் அடிப்படை கொண்டது என்பதையும் உணர்த்துகிறார்.

கார்த்தி என்ற பாத்திரத்தின் மூலம், நகரங்களில் வாழும் படித்த வாலிபர்கள் கிராமங்களில் வாழும் மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய சமூகக் கடமையை கதாசிரியர் உணர்த்துகிறார். போராடுவதற்கான மனவுறுதி இருந்தால் மட்டும் போதாது. சரியான அரசியல் நிலைப்பாடும் அவசியம். ஒருவரது போராட்ட வாழ்க்கை குடும்ப உறுப்பினர்களிடையே பிளவுகளையும் உண்டாக்கும். இந்த நாவலில் வருவது போல பெற்ற தந்தையையும் கருத்தியல் ரீதியாக எதிர்க்க வேண்டி இருக்கும். தாய்மார் ஆபத்துக்களை எதிர்பார்த்து தடுக்கப் பார்ப்பார்கள். இந்த நாவலில் கார்த்தியுடன் துணை நின்று போராடும் கலியன் தாத்தா, காதலி பிருந்தா மற்றும் அவளது தந்தை சிவராசா போன்று எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

இருப்பினும், எனக்கு இந்த நாவலுடன் உடன்பட முடியாத ஒரு குறையையும் சுட்டிக் காட்ட வேண்டும். அதற்கான விளக்கத்தையும் கீழே தருகிறேன்: ஓர் ஈழத்தமிழ்ப் பெண் தான் இந்த நாவலின் நாயகி. அப்படி ஒரு பாத்திரத்தை படைத்தமைக்கு முதற்கண் பாராட்டுக்கள். அந்த ஈழப் பெண்ணின் தகப்பன் இலங்கையில் சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர் என்றும் அறிமுகப் படுத்தப் படுகிறார். அவர் மூலமாகத் தான் கார்த்தி சரியான (மார்க்சிய) அரசியல் வழிகாட்டலை பெற்றுக் கொள்கிறான். அதெல்லாம் இந்த நாவலுடன் தொடர்புடைய விடயங்கள் தான். ஆனால், தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுப்பது தொடர்பாக நடக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் நில அபகரிப்பை, இலங்கையில் சிங்களவர் தமிழரின் நிலத்தை பறித்துக் கொண்ட விடயத்துடன் ஒப்பிடும் போது தான் சறுக்கி விடுகிறார்.

இந்த விடயத்தில், இலங்கையில் நடப்பது வெறும் "இனப் போராட்டம்", ஆனால் தமிழகத்தில் நடப்பது "வர்க்கப் போராட்டம்" என்பது போன்ற கருத்தை உருவாக்குவது ஏற்கத் தக்கதல்ல. (ஒருவேளை நான் தவறாக புரிந்து கொண்டால் மன்னிப்புக் கோருகிறேன்.) இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை உண்மையில் வர்க்கப் பிரச்சினையை மறைப்பதற்கான போர்வையாக செயற்படுகின்றது. பெரும் வணிக நிறுவனங்கள் மீத்தேன் எரிவாயுவுக்காக தமிழகத்து விவசாய நிலங்களை அபகரிப்பது போன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கவில்லையா? இந்த நாவலில் இந்துக்கள்- முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து போராடுவது போன்று, இலங்கையில் சிங்களவர்- தமிழர் ஒன்று சேர்ந்து போராடவில்லையா? அந்த உதாரணங்களை சுட்டிக் காட்டி இருந்தால், நாவலின் பெறுமதி கூடியிருக்கும்.

அண்மையில் புத்தளத்தில் குப்பைகளை கொட்டுவதற்கான பாரிய தொட்டி அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் மூவின மக்களும் கலந்து கொண்டனர். ஏன் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னர் மலையகத்தில் கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் சிங்கள- தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து நடத்தியது தான். அத்துடன் சிறிலங்கா அரசு தமிழர்களை மட்டும் ஒடுக்கவில்லை. முழுக்க முழுக்க சிங்களப் பிரதேசமான வெலிவாரியாவில் சுற்றுச் சூழல் மாசடைதலுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சிலரை சுட்டுக் கொன்ற இராணுவம் "முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடத்துவோம்" என்று சிங்கள மக்களை மிரட்டியது.

ஆக்காட்டி நாவலின் நாயகியான பிருந்தா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பிறகு சிங்களக் காடையர்கள் தம்மிடம் இருந்த நிலங்களை பறித்துக் கொண்டதாக கூறுகின்றாள். அத்துடன் புலிகள் தமிழர்களுக்கு "பாதுகாப்பாக" இருக்கும் வரை சிங்களக் காடையர்கள் பயந்திருந்தார்கள் என்றும் கூறுகின்றாள். இது ஒரு தவறான தகவல். ஈழப்போர் தொடங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப் பட்டன. அன்று புலிகளோ, வேறெந்த இயக்கமோ அடாத்தான நில அபகரிப்புக்கு எதிராக ஆயுதமேந்தவில்லை. இல்லவே இல்லை! யாழ்ப்பாண நடுத்தர வர்க்க இளைஞர்களின் உத்தியோகக் கனவுகளை கலைத்த தரப்படுத்தல் சட்டம் கொண்டு வந்த பின்னர் தான் தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இதனை முள்ளிவாய்க்கால் வரை போராடிக் கொண்டிருந்த இடதுசாரியான தோழர் பாலகுமார் கூட குறிப்பிட்டு சொல்லி வந்தார்.

உண்மையில் இலங்கையில் நடந்த நில அபகரிப்புக்கு பின்னாலும் ஒரு வர்க்கக் காரணி இருந்தது. ஒரு பேரினவாத அரசு பெரும்பான்மை சமூகத்தின் ஓட்டுகளை நம்பி அரசியல் நடத்தும். இந்தியாவில் இந்துக்கள் என்றால், இலங்கையில் சிங்களவர்கள் தான் பேரினவாத அரசின் ஆதரவுத்தளம். இன்று இந்தியாவில் கொண்டு வரப்பட்ட CAA சட்டம் போன்றதொரு சட்டம் தான், முன்னர் இலங்கையில் மலையகத் தமிழரின் குடியுரிமையை பறித்தது. அசாமில் குடியேற்ற பட்ட வங்காளி இந்துக்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப் பட்ட மாதிரி, கிழக்கு மாகாணத்தில் குடியேற்றப் பட்ட சிங்களவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப் பட்டது.

மேலும் சிறிலங்கா அரசு சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது. முதலாவதாக, தென்னிலங்கையில் நிலமற்ற ஏழை சிங்கள விவசாயிகளுக்கு, கிழக்கிலங்கை ஏழை விவசாயத் தமிழர்களின் நிலங்களை பறித்துக் கொடுத்தது. இதன் மூலம் ஒரு வர்க்கப் பிரச்சினை இனப்பிரச்சினையாக மடைமாற்றப் பட்டது. இரண்டாவதாக, இயற்கை வளம் நிறைந்த கிழக்கிலங்கை பிரதேசத்தில் சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் அரசுக்கு விசுவாசமான ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக இன்று ஒரு பக்கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் வளச் சுரண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், மக்கள் இனரீதியாக பிளவு பட்டு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாம் ஏற்கனவே சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பேசப் பட்டவை தான். ஆனால், அதை ஆக்காட்டி நாவலில் வரும் சிவராசா பேசாமல் இருப்பது அதிசயமே! அவரது ஒரு மகன் போராளியாக இருந்து போரில் கொல்லப் பட்டதாக நாவலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. யாழ்ப்பாணத்தில் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்த பெற்றோரின் பிள்ளைகள் ஈழ விடுதலைப் போராளிகளாக இருந்திருக்கின்றனர். புலிகளில் மட்டுமல்லாது எல்லா இயக்கங்களிலும் சேர்ந்திருந்தனர். ஆனால் அவர்களது அரசியல் சிந்தனை பெற்றோரினுடையதை விட முற்றிலும் வேறானதாக இருந்தது.

பெற்றோர் இடதுசாரிகள் என்றால், பிள்ளைகள் வலதுசாரிகளாக இருந்தனர். இதுவும் தலைமுறை இடைவெளி தான். இலங்கையில் நவ தாராளவாத கொள்கைகள் அறிமுகப் படுத்தப் பட்ட பின்னர் தான் ஈழப்போராட்டம் தீவிரமடைந்தது. இரண்டுக்கும் தொடர்புள்ளது. மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட சிவராசா இலங்கையின் வர்க்க முரண்பாடுகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது.

சன்முகதானின் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவராக குறிப்பிடப் படும் சிவராசா, யாழ்ப்பாணத்தில், அறுபதுகளில் அவரது கட்சியினர் முன்னெடுத்த தீண்டாமை ஒழிப்பு போராட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அன்று அதுவும் வர்க்க உணர்வு கொண்ட ஆயுதப் போராட்டமாக பரிணமித்து இருந்தது. இத்தனைக்கும் தமிழகத்தில் இரட்டைக் குவளை வைக்கும் சாதிய ஒடுக்குமுறை, அதற்கு எதிராக நடந்த இரணியன் போராட்டம் பற்றி எல்லாம் நூலாசிரியர் இந்த நாவலில் விரிவாக எழுதி உள்ளார்.

இது மட்டும் தான் நாவலில் நான் கண்ட குறைபாடு. எனது நண்பரும் நாவலாசிரியருமான இரா. பாரதிநாதன் இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உண்மையில் ஆக்காட்டி ஒரு சிறந்த நாவல் என்பதில் ஐயமில்லை. தமிழில் இது போன்ற எழுத்துக்கள் வருவது மிக அரிது. தோழர் இரா. பாரதிநாதன் இன்னும் பல அரசியல் நாவல்கள் எழுத வேண்டும். 

Wednesday, February 26, 2020

நூல் அறிமுகம்: ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி


நூல் அறிமுகம்: "ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி". காலஞ்சென்ற என்.கே. ரகுநாதன் எழுதிய தன்வரலாறு. சமீப காலத்தில் வந்து கொண்டிருக்கும் "ஈழத்து தலித்திய" நூல்களில் குறிப்பிடத் தக்க ஒன்று. "சாதிய அடக்குமுறை இப்போது இல்லைத்தானே..." என்ற சாட்டுடன் இந்த நூலை வாசிக்காமல் கடந்து சென்று விட முடியாது. சிறு வயதில் ஒருவர் அனுபவித்த சாதிய அடக்குமுறைக் காயத்தின் தழும்புகள் வளர்ந்து பெரியவர் ஆனாலும் இருந்து கொண்டேயிருக்கும்.

இதை எழுதிய ரகுநாதன் ஐம்பதுகள், அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளை தனது அனுபவத்தில் கண்டவற்றை எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரே காரணத்திற்காக, வகுப்பறையில் ஆதிக்கசாதி ஆசிரியர்களும், மாணவர்களும் பிரயோகிக்கும் வன்முறைகளை பதிவு செய்துள்ளார். இதுவும் ஒரு வகையில் ராக்கிங் கொடுமை தான்.

தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பெற்றோரின் எழுத்தறிவின்மையை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் வெள்ளாள ஆதிக்க சாதியை சேர்ந்த அரச ஊழியர்கள், பிறப்புச் சான்றிதழில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பிள்ளைகளின் பெயரை மாற்றி எழுதும் கொடுமை பற்றி இந்த நூலில் விரிவாக சொல்லப் பட்டிருக்கிறது. பிறப்பு பதிவு செய்யும் கச்சேரியில் பெற்றோர் ஒரு பெயரை சொன்னாலும், அதை எழுதாமல் வேறொரு பெயரை எழுதி விடுகிறார்கள். சாதியப் பாகுபாடு காட்டும் வன்கொடுமைக் குற்றமானது, இனப் பாகுபாட்டுக்கு சற்றிலும் குறைந்தது அல்ல.

இந்த நூலின் கதாநாயகன் ரவீந்திரனும் பாடசாலை பதிவுகளில் தனது பெயர் கணபதி என்றிருப்பதை அறிந்து திகைத்துப் போகிறான். வீட்டில் வந்து பெற்றோரை விசாரித்தால் அவர்கள் அந்தப் பெயர் சூட்டவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். அப்போது தான் ஆதிக்க சாதியை சேர்ந்த அரச ஊழியர்கள் பிறப்புச் சான்றிதழ் பதிவில் செய்யும் மோசடி தெரிய வருகின்றது.

ஒரு காலத்தில் அடிமைகளாக வாழ்ந்த சமூகம் எவ்வாறு இலவசக் கல்வியால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறியது என்பது இந்த நூலில் தெளிவாக விளக்கப் படுகின்றது. ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சியானது பல வகையான போராட்டங்களின் ஊடாக நடக்கிறது. மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம் ஒருபுறம், தொழிலாளர்களின் வாழ்வியல் உரிமைகளுக்கான போராட்டம் மறுபுறமும் நடக்கிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் போராட்டங்களின் ஊடாக தன்னை உயர்த்திக் கொள்கிறது. இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஆதரவு சக்திகளாக இருந்துள்ளனர். உண்மையில் இடதுசாரிகளே தாழ்த்தப் பட்ட சாதியினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட்டங்களை ஒழுங்கு படுத்தினர் என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறார்.

அதே நேரம் தமிழ்த்தேசியவாதிகள் ஒடுக்குமுறையாளர்களின் பக்கம் நின்றுள்ளனர். இந்த துரோகத்தை யாராலும் மறுக்க முடியாது. உதாரணத்திற்கு அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம் சாதிவெறி கொண்டு திரிந்ததை குறிப்பிடலாம். மாவிட்டபுரம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகளுடன் நந்தி மாதிரி குறுக்கே நின்று தடுத்த சம்பவம், ஒரு கணித மேதையான சுந்தரலிங்கத்தின் இழி குணத்திற்கு சான்று பகர்கின்றது.

சிலநேரம் மதம் மாறச் சொல்லிக் கேட்டாலும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகள் படித்து முன்னேற வசதி செய்து கொடுத்துள்ளன. எந்தெந்த பாடசாலைகளில் எந்தெந்த மாணவர்களை அனுமதித்தார்கள் என்பதை விபரமாக பதிவு செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் சைவப் பாடசாலைகள் அனைத்தும் வெள்ளாள சாதிவெறியர்களின் கோட்டைகளாக இருந்துள்ளன.

நூலாசிரியர் என்.கே. ரகுநாதன் தான் பிறந்து வளர்ந்த நளவர் சாதிய சமூகம் குறித்தே இந்த நூலில் அதிகம் கவனம் செலுத்தி உள்ளார். பனையேறி கள்ளிறக்கும் தொழில் செய்து வந்த நளவர் சமூகம், எவ்வாறு ஒடுக்கப் பட்டு வந்தது என்பதை நூலின் முன்பாதியில் பதிவு செய்துள்ளார்.

பனஞ் சோலைக் கிராமத்தில் இயற்கையாகக் கிடைக்கும் பொருளாதார வளங்கள், அவற்றை பயன்படுத்தும் தொழில்நுட்பம் போன்றன குறித்து விரிவாக எழுதப் பட்டுள்ளது. பனை மரத்தில் கள் வடிக்க பயன்படுத்தப் படும் கருவிகளின் பெயர் விபரம், மற்றும் தொழில் நுணுக்கங்கள் அற்புதமாக விளக்கப் பட்டுள்ளன. அத்துடன் கள்ளிறக்கும் தொழிலாளர் படும் கஷ்டங்கள், சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் அவமானங்கள் ஆகியன பற்றிய தகவல்களும் உள்ளன.

நூலின் பின்பாதியில் ரவீந்திரனின் ஆசியர் தொழிலில் கிடைத்த அனுபவங்களுடன், நளவர் சமூகத்தில் படித்து முன்னேறிய தனிநபர்கள் பற்றிய ஆவணப் படுத்தல்கள் அடங்கியுள்ளன. இதனால் நூலின் முன்பாதி சுவையாக, விறுவிறுப்பாக எழுதப் பட்டிருந்தாலும், அது பின்பாதியில் காணாமல் போய் விடுகின்றது. நூலின் பின்னிணைப்பாக நளவர் சமூகத்தின் வரலாறு, அந்தப் பெயர் வரக் காரணம் என்ன என்பன குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த கிராமிய மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் பற்றிய வர்ணனைகள், அவற்றை நாம் நேரில் பார்ப்பது போன்று எழுதப் பட்டுள்ளன. ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக விவரித்து எழுதியுள்ள எழுத்தாளரின் திறமை மெச்சத்தக்கது. 22 ம் நூற்றாண்டிலும் இந்த நூலை வாசிப்பவர்கள் அந்தக் காலத்து வாழ்க்கையை புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்த நூலை எழுதிய ரகுநாதன் இறுதிக் காலங்களில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அங்கேயே காலமானார். இந்த அற்புதமான புதினத்தை எழுதிய ஒருவரை அவர் வாழும் காலத்தில் சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அவரது பூதவுடல் மறைந்தாலும் காலத்தால் அழியாத எழுத்துக்கள் மூலம் உயிர்வாழ்கிறார்.

கருப்புப் பிரதிகள், உயிர்மெய் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளது. ஈழத்து தலித்திய இலக்கியங்களை வாசிக்க விரும்புவோருக்கு இந்த நூலை பரிந்துரைக்கிறேன்.



Wednesday, August 14, 2019

நரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய மானிடவியல் ஆய்வு

நரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய வரலாற்றுத் தகவல்களைக் கூறும் நூல் ஒன்றை வாசித்து அறிந்து கொண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டச்சு மொழியில் "Kannibalisme en mensenoffers" எனத் தலைப்பிடப் பட்ட அந்த நூலை Daniel Vangroenweghe எழுதி இருக்கிறார். இவர் பெல்ஜியத்தை சேர்ந்த மானிடவியல் பேராசிரியர். காலனிய கால ஆவணங்களில் இருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த நூலை எழுதி இருக்கிறார்.

இந்த நூலை வாசிக்கும் பொழுது நமது காலத்தில் நடக்கும் இனப் பகை போர்களுக்கு காரணமான இன வெறுப்பு மனப்பான்மை எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இன்றைய இனவாத அரசியலுக்கு அடிப்படையான அதி உச்ச கட்ட இனத் துவேசம், ஈவிரக்கமில்லாத படுகொலைகளுக்கு காரணமாக உள்ளது. பண்டைய காலத்தில் எதிரி இனத்தவரைக் கொன்று அவர்களது மாமிசத்தை சாப்பிட்டார்கள். தற்காலத்தில் கொன்று புதைப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, இனங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு கற்காலத்தில் இருந்து மாறாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நூலில் அரைவாசிப் பகுதி, ஐரோப்பியக் காலனிய காலகட்டத்திற்கு முன்னர் அமெரிக்க கண்டத்தில் நடந்த சம்பவங்கள் தொகுக்கப் பட்டுள்ளன. மிகுதிப் பகுதி ஆப்பிரிக்காவில் கொங்கோ பகுதிகளில் நடந்த சம்பவங்களை குறிப்பிடுகின்றன. காலனிய காலத்தில் அவற்றை நேரில் கண்ட ஐரோப்பியரின் சாட்சியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. எழுத்தாளர் டச்சு மொழி பேசும் பெல்ஜிய நாட்டவர் என்பதால், முன்னாள் பெல்ஜிய காலனியான கொங்கோ பற்றிய ஆவணங்களை ஆராய முடிந்துள்ளது. அத்துடன் தென் அமெரிக்காவில் பிரெஞ்சு கயானா காலனியை ஸ்தாபித்த பிரெஞ்சுக்கார்கள் எழுதி வைத்த ஆவணங்களையும் ஆராய்ந்துள்ளார். ஆப்பிரிக்காவை விட, மத்திய அமெரிக்காவில் நடந்த சம்பவங்கள் விரிவாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதனால், இந்தக் கட்டுரையில் அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கிறேன்.

மனித மாமிசம் உண்பதற்கு, "கனிபலிசம்" (Cannibalism) என்ற சொல் பல ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது. இந்தச் சொல் கொலம்பஸ் கரீபியன் தீவுகளை கண்டுபிடித்த காலத்தில் உருவானது. கொலம்பசுடன் சென்ற ஸ்பானிஷ் மாலுமிகள், அந்தத் தீவுகளில் வாழ்ந்த கரிபா இன மக்கள் மனித மாமிசம் உண்பதை கண்டிருக்கிறார்கள். கரிபா என்ற சொல் கனிபா எனத் திரிபடைந்து கனிபலிசம் ஆகியது.

இந்த நூலின் ஆரம்பத்தில் பிரேசிலின் வட பகுதிகளில் வாழ்ந்த துப்பி செவ்விந்தியர்களின் சடங்குகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன. இவர்கள் பதினாறாம் நூற்றாண்டிலும் வேடுவர் சமூகமாகத் தான் வாழ்ந்தனர். பழங்குடி இனங்களுக்கு இடையில் அடிக்கடி யுத்தங்கள் நடக்கும். அப்பொழுது பலர் போர்க்கைதிகளாக சிறைப் பிடிக்கப் படுவார்கள். கைதிகள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த போதிலும், சிலநேரங்களில் பெண்கள், சிறுவர்களும் சிறைப்பிடிக்கப் படுவதுண்டு.

போர்க்கைதிகளாக பிடி பட்டவர்களை குறிப்பிட்ட காலம் சிறை வைத்திருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு நாள் நடக்கும் சடங்குகளின் பொழுது கொன்று சாப்பிடுவார்கள். நெருப்புக்கு மேலே பன்றியை வாட்டுவது போல, அந்த மனிதனையும் வாட்டுவர்கள். தோலை தனியாக உரித்தெடுத்து விட்டு, உடலை துண்டு துண்டுகளாக வெட்டி சாப்பிடுவார்கள். எதிரி இனத்தவனது உடலை சாப்பிடுவதன் மூலம் தமக்கு சக்தி கிடைக்கிறது என்று நம்புகிறார்கள். அத்துடன் தம்மின மக்களை கொன்ற எதிரியை கொன்று சாப்பிடுவதன் மூலம் பழி தீர்க்கப் பட்டு விட்டதாக திருப்திப் படுகின்றனர். இது மிகத் தீவிரமான, கொடூரமான இன வெறுப்புணர்வு.

பண்டைய காலத்தில், இந்த நடைமுறை அனேகமாக எல்லா இனத்தவர் மத்தியிலும் இருந்துள்ளது. அதாவது போரில் வென்ற இனம் மட்டுமல்லாது, தோல்வியுற்ற இனத்தவரும் தம்மால் சிறைப் பிடிக்கப் பட்ட போர்க்கைதிகளை கொன்று சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தனர். போர்க்கைதிகளை சுதந்திரமாக விட்டாலும், அவர்கள் தப்பியோட மாட்டார்கள். ஏனென்றால், அந்த நபர் தப்பிச் சென்று தனது இனத்தவரிடம் சேர முடியாது. அவர்கள் அவனை ஒரு கோழையாகக் கருதுவார்கள். இப்படித் தப்பி ஓடி வருவதை விட எதிரிகள் கைகளில் சாவது மேலானது என்று சொல்வார்கள்.

இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. மனித மாமிசம் உண்ணும் மக்கள், ஒரு நாளும் தமது இனத்தை சேர்ந்தவர்களின் இறைச்சியை உண்ண மாட்டார்கள். கடுமையான பஞ்சம் வந்தாலும் அதைச் செய்ய மாட்டார்கள். அதற்குக் காரணம் தம்மினம் சார்ந்த சகோதரத்துவ உணர்வு. சுருக்கமாக சொன்னால், இனங்களுக்கு இடையிலான பகை உணர்வு தான் நரமாமிசம் உண்ணும் பழக்கத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கென நடக்கும் சடங்கின் பொழுது அவர்கள் தமது வன்மத்தை வெளிப்படுத்துவார்கள்.

இனங்களுக்கு இடையில் நடக்கும் போர்களில், தம்மின மக்களை கொன்றதற்கு பழிவாங்குவதற்காக, எதிரி இனத்தவரை சிறைப் பிடித்து ஊருக்கு கொண்டு செல்வார்கள். அங்கு தமது சமூக உறுப்பினர்களுடன் சேர்ந்து எதிரி இனத்தவரை கொன்று சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தனர். அந்தப் போர்க்கைதிகள் போரில் தம்மை எதிர்த்துப் போரிட்ட போர்வீரராக மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிரி இனத்தை சேர்ந்தவர்கள் அப்பாவிகளாக இருந்தாலும் எதிரிகள் தான். அதாவது தம்மினத்தவரை கொன்றதற்காக, எதிரி இனத்தில் யாரை வேண்டுமானாலும் கொன்று சாப்பிட்டு பழி தீர்த்துக் கொள்ளலாம்.

அநேகமாக போர்க்கைதிகளாக சிறைப் பிடிக்கப் பட்டவர்களை உடனடியாக கொன்று தின்பதில்லை. அதற்காக ஒரு சடங்கு நடக்கும் வரையில் உயிரோடு வைத்திருப்பார்கள். சிலநேரம் தம்மினப் பெண்களில் ஒருத்தியுடன் சில வருட காலம் குடும்பம் நடத்தவும் விடுவார்கள். அவ்வாறு மணம் முடித்து வைக்கப்படும் பெண், பெரும்பாலும் போரில் கணவனை இழந்த விதவையாக இருப்பாள். அவர்களுக்கு குழந்தை பிறந்தாலும் அது தந்தை வழியில் வந்த எதிரியின் பிள்ளையாகக் கருதப்படும். தந்தையை கொல்லும் அதே நாளில் பிள்ளையையும் கொன்று விடுவார்கள். அவர்களது இறைச்சியை சுவைப்பவர்களில் முதன்மையானவர்களாக அந்தப் பெண்ணும் இருப்பாள்.

இந்தக் கதைகளை கேள்விப் படும் பொழுது நம்ப முடியாமல் இருக்கும். இதனை நூலாசிரியரும் உணர்ந்துள்ளார். இதெல்லாம் இட்டுக்கட்டிய கற்பனைக் கதைகள் அல்ல என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார். அதற்காக நேரில் கண்ட சாட்சிகள் எழுதிய குறிப்புகளை எடுத்துக் காட்டுகிறார். அது கூட கற்பனையாக எழுதி இருக்கலாம் என்று சொல்வோம் என்பதற்காக, இன்னொரு நாட்டில் இன்னொருவர் எழுதிய குறிப்புகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார். ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத இரண்டு நபர்கள் எவ்வாறு ஒரே மாதிரியான கதைகளை எழுத முடியும் என்று வாதிடுகிறார்.

இதிலே இன்னொரு ஆச்சரியமான விடயம், மெக்சிகோவில் உயர்ந்த நாகரிகத்தை கொண்டிருந்த அஸ்தேக் சாம்ராஜ்யத்திலும் நரபலி கொடுக்கும், மனித மாமிசம் உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு முன்னர் குறிப்பிட்ட பிரேசில் நாட்டு துப்பி (Tupi) இனத்தவர்கள் கற்கால மனிதர்கள் போன்று வேடுவர் சமுதாயமாக வாழ்ந்தவர்கள். அதே காலகட்டத்தில் மெக்சிகோவில் உலகிலேயே உயர்ந்த நாகரிகத்தை பின்பற்றிய மக்கள் வாழ்ந்தனர்.

இன்றைய மெக்சிகோ நாட்டின் வட பகுதியில் இருந்த அஸ்தேக் (Aztec) சாம்ராஜ்யத்தின் தலைநகரமும், அதன் ஆளுகைக்குட்பட்ட நகரங்களும் சிறந்த தொழில்நுட்பத்தில் நிர்மாணிக்கப் பட்டிருந்தன. அதே காலகட்டத்தில் பிரான்சில் மன்னரின் மாளிகையில் கூட கழிவறை இருக்கவில்லை. அதே நேரம், மெக்சிகோவில் அஸ்தேக் நகரங்களில் வீட்டுக்கு வீடு கழிவறை இருந்துள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான தானியங்கி குழாய் அமைப்பு சிறப்பாக செயற்பட்டது.

அஸ்தேக் நாட்டு மக்கள் ஒழுங்கமைக்கப் பட்ட வர்க்க சமுதாயத்தில் வாழ்ந்தனர். உயர்மட்டத்தில் இருந்த பூசாரிகள், மன்னர் குடும்பத்தினர், நிலப்பிரபுக்கள் போன்றோரின் பிள்ளைகளுக்கு போர்க்கலை மட்டும் புகட்டப் படவில்லை. மதநெறி, தத்துவம், கணிதம், மொழி, மற்றும் பல அறிவியல் பாடங்கள் போதிக்கப் பட்டன. வருடங்கள், மாதங்கள், நாட்களை சரியாகக் கணிப்பிடும் கலண்டர்கள் இருந்தன. அஸ்தேக் சாம்ராஜ்யத்தின் பல நூறாண்டு கால வரலாறு எழுதி வைக்கப் பட்டிருந்தது.

அத்தகைய உயர்ந்த நாகரிகத்தை பின்பற்றிய மக்கள் நரபலி கொடுத்தார்கள், நரமாமிசம் உண்டார்கள் என்றால் நம்பக் கூடிய விடயமா? ஆம், இது அவர்களது சம்பிரதாயம் என்கிறார் நூலாசிரியர். அதாவது வருடத்தில் அல்லது மாதத்தில் ஒரு தடவை நடக்கும் கோயில் திருவிழாக்களில் நரபலி கொடுக்கப் பட்டது. பிரமிட் மாதிரி கட்டப்பட்ட கோயில்களில் பலி கொடுக்கப் படும் நபர் பூசாரியால் படிகளில் தூக்கிக் கொண்டு செல்லப் படுவார். அங்கு நடக்கும் சடங்குகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

பிரமிட் உச்சியில் இருக்கும் கடவுள் சிலைக்கு முன்னால் உள்ள பலிபீடத்தில் கட்டி வைக்கப் படுவார். நான்கு பேர் கைகளையும், கால்களையும் பிடித்து கொண்டிருக்கும் பொழுது, தலைமைப் பூசாரி நெஞ்சை அறுத்து இதயத்தை வெளியே எடுப்பார். இதற்காக கூரான எரிமலைக் கல் பொருத்தப் பட்ட ஒரு வகைக் கோடாலி ஆயுதமாகப் பயன்படுத்தப் படும். உடலைக் கீறும் பொழுது வடியும் இரத்தம் ஒரு கிண்ணத்தில் சேகரிக்கப் படும். வெளியே எடுத்த இதயத்தை கடவுள் சிலைக்கு படைப்பதுடன், சிலையையும், சுவர்களையும் இரத்தத்தால் பூசுவார்கள். பலி கொடுக்கப் பட்டவரின் உயிரற்ற உடல் கீழே உள்ள பக்தர்களை நோக்கி வீசப்படும். அவர்கள் அதை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவார்கள்.

அஸ்தேக் சாம்ராஜ்யத்தில் நரபலி கொடுப்பதற்கு அரசியல்- மதக் காரணங்களை சொல்லி நியாயப் படுத்தினார்கள். உலகில் இயற்கைச் சமநிலை பேணுவதற்கு மனிதப் பலி கொடுக்க வேண்டும் என்பது அவர்களது மத நம்பிக்கை. வரட்சி, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களை தணிப்பதற்கு பலி கொடுப்பது அவசியம் என்று கருதினார்கள். இயற்கை அழிவுகளின் போது தான் நரபலி கொடுப்பதும் அதிகரித்துள்ளது. வருடத்திற்கு ஆயிரக் கணக்கான நரபலிகள் கொடுப்பது வழமையாக இருந்தது. சில வருடங்கள் பலி கொடுப்பது குறைந்து விட்டால், அதற்காகவே போர்களை நடத்தினார்கள். அன்று நடந்த போர்கள் நிலத்தை ஆக்கிரமித்து, பொன், பொருள்களை அபகரிப்பதுடன் முடிந்து விடுவதில்லை. போர்க்கைதிகளை பிடித்து வந்து பலி கொடுப்பது ஒரு மதக் கடமையாகக் கருதப் பட்டது.

ஏகாதிபத்திய விஸ்தரிப்புவாதமும் நரபலி கொடுப்பதன் மூலம் நியாயப் படுத்தப் பட்டது. மன்னர்கள் அதை ஒரு மதக் கடமை என்று கூறுவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர். பிற நாடுகளின் மீது படையெடுத்து, அங்கு சிறைப்பிடிக்கப் பட்ட ஏராளமான போர்க்கைதிகளை கொண்டு வந்து, நகரங்களில் இருந்த கோயில்களில் பலி கொடுத்தனர். இதனை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க ஊக்குவிக்கப் பட்டனர்.

ஓயாத யுத்தங்கள் காரணமாக, மெக்சிகோவில் வாழ்ந்த பிற இனத்தவர்கள் அஸ்தேக் சாம்ராஜ்யத்துடன் பகைமை கொண்டிருந்தனர். ஸ்பானிஷ் காலனியப் படைகள் வந்திறங்கிய நேரம், அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். ஸ்பானிஷ்காரர்கள் உள்நாட்டு பூர்வீக இனத்தவரின் உதவியுடன் தான் அஸ்தேக் சாம்ராஜ்யத்துடன் போர் தொடுத்து வெற்றி பெற்றனர். அந்தப் போரில் பல்லாயிரக் கணக்கான அஸ்தேக் மக்கள் கொல்லப் பட்டனர். அவர்களது உடல்கள் பூர்வகுடி வீரர்களினால் கொண்டு சென்று புசிக்கப் பட்டன.

அஸ்தேக் சாம்ராஜ்யத் தலைநகர் தெநோக்தித்லன்(Tenochtitlan) இரண்டு இலட்சம் பேரை சனத்தொகையாகக் கொண்ட மாபெரும் நகரம். அங்கு நீண்ட காலம் நடந்த சுற்றிவளைப்புப் போரின் இறுதியில் ஸ்பானிஷ் படைகள் வெற்றி பெற்ற நேரம், தெருக்களில் பிணக் குவியல்கள் கிடந்தன. எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினி கிடந்த போதிலும், தெநோக்தித்லன் நகரில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல்களை உண்ணவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் தம்மினத்தை சேர்ந்தவர்களின் மாமிசத்தை சாப்பிட மாட்டார்கள்.

தெநோக்தித்லன் நகரைக் கைப்பற்றுவதற்கு ஸ்பானிஷ் படையினருடன் சேர்ந்து போரிட்ட, பிற பூர்வீக செவ்விந்திய இனங்களை சேர்ந்த வீரர்களுக்கு நல்ல வேட்டை கிடைத்தது. அவர்கள் அங்கிருந்த உடல்களை கொண்டு சென்று, ஊரில் இருந்த குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துண்டார்கள். அதாவது, தமது எதிரிகளின் உடல்களை சாப்பிடுவதை பெருமையாகக் கருதினார்கள். இந்த விபரங்களை யுத்தம் நடந்த காலத்தில் அங்கிருந்த ஸ்பானிஷ் பாதிரியார்கள் எழுதி வைத்துள்ளனர்.

அது போர்க்காலம் என்பதால், தம்முடன் சேர்ந்து போரிட்ட பூர்வீக செவ்விந்திய வீரர்கள் நரமாமிசம் உண்பதை ஸ்பானிஷ்வீரர்கள் தடுக்கவில்லை. இருப்பினும் போர் முடிந்த பின்னர் கிறிஸ்தவ மதத்தின் பெயரில் நரமாமிசம் உண்பதை தடை செய்தார்கள். ஸ்பானிஷ்காரர்கள் கைப்பற்றிய இடங்களில் எல்லாம் நரபலி கொடுப்பதும் தடுக்கப் பட்டது. ஒவ்வொரு கிராமமாக கைப்பற்றியதும் அங்கிருந்த தெய்வச் சிலைகளை உடைத்து நொறுக்கினார்கள். தடுக்க முயன்ற பூசாரிகளை கொன்றனர். இதன் மூலம் அவர்களது கடவுளரை விட தாமே சக்தி வாய்ந்தவர்களாக ஸ்பானிஷ் காலனிய வீரர்கள் காட்டிக் கொண்டனர்.

அஸ்தேக் நாடு நாகரிகமடைந்த சமுதாயத்தைக் கொண்டிருந்தது. அதன் அர்த்தம் அது பல அடுக்குகளை கொண்ட வர்க்க சமுதாயமாக இருந்தது. அந்நாட்டில் எந்த வகையான மக்கள் பிரிவினர் நரபலி கொடுக்கப் பட்டனர் என்ற விபரம், பண்டைய அஸ்தேக் ஆவணங்களில் இருந்து கிடைக்கிறது. ஆக்கிரமிப்புப் போர்களில் சிறைப் பிடிக்கப் பட்ட எதிரி இனத்தவர்கள் தான் நரபலி கொடுக்கப் பட்டவர்களில் பெரும்பான்மை. அதற்கு அடுத்த படியாக அடிமைகள் இருந்தனர்.

அஸ்தேக் நாகரிக காலத்தில், போரில் சிறைப்பிடிக்கப் பட்ட பிற இனங்களை சேர்ந்த போர்க்கைதிகள் எல்லோரும் நரபலி கொடுக்கப் பட்டனர் என்று அர்த்தமல்ல. கணிசமான அளவினர் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு அனுமதிக்கப் பட்டனர். பெரும்பாலும் பல்வேறு தொழில்களை செய்விப்பதற்கு அடிமைகளாக நடத்தப் பட்டனர். ஒரு வர்க்க சமுதாயத்தில், மேல் தட்டில் இருக்கும் நிலப்பிரபுக்களுக்கு அடுத்த நிலையில் வணிகர்களும், விவசாயிகளும் இருப்பார்கள். அவர்களுக்கு கீழே அடிமைகளும், பிற ஒடுக்கப் பட்ட மக்களும் இருப்பார்கள்.

பிற இனத்தவர் மட்டுமல்லாது, சொந்த இனத்தை சேர்ந்தவர்களும் அடிமைகளாக மாறலாம். அளவுக்கு மீறி கடன் வாங்கி கட்ட முடியாமல் கஷ்டப் படுபவர்கள் தமது பிள்ளைகளை அடிமைகளாக விற்று விடுவார்கள். சிலநேரம் அப்படியானவர்கள் தம்மைத் தாமே அடிமைகளாக விற்று விடுவதுண்டு. அடிமைகளின் பிள்ளைகள் "சுயவிருப்பின்" பேரில் நரபலி கொடுக்கப் படுவதுண்டு. ஆனால், எக்காரணம் கொண்டும் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களை நரபலி கொடுப்பதில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

எதற்காக உலகில் நரபலி கொடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருந்து வந்துள்ளது? அதற்குக் காரணம், நரபலி கொடுக்கப் படுபவர் தனது இனத்தவர் அல்ல என்ற உணர்வு. அதாவது எதிரி இனத்தை சேர்ந்தவர்களை மனிதர்களாக மதிக்காத மனப்பான்மை. மிக உயர்ந்த அஸ்தேக் நாகரிக சமுதாயத்தில் வர்க்க உணர்வும் சேர்ந்து கொண்டது. நரபலி கொடுக்கப் படுபவர்கள் எப்போதும் பொருளாதார ரீதியாக கீழ்த்தட்டு மக்களாக இருந்தனர். அதனால் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு அவர்கள் மீது இரக்கம் பிறக்கவில்லை. இந்த உணர்வு இப்போதும் நவீன காலத்திலும் தொடர்கிறது. 

"நாகரிக" வளர்ச்சி அடைந்த நவீன காலத்திலும், ஏழை மக்கள் பாதிக்கப் பட்டால் பணக்காரர்களுக்கு வலிப்பதில்லை. இன்று உலகில் நடக்கும் போர்களில் உயிர்ப் பலி கொடுக்கப் படுபவர்கள் பெரும்பாலும் ஏழைகள் தான்.  இனப் பகை காரணமாக நடக்கும் போர்களில், பலியாவது எதிரி இனத்தவர்கள் என்றால், அது குறித்து யாரும் கவலைப் படுவதில்லை. அவர்களும் மனிதர்கள் தானே என்ற மனிதாபிமான உணர்வு எழுவதில்லை. தனது இனத்திற்கு வந்தால் இரத்தம், எதிரி இனத்திற்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனப்பான்மை பலரிடம் உள்ளது. முன்னொரு காலத்தில் நரபலி கொடுப்பதையும், மனித மாமிசம் உண்பதையும் மரபாகக் கொண்டிருந்த மக்களின் மனப்பான்மையும் அதே மாதிரித் தான் இருந்தது.

Monday, February 08, 2016

புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளின் கதையைக் கூறும் "கொலம்பஸின் வரைபடங்கள்"


புலிகளின் de facto தமிழீழ ஆட்சி நடந்த வட இலங்கையில் இருந்து, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தென்னிலங்கையில் கொழும்பு நகரிலும், இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் தமது புதிய வசிப்பிடங்களை தேடிக் கொண்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு யோ.கர்ணன் எழுதியுள்ள "கொலம்பஸின் வரைபடங்கள்" என்ற நூல் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.

யோ.கர்ணன் புலிகள் இயக்கத்தில் போராளியாக அல்லது உறுப்பினராக இருந்தவர். அவர் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேற எத்தனித்து, அது கைகூடாமல் திரும்பி வந்த அனுபவத்தை எழுதி உள்ளார். அது மட்டுமல்லாது, இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் வரை நடந்த சம்பவங்களை விலாவாரியாக எழுதியுள்ளார்.

உண்மையில், இந்த நூலானது ஒரு மேற்கத்திய நாட்டவரான கோர்டன் வைஸ் எழுதிய "கூண்டு" நூலை ஒத்திருக்கிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான சம்பவங்கள் வருகின்றன. ஆனால், கூண்டு நூலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய தீவிர புலி ஆதரவாளர்கள், கொலம்பஸின் வரைபடங்கள் நூலை தூற்றிக் கொண்டிருந்தனர். இந்த இரட்டை வேடத்திற்கு காரணம், கோர்டன் வைஸ் ஒரு மேற்கத்திய நாட்டு வெள்ளையர், யோ.கர்ணன் ஒரு தமிழீழத்து கறுப்பர் என்பது மட்டும் தான்.

ஈழத் தமிழருக்கு வாக்களிக்கப் பட்ட புனித பூமியான தமிழீழத்தில் இருந்து பணக்காரர்கள் மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இது இறுதிப் போர்க் காலத்தில் மட்டும் நடக்கவில்லை. அதற்கு முன்னரே, காலங்காலமாக நடந்து கொண்டிருந்தது. அந்த உண்மையை யோ.கர்ணன் கூட காலந் தாமதித்து தான் அறிந்து கொண்டார். (அவர் வயதால் இளையவர், கொள்கைப் பற்றுடன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்தார் என்பது ஒரு முக்கிய காரணம்)

இங்கே இன்னொரு வேடிக்கையையும் அவதானிக்கலாம். யோ. கர்ணனையும் அவரது இந்த நூலையும் தூற்றிக் கொண்டிருக்கும் "புலி விசுவாசிகளில்" பெரும்பான்மையானோர், ஒரு காலத்தில் இதே மாதிரியான நிலைமையில் வாழ்ந்தவர்கள் தான். ஒரு வேளை, யோ. கர்ணனின் வெளியேறும் முயற்சியும் வெற்றியடைந்து, அவர் இன்றைக்கு ஒரு மேற்கத்திய நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவரும் புலம்பெயர்ந்த புலி விசுவாசிகளில் ஒருவராக இருந்திருக்கக் கூடும். யார் கண்டது?

1986 ம் ஆண்டுக்குப் பின்னர் தான், வட இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் உருவாகியது. அப்போதே இளம் வயதினர், அதாவது 16 க்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டோர் வெளியேற தடை விதித்திருந்தனர். அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த குடும்பங்களுக்கும் வெளியேற அனுமதி அளிக்கவில்லை. பலருக்கு அடிக்கடி கொழும்பு செல்ல வேண்டிய தேவை இருந்தது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டுப் பணம் பெறுபவர்களும், கொழும்புக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் ஒரு குடும்ப உறுப்பினரை பணயம் வைத்து விட்டு செல்ல வேண்டும். திரும்பி வராவிட்டால் அவருக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

இத்தனை தடைகளையும் தாண்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விட்டு வெளியேறி, மேற்கத்திய நாடுகளில் குடியேறியவர்கள் யாராக இருக்கும்? பணக்காரர்கள் மற்றும் வசதி படைத்த மத்திய தர வர்க்கத்தினர். புலிகளின் உத்தியோகபூர்வ பிரச்சார சாதனங்கள், இவர்களை துரோகிகள் என்று தூற்றிக் கொண்டிருந்தன.

உண்மையிலேயே, அன்றிருந்த மேட்டுக்குடியினரில் பெரும்பான்மையானோர், புலிகளை அல்லது தமிழீழத்தை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. யுத்தத்திற்குள் அகப்படாமல் தங்களது உயிரையும், வர்க்க நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, "கொலம்பஸின் வரைபடங்களுடன்" உலகம் முழுவதும் அகதிகளாக சென்றார்கள். 

தஞ்சம் கோருவதற்கு வசதியாக புதிய புதிய நாடுகளை கண்டுபிடித்தார்கள். அங்கே தமது வாழ்க்கையை உறுதிப் படுத்திக் கொண்டதும் என்ன செய்தார்கள்? அப்படியே 360 பாகையில் சுழன்று கரணம் அடித்து, தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக் கொண்டார்கள். இது அவர்களது கதை.

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. ஈழப்போர் நடந்து கொண்ட இடங்களில் இருந்து வெளியேறிய தமிழர்கள், உலகம் முழுவதும் அடைக்கலம் கோரியதை அது உவமைப் படுத்துகின்றது. தானும் ஒரு வரைபடம் தயாரித்து, அது கைகூடாமல் போன அனுபவத்தை இந்த நூலில் எழுதி உள்ளார். சரித்திர கால கொலம்பஸின் கப்பல் பயணத்திற்கு பெருமளவு பணம் செலவானது. அதே போன்று, "தமிழ்க் கொலம்பஸ்கள்" ஒழுங்கு படுத்தும் பயணத்திற்கும் பெருமளவு பணம் செலவாகின்றது. அண்மைக் காலத்தில் இருபதாயிரம் டாலர் அல்லது யூரோ கட்டிக் கூட வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.

பணக்கார மேற்கத்திய நாடுகளில் வாழும் சாதாரண மக்களிடம், ஆயிரம் டாலர்/யூரோ கூட சேமிப்பில் இல்லை. அப்படி இருக்கையில், வறிய நாடான இலங்கையில் இருந்து, பெருமளவு பணம் செலவழித்து வெளிநாடு செல்வதற்கு யாரால் முடியும்? வசதி படைத்தவர்களால் மட்டுமே அது முடிந்த காரியம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், தமது காணிகளை புலிகளிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியோர் ஏராளம் பேருண்டு. 

வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் வசதியான வீடுகளில் புலிகளின் அலுவலகங்கள் இயங்கின. இதை எல்லாம் ஆண்டு அனுபவித்து வந்த பணக்கார வர்க்கம், விருப்பத்துடன் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? சொத்துக்கு ஆசைப்பட்டு யுத்தத்திற்குள் அகப்பட்டு சாவதை விட, மேற்கத்திய நாடொன்றுக்கு சென்றால் இதை விட அதிகமான சொத்து சேர்க்கலாம் என்று கணக்குப் போட்டார்கள். உண்மையிலேயே வெறுங்கையுடன் வெளிநாடு சென்று பணக்காரர்களாக திரும்பி வந்தவர்கள் ஆயிரம் உண்டு.

இறுதிப்போர் வரையில், புலிகளின் de facto தமிழீழத்தில் இருந்து, வசதி படைத்தோர் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். "பணம் கொடுத்தால் எல்லா வழிகளும் திறந்தன" என்று யோ.கர்ணன் இந்த நூலில் எழுதி இருக்கிறார்.

புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள், இலட்சக் கணக்கான பணத்தை (லஞ்சமாக) வாங்கிக் கொண்டு, குடும்பத்துடன் வெளியேறிச் செல்ல அனுமதித்தார்கள். சிலநேரம் அந்தப் பணம் இயக்க நிதி என்ற பெயரில் "விரும்பிக்" கொடுக்கப் பட்டது.

இறுதிப் போரில் இராணுவம் சுற்றி வளைத்ததும், கட்டுப்பாட்டுப் பகுதிகள் சுருங்கியதும், போரை நடத்துவதற்கு போதுமான போராளிகள் இருக்காமையும் வெளியேற்றத்தை முற்றாகத் துண்டித்தது. குடும்பத்திற்கு ஒரு பிள்ளை கட்டாய இராணுவப் பயிற்சிக்கு வர வேண்டும் என்று புலிகள் அறிவித்தனர். அது ஏழை, பணக்காரர் எல்லோரையும் பாதித்தது. அப்போதும் சில பணக்காரர்கள் புலிகளுக்கு பணம் கொடுத்து தமது பிள்ளைகளை மீட்டு வந்தனர்.

கொள்கை எல்லாம் குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். கட்டாய இராணுவ பயிற்சியை ஊக்குவித்த புலிகளின் முக்கியஸ்தர்கள் கூட, தமது பிள்ளைகளை சேவையில் ஈடுபடுத்த விரும்பி இருக்கவில்லை. தனது பிள்ளையும் படையில் இணைக்கப் பட்டதை அறிந்து கொண்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை (முக்கிய தலைவர்களில் ஒருவர்), சம்பந்தப் பட்ட பொறுப்பாளரின் சட்டையை பிடித்து உலுக்கி, பிள்ளையை மீட்டு வந்தார். இந்தச் சம்பவத்தை யோ. கர்ணன் தனது நூலில் பதிவு செய்துள்ளார். 

யோ. கர்ணன் தனது நூலுக்கு கொலம்பஸின் வரைபடங்கள் என்று பெயரிட்டாலும், அதை எவ்வாறு சரித்திர கால கொலம்பஸ் உடன் ஒப்பிடுவது என்பதில் தடுமாறி உள்ளார். கொலம்பஸ் ஸ்பானிஸ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய நாடுகளை கண்டுபிடித்தார். ஆனால், ஈழத் தமிழர்களோ மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத்தை வளம் படுத்த அகதிகளாக சென்றனர். இரண்டையும் ஒப்பிட முடியாது.

இருப்பினும், யோ. கர்ணன் எதிர்பாராத ஒற்றுமை ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும். கொலம்பஸ் வாழ்ந்த காலத்தில், ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளாக இருந்த, அரபு பேசும் இஸ்லாமிய மூர்களின் இராச்சியம் சுருங்கிக் கொண்டிருந்தது. அதன் மீது கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகள் ஆக்கிரமிப்பு போரை நடத்திக் கொண்டிருந்தன. மூர்களின் இராச்சியத்தை புலிகளின் de facto தமிழீழத்துடன் ஒப்பிடலாம். அதே மாதிரி, கத்தோலிக்க ஸ்பானிஷ் படைகளை, பௌத்த சிங்கள படைகளுடன் ஒப்பிடலாம்.

அரேபியர் மட்டுமல்லாது, ஸ்பானிஷ் மொழி பேசும் முஸ்லிம்கள், மற்றும் யூதர்கள், என்று பெருந்தொகையான அகதிகள், அன்று மூர்களின் இழந்து கொண்டிருந்த இராச்சியத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் எல்லோரும் மூர்கள் என்று பொதுப் பெயரில் அழைக்கப் படவிருந்தனர். 1492 ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் முடிவில், ஸ்பெயின் நாடு முழுவதும் கத்தோலிக்க மன்னராட்சி நிறுவப் பட்டது. அத்துடன் ஸ்பெயினில் இருந்த "மூர் தேசியம்" அழிந்து விட்டது என்று கருத முடியாது.

புலம்பெயர்ந்த ஸ்பானிஷ் மூர்கள், அல்ஜீரியாவில் "நாடு கடந்த மூர் இராச்சியம்" அமைத்துக் கொண்டனர். அங்கிருந்த படியே, தமது தாயகத்தை ஆக்கிரமித்த "கத்தோலிக்க- ஸ்பானிஷ் பேரினவாத அரசுக்கு" எதிராக போர் தொடுத்தார்கள். இறுதிப்போரில் ஸ்பெயினில் நடந்த "மூர் இனப்படுகொலை", அவர்களது அரசியல் பிரச்சாரங்களில் முக்கியத்துவம் பெற்றது. அந்தக் காலங்களில் ஐ.நா. மன்றம் எதுவும் இருக்கவில்லை. இருந்திருந்தால் ஜெனீவா சென்று ஸ்பெயினில் நடந்த மூர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டிருப்பார்கள்.

கிட்டத்தட்ட அதே மாதிரியான வரலாறு, 2009 ம் ஆண்டுக்குப் பின்னரான தமிழ் தேசிய அரசியல் அரங்கில் உருவானது. அந்த வருடம், அது வரை காலமும் புலிகளின் ஆட்சியில் இருந்த de facto தமிழீழமான வன்னிப் பிரதேசம், சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்காவில் "நாடு கடந்த தமிழீழம்" உருவானது. மேற்கத்திய நாடுகளில் இயங்கிய புலி ஆதரவு அமைப்புகள், வன்னியில் நடந்த தமிழ் இனப்படுகொலையை தமது முக்கியமான அரசியல் கோரிக்கையாக வரித்துக் கொண்டன. இஸ்லாமிய மூர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி, அதே பாணியில் புலம்பெயர் தமிழ் தேசிய அரசியலை மீளுருவாக்கம் செய்தனர்.

முன்னாள் புலிப் போராளியான யோ. கர்ணன் எழுதியுள்ள கொலம்பஸின் வரைபடங்கள் நூலானது, "புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களின்" கதைகளை கூறுகின்றது. இது அவர்களது சொந்தக் கதை. அதனால் தான், அதை மற்றவர்கள் அறிந்து கொள்வதை விரும்பவில்லை. கொலம்பஸின் வரைபடங்கள் இருப்பதை அறிந்து கொண்டவர்களும், அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களும் அவர்கள் தான். கொலம்பஸ் கண்டுபிடித்த அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழம் உருவானது ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது.


கொலம்பஸின் வரைபடங்கள் நூலை வாங்குவதற்கு:

Sunday, January 22, 2012

லண்டனில் நூல் அறிமுகமும், அரசியல் உரையாடலும்


மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு, உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை, பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இச்சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.
அரசியல் செயற்பாட்டாளரும் தொழில்சங்கவாதியுமான பி.எ.காதர் அவர்களுடனான திறந்த அரசியல் உரையாடலும் இம்முறை எழுத்தாளர்களான கலையரசன், றஷ்மி ஆகியோரின் இரு நூல்கள் பற்றிய அறிமுகமும் கருத்துரையும் நடைபெற உள்ளது.

காலம்-29-01-2012 – 11.30am -06pm

இடம்:
South Ruislip Methodist Church Hall,
Queens Walk, Ruislip HA4 0NL


கலையரசன், சுசீந்திரன் (ஜெர்மன்), நிர்மலா இராஜசிங்கம், சிவகுமார்(சரிநிகர்), சந்தூஸ் பரராஜசிங்கம், வேலு, றஷ்மி, பௌசர் ஆகியோரின் உரைகளுடன் பங்குபற்றுனர்களின் கருத்துக்களும் இடம்பெறும். உரையாடல்கள் தொகுக்கப்பட்டு ஆவணமாக்கப்படும்.
தயவு செய்து இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் முன் கூட்டியே தமது பிரசன்னத்தை உறுதிப்படுத்தினால் பகல் உணவு மற்றும் அனைத்து ஏறபாடுகளுக்கும் உதவியாக இருக்கும் என்பதினை கவனத்தில் கொள்க. குறித்த திகதியினை முன் கூட்டி ஒதுக்கிவைத்துக் கொள்ளவும்.


தொடர்புகளுக்கு- email – eathuvarai@gmail.com

tel – 078 17 262980,075 33 087523,074 35 703902


மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்.

நன்றி

Tuesday, January 10, 2012

நூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு

சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், நான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளின் தொகுப்பு, "காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்" என்ற நூலாக வெளிவந்துள்ளது. கருப்பு பிரதிகள் அதனை பதிப்பித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.
நூல் பற்றிய சிறிய அறிமுகம்:



முன்னுரை

2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த தருணத்தில், திடீரென வருமானம் இழந்த சாமானிய மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் குறித்து அறியும் ஆவல் மேலோங்கியது. அதுவரை காலமும் மிகச் சிக்கலான பொருளாதார அடிப்படைகளை, துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.

நெருக்கடிக்கு பின்னர் தோன்றிய விழிப்புணர்வு, சாதாரண மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் என்றால் என்ன என்று அறியும் ஆவலை தூண்டியது. அதன் விளைவாக உருவானதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை எழுதிய நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல. எம்மைச் சுற்றியுள்ள பொருளாதாரத்தை புரிந்து கொள்ள, பல்கலைக்கழகத்தில் பொருளியல் படிப்பில் பட்டம் அவசியமில்லை. பொருளாதார நெருக்கடிகளை ஒரு சாதாரண உழைப்பாளியாக எதிர்கொண்டேன். அதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களில் நானும் ஒருவன். ஆகவே எமது தலைவிதியை தீர்மானிக்கும் புரிந்து கொள்ள எமக்கு உரிமை உண்டு என நம்புகிறேன். அந்த தேடல் இங்குள்ள கட்டுரைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது. தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீண்டு விட்டதாக கருத்துகள் திணிக்கப்படுகின்றன. இருப்பினும் சந்தைப் பொருளாதாரம் நெருக்கடி எனும் சுழற்சிக்குள் அடிக்கடி சிக்கிக் கொள்வது வழமை. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை, 2008 ஆண்டு கால பின்புலத்துடன் வாசிக்கவும். நாம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அப்படியான தருணத்தில், கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க, அவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள எனது கட்டுரைகள் உதவும் என நம்புகின்றேன்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தற்கால பொருளாதார அமைப்பை விமர்சிக்கின்றது. இருப்பினும் சில செய்திக் கட்டுரைகள், மேற்குலக நாடுகளில் தன்னெழுச்சியாக தோன்றிய மக்கள் போராட்டங்களையும் பதிவு செய்துள்ளன. ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் பொழுது, வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொருளாதாரத்திற்கும் அரச அடக்குமுறைக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மக்கள் மாற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள். சிறு பொறியில் இருந்து காட்டுதீ பரவுவது போல, பொருளாதார பிரச்சினைகள் மாபெரும் புரட்சிகளை பிரசவித்துள்ளன.

அன்புடன்,
கலையரசன்

Wednesday, October 20, 2010

டென்மார்க் தமிழரைக் கவர்ந்த ஆப்பிரிக்க நூல் - சில குறிப்புகள்

10 -10 -10 அன்று, டென்மார்க் நாட்டில், வயன் நகரில், "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" நூல் அறிமுகம் இனிதே நிறைவேறியது. டென்மார்க் இலக்கிய ஆர்வலர், கரவைதாசனின் "இனி" அமைப்பின் சார்பில் ஒருங்கமைக்கப்பட்டது. வயன் நகர கலாச்சார மையம், அன்றைய நிகழ்வையொட்டி மறைந்த டென்மார்க் தமிழ் இலக்கியவாதி முல்லையூரான் ஞாபகார்த்த மண்டபமாகியது. விடுமுறை நாளை பயனுற கழிக்க விரும்பிய டென்மார்க் தமிழர்கள் 150 பேரளவில் நிகழ்வுக்கு சமூகமளித்தமை குறிப்பிடத் தக்கது. டென்மார்க் ஐரோப்பாவின் சிறிய நாடுகளில் ஒன்று. லண்டன், பாரிஸ் நகரங்களைப் போலல்லாது, டென்மார்க் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், 300 கி.மி. தூரத்தில் இருந்து கூட நூல் அறிமுக நிகழ்வுக்காக வந்திருந்தனர். நேரம் பிந்தியும் சிலர் வந்து கொண்டிருந்தமையால், மண்டபம் நிறைந்து காணப்பட்டது.


கலையரசனின் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" நூலை விமர்சித்து, இரண்டு பேச்சாளர்கள் வேறு பட்ட பார்வையில் சொற்பொழிவாற்றினார்கள். முதலில் விமர்சித்த டென்மார்க்கில் வாழும் மனோதத்துவ டாக்டர் கதிர்காமநாதன், தமிழில் இது போன்ற நூல் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார். கலையரசன் இந்த நூலை எழுதுவதற்கு முன்னர், நெதர்லாந்தில் அகதியாக வாழ்ந்த காலத்தில் பல ஆப்பிரிக்கர்களோடு பழகியிருக்கிறார். சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறார். இவற்றை நூலை வாசிக்கும் பொழுது அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" என்ற தலைப்பு ஏன் வந்தது என நூலாசிரியர் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "ஆப்பிரிக்காவில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை மெய்ப்பிக்கும் பொருட்டு அந்த தலைப்பு வைக்கப் பட்டிருக்கலாம்." என தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

டாக்டர் கதிர்காமநாதன் தனது விமர்சனத்தில் இன்னொரு விளக்கத்தையும் கேட்டிருந்தார். ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு இல்லை என்றும், அங்கே கோத்திரங்கள் அல்லது இனக்குழுக்கள் மாத்திரம் இருப்பதாகவும், இது பற்றிய விளக்கம் தருமாறு நூலாசிரியரை கேட்டுக் கொண்டார். தனக்கு ஏற்கனவே ஆப்பிரிக்கா பற்றிய பரிச்சயம் இருப்பதாகவும், தன்னிடம் வரும் ஆப்பிரிக்க நாடுகளின் நோயாளிகளிடம் இருந்தே பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறினார். அவர்கள் கூறிய கதைகள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் நூலில் வரும் பல தகவல்களை புதிதாக கேள்விப்படுவதாக சில உதாரணங்களை குறிப்பிட்டார். சிம்பாப்வேயில் அகப்பட்ட கூலிப்படையினருடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மார்க் தாட்சர் விவகாரம், வெகுஜன ஊடகங்களில் வெளிவராத செய்தியாகும். கட்டுரைகளின் தலைப்புக்கள் கவித்துவம் மிக்கதாக இருந்தமை தன்னைக் கவர்ந்ததாக தெரிவித்தார். "நைல் நதி, ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு" போன்ற தலைப்புகளின் உள்ளடக்கத்தை சிலாகித்துப் பேசினார்.

இரண்டாவதாக நூலை விமர்சித்த பவுசர் பிரிட்டனில் இருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார். பவுசர் இலங்கையில் வெளிவந்த மூன்றாவது மனிதன், தற்போது லண்டனில் இருந்து வரும் எதுவரை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராவார். "சமூக நலன் சார்ந்த சிறந்த நூல்களை பதிப்பிடுவதில் புகழ் பெற்ற கீழைக்காற்று பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. இதிலிருந்தே ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற நூலின் முக்கியத்துவம் தெளிவாகின்றது." என்ற முகவுரையுடன் ஆரம்பித்தார். பவுசர், ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினையை, ஏகாதிபத்திய தலையீடு என்ற கோணத்தில் இருந்து பார்த்தார். குறிப்பாக கொங்கோவின் முதலாவது பிரதமர் லுமும்பா கொலையில், பின்னணியில் இருந்த ஏகாதிபத்திய சதி பற்றிய கண்டனங்களை முன்வைத்தார். கொங்கோவில் அண்மைக்காலமாக நடந்த யுத்தத்தில் மில்லியன் கணக்கான மக்கள் மாண்ட போதிலும், வெகுஜன ஊடகங்கள் கண்டுகொள்ளாததை சாடினார். மேலும் சுதந்திரமடைந்த ஆப்பிரிக்க நாடுகளின் சட்டங்கள் யாவும், காலனிய எஜமானர்களால் எழுதப்பட்டவை, அவற்றை மாற்ற முடியாது என்பதையும் நினைவூட்டினார்.

இறுதியாக நன்றியுரை கூற எழுந்த கலையரசன், டாக்டர் கதிர்காமநாதன் கேட்ட விளக்கங்களுக்கு பதில் கூறி தனது உரையை ஆரம்பித்தார். ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்ற தலைப்பு அர்த்தம் பொதிந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பியர்கள் காடுகளில் வாழ்ந்த காலத்தில், எகிப்தில் உயர்ந்த நாகரீகம் கொண்ட சமுதாயம் காணப்பட்டது. ஐரோப்பியர்களின் நாகரீகம் கிரேக்கத்தில் தோன்றியது என்று சொல்கின்றனர். ஆனால் அதே கிரேக்கர்கள், எகிப்தில் இருந்தே நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். இது போன்ற வரலாற்று தகவல்கள் பல நூலில் பலவிடங்களிலும் வருகின்றமையை சுட்டிக் காட்டினார். மேலும் ஆப்பிரிக்காவில் சாதி அமைப்பு, சோமாலியா, மொரிட்டானியா போன்ற நாடுகளில் இருப்பதை எடுத்துக் காட்டிப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கதிர்காமநாதன் குறுக்கிட்டார். "சோமாலியாவில் இனக்குழுக்கள் தமக்குள் மோதிக் கொண்டன, அவை சாதிகள் இல்லை." என்றார். அதற்குப் பதிலளித்த கலையரசன், "ஆப்பிரிக்காவில் இனக்குழுக்கள் இருப்பதையும், அவற்றுள் ஏற்றத்தாழ்வு நிலவுவதையும் மறுக்கவில்லை. ஆனால் இங்கே சாதி அமைப்பு என்பது தீண்டாமையை அடிப்படையாக கொண்டது. சோமாலிய சமூகம் கோத்திரங்களாக பிளவுண்ட போதிலும், சாதிகளும் இருக்கின்றன." இதன் பொழுது மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கரவைதாசன், "சாதியமைப்பு இந்திய உபகண்டத்திற்கு மட்டும் உரிய சிறப்பம்சம் அல்ல. ஜப்பானிலும் சாதிகள் இருக்கின்றன." என்றார்.

கலையரசன் தனது உரையில், "ஐரோப்பியர்கள் எம்மையும், ஆப்பிரிக்கர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். முன்னாள் காலனிய அடிமை நாடுகள் என்ற வகையில் எமது நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படிப்பினையை பெற்றுக் கொல்லலாம்." என்று தனது உரையை முடித்துக் கொண்டார். ஆப்பிரிக்கா பற்றிய நூல்கள் தமிழில் அரிதாகவே வந்திருந்த படியால், கலந்து கொண்ட மக்கள் அனைத்தையும் உன்னிப்பாக செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விமர்சனங்கள் முடிவுற்றதும், ஆர்வ மேலீட்டுடன் ஆளுக்கொரு நூலை வாங்கிச் சென்றனர். டென்மார்க்கில் வளர்ந்த இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் கூட வந்து நூல் வாங்கியமை குறிப்பிடத்தக்கது. வந்திருந்த மக்கள் எல்லோரும், டென்மார்க்கில் நூல் அறிமுகத்தை ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறத் தவறவில்லை. இனி வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி நடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

(டென்மார்க் நிருபர்)

Thursday, October 07, 2010

நூல் அறிமுகம்: "அகதி வாழ்க்கை"

"அகதி வாழ்க்கை" எனும் நூல் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? அதற்கான அரசியல்-சமூக காரணி என்ன? அகதிகள் எவ்வாறான வழிகளில் ஐரோப்பிய நாடுகளை வந்தடைகின்றனர்? அவர்கள் அடைக்கலம் கோரும் நாடுகள் எவை? அடைக்கலம் கோரும் வரையிலான பயணப்பாதை என்ன? வழியில் எத்தகைய இன்னல்களை கடந்து வருகிறார்கள்? ஐரோப்பிய நாடுகளில் உள்ள அகதிகளுக்கான சட்டங்கள், அகதிகளை விசாரிக்கும் முறை எப்படி உள்ளது? அவர்களுக்கான வதிவிடப் பத்திரங்கள் எவை? தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன? புலம் பெயர்ந்த நாடுகளில் வதிவிட அனுமதி கிடைத்தவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளது? ஐரோப்பிய சமூகத்தில் அவர்களுக்கான இடம் என்ன? புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள்?

இது போன்ற பல அரிய தகவல்கள் அடங்கிய நூல். விலை: இந்திய ரூபாய் 100 ,- நூலை இணையத்தில் (online ) வாங்கலாம்.

https://www.nhm.in/shop/978-81-8493-477-9.html

Wednesday, September 29, 2010

முதலாளித்துவத்தின் சொல்லப்படாத இரகசியங்கள்


Ha-Joon Chang ஒரு முதலாளித்துவ பொருளியல் அறிஞர். முதலாளித்துவத்தை சரியான பாதையில் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையோடு "23 things they don’t tell you about capitalism" என்ற நூலை எழுதியுள்ளார்.

2008 ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடி, தாராள பொருளாதாரம் என்ற சாத்தியப் படாத ஒன்றின் மீதான நம்பிக்கையின் சரிவு என்கிறார். சுதந்திரமான திறந்த சந்தை ஒரு நாளும் சாத்தியமில்லை என்று வாதிடுகின்றார்.

  • யதார்த்தத்தில் திறந்த சந்தை என்பது ஒரு கனவு மட்டுமே.
  • சந்தை எவ்வளவு சுதந்திரமானது என்பது அரசியல் தலைமையின் முடிவில் தங்கியுள்ளது.
  • சந்தையை ஒழுங்குபடுத்துவது எமது அறம் சார்ந்தது. சந்தை எமது நெறிகளை மீறுவதை ஏற்றுக் கொள்வதில்லை.
  • குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை இன்று ஏற்றுக்கொள்வதில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், சிறுவர்கள் செய்யும் வேலையை 12 மணி நேரம் ஆக குறைத்ததையே திறந்த சந்தைக்கு ஆபத்தாக கருதினார்கள்.
  • ஏன் போதைவஸ்து, உடலுறுப்புகள், வாக்குச் சீட்டுகள் என்பனவற்றை விற்கக் கூடாது? அவற்றிற்கான திறந்த சந்தை சாத்தியமில்லையா? ஏன்?
  • அரசாங்கம் வங்கிகளை காப்பாற்றினால் திறந்த பொருளாதார சித்தாந்தவாதிகள் மகிழ்ச்சியடைய முடியுமா?
  • முரண்நகையாக முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதும் கட்டுப்பாடுகளை வரையறை செய்வதிலேயே செலவிட்டுள்ளனர்.

நூலாசிரியர் எடுத்துரைக்கும்,
கவனிக்கப்பட வேண்டிய பொருளாதாரக் குறைபாடுகள் பின்வருமாறு:

  • நிறையப் பேருக்கு அவர்களது தகுதிக்கு மீறி நிறைய ஊதியம் கொடுக்கப்படுகின்றது.
  • ஏழை நாடுகளில் மக்கள் வறுமையில் வாழ்வதற்கு அவர்கள் பொறுப்பல்ல. பணக்காரர்களே பொறுப்பேற்க வேண்டும்.
  • இன்டர்நெட் உலகை மாற்றியதை விட சலவை இயந்திரம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
  • பல்கலைக்கழக பட்டங்கள் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவில்லை.

நூலை வாசிப்பதற்கு:’23 things they don’t tell you about capitalism’

Sunday, September 26, 2010

10.10.10 டென்மார்க்கில் நூல் அறிமுகம்

வருகிற 10 அக்டோபர் 2010, டென்மார்க் Vejen நகரில் நடைபெற இருக்கும் "ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா" நூல் அறிமுக விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.



நூல் அறிமுகம் நடைபெறும் இடம்:
lindetorvet 2,
6600 Vejen,
Denmark


காலம்: 10.10.10 பி.ப. 3 மணி

தொடர்புகளுக்கு :
Thas : 004541427562 (Denmark)
Kalaiy : 0031642344458 (The Netherlands)

Monday, June 14, 2010

ஏமாற்றுவது எமது தொழில் - Call Centre ஊழியரின் வாக்குமூலம்

[கால் சென்டர்கள் : "இங்கே பொய்கள் மட்டுமே விற்கப்படும்" - இரண்டாம் பகுதி]
"ஒவ்வொரு கால் சென்டர் விற்பனையாளரின் பின்னாலும் ஒரு ஏமாற்றுப் பேர்வழி ஒளிந்திருக்கிறான்." - Griebsch, CallOn நிறுவன சட்ட ஆலோசகர். (Kölner Stadt Anzeiger பத்திரிகையில்)

ஜெர்மனியில் வளர்ந்து வரும் கால் சென்டர் நிறுவனமான ZIU - Interbational இல் வேலை கிடைத்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கூடிய, துப்பரவாக்கும் இரசாயன திரவம் ஒன்றை எமது கம்பெனி விற்பனை செய்தது. அதாவது அந்த விற்பனைப் பண்டத்தை தொலைபேசி மூலம் வாங்குவோர்களைப் பிடித்து அவர்கள் தலையில் கட்டுவது எமது தொழில். அந்த இரசாயன சுத்தப்படுத்தும் திரவத்தை நாம் "ஐரோப்பிய சுற்றுச் சூழல் அமைச்சுடன்" சேர்ந்து தயாரித்ததாக அறிவித்து வந்தோம். உண்மையில் ஐரோப்பிய சுற்றுச் சூழல் அமைச்சு என்ற ஒன்று இல்லை என்ற விபரம் எமக்கு மட்டுமே தெரியும். எமது வாடிக்கையாளர்கள் உணவுவிடுதிகள் வைத்திருக்கும் சிறு முதலாளிகள். ஊர் பேர் தெரியாத புதிய துப்பரவாக்கும் திரவத்தை அவர்கள் தலையில் கட்டுவதற்கு முன்னர் எமக்கு இன்னொரு வேலை இருந்தது. ஏதாவது ஒரு உணவுவிடுதிக்கு தொலைபேசியை சுழற்றி, அவர்கள் "சிறுவர் பாதுகாப்பு விதிகளை" குறிப்பிடும் மட்டையை சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்களா? என்று பரிசோதிப்போம். ஜெர்மனியில் உணவுவிடுதி உரிமையாளர்கள் அத்தகைய பாதுகாப்பு விதிகளை சுவரில் மாட்ட வேண்டும் என்று உள்ளூராட்சி அரசுகள் சட்டம் போட்டுள்ளன.

உண்மையில் அரசாங்கம் அறிவித்துள்ள சிறுவர் பாதுகாப்பு விதிகளை இன்டர்நெட்டில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை சுவரில் மாட்டா விட்டால், உணவுவிடுதி பரிசோதகர் வந்து பார்த்து விட்டு அபராதம் விதிப்பார். அந்த அபராதத் தொகை வெறும் 25 யூரோக்கள் மட்டுமே. எமது கால் சென்டர் கம்பெனி, புத்தகக் கடையில் 4.5 யூரோவுக்கு வாங்கக் கூடிய மட்டையில் அந்த விதிகளை அச்சடித்து வைத்திருந்தது. அதை நாம் உணவுவிடுதி முதலாளிகளுக்கு 69 யூரோவுக்கு விற்று வந்தோம்! தேநீர்க் கடைகள், உணவுவிடுதிகளின் தொலைபேசி இலக்கங்களை சுழற்றி, அவர்களுக்கு "சிறுவர் பாதுகாப்பு விதிகளின்" முக்கியத்துவம் குறித்து பாடம் நடத்துவோம். ஜெர்மன் சிறுவர் பாதுகாப்பு சங்கத்தின் பெயரால் அழைப்பதாக கூறுவோம். (அப்படி ஒரு சங்கம் ஜெர்மனியில் இல்லவே இல்லை) அந்த விதிகள் அடங்கிய மட்டையை சுவரில் மாட்டா விட்டால், நகர சபைக்கு அறிவிப்பதாக மிரட்டுவோம். நகர சபை பரிசோதகர் வந்து பார்த்து விட்டு, 300 யூரோ அபராதம் விதிப்பார் என்று கதையளப்போம். எமது மிரட்டலுக்கு பயந்து உணவு விடுதி உரிமையாளர்கள், 5 யூரோ பெறுமதியற்ற மட்டையை 69 யூரோ விலை கொடுத்து வாங்குவார்கள்.

எமது பலியாடுகள் பெரும்பாலும் பிற இனங்களைச் சேர்ந்த சிறு முதலாளிகள். கடைகளை, உணவுவிடுதிகளை நடத்தும் துருக்கியர்கள், மற்றும் பல நாடுளைச் சேர்ந்தவர்கள். ஓரளவுக்கு மட்டுமே ஜெர்மன் மொழி பேசக் கூடியவர்கள். எமது டீம் தலைவர் முராட், ஒரு துருக்கி இனத்தை சேர்ந்த ஜெர்மன் பிரஜை. அவர் தனது துருக்கி சகோதரர்களுடன் பேசும் பொழுது குரல் உச்சஸ்தாயிக்கு செல்லும். ஒரு முறை துரித துருக்கி உணவு வகையான "டென்னர்" கடை வைத்திருக்கும் முதலாளி அகப்பட்டார். அவருடன் முராட் சுத்த ஜெர்மன் மொழியில் உரையாடலை ஆரம்பிக்கிறார். "நான் ஜெர்மன் சிறுவர் பாதுகாப்பு சங்க அதிகாரி ஹெர்ஸ்ட் முய்ள்ளர் (கவனிக்கவும் சுத்த ஜெர்மன் புனை பெயர்) பேசுகிறேன். எப்போதிருந்து நீங்கள் சிறுவர் பாதுகாப்பு விதிகளை மாட்டவில்லை என்பதை சோதிக்கப் போகிறேன். ஒரு நகரசபை அதிகாரியுடன் அங்கே வருகிறேன். சட்டத்தை மீறியதற்காக 300 யூரோ தண்டப்பணம் கட்டப்போகிறீர்கள். புரிந்ததா? அதை தடுக்க வேண்டுமானால் இப்போதே 69 யூரோ கொடுத்து எமது விதிகளை வாங்கி மாட்டுங்கள்."

உரையாடல் முடிந்தவுடன் முராட் என் பக்கம் திரும்பி சொன்னார்: "அவர் 15 வருடங்களாக ஜெர்மனியில் வாழ்கிறார். கொஞ்சமாவது ஜெர்மன் மொழி தெரியாது."
"அப்படியானால் நீ ஏன் அவருடன் துருக்கி மொழியில் பேசியிருக்கக் கூடாது?" நான் கேட்கிறேன்.
அதற்கு பதிலளித்த முராட், "ஜெர்மன்காரன் என்றால் இவர்கள் பயப்படுவார்கள். மரியாதை கொடுப்பார்கள்." என்றார்.
எம்மோடு ஒரு டானியெல்லா என்ற ஜெர்மன் பெண்மணி வேலை செய்தார். அவர் ஒரு அரேபியரை திருமணம் செய்து கொண்டு முஸ்லிமாக மாறியவர். வேலைக்கு வரும் பொழுது முகம் மட்டுமே தெரியக் கூடியவாறு முக்காடு அணிந்து கொண்டு தான் வருவார். அவர் ஒரு முறை யாரோ ஒரு வெளிநாட்டுகாரரிடம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். "உங்கள் பெயர் என்ன? பெயரை சொல்ல மாட்டீர்களா?.... ஜெர்மனியில் எத்தனை வருடங்களாக வாழ்கிறீர்கள்? ஜெர்மன் சட்ட திட்டங்கள் பற்றி தெரியாதா?.... நீங்கள் இங்கே சட்டவிரோதமாக வாழ்கிறீர்களா? ... என்னது? நாம் மோசடிகாரர்களா? ஜெர்மன் சிறுவர் பாதுகாப்பு சங்கம் மோசடி செய்ததாக எங்காவது கேள்விப்பட்டீர்களா?.... உங்களிடம் பேசுவதில் பயனில்லை. ஒரு அரசாங்க அதிகாரியை அனுப்புகிறேன்."

ஒரு முறை சக ஊழியர்களிடம் பேசும் பொழுது கேட்டேன். "நாம் செய்யும் மோசடி ஒரு நாளைக்கு தெரிய வராதா? யாரவது எமைப் பற்றி முறைப்பாடு செய்ய மாட்டார்களா?" நாம் மோசடி செய்வதாக எந்தவொரு ஊழியரும் நம்பவில்லை. எமது நிர்வாகி எல்லாம் சட்டப்படி நடப்பதாக உறுதியளித்ததாக கூறினார்கள். சில மாதங்கள் போன பிற்பாடு நானும் கால் சென்டர் சதிகாரர்களில் ஒருவராகி விட்டேன். நாம் ஒரு இரகசியமான மதப் பிரிவினர் ஆகி விட்டோம். வெளியே எமது நண்பர்களிடம், உறவினர்களிடம் வேலை குறித்து எதுவும் பேசுவதில்லை. வாடிக்கையாளர்களை துரத்திப் பிடித்து "வன்புணர்ச்சி" செய்வதில் எமக்கு அலாதி ஆனந்தம். தொலைத்தொடர்பு திணைக்களத்தில் இருந்து அழைப்பதாக புளுகுவோம். 'இணைப்பு வேலை செய்கிறதா என சோதிக்கிறோம்' என்று சொல்லி அரை மணித்தியாலம் காத்திருக்க வைப்போம். பின்னர் ரிசீவரை வைத்து விட்டு கெக்கட்டமிட்டு சிரிப்போம். மெல்ல மெல்ல நானும் ஒரு மோசடிக்காரன் ஆகி விட்டேன். எனது சக ஊழியர்கள் ஏதாவது வாதத்தை முன் வைத்தால், நானும் அதை பின்பற்றினேன்.

ஒரு முறை தொலைபேசி, இன்டர்நெட் சேவைகளை வழங்கும் கம்பெனி ஒன்றுக்கு வாடிக்கையாளர்களை பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தோம். தொலைபேசி சந்தா பெற்றுக் கொடுப்பது இலகுவாக இருந்தது. ஆனால் அதற்குள் இன்டர்நெட்டும் அடக்கம் என்று பல வாடிக்கையாளருக்கு கூறுவதில்லை. ஒரு முறை எமது மேலாளர் நடுத்தர வயதை தாண்டிய வாடிக்கையாளரை பிடித்து விட்டார். அவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. வீட்டில் கம்பியூட்டர் இல்லை. அதனால் இன்டர்நெட் தேவைப்படவில்லை. அவரிடம் தொலைத்தொடர்பு, இன்டர்நெட் இரண்டையும் சேர்த்து விற்பதற்காக மேலாளர் ஒரு கதை சொன்னார். சமையலறையில் ஓவன் போன்ற இலத்திரனியல் சாதனங்கள் பாவிக்கா விட்டாலும் வைத்திருப்பது நாகரீகம் என்றார். அவரது வாதத்தை கேட்ட வாடிக்கையாளர் இறுதியில் சம்மதித்து விட்டார். ஒப்பந்தத்தை முடித்த கையேடு மேலாளர் கூறினார். "இன்டர்நெட் சேர்த்து எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தனியாக தொலைபேசி இணைப்பை மட்டும் விற்க முடியும். ஆனால் அதற்கு கிடைக்கும் கமிஷன் குறைவு"

ஒரு வயதான மூதாட்டியின் கதை இப்போதும் நினைவில் நிற்கிறது. அவருக்கு தொண்ணூறு வயது இருக்கும். ஏற்கனவே மாதம் இருபது யூரோ சந்தா கட்டி தொலைபேசி இணைப்பு வைத்திருந்தார். நாம் வழங்கும் புதிய இணைப்புக்கு மாதம் முப்பது யூரோ கட்ட வேண்டும். (இன்டெர்நெட் இணைப்பையும் சேர்த்து.) அந்த மூதாட்டியிடம் இன்டர்நெட் பற்றி எதுவும் கூறாமல் (இனிமேல் அதையெல்லாம் பழகவா போகிறார்?) விற்க எத்தனித்தேன். மாதம் பத்து யூரோ மேலதிகமாக கொடுத்து எமது புதிய சேவையைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை. மேலும் தனது நண்பர்கள் அனைவரும் காலமாகி இறந்து விட்டதாகவும், தான் மட்டுமே தனித்து வாழ்வதாகவும் கூறினார். அவசர தேவைக்கு வைத்தியருக்கு அழைப்பு விடுக்க மட்டுமே ஒரு தொலைபேசி தேவை என்றார். அன்று எனது மேலாளர் எனது அருகில் இருந்து உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார். கால் சென்டரில் இதனை "side -by -side training " என்பார்கள். அதனால் என்னால் அந்த மூதாட்டியை பணிய வைத்து ஒப்பந்தம் போடுவதை தவிர வேறு வழி இல்லை. எமது புதிய சேவைக்கு மாறா விட்டால், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும், என்று பயமுறுத்தி தான் சம்மதிக்க வைத்தேன். பின்னர் மேலாளர் வெளியே போயிருந்த தருணம் பார்த்து அந்த ஒப்பந்தத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டேன்.

தினசரி குறைந்தது தொண்ணூறு தொலைபேசி அழைப்புகளை விடுப்பதால், எனது உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரு வார இறுதி விடுமுறைக்கு பின்னர் தான் அதை உணர்ந்தேன். டெலிபோன் ரிசீவரை தூக்கிய உடனேயே எனது மூளைக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்தது. நான் என்ன கூற வேண்டும் என்று உத்தரவு போட்டுக் கொண்டிருந்தது. நான் குழம்பிப் போனேன். மனம் ஒருமுகப்பட மறுத்தது. ஏதோ வாயில் வந்த படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தேன். Tectum என்ற மிகப் பெரிய கால் சென்டரில் சுகவீனமடைவது வேலை இழப்புக்கு ஒப்பானது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர் குறிப்பிட்ட அளவு சந்தாக்களை விற்கா விட்டால், சம்பளம் குறைக்கப்பட்டது.

Tectum தனது பணியாளர்களை மோசமாக நடத்துவதாக ஒரு தொழிற்சங்கம் குற்றம் சாட்டியது. 9 ஜூலை 2009 ல், தனது நானூறு பணியாளர்களை கூட்டிக் கொண்டு Tectum முதலாளி ஊர்வலம் போனார். சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் முன்னாள் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
மேடையில் ஒரு துடிதுடிப்பான பேர்வழி ஏறி நின்று கொண்டு "தொழிற்சங்கம் ஒரு ....... " என்று கோஷம் போடுகின்றார். சுற்றியுள்ள கூட்டம் கைதட்டுகின்றது.
"நாம் அடிமைகளா?" ஒலிபெருக்கி அலறுகின்றது.
"இல்லை, இல்லை"
"எமக்கு ஒரு நல்ல முதலாளி வாய்த்திருக்கிறாரா?"
"ஆம், ஆம்".
நடப்பனவெல்லாம் ஒரு சர்வாதிகாரியின் முன்னால் தலையாட்டும் மந்தைக் கூட்டத்தை நினைவு படுத்துகின்றது. கடைசி ஒன்றரை வருடமாக மட்டும் Tectum நிறுவனத்திற்கு எதிராக 27 தொழில் முறைகேடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதிலிருந்தே அந்தக் கூட்டம் தாமாக விரும்பி ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

கால் சென்டர்கள் குறித்த எனது ஆய்வுகளை வெளியிட்ட பின்னர், பல முன்னாள் பணியாளர்கள் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகம் இந்த வேலைக்கு போகுமாறு எவ்வாறு தம்மை வற்புறுத்தியது என்று கூறினார்கள். (குறிப்பு: இந்தியா போன்ற நாடுகளில் தான் கால் சென்டர் வேலைக்கு தாமாக விரும்பிச் செல்கிறார்கள். மேற்குலகில் நிலைமை தலைகீழ். எந்த வேலையும் கிடைக்காதவர்களின் கடைசிப் புகலிடம் தான் கால் சென்டர்.) ஜெர்மன் அரச வேலைவாய்ப்பு பணியகம் தானாகவே கால் சென்டர் வேலைக்கான தொழிலாளர்களை தயார் படுத்துகிறது. "தொலைபேசி விற்பனையாளர் படிப்பு" என்ற பெயரில் இரண்டு வார பயிற்சி வழங்குகின்றது. அது மட்டுமல்ல அவர்களை ஒரு நிறுவனம் வேலைக்கு சேர்க்கும் பொழுது ஊதியத்தில் ஒரு பகுதியை கொடுக்கின்றது. கால் சென்டர்களின் லாபத்தில் ஒரு பகுதி அரசாங்கத்திற்கும் வருமானமாக போய்ச் சேருகின்றது. "தென் ஜெர்மனி", "வட ஜெர்மனி" என்ற பெயரில் இயங்கும் இரண்டு மிகப்பெரிய லொத்தர் விற்கும் நிறுவனங்கள் மட்டும் முன்னூறு மில்லியன் யூரோக்களை அரசாங்கத்திற்கு கொடுத்து வருகின்றன.
கால் சென்டர்களினால் ஏமாற்றப்பட்டு பரிதவிக்கும் அப்பாவி மக்களை நினைத்து கவலைப்படுவீர்களா?
கால் சென்டர்கள் நேர்மையாக நடந்து கொண்டால் அரசாங்கத்திற்கு வருமானம் குறையுமே என பரிதாபப் படுவீர்களா?
அரசாங்கம் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் மகா ஜனங்களே!

******************************************
முதலாவது பகுதியை வாசிக்க:
கால் சென்டர்கள்: "இங்கே பொய்கள் மட்டுமே விற்கப்படும்!"

(நன்றி : Günter Wallraff)
(Aus der schönen neuen Welt நூலில் இருந்து)
(டச்சு மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது.)


Günter Wallraff
Aus der schönen neuen Welt
Expeditionen ins Landesinnere
ISBN: 978-3-462-04049-4

Erscheinungsdatum: 14. Oktober 2009
336 Seiten, Taschenbuch
KiWi 1069
Lieferbar
Euro (D) 13.95 sFr 25.20 Euro (A) 14.40