Showing posts with label நரகாசுரன். Show all posts
Showing posts with label நரகாசுரன். Show all posts

Saturday, November 14, 2020

தீபாவளி - ஒரு சொல்லப் படாத வரலாற்றுக் கதை!

 

3000 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிந்திய அசாம் மாநிலம் தனியான ராஜ்ஜியமாக  அசுரர்கள் என்ற அரச வம்சத்தினரால் ஆளப்பட்டது. அனேகமாக அந்நாட்டு மக்களும் அரச வம்சத்தின் பெயரால் அசுரர்கள் என அழைக்கப் படலாயினர். உண்மையில் அவர்கள் தோற்றத்தில் சீனர்கள் போன்றிருக்கும் மொங்கோலொயிட் இன மக்கள். சில நேரம் அவர்கள் ஆதிக்க சமூகமாக இருந்திருக்கலாம். அவர்களது ஆட்சியின் கீழ்  கறுப்பின- திராவிட மக்கள் பழங்குடி இனத்தவராக இருந்திருக்கலாம். அனேகமாக நரகாசுரன் அந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருக்கலாம். 

இந்த அசுர அரச பரம்பரையில் குறிப்பிடத் தக்க மன்னர்களின் பெயர்கள் பின்வருமாறு:

ஹதகாசுரன், சம்பராசுரன், ரத்னாசுரன், கதகாசுரன். கி.மு. 14ம் நூற்றாண்டு அளவில் நடந்த போரில் கதகாசுரனை கொன்று  நரகாசுரன் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான். அவனது பெயரால் நரக அரச பரம்பரை உருவான போதிலும், அது பிற்காலத்தில் தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. 

யார் இந்த தேவர்கள்?

தோற்றத்தில் ஐரோப்பியர் போன்றிருக்கும் இந்தோ- ஆரிய இன மக்கள். எல்லா ஆரியரும் வெள்ளை தோல் கொண்டவர்கள் அல்ல. உள்நாட்டு இந்திய பூர்வ குடிகளுடன் ஒன்று கலந்த கலப்பினமாகவும் இருந்தனர். அதனால் தான் ஆரியமயப் பட்ட கருமை நிற கிருஷ்ணன் ஒரு மன்னனாக வர முடிந்தது. 

அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு நிறம், இனம், மொழி ஓர் அடையாளமாக இருக்கவில்லை. ஆட்சியாளர்களிடமும் அப்படி ஓர் உணர்வு இருக்கவில்லை. 

ஆகவே கிருஷ்ணன்- நரகாசுரன் போர் இன/மொழி அடிப்படையில் நடந்த போர் அல்ல. இருப்பினும், அந்தக் காலத்து மக்கள், தம்மை நாகரீக அடிப்படையில் வேறு படுத்தி பார்த்தார்கள். தேவர்கள் என்றால் நாகரிகத்தில் சிறந்தவர்கள். அசுரர்கள் என்றால் நாகரிகமடையாத காட்டுவாசிகள் என்ற எண்ணம் பொதுப் புத்தியில் இருந்தது. அந்த வகையில், கிழக்கிந்திய பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி இன மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய நரகாசுரன், தேவர்களின் எதிரியாக மட்டுமல்லாமல் தீமையின் வடிவமாகவும் கருதப்பட்டான். 

அநேகமாக இந்த நரகாசுரன் ஒடுக்கப் பட்ட  பழங்குடி இனத்தை சேர்ந்த புரட்சியாளராக இருக்கலாம். ஏனெனில் அவனால் தான் அசுரர்கள் என பெயர் சூட்டிக் கொண்ட 'டனவா' அரச பரம்பரை முடிவுக்கு வந்தது. அந்த வம்சத்தில் கடைசியாக வந்த கதகாசுரனை போரில் கொன்ற நரகன், மன்னனாக முடி சூட்டிக் கொண்டதும் தனது பெயரை நரகாசுரன் என்று மாற்றிக் கொண்டான். இருப்பினும் அவன் உருவாக்கிய அரச பரம்பரை நரகர் வம்சம் என்றே அழைக்கப் படலாயிற்று. 

கிருஷ்ணன் - நரகாசுரன் போருக்கு காரணமாக நாகரிக முரண்பாடு மட்டுமல்லாது, மத முரண்பாடும் இருந்திருக்கலாம். கிருஷ்ணனும், அவனது நாட்டு மக்களும் விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவர்கள். அதற்கு மாறாக நரகாசுரனும் அவனது நாட்டவரும் தாந்திரிக சைவர்கள். அவர்கள் சிவனை வழிபட்டாலும், மந்திரம், மாயம், சூனியம் போன்ற நம்பிக்கைகளும் இருந்துள்ளன. இதுவும் தேவர்கள் கண்களுக்கு காட்டுமிராண்டித்தனமாக தெரிந்திருக்கலாம். 

அன்று நடந்த போரில் நரகாசுரன் கிருஷ்ணனால் கொல்லப் பட்டான். அதற்குப் பிறகு அவனது நாடு தேவர்களின் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. நரக வம்சத்தில் வந்தவர்கள் கிருஷ்ணனின் பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசர்களாக ஆண்டு வந்தனர்.  இருப்பினும் நரகாசுரன் மரணத்துடன் இந்திய பழங்குடியின மக்களின் கடைசி ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து விட்டது. அதற்குப் பிறகு தேவர்களின் சாம்ராஜ்யத்திற்கு  சவாலான நாடு எதுவும் இருக்கவில்லை. பிற்காலத்தில் தேவர்கள் தமக்குள் பிளவு பட்டு மோதிக் கொண்டனர். அது தான் மகாபாரதப் போர். 

இந்திய பூர்வ குடியின மக்களின் சுதந்திரத்தை பாதுகாத்து வந்த, பழங்குடியின மன்னன் நரகாசுரன் தோற்கடிக்கப் பட்ட நாள், இப்றைக்கும் தீபாவளி என்ற பெயரில் ஒரு வெற்றித் திருநாளாக கொண்டாடப் பட்டு வருகின்றது.

Friday, November 05, 2010

தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!


இன்று இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பலர், தீபாவளியை வணிக மயப்படுத்தப் பட்ட பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி எதற்கு கொண்டாட வேண்டும் என்று, ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் கதையை இப்போதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். "மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாள்." என்பதில் மறைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத படி மதம் கண்ணை மறைக்கின்றது.

நரகாசுரன் யார்? எந்த வகை மக்களை கொடுமைப் படுத்தினான்? அவன் மரணத்தை நாம் எதற்காக கொண்டாட வேண்டும்?

புராணங்கள் என்பன சரித்திரம் எழுதப்படாத காலங்களில் நடந்த சம்பவங்களை, கற்பனை கலந்து கூறப்படும் கதைகள் ஆகும். புராணக் கதைகள், இந்து மதத்திற்கு மட்டுமே பொதுவான ஒன்றல்ல. உலகம் பூராவும் மக்கட் சமுதாயங்கள் மத்தியில் இது போன்ற கதைகள் வழக்கில் இருந்து வந்துள்ளன. புராதன சமுதாயத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்த மக்கள், தமது வீர புருஷர்களை கடவுளுக்கு ஒப்பிட்டும் நினைவுகூருவது வழக்கம். எழுத்து துறை வளர்ச்சியடையாத காலங்களில், இது போன்ற கதைகளை குழந்தைகளுக்கு கூறுவதன் மூலம் அடுத்த சந்ததிக்கு கடத்துவார்கள். தீபாவளி குறித்த கதையும் அது போன்றதே.

தீபாவளி, நரகாசுரன் குறித்து, ஒன்றல்ல, பல கதைகள் வழக்கில் உள்ளன. அவற்றில் அண்ணளவாக வரலாற்றுடன் ஒத்துப் போகும் கதை ஒன்றை எடுத்து நோக்குவோம். நரகாசுரன் என்பவன் இன்றுள்ள அசாம் மாநிலத்தில், ஒரு நிலையான ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசன். பிராக்ஜோதிஷா அல்லது காமரூபா என்றழைக்கப் படும் ராஜ்யங்கள் (கி.மு. 4 - 12 ) அசாம் பண்டைய காலங்களில் சுதந்திர நாடாக இருந்தமைக்கு சான்று பகர்கின்றன. அசாம் ராஜ்யத்தை ஆண்ட அரச பரம்பரைகள் யாவும் நரகாசுரன் வழி வந்தவையாக கூறிக் கொண்டன. இந்த நரகாசுரன் குறித்து சரித்திர ஆதாரங்கள் இல்லாத போதிலும், அசாம் புராணக் கதைகளில் இருந்தே நரகாசுரன் குறித்த தகவல்களை பெற முடிகின்றது. அசாமை ஆண்ட, "டனவா" மன்னர்களை போரில் வென்ற நரகாசுரன், "நரகா பரம்பரையை" ஸ்தாபித்தான். இன்றைய அசாம் தலைநகரமான கௌஹாத்தி நரகாரசுரனின் ராஜ்யத்திலும் தலைநகரமாக இருந்துள்ளது.

பெண் தெய்வமான சக்தியை வணங்கும் சாக்தவ மதமும், தாந்திரிய மதமும், நரகாசுரன் காலத்தில் இருந்துள்ளன. இன்றைக்கும் அந்த மதங்களுக்குரிய புனித ஸ்தலங்களை கௌஹாத்தி நகரில் தரிசிக்கலாம். "அசுரன்" என்பது அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களால் பெருமைக்குரிய கௌரவப் பெயராக கருதப் பட்டிருக்கலாம். அதனால் மன்னர்கள் தமது பெயருக்குப் பின்னால் அசுரன் எனச் சேர்த்துக் கொண்டார்கள். புராதன ஈரானில், அசுரர்கள் என்பவர்கள் மண்ணின் மைந்தர்களாக கருதப் பட்டனர். அவர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் எந்தக் கதையும் அந்த நாட்டில் இல்லை. மேலும் இஸ்லாமுக்கு முந்திய சாராதூசரின் மதமானது, "அசுரா மாஸ்டா" என்பவரை முழுமுதற் கடவுளாக கொண்டிருந்தது.

இந்து மதத்தவர்கள் கூறும் நரகாசுரன் கதையில் இருந்தே, அன்று என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியும். நரகாசுரன், அசாமில் இன்னொரு ராஜ்யத்தை நிர்வகித்த பானாசுரனுடன் கூட்டுச் சேர்ந்து, பிற தேசங்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டான். நரகாசுரனின் சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டே சென்றது. நரகாசுரன், ஆரிய மன்னன் இந்திரனின் தேசத்தையும் கைப்பற்றி, சூறையாடினான். இந்திரன் தேசத்து பொக்கிஷங்களை கொள்ளையடித்ததுடன், 16000 பெண்களையும் சிறைப்பிடித்து சென்றான். இந்து மதம் அதனை தேவ லோகம், அல்லது சுவர்க்கம் என்று வர்ணிக்கின்றது. பூமியில் உள்ள நாடுகளை எல்லாம் வென்ற நரகாசுரன், தேவ லோகத்திற்கும் அதிபதியாகினான் என்கிறது.

மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த ஆரிய இனங்கள் வட இந்தியாவில் இருந்த தேசங்களை வெற்றி கொண்டன. அவர்களின் தலைவனான இந்திரன் காலத்திலேயே, போரில் வெற்றிகளை குவித்து, அதிக நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது. இந்திரனின் தேசத்தில் வாழ்ந்த ஆரிய இனத்தவர்கள் தேவர்கள் என்றும், வெல்லப்படாமல் எஞ்சியிருந்த இந்தியப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை அசுரர்கள் என்றும் அழைக்கப் பட்டனர். இந்திரன் இந்தியப் படையெடுப்புகளின் போது, அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை இனப்படுகொலை செய்துள்ளான். அவர்களது செல்வங்களை கொள்ளையடித்து சென்றுள்ளான். இவற்றை ரிக் வேதம் குறிப்பிடுகின்றது. அநேகமாக நரகாசுரன் இந்திரன் தேசத்தை கைப்பற்றிய செயலானது, ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம்.

"பூர்வீக இந்தியக் குடிகளான அசுரர்கள், ஆரியர்களின் வல்லரசான இந்திர லோகத்தின் மீது படையெடுப்பதா? யாராலும் வெல்லப்பட முடியாதவர்கள் என்று பேரெடுத்த தேவர்கள், அசுரர்களின் சாம்ராஜ்யத்தில் அடிமைகளாக வாழ்வதா? அது ஆரிய மேலான்மைக்கே அவமானமல்லவா?"
தேவர்கள் நரகாசுரனின் கொடுமை குறித்து விஷ்ணுவிடம் முறையிட்டதாகவும், விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் நரகாசுரனை போரில் கொன்றதாகவும் புராணக் கதை கூறுகின்றது. தனது மரணத்தை மக்கள் தீப ஒளியேற்றி கொண்டாட வேண்டும் என நரகாசுரன் கேட்டுக் கொண்டதாகவும், அது தான் தீபாவளி என்றும் அந்தக் கதை முடிகின்றது. நரகாசுரன் மரணமடைந்த தினத்தை, மக்கள் வருடந்தோறும் தீப ஒளியேற்றி நினைவு கூர்ந்திருக்கலாம். ஆனால் பல நூறு வருடங்களுக்குப் பின்னர், அந்த துக்க தினக் கொண்டாட்டத்தின் அர்த்தத்தை மாற்றியிருக்கலாம். நரகாசுரனின் இறப்புக்குப் பின்னர், அவன் ஆண்ட நிலங்கள் யாவும் தேவர்கள் வசம் வந்திருக்கும். நரகாசுரனின் சொந்த இன மக்களையும் அவர்களே ஆண்டிருப்பார்கள். எப்போதும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் வரலாற்றை மாற்றி எழுதுவது இலகு.

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல்வேறு கதைகள் உண்டு. இராமர் வனவாசத்தின் பின்னர் திரும்பி வந்ததைக் கொண்டாடுவதாகவும் ஒரு காரணம் கூறப்படுகின்றது. மேலும் ஜெயின் மதத்தவர்களும், சீக்கியர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபங்களை வரிசையாக அடுக்கி வைத்து கொண்டாடும் முறை இந்து மதத்திற்கு முந்தியது. திபெத்தியர்களும், சீனர்களும் வெளிச்சக் கூடுகளை அமைத்து கொண்டாடுவார்கள். இலங்கையில் பௌத்த மதத்தினரும் அவ்வாறே வெசாக் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். ஆகவே ஆரியரின் வருகைக்கு முன்பே, இந்தியாவில் தீபாவளி கொண்டாடப் பட்டிருக்க வேண்டும். அத்தோடு "நரகாசுரன் அழிப்புக்கு" முன்னரும் அது இந்தியாவின் முக்கிய பண்டிகையாக இருந்திருக்கும்.

ஆரியர்கள் இந்திய உப கண்டத்தை ஆக்கிரமித்த வெற்றித் திருநாளை, தீபாவளியாக மாற்றி கொண்டாடி வந்திருப்பார்கள். நரகாசுரனின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்தியா முழுவதும் அவர்களின் ஆளுமையின் கீழ் வந்திருக்கும். ஆகவே நரகாசுரன் மரணத்தை கொண்டாட வேண்டுமென்பது அவர்களது நோக்கில் சரியானது தான். ஆனால் அடிமைப் பட்ட மக்கள், தமது தாயகம் ஆக்கிரமிக்கப் பட்ட தினத்தை கொண்டாட முடியுமா? தமது மூதாதையர்கள் ஆரியர்களால் இனவழிப்பு செய்யப்பட்ட தினத்தை மகிழ்வுடன் கொண்டாட முடியுமா? அமெரிக்க கண்டத்தில் செவ்விந்திய பழங்குடியினரை இனவழிப்பு செய்த "கொலம்பஸ் தினம்" விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. எப்போதும் வென்றவர்கள் தான் வரலாற்றை எழுதி வந்துள்ளனர். அதனால் தான் தீபாவளியும், கொலம்பஸ் தினமும் சாதாரண பண்டிகைகளாக தெரிகின்றன. போரில் வென்றவர்கள் தம்மை நல்லவர்களாகவும், தோற்றவர்களை கெட்டவர்களாகவும் வரலாற்றை திருத்தி எழுதுவார்கள். அடுத்து வரும் சந்ததிகளுக்கு தாம் அடிமைகளின் வாரிசுகள் என்ற எண்ணமே மறந்து போகும்.

************************

மேலதிக விபரங்களுக்கு:
Diwali
Narakasura
Kamarupa