Wednesday, December 02, 2020

இலகு தமிழில் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பகுதி - 1

கேள்வி 1: கம்யூனிசம் என்றால் என்ன?

பதில்: கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் பற்றிய படிப்பு.(எங்கெல்ஸ்)

விளக்கவுரை: இதை ஜேர்மன் மூல மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறேன். (ஏற்கனவே தமிழில் உள்ள நூலில் "விமோசனத்திற்கான சூழ்நிலைகள் பற்றிய போதனை" என்றுள்ளது.) பாட்டாளி வர்க்கம் அல்லது உழைக்கும் வர்க்கம் (இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் 3வது கேள்வியில் உள்ளது) இன்றைய முதலாளித்துவ காலகட்டத்திலும் அடிமைப் பட்டே கிடக்கிறது. அதன் விடுதலையை நோக்கிய படிமுறைகள் பற்றிய படிப்பு கம்யூனிசம் எனப்படும். சுருக்கமாக: உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கோட்பாடு.

கேள்வி 2: பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?

பதில்: பாட்டாளி வர்க்கம் என்பது தனது உழைப்பை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் மட்டுமே வாழ்க்கை நடாத்தும் ஒரு சமூகப் பிரிவாகும். இலாபத்தில் இருந்தோ அல்லது வேறெந்த மூலதனத்திலும் இருந்தோ அதற்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை. அதன் இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும், உழைப்புக்கான கேள்வியில் தங்கியுள்ளது. எனவே அது வியாபாரத்தின் நல்ல காலம், கெட்ட காலம், கடிவாளமற்ற போட்டியின் விளைவான ஏற்ற இறக்கங்கள் எல்லாவற்றிலும் தங்கியுள்ளது. பாட்டாளி வர்க்கம் அல்லது பாட்டாளிகளின் வர்க்கம் என்னவென்று ஒரே சொல்லில் சொன்னால், அது 19ம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கமாகும்.(எங்கெல்ஸ்)

எனது விளக்கவுரை: 

இன்று நாம் காணும் உழைப்பாளிகளின் வர்க்கமானது 19ம் நூற்றாண்டில் உருவான தோற்றப்பாடு ஆகும். (இது தொடர்பான வசனம் தமிழ் மொழிபெயர்ப்பில் இல்லை.) சொத்துடைமை வர்க்கமான முதலாளிகள் உற்பத்தி சாதனங்களை சொந்தமாக வைத்திருப்பதால், பாட்டாளிகள் தமது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலைமை உள்ளது. தொழிற் சந்தையில் அவர்களது உழைப்புக்கு நிர்ணயிக்கப் பட்ட விலையானது வியாபாரத்தின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றவாறு கூடிக் குறையலாம். பாட்டாளிகளின் வாழ்வும் மரணமும், இன்பமும் துன்பமும் தொழிற் சந்தையில் தங்கியுள்ளன.

கேள்வி 3: பாட்டாளிகள் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறார்கள் அல்லவா? 

 பதில்: இல்லை. ஏழைகளும் உழைக்கும் வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்திருக்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தினர் பெரும்பாலும் ஏழைகளாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது குறிப்பிடப் பட்ட நிலைமைகளின் கீழ் முன்னொருபோதும் கட்டற்ற சுதந்திரமான போட்டி இருக்கவில்லை. அதே மாதிரி தொழிலாளர்கள், ஏழைகளான பாட்டாளிகளும் இதற்கு முன்பு வாழ்ந்திருக்கவில்லை.

எனது விளக்கவுரை: பாட்டாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை எங்கெல்ஸ் இங்கே விளக்குகிறார். தொழிலாளர்கள், உழைப்பாளிகள் வரலாறு முழுவதும் இருந்து வந்துள்ளனர். அவர்கள் எழைகளாகவும் இருந்தனர். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் முதலாளித்துவ காலகட்டத்திற்குரிய கட்டற்ற சுதந்திரமும் போட்டியும் முன்னொருபோதும் இருக்கவில்லை. ஆகவே பாட்டாளிகளும் இருந்திருக்கவில்லை. முதலாளித்துவ அமைப்பில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் சமூக அந்தஸ்து, முந்திய வரலாற்றுக் காலகட்டத்தில் இருந்து மாறுபட்டது. இந்த விசேட தன்மை காரணமாக பாட்டாளிகள் என அழைக்கப் படுகின்றனர்.

கேள்வி 4: பாட்டாளி வர்க்கம் எவ்வாறு உருவானது?

பதில்: 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்திலும், பிற வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் நடந்த தொழிற்புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உருவானது. நீராவி இயந்திரம், விசைத்தறி போன்ற கண்டுபிடிப்புகளின் பின்னர் தொழிற்புரட்சி ஏற்பட்டது. அதிக விலை கொண்ட இந்த இயந்திரங்களை பெரிய முதலாளிகள் மட்டுமே வாங்க முடிந்தது. இது இதற்கு முன்பிருந்த உற்பத்தி முறையை மாற்றி அமைத்தது.இயந்திரங்கள் தொழிலாளர்களை விட மலிவாகவும், சிறப்பாகவும் உற்பத்தி செய்த படியால் பெருமளவு தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டனர். 

இந்த இயந்திரங்கள் தொழிற்துறை முழுவதையும் முதலாளிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டன. முன்பு தொழிலாளர்கள் சொந்தமாக தொழில் நடத்த உதவிய கருவிகள், கைத்தறிகள் பயனற்றவை ஆகின. இவ்வாறாக முதலாளிகளிடம் எல்லாம் இருந்தன. தொழிலாளர்களிடம் எதுவுமே இருக்கவில்லை. துணி நெய்வதில் ஆலை உற்பத்தி முறை புகுத்தப் பட்டதும். அது பின்னர் அச்சகம், மட்பாண்டத் தொழில், உலோகத் தொழில் என்று அனைத்தையும் இயந்திரமயமாக்கியது. தனித்தனியான தொழிலாளர்களுக்கு இடையில் தொழிற் பிரிவினை செய்யப் பட்டது. இதனால் முன்பு ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்த தொழிலாளி இன்று அந்தப் பொருளின் ஒரு பகுதியை மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உருவானது. இந்த வேலைப் பிரிவினையானது ஒரு பொருளை விரைவாக உற்பத்தி செய்யவும், மலிவாகக் கொடுக்கவும் உதவியது.

ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பையும் மிக இலகுவான, திரும்பத் திரும்ப செய்யும் இயந்திரத்தனமான பணியாக மாற்றியது. இதை ஓர் இயந்திரம் மிகச் சிறப்பாக செய்ய முடியும். இந்த முறையில் நெசவு, நூற்பாலைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நீராவி இயந்திரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. இவ்வாறு அனைத்தும் பெரிய முதலாளிகளின் கைகளில் வந்தன. இதனால் இங்கும் தொழிலாளர்கள் தமது எஞ்சியிருந்த சுதந்திரத்தையும் இழந்தனர். பட்டறைத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி யாவும் ஆலைத் தொழிற்துறையின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன் மூலம் பெரிய முதலாளிகள் பெரிய பட்டறைகள் அமைத்து, உற்பத்தி செலவைக் குறைத்து, வேலைப் பிரிவினை செய்ய முடிந்தது. இதனால் சிறிய முதலாளிகள் அழிந்து போயினர்.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் அனைத்து சிறு கைத்தொழில் உற்பத்தியும் பெரிய ஆலைத் தொழிற்துறையின் கீழ் வந்தது. இதன் மூலம் இதுவரை காலமும் இருந்த நடுத்தர வர்க்கத்தினர், குறிப்பாக சொன்னால் சிறு கைத்தொழில் முதலாளிகள் மென்மேலும் அழிக்கப் பட்டனர்.

முன்பிருந்த தொழிலாளர்களின் நிலைமை முற்றாக மாற்றமடைந்து இரண்டு புதிய வர்க்கங்கள் தோன்றின. அவை ஏனைய வர்க்கங்களை உள்வாங்கின. அவையாவன:

1. பெரிய முதலாளிகளின் வர்க்கம். எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் அனைத்து வாழ்வாதாரங்களையும், அவற்றை உற்பத்தி செய்யும் கருவிகளையும் தம் வசம் வைத்திருக்கிறார்கள். இந்த வர்க்கமானது மேட்டுக்குடியினர் வர்க்கம் அல்லது பூர்ஷுவா என்றும் அழைக்கப் படுகிறது.

2. எந்த சொத்தையும் வைத்திராத, அத்தியாவசிய வாழ்வதாரங்களை பெற்றுக் கொள்வதற்காக, முதலாளிகளுக்கு தமது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்கள். இந்த வர்க்கமானது பாட்டாளிகளின் வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்கம் என அழைக்கப் படுகின்றது.

கேள்வி 5: எந்த நிபந்தனைகளின் கீழ் முதலாளிகளுக்கான பாட்டாளிகளின் உழைப்பு விற்பனை இடம்பெறுகிறது?

பதில்: உழைப்பும் ஒரு பண்டம் தான். ஏனைய பண்டங்களின் விலை எந்த விதிகளின் படி தீர்மானிக்கப் படுகிறதோ, சரியாக அதே மாதிரித் தான் உழைப்பின் விலையும் தீர்மானிக்கப் படுகிறது. பெரிய தொழிற்துறை அல்லது சுதந்திரமான போட்டி என்பனவற்றின் மேலாதிக்கத்தின் கீழ், ஒரு பண்டத்தின் விலை சராசரியாக அதன் உற்பத்தி செலவுக்கு சமமாக இருக்கும். அதாவது உழைப்பின் உற்பத்தி செலவுக்கு சமமாகத் தான் அந்த உழைப்பின் விலையும் இருக்கும்.

உழைப்பின் உற்பத்தி செலவானது, அந்தத் தொழிலாளி உழைப்பதற்கு தேவையான உணவாதாரங்களை பெற்றுக் கொள்ளும் அளவிற்கும், தொழிலாளர் வர்க்கம் அழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் அளவிலும் தான் இருக்கும். அதாவது இந்த நோக்கத்தை நிறைவேற்ற தேவையான அளவை விட அதிகமாக ஒரு தொழிலாளியின் உழைப்புக்கு கிடைக்க மாட்டாது. ஆகவே உழைப்பின் விலை அல்லது கூலி என்பது, வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டுவதற்கான மிகக் குறைந்த அளவு தொகையாகவே இருக்கும்.

வியாபாரம் சில நேரம் நன்றாகவும், சில நேரம் மோசமாகவும் நடக்கலாம். அப்படியான நிலையில் தொழிலதிபர் தனது பண்டத்திற்கு சில நேரம் அதிகமாகவும், சில நேரம் குறைவாகவும் பெறுவதைப் போன்று தான், தொழிலாளிக்கும் அதிகமாகவும் குறைவாகவும் கிடைக்கும். ஆனால் ஆலை முதலாளியின் பண்டத்திற்கு கூடவும் இல்லாமல், குறையவும் இல்லாமல் சராசரியாக கிடைத்து வந்தால், தொழிலாளிக்கும் அவரது அடிப்படை கூலிக்கு கூடாமல் குறையாமல் சராசரி தான் கிடைக்கும். பெருந் தொழிற்துறை அனைத்து தொழில்களையும் ஆதிக்கம் செலுத்தும் போது, கூலி தொடர்பான பொருளாதார விதியும் கடுமையாக அமுல்படுத்தப் படும்.



(பிற்குறிப்பு: ஏற்கனவே உள்ள தமிழ் மொழிபெயர்ப்பை ஜேர்மன் மொழி மூல நூலுடன் ஒப்பிட்டு இந்த விளக்கவுரையை எழுதி உள்ளேன். புரிதலுக்காக சில இடங்களில் எளிமைப் படுத்தி இருக்கிறேன்.)

No comments: