Thursday, December 31, 2020

மதம் ஒரு "போதைப்பொருள்" எனும் வறட்டு நாத்திகர்களின் பிரச்சாரம் குறித்து...

"மதம் மக்களின் அபின்" என்று கார்ல் மார்க்ஸ் சொன்ன கூற்று திரிபுபடுத்தப் பட்டு, பலரால் பிழையான முறையில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. அந்தக் கூற்றில் கார்ல் மார்க்ஸ் மதத்தை போதைப்பொருளுடன் ஒப்பிட்டு சொன்னதாக வறட்டு நாத்திகர்களும் வாதாடுகிறார்கள். அது முழுக்க முழுக்க அயோக்கியத்தனமான பொய்ப் பிரச்சாரம்.

கார்ல் மார்க்ஸ் எழுதிய "ஹேகலின் வலது தத்துவம்" என்ற நூலுக்கான முன்னுரையில் தான் அந்தக் கூற்று இடம்பெறுகின்றது. அதற்கு முன்னுக்கும் பின்னுக்கும் என்ன எழுதி இருக்கிறது என்பதை வறட்டு நாத்திகர்கள் வாசிக்க விரும்புவதில்லை.

நூலில் இருந்து: (இலகுபடுத்தப் பட்ட மொழிபெயர்ப்பு)

//மதச்சார்பற்ற விமர்சனத்தின் அடிப்படையானது " மனிதர் மதத்தை உருவாக்குகிறார்கள். மதம் மனிதரை உருவாக்கவில்லை" என்கிறார்கள்.  குறிப்பாக, மதம் என்பது, மனிதர்கள் தாம் இன்னும் தம்மிடம் கண்டுகொள்ளாத அல்லது திரும்பவும் தொலைத்து விட்ட சுய உணர்வு அல்லது சுய மதிப்பீடு எனலாம். ஆனால் மனிதர்கள் என்போர் புலன்களால் அறிய முடியாத, உலகிற்கு வெளியே அலையும் ஜீவன்கள் அல்ல.

மனிதர்களின் உலகானது, அரசு, சமூகம், இவற்றின் அங்ககமாக மனிதர்கள் உள்ளனர். இந்த அரசும், இந்த சமூகமும் மதத்தை உற்பத்தி செய்கின்றன. (இன்று நாம் வாழும் உலகம்) ஒரு தலைகீழாக மாற்றப் பட்ட உலகாக இருப்பதால், அதுவும் உலகின் மறுவளமான சுய உணர்வாக உள்ளது.

மதம் என்பது, 

இந்த உலகின்... 

  •  பொதுவான கோட்பாடு. - பல்பொருள் களஞ்சியத்தின் சாராம்சம்.
  • அதன் வெகுஜன வடிவிலான தர்க்கீகம்.
  •  அதன் ஆத்மார்த்தமான கௌரவ உணர்வு.
  • அதன் பேரார்வம்.
  • அதன் அறம் சார்ந்த உறுதிப்படுத்தல்.
  • சம்பிரதாயபூர்வமான பூரணப் படுத்தல்
  • ஆற்றுப்படுத்தலுக்கும், நியாயப்படுத்தலுக்குமான உலகளாவிய அடிப்படை.

அது மனிதப்பிறவியின்  கற்பனையான மெய்யுணர்வு, ஏனென்றால் மனிதப்பிறவி உண்மையான மெய்யுணர்வை கண்டதில்லை. ஆகவே, மதத்திற்கு எதிரான போராட்டமானது, மறைமுகமாக அந்த உலகிற்கும் எதிரான போராட்டமாகும். மதம் அந்த உலகின் உணர்வுபூர்வமான வாசனைத் திரவியம் போன்றுள்ளது. மதரீதியான வருந்துதல் என்பது, நிஜமான வருந்துதலின் வெளிப்பாடாக இருக்கும் அதே நேரத்தில் அந்த நிஜமான வருந்துதலுக்கு எதிரான எதிர்வினையாகவும் உள்ளது. மதம் என்பது சபிக்கப் பட்ட படைப்புகளின் பெருமூச்சு.

மதம் என்பது இதயமற்ற உலகின் இதயத்துடிப்பு, அத்துடன் ஆன்மா இல்லாத நிலைமையில் ஆன்மாவாக உள்ளது. அது மக்களின் ஓப்பியம்(அபின்).// 

(கார்ல் மார்க்ஸ்)



சிலர் இங்கே கடைசியாக சொல்லப் பட்ட ஓப்பியம் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். அதை மட்டும் வைத்துக் கொண்டு கார்ல் மார்க்ஸ் மதம் ஒரு போதைப்பொருள் என்று சொல்லி விட்டார் என்று திரிக்கிறார்கள். உண்மையில் ஓப்பியம் என்பது என்ன?

கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஓப்பியம் மருந்துக் கடைகளில் சட்டபூர்வமாக விற்பனை செய்யப் பட்டது. அது மருத்துவர்களால் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப் பட்டது. குறிப்பாக நோயின் கடுமை காரணமாக, அதிக வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு மருத்துவர்களே ஓப்பியம் கொடுத்து அமைதிப் படுத்துவார்கள்.

அன்றைய ஐரோப்பிய நாடுகளில் வறுமையில் வாழ்ந்த ஏழை மக்கள், பசியை மறப்பதற்கு சிறிதளவு ஓப்பியம் எடுப்பது வழமை. ஓப்பியம் உட்கொண்ட ஏழை உழைப்பாளிகள் பசியை மறந்து வேலை  செய்வதுடன், தாம் மகிழச்சியாக வாழ்வதாகவும் உணர்ந்தார்கள்.  பசியால் அழும் குழந்தைகளை தாய்மார் ஓப்பியம் கொடுத்து தூங்க வைத்தனர்.

இரக்கமற்ற உலகில் வாழும் மனிதர்கள்  தமது கவலைகளை மறப்பதற்காக, மதம் என்றார் ஒன்றை கருத்து நிலை சார்ந்த ஒப்பியமாக உருவாக்கிக் கொள்கின்றனர் என்பது தான் மார்க்ஸ் சொல்ல வந்தது. இங்கே மார்க்ஸ் மதத்தை ஓப்பியத்துடன் மட்டும் ஒப்பிடவில்லை. இதயம், வாசனைத்திரவியம், போன்றவற்றோடும் ஒப்பிடுகின்றார்.

அத்துடன் மதம் என்பது தலைகீழாக உள்ள உலகின் உள்ளுணர்வு, மனிதர்களின் கற்பனையான மெய்யுணர்வு, வருத்தத்தை தணிப்பதற்கான ஆற்றுப் படுத்தல்... என்றெல்லாம் விபரிக்கின்றார். ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு ஓப்பியம் என்ற சொல்லை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குவோர் உள்நோக்கம் கொண்டவர்கள். 


வறட்டு நாத்திகர்கள், மதம் ஒரு போதைப்பொருள்(அபின்) என்று மார்க்ஸ் சொன்னதாக ஒரு தீய நோக்கோடு பரப்புரை செய்து வருகின்றனர்.  இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் பறிக்க நினைக்கிறார்கள். ஒன்று, மத நம்பிக்கையாளர்களை மார்க்சியத்தில் இருந்து அந்நியப் படுத்தி விரிசலை உண்டாக்குவது. இரண்டு, சபல புத்தி கொண்ட மார்க்சியவாதிகளை தமது இனவாத நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு வருவது.

மனிதர்கள் தாம் இன்னமும் அடிமைச் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருப்பதை அறிய முடியாமல் போடப்பட்டுள்ள திரையாக மதம் உள்ளது என்பது தான் மார்க்ஸ் சொல்ல வருவது. அதை நாம் இங்கே மார்க்சின் எழுத்துக்களில் இருந்து அறிந்து கொள்வோம்.

நூலில் இருந்து: 

//மாயத்தன்மை கொண்ட மகிழ்ச்சி தரும் மதத்தின் பங்களிப்பை இல்லாதொழிப்பதானது, அதே நேரத்தில் மக்களின் உண்மையான மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கான கோரிக்கையாகவும் உள்ளது. அந்த நிலைமையின் மாயையை இல்லாதொழிப்பது என்பது, அதே நேரத்தில் இந்த மாயைகள் தேவைப்படும் நிலைமையை இல்லாதொழிப்பது என்றும் அர்த்தம் ஆகும். மதத்தின் மீதான விமர்சனம் என்பது, துன்பக் கேணி பற்றிய விமர்சனத்தை கருவாகக் கொண்டுள்ளது. ஏனென்றால் மதம் (மனிதர்களின்) துன்பக் கேணியை மறைக்கும் ஒளிவட்டமாக உள்ளது. 

இந்த விமர்சனம் (அடிமைச்) சங்கிலியை சுற்றிப் படர்ந்திருந்த கற்பனைப் பூக்களை அகற்றியுள்ளது. அதன் அர்த்தம் மனிதர்கள் கற்பனையற்ற, ஆற்றுதல் அற்ற சங்கிலியை அணிந்திருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, சங்கிலியை வீசியெறிந்து விட்டு உயிர்ப்புள்ள மலர்களைப் பறிக்க வேண்டும் என்பது தான். மதத்தின் மீதான விமர்சனம் மனிதனை மாயையில் இருந்து விடுவிக்கிறது. ஆகவே, அவன் தனது மாயையில் இருந்து விடுபட்டவனாக, உள்ளுணர்வை மீட்டெடுத்தவனாக சிந்தித்து, செயலாற்றி தனது உண்மைத்தன்மையை அமைத்துக் கொள்ள முடியும். ஆகவே, தானே உண்மையாக சூரியனாக தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருப்பான். அது வரைக்கும், மதம் ஒரு மாயச் சூரியனாக மனிதனையே சுற்றிக் கொண்டிருக்கும்.

அதனால் இன்னொரு உலகின் உண்மை மறைந்த பின்னர், இவ்வுலகின் உண்மையை நிலைநாட்டுவதற்கான கடமை வரலாற்றுக்கு உள்ளது. வரலாற்றுக்கு சேவை செய்ய வேண்டிய முதன்மையான கடமை தத்துவத்திற்கு உள்ளது. மனிதகுல சுய அந்நியப்படுத்தலான புனித உருக்கள்  எனும் முகமூடி கழற்றப் பட்ட பின்னர், புனிதமற்ற உருக்களை காவித்திரிந்த வரலாற்றின் சுய அந்நியப் படுத்தலும் அம்பலப் படுத்தப் படும். ஆகவே, சொர்க்கத்தின் மீதான விமர்சனம், பூமியின் மீதான விமர்சனமாக மாறுகிறது. மதத்தின் மீதான விமர்சனம் சட்டத்தின் மீதான விமர்சனமாக மாறுகிறது. இறையியல் மீதான விமர்சனம் அரசியல் மீதான விமர்சனமாக மாறுகிறது.// (கார்ல் மார்க்ஸ்)


கடைசிப் பந்தி கிறிஸ்தவ மதம் போதிக்கும் மறு உலகக் கோட்பாட்டை மறுதலிக்கிறது. கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளில் துன்பப்படும் ஏழைகள் கடவுளிடம் முறையிடும் போதெல்லாம், மத போதகர்கள் அவர்களுக்கு சொர்க்கத்தில் மகிழ்ச்சிகரமான நித்திய வாழ்வு காத்திருக்கிறது என்று ஆறுதல் சொல்வார்கள். இங்கே "இன்னொரு உலகம்" என்பது சொர்க்கத்தை குறிக்கும். மன்னர்களும், பிரபுக்களும், பணக்காரர்களும் செல்வத்தில் திளைக்கையில், பெரும்பாலான உழைக்கும் மக்கள் ஏழ்மையில் வாடினார்கள். இன்றைக்கும் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை. ஏழை- பணக்காரர் என்ற வர்க்க வேற்றுமையை மறைக்கும் மாயத் திரையாக மதம் உள்ளது.

ஆகவே மதத்தின் மீதான விமர்சனமானது, கூடவே மதம் பாதுகாக்கும் பணக்கார வர்க்க அரசியல், சட்டங்கள் மீதான விமர்சனமாகவும் இருக்க வேண்டும். மதம் மட்டுமல்லாது, வரலாறும் இந்த வேற்றுமைகளை மூடி மறைத்து வந்துள்ளது. ஆகவே, வரலாற்றின் போர்வையை களைய வேண்டிய கடமைப்பாடு தத்துவத்திற்கு உள்ளது. அதையே மார்க்சிய தத்துவமும் ஆண்டாண்டு காலமாக செய்து வருகின்றது. அதாவது மனிதர்களின் துன்பங்களை ஆற்றுப் படுத்தும் வலி நிவாரணியாக இருந்து வரும் மதத்தின் இருப்பை இல்லாதொழிப்பதென்பது, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வைக்கும் பொதுவுடைமைக் காலத்தில் தானாக நடக்கும்.  

இந்த இடத்தில் தான் வறட்டு நாத்திகர்கள், மார்க்சியத்துடன் முரண்படுகிறார்கள். அவர்கள் கண்மூடித்தனமாக மதத்தை மட்டும் குறிவைத்து தாக்கிக் கொண்டிருக்கிறார்களே அல்லாமல், மதம் எனும் மாயத்திரைக்கு பின்னால் உள்ள வர்க்க அரசியலை கண்டுகொள்வதில்லை. காரணம், வறட்டு நாத்திகர்களும் ஏற்றத்தாழ்வான வர்க்க சமூகத்தில் நன்மை அடைந்த குட்டி பூர்ஷுவா பிரிவினராக உள்ளனர். இந்த முதலாளித்துவ சமூகமானது மதங்களை மட்டுமல்லாது, வறட்டு நாத்திகத்தையும்  உணவூட்டி வளர்த்து வருகின்றது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் நோக்கில் ஆதிக்க சக்திகளால் அனுப்பப்படும் மதவாத, வறட்டு நாத்திக அயோக்கியர்களை இனங் கண்டு புறம் ஒதுக்குவதும் மார்க்சியர்களின் கடமையாக உள்ளது.

- கலையரசன்

 29. 12. 2020  

1 comment:

வலிப்போக்கன் said...

வறட்டுநாத்திகர்கள் மட்டும்மல்ல புரட்சிகர அமைப்பில் உள்ள தோழர்களே! அப்படித்தான் கூறிக் கொண்டுள்ளனர். நானும் கூடத்தான்... ஒரு தடவைக்கு பல தடவை படித்தப்பின்தான் தங்களின் பதிவின் விளக்கம் பிடிபட்டது....