Showing posts with label அகதிகள். Show all posts
Showing posts with label அகதிகள். Show all posts

Sunday, June 11, 2023

ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!

 

அதிசயம் ஆனால் உண்மை! ENDLF ஒட்டுக் குழுவுக்கு வக்காலத்து வாங்கும் கனடாப் புலி!! 

ENDLF என்ற இயக்கம் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசால் உருவாக்கப் பட்டது. அதில் இணைக்கப் பட்ட இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டு முகாம்களில் அகதிகளாக தங்கி இருந்தவர்கள். 

1986 ஆம் ஆண்டு ஈழத்தில் புலிகளால் தடைசெய்யப்பட்ட TELO, PLOTE, EPRLF ஆகிய இயக்கங்களை சேர்ந்தவர்கள்; இந்தியாவில் இருந்தவர்களும், இலங்கையில் இருந்து சென்றவர்களும் மண்டபம் முகாமில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர். 

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், இந்திய அரசு அகதி முகாம்களில் இருந்த இளைஞர்களை அணி திரட்டி இராணுவப் பயிற்சி கொடுத்தது. இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் அல்ல. இதற்கு முன்னர் எந்த இயக்கத்திலும் இருந்திராத அகதி இளைஞர்களும் சேர்க்கப் பட்டனர். அவ்வாறு உருவானது தான் ENDLF. 

இந்திய இராணுவம் இலங்கை செல்லும் நேரம் இவர்கள் துணைப் படையாக இயங்க வேண்டும். நிலைமை சீரானவுடன் ஈழப் பிரதேசத்தை பாதுகாக்கும் பொறுப்பு இவர்களிடம் கையளிக்கப் படும். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்த அகதிகள் அத்தனை பேரும் மீள்குடியேற்றம் செய்யப் படுவார்கள். அன்று இது தான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது. 

ஆனால் வரலாறு வேறு விதமாக அமைந்து விட்டது. இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் மூண்டது. போரின் முடிவில் இந்திய இராணுவத்துடன் ENDLF உம் வெளியேறியது. ஆயுதபாணிகள் மீண்டும் அகதிகள் ஆனார்கள். இந்திய- இலங்கை ஒப்பந்தம் முறிந்த படியால் ஒட்டுமொத்த அகதிகளும் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி விட்டனர்.

Saturday, February 19, 2022

தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்!


தென் கொரியாவில் நடந்த பட்டினிச் சாவுகள்! ஆம், நீங்கள் சரியாகத் தான் வாசித்தீர்கள். வட கொரியா அல்ல,தென் கொரியா தான். இது பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் தென்கொரியர்கள் பற்றிய தகவல் அல்ல. (அதுவும் நடக்கிறது தான்.) ஆனால், கிம்மின் "சர்வாதிகார" ஆட்சி நடக்கும் வடகொரியாவில் இருந்து தப்பியோடி, சுதந்திரமாக வாழ்வதற்காக "ஜனநாயக" ஆட்சி நடக்கும் தென் கொரியாவில் தஞ்சம் கோரிய அகதிகள் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள்.

தென் கொரியாவில் தஞ்சம் கோரி வாழ்ந்து வந்த வடகொரிய அகதியான Han Sung-ok எனும்  42 வயது தாயும், அவளது ஆறு வயது மகனும் வீட்டில் சாப்பிட எதுவுமில்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். ஆமாம், முதலாளித்துவ சொர்க்கபுரியான ஒரு "செல்வந்த" நாட்டில், ஒரு குடும்பம்  சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்தது செத்த அவலம் நடந்திருக்கிறது! (ஆதாரம்: She fled North Korea for a better life. She died with her young son in an apartment in Seoul

இந்த சம்பவம் நடந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன. இருப்பினும்,  இந்தக் கொடுமை தென் கொரியாவில் நடந்த படியால்பெருமளவில் ஊடகக் கவனத்தை பெறவில்லை. இதுவே வடகொரியாவில் நடந்திருந்தால், இந்நேரம் தமிழ் ஊடகங்கள் எல்லாம் மாறி மாறி ஒப்பாரி வைத்து கதறி அழுதிருப்பார்கள். என்ன செய்வது? அவர்கள் இறந்தது முதலாளித்துவ சொர்க்கபுரியான தென் கொரியாவில் அல்லவா? அதனால் வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருக்கிறார்கள். 

அந்தத் தாயும் மகனும் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு தண்ணீர் மீட்டர் அளக்க வந்த பரிசோதகர், ஒரு வீட்டிலிருந்து வித்தியாசமான மணம், பிண வாடை வந்த படியால், உடனடியாக பொலிசிற்கு அறிவித்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்த நேரம், அந்த வீட்டிற்குள் இரண்டு அழுகிய பிணங்களும் வெறுமையான குளிர்சாதனப் பெட்டியும் இருந்தன. அவர்கள் மாதக் கணக்காக சாப்பாடு எதுவும் இல்லாமல் பட்டினி கிடந்தது செத்திருக்கிறார்கள். 

ஏற்கனவே அந்தக் குடும்பத்தினர் பல மாதங்களாக வீட்டு வாடகை, எரிபொருள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த முடியாமல் அவதிப் பட்டிருக்கிறார்கள். பில்லுக்கு மேல் பில் என, கடனுக்கு மேல் கடன் சேர்த்து வைத்திருந்திருக்கிறார்கள். வேலையுமின்றி, அரச உதவியுமின்றி, தெருவில் உணவுக்காக பிச்சை கேட்டு கையேந்த வெட்கப்பட்டு வீட்டுக்குள்ளே பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள். 

ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். அவர்கள் வட கொரியாவில் இருந்திருந்தால் இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்கள். வட கொரியாவில் யாரும் வீட்டு வாடகை கட்டுவதில்லை. எல்லோரும் சொந்த வீடுகளில் குடியிருக்கிறார்கள். எரிபொருள் கட்டணம் மிக மிகக் குறைவு. தண்ணீருக்கு செலவே இல்லை. எல்லோருக்கும் வேலை இருக்கிறது. அதனால் வருமானம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானியத்தில் கிடைக்கின்றன. அதனால் யாரும் பட்டினி கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால், நமது தமிழ் ஊடகங்கள் என்ன சொல்கின்றன? வட கொரியாவில் மக்கள் எல்லோரும் பட்டினி கிடப்பதாக புளுகுகின்றன. சாப்பாடு இல்லாமல் புல்லைத் திண்கிறார்கள் என்று ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவார்கள். அதையும் நம்புவதற்கு நாட்டில் ஏராளமான முட்டாள்கள் இருக்கிறார்கள். 

அது சரி, தென் கொரியாவுக்கு வருவோம். பனிப்போர் காலத்தில் தென் கொரியாவுக்கு வந்த வட கொரிய அகதிகளுக்கு, அரசு தாராளமாக நிதியுதவி செய்தது. அகதிகள் வந்தவுடன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்து, வீட்டு வசதிகளையும் செய்து கொடுத்து வந்தது. உண்மையில் வடகொரியாவில் வாழ்பவர்களுக்கு வசதி, வாய்ப்புகள், பணம் மீதான ஆசை காட்டி அவர்களை தென் கொரியாவுக்கு வரவழைக்கும் வகையில் கவர்வது தான் அதன் நோக்கம். 

ஆனால், தொண்ணூறுகளுக்கு பிறகு தென் கொரிய அரசு வட கொரிய அகதிகளுக்கு நிதி ஒதுக்குவது படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பனிப்போர் முடிந்த பின்னர், உலக ஒழுங்கு மாறி விட்டது. மேலும், அந்தக் காலகட்டத்தில் வட கொரியாவில் வரட்சி, வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சம் ஏற்பட்ட படியால் பெருமளவு அகதிகள் வந்து விடுவார்கள் என்று அஞ்சி இருக்கலாம். தொண்ணூறுகளுக்கு பின்னர், வட கொரிய பொருளாதாரம் மாற்றமடைந்து, தென் கொரிய நிறுவனங்களும் முதலிடும் வகையில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் வந்து விட்டது. அதனால் தற்போது எந்தவிதமான சித்தாந்த முரண்பாடுகளும் கிடையாது. 

வட கொரியாவில் வறுமை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதனால், வடகொரியாவில் இருந்து செல்லும் அகதிகள், தென் கொரியாவுக்கு பிழைப்பு தேடிச் செல்கிறார்கள் என்று சொன்னாலும் தவறில்லை. ஆனால், அவர்கள் அறியாத உண்மை ஒன்றுள்ளது. தென் கொரியாவிலும் வறுமை இருக்கிறது. அது வட கொரிய வறுமையை விட பல மடங்கு கொடுமையானது என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். 

உண்மையில் தொண்ணூறு சதவீதமான வட கொரிய அகதிகள், அவர்களது தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் தென் கொரியா பற்றிய கற்பனைகளை வளர்த்து வந்ததாக தெரிவிக்கிறார்கள். பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கையை காட்டும் தென் கொரிய படங்கள், டிராமா சீரியல் பார்த்து விட்டு, இப்படித் தான் சாதாரண தென் கொரிய மக்கள் வாழ்கிறார்கள் என்று நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தாங்களும் அங்கே சென்றால் ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என கனவு கண்டிருக்கிறார்கள். ஆனால், தென் கொரியாவுக்கு வந்த பின்னர் தான் யதார்த்தம் அவர்களது முகத்தில் அறையும். 

வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் அனைவரும் இனத்தால் கொரியர்கள் தான். ஒரே கொரிய மொழி தான் பேசுகிறார்கள். ஆனால், வட கொரியர்களின் வட்டார பேச்சு வழக்கு வித்தியாசமாக இருக்கும். அதுவே அவர்களை காட்டிக் கொடுத்து விடும். வட கொரிய பேச்சு மொழியை கேட்டால் வேலை தர மாட்டார்கள். தனியார் முதலாளிகள் வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டுவார்கள். தொழிற்துறையில் பெரும்பாலும் தனியார்மயம் கோலோச்சும் நாட்டில் அரச உதவியை எதிர்பார்க்க முடியுமா? ஏமாற்றம். மிகப் பெரிய ஏமாற்றம். 

தென் கொரிய பாடசாலைகளில் படிக்கும் வட கொரிய பிள்ளைகள் பேசும் வட்டார வழக்கு காரணமாக பிற மாணவர்களின் கேலிக்கு உள்ளாகிறார்கள். இதனால் பள்ளிப் படிப்பை முடிக்காமல் வேலைக்கு செல்பவர்கள் பலர். இந்தக் காலத்தில் எவனாவது டிப்ளோமா இல்லாமல் வேலை கொடுப்பானா? அதனால், அதிக உடல் உழைப்பை கோரும் அடி மட்ட வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலைமை. 

ஏன், வட கொரியாவில் பட்டப்படிப்பு படித்தவர்கள், மேல் மட்ட பதவிகளில் இருந்தவர்களுக்கும் அது தான் நிலைமை. தென் கொரியாவில் அவர்களது தகுதிக்கேற்ற வேலை கிடைக்காது. அவர்களும் சாதாரண கூலித்தொழில் செய்து பிழைக்க வேண்டிய அவல நிலை. முன்பு வட கொரிய இராணுவத்தில் நல்ல பதவியில் இருந்த ஒருவர், இன்று தென் கொரியாவில் குப்பைகள் தரம் பிரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்வதை விட வட கொரியாவில் இருந்து செத்திருக்கலாம் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். 

வட கொரிய அகதிகள் வரும் பொழுதே கடன் சுமையுடன் தான் வருகிறார்கள்.  சட்டவிரோத எல்லை கடத்தல் மூலம் சீனா ஊடாக அழைத்து வரும் "பயண முகவர்களுக்கு" ஆயிரக்கணக்கான டாலர்கள் கடன் கொடுக்க வேண்டி இருக்கும். அந்தக் கடனை அடைப்பதற்காகவே தென் கொரியாவில் வருடக் கணக்காக வேலை செய்ய வேண்டி இருக்கும். அரச உதவித் தொகையும் மிச்சம் பிடித்து கடனை அடைப்பதற்கு செலவாகி விடுகிறது. அதனால் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை. தென் கொரியாவில் தஞ்சமடைந்த வட கொரிய அகதிகள் பட்டினி கிடந்தது சாவதற்கு இதுவும் ஒரு காரணம். 

பெரும்பாலும் வட கொரிய அகதிகளுக்கு இலகுவாக தென்கொரிய நண்பர்கள் கிடைப்பதில்லை. அவர்கள் இவர்களை தாழ்வாக பார்ப்பார்கள். அதைவிட தென்கொரிய தேசியவாதிகளின் துன்புறுத்தல்கள் வேறு. வடகொரியா எப்போதாவது ஏவுகணை சோதனை செய்து விட்டால், தேசியவாதிகளின் உணர்வுகள் உச்சத்திற்கு சென்று விடும். அந்நேரம் கண்ணில் அகப்படும் வடகொரியர்களை வறுத்தெடுத்து விடுவார்கள். 

சரி, தஞ்சம் புகுந்த நாட்டில் தான் வரவேற்பில்லை. தாயகத்தில் இருக்கும் உறவுகளோடு பேசி துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றால், அதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். அதாவது, தென்கொரியாவில் வாழும் யாரும் வடகொரியாவில் இருப்பவர்களுடன் தொடர்பு வைக்க முடியாது.  தொலைபேசி, கடிதப் போக்குவரத்து எதுவுமே இருக்கக் கூடாது. ஆமாம், தென் கொரிய அரசு தான் இந்தளவு கடுமையான தடைகளை போட்டிருக்கிறது. 

தென்கொரியாவுக்கு வந்த அகதிகளில் குறிப்பிட்ட அளவில் சிலர் மட்டுமே வசதியாக வாழ்கிறார்கள். ஏனையோர் வாழ்க்கையை நடத்த  முடியாமல் கஷ்டப் படுகிறார்கள். தென் கொரியாவில் தொட்டதெற்கெல்லாம் பணம். கையில் காசு இல்லையா? யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தெருவில் படுத்தால் என்ன, செத்துத் தொலைந்தால் என்ன கண்ணை மூடிக் கொண்டு சென்று விடுவார்கள். 

இப்படியான நரகத்தில் வாழப் பிடிக்காமல், பலர் வடகொரியாவுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள். அதுவும் சட்டவிரோதமாகத் தான்.  தென் கொரியாவில் வாழும் அகதிகளில் குறைந்தது சில ஆயிரம் பேராவது வடகொரியாவுக்கு திரும்பிச் சென்று விட்டார்கள். உண்மையில் தென் கொரிய அரசு அனுமதித்தால் இன்னும் பல ஆயிரம் அகதிகள் தாமாக திரும்பிச் சென்று விடுவார்கள். ஆனால், அதற்கான எல்லா வழிகளையும் தென் கொரிய அரசு அடைத்து வைத்திருக்கிறது.

Sunday, December 27, 2020

அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் பற்றிய திரைப்படம்

அவுஸ்திரேலிய அரசு, தனது நாட்டில் வந்து தஞ்சம் கோரும் அகதிகளை, தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து வருடக் கணக்காக கொடுமைப் படுத்துவதை Stateless என்ற பெயரில் படமாக்கி உள்ளார்கள். பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தை Netflix இல் பார்க்கலாம். 


இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் வரும் அகதிகள் தடுப்பு முகாம்களில் அடைத்துக் வைக்கப் படுகின்றனர். அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் காரணமாக அகதிகள் அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் கூரையின் மேலே நின்று ஆர்ப்பாட்டம் செய்வதைக் காட்டுகின்றனர்.

அந்த தடுப்பு முகாமில் அவுஸ்திரேலிய பிரஜையான மனநலம் பாதிக்கப் பட்ட பெண் ஒருவரும் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் உண்மையாக நடந்ததாக படத்தின் முடிவில் காட்டுகிறார்கள். அந்தப் பெண் தனது குடும்பத்தினருடன் முரண்பட்டதாலும், ஒரு cult அமைப்பில் நடந்த அத்துமீறல்களாலும் மனநலம் பாதிக்கப்பட்டு தப்பியோடுகையில் போலீசிடம் பிடிபடும் பொழுது தான் ஒரு ஜெர்மன் பிரஜை என்று பொய் சொல்லி விடுகிறாள். அதனால் அவளை விசா இல்லாத விரும்பத்தகாத வெளிநாட்டவரை தங்க வைக்கும் தடுப்பு முகாமுக்கு அனுப்பி விடுகின்றனர். இருப்பினும் கடைசி வரையில் யாரும் அவளது அவுஸ்திரேலிய ஆங்கில உச்சரிப்பு (accent) குறித்து சந்தேகப் படாதது ஆச்சரியத்திற்குரியது. அன்றைய காலத்தில், இந்த தவறானது ஊடகங்களில் வெளியாகி, அவுஸ்திரேலிய அரசுக்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்தது.

அரசு ஒரு தனியார் நிறுவனத்திடம் முகாமை காவல் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் காவலாளிகளில் சிலர் மனிதாபிமானமற்று நடந்து கொள்வதுடன், ஒரு கேள்வி கேட்ட அகதியை அடித்து நொறுக்குகின்றனர். அதற்காக சம்பந்தப் பட்ட காவலாளிகள் இடைநிறுத்தம் செய்யப் படவில்லை. அரசும் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டுகொள்வதில்லை.

காவலாளிகள் ஒரு அகதியை அடித்து காயப்படுத்திய புகைப்படம் அவுஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளிவருகிறது. அதைத் தொடர்ந்து யார் கமெரா வைத்திருந்தார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். அகதிகளை பார்வையிட வரும் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கொண்டு வந்த உணவுப் பொருளை சோதித்து அதற்குள் மறைத்து வைத்திருந்த மொபைல் தொலைபேசியை பறிமுதல் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து வெளியில் இருந்து பார்வையாளர்கள் வருவதையும், முகாம் தொலைபேசி பாவனையும் தடுக்கின்றனர். உணவுச்சாலையும் மூடப் படுகிறது. அகதிகள் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து தான் உரிமைகளை வென்றெடுக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வரும் முக்கிய பாத்திரமான ஆப்கான் அகதி அமீரின் கதை படத்தில் தெளிவாக சொல்லப் படவில்லை. அமீர் முதலில் தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு, பின்னர் இன்னொரு படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருகிறான். அங்கு வந்த பின்னர் தனது ஒரு மகள் மட்டுமே தப்பி வந்ததை அறிந்து கொள்கிறான். மனைவியும் இன்னொரு மகளும் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விட்டனர். அமீர், இந்தோனேசியாவில் படகில் ஏறும் பொழுது தனது மனைவி பிள்ளைகளை அனுப்பி விட்டு அவன் மட்டும் ஏன் திரும்பிச் சென்று கடத்தல்காரர்களிடம் அடி வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை இல்லை. படத்தில் கூறப்படும் அமீரின் கதையானது அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பார்வைக் கோணத்தில் இருந்து சொல்லப் படுவதாக நான் கருதுகிறேன். விசாரணை அதிகாரி அவனை ஒரு கடத்தல்காரன் என்று குற்றம் சாட்டி தஞ்சக் கோரிக்கையை நிராகரிக்கிறாள். அதற்கு காட்டப் படும் ஆதாரங்களிலும், சொல்லப் படும் கதைகளிலும் பல ஓட்டைகள் உள்ளன.

குடிவரவு அமைச்சு "நம்பத் தகுந்தது" எனக் காட்டும் ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல. இதை படத்தில் முக்கியமான பாத்திரமாக வரும் இன்னொரு குடியேற்ற அதிகாரியே கூறுகிறார். உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானில் அப்போதிருந்த தாலிபான் அரசுடன் தொடர்பு கொண்டு அமீரின் சகோதரனின் மரணச் சான்றிதழ் எடுத்த விடயம் நம்பத் தகுந்ததாக இல்லை. அத்துடன் Smart phone வந்திராத காலத்தில், இந்தோனேசியாவில் அகதிகளை ஏமாற்றி பணம் பறித்த கிரிமினலுடனான சந்திப்பை, யாரோ ஒருவர் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரி காட்டும் வீடியோ நம்பும் படியாக இல்லை. அநேகமாக அமீரின் தஞ்சக் கோரிக்கையை நிராகரிப்பதற்கு காரணம் தேடி, அவுஸ்திரேலிய அரசு தானாகவே ஒரு கற்பனைக் கதையை புனைந்துள்ளதாக தெரிகின்றது.

இது போன்ற சில குறைகள் இருந்தாலும், மொத்ததில் படம் சொல்ல வந்த விடயத்தை அழகாக சொல்லி விடுகின்றது. அதாவது அவுஸ்திரேலிய அரசு அகதிகளை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதை மனதில் பதியும் வண்ணம் படமாக்கி உள்ளனர். அத்துடன், இப்படியான சந்தர்ப்பங்களில் பன்னாட்டு அகதிகளுக்கு இடையில் ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் அழகாகக் காட்டப் பட்டுள்ளது. அவர்கள் தமக்குள் முரண்பட்டு மோதிக் கொள்ளாமல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அவசியம் பார்க்க வேண்டிய படம்.

Wednesday, August 17, 2016

அவுஸ்திரேலியாவின் முள்வேலி தடுப்பு முகாம்களில் நடக்கும் வன்கொடுமைகள்


அகதிகள் தமது தாயகத்தில்  நடக்கும் வன்கொடுமைகளுக்கு அஞ்சி மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் கோருகின்றனர். ஆனால், புகலிடம் கொடுக்கும் நாடுகளே வன்கொடுமையில் ஈடுபட்டால் அகதிகள் யாரிடம் முறையிட முடியும்? 

கடந்த பத்தாண்டு காலத்திற்குள், ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில் படகுகளில் சென்றுள்ளனர். தமிழர்கள் மட்டுமல்லாது, ஈரானியர், ஈராக்கியர், ஆப்கானியர், ஆப்பிரிக்கர் என்று பல்வேறு இனத்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் அவுஸ்திரேலிய அரசு நாட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. அதற்குப் பதிலாக அகதிகளை தொலைதூர தீவுகளில் உள்ள தடுப்புமுகாம்களில் தங்க வைக்கின்றது.

நவுரு, மானுஸ் ஆகிய தீவுகளில் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் உள்ளன. நவுரு தீவு ஒரு தனியான தேசம். மானுஸ் தீவு பாப்புவா நியூ கினியாவுக்கு சொந்தமானது. சில தினங்களுக்கு முன்னர், மானுஸ் தீவில் உள்ள தடுப்பு முகாம் அகதிகளின் நடமாடும் சுதந்திரத்தை பறிக்கின்றது என்று, பாப்புவா நியூகினியாவில் வழக்குப் போடப் பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உண்மையில் அது மனித உரிமை மீறல் தான் என்பதை ஏற்றுக் கொண்டு தடுப்பு முகாமை மூடி விட வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது.

பாபுவா நியூகினியா அரசும், அவுஸ்திரேலிய அரசும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தன. ஆனால், அகதிகள் அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்றும், அவர்கள் பாபுவா நியூகினியாவில் தொடர்ந்தும் தங்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது. அகதிகளை பராமரிக்கும் செலவுகளை பொறுப்பேற்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்தது.

ஆனால், நவுரு தீவில் நிலைமை பல மடங்கு மோசமானது. அவுஸ்திரேலிய நிதியுதவியில் பெரிதும் தங்கியிருக்கும் நவுரு அரசு, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதில்லை. வெளியாரை அனுமதிக்காத படியால், முகாம்களுக்குள் என்ன நடக்கின்றது என்ற தகவல் வெளியுலகை அடைவதில்லை. அண்மையில் சர்வதேச மன்னிப்புச்சபையை சேர்ந்த ஒருவர், இரகசியமாக சென்று முகாமில் வாழும் அகதிகளை சந்தித்துள்ளார். அவர் தெரிவித்த தகவல்கள் உலகை உலுக்கின.

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் வாழும் அகதிகள், ஒரு போர் நடக்கும் நாட்டிற்குள் சிக்கிக் கொண்ட மக்களைப் போன்று, கடுமையான மனவுளைச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே சிலர் தற்கொலை செய்துள்ளனர். இன்னும் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், அல்லது அது குறித்து யோசித்துள்ளனர். தான் சந்தித்த ஒன்பது வயது சிறுவன் கூட தற்கொலை செய்ய எண்ணியதாக, சர்வதேச மன்னிப்புச் சபை ஆர்வலர் தெரிவித்தார். அந்தளவுக்கு, அனேகமாக எல்லா அகதிகளும், ஆண், பெண், சிறுவர் வேறுபாடின்றி மன உளைச்சலால் வருந்துகின்றனர். 

நவுரு தடுப்பு முகாம்களில் மருத்துவ வசதி மிகவும் குறைவு. அதனால் நோய் வாய்ப்பட்டவர்கள் கடுமையாக சுகவீனமடைவது மாத்திரமல்ல, யாராலும் பராமரிக்கப் படாமல் கைவிடப் படுகின்றனர். கழிவறைகள் குறைவாகவும், நிலங்கள் அசுத்தமாகவும் காணப்படுகின்றன. சவர்க்காரம் கிடைப்பதில்லை. 

மேலும் பாலியல் அத்துமீறல்களும் தாராளமாக நடக்கின்றன.  குறிப்பாக பெண்கள் முகாமுக்கு வெளியே செல்ல அஞ்சுகின்றனர். நவுரு ஆண்களினால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அகதிகள் வேட்டையாடப் படும் மிருகங்கள் போன்று மனிதாபிமற்ற முறையில் நடத்தப் படுகின்றனர்.

உண்மையில், முகாம்களில் நடக்கும் கொடுமைகள் யாவும், அவுஸ்திரேலிய, நவுரு அரசுக்களின் மறைமுக அங்கீகாரத்துடன் நடக்கின்றன. அதனால் யாரிடமும் முறையிட முடியாத நிலையில், அகதிகள் பலர் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளனர். அதனால் தமக்குத் தாமே கத்தியால் கீறி காயமேற்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் வாயை கம்பியால் தைத்துக் கொள்கிறார்கள்.

நவுரு தீவில் உள்ள தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவுஸ்திரேலிய அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. முகாம் கட்டப்பட்டதில் இருந்து, பராமரிப்பது வரையில் அவுஸ்திரேலிய நிதியில் தான் எல்லாம் நடக்கிறது. 

காவலாளிகள் போன்றவர்களை பணிக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களும் அவுஸ்திரேலிய அரசின் நிதியில் தான் இயங்குகின்றன. இதை விட, அவுஸ்திரேலிய அதிகாரிகள் அங்கு மேற்பார்வையாளராக வேலை செய்கின்றனர். நவுரு அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து இயங்குகின்றனர். ஆகவே, தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடுமைகளுக்கு அவுஸ்திரேலிய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


மேலதிக தகவல்களுக்கு:
Life in Nauru detention: a dark, wretched Truman Show without the cameras
'This is critical': 103 Nauru and Manus staff speak out – their letter in full
Documenten gelekt over misstanden Australisch opvangcentrum

Sunday, June 19, 2016

அச்சே கடலோரம் தமிழ் அகதிகளின் அவலம் கண்டீரோ?


இந்தோனேசியாவில் அச்சே மாநிலக் கரையோரம் ஒதுங்கிய ஈழத் தமிழ் அகதிகளின் அவலம் இன்னமும் தொடர்கின்றது. ஒரு படகில் வந்த நாற்பது அகதிகளில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணும், பல பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.

அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த படகு பழுதடைந்து கரை ஒதுங்கிய போது, அச்சே மாநில காவல்படை அவர்களை கரைக்கு வர அனுமதிக்கவில்லை. சில பெண் அகதிகள் தாமாகவே கரையில் இறங்கிய பொழுது, பொலிசார் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து அவர்களை திருப்பி அனுப்பினார்கள்.

சர்வதேச மன்னிப்புச்சபை, மற்றும் பல தொண்டு நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாக, இந்தோனேசிய அரசு அகதிகளை கரைக்கு வர அனுமதிக்க ஒத்துக்கொண்டது. படகை திருத்திக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டது. ஆனால், அச்சே மாநில அரசு தொடர்ந்தும் மறுத்து வந்தது. அகதிகளை இலங்கைக்கே திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியது.

இந்தியப் படகொன்றில் பயணம் செய்த அகதிகள், நேரடியாக இலங்கையில் இருந்து கிளம்பிச் சென்றனரா என்பது தெரியவில்லை. அவர்கள் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வசித்தவர்கள் என்றும் கருதப் படுகின்றது. அவர்கள் அவுஸ்திரேலியா சென்றாலும், அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. திருப்பி அனுப்பினால் அவர்கள் இலங்கைக்கு செல்வார்களா, இந்தியாவுக்கு செல்வார்களா என்பதிலும் தெளிவில்லை.

தமிழகத்தை சேர்ந்த "தமிழ் உணர்வுத்" தலைவர்களில் வைகோ மட்டுமே அகதிகளின் நெருக்கடியை தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதற்கிடையே, மலேசியா பினாங்கு மாநிலத்தின் பதில் முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, "அச்சே மாநில அரசுக்கு தான் எழுதிய கடிதத்தின் பின்னர் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக" அறிக்கை ஒன்றை விட்டுள்ளார்.

அகதிகளின் அவலத்தை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதாகவே, பேராசிரியர் ராமசாமியின் அறிக்கை அமைந்துள்ளது. ஆளும் கட்சியான DAP உறுப்பினர். மலேசிய அரசுக்கு மிகவும் வேண்டப் பட்டவர். அவர் தமிழ் தேசியவாதி வேஷம் போடும் கொடுமை சகிக்கவொண்ணாத ஒன்று. 

விடுதலைப் புலிகளை தடைசெய்த மலேசிய அரசின் பிரதிநிதி, தமிழ் தேசியம் பேசுவது ஒரு சிறந்த நகைச்சுவை. அவரது தமிழீழ ஆதரவு உண்மையானது என்று நம்பும், தமிழ் உணர்வாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த அறிக்கையில் அளவுக்கு அதிகமாக தமிழ் தேசிய வாடை அடிப்பதால், பல தமிழ் உணர்வாளர்களும் தமக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பேராசிரியர் இராமசாமியின் அறிக்கையில் இருந்து சில பகுதிகள்:

//பேராசிரியர் இராமசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த ஆச்சே அரசு!

ஆச்சே கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளுக்கு போதிய உணவு, மருத்துவ உதவிகளை அளித்து தஞ்சம் அளிக்கவேண்டும் என்று தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அகதிகளுக்கு தஞ்சம் அளித்துள்ள இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண அரசாங்கத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி நன்றி தெரிவித்தார்...

ஆச்சே மக்கள் மனிதாபிமான மிக்க மக்கள்; தங்களைப் போலவே, நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட ஈழத்தமிழ் மக்களை எப்பொழுதும் அரவணைப்பார்கள் என்று நம்புகின்றேன். இன்று, ஆச்சேயின் சுயாட்சி கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் இனப்படுகொலையால் நசுக்கப்பட்டு, இப்பொழுது அரசியல் வடிவம் கண்டுள்ளது. ஆச்சே மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு தமிழீழ மக்கள் ஆதரவாகவே இருந்துள்ளனர். இவ்வேளையில் அதனையும் ஆச்சே மக்கள் நினைத்துப் பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்’ என்று பேராசிரியர் இராமசாமி கூறியிருந்தார்....//

ஈழத்தமிழ் அகதிகள் ஒரு வார காலமாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். உணவின்றி நீரின்றி கஷ்டப் பட்டார்கள். இந்த அவலத்தை கண்ணுற்ற சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பதறித் துடித்த அளவிற்கு அச்சே மாநில அதிகாரிகள் நடந்து கொள்ளவில்லை. இந்தோனேசிய மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்த போதிலும், அச்சே மாநில அரசு அகதிகளை கரையொதுங்க அனுமதிக்க மறுத்தது.

கடந்த வருடம், இதே மாதிரி கடலில் தத்தளித்த ரோஹிங்கியா (மியான்மர்) அகதிகளை, அச்சே மாநில அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அந்தச் சம்பவத்தை சுட்டிக் காட்டி உதவி கோரின. ஆயினும், "ரோஹிங்கியா அகதிகள் நாடற்றவர்கள்... தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்லலாம்..." என்று அச்சே மாநில அரசு விளக்கம் அளித்திருந்தது. அச்சே மாநில பொலிஸ் தான், படகில் இருந்து குதித்து கரைக்கு வர முயன்ற அகதிகளை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து பயமுறுத்தியது.

பேராசிரியர் இராமசாமி குறிப்பிட்டது போன்று, "அச்சே மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் தேசியவாத மட்டத்தில் கொள்கை உடன்பாடு இருப்பதாக" அங்கு யாரும் கருதவில்லை. அச்சே தனி நாடாக வேண்டுமென்று ஒரு தேசியவாத விடுதலை இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியது உண்மை தான். புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்த அதே காலகட்டத்தில் தான், அச்சே விடுதலை இயக்கமும், இந்தோனேசிய அரசும் பேச்சுவார்த்தை நடத்தின. அவர்களுக்கும் நோர்வே தான் அனுசரணையாளர்.

இறுதியில், நோர்வேயின் மத்தியஸ்தத்தின் பின்னர், அச்சே விடுதலை இயக்கமும், இந்தோனேசிய அரசும் சமாதானப் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அந்த நேரத்தில் தான் சுனாமி ஆழிப் பேரலைகளினால் அச்சே மாநிலம் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. சமாதான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அப்போது நோர்வேயும் சர்வதேச சமூகமும், அச்சே உதாரணத்தை பின்பற்றி, புலிகளும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென்று அழுத்தம் கொடுத்திருந்தன. அப்போது, "அச்சே வேறு, தமிழீழம் வேறு. இரண்டையும் ஒப்பிட முடியாது" என்று புலிகளும், ஆதரவாளர்களும் வாதாடி வந்தனர்.

அச்சே தேசிய இயக்கத்திற்கும், தமிழீழ தேசிய இயக்கத்திற்கும் இடையில், எந்தக் காலத்திலும் ஒருமைப்பாடு இருக்கவில்லை. அதற்குக் காரணம் தேசியவாத கொள்கையில் உள்ள குறைபாடு. உலகில் உள்ள எல்லா தேசியவாதிகளும், "தமது மொழி பேசும், தம்மின மக்களை" பற்றித் தான் அதிகம் அக்கறைப் படுவார்கள். அவர்கள் பிற இன மக்களை கண்டுகொள்வதில்லை. மொழி கடந்த ஒருமைப்பாடு இருக்குமாக இருந்தால், அது மதம் சார்ந்ததாக இருக்கும்.

தமிழ் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், தமிழர்களுக்கு அப்பால் உலகில் ஏதும் இல்லை. இருப்பினும், தமிழ் தேசியவாதிகளில் பெரும்பான்மையானோர் (புலி ஆதரவாளர்கள் உட்பட), இந்து மத ஒருமைப்பாட்டின் அடிப்படையில், இந்தியா தமக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அச்சே தேசியவாதிகளும் அப்படித் தான். எந்த வித்தியாசமும் கிடையாது. அச்சே மொழி பேசும் மக்களைப் பற்றி மட்டுமே அவர்களது கவலை இருக்கும். அதற்கும் அப்பால், உலக இஸ்லாமியர்களைப் பற்றிக் கவலைப் படுவார்கள்.

இந்தோனேசியாவில், அச்சே மொழிச் சிறுபான்மையினருக்கும், ஜாவா மொழிப் பெரும்பான்மையினருக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பது உண்மை தான். ஆனால், அச்சே தனி நாட்டுக்கான போராட்டம் மதம் சார்ந்து எழுந்தது. ஜாவா மொழி பேசும் பெரும்பான்மையினரும், அச்சே மொழி பேசும் சிறுபான்மையினரும் இஸ்லாத்தை பின்பற்றும் மக்கள் தான். 

இந்தோனேசியாவில் முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே உள்ளனர். பெரும்பான்மையான முஸ்லிம்கள் மத சம்பிரதாயங்களை பின்பற்றுவதில்லை. அதற்கு மாறாக, அச்சே சிறுபான்மையினர் பெருமளவில் மத அடிப்படைவாதிகள். இஸ்லாமிய மத சம்பிரதாயங்களை கறாராக பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஷரியா சட்டம் கொண்டு வர வேண்டுமென்பது, அவர்களது ஆயுதப் போராட்டத்திற்கான முக்கியமான கோரிக்கையாக இருந்தது.

அச்சே மாநில அரசு, ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக் கொண்ட காரணம், அவர்கள் முஸ்லிம்கள் என்பது தான். தற்போது கரையொதுங்கியுள்ள தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு அப்படி எந்தக் காரணமும் இருக்கவில்லை. பேராசிரியர் இராமசாமி குறிப்பிடுவது போன்று, "பொதுவான தேசியவாத உணர்வு" எதுவும் உலகில் இல்லை. தேசியவாதிகளுக்கு இடையில் அப்படி ஓர் ஒருமைப்பாடு ஏற்படுவது சாத்தியமே இல்லை. அவரவருக்கு அவர்களது மொழியும், இனமும் தான் பெரிதாகத் தோன்றும். அல்லாவிட்டால் ஒரே மத ஒருமைப்பாடு இருக்க வேண்டும். அதற்குப் பெயர் தான் தேசியவாதம்.


அச்சே கடலோரம் கரையோதிங்கிய தமிழ் அகதிகள் பற்றி இந்தோனேசிய தொலைக்காட்சி செய்தி அறிக்கை: 

Friday, April 08, 2016

கிறிஸ்தவ ஈழம் கேட்டிருந்தால் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கிடைத்திருக்கும்!

மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் அகதி முகாமுக்குள் தஞ்சம் அடைந்த புதிதில், அடிக்கடி அல்லேலூயா சபைக் காரர்கள் வந்து போவார்கள். நாங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தங்கள் பிரசங்கத்தை கேட்குமாறு சொல்வார்கள். பைபிளை உயர்த்திக் காட்டி ஜெபித்து விட்டு, பிரசங்கமும் செய்து விட்டுப் போவார்கள். அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே, எப்படியோ சில ஜீவன்களை மதம் மாற்றி விட்டார்கள்.

 புதிய கிறிஸ்தவர்கள் பைபிளும் கையுமாக வந்து எமக்கு புத்தி சொல்வார்கள்: "இது கிறிஸ்தவர்களின் நாடு... இங்கே கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தான் முறையாகும்..."  தாங்கள் இப்போது கிறிஸ்தவராக மதம் மாறி விட்டதால், இலகுவாக வதிவிட அனுமதி கொடுப்பார்கள் என்று நம்பினார்கள்.

இன்னொரு முகாமில் எனக்கேற்பட்ட அனுபவம் இது. அகதிகள் விடயத்தில் அலசி ஆராயும் கிரிமினல் மூளை கொண்ட நண்பன் ஒருவன் இருந்தான். இந்துவாகப் பிறந்து விட்டதால் தனது தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சம் அவனுக்கு  வந்து விட்டது. "ச்சே... இந்த வீணாப் போன புலிகள் கிறிஸ்தவ ஈழம் கேட்டிருக்கலாம்" என்று அலுத்துக் கொண்டான்.

திடீரென ஒரு யோசனை சொன்னான். "வடக்கு கிழக்கில் கிறிஸ்தவ தமிழர்களுக்காக ஆயுதப்போராட்டம் நடத்தும் இயக்கம் இருப்பதாக ஒரு புரளியைக் கிளப்பி விடுவோம். அதற்காக துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து வைத்திருப்போம். அவற்றை ஆதாரமாகக் காட்டுவோம்."

நல்ல வேளை, அந்த நண்பனின் திட்டம் செயல்வடிவம் பெறவில்லை. அப்படியே எடுத்துக் காட்டி இருந்தாலும் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஈழத்தில் உண்மையிலேயே கிறிஸ்தவ ஆயுதக் குழு இருந்திருந்தால், அரசும், புலிகளும் சேர்ந்தே அதை அழித்திருப்பார்கள். 

இதை நான் இங்கே நினைவுகூரக் காரணம், இப்போதும் ஐரோப்பா கிறிஸ்தவ அகதிகளை மட்டுமே வரவேற்கும் என்று நம்பும் அப்பாவிகள் இருக்கிறார்கள். "இது நம்ம நாடு!" என்று சட்டைக் காலரை உயர்த்தி பெருமைப்படும் தமிழ் கிறிஸ்தவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஐரோப்பாவில் இருந்து கொண்டு சோஷலிசம் பேசினால், "ஏன் ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகளில் தஞ்சம் கோரவில்லை?" என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களது புத்திசாலித்தனத்தை அவர்களே மெச்சிக் கொள்ளட்டும்.

அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், "இந்துக்கள் இந்தியாவிலோ, நேபாளத்திலோ தான் அகதித் தஞ்சம் கோர வேண்டும். எதற்காக மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள்? தமிழர்கள் தமிழ்நாட்டில் மட்டுமே அகதித் தஞ்சம் கோர வேண்டும். எதற்காக ஐரோப்பிய மொழிகளை பேசும் வேற்றினத்தவரின் நாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள்?"

"வட அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன், சோஷலிசத்திற்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை" என்று இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகள் ஏராளம். அமெரிக்க தொழிலாளர்கள் தான், எட்டு மணி நேர வேலைக்காக இரத்தம் சிந்திப் போராடி, மேதினத்தை உலகிற்கு கொடுத்தார்கள். 

அமெரிக்க சோஷலிச பெண் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தின் பலன் தான் மார்ச் 8 ல் வரும் மகளிர் தினம்.  பிரிட்டனில் கம்யூனிசப் பெண்கள் அமைப்பு நடத்திய ஆயுதப் போராட்டத்தினால் கிடைத்த பலன் தான் பெண்களுக்கான வாக்குரிமை. 

உலக வரலாற்றில் முதலாவது கம்யூனிசப் புரட்சி பாரிஸ் நகரில் வெடித்தது. முதன் முதலாக பிரிட்டனில் தான் சோஷலிசத்திற்கான அரசியல் அமைப்பு உதயமானது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 

பிரச்சினை என்னவென்றால், இந்த உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நூறு தடவைகள் இடித்துரைத்தாலும் துளி கூட  மண்டையில் ஏறாது. எத்தனை தடவை புரிய வைத்தாலும் புரியாத மாதிரி நடித்துக் கொண்டிருப்பார்கள்.  நாய் வாலை நிமிர்த்த முடியாது. மேட்டுக்குடியை திருத்த முடியாது. 

மேற்கு ஐரோப்பிய நாடுகள், எமது நாடுகளை காலனிய அடிமைகளாக வைத்திருந்தன. தற்போதும் நவ காலனிய சுரண்டலுக்கு உள்ளாக்குகின்றன. அது தான் அகதிகள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்வதற்கான அடிப்படைக் காரணம். யுத்தம், மனித உரிமை மீறல்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்துப் பார்த்தால், அது கடந்த கால பிணைப்பை நினைவு படுத்துகின்றது. சோஷலிசம் பேசினால் சோஷலிச நாடுகளுக்கு செல்லுமாறு அறிவுரை கூறும் புத்திசாலிகள் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்களா?

எதனால் நாங்கள் இப்போதும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்கிறோம், பேசுகின்றோம்? எதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான் தமிழர்கள் பெரும்பான்மையாக குடியேறினார்கள்? பிரெஞ்சை இரண்டாம் மொழியாகப் பேசும் அல்ஜீரியர்களும், மொரோக்கர்களும் எதற்காக பிரான்சுக்கு சென்றார்கள்? ஸ்பானிஷ் பேசும் லத்தின் அமெரிக்க அகதிகள் எதற்காக ஸ்பெயின் சென்றார்கள்?

அகதிகள் மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதற்கு காலனிய கால பிணைப்பு முக்கியமானது. அது மட்டும் ஒரேயொரு காரணம் அல்ல. மேற்கத்திய நாடுகள் தாராள வாத கொள்கையை பின்பற்றும் ஜனநாயக நாடுகளாக காட்டிக் கொள்ள விரும்புகின்றன.

அதன் அர்த்தம், ஒருவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் கொள்கையை பின்பற்றினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை காரணமாக காட்டி நிராகரித்தால், அது பாரபட்சமான கொள்கையாக கருதப்படும். அதற்குப் பிறகு உலகத்திற்கு மனித உரிமைகள் பற்றி வகுப்பெடுக்க முடியாது. 

அண்மையில் கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் போலந்து, ஸ்லாவாக்கியா, ஹங்கேரி போன்ற நாடுகள், முஸ்லிம் அகதிகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடித்தன. அந்த நாடுகள் இந்த நிராகரிப்புக்கு பதிலாக ஆணித்தரமான காரணம் ஒன்றை தெரிவித்திருந்தன: "கிழக்கு ஐரோப்பிய நாடுகள், எந்தக் காலத்திலும் ஆப்பிரிக்காவிலோ, ஆசியாவிலோ காலனிகளை வைத்திருக்கவில்லை."

ஆகவே, இது காலனித்துவ கடந்த காலம் தொடர்பான பிரச்சினை. மேற்கத்திய நாடுகளுக்கும், முன்னாள் காலனிய நாடுகளுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. உள்நாட்டுப் பிரச்சினைகளில் அவற்றின் தலையீடு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. 

முதலில் நீங்கள் காலனிய கடந்த காலம் காரணமாக இன்னமும் தொடரும் இனப் பிரச்சனைகளை தீர்த்து வைத்து விட்டு வாருங்கள். அதற்குப் பிறகு சோஷலிசம் பேசலாமா, சோஷலிச நாடுகளுக்கு போகலாமா என்று கேள்வி கேட்கலாம். 

சோஷலிசம் பேசினால், நீங்கள் எந்தெந்த சோஷலிச நாடுகளுக்கு போகச் சொல்லி சொல்கிறீர்களோ, அவை பெரும்பாலும் காலனிய அடிமை நாடுகளாக இருந்துள்ளன. அவை மேற்கத்திய காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள். 

ஆதாரம் வேண்டுமா?
சீனா: பிரிட்டிஷ் காலனி.
வியட்நாம்: பிரெஞ்சுக் காலனி.
கியூபா: ஸ்பானிஷ் காலனி.
வட கொரியா : ஜப்பானிய காலனி.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்....

இப்போது சொல்லுங்கள். உங்களது பிரச்சினை என்ன? நீங்கள் அடிமைகளா அல்லது சுதந்திரமான மனிதர்களா? நவ காலனிய ஆதிக்கத்தின் கீழ், மேற்கத்திய காலனிய எஜமானின் காலை நக்கிப் பிழைக்கும் அடிமை வாழ்வு சிறந்ததா? அல்லது சுதந்திரமாக எதிர்த்து நிற்கும் சோஷலிச மக்கள் குடியரசு சிறந்ததா? 

Saturday, October 17, 2015

அகதிகளை வரவேற்கும் ஜெர்மனி, உண்மை நிலவரம் என்ன?


தற்போது, ஐரோப்பிய நாடுகளை சுற்றி புதிய "பெர்லின் மதில்கள்" எழுப்பப் பட்டு விட்டதால், அகதிகள் வருகையும் குறைந்து விட்டது. உலகத் தொலைக்காட்சிகளும் தமது கவனத்தை வேறு பக்கம் திருப்பி விட்டன. ஐரோப்பிய நாடுகளின் கனவான்கள் "தாராள மனப்பான்மையுடன்" அகதிகளை வரவேற்றதாக பிரச்சாரம் செய்து ஓய்ந்து விட்டார்கள்.

ஜெர்மனியில் புதிதாக திறக்கப் பட்ட அகதி முகாம்கள் பல எரிக்கப் பட்டன. ஒரு சம்பவத்தில் அகதி ஒருவர் பலியானார். நெதர்லாந்தில் புதிதாக அகதி முகாம்கள் அமைப்பதற்கு, சில இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உள்ளூராட்சி சபைகளில் அகதிகளுக்கு முகாம் அமைப்பது பற்றிய விவாதங்கள் நடந்த நேரம், உள்ளூர் மக்கள் கூட்டம் நடக்க விடாமல் தடுத்து இடையூறு செய்தார்கள். வெளிநாட்டவர்கள் பற்றிய அறியாமையால் ஏற்படும் அச்சவுணர்வை வெளிப்படுத்தினார்கள்.

மேற்படி தகவல்களை எந்தவொரு சர்வதேச ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. (உள்நாட்டு ஊடகங்களில் மட்டுமே தெரிவிக்கப் பட்டன.) அது மட்டுமல்ல, தஞ்சம் கோரிய அகதிகளில், மிகக் குறைந்த அளவினரை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு, எஞ்சிய அகதிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுவார்கள். மீறி இருந்தால், விசாவைப் பறித்து விடுவார்கள். தடுப்பு முகாம்களுக்குள் வைத்திருந்து திருப்பி அனுப்புவார்கள். அந்தத் தகவல்களும் எந்த ஊடகத்திலும் வரப் போவதில்லை.

"மேற்கு ஐரோப்பியர்களுக்கு எவ்வளவோ தாராள மனசு!"

ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன.
(பார்க்க:

பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

பிரிட்டனை விட ஜெர்மனி பெருமளவு அகதிகளை ஏற்றுக் கொள்கின்றது என்பது உண்மை தான். பெரும்பாலான தமிழர்கள், காலனிய அடிமைத்தனம் காரணமாக பிரிட்டனுக்கு செல்ல விரும்புவதுண்டு. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளை சேர்ந்த அகதிகள், பிற ஐரோப்பிய நாடுகளை விட பிரிட்டனை விரும்புவார்கள். 

பிரான்சின் கலே பகுதியில், யூரோ சுரங்க ரயில் பாதைக்கு அருகில் முகாமிட்டுள்ள அகதிகள் பிரிட்டனுக்கு ஒரு தலையிடியாக இருந்தனர். சுரங்க ரயில் பாதை மூலம் நடந்து செல்ல முயன்ற சில அகதிகள் விபத்தில் சிக்கி மரணமடைந்தனர். அப்படி இருந்தும், பிரிட்டிஷ் அரசு, தனது நாட்டிற்குள் அகதிகளை வர விடாமல் தடுப்பதற்காக, பெருமளவு நிதியை பாதுகாப்புக்கு செலவிட்டது.

பிரிட்டனுக்கு செல்லும் அகதிகள் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்த நிலையில் தான், கிரேக்க தீவுகளில் ஆயிரக் கணக்கான சிரிய அகதிகள் வந்திறங்கினார்கள். அவர்கள் கிரீசில் இருந்து, மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக ஜெர்மனிக்கு சென்றனர்.

துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் என்ற குழந்தையின் படம், உலக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த பின்னர் தான், ஜெர்மனி எல்லைகளை திறந்து விட்டது. இதன் மூலம், ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல், தன் மீதான நல்லெண்ணத்தை உயர்த்திக் கொண்டமை தனிக் கதை.

பிரிட்டனோடு ஒப்பிடுகையில், ஜெர்மனியில் அகதிகளுக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. இத்தாலியில் கூட, அகதிகளுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் கிடைப்பதில்லை. அதனால், லிபியா மூலம் இத்தாலி வந்தடைந்த ஆயிரக் கணக்கான அகதிகள், ஜெர்மனி போன்ற வட ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

ஜெர்மனி மட்டுமல்ல, நெதர்லாந்து, பெல்ஜியம், மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், அகதிகளை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கின்றன. யாரையும் தெருவில் படுக்க விடுவதில்லை. படுப்பதற்கு கட்டிலும், மூன்று வேளை உணவும், கைச் செலவுக்கு பணமும் கொடுக்கின்றன.

முதலில், மேற்கு ஐரோப்பிய நாடுகள், தஞ்சம் கோருவோரை அகதிகள் என்று அழைப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெறும் "தஞ்சக் கோரிக்கையாளர்கள்" மட்டும் தான், அகதிகள் அல்ல! அதாவது, அவர் அகதியா இல்லையா என்பது தெரியாத நிலையில் இருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு அகதிக்கும் தனித்தனியாக விசாரணை நடக்கும். சிலநேரம் இரண்டு, மூன்று தடவைகள் விசாரிப்பார்கள். அகதி என்பதை நிரூபிக்குமாறு ஆதாரம் கேட்பார்கள். (அரசியல் காரணங்களினால் பாதிக்கப் பட்டவராக இருக்க வேண்டும்.)

அகதிகளுக்கான விசாரணைக் காலகட்டம் மாதக் கணக்கு அல்லது வருடக் கணக்காகலாம். விசாரணைகளின் முடிவின் பின்னர், குறைந்தது பத்து சதவீதமானோரை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். (ஒன்றில் "உண்மையான" அகதியாக அங்கீகாரம், அல்லது வதிவிட அனுமதி) அவர்களை மட்டும் நாட்டில் தங்க அனுமதிப்பார்கள்.

எப்போதுமே, பெரும்பாலான அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படுவது வழமை. அந்த துரதிர்ஷ்டசாலிகள், தாயகம் திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தப் படுவார்கள். உத்தரவை மீறி தங்கி இருந்தால், சட்டவிரோதிகள் ஆக்கப் படுவார்கள். அதற்குப் பின்னர், திடீரென ஒரு நாள் பொலிஸ் வந்து விலங்கு மாட்டி நாடு கடத்தி விடும்.

இருபது வருடங்களுக்கு முன்னர், ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்ச மனு நிராகரிக்கப் பட்ட அகதி, இன்னொரு ஐரோப்பிய நாட்டில் மீண்டும் தஞ்சம் கோர முடிந்தது. ஆனால், டப்ளின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், அது சாத்தியமில்லாமல் போனது. அது மட்டுமல்ல, ஏற்கனவே "பாதுகாப்பான" ஐரோப்பிய நாட்டில் வந்திறங்கிய அகதியை, அந்த நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று டப்ளின் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது. பல வருடங்களாக, ஜெர்மனி வந்த அகதிகளில் எத்தனையோ பேர், முதலில் வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப் பட்டிருக்கிறார்கள். தற்போது வந்து சேர்ந்துள்ள சிரிய அகதிகளும் திருப்பி அனுப்பப் பட மாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

இருப்பினும், அகதிகளின் விண்ணப்பம் பரிசீலிக்கப் படும் வரையில், தற்காலிகமாக வசிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அகதிகள் தங்குவதற்கான தற்காலிக இருப்பிடங்கள், வசதிகளற்ற முகாம்கள் ஆகும். அவை பெரும்பாலும் நகரங்கள், கிராமங்களில் இருந்து தொலைவில் இருக்கும். சில இடங்களுக்கு பஸ் போக்குவரத்து கூட இருக்காது. அருகில் உள்ள கடைக்கு செல்வதற்கும், நான்கு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கலாம்.

சிலநேரம், பழைய சிறைச்சாலைகளில் கூட, அகதிகளை தங்க வைக்கிறார்கள். நகர்ப் பகுதிகளில், புதிதாக வரவிருக்கும் அகதி முகாம்களுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆங்காங்கே நடக்கிறது. ஜெர்மனியில் சில இடங்களில், அகதிகள் குடியேறுவதற்கு முன்னரே கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். நெதர்லாந்தில் ஒரு அகதி முகாமுக்கு அருகில், பெரிய சத்தம் போடும் நைட்ரேட் வெடிகுண்டு வீசினார்கள்.


மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், சில தவிர்க்கவியலாத காரணங்களினால் தான், பெருமளவு அகதிகளை நாட்டுக்குள் வர விட்டனர். அதே நேரம், எல்லைகளில் சோதனைகள் தீவிரமடைந்ததன. "பயண முகவர்கள்" என அழைக்கப்படும், அகதிகளை கடத்திக் கொண்டு வருவோர், நூற்றுக்கணக்கில் கைது செய்யப் பட்டனர். அதன் மூலம், அகதிகள் வருகையை தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

பெரும்பாலான அகதிகள் ஜெர்மனியை நோக்கி வந்தாலும், விரைவில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினாலும் பங்கிடப் படவுள்ளனர். பல வருட காலமாக, ஐரோப்பிய நாடுகளை அவ்வாறு செய்வதற்கு ஜெர்மனி வற்புறுத்தி வந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மட்டுமே அகதிகள் பங்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும், துருக்கிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இனிமேல் புதிதாக அகதிகள் வருவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. துருக்கி மூலமாக பெருமளவு அகதிகள் வந்த படியால், அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டுள்ளனர். அதன் படி, துருக்கியில் உள்ள அகதி முகாம்களில் வசதிகள் அதிகரிக்கப் படும். அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் துருக்கி மொழி கற்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப் படும். இதற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை, ஐரோப்பிய ஒன்றியம் செலவிடவுள்ளது.

அதன் அர்த்தம், துருக்கி அகதிகளுக்கான பாதுகாப்பான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது. இதன் மூலம், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லவிருக்கும் அகதிகளின் நோக்கம் நிறைவேறப் போவதில்லை. அவர்கள் இனிமேல் துருக்கி போன்ற எல்லையோர நாடுகளிலேயே தங்க வைக்கப் படுவார்கள்.

Sunday, September 13, 2015

தமிழ் அகதிகளை வெறுக்கும் நாஸிகளை போற்றும் தமிழ் வலதுசாரிகள்!


ஐரோப்பிய நாடுகளில், தமிழராகிய எம்மைப் போன்ற, வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக இனவெறியை கக்குவோர், "தீவிர வலதுசாரிகள்" அல்லது "நவ நாஸிகள்" என்று அழைக்கப் படுகின்றனர். 

வெள்ளையின மேலாண்மைக் கொள்கை கொண்ட நிறவெறியர்கள். தமிழர், முஸ்லிம், ஆப்பிரிக்க, ஆசிய குடியேறிகளுக்கு எதிராக இனத்துவேஷ கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஐரோப்பாவுக்கு மட்டுமே உரிய தனித்துவமான பிரச்சினை அல்ல. தமிழர்களில் சிலரும் அதே கருத்துக்களை எதிரொலிக்கிறார்கள்!

பெரும்பாலும் ஹிந்துத்துவா சிந்தனை கொண்ட, இஸ்லாமியரை வெறுக்கும் தமிழர்கள், ஐரோப்பிய நாஸிகளின் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றைப் பகிர்ந்து கொள்வதில், அவர்களுக்கு எந்தவிதமான வெட்கமும் கிடையாது. நவ நாஸிகளின் இனத்துவேஷ கருத்துக்களை, அப்படியே தமிழில் மொழிபெயர்த்து கூறி வருகின்றனர்.

சிலநேரம், தமது இனவாத சுயரூபத்தை மறைப்பதற்காக, ஈழத் தமிழர் மேல் கரிசனை கொண்டவர்கள் போன்றும் நடிப்பார்கள். ஆகையினால், தமிழ் மக்கள் இப்படியானவர்கள் குறித்து விழிப்புடனும், எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை எழுதுகிறேன். நாஸிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மீண்டும் ஒரு உலகப் போருக்கே இட்டுச் செல்லும்.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயரும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். இது தான் சந்தர்ப்பம் என்று, ஐரோப்பிய நவ நாஸிகள் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். "சிரிய அகதிகள் மத்தியில், ஏராளமான ISIS போராளிகள் மறைந்திருப்பதாகவும், ஐரோப்பாவில் குழப்பங்களை உண்டாக்கப் போவதாகவும்" பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

இது தொடர்பாக, பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்ட தகவல் ஒன்று, உலகம் முழுவதும் உள்ள நாஸிகளால் (தமிழ் நாஸிகள் உட்பட) பகிர்ந்து கொள்ளப் பட்டது. (பார்க்க : Riot breaks out at overcrowded refugee camp in Germany after resident tore pages out of the Koran and threw them in the toilet: http://www.dailymail.co.uk/news/article-3204828/Riot-breaks-overcrowded-refugee-camp-Germany-resident-tore-pages-Koran.html)

ஜெர்மனியில் ஓர் அகதி முகாமில் நடந்த அசம்பாவிதம் தொடர்பான விளக்கத்தை பின்னர் எழுதுகிறேன். தற்போது, அந்தத் தகவலை வெளியிட்ட டெய்லி மெயிலின் யோக்கியதை என்னவென்று பார்ப்போம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், ஹிட்லரை ஆதரித்து வந்த பத்திரிகை அது! 

ஹிட்லரை சந்தித்துப் பேசிய டெய்லி மெயில் பத்திரிகை உரிமையாளர் Lord Rothermere

டெய்லி மெயில் ஸ்தாபகரான Lord Rothermere, ஹிட்லரை நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளார். அவருக்கும் ஹிட்லருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது. அது மட்டுமல்ல, அந்தக் காலத்தில் பிரிட்டனில் இயங்கிய பாசிசக் கட்சியை ஆதரித்தார். அது கடந்த கால வரலாறு என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அண்மையில் கூட, டெய்லி மெயில் பத்திரிகை பிரெஞ்சு பாசிசக் கட்சியான Front National ஐ ஆதரித்தது! (பார்க்க: http://www.dailymail.co.uk/debate/article-2132611/French-elections-2012-Marine-Le-Pen-responsible-vote-France.html)

பிரிட்டனில் வந்து குவிந்த யூத அகதிகளுக்கு எதிராக,
இனவாதம் கக்கிய டெய்லி மெயில் பத்திரிகை 

ஜெர்மனியில் நாஸி ஆட்சி ஏற்பட்ட ஆரம்ப காலங்களில், பல்லாயிரக் கணக்கான ஜெர்மன் யூதர்கள், ஐரோப்பிய நாடுகளில் அகதித் தஞ்சம் கோரினார்கள். பிரிட்டனிலும் யூத அகதிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது இதே டெய்லி மெயில் பத்திரிகை, யூத அகதிகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. அதே நேரம், நாஸி கட்சியையும், பிரிட்டிஷ் பாசிஸ்ட் கட்சியையும் பாராட்டி எழுதிக் கொண்டிருந்தது!  

தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள், அடிக்கடி மேற்கோள் காட்டும் பிரிட்டிஷ் டெய்லி மெயில் பத்திரிகை, முன்பு யூத அகதிகளுக்கு எதிராக இனவாதம் கக்கியது. தற்போது அதே பத்திரிகை, முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக இனவாதம் கக்குவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? இந்த உண்மை தெரியாமல், ஒரு வலதுசாரி இனவாதப் பத்திரிகையான டெய்லி மெயில் தகவலுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? அதில் வரும் செய்திகளை நம்ப முடியுமா? 

டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்ட, ஜெர்மன் அகதி முகாமில் நடந்த "கலவரத்தின்" பின்னணி என்னவென்று பார்ப்போம். ஜெர்மனியில் சூல் (Suhl) எனும் இடத்தில், அகதி முகாம் ஒன்றில் நடந்த அசம்பாவிதம் பற்றிய தகவலை, வலதுசாரிகள் தமது இனவெறிப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு நடந்த சம்பவம் இது தான். பெருந்தொகையான முஸ்லிம் அகதிகளை கொண்ட அகதி முகாம் ஒன்றில், ஓர் ஆப்கான் அகதி (அவரும் முஸ்லிம் தான்) பொது இடத்தில் குரானின் பக்கங்களை கிழித்து வீசியுள்ளார்.

அதன் விளைவாக, அங்கு திரண்ட இருபது பேர் கொண்ட அகதிகள் கும்பல், ஆப்கான் அகதியை விரட்டிச் சென்றது. அவனுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அடைக்கலம் கொடுத்த படியால், சீற்றமுற்ற கும்பல் முகாம் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளது. இந்தத் சம்பவத்தை பெரிது படுத்தியுள்ள வலதுசாரி ஊடகங்கள், ஐரோப்பிய வெள்ளை - இனவாதிகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்திற்கு தீனி போட்டுள்ளன.

உண்மையில் கலாச்சார அதிர்ச்சி காரணமாக, இது போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதுண்டு. எண்பதுகளின் இறுதியில், ஜெர்மனி முகாம்களில் வசித்து வந்த தமிழ் அகதிகளும், சிங்கள அகதிகளும், சிறு சச்சரவு காரணமாக கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டனர். சுவிட்சர்லாந்தில், பொது தொலைபேசி கூண்டுக்குள் ஆடு வெட்டிய தமிழர்கள் பற்றிய தகவல், சுவிஸ் ஊடகங்களில் பிரபலமாக அடிபட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ் அகதிகளே இரண்டாகப் பிரிந்து, புங்குடுதீவு- யாழ்ப்பாணம் கோஷ்டி மோதல் நடந்தது.

பத்து வருடங்களுக்கு முன்னர், எனக்குத் தெரிந்த தமிழ் அகதி ஒருவர், நெதர்லாந்தில் நடந்த, தமிழ் விளையாட்டுக் கழகங்களின் நாடளாவிய விளையாட்டுப் போட்டி ஒன்றுக்கு சென்றுள்ளார். அந்தப் போட்டிகளை புலிகள் அல்லது புலி ஆதரவு அமைப்புகள் நடத்தினார்கள். பெருமளவு பார்வையாளர்களும் புலி ஆதரவாளர்கள் தான்.

அப்போது முகாமில் வசித்து வந்த குறிப்பிட்ட தமிழ் அகதி, விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த நேரம், சிங்கக்கொடி போட்ட டி-சேர்ட் அணிந்து சென்றார். அதைக் கண்டு கிளர்ந்தெழுந்த புலி ஆதரவாளர்கள் கும்பலாக சேர்ந்து, அந்த இளைஞனை அடித்து உதைத்து சட்டையைக் கிழித்துள்ளனர். இத்தனைக்கும் அடி வாங்கிய இளைஞன் ஒரு முன்னாள் புலிப் போராளி!

இந்தச் சம்பவம் நடந்து, ஒரு வருடத்திற்குப் பின்னர், அடி வாங்கிய அகதிக்கு நிரந்தர வதிவிட அனுமதி கிடைத்தது. ஆகவே, ஜெர்மனியில் நடந்த அசம்பாவிதத்திற்கு காரணமான ஆப்கான் அகதியும், தனது சுயநலத்திற்காகவே அதைச் செய்திருக்க வாய்ப்புண்டு. தற்போது ஜெர்மனியில் தனக்கு அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியாகி விட்டது என்று, அந்த ஆப்கான் அகதி உள்ளூர மகிழ்ந்திருப்பான்.

ஆகவே, அகதி முகாம்களில் நடக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் மதச் சாயம் அல்லது இனச் சாயம் பூசுவது அபத்தமானது. ஒன்றில் அகதிகளின் சுயநலம் காரணமாக, அல்லது கலாச்சார அதிர்ச்சி காரணமாக நடக்கும் கலவரங்கள் தொடரப் போவதில்லை. அகதிகள் ஐரோப்பிய ஜனநாயக விழுமியங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு கொஞ்சக் காலம் எடுக்கும்.

ஐரோப்பிய நவ நாஸிகளும், தமிழ் நாஸிகளும் ஒரு கார்ட்டூன் படத்தை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர். ஐரோப்பிய நாடொன்றில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில், துருக்கியில் இருந்து கிரீசுக்கு படகில் சென்ற அகதிகள், விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அனவைரும் அறிந்ததே. ஒரு தடவை, அயிலான் என்ற மூன்று வயது குழந்தையும் பரிதாபகரமாக மரணமடைந்த படியால் அது உலகின் மனச்சாட்சியை உலுக்கி இருந்தது.

உண்மையில் ஐரோப்பாவை பிடித்தாட்டிய அகதிகளின் நெருக்கடியின் மத்தியில் அந்த மரணம் சம்பவித்த படியால் தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. அந்த சம்பவத்திற்குப் பின்னர், பெரும்பான்மையான ஐரோப்பிய மக்கள், அகதிகள் வருவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈழத் தமிழ் அகதிகள் உட்பட, பொதுவாக எந்த நாட்டு அகதியும், ஐரோப்பா வருவதை   விரும்பாத, நவ நாஸிகளுக்கு அது உவப்பானதாக இருக்குமா? ஐரோப்பாவுக்குள் பெருந்தொகை அகதிகள் வருகிறார்களே என்ற காழ்ப்புணர்வின் காரணமாக, ஒரு கார்ட்டூன் வெளியிட்டார்கள்.


"நீ ரொம்ப கொடுத்து வைத்தவன் அயிலான். நாங்களும் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளே. ஆனால் உலகம் எங்களைக் கண்டுகொள்ளவேயில்லை." என்று மத்திய கிழக்கு போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவக் குழந்தைகள், ஆயிலானைப் பார்த்து சொல்வதைப் போன்று அந்தக் கார்ட்டூனை வரைந்திருந்தார்கள்.

சிரியா மற்றும் ஈராக்கில் நடந்த போர்களில், கொல்லப் பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களும் அல்ல. ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்பவர்கள் எல்லாம் முஸ்லிம்களும் அல்ல. இந்த உண்மையை புரிந்து கொள்ளாத தமிழ் நாஸிகள், அதே கார்ட்டூனில் சிறு மாற்றம் செய்து, கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பதிலாக "ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகள்" என்று மாற்றி எழுதினார்கள்.

இங்கேயும் அதே லாஜிக் உதைக்கிறது. அந்தச் சம்பவத்தில் இறந்தது ஒரு "ஈழத் தமிழ் அயிலான்" என்றால், இவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்? முதலில் அயிலான் என்ற அந்தக் குழந்தை போரில் மரணமடையவில்லை. சட்டவிரோதமாக விசா இல்லாமல், கள்ளத் தோணியில் கிரீஸ் சென்ற நேரம் தான் மரணம் சம்பவித்தது. இவ்வாறு ஏற்கனவே பல ஈழத் தமிழ்க் குழந்தைகளும் ஐரோப்பிய எல்லைகளை கடக்கும் நேரம் மரணமடைந்துள்ளன.

இந்த உண்மையை மறைத்து, திடீரென ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகள் மீதும், சிரியா- ஈராக் போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகள் மீதும், பரிவு காட்டும் நாஸிகளின் "கழிவிரக்கம்" மெய்சிலிர்க்க வருகின்றது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.

மத்திய கிழக்கு போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகளுக்காக ஐரோப்பிய நவ நாஸிகள் அழுகிறார்கள். அதே மாதிரி, ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக தமிழ்நாட்டு நாஸிகள் அழுகிறார்கள். ஜெர்மன் மொழி பேசினாலும், தமிழ் மொழி பேசினாலும் நாஸிகள் நாஸிகள் தான். ஒரே கொள்கை கொண்டவர்கள் தான். 

Norwegian Defence League (http://norwegiandefenceleague.com/என்ற சிறியதொரு நவ நாஸி அமைப்பு, தமது பேஸ்புக் பக்கத்தில் அந்தக் கார்ட்டூனை வெளியிட்டு இருந்தது. இங்கிலாந்தில் பல வருட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் இனவெறி அமைப்பான, English Defence League (EDL https://en.wikipedia.org/wiki/English_Defence_League) இன் சகோதர அமைப்பு. வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நவ நாஸி அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

EDL உறுப்பினர்கள், ஒஸ்லோ நகரில் 90 பேரை படுகொலை செய்த வெள்ளை நிறவெறி பயங்கரவாதி Breivik உடன் தொடர்பு வைத்திருந்தனர். ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாஸிகளின் ஆதரவும், அனுதாபமும் தேவையில்லை. அவர்கள் தமது இனவெறி அரசியலுக்கு, ஈழத் தமிழரை பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. 

ஐரோப்பாவின் அகதிகள் நெருக்கடியை திசை திருப்பும் நோக்கில், அகதிகளை கேலி செய்யும் வகையில் சிலர் தொடர்ந்தும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சில தமிழ் தீவிர வலதுசாரிகள், ஈழப் போரில் பலியான தமிழரின் பேரில், ஈழத் தமிழ் அகதிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை அவர்கள் தெரிந்து கொண்டு செய்கிறார்களா? அல்லது தெரியாமல் செய்கிறார்களா?

இந்தத் தீவிர வலதுசாரிகள் யாரிடமும் அகதிகளாக ஐரோப்பாவுக்கு சென்ற அனுபவம் இல்லை என்பது, அவர்களுடனான உரையாடல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. ஐரோப்பிய எல்லைகளை கடக்கும் பொழுது கொல்லப் பட்ட குழந்தைகளை பற்றி கவலைப் படாமல், உள்நாட்டுப் போர்களில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இது ஐரோப்பிய எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்கான நடவடிக்கையாகவே எனக்குத் தெரிகின்றது.


மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் ஈழப் போராகினும், சிரியாப் போராகினும், ஐரோப்பிய மேலாதிக்க வல்லரசுகளின் ஆயுத விற்பனையை பெருக்குவதற்கும், பொருளாதார சுரண்டலுக்கு வழி திறந்து விடுவதற்காகவும் நடந்து வருகின்றன. போர்களின் விளைவாக உருவாகும் அகதிகள் ஐரோப்பாவை சென்றடையும் பொழுது, அவர்களை நிராகரித்து திருப்பி அனுப்புகின்றன.

இந்த உண்மையை மக்களுக்கு தெரிய விடாமல் தடுக்கும் நோக்கில் சிலர் இயங்கி வருகின்றனர். ஐரோப்பாவுக்கு செல்லும் வழியில் இறந்த படியால் பிரபலம் அடைந்த அயிலான் என்ற குழந்தையை வைத்து இந்த "அகதி எதிர்ப்புப் பிரச்சாரம்" நடக்கிறது.

ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள், சிரியாப் போரில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். அதே நேரம், தீவிர தமிழ் வலதுசாரிகள், ஈழப் போரில் கொல்லப் பட்ட தமிழ் குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஈழக் குழந்தைகள், சிரியாக் குழந்தை அயிலானிடம், "நாங்களும் உன்னைப் போல போரில் கொல்லப் பட்டவர்கள்" என்று கூறுவது போன்று ஒரு கார்ட்டூன் தயாரித்து, தவறான தகவலை பரப்புகிறார்கள். உண்மையில், அயிலான் போரில் கொல்லப் படவில்லை! 

ஐரோப்பிய நாடொன்றில் அகதித் தஞ்சம் கோருவதற்காக, விசா கிடைக்காமல், சட்டவிரோதமாக எல்லை கடக்கும் நேரத்தில் விபத்தில் கொல்லப் பட்டான். போரில் கொல்லப் படுவதற்கும், கடலில் நடந்த படகு விபத்தில் கொல்லப் படுவதற்கும் இடையிலான வித்தியாசம் இவர்களுக்குத் தெரியாதா? தெரியும். வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

இவர்களது உண்மையான நோக்கம் என்ன? ஈழம், சிரியாவில் நடக்கும் போரில் சிக்கி, எத்தனை இலட்சம் பேர் மாண்டாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால், ஒருவர் கூட ஐரோப்பாவுக்கு அகதியாக செல்லக் கூடாது. ஐரோப்பிய எஜமான் அவர்களுக்கு காலால் இட்ட பணியை, தலையால் செய்து முடித்துள்ளனர்.

ஐரோப்பிய கைக்கூலிகள், ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது போதும். அவர்கள் உண்மையிலேயே ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்றால், ஐரோப்பிய நாடுகளின் விசா கட்டுப்பாடுகளை தளர்த்தச் சொல்லிக் கேட்கலாமே? ஒவ்வொரு ஐரோப்பிய நாடும், குறிப்பிட்ட அளவு தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாமே?

இன்றைக்கும் எத்தனை இலட்சம் ஈழத் தமிழ் அகதிகள் தமிழ் நாட்டு முகாம்களில் இருக்கின்றனர் என்று தெரியுமா? அவர்களுக்கு எப்படி அகதி அந்தஸ்து, வதிவிட உரிமை, பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி யோசியுங்கள். அதை விட்டு விட்டு, ஐரோப்பாவுக்கு தமிழ் அகதிகள் செல்வதை தடுக்கும் நோக்கில், அகதிகளுக்கு எதிரான பதிவுகளை இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Friday, September 11, 2015

ஈழக் குழந்தைக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலித் தமிழ் உணர்வாளர்கள்


"சிரிய குழந்தைக்காக உலகமே அழுகிறது, ஈழக் குழந்தைக்காக யாரும் அழவில்லை..." என்று, இப்போது சிலர் பிரச்சாரம் செய்யக் கிளம்பி உள்ளனர். இவர்கள் உண்மையில் தமிழ் உணர்வாளர்களும் அல்ல, ஈழக் குழந்தை மீது கரிசனை கொண்டவர்களும் அல்ல.

மேற்கத்திய அரசுக்களின் இரட்டை வேடத்தை மூடி மறைப்பது மட்டும் அவர்களது நோக்கம் அல்ல. சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களை தனிமைப் படுத்தி, அவர்களை அறியாமையில் வைத்திருக்கும் உள் நோக்கில் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப் படுகின்றது. 

முதலில் நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை அவதானிக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீனம் போன்ற, மூன்றாமுலகை சேர்ந்த, மத்திய கிழக்கு மக்களின் பிரச்சினை ஊடகங்களின் கவனத்தைப் பெறும் நேரத்தில் "மட்டும்" தான், இவர்கள் இது போன்ற வாதங்களை அடுக்குவார்கள்.

அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் பிரச்சினை என்றால் இவர்களும் சேர்ந்து அழுவார்கள். உதாரணத்திற்கு, கொசோவோவுக்காக உலகமே அழுத நேரம் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அப்போது யாருக்கும் ஈழப்போரில் இறந்து கொண்டிருந்த குழந்தைகள் நினைவுக்கு வரவில்லை!

2000 ம் ஆண்டு, அமெரிக்காவில் கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு சம்பவம் நடந்தது. எலியான் என்ற ஐந்து வயது கியூபா நாட்டுக் குழந்தை, தாயுடன் அகதியாக அமெரிக்காவை நோக்கி படகில் சென்று கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக, படகு கடலில் மூழ்கியதால், தாய் உட்பட பல அகதிகள் இறந்து விட்டனர். எப்படியோ குழந்தை எலியான் உயிர் தப்பிப் பிழைத்து மியாமிக் கரையை வந்து சேர்ந்து விட்டான். 

மியாமியில் வசிக்கும் தாய் மாமன், எலியானை பராமரித்து வந்தாலும், கியூபாவில் வசிக்கும் தந்தை, மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினர். அதனால் அமெரிக்க அரசு தலையிட்டு, குழந்தையை தாய் மாமனிடம் இருந்து பிரித்து, கியூபாவுக்கு அனுப்பி விட்டது. (Elián González affair; https://en.wikipedia.org/wiki/Eli%C3%A1n_Gonz%C3%A1lez_affair)

அமெரிக்கா - கியூபா முரண்பாடு காரணமாக, ஒரு குடும்பப் பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினையாகி, அன்று "உலகமே ஒரு கியூபக் குழந்தைக்காக அழுது கொண்டிருந்தது". அப்போது நமது போலித் தமிழ் உணர்வாளர்கள் என்ன செய்தார்கள்? "ஒரு கியூபக் குழந்தைக்காக" அவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அந்த நேரத்தில் ஈழப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பல ஈழக் குழந்தைகள் செத்து மடிந்து கொண்டிருந்தனர். அப்போது யாருக்கும் கியூபக் குழந்தையையும், ஈழக் குழந்தையையும் ஒப்பிடத் தோன்றவில்லையே? அது ஏன்?

ஈழக் குழந்தைகள் குறித்து அக்கறைப் படாமல், மேற்கத்திய நாடுகள் பாராமுகமாக இருந்தமையை காட்டுவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஒரு தடவை, ஈழப் போர் நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், 2007 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் உள்ள சுற்றுலா ஸ்தலமான அல்கார்வே பகுதியில், மடலின் என்ற ஒரு பிரிட்டிஷ் குழந்தை காணாமல் போனது. அன்று அது பிரதானமான செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் பேசப் பட்டது. (Disappearance of Madeleine McCann; https://en.wikipedia.org/wiki/Disappearance_of_Madeleine_McCann)

ஈழப் போரில் இறந்து கொண்டிருந்த ஈழக் குழந்தைகளை பற்றி, ஒரு வார்த்தை பேசாத மேற்கத்திய ஊடகங்கள், காணாமல்போன ஒரு பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுதன. உலகம் முழுவதையும் அழ வைத்தன. ஏனென்றால், அது ஒரு மேலைத்தேய பணக்கார நாட்டில் பிறந்த அதிர்ஷ்டக்காரக் குழந்தை! 

அப்போது நமது "தமிழ் உணர்வாளர்" யாரும் பொங்கியெழுந்து, "பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுகிறீர்களே! ஈழக் குழந்தைக்காக அழுதீர்களா?" என்று கேட்கவில்லை! எப்படிக் கேட்பார்கள்? அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வெள்ளை எஜமானுக்கு கோபம் வராதா?


கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை கடலுக்குள் தள்ளி விட்ட மிருக காருண்யம் பற்றி, மேற்கத்திய ஊடகங்கள் முக்கிய கவனமெடுத்து தகவல் தெரிவிக்கும். ஆனால், விலங்குகள் மீது காட்டும் அன்பு, பாசத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, மேற்கத்திய நாட்டவர்கள் போரில் கொல்லப் பட்ட ஈழக் குழந்தைகள் விடயத்தில் காட்டவில்லை.

துருக்கிக் கடற்கரையில், சிரிய அகதிக் குழந்தை இறந்து ஒதுங்கிய சம்பவம் நடப்பதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு சிங்கத்திற்காக அழுது வடித்தார்கள். (https://en.wikipedia.org/wiki/Cecil_(lion))

சிம்பாப்வே வன விலங்கு சரணாலயத்தில், ஒரு அமெரிக்க பல் வைத்தியர் சிசில் என்ற சிங்கத்தை சுட்டுக் கொன்ற சம்பவம், அமெரிக்கர்களை கிளர்ந்தெழ வைத்தது. "சிங்கத்தை கொன்ற படுபாவி! இரக்கமற்ற கொலைகாரன்!" என்றெல்லாம் அந்த வைத்தியரை திட்டித் தீர்த்தார்கள். நேரில் கண்டால் என்ன செய்திருப்பார்களோ தெரியாது. 


இதே அமெரிக்கர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் அமெரிக்கா வந்திருந்த நேரம் என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை. 

"தமிழர்களை கொன்ற படுபாவிகள்! இரக்கமற்ற கொலைகாரர்கள்!" என்று எந்தவொரு அமெரிக்கரும் முணுமுணுக்கக் கூட இல்லை! அது சரி, நமது "தமிழ் உணர்வாளர்கள்" அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? "அமெரிக்கர்களுடன் நாங்களும் சேர்ந்து, அந்த சிங்கத்திற்காக அழுவோம் வாருங்கள்!" என்று அமெரிக்காவுக்கு விசுவாசமான அடிமைகளாக நடந்து காட்டினார்கள்.


முதலில் "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" அடிப்படையிலேயே தவறானது. உலகில் யாரும் "சிரியக்  குழந்தைகளுக்காக," அல்லது "சிரியாவுக்காக" அழவில்லை! இப்போதும் கூட சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் அகப்பட்டு குழந்தைகள் மரணிக்கின்றன. உலகில் யாருக்குமே அதைப் பற்றிக் கவலையில்லை! "சிரியாவில் இன்றைக்கு நடந்த குண்டுவீச்சில், இத்தனை குழந்தைகள் கொல்லப் பட்டனர்...." என்று எந்த ஊடகமாவது அறிவித்திருக்கிறதா? மேற்கத்திய நாடுகளின் இதே கள்ள மௌனம் தான், ஈழக் குழந்தைகள் விடயத்திலும் பாராமுகமாக இருந்துள்ளது.

அப்படியானால், எதற்காக "அந்த சிரியக் குழந்தை" பற்றிய தகவல் முக்கியத்துவம் பெற்றது? முதலில், அது ஒரு "சிரியக்" குழந்தை என்பதற்காக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அது ஓர் அகதிக் குழந்தை என்பதற்காக எல்லோரும் அழுதார்கள். ஐரோப்பியரின் உணர்வுகளை தட்டி எழுப்பும் விடயம் எல்லாம் ஊடகங்களுக்கு பரபரப்பான தகவல்கள் தான். அதைப் பற்றி பேசுவதற்கு முன்னர், ஐரோப்பிய அரசியல் நிலவரம் பற்றி ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

தற்போது அகதிகளின் நெருக்கடி ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஓர் ஐரோப்பிய நாட்டில் வசித்தால் அந்த நிலைமையை புரிந்து கொள்ள முடியும். ஐரோப்பிய பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளில், தினந்தோறும் அகதிகள் தான் தலைப்புச் செய்தியாக இடம்பெறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்கள், ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தில் கூட, அகதிகள் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி விவாதங்கள் நடக்கின்றன. ஆயிரக் கணக்கில் ஐரோப்பாவுக்குள் வந்து குவியும் அகதிகள் பிரச்சினை, ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், அய்லான் என்ற அகதிக் குழந்தை கடலில் மூழ்கி இறந்தது.

ஐரோப்பிய மக்கள் அனைவரும் ஒரு முனைப்பாக அகதிகள் பிரச்சினை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், "சிரியக் குழந்தையின்" மரணம் ஐரோப்பியரின் மனச்சாட்சியை பிடித்து உலுக்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னர்,  பெரும்பான்மையான ஐரோப்பியர்கள், பொதுவாக அனைத்து அகதிகளுக்கும் எதிராக பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது, ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவதையும் அவர்கள் விரும்பவில்லை.
"கிறிஸ்தவ குழந்தைகளுக்காக யாருமே அழவில்லை." என்று கவலைப்படும், ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின் இனவாதக் கார்ட்டூன். 

இந்த உண்மை தெரியாமல், "சிரியக் குழந்தைக்காக உலகமே அழுகிறது. ஈழக் குழந்தைக்காக எவன் அழுதான்?" என்று சிலர் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று உங்களது "தமிழினப் பற்றை" விளம்பரப் படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதே சிரியக் குழந்தை, சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டிருந்தால், "உலகம் அழுதிருக்குமா"? 

அய்லான் என்ற அந்தக் குழந்தை, சிரியாவில் கொபானி என்ற இடத்தில் பிறந்தது. அது பிறக்கும் பொழுதே யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அய்லான் குர்டியின் குடும்பத்தினர், குர்திய சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். சிரியாவில் உள்ள குர்து சிறுபான்மை இனம், இலங்கையில் தமிழருடன் ஒப்பிடத் தக்கது. 

மூன்று வருடங்களுக்கு முன்னர், அதாவது அய்லான் பிறந்த நேரம், குர்து மக்களின் பிரதேசமான கொபானியை (சிரிய- முள்ளிவாய்க்கால் என்று நினைத்துக் கொள்ளுங்கள்) கைப்பற்றுவதற்காக ISIS படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தன. அப்போது பெருந்தொகையான கொபானி வாசிகள் அகதிகளாக வெளியேறி துருக்கியில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அங்கிருந்து ஐரோப்பா செல்வதற்காக கிளம்பிய பொழுது தான், கிரேக்க கடல் எல்லையில் அய்லானின் மரணம் நிகழ்ந்தது.

போலித் தமிழ் உணர்வாளர்களே! இப்போது சொல்லுங்கள். ஒரு "தமிழ் அய்லானும்" அவனது குடும்பமும், முள்ளிவாய்க்கால் முற்றுகையில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு அகதியாக செல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்து வெளியேறி, ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கோருவதற்காக, படகில் பயணம் செய்த பொழுது, அந்தத் தமிழ்க் குழந்தை கிரேக்க கடல் எல்லையில் மூழ்கி இறந்து விடுகின்றது. 

அப்படி ஒரு சம்பவம் நடந்து, அது உலக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்றால், "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" சரியாக இருந்திருக்கும். இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஈழப் போர்க் களத்தில் இறந்த குழந்தையை, ஐரோப்பிய கடலில் இறந்த அகதிக் குழந்தையுடன் ஒப்பிடுகின்றீர்கள். ஈழக் குழந்தைகளும், ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்கின்றன என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றீர்கள்.

ஐரோப்பிய நாடுகள் எதுவும், அகதித் தஞ்சம் கோருவோருக்கு இலகுவான வழி வகைகளை செய்து கொடுக்கவில்லை. ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில் அகதித் தஞ்சம் கோரலாம் என்று சட்டம் எழுதி வைத்திருகிறார்கள். ஆனால், நடைமுறையில் எதுவுமே நடப்பதில்லை.

எந்தவொரு ஈழத் தமிழ் அகதியும், கொழுப்பு அல்லது புது டில்லியில் உள்ள ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில், அகதித் தஞ்சத்திற்கு விண்ணப்பித்து விட்டு, ஐரோப்பாவுக்கு செல்லவில்லை. அது சாத்தியமல்ல என்பது அவர்களுக்கும் தெரியும்.

அதிகம் பேசுவானேன். சம்பந்தப் பட்ட சிரிய குழந்தையின் குடும்பமும், கனடாவில் தஞ்சம் கோருவதற்கு விண்ணப்பித்து இருந்தது. ஆனால், கனடிய குடிவரவு அமைச்சு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் தான், சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்டு மரணம் சம்பவித்தது.

ஆகவே, இங்கே முக்கியமான பிரச்சினை ஐரோப்பாவை சுற்றிலும் உள்ள கண்ணுக்குப் புலப்படாத கோட்டை மதில்கள். வறிய நாடுகளில் இருப்பவர்களுக்கு விசா கொடுக்க மறுக்கும் பாகுபாடு. ஏன் எந்தவொரு "தமிழ் உணர்வாளரும்"(?) இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை?

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இருக்கும் ஒரே வழி, சட்டவிரோதமாக விசா இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைவது தான். அதைச் செய்ய முயன்ற பொழுது தான், சிரியக் குழந்தையான அய்லானும் அவனது குடும்பமும் கடலில் மூழ்கி இறந்துள்ளன. ஈழம், சிரியா எங்கிருந்து வந்தாலும்,   ஐரோப்பாவில் அவர்கள் அகதிகள் தான். 

ஆகவே, "தமிழ் உணர்வாளர்களே"! நீங்கள் உண்மையிலேயே ஈழக் குழந்தைகளில் கரிசனை கொண்டவர்கள் என்றால், "ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி, தாராள மனதுடன் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடுங்கள். அது தான் உங்களது தமிழ் உணர்வு நேர்மையானது என்பதை எடுத்துக் காட்டும். உண்மையான பிரச்சனைகளை மூடி மறைத்துக் கொண்டு, "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" செய்து கொண்டிருந்தால், அது உங்களுடைய "தமிழ் உணர்வு" போலியானது என்பதைத் தான் நிரூபிக்கும்.


Tuesday, September 08, 2015

சிரிய அகதிகள் பற்றி வலதுசாரி அறிவிலிகளுக்கு இலகுவான விளக்கம்

மேற்கு ஐரோப்பாவில் என்ன நடந்தாலும், அது உலகச் செய்தியாகி விடும். அந்த வகையில், தற்போது சிரியாவில் இருந்து பெருந்தொகையில் வந்து கொண்டிருக்கும் அகதிகள் பிரச்சினையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐரோப்பாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் விவாதிக்கப் படும் பேசு பொருளாகி உள்ளது.

இதற்கிடையே, அகதிகள் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் தீவிர வலதுசாரிகளின் பதிவுகளையும் ஆங்காங்கே காணக் கூடியதாக உள்ளது. வலதுசாரிகளான சில தமிழர்களும், ஐரோப்பிய நிறவெறியர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை உள்வாங்கி எதிரொலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், அவற்றிற்கு பதிலளிக்கும் வகையில், இந்த விளக்கக் குறிப்புகளை எழுத வேண்டியுள்ளது. 


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம் நாடுகளுக்கு செல்லவில்லை?


அகதிகள் தாமாகவே ஒரு நாட்டிற்கு சென்று அடைக்கலம் கோருவதற்கும், குறிப்பிட்ட ஒரு நாடு தானாகவே முன்வந்து அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கும் இடையிலான வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அகதிகளை தமக்குள் பங்கிட்டுக் கொள்வதற்கு, செல்வந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விவாதிப்பது போன்று, சவூதி அரேபியா போன்ற செல்வந்த வளைகுடா நாடுகளும் முன்வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது உலக நாடுகளின் அரசுக்கள், தமக்குள் தீர்மானத்துக் கொள்ள வேண்டிய விடயம். அதை அகதிகள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் தாம் விரும்பிய நாட்டிற்குத் தான் செல்வார்கள். 

சவூதி அரேபியா அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை ஓர் இராஜதந்திர பிரச்சினையாக பார்க்காமல், "சிரிய அகதிகள் ஏன் அந்த நாட்டிற்கு செல்லவில்லை?" என்று அகதிகளை நோக்கிக் கேட்பது முட்டாள்தனமானது. சிரிய அகதிகள், ஐரோப்பாவுக்கு செல்லாமல், முஸ்லிம் நாடுகளில் தஞ்சம் கோர வேண்டும் என்று யாரும் உத்தரவிட முடியாது. ஐரோப்பிய தீவிர வலதுசாரிக் கட்சிகள், நவ நாஸி குழுக்கள் பிரச்சாரம் செய்யும் கருத்துக்களை, சில தமிழ் வலதுசாரிகளும் வாந்தியெடுப்பது அருவருக்கத் தக்கது.

சிரிய உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் எழுந்த அகதிகள் நெருக்கடி முஸ்லிம் நாடுகளைத் தான் முதலில் பாதித்திருந்தது. துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய மூன்று அயல்நாடுகளும், இன்றைக்கும் இலட்சக் கணக்கான சிரிய அகதிகளை வைத்திருக்கின்றன. அநேகமாக, துருக்கி அகதி முகாம்களில் தங்கி இருந்த அகதிகள் தான், கிரீஸ், மாசிடோனியா, செர்பியா, ஹங்கேரி வழியாக மேற்கு ஐரோப்பாவுக்கு சென்றனர். 

அதுவும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அகதிகளே அவ்வாறு சென்றனர். ஏனென்றால், சட்டவிரோதமாக கிரீஸ் நாட்டிற்கு செல்லும் வரையில், பயண முகவர்கள் அல்லது கடத்தல்காரர்களின் உதவி தேவைப் பட்டது. அதற்கு ஆயிரக் கணக்கான அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே அந்தளவு செலவளிக்கும் தகுதியை கொண்டிருந்தனர்.


  • சிரிய அகதிகள் எதற்காக முஸ்லிம்களின் புனித பூமியான சவூதி அரேபியாவுக்கு செல்லவில்லை?


ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின்
இனவாதப் பிரச்சாரம் 
அகதிகள் என்ன காரணத்திற்காக தாயகத்தை விட்டு வெளியேறினார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத அறிவிலிகளால் தான், இது போன்ற மடத் தனமான கேள்விகளை கேட்க முடியும். முதலில் சிரிய உள்நாட்டுப் போர் பற்றி ஓரளவேனும் அறிந்து கொண்டு பேச வேண்டும். 

ஐந்து வருடங்களுக்கு முன்னர், போர் நடப்பதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்த சிரியாவின் நிலைமை என்ன? பெண்கள் கூட மிகவும் சுதந்திரமாக திரிந்த, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றிய நாடாக இருந்தது. அனைத்து பிரஜைகளும் அரபு மொழி பேசினாலும், பல்வேறு பட்ட சமூகங்களாக பிரிந்திருந்தனர். பல்வேறுபட்ட மதங்களை, அல்லது மதப் பிரிவுகளை பின்பற்றினார்கள். சிரியா ஒரு சர்வாதிகாரியால் ஆளப்பட்ட மதச்சார்பற்ற நாடாக இருந்தது.

உள்நாட்டுப் போரின் பின்னர், கிளர்ச்சிக் குழுக்கள் மத்தியில் கடும்போக்கு வஹாபிஸ்டுகளின் கை ஓங்கியது. அவர்கள் சவூதி அரேபியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வஹாபிச- இஸ்லாம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள், பெண்கள் அடக்கப் பட்டனர். 

மேற்கத்திய பாணியில் நவ நாகரிக உடை உடுத்திப் பழகிய பெண்களை, முகத்தில் இருந்து கால் வரை மூடும் கருநிற அங்கி அணிய வைத்தார்கள். கல்வியில் சிறந்த, விமானிகளாக கூட பணியாற்றிய பெண்களை, பாடசாலைக்கு செல்ல விடாமல், வீட்டுக்குள் முடங்க வைத்தார்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள் ஆண்களையும் அடக்கி வைத்தார்கள். மதுபானம் தாராளமாக கிடைத்து வந்த நாட்டில், அதைத் தடை செய்தார்கள். மீறுவோர் கடுமையாக தண்டிக்கப் பட்டார்கள். சினிமா அல்லது காதல் பாட்டுக்கள் கேட்க முடியாது. தாடி வளர்க்க வேண்டும், இப்படிப் பல கட்டுப்பாடுகள். 

மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெரும்பாலான ஆண்கள், வாழ்க்கையில் ஒரு நாளேனும் பள்ளிவாசலுக்கு சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் ஐந்து வேளையும் தொழுகைக்கு வர வேண்டுமென கட்டாயப் படுத்தப் பட்டனர்.

இதிலே கவனத்தில் எடுக்கப் பட வேண்டிய முக்கியமான விடயம் உள்ளது. சிரியாவில் பெரும்பான்மை சமூகமாக உள்ள சன்னி முஸ்லிம்களுக்கு மட்டும் தான் அத்தகைய கட்டுப்பாடுகள். வேறுவிதமாக சொன்னால், அவர்கள் மட்டும் தான் இஸ்லாமிய தேசத்தில் வாழும் தகைமை கொண்டவர்கள்.

வஹாபிச மத அடிப்படைவாதிகள், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கி, இனச் சுத்திகரிப்பு செய்தனர். ஷியா இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், அலாவித்துகள் ஒன்றில் படுகொலை செய்யப் பட்டனர், அல்லது வெளியேற்றப் பட்டனர்.

அன்பான வலதுசாரிகளே! இப்போது சொல்லுங்கள். மேற்குறிப்பிட்ட அடக்குமுறைகளை கண்டு அனுபவித்த பின்னரும், எந்த மடையனாவது சவூதி அரேபியாவுக்கு சென்று அகதித் தஞ்சம் கோருவானா? அடுப்பில் இருந்து நெருப்புக்குள் விழுந்தது போல இருக்காதா? சிரியாவில் உருவான இஸ்லாமிய தேசத்தில், சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற, சிலநேரம் அதைவிட மோசமான, அடக்குமுறை ஆட்சி தான் நடக்கிறது என்பது இப்போது தெரிந்திருக்கும். 

அது மட்டுமல்ல, இயற்கை வளம் நிறைந்த, சிரியா நாட்டின் மேற்குப் பகுதியில் தான் மக்கள் செறிவாக வாழ்கிறார்கள். கிழக்குப் பகுதியில் யாரும் வசிப்பதில்லை. ஏனென்றால், அது வெறும் பாலைவனம். எப்படியாவது "முஸ்லிம்களின் புனித பூமியான" சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டுமென்ற குறிக்கோளுடன், அகதிகள் பாலைவன சுடுமணலில் பயணம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

அவர்கள் முதலில் ஈராக்கிற்கு சென்று, அங்கிருந்து தான் சவூதி அரேபிய செல்ல முடியும். ஆனால், இந்த இடத்தில் அன்பிற்குரிய முட்டாள் வலதுசாரிகள் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். அந்தப் பிரதேசம் முழுவதும், ISIS என்ற இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள "இஸ்லாமிய தேசம்" ஆகும்.

யார் இந்த ISIS? சவூதி அரேபியாவில் உள்ளதைப் போன்ற வஹாபிச சர்வாதிகார ஆட்சியை சிரியாவில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. காரணத்தை புரிந்து கொள்வது மிகவும் எளிது. அதன் தலைமையில் உள்ள பெரும்பாலான உறுப்பினர் சவூதி அரேபியர்கள்! குறிப்பிட்ட அளவு ஈராக்கியர்களும் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அந்த ஈராக்கியர்கள் ஏற்கனவே ஈராக்கில் சவூதி அரேபிய நிதியுதவி பெற்று அல்கைதா என்ற பெயரில் இயங்கியவர்கள். 

சவூதி அரேபியர்களையும், ஈராக்கியர்களையும் தலைவர்களாக கொண்ட ISIS இயக்கம், சிரியர்களை அகதிகளாக சவூதி அரேபியா செல்ல விட்டு விடுமா? "நீங்கள் எதற்கு சவூதி அரேபியாவுக்கு செல்ல வேண்டும்? நாங்கள் உங்களுக்காக ஒரு குட்டி சவூதி அரேபியாவை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறோம்?" என்று கேட்பார்கள்.
ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், அகதிகளின் வெளியேற்றத்தை தடுப்பதற்கான பிரச்சார சுவரொட்டிகள். குறிப்பாக, மருத்துவர்கள் போன்ற மத்தியதர வர்க்கத்தினரை நோக்கி எழுதப் பட்டுள்ளது. 

"குட்டி சவூதி அரேபியாவில்" இருந்து வெளியேறும் சன்னி முஸ்லிம் பிரிவினர், ஆசாத் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு செல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிரிய அரசு அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது. 

ஈழப்போர் நடந்த காலங்களில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து செல்லும் தமிழர்கள், சிறிலங்கா அரசினால் எந்தளவு துன்புறுத்தப் பட்டார்கள் என்பதை நான் இங்கே சொல்லத் தேவையில்லை. அதே பிரச்சினை தான், சன்னி முஸ்லிம்களுக்கும் ஏற்படும்.

முஸ்லிம் அகதிகள், "குட்டி சவூதி அரேபியாவான" இஸ்லாமிய தேசத்தில் இருந்து வெளியேற விரும்பினால், அதற்கு வசதியான வழி, லெபனானும், துருக்கியும் தான். குறைந்தது ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாட்டிற்கு செல்லாமல், ஆயிரம் கிலோமீட்டர் பாலைவனத்திற்குள் பயணம் செய்து, எந்த மடையனும் சவூதி அரேபியாவுக்கு போக மாட்டான். 

"துரதிர்ஷ்ட வசமாக", லெபனான், துருக்கி ஆகிய "முஸ்லிம்" நாடுகள், ஐரோப்பாக் கண்டத்திற்கு அருகாமையில் உள்ளன. அகதிகள் ஐரோப்பா செல்வது வலதுசாரிகளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, புவியியல் அமைப்பை மாற்றியமைக்க முடியுமா? டியர் வலதுசாரீஸ்! துருக்கி இருக்குமிடத்தில் சவூதி அரேபியாவை வைக்கச் சொல்லி, கடவுளிடம் மனுக் கொடுத்துப் பாருங்கள்!

அது சரி, வலதுசாரிகளே! உங்களிடமும் ஒரு கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. சிரியாவில் வாழும் முஸ்லிம்கள் அல்லாத பிற மதச் சிறுபான்மையினரான, கிறிஸ்தவர்கள், அலாவித்துகள், டுரூசியர்கள், யூதர்கள், இவர்களும் முஸ்லிம் நாடுகளுக்குத் தான் அகதிகளாக செல்ல வேண்டுமா? 

என்னது? சிரியாவில் வேற்று மதங்களை சேர்ந்த மக்களும் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? முதலில் ஓர் உண்மையை அறிந்து கொள்ளுங்கள். விவிலிய கதைகள் நடந்த நாடுகளில் சிரியாவும் ஒன்று. அங்கே இப்போதும் பண்டைய கால கிறிஸ்தவ மதப் பிரிவுகள் உள்ளன. அது மட்டுமல்ல, ஏசு கிறிஸ்துவின் தாய்மொழி என கருதப்படும் அரமைக் மொழி பேசும் மக்களும் சிரியாவில் தான் வாழ்கின்றனர்.

கிறிஸ்தவ மதம் பல பிரிவுகளாக பிரிந்துள்ளது மாதிரி, இஸ்லாமிய மதமும் பிரிந்துள்ளது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கம் மாதிரி இஸ்லாத்தில் சன்னி மார்க்கம் உள்ளது. அதிலிருந்து பிரிந்தது ஷியா மார்க்கம். 

கத்தோலிக்கத்தில் இருந்து புரடஸ்தாந்துகாரர்கள் பிரிந்து சென்றதும், பின்னர் அதிலிருந்து பெந்தெகொஸ்தே, யெகோவா என்றேல்லாம் பிரிவுகள் உண்டானதும் தெரிந்திருக்கும். அதே மாதிரி, ஷியாவில் இருந்து பிரிந்து, அலாவி, டுரூசி போன்ற பல பிரிவுகள் உண்டாகின. அந்தப் பிரிவுகள் எல்லாம் சிரியாவில் உள்ளன.

அமெரிக்காவில் சில பெந்தெகொஸ்தே - புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள், தம்மை தனியான மதமாக ஸ்தாபித்துக் கொண்டனர். குறிப்பாக, யெகோவா, மொர்மன் சபைகளை சொல்லலாம். அதே மாதிரி, சிரியாவில் அலாவிகள், டுரூசியர்கள் பெரும்பான்மை மதங்களினால் வேற்று மதத்தவராக நடத்தப் பட்டனர். 

குறிப்பாக அலாவி பிரிவினர், இந்தியாவில் இருப்பது மாதிரி தாழ்த்தப் பட்ட சாதியினரின் நிலையில் இருந்தனர். அவர்கள் பல நூறாண்டுகளாக தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப் பட்டனர். இன்றைய அதிபர் பஷாரின் தந்தை ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில், அலாவித்துக்கள் ஷியா மதப் பிரிவினராக உயர்த்தப் பட்டனர். ஈரானுடன் ஏற்பட்ட நெருக்கமான அரசியல் - இராஜதந்திர உறவுகள் அதற்கு உதவின.

சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான கோலான் குன்றுப் பகுதியில் டுரூசியர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தம்மை தனியான மதமாக கருதிக் கொள்கிறார்கள். அவர்களுக்கென தனியான மதச் சடங்குகள், வழிபாட்டு முறைகள் உள்ளதால், பெரும்பான்மை இஸ்லாமியர்கள் அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதில்லை. கோலான் குன்றுகளில் ஒரு பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அதனால், கணிசமான அளவு டுரூசியர்கள் இஸ்ரேலுக்குள் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அவர்கள் இஸ்ரேலிய பிரஜாவுரிமை பெற்று, இஸ்ரேலிய இராணுவத்திலும் பணியாற்றுகிறார்கள். 

ஸோ... வலதுசாரீஸ்... சிரிய டுரூசிய அகதிகளை, இஸ்ரேலுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கலாமே? இஸ்லாத்துடன் எந்த சம்பந்தமுமில்லாத சிரிய கிறிஸ்தவர்கள், சிரிய டுரூசியர்கள் கூட முஸ்லிம் நாடுகளுக்கு, குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு அகதிகளாக செல்ல வேண்டுமா? திஸ் இஸ் டூ மச். வாட்ஸ் த ப்ராப்ளம் வலதுசாரீஸ்?



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: