Showing posts with label கேள்வி பதில். Show all posts
Showing posts with label கேள்வி பதில். Show all posts

Thursday, December 24, 2020

தேடல் 2020: கத்தோலிக்க "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான நேர்காணல்

நெதர்லாந்து கத்தோலிக்க திருச்சபையினரால் வெளியிடப் படும் "ஆன்மீக உதயம்" என்ற காலாண்டிதழில் (மார்கழி 2020), "தேடல்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரமான எனது நேர்காணல் (பகுதி - இரண்டு):


 

  • 1) இந்தவருடம் ஆரம்பத்தில் தொடங்கிய அமைதியின்மை இன்னும் முடிவடையவே இல்லை இதனை பற்றிய தங்களின் பார்வை என்ன ? 

அமைதியின்மை என்பதன் மூலம், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். இருபத்தியோராம் நூற்றாண்டில் உலக நாடுகள் எல்லாம் முன்னெப்போதும் இல்லாதவாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பாக உள்ளன. சர்வதேச விமான, கப்பல் போக்குவரத்து முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுவே உலகம் முழுவதும் வைரஸ் தொற்றுவதற்கான அடிப்படைக் காரணம். அதனால் தான் வைரஸ் தொற்றியவரை தனிமைப் படுத்தல் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. ஆனால், சாதாரண மக்களுக்கு இந்த விடயங்கள் தெரிய வருவதில்லை. அதனால் யாரோ ஒருவருக்கு நோய் தொற்றி விட்டால் அவரைக் கண்டு மிரளும் போக்கு அதிகமாக உள்ளது. இது சாதாரண மனித இயல்பு எனலாம். ஒருவருக்கு நோய் வந்தால் உறவினர்களே ஓடி விடுவார்கள். இது மனித உறவுகளில் விரிசல்களையும் உண்டுபண்ணுகிறது.  


  • 2) கொரோனா என்னும் ஒரு தொற்று நோய் உலகத்தையே மிகவும் பயபீதியில் வைத்திருக்கின்றது இதன் பின்னணி எப்படியானது என்பதைப்பற்றிய தங்கள் பார்வை என்ன? 

ஐரோப்பாவில் நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்பானிஷ் காய்ச்சல் எனும் தொற்று நோய் பல கோடி மக்களை பலி கொண்டது. அதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பிளேக் நோய் காரணமாக ஐரோப்பிய மக்கட்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்தது! ஆகவே அவற்றுடன் ஒப்பிட்டால் கொரொனோ தொற்று நோய் ஓரளவு கட்டுக்குள் வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்னர் எபோலா வைரஸ் பல ஆப்பிரிக்க நாடுகளை தாக்கியது. அதன் இன்னொரு வடிவம் தான் கோவிட் எனும் கொரோனா வைரஸ். இன்றுள்ள மனித இனத்தில் எவருக்குமே இதை தடுப்பதற்கான நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பது தான் முக்கியமான விடயம். நூறு அல்லது இருநூறு வருடங்களுக்கு முன்பு சாதாரண சளிக்காய்ச்சல் வந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது யாரும் அதைக் கண்டு அச்சமடைவதில்லை. அதற்குக் காரணம், சாதாரண சளிக்காய்ச்சல் கொண்டு வரும் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நோயெதிர்ப்புச் சக்தி எமது உடல்களில் வந்து விட்டது. அது போன்றதொரு நிலைமை கொரோனா வைரஸ் விவகாரத்திலும் ஏற்படும். இங்கே நான் இன்னொரு உண்மையையும் குறிப்பிட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் மக்கள் யாவும் ஒரே மனித இனம் என்பதை கொரோனா நிரூபித்துள்ளது.  


  • 3) உலகில் பெருகிவரும் மக்கள் தொகையை குறைக்க குறிவைத்த நோய் எனவும் குறை கூறுகின்றனர் இது நியாயமா ? 

இரண்டாவது கேள்விக்கான பதிலே இதற்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நோயெதிர்ப்புச் சக்தி இல்லாத நிலையில் மக்கள் பலியாவதும் நடந்து கொண்டிருக்கும். இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சின்னம்மை நோய் வந்து யாரும் சாவதில்லை. ஆனால், அந்தமான் போன்ற தீவுகளில், வெளியுலகில் இருந்து முற்றிலும் தனிமைப் படுத்தப் பட்ட நிலையில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு சின்னம்மை நோய்க் கிருமி தொற்றினால் மரணிக்கும் வாய்ப்பு அதிகம். காரணம், அவர்களது உடலில் அதற்கான நோயெதிர்ப்புச் சக்தி இல்லை.  


  • 4) ஒரு சில நாடுகளில் இந்த நோய் தாக்கம் மிகவும் குறைவு ஒரு சில நாடுகளில் மிகவும் அதிகம் ஏன் இவ்வாறு ஒரு சில நாடுகளில் மனிதர் சாப்பிடும் உணவில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதா அல்லது மனித நிறங்களில் தொற்று மாறுபடுகின்றதா? 

இது எதுவுமே காரணம் அல்ல. முதலாவது கேள்விக்கு அளித்த பதிலை மீண்டும் ஒரு தடவை வாசித்து பார்க்கவும். இன்றைய உலகம் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக வந்து விட்டது. நாடுகளுக்கு இடையிலான மனிதர்களினதும், பொருட்களினதும் போக்குவரத்துகள் அதிகரித்து விட்டன. அதைப் பாவித்து வைரஸ் பரவுவதையும் தடுக்க முடியாது. அதனால் தான், ஒவ்வொரு நாடும் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொள்ளத் தொடங்கியது. குறிப்பிட்ட காலம் வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப் பட்டன. Lock down என்று ஊரடங்கு சட்டம் போட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தார்கள். இருப்பினும் சில நாடுகளில் பெருமளவில் தொற்றி, மரணங்கள் சம்பவித்தமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்திருக்கலாம். உதாரணத்திற்கு, வைரஸ் பரவிய ஆரம்ப காலங்களில் விமான நிலையங்களில் எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை. மேலும், அமெரிக்கா, பிரித்தானியா போன்ற பணக்கார நாடுகளில் கூட மருத்துவ மனைகளில் பெரும் வசதிக் குறைபாடுகள் காணப்பட்டன. இத்தாலியில் மருத்துவ சேவை முற்றாக சீர்குலைந்தது. அதற்கு மாறாக, முன்கூட்டியே அவதானமாக பல விதமான கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் வைரஸ் தொற்று குறைந்து காணப்பட்டது. உதாரணத்திற்கு வியட்நாமில் ஒருவர் கூட சாகவில்லை! சுறுசுறுப்பான நாகரிக உலகில் இருந்து ஒதுங்கி இருந்த, தொலைதூரத்தில் இருந்த பிரதேசங்களிலும் வைரஸ் தொற்றவில்லை. உதாரணத்திற்கு பசுபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள தீவுகளை குறிப்படலாம். 


  • 5) யுத்தம் குறைவடைந்தாலும் அமைதியான யுத்தம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. இதன் பொருளாதார தாக்கம் எப்படியானது? 

அமைதியான யுத்தம் என்பதை பனிப்போர் என்றும் குறிப்பிடலாம். அதாவது ஒரு கெடுபிடியான, பதற்றமான நிலைமை. சிலநேரம் ஒரு தசாப்த காலமாக, ஒரு துப்பாக்கி வேட்டு கூட தீர்க்கப் பட்டிருக்காது. ஆனால், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்காத அமைதியான காலத்தில் பொருளாதார பிரச்சினைகள் வெளித் தெரிய வருகின்றது. யுத்தம் நடந்த காலத்திலும் பொருளாதார பிரச்சினைகள் இருந்திருக்கும். ஆனால், யாரும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எல்லோருடைய கவனமும் யுத்தத்தின் மேல் குவிந்திருக்கும். சிலநேரம், யுத்தகால பொருளாதாரம் இதை விடக் கொடூரமான தாக்கத்தை உண்டுபண்ணி இருக்கலாம். ஆனால், அது தற்காலிகமானது என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. அதற்கு மாறாக அமைதிக் கால பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்படும் தாக்கம் எமது வாழ்க்கையை நிரந்தரமாகப் பாதிக்கப் போகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. சில நேரம் அரசுகள், நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை மறைப்பதற்காக மக்கள் மீது யுத்தத்தை திணிப்பதுண்டு. ஆனால், ஒரு தடவை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டால், மீண்டும் ஒரு யுத்த நிலைக்கு செல்வதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். அவ்வாறான அமைதியான சூழ்நிலையில் பொருளாதார தாக்கம் மக்களால் அதிகமாக உணரப்படும். 

 

 *****

பகுதி ஒன்று - நெதர்லாந்து "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான எனது நேர்காணல்  

Wednesday, April 22, 2020

நெதர்லாந்து "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான எனது நேர்காணல்

நெதர்லாந்து கத்தோலிக்க திருச்சபையினரால் வெளியிடப் படும் "ஆன்மீக உதயம்" என்ற காலாண்டிதழில், "தேடல்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரமான எனது நேர்காணல்:



1)நெதெர்லாந்து நாட்டில் சமயப் பின்னணி அன்றும் இன்றும் எப்படி இருக்கிறது?

சமயம் என்பதை விட சமய நிறுவனம் என்பது தான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நெதர்லாந்தும் ஒரு காலத்தில் "மத அடிப்படைவாத" நாடாக இருந்தது தான். அதன் அர்த்தம் மக்கள் ஏதாவதொரு மத நிறுவனத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். ஒரு புறம் கத்தோலிக்க- கிறிஸ்தவ நிறுவனமும், மறுபுறம் புரட்டஸ்தாந்து- கிறிஸ்தவ நிறுவனமும் தமது உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அவற்றிற்கு கட்டுப்பட மறுத்தவர்கள் சமூக நீக்கம் செய்யப் பட்டனர். அவ்வாறு சமூக நீக்கம் செய்யப் பட்டவருடன் சொந்தக்காரர்களும் தொடர்பு வைக்க முடியாது. மேலும் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து சமூகங்களுக்கு இடையிலான தொடர்பாடலும் மிகக் குறைவாக இருந்தது. அதாவது ஒரு கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்துகாரரும் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்க முடியாத காலம் இருந்தது.

உண்மையில் இதுபோன்ற அதீத கட்டுப்பாடுகள் காரணமாகத் தான் இன்றைய மதச்சார்பற்ற அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது என நினைக்கிறேன். பொருளாதார வளர்ச்சி காரணமாக நகரங்களில் சனத்தொகை பெருகியதும் மதக் கட்டுப்பாடுகளில் இருந்து விட்டு விலகக் காரணமாக அமைந்திருந்தது. அதே நேரம் முன்பு மத நிறுவனங்கள் செய்து வந்த வேலைகளை எல்லாம் அரசு பொறுப்பெடுத்தது. உதாரணத்திற்கு, முன்பெல்லாம் ஏழைகள், வேலையற்றவர்கள், தேவாலயத்தின் கதவைத் தட்டி உதவி கேட்டு வந்தனர். தற்போது நலன்புரி அரசுத் திட்டங்கள் அனைத்து நலிவடைந்த பிரிவனருக்கும் உதவுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து கொண்டு சென்றது. தற்காலத்தில் ஆன்மிகம் என்பது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, அல்லது தேடல் சம்பந்தப் பட்ட விடயமாகி விட்டது.

2) தாங்கள் ஒரு இடதுசாரி முனைப்புடையவரா அவ்வாறு இருப்பதற்கு காரணம் என்ன?

இதற்கும் நெதர்லாந்து வரலாற்றில் இருந்து உதாரணம் காட்டலாம் என நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த Domela Nieuwenhuis நெதர்லாந்து சோஷலிச இயக்கத்தின் தந்தையாக போற்றப் படுகிறார். அவர் ஒரு காலத்தில் பாதிரியாராக கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்து வந்தார்! ஜெர்மன் - பிரான்ஸ் போரில் ஏற்பட்ட அழிவுகளை கண்ட பின்னர் சமாதானத்தை விரும்புவோராகவும், சமத்துவக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறினார். தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டங்களை நடத்தினார். மன்னர், மத நிறுவனம், முதலாளித்துவம், மதுபானக் கடை போன்றவற்றிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இது போன்ற எழுச்சிக் கருத்துக்கள் எல்லாம் "இடதுசாரித்தனம்" என்றால் நானும் அதைப் பின்பற்றுவதில் தவறென்ன? எப்போதும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக பாடுபடுகிறவர் இடதுசாரியாகத் தான் இருக்க முடியும். தென் அமெரிக்காவில் ஒரு காலத்தில் மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து "விடுதலை இறையியல்" போதித்த கத்தோலிக்க பாதிரியார்கள் அங்குள்ள ஏழை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தமையும் குறிப்பிடத் தக்கது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் கூட நிறைய இடதுசாரிக் கருத்துக்கள் உள்ளன. அவர் ஏழைகள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு தீர்வாக பரலோக ராஜ்ஜியத்தில் நம்பிக்கை வைக்கச் சொன்னார். நான் பூலோகத்தில் ஒரு சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்கிறேன். அதாவது தற்போதுள்ள அரசு, பொருளாதார அமைப்புகளில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம், செல்வத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

3) தாங்கள் ஒரு சிறந்த பன்மொழி அறிவு திறன் கொண்டவர் என்பதை நான் நினைக்கின்றேன் இவ்வாறு தங்களை வளம்படுத்த காரணம் ஏதும் உண்டா?

எனது வாழ்நாளில் பெரும் பகுதியை பன்முகக் கலாச்சார சமுதாயத்தில் கழித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறுவயதில் இருந்தே உலகின் பிற நாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் கண்டறிய வேண்டும் என்ற பேரவா இருந்தது. "ஒரே இடத்தில் இருந்து குப்பை கொட்டுவது" ஒத்துவரவில்லை. "நாடோடியாக அலைவது" பிடித்த விடயமாக இருந்தது. அதற்கு பல மொழிகளையும் கற்பது அவசியம் எனக் கண்டுகொண்டேன். "ஆங்கிலம் தெரிந்தால் உலகில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்" என்பது ஒரு முன்முடிவு. அது உண்மையல்ல. நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அந்நிய மொழியும் ஒரு புதிய உலகத்திற்கான திறவுகோல். குறைந்தது பத்து சொற்களை அறிந்து கொண்டாலே பல புதிய அனுபவங்கள் கிடைக்கும். எமது அறிவும் விசாலமடையும். ஆயிரம் புத்தகங்களை படிப்பதை விட, ஆயிரம் மைல்கள் பயணம் செய்வது சிறந்தது என்றொரு சீனப் பழமொழி உள்ளது.

4) தங்கள் பார்வையில் புலம் பெயர் தமிழர்களின் தமிழ் பற்று எவ்வாறு உள்ளது?

தமிழர் மட்டுமல்லாது, ஒவ்வொரு புலம்பெயர் சமூகமும் குறிப்பிட்ட சில காலம் தாயக பிரிவுத் துயரில் சிக்கியிருக்கும். அண்மையில் நெதர்லாந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை வாசித்தேன். நியூசிலாந்தில் குடியேறிய டச்சுக் காரர்கள் தங்களது மொழி, கலாச்சாரத்தை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் நியூசிலாந்து சமூகத்துடன் கலப்பதில்லை. ஒரு தனியான பிரதேசத்தில் மூடப்பட்ட சமூகமாக வாழ்கிறார்கள். பலர் டச்சு மொழி மட்டுமே பேசுகிறார்கள். டச்சு மரபு வழி உணவை உண்கிறார்கள். அவர்களுக்கென தனியாக ஒரு டச்சு மொழி பத்திரிகையும் வெளிவருகிறது. ஆகவே இது உலகம் முழுவதும் உள்ள தோற்றப்பாடு தான்.

புலம்பெயர் தமிழர்களின் தமிழ்ப்பற்று இன்று ஓர் அடையாள அரசியலாக மாறிக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. அதாவது, சுற்றி வர வேறொரு மொழி பேசும், வேற்றின கலாச்சாரத்தில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தங்களது தனித்துவத்தை தக்க வைப்பதற்கான போராட்டம். இரண்டாவது தலைமுறையினர் இதில் ஆர்வமில்லாத மாதிரி காட்டிக் கொண்டாலும், அன்றாடம் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகள் அவர்களையும் அடையாளம் தேட வைக்கிறது. இதற்குள் ஐரோப்பிய அரசுக்களின் பிரித்தாளும் அரசியல் இருப்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.

5) அண்மைக்காலமாக எமது தாயகத்தில் திடீர் என்று சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது இதற்கான கரணம் என்ன என்பதை எம்மோடு பகிர முடியுமா?

இருபத்தியோராம் நூற்றாண்டில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. உண்மையில் இது மதங்களுக்கு இடையிலான முரண்பாடு அல்ல. ஒரு சிலர் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள். அதற்குப் பல அப்பாவிகள் பலியாகிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்னர் அவர்கள் சொல்வதை யாரும் கேட்கவில்லை. சரியாகச் சொன்னால், அரசு ஆதரவு இருக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போதைய நிலைமை வேறு. அரசு மறைமுகமாக மதத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது. பெரும்பான்மை, சிறுபான்மை என்றில்லாமல் எல்லா மதங்களிலும் இது நடக்கிறது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். மக்கள் மதரீதியாக பிளவுபட்டால் ஆளும் வர்க்கத்திற்கு கொண்டாட்டம். உண்மையில் அரசு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஒரு பிரஜைக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இவையெல்லாம் அரசின் கடமைகள் என அரசமைப்பு சட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. அதைவிட அரசியல்வாதிகள் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது தனிக் கதை. அது பற்றி மக்கள் கேள்வி கேட்பதை தடுக்க வேண்டும் என்றால், அவர்களது கவனத்தை வேறு பக்கத்திற்கு திசை திருப்பி விட வேண்டும். அதற்கு சமய முரண்பாடுகள் உதவுகின்றன. சமய முரண்பாடுகள் மட்டுமல்ல, இனக்கலவரம், யுத்தம் போன்றன கூட ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாக்க உதவுகின்றன.

Saturday, October 08, 2016

70 ஆண்டு கால சோவியத் யூனியனின் தோல்விக்கு காரணம் என்ன? - ஒரு விவாதம்


கனடாவில் வாழும் பிரபலமான அரசியல் ஆர்வலரும், இலக்கிய விமர்சகருமான நடராஜா முரளிதரனுக்கும் எனக்கும் இடையில் பேஸ்புக்கில் நடந்த விவாதத்தை இங்கே தொகுத்துத் தருகின்றேன். பொதுவுடைமை மற்றும் சோஷலிச நாடுகள் குறித்து மேற்குலக ஊடகங்களினால் செய்யப்படும் பரப்புரைகளை உண்மையென்று நம்புவோருக்கு பதிலடி கொடுக்க இது உதவும். பலரது சந்தேகங்களை தீர்க்க உதவும்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடராஜா முரளிதரன், முன்னொருகாலத்தில் சுவிட்சர்லாந்திற்கான விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் எழுந்த முரண்பாடுகளால் விலகி, கனடாவில் அகதித் தஞ்சம் கோரி, தற்போதும் அங்கேயே வாழ்ந்து வருகின்றார். திரு.முரளிதரன் இன்றைக்கும் ஈழத் தமிழ்த் தேசிய அரசியலில் அதிக அக்கறை கொண்டவராகவும், சமகால இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராகவும் காணப் படுகின்றார்.

கேள்வி: (Nadarajah Muralitharan) இதை எழுதியுள்ள "கலை" முன்னாள் சோவியத் யூனியனுக்குச் சென்று அங்குள்ள புத்திஜீவிகள், தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், எழுத்தாளர்கள், முன்னாள் பொதுவுடமைக்கட்சி அங்கத்தவர்கள் என்று சிலரையாவது சந்தித்துப் பேசி இது குறித்து எழுதியிருந்தால் அதன் நம்பகத்தன்மை குறிப்பிடக் கூடியதாக இருந்திருக்கும். இதற்கான வசதி அவருக்கு இருக்கிறது. ஆனாலும் அவர் அப்படி எழுதுவதில்லை. அவர் சில புத்தகங்களையே நம்பி வாதங்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. அந்த அரசுகள் தங்களுக்கான தத்துவத்தை ஊட்ட முனைந்திருக்கிறார்கள் என்பதே எனது தரப்பு. அது உலகம் எங்கணும் நடந்திருக்கிறது. ஆயினும் வீழ்ச்சியடைந்த... அல்லது தங்களது பொதுவுடமைப் பாதையைக் கைவிட்ட இந்த நாடுகளில் (முக்கியமாக சோவியத் யூனியனில்) 70 வருடங்கள் முயற்சித்து பல வகைகளிலும் பரப்பப்பட்ட பொதுவுடமைத் தத்துவத்தை அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது என்பதே இங்குள்ள கேள்வியாகும். தத்துவத்தில் உள்ள குறையா ? அல்லது மக்கள் சமூகத்துக்கு நன்றான அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் குறைபாடா? என்பதையே நான் உரையாட விரும்புகின்றேன்.

பதில்: நான் அப்படி யாரையும் சந்திக்கவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? தொண்ணூறுகளுக்கு பிறகு, ஏராளமான ரஷ்யர்கள் நெதர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அவர்களில் சிலர் எனது நண்பர்களாக இருந்தனர். முன்பு சோவியத் யூனியனில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல, நானே வெள்ளை ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறேன். அங்குள்ள நண்பர்களுடன் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களை சந்தித்து பேசி இருக்கிறேன்.

//அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது// எதையும் ஆராயாமல் எழுந்தமானமாக பேசுவது தவறு. இது பற்றி நான் ஏற்கனவே விளக்கம் கொடுத்திருக்கிறேன். எனது வலைப்பூவில் ஏராளமான தகவல்கள் உள்ளன. பெரும்பான்மை மக்கள் நிராகரித்ததாக கூறுவது ஒரு மோசடி. ஏற்கனவே மேற்குலக ஊடுருவல்கள் இருந்தன. கோர்பசேவ் ஆட்சிக்கு வந்ததும் சமாதானம் என்ற பெயரில் வெளிப்படையாக நடந்து கொண்டார். அது ஊடுருவலுக்கு மேலும் வழிவகுத்தது. எல்சின் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டார். அங்கு நடந்ததும் ஒரு சதிப்புரட்சி. முதலாளித்துவ ஆதரவாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். மக்கள் அங்கீகாரத்துடன் அது நடக்கவில்லை. அப்படியானால் அக்டோபர் கிளர்ச்சி ஏன் நடந்தது? (பார்க்க: 3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்கோ மக்கள் எழுச்சி)

கேள்வி: ஏறத்தாள 70 வருடங்கள் நன்னெறிப் பாடம் புகட்டப்பட்ட ரஷியாவில் இன்று நடைபெறுகின்ற உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்த்தீர்களானால் விளையாடுகின்ற கறுப்பின வீரர்களைப் பார்த்து நிறவாதத்தோடு ரஷியர்கள் திரண்டு கூச்சலிடுவதையும் , கிண்டலடிப்பதையும் காணலாம். இது மற்றைய முதலாளித்துவ நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் வெட்கக் கேடாக இருக்கிறது என்று ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். பூட்டின் கிறீஸ்தவ ஓதோடொக்ஸ் மதவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்களை வன்மத்தோடு அமுல்படுத்துவதைப் பார்க்கலாம்.

பதில்: //நிறவாதத்தோடு ரஷியர்கள் திரண்டு கூச்சலிடுவதையும்// சோவியத் யூனியன் இருந்த காலத்தில் நடந்திருந்தால் அவர்கள் ஜெயிலுக்கு போயிருப்பார்கள். நீங்கள் அதை மனித உரிமை மீறல் என்று கண்டித்து இருப்பீர்கள். முதலாளித்துவம் எல்லாவற்றுக்கும் சுதந்திரம் கொடுக்கிறது. நிறவெறிக்கும் சுதந்திரம். இப்போ உங்களுக்கு திருப்தி தானே? அளவுக்கு மிஞ்சிய சுதந்திரம்... நிறவெறிக்கும் சுதந்திரம்... இதைத் தானே எதிர்பார்த்தீர்கள்?

//பூட்டின் கிறீஸ்தவ ஓதோடொக்ஸ் கைகோர்த்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்களை வன்மத்தோடு அமுல்படுத்துவதைப் பார்க்கலாம்.// இது முதலாளித்துவவாதிகளின் செயல். நீங்க என்ன சேம் சைட் கோல் போடுறீங்க? போலந்தும் அண்மையில் கத்தோலிக்க சபையுடன் சேர்ந்து கருக்கலைப்பு தடைச் சட்டம் கொண்டு வந்தது. அயர்லாந்தில் எப்போதுமே இருந்து வருகின்றது. என்ன ஸார் குழம்பிப் போனீங்களா?

கேள்வி: முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம். இன்று நடைபெறுகின்ற தேர்தல் அமைப்பிற்கு ஊடாகக் கொம்யூனிஸ்ட் கட்சியினால் ஏன் அங்கு தேர்தலில் வெல்ல முடியாமல் உள்ளது ? அங்குள்ள மக்கள் அங்கு நடைமுறையில் இருந்த பொதுவுடமை ஆட்சியாளர்களை வெறுத்தார்கள். நிராகரித்தார்கள். அது கொர்பச்சோவின் வழியாக நிகழ்த்தப்பட்டது. சிலைகள் உடைத்தெறியப்பட்டன. மக்கள் அந்த வீழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பதில்: நீங்கள் தான் முழுப் பூசணிக்காயை மறைக்கிறீர்கள். எதையும் ஆராயாமல் பேசுகின்றீர்கள். முதலாளித்துவவாதிகள் ஆளும் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். பண பலத்தால் அடக்கப் பார்ப்பார்கள். அவர்கள் புட்டின் மாதிரி ஒருவரை பதவியில் அமர்த்துவார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு விட மாட்டார்கள். வெளிப்படையாக நடக்கும் தேர்தல்கள் மட்டுமே உங்களது கண்களுக்கு தெரிகின்றன. அதற்குப் பின்னால் திரைமறைவில் நடக்கும் சங்கதிகள் வெளியே வருவதில்லை. முதலாளிகளும் அரசும் சேர்ந்து நடத்தும் ஆட்சி இது.

//சிலைகள் உடைத்தெறியப்பட்டன. மக்கள் அந்த வீழ்ச்சியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.// சதிப்புரட்சியில் ஈடுபட்ட கும்பல்கள் ஒரு சில இடங்களில் சிலைகளை உடைத்தன. அதை சதிப்புரட்சி ஆதரவாளர்கள் தான் கொண்டாடினார்கள். ஆனால், பெரும்பாலான சிலைகள் இன்னமும் உள்ளன. நம்பாவிட்டால் நீங்களாகவே நேரில் சென்று பாருங்கள். உக்ரைனில் இருந்த லெனின் சிலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய உள்நாட்டுப் போரின் போது உடைக்கப் பட்டன. அது செய்தியிலும் வந்தது.

கேள்வி: வரலாற்றுப் பெருமை வாய்ந்த சோசலிசப் பாரம்பரியத்தில் வந்த ரஷியாவில்..... சாதாரண முதலாளித்துவ நாடுகளிலே கூட இல்லாத இனவாதமும் நிறவாதமும் ஏன் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருக்கிறது ? இது குறித்த ஆச்சரியத்தின் வெளிப்பாடே எனது குறிப்பு!

பதில்: //சாதாரண முதலாளித்துவ நாடுகளிலே கூட இல்லாத இனவாதமும் நிறவாதமும் ஏன் ஒப்பீட்டளவில் கூடுதலாக இருக்கிறது ?// எதற்காக ருவாண்டாவிலும், இலங்கையிலும் இனவாதம் கூடுதலாக இருக்கிறது? பொருளாதாரப் பிரச்சினைகள் வரும் பொழுது அவை கூடவே வரும். மேற்குலக நாடுகளில் அவை வெளித்தெரியாமல் இருப்பதற்கு காரணம் அங்குள்ள செல்வந்த நிலைமை. வேலைவாய்ப்புகள். மேற்குலகிலும் எந்தவொரு நாட்டிலாவது பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட்டல், வேலைவாய்ப்புகள் குறைந்தால், நிறவாதமும், இனவாதமும் அதிகரிப்பதை காணலாம். உதரணத்திற்கு, கிரீஸ். அமெரிக்காவில் பொலிசாரால் கறுப்பின மக்கள் அடிக்கடி சுட்டுக் கொல்லப் படுகின்றனர். அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் வெளிப்படையாகவே இனவாதம், நிறவாதம் பேசுகின்றார். அதை எல்லாம் நீங்கள் கண்டுகொள்ளாமல் மறைக்கும் காரணம் என்னவோ?

கேள்வி: சோவியத் யூனியனிலும் மற்றும் அதன் அண்டை நாடுகளிலும் பொதுவுடமை அரசுகள் தோல்வியுற்றதற்கு அங்கு நிலவிய பொருளாதார நெருக்கடி முக்கிய அம்சமாகும். இந்த நாடுகளில் மைய்யப்படுத்தப்பட்ட அரசிடமே அதிகாரங்கள் குவிந்திருந்தது. சோவியத்தில் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக நிலமைகள் அமையவில்லை. இந்த மைய்ய அரசுகள் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுப்பதில் பெருங்கவனம் செலுத்தாமல் தொழிற்சாலைகளைக் கட்டமைக்கும் திட்டங்களையே அமுல்படுத்தின. மேற்கத்தேய அரசுகளுடனான பனிப்போரினால் மொத்த தேசிய வருவாயின் பெரும்பகுதி ஆயுத உற்பத்திக்கும் அணு ஆராய்ச்சிக்கும் விண்வெளி ஆய்வுக்கும் போய் சேர்ந்தது. இது மிகப்பெரிய பிழையான அணுகுமுறையாகும். இந்தத் தவறினால் சோவியத் யூனியன் மிகப்பெரிய உணவுத்தட்டுப்பாடுகளைச் சந்திக்கலாயிற்று. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பணவீக்கம் அதிகரித்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது. வறுமை உருவாகியது. உணவுப் பொருட்களை முதலாளித்துவ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்களுக்கு பொதுவுடமை ஆட்சி முறைமையில் அதிருப்தி ஏற்பட்டு ஆட்சியை மாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

பதில்: பனிப்போர் காரணமாக ஏற்பட்ட ஆயுதப் போட்டி பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது உண்மை தான். ஆப்கானிஸ்தான் போரையும் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது உண்மை தான். ஆனால், அது சோவியத் யூனியனையும், பிற சோஷலிச நாடுகளையும் மட்டும் பாதித்தது என்று சொல்வது பொய். மேற்குலக நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. எண்பதுகளில் மேற்குலகில் வேலையில்லாப் பிரச்சினை அதிகமாக இருந்தது. உண்மையில், அரசியல் சூழ்ச்சிகளை விரைவு படுத்தி சோஷலிச நாடுகளை உடைத்தும் அதற்காகத் தான். ஐரோப்பிய ஒன்றியம் முன்னாள் சோஷலிச நாடுகளை காலனிகளாக சேர்த்துக் கொண்டது. நேட்டோவும் அவர்களை சேர்த்துக் கொண்டது. அதனால் அமெரிக்க ஆயுதங்களுக்கு புதிய சந்தை கிடைத்தது. அதனால் தான், மேற்குலகம் தனது பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்ப முடிந்தது. இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அதனால் உங்களுக்கும் தெரியாது.

கேள்வி: முதலாளித்துவ நாடுகளை ஒப்பிட்டு உதாரணம் காட்டாதீர்கள். அது பிழையானது. மோசடியானது. உதவாக்கரையானது என்று கூறி நிராகரித்துக் கொண்டு மனித சமூகத்தை மீட்கப் புறப்பட்ட நாடுகளின் அணுகுமுறையும் அது போன்றதே என்று பல இடங்களில் ஒப்புநோக்கி எழுதிக் கொண்டிருப்பதை என்னால் உள்வாங்க முடியாதுள்ளது.

பதில்: நீங்கள் குறிப்பிடும் "சோஷலிச" நாடுகள் கூட உண்மையில் முதலாளித்துவ நாடுகள் தான். இனவாதம் வளர்வதற்கு 25 வருட கால முதலாளித்துவம் போதாதா? இது ஒப்பீடு அல்ல. பொருளாதாரம். ஒரு நாட்டில் முதலாளித்துவ பொருளாதாரம் இருந்தால், அங்கு இனவாதமும், நிறவாதமும் தலைவிரித்தாடும். அது எதிர்பார்க்க வேண்டிய விடயம். அமெரிக்காவில் நிறவாதம் இன்னமும் மறையாமல் இருக்கிறது. ஏனைய நாடுகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மேற்கு ஐரோப்பிய பணக்கார நாடுகளில் முன்னொரு காலத்தில் எல்லோருக்கும் வேலை இருந்தது. அந்தக் காலத்தில் நிறவாதம், இனவாதம் இருக்கவில்லை. ஆனால், கடந்த தசாப்த காலமாக பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகின்றது. வறுமை அதிகரிக்கிறது. கூடவே இனவாதம், நிறவாதமும் அதிகரிக்கிறது. முன்னாள் சோஷலிச நாடுகளும் கடந்த 25 வருடங்களாக முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றி வருகின்றன. அங்கு வறுமை, வேலையில்லாப் பிரச்சினை மேற்குலகை விட அதிகமாக உள்ளது. அதனால் நிறவாதம், இனவாதம் வளரும் தானே? இதற்காக நீங்கள் முதலாளித்துவத்தை அல்லவா குறை கூற வேண்டும்?

கேள்வி: அப்படியாயின் 25 வருடங்களுக்கு முன் வேறு நிலை இருந்தது என்கிறீர்களா ?

பதில்: ஆமாம். நிச்ச‌ய‌மாக‌. பொருளாத‌ர‌ங்க‌ளை ஒப்பிடுங்க‌ள். நாடுக‌ளை அல்ல‌.

கேள்வி: சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலும் பொதுவுடமை ஆட்சிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் வெறுமனே பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல காரணம்! அந்த நாடுகளில் நிகழ்த்தப்பட்ட கடுமையான சர்வாதிகார ஆட்சி அமைப்பு முறைமைகளினால் பொதுமக்களுக்கு நிறைய அநீதிகள் இழைக்கப்பட்டிருந்தன. ரூமேனியாவில் சசெஸ்குவும் மனைவியும் அரசனும் அரசியுமாகவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஸ்ராலினின் ஆட்சிக் காலத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என எண்ணிறைந்தோர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். சைபீரியச் சிறை நிறைந்து வழிந்தது. ஸ்ராலினின் ஆட்சி கொடூரமான சர்வாதிகார ஆட்சியாக அமைந்தது. வட கொரியாவில் பரம்பரை மன்னர் ஆட்சி தொடருகிறது.

பதில்: இவையெல்லாம் வழமையான எதிர்ப் பிரச்சாரங்கள். பொதுவாக எல்லா நாடுகளிலும் மக்கள் தமது பொருளாதார நலன்களை மட்டுமே சிந்திப்பார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் பற்றி அதிக அக்கறை கொள்வதில்லை. அமெரிக்காவில் ஒபாமா ஆண்டாலும், புஷ் ஆண்டாலும் ஒன்று தான். அவர்கள் தமக்கு என்ன செய்கிறார்கள் என்பதைத் தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். மேலும் அந்த நாட்டில் இரு கட்சி சர்வாதிகாரம் நிலவுகின்றது. அதாவது இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் தமக்குள் போட்டி போடும். ஏனைய கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது.

முன்னாள் சோஷலிச நாடுகளில் ஜனநாயகம் இருக்கவில்லை, சர்வாதிகார ஆட்சி நடந்தது என்பது ஒரு பொய்ப் பிரச்சாரம். ஜனநாயகம் என்பது நீங்கள் நினைப்பது போல பொதுத் தேர்தல்கள், பல கட்சி ஆட்சி முறை மட்டுமல்ல. அது ஒரு வகை ஜனநாயகம். முதலாளித்துவம், பாராளுமன்ற முறைமை நிலவிய ஆரம்ப காலங்களில் மேற்குறிப்பிட்ட ஜனநாயகம் இருக்கவில்லை. கடுமையான சர்வாதிகார ஆட்சி நடந்தது. ஜனநாயகம் வந்த போதும், பணக்காரர்களுக்கு மட்டுமே வாக்குரிமை கொடுக்கப் பட்டது.

சோஷலிச நாடுகள் இன்னொரு வகையான ஜனநாயகத்தை பின்பற்றுகின்றன. ஒரு தேசத்திற்குள், தாம் விரும்பியவாறு ஆட்சி அமைப்பதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உள்ளது. கிராமிய மட்டத்தில், மாவட்டங்களில், மாகாணங்களில் நடக்கும் தேர்தல்களில் தனி நபர்கள் போட்டியிடுவார்கள். கட்சி சார்பாக மட்டுமல்லாது, சுயேச்சையாகவும் போட்டியிடலாம். ஆனால், பணபலம் காட்டி வெல்ல முடியாது.(அமெரிக்காவில் நிலைமை வேறு. மில்லியன் கணக்கான டாலர்கள் செலவளித்தால் தான் ஜெயிக்க முடியும்.) 

ஒரு சோஷலிச நாட்டின் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களினால் தேர்ந்தெடுக்கப் படுவார். நீங்கள் குறிப்பிட்ட ஸ்டாலின், ஸௌசெஸ்கு எல்லோரும் ஜனநாயக வழியில் பதவியைப் பிடித்தவர்கள் தான். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தடவை கூடும் பாராளுமன்றம் அவர்களது பதவிக் காலத்தை நீடிப்பதுண்டு. சிலநேரம், பிரித்தானியா போன்ற பாராளுமன்ற - மன்னராட்சி நாடுகளில், மகாராணி அல்லது மன்னர் இருப்பதைப் போன்ற சம்பிரதாயத் தலைவராகவும் இருப்பார். பிரித்தானியா மன்னருக்கு அதிகாரம் இல்லையென்று ஒரு சாட்டு சொல்லாதீர்கள். மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. அவரது ஒப்புதல் இன்றி எந்த சட்டமும் நிறைவேற்ற முடியாது. மேலும் அந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கத்தில் மன்னர் குடும்பமும் ஒன்று.

கேள்வி: சோசலிச ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் அங்கு சமத்துவத்தை ஏற்படுத்துவதில் நிறையப் பிரச்சினைகளைச் சந்தித்தன. தனி மனித விருப்புகள் நசுக்கப்பட்டதாக மக்கள் உணர்ந்தனர். மக்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களது உழைப்புக்கும் திறமைக்கும் ஆற்றலுக்கும் அமைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் இயல்பாக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். தேவையின் அடியில் வருமானத்தைக் குறைத்து திணிக்கப்படுகிற சமத்துவம் மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அடுத்தவர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்புகளில் தலையிடுவதை மக்கள் விரும்பவில்லை. தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தாங்களே வாழ விரும்பினர். பொது உடமை...கூட்டுறவு வாழ்க்கை.... தேவைக்கு ஏற்ற சம்பளம் ஆகியவற்றை அடிப்படைகளாக கொண்டு உருவாக்கப்படும் சமத்துவத்தை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களைத் தாங்களே தீர்மானிக்கும் சுதந்திர மனிதர்களாக வாழ அந்த மக்கள் விரும்பினார்கள். இதுதான் மனிதர்களின் அடிப்படை இயல்பு! அங்கு நிகழ்ந்த பொதுவுடமை ஆட்சி முறைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இதுவும் அங்கு நடைபெற்ற பொதுவுடமை ஆட்சிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்தது.

பதில்: இத‌ற்கும் ஏற்க‌ன‌வே ப‌தில் அளித்து விட்டேன். நீங்க‌ள் குறிப்பிடும் அந்த‌ "ம‌க்க‌ள்" யார்? சுய‌ந‌ல‌வாதிக‌ள், ப‌ண‌த்தாசை பிடித்த‌வ‌ர்கள், த‌ன்ன‌ல‌ம் க‌ருதுவோர், செல்வ‌ந்த‌ர்க‌ள், முத‌லாளிக‌ள்.... இவ‌ர்க‌ளைப் பற்றிய‌து தான் உங்க‌ள‌து க‌வ‌லை முழுவ‌தும். இதைத் தான் வ‌ர்க்க‌ப் பாச‌ம் என்று அழைப்பார்க‌ள். அதாவ‌து, மேட்டுக்குடி, ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ர் மீது உங்க‌ளுக்கு இய‌ல்பாக‌வே அனுதாப‌ம் எழுகிற‌து. அவ‌ர்க‌ள‌து ந‌ல‌ன்க‌ளை பற்றி ம‌ட்டுமே க‌வ‌லைப் ப‌டுகிறீர்க‌ள்.

ஏற்க‌ன‌வே சொன்னேன். ம‌க்க‌ள் ம‌க்க‌ள் தான். சோவிய‌த் ம‌க்க‌ளும், ப‌ல‌ த‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சிய‌ல் கொள்கையை நம்புகிறார்க‌ள். அதில் ஒரு பிரிவின‌ரை ப‌ற்றி தான் நீங்க‌ள் சொன்ன‌து. ஆனால் பெரும்பான்மை உழைக்கும் ம‌க்க‌ள் ப‌ற்றி நீங்க‌ள் அக்க‌றைப் ப‌ட‌வில்லை. ஏற்ற‌த்தாழ்வான‌ முத‌லாளித்துவ‌ ச‌முதாய‌த்தில் அவ‌ர்க‌ள் வ‌றுமையில் வாழ்கிறார்க‌ள். அதைப் ப‌ற்றி உங்க‌ளுக்கென்ன‌ க‌வ‌லை? ஒரு இட‌த்தில் மேடு இருந்தால் அதுக்கு அருகில் ப‌ள்ள‌ம் இருக்கும். அதே மாதிரி ப‌ண‌க்கார‌ன் மென்மேலும் ப‌ண‌க்கார‌ன் ஆவான். ஏழை மென்மேலும் ஏழை ஆவான். ஐயோ பாவ‌ம் பண‌க்காரன் க‌ஷ்ட‌ப் ப‌டுகிறானே என்று நீங்க‌ள் ப‌ரிதாப‌ப் ப‌டுகிறீர்க‌ள்.

கேள்வி: கலை.... அப்படி நான் பணக்கார வர்க்கத்துக்காகப் பரிதாபப்படுகிறேன் என்ற மாயையைத் தயவுசெய்து ஏற்படுத்த வேண்டாம். நான் அங்கு நடைபெற்ற உண்மைகளையே பேச விரும்புகிறேன். வரலாற்றைத் திரிபுபடுத்திப் பேசுவதால் இங்கு ஏதும் நிகழப் போவதில்லை.

பதில்: உங்க‌ள‌து க‌வ‌லை முழுவ‌தும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் ப‌ற்றிய‌து தான். அது மாயை அல்ல‌, உண்மை. க‌ன‌டா மாதிரியான‌ மேற்க‌த்திய‌ முத‌லாளித்துவ‌ நாடுகளில் த‌னிந‌ப‌ர்வாத‌ த‌த்துவ‌த்தை ஊட்டி வ‌ள‌ர்க்கிறார்க‌ள். அத‌ற்குக் கார‌ண‌ம், அப்போது தான் ப‌ண‌க்கார‌ர்க‌ளிட‌ம் எவ்வாறு செல்வ‌ம் சேர்கிற‌து ஆராய‌ மாட்டீர்க‌ள். அவ‌ர்க‌ள் தீய‌ வ‌ழியில் சேர்த்திருப்பார்க‌ள்... பேராசை பிற‌ப்புரிமை அல்ல‌வா? செல்வ‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்ள‌ விரும்பாத‌ சுய‌ந‌ல‌ம் பெரித‌ல்ல‌வா? நாங்க‌ளும் அப்ப‌டியே இருக்க‌ வேண்டாமா? எல்லோருக்கும் வேலை வாய்ப்பிருந்த‌தால் அது த‌ப்பில்லையா? எல்லோரும் க‌ல்வி க‌ற்ப‌து கூடாது அல்ல‌வா? எல்லோருக்கும் ம‌ருத்துவ‌ வ‌ச‌தி கிடைப்ப‌து அநியாய‌ம் அல்ல‌வா? எல்லோரும் மூன்று வேளையும் சாப்பிடுவ‌து கூடாது அல்ல‌வா? அந்த‌ உரிமைக‌ளை வ‌ழ‌ங்கிய சோவிய‌த் யூனிய‌னும், சோஷ‌லிச‌ நாடுக‌ளும் நாச‌மாக‌ப் போக‌ட்டும். இப்போது இல‌ட்ச‌க் க‌ண‌க்கானோருக்கு வேலை இல்லை, செல‌வுக்கு ப‌ண‌ம் இல்லை, பிள்ளைக‌ளுக்கு ப‌டிப்பு இல்லை, ம‌ருத்துவ‌ வ‌ச‌தி இல்லை, சாப்பாட்டுக்கு வ‌ழியில்லை. இப்போது உங்க‌ளுக்கு ரொம்ப ச‌ந்தோஷ‌மாக‌ இருக்குமே? ஊர் உல‌கில் எவ‌ன் எக்கேடு கெட்டால் என‌க்கென்ன‌ என்று க‌ல்நெஞ்ச‌க்கார‌ர்க‌ளாக‌ வாழ‌ வேண்டும். அது தானே உங்க‌ள் கொள்கை? ந‌ல்ல‌ த‌த்துவ‌ம்!

இன்று நாம் அனுப‌விக்கும் உரிமைக‌ள் சும்மா வ‌ர‌வில்லை. சோவிய‌த் யூனிய‌ன் உருவான பின்ன‌ர் தான், உல‌க‌ம் முழுவ‌தும் நாங்க‌ள் இன்று அனுப‌விக்கும் ச‌லுகைக‌ள் கிடைத்த‌ன‌. சோவிய‌த் சாத‌னைக‌ள்: 
1. இல‌வ‌ச‌க் க‌ல்வி 
2. இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ம் 
3. அனைவ‌ருக்கும், பெண்க‌ளுக்கும் வேலைவாய்ப்பு 
4. இல‌வ‌ச‌ குழந்தை ப‌ராம‌ரிப்பு 
5. (வெளிநாடுக‌ளுக்கும்) இல‌வ‌ச‌ சுற்றுலாப் ப‌ய‌ண‌ம் 
6. வீட்டு வ‌ச‌தி, வாட‌கை மிக‌ மிக‌க் குறைவு, மின்சார‌ம், எரிவாயு செல‌வு மிக‌வும் குறைவு. 
 7. மிக‌க் குறைந்த‌ செல‌வில் பொதுப் போக்குவ‌ர‌த்து சேவை.

சோவிய‌த் யூனிய‌னால் உல‌க‌ம் முழுவ‌தும் கிடைத்த‌ ந‌ன்மைக‌ள்: 
1. எட்டு ம‌ணி நேர‌ வேலை 
2. வ‌ருட‌த்திற்கு ஒரு மாத‌ம் விடுமுறை. 
3. ச‌ர்வ‌ச‌ன‌ வாக்குரிமை பெண்க‌ளுக்கும்


கேள்வி: சோவியத் யூனியனுக்கு நாம் எந்த அழிவையும் ஏற்படுத்தவில்லை. அந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள்தான் வேறு வகையான முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஆகவே எங்களைக் குற்றம் சாட்டுவது அடாத்து.உலக வரலாறு நிலப்பிரபுத்துவத்தில் இருந்து இருந்து முதலாளித்துவத்துக்குள் நுழைந்த போது சில சீர்திருத்தங்களும் சில மாற்றங்களும் ஏற்பட்டன. உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் சீர்திருத்தவாதிகளும் எல்லா அமைப்புகளுக்குள்ளும் போராடிக் கொண்டிருந்தார்கள். பொதுவுடமைக் கொள்கைகள் உலகில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தின என்பதில் எனக்கு எவ்வித மறுப்பும் கிடையாது. இங்கு உங்களோடு நான் கதைப்பது சோவியத் யூனியனையும் கிழக்கு ஐரோப்பாவையும் பற்றியே!

பதில்: // சோவிய‌த் யூனிய‌னுக்கு நாம் எந்த‌ அழிவையும் ஏற்ப‌டுத்த‌வில்லை// இங்கே "நாம்" என்ப‌து யார்? முத‌லாளிய‌ வ‌ர்க்க‌த்தை குறிக்கிற‌தா? CIA நிதியில் இய‌ங்கிய‌ Radio Free Europe எப்ப‌டியான‌ பிர‌ச்சார‌ம் செய்த‌து தெரியுமா? உங்க‌ளுக்குத் தெரியுமா? மேற்கு ஐரோப்பாவில் அக‌தி த‌ஞ்ச‌ம் கோருவோருக்கு வேலையும், இருப்பிட‌மும் கொடுக்கும் முறை ஏன் எப்போது வ‌ந்த‌து? மேற்கு ஐரோப்பாவுக்கு சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஐரோப்பிய‌ அக‌திக‌ளை க‌வ‌ர்ந்திழுக்க‌ கொண்டு வ‌ந்த‌ திட்ட‌ம் அது. உண்மையில் மேற்கில் ச‌ம்ப‌ள‌ம் அதிக‌ம் தான். இல‌குவாக‌க் கிடைக்கும் கார் போன்ற‌ ஆட‌ம்ப‌ர‌ப் பாவ‌னைப் பொருட்க‌ளும் உண்டு. 

அதிக‌ம் போக‌த் தேவையில்லை. நீங்க‌ள் த‌மிழ‌ர்க‌ளைப் பாருங்க‌ள். எத்த‌னை பேர் மேற்க‌த்திய‌ நாடுக‌ளின் க‌வ‌ர்ச்சியில் ம‌ய‌ங்கி வ‌ருகிறார்க‌ள்? ஐரோப்பா வ‌ந்த‌வுட‌ன் சொந்த‌ வீடு, கார், என்று பெருமை அடித்துக் கொண்டிருக்கிறார்க‌ள்? அதே நிலைமையில் தான் கிழ‌க்கு ஐரோப்பாவில் இருந்து வ‌ந்த‌ அக‌திக‌ளும் இருந்த‌ன‌ர். 

RFE வானொலியும் "மேற்கு ஐரோப்பாவுக்கு வாருங்க‌ள்... தேனும் பாலும் ஆறாக‌ ஓடுகிறது..." என்று ஆசை காட்டிய‌து. இதை விட‌ BBC, VOA வானொலிகளும் அந்த‌ ம‌க்க‌ளை குறி வைத்து பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ன‌. ந‌ம‌து ம‌க்க‌ளில் எத்த‌னை பேர் அமெரிக்க‌ ப‌ட‌ங்க‌ளை பார்த்து விட்டு மேற்குல‌கில் எல்லோரும் ப‌ண‌க்கார‌ வாழ்க்கை வாழ்வ‌தாக‌ நினைக்கிறார்க‌ள் தெரியுமா? அதே தான் இங்கேயும்...

சோவிய‌த் யூனிய‌ன் வீழ்ச்சி அடையும் என்று ம‌க்க‌ள் எதிர்பார்க்க‌வுமில்லை, விரும்ப‌வுமில்லை. மேற்க‌த்திய‌ கைக்கூலிக‌ளால் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ ஆட்சிக் க‌விழ்ப்புக்கும் ம‌க்க‌ளுக்கும் ச‌ம்ப‌ந்த‌மில்லை. போல‌ந்தில் ம‌ட்டும் விதிவில‌க்கு. ஆனால் போலிஷ் ம‌க்க‌ள் க‌த்தோலிக்க‌ அடிப்ப‌டைவாதிக‌ளாக‌வும், தேசிய‌வாதிக‌ளாக‌வும் இருந்த‌ன‌ர். அர‌சிய‌லில்‌ க‌த்தோலிக்க‌ ம‌த‌ நிறுவ‌ன‌த்தின் த‌லையீட்டை த‌டுக்க‌ முடிய‌வில்லை. செக்கோஸ்லாவாக்கியாவில் க‌ட்சிக்குள் இருந்த‌ முத‌லாளிய‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ஆட்சியை கைப்ப‌ற்றினார்க‌ள்.

பெரும்பாலான‌ ம‌க்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்ப‌து தெரியாது. ப‌ல‌ர‌து நினைப்பு என்ன‌வென்றால், சோஷ‌லிச‌ கால‌த்தில் அனுப‌வித்த‌ ச‌லுகைக‌ள் அப்ப‌டியே இருக்கும் என்ப‌து தான். ஆனால் முத‌லாளித்துவ‌ம் நாட்டைக் கைப்ப‌ற்ற‌ இட‌ம் கொடுத்த‌து எவ்வளவு பெரிய‌ த‌வ‌று என்று பிற‌கு தான் தெரிந்த‌து. அர‌பிக் கார‌னின் கூடார‌த்திற்குள் ஒட்ட‌க‌த்திற்கு இட‌ம் கொடுத்த‌ க‌தை தெரியும் தானே?

கேள்வி: நாம் என்பதில் நான் என்பவன் இன்றைக்கும் கனடாவில் எவ்வித அடிப்படை உரிமைகளும் அற்று வாழ்பவன். எப்பவும் என்னைக் கனடிய அரசு நாடு கடத்த முடியும். மற்றும் எவ்வகையான அதிகார அமைப்புகளையும் சார்ந்து இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கவில்லை. ஒரு சாமானியனாகவே எனது கருத்துகளை இங்கு முன் வைக்கின்றேன். 18 ஆம் நூற்றாண்டில் உரிமைகளுக்காக பிரிட்டனிலும் பிரான்சிலும் நிகழ்ந்த போராட்டங்கள்! பிரிட்டனின் "சாட்டிஸ்ட்" இயக்கம்! Chartism, British working-class movement for parliamentary reform named after the People’s Charter, a bill drafted by the London radical William Lovett in May 1838...

பதில்: நீங்கள் இப்போ தான் சார்ட்டிஸ்ட் இயக்கம் பற்றிப் படிக்கிறீர்கள். உலகம் எங்கேயோ சென்று விட்டது நண்பரே! விஞ்ஞான சோஷலிசம் உருவாகி 150 வருடங்கள் கடந்து விட்டன. நீங்கள் குறிப்பிட்ட சோஷலிச நாடுகள் எல்லாம் அதை நடைமுறைப் படுத்தி ஓய்ந்து விட்டன...

கேள்வி: நல்லது.... உங்களது உலகம் அனைத்தையும் கற்றுக்கொண்ட மேதமைக்காக! வெறும் சோவியத்தில் மட்டும் அனைத்துமே நிகழ்ந்தது என்று நீங்கள் போர்த்த முனையும் போர்வைக்கு அப்பால் பல்வேறு உரிமைப் போராட்டங்கள் எவ்வாறெல்லால் வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன என்பதை சுட்டுவதற்காகவும்... ஞாபகப்படுத்துவதற்காகவுமே "சாடிஸ்ட்" பற்றிக் கொணர்ந்தேன்! இவ்வகையான எண்ணிறைந்த போராட்டங்கள் வழியாகத்தான் மனித வரலாறு நகர்ந்திருந்திருக்கின்றது. மற்றும் நான் வரலாற்றைக் கற்றுக்கொண்டிருக்கும் "எளிய மாணவன்" தான்! இதை ஒப்புக்கொள்ள நான் வெட்கப்படுவதில்லை.

பதில்: அதைத் தான் நானும் சொல்கிறேன்: //பல்வேறு உரிமைப் போராட்டங்கள் எவ்வாறெல்லால் வெவ்வேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டன // ஏற்கனவே உலகில் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி பிரான்ஸ் நாட்டில் தோன்றியது என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதை நீங்கள் வாசித்தும் இருக்கிறீர்கள். பொதுவுடைமை எதிர்ப்பாளர்கள் தான் எடுத்ததற்கு எல்லாம் ரஷ்யா... ரஷ்யா... என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றும் விளங்கப் படுத்தி இருக்கிறேன். (அதையும் வாசித்து இருக்கிறீர்கள்.) நீங்கள் இங்கு குறிப்பிட்ட சாட்டிஸ்ட் இயக்கம் மட்டுமல்ல, உத்தோப்பியா சிந்தனையும் 18 ம் நூற்றாண்டில் இருந்தது. உலகில் ஏற்றத் தாழ்வை ஒழிப்பதற்கும் அனைவருக்கும் செல்வம் பகிர்ந்தளிக்கப் படுவதற்கும், 19 ம் நூற்றாண்டில் விஞ்ஞான ரீதியான சோஷலிச கோட்பாடுகள் உருவாக்கப் பட்டன. அதை நீங்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பணக்காரருக்கு ஆதரவாகப் பேசுவது ஒரு மாயை என்றீர்கள். அதுவே உங்களது மனச்சாட்சி. அதாவது உங்களால் பணக்காரர்களை நியாயப் படுத்த முடியவில்லை.

கேள்வி: பிரான்ஸ் பற்றி நீங்கள் குறிப்பிட்டது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் எல்லையைத் தாண்டி அதீதமாக எதனையும் ஆகா...ஓகோ...என்று மெச்சுகிற பொழுது அதன் நம்பகத்தன்மை தகர்ந்து விடுகிறது. நடுநிலையோடு வரலாறுகள் அனைத்தையும் ஆராய வேண்டியுள்ளளது. அதன் மூலமே தவறுகளையும், பிழைகளையும் களைய முடியும். "சுயவிமர்சனம்" என்பதன் அர்த்தம் என்ன ? சுயவிமர்சனம் இல்லாமல் வரலாற்றை முன்னோக்கி நகர்த்த முடியுமா ? விஞ்ஞானம் என்கிறீர்கள். அது என்ன ? அணு குறித்த இரசாயனவியலின் ஆரம்பகர்த்தா டோல்ரன். அவர் வகுத்தளித்த அடிப்படைகளில் இருந்துதான் அணு விஞ்ஞானம் முன்னேறியது. ஆனால் இன்று "டோல்ரனின் அணுக் கொள்கை" தவறானவை என நிரூபிக்கப்பட்டு முற்றிலும் புதிய கொள்கைகளும் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறுதான் நாம் பௌதீகவியலில் படித்த "ஒளி நேர் கோட்டில் செல்லும்" என்ற விதியும். இன்று அது அலை வடிவமாகி அதற்கு மேலாக வரையறுக்கப்பட்டுச் செல்கிறது. நாங்கள் ஒன்பதாம் வகுப்பில் படித்த "திணிவுக் காப்பு விதி"க்கு நிகழ்ந்ததும் அதுதான். ஐன்ஸ்டைன் திணிவு சக்தியாக மாற்றம் பெறுகிறது என்றார். இவ்வாறுதான் விஞ்ஞானம் முன்னேறிச் செல்கிறது. விஞ்ஞானத்தில் முடிந்த முடிபாக எதுவுமில்லை. அது புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கூடாக பழையவற்றைக் களைந்து புதியவற்றைக் கண்டு அடைகிறது. இது முடிவிலி காலம் வரை நீண்டு செல்லலாம். ஆனால் நாமெல்லோரும் "விஞ்ஞான சோசலிசம்" என்ற பத விளக்கத்துக்கூடாக சமூகத்தைத் தேக்கத்தில் வைத்திருக்க அசையாக் கட்டுமானத்துக்குள் உறைய வைத்திருக்க விரும்புகிறோமா என அச்சப்படுகிறேன்.

பதில்: 19 ம் நூற்றாண்டில் உருவான பாரிஸ் க‌ம்யூன் தான் உல‌கில் முத‌லாவ‌து சோஷ‌லிச‌ப் புர‌ட்சி. அத்ற்கு த‌லைமை தாங்கிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌த‌ர‌ப் ப‌ட்ட‌ கொள்கைக‌ளை பின்ப‌ற்றின‌ர். அனார்க்கிஸ்டுக‌ள், சோஷ‌லிஸ்டுக‌ள் போன்ற‌வ‌ர்க‌ள். பிரெஞ்சு பாட்டாளி வ‌ர்க்க‌ம் ந‌ட‌த்திய‌ புர‌ட்சி என்ப‌து தான் முக்கிய‌ம். மார்க்ஸ் அத‌ன் தோல்வியை ஆய்வு செய்து "பிரான்ஸின் உள்நாட்டுப் போர்" என்ற‌ நூல் எழுதினார். அதில் நீங்க‌ள் எதிர்பார்க்கும் விம‌ர்ச‌ன‌ங்க‌ள் உள்ள‌ன‌. அதில் முக்கிய‌மான‌ இர‌ண்டு (சுய‌)விம‌ர்ச‌ன‌ங்க‌ள். 1. தொழிலாள‌ர், விவ‌சாயிக‌ளின் இராணுவ‌ம் உருவாக்க‌ப் ப‌ட‌ வேண்டும். 2. த‌ற்போதுள்ள‌ அமைப்பில் முத‌லாளித்துவ‌ ச‌ர்வாதிகார‌த்திற்கு மாற்றாக‌ பாட்டாளி வ‌ர்க்க‌ ச‌ர்வாதிகார‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட‌ வேண்டும்.

விஞ்ஞான‌ம் ப‌ற்றி நீங்க‌ள் கூறிய‌து மிக‌ச் ச‌ரி. அதைத் தான் மார்க்சிய‌மும் சொல்கிற‌து. அத‌னால் தான் அது விஞ்ஞான‌ சோஷ‌லிச‌ம் என்று அழைக்க‌ப் ப‌டுகின்ற‌து. நீங்க‌ள் உதார‌ண‌ம் காட்டிய‌ சார்ட்டிஸ்ட் இய‌க்க‌ம், உத்தோப்பிய‌ன் இய‌க்க‌ம் என்ப‌ன‌வும் சோஷலிச‌ சிந்த‌னை தான். ஆனால், விஞ்ஞான‌பூர்வ‌மான‌வை அல்ல‌. அவை கோட்பாடுக‌ள் ஆனால் விஞ்ஞான‌ம் அல்ல‌. அத‌னால் தான் கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் விஞ்ஞான‌ சோஷ‌லிச‌த்திற்கான‌ ஆய்வுக‌ளை செய்த‌ன‌ர். இந்த‌ விப‌ர‌ங்களை எங்கெல்ஸ் எழுதிய‌ "க‌ற்ப‌னாவாத‌ சோஷ‌லிச‌மா? விஞ்ஞான‌ சோஷ‌லிச‌மா?" என்ற‌ நூலில் வாசிக்க‌லாம்.

மார்க்சிய‌ம் என்ப‌து சித்த‌ந்த‌ம் அல்ல‌. அது விஞ்ஞான‌ம். தாராள‌மாக‌ விஞ்ஞான‌ முடிவுக‌ளை திருத்தி எழுத‌லாம். மார்க்சிய‌த்தை விஞ்ஞான‌பூர்வ‌மாக‌ ஆய்வு செய்து குறைக‌ளை திருத்தி எழுதிய‌து தான் லெனினிச‌ம். பிற்கால‌த்தில் மாவோ அதிலும் திருத்த‌ங்க‌ள் செய்தார். ஆக‌வே, நீங்க‌ள் சொல்வ‌து மாதிரி மாற்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌. ஆனால், முத‌லாளித்துவ‌ பாதைக்கு திரும்புவ‌து திரிபுவாத‌ம்.

விஞ்ஞானத்தில் முடிந்த முடிவு இல்லை. மார்க்சியமும் அப்படித் தான். அது முதலாளித்துவ காலகட்டத்தில் இருந்து சோஷலிச காலகட்டத்திற்கு மாறுவதற்கான விஞ்ஞானம். ஆனால், கம்யூனிச காலகட்டத்திற்கான விஞ்ஞான ஆய்வுகள் பூரணமடையவில்லை. நீங்கள் விரும்பினால் அதற்கான ஆய்வுகளை செய்யலாம். ஆனால், சோஷலிசத்தை கைவிட்டு விட்டு முதலாளித்துவத்திற்கு திரும்புவதற்குப் பெயர் விஞ்ஞானம் அல்ல. அது முன்னேற்றம் அல்ல, பின்னேற்றம். பிற்போக்குவாதம். இன்றைக்கும் டார்வினின் கூர்ப்பு கோட்பாட்டை பிழையென்று சொல்வோர் இருக்கிறனர். குறிப்பாக, மத அடிப்படைவாதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுளே எல்லாவற்றையும் படைத்தார் என்று சொல்கிறார்கள். அதே மாதிரி, இன்றைய உலகில் யாரும் மன்னராட்சியை கொண்டு வர விரும்ப மாட்டார்கள். அது மாதிரித் தான் இதுவும்.

கேள்வி : பொதுவுடமைப் பாதையைக் கைவிட்ட இந்த நாடுகளில் (முக்கியமாக சோவியத் யூனியனில்) 70 வருடங்கள் முயற்சித்து பல வகைகளிலும் பரப்பப்பட்ட பொதுவுடமைத் தத்துவத்தை அந்த மக்களின் பெரும்பான்மை ஏன் நிராகரித்தது என்பதே இங்குள்ள கேள்வியாகும். தத்துவத்தில் உள்ள குறையா ? அல்லது மக்கள் சமூகத்துக்கு நன்றான அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஆட்சியாளர்களின் குறைபாடா ?

(பிற்குறிப்பு: இது மேலே உள்ள கேள்வியில் இருந்து எடுத்த ஒரு பகுதி. மேலதிக விளக்கம் கொடுப்பதற்காக தனியாக எடுத்திருக்கிறேன்.)

பதில்: உலக வரலாற்றுக் காலகட்டத்தில், பாராளுமன்ற ஆட்சியும் இதே மாதிரியான நெருக்கடிகளை சந்தித்து இருந்தது. மன்னராட்சிக்குப் பதிலாக பாராளுமன்ற குடியரசு முறை வந்தது. ஆனால், அதற்காக பல போர்கள் நடந்துள்ளன. பெரும்பான்மை மக்களும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை.

கவனிக்கவும்: அன்றைய பாராளுமன்ற ஆட்சி ஒரு சர்வாதிகாரம், ஜனநாயகம் இருக்கவில்லை, தேர்தல்கள் நடக்கவில்லை. இருப்பினும், அது நிலைத்து நிற்பதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. சுற்றியுள்ள மன்னராட்சி நாடுகளின் சதிகளை முறியடிக்க வேண்டியிருந்தது.

பிரித்தானியாவில், 1649 ம் ஆண்டு மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, பாராளுமன்ற ஆட்சிமுறை வந்தது. அது வெறும் பத்து வருடங்கள் மட்டுமே நீடித்தது. அதற்குப் பிறகு, பெரும்பான்மை ஆங்கிலேய மக்கள் பாராளுமன்ற ஆட்சியை நிராகரித்து, மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வந்தார்கள்.

நெதர்லாந்தில், 1795 ம் ஆண்டு, மன்னராட்சி கவிழ்க்கப் பட்டு, பதாவியாக் குடியரசு உருவானது. அதுவும் பத்தாண்டுகள் மட்டுமே நீடித்தது. பதவியிறக்கப் பட்ட நெதர்லாந்து இளவரசன், இங்கிலாந்து மன்னரின் உறவினன். அதனால், இங்கிலாந்து பல வழிகளிலும் டச்சு பதாவியாக் குடியரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதன் விளைவுகளில் ஒன்று தான், டச்சுக்காரர் வசமிருந்த இலங்கைத் தீவு ஆங்கிலேயக் காலனியானது.

இறுதியில், நெதர்லாந்து மக்களில் ஒரு பகுதியினரும் பதாவியா குடியரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். பிரதமரும்,பாராளுமன்ற உறுப்பினர்களும், கலகக் கும்பலால் அடித்துக் கொல்லப் பட்டனர். பாராளுமன்றக் குடியரசு பெரும்பான்மை டச்சு மக்களால் நிராகரிக்கப் பட்ட பின்னர், அங்கு மீண்டும் மன்னராட்சி அமைக்கப் பட்டது.

நிலப்பிரபுத்துவத்திற்கு 1000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. முதலாளித்துவத்திற்கு 300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாறு உள்ளது. அவற்றுடன் ஒப்பிடும் போது சோஷலிசத்தின் 70 வருட வரலாறு ஒரு பெரிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
சோஷலிசப் புரட்சிக்குப் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமை
கம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதில்லை

Wednesday, October 05, 2016

சோஷலிசப் புரட்சிக்குப் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமை


ஒரு நாட்டில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், அங்கே சோஷலிசப் புரட்சி நடந்ததாக அர்த்தம் இல்லை. அதற்கு முன்னர் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற காலகட்டம் உள்ளது. இதனால், பல முன்னாள் "சோஷலிச" நாடுகள், உத்தியோகபூர்வமாக மக்கள் ஜனநாயகக் குடியரசுகள் என்று அழைத்துக் கொண்டன.

சோஷலிச நாடுகளாக கருதப் பட்ட, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், மற்றும் கியூபா ஆகியன, உண்மையில் மக்கள் ஜனநாயகக் குடியரசுகளாக இருந்தன. மக்கள் ஜனநாயகக் குடியரசில், புரட்சிக்கு முன்பிருந்த அதே அமைப்பு வடிவம் தொடர்ந்தும் இருக்கும். முன்பிருந்த முதலாளிகள், நிலவுடைமையாளர்களும் இருப்பார்கள். ஆனால், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அவர்களை கட்டுப்படுத்தும்.

வர்க்கப் போராட்டம் என்பதன் அர்த்தம், வர்க்க சமுதாய அமைப்பை இல்லாதொழிப்பது. ஒரு சிலர் தவறாக நினைப்பது போல, வர்க்கத்தை சேர்ந்த மனிதர்களை ஒழித்துக் கட்டுவதல்ல. கலகம் செய்யும் எதிர்ப்புரட்சியாளர்கள் மட்டுமே கைது செய்யப் படுவர், அல்லது சுட்டுக் கொல்லப் படுவர். ஏனையோர் அரசியல் பாடங்களை கற்று தம்மைத் தாமே திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப் படும்.

சீனாவில் நடந்த புரட்சிக்குப் பின்னரும் அதே மாதிரியான நிலைமை தானிருந்தது. பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் மட்டுமே எதிரிகளாக பிரகடனப் படுத்தப் பட்டனர். தேசிய முதலாளிகள் தொடர்ந்தும் இயங்குவதற்கு அனுமதிக்கப் பட்டது. அந்த வகையில், நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள், பணக்கார விவசாயிகள் கூட பொருளாதார நன்மை கருதி விட்டு வைக்கப் பட்டனர்.

இதிலே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. முன்னாள் முதலாளிகள், நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள் போன்றோர், தமது சமூக அந்தஸ்தை இழந்து விடுவார்கள். அதாவது அவர்களும் சாதாரண தொழிலாளர்கள் போன்றே கருதப் படுவார்கள்.

உதாரணத்திற்கு, ஒரு முதலாளி தனது தொழிற்சாலையில் ஒரு சாதாரண தொழிலாளியாக வேலை செய்ய வேண்டும். அத்துடன் "முதலாளிக்குரிய" நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார். நிலவுடமையாளரும் அப்படியே தனது வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

முன்னாள் முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் ஐந்தாண்டுகள் வேலை செய்ய வேண்டும். பணக்கார விவசாயிகளுக்கு மூன்றாண்டுகள். அந்தக் காலகட்டத்தில் அவர்களும் சாதாரண தொழிலாளர்கள் போன்று அரசியல் கல்வி புகட்டும் பாடசாலைக்கு செல்ல வேண்டும். ஐந்து வருடம் முடிந்ததும் அவர்களது வர்க்க மனப்பான்மை எப்படி இருக்கின்றது என்பது சோதித்து அறியப் படும். திருப்தி இல்லாவிட்டால், மேலும் சில வருடங்கள் நீடிக்கப் படும்.

(ஆதாரம்: de culturele revolutie in China, Adrian Hsia)

மேற்குறிப்பிட்ட பதிவு தொடர்பாக, பேஸ்புக்கில் எனக்கும், நடராஜா முரளிதரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை கீழே தருகின்றேன். சோவியத் யூனியன், சோஷலிச நாடுகள் குறித்து மேற்குலகம் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்களை, இவரைப் போன்று பலர் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சந்தேகங்களை தெளிவு படுத்துவதற்கு அது உதவும்.

கேள்வி (Nadarajah Muralitharan): கட்சித் தலைவர்களும் கட்சி நிர்வாகிகளும் சலுகை பெற்ற அதிகாரம் கொண்ட புதிய வர்க்கமாக மாறவில்லையா ? மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக "கியூ"வில் முண்டியடித்துக் கொண்டிருக்கையில் கட்சி நிர்வாகிகளும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்ட கட்சி உறுப்பினர்களும் பிரத்தியேகமான கடைகளில் தங்களுக்கானவற்றைச் சுலபமாக கொள்முதல் செய்யவில்லையா ?

பதில்: அது எப்போது ந‌ட‌ந்த‌து என்ப‌து முக்கிய‌மான‌து. யுத்த‌ கால‌த்தில் மேற்கு ஐரோப்பாவிலும் அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளுக்கு த‌ட்டுப்பாடு நில‌விய‌து. ம‌க்க‌ள் கியூ வ‌ரிசையில் நின்றார்க‌ள்.

சோவிய‌த் யூனிய‌னில் குருஷேவ் வ‌ந்த‌ பின்ன‌ரும், சீனாவில் டெங்சியாபெங் வ‌ந்த‌ பின்ன‌ர் முத‌லாளித்துவ‌ சீர்திருத்த‌ங்க‌ளை அறிமுக‌ப் ப‌டுத்தினார்க‌ள். க‌ட்சி நிர்வாகிக‌ள் ப‌ற்றி ம‌ட்டும் தான் உங்களுக்கு தெரியும். க‌ம்ப‌னி நிர்வாகிகள், உத்தியோக‌ம் பார்க்கும் ம‌த்திய‌ த‌ர வ‌ர்க்க‌மும் ச‌லுகைக‌ளை அனுப‌வித்த‌ன‌ர். அந்த‌ப் பிரிவின‌ரை வேண்டுமென்றே ம‌றைப்ப‌து ஏனோ?

கேள்வி: அந்தப் பிரிவினர் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து எல்லோருக்கும் தெளிவாகத் தெரிகிறது. அத்தகையவர்கள் கூடுதல் நலன்களைத் தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களோடு கொண்டு போய் பொதுவுடமைத் தத்துவத்தில் தோய்ந்தெழுந்தவர்களை சுரண்டலுக்கு எதிராகப் போர்க் கோலம் பூண்டவர்களையும் ஒப்பிடுவது நகைப்புக்கு இடமாக இல்லையா?

பதில்: இப்போது யார் ஒப்பிட்டார்கள்? கலப்புப் பொருளாதாரம் இருந்தால், அங்கே நிர்வாகிகளும், மத்தியதர வர்க்கத்தினரும் இருப்பார்கள் தானே? அதிலென்ன அதிசயம் கண்டுவிட்டீர்கள்? குருஷேவ் "சோவியத் யூனியன் அனைத்து மக்களுக்குமான நாடு" என்று சொன்னார். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? மேற்கத்திய நாடுகளில் இருப்பது மாதிரி, எல்லா வகையானவர்களையும் சகித்துக் கொள்ளும் சமூகம்.

கேள்வி: அந்த நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் என்று சொல்லுகிறேன். பொதுவுடமைத் தத்துவத்தைக் கரைத்துக் குடித்தததாகப் பறைசாற்றுபவர்கள் என்கிறேன். பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினர்கள் என்று கூறுகிறேன். அப்படிப்பட்டவர்கள் சாதாரண மக்களையும் விடவும் சலுகைகளைக் கூடுதலாக அனுபவிக்கத் துடித்திருக்கிறார்கள். 1917 இல் நடைபெற்ற புரட்சிக்குப் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து அங்கே ஏன் கலப்புப் பொருளாதாரம் நிகழ வேண்டியிருந்தது ?

பதில்: "கட்சி நிர்வாகிகள்" என்ற போர்வையின் கீழ் சிறு முதலாளிகள், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளையும் மறைக்கிறீர்கள். ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகு de- stalinisation என்ற ஒன்று நடந்தது தெரியுமா? அது என்ன தெரியுமா? ஸ்டாலின் காலத்தில் வர்க்கமற்ற சமுதாயம் கறாராக பின்பற்றப் பட்டது. கூட்டுத்துவ பொருளாதார அமைப்பு காரணமாக யாரும் சொத்து சேர்க்க முடியாத நிலைமை இருந்தது. 

ஆனால், குருஷேவ் கொண்டு வந்த de-stalinisation அதை இல்லாதொழித்தது. முதலாளித்துவ செயற்பாடுகளும் சிறிய அளவில் அனுமதிக்கப் பட்டன. அப்போது புதிதாக கம்பனி நிர்வாகிகள் உருவாகினார்கள். அவர்கள் கட்சிக்கு கட்டுப் பட்டு நடந்தாலும், ஓரளவு சுதந்திரமாக இயங்க முடிந்தது. மானேஜர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்தது. அதெல்லாம் கூடாது என்று சொல்கிறீர்களா? அப்போ நீங்கள் அசல் ஸ்டாலினிஸ்ட் ஆக இருக்க வேண்டும்.

கேள்வி: மக்கள் கிளர்ந்தெழுந்த .....தொழிலாளர்கள் ஆர்ப்பரிந்தெழுந்த ....போராட்டம் ....பின்பு தத்துவார்த்தம் ஊட்டப்பட்ட சமூகமாக மாறிய பொதுவுடமைத் தேசத்தில் தனியொரு மனிதன் ஸ்ராலின் கடவுளாக மாற்றம் பெறுகிறார். பின்பு அவர் மறைந்த பின் அனைத்து மாற்றங்களும் தலைகீழாக ஆகி விட்டது என்று சொல்லுவது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா ?

பதில்: மேலெழுந்தவாரியாக பார்த்தால் அப்படித் தான் தெரியும். ஸ்டாலினை யாரும் கடவுளாக்கவில்லை. அது வெளியுலகில் நடத்தப் பட்ட விஷமப் பிரச்சாரம். ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை நடைமுறைப் படுத்தினார் என்று தான் சொன்னேன். அது என்ன என்றாவது கேட்டிருக்க வேண்டும். அதாவது, நீங்கள் குற்றம் சாட்டும் கட்சி நிர்வாகிகள் கூட அதிகாரத் துஸ்பிரயோகம் செய்தால், அல்லது லஞ்சம் வாங்கினால், சிறைக்குப் போக வேண்டியிருக்கும். ஊரில் யாரிடமாவது பணம் புழங்குவதாக தெரிந்தால் மக்களே தகவல் கொடுப்பார்கள். 

அப்படியானதொரு சமுதாயத்தில் நீங்கள் சொல்லும் முறைகேடுகள் எப்படி இருக்க முடியும்? அப்படியானால் நீங்கள் லஞ்சம், ஊழலை ஆதரிப்பவரா? ஸ்டாலின் மறைந்த பிறகு, கட்சிக்குள் குருஷேவின் திடீர் சதிப்புரட்சி நடந்தது. ஸ்டாலினுக்கு ஆதரவானவர்களை விலத்தி விட்டு, தனக்கு விசுவாசமானவர்களை நியமித்தார். அதன் பிறகு ஸ்டாலினுக்கு எதிரான குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்டது... இதில் "மோசடி" எங்கே வந்தது? அது அதிகார மட்டத்தில் நடந்த ஆட்சி மாற்றம்.

//தத்துவார்த்தம் ஊட்டப்பட்டமாக சமூகமாக மாறிய பொதுவுடமைத் தேசத்தில்// இது அதீத கற்பனை. எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள். சோவியத் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்கள் மக்கள் தான். உங்களை மாதிரி ஆட்களும் இருப்பார்கள். என்னை மாதிரி ஆட்களும் இருப்பார்கள். இதையெல்லாம் வாசித்துக் கொண்டிருப்பவர்கள் மாதிரி ஆட்களும் உண்டு. வெவ்வேறு அரசியல் கொள்கைகளை நம்புகிறவர்கள் இருப்பார்கள். 

பொதுவுடைமை தத்துவம் என்பது "ஊட்டப் படுவது" அல்ல. அதை மக்கள் தாமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். யாரையும் வற்புறுத்த முடியாது. ஒரே இரவில் எல்லாவற்றையும் அடியோடு மாற்ற முடியாது. சமூகம் மெல்ல மெல்லத் தான் மாறும். அதற்குப் பொறுமை வேண்டும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நடக்க முடியாது. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல முடியாது. எப்படிப் பட்ட எதிரியாக இருந்தாலும் திருந்துவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

கேள்வி: "இது அதீத கற்பனை." இங்கு நான் இதனை அச்சொட்டாகச் சொல்லவில்லை. இந்த நாடுகளில் பொதுவுடமைத் தத்துவம் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களில் புகட்டப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள எல்லா ஊடகங்களிலும் பொதுவுடமைத் தத்துவம் ஒலிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வந்தது. கலை, இலக்கியம், திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்குப் பொதுவுடமைத் தைலம் பூசப்பட்டது. "எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள்." என்ற ஒப்புதல் வாக்குமூலம் இங்கு நடக்கும் உரையாடலில் குறிப்பிடத்தக்கது. "சோவியத் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்கள் மக்கள் தான். உங்களை மாதிரி ஆட்களும் இருப்பார்கள்." இந்த வாக்கியமும் இங்கு முக்கியமானதொன்று! ஆகாவென்றெழுந்த "யுகப் புரட்சியை" நிகழ்த்திய சோவியத் மக்கள் ஒப்பீட்டளவில் தமிழ் மக்களைக் காட்டிலும் கூடுதலாகப் பொதுவுடமைத் தத்துவார்த்தப் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் கலை! மக்கள் தாமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். யாரையும் வற்புறுத்த முடியாது. அப்படியாயின் 1917 இல் நிகழ்ந்தது ஒரு நாட்டுக்குள் நிகழ்ந்த "சோசலிசப் புரட்சி" அல்ல....மிகச் சிறுபான்மையோரால் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட புரட்சியாகவே "கலை" ரஷ்யப் புரட்சியை நோக்குகிறார் எனலாம். ஆனால் பொதுவுடமைத் தத்துவவாதிகள் ஒரு நாட்டுக்குள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட "சோசலிசப் புரட்சி" என்றே அக்டோபர் புரட்சியை வரையறுத்திருந்தனர். 70 வருட காலம் நீடித்த புரட்சியின் பின்னான அந்த ஆட்சி ஆட்டம் காண முன்பு வெகுகாலத்துக்கு முன்பாகவே 1956இல் ஹங்கேரிக்கு சோவியத் படைகள் ஏன் அனுப்பப்பட்டது ? ஹங்கேரி என்ற நாடு சார் மன்னர்கள் காலத்திலேயே ரஷ்யாவுக்குள் இருந்த நாடா ? அல்லது ஜேர்மனியின் நாஜிப்படைகளை வெற்றி கொண்ட செம்படையினர் வலிந்து ஆக்கிரமித்த நிலமா ஹங்கேரி ?

பதில்: நீங்கள் இரண்டு மாறுபட்ட விடயங்களை ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். உங்களது கருத்திடலில் பல தடவைகள் அவதானிக்கப் பட்ட குறைபாடு இது. //தத்துவார்த்தம் ஊட்டப்பட்டமாக சமூகமாக மாறிய பொதுவுடமைத் தேசத்தில்// என்ற கூற்றுக்கு தான் விளக்கம் கூறினேன். புரட்சியில் என்ன நடந்தது என்று விவாதிக்கவில்லை. தத்துவம் ஊட்டுவது பற்றி மேலதிக விளக்கம் கூறி விட்டு புரட்சிக்கு வருகிறேன். 

இன்று பெரும்பான்மையான உலக நாடுகளில் முதலாளித்துவ தத்துவம் பாடசாலைகளில் போதிக்கப் படுகின்றது. ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. சுயநலம் பேணுவது, நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாவது சர்வ சாதாரணமாக கருதப் படுகின்றது. செல்வம் சேர்க்க வேண்டும் என்ற வெறி, பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை, எல்லாம் ஊக்குவிக்கப் படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் முதலாளித்துவ தத்துவம் மறைந்திருப்பதை யாரும் மறைக்க முடியாது. 

இருந்தாலும் இவற்றில் நம்பிக்கையற்ற மக்களும் இருக்கிறார்கள் தானே? அதாவது சுயநலம் பார்க்காமல் பொதுநல சேவை செய்பவர்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். பணம், பொருளில் பற்று இல்லாதவர்கள். பேராசை கொள்ளாதவர்கள்.... உலகில் இப்படியான மனிதர்களும் இருக்கிறார்கள் தானே? அவர்கள் தான் நீங்கள் வெறுக்கும் "பொதுவுடைமைவாதிகள்". 

அரசே முன்னின்று பொதுவுடைமை கொள்கையை செயற்படுத்தும் நாட்டில் அவை தான் போதிக்கப் படும். அதெல்லாம் தவறு என்று சொல்கிறீர்களா? அதே நேரம், அந்த சமூகத்தில் சுயநலவாதிகள், பணத்தாசை கொண்டவர்கள், பேராசை மிக்கவர்களும் இருப்பார்கள். அதாவது, சுருக்கமாக முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்கள். இவர்களை முடிந்த வரையில் திருத்தி எடுப்பது தானே முறை? ஒருவனை கெட்ட வழியில் செல்ல விடாமல் நல்லவனாக மாற்றுவதை நீங்கள் "தத்துவார்த்தம் ஊட்டப்பட்டது" என்று புரிந்து கொள்கிறீர்கள். உங்களது புரிதல் அப்படித் தான்.

புரட்சி தொடர்பாக... உங்களுக்குத் தெரியுமா? உலகில் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி நடந்த நாடு எது? அது ரஷ்யா அல்ல! பிரான்ஸ்!! பாரிஸ் கம்யூன் என்ற பெயரில் பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப் பட்டது. மூன்று மாதங்கள் நீடித்தது. 

ரஷ்யாவில் நடந்த பாட்டாளிவர்க்க புரட்சி மட்டுமே உங்களுக்குத் தெரியும். அதே காலகட்டத்தில், ஜெர்மனியில் நடந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பெர்லின், மியூனிச், ஹம்பேர்க் ஆகிய நகரங்களில் சோவியத் அரசுகள் உருவாக்கப் பட்டன! குறைந்தது ஒரு மாதமாவது ஜெர்மன் சோவியத்துகள் நின்று பிடித்தன. 

இதை விட ஹங்கேரியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடந்து சில மாதங்கள் நீடித்தது. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பொதுவுடமைப் புரட்சி நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. அதைத் தடுப்பதற்கு அரசுகள் எல்லா முயற்சிகளையும் எடுத்திருந்தன. ஆகவே, புரட்சி என்பது ரஷ்யாவுக்கு மட்டுமே உரிய தனித்துவம் அல்ல. அது உலகில் எந்த நாட்டிலும் நடக்கலாம், நடந்துள்ளது. 

ரஷ்யா மட்டும் ஏன் விதிவிலக்காக பேசப் படுகின்றது? அதற்குக் காரணம் புரட்சியை தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போர். போல்ஷெவிக் கட்சியினர், தொழிலாளர்கள், விவசாயிகளை இணைத்து செம்படையை உருவாக்கினார்கள். அது எதிர்ப்புரட்சியாளர்களுடனான போரில் வெற்றி பெற்றது. அதனால் தான் அங்கு உருவான பொதுவுடைமை அரசு அடுத்து வந்த எழுபதாண்டுகள் நீடித்தது. 

பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி போன்ற நாடுகளில் எதிப்புரட்சியாளர்கள் பலமாக இருந்தனர். தேசிய இராணுவம் அவர்களது பக்கம் நின்றது. அதனால், அங்கு நடந்த புரட்சிகள் வன்முறை கொண்டு அடக்கப் பட்டன. அப்போது புரட்சியில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப் பட்டனர்.

//1956இல் ஹங்கேரிக்கு சோவியத் படைகள் ஏன் அனுப்பப்பட்டது ?// நீங்கள் ஒரு தடவை நேட்டோ ஒப்பந்தம் என்ன சொல்கிறதென்று வாசித்துப் பாருங்கள். நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடொன்றில் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அங்கு நேட்டோ படைகளை அனுப்பும். ஒரு தடவை அப்படியும் நடக்க இருந்தது. 

போர்த்துக்கல் நாட்டில் பொதுவுடைமைக்கு ஆதரவான இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினார்கள். அங்கு ஜனநாயக வழியில் தெரிவு செய்யப் பட்ட சோஷலிச அரசு அமைந்தது. அதைத் தொடர்ந்து, நேட்டோ கடற்படைக் கப்பல்கள் போர்த்துக்கல் கரையோரத்தில் முற்றுகையிட்டன. படையெடுக்கப் போவதாக மிரட்டின. ஹங்கேரியிலும் அதே கதை தான் நடந்தது. 

ஹங்கேரி வார்சோ ஒப்பந்த உறுப்புரிமை கொண்ட நாடாக இருந்தது. அதுவும் நேட்டோ மாதிரியான விதிகளை உள்ளடக்கிய இராணுவக் கூட்டமைப்பு தான். அந்த வகையில் ஹங்கேரி கிளர்ச்சியை அடக்குவதற்கு வார்சோ படையணிகள் அனுப்பப் பட்டன. நேட்டோவில் பெரும்பங்கு அமெரிக்க இராணுவம் இருப்பது மாதிரி, வார்சோவில் சோவியத் இராணுவம் பெரும்பங்கு வகித்தது. இது தான் நடந்தது. வார்சோ படையணிகளை, சோவியத் படைகள் என்று திரித்து பேசுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

கேள்வி: சோவியத் யூனியன் என்பது அந்தந்த நாடுகளில் வாழும் மக்களின் விருப்புக்கு மாறாக ஒன்றிணைக்கப்பட்ட கூட்டமைப்பு இல்லையா ?

பதில்: அப்போ நீங்க‌ தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌த்திற்கு எதிரான‌வரா? சார் ம‌ன்ன‌ன் கால‌த்தில், 20 ம் நூற்றாண்டு வ‌ரை ர‌ஷ்யா என்ற‌ ஒரே தேச‌மாக‌ இருந்த‌து. அதைத் தான் சோவிய‌த் யூனிய‌ன் என்ற‌ பெய‌ரில் 15 குடிய‌ர‌சுக‌ளாக‌ பிரித்தார்க‌ள். அத‌ற்குள் ஒவ்வொரு இன‌த்திற்கும் த‌னித் த‌னியாக‌ த‌ன்னாட்சிப் பிர‌தேச‌ங்க‌ளும் உருவாக்கினார்க‌ள். அதற்காக‌ அந்த‌ ம‌க்க‌ள் சோவிய‌த் யூனிய‌னுக்கு ந‌ன்றி கூற‌க் க‌ட‌மைப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.

கேள்வி: அடிப்படையில் நான் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவானவன். சார் மன்னன் ஆயுத முனையில் கட்டியாண்ட பெரு நிலப் பிரதேசத்தை நீங்கள் ஒரே அரச பிராந்தியமாக மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்றாகக் கருதுகிறீர்களா ? அப்படியாயின் லெனின் காலத்தில் உக்ரேன் பிரிய வேண்டிய காலகட்டம் ஏன் நிகழ்ந்தது ? எஸ்தோனியா,லாட்வியா, லிதுவேனியா மக்கள் எந்தக் காலத்திலும் "ஸ்லாவிய" இன மக்களாக தங்களைக் கருதவில்லை. அதனால் சோவியத் யூனியனோடு இணைந்திருக்க அவர்கள் எந்தக் காலத்திலும் பிரியப்படவில்லை. எந்தக் குடியரசுகளும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி இணைக்கப்படவில்லை.

பதில்: சுயநிர்ணய உரிமைக்கு "ஆதரவானவர்" சோவியத் யூனியனை எதிர்க்க மாட்டார். ஏனென்றால் சோவியத் புரட்சிக்குப் பிறகு தான் சுயநிர்ணயம் பற்றிய பேச்சே எழுந்தது. அது நடைமுறைப் படுத்தப் பட்டது. அதற்கு முன்னர் அதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாதக் கருத்துக்கள் ஏற்கனவே சில இடங்களில் பரவி இருந்தன. உதாரணத்திற்கு, ஆர்மேனியா, ஜோர்ஜியா. 

அதே நேரம், மத்திய ஆசியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கிளர்ச்சி செய்தனர். அவர்களது நோக்கம் தேசிய அரசு அல்ல. மாறாக, இஸ்லாமிய அரசு. ஸ்லாவிய மக்கள் ரஷ்யா, உக்ரைன், வெள்ளை ரஷ்யாவில் மட்டும் இருந்தனர். மற்ற நாடுகளில் வெவ்வேறு மொழிகளை பேசினார்கள். அவற்றிற்கும் ஸ்லாவிய மொழிகளுக்கும் சம்பந்தம் இல்லை. மொல்டாவியாவில் ருமேனிய மொழி, அசர்பைஜானில் துருக்கி மொழி.... ஏன் ரஷ்யாவுக்குள் கூட நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப் படுகின்றன.

1917 ம் ஆண்டுக்கு முந்திய உலக வரலாற்றில் எந்தவொரு நாடும், "சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி" இணைக்கப்படவில்லை. பிரித்தானியாவில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தியா அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸை இணைத்தார்கள்? ஸ்பெயினில், பிரான்சில் சர்வசன வாக்கெடுப்பு நடந்ததா? நோர்வே, சுவீடன், பெல்ஜிய, நெதர்லாந்து, இங்கெல்லாம் சிறுபான்மை இனங்களை சர்வசன வாக்கெடுப்பு நடத்தியா இணைத்தார்கள்?

கேள்வி: சுயநிர்ணயம் என்ற மொட்டைத் தலையோடு சோவியத் யூனியன் என்ற முழங்காலை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கின்றேன்! தேசிய இனம் குறித்த சிந்தனைகள் மேற்கு ஐரோப்பாவிலேயே முதலில் தோற்றம் பெற்றது. அறிவொளிக் காலமும் கைத்தொழிற் புரட்சியும் அதற்கான தோற்றுவாய்களாக இருந்தன. மதமாகவும் ...கடவுளாகவும் எவற்றையும் வழிபாடு செய்ய வேண்டிய அவசியம் கருத்துக் கட்டாயம் உண்மையான உரையாடலுக்கு இடையூறு என்று எண்ணுகிறேன். மக்கள் எழுச்சி பெற்ற காலங்கள் ...ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிய வேளைகளில் நல்ல கருத்தியல்கள் பிறந்திருக்கின்றன என்பதற்காக அவற்றைக் கண்மூடித்தனமாகப் போற்ற வேண்டியதில்லை. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கருத்தியல் பெரும் விவாதமாக லெனின் காலகட்டத்தில் உருவெடுத்தாலும் ஸ்ராலின் போன்றவர்கள்(ஸ்ராலின் ஜோர்ஜியனாக இருந்த பொழுதிலும்) ரஷ்யப் பெருந்தேசியவாதிகளாகவே இருந்தார்கள் என்பதே வரலாற்றுண்மை. ஏனென்றால் போர்களை வெற்றி கொள்ள மக்களுக்குத் தேசிய வெறியை ஊட்ட வேண்டிய கட்டாயத்தில் ஸ்ராலின் போன்றவர்கள் இருந்தார்கள்.

பதில்: மேற்கு ஐரோப்பிய "தேசிய இன சிந்தனைகள்"(?) பேரினவாதமாக மாறியதை கண்டுகொள்ளாமல் மறைப்பது ஏனோ? உதாரணத்திற்கு, பிரெஞ்சு "தேசிய இனம்", சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கியது. அவர்கள் வீட்டில் கூட தமது மொழியைப் பேச விடாமல் தடை போட்டது. இது சுத்த பேரினவாத சிந்தனை. அனேகமாக எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பேரினவாத சிந்தனை தான் கோலோச்சியது. 

சோவியத் ஒன்றியத்தின் குறிக்கோள் தேசியங்களை வளர்த்து விடுவதல்ல. பாட்டாளி வர்க்க மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவது. சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவது. நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள், தமது மொழி, கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு உதவியாகத் தான் தேசிய அரசமைப்பு உருவாக்கப் பட்டது. உங்களது மனதில் உள்ள "தேசிய இன சிந்தனை" வேறு. அது மக்களுக்கான அரசு அல்ல. மேட்டுக்குடி வர்க்கம் சலுகைகளை கோரும் அரசு. ஒரே இனத்தில் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆளும் ஒடுக்குமுறை அரசு. அது தான் உங்கள் மனதில் உள்ள "தேசிய இன சிந்தனை"!

கேள்வி: தேசிய இனம் என்ற கருத்தியல் தோற்றம் பெற்ற வரலாற்றைப் பற்றிப் பேசுகையில் மேற்கைப் பற்றிக் குறிப்பிட வேண்டி நேர்ந்தது. அதற்காக மறைப்பது என்று சொல்லுவது அபத்தத்தின் உச்சம். எப்படியாயினும் சோவியத் ஒன்றியம் என்பதில் ரஷ்யப் பேரினவாதமே மேலாட்சி செலுத்தியது என்பதை யாரும் மறைக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவதாயின் சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதாயின் அது பெரும்பான்மை மக்களது ஆதரவோடு நிகழ்த்தப்பட வேண்டும். அதனைத் திணிக்க முடியாது. ஆயுத முனையில் அமுலாக்கினால் நீண்ட காலத்திற்கு அது தாக்குப் பிடிக்க முடியாது. அந்தந்த மக்களை இயல்பாக இருக்க விடுங்கள். அவர்கள் தங்களது மொழியையும் கலையையும் பண்பாட்டையும் காப்பார்கள். இங்கு எஜமான் தேவையில்லை. எனது மனதில் உள்ள தேசிய இனச் சிந்தனையானது மேலாதிக்க மனோபாவம் கொண்டதல்ல என்று உறிதியாகக் கூறுகிறேன். இன்றைய ரஷியாவின் அதிபர் முன்னாள் "கொம்யூனிஸ்ட்" எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்க்கிறீர்களா ? முழுக்க முழுக்க ரஷ்ய பேரினவாத மேலாண்மையும் ஓதோடொக்ஸ் கிறீஸ்தவ மத வாதமும் அவரில் பொங்கி வழிவதை அவதானிக்கலாம். கலையும் கூட மேற்குலக சுரண்டல் அரசின் சலுகைகளைப் புத்திசாலித்தனமாக அனுபவித்துக் கொண்டு எங்கள் எலலோருக்கும் மார்க்சீயம் போதிக்க விரும்புகிறார். அவருடைய புகலிட வாழ்வில் என்றுமே எந்தப் பொதுவுடமை சார்பு நாடுகளுக்குச் செல்லவோ அதனை அங்கு சென்று ஆராயவோ அல்லது அங்கு வாழவோ விரும்பியிருக்க மாட்டார் என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது!

பதில்: //சோவியத் ஒன்றியம் என்பதில் ரஷ்யப் பேரினவாதமே மேலாட்சி செலுத்தியது// அபத்தமான கற்பனை. இதை மேற்குலகப் பேரினவாதிகள் சொல்வது தான் மிகப் பெரிய அபத்தம். சோவியத் யூனியன் ரஷ்யப் பேரினவாதிகளை அடக்கியொடுக்கியது. வெண் படைகள் என்ற பெயரில் எதிர்ப்புரட்சியில் ஈடுபட்ட ரஷ்யப் பேரினவாதிகளுக்கு மேற்குலக நாடுகள் முண்டு கொடுத்தன. ரஷ்யப் பேரினவாதிகளுக்கு ஆதரவாக தமது படைகளையும் அனுப்பின. 

ரஷ்ய மொழி பொது மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு விடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதை பேரினவாதமாக காட்ட முடியாது. உங்களிடமே கேட்கிறேன். வேறு எந்த மொழியை பொது மொழியாக படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் இவற்றில் ஒன்றை சோவியத் யூனியனின் பொது மொழியாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா? ரஷ்ய மொழியை இரண்டாம் மொழியாக படிப்பது "ரஷ்ய பேரினவாதம்" என்றால், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக படிப்பதற்கு என்ன பெயர்? அது பேரினவாதம் இல்லையா?

//பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவதாயின் சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதாயின் அது பெரும்பான்மை மக்களது ஆதரவோடு நிகழ்த்தப்பட வேண்டும். அதனைத் திணிக்க முடியாது.// நீங்கள் குறிப்பிடும் அந்தப் "பெரும்பான்மை" மக்கள் யார்? முதலாளிகளா? பணக்காரர்களா? நிலவுடமையாளர்களா? இல்லவே இல்லை. சாதாரண விவசாயிகள், தொழிலாளர்கள் தான் ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருப்பார்கள். அவர்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு உதவுவது எப்படி "திணிப்பு" ஆகும்? உண்மையில் அது தான் ஜனநாயகம். 

போல்ஷெவிக் புரட்சிக்கு முன்னரே, ரஷ்யாவில் மேற்குறிப்பிட்ட பிரிவினர் புரட்சி செய்தனர். அதற்குப் பிறகு உருவான இடைக்கால அரசு முதலாளித்துவ நலன் சார்ந்த அரசாக இருந்தது. அதனால் தான் பிற்காலத்தில் போல்ஷெவிக் புரட்சி நடந்தது. அதைத் தொடங்கியவர்கள் சாதாரண கடற்படையினர். தொழிலாளர்கள் உதவியுடன் குளிர்கால அரண்மனையை கைப்பற்றியதும் புரட்சி வெடித்தது. 

ஆரம்பத்தில் சென் பீட்டர்ஸ்பெர்க் மட்டும் புரட்சியாளரின் கையில் இருந்தது உண்மை. ஏனைய இடங்களில் உள்நாட்டுப் போர் நடந்தது. நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சாதாரணமான விவசாயிகள், தொழிலாளர்கள் தான் செம்படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையில் ஒரு நாள் கூட துப்பாக்கியை தொட்டிராத விவசாயிகள், தொழிலாளரை படைவீரர்களாக மாற்றுவது லேசான விடயமா?

//இன்றைய ரஷியாவின் அதிபர் முன்னாள் "கொம்யூனிஸ்ட்" எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்க்கிறீர்களா ?// இது மற்றொரு அபத்தமான கூற்று. ஒரு காலத்தில் அப்படி இருந்தார்கள் என்பதற்காக இபோதும் அப்படி இருப்பார்களா? அவர்கள் இன்று முதலாளித்துவவாதிகள். ஒரு முதலாளித்துவவாதி எப்படி நடந்து கொள்வார் என்பது உங்களுக்கு தெரியும் தானே? அப்படித் தான் நடந்து கொள்கிறார். இதில் என்ன ஆச்சரியம்?

//கலையும் கூட மேற்குலக சுரண்டல் அரசின் சலுகைகளைப் புத்திசாலித்தனமாக அனுபவித்துக் கொண்டு எங்கள் எலலோருக்கும் மார்க்சீயம் போதிக்க விரும்புகிறார்.// நீங்கள் குறிப்பிடும் "சலுகைகள்" எதுவும் அரசு விரும்பிக் கொடுத்தவை அல்ல. அது தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள். நீண்ட காலமாக நடந்த போராட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டு "சலுகை" பற்றிப் பேசுவது ஒரு அரச அடிவருடித்தனம். ஆமாம், அரசு "சலுகை" தருகிறது என்பதற்காக, அந்த அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று போதிப்பதை எப்படி அழைப்பது? 

முதலில் அரசு என்றால் என்னவென்று அடிப்படை அறிவு இருக்க வேண்டும். முதலாளிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதாக அரசு காட்டிக் கொள்கிறது. எல்லா நாடுகளிலும் அப்படித் தான். ஆனால், நடைமுறையில் முதலாளிகளின் பக்கம் சாய்ந்து விடுகின்றது. மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்கள், தொழிற்சங்க நடவடிக்கை மூலம் அதை மாற்றி அமைத்தார்கள். 

உதாரணத்திற்கு, இன்று சம்பளத்தை தீர்மானிக்கும் விடயத்தில், தொழிற்சங்கத்தை அழைத்துப் பேசும் நிலையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதெல்லாம் வானத்தில் இருந்து விழவில்லை. வேலைநிறுத்தம் போன்ற பல வகையான போராட்டங்கள் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகள்.

//எந்தப் பொதுவுடமை சார்பு நாடுகளுக்குச் செல்லவோ அதனை அங்கு சென்று ஆராயவோ அல்லது அங்கு வாழவோ விரும்பியிருக்க மாட்டார்// இதுவும் சுத்த அபத்தமான கூற்று. நாங்கள் காலனிய எஜமானர்களின் நாடுகளுக்கு செல்கிறோம். ஒரு காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் எமது தாயகத்தின் வளங்களை சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு செல்கிறோம். அதற்கு எமது மக்களுக்கு இருக்கும் உரிமையை மறுப்பது, வெள்ளையின மக்களை பாதுகாக்கும் நிறவெறிச் சிந்தனை ஆகும்.

"பொதுவுடைமை" ஒரு அது மாற்று அரசியல் பொருளாதாரம். எந்த நாட்டிலும் நடைமுறைப் படுத்தக் கூடிய, எல்லா நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ள, உழைக்கும் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வது பற்றிய தத்துவம். அது குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பது உங்களது அறியாமை. முதலாளித்துவ நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் முதலாளிகள் அல்ல. அங்கேயும் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்கள் தான். உலகம் முழுவதும் நிலைமை அப்படித் தான்.

Tuesday, May 05, 2015

கம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதில்லை

தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில், முன்னொருபோதும் இல்லாதவாறு, கம்யூனிசம் குறித்த தேடல் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலானோர் அதனை தமக்கு நன்மை தரும் விடயமாக பார்த்தாலும், ஒரு சிறு பிரிவினர் தமக்கு ஆபத்தானது என்ற கோணத்தில் பார்க்கின்றனர். வசதியாக வாழும் படித்த மத்தியதர வர்க்க இளைஞர்களே அவ்வாறு எதிர்மறையாக பார்க்கின்றனர் என்பதும் தெளிவானது.

முகநூலில் கோபிகிருஷ்ணா என்ற நண்பருக்கும், எனக்கும் இடையில் நடந்த உரையாடலை இங்கே தொகுத்து தருகிறேன். எதிர்காலத்தில் கம்யூனிசம் குறித்த தேடலுடன் வரும் இளைஞர்களுக்கும் அது உதவும்.

 ---------------------------------------------------------------------------------------------

 கோபி கிருஷ்ணாவின் நிலைத் தகவலில் இருந்து ஒரு பகுதி:

//ஊடகவியலும், கம்யூனிசமும் பலவகையில் ஒன்று. இரண்டுமே புனிதமானவை, உயர்ந்தவை, மக்களுக்கானவை என்றெல்லாம் சொல்லப்படுது. ஆனால், நாங்கள் காண்பது எல்லாம் அதற்கு முழு எதிர்மாறாத் தான் இருக்கின்றன. அவை என்னவாறு புனிதம், சிறப்பானவை எண்டு கேட்டால் "1930-இல...." என்ற கதைகள் தான் சொல்லப்படுமே தவிர, அவற்றின் நிகழ்காலத்தப் பற்றிக் கதைப்பதில்லை. முதலாளித்துவத்துக்கு உலக வறுமையும், சீனாவில இருக்கிற அப்பிள் தொழிற்சாலை சிறுவர் ஊழியர்களும் உதாரணம் என்றால், ஸ்ராலின் காலத்தில இடம்பெற்ற கொலைகளும், ஃபிடல் காஸ்ரோ எப்பிடி ஜனநாயகத்துக்குப் புறம்பாச் செயற்பட்டார் என்பதும் தான் எனது உதாரணங்கள்.//

பதில்: கம்யூனிசம் இல்லாவிட்டால், சர்வசன வாக்குரிமை, எட்டு மணி நேர வேலை எல்லாம் இன்றைக்கும் கனவாக மட்டுமே இருந்திருக்கும். உங்களுக்கு படிப்பு, மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்ததும், பொது மக்களுக்கான பொதுப் போக்குவரத்து துறையை ஏற்படுத்துவதும் யார்?

கேள்வி: எனக்கான வசதிகள் வரிகள் மூலம் பெறப்பட்ட பணம் மூலம் வழங்கப்படுகிறது. நீங்கள் சொன்ன 8 மணிநேர வேலை, சர்வசன வாக்குரிமையில் கம்யூனிசத்தின் நேரடிப் பங்கை நான் அறிந்ததில்லை. உங்கள் வழியிலேயே வருவோம். கம்யூனிசம் தான் வழங்கியதாக வைத்துக் கொள்வோம். மனித நாகரிகமடைதலில் சமயங்கள் ஒரு குறிப்பிட்ட பங்கை ஆற்றியிருப்பதை அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக சமயங்கள் இப்போதும் போற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?

பதில்: அந்த "அறிவியலாளர்களில்" நீங்களும் ஒருவர் என்று நான் நம்புகிறேன்.ஆகவே மனித நாகரிகமடைதலில் கம்யூனிசத்தின் பங்கையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சரி, அவை போற்றப் பட வேண்டுமா? அவற்றின் வரலாற்றுப் பங்களிப்புக்கு மதிப்புக் கொடுப்பதில் தவறில்லையே? கார்ல் மார்க்ஸ் ஒரு நாஸ்திகர். அவர் கிறிஸ்தவ மதம் வரலாற்றில் முற்போக்குப் பாத்திரம் வகித்தது என்று போற்றி இருக்கிறார். அது மட்டுமல்ல, முதலாளித்துவம் கூட வரலாற்றில் முக்கியமான, அதிலும் முற்போக்கான பங்காற்றி உள்ளது என்று போற்றி இருக்கிறார்.

அதே நேரம், கார்ல் மார்க்ஸ் கிறிஸ்தவ மதம், முதலாளித்துவம் குறித்து தனது கடுமையான விமர்சனங்களையும் வைத்துள்ளார். உங்களிடம் இருந்தும் அப்படி ஒரு மனப்பக்குவத்தை நாங்கள் எதிர்பார்க்கலாமா? எதையும் விமர்சிப்பதில் தவறில்லை. நீங்கள் தாராளமாக கம்யூனிசத்தை விமர்சிக்கலாம். ஆனால், அதற்கு முன்னர் கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டாமா? போற்றுவது ஒருபுறம் இருக்கட்டும், தூற்றாமால் இருக்கலாம் அல்லவா? நீங்களும் ஒரு அறிவியலாளர் என்று நான் நம்புகிறேன். எதையும் அறியாமல், ஆராயாமல் பேசுவது அறிவியலாளருக்கு அழகல்ல.

முதலில் கம்யூனிசம் பற்றிய ஒரு சிறிய குறிப்பு. அதை நீங்கள், ஸ்டாலின், மாவோ, காஸ்ட்ரோ காலத்தில் இருந்து தொடங்குவது தவறு. 17 ம் நூற்றாண்டில் இருந்தே பூலோக சொர்க்கம் ஒன்றை உருவாக்குவது சம்பந்தமான எண்ணக்கருக்கள் தோன்றி விட்டன. சமூக விஞ்ஞான அடிப்படையில் அதை கம்யூனிச சமுதாயம் என்று வரையறுத்தார்கள். 

கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்பிருந்தே அது இருந்து வருகின்றது. 19 நூற்றாண்டில் நடந்த அரசமைப்புமாற்றங்களின் போது மக்கள் நலன்சார்ந்த அரசமைக்க விரும்பியோர் தம்மை சோஷலிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டனர். இன்றைக்கு சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட், அனார்க்கிஸ்ட் பல பிரிவுகளாக இருந்தாலும், தொடக்கப் புள்ளி ஒன்று தான். இனி உங்களது கேள்விக்கு வருவோம்.

யார் வரி அறவிடுகிறார்கள்? அரசு. மக்களிடம் வரி எடுப்பதும், அரசு என்ற கட்டமைப்பும் இரண்டாயிரம் வருட கால பழமையான விடயங்கள். அப்போதெல்லாம் உலகில் எந்த அரசும், மக்களிடம் அறவிட்ட வரியைக் கொண்டு இலவச கல்வி, மருத்துவம் என்று வசதி செய்து கொடுக்கவில்லையே? ஏன்? குறைந்த பட்சம், தொழிற்புரட்சி காரணமாக முதலாளித்துவம் வளர்ந்த, 19 நூற்றாண்டில் ஓர் உதாரணத்தை காட்ட முடியுமா? ஏன்? 

இதற்கான பதில், எந்த முதலாளியும் மக்கள்நலன் கருதி செயற்படுவதில்லை. அரசு முதலாளிகளுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதையே தனது கடமையாக கருதி வந்தது. அப்போதும் அரசு வரி அறவிட்டு வந்தது. யாரிடம்? சாதாரண உழைக்கும் மக்களிடம். அதே நேரம், மேட்டுக் குடியினருக்கு வரிவிலக்கு அளிக்கப் பட்டிருந்தது. எப்போது மாற்றம் வந்தது? சோஷலிச, கம்யூனிசக் கட்சிகள்உருவான பின்னர் தான்.

அந்தக் கட்சிகள் தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து போராடினார்கள். இலவச கல்வி, இலவச மருத்துவம், எட்டு மணி நேர வேலை, சிறார் தொழிலாளர்களுக்கு விடுதலை, ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் போன்ற பல கோரிக்கைகளை வைத்துப் போராடினார்கள். மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தான், அரசு அந்தக் கோரிக்கைகளை மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டது. 

2ம் உலகப்போருக்குப் பின்னர், சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக வளர்ச்சி அடைய வேண்டுமென்ற நிர்ப்பந்தம் உருவானது. அதாவது, அயலில் இருக்கும் சோஷலிச நாடுகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் மேற்கத்திய நாடுகளில், நலன்புரி அரசு என்ற பெயரில் புதிய வகை சோஷலிசத்தை கொண்டு வந்தார்கள்.

கேள்வி: 1. இலவசக் கல்வி தொடர்பான வரலாறு. http://en.m.wikipedia.org/wiki/Free_education#History அதனை அறிமுகப்படுத்திய பெய்ன் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருக்கும் அறிகுறியைக் காணோம். அத்தோடு, ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வி என்பது மிகப்புதிது. ஆகவே, ஆச்சரியமில்லை.

2. இலவச மருத்துவம் தொடர்பாக இலகுவாகத் தேட முடியவில்லை. பிறகு கருத்திடுகிறேன்.

3. நீங்கள் சொல்பவற்றிற்கு நம்பகமான ஆதாரங்களை வழங்க முடியுமா?

4. மக்கள் உரிமைக்காகப் போராடும்போது அதற்காகச் செவிமடுப்பது தான் ஜனநாயக அரசு. அது கம்யூனிசத் தலைவர்களிடம் இருந்ததாகக் காணோம்.

பதில்: 18ம் நூற்றாண்டில் கம்யூனிஸ்டுகள் இருக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் தான் உருவானார்கள். பெய்ன் போன்ற இலவசக் கல்வியை விரும்பிய சிந்தனையாளர்கள் வாழ்ந்திருந்தாலும், அன்று அது ஒருஅரசியல் இயக்கமாக பரிணமிக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் தான் அது ஏற்பட்டது. இதற்கு ஆதாரம் எதுவும் தேடத் தேவையில்லை. இருபதாம் நூற்றாண்டு வரையில், மேற்கத்திய நாடுகளில் படிப்பறிவுள்ள மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. கல்வி கற்கும் வசதி, பணக்காரக்ளுக்கு மட்டுமே சாத்தியமான சலுகையாக இருந்தது. சோஷலிச நாடுகளில், கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன என்ற உண்மையை உங்களால்மறுக்க முடியாது.

//In the United States, socialism was prominent in the thinking of rationalistic New England and Northern reformers. For example, the first “free” public schools were established by Unitarian socialists who wanted to use them as a vehicle for undermining Christianity, changing America’s cultural values, and promoting the acceptance of socialism. This was a brilliant strategy for the left. No institution in America that has been more effective in promoting the acceptance of socialist ideals than the public school system. Ironically, Americans have bought so completely into public education that they do not even associate it with socialism.// http://patriotupdate.com/articles/beginnings-of-american-socialism-in-public-education/

கேள்வி: நான் அதில் என்ன சொன்னேனோ, அதைத் தான் திரும்பவும் செய்கிறீர்கள். "எவ்வாறு புனிதம், சிறப்பானவை என்று கேட்டால் 1930-இல..." ஜனநாயகம் மீது எனக்கு விமர்சனமுண்டு. அதை நான் இதற்கு முன்னர் பதிந்திருக்கிறேன். "மக்களில் அனேகர் முட்டாள்கள். முட்டாள்களால் தெரிவுசெய்யப்பட்டால் முட்டாள்கள் அதிகம் தெரிவுசெய்யப்படுவர்" என்றேன்.

பதில்: 1930 க்கு முன்னரும் உலகம் இருந்தது. அதைநீங்கள் கவனிக்க வேண்டும், ஆராய வேண்டும் என்று தான் சொல்கிறேன். எதையும் புனிதம் என்று வாதாட வரவில்லை. எதைப் பற்றியும் அறியாமல் பேசுவது தவறு என்று தான் சொன்னேன். உங்களைப் பற்றி எதுவும் தெரியாமல், ஒருவர் உங்களைப் பற்றி எதிர்மறையாக மட்டுமே பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்காக நீங்கள் புனிதமானவர் என்று அர்த்தம் அல்ல.

கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாமல் கருத்துக் கூறுவதைப் போன்று தான், ஜனநாயகம் பற்றிய உங்களது கருத்துக்களும் உள்ளன. உலகில் பொதுவான ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லது சோஷலிஸ்டுகள். குறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்த காலம் ஒன்றிருந்தது. அதற்குப் பதிலாக சர்வசன வாக்குரிமை வேண்டுமென்று கோரியவர்கள் இடதுசாரிகள் மட்டும் தான். மார்க்சிய சமூக ஜனநாயகக்கட்சிகள், தொழிற்சங்க நடவடிக்கை ஊடாக சர்வசன வாக்குரிமையை பெற்றுக் கொண்டார்கள்.

மேலும், தேர்தலில் விரும்பிய கட்சிக்கு வாக்களிப்பதற்குப் பெயர் பிரதிநிதித்துவ ஜனநாயகம். அதாவது நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒருவருக்கு வாக்குப்போட்டு விட்டு ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். சோஷலிசநாடுகளில் அதற்குப் பதிலாக மக்கள் பங்குபற்றும் நேரடியான ஜனநாயகம் உள்ளது. மக்கள் ஜனநாயகத்தை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும் பரவாயில்லை. குற்றம், குறை சொல்லாமல் இருப்பதற்கு முயற்சிக்கலாமே? சிறந்த கல்விமான், அறிவாளர் என்பதால் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

//ஸ்ராலின் காலத்தில இடம்பெற்ற கொலைகளும், ஃபிடல் காஸ்ரோ எப்பிடி ஜனநாயகத்துக்குப் புறம்பாச் செயற்பட்டார் என்பதும் தான் எனது உதாரணங்கள்.// இதிலே சில கேள்விகள்எழுப்பப் படவேண்டும். "ஸ்டாலின் கால கொலைகள்" : யார் கொல்லப் பட்டார்கள்? சாதாரண பொது மக்களா? இல்லை. 

சாமானியனான உங்களது பார்வையில் யார் கெட்டவர்கள்? ஊழல்வாதிகள், சுரண்டல்வாதிகள், கந்துவட்டிக்காரர்கள், பேராசை பிடித்த முதலாளிகள், நிலஅபகரிப்பு செய்த நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள்... இப்படியானவர்கள் தான் கொல்லப்பட்டனர். மக்கள் அல்ல. அதே போல, காஸ்ட்ரோ ஜனநாயகம் மறுத்ததும், குறிப்பிட்ட சில பிரிவினருக்குத் தான். மாபியாக்கள், கிரிமினல்கள், விபச்சார தரகர்கள், இவர்களை எல்லாம் கூப்பிட்டு விருந்து வைக்க சொல்கிறீர்களா? முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள் பார்ப்போம்.

கேள்வி: சோசலிச நாடுகளில் உள்ளது? ஏற்கனவே கேட்ட கேள்வி தான்.

1. உலகிலுள்ள உதாரணம் காட்டக்கூடிய சோசலிச நாடு எது? 2. சோசலிச நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகள் ஏன் ஜனநாயகத்திற்குப் புறம்பானவையாகக் காணப்படுகின்றன? (உதாரணம் - கியூபா, வடகொரியா, சீனா.)

எல்லா சோஷலிச நாடுகளிலும், மக்கள் ஜனநாயக அடிப்படையில் தான் ஆட்சி அமைந்துள்ளன. உலகில் முதல் முதலாக தோன்றிய சோஷலிச நாடு சோவியத் ஒன்றியம்என்பது உங்களுக்கு தெரியும். சோவியத் என்றால் என்னவென்று தெரியுமா? மக்கள் மன்றம். அது லெனின் தலைமையிலான போல்ஷெவிக்- கம்யூனிஸ்டுகள் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னரே ஏற்பட்டு விட்டது. ஒரு போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் கூட அங்கம் வகிக்காத சோவியத் கூட இருந்துள்ளது. 

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற அடித்தட்டு மக்கள் கூட, சோவியத் பேரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். இன்றும் "ஜனநாயக" மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று, பாராளுமன்றத்திற்கு, நகரசபைக்கு பிரதிநிதிகளை அனுப்பும் முறை அல்ல. மக்கள் நேரடியாக பங்குபற்றும் ஜனநாயக அமைப்பு அது. ஒவ்வொரு திட்டமும் மக்கள் பேரவையான சோவியத்தில் கூடி விவாதிக்கப்படும். பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும். 

சோவியத் மட்டுமல்ல, கட்சி அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மற்றும் பல வெகுஜன அமைப்புகள் எல்லாம் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தான் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். உங்களால் முடிந்தால், அதனை உங்களது ஊரில் அல்லது கல்லூரியில் நடைமுறைக்கு கொண்டு வந்து காட்டுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன். முற்சாய்வுகள், முன்முடிவுகளுடன் உரையாட வராதீர்கள். அதற்குப் பெயர் விதண்டாவாதம். அவை ஜனநாயகத்திற்குப் புறம்பானதாக "காணப்"படவில்லை, காட்டப்படுகின்றன. அப்படி மேற்குலகில் பரப்புரை செய்யப்படுகின்றன. உண்மை எது, பொய் எது என்பதை நீங்கள் தான் ஆராய்ந்து அறிந்து கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களை நம்புவீர்கள் என்றால், நீங்கள் தமிழர்கள் அனைவரும் இரத்தக்காட்டேரிகள் என்று தான் சொல்வீர்கள். சோஷலிசம், கம்யூனிசம் போன்றவற்றை அடியோடு வெறுக்கும் முதலாளித்துவ நாடுகளின் பிரச்சாரங்களை நம்பினால், சோஷலிச நாடுகளில் ஜனநாயகம் கிடையாது என்று தான் நினைப்பீர்கள்.

கேள்வி: முதலாவது பதில் - உஸ்ஸ். அவை அனேகமான நாடுகள் முதலாளித்துவத்தைப் பின்பற்றுகின்றன. எனது ஞாபகம் சரியெனில், ஒருகட்டத்தில் தொழிற்துறை வளரவேண்டுமென குறிப்பிட்ட காலத்திற்கு கியூபா (அல்லது இன்னொமோர் சோசலிச நாடு) முதலாளித்துவத்தை ஊக்குவித்தது. இந்த நாடு ஒரு சோசலிச நாடு எனச் சொல்லுமளவிற்குள்ள நாட்டைச் சொல்லுங்கள்.

இரண்டாவது -வடகொரியாவில் தந்தைக்குப் பிறகு பதவிக்கு வந்தவர் தான் தற்போதையவர். அண்மைக் காலத்தில் பல இராணுவத் தளபதிகள் ஜனாதிபதியால் கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் தெரிவு செய்யப்பட்ட சில தலைமுடி அலங்காரங்களிலேயே முடி வெட்ட முடியும். இது ஜனநாயகம்?

சீனாவில் பேஸ்புக் உட்பட பல இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. எதிரணிகள் ஒடுக்கப்படுகின்றன. உச்சக்கட்ட கண்காணிப்பு இருக்கிறது. இது உண்மை.

//உஸ்ஸ். அவை அனேகமான நாடுகள் முதலாளித்துவத்தைப் பின்பற்றுகின்றன.// அப்படி நான் சொல்லவில்லை. சோஷலிச நாடுகளில் ஜனநாயக அமைப்பு இருந்தது என்று தான் விபரித்தேன். ஜனநாயகத்தை, முதலாளித்துவத்துடன் சேர்த்துப் பார்ப்பது உங்களது அறியாமை. ஜனநாயகம் என்பது மக்களாட்சி. பெரும்பான்மையினரின் தெரிவு. ஜனநாயகம் தோன்றியதாக புகழப்படும் கிரேக்கத்தில், கட்சிகள் இருக்கவில்லை, இப்போதுள்ள மாதிரி தேர்தல்கள் நடக்கவில்லை.

கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பது பெரும் மூலதனத்தை மட்டும் தான். அதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். பெரும் மூலதனம் என்பது பன்னாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டது. அவை பொருளாதார சர்வாதிகாரத்தை நடைமுறைப் படுத்துகின்றன. அதைத் தான் எதிர்க்க வேண்டும். சிறு தொழில் முனைவோர், சிறிய நிறுவனம் வைத்திருப்போர் எல்லாம் முதலாளிகள் அல்லர். சிலர் அப்படி தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். சோஷலிச நாடுகளில் சிறு தொழில்முனைவோருக்கு சுதந்திரம் கொடுப்பதால் எந்த நஷ்டமும் வரப் போவதில்லை. உங்களுக்கு தனியாக ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் தாராளமாக செய்யலாம். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டாமல், வாடிக்கையாளர்களை ஏமாற்றாமல் நீங்கள் வியாபாரம் செய்யலாம். ஒரு சோஷலிச நாட்டில் அதற்கு சுதந்திரம் இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் பல நாடுகள் தங்களை சோஷலிச நாடுகள் என்று அறிவித்துக் கொண்டன. ஒவ்வொரு நாடும் தனக்குத் தெரிந்தவரையில் சோஷலிசத்தை நடைமுறைப் படுத்தி வந்தன. அது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தான் சோஷலிசத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேற்கு ஐரோப்பாவில் உள்ள நலன்புரி அரசு என்பது முதலாளித்துவ அமைப்பின் உள்ளே கொண்டு வரப் பட்ட சோஷலிசம் தான்.

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிய வேண்டும். நீங்கள் எதற்காக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்கும் பிரச்சாரங்களை நம்புகிறீர்கள்? நீங்கள் சிறிலங்கா அரசு ஊடகம் சொல்வதை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால், உங்கள் பார்வையில் தமிழர்கள்எல்லோரும் இரத்தக்காட்டேரிகள் மாதிரி தெரிவார்கள். ஆகவே, உங்களது கண்ணாடியை கழற்றி வைத்து வாருங்கள். ஒரு அறிவாளர்மாதிரி நடந்துகொள்ளுங்கள். இரண்டு பக்கமும் விசாரித்து, அலசி, ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

வட கொரிய அதிபரின் தலைமுடி அலங்காரம் பற்றிய கட்டுக்கதை மேற்கத்திய ஊடகங்களினால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இது கிளுகிளுப்பூட்டும் கிசுகிசு பாணியிலான தகவல் மட்டுமே. வட கொரிய இராணுவத் தளபதிகள் ஊழல், அல்லது உளவுபார்த்தது போன்ற ஏதாவது குற்றச்சாட்டில் தான் தண்டிக்கப் பட்டார்கள். அதனை மேற்கத்திய ஊடகங்களே வெளிப்படுத்தி இருந்தன. இராணுவத் தளபதிகள் கூட தவறு செய்தால் தண்டிக்கப்படுவதற்காக, நீங்கள் அந்த நாட்டை பாராட்ட வேண்டும் அல்லவா? சீனாவில் இணையத்தளங்கள்முடக்கியதற்காக மூக்கால் அழுகிறீர்கள். அமெரிக்காவில், பிரான்சில் எத்தனை இணையத்தளங்களை முடக்கினார்கள்? NSA உலக நாடுகளை, பொதுமக்களை உளவு பார்த்ததை ஸ்னோவ்டன் அம்பலப் படுத்தியதை அறியவில்லையா?

இதைப் பார்த்த உடனே நான் வட கொரியா, சீனாவை "நியாயப் படுத்துகிறேன்" என்று சொல்லிக் கொண்டு வராதீர்கள். நீங்கள் ஒரு புனிதர் அல்ல. ஒரு பக்கச் சார்பானவர் தான். அதைக் காட்டுவதற்கே சிறு விளக்கம் கொடுத்தேன். இப்போதும் கூட மேற்குலக நாடுகள் பற்றி எதுவும் சொல்லாமல் மூடி மறைப்பதில் இருந்தே உங்களது சார்புத்தன்மை தெளிவாகி விடுகின்றது.

கேள்வி: கம்யூனிசத்தையும், உங்களுக்குப் பிடித்தமானவர்களின் படுகொலைகளையும் நியாயப்படுத்த நீங்கள் எடுக்கும் சிரமமே கம்யூனிசத்தைப் பரப்புபவர்களிடம் காணப்படும் பிரச்சினையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

பதில்: முதலில் முன்முடிவுகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. விக்கிபீடியா தகவல்களும் ஒரு பக்கச்சார்பானவை தான். நீங்கள் கூட உங்களது பார்வைக்கோணத்தில் அதை எழுதலாம். இங்கே படுகொலைகளை நியாயப் படுத்துவதல்ல என் நோக்கம். எதையும் அறிவுபூர்வமாக ஆராய வேண்டும் என்று சொல்கிறேன். நீங்கள் ஒரு அறிவியலாளர், படித்தவர் என்ற நம்பிக்கையில் உரையாடுகின்றேன். புரட்சி நடக்கும் காலத்தில் கொலைகள் நடக்கும். அது உலக நியதி. மதங்கள் படுகொலை செய்யவில்லையா? ஜனநாயகம் படுகொலை செய்யவில்லையா? அமெரிக்கப் புரட்சியில் நடக்காத படுகொலைகளா? பிரெஞ்சுப்புரட்சியில் நடக்காத படுகொலைகளா? அதை எல்லாம் உதாசீனப் படுத்தி விட்டு "கம்யூனிசப் படுகொலைகளை" மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது ஏன்? இங்கே பிரச்சினை உங்களிடமும் உள்ளது.

கேள்வி: எல்லாவற்றையும் விமர்சித்த பின்பு தான் கம்யூனிசத்தை விமர்சிக்க முடியுமா?

பதில்: உங்களுக்கு கம்யூனிசம் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்ற உண்மை ஒருபக்கம் இருக்கட்டும். அது தோன்றுவதற்கு முன்பிருந்த முதலாளித்துவம், லிபரலிசம், தேசியவாதம், போன்ற பிற கொள்கைகளை கூட அறிந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது என்ன நியாயம்? உண்மையில், ஐரோப்பாவில், மேற்குறிப்பிட்ட கொள்கைகளின் தோல்வியின் விளைவாகத் தான் சோஷலிசம், கம்யூனிசம் எல்லாம் தோன்றின. 19 ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் லிபரலிசம் என்ற புதிய கொள்கையை பரப்புவது தான் நெப்போலியன் போர்களின் நோக்கமாக இருந்தது. அது பிரெஞ்சுப் புரட்சியின் விளைவு. இல்லாவிட்டால் இன்றைக்கு நீங்கள் யாரோ ஒரு மன்னனுக்கு சலாம் போட்டுக் கொண்டிருந்திருப்பீர்கள். ஒருநிலப்பிரபுவின் பண்ணையில் வேலை செய்து கொண்டிருப்பீர்கள்.

ஆமாம், ஐரோப்பா முழுவதும் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டுவது தான் லிபரலிசம் கொண்டுவந்த புரட்சியின் நோக்கம். அப்போது லிபரலிசம் படுகொலை செய்த மக்கள் எத்தனை மில்லியன்? இதே தான் அமெரிக்காவின் உள்நாட்டு போரிலும் நடந்தது. அதுநிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானமுதலாளித்துவத்தின் போர். முதலாம் உலகப்போருக்கும், இரண்டாம் உலகப்போருக்கும் காரணமாக அமைந்த கொள்கை எது? தேசியவாதம். அதற்கு முண்டு கொடுத்த முதலாளித்துவம். அந்த இரண்டு போர்களிலும் எத்தனை மில்லியன் மக்கள் கொல்லப் பட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை.

கேள்வி: சரி. வேறு ஏதாவது நம்பத் தகுந்த ஆதாரம் காட்டுங்கள்? புரட்சி அல்லது போரில் கொலைகள் நடக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் பல மில்லியன் பேரைக் கொன்றதை வெறுமனே "சண்டை என்று வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும்" என்றளவில் எடுத்துக் கொள்ள முடியாது. மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் கொல்வதற்குத் தான் புரட்சி என்றால் அப்படியானொரு புரட்சி தேவையில்லை.

பதில்: உங்களுக்கு ஏற்கனவே பல தடவைகள் கூறி விட்டேன், தயவுசெய்து முற்சாய்வுகளுடன் உரையாடாதீர்கள். //பல மில்லியன் பேரைக் கொன்றதை// என்று நீங்களாகவே விசாரிக்காமல் தீர்ப்பு சொல்லி விடுகிறீர்கள். இந்த தவறு உங்களை அறியாமல் நடந்திருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். "முதலாம் உலகப்போரில் பத்து மில்லியன் மக்கள் இறந்தார்கள்" என்று சொல்வதற்கும், "பத்து மில்லியன் மக்களை கொன்றார்கள்" என்று சொல்வதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறதல்லவா? பின்னையகூற்று யாரோ ஒருவரை குற்றம்சாட்டுகின்றது. யார் கொன்றார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. //"சண்டை என்று வந்தால் சட்டை கிழியத்தான் செய்யும்" // என்று பாமரத்தனமாக பேச முடியாது. நீங்கள் ஒரு பாமரன் என்று நானும் நம்பவில்லை.

புரட்சி என்பது மாலைநேர தேநீர் விருந்தல்ல. அதுவும் ஒரு யுத்தம் தான். எவ்வாறு தேசங்களுக்கு இடையில் நடந்த யுத்தங்களை பார்க்கிறீர்களோ, அதே மாதிரித் தான் இதையும் பார்க்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நடந்த இனப்போரில் எத்தனை மில்லியன் கொல்லப் பட்டனர்? அதற்காக ஈழப்போரே வேண்டாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?

நாடுகளுக்கு இடையில், இனங்களுக்கு இடையில் போர்கள் நடப்பதைப் போன்று, வர்க்கங்களுக்கு இடையிலும் போர்கள் நடப்பதுண்டு. அதை உலகம் தடுக்க முடியாது. ரோமர்கள் காலத்தில் நடந்த ஸ்பார்ட்டகாஸ் தலைமையிலான அடிமைகளின் எழுச்சி பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்போது நடந்த போரில் எத்தனை மில்லியன் பேர் கொல்லப் பட்டார்கள்? அதற்காக அடிமைகளின் புரட்சி நடந்திருக்க கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா? ரஷ்யா, சீனாவில் நடந்த புரட்சிகள் யாவும் வர்க்கப் போர்கள். அதாவது அடிமைகளின் எழுச்சி. அதை நீங்களோ, நானோ தடுக்க முடியாது. அது இயற்கை.