Tuesday, November 24, 2020

கம்யூனிச சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த புரட்சிக் கதை!

முன்னொரு காலத்தில் வைகையாறு பெருக்கெடுத்து ஓடியதால் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. அதுவரை காலமும் குடிமக்களின் துன்பங்களை கண்டுகொள்ளாத கொடுங்கோலனான மன்னன் அரிமர்த்தனபாண்டியன் தனது அரண்மனைக்கே ஆபத்து என்றவுடன் அதை முழு நாட்டுக்கும் ஏற்பட்ட பேரழிவாக கருதினான்.  ஏற்கெனவே வெள்ளம் பல கிராமங்ளை அழித்து பல இலட்சம் மக்கள் பலியானார்கள்.

வெள்ளம் மன்னரின் மாளிகைக்கு வருமுன் தடுப்பதற்காக, அரிமர்த்தன பாண்டியன் வைகை நதிக்கரைகளில் மண் அணை கட்ட உத்தரவிட்டான். அதற்காக பாண்டிய நாட்டின் அத்தனை குடி மக்களையும் கட்டாய வேலை வாங்கினான். நோயாளிகள், முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோருக்கும் கரையை செப்பனிட்டு மண் அணை கட்டுவதற்காக ஆளுக்கொரு பகுதி ஒதுக்கப் பட்டது. 


வறுமை காரணமாக பிட்டு விற்று பிழைத்து வந்த வந்தியம்மை என்ற மூதாட்டிக்கும் வைகை நதிக்கரையில் மண் அணை கட்டும் வேலை கொடுக்கப் பட்டது. எழுபது வயதை தாண்டிய போதிலும், நோயுற்ற நிலையிலும், தளராமல் பிட்டு செய்து விற்று அந்தக் காசில் வாழ்ந்து வந்தாள். மன்னனின் காவலர்கள் அவளது முதுமையை மதிக்காமல், நோயாளி என்றும் பாராமல், இரக்கமில்லாமல் கடின வேலை வாங்கினார்கள். 

அந்த ஊரில் சிவபெருமான் என்ற ஒரு கம்யூனிச புரட்சியாளர் இருந்தார். அவர் வந்தியம்மை பாட்டியிடம் பிட்டு வாங்கிச் சாப்பிட்டு நட்புடன் பழகி வந்தார். தனது அன்புக்குரிய பாட்டியும் கட்டாய வேலை வாங்கப் படுவதைக் கண்டு ஆத்திரமடைந்த சிவபெருமான், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னனின் பாசிச கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணினான். 


மண் அணை கட்டும் இடத்திற்கு வந்த புரட்சிக்காரன் சிவபெருமான், வந்தியம்மை பாட்டியை வேலை செய்ய வேண்டாம் என்றும், அவரை ஓய்வெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவரது அணை கட்டும் வேலையை தான் செய்து தருவதாக கூறினார். வந்தியம்மை அதைக் கண்டு மனம் நெகிழ்ந்தாள். 

ஏற்கனவே உற்றார், உறவினர்களால் கைவிடப் பட்டிருந்த வந்தியம்மை பாட்டி, சிவபெருமானின் பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவள். அறுபது வயதைக் கடந்த முதியவர்களை வீட்டில் வைத்திருந்து ஓய்வூதியம் கொடுத்து பராமரிக்க வேண்டிய மன்னராட்சி, அவர்களை சாகும் வரை வேலை வாங்கும் கொடுமையை வெறுத்தாள். அத்துடன் மன்னரின் அரண்மனைக்கு ஆபத்து வந்தவுடன் அனைத்து மக்களையும் ஊதியம் கொடுக்காமல் அடிமை வேலை வாங்கும் கொடுமை ஒழிய வேண்டும் என விரும்பினாள். பாண்டிய நாட்டில் ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சியை உண்டாக்கி, மன்னராட்சியை கவிழ்க்க நினைத்த சிவபெருமானின் திட்டத்திற்கு உடன்பட்டாள்.


கூலித் தொழிலாளியாக மண் அணை கட்டுமிடத்திற்கு சென்ற சிவபெருமான், அங்கு வேலை செய்யாது பிற தொழிலாளர்களுடன் பேச்சுக் கொடுத்து, கொடுங்கோல் மன்னராட்சிக்கு எதிராக போராட வருமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தான். அத்துடன், காவலர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, கொஞ்ச நேரம் வேலை செய்வதாக போக்கு காட்டி விட்டு, பின்னர் ஒரு மர நிழலில் படுத்துறங்குவது போன்று பாசாங்கு செய்தான். பிற தொழிலாளர்களும் சிவபெருமான் செய்தது போன்ற அரச எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதாவது வேலையை குறைத்துக் கொள்வது, சோம்பேறித்தனமாக இருப்பது என்பது அதிகார வர்க்கத்தினரால் ஒரு நாசகார செயலாக கருதப் படும்.

அடிக்கடி காவலர்கள் அங்கு வந்து  எச்சரித்து விட்டு சென்றனர். எல்லோரும் தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் கடுமையாக செய்து கொண்டிருக்கும் பொழுது, எப்படி இவன் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் படுத்திருக்கிறான் என்று எரிச்சலுற்றனர். அங்கு நடக்கும் "நாசகார செயல்கள்" பற்றிய விடயத்தை மன்னனிடம் அறிவித்தனர். 


அரசனின் ஆணையை மதிக்காத, வேலை செய்யாமல் படுத்திருக்கும் சோம்பேறிக்கு தக்க பாடம் புகட்டுவேன் என்று பாண்டிய மன்னன் கருவிக் கொண்டான். வீரர்களுடன் அந்த இடத்திற்கு வந்த மன்னன் படுத்திருந்த சிவபெருமானின் முதுகில் பிரம்பால் அடித்து எழுப்பினான். வேலை செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக காவலர்கள் சிவபெருமானை கசையால் அடித்து துன்புறுத்தினார்கள். 


பாண்டிய மன்னனின் அடக்குமுறைக்கு அஞ்சாத புரட்சியாளர் சிவபெருமான், அங்கிருந்த தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறு அறைகூவல் விடுத்தான். முதியவர்கள், நோயாளிகள் என்றும் பாராது, அனைவரையும் கட்டாய வேலை வாங்கும் பாண்டிய மன்னனின் கொடுமைக்கு எதிராக, பாட்டாளி மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று உரையாற்றினான். சிவபெருமானின் எழுச்சி உரை கேட்டு அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்தனர். மன்னனின் ஏவல் படையான காவலர்களை தாக்கி அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறித்தெடுத்தனர். மன்னனனையும் விட்டு வைக்கவில்லை. அவனுக்கும் அடி விழுந்தது. அங்கு ஒரு மக்கள் புரட்சியை எதிர்பார்த்திராத பாண்டிய மன்னன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று நாட்டை விட்டே ஓடினான். 


பாண்டிய நாட்டு பாட்டாளி மக்கள் மதுரை நகரத்தின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆவணி மாதம் நடைபெற்ற மதுரைப் புரட்சி பற்றிய கதை, உழைக்கும் மக்கள் மத்தியில் செவி வழிக் கதையாக கடத்தப் பட்டு வந்தது. துரதிர்ஷ்டவசமாக, பிற்காலத்தில் வந்த மதவாதிகள் அதை ஒரு மதம் சம்பந்தப் பட்ட புராணக் கதையாக மாற்றி விட்டனர். அன்றைய புரட்சியாளரின் உண்மையான பெயரை மறைத்து, கடவுளான சிவபெருமானே கூலியாளாக வந்ததாக கதையை திரித்து எழுதினார்கள். அத்துடன் மதுரை வரலாற்றில் முதல் தடவையாக மன்னராட்சி கவிழ்க்கப் பட்ட சம்பவத்தை மறைப்பதற்காக, இறுதியில் பாண்டிய மன்னனே மனம் திருந்தி சிவபெருமானின் திருவிளையாடலை கண்டுகொண்டதாக பொய்யான தகவல்களும் சேர்க்கப் பட்டன.

No comments: