Saturday, November 21, 2020

பாரிஸ் லா சாப்பல்- அரபு மெதீனா தமிழ் யாழ்ப்பாணமான வரலாறு

இன்று தமிழர்களால் "குட்டி யாழ்ப்பாணம்" என்று அழைக்கப் படும், பாரிஸ் வடக்கை சேர்ந்த லா ஷாப்பல் பகுதி முன்னொரு காலத்தில் "பாரிஸ் மெதீனா" என்று அழைக்கப் பட்டது என்ற உண்மை பலருக்குத் தெரியாது. ஐம்பதுகளில் அது அல்ஜீரிய- அரேபியர்களின் கோட்டையாக கருதப் பட்டது. அந்தப் பகுதிகளில் பெருமளவு அல்ஜீரிய குடியேறிகள் வசித்தனர். 

அடித்தட்டு மக்களின் வாழிடமான பாரிஸ் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களுக்கும் குறைவில்லை. பிரெஞ்சுப் பொலிஸ் அந்தப் பக்கம் தலை காட்டுவதில்லை. ஐரோப்பியர்கள் அங்கு செல்ல அஞ்சினார்கள். குறிப்பாக rue de la Charbonniere, rue de la Chartres, rue Myrha ஆகிய தெருக்களும், Berbes மெட்ரோ ரயில் நிலையத்தை அண்டிய பகுதிகளும் மிகவும் ஆபத்தானவை. 

ஐம்பதுகளில் அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. பாரிஸ் நகரில் வாழ்ந்த புலம்பெயர்ந்த அல்ஜீரியர்களும் பெருமளவில் ஆதரித்தனர். அதனால் அல்ஜீரிய விடுதலை இயக்கங்கள் அவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன. அவர்களது கைகளில் ஆயுதங்களும் இருந்தன. உண்மையில் அன்று இதையெல்லாம் பிரெஞ்சு அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வெளிநாட்டு சக்தி, அதாவது சோவியத் யூனியன் உதவி இல்லாமல் அல்ஜீரிய விடுதலைப் போர் நடக்க சாத்தியம் இல்லை என்று தப்புக்கணக்கு போட்டது. 

1957 ம் ஆண்டளவில், லா சாப்பல் பகுதியை அண்டிய பிரதேசம், அல்ஜீரியா ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பட்டப் பகலில் கூட சில அல்ஜீரிய இளைஞர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதைக் காணலாம். அடிக்கடி போட்டிக் குழுக்களுக்கு இடையில் துப்பாக்கிச் சமர் நடக்கும். "அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும்" என்று பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்ளாமல் விடும். 

இந்த ஆயுத மோதல்களுக்கு காரணமானவர்கள், அல்ஜீரிய விடுதலைக்கு போராடிய தேசியவாத இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள். குறிப்பாக FLN, MTLD, PPA ஆகிய இயக்கங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி. இறுதியில் FLN மட்டும் "அல்ஜீரியர்களின் ஏக பிரதிநிதியாக" வெற்றி வாகை சூடிக் கொண்டது. ஏனைய இயக்கங்கள் காலப்போக்கில் அழிந்து போயின. 

சுருக்கமாக, தமிழர்களுக்கு LTTE மாதிரி, அல்ஜீரியர்களுக்கு FLN இருந்தது. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் இயங்கிய LTTE, PLOTE ஆகிய தேசியவாத இயக்க இளைஞர்கள் மோதிக் கொண்ட சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். உதாரணத்திற்கு சென்னை பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனும், பிரபாகரனும் சுடு பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம். இந்த புலி - புளொட் மோதல் மேற்கத்திய நாடுகளில் உள்ள நகரங்களிலும் இடம்பெற்றது. வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கும் தானே? அரேபிய இயக்கங்கள் மோதிக் கொள்ளலாம் என்றால், தமிழ் இயக்கங்கள் அவற்றிற்கு குறைந்தனவா? அரபு அண்ணன் எப்படியோ, தமிழ் தம்பியும் அப்படியே இருப்பதில் ஆச்சரியம் என்ன? 

அத்தகைய வன்முறை வரலாற்றைக் கொண்ட லா சாப்பல் அல்லது பாரிஸ் மெதினா, இன்று குட்டி யாழ்ப்பாணமாக காட்சியளிக்கிறது. இப்போதும் அது குழு மோதல்களுக்கு பெயர் போன இடம். அதற்குக் காரணம் ஒரு சில தமிழ் ஆயுதபாணிக் குழுக்கள். அதாவது Gang என்று சொல்லப் படும் கிரிமினல் குழுக்கள், போட்டிக் குழு உறுப்பினர்களை தெருவில் கண்டால் துப்பாக்கியால் சுடுபட்டுக் கொள்வார்கள். சில நேரம் இந்த சண்டைக்குள் அகப்படும் தமிழ்ப் பொது மக்களும் காயமடைவதுண்டு. 

என்ன நடந்தாலும், பொலிஸ் அந்தப் பக்கம் எட்டியும் பார்க்காது. இப்போதும் அங்கே ஒரு கொலை நடந்தால் கூட, பிரெஞ்சுப் பொலிஸ் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்குள் அடிபட்டு சாகட்டும் என்று விட்டு விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புலிகள் இயக்க முக்கியஸ்தர், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். (போர் முடிந்த பின்னரான நிதி அபகரிப்பு பிரச்சினையாக இருக்கலாம்.) ஆனால், இன்று வரையில் பொலிஸ் அது குறித்த விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை. யாரையும் கைது செய்யவில்லை. 

பிரெஞ்சுப் போலிஸை பொருத்தவரையில் பாரிஸ் நகரில் சுடுபட்டு சாவது அல்ஜீரியர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்களாக இருந்தாலும் எல்லாம் ஒன்று தான். பிரான்சில் அரேபியரும், தமிழரும் "விரும்பத் தகாத வெளிநாட்டு குடியேறிகள்" தான். எது எப்படி இருப்பினும், முன்பிருந்த அல்ஜீரிய- அரேபியரின் வன்முறை மரபு, இன்று ஈழத் தமிழர்களால் சற்றும் குறையேதும் இல்லாது பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. 

அல்ஜீரிய- தமிழர் சகோதரத்துவம் நீடூழி வாழ்க!

No comments: