Thursday, November 26, 2020

மாஸ்டாகிசம் - பண்டைய ஈரானிய கம்யூனிச மதம்!

 

கம்யூனிசம் என்பது கார்ல் மார்க்சின் கண்டுபிடிப்பு அல்ல. உலகம் முழுவதும் முன்னொரு காலத்தில் இருந்த, ஆதிகால கம்யூனிச சமுதாயங்கள் குறித்து ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. அவை சிலநேரம் ஏதாவதொரு மதம் சார்ந்தும் இருந்திருக்கலாம்.

 பொதுவாக உலகில் தோன்றிய அனைத்து மதங்களும் எதோ ஒரு கட்டத்தில் வர்க்கப் பிரிவினைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. அதற்கு மாறாக, வர்க்க பேதமற்ற பொதுவுடைமை சமுதாயத்தை போதித்த ஒரு மதம் வரலாற்றில் இருந்துள்ளது. ஈரானில் தோன்றிய மாஸ்டாயிசம் என்ற கம்யூனிச மதம் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம். ஆதி கால கிறிஸ்தவர்கள் ஒரு கம்யூனிச சமுதாயத்தில் வாழ்ந்தனர். இருப்பினும் கிரேக்க- ரோம சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதும், அது அரச மதமாகியது. அதனால் கிறிஸ்தவம் போதித்த சமத்துவ கொள்கைகள் கைவிடப் பட்டு, கிறிஸ்தவ மதமும் ஒரு வர்க்க சமுதாயத்தின் பாதுகாவலனாக மாறியது. 

பண்டைய ஈரானில் நிலவிய சொராஸ்டிரிய மதத்தின் பல தத்துவங்கள் இன்றைக்கும் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன. ஈரானிய சாம்ராஜ்யத்தின் அரச மதமாகவும் சொராஸ்டர் மதம் இருந்து வந்தது.


ஈரானில் இஸ்லாமிய- அரேபியரின் படையெடுப்புகள் நடக்கும் வரையில், அங்கு சசானிய அரச வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களும் சொராஸ்திரிய மதத்தை தான் பின்பற்றி வந்தனர். கி.பி. 473 முதல் 531 வரை ஈரானை ஆண்ட சசானிய பரம்பரையை சேர்ந்த காவாத் மன்னனின் காலத்தில் ஒரு புதிய கம்யூனிச மதம் தோன்றியது. அதை தோற்றுவித்த மாஸ்டாக் என்ற மதகுருவின் பெயரால் அது மாஸ்டாகிசம் என்று அழைக்கப் பட்டது. 


உண்மையில் மாஸ்டாக் கூட ஒரு சொராஸ்திரி மதகுரு தான். அவரது போதனைகள் வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை நோக்கியதாக இருந்தன. "ஆதி கால கம்யூனிசம்" என்று சொல்லத்தக்க பொதுவுடைமைக் கோட்பாடுகளை மதக் கருத்துக்களாக போதித்து வந்தார். அவரது போதனைகளால் பெருமளவு மக்கள் கவரப் பட்டனர். 


மாஸ்டாக் போதனைகளின் படி, கடவுள் இந்தப் பூமியை அனைத்து மனிதர்களுக்கும் படைத்துள்ளார். பூமியில் உள்ள செல்வங்களை அனைவரும் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம். இருப்பினும் வலிமை படைத்த தீயவர்கள், வலிமை குறைந்த நல்லவர்களை அடக்கி ஒடுக்கி அனைத்து செல்வங்களையும் தாமே அனுபவிக்கத் தொடங்கினார்கள். இதனை மாஸ்டாக் இருமைவாதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளக்குகிறார். 

இத்தகைய இருமைக் கோட்பாடு (Dualism) இன்றும் பல மதங்களில் உள்ளது. உதாரணத்திற்கு கிறிஸ்தவ மதத்தில் அது ஆண்டவருக்கும் சாத்தானுக்கும் இடையிலான போராட்டம் என்று சொல்லப் படுகிறது. இஸ்லாமிய மதத்தில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான போராட்டம், அதாவது ஜிகாத் என்று இன்னொரு விதமாக விரிவான விளக்கம் கொடுக்கிறது. 


இருமைக் கோட்பாடு, ஏற்கனவே ஈரானில் இருந்த சொராஸ்திரிய மதத்தில் முக்கிய பங்கு வகித்தது. அதற்கு மாஸ்டாக் சோஷலிச விளக்கம் கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. உலகில் தீமைகள் நடப்பதற்கான ஐந்து காரணிகள் என்று மாஸ்டாக் குறிப்பிடுவதும் சோஷலிச கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது. அவர்கள் அதை நல்லதுக்கும் கெட்டதுக்கும், அல்லது வெளிச்சத்திற்கும் இருட்டுக்கும் இடையிலான போராட்டம் என்பார்கள். 


மாஸ்டாக் முக்கியமாக ஒரு வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை போதித்தார். அனைவருக்கும் சமமான உரிமைகள், மற்றும் சமமான நீதி வழங்கப் பட வேண்டும் என்றார். மேலும் சொத்துக்கள் அனைவருக்கும் பொதுவாக்கப் பட வேண்டும், தனியுடைமை ஒழிக்கப் பட வேண்டும் என்பது பிரதானமான போதனையாக இருந்தது. கடவுள் வளங்களை அனைவருக்கும் சமமமாக பங்கிட்டுக் கொடுத்துள்ளார். ஒவ்வொருவருக்கும் நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கைத் தவிர மேலதிகமாக எடுத்துக் கொள்ள ஆசைப் படக் கூடாது. இருப்பினும் பலமுள்ளவர்கள், பலவீனமானவர்களிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுத்து தமக்கென சொந்தமாக்கி உள்ளனர். பணக்காரர்கள் தமது பங்கிற்கு மேற்பட்ட செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். 


இந்த இடத்தில் பெண்கள் தொடர்பான ஒரு சுவாரஸ்யமான போதனையை காண முடிகிறது. மாஸ்டாக்கிய மதத்தில் சுதந்திரமான காதல் திருமணங்கள் அனுமதிக்கப் பட்டிருந்தன. அத்துடன் பலதார மண முறை கடுமையாக எதிர்க்கப் பட்டது. அந்தக் காலத்தில் உலகம் முழுவதும் பலதார மணம் சர்வசாதாரணமான விடயமாக இருந்தது. ஈரானும் அதற்கு விதிவிலக்கல்ல. மாஸ்டாக் அதையும் ஒரு வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதாவது செல்வந்தர்கள் மட்டுமே பல பெண்களை மணம் முடிக்கிறார்கள். அன்றைய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் பெண்களும் சொத்துக்களாக கருதப் பட்டனர். ஒரு வர்க்க ஏற்றத்தாழ்வு கொண்ட சமுதாயத்தில் பணக்காரர்கள் பெண்களையும் தமக்குள் பகிர்ந்து கொள்வதால், ஏழைகள் மணம் முடிக்க பெண்கள் கிடைப்பதில்லை. கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி கொள்கையை போதித்தது. இஸ்லாம் நான்கு மனைவியர் மட்டுமே என்று சட்டம் போட்டு கட்டுப் படுத்தியது. ஆனால் கிறிஸ்தவமோ, இஸ்லாமோ பலதார மணத்தை வர்க்க கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறி விட்டன. 


சமூகத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுக்கு ஐந்து பிசாசுகள் காரணம் என்பது ஒரு மாஸ்டாக் போதனை. பொறாமை, கெட்ட எண்ணம், பழிவாங்கும் உணர்வு, தேவை, பேராசை ஆகிய ஐந்து பிசாசுகள் மனிதனை தீய வழியில் கொண்டு செல்கின்றன. இதிலிருந்து விடுதலை பெற ஒரு சமூகப் புரட்சி (சோஷலிசப் புரட்சி) அவசியம். அந்த வகையில் கார்ல் மார்க்ஸ் போன்ற சோஷலிச அறிஞர்கள் உலகில் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாஸ்டாக் ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.
அன்று பல இலட்சக் கணக்கான ஈரானியர்கள் மாஸ்டாக்கின் சமத்துவ கொள்கைகளால் கவரப் பட்டு புதிய மதத்தில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் தமது சொத்துக்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டு கம்யூனிச சமுதாயமாக வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் மன்னன் காவாத் புதிய மதத்தை தழுவிக் கொள்ளும் அளவிற்கு பெரும்பான்மை மக்கள் மாஸ்டாகிய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். 


இருப்பினும் அந்நாட்டில் பிற மதங்களை, குறிப்பாக அரச மதமான சொராஸ்திரிய மதத்தை பின்பற்றுவோரும் வாழ்ந்தனர். குறிப்பாக மேட்டுக்குடியினர் தனியுடைமையை ஏற்றுக் கொண்ட சொராஸ்திரிய மதத்திற்கு விசுவாசமாக இருந்தனர். இந்த சொத்துடைமை வர்க்கத்தினர், சொராஸ்திரிய மதகுருக்களுடன் சேர்ந்து புதிய கம்யூனிச மதத்தை அழிப்பதற்கு சூழ்ச்சி செய்தனர். அவர்களுடன் முடிக்குரிய இளவரசன் கொஸ்ரோவ் அனுஷீர்வனும் சேர்ந்து கொண்டான். ஒரு குறிப்பிட்ட நாளில் அரண்மனையில் நடக்கவிருக்கும் விருந்துக்கு வருமாறு மாஸ்டாக் மதகுருக்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அது தமக்கு வைக்கப் பட்ட பொறி என்பதை அறியாமல் சென்ற மாஸ்டாக் மதகுருக்கள் அனைவரும் படுகொலை செய்யப் பட்டனர்.
 

அந்த சம்பவத்திற்கு பின்னர், நாடு முழுவதும் மாஸ்டாக் மத நம்பிக்கையாளர்கள் வேட்டையாடப் பட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். பலர் உயிரோடு புதைக்கப் பட்டனர். முன்பு மாஸ்டாக்கிய மதத்தை தழுவியிருந்த மன்னன் காவாத், அன்று நடந்த சதிப்புரட்சி காரணமாக வெளியேற்றப் பட்டான். மூன்று வருடங்களுக்கு பின்னர் திரும்பி வந்த மன்னன் மாஸ்டாக் மதத்தை கைவிட்டு விட்டு, மறுபடியும் சொராஸ்திரிய மதத்தை பின்பற்றினான். அத்துடன் அவனே மாஸ்டாக் இனப்படுகொலையை முன்னின்று நடத்தினான். 


மாஸ்டாக் மதம் தொடர்பாக எழுதப்பட்ட அனைத்து நூல்களும் ஒன்று விடாமல் அழிக்கப் பட்டு விட்டன. அதனால் இன்று வரை மாஸ்டாக் மதம் பற்றிய முழுமையான தகவல்கள் யாருக்கும் தெரியாது. உண்மையில் மாஸ்டாக் மதத்தின் எதிரிகள் எதிர்மறையாக எழுதி வைத்த தகவல்களில் இருந்தே, அது சம்பந்தமான விபரங்களை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உதாரணத்திற்கு, மாஸ்டாக்கிய அழித்தொழிப்புக்கு பிறகு அந்நாட்டில் மீண்டும் தனியுடைமை வைத்திருக்கும் உரிமை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் பட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. 


இருப்பினும் மாஸ்டாகிய மதம் முற்றாக அழிந்து விட்டது என்று சொல்ல முடியாது. ஈரான் இஸ்லாமியமயமாகிய பின்னரும் அவர்கள் பல்வேறு பெயர்களில் சிறு குழுக்களாக மாஸ்டாக் மதத்தை பின்பற்றினார்கள். மசாக்கியே, கொராமியே, கொராம் டினியே, சொர்க் ஜமேகான், செபித் ஜமேகன் என்று பல பெயர்களில் அழைக்கப் பட்டனர். காலப்போக்கில் அவர்களும் இஸ்லாமியராக மாறி விட்டாலும், சமத்துவ கொள்கைகளை கைவிடவில்லை. ஷியா- இஸ்லாத்தில் சில பிரிவுகள் சமத்துவ சமூகத்தில் நம்பிக்கை வைத்துள்ளன. அத்துடன், இன்றைக்கும் ஈரானில் ஏராளமான தீவிர மார்க்சிய- லெனினிசவாதிகள் இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இது ஒரு வகையில் மாஸ்டாக் கம்யூனிசத்தின் பாரம்பரியமாகவும் கருதலாம். 


இன்றும் கூட மத்திய கிழக்கு நாடுகளில் அரேபியர்கள் மத்தியில் சோஷலிச அல்லது கம்யூனிச கொள்கைகளை பின்பற்றுவோரை "மாஸ்டாக் பெர்சியர்கள்" என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது குறித்து எல்லோருக்கும் தெரியாது என்றாலும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் பிரச்சாரங்ககளில் அவ்வாறு குறிப்பிடப் படுவதுண்டு. 

 

- கலையரசன்

25-11-2020

 

இதே கட்டுரை யூடியூப் காணொளியாக பதிவேற்றப் பட்டுள்ளது:

No comments: