Showing posts with label சிவபெருமான். Show all posts
Showing posts with label சிவபெருமான். Show all posts

Tuesday, November 24, 2020

கம்யூனிச சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த புரட்சிக் கதை!

முன்னொரு காலத்தில் வைகையாறு பெருக்கெடுத்து ஓடியதால் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. அதுவரை காலமும் குடிமக்களின் துன்பங்களை கண்டுகொள்ளாத கொடுங்கோலனான மன்னன் அரிமர்த்தனபாண்டியன் தனது அரண்மனைக்கே ஆபத்து என்றவுடன் அதை முழு நாட்டுக்கும் ஏற்பட்ட பேரழிவாக கருதினான்.  ஏற்கெனவே வெள்ளம் பல கிராமங்ளை அழித்து பல இலட்சம் மக்கள் பலியானார்கள்.

வெள்ளம் மன்னரின் மாளிகைக்கு வருமுன் தடுப்பதற்காக, அரிமர்த்தன பாண்டியன் வைகை நதிக்கரைகளில் மண் அணை கட்ட உத்தரவிட்டான். அதற்காக பாண்டிய நாட்டின் அத்தனை குடி மக்களையும் கட்டாய வேலை வாங்கினான். நோயாளிகள், முதியவர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோருக்கும் கரையை செப்பனிட்டு மண் அணை கட்டுவதற்காக ஆளுக்கொரு பகுதி ஒதுக்கப் பட்டது. 


வறுமை காரணமாக பிட்டு விற்று பிழைத்து வந்த வந்தியம்மை என்ற மூதாட்டிக்கும் வைகை நதிக்கரையில் மண் அணை கட்டும் வேலை கொடுக்கப் பட்டது. எழுபது வயதை தாண்டிய போதிலும், நோயுற்ற நிலையிலும், தளராமல் பிட்டு செய்து விற்று அந்தக் காசில் வாழ்ந்து வந்தாள். மன்னனின் காவலர்கள் அவளது முதுமையை மதிக்காமல், நோயாளி என்றும் பாராமல், இரக்கமில்லாமல் கடின வேலை வாங்கினார்கள். 

அந்த ஊரில் சிவபெருமான் என்ற ஒரு கம்யூனிச புரட்சியாளர் இருந்தார். அவர் வந்தியம்மை பாட்டியிடம் பிட்டு வாங்கிச் சாப்பிட்டு நட்புடன் பழகி வந்தார். தனது அன்புக்குரிய பாட்டியும் கட்டாய வேலை வாங்கப் படுவதைக் கண்டு ஆத்திரமடைந்த சிவபெருமான், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாண்டிய மன்னனின் பாசிச கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணினான். 


மண் அணை கட்டும் இடத்திற்கு வந்த புரட்சிக்காரன் சிவபெருமான், வந்தியம்மை பாட்டியை வேலை செய்ய வேண்டாம் என்றும், அவரை ஓய்வெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அவரது அணை கட்டும் வேலையை தான் செய்து தருவதாக கூறினார். வந்தியம்மை அதைக் கண்டு மனம் நெகிழ்ந்தாள். 

ஏற்கனவே உற்றார், உறவினர்களால் கைவிடப் பட்டிருந்த வந்தியம்மை பாட்டி, சிவபெருமானின் பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவள். அறுபது வயதைக் கடந்த முதியவர்களை வீட்டில் வைத்திருந்து ஓய்வூதியம் கொடுத்து பராமரிக்க வேண்டிய மன்னராட்சி, அவர்களை சாகும் வரை வேலை வாங்கும் கொடுமையை வெறுத்தாள். அத்துடன் மன்னரின் அரண்மனைக்கு ஆபத்து வந்தவுடன் அனைத்து மக்களையும் ஊதியம் கொடுக்காமல் அடிமை வேலை வாங்கும் கொடுமை ஒழிய வேண்டும் என விரும்பினாள். பாண்டிய நாட்டில் ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சியை உண்டாக்கி, மன்னராட்சியை கவிழ்க்க நினைத்த சிவபெருமானின் திட்டத்திற்கு உடன்பட்டாள்.


கூலித் தொழிலாளியாக மண் அணை கட்டுமிடத்திற்கு சென்ற சிவபெருமான், அங்கு வேலை செய்யாது பிற தொழிலாளர்களுடன் பேச்சுக் கொடுத்து, கொடுங்கோல் மன்னராட்சிக்கு எதிராக போராட வருமாறு தூண்டி விட்டுக் கொண்டிருந்தான். அத்துடன், காவலர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, கொஞ்ச நேரம் வேலை செய்வதாக போக்கு காட்டி விட்டு, பின்னர் ஒரு மர நிழலில் படுத்துறங்குவது போன்று பாசாங்கு செய்தான். பிற தொழிலாளர்களும் சிவபெருமான் செய்தது போன்ற அரச எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதாவது வேலையை குறைத்துக் கொள்வது, சோம்பேறித்தனமாக இருப்பது என்பது அதிகார வர்க்கத்தினரால் ஒரு நாசகார செயலாக கருதப் படும்.

அடிக்கடி காவலர்கள் அங்கு வந்து  எச்சரித்து விட்டு சென்றனர். எல்லோரும் தண்டனை கிடைத்து விடும் என்ற பயத்தில் கடுமையாக செய்து கொண்டிருக்கும் பொழுது, எப்படி இவன் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் படுத்திருக்கிறான் என்று எரிச்சலுற்றனர். அங்கு நடக்கும் "நாசகார செயல்கள்" பற்றிய விடயத்தை மன்னனிடம் அறிவித்தனர். 


அரசனின் ஆணையை மதிக்காத, வேலை செய்யாமல் படுத்திருக்கும் சோம்பேறிக்கு தக்க பாடம் புகட்டுவேன் என்று பாண்டிய மன்னன் கருவிக் கொண்டான். வீரர்களுடன் அந்த இடத்திற்கு வந்த மன்னன் படுத்திருந்த சிவபெருமானின் முதுகில் பிரம்பால் அடித்து எழுப்பினான். வேலை செய்யாத குற்றத்திற்கு தண்டனையாக காவலர்கள் சிவபெருமானை கசையால் அடித்து துன்புறுத்தினார்கள். 


பாண்டிய மன்னனின் அடக்குமுறைக்கு அஞ்சாத புரட்சியாளர் சிவபெருமான், அங்கிருந்த தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறு அறைகூவல் விடுத்தான். முதியவர்கள், நோயாளிகள் என்றும் பாராது, அனைவரையும் கட்டாய வேலை வாங்கும் பாண்டிய மன்னனின் கொடுமைக்கு எதிராக, பாட்டாளி மக்கள் கிளர்ந்தெழுந்து அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று உரையாற்றினான். சிவபெருமானின் எழுச்சி உரை கேட்டு அனைத்து தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்தனர். மன்னனின் ஏவல் படையான காவலர்களை தாக்கி அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறித்தெடுத்தனர். மன்னனனையும் விட்டு வைக்கவில்லை. அவனுக்கும் அடி விழுந்தது. அங்கு ஒரு மக்கள் புரட்சியை எதிர்பார்த்திராத பாண்டிய மன்னன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று நாட்டை விட்டே ஓடினான். 


பாண்டிய நாட்டு பாட்டாளி மக்கள் மதுரை நகரத்தின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆவணி மாதம் நடைபெற்ற மதுரைப் புரட்சி பற்றிய கதை, உழைக்கும் மக்கள் மத்தியில் செவி வழிக் கதையாக கடத்தப் பட்டு வந்தது. துரதிர்ஷ்டவசமாக, பிற்காலத்தில் வந்த மதவாதிகள் அதை ஒரு மதம் சம்பந்தப் பட்ட புராணக் கதையாக மாற்றி விட்டனர். அன்றைய புரட்சியாளரின் உண்மையான பெயரை மறைத்து, கடவுளான சிவபெருமானே கூலியாளாக வந்ததாக கதையை திரித்து எழுதினார்கள். அத்துடன் மதுரை வரலாற்றில் முதல் தடவையாக மன்னராட்சி கவிழ்க்கப் பட்ட சம்பவத்தை மறைப்பதற்காக, இறுதியில் பாண்டிய மன்னனே மனம் திருந்தி சிவபெருமானின் திருவிளையாடலை கண்டுகொண்டதாக பொய்யான தகவல்களும் சேர்க்கப் பட்டன.

Thursday, December 08, 2011

சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது !] (நான்காம் பாகம்)

"சிவன், சக்தியுடன் சேர்ந்திருக்கும் பொழுது தான், படைத்தல் தொழிலை செய்யும் வல்லமையை பெறுகிறான்." - சௌந்தர்ய லாஹிரி

பாடசாலை மாணவர்களுக்கான, சைவ சமயப் பாடத்தில், அர்த்தநாரீஸ்வரர் பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. சிவனும், சக்தியும் சரி பாதியாக காட்டும், "அர்த்த நாரீஸ்வரர்" உருவமானது, சைவ மதத்தின் பெண்ணுரிமைக் கோட்பாட்டிற்கு உதாரணமாக எடுத்துக் காட்டப் படுகின்றது. பாடசாலையை விட்டு வெளியில் வரும் மாணாக்கர்களுக்கு, "பெண்ணைத் தெய்வமாக மதித்த சமூகம், எதற்காக இன்று அடிமைப்படுத்துகின்றது?" என்ற நிதர்சனம் முகத்தில் அறையும்.

சைவ மதத்தின் பெயரால், "ஒரு சதிப்புரட்சியை நடத்தி", அதிகாரத்தை கைப்பற்றிய, "சைவ சித்தாந்தவாதிகள்" பற்றி எமது பாடநூல்கள் எதுவும் சொல்வதில்லை. இந்த வரலாற்று இருட்டடிப்பால் தான், சமூகத்தில் இத்தனை குழப்பம். சிவனை (சக்தியையும்) அர்த்த நாரீஸ்வரராக வழிபட்ட சைவர்கள் இன்று இல்லை. சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய அந்தக் காலகட்டம் மாறி விட்டது. இன்றுள்ள சைவர்கள் சிவனை ஆகம விதிப்படி வழிபடுகின்றனர். அதனால் தான், பிற தெய்வங்களையும் ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாது, இந்து மதத்தின் பிரிவாகவும் கீழ்ப்படிந்து நடக்கின்றனர்.

சிவனை அர்த்த நாரீஸ்வரராக வழிபட்ட சைவர்கள் எத்தகைய மக்கள்? நிச்சயமாக அவர்கள் நம்மைப் போல இருக்கவில்லை. ஆதிச் சைவர்கள் போல வாழ்வதற்கு இன்று யாரும் துணிய மாட்டார்கள். இங்கே அவர்களின் வாழ்க்கை நெறிகளை விளங்கப் படுத்தினால், "காட்டுமிராண்டி சமுதாயம்" என்று வெறுத்து ஒதுக்குவார்கள். ஐரோப்பிய கலாச்சாரத்தில் நிலவும் பாலியல் சுதந்திரத்தை, "கலாச்சார சீரழிவாக" கருதும் தமிழர்கள் நம்மில் எத்தனை பேர்? சைவ சமயத்தை பின்பற்றிய, இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை அனுபவித்தார்கள். அது சீரழிந்த ஐரோப்பிய கலாச்சாரத்தை விட அதிக சுதந்திரத்தை கொண்டிருந்தது. அன்றைய சைவர்கள், அதனை காமமாக கருதவில்லை. கடவுளை அடைய, முக்தி பெற சிறந்த வழியாக நம்பினார்கள்.

அதனை எடுத்துக் காட்டுவது தான், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் சிவலிங்கம். ஆணும், பெண்ணும் இணைந்து உயிரை உற்பத்தியாக்கி, இனப்பெருக்கம் செய்வதை இயற்கையின் இரகசியமாக கருதினார்கள். அதனை எடுத்துக் காட்டவே, ஆண்குறியும், பெண்குறியும் இணைந்த சிவலிங்கத்தை வழிபட்டார்கள். இயற்கை போதிக்கும் தெய்வத் தன்மையை மறைப்பதற்கு ஏதுமில்லை. ஆரியர்களின் பிராமண மதமும், அதன் செல்வாக்குக்கு உட்பட்ட சைவ சித்தாந்த பிரிவும், இந்த தத்துவங்களை மூடி மறைத்தன. பிற்காலத்தில், இந்திய உபகண்டத்தில் பரவிய இஸ்லாமும், கிறிஸ்தவ மதமும் இந்த விஷயத்தில் ஒத்த கருத்தை கொண்டிருந்தன. அவர்கள் புகட்டிய கலாச்சாரத்தை, நாம் இன்றைக்கும் "தமிழர் கலாச்சாரம்" என்று பெருமையாகப் பேசித் திரிகிறோம்.

பண்டைய சைவ மதத்தை, தாந்திரிய மதம் என்றும் அழைப்பார்கள். ஆணையும், பெண்ணையும் குறிக்கும், சிவனும், சக்தியும் தாந்திரிய மதத்தின் கடவுளராக வழிபடப் பட்டனர். "சிவனின்றி சக்தி இல்லை. சக்தி இன்றி சிவன் இல்லை." என்ற தத்துவமும் அப்போது தோன்றியது. உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்த, பண்டைய சமூக மக்கள், ஆண்குறியை மட்டும் தெய்வ ஸ்தானத்தில் வைத்து வழிபட்டனர். கிரேக்கத்திலும், தென் இத்தாலியிலும் வாழ்ந்த மக்கள், மீனை அதன் குறியீடாக பயன்படுத்தினார்கள். ஆதி கிறிஸ்தவர்களும் அதனை பின்பற்றினார்கள்.

பண்டைய இந்தியர்கள், ஆணின் பிறப்புறுப்பையும், பெண்ணின் பிறப்புறுப்பையும் சிவலிங்க வடிவில் வணங்கியது முற்போக்கான விடயமாக கருதப் பட வேண்டும். ஆதிச் சைவர்கள், அந்தளவுக்கு நாகரீக வளர்ச்சி அடைந்திருந்தனர். மூவாயிரம் வருடங்களுக்குப் பிறகு வந்த ஐரோப்பியர்கள், "ஆணும், பெண்ணும் சமம்" என்று, எமக்குப் போதிக்கும் அளவுக்கு, நாம் எமது கலாச்சாரத்தை மறந்து விட்டோம். பெண் விடுதலையை, பாலியல் சுதந்திரத்தை, ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே, இந்தியர்கள் அதனை கடைப்பிடித்து ஒழுகி வந்தனர். உண்மையில், நாம் இன்று எதனை தமிழ்க் கலாச்சாரம் என்று தவறாக புரிந்து கொள்கிறோமோ, அது தான் ஐரோப்பியரின் கலாச்சாரம் என்பது எமக்குத் தெரியாது.

திபெத்தில், கி.பி. 7 ம் நூற்றாண்டில் தான் பௌத்த மத அரசு உருவானது. அதற்குப் பிறகு தான், திபெத் என்ற தேசம் உலக வரைபடத்தில் தோன்றியது. அநேகமாக, இந்திய உப கண்டத்தில் பௌத்த மதம் மடிந்து கொண்டிருந்த காலத்தில் தான், திபெத்திலும், இலங்கையிலும், பேணிப் பாதுகாக்கப் பட்டது. இந்திய உப கண்டத்தில் பரவிய பிராமண மதம் (அல்லது இந்து மதம்) பௌத்தம், சமணம் போன்ற மதங்களை கூடிய மட்டிலும் அழித்து விடுவதில் முனைப்புக் காட்டியது.

பௌத்த, சமண மதங்களை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுடன் ஒப்பிடலாம். அதாவது, மதத்தை தோற்றுவித்தவர்கள், நிறுவன மயப் படுத்தியவர்கள், புனித நூல்கள் எல்லாவற்றையும் கொண்டிருந்தன. அதே நேரம், இந்த மதங்களில் ஆர்வமுள்ள அனைவரும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். பிராமண மதம் (இந்து மதம்) அவ்வாறானது அல்ல. அந்த மதத்தை சேர்ந்த தாய்க்கும், தந்தைக்கும் பிறக்கும் ஒருவர் மட்டுமே பிராமணர் (அல்லது இந்துவாக) இருக்க முடியும். அந்த வகையில் பார்த்தால், யூதர்கள் போன்று, பிராமண மதத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கும். அவர்களால், நிறுவன மயப் படுத்தப் பட்ட, பௌத்த, சமண மதங்களை எதிர்த்துப் போராடி இருக்கவே முடியாது. அது எவ்வாறு சாத்தியமானது?

அன்று, இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த பெரும்பான்மை மக்கள், தாந்திரிய மதங்களை பின்பற்றினார்கள். இந்து மதத்திற்கு முந்திய பழமையான மதமான, தாந்திரிய மதத்தில், சிவனை வழிபடுவோர், சக்தியை அல்லது காளியை வழிபடுவோர், என்று சில பிரிவுகள் இருந்துள்ளன. இந்திய பழங்குடியின மக்களின் கடவுளரை, நமது கால இந்துக்கள் "சிறு தெய்வங்கள்" என்று அழைப்பார்கள். அன்றைய பிராமணர்கள், சிவ பெருமான் போன்ற "சிறு தெய்வங்களை", பெருந் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டார்கள். அவற்றை பிராமண மதத்தில் இணைத்துக் கொண்டார்கள். தமிழகத்திலும் இதே காலகட்டத்தில் தான், பக்தி இயக்கம் என்ற பெயரில் சைவ சித்தாந்த மதம் தோன்றியது. திருஞான சம்பந்தர் போன்ற சமய குரவர்களும், புதிதாக முளைத்த பல்லவ ஆட்சியாளர்களும் பக்தி இயக்கத்தை நெறிப் படுத்தினார்கள். அவர்களது ஒரே குறிக்கோள், பெரும்பான்மை இந்தியர்கள் பின்பற்றிய பௌத்த, சமண மதங்களை அழித்து, அந்த இடத்தில் பிராமண மதத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாகும்.

இந்தியாவில் ஆரிய-பிராமண மேலாதிக்கத்தை சாத்தியமாக்கிய இரண்டு முக்கிய அம்சங்களாவன:
1 . பெரும்பான்மை இந்தியர்கள் வழிபட்ட தாந்திரியக் கடவுளரை ஏற்றுக் கொண்டமை.
2 . உள்ளூர் மக்களின் மொழிகளிலேயே சமயப் பிரச்சாரம் செய்தமை.
இவ்வாறு இடத்திற்கேற்றவாறு, காலத்திற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்கள் பிராமணர்கள். பாகிஸ்தானில் இஸ்லாமிய மதம் பரவிய பொழுது, பிராமணர்கள் பலர் முஸ்லிம்களாக மாறினார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானிய ஆளும் வர்க்கத்தின் பிராமண இனத் தூய்மை வேறு பெயர்களில் (சாதி) பேணப் படுகின்றது. பிராமணர்களைப் பொறுத்த வரையில், இன மேலாதிக்கமே முக்கியமானது. மதம், கொள்கை எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். அந்த வகையில், சூத்திரர்களின் கடவுள்களை இணைத்துக் கொண்டு, இந்து மதம் என்றொரு புதிய மதத்தை உருவாக்குவது கடினமாக இருந்திராது.

நவீன கால ஐரோப்பாவில், "இனவாதம்" அரசியல் கோட்பாடாக உருவானது. ஆனால், இனவாத சிந்தனையின் வேர்கள், இந்திய பார்ப்பனீய மரபிற்குள் காணப்படுகின்றன. இல்லாவிட்டால், திபெத் சென்று, தூய ஆரிய இனம் குறித்த ஆராய்ச்சி செய்வதற்கு ஹிட்லர் பேரவாக் கொண்டிருப்பானா? அந்தக் காலத்தில், இந்தியா பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் இருந்தது. அதனால் தான் ஹிட்லரின் ஆராய்ச்சியாளர்களால் இந்தியா வர முடியவில்லை. நவீன கால இனவாதிகள் எதிர்பார்த்த அளவிற்கு, திபெத் இனத் தூய்மை பேணும் நாடாக இருந்ததில்லை.

திபெத் தோன்றிய காலத்தில், இந்திய உப கண்டம் முழுவதும், மதம் சார்ந்த அரசியலே கோலோச்சியது. கி.பி. 6 ம், அல்லது 7 ம் நூற்றாண்டில், இந்தியா முழுவதும் இந்து மத மேலாண்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. மத்திய கால ஸ்பெயினில் நடந்த Inquisition போன்று, இந்தியாவிலும் பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. அவ்வாறான சூழலில், திபெத்தியர்கள் "உலகின் ஒரேயொரு பௌத்த தேசத்தை" ஸ்தாபித்தனர். (சில நூற்றாண்டுகளுக்கு பின்னர், கௌதம புத்தர் பிறந்த மண்ணில், நேபாளம் என்ற "உலகின் ஒரேயொரு இந்து தேசம்" பிரகடனம் செய்யப் பட்டது.) இந்து மதம் போன்றே, திபெத்திய பௌத்த மதத்திற்கும் "ஆன்மீக நெருக்கடி" தோன்றியது. பௌத்த மத ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, உள்ளூர் மக்கள் வழிபட்ட தெய்வங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் தான், திபெத்தில் இன்றைக்கும், சிவனின் அர்த்த நாரீஸ்வரர் உருவம் வழிபாட்டுக்கு உரியதாக உள்ளது.

திபெத்திய பௌத்த மதமும், இந்து மதமும், "மத நீக்கம் செய்யப்பட்ட சிவனை" தெய்வ ஸ்தானத்தில் வைத்து பூஜிக்கின்றன. அதாவது, ஆதிச் சைவ சமயமான தாந்திரிய மதத்தில் இருந்து, சிவன் தனியே பிரித்தெடுக்கப் பட்டுள்ளார். காந்தியை தேசபிதாவாக்கி விட்டு, காந்தீயத்தை புறக்கணிக்கும் அயோக்கிய அரசியல் இது. ஆதிச் சைவர்களுக்கும், நவீன சைவர்களுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இரண்டு பிரிவினரும் சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குகின்றனர். அது மட்டுமே ஒரேயொரு ஒற்றுமை.

பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட, சிவனை ஆகம விதிப்படி வணங்கும் நவீன சைவர்கள், தாந்திரிய மதம் பற்றி கேள்விப் பட்டிருக்கவே மாட்டார்கள். இந்து மதம், அது குறித்த தகவல்களை இருட்டில் வைத்திருந்தது. தாந்திரிய மதம் என்றால், பில்லி சூனியம், பித்தலாட்டம் செய்யும், காட்டுமிராண்டிகளின் மதம் என்று பரப்புரை செய்தது. "தந்திரம்" என்ற சொல் கூட அதிலிருந்து வந்திருக்கலாம். சமீப காலத்தில், ஐரோப்பியர்கள் தாந்திரிய மதம் மீது அளவு கடந்த ஆர்வம் காட்டுகின்றனர். மேற்குலகில், "தாந்திரா" என்பது பாலியல் சமாச்சாரங்களுக்கு சூட்டப்படும் பெயராகி விட்டது. பாலியல் இச்சை காரணமாகவே, பல ஐரோப்பியர்கள் இந்திய தாந்திரீக மதத்தை ஓரளவு பின்பற்றும் போக்குக் காணப் படுகின்றது.

மேற்குறிப்பிட்ட இரண்டு தரப்பட்ட பார்வைகளும் தவறானவை. பண்டைய காலத்தில் இடம்பெற்ற சில வழிபாட்டு முறைகள், நமது காலத்தில் விசித்திரமானதாக தோன்றலாம். ஆனால், தாந்திரிய மதத்தை அழிக்கும் நோக்குடன், அந்த மதத்தை பின்பற்றுவோரை சூனியக் காரர்கள் என்று இழிவு படுத்தினார்கள். இதே போன்ற நிலைமை, ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் பரவிய காலத்திலும் காணப்பட்டது. கிறஸ்தவ மதம் வருவதற்கு முன்னர், இயற்கை வழிபாடு ஒரு மதமாக இருந்தது. அந்த மதத்தின் புரோகிதர்களும், நம்பிக்கையாளர்களும், சூனியக்காரர்கள் என்று தூற்றப் பட்டனர். இயற்கை வழிபாடு செய்வது கண்டுபிடிக்கப் பட்டால், உயிருடன் கொளுத்தப் பட்டனர். இந்தியாவிலும், ஏறக்குறைய இதே மாதிரியான அடக்குமுறை காரணமாக, தாந்திரியம் எனப்படும் ஆதிச் சைவ சமயம் மக்கள் மனதில் இருந்து அகற்றப் பட்டு விட்டது.

தாந்திரிய மதம், "ஆண்,பெண் புணர்ச்சியில் இறைவனைக் காணலாம்" என போதித்தது. (மேற்குலகில் ரஜ்னீஷ் சாமியார் இதைத் தான் திரிபு படுத்தி போதித்துக் கொண்டிருந்தார்.) ஆயிரம் வருட காலமாக, பாலியல் உணர்வு அடக்கப்பட்ட சமுதாயத்தில் மட்டுமே, இதெல்லாம் தவறாகத் தெரிகின்றது. ஆண், பெண் உறவுகளில் எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத, பண்டைய இந்திய சமுதாயத்தில், அது ஒரு சாதாரணமான நிகழ்வு. அதே நேரம், கலவி இன்பத்திற்கு கூறப்பட்ட தத்துவார்த்த விளக்கங்கள், ஐரோப்பிய தாந்திரீய பக்தர்களால் புறக்கணிக்கப் படுகின்றன. தாந்திரிய மதம் விளக்கிய, உடலுறவு எனப்படும் இயற்கையின் இரகசியம், இன்றைக்கும் கோயில் கோபுரங்களில் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. இந்தியாவை காலனிப் படுத்திய ஆங்கிலேயர்கள், அவற்றை எல்லாம் "அசிங்கமானது" என்று சொல்லி ஒதுக்கினார்கள். நாமும் அவர்களைப் போன்று சிந்திக்கப் பழகி விட்டோம். பிராமண இந்துக்கள், தமது இன மேலாதிக்க அரசியலுக்காக, எமது பண்பாட்டுப் பெருமைகளை மறைத்தார்கள். ஆங்கிலேயர்கள், அதனுடன் கிறிஸ்தவ மத அடிப்படைவாத கருத்துகளையும் எம் மீது திணித்து, "தமிழர் கலாச்சாரம் என்றால் இது தான்" என்று மூளைச் சலவை செய்தார்கள்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!

Thursday, December 01, 2011

சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!


(இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது ! - மூன்றாம் பாகம்)

நான் முதன் முதலாக எழுதிய கட்டுரை சைவ சமயத்தை பற்றியது. 12 வயதில் எழுதிய அந்தக் கட்டுரை, கொழும்பு இந்து-தமிழ் சங்கத்தினர் வெளியிட்ட சிறப்பு மலரில் பிரசுரமானது. பாடசாலையில் படிக்கும் காலத்தில் சைவ சமய பாடத்திற்கு தான் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். அதே நேரம், யாழ் சைவ சித்தாந்தக் கழகம் நடத்தும் பரீட்சைகளின் சான்றிதல்கள் கூட கிடைத்துள்ளன. எதற்காக "சைவ சித்தாந்தம்" என்று அழைக்கிறார்கள் என்று, அந்த வயதில் எழுப்பிய கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. பாடசாலையில் இந்து நாகரீகம் போதிக்கும் நூலிலும், சைவ சமயம் தென்னிந்தியருக்கே பிரத்தியேகமான மதம் என்று தான் எழுதப் பட்டிருந்தது.

அதே நூலின் இன்னொரு இடத்தில், சிந்து வெளி மக்களால் வழிபடப் பட்ட பசுபதி தெய்வ இலச்சினை, சிவனாக இருக்கலாம் என்ற குறிப்பும் காணப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் விளைவாக, அத்தகைய கண்டுபிடிப்புகள் வரலாற்றை திரிக்கவும் பயன்பட்டுள்ளன. திராவிடர்கள் சிந்து வெளியிலும் வாழ்ந்து வந்ததற்கு ஆதாரமாக சிவ வழிபாடு எடுத்துக் காட்டப் படுகின்றது. இவை போன்ற கருத்துக்கள், ஆங்கிலேயரின் இனவாத தத்துவத்தை வலுப் படுத்துவதற்காக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், வட இந்தியாவில் வாழ்ந்த காஷ்மீர் இன மக்களும், திபெத்திய இன மக்களும் நீண்ட காலமாகவே சிவனை வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில், காஷ்மீரிகள் முஸ்லிம்களாகவும், திபெத்திய இனங்கள் பௌத்தர்களாகவும் மாறி விட்டனர். ஆங்கிலேயர்களும், தென்னிந்திய சைவர்களும், வட இந்தியாவில் பரவியிருந்த சைவ சமயத்தை மறைத்த காரணம் என்ன?

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த சிவனை வழிபடும் மதம், ஆரியரின் வருகையினால் இரண்டாகப் பிளவு பட்டது. வரலாற்றில் எப்போதும், எதிரிகளுடன் ஒத்துழைக்கும் மக்களே தப்பிப் பிழைத்து வாழ்வதை அவதானிக்கலாம். ஆங்கிலேயரை எதிர்த்த கட்டபொம்மன், திப்புசுல்தான்களின் சந்ததிகள் அழிக்கப் பட்டு விட்டன. ஆங்கிலேயருடன் ஒத்துழைத்த தொண்டைமான், நிசாம்களின் சந்ததிகள் இன்றைக்கும் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றன. அது போன்றே, அன்றைக்கு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களான ஆரியருக்கு காட்டிக் கொடுத்து, ஒத்துழைத்த பிரிவினரே சைவ சித்தாந்தவாதிகள். அதனால் தான், சைவ சமயம், இந்து மதத்தின் பிரிவாக கருதப் படுகின்றது. சைவக் கோயில்களில் பிராமண புரோகிதர்கள் பூசை செய்கின்றனர்.

ஆங்கிலேய வரலாற்று அறிஞர்கள் கூறுவது போன்ற "ஆரியப் படையெடுப்பு" நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், ஆரியரின் புலம்பெயர்வு நடந்திருக்க வாய்ப்புண்டு. அவர்களின் முக்கிய நோக்கம், நிலங்களை அபகரிப்பதும், செல்வத்தை சூறையாடுவதுமாக இருந்திருக்கலாம். வரலாறு நெடுகிலும் இது போன்ற உதாரணங்கள் பல காணக் கிடைக்கின்றன. ஸ்கண்டிநேவிய வைகிங் குழுக்கள், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு கொள்ளையடிக்க சென்ற பொழுது தான் நாகரீகத்தை கற்றுக் கொண்டனர். கிறிஸ்தவ மதத்தையும் தழுவினார்கள். துருக்கிய இனக் குழுக்கள் பாக்தாத்தை அழித்த பின்னர் தான், இஸ்லாமிய நாகரீகம் பற்றி அறிந்து கொண்டனர். அதே போன்று, ஆரியர்கள் வட இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்த பிறகு தான், "இந்து மதம்" உருவெடுத்தது. இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம் போன்ற ஆறு பிரிவுகள் இருப்பதாக, நமது காலத்து பாடநூல்களில் எழுதப் பட்டுள்ளது. உண்மையில், ஒன்றுகொன்று தொடர்பற்ற, தனித் தனியாக வழிபடப் பட்ட மதங்களே இவை. இந்து மதம் பற்றிய வரைவிலக்கணம் எவ்வளவு அயோக்கியத் தனமானது என்பதை இவ்வாறு புரிந்து கொள்ளலாம். அயல் நாடுகளை ஆக்கிரமிக்கும் வல்லரசுகள், அவற்றை தமது மாநிலங்களாக அறிவிப்பது போன்ற அரசியல் செயற்பாடு இது.

இன்றைக்கும் பல ஆப்பிரிக்க இனங்கள், தமக்கென தனியான கடவுள்களும், மத வழிபாடுகளையும் கொண்டிருப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பழங்குடியின மக்கள், எளிமையான மூத்தோர் வழிபாட்டு முறையை பின்பற்றுகின்றனர். பண்டைய இந்தியாவிலும் அது போன்ற நிலைமை இருந்திருக்கும். சிவன், கணபதி, காலபைரவர், காளி, முருகன் போன்ற தெய்வங்களை வழிபட்ட மக்கள், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தனர். உதாரணத்திற்கு, சிவனை வழிபடுவோர் காஷ்மீர் போன்ற மேற்கு இந்தியப் பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். அதே போன்று, காளியை வழிபடுவோர் கிழக்கு இந்தியாவில் அதிகமாக வாழ்ந்துள்ளனர். இந்த தெய்வங்களுக்கெல்லாம் பொதுவான ஓர் அம்சம் ஒன்றுண்டு. சிவன், காளி, விஷ்ணு, கிருஷ்ணன், ஆகிய தெய்வங்கள் நீல வர்ணத்துடன் காட்சி தருகின்றன. உண்மையில், இவை எல்லாம் கரு நிற மேனிகளை கொண்ட தெய்வங்கள். அதாவது, கறுப்பர்களின் கடவுள் கறுப்பாகத் தானே இருப்பார்?

ஆரியரின் வருகைக்கு முன்னர், இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த மக்கள் கருப்பர்களாகவிருந்தனர். பிந்திய சமூக-விஞ்ஞான ஆய்வாளர்கள் அவர்களுக்கு திராவிடர்கள் என்று நாமம் சூட்டினார்கள். வட கிழக்கு இந்தியப் பகுதிகளில், சீனர்கள் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் வாழ்ந்தனர். நவீன கால சமூக விஞ்ஞானிகள், இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இடைப்பட்ட இனம் என்று அர்த்தம் தொனிக்கும் "தீபெத்தோ-இந்தியர்கள்" என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். சமஸ்கிருதம் பேசிய ஆரியர்கள், அவர்களை நாகர்கள் என்று அழைத்தனர். நாகர்கள் ஒரு காலத்தில், இலங்கைத் தீவு வரையில் பரவியிருந்தனர். இன்றைக்கும் "நாகர்" என்ற பெயர் கொண்ட ஊர்கள் அதற்கு சாட்சியமாக உள்ளன. ஆயிரம் வருடங்களாக, இந்திய உப கண்டத்தில் வாழ்ந்த, ஆரிய, திராவிட, நாகா இனங்களுக்கிடையில் கலாச்சாரப் பரிமாற்றமும், இனக்கலப்பும் நடைபெற்றிருக்கும். இனவாத சிந்தனை கொண்ட ஐரோப்பிய சமூக-விஞ்ஞானிகள் தான், இவ்வாறு இன அடிப்படையில் பாகுபடுத்தி பார்த்தனர். இன்றைக்கு யாருமே தூய்மையான இனம் என்று உரிமை கோர முடியாது. தென் சீனப் பகுதி மக்களின் மரபணுக்கள், தென்னிந்திய தமிழர் உடலிலும் கலந்திருக்கலாம்.

இந்திய உப கண்டத்தில், ஹரப்பா பகுதியில் வாழ்ந்த மக்களிடம் தான் உயர்ந்த நாகரீகம் காணப்பட்டது. பிற இந்தியப் பகுதிகளில், பல்வேறு இனக்குழுக்கள், தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களை நிர்வகித்து வந்தனர். ஹரப்பா நாகரீகம் ஆரியர் வருகைக்கு முன்னரே அழிந்திருக்கலாம் என்பது அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில் வட இந்தியாவில் தோன்றிய ஆரியர்கள், தூய்மையான வெள்ளை இனத்தவர்கள் என்று கருத முடியாது. உள்ளூர் இனங்களுடன் கலந்து, ஆரியர் என்ற பெயரை மட்டும் தக்க வைத்திருப்பார்கள். ஆரியர் என்றால் மேன் மக்கள் என்றும் அர்த்தப் படும். ஆரியப் படையெடுப்பு என்ற கோட்பாடு, ஐரோப்பிய இனவாத சமூக-விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று குற்றம் சாட்டப் படுகின்றது. அதாவது, ஒரு காலத்தில் வெள்ளை இனத்தவர்கள் உலகம் முழுவதும் பிடித்து ஆண்டனர் என்று நிரூபிப்பதே அவர்களது நோக்கம்.

ஆங்கில வரலாற்றாசிரியர்கள் போதித்த "ஆரியர் படையெடுப்பு" கோட்பாட்டை, சில இந்திய ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். ஆனால், அதற்காக வெள்ளையின ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையவேயில்லை, என்று வாதிட முடியாது. சமஸ்கிருதத்திலும், ஐரோப்பிய மொழிகளிலும் நிறைய சொற்கள் ஒரே மாதிரியாக வருகின்றன. அதே போன்று, ஜெர்மனியக் கடவுளரும், கிரேக்க கடவுளரும், இந்திய-ஆரியரின் கடவுளரும் ஒரே மாதிரியாக உள்ளன. உதாரணத்திற்கு, இயற்கையில் தோன்றும் இடி மின்னல், சக்தி வாய்ந்த கடவுளாக வணங்கப் பட்டது. இந்திய-ஆரியர்கள் இடியின் கடவுளை "இந்திரன்" என அழைத்தனர். கிரேக்கர்கள் "செயுஸ்"(Zeus) என்று வணங்கினார்கள். ஜெர்மனியர்கள் "தொர்"(Thor) என்று பெயரிட்டு அழைத்தனர். இதே போன்று, சமுத்திரம், மழை, காற்று, இவையெல்லாம் கடவுள்களாக இருந்துள்ளன. இருப்பினும், "இந்து நாகரீகம்" இந்திய ஆரியர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. அதற்கு காரணம், இந்திய இனக்குழுக்களால் வழிபடப் பட்ட தெய்வங்களை ஆரியர்களும் ஏற்றுக் கொண்டமை தான்.

"போதிதர்மன் காஞ்சியில் பிறந்ததால் பெருமைப்படும் தமிழர்களும், புத்தர் இந்தியாவை சேர்ந்தவர் என்பதால் பெருமையுறும் இந்தியர்களும், சீன தேசத்தில் வசிக்கும் சிவபெருமானுக்காகவும் பெருமை கொள்வார்களா?" இந்தக் கேள்வி உங்களுக்கு அபத்தமாகத் தோன்றினால், குருட்டுத் தனமான தேசியவாதமும் அபத்தமானது என்றே பொருள் படும். காஷ்மீரிலும், திபெத்திலும், வட-மேற்கு இந்திய மாநிலங்களிலும் சிவனை வழிபடும் மக்கள் வாழ்ந்துள்ளனர். ஒரு யோகியான சிவபெருமான் கைலாய மலையில் வாழ்வதாக, பக்தர்கள் நம்புகின்றனர். இந்தக் கைலாய மலையானது, சீனாவின் மாநிலமான திபெத்தில் உள்ளது. அந்தப் பகுதி, என்றைக்குமே இந்தியாவுடன் இணைந்திருக்கவில்லை.

கைலாய மலையானது, வரலாறு தெரிந்த நாளில் இருந்து, ஒன்றில் சீனாவுக்கு, அல்லது திபெத்திற்கு சொந்தமாக இருந்துள்ளது. "சிவபெருமான் வசிக்கும் மலை என்பதால், இந்திய சைவர்களுக்கு கைலாய மலை புனிதமானது. அதே நேரம், சமண மதத்தவர்களுக்கும், திபெத்திய பௌத்தர்களுக்கும், திபெத்திய பொன் மதத்தவர்களுக்கும் கைலாய மலை புனிதமானது. இவ்வாறு சீன, இந்திய மதங்கள் எல்லாம் கைலாய மலைக்கு உரிமை கோருவதற்கு காரணமாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். வேத காலத்திற்கு முந்திய, உலகின் பழைமையான மதங்களில் ஒன்றான "தாந்திரிய மதம்", அந்தப் பகுதியெங்கும் பரவியிருந்தது. சிவனும், சக்தியும் தாந்திரிய மதத்தின் முக்கியமான கடவுளர்கள். வேத மதமான "இந்து" மதத்தின் ஆதிக்கத்தால், இந்தியாவில் தாந்திரீய மதம் ஏறக்குறைய அழிந்து விட்டது. ஆனால், திபெத்தில் "வஜ்ராயனம்" என்ற பெயரில், திபெத்திய பௌத்த சமயத்தினால் உள்வாங்கப் பட்டது.


(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்