Monday, May 24, 2010

மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம்!

(பெல்ஜியம் பயணக் கதை - பகுதி 1)

"பிரெஞ்சு பெருச்சாளிகளே! வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடுங்கள்." புருசல்ஸ் மாநகரின் அருகில் உள்ள உள்ளூராட்சி சபைக்கு முன்னால் ஒரு கூட்டம் டச்சு மொழியில் கோஷம் போடுகின்றது. முகத்தை மூடிய நபர்கள் அறிவிப்பு பலகைகளில் பிரெஞ்சுப் பெயர்களை தார் பூசி அழிக்கின்றனர். ஒரு உணவுச்சாலையினுள் நுளையும் "மொழிப் பொலிஸ்" எதற்காக டச்சு மொழியில் விளம்பரத் தட்டி இல்லை என்று கேட்கிறது. மொழி உரிமைக்காக போராடும் டச்சு இனவாதிகளையும், பிரெஞ்சு இனவாதிகளையும் சமாளிக்க முடியாமல் பெல்ஜிய அரசாங்கம் இராஜினாமா செய்கின்றது. ஜூன் மாதம் பொதுத் தேர்தல் அறிவிக்கப் படுகின்றது.

இனப்பிரச்சினை உச்சத்தில் உள்ள மேற்குலக நாடான பெல்ஜியம் அரசியல் குழப்பத்திற்குள் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது. எதிர்பாராத விதமாக, நானும் ஒரு மாத காலம் பெல்ஜியத்தில் தங்கியிருந்ததால், இந்த அரசியல் சர்க்கஸ் பார்க்கும் பாக்கியம் கிட்டியது. முதலில் அந்த சந்தர்ப்பத்தை எற்படுத்திக் கொடுத்த பல துறை சார்ந்த நண்பர்களுக்கு எனது நன்றிகள். நெதர்லாந்திற்கும், பிரான்சிற்கும் நடுவில் உள்ள ஒரு சிறிய நாடு பெல்ஜியம்.(இலங்கையை விட சிறியது.) உலகில் அதிக கவனம் எடுக்கப்படாத பிரதேசங்களில் ஒன்று. இன்று மொழிப் பிரச்சினையால், எதிர்காலத்தில் பெல்ஜியம் என்ற நாடு நிலைத்து நிற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெதர்லாந்துக்காரர்கள் இராணியின் பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருந்த ஏப்ரல் 30 அன்று, நான் பெல்ஜியத்தினுள் பிரவேசித்தேன். அப்பாடா, இராணியின் "பெருங் குடி" மக்களின் தொல்லையில் இருந்து இந்த வருடம் தப்பிவிட்டேன். அடுத்த நாள் மே தினம், உழைப்பாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுவார்கள். ஆனால் நெதர்லாந்தில் மட்டும் விடுமுறை கிடையாது. முதல் நாள் இராணியின் தினத்தை கொண்டாடிய களைப்பில் அயர்ந்து தூங்கி விட்டு அடுத்த நாள் வேலைக்குப் போக வேண்டும். பெல்ஜியத்தில் இராணியின் தினம் கிடையாது. (உன்னுடைய ராணி அழகா? என்னுடைய ராணி அழகா? என்று நெதர்லாந்து, பெல்ஜிய சாமானியர்கள் போடும் சண்டையை பார்த்து ரசித்திருக்கிறேன்.) நான் அன்றைய தினம், ஒரு பலசரக்கு கடை உரிமையாளருடன், அவர் கொள்வனவு செய்யும் கடைக்கு சென்றிருந்தேன். கடை உரிமையாளர் ஒரு பாகிஸ்தானி, அவருக்கு விநியோகம் செய்தவர் பெல்ஜிய நாட்டவர். பொருட்களை விநியோகம் செய்து கொண்டே, "நாளை நாம் கடையை பூட்டியிருப்போம்." என்றார். ஏன் என்று கேட்டதற்கு "நாளை மே தினம். பெல்ஜிய மக்கள் யாரும் வேலை செய்ய மாட்டார்கள். ஆனால் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் வேலை செய்வார்கள்." என்று கிண்டலடித்தார். உழைப்பாளர்களின் உரிமைகளைப் பற்றி அக்கறைப்படாத குடிவரவாளர்கள் ஐரோப்பிய நாடுகளில் அநேகம். அதை அவர்கள் ஒரு குறையாக எடுப்பதில்லை. குறைந்த காலத்தில் கூடிய பணம் சேர்ப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர்.

பிற ஐரோப்பிய நாடுகளைப் போல, பெல்ஜியத்திலும் சிறிய கடைகள் யாவும் வெளிநாட்டு "முதலாளிகளாலேயே" நடத்தப் படுகின்றன. அவை "இரவுக் கடைகளாக" இருக்கும். அதாவது தினசரி மாலை ஆறு மணி முதல், அதிகாலை மூன்று மணி வரை திறந்திருப்பார்கள். அநேகமாக பாகிஸ்தானியர்கள் (சில இடங்களில் இந்தியர்கள், இலங்கையர்கள்) "இரவுக் கடை" வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பார்கள். ஒரு இரவுக் கடை எடுத்து நடத்துவதற்காக தான், எனது நண்பர் என்னை பெல்ஜியம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இரண்டு நாட்கள் அந்தக் கடையில் இருந்து, பழைய கணக்கு நிலுவைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அல்கஹோல் கலந்த குடிவகைகளுக்கு இரண்டு மடங்கு விலை போடப்பட்டிருந்தது. மதிப்புக் கூட்டு வரியில் (VAT) நிறைய குளறுபடிகள். விநியோகஸ்தரிடம் வாங்கிய பொருளின் வரியை திருப்பி எடுக்கும் அதே தருணம், அதை சரியான முறையில் விற்பனை விலையில் காட்டுவதில்லை. இலகுவாக அந்தப் பிரச்சினையை சமாளிக்கிறார்கள். அதாவது ’பில்’ போடுவதில்லை. இதனால் கறுப்புச் சந்தையில் வாங்கும் பொருட்களை, கற்பனைக்கு எட்டிய வண்ணம் விலை போட்டு விற்க முடிகிறது. இது எல்லாவற்றிற்கும் கடை உரிமையாளர் சொன்ன ஒரே காரணம்: ".... இல்லாவிட்டால் நான் எப்படி லாபம் சம்பாதிப்பது?" வாடிக்கையாளர்களிடம் அறவிடும் வரியை அரசுக்கு கொடுக்காமல், தனது பைக்குள் போடுவதற்கு பெயர் "லாபம்".

தொழிற்துறை புரட்சி உருவாக்கிய நகரங்கள் பல பெல்ஜியத்தில் உண்டு. இதனால் பல தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பெயர் போனது. அண்மையில் கூட ஜெர்மனியின் ஒபெல் கார் தொழிற்சாலை ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி இருந்தது. அதற்கெதிரான தொழிற்சங்க நடவடிக்கையால் நாடே ஸ்தம்பிதமடைந்திருந்தது. அன்றும் இன்றும் பெல்ஜியத்திற்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் சர்வதேச துறைமுகம், அன்த்வேர்பன் (ஆங்கிலத்தில்: Antwerp) நகரில் உள்ளது. அன்த்வேர்பன், ரொட்டர்டாம் (நெதர்லாந்து) ஆகிய துறைமுகங்களில் இறக்கப்படும் சரக்குகள், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, ஆகிய நாடுகளுக்கும் செல்கின்றன. அன்த்வெர்பன் நகரை சுற்றி பல தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இப்போது பிரச்சினை என்னவென்றால், நாட்டிற்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் "அன்த்வெர்பன்", டச்சு மொழி (பெல்ஜியத்தில் "பிளாம்ஸ்" என்றழைப்பர்.) பேசும் மாநிலத்தில் உள்ளது. தொழிற்துறை அபிவிருத்தி மட்டுமல்ல, நவீன வர்த்தக தொடர்புகள் காரணமாக மொத்த தனி நபர் வருமானம் பிளான்டரன் (டச்சு பேசும் பிரதேசத்திற்கான பெயர்) மாநிலத்தில் அதிகம். அதனால் அவர்களுக்கு கொஞ்சம் தலைக்கணம். நாம் எதற்காக "வலொனியா" (பிரெஞ்சு பேசும் பிரதேசம்) மாநிலத்திற்கு கொடுக்க வேண்டும்? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிரெஞ்சுக்காரர்கள் எமது பணத்தில் சலுகைகளைப் பெறுகிறார்கள். அவர்களை கழற்றி விட்டு, தனி நாடாக இருப்போம். அல்லது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழும் நெதர்லாந்துடன் சேருவோம். இந்த பிரிவினைவாத அரசியலை முன்னெடுப்பதற்கு புதிய கட்சியும் உருவானது. "பிளாம்ஸ் பெலாங்" என்ற அது, கூடவே முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம், அகதிகளை அகற்றும் கொள்கை என்று இனவாதக் கட்சியாகவும் உள்ளது.

பிரெஞ்சு மொழி பேசும் வலொனியாவும் மொழிப் போரில் சளைக்கவில்லை. அங்கேயும் வலொனியா பிரிவினை கோரும் அமைப்பு உள்ளது. பிளாம்ஸ் பெலாங் அளவு பிரபலமடையவில்லை. அதற்கு காரணம் பிரெஞ்சு இனவாதிகள் குறைவு என்பதல்ல. வேலயில்லாதோர் எண்ணிக்கை அதிகமாக உள்ள வலொனிய மாநிலம், பௌதீக பிரிவினையால் மேலும் பாதிக்கப்படலாம். இன்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். வலொனியா ஒரு காலத்தில் தொழிற்துறை அபிவிருத்தி காரணமாக அதிக வருமானம் பெற்று வந்தது. தொழிற்புரட்சியால் முழுமையான வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய பகுதிகளில் வலொனியாவும் ஒன்று. அபிவிருத்தி இன்றி பின்தங்கியிருந்த பிளாம்ஸ் மக்கள் வலொனியாவுக்கு வேலை தேடி சென்றார்கள். அந்தப் பகுதி தொழில் வளர்ச்சிக்கு காரணம், இரும்பு, நிலக்கரி சுரங்கங்கள். லியெஜ் நகருக்கு அண்மையில் பல சுரங்கங்கள் அமைந்திருந்தன. இத்தாலியில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். இருபதாம் நூற்றாண்டின் முதலாவது அந்நிய குடிவரவாளர்களான இத்தாலியர்கள் வெள்ளைத்தோல் ஐரோப்பியர் என்பதால், பெல்ஜிய சமூகத்தில் இரண்டறக் கலந்து விட்டனர்.

பெல்ஜிய இனப் பிரச்சினைக்கு தெளிவாக தெரியக் கூடிய பொருளாதாரக் காரணிகள் இருந்த போதிலும், சிலர் சரித்திரத்தில் வேர்களைத் தேடுகின்றனர். உலகில் எல்லா தேசியவாதிகளும் வழக்கமாக கற்பிக்கும் நியாயம் தான். அந்நிய படையெடுப்பாளர்கள், (ரோமானிய, ஸ்பானிய, பிரெஞ்சு வல்லரசுகள்) பெல்ஜிய பகுதிகளை ஆட்சி செய்த காலத்தில் தங்களை வலுக்கட்டாயமாக சேர்த்து விட்டார்கள், எனக் கூறுகின்றனர். வடக்கு நோக்கி படையெடுத்து வந்த ரோமர்கள் ரைன் நதிக் கரையுடன் நின்று விட்டனர். அவர்கள் அந்தப் பிரதேசத்திற்கு பெல்ஜிகா மாகாணம் என்று பெயரிட்டார்கள். ரோமர்களுக்கு பின்னர் பெல்ஜியமும், நெதர்லாந்தும் ஸ்பெயின் அரசாட்சிக்கு உட்பட்ட மாகாணமாக இருந்தது. அவர்கள் அதனை "தாழ் நிலங்கள்" (டச்சு : Nederlanden, பிரெஞ்சு : Pays Bas) பெயர் மாற்றினார்கள். நெதர்லான்தும், பெல்ஜியமும் புவியியல் ரீதியாக கடல்மட்டத்தின் கீழே அமைந்துள்ளன. அதனால் தான் "தாழ் நிலம்" என்ற பெயர் வந்தது. அங்கே வாழ்ந்தவர்கள் ஜெர்மானிய பழங்குடி மக்கள். பெல்ஜிகா, வலொனியா எல்லாம் அந்த இனக்குழுக்களை சுட்டும் பெயர்கள் தான்.

ஸ்பானிய அரசின் கீழே இருந்த காலங்களில் என்பது ஆண்டு காலம் சுதந்திரப் போர் நடத்தினார்கள். நெதர்லாந்து என்ற பெயரில் பெல்ஜியமும் சேர்ந்து தான், ஸ்பெயினுக்கு எதிராக போர்கொடி தூக்கினார்கள். அன்று "நெதர்லாந்துகள்" என்பது பெல்ஜியத்தையும் சேர்த்தே குறிப்பிடப்பட்டது. சிறிது காலம் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. உலகப்புகழ் பெற்ற "வாட்டர்லோ" போரில் "வில்லெம்" ன் ஒல்லாந்து படைகள், பிரெஞ்சுப் படைகளை வெற்றி கொண்டன. ஆமாம், நெப்பொலியன் தோற்கடிக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கும் அதே வாட்டர்லோ தான். (வோட்டர்லூ என்பது ஆங்கில உச்சரிப்பு) பெல்ஜியத்தில் உள்ளது. விடுதலையடைந்த நெதர்லாந்துகளில் புதிய பிரச்சினை காத்திருந்தது. தேசியவாதம் பிரபலமடையாத காலகட்டம் அது. ஆனால் கத்தோலிக்க, புரட்டஸ்தான்து பிரிவினர்கள் தமது மதமே உயர்ந்தது என்று அடித்துக் கொண்டார்கள். பெல்ஜியத்திலும் கத்தோலிக்க மதவெறி (அல்லது மத அடிப்படைவாதம்) உச்சத்தில் இருந்தது. புரட்டஸ்தாந்து மத அடிப்படைவாதிகள் அதிகாரம் செலுத்திய நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் துண்டித்துக் கொள்ள விரும்பியது. மதத்தின் பெயரின் பெல்ஜிய சுதந்திரத்திற்கான போர் ஆரம்பமாகியது. அந்தப் போரில் தேவாலயங்களும், யேசு, மாதா உருவச் சிலைகளும் தப்பவில்லை. எல்லாம் அடித்து நொருக்கப் பட்டன!

(தொடரும்)


9 comments:

Jai said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கலையரசன். தொடரின் அடுத்த பகுதிகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சௌந்தர் said...

மதத்தால் இணைந்தோம், மொழியால் பிரிந்தோம் நல்ல தலைப்பு நல்ல பதிவு

யாநிலாவின் தந்தை said...

மிக்க நன்றி...
இந்த தொடருக்காக நான் காத்திருந்தேன்............

Kalaiyarasan said...

Jai, Soundar, யாநிலாவின் தந்தை, உங்கள் அனைவருடைய பாராட்டுகளுக்கும் நன்றி. இது போன்ற தொடர்களை எழுத ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

சுந்தரேசன் said...

//".... இல்லாவிட்டால் நான் எப்படி லாபம் சம்பாதிப்பது?" வாடிக்கையாளர்களிடம் அறவிடும் வரியை அரசுக்கு கொடுக்காமல், தனது பைக்குள் போடுவதற்கு பெயர் "லாபம்"//

இந்தியாவுக்கு வந்து பாருங்க பாஸ்...இங்க உள்ள வியாபாரிங்க அடிக்கிற கொள்ளை ...

Hai said...

//நெதர்லாந்துக்காரர்கள் இராணியின் பிறந்த தினத்தை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருந்த மே 30 அன்று, நான் பெல்ஜியத்தினுள் பிரவேசித்தேன். அப்பாடா, இராணியின் "பெருங் குடி" மக்களின் தொல்லையில் இருந்து இந்த வருடம் தப்பிவிட்டேன். அடுத்த நாள் மே தினம்//

ஒரு கனம் குழம்பி விட்டேன் சரியாக கவனிக்காமல் விட்டீரே நண்பரே

Kalaiyarasan said...

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி, அரைக்கிறுக்கன். அதனை திருத்தி விட்டேன்.

Kalaiyarasan said...

//இந்தியாவுக்கு வந்து பாருங்க பாஸ்...இங்க உள்ள வியாபாரிங்க அடிக்கிற கொள்ளை ...//

உண்மை தான் நண்பரே. எல்லாம் சரியாக நடப்பதாக காட்டிக் கொள்ளும் மேற்குலக நாடொன்றில் வாழும் எமக்கு இதுவே பெரிய விஷயம் தான்.

செங்கதிரோன் said...

very nice article kalaiy..