Showing posts with label காலனியாதிக்கம். Show all posts
Showing posts with label காலனியாதிக்கம். Show all posts

Saturday, November 12, 2016

ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் பண்டார வன்னியன் ஒரு தமிழ்த் தேசிய மறுப்பாளன்


ஏகாதிப‌த்திய‌ எதிர்ப்பாள‌ன் ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னுக்கு உரிமை கோருவ‌த‌ற்கு த‌மிழ் குறுந் தேசிய‌வாதிக‌ளுக்கு எந்தத் த‌குதியும் கிடையாது! 

வரலாற்று நாயகர்களுக்கு தேசியாதிகள் உரிமை கோருவது உலக வழமை. ஆனால், அன்றைய வரலாற்று நாயகர்களுக்கும் இன்றைய தேசியவாதிகளுக்கும் இடையில் பெருமளவு கொள்கை வேறுபாடு இருக்கும். அதை யாரும் கண்டுகொள்வதில்லை.

அதே மாதிரி, அன்றைய பண்டார வன்னியனுக்கும் இன்றைய தமிழ்த் தேசியவாதிகளுக்கும் கடுகளவு ஒற்றுமை கூடக் கிடையாது. பண்டார வன்னியனின் அரசியல் சித்தாந்தம் முற்றிலும் மாறுபட்டது. இன வேற்றுமை பாராட்டாமல், சிங்களவருடன் கூட்டுச் சேர்ந்து ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடினான்.

அன்றைய‌ கால‌த்தில் ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் முன்னெடுத்த‌ அர‌சிய‌லுக்கும், இன்றைய‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ளின் அர‌சிய‌லுக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் கிடையாது. ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் இன்றிருந்தால், "சிங்க‌ள‌வ‌ருட‌ன் ந‌ல்லிண‌க்க‌ம் பேசிய‌ ஒத்தோடி" என்று, ந‌ம‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் திட்டித் தீர்த்திருப்பார்க‌ள்.

சிங்க‌ள‌ - த‌மிழ் இன‌ முர‌ண்பாடு ஒரு இருப‌தாம் நூற்றாண்டின் தோற்ற‌ப்பாடு. இன்று ப‌ல‌ர் க‌ற்ப‌னை செய்வ‌து போல‌, சிங்க‌ள‌வரும், த‌மிழ‌ரும் ஆயிர‌மாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ ப‌கைவ‌ர்க‌ளாக‌ வாழ‌வில்லை. அத‌ற்கு ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் வ‌ர‌லாறு சிற‌ந்த‌ உதார‌ண‌ம்.

த‌மிழ் நாட்டில் இருந்து வ‌ந்து குடியேறிய‌ வ‌ன்னிய‌ர்க‌ளால், அந்த‌ப் பிர‌தேச‌த்திற்கு வ‌ன்னி என்று பெய‌ர் வ‌ந்த‌தாக‌ ந‌ம்ப‌ப் ப‌டுகின்ற‌து. ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ரும், த‌மிழ‌க‌ வ‌ன்னிய‌ர்க‌ள் சிங்க‌ள‌ அர‌ச‌ வ‌ம்ச‌த்துட‌ன் இன‌க் க‌ல‌ப்பு செய்திருந்த‌ வ‌ர‌லாற்றுக் குறிப்புக‌ள் உள்ள‌ன‌.

ஐரோப்பிய‌ கால‌னியாதிக்க‌வாதிக‌ள் இல‌ங்கையில் கால் ப‌தித்த‌ நேர‌ம், க‌ண்டி ராஜ்ஜிய‌ம் சுத‌ந்திர‌மாக‌ இருந்த‌து. வ‌ன்னிப் பிர‌தேச‌த்தை ஆண்ட‌ குறுநில‌ ம‌ன்ன‌னான‌ ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன், க‌ண்டி ராஜ்ஜிய‌த்திற்கு திறை செலுத்தி வ‌ந்தான்.

யாழ் குடா நாடு ஐரோப்பிய‌ கால‌னிய‌ ஆட்சியின் கீழ் இருந்த‌து. வ‌ன்னிப் பிராந்திய‌ம், க‌ண்டிய‌ ராஜ்ஜிய‌த்தின் வ‌ட‌க்குப் புற‌ பாதுகாப்பு அர‌ணாக‌ இருந்த‌து. அத‌னால் தான், கால‌னிய‌ ப‌டைக‌ள் முத‌லில் இடையில் இருந்த‌ த‌டையான‌ ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னை அக‌ற்றும் போரை ந‌ட‌த்தி இருந்த‌ன‌ர்.

அன்று ந‌ட‌ந்த‌ போர்க‌ளில், ட‌ச்சுக் கால‌னிய‌ப் ப‌டைக‌ள் ப‌ல‌ த‌ட‌வை தோல்வியை ச‌ந்தித்த‌ன‌. க‌ண்டி ராஜ்ஜிய‌த்திட‌ம் இருந்து கிடைத்த‌ பீர‌ங்கி போன்ற‌ "ந‌வீன‌ ஆயுத‌ங்க‌ள்" வ‌ன்னிப் ப‌டைக‌ளுக்கு உத‌வின‌. மேலும் காடுக‌ளுக்குள் ம‌றைந்திருந்து கெரில்லாப் போரிலும் ஈடுப‌ட்டிருந்த‌ன‌ர்.

வ‌ன்னி குறுநில‌ ம‌ன்ன‌னான‌ ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன், ட‌ச்சு, ஆங்கிலேய‌ கால‌னிய ஆக்கிர‌மிப்பாள‌ரருக்கு எதிராக‌ போரிட்டு ம‌டிந்தான். 31 அக்டோப‌ர் 1803 அன்று, ஒட்டிசுட்டானில் ந‌ட‌ந்த‌ போரில், ட‌ச்சு ப‌டைத் த‌ள‌ப‌தி ஃபொன் டிரிபேர்க்கினால் (Von Drieberg) தோற்க‌டிக்க‌ப் ப‌ட்டான்.

அப்போது இல‌ங்கையில் ஆங்கிலேய‌ கால‌னிய‌ ஆட்சி ஆர‌ம்ப‌மாகி விட்டிருந்த‌து. ட‌ச்சு கால‌னியவாதிக‌ளுட‌னான‌ போரில், இல‌ங்கையை ஆங்கிலேய‌ர் கைப்ப‌ற்றி விட்டிருந்த‌ன‌ர். இருப்பினும், ப‌ண்டார‌வ‌ன்னிய‌னுக்கு எதிரான‌ ப‌டை ந‌ட‌வ‌டிக்கையில் ஈடுப‌ட்டிருந்த‌ லெப்டின‌ன்ட் ஃபொன் டிரிபேர்க், ஆங்கிலேய‌ருட‌ன் ஒத்துழைத்திருந்தான்.

பண்டாரவன்னியனை தோற்கடித்த தளபதியின் பெயரில் ஒரு (கிறிஸ்தவ) தனியார் பாடசாலையும் உருவானது. டிறிபேர்க் கல்லூரி என்ற அந்தப் பாடசாலை இன்றைக்கும் சாவகச்சேரியில் உள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அரச பாடசாலையாக இயங்கிய போதிலும், விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்திலும் அதன் பெயர் மாற்றப் படவில்லை. இன்றைக்கும் டிறிபேர்க் கல்லூரி என்ற பெயரில் தான் இயங்குகின்றது.

ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னும், அவ‌ன‌து ப‌டையில் இருந்த‌ பெரும்பாலான‌ வீர‌ர்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் தான். ஆனால், சிங்க‌ள‌ வீர‌ர்க‌ளும் இருந்த‌ன‌ர். அதில் எந்த அதிசயமும் இல்லை. வன்னி குறுநில மன்னர்கள், கண்டி ராஜ்ஜியத்திற்கு திறை செலுத்தி ஆண்டு வந்தனர். அத்துடன் அந்தக் காலத்தில் தேசிய இராணுவ அமைப்பு இருக்கவில்லை. மன்னர்களிடம் இருந்ததெல்லாம் கூலிப்படைகள் தான். அந்தக் கூலிப் படையில் பல வேறுபட்ட இனம், மதம், மொழிப் பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் இருந்தனர்.

பண்டாரவன்னியன் "தூய தமிழன்" என்று சொல்வதற்கும் ஆதாரம் இல்லை. த‌னிப்ப‌ட்ட‌ முறையில், ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னின் குடும்ப‌ம் சிங்க‌ள‌வ‌ருட‌ன் திருமண உறவுகளைப் பேணி வந்தது. பண்டைய அனுராதபுர நகரத்தில் பண்டாரவன்னியனின் சிங்கள உறவினர்கள் வாழ்ந்து வந்தனர். அந்தக் காலத்தில் இந்திய வர்ணாச்சிரம விதிகள் இலங்கையிலும் பின்பற்றப் பட்டு வந்தன. அரச வம்சத்தினர் எப்போதும் சத்திரியர்களாக இருக்க வேண்டுமென்ற விதி இருந்தது. பேசும் மொழியை விட, பிறப்பால் வந்த சாதி முக்கியமாகக் கருதப் பட்ட காலம் அது.

19ம் நூற்றாண்டு வரையிலுமான இலங்கையில் சிங்க‌ளவ‌ர், த‌மிழ‌ர் என்ற‌ இன‌ வேற்றுமை உண‌ர்வு யாரிடமும் இருக்க‌வில்லை. அது பிற்கால‌த்தில் ஆங்கிலேய‌ரால் திணிக்க‌ப் ப‌ட்ட‌து. கண்டி ராஜ்ஜியத்தை கைப்பற்றும் நோக்கில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற இனப்பாகுபாடு தூண்டி விடப் பட்டது. கண்டி ராஜ்ஜியம் வீழ்ந்தமைக்கு ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியும் ஒரு காரணம்.

ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளன் என்றே வரலாற்றில் எழுதப் பட்டுள்ளது. அவன் எந்தக் காலத்திலும் ஒரு தமிழ்த் தேசியவாதியாக இருந்திருக்கவில்லை. தேசியவாதம் என்ற கருத்தியல் அன்று யாருடைய மனதிலும் இருக்கவில்லை. பண்டார வன்னியன், இலங்கையை ஆக்கிரமிக்கத் துடித்த ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வுட‌ன் போரிட்டான்.

இன்றைய‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ளையும் எதிரிக‌ளாக‌க் க‌ருதுகின்ற‌ன‌ர். அத்துடன் அவர்கள் தீவிரமான ஏகாதிப‌த்திய‌ விசுவாசிக‌ள். இந்த‌க் கால‌த்தில், சில‌நேர‌ம் இட‌துசாரிக‌ள் ஏகாதிப‌த்திய‌ எதிர்ப்பு ப‌ற்றிப் பேசினாலும், ந‌ம‌து த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் காதைப் பொத்திக் கொண்டு ஓடுவார்க‌ள். 

அதாவ‌து, ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னின் யாரை எதிரிகளாகக் கருதி போரிட்டானோ, அவர்களது நண்பர்கள் நண்பர்கள் தான் இன்றைய தமிழ்த் தேசியவாதிகள்!பண்டார வன்னியன் இன்றிருந்தால், "ஒத்தோடிகளான" தமிழ்த் தேசியர்களை துரோகிகள் என்று தூற்றி இருப்பான்.

ப‌ண்டார‌ வ‌ன்னிய‌ன், த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள், ஆகிய‌ இர‌ண்டு த‌ர‌ப்பின‌ர‌தும் அர‌சிய‌ல் கொள்கைக‌ள் முற்றிலும் வேறுப‌ட்ட‌வை. ப‌கை முர‌ண்பாடு கொண்ட‌வை. எந்த‌க் கால‌த்திலும் ஒன்று சேர‌ முடியாத‌வை.

அப்ப‌டி இருக்கையில் இன்றைய‌ த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் ப‌ண்டார‌ வ‌ன்னிய‌னுக்கு உரிமை கோருவ‌து ஒரு முர‌ண்ந‌கை. தேசிய‌வாதிக‌ள் த‌ம‌க்கு எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லாத‌ ச‌ரித்திர‌ நாய‌க‌ர்க‌ளுக்கு சொந்த‌ம் கொண்டாடும் கேலிக்கூத்தை, இது போன்ற‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் அவ‌தானிக்க‌லாம்.

Tuesday, February 10, 2015

மேற்குலக வெள்ளையின பயங்கரவாதிகளின் காலனிய காட்டுமிராண்டித்தனம்

பிரெஞ்சு அரச பயங்கரவாதம்: அல்ஜீரியாவில் பிரான்ஸ் அறிமுகப் படுத்திய உயர்ந்த நாகரிகம் இது தான்.
******
இவை, காலனிய வரலாற்றுக் காலகட்டத்திலும், 2 ம் உலகப்போர் காலத்திலும், "நாகரிகமடைந்த" பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு சில உதாரணங்கள். இன்றைய அல்கைதா, ISIS போன்ற பயங்கரவாத இயக்கங்களின் முன்னோடிகளான ஐரோப்பிய எஜமானர்களும் அதே மாதிரியான பயங்கரவாத செயல்களை செய்துள்ளனர். தாய் பத்தடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாயாதா?

*******



மலேசியாவில், பிரிட்டனின் காலனிய பயங்கரவாதம்! அவசரகால சட்ட காலத்தில், மலேசிய கம்யூனிஸ்டுகளின் தலைகளை வெட்டி மகிழ்ந்த பிரிட்டிஷ் படையினர். 

2 ம் உலகப்போர் நடந்த காலத்தில், மலேசியாவை ஆக்கிரமித்த ஜப்பானியப் படைகளுக்கு எதிராக, மலேசிய கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டம் நடத்தி வந்தது. அப்போது பிரிட்டன் அவர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவியது. 

ஆனால், போர் முடிந்த பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி மலேசியாவின் இயற்கை வளங்களை, குறிப்பாக ரப்பர் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்க விரும்பியது. அதனால், பிரிட்டிஷ் காலனிய இராணுவத்திற்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையில் போர் மூண்டது. 

உண்மையில் மலேசியாவின் இயற்கை வளங்களை சுரண்டிய பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்காகவே பிரிட்டன் யுத்தத்தில் குதித்தது. காப்புறுதி நிறுவனங்கள் பணம் தர மறுக்கும் என்ற காரணத்தினால், மலேசியாவில் உள்நாட்டுப் போர் நடக்கும் விடயம் மூடி மறைக்கப் பட்டது. அதற்குப் பதிலாக "அவசர கால நிலைமை" பிரகடனம் செய்யப் பட்டது.

******

இவர்கள் சிரியாவின் ISIS பயங்கரவாதிகள் அல்லர். அவர்களுக்கு முன்னோடிகளான ஜெர்மன் நாஸி பயங்கரவாதிகள்.

 2 ம் உலகப்போர் காலத்தில், முன்னாள் யூகோஸ்லேவியாவின் ஸ்லோவேனியா பகுதியை நாஸி படையினர் ஆக்கிரமித்திருந்தனர். அப்போது ஜெர்மன் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து, கம்யூனிச கெரில்லாக்கள் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். 

தமக்கு சவாலாக விளங்கிய கம்யூனிசப் போராளிகளை பிடித்து, கோடாலியால் தலைகளை வெட்டி, அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். 

ஐரோப்பிய நாசிகளாக இருந்தாலும், சிரியாவில் ISIS ஆக இருந்தாலும், உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கின்றனர்.பாசிஸ்டுகளுக்கு இடையில் இன, மத, மொழி வேறுபாடு எதுவும் கிடையாது. 

German Atrocities in the Balkans: German-Occupied Slovenia, 1944 http://serbianna.com/blogs/savich/archives/2622

******


ISIS காட்டுமிராண்டிகள் ஒருவரை உயிரோடு எரித்தார்கள். 

அவர்களின் முன்னோடிகளான காட்டுமிராண்டி அமெரிக்க நிறவெறியர்கள், ஆயிரக்கணக்கான கருப்பின மக்களை உயிரோடு எரித்தார்கள். 
 அமெரிக்க அடிவருடிகளுக்கு இது சமர்ப்பணம்:
Yes, ISIS Burned a Man Alive: White Americans Did the Same Thing to Black People by the Thousands 
http://www.dailykos.com/story/2015/02/04/1362325/-ISIS-Burned-a-Man-Alive-That-It-is-Nothing-Compared-to-the-Spectacular-Lynchings-of-Black-Americans?detail=facebook

Thursday, October 23, 2014

ஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரிட்டனின் காலனிய சூழ்ச்சியும்


ஹாங்காங்கில் நடக்கும் மாணவர் போராட்டத்தை, "ஜனநாயக மாற்றத்திற்கான மக்கள் போராட்டம்" போன்று சித்தரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், அதன் பின்னணி பற்றி விபரிப்பதில்லை. ஹாங்காங் ஆசியாவில் ஒரு முதலாளித்துவ அதிசயம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, அங்கு நடந்த காலனிய எதிர்ப்பு போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. ஹாங்காங் பிரிட்டனின் காலனிய அடிமை நாடாக இருந்த காலத்தில், அது அமைதியாக இருந்ததாக நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், அங்கே ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி நடந்தது என்பதையும், பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் அதனை ஈவிரக்கமின்றி அடக்கியது என்பதையும் அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு.

நூறு வருடங்களாக ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாக இருந்திருந்தாலும், ஆரம்பத்தில் அது ஒரு பணக்கார நாடாக இருக்கவில்லை. ஆசியாவில் இருந்த பிற ஐரோப்பியக் காலனிகள் போன்று கடுமையான சுரண்டலால் பாதிக்கப் பட்டிருந்தது. வசதி வாய்ப்புகளை விட, வறுமையும், பிணியும் அதிகமாக காணப்பட்டது. பிரிட்டனின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்த சீனர்கள் மட்டும் ஹாங்காங் பிரஜைகள் ஆகவில்லை. சீன பெருநிலப் பரப்பில் இருந்து காலங்காலமாக குடியேறிகள் வந்து கொண்டிருந்தார்கள். சீன - ஜப்பான் போரின் பொழுதும், கம்யூனிஸ்ட் - குவாமிந்தாங் போரின் பொழுதும், பல்லாயிரக் கணக்கான சீனர்கள், அகதிகளாக வந்து சேர்ந்திருந்தனர். அவர்களின் வம்சாவளியினர், 21 ம் நூற்றாண்டில் வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றமை நகைப்புக்குரியது.


ஹாங்காங் மாணவர் போராட்டம் "ஜனநாயகத்திற்கானது" என்று கூறப் பட்டாலும், அதற்குள் சீன குடியேற்றத்தை எதிர்க்கும் இனவாத சக்திகளின் ஆதிக்கமும் காணப் படுகின்றது. 2012 ம் ஆண்டு, "வெட்டுக்கிளி எதிர்ப்பு இயக்கம்" ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. தீவிர வலதுசாரிகளின் அமைப்பு, பெருநிலப் பரப்பில் இருந்து வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. சீன எதிர்ப்புப் நாளேடு ஒன்றில், "வெட்டுக்கிளி ஹாங்காங் மீது படையெடுக்க காத்திருப்பது" போன்றதொரு கருத்துப் படம் போட்டு, அதற்கு கீழே பின்வருமாறு எழுதி இருந்தது: "சீனாவில் இருந்து வரும் கர்ப்பிணிப் பெண்கள், ஹாங்காங்கில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம், ஹாங்காங்கின் மக்கள் நல கொடுப்பனவுகளை அனுபவிக்க விரும்புகிறார்கள்...."

பொதுவாகவே, ஹாங்காங் சீனர்கள், பெருநிலப்பரப்பில் வாழும் சீனர்களை கீழானவர்களாக பார்ப்பதுண்டு. காலனிய எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை மறக்காமல், அவர்களை "நாகரிமைடையாத சீனர்கள்" என்று கருதிக் கொள்வார்கள். "ஹாங்காங் சீனர்கள் காண்டனீஸ்-சீன மொழி பேசுவார்கள். சீனாவில் உள்ள சீனர்கள் மாண்டரின்-சீன மொழி பேசுவார்கள்." என்று யாராவது இதற்கு விளக்கம் கொடுக்கலாம். ஹாங்காங்கில் மாண்டரின் - சீன மொழி பேசுவபவர்கள் மீதான துவேஷம் சற்று அதிகமாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், ஹாங்காங் தீவுகளுக்கு அயலில் உள்ள சீன மாகாணங்களிலும் காண்டனீஸ் மொழி தான் பேசுவார்கள் என்பதை மறந்து விடலாகாது. ஹாங்காங்கில் குடியேறியுள்ள பெரும்பாலான சீனர்கள், காண்டனீஸ் சீன மொழி பேசுவோர் தான்.

ஹாங்காங் மாணவர்களின் போராட்டத்தை, ஹாங்காங் வர்த்தகர்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு காரணம் உண்டு. வருடந்தோறும் ஹாங்காங் வரும் உல்லாசப் பிரயாணிகளில் 75% சீன பெருநிலப் பரப்பில் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்ல, ஹாங்காங் அருகில் உள்ள ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையத்தில் ஹாங்காங் முதலாளிகள் பெருமளவு முதலீடு செய்துள்ளனர். ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையம் எண்பதுகளிலேயே இயங்கத் தொடங்கி விட்டது. அப்போதே சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் இடையிலான இரு தரப்பு போக்குவரத்து ஆரம்பமாகி விட்டது. அதாவது, ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே, சீனாவுடன் நல்லுறவு நிலவியது. ஆனால் அது பிற்காலத்தில் ஏற்பட்ட உறவு. அதற்கு முன்னர், காலனிய ஆட்சியாளர்களினால் ஹாங்காங் சீனாவிடம் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தது.

சீனாவில் தோன்றிய பொதுவுடமைப் புரட்சி, பெருமளவு சீனர்கள் வாழும் ஆசிய நாடுகளிலும் பரவியது. ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல. 1966 ஆம் ஆண்டின் இறுதியில், தொழிற்சாலைகளில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்கள், வெகு விரைவில் காலனிய நிர்வாகத்திற்கு சவாலாக மாறினார்கள். நகரத் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், அடிக்கடி காவல்துறையினருடனான மோதல்களில் முடிந்தது. 

பல நிறுவனங்களில் நடந்த பொது வேலை நிறுத்தப் போராட்டங்களினால், ஹாங்காங் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவானது. காலனிய படைகளில் கடமையில் இருந்த சீன இன போலிஸ்காரர்களை, தம் பக்கம் வென்றெடுக்கலாம் என்று போராட்டக்காரர்கள் நம்பினார்கள். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. சீனப் பொலிஸ்காரர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தனர்.

பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் நாட்டில், கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கப் படா விட்டாலும், அது பகிரங்கமாகவே இயங்கி வந்தது. கம்யூனிஸ்ட் செய்தித் தாள்கள் வெளியாகின. ஒரு வானொலி நிலையம் கூட இயங்கியது. அந்தளவுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. "மாவோவின் மேற்கோள்கள்" எனும் சிவப்பு நிற சிறிய கைநூல், மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டது. சீனாவில் கலாச்சாரப் புரட்சி காலத்தில் நடந்தது போன்று, ஹாங்காங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களினால் எடுத்துச் செல்லப் பட்டது.

பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் சும்மா இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வனுமுறை பிரயோகித்தது. செய்தித்தாள்கள் தடை செய்யப் பட்டன. அச்சகங்கள் மூடப் பட்டன. கம்யூனிஸ்ட் ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டனர். அரச ஒடுக்குமுறை காரணமாக, கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் தலைமறைவாக இயங்கத் தொடங்கினார்கள். காலனிய ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் நடந்தது. அரசு அலுவலகங்கள் குண்டு வீச்சுக்கு இலக்காகின. 1967 ஆம் ஆண்டு, ஒரு வருடத்திற்குள், ஹாங்காங் முழுவதும் நூற்றுக் கணக்கான குண்டுகள் வெடித்தன. காலனிய அதிகாரிகள், பொலிஸ்காரர்கள் மட்டுமல்லாது சில பொது மக்களும் குண்டு வெடிப்புகளுக்கு பலியானார்கள். அனேகமாக, பொது மக்களின் உயிரிழப்புகள் காரணமாக, ஆயுதப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு குறைந்திருக்கலாம்.

ஹாங்காங் கம்யூனிஸ்ட் கிளர்ச்சி முறியடிக்கப் பட்டமைக்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:

  1. ஆயிரக் கணக்கான குண்டுகள் செயலிழக்க செய்யப் பட்டன அல்லது வெடிப்பதற்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டன. 
  2. நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் இரகசிய மறைவிடம் கண்டுபிடிக்கப் பட்டது. 
  3. கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள். ஆயிரக் கணக்கானோர் சிறையில் அடைக்கப் பட்டனர். அதை விட, ஆயிரக் கணக்கானோர் சீனாவுக்கு நாடுகடத்தப் பட்டனர். 
  4. எல்லாவற்றிற்கும் அப்பால், செஞ்சீனத்தின் ஆதரவு கிடைக்காமல் விட்டமை ஒரு முக்கியமான பின்னடைவாக இருந்தது. 


உண்மையில், மாவோ தலைமையிலான செஞ்சீனம், ஹாங்காங் புரட்சியை ஆரம்பத்தில் வரவேற்று ஆதரித்திருந்தது. ஹாங்காங் ஆதரவு போராட்டங்களையும் நடத்தி இருந்தது. ஆயினும், கிளர்ச்சி உச்சகட்டத்தை அடையும் நேரம், சீனப் படைகள் ஹாங்காங்கை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் பட்டது. சிலநேரம் சீனத் தலைமையிடம் அப்படி ஒரு திட்டம் இருந்திருந்தாலும், பின்னர் கைவிடப் பட்டது. பிரிட்டனுடன் நேரடியாக மோதும் நிலையை தவிர்க்க நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹாங்காங் சீனாவுக்கு திரும்பக் கிடைக்க இருந்தது என்பதையும் மறந்து விடலாகாது. இன்னொரு ஐரோப்பிய காலனியான மாக்காவ், போர்த்துக்கேயரின் பலவீனம் காரணமாக, ஏற்கனவே சீன ஆதிக்கத்தின் கீழ் வந்திருந்தது.

1967 கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் விளைவாக ஹாங்காங் ஒரு வகையில் நன்மை அடைந்தது என்றே கூற வேண்டும். ஏனென்றால், அது வரைக்கும் ஒரு வறிய நாடாக இருந்த ஹாங்காங், அதற்குப் பிறகு தான் பணக்கார நாடாக மாறியது. மீண்டும் ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி உண்டாவதை தடுக்கும் நோக்கில், பிரிட்டிஷ் நிர்வாகம் பல விட்டுக் கொடுப்புகளை செய்தது. ஹாங்காங் சீனர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. பிரிட்டனில் இருப்பதைப் போன்று, சமூக நலத்துறை உருவாக்கப் பட்டது.

பிரிட்டிஷ் நிர்வாகம், புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி,  வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தது மட்டுமல்லாது, ஊதியமும் உயர்த்தப் பட்டது. ஹாங்காங் துறைமுகம் ஆசியாவில் மிகவும் முக்கியமான துறைமுகமாக மாறியது. இன்றைக்கும் ஹாங்காங்கின் பெருமளவு வருமானம் துறைமுகத்தில் இருந்து கிடைக்கின்றது. மொத்தத்தில், ஹாங்காங் ஆசியாவில் வளர்ந்து வரும் (முதலாளித்துவ) பொருளாதார அதிசயமாக மாற்றிக் காட்டப் பட்டது. கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்திரா விட்டால், ஹாங்காங் இன்றைக்கும் ஒரு வறிய நாடாகவே தொடர்ந்தும் இருந்திருக்கும்.

ஹாங்காங்கில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், 1997 ஆம் ஆண்டு திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆசியாவின் "புலிப் பாய்ச்சல் பொருளாதார வளர்ச்சி" அத்துடன் முடிவுக்கு வந்தது. ஹாங்காங் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. 1997 நெருக்கடியில் இருந்து மீண்டு வருகையில், 2007 ஆம் ஆண்டு இன்னொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது ஹாங்காங்கில் வேலையில்லாப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை அதிகரித்து வருகின்றது.

உயர்கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தாலும், குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். அதை விட மாதாந்த ஊதியத்தில் அரைவாசி வீட்டு வாடைகைக்கு செலவிட வேண்டும். சுருக்கமாக, பொருளாதார நெருக்கடி காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஹாங்காங்கில் ஏற்பட்டன.

உலகில் பல இயக்கங்கள், தாங்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக போராடுவதாக சொல்லிக் கொள்வதில்லை. ஹாங்காங்கின் ஜனநாயக இயக்கமும் அப்படித் தான். வெளிப்பார்வைக்கு மட்டும் தான் அது ஜனநாயகத்திற்கான இயக்கம். உள்ளே அது இனவாதிகள், பிரதேசவாதிகள், தீவிர வலதுசாரிகளின் ஆளுமைக்குள் உள்ளது. அது மட்டுமல்ல, முன்னாள் பிரிட்டிஷ் காலனிய எஜமானான பிரிட்டனின் பங்களிப்பும் உள்ளது. ஜனநாயகம் கோரும் மாணவர்கள் சிலர், வெளிப்படையாகவே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை ஆதரிக்கின்றனர்.

1967 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் முடிவில், பிரிட்டிஷ் நிர்வாகம் பெரியதொரு சமூக சுத்திகரிப்பை செய்திருந்தது. காலனிய எதிர்ப்பாளர்கள், கம்யூனிஸ்டுகள் போன்றோரை பிடித்து சிறையில் அடைத்தது அல்லது சீனாவுக்கு நாடு கடத்தி இருந்தது. சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சிகளை மட்டும் இயங்க அனுமதித்தது. மேலும், தீவிர வலதுசாரிகள், காலனிய விசுவாசிகள் போன்றோரை வளர்த்தெடுத்தது. அன்று பிரிட்டிஷ்காரர்கள் நடைமுறைப் படுத்திய திட்டங்கள், இன்று பலன் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு, காலனிய கடந்த காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலதிக தகவல்களுக்கு:

Thursday, September 18, 2014

இஸ்லாமிய தேசம் (IS) : காலனிய வரலாறு திரும்புகிறது


1917 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்தது. ஆட்சி கவிழ்க்கப் பட்ட சார் மன்னனின் அலுவலக கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த, போல்ஷெவிக் அமைச்சர் ட்ராஸ்கி, ஒரு இரகசிய ஆவணத்தை கண்டுபிடித்தார். மத்திய கிழக்கு அரபு நாடுகளை, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்கள் தமக்குள் பங்கிட்டுக் கொள்வது சம்பந்தமான ஒப்பந்தம் அது. முதலாளித்துவ நாடுகளின் அயோக்கியத்தனத்தை உலகறியச் செய்யும் நோக்கில், ட்ராஸ்கி அந்த ஒப்பந்தத்தை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கினார்.

 "Sykes-Picot ஒப்பந்தம்" என்று அழைக்கப் படும் அந்த உடன்படிக்கை, மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஏனெனில், துருக்கியிடம் அடிமைப் பட்டிருந்த அரேபியர்களுக்கு ஒரு தாயகத்தை உருவாக்கித் தர விரும்புவதாக, பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது. அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக, பிரிட்டன் லாரன்ஸ் எனும் உளவாளியை அனுப்பி, ஆயுதங்களும் கொடுத்து உதவி இருந்தது.

"நாகரிகமடைந்த மேன் மக்களின் நாடான" பிரிட்டன், தமது நலன் கருதி நடக்கிறது என்று, அரேபியர்களும் அப்பாவித்தனமாக நம்பினார்கள். ஆனால், துருக்கியின் பகுதியாக இருந்த அரேபிய நாடுகளை காலனிப் படுத்துவதே பிரிட்டனின் உண்மையான நோக்கமாக இருந்தது. அதற்காக, பிரிட்டனும், இன்னொரு ஐரோப்பிய காலனியாதிக்க நாடான பிரான்சும், "Sykes-Picot ஒப்பந்தம்" என்ற பெயரில், அரபு நாடுகளை தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

பிரிட்டன் எதற்காக அரேபியர்களை ஏமாற்றி, அவர்களின் நாடுகளை காலனிப் படுத்த வேண்டும்? முதலாம் உலக யுத்தம் நடப்பதற்கு முன்னர், இந்தியா (பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளடங்கியது) பிரிட்டனின் ஒரு முக்கியமான "பணக்கார" காலனியாக இருந்தது. என்ன விலை கொடுத்தேனும், பிரிட்டன் இந்தியாவை தொடர்ந்தும் காலனியாக வைத்திருக்க விரும்பியது. ஆனால், இந்தியாவுக்கு வடக்குப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானை நடுவில் வைத்து, இரண்டு சாம்ராஜ்யங்களும் பரஸ்பரம் எல்லைகளை தீர்மானித்துக் கொண்டன.

எதிர்பாராத விதமாக முதலாம் உலகப்போர் வெடித்து விட்டது. இஸ்தான்புல் நகரை கைப்பற்றும் நோக்கில், துருக்கியில் கலிபொலி எனும் இடத்தில் பிரிட்டிஷ் படைகள் இறக்கப் பட்டன. ஆனால், கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் பின்வாங்கி விட்டன. இதற்கிடையே, பிரிட்டனுக்கு இன்னொரு பிரச்சினை எழுந்தது. துருக்கி சுல்தான் சர்வதேச இஸ்லாமிய அகிலத்திற்கு (கிலிபாத்) தலைமை தாங்கும் கலீபாவாக கருதப் பட்டார். முதலாம் உலகப்போரில் எதிரி நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு எதிராக, துருக்கி ஜிகாத் ஒன்றை அறிவித்து விட்டால் என்ன செய்வது?

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசிப் பேர் முஸ்லிம்கள். துருக்கி சுல்தானின் ஜிகாத்திற்கான அழைப்பை ஏற்று, இந்திய முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன செய்வது? அது இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவாக இருந்திருக்கும். ஆகவே, பிரிட்டனுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை தடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி முஸ்லிம்களை பிரித்து ஆள வேண்டும். அரேபியர்களை துருக்கியரிடம் இருந்து பிரித்து விட வேண்டும். பிரிட்டன் அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவிய நோக்கம் அது தான்.

உண்மையிலேயே, துருக்கி சுல்தான் ஜிகாத் அறிவிப்பு செய்திருந்தார். அது யாருடைய கவனத்தையும் பெறவில்லை. அதற்குக் காரணம், இளம் துருக்கியர்கள் எனும் தேசியவாத அமைப்பு, ஏற்கனவே சுல்தானின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி இருந்தது. மேலும் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் அதிகார மையத்திலும், துருக்கி தேசியவாதிகள் ஊடுருவினார்கள்.

அரபு நாடுகளில் அதிகாரத்தில் இருந்த துருக்கி தேசியவாதிகள், அரேபியரை சிறுமைப் படுத்தினார்கள். இதனால், துருக்கி பேரினவாதத்திற்கு எதிரான அரேபிய தேசிய இன எழுச்சி ஒன்று உருவானது. பிரிட்டன் தன் பங்கிற்கு அதை எண்ணை ஊற்றி எரிய விட்டது. அரபு தேசியவாதிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால், அரேபியர்கள் துருக்கியரிடம் இருந்து விடுதலை பெற்றதும், அவர்களின் நாடுகளை துண்டு போட்டது. இன்றுள்ள அரபு நாடுகளின் எல்லைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் தீர்மானிக்கப் பட்டவை ஆகும். துருக்கி, ரஷ்யா ஆகிய வல்லரசுகளிடம் இருந்து, பிரிட்டிஷ் இந்தியாவை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டவை தான், நவீன அரபு தேசங்கள்.

வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், ஒரே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டவர்கள் ஆவார்கள். அரேபியர்கள் மட்டுமல்ல, பிரிட்டனை தமது நட்பு சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.

மேலதிக தகவல்களுக்கு: 
Setting desert on fire, T.E.Lawrence and Britain's secret war in Arabia; James Barr 
Lawrence In Arabia: War, Deceit, Imperial Folly, And The Making Of The Modern Middle East; Scott Anderson

Thursday, August 07, 2014

தமிழ் அடிமைகள் : ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு

யாழ்ப்பாணத்தில் டச்சு காலனிய படையினர் வந்திறங்கிய காட்சி 

ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் சென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை. 

இன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு?  

தஞ்சையை ஆண்ட சோழர்கள், இலங்கை, இந்தோனேசியா மீது படையெடுத்து ஆக்கிரமித்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே தஞ்சையில் இருந்து, அதே இலங்கை, இந்தோனேசியாவுக்கு, தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

எந்தவொரு அரசியல்வாதியும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எந்தவொரு இலக்கியவாதியும் அது பற்றி எழுதுவதில்லை. தமிழ் அடிமைகள் பற்றி அறிந்தவர்கள் கூட, தெரியாத மாதிரி வாயை மூடிக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், தமிழ் மக்களை மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளாக மாற்றி வைத்திருக்க விரும்புவோர், உண்மைகளை பேசப் போவதில்லை.

ஆப்பிரிக்காவில் இருந்து, கறுப்பின மக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு சென்றது போல, தமிழ் நாட்டில் நடந்துள்ளது. தமிழகத்தில் அடிமைகளாக பிடிக்கப் பட்ட தமிழர்கள், பெரும்பாலும் சிறுவர்கள் என்பது மிகவும் கொடுமையானது. தமிழர்கள் மத்தியில், "பிள்ளை பிடிகாரர்கள்" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அனேகமாக, அழும் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அதைக் கூறுவதுண்டு. உண்மையிலேயே, பிள்ளை பிடி காரர்கள் காலனிய கால கட்டத்தில் இருந்துள்ளனர்.

தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், காலனிய எஜமானர்களின் கீழ் வேலை செய்யும் பிள்ளை பிடிகாரர்கள் உலாவித் திரிந்தனர். சிறு நகரங்கள், கிராமங்கள் தோறும், சந்தைகள் கூடுமிடங்களில் காணப் பட்டனர். சந்தைக்கு வரும் சிறுவர்களைப் பிடித்து சென்றனர். இதனால், ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுவர்கள் சந்தை போன்ற பொது இடங்களுக்கு செல்ல அஞ்சினார்கள். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, தமிழ் அடிமைகளை விலை கொடுத்து வாங்கி வந்தது. தமிழகத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில், அடிமைகளின் விலை மிகவும் குறைவாக இருந்தது.

தமிழர்கள் அடிமைகளான வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வதற்கு, நாம் கிழக்கிந்தியக் கம்பனி தோன்றிய கால கட்டத்திற்கு செல்ல வேண்டும். இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும், ஐரோப்பிய மாதிரி முதலாளித்துவப் பொருளாதாரம், கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஆரம்பமாகியது என்றால் அது மிகையாகாது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடம் தான், ஐரோப்பாக் கண்டத்தில் முதன்முதலாக உருவான பங்குச் சந்தை ஆகும். 

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், குறிப்பாக டச்சுக் காரர்கள் தான், தமிழகத்தில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டனர். அதற்காக, சென்னை நகரத்திற்கு வடக்கே, பழவேற்காடு எனுமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் அலுவலகம் இயங்கி வந்தது. கிழக்கிந்தியக் கம்பனி என்பது, உலகின் முதலாவது பன்னாட்டு நிறுவனம் ஆகும். அதன் பங்குதாரர்களாக, நெதர்லாந்து நிலப்பிரபுக்கள் இருந்துள்ளனர். கம்பனி என்ன தொழில் செய்தாலும், பங்குகளின் ஈவுத் (டிவிடன்ட்) தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். இதனால், கிழக்கிந்தியக் கம்பனி அதிக இலாபம் தரும் வியாபாரங்களில் ஈடுபட்டது. அடிமை வாணிபம் அதில் ஒன்று.

பழவேற்காட்டில் தளம் அமைத்த கிழக்கிந்தியக் கம்பனி, ஆரம்பத்தில் தமிழ் நாட்டு பருத்தி ஆடைகளை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தது. அந்தக் காலத்திலேயே, தமிழகத்தில் ஆடைத் தொழிற்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. தமிழகத்து பருத்தி ஆடைகள் உலகம் முழுவதும் தரமானதாக கருதப் பட்டன. டச்சுக் காரர்கள், இந்தோனேசியா, இலங்கையை  தமது காலனிகளாக்கிக் கொண்ட பின்னர் தான், அடிமைகளை வாங்கத் தொடங்கினார்கள்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவு, ஒரு காலத்தில்   "பதாவியா"(Batavia ) என்று அழைக்கப் பட்டது. அங்கே தான், ஆசியாவில் முதலாவது டச்சு காலனிய ஆட்சி நிலைநாட்டப் பட்டது.  அமெரிக்க கண்டங்களில் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பியர்கள், அங்கு வேலை செய்வதற்கு, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு சென்று குவித்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. அதே மாதிரி, பதாவியா காலனியில் (இந்தோனேசியா) வேலை செய்வதற்கு, தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு சென்றனர்.

ஐரோப்பியர்கள், ஆசிய காலனிகளில் காணப்பட்ட வளங்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டதை சரித்திர நூல்கள் எழுதி வைத்துள்ளன. ஆனால், ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளுக்கு இடையில் வணிகம் செய்தமை பற்றி, மிகக் குறைந்தளவு சரித்திரக் குறிப்புகள் மட்டுமே உள்ளன.

ஐரோப்பியர்கள், குறிப்பாக போர்த்துக்கேயர்கள் வருவதற்கு முன்னர், ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சீன மற்றும் அரேபிய வணிகர்களின் கைகளில் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகம் செய்த போர்த்துக்கேய வணிகர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், சில இடங்களில் தங்கி விட்டார்கள்.

காலப்போக்கில், போர்த்துக்கேயர்கள் அவற்றை தமது காலனிகளாக்கி, கோட்டைகளை கட்டி இராணுவ ரீதியில் பலப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில், போர்த்துகேய கப்பல்களில் கடமையில் இருந்த டச்சுக் கடலோடிகள், பிற்காலத்தில் தனியான காலனிய சக்தியாக மாறினார்கள். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக, பல இடங்களில் போர்த்துக்கேயர்களை விரட்டி விட்டு, தமது காலனிகளை உருவாக்கினார்கள்.

இலங்கையிலும் அது தான் நடந்தது. இலங்கையின் வட பகுதியும், தென் மேற்குப் பகுதியும் மட்டுமே போர்த்துக்கேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன. மத்திய பகுதியும், கிழக்குப் பகுதியும் கண்டி மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தன. போர்த்துக்கேயர்களை விரட்டுவதற்காக, டச்சுக் காரர்கள் கண்டி மன்னனுடன் கூட்டுச் சேர்ந்தனர். இரு தரப்பு ஒப்பந்தப் படி, போர்த்துக்கேயர்கள் விரட்டப் பட்ட பின்னர், அந்தப் பகுதிகளை கண்டி மன்னனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒப்பந்தங்களை முறிப்பது காலனிய வெள்ளையர்களுக்கு கைவந்த கலை. 

யாழ் குடாநாடு, மன்னார், திருகோணமலை, கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களை கைப்பற்றிய டச்சுக்காரர்கள், அவற்றை கண்டி மன்னனிடம் ஒப்படைக்காமல் தாமே ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல, போர்ச் செலவு என்று கூறி, பெரியதொரு தொகையை கண்டி மன்னன் தமக்கு செலுத்த வேண்டும் என்று பொய்க் கணக்குக் காட்டினார்கள்.  அந்தளவு பெருந் தொகையை கண்டி மன்னனால் கட்ட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதே நேரம், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியது குறித்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவர்கள் மனதில் இருக்கவில்லை.

இலங்கைத் தீவு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை மட்டுமல்லாது, காலியும் முக்கியமான துறைமுகமாக கருதப் பட்டது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் நன்னம்பிக்கை முனையில் இருந்து கிளம்பும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிக் கொண்டு காலித் துறைமுகத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து வேறு கப்பல்கள், அந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லும்.  ஐரோப்பா முதல் இந்தோனேசியா வரையிலான கடற் போக்குவரத்துக்கு, இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது.

இலங்கையில், யானைகள், கறுவா பட்டைகள், முத்துக்கள் என்பன, டச்சுக் காலனியாதிக்கவாதிகளுக்கு முக்கிய வருமானம் ஈட்டித் தந்த ஏற்றுமதிப் பொருளாதாரமாக இருந்தது. கொழும்பில் இருந்த டச்சு காலனிய நிர்வாக எல்லைக்குள், தென்னிந்தியப் பகுதிகளும் அடங்கி இருந்தன. அதனால், தூத்துக்குடி முத்துக்களும் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகவே ஏற்றுமதி செய்யப் பட்டன. நாகபட்டினம், யாழ்ப்பாண நிர்வாகத்தின் கீழ் அடங்கி இருந்தது. 

யாழ் குடாநாட்டில் இருந்து, நாகபட்டினம் துறைமுகத்திற்கு, யானைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. (யாழ் குடாநாட்டை இணைக்கும் பகுதி யானையிறவு என்று அழைக்கப் பட்டதும் அதனால் தான்.) இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்குடன், யாழ்ப்பாண கோட்டையும், காரைநகர் ஹம்மன்ஹீல் கோட்டையும் கட்டப் பட்டிருந்தன. 

தென்னிலங்கையில், கொழும்புக்கு அருகில் உள்ள பகுதிகளில், உலகிற் சிறந்த கறுவாப் பட்டைகள் கிடைத்து வந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும், கறுவா வணிகம் முழுவதும் டச்சுக்காரர்கள் கைகளில் வந்திருந்தது. பெருமளவு வருமானத்தை ஈட்டித்தந்த, வளம் கொழிக்கும் இலங்கைத் தீவை பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தென்னிந்தியாவில் இராணுவ தளம் அமைக்கப் பட வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பனி நினைத்தது.

இருநூறு போர்வீரர்களைக் கொண்ட டச்சுக் காலனிய படை, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து நாகப் பட்டினத்திற்கு படையெடுத்துச் சென்றது. அங்கிருந்து தரை வழியாக கொச்சினுக்கு சென்றது. கேரளாவில் உள்ள கொச்சின், அன்று போர்த்துக்கேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. டச்சுப் படைகள் போர்த்துகேயர்களை விரட்டி விட்டு, அங்கே ஒரு முகாம் அமைத்துக் கொண்டன. போன காரியத்தை நிறைவேற்றி விட்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் போர்க் கப்பல்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தன. அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

டச்சு காலனிய சிறப்பு படையினர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் ஒரு சதிப்புரட்சி நடக்க இருந்தது. எப்படியோ அது கண்டுபிடிக்கப் பட்டது. டச்சு காலனியப் படைகளில் இருந்தவர்கள் தான், யாழ்ப்பாண அதிகாரத்தை கைப்பற்ற சதி செய்தனர். அனேகமாக, அன்றைய காலனியப் படையில் பெருமளவு உள்நாட்டு வீரர்களும் இருந்திருக்கலாம்.

சதிப்புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் கண்டுபிடிக்கப் பட்டு, சிரச் சேதம் செய்யப் பட்டனர். இனிமேல் சதிப்புரட்சி செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, கொடூரமான காட்சிகள் அரங்கேறின. மரங்களில் இறந்த உடல்கள் கட்டித் தொங்க விடப் பட்டன. வெட்டப் பட்ட தலைகளை ஈட்டிகளில் குத்தி, பொதுச் சந்தைகளில் காட்சிக்கு வைத்திருந்தனர்.

டச்சுக் காரர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினார்கள். அவர்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். வடக்கில் குடியேறியோர் தமிழ் மொழியும், தெற்கில் குடியேறியோர் சிங்கள மொழியும் பேசத் தொடங்கினார்கள். அதே மாதிரி, இந்தோனேசியாவில் குடியமர்த்தப் பட்ட தமிழகத்து அடிமைகள், இன்று இந்தோனேசிய மொழியை பேசுகின்றனர். சுருக்கமாக, ஐரோப்பியரால் கொண்டு செல்லப் பட்ட தமிழ் அடிமைகள், உள்ளூர் மக்களுடன் இனக் கலப்பு செய்து விட்டனர். அதனால், அவர்களது பூர்வீகத்தை கண்டுபிடிப்பது இயலாத காரியம்.

தென்னிலங்கையில், கறுவாத் தோட்டங்களில் வேலை செய்த உள்ளூர்வாசிகள் (சிங்களத் தொழிலாளர்கள்), கடுமையான உழைப்புச் சுரண்டல் காரணமாக வேலை நிறுத்தம் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த மேலதிக படையினர், கறுவாத் தொழிலாளர்களின் கலகத்தை அடக்குவதற்கு பயன்பட்டனர். அதற்குப் பின்னர், கறுவாப் பட்டைகளை உரிக்கும் தொழிலுக்கு, தமிழ் அடிமைகளை பயன்படுத்தினார்கள். பிற்காலத்தில், அந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவர்களாக மாறி விட்டனர்.

இலங்கையில், தமிழ் அடிமைகள் பல்வேறு கட்டுமான பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டனர். கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்காக, கோட்டைகளை கட்டியதிலும், பாதைகள் செப்பனிட்டதிலும், தமிழ் அடிமைகளுக்குப் பங்குண்டு. யாழ்ப்பாணம், காலியில் இன்றைக்கும் உள்ள டச்சுக் கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பினால் கட்டப் பட்டவை தான். நாடு முழுவதும் இருந்த நெல் வயல்களிலும் நிறையத் தமிழ் அடிமைகள் வேலை செய்தனர்.

புத்தளத்தை அண்டிய கடற் பகுதியில் முத்துக் குளிப்பதற்காகவும், தமிழ் அடிமைகள் கொண்டு வரப் பட்டிருக்கலாம். 1666 ஆம் ஆண்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் மேஜர் தரத்தில் இருந்த யான் வான் டெர்  லான் (Jan van der Laan), 400 படகுகளில் முத்துக் குளிப்போரைக் கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரளவில் முத்துக்கள் எடுப்பதற்காக கடலில் குதித்தனர். அனேகமாக, அவர்கள் எல்லோரும் தமிழகத்து அடிமைகளாக இருக்க வேண்டும்.

புத்தளம் கடலில் முத்துக் குளிப்பது ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்து வந்தாலும், பெருந் தொகையானோர் ஒரே நேரத்தில் கடலுக்குள் இறங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் எப்போதும் பெரியளவில் தான் சிந்திப்பார்கள். அதாவது அதிக இலாபம் சம்பாதிப்பதே அவர்களது குறிக்கோள். விளைவு? அன்றைய முத்துக்குளிப்பினால் கடல் நீர் நஞ்சாகியது. அதனால் சுமார் 1500 பேரளவில் அந்தச் சம்பவத்தில் கொல்லப் பட்டனர்.

இன்றைக்கு எங்காவது ஒரு தொழிற்துறையில் நடக்கும் விபத்தில், 1500 தொழிலாளர்கள் கொல்லப் பட்டால், அது படுகொலையாக கருதப் பட்டு உலகின் மனச் சாட்சியை உலுக்கி இருக்கும். முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு பலியானவர்கள் என்று உலகம் உணர்ந்திருக்கும். ஆனால், அன்று இறந்தவர்கள், (தமிழ்) அடிமைகள் என்பதால், உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.

அதே வருடம் (1666), வட இலங்கையில் இருந்து யானைகள் ஏற்றுமதி செய்ததன் மூலம், வருடாந்த நிகர இலாபம் கூடியது. அதனால், அந்த வருடத்து அடிமைகளின் இழப்பை விட, கிடைத்த மொத்த இலாபம் அதிகம் என்று, கிழக்கிந்தியக் கம்பனி திருப்தி அடைந்தது. இந்தக் கணக்கு, வழக்குகள் கிழக்கிந்தியக் கம்பனியால் கவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நெதர்லாந்து ஆவணக் காப்பகத்தில் வைக்கப் பட்டுள்ள, கிழக்கிந்தியக் கம்பனியின் ஆவணங்களை, நீங்கள் இன்றைக்கும் பார்வையிடலாம்.

உசாத்துணை: 
1.Het VOC-bedrijf op Ceylon, Albert van den Belt
2.Zwartboek van Nederland overzee, Ewald van Vugt


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்
2.யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு
3.தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்

Thursday, November 21, 2013

தமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு !


இன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தேசியவாதிகள் கூட அவரைப் புறக்கணிப்பது கவலைக்குரியது. திப்புவை வைத்து தமிழ் தேசிய அரசியல் நடத்தும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், அதனை வேண்டுமென்றே தவற விடுவது ஆச்சரியத்திற்குரியது. (தமிழ் தேசியவாதிகளின் இந்து மத உணர்வு அதற்குத் தடையாக இருக்கலாம்.) ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட திப்பு சுல்த்தானிடம் இருந்து, தமிழ் தேசியம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட ஒரு மன்னன், புலிக் கொடி ஏந்தி, ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைப் போராட்டம் நடத்தி, அவர்களை தோல்வியடைய வைத்த வரலாறு, தமிழ் தேசியத்திற்கு பெருமை சேர்க்கவில்லையா? 

திப்பு சுல்தான், மைசூரை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தினாலும், இன்றைய தமிழ்நாடு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், திப்புவின் ஆட்சியின் கீழ் இருந்தன. இன்றைய சென்னை நகர்ப் பகுதியை மட்டும் பிடித்து வைத்திருந்த ஆங்கிலேயர்கள், தமிழ் நாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக நீண்ட காலம் போரிட்டார்கள். சூரியன் மறையாத சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட பிரிட்டிஷார், தமிழ்நாட்டில் நடந்த காலனிய ஆக்கிரமிப்புப் போரில் அவமானகரமான தோல்வியை தழுவி இருந்தனர். 

அன்று ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட திப்புவின் படையில், ஏராளமான தமிழ் வீரர்கள் இருந்தனர். தென்னிந்தியாவை ஆண்ட கடைசி இந்திய மன்னன், திப்புவின் நாட்டில், பல்லின மக்கள் வாழ்ந்தனர். ஆங்கிலேயர்கள் தமது சரித்திர நூல்களில் புளுகி இருப்பதைப் போல, அன்றைய இந்தியர்கள் நாகரீகத்தில் பின்தங்கி இருக்கவில்லை. பல்வேறு தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினார்கள். சில சமயம், அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஐரோப்பியரின் கண்டுபிடிப்புகளை மிஞ்சி இருந்தன. உதாரணத்திற்கு, போரில் பயன்படுத்தப் பட்ட நவீன ஆயுதங்களை பற்றிக் குறிப்பிடலாம். (வேறு சில நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை எல்லாம் ஆங்கிலேயர்கள் திருடிச் சென்று விட்டார்கள். இன்று வரையில் அவற்றைப் பற்றிய தகவல்கள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன.)

ஆங்கிலேயர்களின் காலனிய கால வெற்றிகளுக்கு காரணம், அவர்களிடம் இருந்த துப்பாக்கி, பீரங்கி போன்ற நவீன ஆயுதங்கள் என்று சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நடந்த போரில், திப்புவின் படையில் இருந்த தமிழ் வீரர்கள்  நவீன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். அதனால் தான், ஆங்கிலேயப் படைகள் தோற்றோடின. இது தமிழர்களுக்கு பெருமை இல்லையா? எதற்காக, தமிழ் தேசியவாதிகள் இந்த வரலாற்று உண்மையை புறக்கணிக்கிறார்கள்? 

உலகிலேயே முதல் தடவையாக, தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக நடந்த போரில் தான், ரொக்கட் ஏவுகணைகள் பயன்படுத்தப் பட்டன. இன்று நவீன இராணுவங்களில் பாவிக்கப்படும், ரொக்கட் தொழில்நுட்பம் அல்லது ஏவுகணை வீசும் பீரங்கி, திப்புவின் பொறியியலாளர்களின் கண்டுபிடிப்பு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?முதல்முறையாக திப்புவின் படைகளிடம் கைப்பற்றிய ஏவுகணை தொழில்நுட்பத்தை வைத்து தான், பின்னாளில் ஆங்கிலேயர்கள் நவீன ராக்கெட் கருவிகளை உருவாக்கினார்கள்.  அனேகமாக, சீனாவுடனான தொடர்பினால் கிடைத்த தொழில்நுட்ப அறிவை அடிப்படையாக கொண்டு, மைசூரில் அந்த நவீன ஆயுதம் தயாரிக்கப் பட்டிருந்தது. 

ஆங்கிலேயருடனான போரில், ஏவுகணைகள் வீசப் பட்ட பொழுது, ஆங்கிலப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. போர்க்களத்தில் நின்ற வெள்ளையர்கள், வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்றெண்ணி, அஞ்சி நடுங்கினார்கள். திப்புவின் ஏவுகணைகள், நூறு மீட்டர் தூரம் மட்டுமே செல்லக் கூடியவை. இருந்த போதிலும், ஆங்கிலேயர்கள் வாழ்க்கையில் ஒரு நாளும் கண்டிராத, கேள்விப் பட்டிராத நவீன ஆயுதம் ஒன்றின் பயன்பாடு, போரில் வெற்றியை தேடித் தந்தது. அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் அம்பு, வில்லுகளுடன் போரிட்ட பூர்வகுடிகளை, துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பெருமைக்குரிய ஆங்கிலேய காலனியப் படைகள், தென்னிந்தியாவில் புறமுதுகிட்டு ஓடின. அன்று தமிழ்நாட்டில் நடந்த போரில், ஆங்கிலேய படைகளுக்கு, பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டது.

மைசூரை கைப்பற்றுவதற்காக நான்கு போர்கள் நடந்துள்ளன. ஆங்கிலேயர்களுக்கு இறுதி வெற்றி கிடைத்தற்கு காரணம், அவர்களது ஆயுத, அல்லது ஆட் பலம் அல்ல. வெள்ளையர்கள் எப்போதும் சூழ்ச்சியில் வல்லவர்கள். திப்பு சுல்த்தான் ஒரு முஸ்லிம் மன்னன். அவனது ஆட்சியில், இஸ்லாம் அரச மதமாக இருந்தது என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், பிற மதத்தவர்கள் பாரபட்சமாக நடத்தப் படவில்லை. திப்புவின் ஆலோசகர்களாக பிராமணர்கள் இருந்துள்ளனர். திப்புவின் படையில், முஸ்லிம், இந்து வீரர்கள் கலந்திருந்தனர். அன்றைய இந்தியாவில் வாழ்ந்த மக்கள் மனதில், முஸ்லிம், இந்து என்ற குரோதம் இருக்கவில்லை. 

ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து, முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்தார்கள். மக்களின் ஒற்றுமையை குலைத்தார்கள். அதன் பிறகு தான், அவர்களால் மைசூர் ராஜ்யத்தை கைப்பற்ற முடிந்தது. ஆங்கிலேயர்களினால் அன்று விதைக்கப் பட்ட மதவெறி எனும் நச்சு விதைகள், இன்று பெரும் விருட்சமாக வளர்ந்துள்ளன. ஆங்கிலேயர்கள் அதைத் தான், இலங்கையிலும் செய்தார்கள். கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் தமிழனாக இருந்த காரணத்தினால், அவனுக்கு எதிராக சிங்களவர்களை தூண்டி விட்டார்கள். அன்று விதைக்கப் பட்ட இனவெறி எனும் நஞ்சு, நமது காலத்தில் ஈழப்போர் எனும் பேரழிவில் வந்து முடிந்தது. 

ஈழப்போரில் நடந்த பேரழிவுகள், இனப்படுகொலைகள் குறித்து, ஆங்கிலேய கனவான்கள் அக மகிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால், இன/மத குரோதங்களை தூண்டி விட்டு, மக்களை பிரித்தாள்வதன் மூலம் தான், மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நிலை நிறுத்தப் பட்டது. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு, அரசியலுக்குப் பின்னால், இன்னொரு காரணமும் உள்ளது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர், "இந்தியாவில், இலங்கையில் சிறந்த தொழில் நுட்ப அறிவும், நாகரிக வளர்ச்சியும் இருந்தது" என்ற உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் கணிசமான வெற்றி கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு திப்பு சுல்த்தான் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்பதே, காலனிய கால மூளைச்சலவையின் விளைவு தான். 


Friday, June 14, 2013

மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை



  • "ஈழத் தமிழரின் இனப்பிரச்சினை தனித்துவமானது" என்றும், அதனை "உலகில் பிற இனங்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடியாது" என்றும், ஒரு தவறான எண்ணம் காணப் படுகின்றது. இன்று பல உலக நாடுகளில் காணப்படும் இனப் பிரச்சினையானது, கடந்த கால காலனிய ஆட்சியின் விளைவாகவே  இருந்து வருகின்றது. முன்னாள் ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களுக்கும் அவற்றில் பங்கிருக்கிறது என்பதை பலர் உணர்வதில்லை. ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் "தமிழ் இளையோர்" அதனை உணர்ந்து கொள்ளும் காலம் ஒன்று வரும். மொலுக்கு இன மக்களின் கதையை அறிந்து கொள்வதன் மூலம், தமிழர்களும் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளலாம்.


இந்தோனேசியாவில் தனி நாடு கோரும், மொலுக்கு இன மக்களின் வரலாறு குறித்து இங்கே அலசப் படவில்லை. இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்து சுதந்திரமடைந்த 1945 - 1949 கால கட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நாங்களும் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தை, தமிழீழ போராட்டத்தின் தொடக்கமாக கருதுவதுண்டு. அதே போன்ற நிலையில் தான், மொலுக்கு மக்களின் தனி நாட்டு போராட்டமும் ஆரம்பமாகியது. ஆகவே அதற்குப் பிந்திய காலத்தில் நடந்தவை குறித்து கவனம் செலுத்துவோம். 

இந்தோனேசியா எனும் நாடு, ஆயிரக் கணக்கான தீவுகளை கொண்டது. அந்த நாட்டில் நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள் வாழ்கிறார்கள். மலேசிய மொழிக்கு மிகவும் நெருக்கமான, இந்தோனேசிய மொழி அவற்றில் ஒன்று. ஆனால், அதுவே பிற மொழிச் சிறுபான்மையின மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், பல்வேறு இஸ்லாமிய சுல்த்தான்களின் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யங்கள் இருந்தன. ஆனால், அப்போதெல்லாம் இந்தோனேசிய மொழி இன்று ஆங்கிலம் போன்று ஒரு தொடர்பாடல் மொழியாக மட்டுமே இருந்தது. ஆனால், காலனிய காலகட்டத்தின் பின்னர் ஒரு தேசிய அரசு உருவானது. அது இந்தோனேசிய பேரினவாதமாக உருமாறியது. 

மொலுக்கர்கள் எங்கே வாழ்கிறார்கள்? அவுஸ்திரேலியாவுக்கு மேலே கிழக்கு தீமோர் உள்ளது. அதற்கும் மேலே உள்ள தீவுகளை மொலுக்கு தீவுகள் என்று அழைப்பார்கள். அவற்றில் அம்பொன், சேரம் போன்ற தீவுகளில் வாழும் மக்களைப் பற்றி தான் இந்தக் கட்டுரை பேசுகின்றது. அந்த மக்கள் தம்மை "தென் மொலுக்கர்கள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். 25 ஏப்ரில் 1950, அந்த தீவுகளை இணைத்து, "தென் மலுக்கு குடியரசு" (Republik Maluku Selatan, சுருக்கமாக RMS)  பிரகடனம் செய்யப் பட்டது. 

மொலுக்கு இன மக்கள் அந்த தீவுகளில் வாழும் பூர்வ குடிகள். பார்ப்பதற்கு அவுஸ்திரேலிய அபோரிஜின்கள் போன்றிருப்பார்கள். அனேகமாக, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய இனங்களின் வம்சாவளியினராக இருக்கலாம். ஆனால், எல்லோரும் கருப்பாக தோன்ற மாட்டார்கள். பலர் சிவப்பாகவும் இருப்பார்கள். உலகில் நாகரீகமடைந்த எந்த இனமும், தனது இனத் தூய்மையை பேணி வருவதாக பெருமையடித்துக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வகையில் வேறு இனங்களுடன் கலந்திருப்பார்கள். 

இந்தோனேசியா வரலாற்றில் முதன் முறையாக, மொலுக்கு தீவுகள் தான் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளுடன் தொடர்பு கொண்டன. அனேகமாக, மகலனின் கடற்பயணத்தின் விளைவாக இருக்கலாம். ஏனெனில், மொலுக்கு தீவுகளுக்கு மேலேயுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகளில், ஸ்பானிஷ் காரர்கள் காலூன்றி இருந்தனர். ஐரோப்பியருடனான நீண்ட கால தொடர்பு காரணமாக, பிற்காலத்தில் வந்த டச்சுக் காலனிய ஆட்சியாளர்களுடன் விரும்பி ஒத்துழைத்தார்கள். இதனால், இயல்பாகவே மொலுக்கு இன மக்கள் மேலைத்தேய விசுவாசிகளாக மாறி விட்டிருந்தனர்.  

மொலுக்கர்களின் மேற்கத்திய சார்புத் தன்மையை, நாங்கள் எமது நாடுகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற இலங்கையின் கரையோரப் பகுதிகளும், சென்னை போன்ற இந்திய கரையோரப் பகுதியும் தான், முதல் தடவையாக ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் கீழ் வந்தன. நீண்ட கால ஐரோப்பிய மேலாண்மை  காரணமாக, இன்றைக்கும் பல தமிழர்கள் மேலைத்தேய விசுவாசிகளாக இருப்பதைப் பார்க்கலாம். (கொழும்பு போன்ற மேல் மாகாணத்தில் வாழும், கரையோர சிங்கள மக்களும் அவ்வாறு தான்.) தங்களது விசுவாசத்தை புரிந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகள், என்றைக்காவது ஒரு நாள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தில், தமிழர்களுக்கும், மொலுக்கர்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகளை காணலாம். 

காலனிய தொடர்பு காரணமாக, பெரும்பாலான மொலுக்கு மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். மொலுக்கர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள் அல்ல. சனத்தொகையில் கணிசமான அளவு இஸ்லாமிய மொலுக்கர்களும் இருக்கின்றனர். ஈழத்தில் இந்து-கிறிஸ்தவ தமிழர்கள் மட்டுமே தமிழீழம் கேட்டது போன்று, கிறிஸ்தவ மொலுக்கர்கள் தான் தனி நாட்டுக் கோரிக்கையை வைத்தனர். ஈழப்போர் நடந்த காலத்தில், முஸ்லிம்கள் ஒதுங்கி இருந்தது போன்று தான், மொலுக்கு விடுதலைப்  போராட்டத்தில் (மொலுக்கு) முஸ்லிம்கள் ஒதுங்கி இருந்தனர். இந்தப் பிரிவினையை, ஈழத்தில் எவ்வாறு இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டதோ, அதே மாதிரித் தான் இந்தோனேசிய அரசு மொலுக்கு பிராந்தியத்தில் பயன்படுத்திக் கொண்டது.

இலங்கையில், ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில், ஈழத் தமிழர்கள் பல சலுகைகளை பெற்றனர். குறிப்பாக கிறிஸ்தவ தமிழர்கள், காலனிய நிர்வாகத்தில் பதவிகளைப் பெற்றனர். இலங்கை முழுவதும் அரசாங்க அதிகாரிகளாக பணியாற்றினார்கள். காலனிய இராணுவத்திலும் சில உயர் பதவிகளில் இருந்தனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கமாண்டராக பதவி வகித்த அன்டன் முத்துக்குமாரு போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். காலனிய அரசாங்கத்தில் தமிழர்களுக்கு சிறப்பான இடம் அளிக்கப் பட்டதைப் போன்று தான், டச்சு காலனிய அரசாங்கத்தில் மொலுக்கு இன மக்களுக்கு சிறப்பான இடம் கிடைத்திருந்தது. இதனால், பிற இனத்தவர்கள் அவர்களை  "Belanda Hitam" (கருப்பு டச்சுக்காரர்கள்) என்று அழைத்தார்கள். 

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், இலங்கையில் பெரும்பான்மையினமான சிங்களவர்களிடம் ஆட்சியை மாற்றிக் கொடுத்த பின்னர் தான், தமிழர் என்ற சிறுபான்மை இனத்தின் பிரச்சினைகள் ஆரம்பமாகின. இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலத்தில்,  தங்களது பதவிகள் பறிபோகாது என்று தமிழர்கள் நினைத்திருக்கலாம். அதனால், தமிழீழக் கோரிக்கையும் பல வருடங்கள் தாமதமாகவே எழுப்பப் பட்டது. ஆனால், மொலுக்கு மக்களுக்கு அந்த அவசியம் உடனேயே எழுந்தது. ஏனென்றால், இந்தோனேசியாவிற்கான டச்சு காலனிய படைகளில் (Koninklijk Nederlands Indisch Leger; சுருக்கமாக KNIL) ஏராளமான மொலுக்கு வீரர்கள் சேர்ந்திருந்தனர். சாதாரண காலாட் படையினராக இல்லாமல், அதிகாரிகள் தரத்திலும் இருந்தனர். இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுத்த நெதர்லாந்து அரசுக்கு, அவ்வளவு படையினரையும் என்ன செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. 

மொலுக்கு வீரர்கள், புதிதாக உருவான இந்தோனேசிய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு, நெதர்லாந்து கூறியது. ஆனால், மொலுக்கர்கள் யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தோனேசியா ஒரு சமஷ்டிக் குடியரசாக இருக்கும், அதாவது ஐக்கிய அமெரிக்கா போன்று, "ஐக்கிய இந்தோனேசியக் குடியரசுகள்" ஏற்படுத்தப் படும் என்று நெதர்லாந்து உறுதிமொழி அளித்தது. இவை எல்லாம் வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டத்திலேயே நின்று விட்டன. நடைமுறையில் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தோனேசிய அரசு, மொலுக்கு தீவுகள் மீதான இறையாண்மையை வலியுறுத்திக் கொண்டிருந்தது. 

எதிர்பார்த்த எதுவும் நடக்காததால் ஏமாந்த மொலுக்கர்கள், தாமாகவே "தென் மொலுக்கு குடியரசு" ஒன்றை பிரகடனம் செய்தனர். உலகில் எந்த நாடும், நெதர்லாந்து கூட, அந்த தனி நாட்டை அங்கீகரிக்கவில்லை. இறுதியில், இந்தோனேசிய படைகள் மொலுக்கு தீவுகளை ஆக்கிரமித்தன. அப்போதும், நெதர்லாந்து பாராமுகமாக இருந்தது.  Dr. Chris Soumokil தலைமையில் ஒரு கெரில்லா இயக்கம்,  இந்தோனேசியப் படைகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியது. அதற்கும் நெதர்லாந்து உதவவில்லை. நட்டாற்றில் விடப் பட்ட மொலுக்கு மக்களுக்கு, நெதர்லாந்து அரசு ஒரேயொரு உதவியை மட்டும் செய்ய முன் வந்தது. 

இந்தோனேசியாவுக்கான முன்னாள் டச்சு காலனிய படையை சேர்ந்த 4000 முன்னாள் படைவீரர்களை, அவர்களது குடும்பங்களுடன் நெதர்லாந்து நாட்டில் தங்க வைப்பதாக உறுதியளித்தது. அதுவும் தற்காலிகமாகத் தான். ஆறு மாதங்களுக்கு மட்டுமே நெதர்லாந்தில் தங்கியிருந்து விட்டு, தென் மொலுக்கு பிராந்தியத்திற்கு சுயாட்சி கிடைத்த பின்னர் திரும்பி வரலாம் என்று கூறியது. நெதர்லாந்து அரசின் உறுதிமொழியை ஏற்று, 4000 படையினரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுமான 12500 பேர் நெதர்லாந்து நோக்கி கப்பலில் பயணமானார்கள். தாங்கள் மலை போல் நம்பியிருந்த காலனிய எஜமானர்கள் தங்களை ஏமாற்றுவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள் என்றோ, தென் மலுக்கு என்ற தனிநாடு பகற்கனவாக போய் விடும் என்றோ, அன்று அந்த மக்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. 

(தொடரும்)


Friday, February 08, 2013

காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்

போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும், இலங்கைத் தீவின் மீதான காலனிய மேலாதிக்கத்திற்காக, யுத்தம் செய்த காலத்தில் எழுதப்பட்ட நூல் ஒன்று, தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது.  "De opkomst van het Nederlandsch gezag over Ceylon" (இலங்கை மீதான நெதர்லாந்து ஆட்சியதிகாரத்தின் தொடக்கம்) என்ற நூலானது, சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட பழைய டச்சு மொழியில் எழுதி இருப்பதால், வாசிப்பதற்கு சற்று கடினமாக உள்ளது.  காலனிய எஜமானர்கள் தமது நாட்டை பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று அறிவதற்கு, இலங்கை மக்களுக்கு ஆர்வம் இருக்கலாம். நான் சிரமப் பட்டு வாசித்த நூலில் இருந்து சில குறிப்புகளை இங்கே பதிவு செய்துள்ளேன். அந்த நூல் தற்பொழுது, எங்கேயும் விற்பனைக்கு கிடைக்காது. ஸ்கேன் செய்யப்பட்ட நூல், இணைய நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது. 

அன்று இலங்கைத் தீவானது, தெற்காசியாவில் போர்த்துக்கேயரின் பணக்கார காலனியாக இருந்துள்ளது. இரத்தினக் கற்கள், முத்துக்கள், கறுவாப் பட்டைகள் போன்றன, அன்றைய சர்வதேச சந்தையில் பெருமளவு வருவாயை ஈட்டிக் கொடுத்த பண்டங்கள் ஆகும். அதனால், போர்த்துக்கேயரும் இலங்கை இலகுவாக இழக்க விரும்பாமல், டச்சுக் காரரை எதிர்த்து கடுமையாக போரிட்டு இருக்கிறார்கள். "செய்லோன் (இலங்கை) தீவின் இழப்பானது, மிகுந்த மன வலியை தருவதும், போர்த்துக்கல் தேசத்தின் மிகப் பெரிய இழப்பாகவும் கருதப் பட வேண்டுமென...." போர்த்துகேய கால இலங்கையின் சரித்திரத்தை எழுதிய  frei Fernão de Queiroz குறிப்பிட்டுள்ளார். 

De opkomst van het Nederlandsch gezag over Ceylon (இலங்கை மீதான நெதர்லாந்து ஆட்சியதிகாரத்தின் தொடக்கம்) என்ற நூலில், நான் வாசித்த சில பகுதிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இயற்கையான துறைமுகங்கள், கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக, இலங்கைத் தீவு காலனிய எஜமானர்களின் பிரியத்திற்குரிய காலனியாக இருந்துள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த "கிழக்கிந்திய கம்பனி" என்ற வர்த்தக ஸ்தாபனம், இலங்கையை தளமாக வைத்துக் கொண்டு, இந்தியாவில் தமிழக கரையோரப் பகுதிகளை பிடித்து ஆள்வதற்கு திட்டமிட்டிருந்தது. இலங்கை மட்டுமல்லாது, நாகபட்டினம், தூத்துக்குடி போன்ற தமிழக பகுதிகளின் பொருளாதார முக்கியத்துவமும் இந்த நூலில் விபரிக்கப் பட்டுள்ளது.

இந்த நூலில், யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் நடந்த யுத்தம் பற்றி விபரமாக எழுதப் பட்டுள்ளது. போரில் கொல்லப்பட்ட போர்த்துக்கேயர்கள், மலபாரிகள் (தமிழர்கள்), இவர்களுடன் கறுப்பின அடிமைகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகின்றது.  போர்த்துக்கேயர் ஆண்ட காலத்தில், ஆயிரக் கணக்கான கறுப்பின அடிமைகளையும் இறக்குமதி செய்திருக்கின்றனர். ஆப்பிரிக்க கறுப்பின அடிமைகளின் வம்சாவளியினர் பின்னர் தமிழைப் பேசி தமிழர்களாக மாறி உள்ளனர். (அதே போன்று சிங்களப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகள் சிங்களவராக மாறி விட்டார்கள்.)

யாழ்ப்பாணத்தை "Jaffena patnam" என்றும், அங்கு வாழ்ந்த மக்களை "மலபாரி" மொழி பேசுவோர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. (போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் தமிழர்களை மலபாரிகள் என்று தான் அழைத்து வந்தனர். அனேகமாக, ஆங்கிலேயரின் காலனிய காலத்தில் தான் தமிழர் என்ற பெயர் பாவனைக்கு வந்திருக்க வேண்டும்.) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போர்த்துக்கேயரை தவிர,  உள்நாட்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50000 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சிறிதும் பெரிதுமான தீவுகளில் 20000 பேர். மன்னாரில் 7000 பேர். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில், 90% மான தமிழர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்துள்ளனர். 

அந்தக் காலத்தில் இந்து மதத்தை பின்பற்றிய அனைவரும் பிராமணர்களாக, அல்லது எழுதப், படிக்கத் தெரிந்த உயர் சாதியினராக இருந்துள்ளனர். அதனால் இந்துக்களை பிராமணர் என்றே நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். "Schriftgeleerde of Pandiet" (படித்தவர்கள் அல்லது பண்டிதர்கள்) என்று, பிராமணர் என்ற சொல்லுக்கு அந்த நூலில்  விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ஆங்கிலேய காலனிய காலத்திற்கு முன்னர், "இந்து" என்ற சொல் பயன்பாட்டில் இருக்கவில்லை என்பதையும், பிராமணர்களை தவிர பிற சாதியினர் இந்துக்களாக இருக்கவில்லை என்பதையும், இந்த சரித்திர ஆவணம் நிரூபிக்கின்றது. 

"30 மைல்  சுற்று வட்டாரத்தை கொண்ட யாழ்ப்பாணம், மலைகளற்ற, சமவெளியான பிரதேசம். நம்ப முடியாத அளவுக்கு வளம் கொழிக்கும் பூமி. நெல்லும், பருத்தியும், பிற தானியங்களும் பயிரிடப் பட்டன. காடுகளுக்குள்  யானைகளும், மான்களும், பிற காட்டு விலங்குகளும் காணப்பட்டன." இவ்வாறு அந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. போர்த்துக்கேயர் காலம் வரையில் கூட, யாழ்ப்பாணத்தில் இருந்து யானைகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. அதனால் தான், ஒரு இடத்திற்கு "யானை இறவு" என்ற பெயர்   ஏற்பட்டது. இதனை வாசிக்கும் போது, எமக்கு அதிர்ச்சி ஏற்படும். ஏனெனில், இன்றைய யாழ் குடாநாடு இலங்கையில் மிகவும் வரட்சியான பிரதேசங்களில் ஒன்று. அங்கே தற்போது காடுகளும் இல்லை, யானைகளும் இல்லை. நெல் உற்பத்தி, யாழ்ப்பாண மக்களின் நுகர்வுக்கே போதாது. 

அப்படியானால், 300 வருட கால காலனிய ஆட்சிக் காலத்தில், சூழலியலை மதிக்காத நிர்வாக சீர்கேடுகளால்,  யாழ்ப்பாண மண் வறண்டு போயிருக்கின்றது. ஆங்கிலேயர் வெளியேறி முப்பது வருடங்களுக்குப் பின்னர், விவசாயப் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வளமற்ற, வறண்ட   யாழ்ப்பாண மண்ணில் இருந்து, தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோன்றியது.  "காலனிய சுரண்டல் - பொருளாதார பிரச்சினைகள் - ஈழப் போர்"   இவற்றிற்கு இடையிலான தொடர்புகளை,  இன்றைக்கு பல படித்தவர்களும் புரிந்து கொள்வதில்லை. 


இங்கேயுள்ள இணைப்பில் நூலை வாசிக்கலாம்: Full text of "De opkomst van het Nederlandsch gezag over Ceilon. Eerste gedeelte"

Monday, May 21, 2012

ஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையினம்!

உலகில் இரண்டு இனங்கள், முற்றாக அழித்தொழிக்கப் பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு கீழே உள்ள தாஸ்மானியா தீவில் வாழ்ந்த பழங்குடி இனம், ஆங்கிலேயரால் ஒருவர் விடாமல் இனவழிப்பு செய்யப் பட்டது. இது நடந்தது 19 ம் நூற்றாண்டில். அது ஒரு கருப்பினம். ஆனால், வெள்ளைத் தோல், நீல நிறக் கண்களைக் கொண்ட, வெள்ளையினம் ஒன்றும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் இனவழிப்பு செய்யப் பட்டது. யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு இன்னுமொரு அதிசயம் காத்திருக்கின்றது. அந்த வெள்ளையினம் ஆபிரிக்காவில் வாழ்ந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் பேசிய மொழி திராவிட குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கருதப் படுகின்றது.

காலனிய காலகட்ட வரலாற்றின் தொடக்கத்தில் நடந்த சம்பவம் இது. 16 ம் நூற்றாண்டில், ஆபிரிக்க கண்டத்திற்கு அருகில் உள்ள தீவொன்றில் வாழ்ந்த தனித்துவமான இனம் ஒன்றும் முற்றாக அழிக்கப் பட்டது. இன்னும் சொல்லப் போனால், அதுவே "ஐரோப்பியரின் முதலாவது காலனியப் படையெடுப்பும், முதலாவது காலனிய இனப்படுகொலையும் ஆகும். அங்கிருந்து தான், அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களை காலனித்துவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வரும் பயணம் தொடங்கியது. "கிரான் கனாரியா" என்று அழைக்கப்படும் அந்த தீவுக் கூட்டம், இன்று ஐரோப்பிய உல்லாசப் பயணிகளின் மனத்தைக் கவர்ந்த உல்லாச விடுதிகளால் நிரம்பியுள்ளது. அங்கு உல்லாசமாக பொழுதைக் களிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அந்த மண்ணில் நடந்த இனவழிப்பு பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Tenerife, Fuerto Ventura , இந்தப் பெயர்களை அறிந்திராத இளந் தலைமுறையை சேர்ந்த ஐரோப்பியர்கள் மிகக் குறைவு. வெதுவெதுப்பான காலநிலை, வெள்ளை மணல் கடற்கரை, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் தீவுகள். காதல் ஜோடிகள், இளம் தம்பதிகள் தேனிலவை இன்பமாக கழிப்பதற்கு அங்கே தான் அடிக்கடி செல்வார்கள். இன்று அந்த தீவுகள் ஸ்பெயினுக்கு சொந்தமானவை. ஆனால், ஸ்பெயின் பெருநிலப் பரப்பில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன! அதே நேரம், ஆப்பிரிக்க கண்டத்திற்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன. மொரோக்கோ கரையில் இருந்து, வெறும் நூறு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே! அதன் பூகோள அமைவிடம் காரணமாக, ஸ்பெயின் ஆபிரிக்காவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று, ஆப்பிரிக்க கூட்டமைப்பு கோரி வருகின்றது. இன்று அந்த தீவின் சனத்தொகையில் பெரும் பகுதி, ஸ்பெயினில் இருந்து வந்து குடியேறியவர்களின் வம்சாவளியினர் ஆவர். ஸ்பெயின் தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்திரா விட்டால், அதுவும் தென் ஆப்பிரிக்கா போன்று ஒரு "வெள்ளையர் குடியேறிய நாடாக" கணிக்கப் பட்டிருக்கும்.

15 ம் நூற்றாண்டில், அமெரிக்கக் கண்டத்தை கண்டுபிடிக்க கிளம்பிய கொலம்பஸின் கப்பல்கள், முதலில் கிரான் கனாரியா தீவுகளுக்கு சென்று தான் பயணத்தை தொடர்ந்தன. அந்த தீவுகளுக்கு அருகில் ஓடும் கடல் நீரோட்டம், தென் அமெரிக்கா வரையில் கொண்டு சென்று விடும். அதற்கு முன்னரே, போர்த்துகீசிய அல்லது ஸ்பானிய மாலுமிகள், அந்த தீவை கண்டு பிடித்திருந்தனர். அப்போதிருந்தே, ஸ்பானிய குடியேற்றவாசிகள் வந்து சேர ஆரம்பித்து விட்டனர். அவர்களின் வருகையின் போது, அந்த தீவுகள் வெறுமையாக இருக்கவில்லை. அங்கு "குவாஞ்சே" (Guanche) என்றழைக்கப்படும் இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். அடுத்து வந்த நூறாண்டுகள், பூர்வீக மக்களும், ஸ்பானிய குடியேற்றவாசிகளும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். ஆயுதபலம் மிக்க ஐரோப்பியர்கள், கண்ணில் பட்ட குவாஞ்சே மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்கள். நூறாண்டுகளாக தொடர்ந்த இனவழிப்புப் போரின் இறுதியில், மோசமான தொற்று நோய் ஒன்று பரவியது. வெட்ட வெளியில் கொன்று போடப்பட்ட சடலங்களில் இருந்தே, அந்த நோய்கிருமிகள் தோன்றி இருக்க வேண்டும். 16 ம் நூற்றாண்டின் இறுதியில், அந்த தீவுகளில் ஒருவர் கூட மிஞ்சாமல், பூர்வகுடி மக்கள் முற்றாக துடைத்தழிக்கப் பட்டனர்.

கிரான் கனாரியாவின் பூர்வ குடிகள் பற்றிய தகவல்கள், மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. அதனால் இன்றளவும், அவர்களை "மர்மமான பழங்குடி இனம்" என்றே குறிப்பிடுகின்றனர். பெருமளவு தகவல்கள், ஸ்பானிய குடியேற்றவாசிகளிடம் இருந்தே கிடைக்கப் பெற்றாலும், ரோமர் காலத்தில் மொரிட்டானியாவை (அல்லது மொரோக்கோ) ஆட்சி செய்த மன்னன் ஜூபா, சில குறிப்புகளை எழுதியுள்ளான். அதிலும், அந்த தீவுகளின் அமைவிடம் பற்றியே குறிப்பிடப் படுகின்றது. பூர்வகுடிகளான குவாஞ்சே மக்கள், முன்பு ஆப்பிரிக்க பெருநிலத்தில் வாழ்ந்து வந்ததாகவும், ஜூபா மன்னனால் சிறைப் படுத்தப் பட்டு நாடு கடத்தப் பட்டதாகவும் சிலர் நினைக்கின்றனர். முன்பு வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பூர்வகுடிகள், ரோம சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக ஒடுக்கப் பட்டு, கிரான் கனாரியா தீவுகளுக்கு தப்பியோடி, அவற்றை தமது புகலிடமாக்கி இருப்பார்கள், என்று இன்னொரு ஆய்வு தெரிவிக்கின்றது. எது எப்படி இருப்பினும், கிரான் கனாரியாவின் பூர்வீக மக்களுக்கும், ஆபிரிக்காவுக்கும் சம்பந்தம் உள்ளது. அதனை உறுதிப் படுத்தும் தரவுகளை பின்னர் பார்ப்போம்.

கிரான் கனாரியா பூர்வகுடி மக்கள், கற்கால மனிதர்களைப் போல குகைகளில் வாழ்ந்தார்கள். ஆனால், சில தீவுகளில் கற்களைக் கொண்டு வீடுகள் கட்டப் பட்டிருந்தன. அனேகமாக, எல்லா தீவுகளிலும் பரவலாக காணப்பட்ட விசாலமான குகைகள், வீடு கட்டி வாழ வேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்க மாட்டாது. அந்த மக்கள் குகைகளில் வாழ்ந்தாலும், ஆட்டுத் தோல் உடுத்தினாலும், "நாகரீகம் அடைந்திருக்கவில்லை" என்று கூற முடியாது. குடிமக்களை ஆட்சி செய்ய அரசர்களும், சட்டவிதிகளும் இருந்துள்ளன. அரசர்களும் குகைகளில் தான் வாழ்ந்தனர். பொதுவுடமைப் பொருளாதாரம் நிலவியது. குவாஞ்சே மக்கள், சிறந்த போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். சுமார் பத்தடி நீளமான தடியொன்றை ஊன்றிய படி, மலைப் பாறைகளை தாண்டி பாய்வதில் வல்லவர்கள். குவாஞ்சே மக்கள், தமது இறந்த உறவினர்களின் உடல்களை, எகிப்திய 'மம்மி' போன்று பாதுகாத்து வைத்திருக்கும் மருத்துவக் கலை அறிந்திருந்தனர். பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரர்கள், ஏராளமான மம்மிகளை அழித்து விட்டனர். இருந்தாலும், இன்றைக்கும் சில அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. எகிப்தில் இருப்பதைப் போன்று, கனாரி தீவுகளிலும் "பிரமிட்" கட்டிடங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் அழியாமல் பேணிப் பாதுகாக்கப் படும், பிரமிட்களை கட்டியவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கின்றது.
குவாஞ்சே மக்கள், பல தீவுகளில் தனித்து வாழ்ந்தாலும், ஒரே மொழி பேசினார்கள். அவர்கள் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் இருந்தது என்பது ஒரு சிறப்பம்சம்! கிட்டத்தட்ட அதே மாதிரியான மொழி பேசும் மக்கள் இன்றைக்கும் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். எழுத்து கூட ஒற்றுமையைக் கொண்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் வாழும், துவாரக் இன மக்கள், பெர்பர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர். இவர்களது அமாசிக் மொழியும், எழுத்தும் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன. (துவாரக் இனமக்களைப் பற்றி அறிவதற்கு, நான் முன்பு எழுதிய சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை என்ற கட்டுரையை வாசிக்கவும்.) இன்றைய மொரோக்கோ, அல்ஜீரியா, லிபியாவில் வாழும் "பெர்பர்கள்" என்ற இனம், ஒடுக்கப்படும் சிறுபான்மையினமாக உள்ளது. "பெர்பர்கள்" என்ற சொல், அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் சூட்டிய இழிவுப் பெயராகும். இன்று, அவர்கள் பேசும் மொழியின் பேரில், "அமாசிக்" இனம் என்று அழைக்கப் படுகின்றனர். அமாசிக் மொழிக்கும், அந்த பிராந்தியத்தில் பேசப்படும் அரபி மொழிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரு சொல் கூட ஒற்றுமையில்லை! எழுத்து வடிவத்தில் கூட, ஆங்கிலமும், சீன மொழியும் போன்று, மிகப் பெரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. அதே நேரம், அமாசிக் மொழிக்கும், கிரான் கனாரியா பூர்வகுடிகளின் மொழிக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது.

மொழியியல் அறிஞர்கள் இன்னொன்றையும் குறிப்பிடுகின்றார்கள். கனாரி தீவுகளில் பேசப்பட்ட மொழிக்கும், திராவிட மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டுகின்றனர். பல சொற்களுக்கு இடையில் ஒற்றுமை இருப்பது, ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. குவாஞ்சே மக்கள் பேசிய மொழியின் சரியான உச்சரிப்பு யாருக்கும் தெரியாது. அநேகமான சொற்கள், பிற்காலத்தில் குடியேறிய ஸ்பானிஷ்காரரால், அவர்களின் உச்சரிப்புக்கேற்ப தொகுக்கப் பட்டன. பொதுவாகவே, ஐரோப்பிய மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல சொற்களின் ஒற்றுமை மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கின்றன. Ere (குவாஞ்சே) - ஏரி(தமிழ்), Atidamane (அரசி) - ஆதி அம்மன், Xerco (காலணி) - செருப்பு, Irrichen (தானியம்) - அரிசி.... இப்படிப் பல. (மேலதிக தகவல்களுக்கு: குவாஞ்சே மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள்) இந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு, "முன் தோன்றிய மூத்த குடி தமிழினம்" என இனப் பெருமிதம் பேசுவது எமது அறியாமையைக் காட்டுகின்றது. மொழி என்பது ஒரு தொடர்பாடல் சாதனம். அது குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தமானதல்ல. ஒரு மொழியானது பல்வேறு இனங்களுக்குள்ளும் பரவக் கூடியது.

வட ஆப்பிரிக்காவின் அமாசிக் மக்களுக்கும், கிரான் கனாரியாவின் குவாஞ்சே மக்களுக்கும் இடையிலான இன்னொரு ஒற்றுமை, அவர்களது தோற்றம். இன்றைக்கும் அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியாவில் வாழும், அமாசிக் (பேர்பர்) மக்கள், ஐரோப்பிய வெள்ளயினத்தின் உடற்கூறுகளை கொண்டுள்ளனர்! வெள்ளயினத்திற்கே உரிய சிறப்பம்சம் என்று கருதப்படும், வெளுப்பான தோல் நிறம், நீலக் கண்கள், செந்நிறத் தலைமுடி, போன்ற உடற்கூறுகளை கொண்ட மக்களை நீங்கள் இன்றைக்கும் அங்கே பார்க்கலாம். கிரான் கனாரியா தீவுக் கூட்டத்தில் வாழ்ந்த பூர்வகுடி இனமும், வெள்ளையரைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதனை பிற்காலத்தில் வந்த ஸ்பானிய குடியேற்றவாசிகளும் குறித்து வைத்துள்ளனர். பெரும்பாலும் கருநிற மேனியைக் கொண்ட மக்களைக் கொண்ட ஆபிரிக்க கண்டத்தில், பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் வெள்ளையினம் எப்படித் தோன்றியது? இந்தக் கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. உலகில் இன்னமும் துலங்காத மர்மங்களில் அதுவும் ஒன்று.

நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். மனிதர்களை கருப்பு, வெள்ளை என்று இனம் பிரித்துப் பார்க்கும் வழக்கம், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றியது. அண்ணளவாக ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு, தோல் நிறம் முக்கியமானதாகத் தெரியவில்லை. அதனால், "வெள்ளையர்கள் எங்கே இருந்து வந்தார்கள்? கருப்பர்கள் எங்கே இருந்து வந்தார்கள்?" என்றெல்லாம் அன்று யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை. இயற்கை வளங்களுக்கான போட்டியே, மனித இன வரலாற்றில் முக்கியமானதாக இருந்துள்ளது. இனத் தூய்மை பற்றி பேசும் கடும்போக்காளர்கள் கூட, இறுதியில் பொருளாதாரத்தில் குறியாக இருப்பார்கள். வரலாறு அதனைத் தான் எமக்கு கற்பித்துள்ளது.

காலனித்துவ காலம் முழுவதும், வெள்ளையின நிறவெறியை நிலைநிறுத்த பாடுபட்ட காலனியாதிக்கவாதிகள், எதற்காக ஒரு வெள்ளயினத்தை பூண்டோடு அழித்தார்கள்? அது மட்டுமா? வட ஆப்பிரிக்காவில் இலட்சக் கணக்கில் வாழ்ந்த வெள்ளையின மக்களையும், காலனிய அடிமைகளாகத் தானே வைத்திருந்தார்கள்? அவர்களை "சகோதரர்களாக" நடத்தும் எண்ணம் ஏன் தோன்றவில்லை? பூமியில் அரிதாகக் கிடைக்கும் நிலம், உணவு போன்ற வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டி, மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்கின்றது. "இனவுணர்வு","மொழியுணர்வு", "தேசிய உணர்வு", "மத உணர்வு"..... இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட குழுவின் பொருளாதார ஆதிக்கத்தை மறைப்பதற்காக போடப்படும் திரைகள் ஆகும்.





Sunday, April 26, 2009

மனிதக் காட்சிச் சாலை


வெப்பமண்டல நாடுகளின் மனிதர்களை,விலங்குகளைப் போல கூண்டுக்குள் அடைத்து வைக்கும் "மனிதக் காட்சி சாலைகள்" (Human Zoo) ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளெங்கும் பிரபலமாக இருந்துள்ளன. காலனியாதிக்க நாடுகள், தமது காலனிகளில் காணப்பட்ட, "விசித்திரமான" மனிதர்களை பிடித்து வந்து, தமது மக்களுக்கு காட்சிப் படுத்தினர். இந்தியர்கள், தமிழர்கள், அரேபியர்கள், ஆப்பிரிக்கர்கள், செவிந்தியர்கள், அபோரிஜின்கள் இவ்வாறு பல வேறுபட்ட இனங்களில், உதாரணத்திற்கு சிலரை தெரிந்தெடுத்து, ஐரோப்பிய நகரங்களுக்கு கூட்டிக்  கொண்டு வந்தனர்.

இந்த "விசித்திரமான  விலங்குகளை" அருங்காட்சியகத்தில் மட்டும் கொண்டு வந்து வைக்கவில்லை. நகரில் உள்ள, வழமையான மிருகக்காட்சிச் சாலையில் ஒரு பகுதி, இதற்கென ஒதுக்கப்பட்டது. சில நேரம் நகரங்களில் நடக்கும் கானிவல் களியாட்ட நிகழ்வுகளின் போதும், கண்காட்சிகளில் வைக்கப்பட்டனர். குரங்கை வைத்து வித்தை காட்டுவது போல, மனிதர்களை  வைத்து சிலர் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர்.

" காட்டுமிராண்டி பச்சை மாமிசம் உண்ணும் காட்சியை பார்க்க வாரீர்!" என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பார்வையாளரை கவர்ந்திழுத்தார்கள். பெரும்பாலான காட்சிகளில், இந்த காலனிய மக்கள், தமது பாரம்பரிய குடிசைக்குள், பாரம்பரிய உடையில் இருப்பார்கள். பாரம்பரிய நடனமும் நிகழ்த்திக் காட்ட வேண்டும். சில நேரம் சண்டைக் காட்சி நாடகமும் அரங்கேறும். இவர்களைப் பார்த்து இரசிக்கும் வெள்ளையினத்தவர்கள், காலனி நாடுகளின் மக்கள், விலங்குகளை காட்டிலும் கொஞ்சம் அதிகமாக வளர்ச்சி  அடைந்துள்ளதாக கருதிக் கொள்வார்கள்.

1875 லிருந்து 1940 ம ஆண்டு வரை, அதாவது காலனியாதிக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில், "மனிதக் காட்சிச் சாலைகள்" பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காணப்பட்டன. ஜெர்மனியில் இது "Völkerschau" என்றும், இங்கிலாந்தில் "Human Zoo" என்றும் அழைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த வெள்ளையின மக்கள், தம்மை விட வேறுபட்ட மனிதர்களைப் பார்த்திராததால், அவர்களுக்கு இது புதுமையாக இருந்தது. வித்தியாசமான தோற்றம், மேனி நிறம், பழக்க வழக்கங்கள் என்பன அவர்களை கவர்திழுத்தன. மேலும் பயங்கர திகில் காட்சிகளைப் பார்ப்பது போன்ற ஆர்வமும் அவர்கள் மத்தியில் காணப்பட்டது. திகில் காட்சிகளுக்கு மெருகூட்டுவதற்காக, சில நேரம் மண்டை ஓடுகள் காட்சிப் படுத்தப்பட்டன. புராதன காலத்து காட்டுமிராண்டிகள், மனித தலை கொய்வதே வேலையாக இருப்பவர்கள் போன்ற எண்ணத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடு.

வெள்ளையின வியாபாரிகளுக்கு காலனிகளில் உயிருள்ள மனிதர்கள் மட்டும் தேவைப்படவில்லை. வெப்ப மண்டல நாடுகளில் வாழும் பல்வேறு இனத்தவர்களின் மண்டையோடுகளும், எலும்புக்கூடுகளும் கூட தேவைப்பட்டன. ஐரோப்பிய நகரங்களின் அருங்காட்சியகங்களில் வைப்பதற்கும், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கும் அவை பயன்படுத்தப்பட்டன.

காலனிகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் மண்டையோடுகளும், எலும்புக் கூடுகளும் இதற்கென எடுத்து வரப்பட்டன. மண்டையோடு வாங்கி விற்கும் முகவர்கள், காலனிய இந்தியாவின் தெருக்களிலும் அலைந்து திரிந்து மண்டையோடுகளை சேகரித்ததாக, நெதர்லாந்தின் லைடன் நகர அருங்காட்சியக நிர்வாகி தெரிவித்தார். (அந்தக் காலங்களில் ஏராளமான இந்தியர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்ததாலும்,போர்களினாலும், மண்டையோடுகள் தாராளமாக கிடைத்து வந்தன.)

காலனிய மக்களை நிறவெறிக் கண்ணோட்டத்துடன் பார்த்து ரசிக்கும் கலாச்சாரம் இன்றைக்கும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றது. ஐரோப்பிய நகரங்களில் "காலனிய மக்களின் கண்காட்சிகள்" யாவும், அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்ட காலத்தில் தான் இடம்பெற்றன. ஐரோப்பியர்கள் தமது காலனிய அடிமை மக்களை நாகரீகமடையாத காட்டுமிராண்டிகளாக மட்டும் கருதவில்லை. பிரான்ஸின் காலனிகளான அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற அரபு நாடுகளை சேர்ந்த இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள், ஐரோப்பிய நகரங்களில் சூடாக விற்பனையாகின.

இன்றைக்கு சில தொலைக்காட்சித் தொடர்கள், "கலாச்சார பரிமாற்றம்" என்ற பெயரில், நிறவெறிக் கூத்துகளை அரங்கேற்றுகின்றன. இந்தத் தொடரில், தெரிந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய குடும்பங்கள், ஆப்பிரிக்க பழங்குடியின குடும்பங்களின் வீடுகளில் சில காலம் வசிப்பார்கள். பதிலுக்கு விருந்துபசரித்த ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பா வந்து சில காலம் வசிப்பார்கள். இது தான் தொடரின் சாராம்சம். ஆப்பிரிக்க பழங்குடியின குடியிருப்புகள் பாரதிராஜா படத்தில் வரும் கிராமங்களைப் போல வசதிக் குறைபாடுகளுடன் காணப்படும். படப்பிடிப்பின் போது, பழங்குடியின குடும்பத்தவர்கள், செல்லிடத் தொலைபேசி, கைக்கடிகாரம் போன்றவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. தப்பித் தவறியும், ஒரு வார்த்தை ஆங்கிலம் பேசக்கூடாது. 

ஆப்பிரிக்க பழங்குடியின குடும்பங்களும், பணத்திற்காக படப் பிடிப்பாளர்கள் கூறிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டனர். அதை விடக் கொடுமை, ஆப்பிரிக்க குடும்பங்கள் ஐரோப்பிய நகர வாழ்க்கைக்கு பழக்கப்படாதவர்களாக பல வேடிக்கையான காரியங்களை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டது தான். தொலைக்காட்சி பார்வையாளர்கள், பட்டணத்தில் பட்டிக்காட்டானின் அவதிகளைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்கள். மனிதக் காட்சி சாலைகள், வெறும் கோட்பாடாக இருந்த  நிறவெறிப் பாடத்தை, மக்களுக்கு நடைமுறையில் கற்பித்து வந்தன. அதன் தாக்கம், பல தலைமுறைகளுக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.



மேலதிக தகவல்களுக்கு:
Human zoo