Showing posts with label தமிழ் குறுந்தேசியவாதம். Show all posts
Showing posts with label தமிழ் குறுந்தேசியவாதம். Show all posts

Monday, June 07, 2021

James Bond முதல் Family Man வரை

- ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சோவியத் ரஷ்யாவையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் வில்லன்களாக காட்டி எடுத்திருந்தார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் ரஷ்யர்களும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- வியட்கொங் விடுதலைப் போராளிகளால் தென் வியட்நாம் விடுதலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட ராம்போ போன்ற திரைப்படங்களில் வியட்நாமிய போராளிகளை வில்லன்களாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை ஹீரோக்களாகவும் காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் வியட்நாமியரும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ராம்போ-2 வில் சோவியத் செம்படையினரை கொடூரமான வில்லன்களாக காட்டினார்கள். ஆப்கான் இஸ்லாமியவாத ஜிகாதிகளை ஹீரோக்களாக காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ரோஜா என்ற தமிழ்த் திரைப்படத்தில் காஷ்மீர் விடுதலைப் போராளிகளை இஸ்லாமிய மதவெறி பிடித்த கொடூரமான வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் காஷ்மீரிகளும் அல்ல, இஸ்லாமியரும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- உயிரே எனும் தமிழ்த் திரைப்படத்தில் அசாமிய விடுதலைப் போராளிகளை வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் அசாமியர் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- கடந்த இருபது வருட காலமாக பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாதிகளை வில்லன்களாக காட்டும் திரைப்படங்கள் ஏராளம் வந்து விட்டன. ஹாலிவூட் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப் பட்ட ஏராளமான ஹிந்தி, தமிழ்ப் படங்கள் அது போன்ற கதைக்கருவை கொண்டிருந்தன.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பிராந்திய வல்லரசும் தமது நலன்களுக்கு எதிரான இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்து தடைசெய்திருந்தன. அப்போதெல்லாம் எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல் நடந்து கொண்டோம். உலகத்தை அல்லது பூகோள அரசியலை புரிந்து கொள்வதற்கு, எமது குறுகிய சிந்தனை கொண்ட தமிழ்த்தேசியம் அனுமதிக்கவில்லை. அதைக் கூட ஒரு குறைபாடாக நினைக்காமல், பெருமையாக நினைத்துக் கொண்டோம்.

நாங்கள் தொடர்ந்தும் அமெரிக்க- இந்திய நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டோம். இப்போதும் காட்டிக் கொள்கிறோம். எஜமானின் காலடியில் விழுந்து கிடந்தோம். ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மகாநாட்டில் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழர்கள் பக்கம் நிற்பதாக எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம். தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, கியூபாவை மட்டும் தேர்ந்தெடுத்து திட்டித் தீர்த்தோம். அப்போது தான் அமெரிக்காவின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று உண்மையிலேயே நம்பினோம்.

அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காக நாங்களும் சீனாவை திட்டினோம். இலங்கையில் சீன மொழித் திணிப்பு நடக்கிறது, சீனாவின் காலனி உருவாகிறது என்று பிரச்சாரம் செய்தால் இந்தியா தமிழர்களை ஆதரிக்கும் என்று நம்பினோம். சர்வதேச மட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை கண்டித்தோம். "இஸ்லாமியர்களை நம்ப முடியாது... குண்டு வைப்பார்கள்..." என்று ஏகாதிபத்தியம் சொல்லித் தந்த பாடத்தை மனனம் செய்து ஒப்புவித்தோம். அத்துடன் இஸ்ரேலை இருக்க விடாமல் அரபு- இஸ்லாமியர்கள் தாக்குகிறார்கள் என்று சொல்லி, பாலஸ்தீனர்களின் போராட்டத்தை எதிர்த்து வந்தோம். இஸ்ரேலை நிபந்தனை இன்றி ஆதரித்தோம். இதன் மூலம் அமெரிக்க எஜமான் மனத்தைக் குளிர வைத்தோம்.

இவ்வாறு எந்தவிதமான அரசியல் புரிதலுமற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் குறுந் தேசியவாதிகளின் பலவீனத்தை பயன்படுத்தி Family Man - 2 சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்:

1. இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பி விட்டதாகவும் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தமிழ்த் தேசியவாதிகள் தான் கதைகளை கட்டி விட்டார்கள். அனைத்து தமிழர்களும் தாம் சொல்வதை உண்மை என்று நம்ப வேண்டும் என அடம்பிடித்தார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. பாஸ்கரன் என்ற பாத்திரப் பெயருடன் வரும் பிரபாகரன் போர்க்களத்தில் இருந்து உயிருடன் தப்பி விட்டதாக சொல்கிறது.

2. வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகளை "உண்மையான தமிழினப் பற்றாளர்கள்" என்று தமிழர்கள் பலர் (இன்றும்) நம்புகிறார்கள். அன்று புலிகளும் அவர்களை நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. ஆரம்பத்திலேயே வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இந்தியப் புலனாய்வுத்துறையின் தொடர்பில் இருப்பவர்களாக காட்டப் படுகின்றனர். அவர்கள் புலிகளின் தலைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது விசுவாசம் இந்திய இறையாண்மை மீதே இருக்கிறது. (இந்த உண்மையை சீமானும் மறுக்கவில்லை.)

3. இறுதிப்போரில் புலிகளின் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாத தமிழ்த் தேசியவாதிகள், "இருபது சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்து விட்டன" என்று சொல்லித் திரிந்தார்கள். இப்போது கேட்டாலும் அதைத் தான் சொல்வார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. புலிகளை அழித்த இந்த சர்வதேச நாடுகள் எல்லாம்,  இஸ்லாமியவாதிகளுக்கும் எதிரி நாடுகள் தான். ஆகவே லண்டனுக்கு தப்பிச் சென்ற புலிகளின் தலைவர் அங்கிருந்த படியே ISI உடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதாக கதை அமைத்திருக்கிறார்கள்.

4. அமெரிக்காவில் ஸ்தாபிக்கப் பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபதிபத்திய, அல்லது இந்திய பிராந்திய வல்லரசின் நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறது. இதை அவர்கள் எந்த ஒளிவுமறைவும் இன்று நேரடியாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எந்தக் கட்டத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளாது. மாறாக, இந்திய அரசுடன் ஒத்துழைப்பார்கள் என்று கதை அமைத்திருக்கிறார்கள். 

 *****

சரி, இனிமேல் Family Man - 2 சர்ச்சைக்கு பிறகாவது இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்த்தேசியவாதிகள் திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இப்போதும் கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் அவர்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான நிலைமையில், Family Man - 2 க்கு எதிரான எதிர்ப்புகள் அதற்கான விளம்பரமாக அமையுமே தவிர வேறெந்த பலனையும் தரப் போவதில்லை. இனி வருங்காலத்தில் இது போன்ற படங்கள் தயாரிப்பதற்கான ஊக்குவிப்பாகவே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை கருதிக் கொள்வார்கள்.

Friday, July 10, 2020

ஈழத் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? - ஒரு விவாதம்


ஈழத் தமிழ் அரசியலை ஆழமாக ஆராயும் இணையக் கலந்துரையாடல் (5 July 2020) பேஸ்புக்கில் பார்க்கக் கிடைத்தது. (https://www.facebook.com/tamildebaterscouncil/videos/574320763283712) இதுபோன்ற விவாதத்தை இதுவரையில் இலங்கையில் எந்த ஊடகமும் செய்யவில்லை. ஒரு மகத்தான பணியை இணையத்தில் நிறைவேற்றிய இலங்கை வாழ் தமிழ் விவாதிகள் கழகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் முதலில் உரையாடிய அஷோக்பரன், குருபரன் இருவரும் சட்ட வல்லுனர்கள். ஆகவே ஆரம்பத்தில் தமிழர்களின் சுயநிர்ணயம் தொடர்பாக சட்டரீதியான நிலைப்பாடுகளை ஆராய்ந்து விட்டு, இறுதியில் அரசியல் தீர்வு முக்கியம் என்று ஒருமித்த கருத்து நிலைப்பாட்டுக்கு வந்தனர்.

ஒரு பேச்சுவார்த்தைக்கு செல்லும் பொழுது விட்டுக்கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளும் குருபரன், முஸ்லிம்களின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், சிங்களவர்களும் தமிழர் தாயகத்தில் வாழ விட வேண்டும் என்ற யதார்த்த நோக்கில் பேசினார். அத்துடன் சாதி ஒழிப்பு, பெண் உரிமை தொடர்பாக பெரியாரின் திராவிடர் கழக கொள்கைகளை பின்பற்றுவது சிறந்தது என்பதையும் ஏற்றுக் கொண்டார். அத்துடன் ஈழத்தமிழரின் தொன்மையான வரலாறு என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமை கோரவில்லை என்றும், சமீபத்திய அரசியல் வரலாற்று விளைவுகளின் ஊடாக சுயநிர்ணய உரிமை கோரிக்கையை முன்வைப்பதாகவும் சொன்னார்.

குருபரன் இந்தளவு தூரம் முற்போக்காக பேசினாலும், இது குறித்து எத்தனை தமிழ்த்தேசியவாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள், அல்லது ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறி. குருபரன் தான் ஒரு உறுப்பினர் அல்ல என்று அடிக்கடி மறுத்து வந்தாலும், அவர் எப்போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) சார்பாகவே பேசி வந்துள்ளார். அந்தக் கட்சியில் தான் குறுகிய மனப்பான்மை கொண்ட இனவாதிகளும், மதவாதிகளும், சாதியவாதிகளும் நிறைந்து காணப்படுகின்றனர். ஆகவே மேற்படி முற்போக்கான கருத்துக்களை தெரிவிப்பதற்கு, குருபரன் தவிர வேறெந்த தமிழ்த்தேசியவாதியாவது முன்வருவாரா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

இலங்கை என்ற ஒற்றையாட்சியை மையப் படுத்திய சட்டத்தில், குருபரன் எதிர்பார்க்கும் "தமிழர் தாயகம்" என்பதை குறிக்கோளாக கொண்ட "புறவய" அல்லது "அகவய" சுயநிர்ணய உரிமை சாத்தியமில்லை என்பது உண்மை தான். அஷோக்பரன் சுட்டிக் காட்டியது போன்று இதனை மேலிருந்து திணிக்க முடியாது. அடிமட்டத்தில் அரசியல் மாற்றங்கள் ஊடாக எட்டப் பட வேண்டும்.

பிரித்தானியாவில் உள்ளது போன்று ஒற்றையாட்சி அலகின் கீழான சமஷ்டி அமைப்பு குறித்து அஷோக்பரனும், குருபரனும் நீண்ட நேரமாக உரையாடினார்கள். அவ்வாறான ஒரு தீர்வு இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்பது அஷோக்பரனின் எதிர்பார்ப்பு. ஆனால், அது இலங்கையில் சாத்தியமல்ல என்று கூறிய குருபரன், அதற்குக் காரணம் சிங்கள- பௌத்த பேரினவாத கருத்தியல் என்றும் பதிலளித்தார்.

நான் இந்த இடத்தில் ஸ்கொட்லாந்து சுயநிர்ணயம் தொடர்பாக குருபரனுக்கு விளக்கம் கொடுக்கலாம் என நினைக்கிறேன். பிரித்தானியா என்ற பொதுப் பெயரின் கீழ், இங்கிலாந்து மன்னராட்சியானது ஸ்கொட்லாந்து மன்னராட்சியை பெயரளவில் தனக்கு சமமான அரசாக இணைத்துக் கொண்டது. இருப்பினும் ஸ்கொட்லாந்தில் கடந்த முன்னூறு வருட காலமாக இங்கிலாந்தின் மேலாதிக்கம் இருந்து வந்துள்ளது. இங்கிலாந்தின் ஆங்கிலேய- புரட்டஸ்தாந்து பேரினவாதம், ஸ்கொட்டிஷ் கத்தோலிக்க மக்கள் மீது அதிகாரம் செலுத்தியது. இன்றைக்கும் ஸ்கொட்லாந்தில் மட்டுமல்லாது வேல்சிலும் ஆங்கிலம் தான் பிரதானமான மொழியாக பேசப் படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஸ்கொட்டிஷ் தேசியவாத இயக்கம் அடக்கப் பட்டு வந்தது. தன்னாட்சி, தனியான பாராளுமன்றம் இருந்தாலும் பிரித்தானியா முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அதிகம். அதைவிட ஸ்கொட்லாந்தில் கணிசமான அளவில் குடியேறியுள்ள ஆங்கிலேய இனத்தவரையும் கணக்கில் எடுக்க வேண்டும். வெளிவிவகாரம் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியாகவும் ஸ்கொட்லாந்து இங்கிலாந்துக்கு கீழே கட்டுப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்டன் உலகை காலனிப் படுத்திய காலத்தில் ஸ்கொட்டிஷ்காரர்களின் பங்களிப்பு காரணமாக தமக்கென தன்னாட்சிப் பிரதேசத்தை பெற்றுக் கொண்டனர். ஆகவே ஒரு காலனியாதிக்க நாட்டில் இருந்த நிலைமையை, முன்பு காலனியாக இருந்த இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

விவாதத்தில் கலந்து கொண்ட இன்னொரு சட்ட வல்லுனரான அம்பாறையை சேர்ந்த சிவகுமார் நவரத்தினம், ஈழத்தமிழ்த் தேசிய அரசியலில் புறக்கணிக்கப் பட்டு வந்த ஒரு விடயத்தை தொட்டுக் காட்டினார். அம்பாறை என்பது கிழக்கு மாகாணதின் தென் கோடியில் தமிழர் வாழுமிடம் என்பது பலருக்கு தெரியாமல் இருப்பதை சுட்டிக் காட்டினார். மட்டக்களப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட அம்பாறைக்கு கொடுக்கப் படுவதில்லை. மேலும் அவர் மலையகத் தமிழரின் தனித்துவத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

இந்த இடத்தில் அஷோக்பரன் கூறிய சில கருத்துக்களை விமர்சிக்க வேண்டி உள்ளது. அவர் ஒரு தமிழ்த்தேசியவாதி அல்ல. இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வைக் காண விரும்பும் தாராளவாதி. முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் தமக்கென தனியான தேசியத்தை கட்டமைத்துக் கொண்டது அவர்களது தெரிவு என்றும், வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் அவர்களை ஒதுக்கவில்லை என்றும் வாதாடினார். இதில் பாதியளவு மட்டுமே உண்மை உள்ளது.

ஆரம்பத்தில் தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியும், தொண்டமானின் இந்திய தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் ஒற்றுமையாக செயற்பட்டு வந்தன. இருப்பினும் எழுபதுகளின் இறுதிப் பகுதியில் தொண்டமான் தன்வழி தனிவழி என்று சென்று விட்டார். அதனை வடக்குத் தமிழ்த்தேசியவாதிகள் முழுமனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. "தொண்டமான் ஒரு துரோகி" என்று வசைபாடிக் கொண்டிருந்தார்கள். இதில் யார் சரி, பிழை என்று நான் சொல்ல வரவில்லை. மலையக அரசியல் தனியாக பிரிந்தமைக்கு, வடக்குத் தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களின் புறக்கணிப்பும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதுவே முஸ்லிம்கள் குறித்த நிலைப்பாடாகவும் இருந்தது. கூட்டணி முதல் புலிகள் வரை முஸ்லிம் காங்கிரசின் இருப்பை ஜீரணிக்க முடியாதவர்களாக இருந்துள்ளனர்.

கடைசியாக பேச வந்த விரிவுரையாளர் மீநிலங்கோ அன்றும் இன்றும் பேசப்பட்டு வரும் தமிழ்த் தேசிய அரசியலானது மேட்டுக்குடி (பூர்ஷுவா) தன்மை கொண்டது என்பதையும், அது அடித்தட்டு மக்களின் அபிலாஷைகளை கவனத்தில் எடுக்கவில்லை என்றும் வாதாடினார். அதற்கு உதாரணமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த சுருட்டுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் போன்ற தகவல்கள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. அது மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயங்கி யாழ்ப்பாண வாலிபர் சங்கத்தின் முற்போக்கான அரசியல் கோரிக்கைகளும் புறக்கணிக்கப் பட்டு வந்துள்ளன.

மீநிலங்கோ தனது உரையில் சுயநிர்ணய உரிமை குறித்து சரியான நிலைப்பாடு இருக்க வேண்டும் என்றும், "ஆகவயம்", "புறவயம்" என்று, நாமாகவே உலகில் இல்லாத ஒரு விடயத்தை உருவாக்கி விட்டு வாதிடக் கூடாது என்றார். இது தொடர்பாக லெனின் கூறிய வரைவிலக்கணத்தை எடுத்துக் காட்டி விளங்கப் படுத்தினார். ஒவ்வொருவருக்கும் விவாகரத்து உரிமை இருக்கிறது என்பதற்காக மணம் முடிக்கும் பொழுதே அதைப் பற்றிப் பேசுவதில்லை. அந்த உரிமையை வைத்துக் கொண்டு சேர்ந்து வாழ முயற்சிக்கிறார்கள். இங்கு சேர்ந்து வாழ்வது எப்படி என்பது தான் முக்கியமே தவிர பிரிந்து செல்வதல்ல. மேலும் இதற்கு முன்னர் அஷோக்பரனும், குருபரனும் நடத்திய வாதாட்டத்தில் சிலாகித்துப் பேசப் பட்ட பிரான்ஸ் நாட்டின் மறுபக்கம் பற்றி எடுத்துக் கூறினார். பிரான்சில் பேசப்பட்டு வந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி ஒடுக்கி பிரெஞ்சு மொழி திணிக்கப் பட்டது வரலாறு. அத்தகைய பேரினவாத பிரான்ஸ் நாட்டை ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு உதாரணம் கற்பிப்பது ஒரு நகைப்புக்குரிய விடயம்.

Saturday, December 29, 2018

வலதுசாரி தேசியவாதம் ஓர் இளம்பருவக் கோளாறு - ஜான் மாஸ்டருடன் ஒரு விவாதம்


தோழர் சி.க. செந்தில்வேல் எழுதிய "வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை" நூல் வெளியீடு, கனடாவில் தேடகம் அமைப்பினரால் நடத்தப் பட்டது. அங்கே கலந்து கொண்டு பேசிய ஜான் மாஸ்டர், தனது உரையில் கூடுதலான நேரம் மார்க்சிய லெனினிச மாவோவாத சித்தாந்தம் மீது சேறடிப்பதற்கு ஒதுக்கினார். தன்னையும் ஒரு மார்க்சியவாதி என அறிமுகப் படுத்திக் கொண்டே, இலங்கையில் உள்ள தமிழ் இடதுசாரிகள் "வறட்டுவாத சூத்திரத்தை" பிடித்துக் கொண்டு தொங்குவதாக சாடினார். (பார்க்க வீடியோ: சி.கா.செந்திவேல் நூல் வெளியீடு) அவரது உரை முழுவதும் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தன. 

"தமிழ் இடதுசாரிகள் வறட்டு சூத்திரத்தை பிடித்து தொங்குவதாக..." ஜான் மாஸ்டர் குற்றம் சாட்டினார். தமிழ்த்தேசியம் என்றால் அதற்குள் தமிழ் இடதுசாரிகள் அடங்க மாட்டார்களா? அதற்கு அவரே ஓர் உதாரணம். அவரது உரை முழுவதும் தமிழ்த்தேசியத்தை முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்ளத் தயக்கம் ஏன் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதே நேரம் தன்னை ஒரு மார்க்சியவாதி என்றும் அறிமுகப் படுத்தி இருந்தார்.

ஜான் மாஸ்டர் மார்க்சியத்தை தான் அரைகுறையாக தெரிந்து கொண்டு பேசுகிறார் என்றால், முதலாளித்துவம் பற்றியும் அவ்வாறே தவறான தகவல்களை வழங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழர்கள் முதலாளிகளாக இருந்தனர் என்றார். அதற்கு உதாரணமாக, கேரளா சந்தைக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து புகையிலை ஏற்றுமதி செய்யப் பட்ட வரலாறை சுட்டிக் காட்டினார். அவரது உரையின் இன்னொரு இடத்தில், இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசு தான் முதலாளித்துவத்தை உருவாக்கியது என்கிறார். ஏனிந்த முரண்பாடு ஐயா?

இலங்கை ஆங்கிலேய காலனியாக இருந்த காலத்தில் தான், முதலாளித்துவ பொருளாதார மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்ற உண்மையை இவர் வசதியாக மறந்து விடுகிறார். அல்லது மறைத்து விடுகிறார். அதற்கு ஒரு காரணம் உள்ளது. இவர் "வரட்டுச் சூத்திரவாதிகள்" எனக் குற்றஞ்சாட்டும் தமிழ் இடதுசாரிகள் அடிக்கடி தரகு முதலாளித்துவம் பற்றிப் பேசுகின்றனராம். அப்படியெதுவும் இல்லை என்று சாதிக்கிறார்.

ஜான் மாஸ்டர் சொல்ல விரும்புவது போன்று, யாழ்ப்பாணத்தில் தமிழ் முதலாளித்துவம் தானாக தோன்றவில்லை. அது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் நிழலில் தோன்றியது. அந்தக் காலத்தில் இந்தியாவும் இலங்கையும் அகண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாகாணங்கள் போன்று ஆளப் பட்டன. இன்றுள்ள இலங்கை அரச நிர்வாக கட்டமைப்பும், ஏன் இராணுவம் கூட ஆங்கிலேயர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற காலனிய எச்சங்கள் தான்.

ஆங்கிலேய காலனிய காலத்தில் நடந்த வர்த்தகம் லண்டன் சந்தையை நோக்கியதாக இருந்தது. அது ஒன்றும் சர்வதேச வர்த்தகம் அல்ல. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ற "ஒரே நாட்டுக்குள்" நடந்த வர்த்தகம். அன்று ஆங்கிலேயர்கள் பெரும் நிறுவனங்களின் அதிபதிகளாக இருந்தாலும், உள்ளூர் முதலாளிகளையும் ஊக்குவித்து வளர்த்தனர். அதனால் தான் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அவர்கள் தரகு முதலாளிகளாக கருதப்பட்டனர்.

மூலதனம், பிரித்தானியா போன்ற மேற்கத்திய நாடுகளில் குவிக்கப் பட்டிருப்பதால் தான், நவகாலனிய சுரண்டல் எந்தத் தடங்கலும் இன்றி தொடர முடிகிறது. அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் தான் தரகு முதலாளிகள். அவர்கள் ஒரு வர்க்கமாக உள்ளனர். அவர்கள் ஒரு பக்கம் சிங்களத் தேசியத்திற்கும், மறுபக்கம் தமிழ்த்தேசியத்திற்கும் ஆதரவளிப்பார்கள்.

தரகு முதலாளிகளின் இறுதி இலக்கு இலங்கையை மறுபடியும் மேற்கத்திய காலனியாக்குவதாக இருக்கும். இலங்கையில் உள்ள பெரும்பான்மை சிங்களக் கட்சிகளில் எவை ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும், அவை தனியார்மயத்தை விரிவாக்கம் செய்து வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் முதலிடுவதை ஊக்குவிக்கின்றன. IMF, உலகவங்கி போன்ற நிதி மூலதன ஏகாதிபத்தியம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகின்றன. இவை எல்லாம் தரகு முதலாளித்துவத்தின் தோற்றப்பாடுகள் இல்லையா?

ஜான் மாஸ்டர், "மார்க்சியத்தின் பேரால் விமர்சிக்கிறேன்" என்று கூறிக் கொண்டே, அதைக் கொச்சைப் படுத்தும் வேலைகளை செவ்வனே செய்கிறார். அறிவுஜீவி மனப்பான்மையுடன் மார்க்சியத்தை திரிக்கத் தொடங்கி விடுகிறார். அதற்கு ஆதாரமாக "அல்தூசர் படித்தீர்களா? கிராம்சி படித்தீர்களா?" என்று கேட்கிறார். ஒரு நீதிக் கதையில் வரும் படகுக்காரனிடம் "வேதங்கள் படித்தாயா?" என்று கேட்ட பிராமணனை நினைவுபடுத்துகிறது.

மார்க்ஸ் "முதலாளித்துவத்தின் இயங்கு விதிகள்" பற்றிய தன்னுடைய கருத்துக்களை முன்வைத்ததாகவும், அது அந்தக் காலத்தில் "மிக முன்னேறிய கோட்பாடாக" இருந்ததாகவும் ஜான் மாஸ்டர் கூறுகிறார். உண்மையில், முதலாளித்துவத்தின் இயங்குவிதிகள் பற்றி ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ போன்ற அறிஞர்கள் ஏற்கனவே எழுதி விட்டனர்.

முதலாளித்துவத்தில் மூலதனம் எவ்வாறு குவிக்கப் படுகிறது என்பது பற்றித் தான் மார்க்ஸ் ஆராய்ந்தார். உழைப்பில் உபரிமதிப்பு இருப்பதை கண்டுணர்ந்து கூறினார். ஆனால், மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே அதைப் பலர் கண்டுகொள்ளவில்லை. இன்று ஜான் மாஸ்டர் மாதிரி, அன்றும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் மார்க்ஸ் "ஒரு வரட்டு சூத்திரவாதி" என்று பரிகசித்தனர்.

இனி, ஜான் மாஸ்டர் லெனின் பற்றி அவிழ்த்து விடும் கட்டுக் கதைகளை பார்ப்போம். ஏகாதிபத்தியம் லெனினின் காலத்தில் தானாம் வந்தது. (அதற்கு முன்னர் அப்படி ஒன்றே இருக்கவில்லை?) ஜெர்மனி போன்ற வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் தான் புரட்சி வெடிக்கும் என்று மார்க்ஸ் எதிர்பார்த்தார் என்றும் அதை லெனின் "ஏற்றுக் கொள்ளவில்லை" என்றும் கூறுகின்றார். அதனால் தான், லெனின் "ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியில் புரட்சி வெடிக்கும்" என்று கூறி அதற்கான தயார்படுத்தல்களை செய்தாராம். அடேங்கப்பா! ஜான் மாஸ்டர் நமது காதுகளில் முழம் முழமாக பூச் சுற்றுகிறார்.

ஏகாதிபத்தியம் லெனின் காலத்தில் தான் வந்ததா? மார்க்ஸ் காலத்தில் இருக்கவில்லையா? மார்க்ஸ் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த, கிழக்கிந்திய கம்பனி, மேற்கிந்தியக் கம்பனி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இவையெல்லாம் ஏகாதிபத்தியம் இல்லையா? அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, ரஷ்ய ஏகாதிபத்தியங்கள் காலனி பிடிப்பதற்காக போரிட்டுக் கொள்ளவில்லையா? ஏகாதிபத்தியத்தை பொறுத்தவரையில், மார்க்ஸ் காலத்தில் தொழிற்துறை சார்ந்ததாகவும், லெனின் காலத்தில் நிதிமூலதனம் சார்ந்ததாகவும் இருந்தது. அது மட்டுமே வித்தியாசம்.

ஜெர்மனி போன்ற வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாட்டில் புரட்சி வெடிக்கும் என்று மார்க்ஸ் எதிர்பார்த்தது உண்மை தான். ஆனால், அது நடக்கவில்லை. அதனால், மார்க்ஸ் தவறு செய்து விட்டார் என்று வாதிடுவது உள்நோக்கம் கொண்டது. முதலாம் உலகப்போர் முடிந்தவுடன் ஜெர்மனியின் பல நகரங்களில் புரட்சி வெடித்தது.

பெர்லின், மியூனிச், ஹம்பேர்க் ஆகிய இடங்களில் தோன்றிய சோவியத் அமைப்புகள் ஒரு மாதம் அளவில் நின்று பிடித்தன. ஆனால், பலமான ஜெர்மன் இராணுவத்தின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக புரட்சி தோற்கடிக்கப் பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், புரட்சியில் ஈடுபட்ட மக்களும் நிராயுதபாணிகளாக சுட்டுக் கொல்லப் பட்டனர்.

அன்றிருந்த ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி பாட்டாளிவர்க்க புரட்சிக்கு தலைமையேற்க வேண்டிய தனது பொறுப்பில் இருந்து நழுவியது. புரட்சியை காட்டிக் கொடுத்தது. அது பல வருடங்களுக்கு முன்னரே முதலாளித்துவத்துடன் சமரசவாத போக்கில் சென்று கொண்டிருந்தது. முதலாம் உலகப்போரில் ஜெர்மன் தேசியத்தை பாதுகாத்தது. இது தான் லெனின், ரோசா லக்சம்பேர்க் போன்ற பலர் முரண்படக் காரணம்.

சமூக ஜனநாயகக் கட்சியின் திரிபுவாதப் போக்கையும், தேர்தல் பாதையையும் நிராகரித்து உருவானவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியினர். லெனின் தலைமையிலான போல்ஷெவிக் பிரிவினரும் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியுடன் முரண்பட்டு விலகிச் சென்றவர்கள் தான். முதலாம் உலகப்போரில் தோற்கடிக்கப் பட்டு நட்டமடைந்த சார் மன்னன் பதவி விலகியதால், ரஷ்யாவில் பாராளுமன்ற ஆட்சி வந்தது.

சார் மன்னனிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய முதலாளித்துவ பாராளுமன்ற அரசு பலவீனமாக இருந்த படியால், போல்ஷெவிக் கட்சி அக்டோபர் புரட்சியில் அதிக இழப்புகள் இன்றி ஆட்சியை கைப்பற்ற முடிந்தது. அதைவிட பாரிஸ் கம்யூன் தோற்கடிக்கப் பட்ட வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்ட பாடமும் புரட்சியின் வெற்றிக்கு காரணம். அதாவது, போல்ஷெவிக்குகள் தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக நீண்ட கால போருக்கு தயாராக இருந்தனர். புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்தல்ல என்று மாவோ சொன்னதையும் இங்கே நினைவு படுத்த வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ் இடதுசாரிகள் பொருளியலை பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் என்று ஜான் மாஸ்டர் குற்றஞ்சாட்டுகிறார். இது ஒரு விடயத்தை எளிமைப் படுத்தப் படுத்தி புரிந்து கொள்வதால் ஏற்படும் தவறு. அக்டோபர் புரட்சிக்கு முன்னர், ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியில் பொருளியல்வாதிகள் என்று ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்களை நிராகரித்து உருவானது தான் லெனினிசம். இது போல்ஷெவிக் கட்சியின் வரலாறு எனும் நூலில் பதிவுசெய்யப் பட்டுள்ளது.

மார்க்சிய லெனினிசம் என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த கோட்பாடு அல்ல. அது மிக முக்கியமாக வர்க்க அடிப்படை கொண்டது. மனித குல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்ட வரலாறு தான் என்று மார்க்ஸ் சொன்னார். அதாவது எதையும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அதையே தான் லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரும் முன்னெடுத்தனர். அதனால் தான் இன்றைக்கும் சில கட்சிகள் தம்மை மார்க்சிய லெனினிச அல்லது மாவோயிச கோட்பாட்டின் படி நடப்பதாக அறிவித்துக் கொள்கின்றன.

ஜான் மாஸ்டர் கிண்டல் அடிப்பது போன்று, இது "மாவோவின் மேற்கோள்கள் நூலில் எல்லாம் இருக்கிறது" என நினைக்கும் வரட்டுச் சூத்திரம் அல்ல. அதிலும் வர்க்கப் போராட்டம் பற்றித் தான் விலாவாரியாக எழுதி இருக்கிறது.

ஜான் மாஸ்டரின் உரையில் எந்த இடத்திலும் வர்க்கப் போராட்டம் பற்றி பேசப் படவில்லை. இது ஒன்றும் கவனிக்காமல் விடும் தவறு அல்ல. வர்க்க முரண்பாடுகளை பேசாமல் விடுவதன் மூலம் முதலாளித்துவ ஒடுக்குமுறை மூடி மறைக்கப் படுகின்றது.

அவரது உரையில் பேசப்பட்ட எந்த ஒரு விடயத்திலும் வர்க்கக் கண்ணோட்டம் கிடையாது. வர்க்கம் என்ற சொல்லை உச்சரிக்கவே தயங்குகிறார். அப்படியான ஒருவர் எவ்வாறு ஒரு மார்க்சிய லெனினிச மாவோயிச கட்சி மீது விமர்சனம் வைக்க முடியும்? அதையும் மார்க்சியத்தின் பேரால் செய்வதைப் போன்ற கயமைத்தனம் வேறெதுவும் கிடையாது. அதை விட நேரடியாகவே முதலாளித்துவத்திற்கு முண்டு கொடுப்பவர்கள் நேர்மையாளர்கள்.

******** 

கனடாவில் நடந்த நூல் விமர்சனக் கூட்டம் ஒன்றை பயன்படுத்தி, ஜான் மாஸ்டர் எனும் ரகுமான் ஜான் மார்க்சியத்தை திரிபுபடுத்தி பேசியதை விமர்சித்து முகநூலில் எதிர்வினையாற்றி இருந்தேன். மேற்கொண்டு நிறைய எழுத வேண்டி இருந்த படியால், நேரமின்மை காரணமாக தொடரும் என்று போட்டிருந்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக நேரம் கிடைக்கவில்லை. அதற்குள் ஜான் மாஸ்டர் எனக்கு நீண்டதொரு எதிர்வினையாற்றி உள்ளார். அதில் நான் "ஸ்டாலின் தேசியவாதம் பேசியது குறித்து" எதுவும் எழுதவில்லை என்றும், இதனால் கருத்தாடலில் அர்த்தம் இல்லை என்றும் தொடங்கி உள்ளார். (பார்க்க:கலையரசனுடைய விமர்சனங்களுக்கான எதிர்வினை...

மன்னிக்கவும், கிழமைக்கு நாற்பது மணிநேரம் உடல் உழைப்பை செலவிட வேண்டியுள்ள சாதாரண தொழிலாளியான எனக்கு, "அறிவுஜீவிகள்" போன்று புத்தகங்களை தேடி வாசிக்கவும், அவற்றை மேற்கோள் காட்டி எழுதவும் நேரம் கிடைப்பதில்லை. இப்போதும் முன்பு கற்ற அறிவை வைத்து தான் பதில் எழுதுகிறேன். ஆதாரம் தேடுவதற்கு எனக்கு நேரமில்லை. அதற்காக எனது எதிர்வினையை அவர் "பொதுப்புத்தி" என்று புறக்கணிக்கலாம். அது அவரது அறிவுஜீவித்தனத்தை (Intellectualism) காட்டுகின்றது. மார்க்சியம் என்பது ஒரு பாட்டாளி வர்க்க கோட்பாடு. அதைப் புரிந்து கொள்வதற்கு பாட்டாளிவர்க்க உணர்வும் அவசியம். அதை அறிவுஜீவி மேட்டிமைத்தனத்துடன் புரிந்து கொள்ள முடியாது. கோட்பாடுகளை எமது வார்த்தைகளில் விளக்குவதற்கு முன்னர், நாம் அதை உள்வாங்கி புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்பாடுகளையும், பார்முலாக்களையும் இரைமீட்பதால் தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. அது போன்ற தவறுகளை தான் ரகுமான் ஜானின் எதிர்வினையில் நான் காண்கிறேன்.

ஜான் மாஸ்டர் எழுப்பிய கேள்விகளுக்கான எனது பதில்கள்:


ஸ்டாலின் ஒரு தேசியவாதியா?

//ஸ்டாலினே சில குறிப்பான சந்தர்ப்பங்களில், பழம்பெருமை பேசி, தேசியவாதத்தை துணைக்கு அழைக்கிறார் என்பதை நிறுவும் வகையில் எனது ஆதாரத்தை வழங்கியிருந்தேன்// - ரகுமான் ஜான்

1941 ம் ஆண்டில் செஞ்சேனை படை வீரர்கள் தமது பயிற்சி முடித்து வெளியேறும் ஒரு நிகழ்வில் உரையாற்றிய ஸ்டாலின், சார் மன்னர் காலத்து (தேசிய)வீரர்களை பற்றிக் குறிப்பிட்டு "தேசியவாதத்தை" உயர்த்திப் பிடித்தார் என்பது அவர் தரும் முதலாவது "ஆதாரம்".

1931 ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4ம் திகதி, ஸ்டாலின் சோவியத் யூனியனது முதன்மையான தொழிற்சாலை நிர்வாகிகளுடன் உரையாடிய போது,மொங்கோலியர்கள், துருக்கியர்கள், லிதுவேனியர்கள் ஆகிய அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்பை குறிப்பிட்டுப் பேசி, தற்போது எமக்கொரு சோஷலிச தந்தையர் நாடு இருக்கிறது என்று ஸ்டாலின் "தேசியவாத" அறைகூவல் விடுத்தார் என்பது அவர் தரும் இரண்டாவது "ஆதாரம்".

ஜான் மாஸ்டர் உண்மையில் தேசியத்தையும், தேசியவாதத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார். உலகில் முதல் தடவையாக ஐரோப்பாவில், குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசிய அரசுகள் தோன்றின. அதற்கு முன்னர் மன்னராட்சி இருந்த இடத்தில் குடியரசுகள் உருவாகின. அவை முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றின. அவற்றின் வளர்ச்சிக் கட்டத்தில் தான் சோஷலிச அரசுகள் தோன்றுகின்றன. ஒரு முதலாளித்துவ அமைப்பினுள் சோஷலிசத்திற்கான கரு அடங்கியுள்ளது.

அன்றைய காலங்களில், தேசிய அரசுக்களை அமைத்தவர்களின் அரசியல் சித்தாந்தமாக தேசியவாதம் இருந்தது. அதற்காக ஒரு குறிப்பிட்ட தேசியத்திற்குள் அடங்குவோர் எல்லோரும், அங்குள்ள தேசியவாத அரசியலை ஏற்றுக்கொண்டனர் என்று அர்த்தம் அல்ல. அங்கு தேசியவாதத்தை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். அதே மாதிரி, தேசங்களின் எல்லைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும் (உதாரணம்: அனார்க்கிஸ்ட்) இருப்பார்கள்.

மேலும், ஸ்டாலின் போன்ற ஆட்சியாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கும், பிற நிகழ்வுகளில் பேசுவதற்கும் இடையிலான வித்தியாசத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அதன் தத்துவார்த்த அடிப்படையை ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால், வெளி இடங்களில் நடக்கும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் அல்ல. அரசியல் ஆர்வமில்லாதவர்களும் இருப்பார்கள்.

ஜான் மாஸ்டர் இங்கே குறிப்பிட்ட இரண்டு "ஆதாரங்களும்" பொது நிகழ்வுகளில் ஆற்றிய உரைகள் தான். அங்கு சமூகமளித்த அனைவரும் மார்க்சிய லெனினிசவாதிகள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களில் பலர் தேசப் பற்றாளர்களாக, தேசியவாதிகளாக கூட இருக்கலாம். ஏன் மத நம்பிக்கையாளர்களும் இருப்பார்கள். சுருக்கமாக சொன்னால், பெரியளவு அரசியல் ஈடுபாடற்ற சாதாரண மக்கள். அதனால் அவர்களுக்கு புரியும் மொழியில் பேசுவதும் அவசியமாகிறது.

அதே நேரம், மொங்கோலியர்கள், பிரெஞ்சியர்கள், ஜப்பானியர்கள், லிதுவேனியர்கள் ரஷ்யா மீது படையெடுத்தனர் என்று கூறி விட்டால் அது ஒரு "தேசியவாத அறைகூவல்" ஆகி விடுமா? இவை எல்லாம் யாராலும் மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள். எல்லா நாடுகளிலும் வாழும் மக்களின் நினைவுகளில் இது போன்ற வரலாற்றுக் கதைகள் இருக்கும். அவற்றைக் குறிப்பிட்டு பேசுவதில் என்ன தவறு? இலங்கையை, இந்தியாவை எந்தவொரு அந்நிய நாடும் ஆக்கிரமிக்கவில்லையா? அதைப் பற்றிக் கேட்டால் அங்குள்ள மக்கள் கதை கதையாக சொல்வார்களே?

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவும், சோவியத் யூனியனும் ஒரே அணியில் இருந்தன. அப்போது அமெரிக்காவில் "ரஷ்யா ஏன் போரிடுகிறது?" என்று ஒரு ஆவணப் படம் தயாரித்து வெளியிட்டனர். அதிலும் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டது போன்ற வரலாற்று சம்பவங்கள் குறிப்பிடப் படுகின்றன. "கடந்த காலங்களில், பிரெஞ்சியர், ஜப்பானியர் போன்ற அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் ரஷ்யாவின் வளங்களை அபகரிக்கப் பார்த்தனர். தற்போது (நாஸி) ஜெர்மனி அந்த நோக்கத்தில் படையெடுக்கிறது..." என்று அமெரிக்க ஆவணப் படத்திலும் கூறுகின்றனர். அந்த வரலாறு உண்மை தானே? அது எப்படி "தேசியவாத அறைகூவல்" ஆகும்? நான் நினைக்கிறேன், ஜான் மாஸ்டர் எப்போதும் தேசியவாதக் கண்ணாடி அணிந்து கொண்டு தான் எல்லாவற்றையும் பார்க்கிறார். அதனால் காண்பதெல்லாம் தேசியவாதமாகத் தெரிகின்றது.

ரகுமான் ஜான் இங்கே ஒரு முரண்நகையை கவனிக்கத் தவறி விடுகிறார். ஒரு ஜார்ஜியரான ஸ்டாலின் ரஷ்ய தேசியவாதம் பேசுவது வேடிக்கையானது. அதை எந்தவொரு ரஷ்ய தேசியவாதியும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆகையினால், இது அனைத்து மக்களையும் கவர்வதற்கான அலங்காரப் பேச்சு என்பது எடுத்தவுடனே புரிந்து விடும். மேலும், செம்படையில் போர்வீரர்களாக சேர்ந்த எல்லோரும் ஸ்டாலினுக்காக அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்காக போருக்கு செல்லவில்லை. நிறையப் பேர் தாய் நாட்டுப்பற்றுக் காரணமாகவும் யுத்தமுனைக்கு சென்றனர்.

ரஷ்யப் புரட்சிக்குப் பின்னரான காலங்களில் தேவாலயங்கள் மூடப் பட்டமை உண்மை தான். ஆனால், இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் அவை மீண்டும் திறக்கப் பட்டன. மத வழிபாடுகள், சடங்குகள் தாராளமாக அனுமதிக்கப் பட்டன. பைபிள் படிப்பதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. தேவாலயங்கள் சொத்து வைத்திருக்கவும் அனுமதிக்கப் பட்டது.

இதெல்லாம் அன்று சோவியத் யூனியனில் இருந்த மத நம்பிக்கையாளர்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகள். அதனால் நன்மையே உண்டானது. கிறிஸ்தவ தேவாலயங்கள் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த இலட்சக்கணக்கான ரூபிள்களை யுத்த நிதியாக வழங்கின. மதகுருக்கள் யுத்தமுனைக்கு சென்று பூசை செய்தனர். இந்த உதாரணங்களை சுட்டிக் காட்டி, ஸ்டாலின் "கிறிஸ்தவ மத போதனை செய்தார்" என்று கூறுவது எத்தனை அபத்தமானது?

ஸ்டாலின், மத்திய ஆசிய நாடுகளில் இருந்த இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்களை கவரும் வகையிலும் நடந்து கொண்டார் என்பது தெரியுமா? டாகெஸ்தான் மாநிலத்தில் ஷரியா சட்டம் கொண்டு வருவதற்கு ஸ்டாலின் ஆதரவு வழங்கினார். அதற்கான ஆதாரம் இதோ:

ரஷ்யாவின் டாகெஸ்தான் மாநிலத்திற்கான சுயாட்சி வழங்குவது பற்றிய பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் பின்வருமாறு தெரிவித்தார்: //"டாகெஸ்தான் பிரதேசத்திற்கு உரிய தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசாட்சி நடக்க வேண்டும். டாகெஸ்தான் மக்களுக்கு ஷரியா சட்டம் முக்கியமானது என்று எமக்குக் கூறப் பட்டது. நாம் ரஷ்யாவில் ஷரியாவை தடை செய்து விட்டதாக, சோவியத்தின் எதிரிகள் வதந்திகள் பரப்பித் திரிவதையும் நாம் அறிவோம். அந்த வதந்திகள் பொய்யானவை.

ரஷ்ய அரசு தனது மக்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய சட்டங்கள், மரபுகளின் அடிப்படையில் ஆள்வதற்கான முழு உரிமையும் கொடுக்கிறது. ஷரியா ஒரு பொதுவான சட்டம் என்பதை சோவியத் ஏற்றுக் கொள்கின்றது. டாகெஸ்தான் மக்கள் தமது சட்டங்களையும், மரபுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால், அவற்றை அப்படியே விட வேண்டும்."//

இதைக் கண்டால் ஜான் மாஸ்டர் என்ன சொல்வார்? "ஸ்டாலின் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசினார்" என்று சொல்வாரா? யானை பார்த்த குருடர்கள் கதை மாதிரித் தான் ஜான் மாஸ்டரின் "ஸ்டாலின் தேசியவாதம் பேசினார்" என்ற வாதமும் அமைந்துள்ளது. 


ஏகாதிபத்தியம் எப்போது தோன்றியது?

ஜான் மாஸ்டர் (ரகுமான் ஜான்) தனது உரையில் ஏகாதிபத்திய காலகட்டம் பற்றி கூறிய தகவல் தான் பிழை என்று எனது எதிர்வினையில் எழுதி இருந்தேன். அதாவது ஏகாதிபத்தியம் லெனின் காலத்தில் வந்தது என்று நினைத்துக் கொள்வது தவறு என்றும், அது காலனிய காலகட்டத்தில் இருந்து தொடர்கிறது என்று எழுதினேன். அதற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், கிழக்கிந்திய/ மேற்கிந்தியக் கம்பனிகளை உதாரணம் காட்டினேன்.

அதற்குப் பதிலளித்த ரகுமான் ஜான் பின்வருமாறு எழுதி உள்ளார்: //பேரரசுகளை குறிப்பிடுவதற்கு ஏகாதிபத்தியம் எனும் பதம் பொதுப்புத்தியில் பலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஏன் தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள ஏகாதிபத்தியம் என்றுகூட குறிப்பிட்ட காலம் வரையில் பேசி வந்துள்ளார்கள் அப்போது இவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்தியதை கடுமையாக கேலி செய்தவர்கள் இதே இடதுசாரிகள்தான். ஆனால் வரலாற்று முரண்நகை என்னவென்றால் கலையரசனும் அதே இடத்தில் வந்து நிற்பதுதான். ஆனால் இங்குள்ள பிரச்சனை என்னவென்றால், கோட்பாட்டுரீதியாக அது எவ்வாறு வரையறுக்கப்பட்டது என்பதுதான்//

"கோட்பாடு" என்று பொதுவாக ஒன்றும் இல்லை. அது ஒவ்வொருவருடைய அரசியல் நிலைப்பாடு சார்ந்து மாறுபடுகிறது. ஏகாதிபத்தியம் குறித்த மார்க்சிய கோட்பாட்டுக்கும், லிபரல் கோட்பாட்டுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. மார்க்சியம் சர்வதேச மூலதன திரட்சியை கவனத்தில் எடுக்கிறது. அந்தக் கோட்பாட்டை புறக்கணிக்கும் லிபரலிசம், பிற நாடுகள் மீதான ஆக்கிரமிப்புகளை மட்டும் கவனத்தில் எடுக்கிறது.

இரண்டுமே சந்தைகளின் விரிவாக்கம் குறித்து பேசுகின்றன. ஆனால், லிபரல் ஏகாதிபத்திய கோட்பாடானது, ஏகாதிபத்தியத்தால் காலனிப் படுத்தப் பட்ட மக்களுக்கும் நன்மை உண்டாகிறது என்று வாதிடுகின்றது. அதற்கு மாறாக, மார்க்சிய ஏகாதிபத்திய கோட்பாடு வளங்களின் சுரண்டல் காரணமாக காலனிப் படுத்தப் பட்ட மக்கள் வறுமைக்குள் தள்ளப் பட்டதை கவனிக்கிறது. அதற்குக் காரணம் காலனிகளில் சுரண்டி சேர்க்கப் பட்ட மூலதனம் காலனியாதிக்க அரசின் தாயகத்திற்கு கொண்டு செல்லப் படுவது தான் என்று வாதிடுகிறது.

அந்த வகையில் கிழக்கிந்திய/மேற்கிந்திய கம்பனிகளை ஏகாதிபத்தியம் என்று அழைப்பதில் தவறில்லை. அவை இன்றைய பன்னாட்டு கார்ப்பரேட் கம்பனிகளின் முன்னோடிகள் எனலாம். அன்று அந்தக் கம்பனிகள் உலகம் முழுவதும் வைத்திருந்த காலனிகளை சுரண்டி கிடைத்த இலாபப் பணம் கம்பனி பங்குதாரர்களிடையே பங்கிடப் பட்டது. இதைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வறட்டுத்தனமான வாதம். நாம் மார்க்ஸ் எழுதியவற்றை உள்வாங்கிக் கொண்டு உலக நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியம் பற்றிய லிபரலிசக் கோட்பாடு, ஜான் மாஸ்டரால் "பொதுப் புத்தி" என்று புரிந்து கொள்ளப் படுகின்றது. அதற்கு உதாரணமாக, "தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள ஏகாதிபத்தியம் என்று குறிப்பிட்டனர்" என்கிறார். மன்னிக்கவும், அவர்கள் "தமிழ் அரசியல்வாதிகள்" அல்ல, லிபரலிச கோட்பாட்டை பின்பற்றும் தமிழ் (தேசிய) வலதுசாரிகள். அவர்களுக்கு சிங்கள- தமிழ் இன முரண்பாட்டுக்கு அப்பால் உலகில் வேறெந்த விடயமும் தெரியாது. அவற்றில் அக்கறை இல்லை என்று கூறலாம்.

இதே மாதிரி, காஷ்மீர் அல்லது அசாம் தேசியவாதிகள் இந்திய ஏகாதிபத்தியம் பற்றி குறிப்பிடுவார்கள். உக்ரைனிய தேசியவாதிகள் ரஷ்ய ஏகாதிபத்தியம் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். //பேரரசுகளை குறிப்பிடுவதற்கு ஏகாதிபத்தியம் எனும் பதம் பொதுப்புத்தியில் பலகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.// என்று ஜான் மாஸ்டர் கூறுகிறார். இங்கே அவர் தமிழ்த்தேசியவாதிகளையும் சேர்த்துத் தான் பொதுப் புத்தியில் பேசுவதாக சாடுகிறார். மன்னிக்கவும், தேசியவாதம் எப்போதும் குறுகிய மனப்பான்மை கொண்டது. அது தனது இனம் சார்ந்து மட்டுமே சிந்திக்கிறது.

அந்த அடிப்படையில், தமிழ் வலதுசாரிகளின் குறுந் தேசியவாதக் கோட்பாட்டின் படி, "தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பு தான் ஏகாதிபத்தியம்" என்று புரிந்து கொள்கிறார்கள். தமிழ் வலதுசாரிகளால், பெரும்பாலான அரசியல் கலைச் சொற்கள் இவ்வாறு மாறுபட்ட அர்த்தத்தில் புரிந்து கொள்ளப் படுவதற்கு பல உதாரணங்களை காட்டலாம். உதாரணத்திற்கு வர்க்கம் என்ற சொல் முற்றிலும் பிழையான அர்த்தத்துடன் பயன்படுத்தப் படுகின்றது. தமிழ்த்தேசியவாதிகள் சிங்களவர்களை ஒடுக்கும் வர்க்கம் என்றும், தமிழர்களை ஒடுக்கப்படும் வர்க்கம் என்றும் சொல்வார்கள். அதே மாதிரி, சுயநிர்ணயம் என்றால் அது தனிநாடு மட்டுமே என்று புரிந்து கொள்வார்கள். இது தமிழ்த் தேசிய அரசியலின் கோட்பாடு பற்றிய விளக்கம் இன்மையை எடுத்துக் காட்டுகின்றது. குறிப்பாக தமிழ் வலதுசாரிகள் எதையும் ஆழமாக பார்ப்பதில்லை.

ரகுமான் ஜான்: //ஐரோப்பாவில் தோன்றிய முதலாளித்தவமானது, 1870 வரையில் சுதந்திரமான போட்டியை அடிப்படையாகக்கொண்ட முறைமையாக இருந்தது. இதன் பின்பே முதலாளித்துவமானது ஏகபோகமாக மாறி ஏகாதிபத்தியமாகிறது. கலையரசன் கூறுவதுபோல ஏகாதிபத்தியம் என்பது பழையது என்றால் மார்க்சின் மூலதனம் நூலில் ஏகாதிபத்தியம் பற்றிய குறிப்புகள் நிறைந்து இருந்திருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம்.//

ஐரோப்பாவில் தோன்றிய முதலாளித்துவம் ஆரம்பத்தில் சுதந்திரமான போட்டியை கொண்டிருந்ததையும், பின்னர் ஏகபோகமாக மாறியதையும் நான் மறுக்கவில்லை. அதற்காக, ஏகபோக முதலாளித்துவம் தான் ஏகாதிபத்தியமாக மாறுகிறது என்பது ஒரு மேம்போக்கான வாதம். காலனிய சுரண்டல் ஏகபோக முதலாளித்துவ வளர்ச்சிக்கு காரணமாக அமைந்திருந்ததை லெனின் தனது ஏகாதிபத்தியம் பற்றிய நூலில் குறிப்பிடுகிறார். //காலனிய கொள்கையில் இருந்து ஏகபோகம் வளர்ந்தது. காலனிய கொள்கையின் "பழைய" நோக்கங்களுடன், நிதி மூலதனமானது இயற்கை வளங்களுக்கான போட்டியை சேர்த்துக் கொண்டது.// - லெனின்

"ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" எனும் நூலில் லெனின் பழைய எகாதிபத்தியத்திற்கும் (ஜான் மாஸ்டர் இதைத் தான் "பொதுப்புத்தி" என்றார்) புதிய ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை சில உதராணங்கள் மூலம் விளக்குகிறார். போர்த்துக்கல் ஸ்பெயினுடன் போரிட்டு தனி நாடான பின்னர் போர்த்துக்கல்லின் காலனிகளும் பிரித்தானியாவால் பாதுகாக்கப் பட்டன. அதற்குக் காரணம், ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியன பிரித்தானியாவின் எதிரி நாடுகள் என்பதே. பெரிய நாடுகளுக்கும், சிறிய நாடுகளுக்கும் இடையிலான இத்தகைய உறவு எப்போதும் இருந்து வந்துள்ளது. ஆனால், முதலாளித்துவ ஏகாதிபத்திய காலகட்டத்தில் இது பொதுவான அமைப்பு வடிவம் பெறுகிறது. அவர்கள் உலகத்தை தமக்குள் பங்கிடுவதன் மூலம் நிதி மூலதன சங்கிலியில் பிணைக்கின்றனர்.

ரகுமான் ஜான்: //மூலதனத்தின் மூன்று அத்தியாயங்களினதும் Index ஐ பரிசீலித்தால் அவற்றில் Imperialism என்ற வார்த்தையே காணப்படவில்லை என்பது தெரியவரும்.// கார்ல் மார்க்ஸ் மூலதனம் என்ற ஒரு புத்தகம் மட்டும் தானா எழுதினார்? ஜான் மாஸ்டர் அந்த நூலை வாசிக்காமல் அதன் "Index ஐ மட்டும் பரிசீலித்து" விட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்!

ஆங்கில மொழியில் ஏகாதிபத்தியத்தை குறிக்கும் "இம்பீரியலிசம்" ( Imperialism) என்பது உண்மையில் ஒரு பிரெஞ்சு சொல். 1852- 1870 வரையிலான நெப்போலியனின் பிரெஞ்சு சாம்ராஜ்யத்தில் இருந்து அந்தச் சொல் பயன்பாட்டில் வந்தது. அன்றைய காலத்தில் அதைப் பலர் நெப்போலியனின் பெயரில் "போனபார்ட்டிட்சம்" என்றும் குறிப்பிட்டு வந்தனர். இம்பீரியலிசம், போனபார்ட்டிசம் இரண்டு சொற்களும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப் பட்டன. "லூயிஸ் போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமியர்" என்ற நூலில் மார்க்ஸ் இவ்விரண்டு சொற்களையும் பயன்படுத்தி உள்ளார்.

மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் ஏகாதிபத்தியம் பற்றி எதுவும் எழுதவில்லை என்பது உண்மை தான். அதே நேரம், பிரிட்டனின் இந்தியா காலனி மீதான சுரண்டல் பற்றியும், அங்கிருந்து உபரிமதிப்பு ஏற்றுமதியாவது பற்றியும் எழுதியுள்ளார். மார்க்ஸ் எழுதிய நூல்களில் மிகவும் பிரபலமான "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும்" ஏகாதிபத்திய நடைமுறை பற்றிய குறிப்புகள் உள்ளன. "நகரமயமாக்கப் பட்ட மூலதனம் உலகம் முழுவதும் சந்தைகளை தேடுகிறது. அதற்காக இவ்வளவு காலமும் இருந்த சமுதாயங்களின் "சீன மதில்கள்" உடைக்கப் படுகின்றன." என்று மார்க்ஸ் எழுதினார். அதாவது, ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் சந்தைகளை தேடுகின்றது எனும் விடயம் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே பேசப் பட்டு வந்துள்ளது.

ஜான் மாஸ்டர் ஏகாதிபத்தியம் என்ற தோற்றப்பாட்டின் வரலாற்றுப் பின்னணி குறித்து ஆராயாமால், அந்தச் சொல் எப்படி வந்தது என்று கேட்டு தலையைப் போட்டு உடைக்கிறார். இந்தக் காலத்தில், ஏகாதிபத்தியம் சொல்லை எதிர்மறையான அர்த்தத்துடன் புரிந்து கொள்கிறோம். ஆனால், எல்லாக் காலங்களிலும் அப்படி இருந்ததில்லை. பிரித்தானியாவை விக்டோரியா மகாராணி ஆண்ட காலத்தில் ஏகாதிபத்தியம் என்பது பெருமைக்குரிய விடயமாக கருதப் பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளும், ஏற்கனவே பிரான்ஸில் இருந்த நெப்போலியனின் ஏகாதிபத்தியத்தை பார்த்துக் கற்றுக் கொண்டவர்கள் தான்.

பிற்காலத்தில் தெற்கு ஆப்பிரிக்காவை காலனிப் படுத்திய சிசில் ரோட்ஸ் "சமூக- ஏகாதிபத்தியம்" என்ற கொள்கையை முன்னெடுத்தார். அதாவது, பிரிட்டிஷ் வெள்ளையின ஏழைகளை ஆப்பிரிக்காவில் குடியேற்றி வளங்களை அபகரிப்பதன் மூலம் பிரித்தானியாவின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்றார். இருபதாம் நூற்றாண்டு, ஸ்பானிஷ் - அமெரிக்க யுத்தத்துடன் தொடங்கியது. அந்தக் காலத்தில், அமெரிக்க நிதி ஆலோசகரும், வங்கியாளருமான சார்ல்ஸ் ஆர்தர், "North American Review" எனும் சஞ்சிகையில், அமெரிக்காவின் வெளிநாட்டு விவகாரம் தொடர்பாக, "ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படைகள்" என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் சந்தைகளை விரிவுபடுத்துவது பற்றியும், மூலதனத்தை ஏற்றுமதி செய்வது பற்றியும் விரிவாக எழுதி இருந்தார்.

உண்மையில், அமெரிக்க, ஐரோப்பிய இடதுசாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் தான், ஏகாதிபத்தியம் என்ற சொல்லிற்கு எதிர்மறையான அர்த்தம் கொடுத்தது. முன்பு ஸ்பெயின் வசமிருந்த பிலிப்பைன்ஸ் அமெரிக்க காலனியாக மாறிய பொழுது, அமெரிக்க இடதுசாரிகள் அதை "கொடூரமான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு சித்தாந்தம்" என்று கூறி கண்டித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி, பிரான்ஸ் தொழிலாளர் கட்சி ஆகியன தத்தமது நாட்டு அரசுக்களின் காலனிய விரிவாக்க கொள்கையை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள். 


கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை கண்டுபிடித்தாரா?

மார்க்சியத்தை பற்றி மட்டுமல்லாது முதலாளித்துவத்தை பற்றிக் கூட தவறாகப் புரிந்து கொண்டுள்ள ஜான் மாஸ்டர், "மார்க்ஸ் தான் முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை கண்டுபிடித்ததாக" திரிபுபடுத்துகிறார்.

அவரது விளக்கம் பின்வருமாறு: // அடம் ஸ்மித் உம், டேவிட் ரெக்கார்டோ உம் அடிப்படையில் முதலாளித்துவத்தை நியாயப்படுத்தியே எழுதினார்கள்.... இந்த வகையில் இந்த இருவரதும் படைப்புகளில் வெளிப்படுவது ‘முதலாளித்துவ சித்தாந்தம்’ ஆகுமேயன்றி, எந்த வகையிலும் ஒரு விஞ்ஞானபூர்வமான - கோட்பாட்டுரீதியான கருத்தல்ல. கார்ல் மார்க்ஸ் தான் முதன் முதலாக ‘உபரி மதிப்பு’ பற்றிய கண்டுபிடிப்பின் மூலமாக முதலாளித்துவம் பற்றிய விஞ்ஞானபூர்வமான, கோட்பாட்டுரீதியான புரிதலை முன்வைக்கிறார்//

அடம் ஸ்மித், ரிக்கார்டோ போன்றோர் முதலாளிதத்துவத்தை நியாயப் படுத்தி எழுதினார்கள்... இருவரது படைப்புகளிலும் வெளிப்படுவது முதலாளித்துவ சித்தாந்தம்" என்ற உண்மையை நான் மறுக்கவில்லை. பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டளவில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தன. அப்போது ஐரோப்பிய அரசுக்களால் முதலாளித்துவம் மட்டுமே அங்கீகரிக்கப் பட்ட பொருளாதாரமாக இருந்தது. அன்று அது முற்போக்கானதாகவும், மனித குலத்திற்கு நன்மை பயப்பதாகவும் கருதப்பட்டது.

அந்தக் காலத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி காரணமாக, முதலாளித்துவமானது "அரசியல் பொருளாதாரம்" என்று அழைக்கப் பட்டது. பின்னர் அதுவே ஒரேயொரு பொருளாதாரமாக இன்று வரை கருதப் பட்டு வருகின்றது. முதலாளித்துவமானது கேள்வி, வழங்கல் எனும் சந்தை விதிகளுக்கு அமைய இயற்கையாக தோன்றிய பொருளாதாரம் ஆகும்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அரசு தலையிட்டு சந்தையை ஒழுங்கமைக்கும் வரையில், முதலாளித்துவம் எப்படி இயங்க வேண்டும் என்ற விதிகளை கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவத்தின் இயற்கையான தோற்றத்தை "காட்டு முதலாளித்துவம்" என்று குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு காட்டுக்குள் சட்டமோ ஒழுங்கோ கிடையாது. யாரும் என்னவும் செய்யலாம். கேட்பதற்கு ஆளில்லை. உதாரணமாக, சோமாலியாவில் குறிப்பிட்ட காலம் அரசு இல்லாமல் இருந்த காலகட்டத்தில் அங்கு காட்டு முதலாளித்துவமே இருந்தது.

பெரும்பாலான உலக நாடுகளில் பொருளியல், வணிகத் துறைகளில் முதலாளித்துவப் பொருளாதாரமே பாடமாக கற்பிக்கப் படுகின்றது. அதில் தவறாமல் அடம் ஸ்மித்தின் கோட்பாடுகள் குறிப்பிடப்படும். சுருக்கமாக சொன்னால், அடம் ஸ்மித் ஒரு முதலாளித்துவ கோட்பாட்டாளராக தான் இன்று வரை அறியப் படுகின்றார். ஆகவே, "அடம் ஸ்மித் தான் முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளை கண்டுபிடித்தார்" என பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டால், அதில் எந்தத் தவறும் இல்லை.

இதில் கார்ல் மார்க்ஸின் பாத்திரம் என்ன? அவர் முதலாளித்துவத்தின் சிறந்த விமர்சகராக இருந்தார். அவர் தனது விமர்சனக் கட்டுரைகளால் முதலாளித்துவத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்தார். அவருக்கு முன்னர், முதலாளித்துவத்தால் விளையும் தீமைகள் பற்றி யாரும் எழுதி இருக்கவில்லை. ஒரு பொருளின் பெறுமதி குறித்து மார்க்ஸ் வேறொரு கோணத்தில் சிந்தித்தார். மனித உழைப்பு தான் ஒரு பொருளின் பெறுமதியை அல்லது விலையை தீர்மானிக்கிறது என்றார். இதை, மார்க்சுக்கு முன்னரும் பின்னரும், எந்தவொரு முதலாளித்துவ பொருளாதார அறிஞரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் பொருளில் மறைந்துள்ள உழைப்பின் பெறுமதியை புறக்கணித்து வந்துள்ளனர். இதைவிட மார்க்ஸ் கண்டுபிடித்த உபரிமதிப்பு கோட்பாடும் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களால் நிராகரிக்கப் பட்டு வந்துள்ளது.

ஆகவே, ஜான் மாஸ்டர் தவறாகக் குறிப்பிடுவது போன்று, மார்க்ஸ் முன்வைத்தது "முதலாளித்துவம் பற்றிய விஞ்ஞானபூர்வமான, கோட்பாட்டுரீதியான புரிதல்" அல்ல. அது முதலாளித்துவத்தால் உண்டாகும் நன்மைகள், தீமைகள் பற்றிய விமர்சனம். அவருக்கு முந்திய (முதலாளித்துவ) பொருளாதார அறிஞர்கள் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த மனித உழைப்பின் பெறுமதி பற்றிய விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டு விளக்கங்களை மார்க்ஸ் கண்டுபிடித்து எழுதினார் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். 


தேசியவாதம் எப்போதும் முற்போக்கானதா?


முன்னொருகாலத்தில் இடதுசாரி தமிழ்த்தேசியவாதியாக இருந்த ஜான் மாஸ்டர் (ரகுமான் ஜான்), பின்னர் ஒரு வலதுசாரி தமிழ்த்தேசியவாதியாக மாறினார். அதிலிருந்தே என் மீதான எதிர்வினையை வைக்கிறார். அதில் அவர் தேசியவாதம் என்ற அரசியல் கொள்கையையும், சுயநிர்ணயம் என்ற அரசமைப்புச் சட்டத்தையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக் கொள்கிறார். இது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ரகுமான் ஜான்: //தேசியவாதம் பற்றி அடுத்த குழறுபடியை கலையரசன் மேற்கொள்கிறார். அதாவது, ஒரு ஒடுக்கப்பட்ட தேசத்தின் சுயநிர்ணய உரிமையை, அதன் விடுதலைப் போராட்டத்தை அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தியின் பண்பை கொண்டே ஒருவர் அந்த போராட்டத்தை ஆதரிப்பதா, இல்லையா என்ற தீர்மானிக்லாமாம்..... பலஸ்தீன போராட்டத்தின் தலைமை PFLP ஆக இருந்தால் ஆதரிப்பாராம். ஹமாஸ் தலைமை ஏற்றால் ஆதரிக்க முடியாதாம்.//

இது முழுக்க முழுக்க திரிபுபடுத்தப் பட்ட வாதம். கனடாவில் நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் ஜான் மாஸ்டர் தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். //பால‌ஸ்தீன‌ம், குர்திஸ்தான், காஷ்மீரை ஆத‌ரிக்கும் த‌மிழ் இட‌துசாரிக‌ள் ஈழ‌ம் என்றால் ம‌ட்டும் இட‌றுகிறார்க‌ள்...//

அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்தேன்: //இது த‌மிழ் வ‌ல‌துசாரிக‌ளால் விஷமத்தனமாக ப‌ர‌ப்புரை செய்ய‌ப்ப‌டும், உண்மைக்கு முர‌ணான‌, திரிபுப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ வாத‌ம்.

இட‌துசாரிக‌ள் எங்காவ‌து வ‌ல‌துசாரிக‌ளை ஆத‌ரித்தால் ம‌ட்டுமே அது த‌வ‌றாகும். அப்ப‌டி ந‌ட‌ந்திருந்தால் நிரூபிக்க‌ட்டும். உதார‌ண‌த்திற்கு பால‌ஸ்தீன‌ இட‌துசாரி இய‌க்க‌மான‌ PLFP இருக்கையில், த‌மிழ் இட‌துசாரிக‌ள் அதை விட்டு விட்டு வ‌ல‌துசாரி இய‌க்க‌மான‌ ஹமாசை ஆத‌ரித்தாக‌ இந்த‌ அறிவுஜீவியால் நிரூபிக்க‌ முடியுமா?

அது தான் போக‌ட்டும். ஈழ‌ப் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ த‌மிழ் இட‌துசாரிக‌ள் ஏராள‌ம் இருந்தார்க‌ளே? அது இந்த‌ அறிஞ‌ருக்கு தெரியாதா? இவ‌ரே அப்ப‌டியான‌ வ‌ர‌லாற்றுப் பின்ன‌ணியை கொண்ட‌வ‌ர் தான். ஏனோ அதை வ‌ச‌தியாக‌ ம‌ற‌ந்து விட்டார்.//

எனது பதிலில் குறிப்பிட்ட " ஈழ‌ப் போராட்ட‌த்தில் ஈடுப‌ட்ட‌ த‌மிழ் இட‌துசாரிக‌ள் ஏராள‌ம் இருந்தார்க‌ளே? இவ‌ரே அப்ப‌டியான‌ வ‌ர‌லாற்றுப் பின்ன‌ணியை கொண்ட‌வ‌ர் தான்." என்ற வாதத்தை மிகக் கவனமாக தவிர்த்திருக்கிறார்.அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்து வீசி விட்டு, மிகுதிப் பகுதியை திரித்து அவதூறு செய்கிறார்.

"ஓரினப் பறவைகள் ஒன்றாகப் பறக்கும்" என்பது ஒரு பழமொழி மட்டுமல்ல, உலக வழமையும் அப்படித் தான் உள்ளது. ஒரு நாட்டின் இடதுசாரிகள் பிற உலக நாடுகளில் இருக்கும் இடதுசாரி அமைப்புகளை ஆதரிப்பார்கள். அதே மாதிரித் தான் வலதுசாரிகளும் நடந்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழ் வலதுசாரிகளின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசின் பாரபட்சமான நிலைப்பாட்டை குறிப்பிடலாம்.

தெற்கு சூடான் சுதந்திரத் தனிநாடான நேரம் அதை விழுந்து விழுந்து ஆதரித்தார்கள். ஆனால், அதே காலகட்டத்தில் தான் அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகியனவும் சுதந்திரத் தனிநாடுகளாக அறிவித்துக் கொண்டன. ஆனால், அவர்கள் அவற்றை ஆதரிக்கவில்லை! தெற்கு சூடானை ஆதரித்த நாடுகடந்த தமிழீழ அரசு, அப்காசியா, தெற்கு ஒசேத்தியா விவகாரத்தில் கள்ள மௌனம் சாதித்தது. அதற்கு ஒரேயொரு காரணம் மட்டுமே இருந்தது. தெற்கு சூடானின் எண்ணை வளம் காரணமாக அமெரிக்காவின் அல்லது மேற்குலகின் ஆதரவுடன் தனிநாடாகியது. மேற்குலக ஆதரவு அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசு அதை முன்மொழிய வேண்டாமா?

இது எப்போதும் நடப்பது தான். மேற்குலக தலையீட்டால் சுதந்திரம் அடைந்த கொசோவோ, கிழக்கு தீமோர் ஆகியவற்றையும் தமிழ் வலதுசாரிகள் ஆதரித்தார்கள். ஆனால் நீண்ட காலமாக விடுதலை கோரி ஆயுதப்போராட்டம் நடத்தும் பாஸ்க், கோர்சிகா, வட அயர்லாந்து ஆதரவு பற்றிக் கேட்டால் நழுவி ஓடுவார்கள். அதிகம் பேசுவானேன். கனடாவில் கியூபெக் மாநிலம் பிரிந்து தனிநாடாவதற்காக நடந்த பொது வாக்கெடுப்பில், அங்கு வாழ்ந்த வாக்குரிமை பெற்ற தமிழர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆமாம், தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் கியூபெக் விடுதலையை எதிர்த்தார்கள்! இதற்குக் காரணம் மேற்கத்திய எஜமான விசுவாசம் அன்றி வேறென்ன?

சொன்னால் வெட்கக் கேடு. ஒரு காலத்தில் சிரியாவில் இஸ்லாமிய தேசம் அமைத்த ஐ.எஸ். இயக்கத்தையும் தமிழ் வலதுசாரிகள் ஆதரித்தார்கள்! ஆரம்ப காலகட்டத்தில் அதற்கு அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் தாராளமாக உதவின. அப்போது ஐ.எஸ். இயக்கத்தினர் விடுதலைப் போராளிகள் என்று அழைக்கப் பட்டனர். குறிப்பிட்ட காலத்தின் பின்னர், அவர்களது கொடூரச் செயல்கள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்ற பின்னர் தான் பயங்கரவாதிகள் என அழைக்கப் பட்டனர்.

ஜான் மாஸ்டரின் வாதப்படி, சிரியாவிலும், ஈராக்கிலும் உருவான ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம் அரேபியரின் தாயகமான இஸ்லாமிய தேசத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கக் கூடாதா என்றும் வாதாடலாம். தாராளமாக. சிரியாவிலும், ஈராக்கிலும் ஷியா முஸ்லிம் சமூகம் ஒடுக்கும் இனமாகவும், சன்னி முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படும் இனமாகவும் உள்ளது. சன்னி முஸ்லிம் அரேபியரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களுக்கான இஸ்லாமிய தேசம் ஒன்றுக்காக போராடும் ஐ.எஸ். தலைமையை ஜான் மாஸ்டர் தாராளமாக ஆதரிக்கலாம்.

//குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் தலைமை யாரென்பதை தீர்மானிப்பது அந்த சமூகமேயன்றி வேறு யாருமல்லர். இது அக்கள் மக்கள்திரளின் அந்நியப்படுத்த முடியாத உரிமையாகும்.// - ரகுமான் ஜான்

ஆமாம், யார் இல்லையென்றார்கள்? சிரியாவில் உருவான இஸ்லாமிய தேசத்திற்கு அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் திரளின் ஆதரவு இருந்தது. அதாவது ஒடுக்கப்பட்ட சன்னி முஸ்லிம் அரேபிய சமூகம் தனது தலைமையை தீர்மானித்து இருந்தது. அது அவர்களது அந்நியப்படுத்த முடியாத உரிமை தானே?

ரகுமான் ஜான்: //பலஸ்தீன மக்கள் மிகவும் மோசமாக ஒடுக்கப்பட்டட ஒரு தேசம் என்ற வகையில் அவர்களை ஆதரிப்பது உலகெங்கும் உள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகளதும் கடமையாகம். அந்த வகையில்தான் இன்று உலகெங்கும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் ஆதரிக்கின்றனர்//

ஜான் மாஸ்டர் ஒரு தமிழ்த்தேசியவாதி என்பதால் அவரது பார்வையில் பாலஸ்தீனப் பிரச்சினை ஒரு தேசியவாதப் பிரச்சினை. அதனால் அவர் "ஒடுக்கப்பட்ட தேசம்" என்று குறிப்பிடுகிறார். அதே நேரம் ஒரு இஸ்லாமிய மதவாதியின் பார்வையில் இது ஒரு இஸ்லாமிய மதப் பிரச்சினை. அவர் இதை "ஒடுக்கப்பட்ட மதம்" என்று கூறுவார். நீங்கள் எந்த நிறக் கண்ணாடி அணிகிறீர்கள் என்பதைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடும்.

உண்மையில், பாலஸ்தீன விவகாரம் ஒரு தனித்துவமான சர்வதேச பிரச்சினை. அதனை உலகின் பிற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது. மேற்கத்திய காலனியாதிக்கத்தின் கருவியாகவும், மேற்கத்திய நலன்களை பாதுகாக்கும் மதிலாகவும் இஸ்ரேல் உள்ளது. ஐ.நா. சபையும் யூதர்கள், அரேபியர்களுக்கு தனித்தனி சுயாட்சிப் பிரதேசங்களை கொண்ட தீர்வை பிரேரித்த போதிலும், அதை நடைமுறைப் படுத்த தவறி விட்டது. பாலஸ்தீன அரேபியரின் போராட்டம் மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களுக்கும் எதிரானதே. அந்த வகையில் உலகெங்கும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதும் புரிந்து கொள்ளத் தக்கதே. பாலஸ்தீனம் விடுதலையானால் அது மேற்கத்திய காலனியாதிக்கத்தின் முடிவாகவும் கருதப்படும்.

ரகுமான் ஜான்: //இவரது நிபந்தனையின்படி பார்த்தால் உலகிலுள்ள எந்தவொரு தேசத்தின் விடுதலையையும் ஆதரிக்காமல் இருப்பதற்கு பல சாக்குபோக்குகளை நாம் கண்டறியலாம். பலஸ்தீனம் மட்டுமல்ல, கட்டலான், ஸகொட்லாணட், கஷ்மீர், குர்திஷ் … போன்ற எந்தவொரு தேசிய விடுதலை போராட்டத்திலும் நாம் இது போன்ற குறைபாடுகளை நாம் கண்டுபிடிக்க முடியும்.//

ஐயா, உலகம் முழுவதும் அப்படித் தான். நீங்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. உங்களால் இஸ்லாமிய தேசத்தின் விடுதலையை ஆதரிக்க முடியுமா? சரி, அது மதப் பிரச்சினை என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள். நான் முன்னர் குறிப்பிட்ட அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகியன தேசிய இனப் பிரச்சினைகள் தானே? அவற்றை ஏன் ஆதரிக்கவில்லை என்று தமிழ் வலதுசாரிகளை பார்த்து கேட்டால் ஏதாவது குறைபாடுகளை கண்டுபிடித்துக் கூறுவார்கள். எல்லோரும் எல்லாவற்றையும் ஆதரிப்பதில்லை. அதை நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை.

ரகுமான் ஜான்: //இவை மாத்திரமன்றி கடந்த காலத்தில் பல்வேறு முற்போக்கு, புரட்சிகர சக்திகளினால் ஆதரிக்கப்பட்டு, வெற்றி பெற்ற பல சுதந்திர போராட்டங்கள் தொடர்பான ஆதரவும் கேள்விக்குள்ளாகும். ஜேர்மனி, இத்தாலியின் இணைப்பு, அயர்லாந்து விடுதலை போராட்டம், இந்திய சுதந்திர போராட்டம் உட்பட, உலகலாவியரீதியில் பல்வேறு மக்கள் தரப்பினராலும், முற்போக்கு புரட்சிகர சக்திகளினாலும் ஆதரிக்கப்பட்ட பல்வேறு தேசிய இயக்கங்கள் தொடர்பாக ஆதரவு நிலைப்பாட்டை இவர் நிராகரிப்பதில் போய் முடியும்.//

உலகில் யாரும் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதில்லை. இது தொடர்பாக கடும் வாதப் பிரதிவாதங்கள் நடப்பதுண்டு. உதாரணத்திற்கு, போலந்து சுதந்திரம் தொடர்பான பிரச்சினையில் லெனினுக்கும், ரோசா லக்சம்பெர்க்கிற்கும் இடையில் நடந்த விவாதங்களை குறிப்பிடலாம். ரோசா லக்சம்பேர்க் ஒரு போலிஷ் இனத்தவராக இருந்த போதிலும், பிற்போக்கான தேசியவாத தலைமையின் கீழ் போலந்து சுதந்திரம் பெறுவதை எதிர்த்தார். அதற்கு மாறாக, சுதந்திர போலந்தில் தேசியவாத பிற்போக்காளர்கள் அரசமைப்பது பற்றி லெனின் கவலையடையவில்லை. அதே நேரம், போலிஷ் தேசியவாதிகள் யூத சிறுபான்மையினரை ஒடுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

ஆகவே, போலந்து சுதந்திரம் தொடர்பாக லெனின் வழங்கியதும் நிபந்தனையுடனான ஆதரவு தான். அப்போதும் ஸ்டாலின் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். போலிஷ் தேசியவாதிகள் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளாக இருப்பது மட்டுமல்லாது, பாட்டாளிவர்க்க புரட்சிக்கும் எதிரானவர்கள் என்று எச்சரித்தார். அன்று ஸ்டாலின் எச்சரித்த மாதிரியே நடந்தது. மேற்கு ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்க புரட்சியை கொண்டு வரும் நோக்குடன் லெனின் அனுப்பிய செம்படை, போலந்து தேசிய இராணுவத்தால் கடுமையாக எதிர்த்துப் போரிட்டு தோற்கடிக்கப் பட்டது.

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தை கார்ல் மார்க்ஸ் ஆதரித்தார். அதுவும் நிபந்தனையற்ற ஆதரவு அல்ல. அன்று மார்க்ஸ் கூறிய விளக்கத்தை பலர் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அயர்லாந்தில் நிலவுடமையாளர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களாக இருந்தனர். ஐரிஷ் மக்கள் விவசாயக் கூலிகளாக, பாட்டாளி வர்க்கமாக இருந்தனர். ஆரம்ப காலங்களில் ஐரிஷ் விடுதலைப் போராட்டம் சோஷலிசவாதிகளால் முன்னெடுக்கப் பட்டது. அயர்லாந்தின் விடுதலை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பலவீனப் படுத்தும் என்று மார்க்ஸ் நம்பினார். அதே மாதிரி, இந்தியா போன்ற காலனிகளின் விடுதலையை ஆதரிப்பதன் மூலம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்கம் முடிவுக்கு வரும் என்று லெனின் நம்பினார்.

இங்கே ஜான் மாஸ்டர் குறிப்பிடும், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஒன்றிணைவு எந்த வகையிலும் முற்போக்கான தேசியவாதம் அல்ல. அவை அப்போதே பேரினவாத சிந்தனையுடன் முன்னெடுக்கப் பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த பிரஷிய ராஜ்ஜியம், மேற்கு ஜெர்மன் பிரதேசங்களை சேர்த்துக் கொண்டு அகண்ட ஜெர்மனி ஆகியது. (அன்றிருந்த ஜெர்மனி ரஷ்ய எல்லையில் இருந்து பிரெஞ்சு எல்லை வரை விரிந்திருந்தது.) இதுவே பிற்காலத்தில் ஹிட்லரின் நாஸிச கொள்கைக்கு அடிப்படையானது.

கரிபால்டி தலைமையிலான இத்தாலியின் ஒன்றிணைவு, இத்தாலி பேரினவாத வெறியுடன் அங்கிருந்த பல்லின சமூகங்களை அடக்கி ஒடுக்கியது. அதற்கு முன்னர் ரோமை அண்டிய பகுதிகளை தவிர, ஒவ்வொரு மாகாணமும் தனக்கென தனித்துவமான மொழியை கொண்டிருந்தது. இன்றைக்கும் வெனிஸ், சார்டினியா, சிசிலி ஆகிய பிரதேசங்களில் தனியான மொழிகள் பேசப் படுகின்றன. தெற்கில் கிரேக்கர்களும், வடக்கில் ஜெர்மனியர்களும் சிறுபான்மையினர்.

சுருக்கமாக சொன்னால், இத்தாலி பேரினவாத அரசு அங்கிருந்த சிறுபான்மையின மொழிகள் பலவற்றை ஒடுக்கி அழித்து விட்டது. எஞ்சியவர்கள் தமது மொழியை புறக்கணித்து விட்டு, இத்தாலி மொழியை தாய்மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவலம். அத்தகைய ஒரு கொடூரமான பேரினவாத இத்தாலியை ஆதரிக்க வேண்டும் என்று ஜான் மாஸ்டர் எதிர்பார்க்கிறார். இதைத் தான் அவர் "மக்களது சுயநிர்ணய உரிமை" என்கிறார். ஆமாம், பேரினவாத வெறியுடன் ஒடுக்கும் பெருந்தேசிய இனத்திற்கும் சுயநிர்ணய உரிமை இருக்கிறது தான். அவற்றை ஜான் மாஸ்டர் போன்றவர்கள் ஆதரிக்கலாம். தாராளமாக.

தேசியவாதம் எப்போதும் முற்போக்கானது அல்ல. அது பல இடங்களில் தனது பிற்போக்குத்தனங்களையும் காட்டியுள்ளது. ஒரு நாட்டில் தோன்றும் தேசியவாதம் குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் பேரினவாதமாக உருமாறுவதையும் கண்கூடாகக் காணலாம். அது மட்டுமல்லாது தேசியவாதம் உலகம் முழுவதும் போர்களுக்கும், பேரழிவுகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. சிலநேரம் கிட்டத்தட்ட ஒரே மொழி பேசுவோரும் (உதாரணம்: செர்பியர், குரோவாசியர்), தனித்தனி தேசியங்களாக பிரிந்து போரிட்டு மாண்டு போயிருக்கிறார்கள்.


யார் மார்க்சியவாதி? 


ரகுமான் ஜான்: // கிராம்சி, அல்தூசர்… பற்றி பேசும்போது யூரோ கொம்யூனிச பயப்பிராந்தி எழுப்பும் கலையரசன், மூன்றாம் உலகைச் சேர்ந்த முக்கியமான கோட்பாட்டாளர்களான பெனான், அமில்கார் கப்ரால், சமீர் அமின், அந்தர் குந்தர் பிராங், சேகுவேரா போன்றவர்களையும் நிராகரிப்பது ஏன்//

ஒரு நீதிக்கதையில் வரும் பிராமணன் பரிசலில் ஆற்றைக் கடக்கும் போது ஒடக்காரனிடம் கேட்டானாம் "நீ வேதங்கள், இதிகாசங்கள் படித்திருக்கிறாயா?" அதே மாதிரி ஜான் மாஸ்டர் என்னிடம் கேட்கிறார். "அல்தூசர், கிராம்சி, பேனான், அமில் கப்ரால் எழுதிய கோட்பாட்டு நூல்களை படித்திருக்கிறாயா?" கனடாவில் நடந்த கூட்டத்தில் "ஆங்கிலத்தில் இருபதுக்கும் மேலான மார்க்சிய சஞ்சிகைகள் வெளிவருகின்றன... அவற்றை எல்லாம் படித்தீர்களா?" என்று கேட்டிருந்தார்.

இதற்குப் பெயர் அறிவுஜீவித்தனம். மேலைத்தேய கதிரை மார்க்சிஸ்டுகள் பலரிடம் இத்தகைய போக்கு உள்ளது. கல்லூரியில் பேராசிரியர் வேலை அல்லது வேறெதாவது உத்தியோகம் பார்ப்பவர்கள், வீட்டுக்கு வந்து கட்டுக்கட்டான புத்தகங்களை படித்து விட்டு மேதைமைத்தனத்துடன் நடந்து கொள்வார்கள். அவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அவர்களும் வழமையான முதலாளித்துவ அறிவுஜீவிகள் போன்று தான் நடந்து கொள்வார்கள்.

நான் யாரையும் நிராகரிக்கவில்லை. கிராம்சி முதல் சேகுவேரா வரை யார் எழுதிய புத்தகத்தையும் யாரும் வாசிக்கலாம். அதில் தவறில்லை. அவற்றை எல்லாம் நானும் வாசித்து இருக்கிறேன். அதைத் தவிர, ஜான் மாஸ்டர் இங்கே குறிப்பிடாமல் விட்ட, பகுனின், புருதோன், போன்ற அனார்க்கிச கோட்பாட்டாளர்களின் நூல்களையும் வாசித்து இருக்கிறேன். இங்கே கவனத்தில் எடுக்க வேண்டியது வெறும் நூல்களோ, அவற்றை எழுதியவர்களோ அல்ல. அதற்கு மாறாக, பாட்டாளிவர்க்க புரட்சிக்கு, வர்க்கப் போராட்டத்திற்கு யார் சரியான பாதையை காட்டுகிறார்கள் என்பதே முக்கியம். இது ஒரு நடைமுறை சார்ந்த விடயம்.

கிராம்சி, அல்தூசர் போன்றவர்களது எழுத்துக்கள் யூரோ கம்யூனிசத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்த படியால் நிராகரிக்கப் படுவதை மறுக்கவில்லை. அவர்களது நூல்களை வாசிப்பது தவறல்ல. ஆனால், யூரோ கம்யூனிசம் பேசிய ஐரோப்பியக் கட்சிகள், அவற்றை தத்துவார்த்த வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டுள்ளது போன்று, நாமும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தான் தவறென்கிறேன்.

யூரோ கம்யூனிசம் என்றால் என்ன? நாம் முதலில் இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், ஐம்பதுகளில் ஐரோப்பாவில் பனிப்போர் தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தீவிரமான ஸ்டாலினிச எதிர்ப்புப் பிரச்சாரங்கள் நடந்தன. "ஸ்டாலினின் கொடுங்கோன்மை, குலாக் சிறைகள், இலட்சக் கணக்கான கொலைகள்..." இவ்வாறு எதிர்மறையான பிரச்சாரங்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்து வைத்திருந்தனர்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினிசம் அடக்கப் பட்ட காரணத்தால், பல கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்க விடாமல் முடக்கப் பட்டன. அந்த தருணத்தில், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் யூனியனுடனான அனைத்து தொடர்புகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்தன. அவை இரண்டும் சேர்ந்து உருவாக்கிய திருத்தல்வாதக் கோட்பாடு தான் "யூரோ கம்யூனிசம்".

இரண்டாம் உலகப்போர் முடிவில், இத்தாலியின் பெரும் பகுதி கம்யூனிஸ்ட் கெரில்லாக்களால் விடுதலை செய்யப் பட்டது. போர்க்குணாம்சம் கொண்ட கட்சி உறுப்பினர்கள் ஒரு சோஷலிசப் புரட்சிக்கு தயாராக இருந்தனர். இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி சரியாக நடந்து கொண்டிருந்தால், அன்றே இத்தாலி ஒரு சோஷலிச நாடாக வந்திருக்கும். ஆனால், இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிப் பாதையை நிராகரித்தது. அமெரிக்கப் படைகளுடன் ஒத்துழைத்தது. முதலாளித்துவ ஜனநாயகத்தை விரும்பி ஏற்றுக் கொண்டது.

யூரோ கம்யூனிசம் என்பது ஒரு திரிபுவாதக் கொள்கை. வர்க்கப்போராட்டத்தை ஒதுக்கி விட்டு, முதலாளித்துவ அதிகார வர்க்கத்துடன் ஒத்துழைக்கும் அரசியல். முதலாளித்துவ சக்திகளுடனான பாட்டாளிவர்க்க பகை முரண்பாட்டை மறுதலித்து விட்டு, அதனோடு ஒத்தோடும் அரசியலுக்கு என்ன பெயர்? அதை "புலிகளின் மொழியில் சொன்னால் ஒட்டுக்குழு அரசியல்" என்று குறிப்பிட்டு இருந்தேன்.

ரகுமான் ஜான்: //தம் கைவசமுள்ள சில வறட்டுச்சூத்திரங்களில் மூழ்கி, அவற்றிற்கு வெளியில் ஒரு பிரமாண்டமான அறிவுலகமும், அதில் நடைபெறும் தீவிரமான விவாதங்களும் பற்றி அறியாதவர்களாக, தமது வறட்டுச்சூத்திர தூக்கத்தில் (Dogmatic Slumber) சுகம் காண்பவர்களாக உள்ளார்கள். வறட்டுச்சூத்திரத்தில் சிக்கியுள்ள இவர்கள் அதற்கு வௌியில் வர மறுப்பதுதான் காரணமாக இருக்க முடியும் அல்லவா//

இது ஏற்கனவே முதலாளித்துவவாதிகளால் செய்யப்பட்டு வந்த கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம். மேற்குலகம் நீண்ட காலமாகவே ட்ராஸ்கிசம், யூரோ கம்யூனிசம், பின் நவீனத்துவம் போன்ற திரிபுவாத போக்குகளை ஆதரித்து வந்துள்ளது. இத்தகைய திரிபுவாத, திருத்தல்வாதக் கொள்கைகளால் முதலாளித்துவ அதிகார வர்க்கத்திற்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை. இவற்றை விரும்பியவாறு கையாள முடியும். எக்காலத்திலும் வன்முறைப் பாதையை நிராகரிக்கும், மகாத்மா காந்தி போன்ற அஹிம்சாவாதிகளை அரசுகள் அங்கீகரிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அதனால் தான் இதனை "ஒட்டுக்குழு அரசியல்" என்றேன். சரியாகத் தானே சொல்லி இருக்கிறேன்?

அத்துடன், ஜான் மாஸ்டரின் எதிர்வினையில் தொனிக்கும் அறிவுஜீவி மேட்டிமைத்தனத்தை கவனிக்கவும். "ஒரு பிரமாண்டமான அறிவுலகம்", "தீவிரமான விவாதங்கள்", "வறட்டு சூத்திர தூக்கம்".... ஆஹா! சான்றோரின் சபைகளில் நடக்கும் விவாதங்களை புரிந்து கொள்ள முடியாத பாமரர்கள் கூனிக்குறுகி கைகட்டி வாய் பொத்தி நிற்க வேண்டும். நான் பல தடவைகள் ஜான் மாஸ்டரின் அறிவுஜீவி மனப்பான்மையை எதிர்மறையான அர்த்தத்தில் குற்றம் சாட்டி வந்துள்ளேன். அவரோ திரும்பத் திரும்ப நான் சொன்னது சரியென நிரூபித்த வண்ணமே உள்ளார்.

ஐயா, பெரியவரே! மார்க்சியம் என்பது தங்களைப் போன்ற மெத்தப் படித்த அறிவுஜீவிகளின் விளையாட்டுப் பொருள் அல்ல. அது அதிகம் படிக்காத பாட்டாளி வர்க்க மக்களின் விடுதலைக் கோட்பாடு. தொழிற்சாலையில் நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைத்து விட்டு வரும் தொழிலாளிகளிடம், அல்தூசர், கிராம்சி, பெனான், அமில்கார் கப்ரல் எல்லாம் கொடுத்து படிக்க சொல்லிக் கட்டாயப் படுத்த முடியாது. இன்று பல பல்கலைக்கழக பட்டதாரிகளே இந்தப் பெயர்களை கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள்.

எமது பிரதானமான குறிக்கோள் வர்க்கப்போராட்டம். மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான புதிய ஜனநாயகப் பாதையில் பாட்டாளிவர்க்க்கத்தை வழிநடத்த வேண்டும். படிப்பறிவில்லாத பாமர மக்களையும் வர்க்கப் புரட்சிக்கு தயார் படுத்துவதற்கு சில தத்துவார்த்த நூல்கள் இருக்க வேண்டியது அவசியம். அவற்றை நீங்கள் "வறட்டு சூத்திரம்" என்று புறக்கணிக்கலாம். ஆனால், உழைக்கும் மக்கள் அவற்றை தமது தத்துவார்த்த வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

கனடாவில் ஆற்றிய உரையில், மாவோவின் மேற்கோள்கள் என்ற சிறு கைநூலை கிண்டல் அடித்து தங்களது அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தினீர்கள். வயலில் சேற்றுக்குள் நாற்று நடும் விவசாயிகளும், தொழிற்சாலையில் இயந்திரங்களுடன் மாரடிக்கும் தொழிலாளிகளும், உங்கள் அளவிற்கு படிக்கவில்லை என்பது உண்மை தான். அதற்காக அவர்களுக்கு சமூக- அரசியல் அறிவு தெரியக் கூடாது என்பதில்லையே? அவர்கள் அரசியல் கற்றுக் கொள்ளும் உரிமையை மறுப்பதற்கு நீங்கள் யார்?

"மக்களிடம் செல்லுங்கள், மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார் மாவோ. அவர் எழுதிய பல்வேறு கோட்பாட்டு நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட மேற்கோள்கள் கொண்ட சிறு கைநூல், பாட்டாளிவர்க்க கல்வியை நோக்கமாக கொண்டு தயாரிக்கப் பட்டது. பாடசாலை, கல்லூரி மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாயிகளுடன் சேர்ந்து பகல் முழுவதும் வயலில் வேலை செய்தனர். மாலை நேரங்களில் மாவோவின் மேற்கோள்கள் நூலில் இருந்து சிலவற்றை கற்று தெளிவு படுத்திக் கொண்டனர்.

ஜான் மாஸ்டர் என்ற மெத்தப் படித்த அறிவுஜீவி கிண்டல் அடிக்கும் "மாசேதுங் மேற்கோள்கள்" நூலில் அப்படி என்ன எழுதி இருக்கிறது? ஒருவர் மேலோட்டாமாக உள்ளடக்கத்தை பார்த்தாலே புரியும். கம்யூனிஸ்ட் கட்சி ஏன் அவசியம்? வர்க்கப் போராட்டம் என்றால் என்ன? முரண்பாடுகளை கையாள்வது எப்படி? மக்கள் யுத்தம் எப்படி நடத்தப் பட வேண்டும்? இவற்றைத் தவிர மக்களுக்கு தொண்டு செய்தல், படிப்பு, வேலை முறைகள், ஜனநாயகம், கலை, கலாச்சாரம் என்று பல்வேறு விடயங்ளை பற்றி எழுதப் பட்டுள்ளது. ஜான் மாஸ்டர் இவை எதையும் படிக்காமலே "வறட்டு சூத்திரம்" என்று நிராகரித்து விடுகிறார்.

ரகுமான் ஜான்: //கலையரசன் என்னை ஒரு மார்க்சியவாதி இல்லை என்கிறார். ஒட்டுக்குழு மார்க்சியவாதி என்கிறார். சரி, ஒருவர் மார்க்சியவாதியா, இல்லையா என்பதை யார், எந்த அடிப்படையில் தீர்மானிப்பதாம்? இதற்கு ஏதாவது நிறுவனம், அல்லது நபர்கள் உரிமம் பெற்றவர்களா? இந்த அதிகாரத்தை கலையரசனுக்கு கொடுத்தது யார்?//

நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, மார்க்சியம் என்பது ஒரு பாட்டாளிவர்க்க விடுதலைக் கோட்பாடு. அதன் தத்துவார்த்த அடிப்படை வர்க்கம் போராட்டம். தற்காலத்தில் நடைமுறையில் உள்ள முதலாளித்துவ வர்க்க சர்வாதிகார அரசை ஒரு வர்க்கப் புரட்சி மூலம் தூக்கியெறிந்து விட்டு அந்த இடத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை நிறுவுவதை குறிக்கோளாகக் கொண்டது. இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளாத ஒருவர் மார்க்சியவாதியாக இருக்க முடியாது.

ஜான் மாஸ்டரின் எதிர்வினையில் எந்தவொரு இடத்திலாவது வர்க்கப்போராட்டம் பற்றிய சிறு குறிப்பு வருகிறதா? இல்லை. இல்லை. இல்லவே இல்லை. கனடாவில் அவர் நிகழ்த்திய உரையிலும் வர்க்கம் பற்றி எதுவும் பேசவில்லை. இதை ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். சரி, அது போகட்டும். எனக்கான எதிர்வினையிலாவது வர்க்கம், வர்க்கப் போராட்டம் பற்றி பெயருக்கு ஓரிரு வார்த்தைகள் எழுதி இருக்கலாம். அதுவும் இல்லை.

இதுவரையில் ஜான் மாஸ்டர் வர்க்கபோராட்டம் பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம் உள்ளது. அவர் இப்போது ஒரு முழுமையான வலதுசாரி- தேசியவாதி. வலதுசாரிகள் வர்க்கங்களுக்கு இடையிலான பகை முரண்பாட்டை புறக்கணித்து, தேசியத்தின் பெயரில் வர்க்க சமரசத்தை போதிப்பார்கள். குறிப்பாக, முதலாளிகளுடன் முரண்பட மாட்டார்கள். இத்தகைய சந்தர்ப்பவாத ஒட்டுக்குழு அரசியலுக்கு என்ன பெயர் வைக்கலாம்? இதைத் தீர்மானிப்பவர்கள் உழைக்கும் வர்க்க மக்கள். வர்க்கப் போராட்டம் கூர்மையடையும் காலத்தில் தங்கள் பக்கம் நிற்பவர்கள் யார், எதிரிகளின் பக்கம் நிற்பவர்கள் யார் என்பதை வைத்து தீர்மானிப்பார்கள்.

 *******

Sunday, January 29, 2017

ஆசிரியர் யோதிலிங்கத்தின் இடதுசாரிகள் மீதான அவதூறுகளுக்குப் பதில்

ஈழத்தமிழ் சூழலில் வலதுசாரிகள் தம்மை தமிழ்த் தேசிய போர்வையால் மறைத்துக் கொண்டு, காழ்ப்புணர்வுடன் இடதுசாரிகள் மீது அவதூறு பரப்பும் வேலையை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் யோதிலிங்கம் அவர்களில் ஒருவர்.

 அவர் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி உறுப்பினராகவோ, ஆதரவாகவோ இருப்பது அவரது அரசியல் தெரிவு. ஆனால், இடதுசாரிகள் மீதான வன்மம் காரணமாக உண்மைக்குப் புறம்பான கதைகளை கூறுவதன் மூலம் தமிழ் மக்கள் சுரண்டப் படும் கொடுமையை மறைக்கப் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் ஆசிரியர் போன்ற அறிவுஜீவிகளின் தவறான கருத்துக்கள், சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

//ஈழ‌த்து சூழ‌லில் வ‌ல‌துசாரிக‌ள் அயோக்கியர்களாக, பொய்ய‌ர்க‌ளாக‌, புளுக‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். தேர்த‌லில் ம‌க்க‌ளை ஏமாற்றி பாரளும‌ன்ற‌ ப‌த‌விக‌ள் எடுப்ப‌தில் குறியாக‌ இருந்த‌ன‌ர். ஆயுத‌ப் போராட்ட‌ம் தொட‌ங்கிய‌தும் புலிக‌ள் அவ‌ர்க‌ளுக்கு ம‌ர‌ண‌த‌ண்ட‌னை விதித்த‌ன‌ர். பலரை துரோகி என்று போட்டுத் தள்ளினார்கள். அதனால், வ‌ல‌துசாரித் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் அனைவ‌ரும் கொழும்புக்கு சென்று அர‌சுட‌ன் ஒட்டிக் கொண்டார்க‌ள். அவ்வாறு தான் ஒட்டுக் குழு உருவானது. 

ஈழத்து சூழலில் வலதுசாரிகள் சாதிவெறியர்களாக இருந்தனர். அத்துடன் இனவாதிகளாக, மதவாதிகளாக, ஆணாதிக்கவாதிகளாகவும் இருந்தனர். 1940களுக்கு பின்னரான காலத்திலும் அவர்கள் மாறவில்லை. தமிழ்த் தேசிய போராட்டத்தில், தமிழ் மக்கள் இவர்களை மதிப்பிடுவதில் பெரும் தவறுகளை இழைத்தனர்.
 
வ‌ர‌லாறு முக்கிய‌ம் ஆசிரிய‌ரே! // 
இவ்வாறு பேஸ்புக்கில் நான் போட்ட பதிவொன்றுக்கு அவர் எந்த மறுப்பும் கூறவில்லை. அது சரியென்றோ, தவறென்றோ கூறவில்லை. அவரது பதிலில், வலதுசாரிகள் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.

அதற்கு மாறாக, பதில் கூற முடியாமல் வேறு இடத்திற்கு தாவுகிறார். வழமை போல, இடதுசாரிகள் மீது அவதூறு செய்யும் பிரச்சார வேலையை தொடங்கி விடுகிறார்: //இரண்டு வகையான இடதுசாரிகள் இருந்தனர்,பாரம்பரிய இடதுசாரிகள்,விடுதலைஇயக்க இடதுசாரிகள், முதலாம் கூட்டத்தவர் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர். இரண்டாம் வகைக்குள் eprlf, eros ,nlft ,plft என்போர் அடங்கினர். தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின,இவர்களில் பலர் வெறும் கதைகாறர்களாக மட்டும் இருந்தனர்.சிலர் ஒட்டுக்குழுவாகவும் மாறினர். புலிகளை எதிர்ப்பதாகக் கூறி தமிழ்த் தேசியத்திற்கே எதிரிகளாக மாறினர். தேசியசக்திகளிடமிருந்த போராட்ட நேர்மை இவர்களிடம் இருக்கவில்லை.//


இவரது பதில் முழுவதும் வார்த்தை ஜாலங்களால் படிப்பவரின் மனதை மயக்கி தவறான கருத்தை திணிப்பதாக உள்ளது. அதனால், அரிசியில் கல் பொறுக்குவது மாதிரி, ஒவ்வொரு வார்த்தையாக கவனமாக எடுத்து ஆராய வேண்டியுள்ளது.

முதலில் இடதுசாரி என்றால் யார்? ஆசிரியர் யோதிலிங்கம் உண்மையிலேயே தமிழ் மக்களின் (கவனிக்கவும்: மக்களின்) நலன் குறித்து சிந்திப்பவராக இருந்தால், அவரும் ஓர் இடதுசாரியே. அதற்கு மாறாக அவர் முதலாளிகளின் நலன் குறித்து சிந்திப்பவர் என்றால் ஒரு வலதுசாரி. இதில் அவர் எந்தப் பக்கத்தில் நிற்கிறார் என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

(தமிழ்த்) தேசியவாதிகள் என்றால், அவர்கள் வலதுசாரிகளோ, இடதுசாரிகளோ அல்ல என்பது மாதிரி வாதிடுவது பாமரத்தனமானது. (தமிழ்த்) தேசியவாதிகள் என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும், நிச்சயமாக அதற்குள் வலது - இடது பிரிவுகள் இருக்கும். ஓர் அறிவுஜீவி, அதிலும் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் பாமரத்தனமாக பேசுவது ஏற்றுக் கொள்ளப் பட முடியாதது.

நீங்கள் என்னதான் புலிகளை ஒரு வலதுசாரி இயக்கமாக காட்ட நினைத்தாலும், அதற்குள்ளும் ஆரம்பம் முதல் இறுதி வரை இடது - வலது வேற்றுமைகள் இருந்தன. அப்படி இல்லாமல் அது பெரும்பான்மை தமிழர்களின் ஆதரவைப் பெற்ற விடுதலை இயக்கமாக இருக்க முடியாது. வலதுசாரிப் புலிகளும், இடதுசாரிப் புலிகளும் முரண்பட்ட இடங்கள் பலவுண்டு. அவர்களுக்கு இடையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. புலிகள் அமைப்பில் இருந்த பல போராளிகள் இந்த உண்மையை உறுதிப் படுத்தி உள்ளனர்.

"பாரம்பரிய இடதுசாரிகள்" - மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி போன்றவற்றை இவர் அப்படிக் குறிப்பிடுகின்றார். இலங்கையில் சிறிதும் பெரிதுமாக குறைந்தது பத்து இடதுசாரிக் கட்சிகளாவது இருந்தன, தற்போதும் உள்ளன. அவை எல்லாம் சிறிலங்கா அரசை ஆதரித்தன என்று காட்ட முனைவது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது.

மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அரசை ஆதரித்த போதிலும், சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து நின்றது. அதன் வரலாற்றில் ஒரு தடவையாவது அரசை ஆதரித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. மேலும் புலிகளின் முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட புதுவை இரத்தினதுரை, தமிழ்ச்செல்வன் போன்றோர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தொடர்பால் அரசியல்மயப் பட்டவர்கள். இவர்களை விட வேறு சிலரும் புலிகள் அமைப்பில் இருந்தனர்.

அன்டன் பாலசிங்கம் யார் தெரியுமா? நவ சம சமாஜக் கட்சி உறுப்பினராக இருந்தவர். அவர்களது தொழிலாளர் பாதை பத்திரிகையில் எழுதி வந்தவர். அவர் தான் பிற்காலத்தில் புலிகளின் தத்துவ ஆசிரியர் என்றும் தேசப் பிதா என்றும் புகழப் பட்டார். அது சரி, அன்டன் பாலசிங்கத்தின் சமசமாஜக் கட்சி என்ன செய்தது? ஆசிரியர் யோதிலிங்கம் சொல்வது போல "இனவாதிகளுடன் (அரசுடன்) சேர்ந்து கொண்டது."

இலங்கையில் அன்றும் இன்றும் பல சிறிய இடதுசாரிக் கட்சிகள் தோன்றிக் கொண்டிருந்தன. சில இப்போதும் உள்ளன. அவை எல்லாம் அரசை அல்லது இனவாதிகளை ஆதரிக்கின்றன என்பது, குறுகிய மனப்பான்மை கொண்ட சிறுபிள்ளைத்தனமான வாதம். அவற்றில் சில தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கின்றன. விக்கிரமபாகு கருணாரத்தின போன்ற சில சிங்கள இடதுசாரிகள் வெளிப்படையாகவே புலிகளை ஆதரித்தனர். இந்த உண்மைகளை மறைப்பதும், திரிபு படுத்தி அவதூறு செய்வதும் ஓர் ஆசிரியருக்கு அழகல்ல.

//முதலாம் கூட்டத்தவர் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர்.// இது ஒரு பக்கச் சார்பான திரிபுபடுத்தப் பட்ட கருத்து.

அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர், முதலில் இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களை அவதானிக்க வேண்டும். அதை அலசி ஆராய வேண்டும். சாதாரணமான மூன்றந்தர அரசியல்வாதி மாதிரி காழ்ப்புணர்வுப் பிரச்சாரம் செய்யக் கூடாது.

தெற்கில் சிங்களத் தேசியவாதம் பலமான சக்தியாக உருவானது. அது இடதுசாரிகளையும் மிரட்டிப் பணிய வைத்து தனக்குள் உள்வாங்க முயற்சித்தது. இதே நிலைமை தான் வடக்கிலும் நிலவியது. அங்கு பலமான சக்தியாக இருந்த தமிழ்த் தேசியவாதம், இடதுசாரிகளை மிரட்டி தனக்கு கீழே அடிபணிய வைத்தது.

இந்த நிலைப்பாடு சரியென்று, ஆசிரியர் யோதிலிங்கம் வழிமொழிகிறார். அதாவது, தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே "நல்ல இடதுசாரிகள்" என்று நற்சான்றிதழ் வழங்குகிறார். இதையே தான் தெற்கில் சிங்களத் தேசியவாதிகளும் செய்தார்கள்! எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

இனவாதம் என்ற கருத்தியலும், தேசியவாதம் என்ற கருத்தியலும் பல இடங்களில் ஒரே அர்த்தத்துடன் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில் எதிரி இனத்தவரான சிங்களவர்கள் பேசுவதெல்லாம் இனவாதம் தான். அதே மாதிரித் தான் சிங்களத் தேசியவாதிகளும் சிந்திக்கிறார்கள். தமிழர்கள் பேசுவதெல்லாம் இனவாதம் என்கிறார்கள்.

முன்பு யாராவது ஒரு தமிழர், புலிகளுக்கு ஆதரவான நியாயத்தை பேசினாலே இனவாதி என்று முத்திரை குத்தினார்கள். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளும் இனவாதம் என்று ஒதுக்கப் படுவதுண்டு.

இன முரண்பாடுகளால் பிளவுபட்ட ஒரு நாட்டில் இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். அவர்களுக்கு இவர்கள் இனவாதிகளாக தெரிவார்கள். இவர்களுக்கு அவர்கள் இனவாதிகளாக தெரிவார்கள். இதற்குப் பின்னால், இனங்களை பிரித்தாளும் அரசின் சூழ்ச்சி இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஆசிரியர் யோதிலிங்கத்திடம் ஒரு கேள்வி. "பாரம்பரிய இடதுசாரிகள் சிங்கள இனவாதத்திற்குள் மூழ்கினர்." என்று சொல்கிறீர்களே. யார் அந்த இனவாதிகள்? அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா? நான் அவர்கள் தான் வலதுசாரிகள் என்கிறேன். உங்களால் மறுக்க முடியுமா?

சந்தேகம் இருந்தால், நீங்கள் எழுதிய அரசறிவியல் ஓர் அறிமுகம் நூலை வாசித்துப் பாருங்கள். அதிலே தீவிர வலதுசாரிகளான பாசிஸ்டுகள் பற்றி என்ன எழுதி இருக்கிறீர்கள்? //இவர்கள் தீவிர தேசியவாதிகளாகவும், இனவாதிகளாகவும், சோஷலிசத்தை வெறுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.// இது நீங்கள் எழுதியது தான்!

இனவாதிகளான வலதுசாரிகளுக்குள், இடதுசாரிகள் மூழ்கினார்கள் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அவர்கள் வலதுசாரிகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தம்! அதாவது அவர்களை இப்போதும் நீங்கள் இடதுசாரிகள் என்று அழைப்பது அரசியல் அறிவியல் படி தவறாகும். ஏன் அந்தத் தவறை தெரிந்து கொண்டே செய்கிறீர்கள்?

//இரண்டாம் வகைக்குள் eprlf, eros ,nlft ,plft என்போர் அடங்கினர். தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின//

இது ஒரு அப்பட்டமான வரலாற்றுத் திரிபுபடுத்தல் மட்டுமல்ல, அடுத்த அவதூறுக்கான தயார்படுத்தல். ஆசிரியரே, நீங்கள் எண்பதுகள், தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்த இளைய தலைமுறையை சேர்ந்தவர் அல்ல. ஈழப்போர் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலைமைகளை தாங்கள் நேரில் கண்டிருப்பீர்கள். எதற்காக இல்லாததை எல்லாம் திரிக்கிறீர்கள்?

1986 ம் ஆண்டிலிருந்து, புலிகள் தம்மைத் தவிர வேறு அமைப்புகள் இயங்குவதை தடை செய்தனர். டெலோவை அழித்தொழித்த நடவடிக்கையின் பின்னர், மற்றைய இயக்கங்களை பகிரங்க அறிவித்தல் மூலம் தடை செய்தனர். போராளிகளிடம் இருந்த ஆயுதங்களை பறித்துக் கொண்டு, வீட்டுக்கு அனுப்பினார்கள். இந்த உண்மை தெரிந்தும் "தனிநபர் பிரச்சினையால் அவ்வமைப்புகள் துண்டு துண்டாகிப் போயின" என்று திரிப்பது எதற்காக?

தனிநபர் பிரச்சினை எல்லா இயக்கங்களிலும் இருந்தன. அவற்றிற்குள் பிளவுகள் ஏற்பட்டன. புலிகளில் இருந்து புளொட் பிரிந்தது. பின்னர் அதிலிருந்து தீப்பொறி பிரிந்தது. ஈரோசில் இருந்து ஈபிஆர்எல்ப் பிரிந்தது. NLFT யில் இருந்து PLFT பிரிந்தது. இந்த உண்மைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், புலிகள் தடை செய்யும் வரை தொடர்ந்தும் இயங்கி வந்தன.

//இவர்களில் பலர் வெறும் கதைகாறர்களாக மட்டும் இருந்தனர்.// இதைக் கேட்கும் பொழுது, கிராமங்களில் பாமர மக்களின் திண்ணைப் பேச்சு போலுள்ளது. எண்பதுகளில் அனேகமாக எல்லா இயக்கங்களும், சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான கெரில்லாத் தாக்குதல்களை நடத்தி இருந்தன. ஈழப்போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக ஈரோஸ் தான் கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைத்திருந்தது. இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியாது என்று நான் நம்பவில்லை. தெரிந்து கொண்டும் மறைக்கிறீர்கள்.

//சிலர் ஒட்டுக்குழுவாகவும் மாறினர்.// ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்ததும், அவர்களில் பலர் இந்தியாவுக்கு சென்றனர். பலர் தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் இருந்தனர். அவர்களில் மீண்டும் ஒன்று சேர்த்த இந்திய அரசு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஈழத்தில் கொண்டு சென்று இறக்கியது.

அவர்கள் அப்போது இந்திய இராணுவத்தின் துணைப்படையாக அல்லது ஒட்டுக்குழுவாக இருந்தனர். அந்தக் காலத்தில் தான் புலிகளை வேட்டையாடினார்கள். அப்போது புலிகள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சென்று, சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுக்குழுவாக இருந்தனர். அந்த நேரத்தில் சிங்கள இராணுவம் புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்தது. புலிப் போராளிகளை தனது முகாம்களில் மறைத்து வைத்திருந்தது. இது குறித்து ஏற்கனவே இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டிருந்தது.

ஆசிரியர் யோதிலிங்கம் அவர்களே! இடதுசாரிகள் மீதான காழ்ப்புணர்வு காரணமாக, "இனவாதத்திற்குள் மூழ்கியவர்கள், அல்லது ஒட்டுக்குழுக்கள்" என்று ஒட்டுமொத்த இடதுசாரிகளையும் அவதூறு செய்வதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். தமிழ்த் தேசியவாதிகள் பற்றியும் இதே மாதிரி சொல்வதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?

பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் தலைவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுக்கு முண்டு கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டில், அதன் தலைவர் அமிர்தலிங்கம் புலிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார். உண்மையில், பாரம்பரிய தமிழ்த் தேசியவாதிகள் பெரும்பாலும், புலிகளால் தான் அழித்தொழிக்கப் பட்டனர்.

கூட்டணி மட்டுமல்ல, டெலோ, ஈபிஆர்எல்ப் போன்ற தமிழ்த் தேசியவாதிகள், தசாப்தகாலம் அரச ஒட்டுக்குழுக்களாக இருந்து விட்டு, புலிகளிடம் ஞானஸ்நானம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்று சேர்ந்தார்கள். அதே நேரம் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இப்போதும் அரச ஒட்டுக்குழுவாக இருக்கின்றனர்.

தமிழ்த் தேசியவாதிகள் என்றால், அதற்குள் இடதுசாரிகள் அடங்க மாட்டார்களா? ஏற்கனவே இந்தக் கேள்வியை பல தடவைகள் கேட்டு விட்டேன். ஆனால், இன்று வரையில், உங்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. என்ன காரணமோ? தாங்களும் வலதுசாரி என்பதாலா? அது சரி, "நான் ஒரு வலதுசாரி தான்" என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வதற்கு என்ன தயக்கம்? வலதுசாரி என்பது ஒரு கெட்ட வார்த்தை இல்லைத் தானே?

Friday, December 23, 2016

தேர்தல் பாதை திருடர் பாதை ஈழப் புரட்சி ஒரு சர்வதேசப் புரட்சி


[வெளிநாடு போனாலும் ஈழத் தமிழர்கள் கம்யூனிசம் பேசுவதில்லை!] 
(ஆறாம் பாகம்)

 "ஈழத் தமிழர்கள் அஹிம்சா வழியில் போராடி, அடிக்கு மேல் அடி வாங்கியதால் தான் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள்..." இவ்வாறு இன்றைக்கும் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அன்றைய நிலவரம் அப்படி இருக்கவில்லை. அஹிம்சா வழிப் போராட்டம் எனும் பாராளுமன்றப் பாதையை மட்டுமே நம்பியிருந்த தமிழ்த் தேசியவாதிகள், 1982 ம் ஆண்டு வரையும் பலமான சக்தியாக இருந்தனர். விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதப் போராட்டத்தை நம்பிய இயக்கங்கள், முதலில் அஹிம்சா வழி தமிழ்த் தேசியவாதிகளுடன் கணக்குத் தீர்க்க வேண்டி இருந்தது.

முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்திற்குப் பின்னர், பெரும்பான்மையான தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள், மீண்டும் பாராளுமன்ற அரசியல் பாதையை நம்பியிருக்க வைக்கப் பட்டுள்ளனர். அன்றிருந்த தலைமுறையினர் பாராளுமன்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது மாத்திரமே தமது அரசியல் கடமை என்றிருந்தார்கள். இன்றைய தலைமுறையினரும் அப்படித் தான் நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களது பசிக்கு தீனி போடுவது போல, ஊடகங்களும் அரசியல்வாதிகளின் வாய்ச் சவடால்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. பின்னர் அதுவே திண்ணைப் பேச்சாக விவாதிக்கப் படும்.

நான் இருபது வருட புலம்பெயர் வாழ்வுக்குப் பின்னர் ஊருக்கு திரும்பிச் சென்ற பொழுது, அங்கிருந்த மக்களின் அரசியல் கருத்துக்களை ஊடகங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதை நேரில் கண்டேன். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான உதயன் பத்திரிகை, யாழ் குடாநாட்டில் பிரதானமான கருத்துருவாக்கியாக இருக்கின்றது. அது உண்மையை எழுதுகிறதா, பொய் எழுதுகிறதா என்று ஆராயாமல், அப்படியே நம்பும் அளவிற்கு மக்கள் உள்ளனர்.

இன்றைய தலைமுறையோடு ஒப்பிடும் பொழுது, எண்பதுகளில் வாழ்ந்த தலைமுறையினர் ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு உட்பட்டு சிந்தித்தனர் என்று கூறலாம். அன்றைக்கும் ஈழநாடு, சுதந்திரன் ஆகிய இரண்டு தினசரிப் பத்திரிகைகள் தமிழ் மக்களின் கருத்துருவாக்கிகளாக செயற்பட்டன. இரண்டுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்தாலும் சிறியளவு வித்தியாசமும் இருந்தது.

ஈழநாடு யாழ் மையவாத பூர்ஷுவா வர்க்கத்தின் மனநிலையை பிரதிபலித்தது. அன்றைய நிலையில் எந்த இயக்கத்தையும், கட்சியையும் ஆதரிக்காமல் "நடுநிலையாக" நடந்து கொண்டது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவம் வந்த போது, அது வெளிப்படையாகவே இந்திய ஆதரவு நிலை எடுத்தது. 1987 ம் ஆண்டு, புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டதும், ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன.

புலிகள் நடத்தி வந்த நிதர்சனம் தொலைக்காட்சி நிலையம், ஈழமுரசு பத்திரிகை காரியாலயமும், இந்தியப் படையினரால் குண்டு வைத்து தகர்க்கப் பட்டன. அதற்குப் பதிலாக, புலிகள் ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்கு குண்டு வைத்து தகர்த்தார்கள். அந்த சமபவத்திற்குப் பின்னர் புலம்பெயர்ந்த ஈழநாடு, பாரிஸ் நகரில் இருந்து வெளியானது. அப்போது அது புலி ஆதரவு நிலை எடுத்திருந்தது.

புரட்சி என்பது மாலைநேர தேநீர் விருந்தல்ல என்று மாவோ சொன்னார். ஒரு (இங்கே ஈழத்திற்கான) விடுதலைப் போராட்டமும் அப்படித் தான். மனித உரிமைகள், தார்மீக ஆதரவு எல்லாவற்றையும் சரி பார்த்து போராட்டம் நடப்பதில்லை. ஒரு காலத்தில் பெரும்பான்மை ஈழத் தமிழரின் ஆதரவைப் பெற்றிருந்த கூட்டணிக் கட்சி உறுப்பினர்களை புலிகள் சுட்டுக் கொல்ல முடிந்தது. அதற்குக் காரணம் அன்றைய மக்கள் மத்தியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மனமாற்றம் தான்.

2016 ல் தீர்வு பெற்றுத் தருவதாக சொன்ன சம்பந்தனையும், கூட்டமைப்பையும் விமர்சிக்கும் பலர் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். ஒரு சாதாரணமான பூர்ஷுவா (முதலாளித்துவ) வர்க்க அரசியல் கட்சியிடம் இதை விட வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்? நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தல் காலங்களில் அள்ளி வீசுவதும், வென்ற பின்னர் அதை மறந்து விடுவதும் பூர்ஷுவா கட்சிகளுக்கு வாடிக்கையான விடயங்கள். உலகம் முழுவதும் அப்படித் தான் பாராளுமன்ற ஜனநாயகம் இயங்கி வருகின்றது.

1977 ம் ஆண்டு, கூட்டணி தேர்தலில் வென்றால் தமிழீழம் வாங்கித் தருவதாக ஏமாற்றியது. அதை விட பெரிய துரோகத்தையா இன்றைய கூட்டமைப்பு செய்துள்ளது? ஆனால், அன்று கூட்டணி சொன்னதை உண்மையென்று நம்பி வாக்களித்த மக்கள், அதுவும் வழமையான தேர்தல் வாக்குறுதி என்று அறிந்து கொண்டதும் கொந்தளித்தார்கள்.

ஒரு தடவை, எங்கள் ஊரில் நடந்த கூட்டணிக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திக்குமுக்காடினார்கள். அது 1982 ம் ஆண்டு என நினைக்கிறேன். சாவகச்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவரட்ணம் பேசிக் கொண்டிருந்தார். "தமிழீழம் வாங்கித் தருவதாக சொன்ன கதை என்னாச்சு?" என்று பலர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த நவரட்ணம் "தம்பி மாருக்கு நிலைமை விளங்குவதில்லை.... இது கத்தி முனையில் நடப்பது போன்றது..." என்று சொல்லிச் சமாளித்தார்.

தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெறுவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களது சுகபோக வாழ்க்கைக்கு தேர்தல் அரசியல் அவசியமாக இருந்தது. அதனால் காலத்திற்கு காலம் புதுப்புது வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வந்தனர். இந்த உண்மைகள் சாதாரணமான பாமர மக்களுக்கும் தெரிய வந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

1982 ம் ஆண்டு நடந்த மாவட்ட சபைத் தேர்தல் தான், ஈழப்போர் தொடங்க முன்னர் இறுதியாக நடந்த பொதுத் தேர்தல் ஆகும். தமிழீழம் வாங்கித் தருவதாக சொன்ன கூட்டணி, மாவட்ட சபைகளை ஒரு சிறந்த தீர்வாக காட்டிக் கொண்டிருந்தது. அனைத்து ஆயுதக் குழுக்களும் அதை பகிஷ்கரித்திருந்தன. வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வாபஸ் வாங்கா விட்டால், சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்று புலிகள் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தனர்.

எமது ஊரில் மாவட்ட சபைக்கு போட்டியிட்ட கூட்டணி உறுப்பினர்கள் இரண்டு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்தார். மற்றொருவர் படுகாயமுற்றார். அவர்களை சுட்டவர்கள் புலிகள். யாழ்ப்பாணத்தில் காவல் கடமையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். புளொட் இயக்கம் அந்தத் தாக்குதலை நடத்தியது என நினைக்கிறேன். அதன் எதிர்விளைவாக, சிங்களப் பொலிசார் வெறியாட்டம் போட்டனர். யாழ் நகரில் இருந்த கடைகள் எரிக்கப் பட்டன. அப்போது தான் யாழ் பொது நூலகமும் எரிக்கப் பட்டது.

அந்தக் காலங்களில், கூட்டணிக் கட்சி இது போன்ற சம்பவங்களை உடனுக்குடன் ஆவணப் படுத்தி வந்தது. அன்று யாழ் நகரில் நடந்த கலவரக் காட்சிகளை புகைப்படங்களாகவும், உணர்ச்சியை தூண்டும் வசனங்களாகவும் கொண்ட நூலாக வெளியிட்டது. அதன் பெயர் நினைவில்லை. அந்த நூல் வெளிவந்த உடனேயே கடைகளில் விற்றுத் தீர்ந்தது. பாடசாலையில் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் அதை வாசித்தார்கள்.

சிங்களவர்களின் கொடுமைகளை கண்டு தமிழர்கள் கொதித்தெழ வைப்பது தான் இது போன்ற பிரசுரங்களை வெளியிடுவோரின் நோக்கமும். அன்று அது கூட்டணிக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்க உதவியது. பிற்காலத்தில் புலிகள் போன்ற இயக்கங்களுக்கு போராளிகளை சேர்க்க உதவியது. தமிழ் மக்களின் இன அடிப்படையிலான உணர்வுகளை தூண்டி விட்டால் போதும், தமிழீழம் கிடைத்து விடும் என்று கூட்டணி நம்பியது. அதையே பிற்காலத்தில் புலிகளும் நம்பினார்கள். இன்றைக்கு புலி ஆதரவு தமிழ்த் தேசியவாதிகளும் அதே பாணியிலான அரசியலைத் தான் பின்பற்றுகிறார்கள்.

இவர்கள் எல்லோரும் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விடுகிறார்கள். எண்பதுகளில் பாராளுமன்றப் பாதையை முற்றிலும் நிராகரித்த புதிய தலைமுறை ஒன்று உருவாகி இருந்தது. அது ஒரு புரட்சிகரமான சமூக மாற்றம். பத்து வருடங்களுக்குப் பின்னர், ஆயுதப் போராட்டத்தையும்(பாராளுமன்ற)அரசியல் போராட்டத்தையும் ஒன்றாக அங்கீகரிக்கப் பழகிய சமூகமாக மாறி இருந்தது. இந்த மாற்றத்தை புலிகள் கூட காலந் தாழ்த்தி தான் உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் அவசர அவசரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி அதன் பலனை அனுபவிப்பதற்குள் இறுதிப் போர் வந்து எல்லாம் முடிந்து போனது.

தமிழ்த்தேசிய சித்தாந்தவாதிகள் பரப்புரை செய்வது போன்று "அஹிம்சைப் போராட்டத்தில் பொறுமையிழந்த" தமிழர்கள் ஆயுதமேந்தவில்லை. இது புறக் காரணிகளை கவனத்தில் எடுக்காத ஒரு குறுகிய மனப்பான்மை. தமிழ்த்தேசியவாதிகள், உள்முரண்பாடுகள் காரணமாக, "அஹிம்சாவாதிகள், ஆயுதப் போராளிகள்" என்று இரண்டாகப் பிரிந்து உட்பகை கொண்டு மோதியதை மூடி மறைப்பது ஏன்? அது மட்டுமல்ல, தலைமுறை இடைவெளியும் முக்கிய பங்காற்றியது. அன்றைய இளைய தலைமுறையினர் பாராளுமன்ற பாதையை புறக்கணித்து ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தமைக்கு சர்வதேச நிலவரமும் காரணமாக இருந்தது. இன்றும் கூட, தமிழ்க் குறுந்தேசிய வாதிகள் இது போன்ற விடயங்களை கவனத்தில் எடுப்பதில்லை. இயங்கியல் போக்கை மறுத்து, வெறும் சித்தாந்தப் பற்று மட்டுமே விடுதலையை பெற்றுத் தரும் என்பது ஒரு மாயை.

கியூபாவில் பிடல்காஸ்ட்ரோ குழுவினர் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். அதே பாணியை பின்பற்றி நிகராகுவாவும் விடுதலை அடைந்தது. இந்தியாவில் நக்சலைட்டுகளின் ஆயுதப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் மக்கள் யுத்தக் குழுவினரின் தாக்குதல்கள் பற்றி, இந்திய வானொலி அறிவித்துக் கொண்டிருந்தது. அதே நேரம், தென்னிலங்கையில் தோல்வியுற்ற ஜேவிபி கிளர்ச்சி பற்றி, "சேகுவேராவாதிகளின் போராட்டம்" என்ற தலைப்பில் தமிழ் மக்களால் ஆய்வு செய்யப் பட்டது. இவை எல்லாம் ஈழப் போராட்டத்தில் தாக்கம் செலுத்தவில்லை என்று சொல்ல முடியுமா?

இந்த இடத்தில் மீண்டும் ஈரோஸ் இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதுவும் ஒரு ஈழத் தேசியவாத இயக்கம் தான். ஆனால், மார்க்சிய லெனினிச கோட்பாடுகளை கற்றறிந்த படியால், ஈழப் போராட்டத்தில் புதிய ஒளியை பாய்ச்சி இருந்தனர். அறுபதுகளில் நடந்த சாதி ஒழிப்புப் போராட்டம் தான் தமிழர்களின் முதலாவது ஆயுதப் போராட்டம் என்று கூறி வந்தனர். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பொழுதும், பொதுக் கூட்டங்களிலும், அவர்கள் அந்தக் கருத்தை வலியுறுத்தி வந்தனர். இன்று இவ்வாறான கடந்த கால வரலாற்றை மறந்து விட்ட அரசியலற்ற தலைமுறை ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.

(தொடரும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்: