Thursday, November 21, 2013

தமிழர்கள் திப்பு சுல்தானை புறக்கணிப்பது தப்பு !


இன்று திப்பு சுல்தானின் நினைவு தினம். இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தேசியவாதிகள் கூட அவரைப் புறக்கணிப்பது கவலைக்குரியது. திப்புவை வைத்து தமிழ் தேசிய அரசியல் நடத்தும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், அதனை வேண்டுமென்றே தவற விடுவது ஆச்சரியத்திற்குரியது. (தமிழ் தேசியவாதிகளின் இந்து மத உணர்வு அதற்குத் தடையாக இருக்கலாம்.) ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட திப்பு சுல்த்தானிடம் இருந்து, தமிழ் தேசியம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட ஒரு மன்னன், புலிக் கொடி ஏந்தி, ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைப் போராட்டம் நடத்தி, அவர்களை தோல்வியடைய வைத்த வரலாறு, தமிழ் தேசியத்திற்கு பெருமை சேர்க்கவில்லையா? 

திப்பு சுல்தான், மைசூரை தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தினாலும், இன்றைய தமிழ்நாடு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், திப்புவின் ஆட்சியின் கீழ் இருந்தன. இன்றைய சென்னை நகர்ப் பகுதியை மட்டும் பிடித்து வைத்திருந்த ஆங்கிலேயர்கள், தமிழ் நாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக நீண்ட காலம் போரிட்டார்கள். சூரியன் மறையாத சாம்ராஜ்யத்தை கட்டியாண்ட பிரிட்டிஷார், தமிழ்நாட்டில் நடந்த காலனிய ஆக்கிரமிப்புப் போரில் அவமானகரமான தோல்வியை தழுவி இருந்தனர். 

அன்று ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட திப்புவின் படையில், ஏராளமான தமிழ் வீரர்கள் இருந்தனர். தென்னிந்தியாவை ஆண்ட கடைசி இந்திய மன்னன், திப்புவின் நாட்டில், பல்லின மக்கள் வாழ்ந்தனர். ஆங்கிலேயர்கள் தமது சரித்திர நூல்களில் புளுகி இருப்பதைப் போல, அன்றைய இந்தியர்கள் நாகரீகத்தில் பின்தங்கி இருக்கவில்லை. பல்வேறு தொழில்நுட்ப அறிவில் சிறந்து விளங்கினார்கள். சில சமயம், அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஐரோப்பியரின் கண்டுபிடிப்புகளை மிஞ்சி இருந்தன. உதாரணத்திற்கு, போரில் பயன்படுத்தப் பட்ட நவீன ஆயுதங்களை பற்றிக் குறிப்பிடலாம். (வேறு சில நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளும் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால், அவற்றை எல்லாம் ஆங்கிலேயர்கள் திருடிச் சென்று விட்டார்கள். இன்று வரையில் அவற்றைப் பற்றிய தகவல்கள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன.)

ஆங்கிலேயர்களின் காலனிய கால வெற்றிகளுக்கு காரணம், அவர்களிடம் இருந்த துப்பாக்கி, பீரங்கி போன்ற நவீன ஆயுதங்கள் என்று சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நடந்த போரில், திப்புவின் படையில் இருந்த தமிழ் வீரர்கள்  நவீன ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். அதனால் தான், ஆங்கிலேயப் படைகள் தோற்றோடின. இது தமிழர்களுக்கு பெருமை இல்லையா? எதற்காக, தமிழ் தேசியவாதிகள் இந்த வரலாற்று உண்மையை புறக்கணிக்கிறார்கள்? 

உலகிலேயே முதல் தடவையாக, தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக நடந்த போரில் தான், ரொக்கட் ஏவுகணைகள் பயன்படுத்தப் பட்டன. இன்று நவீன இராணுவங்களில் பாவிக்கப்படும், ரொக்கட் தொழில்நுட்பம் அல்லது ஏவுகணை வீசும் பீரங்கி, திப்புவின் பொறியியலாளர்களின் கண்டுபிடிப்பு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?முதல்முறையாக திப்புவின் படைகளிடம் கைப்பற்றிய ஏவுகணை தொழில்நுட்பத்தை வைத்து தான், பின்னாளில் ஆங்கிலேயர்கள் நவீன ராக்கெட் கருவிகளை உருவாக்கினார்கள்.  அனேகமாக, சீனாவுடனான தொடர்பினால் கிடைத்த தொழில்நுட்ப அறிவை அடிப்படையாக கொண்டு, மைசூரில் அந்த நவீன ஆயுதம் தயாரிக்கப் பட்டிருந்தது. 

ஆங்கிலேயருடனான போரில், ஏவுகணைகள் வீசப் பட்ட பொழுது, ஆங்கிலப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. போர்க்களத்தில் நின்ற வெள்ளையர்கள், வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்றெண்ணி, அஞ்சி நடுங்கினார்கள். திப்புவின் ஏவுகணைகள், நூறு மீட்டர் தூரம் மட்டுமே செல்லக் கூடியவை. இருந்த போதிலும், ஆங்கிலேயர்கள் வாழ்க்கையில் ஒரு நாளும் கண்டிராத, கேள்விப் பட்டிராத நவீன ஆயுதம் ஒன்றின் பயன்பாடு, போரில் வெற்றியை தேடித் தந்தது. அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் அம்பு, வில்லுகளுடன் போரிட்ட பூர்வகுடிகளை, துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பெருமைக்குரிய ஆங்கிலேய காலனியப் படைகள், தென்னிந்தியாவில் புறமுதுகிட்டு ஓடின. அன்று தமிழ்நாட்டில் நடந்த போரில், ஆங்கிலேய படைகளுக்கு, பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டது.

மைசூரை கைப்பற்றுவதற்காக நான்கு போர்கள் நடந்துள்ளன. ஆங்கிலேயர்களுக்கு இறுதி வெற்றி கிடைத்தற்கு காரணம், அவர்களது ஆயுத, அல்லது ஆட் பலம் அல்ல. வெள்ளையர்கள் எப்போதும் சூழ்ச்சியில் வல்லவர்கள். திப்பு சுல்த்தான் ஒரு முஸ்லிம் மன்னன். அவனது ஆட்சியில், இஸ்லாம் அரச மதமாக இருந்தது என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், பிற மதத்தவர்கள் பாரபட்சமாக நடத்தப் படவில்லை. திப்புவின் ஆலோசகர்களாக பிராமணர்கள் இருந்துள்ளனர். திப்புவின் படையில், முஸ்லிம், இந்து வீரர்கள் கலந்திருந்தனர். அன்றைய இந்தியாவில் வாழ்ந்த மக்கள் மனதில், முஸ்லிம், இந்து என்ற குரோதம் இருக்கவில்லை. 

ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்து, முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத்தியில் வெறுப்புணர்வை விதைத்தார்கள். மக்களின் ஒற்றுமையை குலைத்தார்கள். அதன் பிறகு தான், அவர்களால் மைசூர் ராஜ்யத்தை கைப்பற்ற முடிந்தது. ஆங்கிலேயர்களினால் அன்று விதைக்கப் பட்ட மதவெறி எனும் நச்சு விதைகள், இன்று பெரும் விருட்சமாக வளர்ந்துள்ளன. ஆங்கிலேயர்கள் அதைத் தான், இலங்கையிலும் செய்தார்கள். கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் தமிழனாக இருந்த காரணத்தினால், அவனுக்கு எதிராக சிங்களவர்களை தூண்டி விட்டார்கள். அன்று விதைக்கப் பட்ட இனவெறி எனும் நஞ்சு, நமது காலத்தில் ஈழப்போர் எனும் பேரழிவில் வந்து முடிந்தது. 

ஈழப்போரில் நடந்த பேரழிவுகள், இனப்படுகொலைகள் குறித்து, ஆங்கிலேய கனவான்கள் அக மகிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால், இன/மத குரோதங்களை தூண்டி விட்டு, மக்களை பிரித்தாள்வதன் மூலம் தான், மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நிலை நிறுத்தப் பட்டது. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு, அரசியலுக்குப் பின்னால், இன்னொரு காரணமும் உள்ளது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர், "இந்தியாவில், இலங்கையில் சிறந்த தொழில் நுட்ப அறிவும், நாகரிக வளர்ச்சியும் இருந்தது" என்ற உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் கணிசமான வெற்றி கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு திப்பு சுல்த்தான் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்பதே, காலனிய கால மூளைச்சலவையின் விளைவு தான். 


2 comments:

Kasthuri Rengan said...

பதிவு நன்றாக இருக்கிறது..

அக்கினி சிறகுகளில் அப்துல் கலாம் கூட இதுபற்றி குரிப்பிட்டிக்ருகிறார்...

Kasthuri Rengan said...

அருமையான பதிவு கலை..