Monday, April 02, 2012

சஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை

உலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றன. ஆப்பிரிக்காவில், மாலி நாட்டில், அசாவாத் (Azawad ) என்ற தனி நாடு கோரும், துவாரக் இனத்தவர் பற்றி, நம்மில் எத்தனை பேர் கேள்விப் பட்டிருப்பார்கள்? இத்தனைக்கும் அந்த விடுதலைப் போராட்டம், தொன்னூறுகளில் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இடையில் சில வருடங்கள், அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு, சமாதானம் நிலவுவது போலக் காணப் பட்டது. இருப்பினும், அயல் நாடான லிபியாவில், கடாபியின் வீழ்ச்சி, இரண்டாவது அசாவாத் போரை தூண்டி விட்டுள்ளது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், வட மாலியின் முக்கிய நகரங்களில் ஒன்றான கவோ (Gao), விடுதலைப் போராளிகளால் கைப்பற்றப் பட்டுள்ளது. நகரில் இருந்த மிகப் பெரிய இராணுவ முகாம், போராளிகளின் தாக்குதலால் நிர்மூலமாக்கப் பட்டது. அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் (Mouvement Populaire de Libération de l'Azawad, MPLA) கவோ நகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. யார் இந்த அசாவாத் விடுதலைப் படை? அவர்களது குறிக்கோள் என்ன? துவாரக் இனத்தவரின் பிரச்சினை என்ன? எதற்காக, சர்வதேச சமூகம் அவர்களை புறக்கணிக்கின்றது?

"துவாரக் இன மக்கள் குறைந்தது ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் பரந்து வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு என்றொரு நாடில்லை." ஆப்பிரிக்காவில் அனைத்து மக்களும் ஒரே இனத்தை (race) சேர்ந்தவர்களாக கருதுவது தவறு. வட ஆப்பிரிக்காவில் வாழும் அரேபியர்கள், பெர்பர்கள் மட்டுமல்ல, துவாரக் இனத்தவர்களும் தம்மை பிற ஆப்பிரிக்க இனங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றனர். அவர்களது தோற்றமும் நிறமும் கூட வித்தியாசமாக இருக்கும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர், நான் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலத்தில், என்னோடு ஒரு மாலி நாட்டு அகதி தங்கியிருந்தார். "இந்தியர்களைப் போன்ற தோற்றமுடைய இனம் ஒன்று மாலி நாட்டில் இருப்பதாக," அவர் என்னைப் பார்த்து கூறினார். "ஆப்பிரிக்காவில் இந்தியர்களைப் போன்ற தோல் நிறம், முகத் தோற்றம் கொண்ட மக்கள்" என்ற தகவல், அன்று எனக்கும் புதிதாக இருந்தது. அது குறித்து துருவித் துருவிக் கேட்டதில், துவாரக் மக்களின் விடுதலைப் போராட்டம் எனக்கு அறிமுகமானது. என்னோடு தங்கியிருந்த நண்பர், தென் மாலியை சேர்ந்த பம்பாரா மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர். வழமையான ஆப்பிரிக்கர்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்.

ஆப்பிரிக்கா கண்டத்தில், ஏறக்குறைய அனைத்து நாட்டு எல்லைகளும், ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களால் கீறப் பட்டவை தான். ஆமாம், ஆப்பிரிக்க வரைபடத்தை மேசையில் வைத்து, அடிமட்டத்தால் அளந்து கோடு கீறப் பட்டவை தான், ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைகள். அந்த எல்லைகளுக்குள், ஒரே மொழி பேசும் மக்களின் வாழ்விடங்கள் துண்டாடப் பட்டன. வேற்றினத்தவர்களுடன் ஒன்று சேர்த்து வைக்கப் பட்டனர். அவ்வாறு தான், மாலியின் வடக்கே வாழும் துவாரக் இன மக்கள், தெற்கே வாழும் பம்பாரா இன மக்களுடன் சேர்த்து வைக்கப் பட்டனர். பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக எல்லைக்குட்பட்ட அந்தப் பிரதேசம் தான் இன்றைய மாலி குடியரசு.

நாற்பதுக்கும் அதிகமான மொழிகளை பேசும் இனங்கள் வாழ்ந்தாலும், பம்பாரா மொழியை இரண்டாம் மொழியாக பேசக் கற்றுக் கொண்டுள்ளனர். அதனால், காலனிய கால பிரெஞ்சு மொழி, படித்தவர்கள் மட்டத்தில் மட்டுமே பேசப் பட்டு வருகின்றது. பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களில், 90 வீதமானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டவர்கள். மாலி ஒரு காலத்தில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் பெரிய இஸ்லாமிய சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. அதன் தலைநகரான திம்புக்டுவில், ஆயிரம் ஆண்டு கால பழமையான பல்கலைக்கழகமும், நூலகமும் இன்றைக்கும் உள்ளன. அந்தக் காலத்தில், ஐரோப்பாக் கண்டத்தில், எந்தவொரு நாட்டிலும், பல்கலைக்கழகமோ அல்லது நூலகமோ இருக்கவில்லை!

பண்டைய திம்புக்டு நகரம் அமைந்துள்ள, மாலியின் வட பகுதி தான், உள்நாட்டு யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் துவாரக் இன மக்கள், அந்தப் பிரதேசத்தில் அசாவாத் என்ற தனி நாடு அமைக்க விரும்புகின்றனர். அதே வட பிராந்தியத்தில் வாழும் சொங்கை என்ற இன மக்களுக்கும், துவாரக் இனத்தவர்களுக்கும் ஒத்துப் போகாது. சொங்கை என்பது தனியான மொழி பேசும் மக்களை குறிக்கும் சொல் அல்ல. அவர்கள் பண்டைய சாம்ராஜ்யம் ஒன்றை ஆண்ட மக்கட் பிரிவினர்.

"ஆண்ட பரம்பரைக் கனவு" அவர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. பிரிந்து செல்லும் தனி நாடொன்றில், "நாடோடிக் கூட்டமான" துவாரக் இனத்தவரால் ஆளப் படுவதை வெறுக்கின்றனர். இலங்கையின் வட-கிழக்கு பிராந்தியத்தில் ஈழம் கோரும் தமிழர்களுக்கும், அதே பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்றது அது. மாலி அரசும், துவாரக் மக்களின் போராட்டத்தை அடக்குவதற்காக, சொங்கை ஆயுதக் குழுக்களை பயன்படுத்தியது. தற்பொழுது மாலியில், இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் அது போன்ற உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

துவாரக் இனத்தவர்கள், தமக்கென தனியான கலாச்சாரங்களை கொண்டுள்ளனர். சுருக்கமாக அவர்களை பாலைவன மக்கள் என்று அழைக்கலாம். சஹாரா பாலைவனப் பிரதேசம் தான் அவர்களது வாழ்விடம். துவாரக் இன மக்கள் மாலியில் மட்டுமல்லாது, நைஜர், லிபியா, அல்ஜீரியா, மொரிட்டானியா, பூர்கினா பாசோ, ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஆதி காலத்தில் இருந்தே, சஹாரா பாலைவனத்தின் ஊடான வர்த்தகம் தான் அவர்களது முக்கிய தொழில் என்பதால், அவர்கள் ஒரு நாடோடி சமூகமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஒட்டகங்களில் பொதிகளை சுமந்த படி, பாலைவனத்தை ஊடறுத்து ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து சென்று வர்த்தகம் செய்யும் துவாரக் மக்களை, இன்றைய வணிக கப்பல் போக்குவரத்து கம்பெனிகளோடு ஒப்பிடலாம். ஐரோப்பியரின் வருகையினால், பாலைவன வர்த்தகம் தடைப்பட்டது மட்டுமல்ல, நிரந்தரமாக ஒரு நாட்டில் தங்க வேண்டியேற்பட்டது. துவாரக் இனத்தவர்கள், வட ஆப்பிரிக்க பேர்பர் இனத்திற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இவர்களின் தோல் நிறம் கறுத்திருக்கும். பெர்பர்கள் பேசும் தமாஷிக் மொழியுடன், அரபியும் பேசுகின்றனர். அநேகமாக, அனைத்து துவாரக் மக்களும் இஸ்லாமிய மதத்தவர்கள்.

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு வந்த பின்னர் தான், துவாரக் இனத்தவரின் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. தீவிரமான அரபு தேசியவாதியாகவிருந்த கடாபி, பிற அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கிட்டாததால், அரபு தேசியத்தை கைவிட்டார். அதன் பிறகு ஆப்பிரிக்க தேசியத்தை கையில் எடுத்தார். அதிலும் கடாபி ஒரு இஸ்லாமியவாதியாகவும் இருந்ததால், கணிசமான தொகை முஸ்லிம்கள் வாழ்ந்த ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் விவகாரம் அவருக்கு உவப்பானதாக இருந்தது. மாலியில் அவாசாத் என்ற தனி நாடொன்றை உருவாக்கும் கனவை நனவாக்க காத்திருந்தவர்கள், கடாபியின் உதவியைப் பெற முடிந்தது. லிபியாவிலும் துவாரக் இன மக்கள் வாழ்ந்தததினால், இந்த தொடர்பு இலகுவாக ஏற்பட்டது.

லிபிய இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய, ஆப்பிரிக்கர்களின் துணைப் படையிலும், துவாரக் போராளிகளே அதிகமாக காணப்பட்டனர். மாலியில் தொன்னூறுகளில் வெடித்த அசாவத் விடுதலைப் போரிலும், லிபியாவில் பயிற்சி பெற்ற துவாரக் போராளிகளே பங்குபற்றினார்கள். அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை, அன்று கடாபி அனுப்பிக் கொண்டிருந்தார். சில வருடங்களின் பின்னர், போராளிக் குழுக்களுக்கும், மாலி அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதற்கும் லிபியா மத்தியஸ்தம் வகித்தது! இலங்கையில் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய இந்தியா, பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அனுசரணையாளராக செயற்பட்டமை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். வீட்டுக்கு வீடு வாசற்படி இருந்தால், நாட்டுக்கு நாடு இருக்காதா?

மாலியில் மீண்டும் ஏற்பட்டுள்ள யுத்தத்திற்கும், லிபியாவில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. லிபியாவில் கடாபி இருக்கும் வரையில், துவாரக் போராளிகளுக்கு புகலிடம் கிடைத்து வந்தது. கடாபிக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்த லிபியர்கள், (கறுப்பின) ஆப்பிக்கர்களை வெறுக்கும் இனவெறியர்கள். இதனால், துவாரக் போராளிகள், கடாபியின் இராணுவத்துடன் சேர்ந்து போரிடுவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. நேட்டோ விமானக் குண்டுவீச்சின் பின்னர், கடாபியின் இராணுவம் பின்வாங்கி ஓடிக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில், லிபியாவில் தங்கியிருந்த துவாரக் போராளிகள், தமது தாயகமான மாலிக்கு திரும்பினார்கள். அவர்கள் போகும் பொழுது, வெறுங் கையை வீசிக் கொண்டு செல்லவில்லை. லிபிய இராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளை கொள்ளையடித்து, நவீன ஆயுதங்களை திரட்டிக் கொண்டு ஓடினார்கள். போகும் வழியில், அதிர்ஷ்டம் ஆகாயத்தில் இருந்து விழுந்தது! லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, நேட்டோ விமானங்கள் ஆயுதங்களை பாரசூட் மூலம் போட்டனர். இவ்வாறு போடப்பட்ட நேட்டோ ஆயுதங்களில் சில துவாரக் போராளிகளின் வசம் சிக்கின. அவர்கள் அதையும் சேகரித்துக் கொண்டு, மாலியில் குவித்து வைத்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன்னர், கவோ நகர இராணுவ முகாம் மீதான தாக்குதலில் பல்குழல் எறிகணைகளை ஏவும் பீரங்கிகள் பாவிக்கப் பட்டுள்ளன. நவீன ஆயுதங்களை கொண்டு தாக்கிய துவாரக் போராளிகளின் தாக்குதகளை சமாளிக்க முடியாத மாலி இராணுவம் நிலைகுலைந்தது. ஏற்கனவே, கிடால் மாகாணம் போராளிகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. துவாரக் இனத்தவர் தனி நாடு கோரும் அவாசாத் மாநிலத்தில், அரைவாசிப் பகுதி அவர்கள் கட்டுப்பாடுக்குள் இருக்கிறது. இனி, திம்புக்டு மாகாணம் மட்டுமே மிச்சம் இருக்கின்றது. அதையும் கைப்பற்றி விட்டால், வட பிராந்தியம், மாலியுடன் துண்டிக்கப் பட்டு விடும்.

துவாரக் விடுதலை இயக்கங்களுடன், இஸ்லாமியவாத இயக்கங்களும் சேர்ந்து போரிடுகின்றன. இதனால், சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தனி நாடு, சர்வதேச இஸ்லாமியவாத சக்திகளுக்கு தளமாக அமையலாம் என்று மேற்குலகம் அஞ்சுகின்றது. ஆப்கானிஸ்தானில் மேற்குலகின் தலையீடானது, மத்திய ஆசிய நாடுகளில் இஸ்லாமியவாத சக்திகளை ஊக்குவித்தது போன்று தான் இங்கேயும் நடக்கின்றது. லிபியாவில் கடாபி கொல்லப்பட்ட பின்னர், கடாபியின் ஆவி வட ஆப்பிரிக்காவை அச்சுறுத்துகின்றது. ஏற்கனவே துவாரக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நைஜர், நைஜீரியா போன்ற நாடுகளிலும் ஆயுத வன்முறை ஆங்காங்கே தலைகாட்டி வருகின்றது.

மாலியில் இராணுவத்தில் ஒரு பிரிவினர் சதிப்புரட்சி செய்து, மாலியின் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஜனாதிபதி அமடு துமானி துரே, பிரிவினைவாத இயக்கத்தை அடக்க முடியவில்லை என்று காரணம் காட்டியே சதிப்புரட்சி இடம்பெற்றுள்ளது. இதனை அவர்கள் "அன்னையர் எழுச்சி"யின் விளைவு என்றும் கூறுகின்றனர். அதாவது, போதுமான அளவு பயிற்சியற்ற மாலி இராணுவ வீரர்கள், வடக்கே சென்று சவப் பெட்டிகளில் திரும்பி வருகின்றனர். நாளாந்தம் பலியாகிக் கொண்டிருக்கும் இராணுவ தரப்பிலான இழப்புகளினால், தென் மாலி மக்களின் அரசின் மீதான வெறுப்பு அதிகரித்தது. தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்பிய தாய்மார், தலைநகர் பமாகொவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இராணுவத்திற்குள் இருந்த கடும்போக்காளர்கள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டனர். சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கும் கேப்டன் அமடு சனக்கோ, அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. வருங்காலத்தில் நிலைமை எப்படி மாறும் என்பதை இப்பொழுது கணிக்க முடியாமல் உள்ளது. எனினும், இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னரே, கவோ நகரம் துவாரக் கிளர்ச்சிப் படைகளால் கைப்பற்றப் பட்டது. இதனால், மாலி இராணுவத்தில் உள்ள கடும்போக்காளர்களால் அசாவாத் விடுதலைப் போராட்டத்தை அடக்க முடியுமா, எனது கேள்விக்குறி தான். நிலைமை மோசமடைந்தால், மேற்கத்திய நாடுகளின், குறிப்பாக பிரான்சின், நேரடித் தலையீடு இடம்பெறலாம். கடாபி இறந்த பின்னரும், கடாபியின் ஆவி வந்து தொல்லை கொடுக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்?
************************************************


மேலதிக தகவல்களுக்கு:
அசாவாத் விடுதலைக்கான மக்கள் இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையும் (பிரெஞ்சு மொழி) சில வீடியோக்களும்
Tuareg rebellion (2007–2009)
Tuareg people
Libya Spillover Leads to Mali Coup

No comments: