Friday, June 14, 2013

மொலுக்கு இனப் பிரச்சினை : டச்சு காலனிய துரோகத்தின் கதை  • "ஈழத் தமிழரின் இனப்பிரச்சினை தனித்துவமானது" என்றும், அதனை "உலகில் பிற இனங்களின் பிரச்சினைகளுடன் ஒப்பிட முடியாது" என்றும், ஒரு தவறான எண்ணம் காணப் படுகின்றது. இன்று பல உலக நாடுகளில் காணப்படும் இனப் பிரச்சினையானது, கடந்த கால காலனிய ஆட்சியின் விளைவாகவே  இருந்து வருகின்றது. முன்னாள் ஐரோப்பிய காலனிய ஆட்சியாளர்களுக்கும் அவற்றில் பங்கிருக்கிறது என்பதை பலர் உணர்வதில்லை. ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் "தமிழ் இளையோர்" அதனை உணர்ந்து கொள்ளும் காலம் ஒன்று வரும். மொலுக்கு இன மக்களின் கதையை அறிந்து கொள்வதன் மூலம், தமிழர்களும் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ளலாம்.


இந்தோனேசியாவில் தனி நாடு கோரும், மொலுக்கு இன மக்களின் வரலாறு குறித்து இங்கே அலசப் படவில்லை. இந்தோனேசியா ஒரு டச்சுக் காலனியாக இருந்து சுதந்திரமடைந்த 1945 - 1949 கால கட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நாங்களும் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தை, தமிழீழ போராட்டத்தின் தொடக்கமாக கருதுவதுண்டு. அதே போன்ற நிலையில் தான், மொலுக்கு மக்களின் தனி நாட்டு போராட்டமும் ஆரம்பமாகியது. ஆகவே அதற்குப் பிந்திய காலத்தில் நடந்தவை குறித்து கவனம் செலுத்துவோம். 

இந்தோனேசியா எனும் நாடு, ஆயிரக் கணக்கான தீவுகளை கொண்டது. அந்த நாட்டில் நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள் வாழ்கிறார்கள். மலேசிய மொழிக்கு மிகவும் நெருக்கமான, இந்தோனேசிய மொழி அவற்றில் ஒன்று. ஆனால், அதுவே பிற மொழிச் சிறுபான்மையின மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. ஐரோப்பிய காலனிய காலகட்டத்திற்கு முன்னர், பல்வேறு இஸ்லாமிய சுல்த்தான்களின் ஆட்சிக்குட்பட்ட ராஜ்யங்கள் இருந்தன. ஆனால், அப்போதெல்லாம் இந்தோனேசிய மொழி இன்று ஆங்கிலம் போன்று ஒரு தொடர்பாடல் மொழியாக மட்டுமே இருந்தது. ஆனால், காலனிய காலகட்டத்தின் பின்னர் ஒரு தேசிய அரசு உருவானது. அது இந்தோனேசிய பேரினவாதமாக உருமாறியது. 

மொலுக்கர்கள் எங்கே வாழ்கிறார்கள்? அவுஸ்திரேலியாவுக்கு மேலே கிழக்கு தீமோர் உள்ளது. அதற்கும் மேலே உள்ள தீவுகளை மொலுக்கு தீவுகள் என்று அழைப்பார்கள். அவற்றில் அம்பொன், சேரம் போன்ற தீவுகளில் வாழும் மக்களைப் பற்றி தான் இந்தக் கட்டுரை பேசுகின்றது. அந்த மக்கள் தம்மை "தென் மொலுக்கர்கள்" என்று அழைத்துக் கொள்கின்றனர். 25 ஏப்ரில் 1950, அந்த தீவுகளை இணைத்து, "தென் மலுக்கு குடியரசு" (Republik Maluku Selatan, சுருக்கமாக RMS)  பிரகடனம் செய்யப் பட்டது. 

மொலுக்கு இன மக்கள் அந்த தீவுகளில் வாழும் பூர்வ குடிகள். பார்ப்பதற்கு அவுஸ்திரேலிய அபோரிஜின்கள் போன்றிருப்பார்கள். அனேகமாக, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறிய இனங்களின் வம்சாவளியினராக இருக்கலாம். ஆனால், எல்லோரும் கருப்பாக தோன்ற மாட்டார்கள். பலர் சிவப்பாகவும் இருப்பார்கள். உலகில் நாகரீகமடைந்த எந்த இனமும், தனது இனத் தூய்மையை பேணி வருவதாக பெருமையடித்துக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு வகையில் வேறு இனங்களுடன் கலந்திருப்பார்கள். 

இந்தோனேசியா வரலாற்றில் முதன் முறையாக, மொலுக்கு தீவுகள் தான் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளுடன் தொடர்பு கொண்டன. அனேகமாக, மகலனின் கடற்பயணத்தின் விளைவாக இருக்கலாம். ஏனெனில், மொலுக்கு தீவுகளுக்கு மேலேயுள்ள பிலிப்பைன்ஸ் தீவுகளில், ஸ்பானிஷ் காரர்கள் காலூன்றி இருந்தனர். ஐரோப்பியருடனான நீண்ட கால தொடர்பு காரணமாக, பிற்காலத்தில் வந்த டச்சுக் காலனிய ஆட்சியாளர்களுடன் விரும்பி ஒத்துழைத்தார்கள். இதனால், இயல்பாகவே மொலுக்கு இன மக்கள் மேலைத்தேய விசுவாசிகளாக மாறி விட்டிருந்தனர்.  

மொலுக்கர்களின் மேற்கத்திய சார்புத் தன்மையை, நாங்கள் எமது நாடுகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற இலங்கையின் கரையோரப் பகுதிகளும், சென்னை போன்ற இந்திய கரையோரப் பகுதியும் தான், முதல் தடவையாக ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் கீழ் வந்தன. நீண்ட கால ஐரோப்பிய மேலாண்மை  காரணமாக, இன்றைக்கும் பல தமிழர்கள் மேலைத்தேய விசுவாசிகளாக இருப்பதைப் பார்க்கலாம். (கொழும்பு போன்ற மேல் மாகாணத்தில் வாழும், கரையோர சிங்கள மக்களும் அவ்வாறு தான்.) தங்களது விசுவாசத்தை புரிந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகள், என்றைக்காவது ஒரு நாள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தில், தமிழர்களுக்கும், மொலுக்கர்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகளை காணலாம். 

காலனிய தொடர்பு காரணமாக, பெரும்பாலான மொலுக்கு மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். மொலுக்கர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள் அல்ல. சனத்தொகையில் கணிசமான அளவு இஸ்லாமிய மொலுக்கர்களும் இருக்கின்றனர். ஈழத்தில் இந்து-கிறிஸ்தவ தமிழர்கள் மட்டுமே தமிழீழம் கேட்டது போன்று, கிறிஸ்தவ மொலுக்கர்கள் தான் தனி நாட்டுக் கோரிக்கையை வைத்தனர். ஈழப்போர் நடந்த காலத்தில், முஸ்லிம்கள் ஒதுங்கி இருந்தது போன்று தான், மொலுக்கு விடுதலைப்  போராட்டத்தில் (மொலுக்கு) முஸ்லிம்கள் ஒதுங்கி இருந்தனர். இந்தப் பிரிவினையை, ஈழத்தில் எவ்வாறு இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டதோ, அதே மாதிரித் தான் இந்தோனேசிய அரசு மொலுக்கு பிராந்தியத்தில் பயன்படுத்திக் கொண்டது.

இலங்கையில், ஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில், ஈழத் தமிழர்கள் பல சலுகைகளை பெற்றனர். குறிப்பாக கிறிஸ்தவ தமிழர்கள், காலனிய நிர்வாகத்தில் பதவிகளைப் பெற்றனர். இலங்கை முழுவதும் அரசாங்க அதிகாரிகளாக பணியாற்றினார்கள். காலனிய இராணுவத்திலும் சில உயர் பதவிகளில் இருந்தனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கமாண்டராக பதவி வகித்த அன்டன் முத்துக்குமாரு போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். காலனிய அரசாங்கத்தில் தமிழர்களுக்கு சிறப்பான இடம் அளிக்கப் பட்டதைப் போன்று தான், டச்சு காலனிய அரசாங்கத்தில் மொலுக்கு இன மக்களுக்கு சிறப்பான இடம் கிடைத்திருந்தது. இதனால், பிற இனத்தவர்கள் அவர்களை  "Belanda Hitam" (கருப்பு டச்சுக்காரர்கள்) என்று அழைத்தார்கள். 

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள், இலங்கையில் பெரும்பான்மையினமான சிங்களவர்களிடம் ஆட்சியை மாற்றிக் கொடுத்த பின்னர் தான், தமிழர் என்ற சிறுபான்மை இனத்தின் பிரச்சினைகள் ஆரம்பமாகின. இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலத்தில்,  தங்களது பதவிகள் பறிபோகாது என்று தமிழர்கள் நினைத்திருக்கலாம். அதனால், தமிழீழக் கோரிக்கையும் பல வருடங்கள் தாமதமாகவே எழுப்பப் பட்டது. ஆனால், மொலுக்கு மக்களுக்கு அந்த அவசியம் உடனேயே எழுந்தது. ஏனென்றால், இந்தோனேசியாவிற்கான டச்சு காலனிய படைகளில் (Koninklijk Nederlands Indisch Leger; சுருக்கமாக KNIL) ஏராளமான மொலுக்கு வீரர்கள் சேர்ந்திருந்தனர். சாதாரண காலாட் படையினராக இல்லாமல், அதிகாரிகள் தரத்திலும் இருந்தனர். இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் கொடுத்த நெதர்லாந்து அரசுக்கு, அவ்வளவு படையினரையும் என்ன செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. 

மொலுக்கு வீரர்கள், புதிதாக உருவான இந்தோனேசிய தேசிய இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு, நெதர்லாந்து கூறியது. ஆனால், மொலுக்கர்கள் யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தோனேசியா ஒரு சமஷ்டிக் குடியரசாக இருக்கும், அதாவது ஐக்கிய அமெரிக்கா போன்று, "ஐக்கிய இந்தோனேசியக் குடியரசுகள்" ஏற்படுத்தப் படும் என்று நெதர்லாந்து உறுதிமொழி அளித்தது. இவை எல்லாம் வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டத்திலேயே நின்று விட்டன. நடைமுறையில் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தோனேசிய அரசு, மொலுக்கு தீவுகள் மீதான இறையாண்மையை வலியுறுத்திக் கொண்டிருந்தது. 

எதிர்பார்த்த எதுவும் நடக்காததால் ஏமாந்த மொலுக்கர்கள், தாமாகவே "தென் மொலுக்கு குடியரசு" ஒன்றை பிரகடனம் செய்தனர். உலகில் எந்த நாடும், நெதர்லாந்து கூட, அந்த தனி நாட்டை அங்கீகரிக்கவில்லை. இறுதியில், இந்தோனேசிய படைகள் மொலுக்கு தீவுகளை ஆக்கிரமித்தன. அப்போதும், நெதர்லாந்து பாராமுகமாக இருந்தது.  Dr. Chris Soumokil தலைமையில் ஒரு கெரில்லா இயக்கம்,  இந்தோனேசியப் படைகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடியது. அதற்கும் நெதர்லாந்து உதவவில்லை. நட்டாற்றில் விடப் பட்ட மொலுக்கு மக்களுக்கு, நெதர்லாந்து அரசு ஒரேயொரு உதவியை மட்டும் செய்ய முன் வந்தது. 

இந்தோனேசியாவுக்கான முன்னாள் டச்சு காலனிய படையை சேர்ந்த 4000 முன்னாள் படைவீரர்களை, அவர்களது குடும்பங்களுடன் நெதர்லாந்து நாட்டில் தங்க வைப்பதாக உறுதியளித்தது. அதுவும் தற்காலிகமாகத் தான். ஆறு மாதங்களுக்கு மட்டுமே நெதர்லாந்தில் தங்கியிருந்து விட்டு, தென் மொலுக்கு பிராந்தியத்திற்கு சுயாட்சி கிடைத்த பின்னர் திரும்பி வரலாம் என்று கூறியது. நெதர்லாந்து அரசின் உறுதிமொழியை ஏற்று, 4000 படையினரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுமான 12500 பேர் நெதர்லாந்து நோக்கி கப்பலில் பயணமானார்கள். தாங்கள் மலை போல் நம்பியிருந்த காலனிய எஜமானர்கள் தங்களை ஏமாற்றுவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள் என்றோ, தென் மலுக்கு என்ற தனிநாடு பகற்கனவாக போய் விடும் என்றோ, அன்று அந்த மக்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. 

(தொடரும்)


1 comment:

Unknown said...

ஈழப் போராட்டத்தின் போது முஸ்லிம்கள் ஒதுங்கியிருந்தார்கள் என்பது தவறான கருத்து. ஏனெனில், போராட்டம் ஆரம்பித்த கால கட்டங்களில் முஸ்லிம் இளைஞர்கள் பலர், பல்வேறு காரணங்களின் நிமித்தம், போராட்டக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டார்கள். முஸ்லிம் ஊர்களில் ஒரு கட்டத்தில் இத்தகைய முஸ்லிம் புலிகளின் ஆதிக்கமும் கட்டுப்பாடும் மிகவும் மேலோங்கிக் காணப்பட்டன. மார்க்க விஷயங்களில் கூட அவர்கள் தலை போட்டார்கள். ஊரில் என்ன பிரச்சினையென்றாலும் தீர்ப்புக் கூறும் நாட்டாமைகளாக இருந்தார்கள். முஸ்லிம் பொதுமக்களும் கூட, பல வழிகளில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளார்கள். தமிழினப் போராளிகள் பலரை, பல தடவைகளில் இந்திய, இலங்கை இராணுவத்தாரிடமிருந்து காப்பாற்றியுள்ளார்கள். தற்போதுள்ள கருணா அம்மானைக் கூட, இலங்கை இராணுவம் துரத்தி வந்த போது, அவருக்குத் தொப்பி அணிவித்து, சால்வை போர்த்திக் காப்பாற்றியவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம்களின் பெருமளவான பொருளாதாரம், அவர்களது அனுமதியுடனும் பெரும்பாலும் அனுமதியின்றியும் ஈழப் போராட்டத்திற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்புக் கணிசமாகக் குறைந்தமைக்கு பல காரணங்களுண்டு. போராட்டக் குழுக்கள், தமது ஈழப் போராட்டத்தில் முஸ்லிம்களுக்குப் பங்கெதுவுமில்லை என்ற சிந்தனையின் பிரகாரம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். போராட்டங்களின் போது, முஸ்லிம் இளைஞர்களை முன்னால் தள்ளி விட்டுப் பின்னால் பதுங்கிக் கொண்டனர். முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய கல்விமான்களைக் கடத்திச் சென்று கொன்றொழித்தனர். முஸ்லிம் கிராமங்களில் புகுந்து, அவர்களது பெண்களைக் கற்பழித்து, உயிர்களைக் காவு கொண்டு, வயிற்றிலிருந்த சிசுக்களையும் கீறியெடுத்துக் கோரதாண்டவம் ஆடினர். பள்ளிவாயல் என்று கூடப் பாராது, தனது மனித வேட்டைகளை அரங்கேற்றினர். இத்தனைக்குப் பின்பும் முஸ்லிம் இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்திருப்பதில் எந்த நியாயமுமில்லை. ஈழப் போராட்டத்தில் தமிழ் போராட்டக் குழுக்கள் தம்மை இணைத்துக் கொள்ளவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முஸ்லிம்களுக்கு சில வருடங்களாயின. அவர்கள் விழித்துக் கொண்ட போது, எண்ணற்ற உயிர்களையும் சொத்துகளையும் மானங்களையும் அவர்கள் இழந்திருந்தார்கள். தாம் ஏமாற்றப்பட்டு விட்டதைப் புரிந்து கொண்ட பின், முஸ்லிம் ஊர்களில் அம்மக்கள் செய்த முதலாவது பணி, இத்தகைய போராட்டக் குழுக்களில் இணைந்து செயற்பட்ட அத்தனை முஸ்லிம் இளைஞர்களையும் பொதுமக்களாகத் திரண்டு அழித்தொழித்தமையாகும்.
எனவே, ஈழப் போராட்டத்தில் முஸ்லிம் ஒதுங்கியிருந்தார்கள் என்ற வாதம் மிகத் தவறானது. உண்மையில், முஸ்லிம்கள், தமிழ் போராட்டக் குழுக்களால் பயன்படுத்திக் கொள்ளப்பட்ட பின், ஓரங்கட்டப்பட்டார்கள் என்பதே சரியான கூற்றாகும்.