Thursday, August 07, 2014

தமிழ் அடிமைகள் : ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு

யாழ்ப்பாணத்தில் டச்சு காலனிய படையினர் வந்திறங்கிய காட்சி 

ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் சென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை. 

இன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு?  

தஞ்சையை ஆண்ட சோழர்கள், இலங்கை, இந்தோனேசியா மீது படையெடுத்து ஆக்கிரமித்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே தஞ்சையில் இருந்து, அதே இலங்கை, இந்தோனேசியாவுக்கு, தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

எந்தவொரு அரசியல்வாதியும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எந்தவொரு இலக்கியவாதியும் அது பற்றி எழுதுவதில்லை. தமிழ் அடிமைகள் பற்றி அறிந்தவர்கள் கூட, தெரியாத மாதிரி வாயை மூடிக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், தமிழ் மக்களை மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளாக மாற்றி வைத்திருக்க விரும்புவோர், உண்மைகளை பேசப் போவதில்லை.

ஆப்பிரிக்காவில் இருந்து, கறுப்பின மக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு சென்றது போல, தமிழ் நாட்டில் நடந்துள்ளது. தமிழகத்தில் அடிமைகளாக பிடிக்கப் பட்ட தமிழர்கள், பெரும்பாலும் சிறுவர்கள் என்பது மிகவும் கொடுமையானது. தமிழர்கள் மத்தியில், "பிள்ளை பிடிகாரர்கள்" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அனேகமாக, அழும் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அதைக் கூறுவதுண்டு. உண்மையிலேயே, பிள்ளை பிடி காரர்கள் காலனிய கால கட்டத்தில் இருந்துள்ளனர்.

தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், காலனிய எஜமானர்களின் கீழ் வேலை செய்யும் பிள்ளை பிடிகாரர்கள் உலாவித் திரிந்தனர். சிறு நகரங்கள், கிராமங்கள் தோறும், சந்தைகள் கூடுமிடங்களில் காணப் பட்டனர். சந்தைக்கு வரும் சிறுவர்களைப் பிடித்து சென்றனர். இதனால், ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுவர்கள் சந்தை போன்ற பொது இடங்களுக்கு செல்ல அஞ்சினார்கள். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, தமிழ் அடிமைகளை விலை கொடுத்து வாங்கி வந்தது. தமிழகத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில், அடிமைகளின் விலை மிகவும் குறைவாக இருந்தது.

தமிழர்கள் அடிமைகளான வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வதற்கு, நாம் கிழக்கிந்தியக் கம்பனி தோன்றிய கால கட்டத்திற்கு செல்ல வேண்டும். இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும், ஐரோப்பிய மாதிரி முதலாளித்துவப் பொருளாதாரம், கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஆரம்பமாகியது என்றால் அது மிகையாகாது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடம் தான், ஐரோப்பாக் கண்டத்தில் முதன்முதலாக உருவான பங்குச் சந்தை ஆகும். 

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், குறிப்பாக டச்சுக் காரர்கள் தான், தமிழகத்தில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டனர். அதற்காக, சென்னை நகரத்திற்கு வடக்கே, பழவேற்காடு எனுமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் அலுவலகம் இயங்கி வந்தது. கிழக்கிந்தியக் கம்பனி என்பது, உலகின் முதலாவது பன்னாட்டு நிறுவனம் ஆகும். அதன் பங்குதாரர்களாக, நெதர்லாந்து நிலப்பிரபுக்கள் இருந்துள்ளனர். கம்பனி என்ன தொழில் செய்தாலும், பங்குகளின் ஈவுத் (டிவிடன்ட்) தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். இதனால், கிழக்கிந்தியக் கம்பனி அதிக இலாபம் தரும் வியாபாரங்களில் ஈடுபட்டது. அடிமை வாணிபம் அதில் ஒன்று.

பழவேற்காட்டில் தளம் அமைத்த கிழக்கிந்தியக் கம்பனி, ஆரம்பத்தில் தமிழ் நாட்டு பருத்தி ஆடைகளை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தது. அந்தக் காலத்திலேயே, தமிழகத்தில் ஆடைத் தொழிற்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. தமிழகத்து பருத்தி ஆடைகள் உலகம் முழுவதும் தரமானதாக கருதப் பட்டன. டச்சுக் காரர்கள், இந்தோனேசியா, இலங்கையை  தமது காலனிகளாக்கிக் கொண்ட பின்னர் தான், அடிமைகளை வாங்கத் தொடங்கினார்கள்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவு, ஒரு காலத்தில்   "பதாவியா"(Batavia ) என்று அழைக்கப் பட்டது. அங்கே தான், ஆசியாவில் முதலாவது டச்சு காலனிய ஆட்சி நிலைநாட்டப் பட்டது.  அமெரிக்க கண்டங்களில் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பியர்கள், அங்கு வேலை செய்வதற்கு, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு சென்று குவித்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. அதே மாதிரி, பதாவியா காலனியில் (இந்தோனேசியா) வேலை செய்வதற்கு, தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு சென்றனர்.

ஐரோப்பியர்கள், ஆசிய காலனிகளில் காணப்பட்ட வளங்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டதை சரித்திர நூல்கள் எழுதி வைத்துள்ளன. ஆனால், ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளுக்கு இடையில் வணிகம் செய்தமை பற்றி, மிகக் குறைந்தளவு சரித்திரக் குறிப்புகள் மட்டுமே உள்ளன.

ஐரோப்பியர்கள், குறிப்பாக போர்த்துக்கேயர்கள் வருவதற்கு முன்னர், ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சீன மற்றும் அரேபிய வணிகர்களின் கைகளில் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகம் செய்த போர்த்துக்கேய வணிகர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், சில இடங்களில் தங்கி விட்டார்கள்.

காலப்போக்கில், போர்த்துக்கேயர்கள் அவற்றை தமது காலனிகளாக்கி, கோட்டைகளை கட்டி இராணுவ ரீதியில் பலப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில், போர்த்துகேய கப்பல்களில் கடமையில் இருந்த டச்சுக் கடலோடிகள், பிற்காலத்தில் தனியான காலனிய சக்தியாக மாறினார்கள். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக, பல இடங்களில் போர்த்துக்கேயர்களை விரட்டி விட்டு, தமது காலனிகளை உருவாக்கினார்கள்.

இலங்கையிலும் அது தான் நடந்தது. இலங்கையின் வட பகுதியும், தென் மேற்குப் பகுதியும் மட்டுமே போர்த்துக்கேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன. மத்திய பகுதியும், கிழக்குப் பகுதியும் கண்டி மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தன. போர்த்துக்கேயர்களை விரட்டுவதற்காக, டச்சுக் காரர்கள் கண்டி மன்னனுடன் கூட்டுச் சேர்ந்தனர். இரு தரப்பு ஒப்பந்தப் படி, போர்த்துக்கேயர்கள் விரட்டப் பட்ட பின்னர், அந்தப் பகுதிகளை கண்டி மன்னனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒப்பந்தங்களை முறிப்பது காலனிய வெள்ளையர்களுக்கு கைவந்த கலை. 

யாழ் குடாநாடு, மன்னார், திருகோணமலை, கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களை கைப்பற்றிய டச்சுக்காரர்கள், அவற்றை கண்டி மன்னனிடம் ஒப்படைக்காமல் தாமே ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல, போர்ச் செலவு என்று கூறி, பெரியதொரு தொகையை கண்டி மன்னன் தமக்கு செலுத்த வேண்டும் என்று பொய்க் கணக்குக் காட்டினார்கள்.  அந்தளவு பெருந் தொகையை கண்டி மன்னனால் கட்ட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதே நேரம், ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியது குறித்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவர்கள் மனதில் இருக்கவில்லை.

இலங்கைத் தீவு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை மட்டுமல்லாது, காலியும் முக்கியமான துறைமுகமாக கருதப் பட்டது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் நன்னம்பிக்கை முனையில் இருந்து கிளம்பும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிக் கொண்டு காலித் துறைமுகத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து வேறு கப்பல்கள், அந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லும்.  ஐரோப்பா முதல் இந்தோனேசியா வரையிலான கடற் போக்குவரத்துக்கு, இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது.

இலங்கையில், யானைகள், கறுவா பட்டைகள், முத்துக்கள் என்பன, டச்சுக் காலனியாதிக்கவாதிகளுக்கு முக்கிய வருமானம் ஈட்டித் தந்த ஏற்றுமதிப் பொருளாதாரமாக இருந்தது. கொழும்பில் இருந்த டச்சு காலனிய நிர்வாக எல்லைக்குள், தென்னிந்தியப் பகுதிகளும் அடங்கி இருந்தன. அதனால், தூத்துக்குடி முத்துக்களும் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகவே ஏற்றுமதி செய்யப் பட்டன. நாகபட்டினம், யாழ்ப்பாண நிர்வாகத்தின் கீழ் அடங்கி இருந்தது. 

யாழ் குடாநாட்டில் இருந்து, நாகபட்டினம் துறைமுகத்திற்கு, யானைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. (யாழ் குடாநாட்டை இணைக்கும் பகுதி யானையிறவு என்று அழைக்கப் பட்டதும் அதனால் தான்.) இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்குடன், யாழ்ப்பாண கோட்டையும், காரைநகர் ஹம்மன்ஹீல் கோட்டையும் கட்டப் பட்டிருந்தன. 

தென்னிலங்கையில், கொழும்புக்கு அருகில் உள்ள பகுதிகளில், உலகிற் சிறந்த கறுவாப் பட்டைகள் கிடைத்து வந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும், கறுவா வணிகம் முழுவதும் டச்சுக்காரர்கள் கைகளில் வந்திருந்தது. பெருமளவு வருமானத்தை ஈட்டித்தந்த, வளம் கொழிக்கும் இலங்கைத் தீவை பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தென்னிந்தியாவில் இராணுவ தளம் அமைக்கப் பட வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பனி நினைத்தது.

இருநூறு போர்வீரர்களைக் கொண்ட டச்சுக் காலனிய படை, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து நாகப் பட்டினத்திற்கு படையெடுத்துச் சென்றது. அங்கிருந்து தரை வழியாக கொச்சினுக்கு சென்றது. கேரளாவில் உள்ள கொச்சின், அன்று போர்த்துக்கேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. டச்சுப் படைகள் போர்த்துகேயர்களை விரட்டி விட்டு, அங்கே ஒரு முகாம் அமைத்துக் கொண்டன. போன காரியத்தை நிறைவேற்றி விட்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் போர்க் கப்பல்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தன. அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

டச்சு காலனிய சிறப்பு படையினர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் ஒரு சதிப்புரட்சி நடக்க இருந்தது. எப்படியோ அது கண்டுபிடிக்கப் பட்டது. டச்சு காலனியப் படைகளில் இருந்தவர்கள் தான், யாழ்ப்பாண அதிகாரத்தை கைப்பற்ற சதி செய்தனர். அனேகமாக, அன்றைய காலனியப் படையில் பெருமளவு உள்நாட்டு வீரர்களும் இருந்திருக்கலாம்.

சதிப்புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் கண்டுபிடிக்கப் பட்டு, சிரச் சேதம் செய்யப் பட்டனர். இனிமேல் சதிப்புரட்சி செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, கொடூரமான காட்சிகள் அரங்கேறின. மரங்களில் இறந்த உடல்கள் கட்டித் தொங்க விடப் பட்டன. வெட்டப் பட்ட தலைகளை ஈட்டிகளில் குத்தி, பொதுச் சந்தைகளில் காட்சிக்கு வைத்திருந்தனர்.

டச்சுக் காரர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினார்கள். அவர்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். வடக்கில் குடியேறியோர் தமிழ் மொழியும், தெற்கில் குடியேறியோர் சிங்கள மொழியும் பேசத் தொடங்கினார்கள். அதே மாதிரி, இந்தோனேசியாவில் குடியமர்த்தப் பட்ட தமிழகத்து அடிமைகள், இன்று இந்தோனேசிய மொழியை பேசுகின்றனர். சுருக்கமாக, ஐரோப்பியரால் கொண்டு செல்லப் பட்ட தமிழ் அடிமைகள், உள்ளூர் மக்களுடன் இனக் கலப்பு செய்து விட்டனர். அதனால், அவர்களது பூர்வீகத்தை கண்டுபிடிப்பது இயலாத காரியம்.

தென்னிலங்கையில், கறுவாத் தோட்டங்களில் வேலை செய்த உள்ளூர்வாசிகள் (சிங்களத் தொழிலாளர்கள்), கடுமையான உழைப்புச் சுரண்டல் காரணமாக வேலை நிறுத்தம் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த மேலதிக படையினர், கறுவாத் தொழிலாளர்களின் கலகத்தை அடக்குவதற்கு பயன்பட்டனர். அதற்குப் பின்னர், கறுவாப் பட்டைகளை உரிக்கும் தொழிலுக்கு, தமிழ் அடிமைகளை பயன்படுத்தினார்கள். பிற்காலத்தில், அந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவர்களாக மாறி விட்டனர்.

இலங்கையில், தமிழ் அடிமைகள் பல்வேறு கட்டுமான பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டனர். கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்காக, கோட்டைகளை கட்டியதிலும், பாதைகள் செப்பனிட்டதிலும், தமிழ் அடிமைகளுக்குப் பங்குண்டு. யாழ்ப்பாணம், காலியில் இன்றைக்கும் உள்ள டச்சுக் கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பினால் கட்டப் பட்டவை தான். நாடு முழுவதும் இருந்த நெல் வயல்களிலும் நிறையத் தமிழ் அடிமைகள் வேலை செய்தனர்.

புத்தளத்தை அண்டிய கடற் பகுதியில் முத்துக் குளிப்பதற்காகவும், தமிழ் அடிமைகள் கொண்டு வரப் பட்டிருக்கலாம். 1666 ஆம் ஆண்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் மேஜர் தரத்தில் இருந்த யான் வான் டெர்  லான் (Jan van der Laan), 400 படகுகளில் முத்துக் குளிப்போரைக் கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரளவில் முத்துக்கள் எடுப்பதற்காக கடலில் குதித்தனர். அனேகமாக, அவர்கள் எல்லோரும் தமிழகத்து அடிமைகளாக இருக்க வேண்டும்.

புத்தளம் கடலில் முத்துக் குளிப்பது ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்து வந்தாலும், பெருந் தொகையானோர் ஒரே நேரத்தில் கடலுக்குள் இறங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் எப்போதும் பெரியளவில் தான் சிந்திப்பார்கள். அதாவது அதிக இலாபம் சம்பாதிப்பதே அவர்களது குறிக்கோள். விளைவு? அன்றைய முத்துக்குளிப்பினால் கடல் நீர் நஞ்சாகியது. அதனால் சுமார் 1500 பேரளவில் அந்தச் சம்பவத்தில் கொல்லப் பட்டனர்.

இன்றைக்கு எங்காவது ஒரு தொழிற்துறையில் நடக்கும் விபத்தில், 1500 தொழிலாளர்கள் கொல்லப் பட்டால், அது படுகொலையாக கருதப் பட்டு உலகின் மனச் சாட்சியை உலுக்கி இருக்கும். முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு பலியானவர்கள் என்று உலகம் உணர்ந்திருக்கும். ஆனால், அன்று இறந்தவர்கள், (தமிழ்) அடிமைகள் என்பதால், உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.

அதே வருடம் (1666), வட இலங்கையில் இருந்து யானைகள் ஏற்றுமதி செய்ததன் மூலம், வருடாந்த நிகர இலாபம் கூடியது. அதனால், அந்த வருடத்து அடிமைகளின் இழப்பை விட, கிடைத்த மொத்த இலாபம் அதிகம் என்று, கிழக்கிந்தியக் கம்பனி திருப்தி அடைந்தது. இந்தக் கணக்கு, வழக்குகள் கிழக்கிந்தியக் கம்பனியால் கவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நெதர்லாந்து ஆவணக் காப்பகத்தில் வைக்கப் பட்டுள்ள, கிழக்கிந்தியக் கம்பனியின் ஆவணங்களை, நீங்கள் இன்றைக்கும் பார்வையிடலாம்.

உசாத்துணை: 
1.Het VOC-bedrijf op Ceylon, Albert van den Belt
2.Zwartboek van Nederland overzee, Ewald van Vugt


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்
2.யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு
3.தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்

1 comment:

Unknown said...

வணக்கம் ஐயா,
நெஞ்சு பொறுக்குதில்லையே... என்று பாரதி ஒரு வரியில் எழுதி விட்டார், ஆனால், என் ஆதங்கத்தை இந்த ஒரு வரியில் என்னால் வெளியிட முடியவில்லை. அன்றும் இன்றும் நமது உடல் உழைப்பை சுரண்டியே முதலாளித்துவ அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் குளிர் காய்கின்றனர்.. அன்று நம்மை அடிமைகளாக்கி சாட்டை முனையில் வேலை வாங்கினர்.. இன்று நம்மை பொறியாளர் ஆக்கி, கணினி முனையில் வேலை வாங்குகின்றனர். ஒரு சிறு உதாரணம், நம்மை வைத்து உருவாக்கிய தொழில்நுட்பத்தை வைத்து உருவாக்கிய பொருட்களை, நம்மிடமே ஒன்றுக்கு நூறு விலைக்கு விற்கின்றனர். நமது அரசாங்கத்தில் உபயோகப் படுத்தப் படும், மென்பொருட்கள், தொலைபேசிகள், கண்காணிப்பு கேமராக்கள், திருட்டு நடந்தால் சத்தம் எழுப்பும் பொருட்கள்... என்று கூறிக்கொண்டே போகலாம். இவை ஏன், இன்று வரையில் நாஸாவில் பணியாற்றும் 35% ஊழியர்கள் இந்தியர்களே...
நம்மை கேனையன்களாக்கி, நம் மக்களின் உழைப்பைச் சுரண்டி, நம்மிடம் விற்றே கொள்ளை லாபம் பார்க்கும் இவர்களை என்ன செய்யலாம்... ரத்தம் கொதிக்கிறது.