Showing posts with label ஹிட்லர். Show all posts
Showing posts with label ஹிட்லர். Show all posts

Saturday, March 27, 2021

சீமானுக்கும் ஹிட்லருக்கும் இத்தனை ஒற்றுமைகளா?

 


அதிசயம் ஆனால் உண்மை! 
சீமானுக்கும் ஹிட்லருக்கும் இடையிலான ஒற்றுமைகள்

  • ஹிட்லரின் குடும்பத்தில் யூதக் கலப்பு இருந்தது என்று வதந்திகள் உலாவின. அடோல்ப் ஹிட்லரின் தாத்தா பெயர் யாருக்கும் தெரியாது. அவரது பாட்டி ஒரு யூத செல்வந்தர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். ஆகையினால் அடோல்ப் ஹிட்லரின் தந்தை ஆலோயிஸ் ஹிட்லர் உண்மையில் திருமணத்திற்கு புறம்பான உறவில் பிறந்திருக்கலாம். அவரது தந்தை ஒரு யூதராக இருக்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் ஹிட்லரின் உறவினர்களின் DNA எடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில், வட ஆப்பிரிக்க அரேபியர்கள், அல்லது மத்திய கிழக்கை பூர்வீகமாக கொண்ட அஷ்கனாசி, செபெர்டிம் யூதர்களின் DNA உடன் ஒத்துப் போவது தெரிய வந்தது. ஆகவே உண்மையில் யூதக் கலப்பில் பிறந்த ஹிட்லர் தான் தீவிரமாக ஜேர்மனிய இனத்தூய்மை பேசி வந்தார். ஒருவேளை அவர் இதன் மூலம் தன்னைத் தானே தூய்மைப் படுத்திக் கொள்ள நினைத்திருக்கலாம். உண்மையில் அந்தக் காலத்தில் யூத இனக்கலப்பு கொண்ட ஜெர்மனியர்கள் ஏராளம் பேர் இருந்தனர். 

  • சீமான் குடும்பத்தில் மலையாளிக் கலப்பு இருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. ஏற்கனவே சிலர் இது குறித்த ஆதாரங்களை தேடி உள்ளனர். உண்மையில் DNA சோதனை செய்து பார்த்தால், சீமானும், அவரது நாம் தமிழர் கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் தமிழர்கள் அல்ல என்பது நிரூபிக்கப் படும். ஆனால் அவர்கள் தான் இன்று மிகத் தீவிரமாக தமிழினத் தூய்மை குறித்து பேசி வருகின்றனர். 

  • ஹிட்லரின் கொள்கை ஜெர்மனிய இனத்தை மட்டும் தூய்மைப் படுத்துவதோடு நின்று விடவில்லை. ஜெர்மன் மொழியையும் தூய்மைப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். ஜெர்மன் மொழியில் அன்றாட பாவனையில் இருந்த யூதர்களின் ஹீபுரு மொழிச் சொற்கள் அகற்றப் பட்டன. அத்துடன் நவீன ஜெர்மன் மொழியில் ஏராளமான பிரெஞ்சு சொற்கள் கலந்திருந்தன. அவற்றிற்கு பதிலாக தூய ஜெர்மன் சொற்கள் கொண்டு வரப் பட்டன. 

  • சீமானின் கொள்கை தமிழ் இனத்தை மட்டும் தூய்மைப் படுத்துவதோடு நின்று விடவில்லை. தமிழ் மொழியை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். தமிழ் மொழியில் அன்றாட பாவனையில் இருந்த சம்ஸ்கிருத, ஆங்கில சொற்களுக்கு பதிலாக தூய தமிழ்ச் சொற்கள் கொண்டு வரப் பட்டன. 

  • ஹிட்லர் இளம் வயதில் எந்த விதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. அவர் எதிர்காலத்தில் ஓர் ஓவியக் கலைஞராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக வியன்னா சென்று கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். சிறிது காலம் ஓவியங்கள் வரைந்து விற்று வருமானம் ஈட்டினார். 

  • சீமான் இளம் வயதில் எந்தவிதமான அரசியல் ஆர்வத்தையும் காட்டவில்லை. எதிர்காலத்தில் ஒரு சினிமா டைரக்டராக வருவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக சென்னைக்கு சென்று சிறிது காலம் சினிமாத் துறையில் வேலை செய்து வந்தார். அதன் மூலம் வருமானம் ஈட்டினார். 

  • ஹிட்லர் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். ஆனால் பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தை ஆதரித்தார். மரபுவழி கிறிஸ்தவ மதம் யூதர்களின் கதைகளை கூறும் பழைய ஏற்பாட்டை பைபிளின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தனர். அதனால் "யூதக் கலப்பு" இல்லாத புரட்டஸ்தாந்து கிறிஸ்தவம் மட்டுமே ஜெர்மனியர்களின் மதம் என்பது ஹிட்லரின் கொள்கையாக இருந்தது. 

  • சீமான் இளம் வயதில் இருந்தே ஒரு நாஸ்திகராக இருந்து வந்தார். திராவிடர் கழக கூட்டங்களிலும் உரையாற்றினார். ஆனால், பிற்காலத்தில் அரசியலில் இறங்கியதும் இந்து மதத்தை ஆதரித்து முப்பாட்டன் முருகன் என்று கொண்டாடினார். "ஆரியக் கலப்பு" இல்லாத சைவ சமயம் மட்டுமே தமிழர்களின் மதம் என்பது சீமானின் கொள்கையாக இருந்தது. 

  • ஹிட்லர் அரசியலுக்கு வந்த காலத்தில் ஜேர்மனிய தேசியவாதிகளின் ஆயுதப்போராட்ட கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவை ஆதரித்த குற்றத்திற்காக மியூனிச் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனை குறைக்கப் பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயக பாதையைத் தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட "ஜெர்மன் தேசிய சோஷலிச தொழிலாளர் கட்சி" (NSDAP) என்ற அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார். 

  • சீமான் அரசியலுக்கு வந்த காலத்தில் தமிழீழ தேசியவாதிகளின் ஆயுதப்போராட்ட கொள்கையை ஆதரித்து வந்தார். அரசுக்கு எதிரான ஆயுதக்குழுவை ஆதரித்த குற்றத்திற்காக வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார். ஆனால், சிறையில் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக தண்டனை குறைக்கப் பட்டு குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் வன்முறைப் புரட்சியை நிராகரித்து, ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்தார். தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்ட "நாம் தமிழர் கட்சி" (NTK) எனும் அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தார். 

  • ஹிட்லர் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப்பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் "எனது போராட்டம்" என்ற பெயரில் நூலாக வெளியானது. நாசிக் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர். 

  • சீமான் சிறையில் இருந்த காலத்தில் அவரது அரசியல் வாழ்வில் தான் கண்டவற்றையும், அவரது இனவாத உலகப்பார்வையும் சேர்த்து, தனது உள்மனப் போராட்டங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக எழுதி வந்தார். அந்தத் தொகுப்பு பின்னர் "திருப்பி அடிப்பேன்" என்ற பெயரில் நூலாக வெளியானது. நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அந்த நூலை விரும்பி வாசித்து வந்தனர். 

  • நாஸிக் கட்சியான NSDAP ஹிட்லர் உருவாக்கியது அல்ல. ஹிட்லர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, அது போன்று பல ஜெர்மன் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப் படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த NSDAP கட்சியை ஹிட்லர் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் ஹிட்லரின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், NSDAP கட்சி பவாரியா மாநிலத்தில் பிரபலமானது. 

  • நாம் தமிழர் கட்சி சீமான் உருவாக்கியது அல்ல. அது சி.பா. ஆதித்தனார் உருவாக்கிய இயக்கம். சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, தமிழகத்தில் அது போன்ற பல தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அவை மக்களால் கவனிக்கப் படாத மிகச் சிறிய அமைப்புகள். அவர்களை யாரும் பொருட்படுத்தவில்லை. ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு கவனிக்கப்படாமல் இருந்த நாம் தமிழர் கட்சியை சீமான் பொறுப்பேற்று அதற்கு மறுவாழ்வு கொடுத்தார். மக்களை கவரும் வகையில் பேசும் சீமானின் உணர்ச்சியைத் தூண்டும் உரைகளால், நாம் தமிழர் கட்சி தமிழ் நாடு மாநிலத்தில் பிரபலமானது. 

  • நாசிக் கட்சி கொடியில் உள்ள ஸ்வஸ்திகா சின்னம் கூட ஹிட்லரின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தூலே கேமைன்ஷாப் போன்ற சில அமைப்பினரால் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப் பட்டது. ஹிட்லர் ஸ்வஸ்திகா சின்னத்தை மறு பக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். நாஸிக் கொடியில் உள்ள கருப்பு, வெள்ளை, சிவப்பு வர்ணங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஜெர்மன் சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது. 

  • நாம் தமிழர் கட்சிக் கொடியில் உள்ள புலிச் சின்னம் சீமானின் கண்டுபிடிப்பு அல்ல. அது ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளினால் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் இயங்கிய சில தமிழ்த் தேசிய இயக்கங்களாலும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப் பட்டது. சீமான் புலிச் சின்னத்தை மறுபக்கம் திருப்பி வரைந்து அதைத் தனது கட்சிக் கொடியாக்கிக் கொண்டார். புலிக்கொடி நூறாண்டுகளுக்கு முன்பிருந்த சோழ சாம்ராஜ்யத்தின் கொடியாக இருந்தது. 

  • ஹிட்லர் வாழ்ந்த காலத்தில், "சியோன் ஞானிகளின் இரகசியக் காப்புவிதிகள்" என்ற நூல் பிரபலமாக இருந்தது. அது இலுமினாட்டிக் கதை போன்று புனைவுகளால் எழுதப்பட்டது. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, யூதர்கள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப் பட்டன. அதை உண்மை என ஹிட்லர் நம்பினார். அதனால் யூதர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து ஜேர்மனிய மக்களை பாதுகாக்கப் போவதாக சொல்லிக் கொண்டார். 

  • சீமான் வாழும் காலத்தில் இலுமினாட்டிகள் பற்றிய புனை கதைகள் பிரபலமாக இருந்து வருகின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனங்களின் பின்னால் இருந்து கொண்டு, இலுமினாட்டிகள் தான் உலகை ஆள்வதாக வதந்திகள் பரப்பப் பட்டன. அதை உண்மை என சீமான் நம்பினார். அதனால் இலுமினாட்டிகள் ஆதிக்கத்தில் உள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ நிறுவனங்களிடம் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கப் போவதாக சொல்லிக் கொள்கிறார். அன்று ஹிட்லர் யூதர்கள் என்று நேரடியாக சொன்னதை, இன்று சீமான் இலுமினாட்டிகள் என்று மறைமுகமாக சொல்கிறார். ஆனால், இருவரும் ஒரே விடயத்தை பற்றித் தான் பேசுகின்றனர்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:

Friday, March 12, 2021

சீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள்



ஹிட்ல‌ர் & சீமான், வித்தியாச‌ம் க‌ண்டுபிடிக்க‌வும்: 

ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில் ஆட்சியில் இருந்த‌ ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி(SPD) ஜெர்ம‌னிய‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். ஜெர்ம‌னியை ஆள்ப‌வ‌ர்க‌ள் யூத‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ SPD தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் யூத‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் பிரெஞ்சு இராணுவ‌த்தால் ஜெர்ம‌னிய‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கின‌ர். (முத‌லாம்) உல‌க‌ப் போரில் ந‌ட‌ந்த‌ ஜெர்ம‌ன் இன‌ப்ப‌டுகொலையின் சூத்திர‌தாரிக‌ள் SPD, மார்க்சிய‌வாதிக‌ள் ம‌ற்றும் யூத‌ர்க‌ள் தான். 

சீமான்: ஈழ‌ப் போரில் புலிக‌ள் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் டெல்லியில் ஆட்சியில் இருந்த‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். த‌மிழ்நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் தெலுங்க‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ திராவிட‌க் க‌ட்சிக‌ளின் தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தெலுங்க‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் சிறில‌ங்கா அர‌ச‌ ப‌டைக‌ளால் த‌மிழ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கினார்க‌ள். ஈழ‌ப்போரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலைக்கு கார‌ண‌ம் காங்கிர‌ஸ், திராவிட‌வாதிக‌ள், ம‌ற்றும் தெலுங்க‌ர்க‌ள் தான். 

*****

- ஹிட்லர் ஜெர்மன் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் ஆஸ்திரிய நாட்டு பிரஜை. அன்றைய ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் பல மொழிகளை பேசும் இனங்கள் இருந்தன. ஹிட்லர் ஒரு ஆஸ்திரிய பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் அன்று பிரஷிய ராஜ்ஜியமாக கருதப்பட்ட ஜெர்மனி பற்றியதாக இருந்தது. 

- சீமான் தமிழ் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் இந்தியப் பிரஜை. இன்றைய இந்தியாவில் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இருக்கின்றன. சீமான் ஓர் இந்தியப் பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர் பற்றியதாக இருக்கின்றது.

 - ஹிட்லர் ஆஸ்திரியாவில் இருந்து ஜெர்மனி சென்று, சக்கரவர்த்தியின் இராணுவத்தில் தானாகப் போய்ச் சேர்ந்தார். அவர் யுத்தகளத்தில் நின்றாலும் எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடவில்லை. போர் நடந்த இடத்திற்கு வெகுதூரம் தள்ளி பங்கருக்குள் இருந்து விட்டு, பிற்காலத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். அன்று இராணுவ வீரர்களாக இருந்த பலருக்கு ஹிட்லரின் புளுகுகள் எல்லாம் தெரிந்திருந்தன.

 - சீமான் இந்தியாவில் இருந்து, இலங்கையில் புலிகளின் பிரதேசத்திற்கு சென்று போர்க்களத்தில் நின்று விட்டு வந்தார். ஆனால் வன்னியில் சீமான் நின்ற இடம் போர் நடந்த இடத்தில் இருந்து வெகு தூரம். எந்தச் சண்டையும் நேரில் காணவில்லை. பிற்காலத்தில் சீமானும் ஈழத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். முன்னாள் புலிப் போராளிகள் பலருக்கு சீமானின் புளுகுகள் எல்லாம் தெரியும்.

 - ஹிட்லர், சீமான் இருவரும் சிறந்த பேச்சாளர்கள். கைகளை உயர்த்தி, நரம்பு புடைக்க, சத்தமிட்டுப் பேசும் குணவியல்பைக் கொண்டவர்கள். இன உணர்வைத் தூண்டும் வகையில் உணர்ச்சிவசமாகப் பேசி மக்களைக் கவரும் வல்லமை பெற்றிருந்தனர். 

 - அன்றைய காலகட்டத்தில் ஹிட்லரின் பேச்சுக்களை கேட்டவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைத்தார்கள். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரித்தார்கள். அதே மாதிரி, இன்று சீமானின் பேச்சுக்களை கேட்பவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைக்கின்றனர். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரிக்கின்றனர். 

 - ஜெர்மன் குடியரசில் இரகசியமாக கூட்டம் கூடி வந்த சட்டவிரோத தீவிர ஜெர்மன் தேசியவாத அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்ட ஆள் தான் ஹிட்லர். மியூனிச் நகரில் கூட்டம் ஒன்றுக்கு காவல்துறைக்காக குறிப்பெடுக்க சென்று கொண்டிருந்த ஹிட்லர், பின்னர் அவர்களின் கொள்கைகளால் கவரப் பட்டு அங்கத்தவராக சேர்ந்து கொண்டார். ஆளுமை மிக்க பேச்சுகள் மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்தார். பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள் ஹிட்லரால் கவரப் பட்டனர்.

 - தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களின் விளைவாக, தமிழ்நாட்டில் இரகசியமாக இயங்கிய தீவிர தமிழ்த்தேசிய அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப்பட்டவர் தான் சீமான். 2009 ஆண்டளவில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொண்டு, தனது ஆளுமை மிக்க பேச்சுக்கள் மூலம் பலரை ஈர்த்தார். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் சீமானால் கவரப் பட்டனர்.

 - அன்று ஜெர்மனியில் இருந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள் குறிப்பிட்ட அளவு மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே பெற்றிருந்தனர். அதனால் வளர முடியவில்லை. ஏனெனில் அவர்களது ஆதரவுத்தளமாக இருந்த மத்தியதரவர்க்க, பணக்கார வர்க்கத்தினர் மிகச் சிறுபான்மையினர். ஹிட்லர் ஒரு வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தார். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்து, சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசினார். அது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் ஹிட்லரின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே உலகப்போரில் வென்ற நாடுகள் ஜெர்மனி மீது விதித்த பொருளாதாரத் தடை காரணமாக, அன்று ஏராளமான ஜெர்மன் விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர்.

 - இன்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகள், பிராமணர்கள், உயர்சாதியினர், செல்வந்தர்கள் போன்ற மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளனர். அதனால் வளர முடியவில்லை. சீமான் சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசுகிறார். இது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் சீமானின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக ஏராளமான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

 - அன்று ஜெர்மனிக்கு வெளியே பல ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஜெர்மன் இனத்தவர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர். ஆஸ்திரியா தவிர செக்கோஸ்லாவாக்கியா, போலந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா என்று பல நாடுகளில் ஜெர்மனியர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பலர் ஹிட்லரை தமது இனத்தின் மீட்பராக பார்த்தனர். அதனால் நிறையப் பணம் அனுப்பினார்கள்.

 - இன்று பல மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் சீமானுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்தியா, இலங்கைக்கு வெளியே பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் சீமானை தமது இனத்தின் மீட்பராக பார்க்கின்றனர். அதனால் நிறையப் பணம் அனுப்புகிறார்கள். 

Saturday, March 30, 2019

"ஒரு தேசியத் தலைவரின் தோற்றம்" - இது ஒரு ஜெர்மன் கதை!

இது ஒரு ஜேர்ம‌ன் க‌தை: 
  • அரசியல் படுகொலைகள். 
  • இனத்தை காட்டிக் கொடுத்த துரோகிக‌ளை களையெடுத்தல். 
  • ஒரு தேசிய‌த் த‌லைவ‌ரின் தோற்ற‌ம். 
  • ஏக‌ பிர‌திநிதி உரிமை கோர‌ல். 
  • தேசியவாத கொள்கை உட‌ன்பாடு கொண்ட‌ பிற‌ இய‌க்க‌ங்க‌ள் மீதான‌ த‌டை. 
  • ஏக பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாத மாற்று இயக்கத்தவர் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கை. 

இவை இருப‌துக‌ளில், முப்ப‌துக‌ளில் ஜேர்ம‌ன் வ‌ர‌லாற்றில் இட‌ம்பெற்ற‌ அர‌சிய‌ல் மாற்ற‌ங்க‌ள் அல்ல‌து ச‌ம்ப‌வ‌ங்க‌ள். ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் இன்றைய உலக நடப்புகளை நினைவுபடுத்துகின்றன. இந்தத் தகவல்கள் வெளியுலகில் அதிகமாக அறியப் படவில்லை.

முதலாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி தனது ஜென்ம விரோதியான பிரான்சிடம் தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், நட்பு நாடுகளுடன் சேர்ந்து சமாதான ஒப்பந்தம் செய்வதற்கு ஜெர்மனியை அழைத்தது. பிரான்சில் வெர்சேய் எனும் இடத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு சென்ற ஜெர்மன் அரசுப் பிரதிநிதிகள், புகையிரதம் மூலம் அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்கள் போகும் வழியில் இருந்த பிரெஞ்சுக் கிராமங்களில் ஜெர்மன் படைகள் நடத்திய பேரழிவுகளை பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டனர்.

சமாதான ஒப்பந்தம் கூட வெற்றி பெற்ற நாடுகளின் உத்தரவுகளுக்கு அடிபணிவதாகத் தான் எழுதப் பட்டிருந்தது. உதாரணத்திற்கு சில: ஜெர்மனி பில்லியன் டாலர் கணக்கான பணத்தை வெற்றி பெற்ற நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். ஜெர்மனி தனக்கென இராணுவம், விமானப்படை எதுவும் வைத்திருக்க முடியாது. அல்சாஸ், லொரேன் ஆகிய மாகாணங்களை பிரான்ஸிற்கு கொடுக்க வேண்டும். அதைவிட ஜெர்மனிக்கு பெருமளவு ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தந்த நிலக்கரி சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப்படும். ஜெர்மனிக்கு சொந்தமான ஆப்பிரிக்க காலனிகளை பிரிட்டனுக்கும், பிரான்சிற்கும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மேற்படி சமாதான ஒப்பந்தம் அந்நியருக்கு தேசத்தை அடமானம் வைக்கும்செயல் என்பது தெரிந்த போதிலும், ஜெர்மன் அரசுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திட மறுத்தால் மீண்டும் போர் மூண்டு ஜெர்மனி முழுவதும் ஆக்கிரமிக்கப் படும் அபாயம் இருந்தது. அதற்கு மாறாக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால், தேசத்தை மறுசீரமைப்பதற்கு சிறிது கால அவகாசம் கிடைக்கும். இதனால் ஜெர்மன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டது.

தற்போது ஜெர்மன் அரசுக்கு புதிய நெருக்கடிகள் உருவாகின. அதுவரை காலமும் அரசுக்கு விசுவாசமாக போரிட்டு வந்த தேசியவாத இராணுவ அதிகாரிகள் இதை மிகப் பெரிய துரோகமாகப் பார்த்தனர். "அந்நியருக்கு நாட்டை அடகு வைத்த ஜெர்மன் இனத் துரோகிகள்" மீதான வெறுப்புணர்வு அன்று சமூகத்தின் பல மட்டங்களிலும் பரவி இருந்தது. இத்தகைய பின்னணியில், தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி இருந்தன. முதல் கட்டமாக, "இனத் துரோகிகளை களையெடுப்பது" அந்த தீவிரவாத இயக்கங்களின் நோக்கமாக இருந்தது.

நாஸிகளின் SA இயக்கம் மட்டுமல்லாது, Stahlhelm, Jungdo என்று பல தீவிர தேசியவாத இயக்கங்கள் இரகசியமாக இயங்கி வந்தன. அவற்றின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையாளும் பயிற்சி பெற்றிருந்தனர். பல இடங்களில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தன. பவாரியா மாநிலத்தின் பொலிஸ் மா அதிபர், வலதுசாரி தீவிரவாதக் குழுக்களை ஆதரித்த படியால், அங்கிருந்து தான் பல அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்தன.

முதலாம் உலகப்போரின் முடிவில் ரஷ்யா மாதிரி, ஜெர்மனியிலும் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெடித்தது. ஆனால், ஜெர்மன் அரசு Freikorps எனும் கூலிப்படையை அனுப்பி புரட்சியை நசுக்கியது. அதன் பிறகு, கம்யூனிஸ்டுகள் நீண்டதொரு ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்த படியால் அரசுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அதற்கு பதிலாக, தீவிர வலதுசாரி- தேசியவாதிகள் மத்தியில் இருந்து அரசுக்கு அச்சுறுத்தல் வந்தது.

ஒரு காலத்தில் அரசின் கூலிப்படையாக செயற்பட்ட Freikorps படையினர், திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றுப் போயினர். அதன் விளைவாக, Freikorps தடைசெய்யப் பட்ட படியால்,OC என்றொரு இரகசிய இயக்கம் உருவாக்கப் பட்டது. சுருக்கமாக OC என்று அழைக்கப்பட்ட இயக்கத்தின் பெயர் "அமைப்புக் குழு". தேசப்பற்று, வெர்சேய் ஒப்பந்த எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு, இனவுணர்வு போன்றவற்றை கொள்கைகளாக கொண்டிருந்த OC இயக்கம், அரசியல் படுகொலைகள் மூலம் தனது இலக்கை அடைய எண்ணியது.

அவர்கள் ஜெர்மன் இனத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், துரோகிகளை களையெடுப்பது அவசியம் என்று கருதினார்கள். பண்டைய ஜெர்மன் சொல்லான பெமே(Feme) என்ற சொல்லின் மூலம் தமது செயல்களை நியாயப் படுத்தினார்கள். பண்டைய ஜெர்மன் சமுதாயத்தில் காணப்பட்ட பெமே நீதிமன்றம், நம்மூர் பஞ்சாயத்து போன்றது. அங்கு வரும் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்ப்பு வழங்கப் படும். அவை சிலநேரம் கொடூரமான தண்டனைகளாகவும் இருக்கலாம். அது மாதிரி, "துரோகிகளுக்கு மரணதண்டனை" என்பது தான் OC அமைப்பினரின் கோஷமாக இருந்தது.

1921 - 1922 ஆகிய இரண்டு வருடங்களுக்குள், ஜெர்மனியில் 350 க்கும் மேற்பட்ட "எதிரிகள்" அல்லது "துரோகிகள்" OC இயக்கத்தால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள், காட்டிக் கொடுத்தவர்கள், இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று பலர் OC வன்முறைக்கு பலியானார்கள். அவர்களில் சிலர் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள். சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கம்யூனிசப் புரட்சியில் பங்கெடுத்த USPD தலைவர்கள் இருவர் தெருவில் சுட்டுக் கொல்லப் பட்டனர். USPD என்பது, அன்று ஆளும் கட்சியாக இருந்த சமூக ஜனநாயகவாத SPD இலிருந்து பிரிந்த மார்க்சியவாத குழுவினர் ஆவர்.

அதைவிட சில வலதுசாரி அரசியல்வாதிகளும், வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியானார்கள்! அவர்களில் ஒருவர் மாதியாஸ் ஏர்ஸ்பேர்கர்(Mathias Erzberger). கத்தோலிக்க மதப்பற்றாளர். (வலதுசாரி) மத்திய கட்சியின் தலைவர். அவர் போருக்கு எதிராக குரல் கொடுத்த படியாலும், சமாதான தீர்வுத் திட்டத்தை ஆதரித்த படியாலும், தீவிர ஜெர்மன் தேசியவாதிகளால் ஒரு துரோகியாகக் கருதப் பட்டார். அவர் தனது நண்பருடன், மலைப் பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரம் இரண்டு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். அந்த இரண்டு கொலையாளிகளும் வேறு பெயரில் போலிப் பாஸ்போர்ட் செய்து ஹங்கேரிக்கு சென்று பதுங்கி இருந்தனர்.

இருப்பினும், OC வலதுசாரி பயங்கரவாதத்திற்கு பலியான இன்னொரு வலதுசாரி அரசியல்வாதியின் படுகொலை அதுவரை காலமும் நடந்து கொண்டிருந்த அரசியல் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பிரபல தொழிலதிபராகவும் அமைச்சராகவும் இருந்த வால்டர் ராதேனவ் (Walther Rathenau) வெர்சேய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமைக்காக தீர்த்துக் கட்டப்பட்ட "துரோகிகளில்" முக்கியமானவர். அத்துடன் அவர் ஒரு பணக்கார யூதராகவும் இருந்த படியால் மேலதிக வெறுப்புக்கு ஆளாகி இருந்தார்.

ராதேனவ் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பெரும் பணம் சம்பாதித்து இருந்தாலும், அவரது அரசியல் இடதுசாரி தன்மை கொண்டதாக இருந்தது. தானும் ஒரு முதலாளி என்ற மமதை இன்றி, நலன்புரி அரசை உருவாக்கி அடித்தட்டு மக்களையும் முன்னேற்றும் வகையில் செல்வத்தை பங்கிட விரும்பியவர். இதற்காக பணக்காரர்கள் மீது அதிகளவு வரி விதிக்கும் திட்டத்தையும் முன்மொழிந்தார். ஐரோப்பிய சந்தைகளை ஒன்று சேர்க்கும் பொருளாதார ஒன்றியம் பற்றிய சிந்தனை கூட அவரிடம் இருந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியது. அத்தகையதொரு அரசியல்வாதி அன்றைய ஜெர்மன் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததில் வியப்பில்லை.

ஒரு நாள், பெர்லின் நகரில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள தெருவொன்றில், காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் ராதேனவ்  சுட்டுக் கொல்லப் பட்டார். பட்டப் பகலில் இன்னொரு காரில் இருந்த படியே பிஸ்டலால் சுட்டுக் கொன்ற கொலையாளிகள், சம்பவத்தை கண்டு அங்கு கூடிய மக்கள் வெள்ளத்திற்குள் கலந்து தப்பிச் சென்று விட்டனர். ராதேனவ் கொலை செய்யப்பட செய்தி நாடு முழுவதும் எதிரொலித்தது. பெர்லின் நகர மத்தியில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜெர்மன் மக்களின் எதிர்ப்புணர்வு தங்களுக்கு எதிராக திரும்பி இருப்பதை கண்டுகொண்ட கொலையாளிகள் வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சித்தார்கள். அது நிறைவேறாத படியால், தீவிர வலதுசாரி நண்பர்களின் வீடுகளில் அடைக்கலம் கோரினார்கள். ஆனால், யாருமே அவர்களுக்கு உதவவில்லை. அவர்களை கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு இலட்சக்கணக்கான பணம் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனால் ஊருக்குள் செல்லப் பயந்து காடுகளுக்குள் சுற்றித் திரிந்தார்கள்.

இறுதியில் ராதேனவ் கொலையாளிகள் ஹல்லே நகருக்கு அருகில் இருந்த பாழடைந்த கோட்டை ஒன்றுக்குள் ஒளிந்திருந்தனர். அந்த இடத்தில் வெளிச்சத்தை கண்ட ஊர் மக்கள் பொலிசிற்கு அறிவித்து விட்டனர். அதையடுத்து பெரும் பொலிஸ் படை வந்து கோட்டையை முற்றுகையிட்டது. தாம் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்ட கொலையாளிகள் துப்பாக்கியுடன் வெளியே வந்து, அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் அரசியல் கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து பொலிசாருடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். ஒருவன் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானான். மற்றவன் தன்னைத் தானே சுட்டுக் கொன்றான்.

இந்தச் சம்பவம் நடந்து பதினொரு வருடங்களுக்குப் பிறகு, ஜெர்மனியில் நாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தனர். நாஸிகள் அந்த இரண்டு கொலையாளிகளையும் "தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள்" என்று கௌரவித்தனர். அவர்கள் கொல்லப் பட்ட கோட்டையில், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நினைவுகூரும் வைபவம் நடைபெற்றது. ஹிட்லரின் அரசில் அமைச்சராக இருந்த ஹிம்லர், "மாவீரர்களின்" சமாதியில் மலர் வளையம் வைத்து விட்டு உரையாற்றினார். "தாயகத்திற்காக தம்முயிர் ஈந்த மாவீரர்களின் தியாகம் வீண்போகவில்லை என்றும், தற்போதைய ஜெர்மன் தேசிய இராணுவத்தினர் அவர்களது ஆன்மாவை கொண்டிருப்பதாகவும்" புகழாரம் சூட்டினார்.

முப்பதுகளின் தொடக்கத்தில், அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவுகள் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியையும் பாதித்தது. முதலாம் உலகப்போர் நடந்த காலத்தில் கூட எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத ஜெர்மன் பணக்கார வர்க்கத்தினர், நிதி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். பலரது செல்வம் ஒரே நாளில் மறைந்து ஏழைகள் ஆனார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஜெர்மனியில் பல்வேறு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக போராடின.

ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகளின் இடதுசாரி சிவப்பு முன்னணிப் படையினர் மீண்டும் தெருக்களில் நடமாடினார்கள். ஹிட்லரின் கீழ் இயங்கிய SA, மற்றும் பல வலதுசாரி ஆயுதக் குழுக்கள், ஒரு பக்கம் சிவப்பு முன்னணிக்கு எதிராகவும், மறுபக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் போராடிக் கொண்டிருந்தனர். இந்தத் தருணத்தில் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்ற நாஸிக் கட்சியை அரசமைக்க வருமாறு ஜெர்மன் ஜனாதிபதி அழைத்தார்.

ஹிட்லர் தேர்தல் ஜனநாயகப் பாதையில் தெரிவுசெய்யப் பட்டிருந்தாலும், அதிகாரத்தை கைப்பற்றியவுடன் பிற கட்சிகள் அனைத்தையும் தடை செய்தார். அதே நேரம் நாஸிக் கட்சிக்குள்ளேயும் முரண்பாடுகள் நிலவின. நீண்ட காலமாக தனித்து இயங்கி வந்த பல்வேறு வலதுசாரி தீவிரவாத அமைப்புகள் நாஸிக் கட்சியுடன் பொது உடன்பாட்டைக் கொண்டிருந்தாலும் ஒரே கட்சியாக கலந்து விடவில்லை. குறிப்பாக, பழைய Freikorps உறுப்பினர்கள் ஹிட்லரின் தலைமையை ஏற்க மறுத்தனர்.

அதுவரை காலமும் ஜெர்மனியில் இருந்து வந்த ஜனநாயக அமைப்புகள், தேர்தல்கள் எல்லாவற்றையும் நாஸிகள் தடைசெய்து விட்டனர். ஜனாதிபதி, பிரதமர் முறைமை ஒழிக்கப் பட்டு, ஹிட்லர் தேசியத் தலைவர் (Führer) ஸ்தானத்திற்கு உயர்த்தப் பட்டார். நாஸிகள் மட்டுமே ஜெர்மன் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும், ஹிட்லர் மட்டுமே ஜெர்மனியரின் தேசியத் தலைவர் என்பதையும், ஏனைய தேசியவாத அமைப்புகள் ஏற்றுக் கொள்ள மறுத்தன.

"நீளமான கத்திகளின் இரவு" (Nacht der langen Messer, 30 June - 2 July 1934) என்று அழைக்கப்படும் நாட்களில் ஹிட்லரின் தலைமைத்துவத்திற்கு சவாலாக விளங்கிய மாற்று இயக்கத்தினர் களையெடுக்கப் பட்டனர். அவர்கள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றதாக குற்றம் சுமத்தப் பட்டது. மாற்று இயக்கத் தலைவர்கள், முக்கிய உறுப்பினர்கள், ஹிட்லரின் கையாட்களால் வீடு வீடாக தேடிச் சென்று தீர்த்துக் கட்டப் பட்டனர். குறைந்தது நூறு பேராவது அன்று நடந்த களையெடுப்பில் கொல்லப் பட்டனர்.

ஜெர்மன் தேசியவாதம் ஹிட்லருடன் தொடங்கவில்லை. ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன. தேசாபிமானம், இனவுணர்வு போன்ற கொள்கை அடிப்படையில் அரசியல் செயற்பாடுகளை கொண்டிருந்தன. தேர்தல் அரசியலில் மட்டுமல்லாது, ஆயுத வன்முறைகளிலும் ஈடுபட்டன. அரசியல் படுகொலைகளை புரிந்தன.

நாஸிகள் அல்லாத ஏனைய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் ஆயுதப் போராட்டம் தனிநபர் பயங்கரவாதம் என்ற அளவில் தான் இருந்தது. அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஜெர்மன் தேசியத்தின் பேரில் போராடிய பல நூறு இளைஞர்களின் தியாகங்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் ஹிட்லர் மட்டும் தான். SA, OC போன்ற வலதுசாரி தீவிரவாதக் குழுக்களின் போராட்டங்களின் விளைவாகாத் தான் ஹிட்லர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார். 

அந்தக் காலகட்டத்தில் ஹிட்லரை தமது மீட்பராகக் கண்ட பல்வேறு  வலதுசாரி தீவிரவாதக் குழுக்கள், ஹிட்லரின் நாஸிக் கட்சியுடன் சேர்ந்து இயங்குவதற்கு ஆர்வம் காட்டின. அவற்றிற்கு இடையில் ஐக்கிய முன்னணி கூட ஏற்பட்டிருந்தது. ஆனால், ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்து ஜெர்மன் மக்களுக்கும் தானே தேசியத் தலைவர், தனது நாஸி கட்சியே ஏக பிரதிநிதிகள் என்றும் அறிவித்துக் கொண்டார். அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களை துரோகிகளாக்கி தீர்த்துக் கட்டினார். காலப்போக்கில் அதையெல்லாம் மறந்து விட்ட ஜெர்மன் மக்கள், ஹிட்லரை தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டனர்.

இது ஒரு ஜெர்மன் கதை.

Wednesday, May 27, 2015

நாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்! இந்தியர்களை அவமதித்த இனப்படுகொலையாளி!


தமிழ் நாஸிகள்? 
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது! ஹிட்லரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டுள்ள சீமானின் நாம் தமிழர்கள். எதிர்காலத்தில் ராஜபக்சவும் அவர்களின் வழிகாட்டியானால், ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. 

சீமானின், நாம் தமிழர் கட்சியின் மகாநாட்டில், பாஸிச அல்லது நாஸி வணக்கம் செலுத்தியுள்ளனர். அது "உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு" என்று நினைப்பவர்கள், வரலாறு தெரியாதவர்கள் ஆவார்கள். 

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள்

வணக்கம் செலுத்துவதிலும், உறுதி மொழி எடுப்பதிலும், உலகம் முழுவதும் பின்பற்றப் படும் இரண்டு வகை மாதிரிகள் உள்ளன. 
மேலே : பாசிஸ அல்லது நாஸிஸ பாணி. விரல்களை விரித்து, கையை நீட்டி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். சீசர் காலத்தில், ரோமானிய சக்கரவர்த்திகளால் பின்பற்றப்பட்ட வழக்கம், இருபதாம் நூற்றாண்டில் முசோலினியால் மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டது. ஜெர்மன் நாசிகளால் ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டது. நாஸி பாணியிலான வணக்கம் செலுத்தும் முறை, ஜெர்மனியிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் சட்டவிரோதமாக்கப் பட்டுள்ளது.

கீழே: சோஷலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் பாணி. விரல்களை மடித்து, முஷ்டியை உயர்த்தி வணக்கம் செலுத்தல் அல்லது உறுதிமொழி எடுத்தல். 

நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், ஹிட்லரை வழிகாட்டியாக காட்டும் பதாகை வைக்கப் பட்ட செயலானது, சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது. அதற்கு, நாம் தமிழர் சார்பாக பதிலளித்த ஒருவர், "ஹிட்லர் யார் என்று தேட வைத்திருப்பதாக" தெரிவித்தார். ஹிட்லர் யாரென்று நாம் தேடத் தேவையில்லை. ஏற்கனவே உலகம் முழுவதும் நன்கு தெரிந்த இனப்படுகொலையாளி. நாம் தமிழர்கள் ஹிட்லர் யார் என்று தேடிச் சென்றால், ராஜபக்சவில் வந்து நிற்பார்கள். 

ஹிட்லரின் இனவாத கொள்கையின் படி, மேற்கைரோப்பிய ஜெர்மன் மொழியுடன் தொடர்புடைய மொழிகளை பேசும் ஆரிய இனம் மட்டுமே உலகில் சிறந்தது. ரஷ்ய மொழி போன்ற, ஸ்லாவிய மொழிகளை பேசும், கிழக்கைரோப்பிய மக்களும் கீழ்த்தரமானவர்கள் தான். அப்படி இருக்கையில், கறுப்பர்களான இந்தியர்களை சமமாக மதித்திருப்பார்களா?  

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் கொல்லப் படவில்லை என்றும், ரஷ்யாவில் (அன்று சோவியத் யூனியன்) புகலிடம் கோரியிருந்த நேரம் கொலை செய்யப்பட்டார் என்றும் வதந்திகள் பரப்பப் படுகின்றன. இந்த வதந்தியை உண்மையில் நடந்த சரித்திர சம்பவம் போன்று புனை கதைகள் சோடிக்கப் படுகின்றன.

இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தீவிரமடைந்துள்ள, இந்துத்துவா பாசிஸ்டுகளின் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்று. இந்தியர்களின் தேசிய நாயகனாக கருதப்படும் நேதாஜியின் மரணம் ரஷ்யாவில் சம்பவித்ததாக கூறுவதன் மூலம், கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்புணர்வை தூண்டி விடுவதே அவர்களது நோக்கம். 

அந்த நோக்கத்திற்காக தொடங்கப் பட்டுள்ள புதிய இயக்கமானது, சுப்பிரமணிய சுவாமியால் வழிநடத்தப் படுகின்றது. ஆமாம், முன்னொரு காலத்தில் புலிகளையும், ஈழப் போராட்டத்தையும் கொச்சைப் படுத்திய அதே சுப்பிரமணிய சுவாமி தான் இன்று கம்யூனிச எதிர்ப்பு புனிதப் போரில் குதித்துள்ளார். 

இரண்டாம் உலகப்போர் காலத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஹிட்லரின் உதவியுடன், ஜெர்மனியில் இந்திய வீரர்களைக் கொண்ட, இந்திய தேசிய இராணுவம் ஒன்றை அமைத்தார். வெளிநாட்டு தொண்டர் படைகளை நிர்வகிக்கும், நாஸிகளின் SS தலைமையின் கீழ் அது இயங்கியது. 

ஹிட்லரும், நாஸி அரசும், நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று, இந்திய விடுதலைப் படை அமைப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். இருப்பினும், "இந்தியர்கள், வெள்ளை இனத்தவரை விட, அறிவிலும், ஆற்றலிலும் குறைந்தவர்கள்..." என்ற இனவாத மனப்பான்மை அவர்களின் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை. இந்திய துணைப் படை பற்றி, ஹிட்லர் தெரிவித்த கருத்து அதனை நிரூபிக்கின்றது.

"இந்திய துணைப் படை என்பது கேலிக்குரியது. ஒரு மூட்டைப் பூச்சியை கூட கொல்வதற்கு தைரியமற்ற இந்தியர்கள், ஒரு ஆங்கிலேயனை கொல்வார்கள் என்று நம்ப முடியாது. அவர்களை உண்மையான சண்டைக்கு அனுப்புவது நகைப்புக்குரியது." - ஹிட்லர்
(ஆதாரம்: Hitler's Renegades: Foreign Nationals in the Service of the Third Reich )

இறுதிப் போரில், இந்திய துணைப் படையினர், பிரான்சில் நடந்த யுத்தத்தில், நாஸி இராணுவத்தோடு சேர்ந்து, நேச நாடுகளின் படைகளுக்கு எதிராக போராடியுள்ளனர். அந்த சண்டையில் சிலர் கொல்லப் பட்டனர். மிகுதிப் பேர் சரணடைந்தனர். பிரெஞ்சுப் படையினர், சரணடைந்த வீரர்கள் சிலரை சுட்டுக் கொன்றுள்ளனர். எஞ்சியோர் பிரிட்டிஷ் இராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டனர். பிரிட்டன் அவர்கள் மேல் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி தண்டித்தது.



****
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்
2. நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு
3.தமிழினவாதிகள்: ராஜபக்சவின் தமிழகக் கூட்டாளிகள்

Friday, April 17, 2015

ஊழல் மலிந்த ஹிட்லரின் ஆட்சி



ஹிட்லர் அனுதாபிகளான அனைத்து பாசிஸ்டுகளுக்கும்: 
"உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். தவழவும் முடியா விட்டால் தற்கொலை செய்து கொள்ளுங்கள். அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது."


ஜெர்மன் நாஸிகள் "ஊழலற்ற ஆட்சி" நடத்தியதாக புளுகித் திரியும், தமிழ் பேசும் நாஸி அபிமானிகள் பலர் இருக்கின்றனர். "வெள்ளை ஐரோப்பியர்கள் ஊழல் செய்வதில்லை" என்று அப்பாவித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் பாமர மக்கள் அதை நம்பலாம்.

ஜெர்மன் வரலாற்றிலேயே நாஸிகளின் ஆட்சிக் காலம் தான் ஊழல் மலிந்திருந்த காலகட்டம். ஹிட்லர் முதல் அடிமட்ட அதிகாரி வரையில் மிகப்பெரிய ஊழல் பெருச்சாளிகளாக இருந்தனர்.

 ஹிட்லர், 1933 ம் ஆண்டு, ஆட்சியைக் கைப்பற்றும் நேரம், ஜெர்மன் அரசுக்கு பல இலட்சம் வரி இன்னும் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது. அவரது "மைன் கம்ப்" நூலுக்கான வரியே கட்டப் படாமல் இருந்தது. பதவிக்கு வந்த ஹிட்லர், வருமான வரித் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வரியை இல்லாதாக்கினார். அது மட்டுமல்ல, அடுத்து வந்த வருடங்களில் விற்கப் பட்ட மைன் கம்ப் நூல் பிரதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப் பட்டது. அந்தப் பணத்தை எல்லாம் ஹிட்லர் தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

ஐரோப்பாவில் போர் நடந்து கொண்டிருந்த காலங்களிலும், நாஸி அதிகாரிகள் ஊழலில் திளைத்தார்கள். போர்முனையில் நின்ற ஜெர்மன் படையினருக்கு அனுப்ப வேண்டிய பெட்ரோல், உணவுப் பொருட்களை திருடி கறுப்புச் சந்தையில் விற்றார்கள். 1944 ஆம் ஆண்டு, நார்மாண்டி கடற்கரையில் நின்ற யுத்த தாங்கிகளுக்கு பெட்ரோல் இல்லாத காரணத்தால், படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில், பாரிஸ் கள்ளச் சந்தையில் பெட்ரோல் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது.

யூதர்கள் அவர்கள் வசித்த வீடுகளில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்ட நேரம், யூதர்களின் சொத்துக்களை திருடுவதில் ஜெர்மன் அதிகாரிகள் மும்முரம் காட்டினார்கள். தமது வாழ்நாளில் இது போன்ற தளபாடங்களை காணவில்லை என்று, அவற்றை தமது வீடுகளுக்கு திருடிச் சென்ற அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

ஹிட்லரின் வலதுகரமாக விளங்கிய இராணுவத் தளபதி ஹெர்மன் கெரிங், ஒரே நேரத்தில் பல பதவிகளை வகித்து வந்தார். பிரைசன் மாநில முதலமைச்சர், பொருளாதார அமைச்சர், பாராளுமன்றத் தலைவர்... இப்படிப் பல பதவிகள் காகிதத்தில் மட்டும் இருந்துள்ளன. அதற்கெல்லாம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். 

அது மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் வாகன தயாரிப்பாளர்களான BMW, Benz நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி வைத்திருந்தார். கெரிங்கின் அன்றைய வருட வருமானம் 1250000 மார்க்குகள். அதே நேரம், ஜெர்மனியில் ஒரு தொழிலாளரின் வருடாந்த வருமானம் 5000 மார்க்குகளுக்கு மேலே கூடவில்லை.

ஜெர்மன் அரசாங்கத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு, நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் தான் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது. பெரும்பாலும் அதிகாரத்தில் இருந்தவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்குத் தான் அரசுப் பதவிகள் கொடுக்கப் பட்டன. ஜெர்மனி முழுவதும் வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டுமானால் மேலிடத்தில் உள்ளவரைத் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.

(நன்றி : Historia, Nr.1/2015)



கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் எப்படியானவர்கள்? 
- பாசிஸ்டுகள் 
 - நாஸிகள் 
 - இனவெறியர்கள் 
 - மதவெறியர்கள் 
 - இனப்படுகொலையாளிகள் 
 - போர்க்குற்றவாளிகள் 
அல்லது அப்படியானவர்களை ஆதரிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்.

Saturday, March 29, 2014

நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு




உண்மையில், யூத வெறுப்பை விட, மார்க்சிய வெறுப்பு தான், ஹிட்லரும், நாஸி கட்சியும் ஜெர்மனியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பெரிதும் உதவியுள்ளது. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது. போரில் வென்ற பிரான்ஸ், ஜெர்மனியின் மேற்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது.

முதலாம் உலகப்போரானது, ஜெர்மன் தேசியவாதிகளுக்கும், பிரெஞ்சு தேசியவாதிகளுக்கும் இடையிலான போராக நடந்தது. முதலாளிகளும், தேசிய வெறியர்களும், சாதாரண மக்களை படைவீரர்களாக போருக்கு தீனியாக்கினார்கள். முதலாம் உலகப்போரின் முடிவில், தேசியவாத மாயையில் இருந்து விடுபட்ட படையினர் கிளர்ந்தெழுந்தனர்.

மியூனிச், பெர்லின், ஹம்பூர்க் நகரங்களில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெடித்தது. அந்த நகரங்களில் உருவான சோவியத் குடியரசுகள், சில வாரங்கள் தாக்குப் பிடித்தன. அப்போது ஜெர்மனியில் ஜனநாயக அரசமைப்பு ஏற்பட்டிருந்தது. ஆயினும், கம்யூனிசத்தை வெறுத்த "ஜனநாயக" அரசாங்கம், தொழிலாளர்களின் சோவியத் புரட்சியை கொடூரமாக நசுக்கியது.

பழமைவாதிகளின் மாநிலமான பவாரியாவில், ஹிட்லரின் நாஸிக் கட்சியும், அது போன்ற வேறு சில அமைப்புகளும் சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்தன. மார்க்சிய வெறுப்பு, அந்த அமைப்புகளின் அடிநாதமாக விளங்கியது: "முதலாம் உலப்போரில் ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் மார்க்சிஸ்டுகள். அனைத்துலக தொழிலாளர் வர்க்க ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டு, ஜெர்மன் மக்களின் முதுகில் குத்தினார்கள். பிரெஞ்சு படைகள் ஜெர்மன் மக்களை (இனப்) படுகொலை செய்த போது, கம்யூனிஸ்டுகள் எனப்படுவோர் அதற்கு எதிராக முணுமுணுக்கக் கூட இல்லை.... "

இந்த உண்மைக்கு மாறான பொய்ப் பிரச்சாரம், ஜெர்மன் மக்கள் மனதில் கம்யூனிசத்திற்கு எதிரான விஷக் கருத்துக்களை விதைக்கும் நோக்கில் பரப்பப் பட்டது. ரஷ்யாவில் நடந்த போல்ஷெவிக் புரட்சியில், பெருமளவு யூதர்கள் பங்குபற்றி இருந்தனர். நாஸிகள் அதைச் சுட்டிக் காட்டி, "கம்யூனிஸ்டுகளும் யூதர்களும் ஒன்று தான். உலக யூத சதிகாரர்களின் கொள்கை தான் கம்யூனிசம்." என்று பிரச்சாரம் செய்தனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால், யூதர்களின் ஜெர்மன் குடியுரிமை பறிக்கப் படும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப் படும் என்றும், நாஸிகள் பகிரங்கமாக கூறி வந்தனர்.

ஹிட்லரின் நாஸிக் கட்சி குண்டர்கள், அடிக்கடி மார்க்சிஸ்டுகளை தெருச் சண்டைக்கு அழைத்தார்கள். கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நடத்திய பொதுக் கூட்டங்களில் நுழைந்து குழப்பம் விளைவித்தார்கள். அங்கிருந்த பேச்சாளர்களையும், பார்வையாளர்களையும் தாக்கினார்கள். நாஸிக் காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தை, "மார்க்சியர்களுக்கு எதிரான வீரப் போர்" போன்று, ஹிட்லர் தனது Mein Kampf (எனது போராட்டம்) நூலில் எழுதி இருக்கிறான்.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஜெர்மனியில் எதிரொலித்தது. பல வங்கிகள் திவாலாகின. பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வந்த காலத்தில், பெரும்பான்மை ஆளும் கட்சிகளின் செல்வாக்கு குறைந்தது. மக்கள் மாற்று வழி தேடினார்கள். அவர்கள் ஒன்றில் தீவிர இடதுசாரிகளான கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தனர், அல்லது தீவிர வலதுசாரிகளான நாஸிக் கட்சியை ஆதரித்தனர்.

பெர்லின் நகரத் தெருக்களில், நாஸிக் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் தமது பலத்தைக் காட்டும் வகையில் சுற்றித் திரிந்தனர். இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், எங்கே, எந்த சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொண்டாலும், அங்கே வாய்த் தர்க்கம் முற்றி, அடி தடியில் முடியும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.

"சிவப்புகள், இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளை அடித்து நொறுக்குவோம்..." என்று கோஷமிட்ட படி, நாஸிக் காடையர்கள் கத்தி, பொல்லுகளுடன் தெருக்களில் சுற்றித் திரிந்தனர். அவர்கள் கையில் அகப்பட்ட மார்க்சிஸ்டுகள்/கம்யூனிஸ்டுகளுக்கு, மண்டை உடைத்து விட்டுத் தான் மறு வேலை பார்த்தார்கள்.

"மார்க்சியம் ஒழிக!" பதாகை ஏந்திய படி பேரணியில் நடந்து வரும் சீருடை அணிந்த நாஸிகள். (1926) ஹிட்லர் அணிவகுப்பை பார்வையிடுவதை காணலாம். (வட்டத்திற்குள்)  

"சிவப்பு முன்னணியை (Red Front) நொறுக்குவோம்." என்றொரு நாஸிப் பிரச்சார பாடல் தெருவெங்கும் ஒலித்தது. அன்றைய தேர்தலில் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் "சிவப்பு முன்னணி" என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிட்டார்கள். நாஸிக் காடையர்கள் இடதுசாரிகளுக்கு எதிரான கோஷம் எழுப்பிய படி, பெர்லின் தெருக்களில் சாரிசாரியாக வண்டிகளில் சென்றனர். 1926 ம் ஆண்டிலேயே, "மார்க்சியம் ஒழிக" என்ற பதாகை தாங்கிய நாஸிகளின் பேரணிகள் நடந்துள்ளன.

30-01-1933, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளால் வென்ற,  ஹிட்லரின் நாஸிக் கட்சி உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். பாராளுமன்ற விவாதங்களில் கலந்து கொள்ளும் நாஸிக் கட்சி உறுப்பினர்கள், அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அவதூறாக பேசி வந்தனர். கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பதிலடி கொடுக்க எழும் நேரம், நாஸிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அது சிலநேரம், பாராளுமன்றத்திற்கு வெளியே கைகலப்பில் முடிந்தது.

பெர்லின் நகரில், பாராளுமன்ற கூட்டம் நடைபெற்ற தினங்களில் எல்லாம், நாஸிகளும், கம்யூனிஸ்டுகளும் கடுமையாக மோதிக் கொண்டனர். பாராளுமன்ற விவாதங்களில் நாட்டமற்ற, அல்லது கம்யூனிஸ்டுகளுடன் வாதாடி வெல்ல முடியாது என்று கண்டு கொண்ட நாஸிகள், இரகசியமாக ஒரு திட்டம் தீட்டினார்கள். அதுவே, பிற்காலத்தில் வரப் போகும்  நாசிஸ  சர்வாதிகாரத்திற்கு கட்டியம் கூறியது.

நாஸிகள் பாராளுமன்ற அரசியலுக்குள் பிரவேசித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. 27-02-1933 அன்று, Reichstag (றைஷ்டாக்)  எனப்படும் ஜெர்மன் பாராளுமன்றம் தீப்பற்றி எரிந்தது. நெருப்பு வைத்தது யாரென்று கடைசி வரை தெரிய வரவில்லை. இருப்பினும், நாஸி அரசாங்கம் நான்கு கம்யூனிஸ்டுகளை கைது செய்தது. அந்தக் காலகட்டத்தில், நாசிஸ சர்வாதிகாரம் ஏற்பட்டிருக்கவில்லை. ஓரளவு ஜனநாயகம் நிலவியது. அதனால் தான், குற்றஞ் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகள் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர்.

நாஸி தலைவர்களில் ஒருவரான கேரிங், "ஜெர்மனியில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி ஆரம்பமாகி விட்டது" என்று பயமுறுத்தினார். "கம்யூனிஸ்ட் புரட்சியை தடுப்பதற்காக" என்றொரு சாட்டைக் கூறி, நாஸி அரசாங்கம் நாடு முழுவதும் பல கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜெர்மனியில், நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதும், நாசிஸ பயங்கரவாதத்திற்கு முதன்முதலாக பலியானவர்கள் யூதர்கள் அல்ல, மாறாக ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

கைது செய்யப்பட்ட நான்கு கம்யூனிஸ்டுகளில், பின்னாளில் பல்கேரியா அதிபராக பதவியேற்ற டிமித்ரோவ்வும் ஒருவர். இறுதியில் டிமித்ரோவும் மற்றவர்களும் விடுதலை செய்யப் பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, வன் தே லுப்பே என்ற புத்தி சுவாதீனமற்ற டச்சு கம்யூனிஸ்ட் நாஸிகளின் சூழ்ச்சிக்கு பலியானார். பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்டார்.

பெர்லின் நீதிமன்றத்தில் நடந்த டிமித்ரோவின் வழக்கு, இன்றைக்கும் சட்டத் துறையில் சிலாகித்துப் பேசப் படுகின்றது. புத்திசாலியான டிமித்ரோவ், தனது வாதத் திறமையால் நீதிமன்றத்தை திணறடித்தார். "கேரிங்கின் நாஸி கட்சியினர் தான் பாராளுமன்றத்திற்கு நெருப்பு வைத்தார்கள்." என்று டிமித்ரோவ் நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நேரம் அங்கிருந்த கேரிங், "இங்கு வந்து நெருப்பு வைத்து விட்டு, ஜெர்மன் மக்கள் மேல் பழி சுமத்துகிறீர்கள் ..." கூச்சலிட்டார்.

இங்கே கவனிக்கப் பட வேண்டிய விடயம் "ஜெர்மன் மக்கள்" (Deutsche Volk). நாஸிகளின் ஆட்சிக் காலம் முழுவதும், தங்களது கட்சியை யாராவது குறை கூறினால், அதனை "ஜெர்மன் மக்களுக்கு எதிரான அபாண்டம்" என்று கூறி, எதிராளியின் வாயை அடைக்கப் பண்ணினார்கள். இன்றைக்கும் தமிழர்களில் சிலர், நாஸிகளின் அதே  தந்திரோபாயத்தை பயன்படுத்துவதை காணலாம்.

நாஸிஸக் கொள்கை, ஒரு கடந்த கால வரலாறு அல்ல. ஜெர்மனிக்கு மட்டுமே உரிய தோற்றப்பாடும் அல்ல. நாஸிகளின் சித்தாந்தம் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளது. நாஸிகள் உலகம் முழுவதும் உள்ளனர். தமிழ் மக்கள் மத்தியிலும் இருக்கிறார்கள். நாஸிஸம் எந்த நோக்கத்திற்காக தொடங்கியதோ, அதனை நிறைவேற்றுவதற்கு துடிக்கின்றனர்.

"சிவப்பைக் கண்டால் பதறும், மார்க்சியத்தை வெறுக்கும்," கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலர், நாஸிக் கருத்துக்களை எதிரொலிக்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னர், இணையமும், சமூக வலைத் தளங்களும் இருக்கவில்லை. இருந்திருந்தால், நாஸிகள் அங்கேயும் தமது மார்க்சிய வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்தி இருப்பார்கள்.


நாஸிகள் தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.நாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்
2.நவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராமம்

Sunday, November 13, 2011

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர்மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர்மன் நாட்டின் தெருக்கள் பலவற்றிற்கு இவர் ஞாபகார்த்தமாக பெயரிடப் பட்டுள்ளது. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய்ய எத்தனித்தது. 1939 ம் ஆண்டு. இரண்டாவது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம்பமாகியிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்கமாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன்று வருகை தந்திருந்தார். NSDAP கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரையாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, பிற்பகல் 9 .20 க்கு ஒரு குண்டு வெடிக்கின்றது. அந்த மண்டபத்தில் அரைவாசி சேதமாகியது. எட்டுப் பேர் கொல்லப் பட்டனர். ஹிட்லர் எங்கே? குண்டு வெடிப்பதற்கு பத்து நிமிடம் முன்பு, புறப்பட்டு சென்று விட்டான். திட்டமிட்ட படி, அன்று ஹிட்லர் மட்டுமல்ல, கோயபல்ஸ் கூட கொல்லப் பட்டிருந்தால், ஒரு உலகப்போர் தடுக்கப் பட்டிருக்கும்.

மிகவும் துணிச்சலாக நாட்டு வெடிகுண்டை தயாரித்து, நேரம் கணித்து பொருத்திய மாவீரனின் பெயர் யொஹன் கெயோர்க். 4 -1 -1903 அன்று, ஒரு ஏழை உழைக்கும் வர்க்க குடும்பத்தில் பிறந்த தச்சுத் தொழிலாளி. ஒரு கம்யூனிஸ்ட். கடிகாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த யொஹான், அங்கே தான் நேரக் கணிப்பு வெடிகுண்டு செய்யும் கலையை கற்றுக் கொண்டான். மியூனிச் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தி விட்டு தப்பி ஓடும் பொழுது, சுவிட்சர்லாந்து எல்லையில் வைத்து பிடிபட்டான். கெஸ்டபோ இரகசியப் பொலிசாரின் சித்திரவதை காரணமாக, குண்டு வைத்ததை ஒப்புக் கொண்டான். அதன் பிறகு, டாஷவ் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டு சிறை வைக்கப் பட்டான். நேச நாடுகளின் படையணிகள் ஜெர்மனியை கைப்பற்றிய நேரம், ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர், யொஹான் சுட்டுக் கொல்லப் பட்டான்.

யொஹான், தலைமறைவாக இயங்கிய சிவப்பு முன்னணி போராளிகளின் அமைப்பு (Rotfrontkämpferbund) என்ற ஆயுதபாணி இயக்கத்தின் உறுப்பினர். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவு அது. நாஜிக் கட்சிக் குண்டர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர். "நாஜிக் கட்சிக் கூட்டத்தில் ரகளை செய்த, தெருச் சண்டையில் ஈடுபட்ட மார்க்சிஸ்டுகள்" பற்றி, ஹிட்லரும் தனது "மைன் கம்ப்" நூலில் எழுதியுள்ளான். ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றதும் செய்த முதல் வேலை, நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகளை பிடித்து சிறையில் அடைத்தது தான். ஜெர்மன் நாடாளுமன்றம், இனந் தெரியாதவர்களால் எரிக்கப் பட்ட சம்பவத்தை அதற்கு சாட்டாக பயன்படுத்தினான். பெர்லினில் தங்கியிருந்த வெளிநாட்டு கம்யூனிஸ்டுகளும் கைது செய்யப் பட்டனர். பிற்காலத்தில் பல்கேரியாவின் ஜனாதிபதியான, டிமித்ரோவும் அவர்களில் ஒருவர்.

ஹிட்லரை கொலை செய்யும் நோக்குடன் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. பிற்காலத்தில், இராணுவத்திற்குள் நடந்த சதியை மையமாக வைத்து, Valkyrie என்ற ஹாலிவூட் திரைப்படம் வெளியானது. உலகப்போர் முடியும் தறுவாயில், 1944 ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு பற்றி உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளது. ஆனால், 1939 ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி எந்தவொரு சரித்திர நூலிலும் நீங்கள் வாசித்திருக்க சந்தர்ப்பமில்லை. ஹிட்லரின் காலத்தில் நடந்த சம்பவங்களை இன்றைக்கும் அசைபோடும் ஊடகங்களும் அது பற்றிப் பேசுவதில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், (முதலாளித்துவ) மேற்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால், கம்யூனிஸ்டுகளின் ஹிட்லர் மீதான தாக்குதல் பற்றிய தகவல்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

சரித்திர ஆசிரியர்களினதும், ஊடகங்களினதும் ஒட்டுமொத்த புறக்கணிப்புக்கு காரணம் என்ன? தாக்குதல் நடத்திய யொஹான் எல்சர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதாலா? நாசிஸ கொடுங்கோன்மைக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் நடத்திய ஆயுதப் போராட்டம் குறித்து, உலகம் அறிந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வா? எது எப்படி இருந்த போதிலும், சமூகப் பொறுப்புணர்வு இதனால் மறைக்கப் படுகின்றது. யொஹான் எல்செர் எதற்காக ஹிட்லரை கொலை செய்யத் திட்டமிட்டான்? "எனது செயல் மூலம், மேலதிக இரத்தக் களரியை, மனிதப் பேரழிவை தடுத்து நிறுத்த விரும்பினேன்." இது யொஹான் எல்சரின் வாக்குமூலம். அந்த தீர்க்கதரிசனம் வெகுவிரைவில் சரியென மெய்ப்பிக்கப் பட்டது. குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் தப்பிய ஹிட்லரினால், இரண்டாம் உலகப்போர் வெடித்தது. அதுவரை உலகம் காணாத மனிதப் பேரழிவு ஏற்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவான சோஷலிச நாடுகளில்,"எதிர்கால உலகில் போர்களை இல்லாது ஒழிப்பதற்காக, நாம் இன்று போராடுகின்றோம்" என்று பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கப் பட்டது. "Ich habe den krieg verhindren wollen" (நான் யுத்தம் வருவதை தடுக்க விரும்புகிறேன்.)- Johann Georg Elser

யொஹான் எல்சர் பற்றிய விபரங்கள் ஜெர்மன் மொழியில் மட்டுமே காணப்படுகின்றன.

Thursday, November 26, 2009

1939 ல் ஹிட்லருடன் போருக்கு தயாரான ஸ்டாலின்

1939 ம் ஆண்டு, ஹிட்லரின் ஜெர்மனி மீது படையெடுக்க ஸ்டாலின் முன்வந்தார். கிரெம்ளினில் பிரிட்டிஷ்,பிரான்ஸ் பிரதிநிதிகளை அழைத்துப் பேசப்பட்டது. ஆனால் அவர்கள் ஸ்டாலினின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. லட்சக்கணக்கான துருப்புகளை போலந்தின் எதிர்ப்பையும் மீறி ஜெர்மன் எல்லைக்கு அனுப்புவது ஸ்டாலினின் திட்டம். முன்கூட்டியே போலந்து, நாசி ஜெர்மனியுடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஸ்டாலினின் போர்த் திட்டத்திற்கு பிரிட்டனும், பிரான்சும் முன்வராத காரணத்தால் தான், சோவியத் யூனியனும் ஜெர்மனியுடன் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போது தான், செக்கோஸ்லாவாக்கியவை ஹிட்லர் ஆக்கிரமிப்பதற்கு பிரிட்டன் அனுமதித்திருந்தது. அன்றைய நிலையில் பிரிட்டனோ, பிரான்சோ ஸ்டாலினுடன் சேர்ந்து ஜெர்மனி மீது போர் தொடுக்க முன்வரவில்லை. இந்த தகவல்கள் யாவும் அண்மையில் பகிரங்கப்படுத்தப் பட்ட சோவியத் ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இதுவரை காலமும், எமக்கு திரிபுபடுத்தப்பட்ட வரலாறே போதிக்கப்பட்டு வந்துள்ளது.