Sunday, April 19, 2009

இத்தாலியன் குடுமி சும்மா ஆடாது

கடந்த வருடம், உலகில் இதற்கு முன்னர் நடைபெறாத அதிசயம் ஒன்று நடந்தது. இத்தாலி தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பிற்கு நஷ்டஈடாக, லிபியாவிற்கு 5 பில்லியன் டாலர் வழங்கியது. லிபிய மாணவர்களுக்கு இத்தாலியில் உயர்கல்வி பெறுவதற்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றையும் கூடவே அறிவித்தது. அகமகிழ்ந்த லிபிய தலைவர் கடாபியும் ஓகஸ்ட் 30 ம் திகதியை, இத்தாலி-லிபிய நட்புறவு நாளாக அறிவித்தார். இத்தாலி லிபியாவை முதலாம் உலகப்போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆக்கிரமித்து பல அழிவுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, முன்னாள் ஐரோப்பிய காலனியாதிக்க நாடான இத்தாலி, மனம்திருந்தி விட்டதாக தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. இத்தாலி அதே காலகட்டத்தில், எத்தியோப்பியாவையும், சோமாலியாவின் பகுதியையும் அடிமைப் படுத்தி வைத்திருந்தது. ஆனால் இந்த நாடுகளுக்கு ஒரு சதமேனும் நட்ட ஈடு வழங்கவில்லை. கடாபியின் இராஜதந்திரம், லிபியாவின் எண்ணை வளம் இவையெல்லாம் இத்தாலியை நட்டஈடு வழங்க நிர்ப்பந்தித்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதையெல்லாம் விட, இத்தாலிக்கு இன்று தலையிடியாக இருக்கும் பிரச்சினை ஒன்றை தீர்ப்பதற்காகத் தான், நட்டஈடு நாடகமாடியது.

இத்தாலி ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடு, ஐரோப்பாக் கண்டத்தின் தெற்குப்பகுதியில், மத்திய தரைக்கடலில் அதன் அமைவிடம் காரணமாக ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களில் இருந்து இலகுவாக வரக்கூடியதாக உள்ளது. இதனால் சில நூறு கடல்மைல் தூரத்தில் உள்ள, ஆப்பிரிக்க கண்ட நாடான லிபியாவில் இருந்து, பெருமளவு அகதிகள் வள்ளங்கள் மூலம் இத்தாலிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அகதிகள் வந்து குவிகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும், கணிசமான அளவு பாகிஸ்தானிய, இலங்கை அகதிகளும் வருகின்றனர்.
தொன்னூறுகளில் லிபியா மீதான சர்வதேச பொருளாதாரத் தடை காரணமாக, கடாபி ஆப்பிரிக்க நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்தார். இதனால் ஆப்பிரிக்க பகுதி எல்லைகள் தளர்த்தப்பட்டதால், ஒரு தொகை ஆப்பிரிக்கர்கள் தனிநபர் வருமானம் அதிகமாகவுள்ள லிபியாக்கு வேலை தேடி வந்தனர். பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள், ஐரோப்பா செல்வதற்கு இடைத்தங்கல் நாடாக பயன்படுத்தினர். இதனால் 5 மில்லியன் லிபிய பிரசைகளைக் கொண்ட நாடு, மிகச் சிறிய காலத்தினுள் 2 மில்லியன் (ஆப்பிரிக்க) குடிவரவாளர்களை சேர்த்துக் கொள்ள வேண்டி ஏற்பட்டது.

இனவிகிதாசார சமன்பாடு குழம்பியதன் காரணமாக, லிபிய சமூகத்திற்குள் ஏற்பட்ட முறுகல் நிலை, ஆப்பிரிக்கர்களுக்கு எதிரான இனவெறி கலவரத்தில் கொண்டு போய் விட்டது. ஆப்பிரிக்க தொழிலாளரின் முகாம்கள் லிபிய காடையரினால் தீக்கிரையாக்கப்பட்டன. 2000 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தில் சாட், நைஜீரிய நாடுகளைச் சேர்ந்த 500 க்கும் அதிகமான குடிவரவாளர்கள் கொல்லப்பட்டனர். லிபிய பொலிஸ் வேடிக்கை பார்த்தது, கலவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், லிபிய அரசு அதிகாரிகள், 14000 ஆப்பிரிக்கர்களை நாடு கடத்த ஆரம்பித்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது, அனைவரையும் டிரக் வண்டிகளில் ஏற்றி, எல்லையைக் கடந்து பாலைவனத்தில் கொண்டு போய் கொட்டி விட்டு வந்தனர். அரசின் மனிதாபிமானமற்ற நாடுகடத்தலின் போது, இன்னும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

லிபிய அரச ஆசீர்வாதம் பெற்ற இனக்கலவரமும், இனச்சுத்திகரிப்பு நாடுகடத்தலும், ஏதோ லிபிய அரசின் உள்வீட்டு பிரச்சினை என்று நினைக்க வேண்டாம். அப்படி இருப்பின், அன்று மேற்குலக எதிரியான கடாபியின் அரசை குற்றவாளியாக காட்டுவதற்கு இது தான் தருணம் என்று மேலைத்தேய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டிருக்கும். இந்தக்கட்டுரையை வாசிக்கும் பலர் இப்போது தான் முதன்முதலாக கேள்விப்படுமளவிற்கு, சர்வதேச ஊடகங்கள் அந்த செய்தியை வெளி உலகம் அறியவிடாது இருட்டடிப்பு செய்திருந்தன. அதற்கு காரணம், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஒரு மேற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியின் பங்கு.

2003 ம் ஆண்டிற்கும், 2006 ம் ஆண்டிற்கும் இடையில், சுமார் இரண்டு லட்சம் ஆப்பிரிக்கர்கள் விமான மூலம் நாடுகடத்தப்பட்டனர். இதற்கு நிறைய செலவாகியது. இந்த செலவை இத்தாலி பொறுப்பெடுத்துக் கொண்டது. மொத்தம் 47 Air Lybia விமானங்கள், இத்தாலியினால் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களுள் எரித்திரியாவை சேர்ந்த, இராணுவத்தில் இருந்து தப்பியோடிய அகதிகள் பலரின் நிலை கவலைக்கிடமானது. எரித்திரிய அரசு அவர்களை பொறுப்பெடுத்து, இராணுவத்தை விட்டோடியதன் தண்டனையாக சுட்டுக்கொலை செய்து விட்டதாக, சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்தது. மனிதாபிமானம் பேசும் இத்தாலிக்கும், மேற்கு ஐரோப்பாவிற்கும் இந்த விடயங்கள் தெரியாமலில்லை.
நாடுகடத்தலை எதிர்நோக்கி அறுபதாயிரம் குடிவரவாளர்கள், லிபிய பாலைவனத்தில் கட்டப்பட்டுள்ள, 20 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கே அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், மாதக்கணக்காக அல்லது வருடக்கணக்காக சிறை வைக்கப்பட்டுள்ளனர். எந்தக் குற்றமும் செய்யாத "கைதிகள்" பாதுகாவலரின் வன்முறைக்கு இலக்காவதும், பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாவதும் வழமையான நிகழ்வுகள். சிறை முகாம்களில் உணவுப்பற்றாக்குறை நிலவுகிறது. இத்தாலிக்கு அகதிகளாக சென்று பிடிபட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பலர் இங்கே அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை முகாம்களை பராமரிக்க நிதி உதவி வழங்குவது யார்? இத்தாலியைத் தவிர வேறு யார்?

இத்தாலியில் வலதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், வெளிநாட்டவருக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முன்னாள் பாஸிச சர்வாதிகாரி முசோலினியின், கொள்கைகளை பகிரங்கமாகவே பின்பற்றும் "லீகா நோர்ட்" வட பகுதி இத்தாலியில், அதிக வாக்குகளைப் பெற்று, தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றது. இவர்களது ஆட்சியில் மிலான் நகர பெரிய மசூதி பூட்டப்பட்டு, தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தற்போது பொது இடங்களில் தொழுகை நடத்துவதை சட்டம் போட்டு தடுக்க முயன்று வருகின்றனர். இது மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது, முஸ்லீம்களை மட்டுமே தாக்குவதாக தெரிந்தாலும், கத்தோலிக்க கிறிஸ்தவத்தை சேராத இந்து, புத்த வழிபாட்டாளருக்கும் எதிர்காலத்தில் இது தான் விதி. உலகில் வேறெங்கும் இல்லாதவாறு, இனவாத சட்டம் நாம் உண்ணும் சாப்பாட்டிலும் புகுந்துள்ளது. இத்தாலியில் இருக்கும் உணவுவிடுதிகள் இனிமேல் இத்தாலிய சாப்பாட்டு வகை தான் பரிமாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரோம் நகர நடுத்தர வயது பெண்மணி ஒருவர், ருமேனிய நாட்டை சேர்ந்த ஜிப்சி இன கிரிமினல்களால் கொடூரமாக கொலை செய்த சம்பவம் தேசத்தை உலுக்கியது. இது போன்ற சம்பவத்தை எதிர்பார்த்து காத்திருந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள், இத்தாலிய மக்களை ஜிப்சிகளுக்கு எதிராக கிளர்ந்தெள வைத்தன. தொடர்ந்து இத்தாலிய பொலிஸ், ஆயிரக்கணக்கான ருமேனிய ஜிப்சிகளை சுற்றிவளைத்துப் பிடித்து நாடுகடத்தியது. ஜிப்சி அல்லது ரோமா என அழைக்கப்படும் இந்த நாடோடி இன மக்கள், ருமேனியாவில் மிகவும் ஏழ்மையான நிலையில் வசிப்பவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் ருமேனியா சேர்ந்ததன் பின்னர் கிடைத்த சலுகையை பயன்படுத்தி, பெருமளவில் இத்தாலியில் குடியேறினர். ஐரோப்பிய ஒன்றிய சட்டப்படி, ஒரு ஐரோப்பிய உறுப்பு நாட்டு பிரசை, தான் விரும்பிய எந்த நாட்டிலும் போய் இருக்கக்கூடியதாக, அங்கத்துவ நாடுகளுக்கிடையில் சுதந்திர போக்குவரத்து இருக்க வேண்டும். ஆனால் அந்த சட்டத்தை இத்தாலி காலில் போட்டு மிதித்ததைப் பற்றி, இதுவரை எந்த நாடும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த சட்டம் எல்லாம் ஏட்டில் மட்டும் தான். நடைமுறையில் பணக்காரர்களுக்கு தான் அது செல்லுபடியாகும். ஏழைகளையும், அகதிகளையும் யார் கவனிக்கப் போகிறார்கள்? இருந்தாலும் ஐரோப்பிய ஜனநாயகத்தை யாரும் குறை சொல்லக்கூடாதப்பா.

இத்தாலியின் அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால், இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நிலைப்பாட்டை புரிந்து கொள்வது எளிது. என்பதுகளுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளிற்கு வந்த, இன்னும் வந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகள் தொகை அதிகரித்து வந்துள்ளது. அதிகளவான அகதிகள் வரும் நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது. ஒரு காலத்தில் அதிகளவில் வந்து குவிந்து கொண்டிருந்த ஈராக், பொஸ்னிய, ஆப்கானிய அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக; ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு குறிப்பிட்ட நாடுகளின் பிரச்சினைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர ஆற்றிய பங்கைப் பற்றி நிறைய எழுதலாம்.

இன்று பல ஐரோப்பிய நாடுகளின் படைகள், பிரச்சினைக்குரிய நாடுகளில் நிலை கொண்டிருக்கும் வேளை, அகதிகளின் வருகை குறைந்துள்ளது. அது போலவே இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை எட்டுவதற்கு, நோர்வே தலைமையிலான இணைத்தலைமை நாடுகள் முயன்றன. அந்த முயற்சியில் தோல்வியடைந்தாலும், இலங்கையின் பிரச்சினையை ஏதாவதொரு வகையில் தீர்வுக்கு (அது உங்களுக்கு ஏற்புடையதா இல்லையா என்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை) கொண்டுவந்து, அகதிகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து அவை மாறவில்லை. ஐரோப்பியர்கள் இதுவரை எந்த ஒரு நாட்டிலும் மனிதாபிமான காரணங்களுக்காக தலையிடவில்லை. மாறாக ஐரோப்பிய நலன்கள் மட்டுமே எப்போதும் முதன்மைப்படுத்தப்பட்டன.

(இந்தக் கட்டுரை "எதுவரை?", ஏப்ரல்-மே இதழில் பிரசுரமாகியது.)
"எதுவரை?" சஞ்சிகையை பெற்றுக்கொள்வதற்கு கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்:
M.Fauzer
02, Langley Walk,
Crawly,
RH11 7LR,
U.K.

Email: eathuvarai@gmail.com

3 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Anonymous said...

Excellent Work!!

Kalaiyarasan said...

Thank you.