Thursday, September 08, 2011

சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளோ, நூல்களோ பண்டாரநாயக்கவின் அரசியற் செயற்பாடுகளை அதிகமாகவே விமர்சிப்பதுண்டு. ஒரு வகையில், சிங்களவர்கள், தமிழர்களிடையே பிரிவினையை உருவாக்கியதில் பண்டாரநாயக்கவின் பங்களிப்பு பெருமளவு இருந்துள்ளது. இன முரண்பாடு என்ற வித்து, ஆலமரமாக வளர்ந்து இலட்சக்கணக்கான மக்களை பலி கொண்ட போரில் முடியும் என்று, அன்றைய நாட்களில் அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானதும் கொண்டு வரப்பட்ட, "சிங்களம் மட்டும்" சட்டம் தான், இனப்பிரச்சினையின் மூலகாரணம் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக மொழியை அடிப்படையாக கொண்ட தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும் அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். இது ஒருதலைப் பட்சமான பார்வை மட்டுமே. இலங்கையில் (தமிழ்) மொழி மீதான அடக்குமுறை தான் பிரச்சினைக்கு காரணம் என்று நிறுவுவதற்கு, அந்த வரலாற்றுத் தகவல் பயன்படுகின்றது.

இருப்பினும், முதலில் கொண்டு வரப்பட்ட "சிங்களம் மட்டும்" சட்டம், பின்னர் தமிழ்க் கட்சிகளின் அழுத்தம் காரணமாக "சிங்களமும், தமிழும்" சட்டமாக மாற்றப்பட்டது. இந்த உண்மை இலங்கைக்கு வெளியே பரவலாக அறியப் படவில்லை. அதாவது பண்டாரநாயக்க ஆட்சிக்கு வரும் வரையில், இலங்கையில் ஆங்கிலம் மட்டுமே கல்வி, நிர்வாக மொழியாக இருந்தது. ஆங்கிலத்திற்குப் பதிலாக, சிங்களத்தை தேசிய மொழியாக்கும் சட்டமூலம், தமிழர் அபிலாஷைகளை மதிக்காமல் கொண்டு வரப்பட்டது. தமிழ் அரசியல் தலைவர்கள், ஆங்கிலத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்பினார்கள். சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு இணங்காததால், "சிங்களத்தோடு, தமிழையும்" அரச கரும மொழியாக்கினார்கள். அதாவது இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் தமிழும், நாட்டின் பிற பாகங்களில் சிங்களமும் நிர்வாக மொழியாகியது. இலங்கை முழுவதும் ஆங்கிலத்தில் கல்வி கற்ற காலம் மாறி, தமிழ்ப் பிள்ளைகள் தமிழிலும், சிங்களப் பிள்ளைகள் சிங்களத்திலும் கல்வி கற்றனர். இவ்வாறு தாய் மொழியில் கல்வி கற்ற குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களானதும் நீண்டதொரு இனக்குரோதப் போரில் ஈடுபட்டார்கள்.

பொதுவாக அரசியல்வாதிகள் தமது குறுகிய நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிவார்கள். இத்தாலியின் அரசியல் சாணக்கியனாக போற்றப்படும் மாக்கியவல்லி, "அரசன் எத்தகைய பாதகச் செயலையும் தனது இருப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்." என்று தத்துவங்களை எழுதி வைத்துச் சென்றுள்ளார். நிறவெறி, இனவெறி, மதவெறி எல்லாமே உலக நாடுகளின் அரசுகளின் ஸ்திரத் தன்மைக்கு பயன்பட்டுள்ளன. ஒரு அரசு தான் சார்ந்த பெரும்பான்மை இனத்தின் ஆதரவைப் பெறுவதற்காக, சிறுபான்மை இனத்தை பகைத்துக் கொள்கின்றது. இதன் மூலம், நாகரிக சமூகம் தோன்றிய காலத்தில் இருந்து நிலவி வரும் சமமற்ற பொருளாதார பங்கீட்டை மறைக்க முடிகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையை, இத்தகைய பின்னணியுடன் புரிந்து கொள்ளா விட்டால், இனவாத சகதிக்குள் மாட்டிக் கொள்ள நேரிடும். சிங்கள, தமிழ் அறிவுஜீவிகள் கூட இன முரண்பாடுகளை பிரதிபலிப்பதை வெளிநாட்டவரும் அவதானித்துள்ளனர். குறிப்பாக பண்டாரநாயக்க பற்றிய பார்வை, அறிவுஜீவி சமூகத்தை கூறு போட்டுள்ளது. சிங்கள அறிவுஜீவிகள் பண்டாரநாயக்கவை முற்போக்காளராக கருதுகின்றனர். அதே நேரம், தமிழ் அறிவுஜீவிகள் பண்டாரநாயக்கவை பேரினவாதியாக கருதுகின்றனர். சிங்கள, தமிழ் அறிவுஜீவிகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடு
"A 9 Highway" என்ற சிங்கள-தமிழ் திரைப்படத்தில் தத்ரூபமாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களைப் பொறுத்த வரையில், பொதுவாக தமிழ் அறிவுஜீவிகளின் எழுத்துக்களையே படிப்பது வழக்கம். அவர்கள் தமிழில், அல்லது ஆங்கிலத்தில் எழுதினாலும், இனப்பிரச்சினை சுதந்திரத்திற்குப் பின்னர் ஆரம்பமானதாகவே குறிப்பிடுவார்கள். தீவிர தமிழ் தேசியவாதிகள் என்றால், மகாவம்சம், எல்லாளன் காலத்திற்கு சென்று, இனப்பிரச்சினையின் வேர்களை கண்டுபிடிப்பார்கள். ஆனால், இடைப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை பற்றி மட்டும் பெரிதாக எதுவும் கூற மாட்டார்கள். இலங்கையின் மத்திய பகுதியான கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்ட காலத்தில் (1815) இருந்து, நாட்டில் எல்லாவற்றையும் இனவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் வழக்கம் தோன்றியுள்ளது. கடைசி கண்டி மன்னன், தென்னிந்திய நாயக்கர் சாதியை சேர்ந்த தமிழன். சிங்கள மக்களை மன்னனுக்கு எதிராக கிளர்ந்தெழ வைப்பதற்காக, "கண்டி தமிழ் மன்னனின் கொடுங்கோன்மை" பற்றி பிரச்சாரம் செய்தனர். இந்திய மரபின் படி, இலங்கை ஆளும் மன்னன், பிராமணனாக அல்லது உயர்சாதியை சேர்ந்தவனாக இருப்பதையே பௌத்த பிக்குகளும் விரும்பியிருந்தனர். மதம் அல்லது சாதி ஆதிக்கம் செலுத்திய பண்டைய இலங்கைச் சமூகத்தினுள், ஆங்கிலேயர்கள் மொழித் தேசியத்தை அறிமுகப் படுத்தினார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரையோரச் சிங்களவர்களுக்கும், கண்டிச் சிங்களவர்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடு நிலவியது. ஒரே மொழியை பேசிய இரண்டு சமூகங்களும், வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டிருந்தனர். நீண்ட கால காலனிய ஆட்சி காரணமாக, கரையோர சிங்களவர்கள் கிறிஸ்தவர்களாகவும், மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றுவோராகவும் மாறியிருந்தனர். அதற்கு மாறாக, கண்டிச் சிங்களவர்கள் பௌத்தர்களாகவும், பாரம்பரிய கலாச்சாரத்தை பேணுவோராக காணப்பட்டனர். இதை விட, அன்று யாரும் தம்மை சிங்களவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. சிங்களவர் ஒரு இனம் என்பதே கற்பிதமாகும். கரவ, துரவ, சலகம போன்ற சிங்கள சாதிகள், தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளன. பண்டாரநாயக்கவின் மூதாதையர் கூட, தென்னிந்தியாவில் இருந்து வந்த தமிழ்ப் பிராமணர்கள் என்ற கதை ஒன்றுண்டு. பண்டாரநாயக்கவின் உறவினர்கள் பலர், தமிழர்களுடன் கலப்பு மணம் புரிந்துள்ளனர். இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒருவர், சிங்கள தேசியவாதத்தை உருவாக்கியதும், சிங்கள பேரினவாதத்தின் தந்தையாக மாறியதும் வரலாற்று முரண்நகையாகும்.

பண்டாரநாயக்க, சிங்கள தேசியத்தின் உருவாக்கத்தை, அன்றைய காலவோட்டத்திற்கு ஏற்றவாறு ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்ட முனைந்தார். அதே நேரம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் தனிப்பட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்பை பேணி வந்தார். காங்கிரஸ் கட்சி, சுதந்திர இந்தியாவை தலைமை தாங்கும் சக்தி உள்ளதெனக் காட்டுவதற்காக, இந்திய (ஹிந்தி) தேசியத்தை உருவாக்க அரும்பாடுபட்டது. இலங்கையில் அதே போன்றதொரு முயற்சியில் பண்டாரநாயக்க ஈடுபட்டார். இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்கவும் தன்னை அரசமைக்கும் தகமை பெற்ற தலைவராக காட்டிக் கொள்ள விரும்பினார். ஆனால், அவரது காலம் முழுவதும் இலங்கை போல்ஷேவிக்குகளை (மார்க்சியர்கள்) எவ்வாறு சமாளிப்பது என்பதிலேயே செலவிட்டார். சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தை ஒன்று சேர்த்த கட்சி ஒன்றை ஸ்தாபித்தார். "ஐக்கிய தேசியக் கட்சி" என்ற தேசிய ஒருமைப்பாட்டுக்கான கட்சி ஒன்றை ஸ்தாபித்து விட்டு, சுதந்திரத்திற்கு தயாராக காத்திருப்பதாக ஆங்கிலேயருக்கு அறிவித்தார்.

இவ்விடத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. ஆங்கிலேயர்கள் தமக்கு அடுத்ததாக ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு ஏற்ற நபர்களை தேடிக் கொண்டிருந்தார்கள். உள்நாட்டு பிரதிநிதிகள், ஏதோ ஒரு வகையில், பெரும்பான்மை இலங்கையரைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்று விரும்பினார்கள். டி.எஸ். சேனநாயக்க ஒரு விதமாகவும், பண்டாரநாயக்க வேறொரு விதமாகவும் தமது "ஆளும் தகமையை" நிரூபித்துக் காட்டினார்கள். இரண்டு வேறு பட்ட சமூகங்களான கரையோரச் சிங்களவர்களையும், கண்டிச் சிங்களவர்களையும், பண்டாரநாயக்க சிங்களவர்கள் என்ற பெயரில் ஒன்றிணைத்தார். ஆங்கிலேயருக்கும் அஃது உவப்பான சங்கதி தான். "காலனியாதிக்க எதிர்ப்பாளர்களான கண்டிச் சிங்களவர்களை, காலனிய விசுவாசிகளான கரையோரச் சிங்களவர்கள் ஆளப்போகின்றனர். இதனால் காலனிய எதிர்ப்புணர்வு மழுங்கடிக்கப்படும்." பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இதை விட நல்ல செய்தி வேறென்ன கிடைக்க முடியும்?


(தொடரும்)

4 comments:

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
அருமையான பதிவு.பல் வரலாற்று உண்மைகளை ஆவணப் படுத்தும் முய‌ற்சி நன்று.
/தமிழ் அரசியல் தலைவர்கள், ஆங்கிலத்தை தொடர்ந்து வைத்திருக்க விரும்பினார்கள். சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு இணங்காததால், "சிங்களத்தோடு, தமிழையும்" அரச கரும மொழியாக்கினார்கள். /
இங்கு இந்தி கூடாது என்பதற்காக தமிழையும் மறந்து ஆங்கிலத்தை உயர்த்தி பிடித்த கதை.

/ஆனால், இடைப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை பற்றி மட்டும் பெரிதாக எதுவும் கூற மாட்டார்கள். /

nice

/இலங்கை ஆளும் மன்னன், பிராமணனாக அல்லது உயர்சாதியை சேர்ந்தவனாக இருப்பதையே பௌத்த பிக்குகளும் விரும்பியிருந்தனர்./

சிங்களரில் பிராமண இனம் உண்டா? பெயர் என்ன?

/சிங்களவர் ஒரு இனம் என்பதே கற்பிதமாகும். கரவ, துரவ, சலகம போன்ற சிங்கள சாதிகள், தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதற்கான வரலாற்று ஆவணங்கள்/

இத்னை மறந்ததுதான் பிரச்சினை!!!!!!!!!!.
தொடருங்கள்

Kalaiyarasan said...

//சிங்களரில் பிராமண இனம் உண்டா? பெயர் என்ன?//

சிங்களப் பிராமணர்கள் என்று தனியாக இல்லை. இந்திய உபகண்டத்தை சேர்ந்த பிராமணர்களுக்கான உயர் ஸ்தானத்தை சிங்களவர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். அரசர்கள் பிராமணர்களை அழைத்து கௌரவிப்பது அன்றைய காலத்து வழக்கம். தமிழ்ப் பகுதிகள் வாழும் பிராமணர்கள் வாழும் பிராமணர்கள் தமிழ் பேசுவது போன்று, சிங்களப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் சிங்களம் பேசுகின்றனர். இன்றுள்ள மொழி வேறுபாடு, பிற்காலத்தில் தோன்றிய "இனப்" பிரிவினை ஆகும்.

சீனிவாசன் said...

சிறப்பான கட்டுரை,தேசிய இனம் என்பதற்குரிய உண்மையான பொருளை உங்களது கட்டுரைகளின் வாயிலாகவே அறிந்து கொண்டேன், நன்றி. ஈழத்தில் தமிழ் பேசும் பார்ப்பனர்கள் இன்றும் உள்ளனரா? அப்படி இருப்பின் ஈழத்தின் சாதியத்தில் அவர்கள் வகிக்கும் பாத்திரம் என்ன?ஈழத்தின் சாதியம் பற்றிய கட்டுரைகளில் வெள்ளாளர்களை பற்றியே காணகிடைக்கின்றன. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் முன்னோடியான நீதிகட்சியின் தோற்றமே, பார்பனரல்லாதோருக்கான உரிமைகளை பெற்றுதருவதில்தான் இருந்துதான் தொடங்குகிறது. அந்த காலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான துறைகளை பார்ப்பனரே ஆக்கிரமித்திருந்தனர். தமிழகத்தின் நிலை இவ்வாறிருக்க ஈழத்தில் பார்பனரின் நிலை அன்றும்,இன்றும் எவ்வாறு இருந்தது?இருக்கிறது?

Kalaiyarasan said...

நன்றி, சீனிவாசன். இந்தியாவில் உள்ளது போல பார்ப்பனீயம் இலங்கையில் கிடையாது. சிங்களவர்களைப் பொறுத்த வரையில், அரசர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அரசர்களுக்கு ஆலோசனை கூறுவது முதல், பல்வேறு அரச அலுவல்களில் ஈடுபட்டனர். அனுராதபுரம், பொலநறுவை போன்ற புராதன நகரங்களில், மன்னர்களால் இந்துக் கோயில்கள் பராமரிக்கப்பட்டன. காலனிய காலகட்டத்தில், அந்தப் பார்ப்பனர்கள் பலர் எல்லோரும் முதலியார் பதவி வகித்தனர். நிலவுடமையாளர்கள் சிங்கள வெள்ளாளர் (கொவிகம) சாதியில் கலந்தார்கள். பௌத்த மதத்தில் பார்ப்பனர்களிற்கு சிறப்பு சலுகை எதுவும் கிடையாது. அதனால் அவர்கள் யாரும் புரோகிதர் வேலை செய்யவில்லை.
தமிழ்ப் பகுதிகளில் இந்துக் கோயில்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், பார்ப்பனர்கள் இன்று வரை புரோகிதர்களாக வேலை செய்கின்றனர். சமூகத்தில் அவர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து உண்டு. இருப்பினும், எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால், இந்தியா போன்று பார்ப்பனர் ஆதிக்கம் அங்கே இல்லை. அதற்குப் பதிலாக வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கின்றனர். ஒரு சில தடவைகள், பிராமண- வெள்ளாள குடும்பங்களுக்கு இடையே சாதிப் பிரச்சினைகள் வந்துள்ளன. இருப்பினும் அவை பெரிய சமூக முரண்பாடுகளாக பரிணமிக்கவில்லை. பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில், ஈழத்து பார்ப்பனர்களது பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாக எதுவும் இல்லை. சிறு கோயிலில் பூசை செய்து கிடைக்கும் சொற்ப தொகையில் ஏழ்மை நிலையில் வாழும் பிராமணக் குடும்பங்களும் நிறைய உண்டு. அவ்வாறான வறிய பிராமண குடும்பங்களில் இருந்து வந்த இளைஞர்கள் சிலர், ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பங்களித்துள்ளனர். எனக்குத் தெரிந்த நண்பர்கள் பிராமண நண்பர்கள் சிலர் உளர். அவர்களது கொள்கைப் பற்று மட்டுமே அவர்களது வாழ்வை தீர்மானிக்கின்றது. போராட்ட வாழ்வு முடிந்த பின்னர், "பரம்பரைத் தொழிலான" கோயில் பூசை செய்து பிழைப்பவர்களும் உண்டு. சுருக்கமாக, ஈழத்தில் பார்ப்பனர்கள், பூசாரித் தொழில் செய்யும் பிராமண சமூகமாகவே அதிகம் அறியப்படுகின்றனர். அதனால் பார்ப்பனர்கள் என்ற சொல் அங்கே புழக்கத்தில் இல்லை.