Sunday, October 23, 2011

1958 இனக்கலவரம் - இனப் பிரிவினையின் ஆரம்பம்

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : பன்னிரண்டு )


இலங்கையின் முதலாவது இனக்கலவரம் குறித்து நாம் அறிந்து கொண்டது என்ன?
1958 ம் ஆண்டு, தமிழரசுக் கட்சியினர் அஹிம்சா வழியில் சிறி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். அதற்கு எதிர்வினையாக சிங்கள காடையரினால் தமிழர்கள் தாக்கப் பட்டனர்.

இதனை தமிழர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர்? "நியாயமான கோரிக்கைகளை முன்வைத்த தமிழர்களின் அஹிம்சை வழிப் போராட்டத்தைக் குழப்பிய சிங்கள இனவெறியர்கள், தமிழர்களை படுகொலை செய்தனர்." இதனை சிங்களவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கின்றனர்? "சிங்கள எழுத்துகளை தார் பூசி அழித்த செயலானது, சிங்கள மொழியையும், சிங்கள இனத்தையும் பூண்டோடு அழிப்பதற்கான தமிழரின் சதி." அன்று நடந்த சம்பவங்களை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், இனவாத சாயம் பூசப்பட்ட வாதங்களுக்குப் பின்னால், வேறொரு உண்மை மறைந்திருப்பது புலனாகும். சிங்கள தேசியவாதிகளும், தமிழ் தேசியவாதிகளும், நாம் அந்த உண்மையை அறிந்து கொள்வதை விரும்புவதில்லை.

அந்தக் காலகட்டத்தில் சிறி எதிர்ப்பு போராட்டம் இரண்டு தடவைகள் இடம்பெற்றன. இரண்டுக்கும் இடையில் குறைந்தது ஆறு மாத கால இடைவெளி இருந்தது. இரண்டாவது சிறி எதிர்ப்பு போராட்டம் தான், தமிழர் விரோத இனக்கலவரத்தில் போய் முடிந்தது. இனக்கலவரமானது, வெறுமனே "தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரான இனவெறி சிங்களவர்களின் தன்னியல்பான நடவடிக்கை அல்ல." யாராலோ நன்கு திட்டமிடப் பட்டிருந்தது. அந்த தீய சக்திகள் எவை? கலவரத்திற்கு முன்னர், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், மேட்டுக்குடி அரசியல் தலைவர்கள், இவர்கள் அனைவரதும் பொருளாதார நலன்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த "பாதிக்கப்பட்ட வர்க்கம்" சிங்களவர், தமிழர் ஆகிய இரண்டு இனங்களிலும் இருந்துள்ளன. நில உச்சவரம்புச் சட்டம், தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கல், போன்ற அரச கொள்கைகளால் அதிருப்தியுற்ற பூர்ஷுவா வர்க்கத்தினர், வன்மத்துடன் காத்திருந்தனர். அவர்களது கோபத்தை மேலும் கிளறுவதாக, 1958 மே மாதம் இடம்பெற்ற சம்பவங்கள் அமைந்து விட்டன. இடதுசாரிக் கட்சிகள் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டமே, இனக்கலவரத்தை தூண்டி விட ஏதுவாக அமைந்தது.

போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, இடதுசாரிக் கட்சிகளின் தலைமை தவறி விட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சிங்கள தொழிலாளர்களுக்கு வடிகால் தேடிக் கொடுப்பதற்காக, சிங்கள இனவாதிகள் தமிழர்களை தாக்குவதற்கு ஏவி விட்டனர். அன்றைய காலங்களில், சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய தவறான கருத்துக்கள் பரப்பப் பட்டிருந்தன. அவை, ஐரோப்பாவில் நிலவிய யூதர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளுடன் ஒப்பிடத் தக்கன. அதாவது, "தமிழர்கள் எல்லோரும் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தினர். நிறுவனங்களை நடத்துவதிலும், அரச பதவிகளிலும் அவர்களது ஆதிக்கம் தான் நிலவுகின்றது. சிங்களவர்களை சுரண்டிப் பிழைக்கும் தமிழர்கள் மிகவும் தந்திரசாலிகள்." இதிலே வேடிக்கை என்னவென்றால், இது போன்ற கருத்துகளை, சிங்கள இனவாதிகள், சிங்கள மக்கள் மனதில் இனவெறியை தூண்டுவதற்காக வேண்டுமென்றே பரப்பி வந்தனர். மறுபக்கத்தில், தமிழினவாதிகள், இதே கருத்துகளை தமக்கு சாதகமானதாக பார்த்தார்கள். தம்மை யூதர்களுடன் ஒப்பிட்டு சிந்திக்கப் பழகினார்கள்.

கொழும்பு நகரில், இனக்கலவரத்தின் போது, பெரும்பாலும் வசதி படைத்த தமிழர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. கொழும்பு நகரில் தமிழர்கள் கொலை செய்யப் படுமளவிற்கு, கலவரம் தீவிரமடைந்ததற்கு சில வதந்திகள், அல்லது தவறான தகவல்கள் காரணமாக அமைந்தன. அதற்கு முன்னால் கலவரம் எவ்வாறு ஆரம்பமாகியது என்று பார்ப்போம். சிங்கள முதலாளிகள், மே மாதம் இடம்பெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை, எப்பாடு பட்டாவது குழப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நின்றனர். அமைச்சர்களான விமலா விஜெவர்த்தனவும், தஹாநாயக்கவும், "வேலைநிறுத்தப் போராட்டம், தமிழரின் சதி" என அறிவித்தனர். மே 22 தொடக்கம் 25 வரையிலான நாட்களில், சிங்களப் பெரும்பான்மைப் பிரதேசமான, அனுராதபுரம், பொலநறுவையில் வாழ்ந்த தமிழர்கள் தாக்கப் பட்டனர். இன்று அங்கே ஒரு தமிழர் கூட வாழ முடியாதவாறு, இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். மே 26 தொடக்கம் ஜூன் 3 வரையில், தமிழ்ப் பெரும்பான்மை பிரதேசமான வடக்கு, கிழக்கிற்கு கலவரம் பரவியது. அரச அலுவலகங்கள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. குறிப்பாக வடக்கில், சிங்களவர்கள் அடித்து விரட்டப் பட்டனர். இதுவும், ஏறாவூரில் நடந்த பெருந்தோட்ட முதலாளியின் கொலையும், கொழும்பில் கலவரம் பரவ காரணமாக அமைந்தன.

கிழக்கு மாகாணத்தில், ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர்க்குணாம்சம் கொண்டவர்கள். ஏறாவூர் பகுதியில் மட்டுமே குறிப்பிடத் தக்க அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. தண்டவாளம் கழற்றப் பட்டதால், பொலநறுவையில் இருந்து கிழக்கு நோக்கி வந்த ரயில் வண்டி தடம் புரண்டது. வாகனமொன்று டைனமைட் குண்டு வெடிப்புக்கு இலக்கானதால், ஒரு போலீஸ்காரர் மரணமடைந்தார். அதை விட, சிங்கள பெருந்தோட்ட முதலாளி செனவிரத்ன ஏறாவூரில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்ட செய்தி, நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியது. முதலாளியின் தனிப்பட்ட விரோதிகளே அவரை சுட்டுக் கொன்றிருந்த போதிலும், அன்றைய குழப்பகரமான சூழ்நிலையில், தமிழர்களின் செயலாக கருதப் பட்டது. அடுத்த நாள் வானொலியில் உரையாற்றிய பிரதமர் பண்டாரநாயக்க, "செனவிரத்ன கொலையை தமிழர்களே செய்ததாக" பழி சுமத்தினார். பிரதமரின் தொலைநோக்கற்ற உரையானது, "தமிழர்களே முதலில் சிங்களவர்களை தாக்கினார்கள்." என்ற தவறான நிலைப்பாட்டை உருவாக்க வழிவகுத்து விட்டது.

கொழும்பு நகரில் தமிழர்களின் கடைகள் கொள்ளையடிக்கப் பட்டன. கண்ணில் பட்ட தமிழர்கள் கொலை செய்யப் பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள். பல இடங்களில், "இது செனவிரத்ன கொலைக்கு பழிவாங்கல்" என்று நியாயம் கற்பிக்கப் பட்டது. தமிழர் மீதான தாக்குதல்கள் கொழும்பில் இருந்து ஆரம்பித்து, கரையோரமாக காலி வரை பரவியது. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்களக் குடும்பங்களின் வருகை, கொழும்பு நகர கலவரத்தை தூண்டி விடுவதற்கு காரணமாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்கள், தமிழர்களால் தாக்கப்பட்டதால், அல்லது தாக்குதல் அச்சம் காரணமாக தெற்கிற்கு இடம்பெயர்ந்தனர். விமானம் மூலமாக இரத்மலானை விமான நிலையத்திலும், ரயில் மூலம் கோட்டை புகையிரத நிலையத்திலும் வந்திறங்கிய அகதிகள், தமக்கு நேர்ந்த அவலத்தை சற்று மிகைப் படுத்தியே கூறியிருந்தனர். இருப்பினும், தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு, "வடக்கில் இருந்து வெளியேறிய சிங்கள அகதிகளையும்" காரணமாக காட்டி நியாயம் தேடிக் கொண்டனர். ("கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு சிங்களவன் வாழமுடியாது." என்ற விடயம் இன்றும் கூட, சாதாரண சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட பயன்படுத்தப் படுகின்றது.)

இதே நேரம் பொலநறுவை மாவட்டத்தில், திட்டமிட்ட படுகொலைகள் அரங்கேறின. தமிழ்த் தொழிலாளர்களின் குடியிருப்பினுள் புகுந்த சிங்களக் காடையர்கள், எழுபது தமிழர்களை வாள்களால் வெட்டிக் கொன்றனர். விவசாய அலுவலர்களாக கடமையாற்றிய அதிகாரிகளின் பங்களாக்களும் எரிக்கப் பட்டன. அன்று பல சிங்களக் குடியேற்றக் கிராமங்களுக்கு தமிழ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருந்தனர்! ஆரம்பத்தில் அவை யாவும் அரசினால் முன்னெடுக்கப் பட்ட, விவசாய அபிவிருத்திக் கிராமங்களாக இருந்தன. பின்னர் தான், சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றும் அரசின் திட்டம் தெரிய வந்தது. அன்றிருந்த சூழலில், சிங்கள பேரினவாதக் கருத்துக்கள் பரவிய காலத்தில், ஒரு தமிழ் அதிகாரி குடியேற்றக் கிராமங்களுக்கு பொறுப்பாக இருப்பதை சிங்களவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடியேற்றங்களில் ஆரம்பித்த வன்முறை, முழுக்க முழுக்க இனவெறியைக் கொண்டிருந்தது. இருப்பினும், அயலில் இருந்த தமிழ்க் கிராமங்கள் மீதான வன்செயல்கள் யாவும், நில ஆக்கிரமிப்பு நோக்கத்தைக் கொண்டிருந்தன. அதாவது, சிங்களப் பகுதிகளில் நிலமற்ற விவசாயிகள், தமிழ்ப் பகுதிகளில் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு, அரசே உறுதுணையாக இருந்தது. இலங்கையில் பொருளாதார வளங்கள் மீதான மனித சமூகத்தின் போட்டியானது, இனத்துவ முறையில் தீர்க்கப் பட்டது. தாம் பெரும்பான்மை சமூகமாக இருப்பதால், இலங்கையில் பொருளாதார வளங்கள் யாவும் தமக்கு உரிமையாக வேண்டும் என்று சிங்களவர்கள் கருதிக் கொண்டனர்.

கொழும்புக்கு அருகில் உள்ள இந்துக் கோயில் ஒன்றினுள் வைத்து, இரண்டு பூசாரிகள் கொலை செய்யப் பட்ட செய்தியானது, தமிழ்ப் பகுதிகளில் காட்டுத்தீயாக பரவியது. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும், செய்தியைக் கேள்விப்பட்ட தமிழர்கள் சிங்கள விரோத வன்முறையில் இறங்கினார்கள். கிழக்கு மாகாணத்தில், பருவ காலத்திற்கு வந்து மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்கள் தாக்கப் பட்டனர். யாழ் நகரில் இருந்த பௌத்த விகாரை, நூற்றுக் கணக்கான இளைஞர்களால் தாக்கப் பட்டது. அங்கிருந்த பிக்கு ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். வல்வெட்டித்துறையில் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் நிலையங்கள் காலி செய்யப் பட்டு, போலீசார் பெரிய முகாம்களுக்கு மாற்றப் பட்டனர். வல்வெட்டித்துறையிலும், காரைநகரிலும் சுங்க வரித் திணைக்களங்கள் தாக்கப் பட்டன. அங்கிருந்த ஆவணங்கள் யாவும் எரிக்கப் பட்டன. அன்று, இந்தியாவுடனான வர்த்தக படகுச் சேவை, காரைநகர் ஊடாக நடந்து கொண்டிருந்தது. அதனால், வடக்கில் பிரதானமான சுங்கவரி அலுவலகம் காரைநகரில் அமைந்திருந்தது. இந்த சம்பவத்தை மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, அரச எதிர்ப்பு நடவடிக்கையாக தோன்றும். ஆனால், இந்தியாவில் இருந்து, சட்டவிரோதமாக பொருட்களைக் கடத்திக் கொண்டிருந்த கடத்தல்காரர்களின் செயல் என்று பின்னர் தெரிய வந்தது. சுங்க வரி அலுவலக ஆவணங்களை எரிப்பதால், கடத்தல்காரருக்கே நன்மையாக அமையும்.

மே மாதம், 30 ம் திகதி, நயினாதீவில் உள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற பௌத்த விகாரை, டைனமைட் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. யாழ் குடாநாட்டில் இருந்து படகுகளில் வந்த குழுவினராலேயே விகாரை தாக்கப் பட்டது. அநேகமாக, கடத்தல்காரர்களே இந்த செயலுக்கு காரணம் என சந்தேகிக்கப் பட்டது. நயினாதீவு விகாரை தகர்ப்பினால், தெற்கில் தமிழர்கள் மீதான படுகொலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவியது. அரசும், ஊடகங்களும் செய்தியை வெளியிடாமல் மூடி மறைத்து விட்டன. இருப்பினும் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள், இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது. யாழ் நகரில், தமிழரசுக் கட்சியின் அரசியலால் கவரப்பட்ட தமிழ் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆயினும், பொலிஸ் நிலையங்களை, சுங்க வரி அலுவலகங்களை தாக்கியதன் மூலம், எதிர்கால ஆயுதப் போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி இடப்பட்டது. எழுபதுகளில், ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, "தமிழீழ விடுதலை இயக்கம்", "தமிழீழ விடுதலைப் புலிகள்" போன்ற இயக்கங்களின் ஸ்தாபகர்கள் பெரும்பாலும் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள். "இந்தியாவுடனான சட்டவிரோத படகுப் போக்குவரத்து, தமிழக அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு", என்பன ஈழப் போராட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளன.

(தொடரும்)


(1958 இனக்கலவரத்தில் நடந்த சம்பவங்கள் யாவும் "Emergency '58" நூலில் விவரமாக தொகுக்கப் பட்டுள்ளன.)
1.Emergency '58 – The Story of the Ceylon Race Riots
2.Tarzie Vittachi’s “Emergency ’58” Re-Visited

****************************
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
11. "ஸ்ரீ" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து!
10. இலங்கையின் "இனப் பிரபுத்துவ" சமுதாயக் கட்டமைப்பு
9. "சிங்கள-தமிழ் தேசியவாதம்" அல்லது "பண்டா-செல்வா சித்தாந்தம்"
8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

No comments: